தான் வாங்கின செம்புக்கல்லை அறியேன் என்றது
கதையாசிரியர்: மரியாதைராமன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2025
பார்வையிட்டோர்: 1,396
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருவன் ஒரு வர்த்தகனிடத்தில் விலையுயர்ந்த ஒரு செம்புக்கல்லைக் கொடுத்து, இதைவைத்து வை. நான் யாத்திரை போய்வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லிப் போய் நாலு வருசம் கழிந்த பின்பு வந்து செம்புக் கல்லைக் கேட்டான்.
“என்னிடத்திலே அதை முன்னே தானே நீ வாங்கிக் கொண்டு போய்விட்டாய்” என்று சாதித்து அப்போது தன் வீட்டிலே சேறெடுக்க வந்த வண்ணான், அம்பட்டன், குசவன் இம்மூன்று பேரையும் பொய்ச் சாட்சி சொல்ல ஏற்படுத்தினான்.
செம்புக்கல்லுக்காரன் அதை அறிந்து மரியாதை ராமனிடத்திலே போய்த் தன் செம்புக்கல்லை அபகரித்ததை யும் பொய்சாட்சிகளை ஏற்படுத்தினதையும் சொல்லிக் கொண்டான்.
மரியாதைராமனானவன் அந்த மர்மம் தெரிந்து கொண்டு வர்த்தகனையும் அவன சாட்சிக்காரரையும் அழைப்பித்து விசாரணை செய்து அதன் பின்பு வாதி பிரதி வாதி சாட்சிக்காரரென்னும் முத்திறத்தாராகிய அய்ந்து பேரையும் ஒருவனோடொருவன் பேசாமல் இருக்கும்படி யாகத் தனித்தனியே சேவகர் கையில் வசப்படுத்திக் காவலிலே வைத்துக் களிமணணாலே அந்தச் செம்புக் கல்லைப் போல உருவம் செய்துகொண்டு வரும்படியாக உத்தரவு கொடுத்தான்.
வாதியும் பிரதிவாதியும் அந்தச் செம்புக்கல்லுக்குத் தகுந்த அளவாகவும் ஒரு மாதிரியாகவும் செய்துகொண்டு வந்தார்கள்.
செம்புக்கல்லினுடைய உருவமே என்றும் பார்த்திராச் சாட்சிக்காரர் மூன்று பேருக்குள்ளே வண்ணான் தோய்க்கிற கல்லைப் போலவும் அம்பட்டன் தீட்டுகிற கல்லைப் போல வும் வேறு வேறு மாதிரியாய்ச் செய்துகொண்டு வந்தார்கள்.
அந்த வித்தியாசத்தினாலே நியாயாதிபதிக்கு உண்மை தெரிந்து உடைமைக்காரருக்கு அந்தச் செம்புக்கல்லும் மற்றவர்களுக்குத் தகுதியான தெண்டினையும் கிடைக்கும்படி செய்தான். எட்டியுடன் சேர்ந்த இலவுந் தீப்பட்டது என்றபடியே மோசம் செய்த பிரதிவாதியுடன் சேர்ந்த சாட்சிக்காரரும் அவனுக்கு வந்ததை அனுபவித்தார்கள்.
– மரியாதைராமன் கதைகள் (ஆய்வுப் பதிப்பு), இரண்டாம் பதிப்பு: மே 2001, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரசுவதி மகால் நூலகம் வெளியீடு, தஞ்சாவூர்.
| பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்) மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும். புகழ்மிகு கதையிலக்கியங்கள் : விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க... |