பச்சைக் கறிக்கு வெகாறி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 23, 2024
பார்வையிட்டோர்: 24,395 
 
 

கடவுள் ஞாயிற்றுக் கிழமையைக் கண்டுபிடித்ததே கவுச்சி திங்கத்தான் என்பது ஒப்பிலியப்பனின் ஐதீகம். ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் – ஏதோ ஒரு மாமிசம் இல்லாமல் அவனுக்கு அன்று மத்தியானச் சோறு இறங்காது.

மற்ற நாட்களிலும் ஒந்நராடமாவது (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) இரவுணவுக்கு முட்டையோ, கருவாடோ வறுத்தாவது பக்கத்தில் வைத்தால்தான் ‘வாயை மூடிக்கொண்டு’ சாப்பிடுவான். இல்லாவிட்டால் இங்கிலாந்திலிருந்து இறக்குமதியான காய்கறி என்றாலும், “என்னடீது, இன்னைக்கும் அய்யிரூட்டு சமையலே ஆக்கி வெச்சிருக்கற? நாக்குக்கு ஒணத்தியா நாத்த ஜட்டமில்லாம மனுசன் அன்னாடும் எப்புடி மண்ணு மாற மானங்கெட்ட சோறு திங்கறது?” என்று மொண மொணத்தபடியே அரை வகுத்தோடு எழுந்துவிடுவான்.

அப்பன் எட்டடி என்றால் பிள்ளைகள் பதினாறடி, முப்பத்தி ரெண்படி.

வாராந்திரம் ஞாயிறுகளில் ஏதோவொரு டிஸ்கவரி சேனல், வட்டலுக்கு வந்தாக வேண்டும். இடை நாட்களில் முட்டை, கருவாடு, உப்புக்கண்டம், ஆட்டுக்கால் போன்ற ஜீவராசிகளை விழுங்குவதற்கும் குறைவிராது. என்றாலும், “நாயத்துக் கௌம எப்பம்மா வரும்?” என்று ரெண்டாம்ப்பு யோகேஷ் நச்சரித்துக்கொண்டேயிருப்பான். மற்ற நாட்களில் சப்பாத்தி, பூரி என சிறப்புச் சிற்றுண்டிகள் செய்தாலுமே பசிக்கில, வேண்டாம் என்று சரியாக சாப்பிடவே மாட்டாத அவன் ஞாயிறுகளில் ஐந்து வேளை சாப்பிடுவான்.

அஞ்சாம்ப்பு நந்தனாவுக்கு மீன் குழம்பு என்றால் உயிர். மறுநாள் மட்டுமன்றி மூன்றாவது நாளும், மீன் குழம்பு சுண்ட வைத்தது இல்லையா என்று கேட்பாள். கடைசிக்கு, “மீன் கொளம்பு வெச்ச மண்ணுச் சட்டியாவது குடும்மா. அதைய மோந்து பாத்துட்டுன்னாலும் சாப்புட்டுக்கறேன்” என்பாள்.

“ஒன்னராடம் கவுச்சி தின்னுட்டிருந்தாலும் அப்பனுக்கும் மக்களுக்கும் அப்புடி என்னதான் வெகாறியோ! ஆறு மாசம் கறிச் சோறு காங்காத மாற எப்பப் பாத்தாலும் கறி, கறின்னு பறவாப் பறக்குதுகொ. போன ஜென்மத்துல அப்பனும் மகனும் சிங்கம், புலியாத்தான் பொறந்திருப்பாங்களாட்ட இருக்குது. புள்ளை பூனையாப் பொறந்திருப்பா.” வெங்கடலட்சுமி அலுத்துக்கொள்வாள்.

ஒழலப்பதி ஆஸ்பத்திரி ஜங்ஷனுக்கு மேவறமாக உள்ள – சாந்தலிங்க நகர் எனப் பெயர் கொண்ட – வட்சம் வீடு வளவிலேயே ஒப்பிலியப்பனின் வீடு. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பு, கேரள அரசாங்கம் வீடற்ற ஏழை எளியவர்களுக்கு இலவச மனைகள் ஒதுக்கி, வீடும் கட்டிக் கொடுத்த வளவு அது. தலக்கெட்டுகள் தாண்டி, பல வீடுகள் கை மாறிவிட்டாலும், இன்னும் அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தாழ்த்தப்பட்டவர்களும், உயர முடியாத பல ஜாதியினருமான கூலிப் பணியாளர்களே. அன்னாடங்

காய்ச்சிகளான அவர்களில் பலருக்கும் மாதாந்திரம் கறிச்சோறு என்பதே கனவாக இருப்பதால், ஒப்பிலியப்பனின் கவுச்சி வாழ்வு பற்றி அண்டை அயல்கள் மட்டுமன்றி அந்த வளவே ஆயிரம் கண் போடும்.

“உனக்கென்னப்பா மகராசன்,… அன்னாடும் கள்ளு – கோட்டரு; ஒந்நராடம் கறி – மீனுன்னு கொண்ட கோளும் சங்கராந்திதான்” என்று பொறத்தாண்டி எரிச்சலைப் பாராட்டாகக் காட்டிக்கொள்வார்கள்.

சுமட்டுத் தொழிலாளியான அவனுக்கு இதைக் கேட்கையில் பெருமை பிடி கொள்ளாது. “பின்ன என்னத்தீங் பின்ன? மனுசன் மாங்கு மாங்குன்னு பாடுபடறதே ஒரு சாண் வகுத்துக்காகத்தானுங்ளே! வெடியாலிருந்து பொளுதோட முட்டும் முதுகு ஒடிய மூட்டை தூக்கறேன். பொளுதுளுந்தா ‘அலுப்பு மருந்து’ ஊத்தாட்டி, மேலு வலிக்குத் தூக்கம் வராது. மருந்து ஊத்துனா, ‘நாத்த’மில்லாம சோறும் எறங்காது. நாக்குக்கு ஒணத்திங்கறக்காக இல்லாட்டியும், மூட்டை தூக்கறக்கு ஒடம்புல தெம்பு வேணுமல்லொ! இப்பத்த அய்பிரீடு காய்கறிக, காசுக்குப் புடிச்ச கேடுதானே தவுத்து, அதுல சத்தா இருக்குது? கறி – மீனுன்னு திங்கறங்காட்டித்தானொ, நாம் பாருங் நரம்படி நாராயணனாட்ட இருந்தாலும், சிமிண்டு மூட்டை, வள மூட்டை, புளி மூட்டை எதானாலும் பஞ்சு முட்டையாட்ட அலாக்காத் தூக்கி ஏத்தறேன் – எறக்கறேன்” என்று கவுச்சி மகாத்மியங்களை அடுக்குவான்.


அதன் நியாயங்களை வெங்கடலட்சுமியும் உணர்ந்திருப்பதால் அவனது கவுச்சி தர்பார்களை சகித்துக்கொள்கிறாளே தவிர்த்து, அவளுக்கு இதனால் தீராத் துன்பம்தான்.

முதல் விஷயம், அவள் ஒரு தீவிர பக்தை. சுற்றுபாடில் உள்ள சகல தெய்வங்களுக்கும் நிரந்தர வாடிக்கையாளி. செவ்வாய் – வெள்ளி, அம்மாவாசை – கிருத்தீலு, அஷ்டமி நவமி, ப்ரதோஷம், பண்டிகை – திருவிழா என்றால், வீடு வழிச்சு, தலை குளிச்சு, சந்தனஞ் செகப்பு சாத்தி, சர்வாலங்காரியாக சம்மந்தப்பட்ட கோவில்களுக்கு எழுந்தருளிவிடுவாள். அந் நாட்களில் கவுச்சிக்கு 144. முந்தைய தின மிச்சங்கள் இருந்தாலும் சுத்தமாகக் கழுவித் துடைத்துவிட்டுத்தான் வழித்துக் குளிக்கிற புனிதப்படுத்தலே நடந்திருக்கும்.

அப்படியிருந்தாலும் இரவில், “அதுதான் கோயலுக்குப் போயிட்டு வந்தாச்சல்லொ! அப்பறமென்னொ? கருவாடோ, மொட்டோ எதாச்சு வறு. நாக்கு என்னுமோ நமநமங்குது” என ஒப்பிலியப்பன் பாட்டெடுப்பான்.

‘கோபம் கொண்டால் கொடுங்ஙலூர் பகவதி; தாபம் கொண்டால் மலையாள மோகினி’ என்றிருக்கிற வெங்கடலட்சுமிக்கு இதைக் கேட்டால் எங்கும்மில்லாத எரிச்சல் வந்துவிடும்.

“நல்ல நாரும் அதுவுமா என்ற வாயில மங்கள வார்த்தையா வந்துரும், ஆம்ம்மா…! இன்னைக்கு ஒரு நாளு அந்த நாத்தத்தத் திங்காட்டி உசுரா

போயிரும்? உங்குளுக்குத்தான் நல்ல நாளு – கெட்ட நாளு இல்லீன்னா, எனக்கும் அப்புடியா? வாரத்துல அஞ்சு நாளும் ஆடு, மாடு, கோளி, பன்னி, மீனுன்ணு காச்சிக் காச்சி, ஊடே கசாப்புக் கடையாட்ட நாறிக் கெடக்குது. காடு காடாப் போயி சாணி எடுத்துட்டு வந்து, வேர்த்து வடிய ஊடு வளிச்சு வாசத் தொளிச்சு, இன்னைக்குத்தான் ஓர்சல் பண்ணியிருக்கறன். கோயலுக்கும் போயிட்டு வந்த கையோட குத்து வௌக்கு ஏத்தி தூபம் காட்டி, மொட்டும் கருவாடும் வறுத்து வெச்சா குடும்பம் வெளங்குமா? சீதேவி குடியிருப்பாளா இந்த ஊட்டுல? முக்காடு போட்டுட்டு மூதேவிதான் பதியம் போட்டுக்குவா” என்று, பிலுபிலுவெனப் பிடித்துக்கொள்வாள்.

அவனும் அரைத் தரிப்பாக இருந்தால் எதுவும் பேசாமல் கமுக்கமாக வெளியேறி திண்ணையில் அமர்ந்து, புண்பட்ட மனசை புகை விட்டு ஆற்றிக்கொள்வான். வரும்படி கூடுதலாக இருந்து, பாறை மேட்டு கருப்பு விற்பனைச் சரக்கில் கோட்டரும் வாங்கி ஊற்றிக்கொண்டிருந்தால், கள்ளும் பிராந்தியும் கலந்த டாப் கீர் மப்பில், “ஆனானப்பட்ட அய்யிருகளே பூணூல் போட்டுட்டு சரக்கடிக்கறாங்கொ. கறி திங்கறாங்கொ. அவிகளுக்கு இல்லாத சாமியும் பூதமுமாடீ நம்முளுக்கு?” என எகிறுவான். சமயங்களில் ஆத்திரம் தணியாமல், “அந்த மானங்கெட்ட சோத்த நீயே தின்னு போ!” என்று வெறும் வகுத்தோடே படுத்தும்விடுவான்.

இது இப்படியென்றால், குலத்துக்காகாத வகையறாக்களைக் கொண்டு வந்து சமைக்கச் செய்வது அடுத்த பாடு.

ஒப்பிலி கவுச்சிப் பிரியன் என்பதோடு வகை விரும்பியும் கூட. நாய் ஒண்ணத் தவுத்து, ஊர்வன – நீந்துவன – பறப்பன பட்டியல்களில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் தின்பான். “நம்மளயத் திருப்பிக் கடிக்காத எதையும் நான் திம்பேன்” என்பது அவன் அடிக்கடி சொல்லும் முத்திரை வாசகம். அவ்வாறே ஒவ்வொரு ஞாயிறும் தினுசு தினுசான உயிரினங்களை வாங்குவான்.

ஆடு, கோழி, மீன், முட்டை, கருவாடு போன்ற உயர் ஜாதி மாமிசங்களை மட்டுமே இவள் வீட்டுக்குள் படியேற்றுவாள். பெரியாடு (மாடு), தணுப்பாடு (பன்றி. தணுப்பு – குளிர்ச்சி) போன்ற தாழ்த்தப்பட்ட மாமிசங்களை பொடக்காளிக் கல்லடுப்பில், ஒதுக்கப்பட்ட சட்டி- கரண்டிகளில் சமைத்து, திண்ணையிலேயே பரிமாறுவாள். மிச்சமுள்ள பண்டங்களும் பூனை, நாய் வாய் வைக்காதபடி எரவாரத்திலேயே உரி கட்டித் தொங்க விடப்படும். அந்தத் தீட்டுக் கவுச்சிகளை அவள் தின்பதுமில்லை.

அவளுக்கு இரக்க சுபாவம்; மேலும், நத்தத்தைக் கண்டாலே பயம் என்பதால் பிராணிக் கொலைகளைப் பார்க்க மாட்டாள். அவற்றின் முண்டங்களையோ, சடலங்களையோ போஸ்ட் மார்டம் பண்ணவும் அவளுக்குத் தெரியாது. அதனால் ஆட்டுத் தலை, நாட்டுக் கோழி முண்டம் ஆகியவற்றைத் தோலூரிக்காமல் தீயில் வாட்டி, மஞ்சள் பூசிக் குளிப்பாட்டித் துண்டமிடுவதும்; உடும்பு, அணில், ஆமை, முயல், கீரி, வெருகு ஆகிய வேட்டைப் பிராணிகளை அதனதன் ஜாதி சம்பிரதாயம், குலச் சடங்குகளோடு பக்குவப்படுத்தி, நறுக்கிக் கொடுப்பதும் ஒப்பிலியே.

அது காலை எட்டு மணியானாலும் சரி, மாலை ஐந்து மணியானாலும் சரி; கறி கைக்கு வந்தால் உடனே சமைத்தாக வேண்டும். அதுவும், பாத்திரத்தைக் கொடுத்ததும் ரெண்டு போசித் தண்ணி தலைக்கு ஊத்திவிட்டு ஈரம் துடைத்தபடி வரும்போதே, “ரெடியாயிருச்சா?” என்று கேட்பான்.

“மசால் பெரட்டி இப்பத்தான் அடுப்புல வெச்சிருக்குது. ஒரு கொதி கூட வல்ல. வெச்சது வேகறக்குள்ள அப்பனுக்கும் புள்ளைகளுக்கும் அப்புடி என்ன அவுதி? இந்த ஓடுகாலன் நேத்தைக்கெல்லாம் மத்தியானச் சோத்துக்கு ஊட்டுக்கே வராம, வானரப் படைக் கூட சேந்துட்டு, காடு – மேடு திரிஞ்சுட்டிருந்தான். இன்னைக்குப் பாரு, ஊட்ட உட்டு வெளிய போகாம, குட்டி போட்ட பூனையாட்ட அடுப்படிலயே சுத்தீட்டிருக்கறான். ஊட்டுப் பாடம் எளுதீட்டிருக்கற ‘சட்டி நக்கி’ வேற, இதோட எட்டு வாட்டி மோப்பம் புடிச்சுட்டுப் போயிட்டா. அப்பனுக்குப் புள்ளைக தப்பாமப் பொறந்திருக்குது போ!” சடைந்துகொள்வாள் வெங்கடலட்சுமி.

ஒப்பிலியோ, “புலிக்குப் பொறந்தது புள்ளைப் பூச்சியாவா இருக்கும்?” என்று பெருமையடித்துக்கொள்வான்.


அப்பேர்ப்பட்ட புலிக்கும் புலிக்குட்டிகளுக்கும் வாயத் தெச்சு வாக்கூடையும் போட்டாப்புடி ஆகிவிட்டது.

குமுட்டிபதியில் இருக்கிற ஒப்பிலியப்பனின் குலதெய்வக் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டல பூஜை சாட்டப்பட்டிருந்தது. குலத்தவர்களுக்குக் காப்புக் கட்டிவிட்டதால், மண்டல பூஜை முடிகிற வரை தீட்டுக் காரியங்கள் எதிலும் கலந்துகொள்ளவோ, கவுச்சி சாப்பிடவோ கூடாது.

“குப்பியண்ணன், கருப்பராயன், மினியப்பன்னு கவுச்சி சாமிகளக் கொல தெய்வமா வெக்காம, காய்கறிச் சாமிய கொல தெய்வமா வெச்சுட்டு வாதை பண்றானுகளே நம்ம சாதிக்காரனுக! ஒரு நாளு, ரெண்டு நாளா? நாப்பத்தெட்டு நாளு மனுசன் எப்புடி வாயக் கட்டீட்டிருக்கறது?” வழி நெடுக ஆவலாதிப்பட்டுக்கொண்டே வந்தான் ஒப்பிலி.

வெங்கடலட்சுமிக்கு உள்ளூரப் பேரானந்தம்.

அது அவளது முகத்திலும் வெளிப்பட்டதால், “ம்ங்,… உனக்கு இப்பக் குளு – குளுன்னு இருக்குமே…!” என்று 12 E பஸ்ஸில் வைத்தே அடித் தொண்டையில் உறுமினான்.

“எங்கியோ போற மாரியாத்தா – எம் மேல் வந்து ஏறாத்தான்ன கோப்புல, எம் மேல ஏன் பாயறீங்கொ? உங்க கொல தெய்வம் கோயல்ல காப்புக் கட்டியுட்டதுக்கு நானா பொறுப்பு?” இவளும் சிடுசிடுப்பாகக் காட்டிக்கொண்டாள். குலதெய்வம் புண்ணியத்தில் 48 நாள் கவுச்சி ஒவுத்திரியத்திலிருந்து விடுதலை என்கிற களிப்பு, உள்ளுக்குள்.

“கொல தெய்வம் அநியாயமா நம்ம சோத்துல மண்ணள்ளிப் போட்டுருச்சே…! ஆம்லெட்டோ கருவாடோ கூட இல்லாம மனுசன் எந்த முஞ்சிய வெச்சுட்டு இந்த மானங்கெட்ட சோத்தத் திங்கறது?”

அன்னாடும் இரவுணவின்போது ஒப்பிலி புலம்புவது வாடிக்கையாயிற்று.

ஞாயிற்றுக் கிழமைகள் அவனுக்கு வதை நாட்களாயின. அண்டை அயல்களில் கறியும் மீனுமாக வேகிற வாடை துளைக்கும்போது, மூக்கை அரிந்து வீசிவிடலாம் போலிருக்கும். பிள்ளைகள் ரெண்டும் யார் யார் வீட்டில் என்னென்ன கவுச்சி என்று மோப்பம் பிடித்து ஏங்கித் திரிவதைப் பார்க்கையில் அடி நெஞ்சு கனக்கும்.

அதை விடக் கொடுமை, பொறத்தாண்டி எரிச்சல்கார அயல்வாசிகள், இவர்களின் நிலைமையைக் கண்டு, “இன்னைக்கு உங்கூட்ல என்ன நாயத்துக் கௌம ப்பெசல்? கத்திரிக்காயா, முள்ளங்கியா?” என்று எளக்கநாட்டம் பண்ணுவது. அவர்களின் கொரவளியக் கடிச்சுத் துப்பணும் போல கொலை வெறி எழுந்தாலும், அதுவும் அசைவமாகிவிடுமே என்கிற சிந்தனை உடனடியாகத் தளை தட்டும்.

பிள்ளைகள் ஏங்கிப் போகின்றனவே என்று, பதிலியாக வெஜிட்டபிள் பிரியாணி, கறிக் குழம்பாட்டமே காளான் குழம்பு என்றெல்லாம் சமைத்துப் போட்டாள், வெ.லட்சுமி. அதுகளும் கறி வாசம் வீசுவதாக சொல்லிக்கொண்டு அரைத் திருப்தியோடு முக்கால் வயிறு சாப்பிட்டன.

ஒப்பிலி விரக்தியாக சிரித்துக்கொண்டான்.

சித்திரை – வைகாசி மாதமானதால் உள்ளூர் மற்றும் சுற்று வட்டாரமெங்கும் மாரியாத்தா நோம்பி சாட்டப்பட்டு, இவளது தரப்பு உறவினர்கள், அவனுக்குப் பழக்கப்பட்டவர்கள் எனப் பலரும் வீட்டுக்கு வந்து கிடா விருந்துக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தனர்.

“ஏனுங் நீங்க வேற, வெந்த புண்ணுல ஆஸிட்டு ஊத்தறீங்கொ? நமக்கு இருக்கற வெகாறிக்கு ஒரு முளுக் கெடாய உரிச்சுப் பச்சையாவே தின்னானும் தின்னு போடுவேன். ஆனாட்டி என்ன பண்றது? எங்க சாமி பாருங் எங்குளுக்குக் கையில காப்புக் கட்டி, வாயத் தெச்சு வாக்கூடையும் போட்டுட்ருச்சு. விருந்துக்கு எங்க வாறது, விருந்துக்கு?” என நொந்துகொண்டான்.


ஒரு வழியாக கும்பாபிஷேகம் நடந்து, 48 நாள் விரதக் காப்பும் முடிந்தது.

கைக் கட்டையும் வாய்க் கட்டையும் அவிழ்த்துக்கொண்டு வீடு திரும்புகையில், வேலந்தாவளத்திலேயே ஒரு கிலோ ஆட்டிறைச்சி, ரெண்டு கிலோ கோழியிறைச்சி, அரை டஜன் முட்டை, கால் கிலோ கருவாடு என வாங்கிக்கொண்டான்.

“அல்லாத்தியும் உப்பவே செஞ்சு வெய்யி. 48 நாளு வெகாறி தீர இன்னைக்கு லுங்கிய லூஸ் பண்ணீட்டு, உக்காந்து ஒரு செங்கட்டு கட்டியாகோணும். நானிதே,… அஞ்சு நிமுசத்துல எத்திருவேன் (வந்து சேந்துருவேன்)” என்று ஒழலப்பதி கள்ளுக் கடையருகே ஆட்டோவிலிருந்து இறங்கிக்கொண்டான்.

“சீக்கரம் வந்துருப்போவ்” பிள்ளைகள் கவுச்சிக் குஷியில் உற்சாகமாக டாட்டா காட்டின.

சாக்கணா சப்போட் இல்லாமல் ரெண்டு பாட்டில் கள்ளை வயிற்றுக்குள் ஊற்றிவிட்டு, வெக்குடு வெக்குடு என மேடேறினான். ஒரு மண்டலத்துக்குப் பிறகு குடித்ததால் சற்று தரிப்பாகவே இருந்தது.

எனினும், ‘ரெண்டு விஸ்க்கா மள்ளூத்துனா குடிச்ச கள்ளெல்லாம் காலியாயிரும். அப்பறம் மப்பெங்க மிச்சமிருக்கும்? வேலந்தாவளத்துல கறி, முட்டை, கருவாடு வாங்குனோம்; சரக்கு வாங்காம உட்டுட்டமே!’ என வருந்தினான்.

இருந்தாலும் பாதகமில்லை. இங்கே பாறைமேட்டில் கருப்பு விற்பனை உண்டு. பணம், இருபதோ முப்பதோ அதிகம்; தண்ணியும் கலக்குவார்கள். ஆபத்துக்குப் பாவமில்லை என்று, பாறை மேடு அடைந்ததும், கருப்பு விற்பனைக் குடிசையில் கோட்டர் வாங்கி, அங்கேயே ஊற்றிக்கொண்டு, நடை தொடர்ந்தான்.

வைகாசி உச்சி வெயில், மண்டையில் குளிர்ந்தது. வெங்காத்து சில்லென்று பூத்தது. வீட்டில் வெந்துகொண்டிருக்கக் கூடிய ஆடு, கோழி, முட்டை, கருவாடு அனைத்தும் நினைப்பிலேயே உமிழ் ஊறச் செய்தன.

ஆஸ்பத்திரி ஜங்ஷன் முக்கு திரும்பும்போது கெண்டைக் காலில் சுருக்கென்று ஏதோ வலி; கவ்விப் பிடிப்பது போல ஓர் உணர்வு. வெடுக்கெனத் திரும்பிப் பார்க்கையில், சலவாய் வடிய அரையடி நீளத்துக்கு நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டிருந்த நாய், தன் கடமை முடித்த தோரணையில் சத்தமேதும் செய்யாமல் அமைதியாகத் திரும்பி ஓடிக்கொண்டிருந்தது.

“ஓய்…! பாத்தப்போவ்! அது சந்தைப்பேட்டை மசை நாயி!” பேருந்துப் பயணியர் நிழற்குடையிலிருந்து ஒரு திட்டுத் தேய்ப்பாளியின் குரல்.

“மசை நாயா…??? அடப் பாவீகளா…!!! கடிச்சதுக்கப்பறமாய்யா எச்சரிக்கை பண்ணுவீங்க???” அலறியபடி ரத்தம் வழியும் காலை உதறிக்கொண்டான்.

அந்த மசை நாய், மசைக் கடி கடித்து, காக் கிலோ கறியையே எடுத்திருந்தது. வலியையும், தொப்புளைச் சுத்தி 24 ஊசி பயத்தையும் விட அப்போது அவனில் நிறைந்திருந்தது, மசை நாய் கடித்தால் சிகிச்சைக்குப் பிறகும் ஓரு வருடத்திற்கு கவுச்சி ஜட்டங்கள் எதையும் தின்னாமல் கடும் பத்தியம் இருக்கவேண்டுமே என்கிற கவலைதான்.


அவன் பாடு அப்படியிருக்க, “அந்த மசை நாயைப் பாத்தா, அதுக்கு ஒரு எலும்புத் துண்டாவது போடோணும்” என்று இப்போது வெங்கடலட்சுமி சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

– மெட்ராஸ் பேப்பர், ஜூன் 2022

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *