சொல்லுக்கு மதிப்பு
கதையாசிரியர்: வ.ராமசாமி
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 6,210
(1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சங்கீதத்திலே உயர்ந்தது வாய்ப்பாட்டு. வாய்ப்பாடு அல்ல. பையன்களுக்கு வாய்ப்பாடு தலைகீழாய்த் தெரியும். சங்கீதத்தில் ரொம்ப மட்டம் ஹார்மோனியப் பாட்டு. சங்கீதத்தைப் போலவே, சொல்லிலுமுண்டு. எழுதினாலும், அச்சுக் கோர்த்தாலும் சொற்கள், நோயாளியைப்போலப் படுக்கையில் கிடக்கும். பேசினால், வார்த்தைகள் செலாவணி நாணயங்களைப் போல உயிரும் மதிப்பும் பெற்று ஓடிக் கொண்டே யிருக்கும்.

கன்னாப் பின்னா மன்னர் கோயில் என்று பேசினாலும், சொல்லுகிறவனைப் பொறுத்து, அவன் சொல்லும் சொற்களுக்குச் சக்தியும் அழகும் இருக்கும். சொல்லுக்குத் தனியான சக்தியும் அர்த் தமும் இருந்தாலும், சொல்லுகிறவனுடைய மனோ பாவத்தைப் பொறுத்து, அதற்கு விபரீத அர்த்தீம் உண்டாகலாம்.
கூச்சமுள்ள ஒருவனை, ஏதாவது வேண்டுமா என்று கேட் டால், அவன் வேண்டாம் என்று உடனே சொல்லிவிடுகிறான். இங்கே, அவன் சொல்லுவதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? “எனக்கு அது வேண்டும். ஆனால் என்னை, வேண்டுமா என்று கேட்பது தவறு!’ என்று அர்த்தம். இந்த சந்தர்ப்பத்தில் வேண்டாம் என்பதற்கு வேண்டும் என்று அர்த்தம். பேசினால் சொல்லுக்கு விபரீத நயம் ஏற்படுகிறது, ஒரு ஆச்சரியம்.
பேசுகிறபொழுது, வேறொரு அதிசயத்தைக் காணலாம். சிலர் வளைத்து வளைத்துப் பேசுவார்கள். நான் அங்கே போனேன் என்று சொல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். தாம் அங்கே போனது சரியா, தவறா என்பது முதல் எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து, பதப்படுத்தி, கடைசியில் போனாரோ, இல்லையோ என்று தொனிக்கும்படியாகப் பேசுவார்கள்.
இதிலே என்ன நயம் தெரியுமா? மனதை வெளியே விட்டு விட்டு மறைக்கிற நயம். இவ்விடத்தில் முக்கால் பங்கு வார்த்தை களுக்கு அர்த்தம் கிடையாது. அவைகள் யாவும் பிறருடைய மனதை ஆழங்காண உபயோகப் படுத்தப் பட்டவையாகும். வெறும் சத்தத்துக்குப் பதிலாக வார்த்தைகள், அவ்வளவுதான்.
உள்ளத்திலே தோன்றிய உண்மையையோ அழகையோ, உணர்ச்சி உருவமாகப் பார்க்கிற ஒருவனுக்குச் சில சமயங்களில் வார்த்தைகள் தட்டிப் போகும். ஒரு காரியம் நியாயம் என்று உணர்ச்சியின் மூலமாய் ஒருவனுக்கு நன்றாய்த் தெரியலாம். ஆனால் அந்த நியாயத்தை வார்த்தைகளின் மூலமாய்ச் சொல்லத் தெரிவதில்லை, சொல்ல முடிவதுமில்லை. இது ஒரு நிலைமை.
சிலருக்கு வார்த்தைகள் அடுக்கு அடுக்காய்த் தெரியும். ஆனால் பிரயோக சந்தர்ப்பங்கள் ஏற்படுவதில்லை; அல்லது தெரிவ தில்லை. இந்தக் கோஷ்டியாருக்கு மனோலோக சஞ்சாரம் மிகுதி யும் இருப்பதில்லை. வார்த்தைகள் தெளிவாயிருந்த போதிலும், சந்தர்ப்பத் தவறு அல்லது சந்தர்ப்பக் குறைவினால் இவர்களுடைய சொற்கள் அடிவலுவற்று மாய்கின்றன.
சிலர் வர்ணனை ஆசையால் சொற்களைத் தூவிச் சிதற அடிக்கிறார்கள். நாலா பக்கங்களிலும் அடிபட்டு விழும் சொற்கள் வீரிட்டு அலறி அழுகின்றன. அவைகளுடைய அழுகைக் குரல் காதில் கேட்கிறதே யல்லாமல், அவைகள் வர்ணிக்க வந்த அழகு கண்ணில் புலப்படுவதில்லை. இந்தச் சொற்கள் தவிக்கும் தவிப்பைக், கண்கொண்டு பார்க்க முடியாது.
சிலர் கையில் அகப்பட்டுக் கொண்டு பல சொற்கள் ஆயுள் முடமாகி விடுகின்றன. இவைகளுக்குக் கொச்சை என்று பெயர். இதழ்தொகுப்பு சொற்களின் உருப் பிரியாமல் இருக்க வேண்டுமென்பது இவர்க ளுடைய தீர்மானமோ என்னவோ! சீனிவாஸன் என்ற சொல்லை, லேசாக இவர்கள் சீமாச்சு ஆக்கி விடுகிறார்கள். சொற்களுக்கு ஆஸ்பத்திரி இருக்குமாகில், இந்த முடத்தைத் திருத்திவிடலாம். ஆஸ்பத்திரி இல்லையே!
சிறிய பூச்சியை அடிக்கச், சிலர் பெரிய தடிகள் கொண்டு வருவார்கள். பூச்சி ஓடிப் போகப்படாதே! அந்தக் கஷ்டமல்லவா இருக்கிறது? மற்றும் பலர் படாடோப ஆடைகளில் எப்பொழுதும் ஆசை வைக்கிறார்கள். இன்னும் சிலர், பிறருடைய சரிகை வேஷ்டிகளைப் போட்டுக் கொண்டு, பிரம்மானந்தம் அடை வார்கள். இவைகளைப் போலவே, சிலர் சிறிய குச்சியைப் பெரிய தடி என்று சொல்லுவார்கள். குச்சி குச்சியாகத்தான் இருக்க விரும்பும். பெரிய தடியாகப் போக ஒரு நாளும் விரும்பாது. பெருக்கிச் சொல்லும் மனிதர்களிடம் சொற்கள் இந்தக் கஷ்டத்தை அனுபவிக்கின்றன.
வார்த்தைகள் மனிதர்களிடம் அகப்பட்டுக் கொண்டு படும் கஷ்டத்தைச் சொல்லி முடியாது. அவைகள் என்னிடமும் அகப் பட்டுக் கொண்டு, இப்பொழுது விழிக்கவில்லையா?
– 1934, மணிக்கொடி இதழ் தொகுப்பு.
![]() |
வாழ்க்கை வரலாறு பிறப்பு தமிழ் உரைநடை உலகில் தனிச் சிறப்பு உடையவர் வ.ரா. என்று அழைக்கப்படும் வ.ராமசாமி ஐயங்கார் ஆவார். பாரதியாராலே உரைநடைக்கு வ.ரா.' என்று பாராட்டுப் பெற்றவர் அவர். தஞ்சை மாவட்டத்தில் திருப்பழனத்திற்கு அருகில் திங்களூர் என்னும் சிற்றூரில் 1889 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் பதினேழாம் நாள் அவர் பிறந்தார். அவருடைய தந்தையார் வரதராஜ ஐயங்கார்; தாயார் பொன்னம்மாள். அவரோடு உடன் பிறந்தோர் எழுவர்; வ.ரா. மூத்த…மேலும் படிக்க... |
