ஜட்காவாலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2025
பார்வையிட்டோர்: 65 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருபது வருஷங்களுக்குமுன் அதாவது வாடகைக்கார்கள், அத்தி பூத்தாற்போல் இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தோன்றிய காலத்தில் ஜட்காவாலா முனியப்பனின் வாழ்க்கைச்சக்கரம் சரளமாக ஓடிற்று. தினம் இரண்டு ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதிப்பான். அவன் வைத்திருந்த ஜட்காவைத் தவிர அவனுக்கு வேறு ஆஸ்தி கிடையாது; குதிரையைத் தவிர வேறு உறவினரும் கிடையாது. குதிரையை அநேகமாக அவன் அடிப்பதே இல்லை. “என் குதிரை நின்ற இடமெல்லாம் லக்ஷிமிதான்” என்று அவன் அடிக்கடி சொல்லிக்கொள்வதுண்டு. 

ஊருக்குத் தெற்கே ஒரு சிறு குடிசை. அதில்தான் முனியப்பன் தன் மனைவியுடன் வசித்தான். முருகாயியை அவன் தெய்வமாகவே எண்ணியிருந்தான். அவளைக் கலியாணம் செய்து கொண்ட நாள் முதல் தன் நிலைமை உயர்ந்து கொண்டு வருவதை உணர்ந்தான். சாப்பாட்டு விடுதியில் கொட்டை அரிசிச் சோற்றை உண்டு தெருத்திண்ணையில் உறங்கி, கவலையில் விழுங்கப்பட்டு அனாதியாகக் காலம் போக்கின அவனுக்கு தினமும் வேளா வேளைக்கு நாலுவகைக் கறி யோடு மனதுக்குப் பிடித்த சாப்பாடும், குளிப்ப தற்கு வெந்நீரும் தயார் பண்ணி வைத்து அவன் வரவை எதிர்பார்த்து வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் முருகாயியை அவன் குல் தெய்வமாகவே நினைத்தான். ஏன் அதற்கு மேலாகவும் நினைப்பான். 

கிடைக்கும் ரூபாய்களை முனியப்பன் தன் மனைவியிடம் கொண்டு கொடுத்துவிடுவான். அவள்தான் வீட்டுக்கு அதிகாரி. முனியப்ப க்கு எந்த வஸ்துக்கள் பிரியமோ அல்லது அவசியமோ அவைகளை அவன் சொல்லாமலே என்ன விலையானாலும் வாங்கி வந்து விடுவாள். அவன் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, “முருகாயி இந்தச் சாமானெல்லாம் வேணும்னு எனக்கு ஆசைதான். இருந்தாலும் நம்மளைப்போல் ஏளைங்க எப்படி வாங்கமுடியும்னு பேசாமெ இருந்திடுவேன். இதெல்லாம் விலைகொடுத்து வாங்கறதுக்கு ஒங்கிட்டே காசு வெளையுதா என்ன” என்று கேட்பான். 

“எல்லாம் நீங்க குடுக்கற ரூவாயை வச்சுத் தான் வாங்கினேன். ஓங்க சம்பாத்தியத்தை வச்சு ஒரு சீமானாட்டமா வாழலாமே” என்று சிரித்துக்கொண்டே சொல்வாள் முருகாயி. 

“நீ பொல்லாதவ; நம்ம வீட்டுச் சாப்பாடு மாதிரி அந்த ஜட்ஜி எசமான் வீட்டிலேகூட கிடையாது பாத்துக்கோ! நெசமா அவ்வளவு ருசியா இருக்குது உன் சமையல். காப்புக்கடுக்கன் எல்லாம் நீ வாங்கிக்கொடுத்துட்டே எனக்கு. இதுக்குமேலே, நான் கேக்கறபோதெல்லாம் செலவுக்குக் குடுக்கறே! அதுவுங்காணாமே எரநூத்தம்பது ரூவா சேத்துவச்சிருக்கேன் சொல்றே. நீ பொல்லாதவடி யம்மா, பொல்லாதவ” என்று சொல்லிக்கொண்டே முனியப்பன் அவள் கன்னத்தில் தட்டுவான்.  

கட்டுவிடாத சிவந்த திரேகம். பரந்த முகத்திற்கொத்த சுருட்டை முடி. காலையில் அவன் வகிடு எடுத்துச் சீவி விட்டது இரவுவரை அப்படியே கலையாமல் இருக்கும். ஜல் ஜல் என்று வண்டி வரும்போது குதிரையின் பிடறி மயிரைப்போல அவன் கிராப்பு காற்றில் அசை வதே ஒரு காட்சிதான். கரை போடாத ஒரு சாயவேஷ்டியை நீளமாக மடிவைத்துக் கட்டி, மேலே ஒரு மல் ஜிப்பா போட்டிருப்பான். சிட் டித்துண்டு ஒன்று வண்டிப் பெட்டியின் மேல் எந்நேரமும் விரித்துக் கிடக்கும். கையில் அழகான பட்டுக் குஞ்சம் கட்டிய ஒரு சாட்டை. அவன் உற்சாகமாக சீட்டி அடித்துக்கொண்டு வண்டியை விரட்டுகையில் அவனுக்கும் அவன் குதிரைக்கும் ஒரு குஷி. 

வழக்கமாக அவன் வண்டியில் ஏறிப் போகும் வக்கீல் ரெங்கசாமி அய்யர் ஒரு ஹாஸ் யப்பேர்வழி. அடிக்கடி இவனுடைய குடும்ப வாழ்க்கையைப்பற்றி விசாரிப்பார். அவரிடம் தன் மனைவியைப்பற்றிச் சொல்வதில் முனியப்ப னுக்கு ஒருவித ஆனந்தம். அவளுடைய குணத் தைப்பற்றி வாய்கொண்ட மட்டும் புகழ்வான். வக்கீல் அதைக்கேட்டுப் பொறாமை கொள்வ தோடு, தன் சாரமற்ற வாழ்க்கையையும் அவனிடம் எடுத்துச் சொல்வார். முனியப்ப னுக்குச் சில சமயங்களில் தன் எதிர்காலத்தைப் பற்றிய யோசனை வந்து விடும். தனக்குக்குழந்தை பிறந்தால், அது ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணா யிருந்தாலும் சரி, அதை நன் றாகப்படிக்கவைத்து ஒரு உத்தியோகத்தில் அமர்த்திவிட வேண்டும். அது ஆபீசுக்கு ஒரு வண்டியில் ஏறிப்போகும் போது அது தன் மகன் அல்லது மகள் என்று பிறரிடம் சொல்லிக்கொள்ள வேண்டும். இதுவே அவனுக்கு அடிக்கடி தோன்றும் ஆவல். 

அவன் எண்ணத்திற்கேற்றபடி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அது முருகாயியை உரித்து வைத்ததுபோலிருந்தது. அதன்மேல் முனியப்ப னுக்கு அபார பிரியம். தின்பண்டம்,விளையாட்டுச் சாமான்,உடுப்பு இவைகளை வேண்டிய மட்டும் வாங்கி விடுவான். குழந்தை அவனுடைய எதிர்கால நோக்கத்தை அறிந்துகொண்டது போல் சிறுவயதிலேயே புத்திசாலியாகத் தோன்றியது. குழந்தை பிறந்ததிலிருந்து அவனுடைய சந்தோஷம் இன்னும் அதிகமாயிற்று. 

இம்மாதிரி இன்பமயமாக ஓடிக்கொண்டி ருந்த முனியப்பனின் வாழ்க்கைச் சக்கரம் செல்- லும் பாதையில் சிற்சில முட்டுக் கட்டைகள் ே தோன்ற ஆரம்பித்தன. புற்றீசல்கள்போல வாடகை மோட்டார்கள் மூலை முடுக்குகளிலும் சந்து பொந்துகளிலும் நுழைந்து பிரயாணிகளை ஏற்றிக்கொண்டுபோக ஆரம்பித்தன. முனியப் பனின் குதிரையும் இடைவிடாத உழைப்பினால் தளர்வடைந்து மெலிந்தது.இதோடு அவன் மனைவியும் சில காலமாக சீக்கில் விழுந்து விட்டாள். வீட்டில் இருந்த பணம் முழுவதும் வைத்தியர்கள் கையில் போய்ச் சேர்ந்தும் அவனு டைய மனைவி குணமடையவில்லை. தன் நகை நட்டுகளையும் விற்று மருந்திற்காகவே செலவு செய்தான். அவன் அந்தச் சமயத்தில் வண்டியை, யும் குதிரையையும்கூட விற்றுவிடத் தயாராக இருந்தான். முருகாயிதான் அதைத் தடுத்து விட்டாள். 

முனியப்பன் வண்டி தெருவில் ஓடி ஒரு. மாதமாயிற்று. அவன் தன் மனைவியின் பக்கத் திலேயே இருந்துகொண்டு அவளைக் கவனித்து வந்தான். பார்க்காத வைத்தியம் கிடையாது.. வேண்டிக்கொள்ளாத தெய்வமும் கிடையாது. ஒரு நாள் முருகாயிக்கு ஜுரம் கடுமையாக இருந்தது. முனியப்பன் பெரிய டாக்டரை அழைத்து வந்தான். அவர்போட்ட ஊசிகளையும்மீறி, யமன் அவளுடைய உயிரைக்கொண்டு போய்விட்டான். டாக்டர் முகத்தைச் சுளித்துக் கொண்டு “போயிட்டுது’ என்று சொன்னவு டன் முனியப்பன் வயிற்றில் குபீலென்று தீப் பிடித்ததுபோலிருந்தது. நின்றுகொண்டிருந்தவன் அப்படியே சவத்தின் மேல் விழுந்து விட்டான். கோவென்று கதறினான்; விழுந்தான்; முட்டிக்கொண்டான். தன் வாழ்வு அன்றோடு குலைந்து விட்டதென்று அவனுக்குப்பட்டது. அவன் மகள் சொர்ணம் தகப்பனைக் கட்டிக் கொண்டு அழுதாள். அவளுக்கு அப்போது வயது பத்து. ஐந்தாவது வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கப் பார்க்க முனியப்பனுக்குத் துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது. 

கடைசியில் பிணத்தை ஒருவாறு அடக்கம் செய்தார்கள். முனியப்பன் வீட்டுக்குத் திரும்பி வந்ததும் பித்துப் பிடித்தவன் போல் ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டான். பக்கத்திலுள்ள வர்கள் அவனைப் பலவகையிலும் தேற்றினார்கள். தாங்கள் அவனுடைய மகளைக் கவனித்துக் கொள்வதாக எல்லாம் சொன்னார்கள். சொல்லி என்ன செய்ய? முனியப்பன் மனம் ஏக்கத்தி லேயே ஆழ்ந்து விட்டது. 

சில நாட்களில் முனியப்பனின் வண்டி தெருவில் அங்குமிங்கும் அலையத் தொடங்கியது. அதை ஓட்டுவது பழைய முனியப்பனல்ல. வாழ்க்கைப்போரில் அடிபட்டு கவலையே உருவாக வாடி வதங்கிப்போன முனியப்பன் தான். தன் வருத்தத்தையெல்லாம் குதிரையின்மேலும் காட்டி அதையும் வதைத்துக் கொண்டிருந்த எலும்புக்கூடுதான் வண்டியின் முன் உட்கார்ந்திருந்தது. நிலைமை சீர்கெட்டுப்போகும் பொழுது மனிதனுடைய சுபாவம் எப்படி மாறிப்போய் விடுகிறது. 

இப்போதெல்லாம் தினம் நாலணா கிடைப் பதே கஷ்டம். சில நாட்களில் வெறும்கையோடு வீட்டுக்குத் திரும்புவான். சொர்ணம் தன் தகப்பன் கொண்டுவருவதை வைத்துக் கஞ்சி காய்ச்சி வைப்பதோடு பள்ளிக்கூடப் பாடங்களை யும் படித்து வந்தாள். முருகாயி இறந்த அன்று சொர்ணத்தைக் கவனித்துக்கொள்வதாக ஆறு தல் கூறியவர்கள் அந்தப்பக்கமே எட்டிப்பார்க்க வில்லை. எல்லாம் வெறும் ஆறுதல் வார்த்தைகள் தானே ! 

முனியப்பன் அவர்களைப் பற்றிக் குறை சொல்வதே கிடையாது. எல்லாம் தன் தலைவிதி என்று தன்னையே நொந்துகொள்வான். சொர் ணம் கஷ்டப்பட்டு வேலைசெய்யும்படி அவன் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான். இதற்கா கவே அவன் அடிக்கடி விடுதியில் சாப்பிட்டு விடுவதோடு அவளுக்கும் சாப்பாடு வாங்கி வந்து விடுவான். 

ஐந்தாறு நாட்களாக முனியப்பனுக்கு வாடகையே கிடைக்கவில்லை. ஒவ்வொருநாளும் வெறும் கையோடு வீட்டுக்குத் திரும்புவான் தகப்பன் சாப்பாட்டிற்கு ஏதாவது கொண்டு வருகிறானா என்று சொர்ணம் எதிர்பார்த்து நிற்பாள். சொர்ணம் அப்படி நிற்பதைக்கண்ட வுடன் முனியப்பனின் மனம் துடியாய்த் துடிக் கும். இப்போ ஏதாவது வாடகை கிடையாதா?” என்ற எண்ணத்துடன் வண்டியைத் திரும்பவும் ஓட்டிக்கொண்டு போய்விடுவான் ஆனாலும் என்ன? வழக்கம்போல ஒன்றும் கிடையாமலே பழையபடி திரும்பிவருவான். தன் மகளுடைய வாடிய முகத்தைப் பார்க்கா மலே போய்ப் படுத்துக்கொள்வான். சொர்ணமும் நோக்கமறிந்து பேசாமலிருந்துவிடுவாள். முனியப்பனுக்கு இரவு முழுவதும் தூக்கமே கிடையாது. விடிந்ததும் பக்கத்து வீடுகளில் போய் தன் நிலைமையைச் சொல்லி கொஞ்சம் சோறு வாங்கிக் கொண்டு வந்து சொர்ணத்திடம் கொடுத்து, “சொர்ணம், கிளப்பிலேருந்து சோறு வாங்கிக்கிட்டு வந்தேன். சாப்பிடு” என்று சொல்லி அவளைச் சாப்பிடும்படி செய்துவிட்டு வண்டியைக் கொண்டுபோவான். 

எத்தனை நாளைக்கு அயல் வீடுகளில் இந்த மாதிரி கேட்பது? அவனுக்கு அது அவமான மாக இருந்தது. குதிரை புல்லைக்கண்டு அநேக நாளாகிவிட்டது. அது ஓடச் சக்தியற்று நாளுக்கு நாள் துரும்பாய் இளைத்தது. 

ஐந்து நாட்கள் இவ்வாறு கழிந்தன. ஆறாவது நாள் இரவு ஒன்பது மணி. ரயிலிலிருந்து பிரயா ணிகள் இறங்கி வந்துகொண்டிருந்தார்கள்.கார்க் காரர்களும் வண்டிக்காரர்களும் கூட்டத்தை மறித்து மூட்டையைப் பிடுங்குவதற்கு அடிபிடி போட்டுக்கொண்டிருந்தார்கள். முனியப்பனும் அநேக பிரயாணிகளிடம் முரண்டினான். ஆனால் காரியம் பலிக்கவில்லை. கடைசியாக நாலைந்து மூட்டை முடிச்சுகளைக் கையிலும் இடுப்பிலும் வைத்துக்கொண்டு ஒரு பாட்டியம்மாள் ஆடி அசைந்து கொண்டு வந்தாள். அநேகம் வண்டிக்காரர்களுக்கும் கார்க்காரர்களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு வந்தவள் அந்தப் பாட்டி. அவள் வீடு ஸ்டேஷனிலிருந்து மூன்றுமைல் தூரத்திலிருந்தது. கல்லிலாவது நார் உரித்துவிட லாம்; அவள் கையிலிருந்து பைசாத்துட்டுக் கிளப்புவது அதைவிடக் கஷ்டம். பையப்பைய நடந்து வழியில் இளைப்பாறிக்கொண்டே வீடு போய்ச் சேர்ந்து விடலாம் என்பது பாட்டியின் எண்ணம். 

முனியப்பன் பாட்டியைக் கண்டதும் ” அம்மா வண்டி வேணுமா?” என்றான். 

“வண்டியும் வேண்டாம் ஒண்ணும் வேண் டாம். வீடு பக்கத்தில்தான் இருக்கு. நடந்து போயிடுவேன் ” என்றாள் பாட்டியம்மாள். 

“இந்த வயசிலே இவ்வளவு சாமானையும் செமந்துக்கிட்டு நடந்துபோவானேன். ஏதாச்சும் குடுத்ததை வாங்கிக்கிறேன். வண்டிலே ஏறுங்க”
 
“சரி. சந்திப்பிள்ளையார் கோவில் தெருவுக்கு என்ன வாடகை? சொல்லு” 

“அம்மா, எட்டணா குடுங்க இங்கேருந்து மூன்று மைல் இருக்கு.” 

“ஒனக்கு எட்டணாவா வேணும்? நன்னாருக்கு. ஒரணா குடுத்தா தங்கமா மோட்டாருலே போலாமே! வண்டி வேண்டவே வேண்டாம்” என்று மேலும் நடந்தாள். 

முனியப்பன் அவள் பின்னாலேயே போய்க் கொஞ்சம் கொஞ்சமாக வாடகையைக் குறைத்துக் கடைசியில் மூன் றணாவுக்குச் சம்ம திக்க வைத்து, பாட்டியையும் மூட்டைகளையும் வண்டியில் ஏற்றினான். முனியப்பன் தன் கஷ்ட காலத்தை எண்ணியே அந்த வாடகைக்குச் சம்மதித்தான். அதற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாடகை ஆறணா. முனியப்பன் வாடகையைக் குறைப்பதைக்கண்டு பக்கத்தில் நின்ற மற்ற வண்டிக்காரர்கள் அவன் மீது கோபப்பட்டார்கள். 

முனியப்பன் தான் வாங்கப்போகும் மூன் றணாவுக்கு அப்பொழுதே ஜாபிதா தயாரித்துக் கொண்டிருந்தான். வண்டி பத்து மணிக்குப் பாட்டியின் வீட்டு வாசலில் போய் நின்றது. பாட்டி மனதை வெறுத்து மூன்றணாவை நான்கு தடவை எண்ணிப் பார்த்து அவன் கையில் கொடுத்தாள். முனியப்பன் அணாக்களை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு வண்டியை வீட்டுக்குத் திருப்பினான். வண்டி வேகமாக வந்துகொண்டிருந்தது. வீட்டுக்குப்போய் நார்ப் பெட்டியை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்று இரண்டணாவுக்கு அரிசியும் ஓரணாவுக்கு மசாலாச் சாமான்களும் வாங்க வேண்டுமென்ற யோசனையுடன் வண்டியில் உட்கார்ந்திருந்தான் முனியப்பன். 

வீட்டுக்குச் சமீபத்தில் வண்டி வந்து கொண்டிருந்தபோது, “ஏய்! வண்டியை நிறுத்து என்ற சத்தம் கேட்டது. கடிவாளத் தைப் பிடித்துச் சடக்கென்று இழுத்தான் முனியப்பன். வண்டி நின்றது. போலீஸ் நாரா யண பிள்ளையை எதிரில் கண்டதும் முனியப்ப னுக்கு கதிகலங்கிப்போயிற்று. வந்த வேகத்தில் வண்டியில் இருந்த ஒரே விளக்கு அணைந்து விட்டது.முனியப்பன் அதைக் கவனிக்கவில்லை. 

“எசமான் தெரியாமல் வந்துட்டேனுங்க. இந்த ஒரு தடவையும் மன்னிச்சுக்குங்க ” என்று அவர் காலைத்தொட்டுக் கெஞ்சினான். 

“சீ கழுதை. அதெல்லாம் நடக்காது.உம். ஸ்டேஷனுக்குத் திருப்பு வண்டியை” என்று அதட்டினார். முனியப்பன் கெஞ்சினான், கூத் தாடினான். ஆனால் அவன் சொன்னது ஒன்றும் நாராயண பிள்ளையின் காதில் விழவில்லை. அவர் “சரி எடு அபராதம் எட்டணா. இந்த ஒரு தடவையும் உன்னை மன்னித்து விடுகிறேன் என்று தன் கடைசித் தீர்மானத்தை வெளி யிட்டார். 

முனியப்பன் தன் மடியை அவிழ்த்துக் காட்டி “ஐயா இந்த முணத்தான் இருக்குது. இதைக்கொண்டுதான் இன்னிக்கி என் வீட்டிலே சாப்பாடு நடக்கணும். வேறே காசு இருந்தா வஞ்சகமில்லே ” என்று கொடும்பாவியும் இரங் கும்படி கண்ணைக் கசக்கிக்கொண்டே சொன் னான். தன்னை எதிர்பார்த்து நிற்கும் தன் மகள் சொரணத்தின் வாடிய முகம் அவன் மனக் கண்ணில் தோன்றியது. 

“கொண்டாடா இங்கே” என்று நாராயண பிள்ளை அவன் மடியைப் பிடித்து இழுத் தான். முனியப்பன் “சாமி, சாமி வேறே கதி யில்லை’! என்று கதறினான். நாராயணபிள்ளை யின் முரட்டுக் கைகள் அவனுடைய பிடறியில் இரண்டடி வைத்ததோடு அவன் மடியிலிருந்த மூன்றணாவையும் பறித்துக்கொண்டன. அந்த மூன்றணாவும் அடுத்த நிமிஷமே அரைப்பெட்டி சிகரட்டாக மாறி நாராயண பிள்ளையின் சட்டைப் பைக்குள் சென்றது. அதிலிருந்து ஒரு சிகரட்டை எடுத்து அவர் பற்றவைத்ததை அருகில் நின்ற முனியப்பன் பேசாமல் பார்த்துக் கொண்டேயிருந்தான். முனியப்பனுக்கு உலகம் முழுவதுமே சிகரட் புகையாகத்தோன் றியது. வெற்றியடைந்து விட்ட ஒரு வீரன் போல சடக்கென்று வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டு வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தான். 

குதிரையையும் வண்டியையும் அவன் அன் றிரவே சொற்ப விலைக்கு விற்றுவிட்டான். அன்று அவன் வீட்டில் திருபதிகரமான சாப்பாடு. மறுநாள் முனியப்பன் தன் மகளைக் கூட்டிக் கொண்டு எங்கேயோ நடந்தான். மனதிலுள்ள வருத்தத்தைத் தாங்கமுடியாமல் கண்ணீராக வழிய விட்டுக்கொண்டே சொர்ணமும் அவன் பின்னால் சென்றாள். அவ்வூர் அனாதாஸ்ரமத்தை அடைந்ததும் முனியப்பன் ஆஸ்ரமத் தலைவி யிடம் தன் நிலைமையை எடுத்துச்சொல்லி சொரணத்தை ஆஸ்ரமத்தில் ஒப்படைத்து விட்டான். வெகுதூரம் ஒரு பெரிய பாரத்தைச் சுமந்துகொண்டுவந்தவன் அதை இறக்கிவைத்த பிறகு எப்படி ஆனந்தமாக நடப்பானோ அந்த மாதிரி நடையில் முனியப்பன் அனாதாஸ்ரமத்தி லிருந்து வெளியே வந்தான். பின்பு அவன் போன இடம் ஒருவருக்குமே தெரியாது. 

பல வருஷங்களுக்குப் பிறகு ஒருநாள் அனாதைப் பள்ளிக்கூடத்து உபாத்தியாயனி சொரணத்தம்மாள் ஒரு குதிரை வண்டியில் போய்க்கொண்டிருந்தாள். வயதான ஒரு ஏழைப் பரதேசி கண் கொட்டாமல் அந்த வண்டியைப் பார்த்து உள்ளம் பூரித்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் சென்ற ஒரு வழிப்போக்கனைக் கூப்பிட்டு “இந்தாய்யா, வண்டியில் போகிறது யார் தெரியுமா? என் மகள் சொரணம்’ என்றார். வழிப்போக்கன் “இப்படியும் ஒரு பைத்தியம்” என்று நினைத்துக்கொண்டு போனான். 

– ஆனந்த விகடன், மணிக்கொடி, வசந்தம், யுவன், சக்தி ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன.

– சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.

சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம்  தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.   நன்றியுரை  "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *