தோல்வி




(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இப்போதுகளிலெல்லாம் இருள் சூழ்ந்த உலகமாகிவிட்டது என் வாழ்க்கை. வாழ்வின் வசந்தங்களை ஒவ்வொன்றாக நுகரத்துடிக்கும் விடலைப் பருவம் முடிந்த ஒரு வருடத்தில் நான் விதியிடம் தோற்றுப் போனேன். அந்த கொடுங் கணங்கள் எனக்கு ஞாபகமிருக்கிறது.

பாடசாலைப் பருவத்தில் முதன்முதலாக அவளைப் பார்த்தேன். ஜீவிதம் பற்றி விலாவாரியாக தெரியாத வயசெனக்கு. உண்மையில் சொல்வதென்றால் என் மனசில் நட்சத்திரமாக மின்னியவள். என் மனசுக்குள் காதல் வலைகளைப் பின்னியவள்.
வாழ்வின் அர்த்தம் தெரியாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்த என்னைப் பிடித்து நிறுத்தி வசந்தம் காட்டியவள். என்னை விட ஓராண்டு இளையவள். உடைந்திருந்த என் உள்ளத் துகள்களை தன் பார்வையால் ஒன்று சேர்த்தவள். நான் அழகனல்லன். எனினும் அவளது தரிசனம் கிடைக்கிற ஒவ்வொரு நாளிலும் நான் அழகாகவே தோன்றுவேன்.
கையெழுத்து கோணியிருந்தாலும் என் தலையெழுத்து நன்றாக இருக்கும் என்று ஆறுதல் சொன்ன ஏணியவள். அவளுக்காக எதையும் செய்யத் தயாராயிருந்தேன். என் சக்திக்கு மீறியவற்றையும் அவளது சந்தோஷத்துக்காக செய்ய விழைந்ததுண்டு. அவள் விருப்பமற்ற எதையும் நான் செய்ய நினைத்ததில்லை. அவளுக்கு பிடித்த அனைத்தும் ஏனோ எனக்கும் பிடித்திருந்தது.
என்னை ரொம்பவும் ரசிப்பாள். உற்று உற்றுப் பார்ப்பாள். தேவையின்றி சிரிப்பாள். தலைகால் புரியாத ஆனந்தத்தில் பலநாள் தூக்கம் கெட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் என் உள்ளம் ஆனந்த மழையில் நனைந்து கொள்ளும். என்னைத் தொடாமல் அவளுக்கு பேசத் தெரியாது. எனக்கோ கூச்சமாக இருக்கும். அவளைத் தொட்டுப் பேச ஆசையாகவுமிருக்கும்.
காலடியில் இருக்கும் பல தனியார் வகுப்புக்களை விட்டுவிட்டு மிகத் தொலைவில் இருக்கும் வகுப்புக்களுக்கு போய் வருவேன். ஏன் தெரியுமா? அவளோடு இணைந்து நடந்து, சின்னக் கண்கள் பார்த்து, மதுரக்குரல் கேட்டு சந்தோஷமாக செல்வதற்கு அதைவிட வேறென்ன தேவையிருந்திருக்கும் எனக்கு? தேளாக கொட்டிவிட்டுப் போகும் வரை நான் அவளைக் காதலித்தேன். அவள் என்னை ஏமாற்றிவிட்டுப் போன போது துடித்துப் போனேன். இதயம் வெடித்துப் போனேன்.
ஆரம்ப காலத்தில் நன்றாகத்தானிருந்தாள். ஆனால் அவள் என் நெஞ்சுக்குள் நெருஞ்சி முள்ளை சொருகி விட்டுப் போகும் வரை எனக்குத் தெரியவில்லை. தெரியாதளவுக்கு நான் சின்னக் குழந்தையுமில்லை. அன்பைக் காட்டி வம்பை வாங்குவேன் என்று நான் அறிந்திருப்பேனா?
அவள் ஊருக்கு போவாள். அப்போது இதயத்தில் இனம்புரியாத வலியெடுக்கும். ஏனெனில் திரும்பி வரும்போது என்னைப் பற்றி சுமந்து சென்ற ஞாபகங்களில் பாதியை தொலைத்து விட்டுத்தான் வந்திருப்பாள். வந்த பின் கழுகாய் என்னைச் சுற்றி, பாம்பாய் என்னைக் கொத்தி வதைப்பாள்.
