நாற்பது நிமிட நாடகம்!




(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
[பாடசாலையின் முதல் மணி அடிக்கிறது. ஆசிரியர் ஆறுமுகம் ஒரு கையில் தோல் பெட்டியுடனும், மறுகையில் வெந்நீர் போத்தலுடனுமாக எட்டாம் வகுப்புக்குள் நுழைகிறார். வகுப்பில் மகேசன், இரத்தினம், சிவபாலன், மகேந் திரன், நடேசன், சந்திரன், மூர்த்தி, கண்ணன் முதலிய முப்பது மாணவர்கள் இருக்கிறார்கள்.]
மாணவர்கள்: குட்மோணிங் சேர்.

ஆசிரியர்: குட்மோர்ணிங்! எல்லாரும் இருக்கலாம் அது சரி இந்தக் கரும்பலகையை நான் வருமுன்பே அழித்து வைத்திருக்கக் கூடாதா? டஸ்ரரில் இருந்து பறக்கும் தூசியானது எனக்கு ஒத்துக்கொள்ளாது. மகேசன் வந்து அதைக் கெதியாக அழித்துவிடலாம்.
[மகேசன் கரும்பலகையை அழிப்பதற்குப் போதல். ஆசிரியர் முகத்தைக் கைக்குட்டையால் மூடியவாங வகுப்பை விட்டு வெளியேறுகிறார். ஐந்து நிமிடங்களின் பின் தூசி அடங்கியதும் மீண்டும் வகுப்புக்குள் நுழைகிறார்.]
இரத்தினம்: இனிமேல் சேர் நீங்கள் வரமுன்பே அழித்து வைக்கலாம்.
ஆசிரியர்: ம்…பிறகும் இதே கதைதானா ஏறு வாங்குக்கு மேலே. படிக்கிற நேரத்திலை குழப்பிக் கொண்டு…
சிவ்பாலன்: சேர் இரத்தினம் மறைக்கிறார். எங்களுக்குக் கரும்பலகை தெரியவில்லை.
மகேசன்: (மெல்லிய குரலில்) ஏண்டா உனக்குக் கரும்பலகை? அங்கை என்ன படமா காட்டப் போகினம்?
ஆசிரியர்: டேய் இரத்தினம்! பின் வாங்கிலை போய் ஏறி நில்! சிவபாலன் இங்கை வாரும்.
ஆசிரியர்: (தனது பெட்டியில் இருந்து ஒரு தம்ளரை எடுத்துக் கொடுத்து) இதுக்கை ஐயாத்துரை கடையில் துப்பரவாகக் கொஞ்சம் சுடு தண்ணீர் வாங்கிவாரும் பாப்பம்.
[சிவபாலன் போனதும் ஆசிரியர் தனது பெட்டியிலிருந்து ஒரு சிறு கண்ணாடியையும் சீப்பையும் எடுத்து கண்ணாடியைப் பார்த்துத் தனது மொட்டைத் தலையிலுள்ள இரண்டொரு மயிரையும் வாரி விடுகிறார். தங்களையும் மீறி வந்த சிரிப்பை மாணவர்கள் அடக்கிக் கொள்ளுகிறார்கள். மகேசனுக்கும் – மகேந்திரனுக்கும் மட்டும் அது முடியாமல் போகிறது; உரத்துச் சிரித்து விடுகிறார்கள்.]
ஆசிரியர்: அந்த இரண்டுபேரும் ஏறலர்ம் வரங்குக்கு மேலே! இது என்ன கூத்துக் கொட்டகை என்ன எண்ணமோ! நீங்கள் கூட படித்து முன்னேறுவதென்றால் அது எப்படி முடியம் ?
[இருவரும் வாங்குக்குமேல் ஏறுகிறார்கள்]
மரணவர்கள்: பின் வாங்கு! பின் வாங்கு!
ஆசிரியர்: பின் வாங்கில் இருப்பவர்கள் எல்லாரும் முன் வாங்குகளுக்கு வாருங்கோ. நிற்கிறவர்களுக்கு அந்த வாங்கு தேவைப்படுகிறது.
[சிவபாலன் வெந்நீர் கொண்டு வருகிறான். ஆசிரியர் பெட்டியிலிருந்து ஏதோ மருந்துக் குளிகை எடுத்து வாய்க்குள் போட்டு உமிழ்கிறார். பின் வெந்நீரைக் குடிக்கிறார். இந்த நேரத்தில் நடேசனுக்கும் சந்திரனுக்கும் இடையில் ஏதோ தகராறு ஏற்பட்டு வாதம் முற்றுகிறது.]
ஆசிரியர்: நடேசன் சந்திரன் இருவரும் இங்கை வரலாம். அங்கை என்ன சண்டை?
நடேசன்: சேர், இந்தப் பேனையை இவர் தன்னுடைய தாம். நான் களவெடுத்துப் போட்டேன் என்கிறார். என்னைக் கள்ளன் எனக் குற்றம் சாட்டுகிறார்.
சந்திரன்: இது என்னுடையது தான் சேர். போன கிழமைதான் வாங்கினேன். அதற்கிடையில்…
நடேசன்: சேர்! இது அவருடையது என்று எழுதியா ஒட்டியிருக்கு? இப்படி வேறு ஒருவராலும் வாங்கமுடியாதா?
[இருவருக்கும் மீண்டும் சண்டை ஆரம்பமாகிறது. ஆசிரியர் பிரச்சினைக்குரிய அந்தப் பேனாவை வாங்கித் தனது பெட்டிக்குள் போட்டு விடுகிறார்.]
ஆசிரியர்: நீங்கள் இரண்டு பேருமே பேனை வைத்திருக்கத் தகுதியற்றவர்கள். ஆதலால் அது என்னிடமே இருக்கட்டும். நீங்கள் இனியாவது தகராறு செய்யாமல் போய் இருங்கள்.
[நடேசன் சந்திரன் இருவரும் தோல்வியுடன் திரும்புகிறார்கள். ஆசிரியர் தனது வெந்நீர் போத்தலில் இருந்து பால் சாப்பிட ஆயத்தமாக அதன் மூடியைத் திறக்கிறார்.]
இத்தனை நேரமும் வாங்கின்மேல் நின்றவர்களில் ஒரு வரான இரத்தினம் – வேண்டுமென்றே மயங்கி விழுவது போல் தடாலென கீழே விழுந்து விடுகிறான். மாணவர்கள் எல்லோரும் அவனைச் சுற்றிக் கூடி விடுகிறார்கள். ஆசிரியரும் கூட்டத்தோடு ஐக்கியமாகிவிடுகிறார்.
ஆசிரியர்: ஏனெடா அவன் விழுந்தவன்?
மகேசன்: அவருக்கு இப்படி அடிக்கடி மயக்கம் வருவதுண்டு சேர் சோர்வுப் பிணியாம்!
ஆசிரியர்: தயவு செய்து கூட்டமாக நிற்காதீர்கள். அவனுக்குக் காற்றுப் படவேண்டும். ஓராள் பக்கத் திலிருந்து விசுக்கலாம். இன்னொராள் முகத்தில் சிறிது தண்ணீர் தெளித்து விடலாம்.
[சிறிது நேரத்தில் இரத்தினம் கண் திறத்தல்]
ஆசிரியா: சிவபாலா! ஆளுக்கு ஏதாவது பருகக் கொடுக்க வேண்டுமா?
சிவபாலன்: உங்கடை பிளாஸ்க்கில் இருந்து பால் எடுக்கவா சேர்?
ஆசிரியர்: சுத்தப் பைத்தியமாய் இருக்கிறாயே! மயங்கியவனுக்குப் பாலா கொடுப்பது? இந்தா காசு, கடையிலை சோடா வாங்கி வா! (சிவபாலன் சிறிது தூரம் சென்றதும்) வேண்டாம் சிவபாலா. சோடா வேண்டாம் ரீ வாங்கி வா.
சிவபாலன்: பால் ரீயா சேர்?
ஆசிரியர்: பாலே – ஆகாது கூடாதென்று எத்தனை தரம் சொல்லுவது?
சிவபாலன்: அப்படியானால் வெறும் கோப்பி.. ?
ஆசிரியர்: கோப்பியும் கூடாது. நீங்கள் முதலுதவிச் சிகிச்சை முறைகள் படித்ததில்லையா? பிளேன் ரீ போதும். மறந்திடாதை!
[சிவபாலன் போகிறான். ஆசிரியர் தனது வெந்நீர்ப் போத்தலில் இருந்து பால் ஊற்றிக் குடிக்கிறார். சிறிது நேரத்தில் சிவபாலன் தேநீர் கொண்டுவந்து இரத்தினத்துக்குக் குடிக்கக் கொடுக்கிறான்.இரத்தினம் சிரித்தவாறு, எழும்புகிறான்.]
ஆசிரியர்: வாங்கின் மேல் நின்றவர்கள் எல்லாரும் பழைய இடங்களில் போய் இருக்கலாம் இரத்தினம் கடைசி வாங்கில் ஆறுதலாகப் போய் படுத்துக்கொள். மற்றவர்கள் அவனைக் குழப்பக் கூடாது.
மூர்த்தி: சேர்! இன்றைக்குக் கணக்கில் நேரமும் தூரமும் செய்யவேண்டும்.
[இந்த நேரத்தில் பல பாணவர்கள் மூர்த்தியை நோக்கி ‘மடையா’ என்றும் ‘இரடா’ என்றும் குரல் எழுப்புகிறார்கள்.]
ஆசிரியர்: மூர்த்தியா எனக்கு வாத்தியார்? நீயா எனக்குப்படிப்பிக்கிறாய்? இங்கே நீ ‘நேரத்தை’ வீனாக்காமல் தூரப் போய் அந்தச் சுவரோடை நில்.
கண்ணன்: சேர் சுந்தரலிங்கம் அறிக்கை விட்டிருக்கிறார். அது பேப்பரிலே வந்திருக்குது.
ஆசிரியர்: என்ன வவுனியா சுந்தரலிங்கம் தானே! அவ ரை எனக்கு நன்றாகத் தெரியுமே! நாங்கள் இருவரும் நல்ல சிநேகிதர்கள். இரண்டு வருடங்கள் ஒன்றாகப் படித்திருக்கிறோம். இதை நீங்கள் அவரைக் கண்டால் கேட்டுப் பார்க்கலாம். அது சரி என்ன சொல்லுகிறார்? உங்கை பத்திரிகை இருக்கா? –
கண்ணன்: பத்திரிகை இருக்கிறது! படிக்கட்டுமா சேர்?
ஆசிரியர்: ஓ…! தாராளமாக. இங்கை முன்னுக்கு வந்து நின்று படி. எல்லாரும் அமைதியாக இருந்து கேட்கவேண்டும். சுந்தரலிங்கம் ஒரு கணிதமேதை. நீங்கள் இதைக் கவனமாகக் கேட்பதால் உங்கள் கணக்குப் பாடத்துக்கும் அது மிகவும் உதவியாக இருக்கும். இதோ படிப்பதைக் கேளுங்கள்.
கண்ணன்: (படித்தல்) தமிழ் மக்களுக்கு சுந்தரலிங்கத்தின் வேண்டுகோள்! இனியாவது உணருங்கள். விழிப்போடு ஒரு முடிவுக்கு வாருங்கள். யாழ்ப்பாணம் யூன் 19…
[வகுப்பு முடிந்ததற்கான மணி அடிக்கிறது]
ஆசிரியர்: சரி கண்ணன் நிறுத்து. இந்தப் பத்திரிகையை நீ படித்து விட்டாய் தானே?
கண்ணன்: ஓம் சேர்!
ஆசிரியர்: அப்படியானால் அதை என்னிடம் தா! (வெளியே அடுத்த பாட ஆசிரியர் வருவதைக் கண்டு) இப்பொழுது இன்றைய பாடம் உங்கள் எல்லாருக்கும் விளங்குதுதானே! நாளைக்கு அடுத்த பாடத்துக்குப் போவோம். (போகிறார்)
– பெண்ணே! நீ பெரியவள்தான்! (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: ஆனி 1971, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி.
![]() |
'புத்தொளி' - பெண்ணே! நீ பெரியவள்தான்! (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: ஆனி 1971, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி. எவரும் எளிதிற் பழகுவதற் கேற்ற இனிய பண்புகள் நிறைந்த திரு. பொ.சண்முகநாதன் சங்குவேலியைச் சேர்ந்தவர். இன உணர்ச்சியும் தமிழுணர்ச்சியும் மிக்கவர். நாடறிந்த நல்ல நகைச்சுவை எழுத்தாளர். 'கொழும்புப் பெண்' என்ற இவரது முதலாவது நகைச்சுவைக் கட்டுரைத் தொகுதி பேரறிஞர் டாக்டர் மு.வரதராசனார், நாடோடி, ரீ.பாக்கிய நாயகம் போன்ற பிரபல எழுத்தாளர்களது…மேலும் படிக்க... |