கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 26, 2026
பார்வையிட்டோர்: 1,681 
 
 

(1986ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் – 1 

பட்ட மேற்படிப்புக்காகத் தனியே ஏற்படுத்தப்பட்டி ருந்த பல்கலைக் கழக நூல் நிலையத்தில்தான் சுலட்சணாவை அவன் முதல் முதலாகச் சந்திக்க நேர்ந்திருந்தது. அந்தப் பல்கலைக் கழகத்தில் இரண்டு தனித்தனி நூலகங்கள் இருந்தன.

எல்லாருக்கும் எல்லாவகையிலும் எப்போதும் பயன் படுகிற பொதுவான பெரிய நூலகம் ஒன்று. மேற்பட்டப் படிப்புப் படிக்கிற மாணவர்களுக்கும் கற்பிக்கிற பேராசிரியர்களுக்கும் மட்டும் பயன்படுகிற ‘போஸ்ட்- கிராஜுவேட்ஸ் லைப்ரரி என்னும் சிறப்பு நூலகம் மற்றொன்று. குளுகுளுவென்று ஒரு சூழ்நிலை நிலவும் அங்கே.

இந்தச் சிறப்பு நூலகம் மரங்களடர்ந்த சோலை போன்ற பகுதியில் ஓர் ஏரிக்கரையிலே அமைந்திருந்தது. எந்நேரமும் ஜிலு ஜிலு என்று காற்று வரும். வெளி உலகின் சத்தங்களும் ஆரவாரச் சந்தடிகளும் கேட்காத இடம் அது. போய் உட்கார்ந்தால் கண்களைச் சொருகிக்கொண்டு தூக்கம் வரும்.

இதனால் மாணவர்கள் இந்த நூல் நிலையத்துக்கு ‘வசந்த மண்டபம்’ என்று செல்லமாகப் பெயர் வைத்திருந்தார்கள். மற்றொரு நூலகம் அரை வட்டவடிவில் மூன்றடுக்கு மாளிகை யாகக் கட்டப்பட்டிருந்தாலும் அங்கே காற்று மருந்துக்கும் கூட வராது. சுற்றி மரம் செடி கொடிகளும் அறவே இல்லை. அதற்குச் ‘சுண்ணாம்புக் காளவாய்’ என்று கடுமையாகப் பெயர் சூட்டப் பட்டிருந்தது.

எதற்கும் விரைந்து மனத்தில் பட்டதை அப்படியே பிரதி பலிக்கும் வகையில் உடனே பெயர் வைத்து அழைத்து விடுவது என்பது மாணவப் பருவத்துக்கே உரிய உற்சாகங் களில் ஒன்று. பேராசிரியர்கள், கட்டிடங்கள், ஹாஸ்டல் உணவுப் பண்டங்கள், சக மாணவ மாணவியர் எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் பகிரங்கமாகவோ இரகசியமாகவோ காரண – இடுகுறிப் பெயர்கள் சூட்டி அப்பெயர்களை வழக்க மாக்கியும், பிரபலப்படுத்தியும் மகிழ்வது அந்த வயதின் உற்சாகங்களிலே தலைசிறந்ததாயிருக்கும்.

உதயா பல்கலைக்கழக மாணவர்களும் அப்படி ஓர் உற்சாகத்தோடுதான் பெயர்கள் சூட்டியிருந்தார்கள். அந்தப் பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமில்லாமல் சம்பந்தப் பட்டவற்றைப் பற்றிய உண்மை அபிப்ராயங்களாகவும் விமர்சனங்களாகவும் சில சமயங்களில் கண்டனங்களாகவும் கூட இருந்தன. எப்படியாயினும் அந்தப் பெயர்களில் அவற்றை வைத்தவர்களின் இரசனை புலப்படும்.

சுலட்சணாவும், கனகராஜும் பொருளாதார மாணவர்கள் சனி, ஞாயிறு விடுமுறைகளில் மாணர்கள் படித்துப் பயனடைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பொருளாதாரப் பேராசிரியர் சில புத்தகங்களின் பெயர்களை மாணவர்களுக்குச் சொல்லுவார். மாணவர்கள் போஸ்ட் கிராஜுவேடஸ் லைப்ரரியில் போய் அவற்றை எடுத்துப் படிக்கவேண்டும்.

திங்கட்கிழமை வகுப்பில் மறுபடி பேராசிரியர் பரீட்சை யைப் போல இல்லாமல் பொதுவாக அந்தப் புத்தகங்களை எல்லாம் மாணவர்கள் தேடிப் படித்தார்களா இல்லையா என்பது பற்றி விசாரித்தறிவார். படித்தவர்களை உற்சாக மூட்டும் வகையில் இண்டோனல் அசெஸ்மெண்ட் மார்க்குகள் உண்டு. புத்தகத்தைப் படித்த மாணவர் வகுப்பில் அதைச் சுருக்கமாக விமர்சிக்க வேண்டும்.

இப்படி ஒரு வெள்ளிக் கிழமை மாலையில் ஒரே புத்தகத் தைத் தேடிக்கொண்டு போனபோதுதான் சுலட்சணாவும், கனகராஜும் சந்தித்துக் கொண்டார்கள்.

பொதுவாகப் போஸ்ட்கிராஜுவேட்ஸ் நூலகத்தில் ஒவ்வொரு புத்தகமும் இரண்டு முதல் நான்கு பிரதிகள் வரை இருக்கும். ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லாருக்கும் ஒரே சமயத்தில் கொடுக்க வேண்டியிருப்பதால் இந்த ஏற்பாடு செய்திருந்தார்கள்.இருந்தும் சமயா சமயங்களில் பலர் ஒரே நேரத்தில் ஒரே புத்தகத்தைத் தேடிக்கொண்டு வர அந்த ஒரே புத்தகத்தின் ஒரு பிரதி மட்டும் அங்கே இருக்க நேர்ந்து அதை யாருக்குத் தருவது என்ற தர்மசங்கடம் லைப்ரேரியனுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அன்றும் சுலட்சணாவும் – கனகராஜும் ஒரே புத்தகத்தைத் தேடிவந்தபோது பல்கலைக்கழக நூலகருக்குத் தர்ம சங்கடமான நிலைமைதான் ஏற்பட்டது. இருக்கிற ஒரு பிரதியை இருவரில் யாருக்குத் தருவது? இருவருமே தங்களுக்கு வேண்டும் என்பதை வற்புறுத்தினார்கள். இருவரில் யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராயில்லை. ‘நான் தான் நீங்கள் சொல்லிய புத்தகத்தை முதலில் படித்தேன்’- என்று பேராசிரியரிடம் போய்ப் பீற்றிக்கொள்ளும் வாய்ப்பை இருவருமே இழக்க விரும்பவில்லை.

“லேடீஸ் ஃபர்ஸ்ட்’-னு மரபே இருக்கு” என்று புன்னகை யோடு மெல்லத் தொடங்கித் தன்னுடைய முன்னுரிமையை நிறுவ முயன்றாள் சுலட்சணா. கனகராஜும் விடவில்லை. “இருக்கலாம்! அதெல்லாம் இந்திய மரபு இல்லை. ஆங்கில மரபு. நம்ம யூனிவர்ஸிடி அமெரிக்காவிலியோ ஐரோப்பாவிலியோ இல்லை. இந்தியாவிலேதான் இருக்கு. இங்கே லைப்ரேரியனோட டெஸ்குக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒரே சமயத்துக்கு வந்தோம்னாலும் லைப்ரரிக்குள்ளே நான் நுழைஞ்சு ரெண்டுமணி நேரத்துக்கு மேலே ஆச்சு. நீங்க ஜஸ்ட் இப்பத்தான் உள்ளே நுழைஞ்சீங்க…”

உடனே லைப்ரேரியன் அவனைக் குறுக்கு விசாரணை செய்தார்:

“நீங்க ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே லைப்ரரியிலே நுழைஞ்சதுக்கு என்ன அத்தாட்சி?”

“லைப்ரரி ரிஜிஸ்டர்லே கையெழுத்துப் போட்டிருக்கேன் சார்.”

லைப்ரேரியன் உடனே எழுந்திருந்து போய் அங்கே உள்ளே நுழைகிற முகப்பில் வைக்கப்பட்டிருந்த ரஜிஸ்தரை நோட்டம் விட்டுவிட்டு அவன் சொல்லியதை உறுதிப்படுத்திக் கொண்டு வந்தார்.

“மிஸ் சுலட்சணா! தயவு செய்து நீங்க என்னை மன்னிக்கணும்! மிஸ்டர் கனகராஜ் கையெழுத்துப் போட்டிருக்கும் ஸீரியல் நம்பர் நாற்பத்திரெண்டு. நீங்க கையெழுத்துப் போட்டிருககிற சீரியல் நம்பர் அறுபத்தி ஏழு. ரிஜிஸ்டர்படி அவர்தான் முன்னாடி லைப்ரரிக்குள் வந்திருக்கார்னு உறுதிப் படுது.”

“அதுக்காக…?”

“இந்த ‘புக்’கை கிளெய்ம் பண்றதிலே மிஸ்டர் கனகராஜுக்கு ப்ரயாரிட்டி இருக்கு”. சுலட்சணா தான் அவனுக்காக விட்டுக்கொடும்படி ஆயிற்று. விட்டுக் கொடுத்தாள். அவனுக்குத்தான் வெற்றி.

புத்தகத்தை அவன் எடுத்துக் கொண்டு போனான். அவள் வெறுங்கையோடு திரும்பினாள். போகிற போக்கில், ‘ஐயாம் வெரி சாரி சுலட்சணா!’ – என்று அவளிடம் நுனி நாக்கால் வருத்தம் தெரிவித்து விட்டுப் போனான் கனகராஜ்.

தன்னைப்போல் ஒரு பெண் – சக மாணவி – கெஞ்சியும் கனகராஜ் விட்டுக்கொடுக்க முன்வராததோடு பெருந்தன்மை யாக நடந்துகொள்ளவும் இல்லை என்று தோன்றியது சுலட்சணாவுக்கு. இந்தச் சிறிய விரோதம் ஒரு மனத்தாங்லாகவே அவளுக்குள் தங்கி உறைந்து போயிற்று. ஒரு பெண்ணிடம் ஆண் காட்ட வேண்டிய இங்கிதத்தை அவன் காட்டத் தவறிவிட்டதாகவே அவள் நினைத்தாள்.

பொருளாதார எம்.ஏ. முதலாண்டு வகுப்பில் டேஸ்காலர்களாகப் பதினெட்டுப் பேர்தான் சேர்ந்திருந்தார்கள். இந்தப் பதினெட்டுப்பேரில் சுலட்சணா உட்படப் பெண்கள் ஏழுபேர். ஆண்கள் பதினொருவர். மாணவர்களில் மிகவும் ‘ஸ்மார்ட்’ என்று பெயரெடுத்தவன் கனகராஜ். பெண்களில் – அதாவது – மாணவிகளில் மிகவும் அழகானவள் என்று மட்டுமில்லாமல் – சூட்டிகையானவள் என்றும் பெயரெடுத்தவள் சுலட்சணாதான்.

எங்கும் எதிலும் தனக்கு ஒரு முகராசி உண்டு என்ற நம்பிக்கையோடு துணிந்து. முயல்கிறவள் அவள். பல சந்தர்ப்பங்களில் பல காரியங்களில் அவள் நினைத்தது நினைத்தபடியே நடந்திருக்கிறது. இன்றும் அப்படி நடந்திருக்கமுடியும். ஆனால் அந்தப் பாழாய்ப்போன லைப்ரேரியன் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ‘ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட்’ என்று எதையோ சொல்லிப் புத்தகத்தைக் கனகராஜிடம் எடுத்துக் கொடுத்து விட்டார். இதில் நூலகர் மேலும் அவளுக்கு வருத்தம்தான். தன்னுடைய வாய்ப்பு நழுவிப் போக முன் நின்று உதவியவர் அவர்தான் என்று நினைத்தாள் அவள்.

அந்தப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறை மிகவும் புகழ்பெற்றது. நாட்டின் பொறுக்குமணிகளான பல பொருளாதார நிபுணர்கள் மாணவப் பருவத்தில் அங்கு உருவானவர்கள்தான். முதல்பட்டத்தில் – அதாவது ஃபர்ஸ்ட் டிகிரியில் பொருளாதாரத்தில் கணிசமான மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளைத்தான் போஸ்ட் கிராஜுவேட் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள்.

மாணவர்களின் அதிகபட்ச அளவு இருபது என்றிருந் தாலும் பதினெட்டுக்குமேல் சேர்ப்பதே இல்லை. பிரமாதமான புகழ் பெற்ற பேராசிரியர்கள் பொருளாதாரத்துறையில் பணிபுரிந்தார்கள். முதல் வகுப்பு, ரேங்க் – யூனிவர்ஸிடி அவுட்ஸ்டாண்டிங் – இவற்றை அடைய மாணவர்களிடையே.

மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெரிய பெரிய குடும்பங்களில் இருந்து மாணவர்கள் வந்து தங்கிப் படித் தார்கள். கனகராஜ் சேலத்தில் யாரோ ஒரு பெரிய தொழிலதிபரின் ஒரே மகன் என்று மட்டும் சுலட்சணா கேள்விப்பட்டிருந்தாள். கனகராஜ் பல்கலைக் கழக நேரம் தவிர முக்கால்வாசி நூல் நிலையத்திலேயே பொழுதைக் கழித்ததால் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்கிற ஞானமும் எல்லா இண்டேர்னல் அஸெஸ்மெண்ட்டிலும் முதல் மதிப்பெண் பெறுகிற திறமையும் அவனுக்கு இருந்தது.

‘இந்தக் காலத்தில்  காலத்தில் பெண்கள்தான்  கெட்டிக்காரத்தனமாகப் படிக்கிறார்கள்’ – என்ற பொதுமதிப்பீட்டையும் மீறி ஆண்பிள்ளையாகிய கனகராஜ் எதிலும் நம்பர் ஒன்றாக முன் நின்றான். சுலட்சணாவுக்குக்கூட இது பெரிய ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் அவன் அவளுக்கு ஒரு சவாலாகவே வாய்த்திருந்தான். பல்கலைக்கழக ரேங்க் – அல்லது டிஸ்டிங்க்ஷன் அவனுக்கே போய்விடுமோ என்று கூட அவள் இரகசியமாகக் கவலையும் பொறாமையும் கொண்டிருந்தாள்.

இந்த மாதிரி அத்தியாவசியமான புத்தகங்களில் நாலைந்து பிரதிகளாவது வாங்கி லைப்ரரியில் அடுக்கி இருக்க வேண்டாமா என்று பல்கலைக்கழக நிரவாகத்தின் மேல் கூட அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.

அந்த முறையும் ‘எக்ஸ்ட்ரா கரிகுலர் ரீடிங்’குக்கான இண்டெர்னல் மதிப்பீட்டில் கனகராஜ் தான் முதல் மாணவனாக வரப்போகிறான் என்ற குமுறலோடுதான் அன்று மேற் பட்டப் படிப்பு நூலகத்திலிருந்து அவள் வெளியேறியிருந்தாள்.

ஆனால் இந்தக் குமுறல் எல்லாம் மாலை ஆறுமணிவரை தான். ஆறு மணிக்கு மாணவர் விடுதியைச் சேர்ந்த பையன் ஒருவன். அவளைத் தேடி வந்து ஒரு சிறு கடிதத்தையும், பகலில் நூல் நிலையத்தில் அவளுக்குக் கிடைக்கவிடாமல் கனகராஜ் தட்டிக்கொண்டுபோன அந்தப் புத்தகத்தையும் கொடுத்தபோது அவளுக்கு முதலில் வியப்பும் பின்பு கனகராஜ் மேலும் அவன் குடும்பத்தினர் மீதும் அநுதாபமும் ஏற்பட்டன.

“மிஸ் சுலட்சணா! என் தாய் மிகவும் சீரியஸாய் இருக்கிறாள் என்று என்னை உடனே அழைத்து வரச் சொல்லித் தந்தை கார் அனுப்பியிருக்கிறார். நான் இந்த வினாடியே சேலம் விரைகிறேன். புத்தகத்தை நீங்களாவது படித்துப் பயன்படுத்தித் திங்கள் கிழமை இண்டர்னல் அசெஸ்மெண்ட் மதிப்பெண்களைப் பெற வேண்டுகிறேன்-” என்று கடிதத்தில் எழுதியிருந்தான் கனகராஜ்.

சுலட்சணாவுக்கு உடனே அவன் மேலிருந்த கோபம் எல்லாம் போய், பொறாமை எல்லாம் கழன்று, ‘ஐயோ பாவம்! இத்தனை பதற்றமான சூழ்நிலையிலும் புத்தகம் கிடைக்காத தால் நான் அடைந்த ஏமாற்றத்தை ஞாபகம் வைத்துக்கொண்டிருந்து தனக்குப் பயன்படாமற் போனது எனக்காவது பயன் படட்டும் என்ற எண்ணத்தோடு சிரத்தையாகக் கொடுத்தனுப்பியிருக்கிறாரே’ என்று அவன்மேல் அநுதாபமாகவும் அன்பாகவும் மாறியது. ‘படிக்கிற – நன்றாகப் படிக்கிற ஒரு மாணவரின் சிரமங்கள் கேலிக்குரியதாகப் படாமல் – நன்றாகப் படிக்கிற மற்றொரு மாணவருக்குத்தான் சீரியஸ்ஸாகப் புரிய முடிகிறது’- என்று உணர்ந்தாள் சுலட்சணா.

அத்தனை பரபரப்பிலும் ஆளைத் தேடிப் புத்தகத்தையும் கடிதத்தையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு சொல்லி அவன் ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருக்கிற பாங்கு அவளைக் கவர்ந்தது. ‘சின்ன விஷயங்களைக்கூட ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாதவர்கள் பெரிய மனிதர்களாகும் வாய்ப்பை இழக்கிறார்கள்’ – என்ற மேற்கோள் வாசகம் சுலட்சணாவுக்கு நினைவு வந்தது. அவள் கனகராஜின் சிரத்தையை நேசித்தாள்.

அத்தியாயம் – 2 

உதயா பல்கலைக் கழகம் ஒரு ‘ரெஸிடென்ஷியல் யூனிவர்ஸிடி.’ போஸ்ட் கிராஜுவேட் ஸ்டடீஸ், எம்.ஃபில்., பிஎச்டி. தவிர மற்றவற்றை அங்கே சேர்ந்துதான் படித்தாக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இல்லாமல், ஓபன் யூனிவர்ஸிடி திட்டத்தின் கீழோ, தபால் முறைக்கல்வி மூலமோ படிக்கலாம். அதனால் பல்கலைக் கழக எல்லையில் பரபரப்புக் குறைவு.

மருத்துவப் பட்டப்படிப்புப் படிக்கும் எண்பது பேர், எஞ்சினியரிங் வகையில் ஒரு நூற்றைம்பது, விவசாயப் பாடத்தில் மேற்பட்டத்துக்கான நூறு பேர், ஆர்ட்ஸ், சயின்ஸ் வகையில் ஏறத்தாழ இருநூறு என்று தங்கிப்படிக்கும் மொத்த மாணவர் எண்ணிக்கையே ஐநூறு அல்லது அறு நூறைத் தாண்டாது. மொத்தம் ஐந்து ஹாஸ்டல்கள். எண்ணூறு ஏகர் நிலப்பரப்பில் ஒரு பெரிய காம்பஸ். தென்னை, மா, பலா என்று ஒரே சோலை மயமாக இருந்தாலும் – சில பகுதிகள் உள்ளேயே வெட்டவெளியாகவும் இருந்தன.

காம்பஸுக்குள் இரண்டு மூன்று கண்மாய்களும், ஏரிகளும் தற்செயலாகச் சிக்கி இருந்தன. ஏரிகள் கண்மாய்களை ஒட்டிய பகுதி பசுஞ்சோலையாகவும், மற்ற இடங்கள் பொட்டலாகவும் இருக்கும். பல்கலைக் கழகங்களுக்குரிய போராட்டங்கள், பிணக்குகள், பூசல்களைத் தவிர்ப்தற்காகவே காம்பஸுக்குள் ஐநூறு அறுநூறு மாணவர்களுக்கு மேல் தங்காதபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் கோ-எஜுகேஷன் இருந்ததாலும், வேறு சில பிரச்னைகள் அவ்வப்போது கிளம்பியதாலும், சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படத்தான் செய்தன.

கலைப்பிரிவு மாணவர்களுக்கும் சயின்ஸ் பிரிவு மாணவர்களுக்கும் தகறாறு. விவசாயப் பிரிவு மாணவர்களுக்கும் பொறியியல் பிரிவு மாணவர்களுக்கும் போர், மருத்துவப் பிரிவு மாணவர்களுக்கும் பல்கலைக் கழகத்தின் நிர்வாகிகளுக்கும் போர் என்றெல்லாம் பூசல்கள் அவ்வப்போது வெடிக்கத்தான் செய்தன. காம்பஸுக்கு உட்பட்ட பிரச்னைகள் காரணமாக சில சமயங்களிலும் காம்பஸுக்கு வெளியே உண்டாகும் மாநில அளவிலான பிரச்னைகள் காரணமாகச் சில சமயங்களிலும் மாணவர்களிடையேயும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள் கிளம்பின.

இன்றைய மாணவன் என்பவன் – அதாவது இருபத்து ஒன்றாவது நூற்றாண்டுக்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகக் காத்திருக்கும் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவன் தன்னைச் சுற்றி நிகழும் தேசிய சர்வதேசியப் பிரச்னைகளைக் கவனிக்காமலும் அவை பற்றிக் கவலைப்படாமலும் புத்தகங்களிலோ, வகுப்பறைகளிலோ மட்டுமே தன்னைப் புதைத்துக் கொண்டு பாராமுகமாக இருந்துவிட முடியாது. அவன் பிரச்னைகளைப் பாரா முகமாக இருப்பதும் சாத்தியமில்லை. பிரச்னைகள் அவனைப் பாராமுகமாக விட்டு விடுவதும் சாத்தியமில்லை. எல்லார் மேலுமாகப் படுகிற காற்றில், மழையில், வெயிலில், பனியில் அவனும் பாதிக்கப் பட்டுத்தான் ஆக வேண்டும். இன்றைய சமூக அரசியல் பிரச்னைகள் மழையையும் காற்றையும் போலத்தான். அவை சிலரை நீக்கிவிட்டுப் பெய்வதோ, விலக்கிவிட்டு வீசுவதோ நிச்சயமாக இயலாத காரியம். எவ்வளவோ திறமாகவும், தரமாகவும் சாமர்த்தியமாகவும் நிர்வகிக்கப்பட்டு வந்த உதயா பல்கலைக்கழகமும் அந்தத் தலைமுறையின் பிரச்னை களான காற்று மழைகளுக்குத் தப்ப முடியவில்லை.

வெளிப் பிரச்னைகளான காற்றும் மழையும் தவிர மாணவிகள் படித்துவந்ததனால் காதல் பிரச்னைகளா சிறு சிறு தகராறுகள் அவ்வப்போது மூண்டன. மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதிகள் இருந்த பகுதிக்கும் மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதிகள் இருந்த பகுதிக்கும் நடுவே இரண்டு கிலோ மீட்டர் தொலைவு காம்பஸுக்குள்ளேயே இருந்தது. மாணவிகள் விடுதிகள் இருந்த பகுதியைச் சுற்றித் தற்செயலாக அகழி போல் ஒரு பெரிய வாய்க்கால் – அதன்பின் பெரிய காம்பவுண்டு மதிற் சுவர் – இரண்டரைக் கிலோ மீட்டர் தொலைவு, இத்தனையும் இருந்தும் காதல்களும் அவை பற்றிய போட்டிகள் பூசல்களும் இருக்கவே செய்தன. அவை தொடர்பான பிரச்னைகளும் எழுந்தன.

இத்தனைக்கும் பெண்கள் விடுதிகள் சம்பந்தப்பட்ட வார்டன், வாட்ச்மேன், உணவுவிடுதியில் சமைப்பவர், பரிமாறுபவர் உட்பட அனைவரும் பெண்களாகவே நியமிக்கப் பட்டிருந்தனர். ஆனாலும் என்ன? வகுப்புக்களில், நூல் நிலையங்களில், லேபரெட்டரி முதலிய ஆராய்ச்சிச் சாலைகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து பழகத்தானே வேண்டியிருந்தது?

ஆண்களும், பெண்களும் நெருங்கிப் பழகி அதனால் வம்புகள் வருவதை நான்கு இடங்களில் தடுத்தார்கள் என்றால் நாற்பது இடங்களில் அப்படிப் பழகுவது தவிர்க்கப் படமுடியாமல் இருந்தது. அங்கெல்லாம் காதல்கள், ஆசைகள், ஒருதலைக் காதல்கள், இருவர் பிரியத்தை எதிர்க்கும் மூன்றாமவரது அசூயை எல்லாம் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாமல் போயிற்று. மாணவர்களும் மாணவிகளும் சந்தித்துப் பழகுமிடங்களில் மிகவும் முக்கியமானதாக ‘வசந்த மண்டபம்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ‘போஸ்ட் கிராஜுவேட்ஸ் லைப்ரரி’ விளங்கியது. இந்த நூல் நிலையத்தில் ஒரு விரோதமான சூழ்நிலையில் கனகராஜும், சுலட்சணாவும் சந்தித்துக் கொண்டாலும் பின்பு மெல்ல மெல்ல அந்த விரோதம் மாறி நட்பாகியது.

திடீரென்று தன் தாய்க்கு உடல் நிலை மோசமாகி விட்டது என்று ஊர் சென்ற கனகராஜ் தாயை இழந்து பதினைந்து நாட்களுக்குப் பின் தான் மறுபடி பல்கலைக்கழகம் திரும்பினான். மொட்டைத் தலையும் அதை மறைக்கும் ஃபர் குல்லாயும், சோகம் தேங்கிய முகமுமாகத் திரும்பியவனைச் சுலட்சணா தானே தேடிச் சென்று சந்தித்து அவன் தாய் இறந்தது பற்றித் துக்கம் விசாரித்துத் தன் அநுதாபங்களைத் தெரிவித்தாள். ஊருக்குப் போவதற்குமுன் அவன் ஞாபகமாகப் புத்தகத்தைத் தனக்குக் கொடுத்து அனுப்பியதைப் பாராட்டினாள். தனக்கு அதனால் பேராசிரியரிடம் நல்ல பெயரும் இன்டேர்னல் அஸெஸ்மென்டில் மதிப்பெண்களும் கிடைத்ததை நன்றியுணர்வோடு அவனிடம் சொன்னாள்.

அதன் பின் நூல் நிலையத்திலும் பல்கலைக் கழகப் பொடானிகல் கார்டனாக விளங்கிய பூங்காவிலும் அவர்கள் தொடர்ந்து சந்தித்தார்கள். பேசினார்கள், பழகினார்கள். பாடம், வகுப்பு, அகடெமிக் விஷயங்கள் பற்றியும், திரைப் படம், அரசியல், இலக்கியம், பத்திரிகைகள் எல்லாம் பற்றியும் பேசினார்கள், விவாதித்தார்கள். சில கருத்துக்களில் ஒன்றுபட்டார்கள். பலவற்றில் வேறுபட்டார்கள்.

சிலவற்றில் இருவர் இலக்குகளும் வேறு வேறு திசையா யிருந்தன. கனகராஜும் அவளும் நெருங்கிப் பழகினாலும் அவர்களிடையே அடிப்படை வேறுபாடுகள் நிறைய இருந்தன. கனகராஜ் எல்லாவற்றிலும் ஒரு ‘ஃபண்டமெண்ட லிஸ்ட்’ ஆக இருந்தான். பயந்து பயந்து பழகினான். ‘ஜட்காவில்’ பூட்டிய குதிரைபோல் கண்களுக்கு மூடியிட்டுக் கொண்டு பாடம் – படிப்பு – மார்க்குகள் – டிஸ்டிங்ஷன் என்று ஒரே திசையில் மட்டும் பார்க்கப் பழகியிருந்தான். கவலை தெரியாமல் வளர்க்கப்பட்ட ‘சுயநலத்தில் அக்கறையும் பற்றுமுள்ள’ சராசரியான பணக்காரக் குடும்பத்து இளைஞனாக இருந்தான். அவனுடைய பயங்களையும் அறியாமைகளையும் பார்க்கும் போது சிலவேளைகளில் சுலட்சணாவுக்குச் சிரிப்புக்கூட வரும்.

ஒரு முறை அவள் நூலகத்தில் ‘மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும்’ பற்றிய விமர்சன நூல் ஒன்றைப் படிக்க எடுத்தபோது, “நீங்க கம்யூனிஸ்டா?” – என்று பயந்து கொண்டே தணிந்த குரலில் அவளைக் கேட்டான் கனகராஜ். “மார்க்ஸையும் அவரது நண்பர்களையும் பற்றி ஆழ்ந்த அக்கறையோடு படிப்பதற்கு ஒவ்வொரு பொருளாதார மாணவனும் கடமைப்பட்டிருக்கிறான்” என்றாள் அவள்.

அதற்கு அவன் சொன்ன பதில் இன்னும் விநோதமா யிருந்தது. “இதையெல்லாம் படிப்பது நம்ம புரொபஸருக்குப் பிடிக்காது”.

”புரொபஸருக்குப் பிடிக்காத நல்ல விஷயங்கள் பல இருக்கலாம். அவை நமக்கும் பிடிக்காமல் போக வேண்டுமென்ற அவசியமில்லை மிஸ்டர் கனகராஜ்!”

“எங்கப்பாவுக்கும் இதெல்லாம் பிடிக்காது. பாடத்தை மட்டும் படி கண்டதைத் தொடாதே என்பார்.”

“ஒருதலைப்பட்சமான ஞானம் என்பது ஃபாஸிஸத்தை விட மோசமானது. நமக்கு உடன்பாடில்லாதது நல்லதாயிருந்தாலும் அதைப் பார்க்கவே மாட்டேன் என்பது கோழைத்தனம் ”

“ஞானத்துக்காக நாம் யூனிவர்சிடிக்குள்ளே வரலே. ஃபர்ஸ்ட் கிளாஸ்லே டிஸ்டிங்ஷனோட பாஸ் பண்ணி நல்ல ஸ்டூடன்டுன்னு பேர் வாங்கி முன்னேறுவதற்காகத்தான் வந்திருக்கோம்”

“நீங்க இப்பிடிச் சொல்றதைக் கேட்டு உங்களுக்காக அநுதாபப்படறேன் மிஸ்டர் கனகராஜ்! எம்.ஏ. படிக்கிற கிணற்றுத் தவளைகளும் நம்ம நாட்டிலே இருக்காங்கன்னு தெரியறப்ப ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு”.

“கிணறுதான் தவளைக்குப் பாதுகாப்பான இடம். கிணறுகளில் இருக்கிறவரை சுகம்தான். கிணறுகளை விட்டு வெளியே வந்து உயிரிழக்கும் ஆபத்துகளைச் சந்திக்க நேர்வதைவிடக் கிணறுகளே பாதுகாப்பானவை.”

“தவளைகளுக்கு அது சரியாகக்கூட இருக்கலாம். மனிதர்களுக்குப் பொருந்தி வராது. ஆபத்துக்களைச் சந்திக்கவும், எதிர் கொள்ளவும், போராடவும், வெற்றி பெறவும் மனிதர்கள் தயாராயிருக்க வேண்டும். அந்தத் துணிவுதான் மானுட இலட்சணம்.”

“நன்றாகப் பேசுகிறீர்கள் மிஸ் சுலட்சணா! நீங்கள் பொருளாதாரத்துக்குப் பதில் எம்.ஏ.பிலாஸபி எடுத்துக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு பிலாஸபி நன்றாகப் பேச வருகிறது.”

இதைச் சொல்லிவிட்டு தன் அரும்பு மீசையின் கீழே ஒழுங்கான வரிசையான அழகான வெண்பற்கள் தெரியச் சிரித்தான் கனகராஜ். அசப்பில் சராசரி சினிமாக் கதாநாயகன் போலிருந்த அவனிடம் அழகு இருந்தது. படிப்பு இருந்தது. பணம் இருந்தது. ஆனால் சிந்தனை இல்லை. துணிச்சல் இல்லை. ‘ரிஸ்க்’ எடுத்துக் கொள்ள முன்வரும் எந்த மனோதிடமும் இல்லை.

இந்நாட்டின் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பணக்காரக் குடும்பங்களில் வாயில் வெள்ளி ஸ்பூனுடனே பிறந்த பல செலூலாய்ட் இளைஞர்களைப் போல் தான் கனகராஜும் இருந்தான். அவனிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பது அவளுக்குத் தெரிந்ததை விட என்னென்ன தகுதிகள் இல்லை என்பதே முதலில் தெரிந்தன. அவன் பிறந்து வளர்ந்த பரம்பரைப் பணக்காரக் குடும்பமும், வளர்க்கப்பட்ட சூழ்நிலையுமே அதற்குக் காரணமாயிருக்கலாம். சிலவற்றை நினைக்கவே பயப்படும்படி வளர்ந்திருந்தான்.

ஆனால் சுலட்சணா நேர்மாறான சூழ்நிலையில் வளர்ந்து உருவானவள். அவள் தந்தை ஒரு டிரேட்யூனியன் லீடர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளுக்காகவும் தொழிற்சங்கங்களின் உரிமைகளுக்காகவும் போராடி வருபவர். தொழிலாளர் வழக்குகளுக்காக லேபர் கோர்ட் படிகளில் ஏறி ஏறிக் கால்கள் தேய்ந்தவர்.

ஆவடி, அம்பத்தூர் வட்டாரங்களில் இருந்த பல தொழிற்சாலைகளில் அவரது தொழிற்சங்கம்தான் பெரிய சக்தியாக விளங்கியது. மகளை பி.ஏ.வரை சென்னையில் படிக்கவைத்திருந்த அவள் தந்தை மேற்படிப்பு வெளியூரில் விலகி இருந்து படிக்கட்டும்; புதிய சூழ்நிலைகளைத் தனியே எதிர்கொள்ளக் கற்கட்டும் என்றுதான் அவளை உதயா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பியிருந்தார்.

பெண்ணுரிமை இயக்கத்திலும் பெண்விடுதலையிலும் அதிக நம்பிக்கையுள்ள அவர் சிறுவயதிலிருந்து சுலட்சணாவை எதற்கும் கட்டுப்படுத்தியதில்லை. கண்டித்த தில்லை. அடக்கி வைத்ததில்லை. ஒடுக்கி வைத்ததுமில்லை.

அவருடைய போராட்டங்கள் நிறைந்த வாழ்வை அருகிலிருந்து ஒவ்வொரு நிமிஷமும் பார்த்ததால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் அச்சம் அவளுக்கு எதிலுமே ஏற்பட்டதில்லை. ‘நைட் ஷிப்ட்’ வேலைக்குப் போன தொழிலாளியைக் கைக் கூலிகள் அடித்துப் போட இரத்தக் காயத்தோடு தூக்கிக் கொண்டு சக தொழிலாளர்கள் தலைவர் வீட்டைத் தேடி வருவார்கள். முகம் சுளிக்காமல் எழுந்து முதலுதவி செய்து அவர்களோடு ஆஸ்பத்திரிக்கும், போலீஸ் நிலையத்திற்கும் அலைவார் அவள் தந்தை.

தொழிலாளிகள் விஷயமாகச் சலிப்போ, தளர்ச்சியோ அவருக்கு வருவதேயில்லை. அவர்களுக்காகக் கோர்ட்டுக்கும், காவல் நிலையத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் அலைவதையே ஒரு வாழ்க்கை முறையாகக் கற்றுப் பழகித் தேர்ந்திருந்தார் அவர். அவரோடு கூடவே இருந்து பார்த்துப் பழகி அநுபவித்திருந்த காரணத்தால் – பிறருக்காகச் சிரமப்படுவதிலுள்ள மகிழ்ச்சிகள் சுலட்சணாவுக்கு நன்கு புரிந்திருந்தன. அவள் எந்தப் பிரச்னையிலும் அப்படிச் சிரமப்பட ரிஸ்க் எடுத்துக் கொள்ளத் தயாராயிருந்தாள். சமூகப் பிரச்னைகளிலிருந்து ஒதுங்கிப் போகிறவர்களும், விலகிப்போகிறவர்களும் கோழைகள் என்று அவள் நம்பினாள். உணர்ந்தாள். செயல் பட்டாள்.

பல்கலைக்கழக எல்லையில் கனகராஜும் அவளும் சந்திப்பது மழகும் விதம் இவற்றால் அவர்கள் காதலர்கள் என்று புரிந்து கொள்ளப்பட்டிருந்தாலும் இருவருக்கும் நிறைய வேறு பாடுகள் இருந்தன.

அவன் கருதினான்: ‘சமூகம், பிரச்னை, போராட்டம் எல்லாம் மாணவர்கள் சம்பந்தப்படாத பிரச்னைகள். படிப்பில் அக்கறையில்லாத மாணவர்கள் சிலர் இப்படிப்பட்டவற்றைக் கட்டிக்கொண்டு அழுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. படிக்கிற மாணவனுக்குப் படிப்பு ஒன்று மட்டுமே முக்கியப் பிரச்னை. மற்றவை எல்லாம் படிப்பைத் தட்டிக் கழிக்கிறவர்கள் செய்கிற காரியங்களே]

ஆனால் அவனது இந்த இலக்கணத்தில் அடங்காதவளாக இருந்தாள் சுலட்சணா அவள் படிப்பில் படு கெட்டிக்காரியாக இருந்தாள். மற்றப் பிரச்னைகளிலும் அதிக அக்கறை காட்டினாள்.

“விதிவிலக்காகச் சிலர் இருக்கலாம். ஆனால் வெளி விவகாரங்களிலும் மாணவர் போராட்டங்களிலும் ஈடு படுகிற பலர் படிப்பைத் தட்டிக் கழிக்கவே அவற்றில் ஈடு படுகின்றனர். இல்லையானால் பரீட்சை நேரங்கள் பார்த்து ஏன் போராட்டங்கள் தொடங்கப்படுகின்றன? பரீட்சைகளை ஒத்திப்போடும் முயற்சியில் தானே அப்படிச் செய் கிறார்கள்?” என்று வாதிடுவான் கனகராஜ்.

சுலட்சணா அதை ஒப்புக்கொள்ள மாட்டாள். சில மாணவர்கள் கனகராஜ் சொல்கிற மாதிரியும் இருக்கிறார்கள் என்பது அவளுக்குத் தெரியும். என்றாலும் கனகராஜின் பத்தாம் பசலிக் கொள்கையை மறுக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் அவள் உறுதியாக வாதிடுவாள்

“நீ ஒரு போராட்டக்காரரின் மகன்! அதனால் இப்படித் தான் பேசுவாய்! உன்னைத் திருத்தக் கடவுளாலும் ஆகாது” என்றுதான் கனகராஜ் அப்படி நேரங்களில் அந்த விவாதத்தை முடிப்பான்.

அத்தியாயம் – 3 

அந்த ஆண்டின் தொடக்கத்தில் உதயா பல்கலைக் கழக லேடீஸ் ஹாஸ்டலில் ஒரு பிரச்னை ஏற்பட்டது.

விடுதி அறைகளிலிருந்த பாத்ரூம்களுக்குத் தண்ணீர் சப்ளை சரியாக இல்லை. வழக்கமாக ஜூ ன் கடைசியிலோ ஜூலை தொடகத்திலோ பெய்யும் கோடை மழைகள் தவறி விட்டதனால் லேடீஸ் ஹாஸ்டல் ஓவர்ஹெட் டேங்குக்குத் தண்ணீர் மேலேறவில்லை. ஹாஸ்டலின் பின்புறமுள்ள இரு கிணறுகளுக்கு வந்துதான் எல்லாப் பெண்களும் நீர் இறைத்துக் குளிக்க வேண்டியிருந்தது. முன்புறம் மதிற் சுவர் இருந்தது போல் பின்புறம் மதிற்சுவர் இல்லாததனால் மைதானத்தில் விளையாடும் மாணவர்கள் காலையில் வாக் போகும் பேராசிரியர்கள் இவர்கள் காணும்படி திறந்த வெளியில் கிணற்றடில் மாணவிகள் குளிக்க நேர்ந்தது.

ஒருநாள் ரண்டு நாள் இந்த ஏற்பாடு என்றால் எப்படியோ சமாளித்து விடலாம். ஆனால் பலநாள் இதே நிலை நீடித்தது. மோட்டார் மூலம் ஓவர்ஹெட் டேங்குக்குத் தண்ணீர் இறைக்கும் கிணறுகளை இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்தினால் பிரச்னையைச் சமாளித்துவிட முடியும். ஆயினும் அதைச் செய்யாமல் பல்கலைக் கழக நிர்வாகம் காலதாமதப்படுத்தியது. வி.சி., வார்டன், ரிஜிஸ்திரார் எல்லாரையும் போய்ப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போனார் கள் மாணவிகள். காரியம் ஒன்றும் நடக்கவில்லை.

சுலட்சணா உடனே விடுதி மாணவிகளை ஒன்று திரட்டி னாள். ஆர்கனைஸ்’ செய்வதில் எப்போதுமே அவள் கெட்டிக்காரி.

“நமது உரிமையை நாம் அடைய ஒவ்வொருவராகப் பார்த்துக் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருப்பானேன்? ஒரு போராட்டத்தைத் தொடங்கினால்தான் நம் கஷ்டத்தை அவர்களுக்குப் புரிய வைக்க முடியும்.”

சில மாணவிகள் ஒப்புக்கொண்டார்கள். வேறு சிலர் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கினார்கள். கால வரையறையற்ற உண்ணாவிரதத்துக்குத் தலைமை ஏற்று நடத்த முன்வந்தாள் சுலட்சணா.

அந்தப் பல்கலைக்கழக வி.சி. அயல் நாட்டுப் பிரயாண வெறியர். மெக்ஸிகோ, ஜப்பான், ஜெர்மனி என்று சதா பறந்து கொண்டேயிருப்பார்.

ஆக்டிங் வி.சி. வம்பில் சிக்காமல் பதில் சொல்லி மழுப்புவதையே ஒரு கலையாகப் பயின்றவர். அப்போதும் துணைவேந்தர் பொறுப்பில் தற்காலிகமாக இருந்த ஆங்கிலத் துறைத் தலைவர் டாக்டர் ஆடல் வல்லான் பிள்ளை ஒரு முடிவும் எடுக்கமுடியாமல் திணறினார். இவருக்குக் (கையா)டல் வல்லான் பிள்ளை என்றும் ‘டல்பிள்ளை’ என்றும் வித விதமான பெயர்கள் ஏற்பட்டிருந்தன.

இவருடய வகுப்புகள் பெரும்பாலும் ‘டல்’ அடிப்பதால் மாணவர்களிடம் டல் பிள்ளை என்று தந்தி விலாசம் போல் ஒரு பேர் மிகவும் பிரபலமாகியிருந்தது. டல் பிள்ளை தன் பெயடுக்கேற்ப லேடீஸ் ஹாஸ்டல் தண்ணீர்ப் பஞ்சத்தைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் ‘டல்’லாக விட்டுவிட்டார். வேறு வழியின்றி மறுபடி ரஜிஸ்திரார், யூனிவர்சிடி அட் மினிஸ்டிரேடிவ் ஆபீஸர் ஆகியோரை போய்ப் பார்த்தால், ‘கொஞ்சம் பொறுத்து அட்ஜஸ் பண்ணிக்குங்க. வி.சி. திரும்பி வந்துறட்டும்’ என்றார்கள்.

“வி.சி.வந்து மட்டும் என்ன சார் பண்ணிடப்போறாரு? ஒரு வாரம் இங்க தங்கிட்டு மறுபடி ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விசிஸ் கான்ஃபரன்ஸ்னு எதுக்காவது புறப்பட்டுப் போயிடப் போறாரு” என்றாள் சுலட்சணா அதற்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

பல்கலைக் கழக நிர்வாக அலுவலகத்தின் முகப்பில் செக்கச் செய்வ லன்று பூத்துச் சொரிந்திருந்த குல்மோகர் மரத்தடியில் சுலட்சணா தலை மையில் உண்ணாவிரதம் ஆரம்ப மாயிற்று. உண்ணா விரதம் இருந்த மாணவகளின் முன்பு ஏராளமான விளம்பர அட்டைகளில் கோரிக்கை வாசகங்கள் பல எழுதி வைக்கப்பட்டிருந்தன.

‘தண்ணீர் இல்லாமல் மாணவிகளைக் கண்ணீர் சிந்த வைக்காதே!’

‘பல்கலைக் கழகம் இந்தியாவில் – வி. சி. வெளி நாட்டிலே’.

‘தண்ணீருக்குத் தவிக்கிறோம்! தட்டிக் கேட்க ஆளில்லை.’

‘பல்கலைக் கழகமா? பாலைவனக் கலகமா?’- போன்ற அட்டைகள் பெரிது பெரிதாக எழுதி வைக்கப்பட்டிருந்தன

முதல் நாள் உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடிந்தவுடன் கலைப்பிரிவு மாணவர்களில் இருபது பேர் மரத்தடியில் மாணவிகள்க்குத் தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் அநுதாப உண்ணாவிரதம் தொடங்க ஒத்துழைத்தனர்.

அந்தப் பத்துப் பேரில் கனகராஜ் இல்லை எனபது சுலட்சணாவுக்கு மிகவும் ஏமாற்ற மளித்தது. அவன் உண்ணா விரதமிருக்க முன்வராதது கூடப் பரவாயில்லை. உண்ணா விரதமிருப்பவர்களை வந்து பார்த்தால் கூடத் தன்மீது கெட்ட பெயர் வந்து ஒட்டிக் கொண்டு விடும் என்று பயந்தாற்போல ஒதுங்கினான் கனகராஜ். அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கக்கூட முன்வரவில்லை.

மூன்றாவது நாள் மாணவிகளுக்கு ஆதரவாகப் பொறியியல் பிரிவு மாணவர்கள் – எம்.டெக். படிப்பவர்கள் மற்றொரு மரத்தடியில் உண்ணாவிரத்தைத் தொடங்கினார்கள்.

யூனிவர்ஸிடி அட்மினிஸ்டிரேடிவ் ஆஃபீஸின் முகப்பில் பெரும்பகுதி உண்ணாவிரத கோஷ்டிகளால் கேராவ் செய்யப் பட்டதுபோல ஆகிவிட்டது. சுற்றி வளைத்து உட்கார்ந்து விட்டார்கள்.

நான்காவது நாள் மெடிகல், விவசாயப்பிரிவு மாணவர் ம் சேரவே பிரச்னை பெரிதாகிவிட்டது. உண்ணாவிரதம் பெரியதாக விசுவரூபம் எடுத்தது.

சுலட்சணாவைப் பசியும் வாட்டமும் வாழை நாராக ஆக்கி யிருந்தன. அவளருகே உண்ணாவிரதத்துக்கு உட்கார்ந் திருந்த மணிமேகலை என்ற சக மாணவி ஒருத்தி “சுலட்சணா! சினிமாக் கதாநாயகன் மாதிரி உங்கூட ஒரு ஸ்டூடண்ட் சதா சுத்திண்டிருப்பானே, அவன் மட்டும் உன்னை வந்து பார்க்கவே இல்லையேடீ? லீவா? அல்லது அவன் ஊரில் இல்லியா?” – என்று அவளையே கேட்டபோது சுலட்சணாவுக்கு அப்படியே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது.

கனகராஜ் ஒரு முறைக்காகக் கூட உண்ணாவிரதமிருந்த மாணவிகளை வந்து பார்க்காதது சுலட்சணாவுக்கு எரிச்ச லூட்டியது. மற்ற மாணவிகளைப்பற்றிக் கவலை இல்லா விட்டாலும் தனிப்பட்ட முறையில் தன்னைப் பார்க்கக் கூட அவன் வரவில்லை என்பது அவளுள் மிகவும் உறுத்தவே செய்தது. ஒரு ஒப்புக்காகக்கூட அவன் அதைச் செய்ய முன்வராதது அவளுக்கு வியப்பை மட்டுமில்லாமல் அதிர்ச்சியையும் அளித்தது.

ஸ்டிரைக், உண்ணாவிரதம், ஹர்த்தால், ஆர்ப்பட்டங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு ‘இண்டேர்னல் அஸெஸ்மெண்ட் மார்க்கு’களை மிகமிகக் குறைத்துவிடச் சொல்லி ஆக்டிங் வி.சி.ஓர் இரகசியச் சுற்றறிக்கை எல்லா இலக்காக்களுக்கும் அனுப்பியிருக்கிறார் என்று மாணவ மாணவிகளிடையே பரவலாக ஒரு பேச்சு உண்டு. ஆனால் அது வெறும் பூச்சாண்டி காடடும் ஏற்பாடாகப் பரப்பப்பட்ட வதந்தியே ஒழிய உண்மையில்லை. கனகராஜ் முன்பு ஒருமுறை இதை அவளிடம் சொல்லிப் பயமுறுத்திய போதுகூட அவள் இதை நம்பவுமில்லை. ஏற்கவுமில்லை.

“உங்களைப்போன்ற புத்தகப் புழுக்களும், பயந்தாங் கொள்ளிகளும் சுயநலத்திற்காகவே முயற்சி செய்து திட்ட மிட்டுப் பரப்புகிற வதந்தி இது! உண்மையில் அப்படி எதுவும் கிடையாது” – என்று சுலட்சணாவே அப்போது அவனிடம் மறுத்திருந்தாள். இப்படி நினைத்த கனகராஜுக்காக அவள் பரிதாபப்பட்டாள்.

சுலட்சணாவின் உண்ணாவிரதத்தை உள்ளூரின் பிரமுகர் ஒருவர் வந்து பழரசம் கொடுத்து முடித்துவைத்தார். பல்கலைக்கழக நிர்வாகம் பணிந்தது. உடனடியாகக் கிணறுகளை ஆழப்படுத்தி ஓவர்ஹெட் டேங்குக்கு நீர் ஏற்ற ஒப்புக் கொண்டார்கள். மாணவர்கள் முன்னிலையில் ஆக்டிங் வி.சி. ‘டல்பிள்ளை’ இதற்கு உறுதி கூறினார்.

உண்ணாவிரதம் முடிந்தபின்பும்கூட கனகராஜ் அவளைச் ந்திக்க வரவில்லை. அவளுக்கும் ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் பலருடைய பாராட்டுக்களிலும், மாணவ மாணவி களின் புகழிலும் அவன் வராதது’பற்றிய ஏமாற்றம் மறந்து விட்டது. இந்தப் போராட்டம் பல்கலைக் கழகவட்டாரத்திலும், மாணவர்களிடையேயும் அவள் அந்தஸ்தை உயர்த்தி விட்டது. அவள் ஒரு தலைவியாக உயர்ந்துவிட்டாள் அங்கே.

அன்று பகலில் வகுப்பில் கனகராஜ் தவிர்க்க முடியாமல் அவளைச் சந்திக்க நேர்ந்துவிட்டது. போராட்டம் முடிந்து அப்போதுதான் முதல் முதலாக வகுப்புக்களுக்கு மாணவிகள் வருகிறார்கள். கனகராஜின் சம்பிரதாயமான அநுதாப விசாரணை ஆரம்பமாயிற்று.

“ரொம்ப இளைத்து வாடிப் போய் விட்டீர்கள் சுலட்சணா! உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள். ப்ளீஸ் டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த்.”- பொது இடங்களில் அவளை நீங்க, வாங்க என மரியாதைப் பன்மையில்தான் அவன் அழைத் ]தான்.

”உங்கள் அனுதாபத்துக்கும் அன்புக்கும் நன்றி. நான் பொதுக் காரியங்களுக்காக உழைக்கிறபோது என் உடம்பு என் சௌக்கியம் – என் நன்மை என்று பார்ப்பதில்லை. பொது நன்மையை மட்டும்தான் பார்ப்பது வழக்கம்! பொது நன்மையே என் இலக்கு.”

“பொது நன்மை என்ற பெயரில் நமது படிப்பு,நமது உடல் நலம் எல்லாம் கெட்டுவிட்டால் நம்முடைய பெற்றோர்களுக்கு யார் பதில் சொல்வது? யோசித்தீர்களா?””

“என் பெற்றோர்களைப் பொறுத்தமட்டில் இதற்கு அவசியமே இராது மிஸ்டர் கனகராஜ்! என் தந்தையைப் பொறுத்தவரை அவர் பொது நன்மையில் சொந்த நன்மைகளைக் கரைத்தே வாழ்ந்தவர். மற்றவர்கள் போராடும் போது மார்க்குகளுக்காகப் பயந்து ஒதுங்குகிற மகளை அவர் விரும்ப மாட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

“எனக்குப் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் எல்லாம் அறவே பிடிப்பதில்லை. கல்விக்கூடங்களுக்குள் அரசியலைக் கொண்டு வரும் வீண் வம்பு வேலைகள்  இவை.”

“ஹாஸ்டல் ஃபீஸ் என்று மாதா மாதம் ஏராளமாகப் பணம் கறந்துவிட்டுக் குளியலறையில் சொட்டுத் தண்ணீர் கூட வர வழியில்லாமல் கிணற்றடியில் திறந்த வெளியில் பிறர் வேடிக்கை பார்க்கும்படி குளிக்கச் சொன்னால் யார் தான் போராடாமல் இருப்பார்கள்? கடமைகளைச் செய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உரிமைகளுக்காகப் போராடுவதும். உரிமைகளுக்காகப் போராடாதவர்கள் மனிதர்களே இல்லை.”

“படிக்கிறவர்களுக்குப் பணிவும் கல்வி நிறுவனத்தின் மேல் மரியாதையும் வேண்டும் என்கிறேன் நான்.”

“எந்தப் பணிவும், எந்த மரியாதையும் ஒரு வழிப்பாதையில்லை. மரியாதையற்றவர்கள் மேல் செலுத்தும் மரியாதை அவமானகரமானது என்று நினைக்கிறவள் நான்”

“இந்தப் போராட்டத்தின் மூலம் நன்றாகப் படிக்கிற மாணவியாகிய நீங்கள் ‘ரேங்க்’ வாங்கும் வாய்ப்பை இழக்கப் போகிறீர்கள்”

இதைக் கேட்டுச் சுலட்சணாவுக்குக் கோபமே வந்து விட்டது.

“மிஸ்டர் கனகராஜ்! இங்கே படிக்கிற பெண்களின் மானம் மரியாதை என்பவை நான் ஒருத்தி ‘ரேங்க்’ வாங்குவதைவிட மிகவும் அத்தியாவசியமான விஷயங்கள். பிறர் கூடி வந்து வேடிக்கை பார்க்கிற அளவு லேடீஸ் ஹாஸ்டல் பெண்களைத் திறந்த வெளியில் குளிக்க வைத்த நிர்வாகத்தை எதிர்ப்பது சரியா, நான் ரேங்க் வாங்குவது சரியா என்றால் எனக்கு ரேங்க் வாங்குவது பெரிய காரியமே இல்லை.”

“மன்னியுங்கள்! உங்கள் மேலுள்ள பிரியத்தினால் நான் கொஞ்சம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பேசிவிட்டேன் போலிருக்கிறது”

அப்போது அவள் குரலில் சூடு ஏறியதைக் கண்டு கனராஜ் தணிந்துபோய் மன்னிப்புக் கேட்டான். அவன் இப்படி மன்னிப்புக் கேட்டதைக் கண்டு அவளுக்கு அவன் மேல் இரக்கமாகக்கூட இருந்தது. அப்பாவியாகிய அவனைப் பொதுக் காரியங்களில் அக்கறை, சமூகப்ரக்ஞை, பிறர் நலச் சிந்தனை ஆகியவை கொஞ்சமும் இல்லாத கட்டுப் பெட்டியாக வளர்ததுள்ள அவன் குடுமபத்தினர் மேல்தான் அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.

‘இவன் எடுப்பாய் இளமையாய் அழகாயிருக்கிறான். நல்ல உயரம், நல்ல நிறம், அரும்பு மீசை, புன் முறுவல் திகழும் மலர்ந்த முகம் எல்லாம் இருந்தும் இவனிடம் இருதயமே இல்லையே? இருதயமே இல்லாதவனிடம் இத்தனையும் இருந்தும் என்ன பிரயோசனம்? தான் செய்தது தவறு என்றுகூட இவனுள் உறைக்கவில்லையே! முழு யூனிவர்ஸிடியும் மாணவிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அநுதாபம் கொண்டு அவளுக்குப பக்கபலமாக அநுதாப உண்ணாவிரதம் என்று வந்து போராட்டத்தில் கலந்து கொண்டபோது இவன் சும்மா அந்த மரத்தடிக்கு வந்து உபசாரமாக ஒரு வார்த்தை கூடச் சொல்லிவிட்டுப் போகவில்லையே? போராட்டம் நடத்துகிற நூற்றுக்கணக்கான களின் பக்கம் தலையைக் காட்டினால் நிர்வாகத்தினரும் மார்க் போடுகிற ஐந்தாறு பேராசிரியர்களும் என்ன நினைப்பார் களோ என்று பயந்து அவன் ஒதுங்கி ஒளிந்தது மிக மிகக் கேவலமான காரியமாக அவளுக்குத் தோன்றியது. அவள் பார்வையில் அவனுடைய ‘இமேஜ்’ ஒரு புழுவாகக் குறுகிச் சிறுத்தது.

அந்த வாரம் வகுப்பில் ஒரு பேராசிரியரே பேச்சு வாக்கில் அவளைக் குறிப்பிட்டுத் தம்முடைய மனப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்தபோது கனகராஜுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவள் அவனை வெற்றிப் புன்முறுவலோடு பார்த்தாள்.

பொருளாதாரத்தில் முதல் தர மதிப்பெண் பெற்ற அவனைப் பாராட்டுவதற்குப் பதில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற அவளைப் பாராட்டினார் பேசிரியர். “படிப்பில் கவனக்குறைவால்தான் இப்படிப் போராட்டங்கள் வரும் என்பதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். உரிமை உணர்வுள்ள யாரும் இப்படிப் போராடி நியாயம் பெறத்தான் முடிவு செய்வார்கள். இதில் தவறோ அத்து மீறலோ சிறிதும் இல்லை. இதை ‘ஆர்கனைஸ்’ செய்த நேர்த்திக்காக மிஸ் சுலட்சணாவுக்கு என் பாராட்டுக்கள்” – என்றார். அந்தப் பேராசிரியர். கனகராஜும் வகுப்பில் இருந்தான். அப்போது அங்கு எல்லாரும் எதற்காகவோ தன்னையே பார்ப்பது போல் அவன் உடம்பு கூசியது.

– தொடரும்…

– முள் வேலிகள் (நாவல்), முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1986, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.

NaPa2 'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *