ஜங்கார சுருதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 1, 2025
பார்வையிட்டோர்: 63 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாண்டியன் வீரசேனன் தன் ஆஸ்தான மண்டபத்தை விட்டு, வெகு சீக்கிரமாகவே புறப் பட்டு அந்தப்புரத்திற்குச் சென்றான். புதிதாக மணந்து கொண்ட தன்பட்ட மகிஷி கலாவதியுடன் உல்லாசமாகப் பேசிக்கொண்டிருக்க வேண்டு மென்றுதான் அவன் அவ்வளவு விரை வாக அங்கு போனான். 

கலாவதி அப்பொழுது கையில் வீணையுடன் இனிமையாகப்பாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளப்பூரிப்பை அவள் முகத்தில் தோன்றிய புன் முறுவல் தெரிவித்துக் கொண் டிருந்தது. ஏதோ ஒன்றைப் புதிதாகக் கண்டெடுத்தவள் போல அவள் உற்சாகத்தோடு திரும்பத் திரும்ப ஒரே பல்லவியைப் பாடுவதைக் கண்ட வீரசேனன் “பைத்தியம் பைத்தியம்” என்று முணு முணுத்துக் கொண்டான். தான் அங்கு வந்திருப்பதை அவளுக்கு அறிவிப்பதற் காக, மெதுவாகக் காலைத் தரையில் தட்டினான். கலாவதி அவனைத் திரும்பிப் பார்க்க வில்லை. அவளுடைய கண்கள் கை விரல்களிலும், விரல் கள் வீணைத்தந்திகளிலும், மனம் ஆனந்தலகிரியிலும் லயித்திருந்தன. 

இன்று ஏன் கலாவதிக்கு இவ்வளவு குதூகலம்? கேதார கௌளை ராகத்தில் வெகு நாளாக முயற்சித்தும் வராதிருந்த ஒரு அபூர்வமான பிடி இப்பொழுது சரளமாக வாசிக்க வந்து விட்டது. அதையே பத்து முறை வாசித்தா யிற்று. இன்னும் ஆவல் தீரவில்லை. பதினோராவது தடவையும் அதே பிடியை வீணையில்- வாசித்துப்பார்த்தாள். இந்தச்சமயத்தில் தான் அரசன் வீரசேனன் தன் வரவை அவளுக்கு உணர்த்தினான். கலாவதி தன் குறிப்பை உணராமல் திரும்பவும் வீணைவாசிக்க ஆரம்பித்ததைக் கண்டு அரசனுக்குச் சிறிது கோபம் வந்தது. தடதடவென்று அவள் எதிரில் போய் நின்றான். அரசி வீணையுடன் எழுந்து நின்றாள். அவளை அமரச்சொல்லிவிட்டுத் தானும் அவளருகில் உட்கார்ந்தான். 

தான் ஆரம்பித்த ராகத்தை முடிப்பதற் காகக் கலாவதி மறுபடியும் வீணையை மீட்டி னாள். வீரசேனன் ஏமாற்ற மடைந்தவன் போல அவளையே கெஞ்சுதலாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய மனோ நிலையை அவள் கவனிக்கவேயில்லை. மதுவை உண்டு சொக்கி நிற்கும் ஒரு வண்டைப்போல கீத இன்பத்திலேயே அவள் மயங்கிக்கிடந்தாள். வெகு நேரம் ஆயிற்று. வீணையின் ஜங்கார ஸ்ருதி அந்த அறை முழுதும் நிறைந்து ஒலித்துக் கொண்டேயி ருந்தது. ஆனால் அரசனுடைய கோபமும் வினா டிக்கு வினாடி விஷம் போல ஏறிக்கொண்டேயிருந்தது. அவனால் பொறுக்க முடியவில்லை. “கலா, நான் உன்னோடு உல்லாசமாகப் பேசலா மென்று வந்தால், நீ வீணையோடு புலம்பிக் கொண்டிருக்கிறாயே! வா, உத்தியான வனத்திற்குச் செல்லலாம்.” என்று கோபமும் கட்டளையும் கலந்த தோரணையில் சொன்னான். 

ராணி திகைத்தாள். ஆனால் தன் திகைப்பை வெளிக்குக் காட்டிக்கொள்ள வில்லை. வீணையை வைத்து விட்டுப் புருஷன் இட்ட கட்டளைப்படி அவன் பின்னால் நடந்தாள். 

உத்தியான வனத்திற்குள் சென்றவுடன், அரசன் அவளை மகிழ்விப்பதற்காகத் தமாஷாக ஏதேதோ பேசினான். சிரித்தான். தான் செய்து முடித்த வீரச்செயல்களை யெல்லாம் நாடகம் போலவே அவளுக்கு நடித்துக் காண்பித்தான். ஆனால் அரசி கலாவல்லியின் காதுகள் அவன் சொன்னவற்றில் ஒன்றையும் கிரகிக்கவேயில்லை. அரசன் கேட்பதற்கு மட்டிலும், ” ஆமாம்; இல்லை,” என்ற பதில்களை உணர்ச்சியற்ற முறையில் சொல்லிக் கொண்டிருந்தாள். 

இன்னொரு நாள் மாலை. அரசனும் ஆஸ்தா னக் கவி சேகரனும் உத்தியான வனத்திலிருந்து அரண்மனையை நோக்கி வந்துகொண்டிருந்தார் கள். சுகந்தமான தென்றலில் மிதந்துவந்த வீணாகானத்தைக் கேட்டுத் திகைத்து நின்றான் கவிஞன். அத்தகைய வீணாகானம் அவனுக்கு எங்கேயோ கேட்டதுபோலிருந்தது. பத்து வருஷங்களுக்கு முந்திய அவனது வாழ்க்கை முழுவதும் அவன் நினைவுக்கு வந்துவிட்டது. அரசனுடன் வந்ததை மறந்து நின்றுகொண் டிருந்தான். 

கவி சேகரன், வீணையின் சப்தத்தைக்கேட்டு இவ்வாறு திகைத்து நின்றது, வீரசேனனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் தன்வெறுப்பை வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் “சேகர், இந்த சங்கீதம் உங்களை இப்படிப் பிரமிக்கச் செய்கிறதே. அவ்வளவு உயர்ந்த கீதமா இது?” என்று கேட்டான். அரசன் சொன்னதைக் காதில் வாங்காமலே “அரசே மன்னிக்க வேண்டும். சற்று நில்லுங்கள். இது என் குருநாதரின் இனி மையான வாசிப்பைப் போலவே இருக்கிறது” என்றான் கவி. அவன் கலாவதியையோ அவளு. டைய வீணை வாசிப்பையோ இதுவரை கேட்க வில்லை. 

அரசன் போய்க் கொண்டே, “வீணை வாசிக் கிறது வேறு யாருமில்லை. என் தேவி கலாவதி தான். நாம் இருவருமே அங்கு செல்லலாம்” என்றான். 
 
“அரசே தாங்கள் மிகவும் பாக்யசாலி தான்” என்று சொல்லிக் கொண்டே கவிஞன் அரசனோடு சென்றான். கலாவதியின் எதிரே இருவரும் அமர்ந்தார்கள். கலாவதி நாலைந்து அபூர்வமான ராகங்களைப் பாடி முடித்தாள். கவிஞனின் முகம் என்றுமில்லாதபடி மலர்ந்திருந்தது. இழந்துபோன செல்வத்தை மீண்டும் பெற்றவன் போல அவன் அரசன் எதிரில் ஆனந்தக் கூத்தாடினான். கலாவதியிடம் நேரடி யாகவே ஏதோ கேட்டுவிட வேண்டுமென்று வாயெடுத்தான். ஆனால் அரசனுடைய முகம் மாறுபட்டிருந்ததைக் கண்டதும், தன் உள்ள மகிழ்ச்சியை அடக்கிக்கொண்டு எழுந்து போய் விட்டான். 

அன்று முதல் கவி சேகரன் அரசனின் ஆஸ்தான மண்டபத்திற்கு வருவது அபூர்வமாகி விட்டது. அரண்மனை அந்தப் புரத்திற்கருகி லுள்ள பலகணியின் வெளிப் பக்கம் நின்று கலா வதியின் வீணாகானத்தைப் பருகுவதையே அவன் தனது முக்கிய லக்ஷியமாகக் கொண்டு விட்டான். ராணி கலாவதியும் நாளா வட்டத் தில் இதைத் தெரிந்து கொண்டாள். தன்னுடைய அபூர்வமான வீணை வாசிப்பை அதாவது சங்கீ தே இன்பத்தை உண்மையாக ரசிக்கக் கூடியவர் ஒருவராவது அந்த அரண்மனையில் இருக்கிறார் என்பதில் அவளுக்கு ஒரு மகிழ்ச்சி! பலகணியின் பக்கம் சேகரன் வந்து விட்டான் என்பதைக் குறிப்பாகத் தெரிந்தவுடன் கலாவதி வீணை வாசிப்பில் தன் திறமை முழுவதையும் காட்டி உள்ள முருகச் செய்வாள். 

சேகரன் ஆஸ்தான மண்டபத்திற்கு வராமல் எங்கெங்கோ சுற்றித் திரிவது, அரசனுக்குப் பிடிக்கவில்லை. இதைப் பற்றி அரசன் அவனிடம் சொல்லியும் பார்த்தான். ஆனால் சேகரின் மனம் திரும்பும் வழியாக இல்லை. வீணை அதிகம் வாசிக்கக் கூடாது என்று அடிக்கடி கலா வதிக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்து வந்தான். கணவனுடைய கட்டளையை மீறக்கூடாதென்று கலாவதிக்கு அந்தச் சமயங்களில் தோன்றும். ஆனால் சேகரன் பலகணியின் பக்கம் வந்து நிற்கிறான் என்பதை அறிந்து விட்டால், அவளு டைய சங்கீத கானமும், கலை ஆர்வமும் புருஷ னுடைய கட்டுப் பாடுகளையெல்லாம் உடை தெறியும்படி செய்துவிடும். 

ஒரு சமயம் கலாவதியும் சேகரனும் இது போன்று சங்கீத சாகரத்தில் திளைத்திருக்கையில் அரசன் கோபாவேசத்தோடு கலாவதியின் அறைக்குள் வந்தான். அதே சமயத்தில் சாளரத் திற்குப் பின் புறத்திலிருந்து “ஆஹா!” என்று ஒரு குரல் கேட்டது. அரசன் தடதட வென்று வெளியில் வந்து பார்த்தான். சேகரன் தன்னை மறந்து சாளரத்தின் வெளிப்புறத்தில் சுவரோடு ஒன்றிக் கொண்டிருந்தான். 

சேகரனை இவ்வாறு கண்டதும் அரசனு டைய கோபம் எல்லையை மீறிவிட்டது. கவிஞனைக் கரகர வென்று இழுத்துக் கொண்டு போய் அரண்மனைக்கு வெளியில் தள்ளி விட்டுத் திரும்பவும் கலாவதியிடம் வந்தான். மிகவும் ஆத்திரத்தோடு “கலா,இந்த வினாடி முதல் நீ வீணையைத் தொடவே கூடாது. தொட்டால் அந்த வீணையை உடைத்து நொறுக்கி விடுவேன். ஜாக்கிரதை!” என்று பயமுறுத்தினான். 

தன்னைக் கொல்வதென்றாலும் கலாவதி அதைப் பற்றிக் கவலைப் படமாட்டாள். தன் வீணையைப் பற்றி அரசன் சொல்லிய வார்த்தை கள் அவளுடைய உள்ளத்தைக் கொட்டியது. அவளுடைய உடல் முழுதும் பதறியது. தன் னுள் குமுறிக் கொண்டிருந்த ஆத்திரத்தை வெளிக்காட்ட முடியாமல் தவித்தாள். எதிர் பாராத ஆபத்தினால் சிறகிழந்து விட்ட தாய்ப் பறவை தன் அருகில் விழுந்து கிடக்கும் சிறு குஞ்சுகளை அணைத்துக் கொள்வது போலக் கலாவதி தன் அருகிலிருந்த வீணையை எடுத்து அணைத்து முத்தமிட்டு உறையினுள் வைத்தாள். 

வெகு நாள் வரையில் கலாவதி வீணையின் அருகில் செல்லவில்லை. கலாவதியின் வீணாகானம் ஒலிக்காத அந்த அரண்மனை, கண் இழந்த மனிதனைப்போல சோபை குறைந்து தோன் றியது. இதுவே வீரசேனன் விரும்பிய காட்சி. கலாவதியின் சங்கீதப் பைத்தியம் இன்னும் சில நாட்களில் அறவே நீங்கி விடும் என்று நினைத்து அவன் மகிழ்ந்தான். ஆனால் கலாவதிக்கோ அந்த அரண்மனை வெறும் சூன்யமாகவே காட்சி யளித்தது. வீரசேனன் தன் கணவன் என்ற உணர்ச்சி கூட மங்கி வந்தது. அவனுடைய சொற்படி நடக்க வேண்டிய ஒரு வேலைக்காரி என்றே தன்னை நினைத்துக் கொண்டாள். வீரசேனன் செல்லியபடியே ஒவ்வொரு காரியத் தையும் யந்திரம் போலச் செய்து முடித்தாள். அவளுடைய அன்பைப் பெறுவதற்காக வீரசேனன் செய்த முயற்சிகளெல்லாம் வீணாயின. கூண்டில் அடைபட்ட கிளியைப் போல சோகமே உருவாக இருந்தாள் கலாவதி! 

பிற நாட்டின் மீது படையெடுப்பதென் றால் வீரசேனனுக்கு அது ஒரு விளையாட்டுப் போலத்தான். ஒருவித காரணமின்றிப் பக்கத்து நாட்டின் மீது படையெடுத்து எளிதாக ஜெயித்து விட்டான். போரில் சூடிய வெற்றி மாலையோடு வந்து கலாவதியைக் காணவேண்டு மென்ற ஆவலினால், வீரசேனன் யுத்தகளத்தி லிருந்து குதிரையின் மேல் வெகு வேகமாக வந்து கொண்டிருந்தான். தனது வீரச்செயலைக் காட் டியாவது கலாவதியைத் தன் வசப்படுத்த அவன் இந்தச் சூழ்ச்சியைச் செய்தான். குதூ கலத்துடன் அரண்மனைக்குள் சென்றான். கலா வதியின் அறைக்குள் நுழையப் போனவன் உள்ளே இருவர் பேசிக் கொண்டிருப்பதை அறிந்து வெளியில் நின்று விட்டான். உள்ளே, கலாவதியும் சேகரனும் பேசியது வீரசேன் னுக்குத் தெளிவாகக் கேட்டது. 

“அம்மா, தாங்கள் அனுப்பிய சேவகர்கள் சிறிது நேரம் கழித்து வந்திருந்தால், இந்தச் சேகரனைத் தாங்கள் கண்ணால் பார்த்திருக்கவே முடியாது” என்றான் சேகரன். 

“ஏன் பார்த்திருக்க முடியாது?” இது கலாவதியின் குரல். 

”நான் இங்கிருந்து துரத்தப்பட்ட அன்றே உலகில் எல்லாவற்றையும் துறந்து துறவறத்தை மேற் கொண்டு விட்டேன். ஆயினும் பாழும் மனம் ஏனோ நிம்மதி அடையவில்லை. எனக்குரிய ஒரு இன்பப் பொக்கிஷம் வேறு யாரிடமோ அகப்பட்டுக் கொண்டிருப்பதாக ஒரு உணர்ச்சி என்னைப் பைத்தியமாக்கி வரும் போலிருந்தது. பைத்தியமாகி உளறுவதற்குள் பிராணத்தி யாகம் செய்து கொள்வதே நல்லதென்ற முடி வுக்கு வந்தேன். அந்தச் சமயத்தில் தான் தாங்கள் அனுப்பிய சேவகர்கள் வந்து என்னை அழைத்தார்கள். இனி எனக்கு என்ன நேரிட்டாலும் நான் அஞ்சப் போவதில்லை. தங்களுக்கு அரசரால் ஏதேனும் கெடுத்தல் வரக்கூடா தென்றே நான் கவலைப்படுகிறேன். தாங்கள் இப்பொழுது ஒரு முறை அந்தக் கேதார கெள்ளை ராகத்தை வீணையில் வாசித்து நான் கேட்க வேண்டும். இதுவே என் கடைசி ஆவல். இதை நிறை வேற்றி வைக்கத் தாங்கள் மனமிரங்க வேண்டும்” என்று கெஞ்சினான் சேகர். 

ரசிகனின் விருப்பப்படியே என்றுமில்லாத படி கலாவதி வீணை வாசித்து மகிழ்வித்தாள். பின்பு சேகரன் அரண்மனையிலிருந்து துரத்தப் பட்ட முதல் அது வரையில் தான் அடைந் துள்ள மனோ நிலையைச் சுருக்கமாக எடுத்துச் சொன்னான். 

“அம்மா, கல் என்றாலும் கணவன். அவரு டைய வார்த்தையின்படி நடப்பது தான் தங்கள் கடமை!” என்றான் சேகரன். 

“கலையறிவற்ற அவரை நான் இப்பொழுது கணவனாகவே கருதவில்லை. அவர் ஒரு வஞ்சக மிருகம். என்னை மணந்துகொள்ள வேண்டுமென்றே அவர் தனக்கு சகல கலைகளிலும் ரசனையிருப்பதுபோல் ஒரு நாடகம் நடித்திருக்கி றார். நான் இந்தச் சூதையறியாமல், இவரைப் பற்றிக் கேள்விப்பட்டவை யெல்லாம் உண்மை யென்று நம்பி மாலையிட்டு மோசம் போனேன். அபூர்வமாகக் கற்ற கலை வீணாவதை என்னால் சகிக்க முடியவில்லை. மனம் கலை ஒன்றையே நாடி நிற்கிறது. இதற்காக நான் எவ்விதத் தியாகத்தையும் செய்யத் துணிந்து விட்டேன்” என்று கலாவதி துடித்தாள். 

”அம்மா தங்கள் குரு வேதநாதர் தானே?” என்று கேட்டான் சேகர். 

“ஆமாம். தங்களுக்கு எப்படி இது தெரிந்தது? அவர் தான் என் குரு. ராகங்களின் ஜீவனையே அவர் என்னிடம் கொடுத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.” 

“அம்மா, முதல் நாள் நான் தங்கள் வீணா கானத்தைக் கேட்டவுடனேயே தான் இதைத் தெரிந்து கொண்டேன். நானும் வேதநாதரின் சிஷ்யன் தான்!” 

“அப்படியா? ஆமாம். என் குருநாதரே ஒரு சமயம் என்னிடம் சொல்லியிருக்கிறார். ‘உன்னைப்போல இவ்வளவு சரளமாக வீணை வாசிக்கக் கற்றுக்கொண்டவன் இன்னும் ஒரு வன்தான் இருக்கிறான். அவனை நீ காணாதிருப் பதே உன் வாழ்க்கைக்கு நன்மை பயக்கும்’ என்று. அதே சிஷ்யரை நான் நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான். தங்களைக் கண்டதன் காரணமாகவே எனக்கு நன்மை ஏற்படப்போகிறது.’ 

“நன்மையா? எம் குருநாதர் கூறியபடி, இருவேறு நிலைமையிலிருக்கும் நாம் இருவரும் சந்திக்க நேர்ந்ததே இருவருக்கும் துன்பத்தைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதே. நிலையில் இங்கு நான் வெகு நேரம் நின்றால் இன்னும் ஆபத்துத்தான் நேரிடும். ஆகையால் சென்று விடுகிறேன். இனி நான் தங்களைச் சந்தித்துத் தங்களது இனிய வீணா கானத்தைக் கேட்கவே முடியாதபடி போய் விடலாம்!” 

“இல்லை.குருநாதர் ஆசி கூறியபடி, மறு ஜென்மத்திலாவது நாம் ஒன்று சேருவோம்.” 

“ஆமாம் அந்த மறு ஜென்மத்தை வெகு விரைவிலேயே அடைவதற்காக நான் பிராணத் தியாகம் செய்துகொள்ளப் போகிறேன்.” 

“வேண்டாம்! இந்தப் பிறவியிலேயே நாம் இருவரும் மறுஜென்மம் எடுக்கலாமே!தாங்கள் இப்பொழுதே மறு ஜென்மத்தை அடைந்திருக்கிறீர்களே.” 

“ஓஹோ! நான் துறவறம் அடைந்து விட்டதை சொல்கிறீர்களா?” 

“ஆமாம். இந்த வினாடி முதல் நானும் ஒரு துறவி. இந்த சங்கீத விரோதியான வீர சேனனுக்கு இனி நான் அடிமையல்ல.” 

“அரசி, தாங்கள், பதவி, செல்வம் பொறுப்பு எல்லாவற்றையும் யோசிக்காமல் அவசரப்படாதீர்கள்.” 

“இவைகள் எல்லாவற்றையும் விட சங்கீதமே எனக்குமேல். தீரயோசித்து விட்டேன். என் கலையின் முன் எதுவுமே நிகரில்லை என்று சொல்கிறேன். நாம் இருவரும் துறவிகளாகிக் காவிரிக் கரையில் ஆனந்தமாக மீதி வாழ்க்கை யையாவது சங்கீதம் தரும் இன்பத்தில் கழிக்க லாம் என்று நினைக்கிறேன். தங்கள் இஷ்டம் எப்படியோ?” 

“இதுவே எனக்கு இன்பமளிக்கும். ஆனால் இதன் மூலம் தங்கள் வாழ்க்கை வீணாகி விடுமே யென்று தான் நான் கவலைப்படுகிறேன்.” 

“இல்லையே. என் வாழ்க்கையை சங்கீத தேவதைக்காகப் பயன்படுத்துவது வீணாகுமா? கலைக்காக என் உலக வாழ்க்கையைத் தியாகம் பண்ணிவிட்டேன். இதை ஒருவராலும் தடுக்க முடியாது.” 

“தங்கள் இஷ்டப்படியே நானும் நடக்கிறேன். சென்று வருகிறேன்.” 

“இன்னும் சிறிது நேரத்தில் நான் ஒரு சந்நியாசினியாகத் தங்கள் பர்ணசாலைக்கு வந்து சேர்வேன்” என்றாள் கலாவதி. சேகரன் அவளிடம் விடை பெற்றுக்கொண்டு போய் விட்டான். 

மன்னன் வீரசேனன், வெளி வாசலில் கல்லாகச் சமைந்து நின்றான். உயர்ந்த ஆடை யாபரணங்களை யெல்லாம் களைந்துவிட்டுக் காவி யுடையுடன் வெளியே சென்ற கலாவதியை அரசன் கண்டான். அவளைத்தடுத்து நிறுத்தவோ அவளுடன் பேசவோ அவனால் முடியவில்லை. கலாவதி அரண்மனையை விட்டுப் போனவுடன் அவனுக்கு உலகமே இருண்டு விட்டது போலத் தோன்றியது. நின்ற இடத்திலேயே படுத்து விட்டான். 

மறுநாள் வீரசேனன் அதிகாலையில் எழுந்து வெறிபிடித்தவன் போல ஊருக்கு வெளியே ஓடினான். காவலாளிகள் பின் தொடரவே அவன் வேகம் அதிகரித்தது. அவர்கள் கண்ணில் படாமல் மனித சஞ்சாரமற்ற அகன்ற காவிரியின் கரையை அடைந்தான் வீரசேனன். மனித சமூகத்தையே இனி ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்ற உறுதியுடன் ஓரிடத்தில் உட்கார்ந்தான். பக்கத்து மரத்திலிருந்த ஒரு குயில் இனிய கீத மிசைத்தது. குயிலின் கானம் அவன் மனதில் ஒரு புரட்சியைக் கிளறிவிட்டது. “சீச்சீ!” என்று காரி உமிழ்ந்து விட்டு அங்கிருந்து ஓடினான். எதிரிலுள்ள மூங்கில்ப் புதர் ஒன்றி லிருந்து அடிக்கும் காற்று, அவனை எதிர்ப்பது போல வேணுகானத்தை ஏந்தி வந்தது. அந்த ஒலியைத் தன் காதுகளில் நுழைத்த காற்றின் மீது அவனுக்கு ஆத்திரம் உண்டாயிற்று.ஆனால் காற்றை எதிர்க்க முடியுமா? மறுபக்கம் திரும்பி ஓடினான். 

கலகல வென்று பாறைகளின் மீது தவழ்ந்து கொண்டிருந்த காவிரி இன்னிசை அமிர்தத் தைப் பரப்பிக் கொண்டிருந்தாள். காவிரியின் இனிய ஓசை அவனுக்கு அந்தப் பாழும் வீணை யின் நாதம் போலவே கேட்டது. அதே சமயம், ‘உலகமே கானமயம்’ என்று சொல்வது போல ஒரு கிளிக் கூட்டம் ‘கீக்கீ’ என்று கத்தி ஏளனம் செய்து கொண்டு அவனுடைய தலைக்கு நேராக ஆகாயத்தில் பறந்து சென்றது. 

இவ்விதமான இசை உபத்திரவங்களை அவனால் பொறுக்க முடியவில்லை. இதைத் தடுப்பதற்கு வீரசேனன் ஒரு வழி கண்டு பிடித்து விட்டான். எந்தப் புலனால் ஓசைகளைக் கேட்கி றானோ அந்தப் புலனை அவன் அழித்துக் கொண் டால் அவனுக்கு நிம்மதிதானே! இந்த உபாயத் தினால் அவன் மனம் சாந்தி யடைந்தது. நிம்மதி யாகக் காவிரிக் கரையின் ஒரு பாகத்தில் குடிசை யமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தான். காவிரி நகைத்துச் செல்லும் ஒலி அவன் காதுகளில் வந்து இப்பொழுது உபத்திரவப்படுத்துவதில்லை. 

வீரசேனனுடைய குடிசைக்குச் சிறிது தூரத்திலிருந்த இரண்டு குடிசைகளில் கலாவதி யும் சேகரனும் துறவிகளாக வாழ்ந்து வந்தார். கள். ஒரு நாள் மாலையில், கலாவதி வீணை வாசித்துக் கொண்டிருந்த சேகரைப் பார்த்து “ஸ்வாமி, கூழாங் கற்களின் மீது உல்லாச நடனம் புரிந்து செல்லும் இந்தக் காவிரி நீரும், அதோ மரங்களில் ஜோடி ஜோடியாக அமர்ந் திருக்கும் பக்ஷி ஜாலங்களும், மலரின் அருகே ரீங்காரம் செய்யும் வண்டுகளும் ஏன் தாங்கள் வாசிக்கும் வீணாகானத்தை எதிரொலிக்கின்றன?” என்று கேட்டாள். 

“அம்மா, இயற்கை யன்னையின் அம்சங்க ளான இவையாவும் அந்த அன்னையின் ஜங்கார ஸ்ருதியையே பலவிதமாக ஒலித்து நிற்கின்றன. நம்மிடமிருந்து அவை கற்கவில்லை!” என்றான் சேகரன். 

சிறிது நேரம் சென்ற பின் கலாவதி வீணையை ஏந்திக் கலா தேவதையைப் போல சேகரனின் எதிரே அமர்ந்திருந்தாள். அவள் வீணை வாசித்து முடிந்தவுடன் “அம்மா, இயற் கையிலுள்ள இன்னிசைகளெல்லாம் ஒன்று சேர்ந்து வீணையின் வடிவமாகத் தங்கள் கரங் களில் வீற்றிருக்கிறது. இந்த கானத்தை அனுப விக்க முடியாத மனிதன் துரதிர்ஷ்டசாலிதான்” என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தான் சேகரன். 

சேகரனுடைய வார்த்தைகள் ஒன்றும் சற்றுத் தூரத்திலிருந்த வீரசேன்னுடைய காதில் விழவில்லை. 

– ஆனந்த விகடன், மணிக்கொடி, வசந்தம், யுவன், சக்தி ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன.

– சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.

சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம்  தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.   நன்றியுரை  "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *