சுலட்சணா காதலிக்கிறாள்
கதையாசிரியர்: நா.பார்த்தசாரதி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: March 3, 2026
பார்வையிட்டோர்: 534
(1986ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7
இப்படித் துணைவேந்தரைத் தைரியமாக எச்சரித்து விட்டு அவருடைய அறையிலிருந்து வெளியேறித் தன் விடுதிக்குத் திரும்பினாள். அவள் திரும்பியபோது மாணவர்களின் விடுதி மெஸ் பையன் ஒருவன் ஒரு கடிதத்தோடு அவளுக்காக முகப்பிலேயே காத்திருந்தான். கனகராஜ்தான் கடிதத்தை எழுதியிருந்தான். கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. கூடவே ஒரு செக் ஆயிரம் ரூபாய்க்கு எழுதி இணைக்கப் பட்டிருந்தது.
“சுலட்சணா! என்னை மன்னித்துவிடு. சிறு வயதிலிருந்தே அரிவாள், முரடர்கள், இரத்தம் என்றால் பயந்து நடுங்குகிற சுபாவம் எனக்கு. கலகம் என்றால் காததூரம் ஓடிவிடுவேன். அன்று பஜாரில் உன்னோடு இறுதிவரை துணை நின்று உதவாமல் ஓடி வந்து விட்டதற்காகத் தவறாக நினைக்காதே. வீராசாமியின் ஆஸ்பத்திரிச் செலவுகள் போன்றவற்றுக்கு உபயோகமாக இருக்குமென்று இதனோடு ஓர் ஆயிரம் ரூபாய்க்குச் ‘செக்’ இணைத்திருக்கிறேன்! உன் கோபம் ஆறுவதற்கு முன் உன்னை நேரில் வந்து சந்திக்கப் பயமாயிருக்கிறது. இரண்டு நாளில் பார்க்கிறேன்” என்று கடிதம் சொல்லியது. கடிதத்தைப் படித்ததும் தரையில் காறித் துப்பினாள் அவள்.
இதைப்படித்ததும் அவளுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. அதே கடிதத்தின் பின்பக்கத்தில், “உங்கள் அநுதாபம் எனக்கோ வீராசாமிக்கோ தேவையில்லை. அநுதாபம், செக் எல்லாவற்றையும் திருப்பி அனுப்பியுள்ளேன். அதோடு உங்களுக்குத் தினசரி பூசிக்குளிக்கவும் அணிந்து கொள்ளவும் உபயோகமாக இருக்குமென்று இரண்டு மஞ்சள் கிழங்குகளும் அரைடஜன் கண்ணாடி வளையல்களும் அனுப்பியுள்ளேன். பெற்றுக் கொள்ளவும்” என்று எழுதி அறைக்குப்போய் இரண்டு மஞ்சள் கிழங்கும் பெட்டியில் சொந்த உபயோகத்துக்காக வாங்கி வைத்திருத்த புது வளையல்களில் ஆறையும் ஒரு பழைய அட்டைப்பெட்டியில் அடுக்கி அழகாக கிஃப்ட் பொட்டலம் போலக் கட்டி அந்தப் பையனிடம் கொடுத்து அனுப்பினாள் சுலட்சணா.
‘இவனைப்போன்றவர்கள் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருக்கலாம். யூனிவர்ஸிட்டி ரேங்க் வாங்கலாம். மன்மதனைப் போல் அழகாயிருக்கலாம். அழகான ‘எஸ்கேப்பிஸ்ட்’டுகளை விடக் குரூரமாகத் தோன்றும் தைரியவான்கள் எவ்வளவோ மேல். வீராசாமி அழகனில்லை. பணக்காரனில்லை. மாநிலத்திலேயே பின் தங்கிய பகுதியில், பின்தங்கிய வகுப்பில், வறண்ட பிரதேசத்தில் பிறந்தவன் பிரைட்டான மாணவன்கூட இல்லை. மந்தமான சராசரி மாணவன். ஆனால் ஆண்மையாளன், தவறு செய்கிறவன் எத்தனை வலிமையானவனாக இருந்தாலும் அவனை எதிர்த்துக் கையை ஓங்கி முஷ்டியை மடக்கிக்கொண்டு எழுகிறவன். நாளைய இந்தியாவுக்கு இப்படிப்பட்ட ஆண்மையாளர்கள்தான் தேவை. ஆணின் தோற்றம் மட்டுமே ஆண்மையாகிவிடாது. ஆணின் இதய முள்ளவன்தான் ஆண்மையாளன். ‘ரிஸ்க்’ எடுத்துக் கொள்ளத் துணியாதவன் எப்படிப்பட்ட கொம்பனாயிருந்தாலும் இரண்டாம்பட்சமானவனே. அதுவும் பிறருடைய நலனைக் கருதி ரிஸ்க் எடுத்துக் கொள்கிறவனே ஆண் பிள்ளை’ என்று எண்ணினாள் சுலட்சணா
வீராசாமியின் வெட்டுண்டு வீழ்ந்த வலது கையில் ஐம்பது பைசா விலை கூடப் பெறாத ஓரு செப்பு மோதிரம் இருந்தது. அதில் சின்னஞ்சிறு பாரதியாரின் உருவத்தைச் செதுக்கியிருந்தார்கள். ஆஸ்பத்திரியில் வெட்டுண்ட பகுதிகளை இணைக்க முடியாதென்று முடிவானதும் அந்த ஆபரேஷன் தியேட்டரின் நர்ஸ் ஒருத்தி அந்த மோதிரத்தை மட்டும் கழற்றி உடனிருந்த சுலட்சணாவிடம் கொடுத்தாள். சொன்னாள்:
‘நினைவு வந்து தேறி எழுந்தும் இந்த மோதிரத்தை அவரிடம் சேர்த்து விடுங்கள்’.
”கொடுப்பது சரி. ஆனால் இனிமேல் அவர் இதை எங்கே அணிவது சிஸ்டர்?” – கண்ணீர் மல்க கேட்டாள் சுலட்ச்சணா நர்ஸுக்கும் கண் கலங்கி விட்டது. போலீஸார் கைது செய்திருக்கும் பேட்டை ரவுடியை அவர்களும் சட்டமும் தண்டிக்கலாம். சில ஆண்டுகளுக்கு சிறையில் வைக்கலாம். ஆனால் அதனால் எல்லாம் வீராசாமிக்குப் போன கை வந்துவிடப் போவதில்லை.
மூன்றுநாள் கழித்து முதுகுளத்தூரிலிருந்து அவனது பெற்றோர் வந்து கதறிய கதறலைப் பார்த்தபோது சுலட்சணா இரத்தக் கண்ணீர் வடித்தாள். ‘இவன் படித்து வந்து ஆளாகிக் குடும்பத்தைக் கரையேற்றப்போகிறான்’- என்று கனவு கண்டுகொண்டிருந்த இந்த ஏழைகளின் கதி இனி என்ன? கையில்லாதவன் படித்த பின்என்ன செய்ய முடியும்? – என்று எண்ணிப்பார்த்தபோது துயரம் நெஞ்சைக் கப்பியது சுலட்சணாவுக்கு.
அந்த ரவுடியோடு சண்டை போடப்போன் தனக்கு ஆதரவாகப் பரிந்துகொண்டு வரப்போய்த்தானே வீராசாமிக்கு இந்தக் கதி நேர்ந்தது? என்றெண்ணி எண்ணி வேதனையில் தவித்தாள் அவள். மாணவர்களுடைய ஒற்றுமைக்குப் பயந்து பல்கலைக்கழக நிர்வாகம் வீராசாமி யைத் தொடர்ந்து உடல் ஊனமுற்ற மாணவனாகக் கல்வி பயில அனுமதிக்கும்படி நேர்ந்தது.
அங்கே துணைவேந்தர் இப்படி விஷயங்களில் கருணை காட்டி வழக்கமே இல்லை. டீனாக இருக்கும் ‘கையாடல்’ வல்லான் பிள்ளையும் பெரிய குடும்பத்துப் பிள்ளைகள் பணக்கார மாணவர்களை விரும்பியே காலந்தள்ளியவர். விவசாயப் பட்டப்படிப்பில் தியரி தவிர வயலில் இறங்கி வேலை செய்யும் பிராக்டிகல் ஒர்க், ஃபீல்டு ஒர்க் எல்லாம் நிறைய இருப்பதால் ஆஸ்பத்திரிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வந்ததும் வீராசாமிக்கு டி.சி. கொடுத்து அனுப்பிவிடுவது என்று முடிவு செய்து வைத்திருந்தார்கள்.
‘இன்னும் ஒரே ஒரு வருஷப்படிப்புத்தான் மிச்ச மிருந்தது. நடுவே இப்படி ஒரு விபத்து நேர்ந்ததற்காக அவன் படிப்பைத் தொடர விடாமல் செய்வது மனிதாபி மானம் ஆகாது! விதி விலக்கு அளிக்க வேண்டும்’- என்று மாணவர் கவுன்ஸில், உடல் ஊனமுற்றோர் சங்கம் எல்லாம் வற்புறுத்தியதன் காரணமாக வி.சி.வழிக்கு வந்தார்.
வீராசாமி அதே பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்ந்தான். ஒரு மாதத்திற்குப் பின் ஒருநாள் தற்செயலாக ஒரு மாலை வேளையில் பல்கலைக் கழகப் பூங்காவில் அவனைச் சந்திக்க நேர்ந்தபோது பலவிஷயங்களைப் பேசிக் கொண்டிருந்து விட்டு முடிவில் விடைபெறும்போது, “பை தி வே… உங்க மோதிரம் ஒண்ணு எங்கிட்ட இருக்கு வீராசாமி! ஆஸ்பத்திரியிலே நீங்க அனெஸ்தீஸியாவிலே இருந்தப்போ நர்ஸ் கொடுத்தாங்க” – என்று சுலட்சணா அந்தச் செம்பு மோதிரத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அவன் அதை வாங்கிக் கொள்ளவில்லை. அவனுக்குக் கண்கள் கலங்கின.
“இடது கையிலே மோதிரம் போடப்படாதுன்னு எங்கப்பா சொல்வாரு…”
“…… போட்டுக்காட்டி என்ன? சும்மா ஒரு ஞாபகமா வச்சுக்குங்களேன்.”
“இந்த மோதிரமே ஒரு ஞாபகம்தான்! எட்டயாபுரம் பாரதி நூற்றாண்டு விழாப் பேச்சுப் போட்டிக்குப் போனப்ப அங்கே வாங்கினது இது! எனக்குப் பாரதியார் மேலே கொள்ளைப் பிரியம்.”
“எனக்கும் கூடத்தான்…”
“அப்போ நான் ஒண்ணு சொன்னாத் தப்பா நெனைச்சுக்காம ஏத்துப்பீங்களா மிஸ் சுலட்சணா?”
“என்ன?… சொல்லுங்க வீராசாமி!’
“எனக்குத் தான் வலது கையே போயிடிச்சு. மோதிரம் போட விரலே இல்லே. நீங்க இதை என் அன்பளிப்பா உங்க வலது கையிலே போட்டுக்குங்க…”
– அவள் ஏதோ சொல்ல வாயைத் திறந்து – அப்புறம் இரண்டாவது எண்ணமாக அதைச் சொல்லவேண்டா மென்று எண்ணினாற்போல உதட்டைக் கடித்துக்கொண்டாள். அவன் கெஞ்சினான்.
“ப்ளீஸ்! மாட்டேன்னுடாதீங்க. இது என் அன்பு வேண்டுகோள்.”
”ரொம்ப நாளைக்கு முன்னே இதே பூங்காவிலே இதே இடத்திலே இதுமாதிரி ஒரு நண்பன் ப்ரஸண்ட் பண்ணின வைரமோதிரத்தையே ஏலத்துக்கு விட்டு உடல் ஊனமுற்றோர் நிதிக்குப் பணம் கொடுத்து உதவினேன்.”
“இருக்கலாம்! ஆனால் இந்த அன்பளிப்பே உங்களுக்கு உடல் ஊனமுற்ற ஓர் இளைஞனிடமிருந்துதான் வருகிறது மிஸ் சுலட்சணா!”
“ஐயாம் சாரி! உங்க மனசைப் புண்படுத்திட்டேன் போல இருக்கு…”
“நோ… நெவர்.நீங்க இதை ஏத்துக்கணும், எனக்காக…”
”சரி…”
அவள் மெனமாக அந்தச் செம்பு மோதிரத்தை தன் வலது கை விரலில் அணிந்து கொண்டாள். அது மோதிர விரலில் சேர்ந்தது.
“இதை நீங்க ஏலத்துக்கு விடமுடியாது… போகாது…”
“போனாலும் விடமாட்டேன்!”
“நன்றி… சுலட்சணா”
“நன்றி எல்லாம் நமக்குள் சொல்லிக்கொள்ளக் கூடாது.”
“ஏன்?…நாம் ஒருவருக்கொருவர் விசுவாசமற்றவர்களா என்ன?”
“சில சமயங்களில் சில வார்த்தைகள் அந்நியமானவர்கள் ஒருவருக்கொருவர் உபசாரமாகச் சொல்லிக் கொள்ள மட்டுமே ஏற்பட்டுப் பயன்படுகின்றன. அவற்றை அந்நிய மற்றவர்களும் பயன்படுத்தக் கூடாது”
“வெட்டினதுதான் வெட்டினான். இடது கையில் பட்டிருக்கலாம். பாவி … வலது கையில் வெட்டி என் வாழ்வை நாசமாக்கி விட்டான்.”
“நீங்கள் பாய்ந்து அவனைத் தடுத்தபோது வலது கையால் அந்த ரவுடியைத் தடுத்ததால் வந்த வினை இது. மனிதர்கள் நாகரிகம் அடைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இன்னும் மரம் வெட்டுகிற அரிவாளால் மனிதர்களை வெட்டு வதையும், கல்லால் அடிப்பதையும், துச்சாதனன் சபையில் செய்ததைச் சந்தையிலும் கடை த்தெருவிலும் பெண் ளுக்குச் செய்வதையும் யாரும் குறைத்துக் கொள்ளவில்லை. சமாதானம், சகவாழ்வு, மனி தனுக்கு மனிதன் விட்டுக் கொடுப்பது எல்லாவற்றையும் பற்றிப் பேசிக் கொண்டே பிலிஸ்டைன்களாக காட்டுமிராண்டிகளாக வாழ்கிறோம் நாம்.”
“சற்றுமுன் இந்த மோதிரத்தை என் கையால் உங்களிடம் எடுத்துக் கொடுக்க முடியாத போது தான் எனக்கு வலது கை போய்விட்டது என்பதே நினைவு வந்தது சுலட்சணா!”
”எனக்காகத்தான் வலது கையை இழந்தீர்கள் என்பதால் நானே உங்களது வலது கையாக விளங்குவேன். கவலை வேண்டாம்.’- என்று தோல் சூம்பிப்போய் மூளியா யிருந்த அவனது வலது கையைக் குனிந்து கண்களில் ஒற்றிக் கொண்டாள் சுலட்சணா வீராசாமி முழுக்கைச் சட்டை அணிந்திருந்ததால் வலது பக்கக் கைப்பகுதியை மறைத்துக் கொண்டு சட்டையின் கீழ்ப்பகுதி தனியே தொங்கியது.
சுலட்சணா தனக்குள் நினைத்தாள். ‘புற அழகு என்று வந்து விட்டால் இவனுக்கும் கனகராஜுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள். அவன் நல்ல ரோஜாப்பூ நிறம். இவன் கருப்பு. அவன் சிரித்த முகமாயிருப்பான். இவன் முகத்தில் ஒருவிதமான கடுமை இருக்கிறது. படிப்பில் அவன் புலி. இவன் படிக்கிற படிப்பே வேறு. அக்ரிகல்ச்சர் மாணவனின் படிப்பில் பொருளாதார மாணவனின் திறன்களையோ, நுணுக்கங்களையோ எதிர்பார்க்க முடியாது.’
ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் வீராசாமியின் ஒரு ப்ளஸ் பாயிண்டும் கனகராஜின் மைனஸ் பாயிண்டும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்து பளீரென்று கண்களை உறுத்தின.
வீராசாமி ரோஷ உணர்ச்சி நிறைந்த ஆண்பிள்ளை கனகராஜ் ரோஷ உணர்ச்சி கூட மழுங்கிப்போகிற அளவு எல்லையற்ற நாகரிக மெருகு ஏறித்தேய்ந்திருந்தான். பிரச்னைகளைக்கண்டு எதிர் கொள்வதற்குப் பதில் பயந்து விலகி ஓடினான். பஜாரில் கலகம் மூண்டதும் அந்த இடத்தில் நிற்பதற்கே பயந்து ஓடிவிட்டவனுக்கும் – பாதை யோடு போய்விடாமல் தேடிவந்து பிரச்னையில் சிக்கிக் கொண்டு இரண்டு பெண்களுக்கு மரியாதை அளித்தவனுக்கும் என்ன வித்தியாசமோ அந்த வித்தியாசம்தான் அவர்களிடையேயும் இருந்தது. வீராசாமி முகம் மலராமல் சிரிக்காமல், மெளனமாக அவளை வென்று முடித்திருந்தான்.
அத்தியாயம் – 8
பூசிக்கொள்ள மஞ்சளும் அணிந்துகொள்ள வளையல்களும் அனுப்பித் தன்னைக் கேவலப்படுத்திய நாளில் இருந்து கனகராஜ் அவளைச் சந்திக்க முயலவில்லை. விரக்தியும், வேதனையும் அவனை வாட்டின. ஆள் அரை ஆளாக வாட்டம் அடைந்திருந்தான். முகம் பேயறைந்த மாதிரிப் போயிருந்தது. சுலட்சணாவோ வீராசாமியை உற்சாகமாக வைத்துக் கொள்ளக் கருதி மாலை வேளைகளில் அவனோடு உலாவச் செல்வது, அவனைத் திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வது, அவனோடு கடைத் தெருவுக்குப் போவது என்று முனைந்திருந்தாள். இந்த மாறுதலை அனைவருமே பார்த்தார்கள். புரிந்து கொண்டார்கள்.
கனகராஜைத் தவிர வேறு இரண்டு மூன்று சேலத்து மாணவர்களும் அங்கே உதயா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்கள்.
எல்லாருமே அவ்வப்போது விடுமுறைகளுக்குச் சேர்ந்து ஊருக்குப் போவது, திரும்புவது என்ற முறையில் பழகியிருந்தார்கள். அவர்களில் சுகவனம் என்று ஒரு மருத்துவ மேல்படிப்பான எம்.டி. படிக்கும் மாணவன் கனகராஜுக்குத் தூரத்து உறவினனும்கூட அவன் அடிக்கடி கனகாரஜைச் சந்திக்க வருவது உண்டு.
கனகராஜ், சுகவனம் இருவருமே பல்கலைக்கழக டீன் டல்பிள்ளைக்கு உறவினர்கள். டல்பிள்ளைக்கும் சொந்த ஊர் சேலம்தான். டல்பிள்ளையைக் கலந்து பேசித்தான் – கனகராஜின் தந்தை அவனை இந்த ரெசிடென்ஷியல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்திருந்தார். அவ்வப்போது இவர்களைத் தம் அறைக்கோ, காம்பஸுக்குள்ளேயே இருந்த தமது வீட்டுக்கோ அழைத்துப் பேசுவார் டல்பிள்ளை. டீனுக்கும், துணைவேந்தருக்கும் பயந்துதான் கனகராஜ் பல்கலைக்கழக எல்லையில் எதிலுமே கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றான். இயற்கையாகவே அவன் சுபாவமும் பயந்து கூசி ஒதுங்குவதாகவே இருந்தது. தொட்டாற்சுருங்கியாகவே வளர்ந்திருந்தான் அவன்.
சுலட்சணாவுக்கும் கனகராஜுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்ட பின் ஒரு மாலை வேளையில் மருத்துவ மாணவர் விடுதியிலிருந்து சுகவனம் கனகராஜைப் பார்க்கத் தேடி வந்தான். கனகராஜ் இருந்த நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். இருவருமாகப் பூங்காவுக்குப் புறப்பட்டனர். சுகவனம் பூங்கா என்று ஆரம்பித்ததுமே, “அங்கே வேண்டாம். வேறு எங்கேயாவது போகலாமே” – என்று தட்டிக் கழிக்கப் பார்த்தான் அவன். சுகவனம் அவனை விடவில்லை
“சும்மா வாப்பா! போகலாம். ரூமிலேயே அடைந்து கிடந்தால் இப்படித்தான் போரடிக்கும். வெளியே இருந்து மற்றவர்கள் தேடி வந்து இங்கே உட்கார விரும்புகிற அளவு பிரமாதமான பொடானிகல் கார்டன்ஸை வைத்துக்கொண்டு நாம் ஏன் வெளியே போகவேண்டும் என்கிறாய்? இங்கேயே உட்கார்ந்து பேசலாம் வா” – என்று வற்புறுத்தி அவனைப் பல்கலைக்கழகப் பூங்காவுக்கு அழைத்து வந்து விட்டான்.
அங்கே பூங்காவுக்குள் நுழைந்த பிறகும் கனகராஜ் யாருக்கோ கூசி ஒதுங்கி ஒளிகிறாற் போல் ‘அந்த மூலையில் உட்காரலாம். இந்த மூலைதான் மறைவாக இருக்கும்’ – என்று ஒதுங்கலான இடங்களாகத் தேடியது சுகவனத்துக்கு வியப்பை அளித்தது.
‘சரி! அவன் போக்கிலேயே விட்டுப் பிடித்து விஷயத்தை வரவழைக்கலாம்’ – என்று ஒரு சவுக்குப் பச்சை வேலியை ஒட்டினாற்போல மறைவில் உட்கார்ந்திருந்தார்கள்.
அந்த வேலியின் மறுபுறமும் யாரோ இருவர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது சுகவனத்துக்குத் தெரிந்தது. யாரென்று தலையை நீட்டி எட்டிப் பார்ப்பது அநாகரிமாக இருக்கும் என்று விட்டு விட்டான். பித்துப் பிடித்ததுபோல் விரக்தியாகத் தென்பட்ட கனகராஜிடம் சுகவனம்தான் முதலில் பேச்சைத் தொடங்கினான்!
