தன்மானம்





பறவைகள் இணைதேடி கூட்டிற்குச் செல்லும் நேரம். சூரியன் மெதுவாக மேகப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருந்தான். வரப்பின் மீது அமர்ந்திருந்த செல்வத்தின் கையில் மகன் முகிலன் எழுதிய கடுதாசி. முகிலன் முதுநிலைப் படிப்பிற்கான பணத்தை அனுப்பும்படி கேட்டு எழுதியிருந்த நிலையில் அதைப் படித்த செல்வம், மகனின் இளநிலைப் படிப்பிற்காக வைத்திருந்த ஒரு ஏக்கர் நிலத்தையும் அடமானம் வைத்து விட்டான். பற்றாக்குறைக்கு மனைவியின் தாலிச் செயினையும் விற்றுப் படிக்க வைத்தான். இப்பொழுது முதுநிலை படிக்க வைக்க ஆசையிருந்தாலும் கையில் பணம் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் நிலத்தை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். பயிர்கள் அனைத்தும் அன்னையின் அரவணைப்பிற்காக ஏங்கும் சவலப்பிள்ளைகளைப் போல மழைக்காக ஏங்கி வாடிக்கிடந்தன. செல்வத்தின் அப்பா இவனுக்காக விட்டுச் சென்ற ஒரு ஏக்கர் நிலமும் வானம் பார்த்த பூமியாக இருந்தது. காலநிலை மாற்றத்திற்கு அவனும் பலிகடா ஆகியிருந்தான். “மண்ணை வாழவைக்கும் விவசாயிக்கு இதொன்றும் புதிதல்லவே!” போன வருடம் மழையாகப் பொழிந்து செல்வத்தின் பயிர்கள் அறுவடைக்கு நின்றிருந்த நிலையில் வெள்ளத்தில் மூழ்கி வீணாய்ப் போயின.
இந்த வருடமோ மழையே பெய்யாமல் வறண்ட பூமியாய் பயிர்கள் வாடிக்கிடக்கின்றன. அன்றாட வாழ்க்கையை ஓட்டவே சிரமப்பட்ட செல்வத்துக்கு இந்தக் கடுதாசியில் இருந்தது இடியாய் இறங்கியது. என்ன செய்வதென்று யோசித்தவனுக்குச் சட்டென உதித்தது மனோகரனின் ஞாபகம், அவனிடம் கேட்டாலென்ன?
மனோகரன் பத்தாம் வகுப்பு வரை இவனுடன் படித்தவன். அதற்கு மேல் படிக்க இந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லாததால் பட்டணத்திற்கு அவன் அப்பா கூட்டிச்சென்ற நிலையில் அங்கேயே செட்டில் ஆகிவிட்டான். மனோகரன் படிப்பில் கெட்டி. ஆனால் செல்வத்துக்கோ படிப்பு ஏறவில்லை. பத்தாம் வகுப்பில் பெயில் ஆன நிலையில், அவன் அப்பாவுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டான்.
ஒரு சமயம் மனோகரனின் அப்பாவிற்குத் தொழிலில் நஷ்டம் ஏற்படவே, அவனின் மேற்படிப்புக்குப் பணம் கட்டாத நிலையில் செல்வத்திடம் அதைக்கூறினான். செல்வம் தான் தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து பணம் கொடுத்து உதவினான். அதற்கு பின் அவன் நிலத்தை மீட்டுத்தந்திருந்தாலும் ஓயாமல் இவன் செய்த உதவியை நன்றியுடன் நினைவு கூர்வான்.செல்வமும் இதிலென்ன இருக்கிறது என்று கூறி அவன் வாயை அடைத்து விடுவான். இப்பொழுது அவனிடமே கேட்கலாம் என்று முடிவெடுத்து வீட்டை நோக்கி நடந்தான். வீட்டினுள் நுழைந்தவன் தன் மனைவி அன்னம்மாளிடம் தான் மறுநாள் காலை பட்டணம் போவதாக கூறிவிட்டு, சாமி ரூமில் இருந்த தன் பழைய பெட்டியை எடுத்து, மனோகரன் எப்பொழுதோ எழுதிய கடுதாசியைத் தூசிதட்டி எடுத்து அதில் இருந்த முகவரியைப் படித்துவிட்டு அதனைத் தன் சட்டைப் பையினுள் வைத்துக் கொண்டான். மறுநாள் அதிகாலையிலே முதல் பஸ்சைப் பிடித்து பட்டணம் சென்றவன் , எப்படியோ தேடிப்பிடித்து அந்த முகவரியில் இருந்த வீட்டின் வாயிலில் போய் நின்றான். அரண்மனை போன்ற வீடு, அதன் இருபுறமும் பூச்செடிகள் , பெரிய கேட் என்று இவற்றை பிரமிப்புடன் பார்த்தவாறு உள்ளே போகலாமா ? வேண்டமா ? என்று மருகி நின்றான். பின்னர் தைரியத்தை வரவழைத்தவனாக கேட்டைத்திறந்து உள்ளே எட்டிப்பார்த்தவனை, உள்ளே இருந்த நாய் தன் விசுவாசத்தைக் காட்ட ‘வள்’‘வள்’ என்று குரைத்தபடி பாய்ந்து வந்தது. இதைப்பார்த்த செல்வத்துக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் திரும்ப வெளியில் வந்து கதவைப் பூட்டிக் கொண்டான். இருப்பினும் விடாமல், நாய் இவனைப் பார்த்து குரைக்கவே! வீட்டின் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்த மனோகரன் யாரது? என்று கேட்டுக் கொண்டே கீழே இறங்கி வீட்டிற்கு வெளியில் வந்தான். வந்தவன் நாயைக் கட்டிப்போட்டு விட்டு, வெளியில் அழுக்கு வேட்டியும், கசங்கிய சட்டையும், தோளில் துண்டுடன் நின்றிருந்த தன் நண்பனைக் கண்டதும் ஓடிப்போய்,
“டேய் செல்வம் எப்படா வந்த? எப்படிடா இருக்க?” என்று ஆரத்தழுவிக் கொண்டான். பின் வீட்டிற்குள் அழைத்துச்சென்றவன், பளபளவென்றிருந்த மார்பிள் தரைதளத்தையும், மேலே இருக்கும் அலங்கார விளக்குகளையும் பிரமிப்புடன் பார்த்தவாறு நின்றிருந்த செல்வத்தை
“வாடா வந்து உட்காரு” என்று சொல்லி சோபாவில் அமர வைத்து விட்டு,
“கண்மணி….கண்மணி” இங்க வந்து பாரு யாரு ? வந்திருக்காங்கனு” என்று உள்ளேயிருந்த தன் மனைவியை அழைத்தான்.
“ஆ….இதோ வர்றேங்க”
என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்தவளிடம்,
“நா அடிக்கடி சொல்வேன்ல என் நண்பன் செல்வம் இவன்தான்” என்று அறிமுகம் செய்து வைத்தான். பின் “இவன் இல்லைன்னா நா இப்படி படிச்சு பெரியாளா ஆகியிருக்க முடியாது?” என்று சொல்ல ,
இதைக்கேட்ட கண்மணி “இதத்தான் நீங்க லட்சந்தடவைக்குமேல சொல்லியிருப்பீங்களே!” என்றவள் செல்வத்தைப் பார்த்து “வாங்கண்ணா எப்படி இருக்கீங்க வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா என்று நலம் விசாரித்துவிட்டு, இருங்கண்ணா நா போயி உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்து வரேன்” என்று கிச்சனை நோக்கிச் சென்றாள்.
“அப்புறம் வேறென்ன விஷயம்” என்ற மனோகரன் “உன்னப் பார்த்து எத்தனை வருஷமாச்சு, நா எத்தனை தடவ வீட்டுக்கு வாடா வாடான்னு கூப்பிட்டிருக்கேன்” என் கல்யாணத்துக்கு, என் பசங்க காது குத்துக்கின்னு எப்பவாவது வந்தியா? அப்ப எல்லாம் வராதவன் இப்ப வந்திருக்க” என்றதும் செல்வத்துக்கு சுருக்கென்றிருந்தது.
பணத்திற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று தெரிந்தால் தன்னைப்பற்றி என்ன நினைப்பான். தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கும் இவனிடம் எப்படி பணம் கேட்பது அது தன் தன்மானத்திற்கு இழுக்கல்லவா! என்று கருதிய செல்வம் வேறு ஏதாவது ஒரு வகையில் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றெண்ணியவன் மனோகரனைப் பார்த்து,
“சும்மாதான்டா என் மகன் முகிலன் பட்டணத்துல படிக்கிறான்ல அவனப்பார்க்க வந்தேன். அப்படியே உன் ஞாபகம் வந்தது உன்னையும் பார்த்திட்டு போலாம்னு…” என்று மழுப்பினான், கையில் காசு இல்லாவிட்டாலும் செல்வமும் செல்வந்தனே! தன்மானத்தில்.