அப்படியெல்லாம் நடந்தாலும் நான் அவளுடன் கதைக்காமல் இருந்ததில்லை. என் அகம் முழுக்க அவள் வியாபித்து இருந்ததாலோ என்னவோ மீண்டும் மீண்டும் அவள் முகம் பார்க்கவே ஏங்கினேன். அவளை மட்டுமே என் இதயத்தின் இளவரசியாக்கிக் கொள்ள ஆசைப்பட்டேன். ‘போனால் போடி’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கலாம், நான் அவள் மீது கொண்ட காதல் பொய் என்றால்!
அவள் எனக்கு மட்டுமானவள் என்று எண்ணியிருந்தேன். ‘எனக்கு இன்னொருவன் இருக்கிறான்’ என அவள் சொல்லும் வரை. அவள் வேண்டும் என்பதற்காக நான் அவளைக் காதலிக்கவில்லை. நான் உண்மையாக அவளைக் காதலிப்பதால்தான் அவள் எனக்கு தேவையாக இருக்கிறாள். அவளைத் தவிர வேறெந்த ஞாபகங்களும் எனக்கில்லை. என் இதயம் அழுகிறது.
அவளது வீட்டார் விரும்பும் மணவாளனுக்கு அவளைக் கொடுத்துவிட்டு நான் விலகிக்கொள்ள நினைத்தாலும் என் உள்ளம் உலோபியாகின்றது. அவளை என் உயிர் போல நான் கருதிடாத காரணம், உயிரும் ஓர் நாள் என்னை விட்டு பிரிந்திடுமே என்பதால்தான்.
அவளை உண்மையாய் காதலித்ததற்காக எனக்கு கிடைக்கவிருக்கும் பரிசு என்னவோ? ஐயோ கண்ணீர் கட்டுப்பாடின்றி பெருகுகின்றது. அழிந்து போகவே முடியாதபடிக்கு ஒரு காதல் வடுவை தந்திடுவாளோ? என் ஆசைகளை அவளின் வார்த்தைகளுக்குள் கருகச் செய்து விட்டு என் அந்தரங்கத் துன்பத்தில் சுகம் கண்டால்? அந்த எவனோ ஒருவனின் அணைப்பில் அவளது மனசாட்சி கருகிப்போய் என்னை மறந்துவிட்டால்? என்னைச் சுற்றி சதாவும் ஒரு தீக்குளம் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது.
துன்பக்கடலில் மூழ்கடித்துவிட்டு மூச்சு முட்டச் செய்தாலும் அவளுடன் நான் கோபிக்கப் போவதில்லை. என் மனசில் அவளுக்காக ஊற்றெடுக்கும் அன்பை முழுவதுமாக வெளிப்படுத்தத் தெரியவில்லை.ஒரு வேளை அப்படித் தெரியப் படுத்தினால் என்னை பைத்தியக்காரனாகவும் எண்ணியிருப்பாள்.
சிலவேளை என் ஆன்மாவை கசக்கிப் பிழிந்து காதல் சாறை வலுக்கட்டாயமாக பருக்கியதாலோ என்னவோ அவள் என்னை விட்டுப்போக எண்ணியிருக்கக்கூடும். அவள் இன்னொருவனுக்கு உரிமையாகப் போகிறாள். கடவுளே. அதைத் தாங்கும் பலமான உள்ளம் எனக்கில்லையே.
கறவை மாடாய் காதலித்துக்கொண்டிருந்த என்னைவிட்டு அந்தப் பறவை உல்லாசமாய் பறந்து போய்விட்டது. ஆனால் சிறகுகள் எறிந்து சாம்பலாகிக் கொண்டிருப்பது நான் தான்!!!
– வைகறை (சிறுகதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 2012, இலங்கை முற்போக்கு காலை இலக்கிய மன்றம்.
![]() |
தியத்தலாவ எச். எப். ரிஸ்னா (பிறப்பு: சனவரி 8) கவிதாயினி, தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறிஞ்சிநிலா ஆகிய பெயர்களில் எழுதிவரும் இலங்கை படைப்பாளியாவார். ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் தியத்தலாவை என்ற ஊரைச் சேர்ந்த இளம் கவிதாயினியும், சிறுகதை படைப்பாளியுமான எச். எப். ரிஸ்னா, ஹலால்தீன் - நஸீஹா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார். தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா என்ற சொந்தப் பெயரையே பெரும்பாலும் பயன்படுத்தி வரும் இவர்…மேலும் படிக்க... |