“ஏண்டா என்னமோ மாதிரி ஆயிட்டே? உடம்பு சரியில்லாம இருந்தியா? ஒருவாரத்துக்கு முன்னாடி பார்க்கறப்பக் கூட நல்லா இருந்தியே?”
“என்னமோ டல்லடிக்குது! மெடிகல் லீவு அப்ளை பண்ணி எழுதிக் குடுத்திட்டுப் பேசாம ஊருக்குப் போயிடலாமான்னு பார்க்கிறேன்.”
“படிப்பு என்ன ஆறது? உங்கப்பா கனவு கண்டு கிட்டிருக்கிற யூனிவர்சிடி ஃபர்ஸ்ட் ரேங்க் என்ன ஆகிறது?”
“இப்போ ஒண்ணுலியுமே இண்ட்டரஸ்ட் இல்லேப்பா…”
“ஏன், என்ன ஆச்சு? வாட் இஸ் ராங் வித் யூ கனகராஜ்?”
“மனசு சரியில்லே. எதிலியுமே நாட்டம் போகலே. இப்பிடியே இருந்தா ஒரு நா அறையிலேயே ‘சூயிஸைட்’ பண்ணிக் கிட்டுக் கிடந்தாலும் கிடப்பேன்…”
“…..”
இதைக் கேட்டு ஒரு நிமிஷம் தயங்கி யோசித்தபின் சிக்கலின் ஏதோ ஒரு நுனி தனக்குள் அகப்பட்டு விட்டவனைப் போலச் சுகவனம் மெல்ல வினவினான்.
“நீயும் சுலட்சணாவும் இப்பல்லாம் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறதே இல்லையா கனகராஜ்?”
“இல்லை! அவளுக்கு என்னைப் பிடிக்காமப் போச்சோ என்னமோ…?”
“இஃப் ஐ யாம் நாட் இன்க்யுஸிட்டிவ்…ஏ ஸ்டெரெயிட் க்வஸ்ச்சின்…”
“என்ன? கேளேன்…”
“சுலட்சுணாவும் நீயும் காதலிக்கிறீங்களா?”
“நான் காதலிக்கிறேன். அவள் என்னைக் காதலிக்கிறாளா இல்லையா என்பது சந்தேகமாயிருந்தது. இப்போது தீர்மானமாகத் தெரிந்து போயிற்று-”
“என்னவென்று…?”
“இல்லை என்று தெரிந்துவிட்டது…”
“ஏன்? உங்களுக்குள்ளே ஏதாவது மனஸ்தாபமா? எங்கிட்டச் சொல்லலாம்னாச் சொல்லு! என்னாலே சரிப்படுத்தி ராசி பண்ணி வைக்க முடியுமானாப் பண்றேன். பாவம்! உன்னைப் பார்க்கிறதுக்கே இப்போ பரிதாமா இருக்கு கனகராஜ்!”
“இல்லைடா சுகவனம்! அது ரொம்பக் கஷ்டமான காரியம். அவ ஒரு சீரியஸ் டைப். இலட்சியம், பொதுத் தொண்டு, சமூகசேவை என்று தேடித் தேடி ரிஸ்க் எடுத்துக் கொண்டு அலைகிற ஒருத்தியால் எப்படி இன்னொருத்தரைக் காதலிக்க முடியும்? காதலிக்கப் போதுமான மென்மையான உள்ளமே அவளுக்கு இல்லைங்கிறது என் அபிப்ராயம்…”
“எதிலிருந்து நீ இந்த முடிவுக்கு வந்தாய்? என்ன நடந்தது உங்களுக்குள்?”
அவள் கோபமாகப் பூசிக்கொள்ள மஞ்சளும் புனைந்து கொள்ள வளையல்களும் அனுப்பித் தன்னை அவமானப் படுத்தி விட்டதை இன்னொருத்தரிடம் வெளியிடவே கனகராஜுக்குப் பிடிக்கவில்லை. கூச்சமாகவும் வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது.
வைர மோதிர விஷயத்தை மட்டும் சுகவனத்திடம் விவரித்தான். அந்த மோதித்தை உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு நிகிக்காக ஏலம் விட்டுப் பணம் வசூலித்துக் கொடுத்ததையும் சொன்னான். சோஷல் செர்வீஸ் முகாமுக்கும் வீராசாமி சிகிச்சை நிதிக்கும் தான் பணம் நன்கொடை கொடுத்து அவள் அவற்றை மறுத்துத் திருப்பிக் கொடுத்துவிட்டதையும் சொன்னான்.
இவற்றைக் கேட்டுவிட்டு யோசிப்பது போல் மௌனமாக அமர்ந்திருந்தான் சுகவனம். பின்பு அவனிடம் மெல்லச் சொல்லத் தொடங்கினான்:
“இவ வேற ‘மெட்ட’ல்லே உருவாயிருக்கிறவ. புகழ்ச்சி. அழகு, பணம், இதுனால எல்லாம் சொக்கிப் போய் மயங்கிக் காதலிக்கிற டைப் இல்லே இவ. துணிச்சல், தைரியம், பிறருக்காக உதவ விரைகிற குணம், சமூக உணர்ச்சி, சிவிக் ரேஜ், மைனூட் சிவிக் ஸென்ஸ், டயனமிஸம் சிவிக் ஹானஸ்டி. ஹ்யூமனிஸம், ப்ராக்மேடிஸம், சோஷல் கமிட்மெண்ட், சோஷல் மைண்டெட்னெஸ், சோஷல் கான்ஷியஸ்னெஸ் இதெல்லாம் உள்ள ஒருத்தன்தான் இவளுக்குப் பெரிதாகத் தோன்றுவான். அப்படிப்பட்ட ஒருத்தனைத்தான் அவளால் விரும்ப முடியும். நீயோ ஒரு நிச்சயமான ஃபண்டமெண்டலிஸ்ட்! இவள் உன்னை விரும்ப முடியாது”
“நீ சொல்றதெல்லாம் சைக்காலஜி.”
“ஆமாம்! ஆனால் சுலட்சணாவைப் பொறுத்து இதுதான் நீ தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. நடைமுறையி லிருந்துதான் சைக்காலஜி பிறந்தது. இப்போ நான் சைக்காலஜியிலிருந்து நடைமுறைக்கு வந்து அதைச் சுலட்சணாவோடு ஒப்பிட்டு உனக்கு ரிசல்ட் சொல்லுகிறேன்! அவ்வளவுதான்.”
“எது எப்படியோ? ஓர் ஆட்சேபணையும் சொல்லாமல் அவள் என்னோடு மிகவும் நெருங்கிப் பழகினாள் என்பது மட்டும் உண்மை”
“இது நவீன யுகம்! நம்மிடம் கலகலப்பாகப் பழகுகிற பெண்கள் எல்லாம் நம்மைக் காதலிப்பதாக நாம் நினைப்பது தான் பேதைமை. அது நீடித்த உண்மையில்லை. தற்காலிக மான பிரமைதான்”
உடனே இதற்குக் கனகராஜ் பதில் எதுவும் சொல்ல வில்லை.மௌனமாகத் தலைகுனிந்து புல் தரையைப் பார்த்த படி உட்கார்ந்திருந்தான். ஏறக்குறைய நண்பன் தனக்கு வந்திருக்கும் நோயைச் சரியாக ‘டயகனைஸ்’ செய்து விட்டான் என்பது அவனுக்கே ஓரளவு புரியத்தான் செய்தது ஆனாலும் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத்தான் விருப்பமில்லை. கனகராஜின் தளர்ச்சியும், விரக்தியும் சுகவனத்துக்குப் புரிந்தன. அவன் கனகராஜுக்கு ஆறுதல் கூறித் தேற்றினான்.
“டேக் இ ஈஸி மை பாய்! இவ இல்லாட்டா இன்னொருத்தி -”
“அப்பிடி விட்டுட முடியலேப்பா! இத்தினி நாள் நெருங்கிப் பழகிட்டு இப்பத்திடீர்னு மோசம் பண்ணிட்டா…”
“நான் அப்பிடி நினைக்கலே.இத்தனை நாள் உன்னோட கணிப்புத்தான் தவறானது. இத்தனை நாளும் அவ உன்னைக் காதலிக்கிறதாக நீயே நினைக்கலேன்னு நீ சொன்னாலும் அப்பிடி உள்ளூற நினைச்சுக்கிட்டுத்தான் அவஸ்தைப் பட்டிருக்கிறே!”
இப்படி நண்பன் சொல்வது உண்மையாக இருந்தாலும் அவன் தன்னிடம் மிகவும் நிர்த்தாட்சண்யமாகப் பேசுவது போல் தோன்றியது கனகராஜுக்கு நெடுநேரம் பேசியும் விவாதித்தும் சுகவனத்தினால் கனகராஜை முழுமையாக ஆறுதலடையச் செய்ய முடியவில்லை. அவன் விரக்தி யாகவே இருந்தான்.
நெடுநேரத்திற்குப்பின் கனகராஜும் அவனும் புறப்படலாம் என் எழுந்திருந்தபோது தற்செயலாகச் சவுக்கு வேலியின் மறுபுறம் அமர்ந்திருந்தவர்களும் கூட எழுந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் இவர்கள் இருவருக்கும் ஒரே அதிர்ச்சி.
அது வீராசாமியும், சுலட்சணாவும்தான். சுலட்சணாவும் இவர்களைப் பார்த்து விட்டாள். ‘ஹலோ’ என்று கூடச் சொன்னாள். ஆனால் கனகராஜுக்குத்தான் அவளிடம் பேச வாய் வரவில்லை. அதிர்ச்சியிலிருந்து மீளாமலே இருந்து விட்டான். விவசாயப் பட்டப்படிப்புப் படிக்கும் அழகில்லாத – கறுப்பு நிறமுள்ள இந்தப் பையனிடம் சுலட்சணாவுக்கு அப்படி என்னதான் கவர்ச்சி இருக்க முடியும் என்று குமுறிப் புழுங்கியது கனராஜின் உள்ளம்.
“வலதுகை விரல்கள் போய்க் கையே தெரியாமல் முழுக்கைச் சட்டை மட்டும் தொங்குகிற இந்தக் கருவாயன் மேல் அப்படி என்னதான் கவர்ச்சியோ இவளுக்கு?”
“யூ ஆர் டோட்டலி இன்கரெக்ட் கனகராஜ்! இட் இஸ் நாட் எ க்வஸ்ச்சின் ஆஃப் ப்யூட்டி அட்ராக்ஷன் ஆர் எனி சச் திங்… இட் இஸ் எ மேட்டர் ஆஃப் சிவிக்கரேஜ். ஹி ஹாஸ் ஆம்பிள் ஆஃப் தட் குவாலிட்டி”.
பூங்காவிலிருந்து இவர்கள் வேறு திசையிலும் அவர்கள் வேறு திசையிலுமாகப் பிரிந்து போய் விட்டார்கள். கனகராஜை அவனுடைய விடுதி முகப்புவரை உடன் கொண்டு வந்து விட்டு ஆறுதலாக மேலும் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுத்தான் போனான் சுகவனம். கனகராஜ் தற்கொலை அது இது என்று பேசியிருந்ததால் எதற்கும் டீன் காதில் எச்சரிக்கையாக ஒரு வார்த்தை போட்டு வைக்க வேண்டுமென்று தோன்றியது சுகவனத்துக்கு. ஏனென்றால் சுகவனத்தின் உள்ளத்தில் வேறு பயம் இருந்தது. பைத்தியக்காரத்தனமாகக் கனகராஜ் ஏதாவது செய்து தொலைத்து விடக் கூடாதே என்பதுதான் அது.
டீனை அவர் வீட்டில் சந்தித்து ஜாடை மாடையாகக் கனகராஜ் பற்றித் தெரிவிக்க வேண்டியவற்றைத் தெரிவித்தான். டீனும் கனகராஜின் தந்தையும் நண்பர்கள்; உறவினர்கள் வேறு. டீன் விரும்பினால் கனகராஜின் தந்தையோடு ஃபோனிலேயே பேசி, ‘உங்கள் பையன் ரொம்ப விரக்தியாயிருக்கிறான். அவன் மனநிலை சரியாயிருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ காதல் ஏமாற்றம் அது இது என்று மற்றப் பையன்கள் சொல்லுகிறார்கள். எதற்கும் ஒரு மாறுதலாக இருக்கட்டும். கொஞ்ச நாள் வேணுமானால் அவனை ஊருக்குத் திரும்ப அழைத்து உங்கள் பக்கத்திலேயே தங்க வைத்துக்கொண்டு பாருங்கள்’ என்று டீனே கனகராஜின் தந்தைக்கு அட்வைஸ் செய்ய விரும்பினாலும் செய்து கொள்ளட்டும் என்றுதான் டீன் டாக்டர் (கை) ஆடல் வல்லான் பிள்ளையைப் பார்த்துப் பேசியிருந்தான் சுகவனம். ஆனால் ஆடல் வல்லான் பிள்ளையின் ரியாக்ஷன் முற்றிலும் வேறு விதமாக இருந்தது.
அத்தியாயம் – 9
“இவனுக்கு- என்னப்பா குறை? மன்மதன் மாதிரி இருக்கான்.படிப்பிலேயும் ஃபர்ஸ்ட் ரேங்க். இவனை விட்டு விட்டு யாரோ ஒரு கை நொண்டியாப்போன பயலுக்குப் பின்னாடி அந்தக் கழுதை சுத்தறான்னா அதுக்குப் போய் இவன் ஏன் உருகணும்? அவ குடுத்து வைக்கலே. அவ்வளவு தான்” – என்று சுகவனத்திடம் கூப்பாடு போட்டார் டீன்.
இதில் சுகவனம் அவரோடு இசையவில்லை. வெளிப் படையாகக் கருத்து வேறுபட்டான்.
“நீங்க எல்லோருமே தப்புக் கணக்குப் போடறீங்க சார்! ஒரு பெண்ணை ஆண் கவர்ந்து அவள் மனதில் இடம் பிடிக்கப் படிப்பு, முகவசீகரம், பணம் இதெல்லாமே மட்டும் போதாது சார். பொது இடத்திலே பொது விஷயத்திலே பலர் கொண்டாடும் வீரத்தை அவன் காட்டினால்தான் அவனால் அவள் அதிகம் கவரப்படுகிறாள்.
பேரழகனான இராமனே சீதையின் மனதில் இடம் பிடிக்கப் பலர் மெச்சும்படி ஒரு கனமான வில்லை எல்லார் முன்னிலையிலும் எடுத்து ஒடிக்க வேண்டியிருந்தது. முரட்டுக் காளை ஒன்றைப் பலர் முன்னிலையில் தனியாக ஓர் ஆண் மடக்கிப் பிடிக்கும் ‘ஏறுதழுவுதல்’ போன்ற திருமண நிபந்தனைகள் கூடப் பழையநாளில் இப்படித்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் சார்! தன்னுடைய ‘சிவிக் கரேஜி’னால் தான் ஓர் ஆண் ஒரு பெண்ணின் மனத்தில் இடம் பிடிக்கிறான் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த முதுகுளத்தூர்ப்பையன் அப்படி ஒரு ‘சிவிக் கரேஜ்’ மூலம்தான் சுலட்சணாவைக் கவர்ந்திருக்கிறான். காதலில் அந்தக் கவர்ச்சியைச் சாதாரணமானது என்று நீங்கள் சொல்லிவிட முடியாது சார்”
“ஏதேது இந்த விஷயம்பற்றி என்னிடம் ஓரலாக ஒரு ரிஸர்ச் தீஸிஸே ஸப்மிட் செய்து விடுவாய் போலிருக்கிறதே…?”
சுகவனம் இதைக் கேட்டுச் சிரித்தான். டீன் சேலத்திருக்கும் கனகராஜின் தந்தையோடு எஸ்.டி.டி. போட்டுப் பேசுவதற்காக உள்ளே சென்றார். சுகவனம் அவரிடம் விடை பெற்றுத் தன் அறைக்குத் திரும்பினான்.
சுலட்சணாவைப்போல ஓர் அழகிய பெண்ணை வீராசாமி யோடு சேர்த்துப் பார்ப்பது அவனுக்கும் கூட என்னவோ போல்தான் இருந்தது. ஆனால் அது தவிர்க்க முடியாதது என்றும் கூடவே மனத்திற்குள் உறைத்தது. சற்றுமுன் பல்கலைக்கழகப் பூங்காவில் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்துவிட்ட எதிர்பாராத அதிர்ச்சியின்போதுகூட அவள் சகஜமாக ‘ஹலோ’ என்று கனகராஜைப் பார்த்து முகமலர்ந்து சமாளித்ததையும், கனகராஜ் அவளைப் பார்க்க விருப்பமின்றி முகத்தைத் திருப்பிக்கொண்டு விட்டதையும் சுகவனம் கவனித்திருந்தான்.
கனகராஜின் இந்தக் குணம் சுகவனத்துக்கே எரிச்ச லூட்டியிருந்தது! பொதுவில் தனக்கு உவப்பில்லாத சாதகமாகாத சூழ்நிலை நிலையையை எதிர்கொள்ளவே பயந்து கூசும் குணமுள்ள இவன் எதிர்காலத்தில் எப்படித் தன் தந்தை இன்று நிர்வகித்து வரும் தொழில் நிர்வாகங்களையும் நிறுவனங்களையும் தான் பொறுப்பு ஏற்று நடத்தப் போகிறான்? இந்தத் தொட்டால் சிணுங்கி மனப்பான்மை பொதுவாழ்க்கைக்கே பயன்படாத மைனஸ் பாயிண்ட் ஆயிற்றே? எதிர்பாராததை எதிர்கொள்ள நேர்ந்தாலே பயந்து கலவரப்பட்டு ஒதுங்கி ஓடிவிடும் இந்தச் குணத்தோடு இவன் எப்படி வாழ்வில் வெற்றிபெறப் போகிறான்?
‘பெண்கள் அதுவும் மிக மிக ஸ்மார்ட் ஆன இந்நாளைய இளம் பெண்கள் இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியை, அவன் எவ்வளவுதான் நன்றாகப் படித்தாலும் எத்தனை அழகாயிருந்தாலும் என்னதான் ரேங்க் வாங்கினாலும் எப்படி விரும்புவார்கள்? பெண் விரும்பி ஆசைப்பட்டு வசியமாவதற்கு ஒருவன் நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது. வல்லவனாகவும் இருக்கவேண்டும்.
‘கனகராஜ் நல்லவன். பயந்த சுபாவமுள்ளவன். தான் உண்டு தன் வேலை உண்டு என்று கச்சிதமாக இருப்பவன். ஊர் விவகாரங்களில் எல்லாம் தலையிட்டு வீணில் பெயரைக் கொடுத்துக்கொள்ளாதவன். இவை எல்லாம் பொதுவாகப் பார்த்தால் மிக மிக நல்ல குணங்களாயிருக்கலாம். ஆனால் சமூகப் பிரக்ஞை நிறைந்த சுலட்சணாவைப்போன்ற நவீன காலத்து இளம்பெண் ஒருத்தி ஒருவனை வெறும் ‘அம்மாஞ்சித் தனமான’ வனாக நினைப்பதற்கு இந்தக் குணங்களே போது மானவை’ – என்று யோசிக்கும் வேளையில் சுகவனத்துக்குத் தெளிவாகவே விளங்கியது.
கோழைகள் காதலிக்கவும் முடியாது. காதலிக்கப் படவும் முடியாது. கரையில் தயங்கி நிற்பவர்களை விடப் பயப்படாமல் நீரோட்டத்தில் குதித்து ஆழங்களில் அநாயாசமாக முக்குளித்து எதிர்நீச்சலடித்து மேலெழுபவர்களையே பெண்கள் முகமும் அகமும் மலரப் பார்க்கிறார்கள். நீரில் இறங்கப் பயந்து ஆழங்களில் மூழ்க அஞ்சி ஒதுங்கி நிற்பவர்களை அவர்கள் ஆண்களாகவே பொருட்படுத்துவது இல்லை’
கனகராஜைப் போல உடம்பில் அழுக்குப்படாமல் வாழ விரும்பும் சொகுசு இளைஞன் சுலட்சணாவைக் கவராமல் போனதில் எந்த வியப்புமில்லை. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி நிற்கிற அப்பாவி இளைஞனை எந்தப் பெண்ணும் ஆசைப்படமாட்டாள் தான். சுயமரியாதையுள்ள ஆண்பிள்ளையைத்தான் தன்மானமுள்ள ஒவ்வொரு புதுமைப் பெண்ணும் காதலிக்கிறாள் காதலிப்பாள் காதலிக்கவும் முடியும்.
இன்றைய சமூக வாழ்வின் அடிப்படைத் தேவையான ‘சமுதாயத் துணிச்சல்’ என்கிற ஸிவிக் கரேஜ் இல்லாதவனை ஆண்கள், பெண்கள் யாருமே இலட்சியம் செய்வதில்லை என்று கனகராஜின் நிலையை வைத்துப் புரிந்துகொண்டான் சுகவனம்.
டீன் டெலிஃபோனில் பேசி ஒருவாறு நிலைமையைப் புரிய வைத்தபின் கனகராஜின் தந்தை, “அப்படியானால் நீங்கள் அவனைத் தனியே அனுப்ப வேண்டாம். நானே இங்கிருந்து டிரைவரைக் காரோடு அனுப்பி வைக்கிறேன். லீவு கொடுத்துப் பக்குவமாக எடுத்துச் சொல்லிச் சமாதானப் படுத்தி இங்கு அனுப்பி வைத்து விடுங்கள்” – என்று ஃபோனிலேயே பதில் சொன்னார்.
கேவலம் ஒரு பெண் விஷயம் தன் மகனை இத்தனை தூரம் பாதித்துவிட்டது என்பதை இரண்டாவது தடவை நினைக்கக்கூடக் கஷ்டமாயிருந்தது அவருக்கு. அதற்காகக் கவலையும் வருத்தமும் அடைந்தார் அந்தப் பணக்காரத் தந்தை.
– தொடரும்…
– முள் வேலிகள் (நாவல்), முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1986, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
![]() |
'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க... |
