பக்குவம்






(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யார் எதைச் சொல்லி என்ன. சாரதாவின் மனம் சாந்தியடைந்தாற்றானே காலம் கனிந்து வரும். கனவு பலிக்கும் என வேதாந்தம் பேசி மனதைத் தேற்றிக் கொள்ள அந்தத் தாயுள்ளம் இணைந்து வந்தாற்றானே.
இருபது வயதைத் தாண்டிய பின்னும் மகள் பூங்கோதை பூப்படையவில்லையே என்ற கவலை அவளை நாளும் பொழுதும் வாட்டி வதைத்துக் கொண்டேயிருந்தது. இதற்காக எத்தனை ‘இறாவிலிப் பட்டாள் அவள். தெரிந்த தெய்வங்களையெல்லாம் வேண்டி நேர்த்தி வைத்தாள். கோயில் குளம் என்று அலைந்து திரிந்து செய்யாத அர்ச்சனையா. பூஜை புனஸ்காரமா! சீக்கிரம் ஒருநாள் காரியம் நிறைவேறிவிட வேண்டுமே எனத் தவிப்புக் கடலில் தத்தளித்தாள்.
பூங்கோதையின் ‘சாதக’ ஓலையைக் கொண்டு போய் ஒன்றுக்கு மூன்று புரோகிதர்களிடம் காண்பித்து பலன் கேட்டாள். நிகழ்வது கெட்ட காலம் என்றும் காரியம் எப்படியும் கை கூடும் என்றும் கிட்டிய நம்பிக்கையூட்டிய பதிலில் மனதை சாந்தப்படுத்த முயன்றாள்.
நாளொன்றும் பொழுதென்றும் நகர நகர அவள் நெஞ்சின் அடித்தளத்தில் ஏக்கம் சிறுகச் சிறுக குடி கொள்ளத் தொடங்கிற்று. என்றைக்குமே இவள் கன்னிப்பருவம் எய்தாது இருந்து விட்டால் இருளி’ என்ற ‘பட்டப் பெயருடன், பூஜைக்கு உதவாத பூவாய், ‘மூளியாக மூலைக்குள் முடங்கி விட வேண்டியது தானா. சீ….. இந்த உலகில் இது என்ன வாழ்வு……!
இப்பொழுதெல்லாம் பூங்கோதை மௌனியாகி விட்டாள். என்ன மாதிரி இளங்கன்றின் உற்சாகத துடிப்புடன் துள்ளாட்டம் போட்டுத்திரிந்தவள் பேசா மடந்தையாய்….. அமைதியே உருவாய்….. வாயில்லாப் பூச்சியாய்……
ஒரு நாள் சாரதா பூங்கோதையை அழைத்துக் கொண்டு போய் ஒரு பிரசித்தி பெற்ற ஆங்கில வைத்தியரிடம் ஆலோசனை கேட்டாள். பூங்கோதையை நுட்பமாகப் பரிசோதித்த வைத்தியர், ஒன்றுக்கும் அஞ்சத் தேவையில்லை எனவும் அவளுடைய பூப்பு இயற்கையாகவே நடைபெற சாத்தியக்கூறுகள் வலுவாகவே இருப்பதாகவும் முக்கியமாக சில “ஹோமோன்கள்” குறைபாடுகள் உண்டென்றும் மருந்து ஒழுங்காக உள்கொள்ளும்படி சில மாத்திரைகளும் கொடுத்தார். பூங்கோதையின் உடம்பில் ஊட்டச்சத்து குறைவு என்றும் சத்துணவு சாப்பிடும்படியும் அறிவுரை நல்கி அனுப்பி வைத்தார்.
சாரதாவின் அதீத கவனிப்பில் பூங்கோதையின் உடலில் ஆரோக்கியமான மாற்றங்கள் சிறுகச் சிறுகத் தென்படுவததை சாரதா உளப்பூரிப்புடன் அவதானித்துக் கொண்டு வந்தாள்.
எனினும், “கல்வித் தராதர உயர்தர வகுப்பில் கற்கும் ஒரு இருபது வயதுக்காரி இன்னும் பூப்படையாது இருக்கிறாளே என்ற ஒரு பெற்ற தாய்க்கே உரித்தான அந்த இயல்பான ஏக்கம் அவள் நெஞ்சை நெருஞ்சி முள்ளாய் நெருடிக் கொண்டே இருந்தது.
வகுப்பில் உள்ள சகமாணவிகள் பூங்கோதையை ஒரு மாதிரியான கண்ணோட்டத்துடன் நோக்குவதும் அவளின் முதுகுக்குப் பின்னால் நாக்கு வளைத்து நையாண்டி செய்யும் போதெல்லாம் அந்த இள நெஞ்சுக்கு இயற்கையின் வஞ்சனையை எண்ணி ‘படைத்தவனை’ வேண்டிக் கொள்வதைத் தவிர் வேறு என்ன தான் செய்யத் தோன்றும் பாவம்!
நல்ல நாளும் அதுவுமாக ஒருநாள் குட்டொன்று வெளித்தது கூட்டில் குயிலொன்று கூவியது. தோட்டத்துப் பூஞ்செடியில் மொட்டொன்று வெடித்தது. கூட்டில் குயிலொன்று கூவியது. முற்றத்து தென்னையில் முற்றிய நல் பாளையொன்று ‘பட்’டென்று வெடித்தது. பவளம் நிகர் மேனிச் சிட்டொன்று சிறகு விரித்தது. யார் செய்த புண்ணியமோ இன்று விடியுமுன்னே அவர்களுக்கு ‘விடிவு’ ஏற்பட்டுவிட்டது. “என்னப்பா! நான் ‘கத்து’றன் இடிச்ச புளிமாதிரி இருந்து கொண்டு கண்டறியாத ஒரு றேடியோ கேட்பு.
கழுத்தை நொடித்த வாறே கணவர் நாகலிங்கத்தாரைச் சீண்டினாள் சாரதா.
பி.பி.சி ஒலிபரப்பை உன்னிப்பாக செவிமடுத்துக் கொண்டிருந்த நாகலிங்கம் “கேட்குது சாரதா! அதுக்கேன் இப்படி சுடுகுது மடியைப் பிடி” எண்ட கணக்கிலை பிடுங்கி அடுக்குறீர்.
அங்கே கிழக்கு மாகாணப் பகுதியிலை சனங்கள் படுகிற பாட்டைக் கேட்டால் தலையைச் சுற்றுது கேட்டியோ.”
“ஏன் வடமராட்சி ஒப்பிறேக்ஷன் நேரம் நாங்கள் பட்டுத் திரிஞ்ச அவதியும் ஆறணிவும் மறந்து போச்சே. கையில் கிடைச்சதை எடுத்துக்கொண்டு வரணிக்கு ஓடி நாங்கள் பட்ட சீரழிவு! அது, அவரவர் விதி. ஆனைக்கொரு காலம்” புனைக்கொரு காலம்.
“அவரவர் விதி இல்லை, தமிழனது தலைவிதி. அதையேன் பிரித்து பிரதேச வாதம் பேசுகிறாய். மனிதர் என்றால் எல்லாம் மனிதர் தானே”
இப்பொழுது சாரதாவுக்கு அது ஒன்றும் பிரச்சனை இல்லை. அவை பெரிதாகவும் தோன்றவில்லை. பூங்கோதை ‘பக்குவம்’ எய்துவிட்ட மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.
“நீங்கள் போய், மாமி, மச்சாள், அண்ணன் வீட்டார் எல்லோருக்கும் ‘வியளம்’ சொல்லிப்போட்டு வாருங்கோ. பின்னே….. வருகிற வழியிலை சந்தைக்கும் போய் தேவையான சாமான்களை வாங்கி வாருங்கோ.”
“நான் அவளுக்கு வேப்பிலைச் சாறு குடுத்திட்டு ஓ.எனக்கு ஊருப்பட்ட வேலை கிடக்கு….. ருது சோபன விழாவை நாங்கள் வெகு டீங்காக நடத்த வேணும், கேட்டியளோ!”
என்ன சாரதா? நாடு நடக்கிற நடப்பிலை இந்த சூழ்நிலையிலே இதெல்லாம்…..!”
“என்ன விசர்க்கதை கதைக்கிறியள். எத்தனை நாட்களாகத் தவமிருந்து பெற்ற வரம் இது. பலித்த கனவு இது! எங்களுக்கு இருக்கிறதெல்லாம் இந்தச் சடங்கை நல்ல சிறப்பாகச் செய்து கண்குளிரப் பார்க்க வேணும் என்டொரு அங்கலாய்ப்பு. எங்கட சீவியம் என்ன நிரந்தரமே! எப்ப என்ன இடியேறு வந்து விழுமோ? ஆர் கண்டது?:”
இதெல்லாம் ஊர் உலகத்திலை நடக்காத சங்கதியில்லை சாரதா. ஒரு பருவப் பெண்ணுக்கு இயற்கையாகவே நிகழும் மாற்றம் தானே! இதுக்குப் போய் ஏன் பெரிய எடுப்பெல்லாம்..”
“நல்ல விண்ணாணக் கதையல்லோ நீங்கள் பேசுறது. இது வராமல் வந்ந வரம். இப்படி நடந்திராவிட்டால் என்ர பிள்ளையின்ர கதி..! வாழ்க்கை முழுக்க இருண்ட சீவியம் தானே! கடவுள் இப்பவெண்டாலும் கண் திறந்திட்டார்.”
“எல்லாவற்றுக்கும் மேலே ஒரு அபூர்வ சக்தி எங்களை ஆட்டிப் படைக்குது. அந்த சக்திக்கு நாங்கள் தலை வணங்குவோம். ஆனால், இந்த பெரும் எடுப்பெல்லாம் தேவையற்றது. அதுவும் இன்றைய சூழ்நிலையிலே ”
“தேவைதான்”
சாரதா அசைவதாக்காணோம். அவளைப் பூவும் பொட்டுமா.. சர்வாலங்கார பூஜிதையாக அலங்கரிச்சுப் பார்க்க வேணும், புகைப்படம் எடுக்க வேணும், ஏன்? வீடியோ படமும் எடுக்க வேணும்”
“ஏன்! அவள் அம்பிகாவின்ரை மகள் நந்தினி. பூங்கோதையில் பார்க்க நாலு வயது இளமை. அவளின்ர ‘சாமத்திய வீடு’ எவ்வளவு சிறப்பாக நடந்தது. மணவறை மாதிரி மேடையில அவளின்ர ‘மேக்கப்’ என்ன, மினுக்கல் என்ன, தலைக்குப் பால், அறுகம்புல் வைச்சு முழுக வார்த்த பொழுது கண்டியளே சினிமா நடிகையைவிட எவ்வளவு சிக்காரான சோடினை கண்ணுக்கு மை தீட்டி, இரட்டை வடச் சங்கிலி, நெக்லஸ், சரிகைச் சட்டை, பாவாடை…. அந்தக் கோலத்திலை நான் அவளுக்கு அதுவும் குளிப்பறையிலோ, கிணத்தடியிலோ இல்லை வீடியோ எடுக்க வசதியாக மணவறை மேடையிலே வைத்துத்தான் தலைக்குப் பால் அறுகு வைச்சு ஒவ்வொரு சொந்தக்காரரையும் பால் அறுகு வைக்கிற நேரம் படம் எடுத்து என்ன கண்டியளோ……”
“ஓம்.. ஓம்.. சரியாக ஒரு மணிநேரமாக எல்லாரும் பால் வைச்சு, பெட்டையைக் குளிப்பாட்டி…. அடுத்தநாளே அவளுக்கு ஜலதோக்ஷம் பிடிச்சு காய்ச்சலாக நாலு நாள் படுக்கையிலை கிடந்து…”
“ஆ! பின்னே! உங்களுக்கு எதுக்கெடுத்தாலும் ஒரு கேலியும் இடக்குப் பேச்சும். ஒருவரைப் படம் எடுத்து ஒருவரைப் படம் எடுக்காவிட்டால் அனைவருக்கும் கோபம் வராதிருக்குமே! இப்படி ஒரு நல்ல காரியம். நடக்கையிலை இனம் சனத்தின்ர வெறுப்பை வாங்கிக் கட்டிக்கொள்ள முடியுமே! அனுசரிச்சுப் போகத்தான் வேணும்…”
“பிறகு ஸ்நானம் முடித்து பிள்ளைக்கு ஊரில் உள்ள அத்தனை ரக நகைகளையும் அணிவித்து அலங்கரிச்சு பட்டாடை சலசலக்க பிள்ளையை மேடைக்கு அழைத்துக் கொண்டு வருகிற நேரம் அபசகுனம் மாதிரி அந்த கமராக்காரனும் வீடியோகாரதனும் ‘நில். நில்’ என்று சைகை காட்டி ‘நிறுத்தி நிறுத்தி மெல்ல மெல்ல நகர விட்டு படமெடுத்து செய்து விட்ட ஆர்ப்பாட்டமும் அட்டகாசமும்..”
“சடங்கு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்க வேண்டியதுதான். அதன் பேரிலை நாகரிக மோகத்தினாலும் பணச் செருக்காலும் அவைகளைக் கொச்சைப்படுத்தக்கூடாது.”
“உங்களுக்கெல்லாம் ஒரு விநோதமான வியாக்கினமும் பகிடியும் தானே. ஓ.. அந்த மாதிரி நாங்களும் சிறப்பாகச் செய்து காட்ட வேணும். அவள் பிள்ளைக்கு என்ன ஆசை இருக்காதே! வாய் திறந்து சொல்ல மாட்டாள். தகப்பன். தாய் என்றிருக்கின்ற நாங்கள்தான் ஆலோசிச்சு இந்த அடுக்குகளை செய்ய வேணும். பிறகு பள்ளிக்கூடத்திலை, ‘சிநேகிதிகள் எல்லாம் எங்கேயடி சாமத்திய வீட்டு அல்பம் எண்டு கேட்டு நச்சரித்தால் அவளுக்குத்தானே வெட்கம்.”
“மணவறை, றேடியோ செற். ரீ.வி. மூன்று வேணும் கேட்டியளே! ரி.வி ஒன்று பந்தல் மேடைக்கு அருகே, ஒன்று நடுக்கூடத்திலை ஆட்கள் சபை’ நடக்கிற நேரம் பார்க்க ஒண்டு குசினிக்கு பின்னே. ஒரு நாதஸ்வர ‘செற்றுக்கும் சொல்லுங்கோ.”
“ருது சோபன விழா அழைப்பிதழ் ஒரு இருநூறு ‘காட்’ ஓடர் பண்ணுங்கோ…. வேற.. வேற..” அவ அம்பிகா என்ன மாதிரி நெஞ்சை நிமிர்த்தித் திரிஞ்சவ தான் கண்டறியாதொரு சாமத்திய வீடு செய்து போட்டா எண்டு. நாங்கள் செய்து காட்ட வேணும். அதிலும் பார்க்க டீங்கா…… ஓ ! “அது சரி சாரதா. இதுக்கெல்லாம் என்ன செலவாகும் தெரியுமோ?”
“தெரியும்! அதுக்கென்ன! அதுதானே கனடாவில் இருந்து அவளின்ர தமயன் தங்கச்சின்ர செலவுக்கெண்டு இரண்டு இலட்சம் அனுப்பி இரண்டு மாசம் கூட ஆகையில்லை. அது வங்கியிலை கிடந்து வட்டி வளருது. ஏன்! இன்னும் காசு வேணும் என்றாலும் ‘போனிலை’ ஒரு சொல்லு சொன்னால் போதும். உடனே அனுப்பி வைப்பான் தெரியுமே..!
“அது சரி! நாங்கள் இவளுக்கு நல்ல தரத்திலை ஒரு பட்டுச் சேலை எடுக்க வேணும். அதுபோல பின்னேரம் ‘கேக்’ வெட்டுற நேரம் போட ஒரு நல்ல ‘சல்வார் கமீஸ்’ பின்னே நல்ல புது டிசைனிலை* ஒரு கவுண்…”
“ஆய்! இந்தா வருகிறாள் கோதை. அவளுக்கு வயது நூறு தான் இப்போதைக்கு சாவில்லை. அவளைப் பற்றிக் கதைக்கவும் ஆள் கண் முன்னாலை” சாரதாவின் வாயெல்லாம் பல்.
ஆச்சரியம் மீற விழிகளை அகல விரத்த சாரதா அடுத்த கணமே குரலைக் கடுமையாக்கிக் கொண்டு “என்னடி கோதை! எங்கேயடி உலாத்திப் போட்டு வருகிறாய். பக்குவப்பட்டு இரண்டு கிழமை கூட ஆகவில்லை. அதுக்குள்ளே……”
“என்னம்மா! எனக்கு ஒரு குழப்பமும் கோளாறும் இல்லை. அடுத்த மாதம் எனக்குப் பரீட்சை நெருங்குது. பாடம் படிக்கத்தானே போனது. அதுக்குள்ளே துள்ளி மிதக்கிறாய்?”
“ஓமடி! ஓமடி! நீங்களும் உங்களின்ர படிப்பும். படிச்சுத்தான் என்ன கிழிச்சியள்? போய்க் குளிச்சிட்டு சர சர எண்டு புறப்படு. கடைக்குப் போக..”
“ஏன்?”
“ஏனோ? இவ இன்னும் சின்னப்பாப்பா” எண்ட நினைப்பு. எடி நீ இப்ப பெரிய மனுக்ஷியடி. வயதுக்கு வந்திட்டாய்..”
“அது சரி.. ஏன் கடைக்கு…?”
“உனக்கு ஒரு காஞ்சிபுரம் சாறி எடுக்க வேணும். கவுண், சல்வார் கமிஸ் எல்லாம் சேர்த்து….”
“ஏன்? எனக்குப் போதிய உடுப்புகள் இருக்குத்தானே. இப்ப உடுப்பு எடுக்க என்ன அவசியம், என்ன அவசரம்?”
“என்னடி! நோடாலக் கதை கதைச்சுக் கொண்டு இருக்கிறாய். ‘சாமத்திய வீடு வருகிற சனிக்கிழமைக்குத் திகதி குறிச்சாச்சு.
ஊருப்பட்ட அடுக்குகள் கிடக்கு. இவ வித்தாரம் படிச்சுக் கொண்டு இருக்கிறா..”
“ஆரைக் கேட்டம்மா இந்த அடுக்கெல்லாம்”
“ஆரைக் கேட்கிறது? நாங்கள் சொல்கிறபடி கேட்டு நட. அவவுக்கு இப்ப வாய் வர வர நீளுது..”
“எனக்கு இந்தச் சடங்க சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம் அம்மா. எனக்கு விருப்பமும் இல்லை.”
இப்பொழுது சாரதாவின் குரல் உச்சஸ்தாயியில் ஏறியது.
“பாருங்கோவன் அவவின்ரை கதையை! இத்தனை காலமா ஏங்கிக் கொண்டிருந்த காரியம் இப்ப நிறை வேறிக்கிடக்கு என்ன மாதிரி கனவு கண்டு கொண்டு இருந்த நான் தெரியுமே?”
“அம்மா! ஒரு பருவப் பெண்ணுக்கு நடக்க வேண்டியது தானே நடந்திருக்கு. இது நடக்காமல் இருந்தால் தான் அதசியம். இங்கே கொஞ்சம் தாமதமாகிவிட்டது. அவ்வளவு தான் வித்தியாசம். அதற்கேன் இவ்வளவு சலசலப்பு.”
“அது மட்டுமல்ல இப்ப நாடு கிடக்கிற கிடையிலே,இன்றைய சூழ்நிலையில் இந்த டாம்பீகம் பாட்டு, படாடோபம் எல்லாம் தேவைதானோ? இதைவிட இன்றைய தேவைகள் நிறைய இருக்கே..”
“அங்கே வன்னியிலே. தென்மராட்சியிலே. வடமராட்சி கிழக்கிலே. வலிகாமப் பக்கம். கிழக்கு மாகாணத்திலே கூட என்ன மாதிரி சனங்கள் அலவலாதிப் பட்டுக்கொண்டு திரிகிறார்கள். போர் அழிவு போதாதென்று சுனாமியும் தாக்கி எங்கள் சகோதரர்கள் ஆற அமர இருக்க இடமில்லாமல் உடுக்க உடையில்லாமல், ஒரு நேரம் கூட உண்ண உணவில்லாமல் சொந்த மண்ணிலேயும் அகதிகளாக.. உங்களின்ர சொந்த சகோதரம் அல்லது ஒரு பிள்ளை இப்படி அவலப்படப் பார்த்துக்கொண்டு இருப்பியளே?”
“ஏன் செய்தி செய்தி என்று விழுந்தடிச்சு செய்தி கேட்கிறீர்கள் தானே. நம் இனம் எத்தனை இன்னல்படுகிறார்கள்…. இந்த நேரத்திலை நாங்கள் இங்கே மணப்பந்தலும் சப்பரமும் சோடனையும் – எனக்கு ஒன்றும் வேண்டாம் அம்மா எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை.”
“இவ என்ன விண்ணாணக் கதை படிக்கிறா முளைச்சு மூண்டு இலை விடலை. அவவின்ர கதை கதையாம் காரணமாம்….”
பெற்ற மகள் அதுவும் பருவ மங்கை என்றும் பாராது இளக்காரமாகப் பழித்துக் கொட்டினாள். கரித்துக் கொட்டினாள் சாரதா.
“இப்போ கொஞ்சம் முன்னம் தானே அம்மா நான் பெரிய மனுக்ஷியாகிவிட்டதாகச் சொன்னீங்கள். இப்ப முளைச்சு மூண்டு இலையும் விடாத சின்னப்பாப்பா என்கிறீர்கள் எனக்கு ஒரே குழப்பமாயிருக்கு.
“ஓமடி! எனக்கும் ஒரே குழப்பமாயிருக்கு இந்த அடுக்குகள் எல்லாம் எடுத்து ஆயத்தம் செய்ய இவளின்ர கதையைக் கேளுங்கோவன்”
“அம்மா! அண்ணா அனுப்புகின்ற காசு இருக்கு என்றுதானே இந்தக் கூத்தெல்லாம் ஆடுறியள். காசு மிஞ்சினால் எனக்காக இந்த நிகழ்ச்சிக்குச் செலவு செய்ய வைத்திருக்கிற காசு இரண்டு இலட்சத்தையும் ஏதோ ஒரு நலன்புரிச் சங்கம் மூலமாக இந்த அகதிகளுக்கு நன்கொடையாக காசோடு காசாக அனுப்பி வையுங்கோ புண்ணியமாகப் போகும். அண்ணா அந்தக் கண்காணாத தேசத்திலை சூட்டில் காய்ந்து குளிரில் நனைந்து நித்திரை விழித்துக் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்புகிற காசு ஒரு நல்ல காரியத்துக்கு உபயோகப்படுதே என்ற திருப்தியாவது இருக்கும்”
ஒரு குட்டிப் பிரசங்கமே நிகழத்திவிட்டு “எனக்குச் சோதனை நெருங்குது. படிக்க ஒரு பாடு இருக்கு” என்று சூள் கொட்டியபடி அவ்விடம் விட்டகன்றாள் பூங்கோதை.
“என்ன நீங்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறியள், ஊமையோ” என்றபடி கணவனை வெறித்து நோக்கினாள் சாரதர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
சும்மா பேச்சுக்கு மட்டுமல்ல – உடல் ரீதியாக மட்டும் அல்ல உள ரீதியாகவும் மகள் பூங்கோதை பக்குவப் பட்டு விட்டாள் என்ற மனநிறைவோடு ஒரு நிம்மதிப் பெருமூச்சை உதிர்த்தார் அப்பா நாகலிங்கம்.
– யாழ் மாவட்ட கலாசாரப் பேரவை நடாத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற சிறுகதை.
– தினக்குரல், 10 ஆனி 2007.
– என்னுயிர் நீ தானே! (சிறுகதைத் தொகுதி), முதலாம் பதிப்பு: மார்கழி 2018, கவிதா நிலையம், தும்பளை.