துணை
கதையாசிரியர்: க.சட்டநாதன்
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2025
பார்வையிட்டோர்: 935
(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தப் பசெஞ்சர் தாமதமாகப் புறப்பட்டது. இரவு ஒன்பதுக்குப் புறப்படவேண்டியது, ஒன்பதரைக்குத்தான் அசைந்தது. இரையை அதக்கிய வெங்கணாந்தியின் சொகுசும் சோம்பலும் அதன் ஓட்டத்தில் தெரிந்தது.
பதிவு செய்யப்பட்ட அந்தப் பெட்டியில், நானும் அவளும்தான் பயணம் செய்தோம்.
“இஞ்ச… இந்தப் பட்டணங்களிலை. மசமசக்கிற சனங்களிலை… ஒரு சீவன் கூட எங்களுக்குத் துணையா வரப்படாதா…?”
குறைபட்டுக்கொண்ட எனது துணைவி, தொடர்ந்து கேட்டாள்:
“தஞ்சாவூருக்குப் பிறகு இந்த ‘ட்ரெயின்’ எங்கை நிக்கும்…?”
“சிதம்பரம்..!”
“சிதம்பரத்திலையாவது எங்கடபெட்டியிலை ஆரன் ஏறுவினமா…?”
“கடவுளுக்குத்தான் வெளிச்சம்..”
“எப்பவும் கடவுளெண்டா உங்களுக்குப்பகிடி… எங்கையாவது முட்டிக்கொண்டு நிக்கேக்கை தெரியும்…”
“அப்ப… பட்டாத்தான் புத்தி வருமெண்டு சொல்லிறை…” நான் மெதுவாகச் சிரித்துக் கொண்டேன்.
அவள் திடீரென ஒதுக்கம் கொண்டு, பேச்சு ஓய்ந்து போனவளாய், மௌனமாக இருந்தாள்.
அடுத்த கணங்களில் பரபரப்படைந்தவள்; காது, கை, கழுத்து, மூக்கு எனப் பளபளத்த நகைகளை எல்லாம் கழட்டி, தனது கைக்குட்டையில் மடித்து, மார்புச் சட்டையுள் பத்திரப்படுத்திக் கொண்டாள். கைப்பையில் வைத்துக் கொள்ளவில்லை.
முன்யோசனையுடன் நடந்து கொள்வதில் அவளுக்கு நிகர் அவள்தான்.
முகம்மலர, “புத்திதான்…” என்று கூறி, சிரித்தபடி அவளைப் பார்த்துக்கேட்டேன்:
“இதென்ன… இண்டைக்குப் புதிசு புதிசா ஏற்பாடெல்லாம் நடக்குது…”
“இதுவா…? இதெல்லாம் ஒரு பாதுகாப்புத்தான்… மடியில கனமிருந்தா….வழியில..” அவள் பலவீனமாகச் சிரித்தாள்.
‘பய உணர்வு அவளை விட்ட பாடில்லை’ என நினைத்துக் கொண்டேன்.
அவளது வாய் சதா எதையோ ஜெபித்துக் கொண்டிருந்தது. சாயி நாமமா…? அல்லது காயத்திரி மந்திரமா…?’
நான் எழுந்து, பெட்டியில் இருந்த, எல்லா மின்விளக்குகளையும் போட்டேன்.
“உங்களுக்குச் சரியான விசரப்பா..! வெளிச்சம் இருந்தா… கள்ளன் வரமாட்டானா என்ன?”
“அப்ப கதவுகளை உள்ளாலை பூட்டி விடட்டா..”
‘உனக்கும் – உந்தக் களிமண் கட்டீக்கை கொஞ்சம் கிடக்குது… என்று கூறுவது போலிருந்தது அவளது பார்வை. அவளுக்கே உரித்தான அந்த மிடுக்கும், கீழ்க்கண்பார்வை ஏளனமும் அலட்சியமும் எனது நானை ஆழமாகவே காயப்படுத்தியது.
இப்படியான சந்தர்ப்பங்களிலெல்லாம் நான் மிகவும் நிதானமாகவே நடந்து கொள்வேன். அவள் ஒன்று சொல்ல, நான் பிறிதொன்று சொல்லி, வார்த்தைகள் தடித்து, கூர்மைகொள்வதை நான் விரும்புவதில்லை.
அவளுக்காக எதையுமே விட்டுக் கொடுத்து, அநுசரித்துப் போகும் எனக்கு, இந்த உணர்ச்சியும் உரசலும் இப்போதைக்கு இங்கு வேண்டாமே என்றிருந்தது.
எனது மௌனம் அவளுக்கு ஒருவகையான பாதுகாப்பு உணர்வை தந்திருக்க வேண்டும்.
அவள் இருந்த சீற்றிலேயே ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள். தலையணையாக அவளது கைப்பை இருந்தது.
தலையைத் திருப்பி என்னைப் பார்த்தவள், “கோவமா…?” எனப்பிரியமாகக் கேட்டாள். அந்தப் பார்வையும் பரிவும் எனது நெஞ்சை நனைத்தது.
அடுத்த நிமிடங்களில் அவளிடமிருந்து லேசான குறட்டைஒலி வந்தது.
இரத்த அழுத்தம், நீரிழிவு என அலைக்கழியும் அவளுக்குக் கிடைத்த அந்த அமைதியான உறக்கம் எனக்கு ஆறுதலாக இருந்தது.
தனித்து விடப்பட்ட எனக்கு ஏதேதோ நினைவுகள் மனக்குதிரை கைக்கடங்காத மீறலுடன் காற்றில் மிதந்தது.
அவள் அரும்பாய் இருந்தபோதே அவளில் ஒரு மனச்சாய்வும் பட்சமும் எனக்கு ஏற்பட்டு விட்டது. நான் பார்த்துப் பழகிய பெண்களில் அவள் ஒரு தனியன். துடுக்கும், துருதுருப்பும் மிகுந்த வித்தியாசமானபெண்.
அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வெளிறிய குருத்தோலை நெட்டிதான் ஞாபகம் வரும். அவளது அந்த அடர்ந்த புருவங்களும், ஆர்வமூட்டும் பிரியமான கண்களும், கூர்மையான சற்று விடைத்த நாசியும், தீர்க்கமான வட்டமுகமும், மலராய் உதிரும் சிரிப்பும் என்னை நினைவழிந்து பரவசம் கொள்ள வைத்தன.
பட்டணத்தில் இருந்து, அவள் தாயாருடன்தான் எங்கள் வீட்டுப் பக்கம் வருவாள். ஒடிசலான உடம்பை வைத்துக் கொண்டு, பம்பரம்போல அவள் வீடு, வளவு, தோட்டம், துரவு என்று ஒரு சுற்றுச் சுற்றிவர, அவளுக்குத் துணையாக நானும் உலாவருவேன்.
அவளுக்கு எங்களூரில் எத்தனை அதிசயங்கள் காத்துக் கிடந்தன!
வெள்ளித் தாரையாய்ப் பாயும் மாரிவெள்ளம். அதில் மின்னலாய் உடலசைக்கும் கச்சல் மாங்கன், கெழுத்தி, அயிரை மீன்கள். பதியங்களில் முகை நெகிழ்த்தி, இளங்குருத்தாய்ப் பரவசிக்கும் பயிர்வகைகள். பச்சை வண்ண வயல்தடங்கள். அரசடிக்குளத்தின் எல்லை தொடமுடியாத நீர்ப்பரப்பு. வாழைப் புதர்களிலும், மரவள்ளித் தோட்டத்திலும் பதுங்கி இருந்து பயங்காட்டும் ரகசிய மௌனம் என எல்லாமே அவளைச் சொக்கவைத்தன.
இது மாரிமழையுடன் என்றால், கோடையில் வேறுவிதமான அநுபவங்கள் அவளுக்கு.
தாவாடித்துண்டின் மேற்குச் சாய்வில் நிற்கும் மஞ்சவெண்ணா மரத்தைக் கண்டுவிட்டால், அவ்விடத்திலேயே அவளது கால்கள் பாவிவிடும். என்ன சொல்லி அழைத்தாலும் அவள் அசையமாட்டாள். மரத்தின்கீழாக நட்சத்திரக் குவியலாய்ப் பளீரிடும் வெள்ளைமலர் களை, மடிநிறையக் கட்டிக் கொள்வாள். அம்மலர்களின் வாசம் அவளுக்கு நிரம்பப்பிடிக்கும். கோலிய மடியுடன் சட்டையைத் தூக்கிப்பிடித்தபடி நடந்து வரும்போது, “மணி நிக்கர் தெரியுது..!” என்று சின்னச் சிரிப்புடன் சொன்னால், “போடாகள்ள..” என்று கடிந்து கொண்டு, உடலை நெளித்துத் தனது சட்டையைச் சரி செய்து கொள்வாள்.
அப்படியே நடந்து, நொச்சிக்காட்டுப் பக்கம் போனால், அவளுக்கு மஞ்சளாய் ஒளிசிந்தும் சப்பாத்திக் கள்ளி மலர்கள்வேண்டும்; கருநீலப்பழங்கள் வேண்டும். பழங்களைப் பறித்து, சிறிசாயும் பெரிசாயும் உள்ள முட்களை எல்லாம் நீக்கிக் கொடுத்தால், அதை அவள் கடித்துக் குதப்பி உதடுகளும் வாயும் சிவக்கச் சிவக்க சாப்பிடுவாள். அந்த அழகை இன்றெல்லாம் பார்த்தபடி இருக்கலாம்.
சிலுந்தாப் பக்கம் போனால், தப்புத்தண்ணியில் அவளுக்கு நீச்சல் கற்றுத்தரவேண்டும். நீச்சல் கற்றுக் கொடுக்கும் சாக்கில் ஒரு சமயம் அவளது மார்பை நான் தடவிப் பார்த்தேன். அது தட்டையாக இருந்தது ‘ஏழெட்டு வயது நிரம்பிய ராணிக்கும் ராஜிக்கும் மார்பில் சட்டைக்கு மேலாக ஏதோ கொட்டைப் பாக்களவில் திரண்டிருக்க, இவளுக்கு… இவளுக்கு மட்டும் ஏன் எதுவுமே இல்லை..
எனதுமயக்கம் அவளுக்குப் புரிந்துவிடும்.
“தவம் கூடாதபிள்ளை… கெட்டபிள்ளை…” என்று கூறி, கூசி ஒதுங்கி விடுவாள்.
அந்தக் கூச்சமும் ஒதுக்கமும் ஒரு சில நிமிடங்கள் தான் நீடிக்கும். அடுத்த சில நிமிடங்களில் நான் எள்ளென்றால் அவள் எண்ணெயாகி விடுவாள். அப்படி ஒரு ஒட்டுதலும் பாந்தமும் எங்களிடையே கூடிவரும்.
அவள் சாதாரண தரம் படித்த பொழுதுதான் பெரியவளானாள். என்ன பெரியவள்? அந்த ஓலை நெட்டித்தனம் மாறாமலே இருந்தது. பெண்மையின் பொலிவு, திரட்சி, மலர்ச்சி என்று
எல்லாவற்றையுமே அவள் எங்கோ தாலைத்து விட்டதுபோல, என்முன்னே வந்து நிற்பாள்.
கால நகர்வில் திசைக்கொருவராய் பிரிந்துவிட்ட நானும் அவளும் சந்தித்ததென்னவோ ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான்.
அன்று எனக்குப் பட்டணத்தில் ஏதோ அலுவல், அலுவல் முடிந்து வந்து கொண்டிருந்த பொழுது, “தவா…” என்ற இனிமையான அழைப்பைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். பூபாலசிங்கம் புத்தகக் கடைக்கு முன்பாக அவள்.
முன்னைக்கு, அவள் இப்பொழுது சற்றுத் தசைப்பிடிப்போடு இருந்தாள். அந்த ஓலை நெட்டித்தனமெல்லாம் நிரவிய நிலையில், பூசிமெழுகிய பொம்மையின் பொலிவு அவளிடம் இருந்தது. கன்ன உச்சியும் பிருஷ்டம் வரை தழையும் ஒற்றைப் பின்னலுமாய் அவள் அப்ஸரசாக இருந்தாள்.
அவளது அகன்ற ஈரமான கண்களில் ததும்பி நின்ற பரிவும் காதலும் என்னை என்னவோ செய்தது.
“என்னதவா…? எங்களை எல்லாம் மறந்தாச்சு போலக் கிடக்கு…” “மறப்பதா… உன்னையா…?”
பேச்சுத்தடுமாற, அவளையே பார்த்தபடி நின்றேன். அப்பொழுது வீசிய மென்காற்று எங்கள் இருவரையும் தொட்டு அளைந்து சென்றது.
எனக்கு அருகாக வந்த அவள், எனது கரங்களை மிகுந்த வாஞ்சையுடன் தனது கைகளில் ஏந்தியபடி கூறினாள்:
“தவா! வாற சனிக்கிழமை வீட்டுப்பக்கம் வாருங்க…. உங்களிட்டை எவ்வளவோ கதைக்கவேணும்…”
“வாற சனிதானே… பாப்பம்..”
“ஒண்டும் பாக்க வேண்டாம் கட்டாயம் வாருங்க…” என்றவள், என்னிடம் விழி அசைத்து, விடைபெற்றுக் கொண்டாள்.
அவள் நடக்கும்போது ஒரு வேகம் இருக்கும். காலில் சக்கரம் கட்டியது போல, அப்பொழுதும் அந்த வேகம் அவளிடம் இருந்தது. அந்தச் சனிக்கிழமை மட்டுமல்ல, அடுத்து வந்த சனிக்கிழமைகளிலும் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம்.
எங்களிடையே ஏற்பட்ட அந்த நெருக்கமும் நெருடலற்ற இதமான ஈர்ப்பும் அவளை எனது இனிய துணையாக்கியது.
இருபது வருஷத்துக்கு மேலான தாம்பத்தியம் எங்களுடையது. அந்த உறவின் இனிமையை, இங்கிதம் நிரம்பிய பிணைப்பை, அநுசரிப்பை என்னென்பது. உடற்தேவைகளுக்கு மேலாக எங்களிடையே லபித்த ஆன்ம லயமும் இசைவும் பலநூறு வருஷங்கள் வாழ்ந்த சுகத்தை எங்களுக்குத்தந்தது.
ட்ரெயினின் சீரான அசைவில் கண்ணயர்ந்தவள், விழித்துக் கொண்டாள்.
வெளியே மின் விளக்குகள் ஒளிப்பொட்டாக நடுங்கின.
பெட்டியின் ஜன்னல்களை லேசாக நான் திறந்து விட்டேன். ஜன்னல் நீக்கலால் உள் நுழைந்தகாற்று, அவளை ஈரப்படுத்திச் சென்றது. ‘குளிருதப்பா…” என்று நடுங்கியவள், சேலைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
“என்ன… சிதம்பரமா..? வந்திட்டுதா…?” கேட்டபடி எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.
சிதம்பரத்தில் வண்டி தரித்து நின்றபொழுது, இவள் கழுத்தை வெளியே நீட்டி, ‘ப்ளாற்போர்மை’ப் பார்த்தாள். சனசந்தடி இருந்தது.சிலர் அடித்துப் பிடித்துக் கொண்டு வண்டியில் ஏறவும் செய்தார்கள். ஆனால், எங்களது பெட்டியில் மட்டும் ஒருவரும் ஏறவில்லை.
அது அவளுக்கு ஏமாற்றமாயிருந்திருக்க வேண்டும். கவலையுடன் என்னைப் பார்த்தாள்.
அவள் முகத்தில் பயம் உறைந்த நிலையில் இருந்தது. “பயப்பிடாதை மணி நானிருக்கிறன்…”
“உங்க துணை மட்டும் போதுமா…?”
“உன்ரை கடவுளையும் நினைக்கிறது..”
“அதென்ன உன்ரை கடவுள்… உங்களுக்கு இல்லையா…?” என்று சிரித்தவள், தொடர்ந்து கூறினாள்:
“இந்த உடம்பு நோயின்ரை கூடாரமாப் போச்சு… ஒண்டுமே வேண்டாமெண்டு இருக்குது… எல்லாத்தையும் அவன்ரை… அந்தப்பரம்பொருளின்ரை காலடியிலை போட்டிட்டு, பட்டென போயிட வேணும்போலை கிடக்கு…”
“ஐம்பது வயசு கூட ஆகேல்லை, அதுக்குள்ள சுடலை ஞானமா…?”
“அதில்லையப்பா… தெய்வங்களிட்டை உள்ள பிடிப்பும் பற்றுதலும் இந்த மனிசரிட்டை ஏற்படுகுதில்லை…”
“என்னிடமுமா..?”
“நீங்க என்ன கொம்பனா…?”
‘இல்லை ல்லை உன்ரை கடவுள்தான் பெரிய கொம்பனாக்கும்…”
எனது குரலில் இழைந்த ஏளனமும் சீண்டலும் அவளுக்கு எரிச்சலூட்டியிருக்க வேண்டும்.
“எதுக்கெடுத்தாலும் உங்களுக்குக் கடவுளெண்டு வந்தா, குத்தலும்… குதர்க்கமும்தான்…”
“இல்லை மணி… உனக்கு ஆறுதலா இருக்குமெண்டா… கடவுளைக்கும்பிடு… நல்லாக்கும்பிடு… கும்பிடுறதிலை பிழையில்லை. இந்தக் கடவுள், பக்தி எல்லாமே மனசை அழுத்தும் துயரங்களுக்கு ஒரு வடிகால் மாதிரி… அவ்வளவுதான். மனித மனம் தன்னை இழந்து தப்பித்துக் கொள்ள பலவிஷயங்களிருக்கு. கலைகள், இலக்கியங்களெண்டு இல்லையா.? அதுபோல கடவுளைக் கும்பிடுறதும் ஒண்டு. காலாதி காலமா.. மனித மனசுக்கு ஒத்தடம் கொடுக்கிற விஷயம் இதென்பதை ஒத்துக் கொள்ளிறன். ஆனா அதுக்கு மேலாலை, எதையுமே நாம் யோசிச்சுக் குழம்பக்கூடாது.”
“நீங்களும் உங்கடை சித்தாந்தமும்… போதும்… போதுமப்பா உங்கடை பிதற்றல்… கேக்கமுடியேல்லை, நாராசமாய் இருக்கு..”
இரு காதுகளையும் அவள் இறுக்கமாகப் பொத்திக் கொண்டாள்.
அவள் கண்கள் உமிழ்ந்த வெம்மை என்னைத் தகித்தது. என்னால் தாள முடியவில்லை. நிலை குலைந்த நான், அவளை ஆதரவாகப் பார்த்தேன். எனது பேச்சு அவளைக் காயப்படுத்தி, உணர்ச்சிப் பிழம்பாக ஆக்கி இருந்தது. எனக்கு அது பயம் தருவதாக இருந்தது.
கைகளும், கால்களும் வசமிழந்து, சோர்ந்த நிலையில் அவள் இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.
“எனக்கு என்னவோ செய்யுதப்பா.. நெஞ்சுப் படபடப்பு அதிகமா இருக்கு… இதென்ன இப்பிடி வேர்க்குது… இதுதான் மரண வேர்வையா…?”
திடீரென எழுந்து அவளைத் தாங்கிக் கொண்டேன்.
“மருந்துக் குளிசை எல்லாம் போட்டனியா..?”
“ம்…” மிக மெலிதாக முனகினாள்.
அவளது உடலில் வேர்வை ஆறாகப் பெருகியது. அவளது உடலை, துவாயால் நன்றாகத் துடைத்து விட்டேன்.
சோர்ந்து, கண்களை மூடி இருந்தவள், விழித்து என்னைப் பார்த்துக் கூறினாள்:
“நான் கெதியிலே முடியத்தான் போறன் போலைக் கிடக்கு… உங்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கப்பா… நீங்க தனிச்சுத் தவிக்கப் போறயள்…”
“சும்மா அசட்டுப் பிசட்டெண்டு பேசாதை… எல்லாம் சரியாப் போயிடும்….சென்னை போன கையோடை ஒரு ஃபுல் மெடிக்கல் செக்கப் செய்யவேணும்..”
“சரி… செய்தாப்போச்சு…”
“இந்த வருத்தத்தோடை, கோயில் குளம் எண்டு இனியும் அலையேலாது மணி; ஊருக்குப் போறது தான் புத்தி…”
“எங்கை போகாட்டிலும் திருவண்ணாமலைக்குப் போய், தீபம் பாத்திட்டுத்தான் ஊருக்குப் போகவேணும்… இன்னுமொரு தரம் வர இந்த உசிர் இருக்குமோ தெரியாது…”
“உசிரிருக்கும் பயப்படாதை மணி…”
எனது கரங்களை அன்பாகப் பற்றியவள், “என்னை அணைத்தபடி இஞ்சை பக்கத்திலை இருங்கப்பா… சதிரம் பதறுது…. சன்னி கண்டதுபோலை உள்ளாலை குளிர் வேற இருக்கு..” என்றாள்.
அவளது விருப்பப்படியே அவளை அணைந்து சிறிது நேரம் இருந்த நான், அமிர்தாஞ்சன் ஸ்ராங்கை எடுத்து அவளது நெற்றிப் பொட்டிலும், கன்னத்திலும், மார்பிலும் நன்றாகத் தேய்த்துவிட்டேன்.
எனது கைகளிலிருந்து விடுபட்ட அவள், மீளவும் இருக்கையில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள். அவளது மெல்லிய மூச்சொலி என்னை ஓராட்டியது. நானும் அயர்ந்து தூங்கினேன்.
புலரியின் சிவந்த சிரிப்பு என்னை விழிப்புக் கொள்ள வைத்தது. எழுந்து உட்கார்ந்து கொண்டேன்.
அவளும் விழித்தெழுந்து, தலைவாரிக் கொண்டிருந்தாள். ஏனோ அவளது கண்கள் பனித்திருந்தன. அதில் எத்தனை பாவங்கள் கொட்டிக் கிடந்தன. பழசெல்லாம் அவளது ஞாபகத்துக்கு வந்திருக்க வேண்டும். அவளது நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையை மெதுவாகத் துடைத்து விட்டேன்.
அப்பொழுது, அவளது உலர்ந்த உதடுகள் மலர்ச்சிகொள்ள, மென்மையாகக் கூறினாள்:
“நீங்க பக்கத்திலை இருக்கேக்கை.. உந்தக் கண்ணுக்குத் தெரியாத கடவுளிட்டை ஏன் அலைய வேணுமப்பா….நீங்கதான் எனக்குக் கடவுள் மாதிரி… கண்ணுக்குமுன்னாலை இருக்கிற கடவுள் மாதிரி..”
‘ஒரு எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்கு அவளால்தான் போகமுடியும். சற்று முன்னர் இருந்த அவளது மனோநிலை இப்பொழுது மாறியிருந்தது. அதுதான் அவள்’.
நினைவுகள் ஒதுக்கங்கொள்ள, “தாம்பரம் வந்திட்டுது மணி… சென்னை பக்கத்திலை தான்..” என்று கூறினேன்.
நான் கூறியது அவளுக்குக் கேட்கவில்லை.
ஏதேதோ நினைவுகளில் திழைத்துக் கிடந்தஅவள், எனது வலது கரத்தை எடுத்துத் தனது கரங்களால் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள்.
அந்த ஸ்பரிசம் எனக்கும் அவளுக்கும் அப்பொழுது தேவையாக இருந்தது.
– மல்லிகை, மார்ச் 2002.
– புதியவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2006, பொன்னி வெளியீடு, சென்னை.
![]() |
க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார். இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் 'வீரகேசரி' இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில்…மேலும் படிக்க... |
