சின்னு என்கிற சின்னசாமியும் அக்கீ என்கிற அக்கீசியாவும்





அத்தியாயம 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
அத்தியாயம் – 3

அந்தக் கல்லூரி வளாகம் பெரியது. ஆங்காங்கே குட்டிப் பூங்காக்கள் வளைந்து நெளிந்து கிடக்கும். சரக்கொன்றை, பூவரசு, வேம்பு என்று நிழலைக் கொட்டிக்கொண்டிருக்கும். வெறும் பூஞ்செடிகள் ஈரப்பதமாகவே இருக்கும். ஆனால், அவைகள் மணம்பெறுவதே இளசுகள் வலம் வருவதால்தான்!
அன்று புதன்கிழமை. மதிய வேளை. அக்கீசியா ஒரு புங்க மரத்தடியில் ஒதுங்கினாள். அந்தத் தனிமை அவளை யோசிக்கவைத்தது. சின்னு வந்தால்கூட அவனைத் தனியாகப் பார்ப்பது அபூர்வம். அவனைச் சுற்றிலும் நாலு பேர் செல்லப்பிராணிகளைப் போல் தொற்றிக் கொண்டேயிருப்பார்கள். எல்லோருமே கூட்ஸ் வண்டிகளைப் போல் கழட்டிவிடப்படுகிறவர்கள்தான். அதையும் அவன்தானே முடிவு செய்யவேண்டும்! அவளுக்கு காலேஜ்மேட் ரூபிணியைப் பிடிக்கும். மனப் பொறுமல்களை அவளிடம் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளலாம். நல்ல சிநேகிதி. சற்று தொலைவில் வருவது ரூபிணி போலவே இருந்தது. அவள்தான்! மஞ்சள் சுடிதாரில் பொன்மயமாகத் தெரிந்தாள்.
“என்னடி ரூபிணி… இன்னைக்கு என்கூட வர்றியா, லஞ்ச்சுக்கு” என்றாள் அக்கீசியா.
“என்னடி… என்னைக்குமில்லாமே” கொஞ்சினாள் ரூபிணி.
“அடப்போடி! அவளுக எல்லாருமே ஆளுக்கொன்னோட திரிதுக!” செல்லமாகச் சலித்துக் கொண்டாள் அக்கீசியா.
“ஓ பொறாமையா… உனக்கு எவனும் சிக்கலையா?”
“இனிமேல்தான் சிக்க வைக்கோணும்!” என்றாள் அதரங்களை இழுத்துக் கோணலாய் வைத்துக் கொண்டு.
“அப்ப… வலையே எப்ப விரிக்கிறதாக இருக்கிற”
“அதெல்லாம் ஏற்கனவே விரிச்சாச்சு!”
“இன்னும் ஒரு மீன்கூட விழலையாக்கும்!”
அக்கீசியாவுக்கு நாணச் சிரிப்பு.
“அட வெட்கமா.. போ, அந்தச் செடிக்கிட்டேப் போய்நில்லு… உன்னோட முகத்தைப் பார்த்து அந்த ரோஜாவாவது இன்னுங் கொஞ்சம் சிவக்கட்டும்!” என்றாள் ரூபிணி கவித்துவமாக.
“பாருடீ! அது சிகரெட் மாதிரி பிரகாசமா எரியப் போவுது!” – அக்கீசியாவின் மனது நுரை ததும்பும் கடல் போலானது.
“பாத்துடீ! அப்புறம் சீக்கிரத்திலே சாம்பலாயிடறப்போவுது!” கலகலவென்று சிரித்தாள் ரூபிணி.
மஞ்சளைத் தூவும் சரக்கொன்றை மரத்தடியில் அக்கீசியாவும் ரூபிணியும்
அமர்ந்தார்கள்.
டிஃபன் பாக்ஸ் திறக்கப்பட்டது. ரூபிணியின் மென் விரல்கள் அதற்குள் ஒரு
மழலையைப்போல் அளைந்தன. அதரங்களின் ஓரம் ஒரு புதுப்பெண்ணின்
முறுவல்.
அக்கீசியா வியப்புடன் அவளைப்பார்த்தாள்.
“என்னடி ஆச்சு உனக்கு? அந்த ரோஜாப்பூ தோத்துது போ!”
அக்கீசியா அவள் கன்னங்களில் இடித்தாள்.
“உன்கிட்டே ஒண்ணு சொல்லணும்” – ரூபிணி பீடிகை போட்டாள்.
“சொல்லு ரூபிணி… என்ன செய்யட்டும்?”
“சின்னு இருக்கான்னுல்லே..”
“ஆம்.. இருக்கான்.. அவனுக்கென்ன..”
“அவனை லவ் பண்றேன்!”
அக்கீசியாவுக்கு இலேசான அதிர்வு. அப்போதைக்கு எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
“நீ ப்ரபோஸ் பண்ணிட்டீயா?” என்றாள் அக்கீசியா.
“இல்லைடி… அவனை சரியாப் புரிஞ்சிக்கமுடிலே”
“அப்புறம்?”
“அதுக்கு நீதாண்டி ஹெல்ப் பண்ணனும்”
“நானா?” – அவள் முகப்பிரதேசமெங்கும் பெரிய ஆச்சிரியக்குறி முளைத்தது.
“எஸ்… உன்னாலதான் முடியும்!”
அக்கீசியா சில வினாடிகள் அவள் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘பூவர் கேர்ள்!’
அவள் மனம் அப்படித்தான் அந்தக் கணத்தில் ரூபிணியை எடைபோட்டது.
சிறிது நேரம் இருவரும் இமைக்காமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“சரிடீ… உனக்காக நான் பேசறேன்… கொஞ்சம் டைம் ஆகும்.. நீ பொறுமையா இருக்கணும்!”
“ஓ.கே. ஐ வில் வெய்ட்”
அப்பொழுது —
தொலைவில் ஆடியாடி வந்து கொண்டிருந்தான் சின்னசாமி.
“அக்கீ! அங்க பாரு சின்னு வர்றான்!” – ரூபிணி ‘சரே’லென்று எழுந்தாள்.
“சரி.. நான் பார்த்துக்கறேன்… நீ நைசா கெளம்பிரு” என்றாள் அக்கீசியா வஞ்சகமாய்.
ரூபிணி நதியில் நீந்தும் மீன்போல் நழுவினாள்.
“ஹலோ சின்னு! நான் இங்கிருக்கேன்” – அக்கீசியாவின் தித்திக்கும் குரல்.
இவளைப்பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது.
“அட! ஆச்சரியமான ஆச்சரியம்! நீ மட்டும் தனியா..”
“அதெல்லாம் ஒண்ணுமில்லே.. இப்பத்தான் ரூபிணி போறா”
“அப்படியா.. அதுக்குள்ளே என்ன அவசரம் அவளுக்கு? நான் வருவேன்னு தெரியுமல்லே!” என்றான் வெள்ளந்தியாய்.
“ரொம்பத்தான்! நான் இருக்கறது போதாதாக்கும்!” என்று அக்கீசியா, ‘வெவ்வே’ காட்டினாள்.
“காலேஜ் ஆபிஸ் வரைக்கும் போகணுமாம்.. இப்ப வந்துருவா”
“அப்புறம் சொல்லு… ஏதாச்சும் விஷயம் இருக்கா?” சின்னசாமி அவளருகே அமர்ந்தான்.
அவள் முகம் வாடிற்று. விழிகளில் நீர் தேம்பிற்று.
“என்ன அக்கீ… என்னாச்சு?”
“வீட்லே எனக்கு மேரேஜ் பண்ணனும்னு துடியாத் துடிக்கறாங்க”
“அப்படியா… நல்லதுதானே.. பண்ணிக்க வேண்டியதுதானே!”.
“உனக்கு எல்லாமே விளையாட்டுதான்… நான் பி.ஜி.பண்ணலாம்னு இருக்கேன்”
“அதுவும் நல்லதுதான்.. உன்னோட விருப்பத்தைச் சொல்லிடறவேண்டியதுதான்”
“சொல்லிட்டேன்… அப்பா பிடிவாதமா இருக்கார்”
“சரி… மாப்பிள்ளை ரெடியா?”
“தீவிரமாப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. புரோக்கர் ரெண்டு மூணு ஃபோட்டோவைக் காட்டி… ‘சொல்லுங்கோ சொல்லுங்கோன்னு’ அரிக்கறான்!”
“உனக்கு எதுவுமே பிடிக்கலையா?”
“அதெப்படி?…”
அவள் பார்வை புல்தரையின்மீது படிந்திருந்தது.
“நான் விரும்பறவரோட ஃபோட்டோ அதிலே இல்லே… அதனால்தான்!”
அவள் வதனம் விகசித்தது.
“அப்ப, அதைச் சொல்லிறவேண்டியதுதான்… உங்கம்மாதான் பிரபல நாவலிஸ்ட் ஆச்சே… ‘ரசிகாவின் ரசனை’ லே இப்படி எழுதுவாங்க…’ காதலைப் பூட்டி வைக்காதீங்க… காதலைச் சொல்லுங்க’ன்னு… இந்த வரி எனக்கு ரொம்பப் பிடிச்சுது!”
அவளுக்குள் திடீரென்று மின்சாரம் பாய்ந்தமாதிரி இருந்தது. ஒரு புதிய பறவை ரெக்கை கட்டிக்கொண்டு எழுந்த உணர்வு.
“அக்கீ! ரொம்ப யோசிக்காதே… அப்படி உனக்கு யாரப்புடிக்கும்… எங்கிருக்கார்னு சொல்லு… மீதியெல்லாம் நான் பார்த்துக்கறேன்!”
“சொல்லிரட்டுமா?”
“ரொம்ப பிகு பண்ணாதே அக்கி! சும்மா சொல்லு”
அக்கீசியா ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டுச் சொன்னாள்:
“அவர்…. அவர் இப்ப என் முன்னாலேதான் இருக்கார்!”
சின்னு விதிர் விதிர்த்துப் போனான். முகமெங்கும் இருமை படர்ந்தது.
‘ஏன் என்னாயிற்று இவனுக்கு… அப்படியென்ன சொல்லிவிட்டேன்..’
அவள் பார்வைக்கு, அந்தப் பூங்காவில் புதிதாய் ஒரு சிலை வீற்றிப்பது போல் தோன்றியது.
அக்கீசியா வீடு.
மேலறையில் கிடக்கிற டேபிள்மேட்டில் ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்ட கனத்த நோட்டு ஒன்று விரிந்து கிடந்தது. வனிதா எப்போதுமே இப்படித்தான். ஹால், படுக்கையறை, மேலறை என்று மூன்று அறைகளிலும் மாறி மாறி உட்காருவாள், நாவல் எழுதுவதற்கு. அவளுக்கு இன்னும் மூட் வரவில்லை. அவள் நினைவெல்லாம் மகள் அக்கீசியாவைப் பற்றித்தான்.
புரோக்கர் குமரகுரு அழுத்தம் கொடுத்தான். ஒருவிதத்தில் தங்கப்பனும் அதைத்தான் எதிர்பார்த்தார். வனிதாவும் அக்கீசியாவும் ஒரே படகில் பயணித்தார்கள். நாவல் எழுதுவது வனிதாவுக்கு ஆழ்கடலில் தத்தளிப்பது போல் இருந்தது. கொஞ்சம் அந்தக் கோட்டைக்குள்ளேயே இருக்கலாமே…. அது அக்கீசியாவுக்குத் தோதாகப்பட்டது.
ஒருநாள் அலைபேசியில் —
“தங்கப்பன் சார்.. வர்ற புதன்கிழமை மாப்பிளை வீட்லே கூட்டிட்டு வர்றேன்… ரெடியாகிட்டு கூப்பிடுங்க புதன் கிடைச்சாலும் மாப்பிள்ளை கெடைக்காது!”
புரோக்கர்ன்னா கொக்கா… தூபம் போடறதுக்குச் சொல்லியா தெரியணும்!
‘புதன் கெடைச்சாலும் மாப்பிள்ளை கிடைக்காதாம்.. என்னே கள்ளத்தனம்!’
“வனிதா…ரொம்ப நாளா ஒரு பில் செட்டில் ஆகாம கெடக்குது… நான் நாமக்கல் வரை போயிட்டு வந்தர்றேன்… நீ அக்கீசியாகிட்டப் பக்குவமாச் சொல்லி ஆயத்தம் பண்ணறது உன் பொறுப்பு”
வனிதா சிந்தித்துப் பார்த்தாள்.
இது ஒரு விதத்தில் நியாயம்தான்.. நல்ல வரனாயிருந்தால் முடிச்சிற வேண்டியதுதான்.. அவளும் சின்னு கின்னுன்னு சுத்திட்டிருக்கற மாதிரி அரசல் புரசலா காதுக்கு வருது… பெத்தவளுக்குத்தானே தெரியும் புள்ளையோட நடத்தை?’ புரோக்கர் கூற்றுப்படி பார்த்தால் இது கூடி வரலாம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இனி, அவள் என்ன சொல்லப் போகிறாளோ … நாவல் எழுதப்படவேண்டிய பக்கங்கள் காலியாகவே இருந்தன. அப்போது, பொன்மகள் உள்ளே நுழைந்தாள்.
“மம்மி! எழுதிட்டே இருப்பீங்களா… ஐ ஆம் ஸோ டயர்ட்… காஃபி போடறீங்களா” என்றவாறு பாத்ரூமுக்குள் சென்றாள்.
ஒரு தட்டிலே ஸ்நாக்ஸும் காஃபியும் வந்தது.
அக்கீசியா அருகே வந்தமர்ந்த வனிதா வாத்சல்யத்துடன் கேசத்தைக் கோதிவிட்டாள்.
“ஒரு விஷயம்… பொறுமையா கேட்பியா… நானும் உங்கப்பாவும் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்..”
“என்ன முடிவு?” — எப்படியும் இது புரோக்கர் வேலைதான் என்பதைப் புரிந்து கொண்டவளாய் வியப்புடன் கேட்டாள்.
“குமரகுரு வந்திருப்பானே..” என்றாள் எகத்தாளமாக.
“வந்தானே!” என்றாள் வனிதா பதிலுக்கு.
“சரி… புதுசா எவனையாவது காட்டியிருப்பானே..”
“இந்தா.. நீயே பாரு.. – எவனோ ஒருவன் ஹாய்யாக நின்று கொண்டிருந்தான் வாட்சப்பில்.
அக்கீசியா மீன் விழிகளை விரித்து விரித்துப் பார்த்தாள்.
பையன் வளர்த்தியாக, வாட்டசாட்டமாக இருந்தான். எம்.பி.ஏ., கம்பெனியும், வேலையும், சம்பாத்தியமும் தேவலையென்றிருந்தது. பெற்றோர் ஸ்டேட்டஸ் பரவாயில்லை. அப்பா இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்டில் ஆஃபிசர் ரேங்க் போல. நிலன் புலன் லொட்டு லொசுக்கு என்று புரோக்கர் கொஞ்சம் ஓவராகவே இட்டுக்கட்டி, அப்பாவிடம் அளந்திருக்கிறான்.
அம்மாவும் மகளும் சுமார் அரைமணி நேரம் அளவளாவினார்கள்.
“அப்பா என்னம்மா சொல்றார்?”
“எங்க ரெண்டு பேருக்குமே பிடிச்சிருச்சு… இனி நீதான் முடிவு சொல்லணும்”
“ஏற்கனவே ஒரு எம்.பி.ஏ மாப்பிளையைக் காட்டினானே… அதே வேறயா?”
“ஆமா அக்கீ! அதுவும் இருக்கு.. இது வேற.. நீதான் எதுவும் பிடிகொடுத்துப் பேசமாட்டிங்கறியே”
“என்னம்மா நீங்களும் அப்பாவோட சேர்ந்துட்டு பிடிவாதமா மாப்பிள்ளை பார்க்கறீங்க.. ஒரு மாஸ்டர் டிகிரி பண்றதுக்கு விடமாட்டீங்கபோல”
“அப்பா ரொம்ப பயப்படறாரும்மா.. அவருக்கு இருக்கற பிரச்சனைதான் தெரியுமில்லே”
“ஒண்ணும் ஆகாது.. சின்னப்பையனாட்டா அங்கேயும் இங்கேயும் ஓடிட்டுத்தானே இருக்காரு”
“அப்படியில்லே.. எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாமில்லியா.. இந்தக் காலத்திலே நாப்பது வயசிலேகூட ஹார்ட் அட்டாக் வருது”
அவள் எதுவும் பேசாமல் ‘தேமே’ என்று உட்கார்ந்திருந்தாள். வனிதா நாவல் எழுதப் போய்விட்டாள். அவளுக்கு ஓர் அலைபேசி அழைப்பு. சின்னு சிரித்தான். அவள் உடனே ‘லவர்ஸ்’ பார்க்குக்கு ஓடினாள்.
அதாவது மொட்டை மாடி!
அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அப்பா வெளியூர் பயணம். அம்மா எழுத்தில் மூழ்கிவிட்டாள்.
“அக்கீ! எங்கே இருக்கறே?”
“வீட்லே “
“ஒரு முக்கியமான விஷயம்”
“சொல்லு சின்னு” “ஃபோன்லெ பேச முடியாது.. உடனே புறப்பட்டு பிக் மாலுக்கு வா… பக்கந்தானே”
“அப்படியா வர்றேன்”
“உம்ம்.. நாவலாசிரியர் மேடத்துகிட்ட என்ன சொல்லீட்டு வர்றே?”
“உக்கும்.. ரொம்பத்தான்! காஸ்மெட்டிக்ஸ் வாங்கணும்னு சொல்லீட்டு வர்றேன்.. அதுலே ஒண்ணும் பிரச்சனையில்லே “
“ஓகே.. செகண்ட் ஃப்ளோர்லே இருக்கேன்… எதுலே வர்றே?”
“ஆட்டோவிலே”
“அந்த ‘எதுலே’ இல்லே”
“எந்த ட்ரஸ்லேன்னு கேட்டேன்!”
“ஃபோனை வைடா லூசுப் பையா”
அவள் முறுவல் அவளுக்கு மேலும் அழகூட்டியது.
அத்தியாயம் – 4
பிக்மால் ஆரவாரத்துடன் ஒளிர்ந்தது. மின்னொளியில் சொர்க்கலோகம் போல் காட்சியளித்தது. துணிக்கடை, செருப்புக் கடை, வீட்டுச்சாமான்கள் கடை, ஃபான்ஸி பொருட்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கடை என்று ஒன்று பாக்கியில்லாமல் கூட்டம் ததும்பியது.
சின்னு திரும்பித்திரும்பிப் பார்த்தவாறு, கீழ்த்தளத்தில் குழந்தைகள் பொம்மைக்காரில் ‘விர் விர்’ என்று பாய்வதை, மேல்தளத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் – மஞ்சளும் பச்சையும் கலந்த சுடிதாரில் ‘சிலு சிலு’ வென்று வந்த அக்கீசியா அவன் முதுகுக்குப் பின்னால் பம்மியவாறு, உரசினாள். அவன் திடுக்கிட்டவனாய் சற்றே விலகினான்.
“என்ன சின்னு! டிரஸ் எப்படியிருக்கு?” என்றாள் சற்றே சிலுப்பியவாறு.
“ட்ரெஸ்ஸைக் கேட்கறியா.. உன்னைக் கேட்கறியா?”
‘அட.. பையன் தேறிட்டான் போல!’ என்று நினைத்தவள், அவன் கரம் பற்றினாள் நாணத்துடன்.
“வா அக்கீ.. அங்க ஒரு பெஞ்சு காலியாயிருக்கு.. உக்காரு..கொறிக்கறதற்கு ஏதாச்சும் வாங்கிட்டு வர்றேன்”
சின்னு ஒரு பேக்கரியை நோக்கிப் போனான். அடுத்த நிமிடம் ஒரு கையில் பாப்காரன், மறுகையில் காரக்கடலை என்று துள்ளலுடன் வந்தான்.
சிறிது நேரம் இருவரும் மவுனமாய் இருந்தார்கள்.
“சின்னு.. என்னையொருத்தன் லவட்டிட்டு போறதுக்குள்ளே நீ வந்து பேசணும்” என்றாள் அக்கீசியா, ஓர் அரசன் ஆணையிடுவது போல்.
அவன் நிமிர்ந்தான்.
“என்ன அவசரம்?”
“அவங்க அவசரப்படறாங்களே… நான் சொல்றதை சீரியஸாவே எடுத்துக்கமாட்டேங்கறே”
“அவங்கன்னா யாரு? மாப்பிள்ளை வீட்டிலியா?”
“மண்ணாங்கட்டி… என்னைப் பெத்தவங்க!” என்றாள் உதட்டைக் கவ்வியபடி.
எதிரே ஓர் இளம்ஜோடி பிடரியைத் தடவியவாறே கடந்துசென்றது.
“என்னே டிரஸ் பார்த்தியா!” – சின்னு விழிகளில் அறிமுகமில்லாத அவள் நெளிந்தாள்.
“க்கும்! நான் கண்ணுக்குத் தெரிலே உனக்கு”
“நீதான் கண்ணுக்குள்ளே மறைஞ்சு நிக்கறியே!”
“கவிதை வேறயா… இப்ப நீ ரெண்டுலே ஒண்ணு சொல்லு.. உன் மனசிலே என்னதான் நெனைச்சிட்டிருக்கே?”
கடலையைக் கொறித்து முடித்ததும், காகிதத்தைக் கசக்கி அருகேயிருக்கும்’ ‘யூஸ் மீ’ யில் போட்டான், சின்னு.
அவனது நீண்ட பெருமூச்சு, ஒருவேளை அவளுக்குத் திகைப்பை உண்டு பண்ணியிருக்கலாம்.
ஆனால், அடுத்த கணம் அவன் முகம் இருண்டது — தொலைவில் வருகிற அவர்களைப் பார்த்ததும்.
அடுத்த நிமிடம் பிக்மால் இரண்டாவது தளத்தில் ஒரு பிரளயமே நடக்கப் போகிறது!
சின்னு எதிர்பார்க்கவில்லை. அந்த ரம்மியமான மாலை வேளையில் அவன் மாமா வரதராசன் அங்கு வருவார் என்று. கூடவே இன்னொருவர்.
இனி அவன் ஓடி ஒளிவதற்கில்லை — அக்கீசியாவின் நிழலைத்தவிர!
வரதராசன் மாமா அவன் பேரில் அதிகப் பிரியமும் நம்பிக்கையும் வைத்திருந்தார். அவனை ஓர் இளம்பெண்ணுடன் பார்த்த மாத்திரத்தில் அந்த நம்பிக்கையின் சிகரம் தகர்ந்துவிடுமா, என்ன.. அந்த அளவுக்கு அவர் பத்தாம் பசலியும் இல்லை!
“என்னடா சின்னசாமி எப்படியிருக்கே … காலேஜ் இன்னுமா முடியாம இருக்கும்!” என்று ‘ஹா ஹா ஹா ஹா’வென்று முழங்கினார் வரதராசன்.
அவன் ‘பித்து’ பிடித்தவனைப் போல் விழித்தான். அவனையும் மிஞ்சினாள் அக்கீசியா. ஆனாலும் அசாத்தியத் துணிவுடன் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். பெண்ணாயிற்றே! இன்றைக்குக் காலமும் காற்றும் அவர்கள் பக்கம்தானே வீசுகிறது!
“நீ யாரும்மா… நீயும் காலேஜ்லே படிக்கிறியா?” என்று கேட்டார் வரதராசன்.
“யெஸ் அங்கிள்”
“நீ எந்த டிபார்ட்மென்ட்?”
“சைகாலஜி “
“ம்ம்.. நீ யாரு பொண்ணும்மா? பேரன்ட்ஸ்?”
“டாடி பேரு தங்கப்பன்… இங்கே ஒரு ஆட்டோமொபைல் கம்பெனில வேலை பாக்கறார்.. மம்மி வீட்லே இருந்துட்டு நாவல் புக்ஸ் போட்டுட்டு இருக்காங்க”
உடன் வந்த சாமிநாதன் – வரதராசனின் நண்பர் “அப்படியா பாப்பா… என்ன பேரு?” என்றார் ஆர்வம் மேலிட.
“வனிதா தங்கப்பன்!”
“ஆவ்! அவங்க பொண்ணா நீ!” என்றவர் தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த பையிலிருந்து இரண்டு நாவல்களையெடுத்து “இது அவங்க எழுதினதுதானே?” என்றார் சாமிநாதன்.
“ஆமாங்க அங்கிள்… அம்மாதான் ஆத்தர்!”
“டேய் வரதா! அவங்களை உடனே பாக்கணுமே.. அவங்க கதையை நானும் படிச்சிருக்கேன்!”
அக்கீசியாவின் முகம் மலர்ந்தது. சின்னுவுக்குப் பிடிபடவில்லை.
“லூசாடா நீ! இப்ப வந்த வேலை என்ன… ஃபோன் நம்பர் அட்ரஸ் எல்லாம் வாங்கிக்க.. இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம்” என்றார் வரதராசன் அசிரத்தையாக.
“அங்கிள்… இந்தாங்க விசிட்டிங் கார்டு வச்சுக்குங்க… ஃபோன் பண்ணிட்டு வாங்க… அம்மா ரொம்ப சந்தோசப்படுவாங்க.. அங்கிள்! நீங்களும் அவசியம் வீட்டுக்கு வரணும்..”
“பரவாயில்லையே.. நல்லாப் பேசறியே” என்றதும், சின்னசாமியை தனியாக சற்று தள்ளி அழைத்துக்கொண்டு போனார் வரதராசன்.
“டேய் சாமி! நீ அந்தப் பொண்ணுக்கிட்டப் பேசிட்டிரு” என்ற வரதராசனை வியப்புடன் பார்த்தார் சாமி என்கிற சாமிநாதன்.
‘இந்தப் பொண்ணுகிட்டே என்ன பேசறது? இதுல என்ன இருக்கு… நெனைச்சதைக் கேட்டற வேண்டியது தான்!’
“ஏம்மா… நீ அந்தப் பையனை.. ” – சாமிநாதன் எடுத்தவுடன் போட்டுடைத்தார்.
இந்த மாதிரி கேள்வி கேட்டதும், வழமைபோல் சினிமாக்காரிகள் கால் பெரு விரலால் தரையைக் கீறுவதுபோல், , அக்கீசியாவும் மார்பிள் பாவப்பட்ட தரையைக் கீறினாள். ‘என்ன மனுசன்! இப்படியா அறிமுகம் இல்லாத பொண்ணுகிட்டப் பேசறது?’ அவள் மனசில் ஓடியது.
சாமிநாதன் புரிந்துகொண்டார்.
‘சரி… இதுவும் நல்ல நேரம்தான்… பயன்படுத்திக்க வேண்டியது தான்!’
“அங்கிள்… நீங்களும் அவருகிட்டச் சொல்லி..”
“அங்கேயும் இப்ப உன்னைப்பத்தித்தான் டிஸ்கஸ் பண்ணிட்டிருப்பாங்க.. வரட்டும்.. அவன் மாமாவாச்சே”
“இல்லை அங்கிள்.. நீங்க யாருன்னே எனக்கு தெரியாது.. இருந்தாலும்” – அக்கீசியாவின் உள்ளத்தில் பறவை படபடத்தது.
சாமிநாதன் சிரித்தார்.
“ஒண்ணும் கவலைப்படாதேம்மா.. ரெண்டுபேரும் விரும்பறீங்கல்லே .. அப்புறம் என்ன?”
“அதுக்கில்லே.. எங்க வீட்லே எனக்கு புரோக்கர் மூலமா வேற மாப்பிள்ளை பார்க்கறாங்க”
“ஓஒ.. அப்படியா.. சின்னசாமிக்கு தைரியம் இல்லே போல!.. வந்து பேசறதுக்குத் தயக்கம்” என்றார் சாமிநாதன்.
“இனி பிரச்சனையில்லே.. நாங்க பார்த்துக்கறோம்.. இதோ அவங்க ரெண்டுபேரும் வர்றாங்க.. என்ன முடிவு பண்ணியிருக்காங்கன்னு கேட்கலாம்”
வரதராசனும் சின்னசாமியும் வந்தார்கள்.
“ஏப்பா ஃபுட் கோர்ட் எங்கே இருக்கு.. வா.. சாப்பிட்டுட்டே பேசலாம்” என்றார் வரதராசன்.
எல்லோரும் எலிவேட்டரில் மேல் தளத்துக்கு ஏறினார்கள்.
உள்ளே நுழைந்து வாகாக அமர்ந்ததும் “சின்னசாமி! என்ன விருப்பமோ ஆர்டர் பண்ணிட்டு வா” என்ற வரதராசன் அக்கீசியாவைப் பார்த்து புன்னகைத்தார்.
அவளுடைய நளினமான பார்வையும், நாணம் கலந்த சிரிப்பும் அங்கே ஆலவட்டம் போட்டது.
“என்னப்பா.. பொண்ணு பிடிச்சிருக்கா?” – சாமிநாதன் கேட்க..
“என்னப்பா… இந்தப் பொண்ணைப் பாத்தவங்க யாராச்சும் வேண்டாம்னு செல்லுவாங்களா?”
அக்கீசியா இருகரங்களால் முகத்தைப் பொத்திக்கொண்டாள். உள்ளுக்குள் புன்முறுவலுக்கு விடுதலை கிடைக்காமல் தத்தளித்தது. அதுதான் மயிலின் செருக்கு!
அதற்குள், சின்னு ஃப்ரைட் சிக்கன் ரைஸ், மட்டன் கிரேவி, லைம் சோடா, சில்லி சிக்கன் என்று தடபுடல் பண்ணினான். பேசினார்கள். பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். அக்கீசியா தன் குடும்பம், உறவுகள் என்று அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டாள். அதேபோல் வரதராசன், சின்னசாமி குடும்பத்தைப் பற்றி விலாவாரியாகச் சொன்னார். தன் பங்குக்கு சாமிநாதனும் ஓர் ஆட்டம் போட்டார். இரா உணவுபோலவே உரையாடல்களும் திருப்தியாக முடிந்தது. இரவு ஒன்பதுக்குமேல் ஆகிவிட்டது. பிக்மால் மெல்லக் காலியாகிக் கொண்டிருந்தது.
“அங்கிள்! நாங்க புறப்படறோம்”
“சரிம்மா… எங்களுக்கு செகண்ட் ஃப்ளோர்லே கொஞ்சம் பர்சேஸ் பண்ணனும்.. மறுபடியும் சந்திக்கலாம்” என்றார் சாமிநாதன்.
“ஃபோன் பண்ணுங்க அங்கிள்… அல்லது சீக்கிரமா வீட்டுக்கு வாங்க!” என்றாள் அக்கீசியா ஆர்வம் பொங்க. “ஒகேம்மா.. போயிட்டு வர்றோம்” இருவரும் கடந்துபோனார்கள் .
“சின்னு! உங்க மாமாவைப் பத்தி எங்கிட்டேச்சொல்லவேயில்லையே”
“அதுக்கு ஒரு நேரம் வரணுமில்லே”
“சரி..வா..கிளம்புவோம்.. வீட்லே மம்மி தேடுவாங்க”
அவளை ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டான் சின்னு.
அன்று இரவு–
சாமிநாதன் வெகுநேரம் உறங்கவில்லை. சின்னசாமி நல்ல பையனாக இருக்கிறான். கபடற்ற முகம். இவன் பொருந்தி வருவான். சாமிநாதன் வேறொரு கணக்குப் போட்டார். மேலறையில் இன்னும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அது….. அவள் மகள் ரோகிணி! சாமிநாதன் நினைவலைகளை ஓடவிட்டார். ‘தாயில்லாத பொண்ணு… ரோகிணியை நல்ல இடத்தில் மணம் முடித்துக் கொடுக்கவேண்டும்… இருக்கிற வசதி வாய்ப்பெல்லாம் போதும்… இப்படி ஓடி ஓடிச் சம்பாதித்ததெல்லாம் யாருக்குப் போகப் போகிறது.. ஒரே மகள் ரோகிணிக்கும் வரப்போற மாப்பிள்ளைக்கும்தான்.. பையன் ஓர் ஏழையா இருந்தா கூடப் பரவாயில்லே… குணம்தான் பிரதானம்.. அத்தனையும் இந்தத் தம்பி சின்னசாமிக்குப் பொருந்தி வருது.. இனி ரோகிணியிடம் பேசிப்பார்க்க வேண்டும்.. முதலில் இருவரையும் சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாலென்ன… அது ஒன்றும் பெரிய சிரமம் இல்லையே!’
அப்படியே யோசித்தவராக சாமிநாதன் உறங்கிப் போனார்.
எப்பொழுதுமே ரோகிணி விடிவதற்கு முன் எழுந்து விடுவாள். அப்பா
படுக்கையறையை விட்டு வெளியே வரும் முன்பு வீடு நறுவிசாய் இருக்கும்படி பார்த்துக்கொள்வாள். வேலைக்காரி வருவதற்குள், செய்யவேண்டிய சில அத்தியாவசிய வேலைகளை அவளே பார்த்துக்கொள்வாள். மனைவி ஸ்தானத்தில் அவள் இருந்ததால், சாமிநாதனுக்கு ரோகிணி பேரில் அதிகப் பிரீதியாய் இருப்பார்.
சாமிநாதன் ஹாலுக்கு வந்ததும் ரோகிணி ஒரு கப் ததும்ப ஃபில்டர் காஃபியைக் கொண்டுவந்தாள்.
“என்னம்மா.. இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை… ஏதாவது ப்ரோக்ராம்
வச்சிருக்கியா?”
“இல்லே டாடி… அப்படியெதுவும் பிளான் பண்ணலே”
“வெரிகுட்… நானும் வீட்லேதான்..”
“டாடி.. இன்றைக்கு ஒரு நாள் வீட்டிலேயே ரெஸ்ட் எடுங்க!” என்றவாறு, சாமிநாதனின் பிடரியோரம் சரிந்தாள்.
வெங்கதிர் வீச்சில் அன்றைய தினம் பரபரப்பாக இயங்கத் தொடங்கியது . சாமிநாதனுக்கு ஆயிரம் வேலை. காலையில் ஏழுமணிக்கு மேல் பில்டிங் சைட்டுக்குப் போய்விடுவார். ரோகிணிக்குத் துணை வேலைக்காரப் பெண். ரோகிணிக்கு தோட்டம்போடுவதில் பேரார்வம். வித விதமான தொட்டிச் செடிகள். வீட்டுக்குப் பின்புறம் விரிந்து கிடக்கும் விசாலமான பகுதியில் வாசனை கமகமத்துக் கொண்டிருக்கும். அந்தப் பகுதிக்கு ‘குட்டி ஊட்டி’ என்று பெயரிட்டிருக்கிறாள். ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் போலவே ஒரு தோற்றம். டேலியா, அபேலியா, ஜின்னியா, மரிகோல்டு, வித விதமான ரோஜா மலர்கள் போன்றவற்றின் அணிவகுப்பு. சாமிநாதன் மனசைப் போட்டு சேறு கணக்காய்க் குழப்பிக்கொண்டிருந்தார்.. சின்னசாமியைப் பற்றி ரோகிணியிடம் ‘ஒரு வார்த்தை’ சொல்லிவைக்கலாமா, வேண்டாமா என்பதுதான் அது. ‘லண்டனில் படிச்ச பொண்ணு… அவனை ஏறெடுத்துப் பார்ப்பாளா? பேரு வேற இப்படி.. சின்னசாமி? இந்தக் காலத்துலே பிள்ளைக எல்லாமே பாக்கறாங்களே… என்ன பண்ணித் தொலைக்கிறது… பேரை மாத்திக்கலாம்.!. பையன் லட்சணமா, வாட்டசாட்டமா இருக்கான்.. ஒருவேளை அவனை ரோகிணிக்குப் பிடிக்கும்… வேண்டாம்.. அவளிடத்தில் இப்போதைக்கு எந்தப் பேச்சும் எடுக்கவேண்டாம்… சஸ்பென்ஸாவே இருக்கட்டும்.. அப்புறம் அதையும் இதையும் சொல்லி காரியம் கெட்டுப்போகக் கூடாது… கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்”.
– தொடரும்…
– 2023
![]() |
சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க... |