கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2025
பார்வையிட்டோர்: 66 
 
 

(1969ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16

அத்தியாயம் – 13

நான்கு நாட்களாகத் தேவருக்கு இடைவிடாத வேலை. சிதம்பரம் சென்ற பிற கு, தம்முடைய தீர்மானத்தின் படியே, எரிந்தும் எரியாமலும் கிடந்த கிளைகளை யெல்லாம் இழுத்துவந்து வெட்டாற்றின் கரையில் குவித்தார். கூட, பழனியாண்டி அவருக்குப் பிடித்தமான முறையிலும் அனுசரணையாகவும் வேலை செய்தான். பல விதங்களில் அவர் எதிர்பார்த்ததற்கு முன்பாகவே வேலை முடிவடைந்தது. 

சிவனாண்டித் தேவர் பழனியைக் கூட வைத்துக் கொண்டு, நான்கு குடிசைகளைக் கட்டி முடித்தார். காரியங்கள் துரித கதியில், பிடிபடாமல் போவது மாதிரி இருந்தது. எட்டாம் நாள் குடிசைகளுக்குக் கீற்று விட்டார்கள். 

சிதம்பரம் இன்னும் திரும்பவில்லை. உற்சாகமும் குதூகலமும் நிறைந்த கிடாவெட்டு அவன் இல்லாமலே நடந்துவிட்டது. 

“சரியா, தோதா ஆளுங்க வொண்ணும் கெடச்சிருக்காது. அதான், தம்பி வர தாமசம்” என்று சொல்லிக் கொண்டே கீற்றிட்ட சிறிய குடிசைக்குச் சுவர் வைக்கத் தொடங்கினார் தேவர். முதலில் அம்மாதிரி உத்தேசம் ஏதுமில்லை. நேரம் இருக்கவே, அந்த வேலையையும் மேற்கொண்டார்; வேலை கிடுகிடுவென்று போயிற்று. எதற்கு இந்த வேகம்! 

வேலைமுடியும்போது, மாப்பிள்ளை வீட்டிலிருந்து ரண்டாம் முறையாகச் செய்தி வந்தது. சாப்பாட்டு நேரத்தில் குஞ்சம்மாவும் அதையே எடுத்துச் சொன்னாள். 

“எப்ப பொறப்படலாம் சொல்லு.” 

“நான்தாங்க மாமா, இந்த வூட்டுக்குப் பெரியவ!” 

தேவர் புரையேறுகிற வரையிலும் சிரித்தார். 

“அது ஒரு கணக்கா? பொண்ணெப் பெத்தவ நீ. நீதான் சொல்லணும்.” 

“இப்படி யெல்லாம் பரியாசம் பண்ணுவீங்கன்னு எனக்கு அப்பவே பிடிச்சுத் தெரியும்” என்று உள்ளே போனாள் குஞ்சம்மா. 

“பாப்பா, இஞ்ச வா!” 

“சின்னப்பாப்பா இஞ்ச இல்லே.” 

“பெரிய பாப்பாவைத்தான் கூப்பிடறேன்.” 

“சொல்லுங்க.” 

“தண்ணி கொண்டா.” 

“அந்தால இருக்கு.” 

“இருக்கட்டும். இஞ்ச நீ வா. வழியிலே பண்டாரத் தைப் பாத்தேன். ‘வெள்ளி வேணாம், சனி போங்க உத்தமமான நாளு’ன்னான். எதுக்கும் நம்ப ஐயரை ஒரு வார்த்தை கேட்டுட்டு வாரேன். அவுங்க சொன்னா, சனிக் கிழமையே போயிட்டு வந்துடுவோம்.” 

“சரிங்க, மாமா.” 

ஐயர் இசைவான முறையில் பதிலளித்தார். பயணத் திற்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராகிக் கொண்டிருந்தன. பங்காளிகளுக்கு ஆட்கள் சென்றனர். வேங்கைப் புலி ராமசாமித் தேவரும், மேலூரக்காவும் வந்துவிட்டார்கள். குஞ்சம்மா பிரத்யேகமாகச் செய்தி அனுப்பி இருந்தாள். அவர்கள் வருகையால் வீடு நிறைந்தது. அப்புறம் ஒவ்வொருவராக வந்து விட்டார்கள்; சிதம்பரம்தான் பாக்கி. 

ஒவ்வொருவரும் அவன் வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெள்ளிக் கிழமை நடுப்பகல் வரையில் அவன் வரவில்லை. தேவர் பேருக்கு நேரே ஒரு கடிதம் வந்தது. எப்படியும் சனிக் கிழமை காலையில் வந்துவிடுவதாக எழுதியிருந்தான். 

அது புது ரீதியான கடிதம்; நேரே அவர் கைக்கே வந்தது.மற்ற கடிதமெல்லாம் ‘சாயாவனம் புளியந்தோப்பு சாம்பமூர்த்தி ஐயர் மேல்பார்த்து, மேற்படியூர் நாட்டாண் மைக்காரர் அழகுத் தேவர் குமாரர் ஸ்ரீ. சிவனாண்டித் தேவர் கைவசம் கொடுப்பது’ என்று வரும். சாம்பமூர்த்தி ஐயர் ஆள்விட்டழைத்து படித்துக் காண்பிப்பார். சிதம்பரம், இதனைத் தகர்த்துவிட்டான்! கடிதம் வந்ததும் தேவர் மனம் இப்படியும் அப்படியும் ஊசல் ஆடியது. ‘தம்பிக்குத் தெரியாதது ஒண்ணுமில்லே’ என்று சொல்லிக்கொண்டார். 

இரவில் அவர் மகன் கடிதத்தைப் படித்துக் காட்டி னான். மிகுந்த பணிவோடு வணக்கமாக இருந்தது: ஒவ்வொரு வாசகமும் மனத்தை ஈர்த்தது. 

“தம்பியா இப்படி எழுதியிருக்கு!” என்று குஞ்சம்மா வியப்புற்றாள். 

“தம்பிக்கு இங்கிலீஷ் நல்லாத் தெரியும். அதுலெகூட கடிதாசு எழுதுறாங்க”. 

அவனுடைய பெருமையை – சிறப்பை அக்கடிதம் மேலும் உறுதிப்படுத்தியது. 

வெள்ளிக்கிழமை பொழுது அடங்கிக் கொண்டு இருந் தது. அவன் இன்னும் வரவில்லை. உதய காலத்தில் பயணம்; ஊர்முழுவதும் சொல்லியாகிவிட்டது. ஆண்களை யெல்லாம் தேவர் வீடுவீடாகப்போய் அழைத்தார். பெண் களைக் கூப்பிட குஞ்சம்மா போனாள். 

பானாள். பயணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. வாசலில் மூன்று வண்டிகள் பெண்களுக்காகக் கிடக்கின்றன! 

முன்னிரவில், ஆளோடியிலிருந்து ஒரு குரல். தேவர் திண்ணையைவிட்டுக் கீழே இறங்கிப் பார்த்தார். சிதம்பரம் நிற்பது தெரிந்தது. சந்தோஷமும் மனக்கிளர்ச்சியும் உற்ற தேவர், பாய்ந்து போய், அவன் கையைப் பற்றிக் கொண்டார். 

“கடுதாசு கிடச்சதிலிருந்து வழியப் பாத்துக்கிட்டே இருக்கேங்க, தம்பி ” 

“கொஞ்சம் அலச்ச. கும்மோணம் போய், அப்புறம் திருவாலூர் போய், அப்படியே நாவப்பட்டினம் – இப் படியே ஒரு சுத்துங்க, மாமா.” 

“அதான்!…” 

“கும்மோணத்திலிருந்து இருபது ஆளுங்க வந்திருக்குங்க. தோட்டத்திலே விட்டுட்டு, வூட்டைப் பார்த்தேன். என்னா மாதிரி வீடு ! ரொம்ப ஜோரா இருக்குதுங்க, மாமா!” 

தேவர் மீசையைத் தள்ளிவிட்டுக்கொண்டு, குறுநகை புரிந்தார். 

“நீங்க குளிச்சுட்டு, சாப்பிடுங்க தம்பி. நான் போய் அவுங்களெ எல்லாம் பாத்துட்டு வாரேன்.” 

“இப்ப என்னங்க மாமா, சாப்பாடு? நானும் உங் களோட வரேனே!” 

“அப்ப இருங்க ; தோ, வரேன்’ என்று உள்ளே சென்றார். அவனுக்குக் குளிக்க வெந்நீர் போடச் சொன்னார். வந்திருக்கும் இருபது பேருக்கும் சாப்பாடு – கருவாட்டுக் குழம்போடு. இரவிலும், நாளைக் காலை வரையிலும் அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்ய குஞ்சம்மா முன்வந்தாள். 

தோட்டத்திற்குச் செல்லும்போது, தன்னுடைய நன்றியறிதலை வணக்கமாய்த் தெரிவித்துக் கொண்டான். 

“நீங்க பண்ணினது ரொம்ப சரிங்க மாமா, ‘என்னடா ராவுலே இம்மாம் பேரையும் அளச்சிக்கிட்டுப் போறோமே, என்ன பண்ணப் போறோம்’ன்னு தவியாத் தவிச்சுக் கிட்டே வந்தேங்க, மாமா.” 

“இந்தக் கிழவன் பொசுக்கென்னு போயிட்டான்னு நினைச்சுப் புட்டிங்களா தம்பி!” 

அவன் சிறுமையுற்றான். வேளாளத் தெருவைக் கடந்து, காவிரிக்கரை வரும் வரையில் அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. 

“தம்பிக்குக் கோபமா?” 

திரும்பிப் பார்த்தான், அவன். 

“ஊரெல்லாம் எப்படிங்க தம்பி இருந்துச்சு?” 

“கும்மோணத்தில் ஒரு நாள் சாப்பாட்டுக்கு செத்தெ கஷ்டப்பட்டு போயிட்டேங்க, மாமா…” 

”பெரிய ஊர் இல்லையா…?” 

ஊரையும், அதன் சிறப்பையும், சிறுமையையும் பற்றிப் பேசிக்கொண்டே இருவரும் தோட்டத்திற்குள் சென்றார்கள். 

பஞ்சநாத ஆசாரியின் தலைமையில் வேலைக்கு வந்திருப்பவர்களைத் தேவர் ஆழ்ந்து நோக்கினார். மங்கிய வெளிச்சத்திலிருந்து கிடைத்த தடயத்திலிருந்து, வேலை ஓடிவிடும் என்பது உறுதிப்பட்டது. இருபது பேரில், எட்டுப் பேர் நன்றாகத் தொழில் தெரிந்தவர்கள். ஐந்து வருடங்களாக ஆசாரியோடு ஊர்ஊராகச் சென்று வேலை பார்க்கிறவர்கள். மற்றவர்கள் புதியவர்கள். சமீபகாலத்தில் வந்து சேர்ந்தவர்கள். தோட்டத்தைச் சுற்றி வரும்போது தன் ஆட்களைப் பற்றி ஆசாரி சொல்லிக்கொண்டே வந்தார். 

வடக்காகத் திரும்பும்போது சிதம்பரம், “மாமா, அவுங்க என்ன கேக்கறாங்கன்னு கொஞ்சம் கேட்டுடுங்க!” என்றான். 

“ஆசாரிக்குத் தெரியுங்க தம்பி, அவுங்க கேட்கட்டும். அதுதான் சரி … பாருங்க ஆசாரி, நீங்க சொன்னா சரி தான்; இத்தனை வண்டி நெல்லுன்னு நீங்க சொல்லிட்டா தம்பிக்குச் சரியாப் போயிடும்…” 

“நம்பகிட்ட நெல்லு ஏதுங்க, மாமா? பணமாப் பேசுங்க. அதான் நமக்கு சல்லிசு!” 

பஞ்சநாத ஆசாரி பணத்தை நிராகரித்தார். 

“பணத்தை வாங்கி என்னங்க பண்ண? சொல்லுங்க …இப்படித்தான் தெக்க ஒருத்தன் பணம் கொடுத்தான். நான் சொன்னேன் : ‘பணத்தை என்னால் தின்ன முடியாது. நான் தின்னறதா பாத்துக் கொடு’ன்னேன். நாலுவாட்டி அலக்கழிச்சுட்டு, அப்புறமா குறுவெ நெல்லா கொடுத்தான்…” 

“நெல்லு நம்ப கிட்ட இல்லேங்கறதுதானுங்க விஷயம்.” 

“உங்க கிட்ட இல்லாட்டா ஊரிலேயே நெல்லு இல்லேன்னு அர்த்தமுங்களா,தம்பி? ஏங்கிட்ட ஏதோ கொஞ்சம் நெல்லு இருக்கு. அப்பறம் நம்ப ஐயர் இருக்காங்க; செட்டியார் இருக்காங்க. பத்து வண்டி நெல்லு அனுப்பி வையுங்க’ன்னா கொடுக்கறாங்க. அதெ வுட்டுப்புட்டு, எதுக்கு நீங்க பணத்தைப் பத்தியே பேசணும்……?” 

அவன் தலையசைத்தான். 

கூலிவிஷயம் தீர்மானம் ஆகாமலேயே சாப்பாட்டிற்கு அவர்கள் திரும்பினார்கள். 

மறுநாள் பொழுது புலரும் வேளையில் தோட்டத்தில் வேலை தொடங்கி விடும். யார் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி; காரியம் தன் போக்கில் சென்று கொண்டிருக்கும்; எல்லாம் அவர்கள் பொறுப்பில் விடப் பட்டுவிட்டது. அவர்கள் விருப்பப்படி எங்கிருந்து தொடங்கி, எங்கே வேண்டுமானாலும் முடிக்கலாம். இந்த ஏற்பாடு பஞ்சநாத ஆசாரிக்கு ரொம்பத் திருப்தி அளித்தது. 

காலையில் மாப்பிள்ளை வீடு நோக்கிப் புறப்பட்ட சிதம்பரம், குறுக்காக நடந்து தோட்டத்திற்கு வந்தான். வெற்றிலை இடித்துக்கொண்டிருந்த ஆசாரி, அவனைக் கண்டதும் மகிழ்ச்சியுற்றார். அவர் பேச்சு எடுத்த எடுப்பிலேயே சாப்பாட்டைப் பற்றியதாக இருந்தது. 

“ராச் சாப்பாடு ரொம்ப நல்ல சாப்பாடுங்க. பூண்டு வாசனையும் நெத்திலிக்கருவாடும் – எங்க அம்மா வைக்கிற குழம்பு மாதிரியே இருந்துச்சுங்க. கூட ரெண்டு புடி சாப்பிடலாமென்னுதான் ஆசை. ஆனா, வயிறு எங்க இருக்கு?” 

சிதம்பரம் மெல்லச் சிரித்தான் : 

“அவுங்க கைக்கு அப்படியொரு ராசி!” 

“நெசங்க.” 

சலங்கையொலி; மாட்டை அதட்டும் சப்தம். சிதம்பரம் அதை ஆழ்ந்து செவி மடுத்து, “உங்களுக்கு ஏதாச்சும் வேணுமென்னு தோனிச்சுன்னா, வூட்டுக்கு ஒரு ஆளு விடுங்க. எல்லாம் வந்துடும்; அம்மாகிட்டே சொல்லியிருக்கேன்” என்றான். 

“அதுக்கு என்னங்க! நான் பாத்துக்கிறேங்க போறது நம்ப வண்டிங்களா?” 

“ஆமாம்.’ 

“நீங்க ஒண்ணும் கவலெப்படாம போயிட்டுவாங்க!” 

“அப்ப, நான் வரேன்.” 

“வாங்க.” 

சிதம்பரம் வெட்டாற்றைக் கடந்து, சிவன் கோவிலைச் சுற்றிக் கொண்டு போய், குரங்குப்புத்தூரில் தேவரைப் பிடித்தான். அவனுக்காகவே காத்துக் கொண்டிருப்பது மாதிரி மாமரத்தடியில் வெற்றிலை இடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். 

“தம்பிக்கு ஆலெ கண்ணுக்குள்ளே இருக்கு!”

அவன் சிரித்துக்கொண்டே பக்கத்திலிருந்த சுமைதாங்கியில் சாய்ந்தான். 

“வண்டி அந்தால போயிட்டாப் போல இருக்குங்களே, மாமா!” 

“வரப்பு மேல வரது தெரிஞ்சிச்சு. சரி, தம்பி வரட்டுமேன்னு குந்திட்டேன்.” 

செத்தெ அந்தப் பக்கம் போனேங்க, மாமா. அப்படியே நாழி ஆயிடுச்சு.” 

“அதுக்கென்னங்க, தம்பி.” வெற்றிலையை வாயில் கொட்டிக்கொண்டு எழுந்தார். 

இருவரும் மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பும் சாலை வழியே நடந்தார்கள். இரண்டு மைல் பயணம் முழுவதும் கரும்பு, கரும்பு வளர்ச்சி, பருவகாலம் – இவைகளைப் பற்றியதாகவே இருந்தது. நீண்ட ஆலோசனைக்கும் தயக்கத்திற்கும் பின்னர், சொந்த நிலத்தில், இரண்டு வேலி கரும்பு பயிரிடத் தேவர் சம்மதித்தார். 

ஆற்றுப் படுகையை ஒட்டிய நன்செய் அது; பக்கிரிப் படையாச்சியிடமிருந்து போன வருஷம் வாங்கியது. பொன்னான பூமி – மாவுக்கு இருபது இருபத்தி மூன்று காணும். 

சிவனாண்டித் தேவரின் எளிமையான இசைவு அவனுக்குக் குதூகலமளித்தது. தன்னுடைய காரியம் முழுவதும் கூடிவந்துவிட்டது போல மகிழ்ச்சியுற்றான். கரும்பு வளர்ந்து, ஆலைக்குப் போகக் கொஞ்ச நாட்க ளாகும். அதுவரையில் வில்லியனூரிலிருந்து வண்டி வண்டியாகக் கரும்பைக் கொண்டுவர வேண்டும். கோடையில் ஒருவிதக் கஷ்டமுமில்லை. ஆனால், கார் காலம் முழுவதும் மிகுந்த கஷ்டத்தைத் தருவது. வெட்டாற் றையும் காவிரியையும் கடந்து வரவேண்டும்; சுலபமான காரியமல்ல இது. தண்ணீர் ஆறு கொள்ளாமல் சுழித்துக் கொண்டு போகும். பார வண்டி மணலில் சிக்கிக் கொள்ளும். 

ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதைப் பற்றித் தீவிரமாக யோசித்தான். மூங்கில் இல்லை; எல்லாம் எரிந்து போய்விட்டது. அதற்காக சும்மா இருக்க முடியாது. எங்கேயாவது போய்க் கொண்டுவர வேண்டும். இதைப் பற்றிப்பேசிக் கொண்டே மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்றான். 

உன்னதமான வரவேற்பு. ஒவ்வொருவரும் தனித் தனியே வரவேற்றார்கள். எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி ஒரு கவனிப்பு: தாள முடியாமல் போயிற்று அவனுக்கு. 

பெரிய வீட்டின் உள்ளும் புறமும் சிதம்பரம் நடந்தான். காமரா உள், சுவாமி உள், பத்தாயம் இருக்கு மிடம் எல்லாம் கவனித்துக் கொண்டான். புறப்படும் போது, குஞ்சம்மா அவனிடம் தனியாகச் சொல்லி இருந்தாள். அளவிடுவது மதிப்புப்போடுவது மாதிரி பார்வை, பேச்சு, நடத்தைக் கவனிப்பு.’ 

மாப்பிள்ளை நாணத்தோடு, ஆனால் கண்டுணர முடியாத ஒரு தொனியில் பேசினான். ஒரு கேள்விக்கு ஒரு தலையசைப்பு; இல்லாவிட்டால், ஒரு புன்சிரிப்பு; அதுவும் இல்லாவிட்டால், ஒரு வார்த்தை பதில். இயல் பான குணப் பாங்கா? தன்னை மறைத்துக் கொள்கிறானா? சிதம்பரம் பலரோடு பேசினான் மாப்பிள்ளையைத் தூக்கி வைத்து, இறக்கி, பரிகாசம் பண்ணி. தன் கண்டு பிடிப்பு அவனுக்கு மகிழ்ச்சியளித்தது. 

திரும்பி வரும் வழியில் தேவர் அவன் அபிப்பிராயத்தைக் கேட்டார். 

“நம்ப பாப்பாவுக்கு ரொம்பப் பொருத்தங்க, மாமா: பையன் தங்கம்ன்னா தங்கம் ” என்றான். 

“பாப்பாவுக்கு மட்டுந்தானா? ஒரு பையன் ரொம்ப பொம்மனாட்டிகளுக்குப் பொருத்தமா இருப்பான்” என்றான் வேலுசாமி. 

“எலே, உன் வாயச் செத்தெ மூடுடா!” 

“சீர்காழி அம்பு மவன் முதல்ல அவன் மாமன் பெண் ணெக்கட்டிக்கிட்டான். ஒரு குழந்தை பிறந்துச்சு; பயலுக்கு என்ன தோணிச்சோ தெரியாது. அவளெத் தள்ளி வச்சுட்டு, அவ தங்கச்சியெ கட்டிக்கிட்டான்.” 

“கள்ளு கொஞ்சம் மிஞ்சிட்டா பயலுக்குக் கண்ணு மண் ணு தெரியாதுங்க, தம்பி. ஒரு வாட்டி, பய பொண் டாட்டியை அழச்சுக்கிட்டு மாமியார் வூட்டுக்குப் போய் இருக்கான். ராத்திரி, இவ புடவையை ஆத்தா கட்டிக் கிட்டுப் படுத்திருக்கா. இந்தப் பய பொண்டாட்டின்னு நினைச்சிக்கிட்டு…”
 
“அப்புறம் என்ன?” 

“என்ன அப்புறம்! ஒரே கூத்து, கலாட்டா! இந்தப் பயல் அப்புறம் அந்தப் பக்கம் திரும்பறதே இல்லெ! எங்கே பய…… பின்னால குந்திப்புட்டான். தண்ணி கொஞ்சம் மிஞ்சிப் போச்சு…” 

அவனை அழைத்துவர ஒருவன் பின்னே சென்றான். 

மாப்பிள்ளைக் குடும்பம் கொஞ்சம் பெரிது என்று எல்லோரும் அபிப்பிராயப் பட்டார்கள். உண்மையில், அது பெரிய குடும்பமே – கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவன் மூன்றாவது பையன் ; மூத்தவர்கள் இருவருக் கும் கல்யாணமாகிவிட்டது. 

இளையவனுக்கு இரண்டு குழந்தைகள். பெரியவன் மனைவி ஒன்பது வருடங்களுக்குப்பிறகு கருவுற் றிருக்கிறாள். மாப்பிள்ளைக்குத் தாயும் தகப்பனும் இருக்கிறார்கள். தகப்பனைப் பெற்ற தாயும் இருக்கிறாள். அவன் மூத்த சகோதரி ஒருத்திக்கும், இளைய சகோதரி கள் ரண்டு பேர்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. இளையவள் சிங்கப்பூரில் இருக்கிறாள். மற்ற இரண்டு சகோதரிகளும் குழந்தைகளோடு வந்திருக்கிறார்கள். நாற்பது இலை கல்யாண வீடு மாதிரி தான் கூட்டம், இரைச்சல் எல்லாம். 

“செத்தெ பெரிய குடும்பந்தான். ஆனா, என்னங்க அண்ணா? நாத்தனாரை யெல்லாம் கட்டிக் கொடுத்தாச்சு. அவ அவ குடியும் குடுத்தனமுமா மகராசிகளா இருக்கா. எப்பவாச்சும் அம்மா வூடுன்னு வந்தா உண்டு. அதோடு கூட, ரெண்டு பொண்ணுங்களும் அக்கா தங்கச்சி மாதிரி ஒத்துமையா இருக்குதுங்க. நம்ப பொண்ணுக்கு இஞ்ச ஒரு குறையும் வராதுங்க, அண்ணா.” 

“தங்கபாப்பு, தன் அக்கா மவளைப் பத்தி பின்னெ எப்படிப் பேசும்!” 

“அதுக்கோசரம் சொல்லலே காமு. இந்தப் பக்கம் பாரு; இஞ்ச அண்ணா மட்டும் எனக்கு ஆரு?” 

“அண்ணா வாயே திறக்கலியே!” 

அவர் தன் மகனைச் சுட்டிக் காட்டினார். 

“பொண்ணப் பெத்தவன் அவன். அவனக் கேட்காம இந்தக் கிழத்தைக் கேட்டா!” 

“மாமா, செத்தெ இஞ்ச என்னப் பாத்துச் சொல்லுங்க….” 

“உன்னெ என்னடி பகல்லே பார்க்கறது?” 

“அட கிளவா!…”

ஊருக்குள் வந்ததும், தங்கபாப்புவிடம் தேவர் சொன்னார்: “பாப்பா சம்மதிப்பான்னு தோணுது, பாப்பு”. 

அவள் மகிழ்ச்சியுற்றாள். தன் முயற்சி பலித்தது திருப்தி அளித்தது. இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் செய்தி பரிமாறிக் கொள்ளப்பட்டது. தைக் கடைசியில் கல்யாணம். 

உறவையொட்டி தன்னைச் சுற்றிக்கொண்டுவந்த பொறுப்புக்களிலிருந்து விலகி, வேலையில் மூழ்கினான் சிதம்பரம். தோட்டத்தில் ஒரு பாதி வேலை முடிவடைந்து விட்டது. சிதறிக்கிடந்த குச்சிகளையும் கிளைகளையும் அப் புறப்படுத்தி விட்டார்கள். கருகிக் கிடக்கும் சிறுபகுதி தான் பாக்கி. அங்கு நிறைய வேலையில்லை. எல்லோரு மாகச் சேர்ந்தால் எட்டு நாட்களில் முடிவடைந்துவிடும். 

தோட்டத்திற்குச் சென்றவுடனே, புங்க மரத்தடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பஞ்சநாத ஆசாரியிடம், “சொளகரியங்களா?” என்று வினவினான். 

”வாங்க, போன காரியம் ஆச்சுங்களா? செய்தி காதுலே உழுந்துச்சு!” 

“இடம், ஊர், எல்லாம் எப்படி; புடுச்சு இருக்குங்களா?” 

“எடத்துக்கு என்னாங்க! ஒரு சௌகரியத்துக்கும் கொறச்சல் இல்ல. பாருங்க, போன வாட்டி கொள்ளடத் துக்கு அன்னண்ட வேலைக்குப் போயிருந்தோம். ஆறு மாசம் – ஒரு மவராசன் வீடு கொடுத்தார். வீடுன்னா அது. தாங்க வீடு! எட்டு ஜென்மத்துக்கும் மறக்க முடியாது. போங்க. வீடா அது!…”

“இது சத்தியா – சும்மா ஒப்புக்கு – ஒரு அவசரத்துக்குக் கட்டினது. இன்னும் கொஞ்ச நாளு போய்க் கல்லுவூடா ஒரு இருபது கட்டணும்” என்றார் தேவர். 

“அப்ப குடும்பத்தோட வந்துடலாம்…” 

”குடும்பம் என்ன, பொண்டாட்டியோடன்னு சொல்லு.” 

அவன் தலையை அசைத்துக் கொண்டு சிரித்தான்.

“பயலுக்குக் கல்யாணமாகி இப்பத்தான் ஒண்ணரை மாசம் ஆகுது…” 

தேவர் மீசையை ஒருபக்கம் தள்ளி விட்டுக்கொண்டு, எல்லோரையும் பார்த்தார். நாணம் நிறைந்த, பெருமை பூக்கும் நகைப்புக்கிடையில், நானும் சின்ன வயசில் இப்படித்தான். என்றார். குபீரென்று சிரிப்பு; கை தட்டல் ; தூரத்தில் இருந்தவர்களெல்லாம் ஒன்றாக வந்து கூடினார்கள். 

“பொண்ணுகிட்ட சொக்காதவன் ஆரு?” 

ஆச்சரியத்தோடு எல்லோரும் அவரையே பார்த்தார்கள். 

“நான் பொம்மனாட்டி இல்லே!” என்று சொல்லிக் கொண்டே நடக்க ஆரம்பித்தார். தோட்டம் முழுவதும் சுற்றி, வெட்ட வேண்டிய மரங்களை எண்ணினார். திரும்புகையில் பஞ்சநாத ஆசாரி கேட்டார், “சவுக்குப் போடப் போறீங்களா, தம்பி?” என்று. 

“இல்ல, ஆலெ வைக்கப் போறங்க”. 

“அதான் எல்லோரும் சொல்லுறாங்க”. 

‘செயல் பூர்வமாக நம்பிக்கையளிக்க இன்னும் கொஞ்ச காலமாகும்’ என்று சொல்லிக் கொண்டான். 

“இஞ்ச இன்னமெ கரும்பு, வெல்லமெல்லாம் சுளுவா கிடைக்கும்.” 

“கரும்பு மட்டும் தின்னுப்புட்டு ஒருத்தனும் உசிரோட இருக்க முடியாது, ஆசாரி.” 

“நூத்துலே ஒரு வார்த்தைங்க.” 

“நாங்க திடுதிப்புன்னு கிளம்பிட்டோம் ; ஒண்ணும் கவனிக்க முடியல்லே. சாப்பாட்டுக்கு என்ன பண்ணுறீங்க ஆசாரி?” 

“அதுக்கென்னங்க? தம்பி ‘அம்மாவைப் பாருன்னு’ ஒரு வார்த்தை சொன்னாங்க: பார்த்தோம். ஒரு கலம் கொத்தமல்லிச்சம்பா அரிசி கொடுத்தாங்க.சட்டிபானைக் கெல்லாம் அவுங்களே முன்னே இருந்து பாத்துக் கொடுத்தாங்க. சொந்த மவ மாதிரி ஒண்ணு ஒண்ணையும் பாத்தாங்க.” 

“அவ பொண்ண – ஒண்ணும் சரியாப் பண்ணி இருக்கமாட்டா.’ 

“அதெல்லாம் சும்மா சொல்லக் கூடாதுங்க. நாங்க கேட்கறதுக்கு முன்னாடியே செட்டா எல்லாம் கொடுத்தாங்க. நான்தாங்க கேட்க மறந்துட்டேன்; ஒரு அம்மி வேணும்; கிடைக்குமான்னு பாருங்க.” 

“நான் அனுப்பி வைக்கிறேன், ஆசாரி. இன்னும் ஏதாச்சும் வேணுங்களா?” 

“உங்க புண்ணியத்தில் எல்லாம் இருக்குங்க.”

அவர்கள் விடை பெற்றுக் கொண்டார்கள். 

பஞ்சநாத ஆசாரியின் வேலை தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. வாய்க்காலின் ஓரத்தில் இலைகளை இழந்து நிற்கும் புளிய மரங்களை வெட்டிக் கொண்டு போனார்கள். தெற்குப் பக்கத்தில் இனிப்புப் புளியமரம். செட்டியார் வீட்டிற்கு இதிலிருந்துதான் புளி போகும். மரம் இப்போது பட்டுப் போய்விட்டது. தீ சுட்டு விட்டது. முக்கால் வாசிக் கிளைகளை மரத்திலிருந்து தரித்த பின்னர், அடி மரத்தை வெட்டிச் சாய்க்கக் கோடாலியைத்தோளில் சாத்திக்கொண்டு போனான் தங்கவேலு. ராமு, அவனுக்கு முன்னே போய் மரத்தில் சாய்ந்து கொண்டு, வெற்றிலை போட்டுக் கொண்டிருந் தான். இவனைப் பார்த்ததும் தலையசைத்து, வரவேற்றான். 

வீட்டின்மீது மரம் சாய்ந்து விட்டால் – கோபுரத்தை அணைத்தாற்போல மரம் இருந்தால் அதை வெட்ட தங்கவேலுதான் போவான். கரணை கரணையாக மரத்தை வெட்டித் தோளில் சுமந்துகொண்டு வருவான். 

வேலையில் அவன் சூரன்; யாரும் அசைக்க முடியாது. அதே மாதிரி சாப்பாட்டிலும் சூரன்! ஒரு வேளைக்கு முக்கால்படி அரிசி; மெல்ல சுவைத்துச் சுவைத்துச் சாப்பிடுவான். கருவாடு சுட்டுவைத்தால் நாலு பிடி கூடச் செல்லும். சாப்பாட்டிற்குப் பிறகு, மொந்தைக் கள் வேண்டும் – கோழிக்கறியோடு. இத்தனையையும் தின்று விட்டு, ஒரு பேச்சு இல்லாமல், ஆட்டம் இல்லாமல், முழங் காலுக்கிடையில் தலையைப் புதைத்துக் கொண்டு குந்தியிருப்பான். 

யாராவது சீண்டிக் கோபமூட்டினால், உதடுகள் துடிக்கும். சிவப்பேறிய கண்கள் அலைபாயும். தெத்து வாய்; சரியாகப் பேச்சு வராது. இழுக்க இழுக்க. ‘ஒக்காளே ராத்திரிக்கு அனுப்பு’ என்பான். அவன் ஏக வசனம் அது; கொஞ்சமும் நாணமுறாமல் சொல்லுவான். வேலைக்கு செல்லுமிடத்திலெல்லாம் எப்படியோ ஒருத்தி அவனுக்குக் கிடைத்து விடுவாள். மற்றவர்களுக்கு அதிலே பொறாமை உண்டு; ஆத்திரம் உண்டு. அவன் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. 

அவன் வேலைக்கு வந்து சேர்ந்து எட்டு வருடங்கள் சென்றுவிட்டன. அவன் மனநிலை பிடிபடாமல் இருந்தது மா திரியே பூர்வோத்ரமும் பிடிபடவில்லை.தன்னைப் பற்றி, தன் ஊரைப்பற்றி, அவன் வாய் திறப்பதே இல்லை. ஒரு விதத்தில் ஏகாங்கி; இன்னொரு விதத்தில் பேராசைக்காரன். 

திடீர் திடீரென்று சில சமயங்களில் அவன் போக்கு கள் மாறும். கீழ்க் கிளையிலிருந்து உச்சிக்குப் போய், இன்னொரு கிளைக்குத் தாவுவான். 

‘எலே வேலு, உளுந்து வக்கப் போறடா!’ 

‘ஏன்? ஒக்காவுக்குப் புருஷன் போயிடுவானோன்னு பயமா?’ என்று விகாரமாக நகைப்பான். அப்புறம் இரண்டே தாவலில் கீழே இறங்கி வந்து,தாடையைப் பிடித்துக் கொண்டு கொஞ்சுவான். அவனுக்குத் தனிச் சிறப்புக்களும் சிறுமைகளும் உண்டு. குடித்துவிட்டுத் தன்னை மறந்து பல தடவைகள் கிடந்திருக்கிறான். வேலி தாண்டி வரச் சொன்னவளின் வீட்டிற்குப் போய், அவள் கையாலேயே அடிபட்டுத் திரும்பி வந்திருக்கிறான். இவை யெல்லாம் அவன் பெருமையைக் குறைத்து விடவில்லை. 

வேலைக்கு வந்ததிலிருந்து, இரண்டு நாட்கள்கூட சேர்ந்தாற்போல உடம்பு சரியில்லை என்று அவன் படுத்த தில்லை. பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு, இரவில் சிலபோது தனியாகக் குந்தியிருப்பான். 

‘உடம்பு சரியில்லையா வேலு?’ 

‘சுமாரா இருக்கு.’ 

‘வெந்நீர் போட்டுத்தரேன். குளிச்சுட்டுப் படுத்துக்கோ.’ 

காலையில் எல்லோருக்கும் முன்னே ஆற்றில் குளித்து விட்டு, சுருட்டுப் பிடித்துக் கொண்டிருப்பான். 

‘ராத்திரியெல்லாம் ஒரேமுட்டா கத்திக்கிட்டு இருந்தியே!’ 

‘வியாதிக்கு நான் படிஞ்சிட மாட்டேண்டா!’

‘பொம்மனாட்டிக்கி?’ 

‘எலே, உன் வாயெ மூடுடா!’ என்று கத்துவான். அப்புறம் அவன் கையைப் பிடித்துக் கொண்டு, தாழ்ந்த குரலில் ரகசியம் போல, ‘அங்க விஷயம் இருக்கு’ என்பான். 

எல்லோருடைய பார்வையும் அவன்மீது பதியும். 

‘பொம்மனாட்டின்னா என்ன? ஓடுற தண்ணி. இந்தத் துறையிலே ஒருத்தன் ரெண்டு கையள்ளிக் குடிக்கிறான்; அந்தத் துறையிலே ஒருத்தன் ரெண்டு கையள்ளிக் குடிக் கிறான்; அதான். தண்ணியெ எங்க அள்ளிக் குடிச்சாலும் ஒரு மாதிரிதான் இருக்கும். எலே, ராமு உனக்கு வித்தியாசம் தெரியுதா?’ 

ராமு பதில் சொல்ல மாட்டான். அவனுக்குப் பிடிக்காத விஷயம் இது. 

தங்கவேலு மரத்தின்மீது ஏறிக்கொண்டே சொன்னான்: ‘முதலாளி வராங்க.’ 

“சரி.” 

இவனும் மேலே ஏறினான். 

தூரத்தில், யாரோ இரண்டு பேரோடு, சிதம்பரம் வந்து கொண்டிருந்தான். 

அத்தியாயம் – 14

கல்யாணம் நெருங்கி வரவர, குஞ்சம்மாவுக்கு வேலைகள் கூடிக்கொண்டேவந்தன. அத்தைக்குப் பிறகு – ‘இப்படிப் பண்ணலாம்னு தோணுது பாப்பா’ என்று வழி நடத்திச் செல்லும் தேவர், சிதம்பரத்தோடு கரும்பாலை வைக்கும் சிந்தனையில் மூழ்கிய பிறகு – அவள் தவித்துப் போனாள். கவலையும் குழப்பமும் மிகுந்தன. ஆனால் விரைவிலேயே அவள் சமாளித்துக் கொண்டாள். தன் பலத்தின்மீதும் அறிவுமீதும் நம்பிக்கை விழுந்தது. 

எப்பொழுதாவது சாப்பாட்டு வேளையில் ‘வேலெ எந்த மட்டுல இருக்கு? கல்யாணம் கிட்டத்துல வந்துடுச்சே!’ என்று அவள் கணவன் கேட்பான். 

கண்களைத் தாழ்த்தி நெடிது நோக்குவாள்; பதி லொன்றும் வராது. அவனும் எதிர்பார்க்க மாட்டான். சாப்பாடு ஆனதும் கையைத் துடைத்துக்கொண்டு, ஈரம் உலரும் முன்னே வெளியே போய்விடுவான். அவன் போக்கே தனி. பொறுப்புக்களிலிருந்து நழுவிக்கொண் டோடும் சுபாவம்; எதைப் பற்றியும் சிரத்தை கொள் ளாத மனம். சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினால், அடுத்த வேளைச் சாப்பாட்டிற்குத்தான் வருவான். 

கல்யாணமான புதிதில் குஞ்சம்மா அவன் போக்குப் புரியாமல் திகைத்துப் போனாள். தன் வாழ்வு பாழானது மாதிரி ஆத்திரம். தன் பெற்றோர்கள் மீது தாள முடியாத. வெறுப்பு. அவர்களைப் பழி வாங்குவது மாதிரி மூன் றாண்டுகள் தாய்வீட்டுப் பக்கம் தலை காட்டாமல் மனம் புழுங்கித் தவித்தாள். பாப்பாவைக் கருவுற்ற ஏழாவது மாதம், வாழ்க்கை சகிக்க முடியாமல் போய்விட்டது அவளுக்கு. 

“அத்தே, ஒரு நாளைக்கு தூக்கு மாட்டிக்கப் போறேன்” என்று காலில் விழுந்தாள். கணவனைப் பெற்றவள் அவளை வாரி அணைத்துக் கொண்டாள். 

“பாப்பா, எங்களே நட்டாத்திலே விட்டுட்டுப் போயிடாதேம்மா!” – அவள் குரல் உடைந்து கம்மியது. 

அதற்குப் பின்னால் அத்தையின் கவனிப்பு கூடியது. சொந்த மகளுக்கும் மேலாகப் பாவித்தாள். பாப்பா பிறந்த பின்னால் – அத்தையின் அன்பான கவனிப்பும் ஆலோசனைகளும் கிடைத்த பின்னால் – அவளுக்கு வாழ்க்கை சுலபமாகியது. கணவனின் போக்கை அப்படி யொன்றும் பொருட்படுத்த வேண்டியதில்லை, அது தன்னை அமுக்கிவிடாது என்பதையும் தெரிந்து கொண் டாள். அத்தையிடமிருந்து ஒவ்வொன்றையும் கற்றுக் கொண்டாள். அத்தையின் பேச்சு, காரியம், எல்லாம் தனி யானது. செட்டும், குறை காண முடியாததும், லேசில் பிடித்துக் கொள்ள முடியாததுமான போக்கு. 

யாராவது வந்து, ‘அக்கா செத்த உங்க சங்கிலியைக் கொடுங்க. கல்யாணத்துக்குப் போயிட்டு வந்து தரேன்’ என்றால், ‘என்னெக் கேட்டா? பாப்பாவைக் கேளுங்க. அவதான் எல்லாம். நான் சும்மா வெத்து ஆளு,தங்கச்சி’ என்பாள். 

குஞ்சம்மாவோ, ‘என்னங்க இது, என்னெ வந்து கேக்கிறீங்க! நான் ஆரு? அத்தெ இருக்காங்க, அவுங்க தானே கொடுக்கணும்!’ என்பாள். 

‘அத்தையும் மருமவளும் ஊரையே வித்துப் புடுவீங்க’ என்பார்கள். 

கல்யாணம் அருகில் வரவர அத்தையின் நினைவு பெருகிக் கொண்டே இருந்தது. 

‘அவுங்க கிட்ட இருந்தா ஆனை பலம். வேல என்னமா ஓடும்! அதுக்கெல்லாம் புண்ணியம் பண்ணியிருக்கணும்; முன்ஜென்மத்துலே கொடுத்து வச்சிருக்கணும்.’ 

மாடுகள் ஓடும் சப்தம்: யாரோ இரண்டு பேர் இரைந்து பேசிக் கொள்ளும் சப்தம். குஞ்சம்மா காமரா அறையை விட்டு வெளியே வந்தாள். 

முற்றத்தில் ஏந்திரம் சுற்றுகிறது; கல்யாணி பொன்னாக மாவு அரைக்கிறாள். அதில் குஞ்சம்மாவுக்குத் திருப்தி. அவள் கைக்குத் தனி ராசி ; கொட்டும் மாவைத் தொட்டுப் பார்க்கையிலேயே பதம் தெரிந்துவிடும். எட்டு வயதில் தாய்க்குத் துணையாக வந்தவளுக்கு வாழ்க்கை முழுவதும் இது ஒரு தொழிலாகிவிட்டது. 

கல்யாணி சுற்றிய ஏந்திரத்தை நிறுத்தி, “பொன்னம்மாவுக்கு சாயந்தரம் என்னக்கா போட?” என்று கேட்டாள். 

பத்து நாட்களாக வீட்டின் கொல்லைப் புறத்தில் நான்கு உரல்கள் நெல் குத்திக் கொண்டிருந்தன. பத்தாயத்திலிருந்து கொத்தமல்லிச் சம்பா நெல்லை எடுத்து வெளியே போட்டாள் குஞ்சம்மா. புழுக்கிக் காய வைத்து, குத்திக் கொழித்துக் கொடுப்பது பொன்னம்மா வேலை. பறச்சேரியிலிருந்து காலையில் வருகின்றவளுக்கு மாலை வரையில் வேலை இருக்கும். அவள்கூட இரண்டு பெண்கள் வாழா வெட்டியான பெரிய மகள் ; ஒரு வருஷத்திற்கு முன்னே வந்த சிறிய மருமகள். 

“என்னெக் கேக்கணுமா? பதக்குப் போடேன்!”

“அக்கா பேச்சு, அவுங்க அத்தை பேச்சு மாதிரியே இருக்கு!” 

குஞ்சம்மா அவளை ஏறிட்டுப் பார்த்தாள். 

“அவுங்க இருந்தா எனக்கென்ன கொறச்ச ! ராசாத்தி யாட்டம் இருப்பேன் அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும். அம்மாம் புண்ணியம் நான் பண்ணலே” என்று சொல்லிக் கொண்டே வாசலுக்குப்போனாள். 

இன்னும் எட்டுக் கலம் நெல் குத்த வேண்டும். ஆறு மரக்கால் மாவரைக்க வேண்டும். ராமசாமி செட்டியாரிட மிருந்து ஒன்பது மரக்கால் பச்சைப் பயிறும், முக்குறுணி காராமணியும் வாங்கிவந்து உடைத்துத் தீட்டவேண்டும். 

வெள்ளிக்கிழமை மாரியம்மன் கோவிலில் பூசை ; மாவிளக்கு – ஒவ்வொரு சுப காரியத்திற்கு முன்னேயும் நடப்பது. சம்பிரதாய பூர்வமாக அதற்கு முக்கியத்துவம் உண்டு. 

சாலையில் ஒரு வண்டி சென்றால், மணியோசை கேட்டால், அடங்காத ஆவலோடு வாசலுக்கு வருவாள். சித்தமல்லியிலிருந்து அவள் சகோதரி கோகிலமும், பட்ட வத்தியிலிருந்து நாத்தனார் சேதுவும் வரவேண்டும். ‘பத்து நாட்களுக்கு முன்னதாகவே அத்தாச்சியை அழைத்துக் கொண்டு வருகிறேன்’ என்று செய்தி அனுப்பியிருந்த கோகிலம் இன்னும் வரவில்லை; தங்கையின் வருகை யாலேதான் அத்தாச்சி வருவதும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. 

பெரிய குடும்பம்; சின்னஞ் சிறுசுகளாக நான்கு குழந்தைகள். எல்லாப்பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டிருக்கும் முதல் மருமகள் அவள் சட்டென்று புறப்பட்டு வரமுடியாது. அத்தாச்சி அப்படியல்ல. பிச்சுப் பிடுங்கல் இல்லாத தனிக்குடும்பம்; ஒற்றை ஒற்றையாக இரண்டு பேர். கடுமையாக ஒரு வார்த்தை பேசத் தெரியாத அண்ணன். நினைத்த போது விசுக் கென்று வண்டியைக் கட்டிக் கொண்டு வந்துவிடலாம். 

அவள் காத்துக் கொண்டிருக்கும் போதே வண்டி வந்துவிட்டது. பளீரென்று மஞ்சள் வீசும் முகத்தோடு அத்தாச்சி இறங்கினாள். சந்தோஷத்தால் குஞ்சம்மாவின் மனம் நிறைந்தது. வேகமாகப் படி இறங்குகையில். பட்டுப்புடவையைச் சற்றே தூக்கிப் பிடித்துக் கொண்டு கோகிலம் இறங்குவது தெரிந்தது. இரண்டு பேரும் வந்து விட்டார்கள். 

“வாங்க அத்தாச்சி!” சேதுவின் கரத்தைப் பற்றிக் கொண்டு, தன் சகோதரியைப் பார்த்துப் புன்னகை பூத்தாள் குஞ்சம்மா. 

“ரெண்டு பேரும் வராம என்னமா தவிச்சுப் போயிட் டேன் தெரியுங்களா, அத்தாச்சி?” 

“என்னாலேதான், அக்கா! நாலு நாளா பயணப் பட்டேன். ஒண்ணு ஒண்ணா வேலெத் தடங்க.” 

குழந்தைகள் வண்டியிலிருந்து குதித்துப் பெரியம் மாவைத் தாண்டிக்கொண்டு உள்ளே ஓடின. 

பாப்பா, காமரா அறையிலிருந்து வெளியே வந்து குழந்தைகளை அணைத்துக் கொண்டாள். ‘இஞ்ச வா, பாப்பா.’ சின்னம்மாவின் குரல் கேட்டு முகத்தைத் திருப் பிப் பார்த்தாள். அவள் முகம் சட்டென்று மாறியது. இனந் தெரியாத வெட்கம்: பின்னுக்கு நகர்ந்தாள். 

“இஞ்ச வா, அம்மா.” சேது அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டாள். பாப்பா கூச்சமுற்றாள். பொறுக்கமுடியாத மாதிரி இருந்தது. 

“நம்ப பாப்பாவுக்கு இப்பவே வெட்கம் வந்துடுச்சு” 

“நாளைக்கு வாக்கப்படற பொண்ணுயில்லையா?” 

“அத்தெ, சும்மா இருக்க மாட்டீங்க?” 

“மாட்டேன்!” 

“எனக்கு கோபம் வரும்.” 

“வரட்டும்.” 

“அப்புறம் பேச மாட்டேன்.” 

“யாருகிட்டே?” 

“உங்க கிட்டேத்தான்.” 

“என் கிட்டயா, இஞ்ச பாரு!” சேது தாவிப் பிடிப்பதற்குள் பாப்பா ஓடிவிட்டாள். 

சேதுவும் கோகிலமும் தங்களையறியாமலே பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அவர்கள் வீட்டுக் கல்யாணம்; அவர்கள் வீட்டுக் காரியம். ஒவ்வொரு காரியத்தையும் முடிவெடுக்கக் குஞ்சம்மா தேவைப்பட்டாள். 

“அக்கா செத்தெ இஞ்ச வாயேன்.” கொல்லையில் மேலகரத்திலிருந்து அண்ணாமலைப் படையாச்சி கொண்டு வந்திருந்த உளுந்தை அளந்து கொட்டிக் கொண்டு கூப்பிட்டாள் கோகிலம். 

“என்ன கோகிலம்?” 

“ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லி இருக்கப் படாதா, அக்கா? நான் கொண்டாந்து இருப்பேனே! போனவருஷம் எப்பவும் இல்லாம எட்டுக்கலம் கண்டுச்சு. அப்படியேதான் கெடக்கு.” 

“நீ நாலு பேரோட இருக்கிறவ. ஒண்ணுன்னா அவுங்களுக்கெல்லாம் பதில் சொல்லணும். போன தடவை நம்ப வயல்ல மூணு கலம் கண்டுச்சு. செட்டியார் கல்யாணத்துக்கு கேட்டாங்கன்னு கொடுத்தாச்சு. இந்த வாட்டி வெறப்புக்கூட இல்லே; அவுங்கதான் தம்பி கூட ஆலெ ஆலென்னு சுத்திக்கிட்டு இருக்காங்களே.” 

“அத்தாச்சி, அப்பா கூப்பிடறாங்க” என்றாள் சேது. 

“இதோ.” 

பெரிய திண்ணையை அடைத்துக் கொண்டு பூசாரி ஆறுமுக படையாச்சி, தோப்புத்துறை கன்னையாபிள்ளை, மேலகரம் சாமிநாத முதலியார், நெய்விளக்கு சாமியப்பா, மோளக்கார உத்திராபதிப்பிள்ளை – உட்கார்ந்திருப்பது தெரிந்தது. சிறிய திண்ணையின் தூண்மறைவில் சிதம்பரம் இருந்தான். அவனையொட்டினாற்போல தேவர். அத்தனை பேரையும் ஒருசேரக் கண்டதும் குஞ்சம்மா உள்ளேயே நின்றுவிட்டாள். 

“மாமா, செத்தெ வந்துட்டுப் போங்களேன்.” தேவர் உள்ளே வந்தார். 

“எல்லோரும் வந்துட்டாங்க; எப்ப பந்தப் போடச் சொல்ல?” 

“நமக்கு நாளு ரொம்ப இல்லெ; சீக்கரமா ஆரம்பிக்கச் சொல்லுங்க, மாமா. நாளைக்கே ஆரம்பிச்சாக்கூடத் தேவலாம். அப்புறம், அந்த அண்ணன் அங்கெ இங்கேன்னு போயிடுவாங்க.” 

“என்னையா தங்கச்சி சொல்றே? இப்ப அப்படி யெல்லாம் பண்ணமாட்டேன்!” 

“கல்யாண காலம் பாருங்க, அண்ணா!”

“நம்ப கல்யாணம் மாதிரி அம்மா இது…” 

அவள் லேசாகச் சிரித்துக் கொண்டே முன்னே வந்தாள். 

“நடுப்பற மணப்பந்த. வடக்கெ இருந்து கிழக்கெ அடச்சு – போனவாட்டி சுப்பு ஐயர் வூட்டுலே போட்டது மாதிரி – போட்டுடறேன். என்ன தங்கச்சி, சரிதானே?” 

“நம்ப வூட்டுக் கல்யாணம். அப்புறம், சொல்ல ஒண் ணுமில்லேங்க!” 

“தங்கச்சி, அந்த அத்தை மாதிரியே பேசுது!” என்றான் தேவரைப் பார்த்தபடி; 

“நீங்க ஓர்த்தர்தான் பாக்கி – அதுவும் இப்ப சொல்லிட்டீங்க!” 

“அத்தையைப் பன்னண்டு வருஷமா எனக்குத் தெரியும். இந்த வூட்டுக்கு ஆயிரம் வாட்டி வந்திருக்கேன். அவுங்க அருமை எனக்குத் தெரியும்.இப்ப இப்ப தங்கச்சியைப் பாக்கற அப்ப அந்த ஞாபகம் வந்துடுது…” 

அவள் அதற்குப் பதிலொன்றும் அளிக்கவில்லை. மௌனமாகக் கன்னையா பிள்ளையைக் கொல்லைப்புறம் அழைத்துக்கொண்டு போய், வீட்டையொட்டிச் சார்ப்பு இறக்குவதைப் பற்றி அவள் கூறிய யோசனைகளைக் கேட்டதும், “இப்பத்தான் தங்கச்சி புரியுது – பட்டா அண்ணன் எதுக்கு வூட்டு விஷயத்திலே கவனம் இல்லாம இருக்குதுன்னு!” 

குஞ்சம்மா லேசாகத் தலையசைத்தாள். 

“நாளைக்கு ஆரம்பிச்சிடறேன், தங்கச்சி.”

“ரொம்ப நாளு நமக்கு இல்லே.” 

“எனக்குத் தெரியாதா?” 

இரண்டு பேரும் திரும்பி வாசலுக்கு வந்தபோது, சிதம்பரமும் தேவரும் எதிர்ப்பட்டார்கள். 

“என்ன, எல்லாத்தியும் கேட்டுக்கிட்டே இல்லே?”

“நம்ப வூட்டுக் கல்யாணமாச்சே!” 

“அட அப்பா, அதுக்குத்தான் இத்தனை நாளு கழிச்சுவந்தே!” 

“எட்டு நாளா பயணப் பட்டேன். ஒவ்வொரு நாளும் தட்டிப் போச்சு…” 

“பெரிய வேலைக்காரன் ; ஊருக்கெல்லாம் வேண்டியவன்…” 

“அண்ணா இப்படித்தான் எப்பவும் பரிகாசம் பண்ணுவாங்க!” என்று சிதம்பரம் பக்கம் திரும்பிச் சிரித்தான். 

“அப்ப … வரேங்க.” குஞ்சம்மா தலைகுனிந்தபடியே வீட்டிற்குள் சென்றாள். 

அவள் போன பிறகு, கன்னையாப் பிள்ளை தணிந்த குரலில் தேவரிடம் சொன்னார்: “நான் சும்மா சொல்லலே அண்ணே; அண்ணி செத்து எங்கேயும் போயிடலே; அப்படியே தங்கச்சி மனசிலே புகுந்துட்டாங்க!” 

முழு மனத்தோடு அதனை அங்கீகரிப்பது மாதிரி தேவர் தலையசைத்தார். 

இவர்கள் வாசலுக்குத் திரும்பி வந்தபோது, பெரிய கொத்தனார் வந்தார். வீட்டைக் கட்டி முடித்துவிட்டார். பூச்சு வேலை முடிந்து, ஓடு வேய்ந்தாயிற்று. இன்றைக்கு எட்டாம் நாள் கிரகப் பிரவேசம்; அதற்கு இரண்டு நாட்கள் கழித்துக் கல்யாணம். 

கிரகப்பிரவேச விஷயத்தில், எல்லோருடைய அபிப் பிராயங்களுக்கும் விரோதமாக நடந்து கொண்டான் சிதம் பரம். மேள சப்தமும் ஐயரும் இல்லாமல் புதுமனை புகு விழா முடிவடைந்துவிடும். அதையெல்லாம் விரும்பாத தேவர், இரண்டு முறைகள் ஜாடையாகப் பேசினார். அவனோ தன் தீர்மானத்தின்மீது விடாப்பிடியாக இருந்தான். 

கொத்தனார் வாசல் புன்னை மரத்தில் சாய்ந்து கொண்டு கேட்டார்: “கல்யாணத்துக்கு அப்புறம் ஆலெ வேலயெ ஆரம்பிக்க வேண்டியதுதானேங்க?” 

“நிச்சயமாங்க.” தேவரைப் பார்த்துக் கொண்டே சொன்னான் சிதம்பரம். 

“கொஞ்சம் கல்லு மண்ணெல்லாம் தயார் பண்ணி வச்சிடுங்க. மடமடன்னு அடிச்சுத் தள்ளிடலாம்.” 

“ரெண்டு நாளு லே பாத்துட்டு, ஆளு விடறேன். செத்த இஞ்ச வ ந்து, போதுமான்னு பாத்துட்டுப் போ.” 

“பின்னே, தம்பி வேலெக்காக மத்த வேலையை யெல்லாம் செத்தெ தள்ளி வச்சிட்டேன்.” 

அவன் அவரை நோக்கிப் புன்னகை பூத்தான். 

“அப்ப, நான் வரேங்க.” 

“பிச்சையைப் பாக்கணும்; அப்படித்தானே போறீங்க?” 

“ஆமாங்க.” 

“வாங்க, சேந்து போவலாம்.” 

ஐயனார் கோவிலுக்கு எதிரில் வண்டி வந்து கொண்டு இருந்தது. 

“ஆரு? நம்ப ஐயர் வண்டிகணக்கா இருக்கே!”

“நேத்திகிழக்கால போனாங்க; இப்ப திரும்பி வராங்க போல இருக்கு.. என்று தேவர் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே சாம்பமூர்த்தி ஐயரின் வண்டி நின்றது. எல்லோரும் சற்றே ஒதுங்க, தேவர், “வாங்க சாமி!” என்று வரவேற்றார். 

“பேத்திக்குக் கல்யாணம் வந்துட்டாப் போல இருக்கு…” 

”சாமி வந்துடணும்.” 

“நான் வராமலா?” 

சாம்பமூர்த்தி ஐயர் வண்டியை விட்டிறங்கினார். அவர் பார் வை சிதம்பரத்தின்மீது விழுந்தது. “வீடு முடிஞ்சாச்சா?” என்றதற்கு அவன் சிரித்தான். 

அவர்கள் பேச்சு திடீரென்று பருவகாலத்தைப் பற்றியும் மாடுகளுக்கு வரும் கோமாரி நோயைப்பற்றியும் சென்றது. கன்னையாப் பிள்ளை, வெளியூரிலிருந்து ஒரு மாட்டு வைத்தியனை இங்கே கொண்டுவர வேண்டும் என்றார். ஐயருக்கு அது சரியாகவே பட்டது. இந்த விஷயம் முழுவதும் சிதம்பரத்திற்குப் புரியவில்லை. அவன் மௌனமாக, அவர்கள் வாயை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 

வண்டியில் ஏறப்போன ஐயர், கொஞ்சம் தயங்கி, “சிதம்பரம், நீ காங்கிரசுக்குப் போயிருக்கியோ?” என்று கேட்டார். 

“இல்லீங்க, இன்னும் பாக்கலீங்க.” 

“நானும் பாத்ததில்லே.ஆனா,ரொம்ப வேடிக்கையா இருக்குமாம். பெரிய பெரிய தலைவாள்ளாம் வருவாளாம். பேச்சும் கூட்டமும் பிரமாதமா இருக்குமாம்! ஒரு வாட்டி தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளை,கூறைநாடு சண்முக படையாச்சி, நாகப்பட்டினம் அப்துல் காதர், எட்டய புரம் சுப்பிரமணிய பாரதி எல்லாரும் இந்த வழியாத்தான் போனா. அவாளுக்கு ஒரு பெரிய மாலை போட்டோம்.” 

“அப்படிங்களா?” 

“அந்த வருஷம் காங்கிரசு சண்டையிலே முடிஞ்சுச் சாம்! நான் அடுத்த காங்கிரசுக்குப் போகலாம்ன்னு நெனச்சுண்டு இருக்கேன்!” 

“அதுக்கு ரொம்ப நாளு இருக்குப் போல இருக்குங் களே. இப்பத்தானே, ரெண்டு மாசத்துக்கு முன்னே காங்கிரசு முடிஞ்சிச்சு.” 

“ஏழு மாசத்துக்கு முன்னாடி – கல்கத்தாவிலே முடிஞ்சுது.என்ன பேச்சு; என்ன கூட்டம்! நெய் விளக்கு ராமசுப்பிரமணியம் அங்கெ நடந்ததை யெல்லாம் சொல்லறதை இன்னிக்கெல்லாம் கேட்டுண்டே இருக்க லாம். அவன் சொல்றது அப்படியே ‘சுதேசமித்திரன்’லே வந்திருக்கு…” 

“அவுங்க நல்லாப் பேசுவாங்க.” 

“இவன் பேச என்ன இருக்குங்கறேன்? அங்கெ பாத்தான்; இஞ்ச பேசறான்.” 

“அதுவும் சரிதாங்க.” 

“அடுத்த வாட்டி நான் கட்டாயம் போகப் போறேன். ஏன், நீயும் வாயேன்!” 

“அவசியம் வரேங்க. ஒரு வாட்டி நான் சென்னெப் பட்டினத்திலெ இருந்தேன். கடல் கரையில் ஒரு கூட்டம். கூட்டம்னா அப்படி ஒரு கூட்டங்க.பாலன்னு ஒருத்தர் வங்காளின்னு சொல்லிக்கிட்டாங்க. அட, அப்பா என்ன பேச்சு! என்ன வேகம்! அப்படியே அசந்து போயிட்டேங்க…….!” 

”பால்… வெறும் பால் இல்லே. பிபின் சந்திர பால் ‘சுதேசமித்திரன்’லகூட அடிக்கடி வருமே!” 

“பாக்கறேங்க.” 

“அவருதான் இப்ப பெரிய பேச்சாளர். இன்னொ ருத்தர் திலகர். அவர் பம்பாய் பக்கம் …” 

வண்டிக்காரன் பக்கத்தில் வந்து, அவர் காதில்மட்டும் விழும்படியாக, “அம்மா, போவட்டுமான்னு கேட்கறாங்க” என்றான். 

“ஓ! அவ, வண்டியிலெ காத்துண்டு இருக்காளா ! பேச்சு வாக்கிலே மறந்துட்டேன் அப்ப, சிவனாண்டி, கல்யாணத்திலே பாக்கலாம்; என்ன சிதம்பரம், வீட்டுப் பக்கம் வாயேன்! பேசலாம்….” என்று சொல்லிக் கொண்டே போய் வண்டியில் ஏறினார். 

“அப்ப, நானும் உத்தரவு வாங்கிக்கிறேன்.” 

“உங்க வேலெதான் பாக்கி.” 

“சொல்லிட்டா, இந்தக் கொத்தன் மாறமாட்டான்.” 

“நான் அதுக்குச் சொல்லலீங்க.” 

“மனுஷனுக்கு நாக்கு ஒண்ணுதான்.” 

அவன் மௌனமாக இருந்தான். 

“அப்ப உத்தரவு கொடுங்க.”

“கல்யாணத்துக்கு வந்துடணும்.”

“கட்டாயமா!” 

ஒவ்வொருவரும் தனித்தனியே பிரிந்து சென்றார்கள். மத்தியானச் சாப்பாட்டிற்குப் பிறகு, சிதம்பரம் தேவ ரோடு புதிய வீட்டைப் பார்க்கச் சென்றான். வீடு தூரத்திலேயே தெரிந்தது. வீட்டை யொட்டி இருந்த ஒவ்வொரு மரத்தையும் அவன் வெட்டி விட்டான். கொல்லையிலிருந்த வேர்ப்பலாதான் கடைசியாக வெட்டப் பட்டது. 

மூங்கில் படலைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார் கள். தோட்டமாய் ஒரு காலத்தில் இருந்த தன் நிலத்தைத் தேவர் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தார். என்ன மாய் வெறிச்சோடி விட்டது. அவரை, பாகல், மிதிப் பாகல், கொம்புப் பாகல், கொத்தவரை, கத்தரி, மிளகாய், பரங்கி, புடலை சடை சடையாய்ப் பிடித்துக் காய்த்த தெல்லாம் ஒரு பழங் கனவு போலப் பட்டது. இந்த மண்ணில்தான் எல்லாம் விளைந்ததா? 

தோட்டம் இனி அவர் உடைமையல்ல ; இன்னொரு வன் சொத்து. பேசித் தீர்க்கா விட்டாலும் – பத்திரம் எழுதா விட்டாலும் அது அவன் கைக்குப் போய்விட்டது. தன் விருப்பப்படி யெல்லாம் மண்ணைக் கிண்டிக் கிளறு வான்; தலையிட முடியாது. 

அந்த வருடந்தான் தோட்டத்தில் மிளகாயும் கத்தரி யும் போடவில்லை. பத்தொன்பது வருடமாகக் கார்த்தி கையில் நாற்று விடுவதுபோல இந்த வருடமும் நாற்று விட்டார். ஆனால், பிடுங்கி நட முடியவில்லை அவருக்கு வேலை சிதம்பரத்தோடு; குஞ்சம்மாவுக்கு வீட்டில் வேலை. நாற்று முற்றிக் கொண்டே வந்தது. என்ன செய்வ தென்று தெரியவில்லை. அப்போதுதான் ராமசாமிப் படையாச்சி, “நாத்து இருக்குமா, தேவரே?” என்றார். 

தேவருக்கு சந்தோஷம் தாள முடியவில்லை. “எல்லாத் தையும் புடுங்கிக்கிட்டுப் போ!” என்றார். ராமசாமிப் படையாச்சி கையில் சிக்காத நாற்றுக்கள் வளர்ந்து காய்த்துக் குலுங்குகின்றன. தோட்டம் முழுவதுமே பிடுங்கி நட்டிருந்தால் பழம் வந்திருக்கும். முதல் ஈடு பழங்கூட எடுத்திருக்கலாம். 

சிதம்பரம் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு, “வாங்க,மாமா” என்றான். 

சிவனாண்டித் தேவர் படியேறி உள்ளே சென்றார். டு கண்ணைப் பறித்தது. எல்லா வேலைகளும் முடி வடைந்து விட்டன. சம்பிரதாய பூர்வமாகக் குடிவர வேண்டும்; அவ்வளவுதான். 

‘எனக்கொரு வீடு இருக்கிறது!’ 

வீடு மாதிரி ஆலை சீக்கரத்தில் அமையாது போலத் தோன்றியது. ஒரு வேளை பங்குனி, சித்திரையைத் தாண்டிக் கூடப் போகலாம். ஆலை என்றால் எஞ்சின் ரூம் கட்டவேண்டும். சர்க்கரையைச் சேமித்து வைக்க ஒரு கிடங்கு; கரும்பு அடுக்க ஒரு கிடங்கு; கணக்கு வழக்குப் பார்க்க ஒரு அறை; எடுபிடிச் சாமான்கள் போட்டுவைக்க ஐந்தாறு அறைகள் – தற்சமயம் இவ்வளவுதான். அப்புறம் போகப் போகப் பார்த்துக் கொள்ளலாம். 

ஆலை – அதில் வேலை செய்கின்றவர்களுக்கு வீடு. வெளியூர் வாசிகளுக்கு இது ஒரு பிரச்சினை. இப்போது இருக்கிற வீடுகளைக்கொஞ்சம் மாற்றி அமைத்தால் ஒன்பது குடும்பங்கள் தங்கலாம்; அது காணாது. வேலை தொடங்கி விட்டால்-சிரத்தையோடு கவனிக்க வேண்டிய விஷயம் அது. ஆட்கள் கிடைத்தால், மடமடவென்று வீடுகள் கட்டித் தள்ளி விடலாம். ஆட்கள் எங்கிருந்து கிடைப்பார்கள்? 

தோட்டத்திற்கும் சாலைக்கும் இடையே இருந்த ஒற்றையடிப் பாதையை அகலப்படுத்தி, வண்டி போக ஏற்றதாக மாற்றியமைத்திருந்தான். அந்த வேலைக்கு ஆட் களே கிடைக்கவில்லை. அவனும் பழனியாண்டியும் மாறி மாறி மண்வெட்டி பிடித்தார்கள். ஒரு மைல் சாலை ரெட்டைச் சாலை ; இரண்டு வண்டிகள் போகலாம். 

சாலையைப் பார்த்து தேவர் களிப்புற்றார். 

“தம்பி, ஒண்ணு ஒண்ணையும் புதுசு புதுசாச் செய்யுது.” 

“பாருங்க, மாமா, நமக்கு எப்பவும் வண்டி வரும் ; போவும். அதான் …” 

“வாஸ்தவங்க, தம்பி.” 

அவன் புது வண்டிதான் முதன் முதலாகப் புதுச் சாலையில் வெள்ளோட்டம் ஓடியது. தேவரின் யோசனை யின் பேரில் உருவான வண்டி; அழகும் கம்பீரமும் நிறைந்த வில்வண்டி. தோப்புத்துறை ராஜமையர் வண்டியைப் ‘பீட்’ அடித்து விட்டதாகச் சொல்லிக் கொண்டார்கள். 

வண்டி மாதிரி மாடும் அமைந்துவிட்டது, சிதம்பரத் திற்கு. காங்கேயம் மாடு; தவிட்டு நிறம்; வீச்சு வீச் சாய்க் கொம்புகள்; சீவி, சின்னக் குஞ்சம் கட்டினான் பாவாடைப் படையாச்சி. மல்லியம் கோவர்த்தன செட்டி யார் மாட்டை விற்பதாகவே இல்லை. தரகுக்கு மேல் தரகெல்லாம் போய்த் திரும்பி வந்துவிட்டது. 

சிதம்பரம் யோசித்துப் பார்த்தான். பாங்கான வண்டி மொட்டை மாடு கட்ட முடியாது: உயர்ந்த ஜாதி மாடுதான் கட்டவேண்டும். செட்டியாரின் மாடாக இருந்தால் ரொம்பப் பாங்காய் இருக்கும். அக்கரைக்குப் போனவன் அப்படியே ஒரு மூச்சாக நடந்து செட்டியார் வீட்டிற்குப் போனான். அவனைச் செட்டியார் உடனே அடையாளம் கண்டு கொண்டார். ஆலையைப் பற்றியும், சர்க்கரையைப் பற்றியும் வெகு உற்சாகமாகப் பேசினார். அவன் ஒவ்வொன்றுக்கும் மிகுந்த கவனத்தோடு பதில் அளித்தான். அவன் பேச்சு செட்டியாரைத் திருப்தியுற வைத்தது. 

“ஒரு வண்டி பண்ணி இருக்கிறேங்க. அதுக்கு உங்க. மாடு ஒண்ணு கட்டினா, நல்லா இருக்கும்ன்னு தோணுதுங்க.” 

“அதுக்கென்ன, பேஷா ஓட்டிக்கிட்டுப் போயேன்” என்று தானே தொழுவத்திற்கு வந்து, அரைக்கால் பல்லு மாட்டைப் பிடித்துக் தந்தார். 

மாட்டைப் பிடித்துக் கொண்டு வரும்போது சாம்ப மூர்த்தி ஐயர் எதிரே வந்தார். பஞ்சவர்ணத்தின் வீட்டி. லிருந்து திரும்பி வருவது மாதிரி தோற்றம். 

”கோவர்த்தன் மாடா, சிதம்பரம்?” 

“ஆமாங்க.” 

“அவனெக்கூட இளக்கிட்டியே!” 

“….”

“கோவர்த்தன் கஞ்சன்லே கடஞ்செடுத்த கஞ்சன். ஒருத்தருக்கு ஒண்ணு தர மாட்டான். ஆனா, மாட்டிலே அவனுக்கு ஒரு ராசி; அவங்கிட்டெ ஒரு மாடு பிடிச்சுட்டா செத்தெ நாழிலே நம்ப தொழுவம் நெறஞ்சுடும்…” 

“இதுதாங்க நமக்கு முதல் மாடு.” 

“இருந்தா என்ன? இன்னைக்கொண்ணு ; நாளைக்கு. ரெண்டு; அப்புறம் மூணு, நாலு…” 

கிடாரியைக் கண்டதும் தும்பை உருவிக் கொண்டு அவன் கையிலிருந்த மாடு ஓடியது. 

மாட்டை அவன் இழுத்துப் பிடித்தான். 

ஐயர் அலட்சியமாகப் புன்னகை பூத்தார். 

அசாதாரணமான அந்தச் சிரிப்பு அவன் நினைவைப் புரட்டியது. மூன்றாண்டுகள் சென்று விட்டன; எத் தனையோ நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன. அவள் நினைவு மட்டும் மங்கவில்லை; துல்லியமாக இருக்கிறது. எவ்வளவு விசித்திரமான பெண், அவள்! மூன்று குழந்தைகளுக்குத் தாயான பிறகும், மோகம் குன்றாமல் மையலுற்றாள், அவள் அவள் குடிகாரக் கணவன்… அந்தக் குழந்தைகள் எல்லாவற்றையும் அந்தக்கணமே மறக்க முயன்றான். 

மலேயாவிலிருந்து வந்த புதிதில் மிகுந்த அக்கறையோடு கல்யாணத்தைப் பற்றி விசாரித்தார் தேவர். தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்றதும் சந்தோஷமுற்றார். தன் சொந்தத்தில் பெண் பார்த்தார். ஏற்பாடுகள் எல்லாம் முடிந்துவிட்டன. கடைசியில்தான் செய்தி அவன் காதில் விழுந்தது. அவன் ரொம்ப பவ்யமாக, “கொஞ்சம் போகட்டுங்க மாமா” என்று நழுவினான். 

“ஏன், ஏதாவது விசேஷமா?” 

“அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க, மாமா!”

அவன் புன்சிரிப்புச் சிரித்தான். 

இயல்பான சிரிப்பாக அவருக்கு அது படவில்லை. 

“தம்பி மனசெப் புரிஞ்சுக்க முடியலே.” 

அவன் பதிலொன்றும் சொல்லவில்லை. மெளனமாகச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான். பிறகு, எழுந்து போனான். அப்புறம்கூட, சந்தர்ப்பம் கிடைத்தபோது, கல்யாணத்தைப் பற்றி விஸ்தாரமாகப் பேசினார். அவன் பிடி ஏதும் கொடுக்கவில்லை; அவர் சலிப்புற்றார். அந்தப் பேச்சுக்கள் அடங்கிவிட்டன. 

புதிய வீட்டைப் பூட்டிக் கொண்டு, சாலைக்கு வந்தார்கள். 

“அப்புறம், தம்பி எங்கே போவுது? 

“சாயந்தரமா தோட்டத்துப் பக்கம் போகலாம்னு இருக்கேன்.” 

“சாயரச்சதானே?” 

“ஆமாங்க, மாமா!” 

“அப்ப, இப்பப் போய், செத்தெ வூட்டுலே இருங்க; ஆராச்சும் வருவாங்க; ஆம்பளைங்க ஆருமில்லே. நான் தோட்டத்துப் பக்கம் போயிட்டு, அப்படியே பூக்காரனைப் பாத்துட்டு வரேன்.” 

“சரிங்க,மாமா.” 

குஞ்சம்மாவுக்கு அவனைக் கண்டதும் சந்தோஷம் தாளமுடியவில்லை. “தம்பி இல்லாமெ தவிச்சிப் போய்ட்டேன். பாருங்க தம்பி, அட்டிகை தேவலாமா?” என்று நகையை முன்னே வைத்தாள். 

விசித்திரமாக அவைகளை நோட்டமிட்டான். ஒவ் வொன்றைப் பற்றியும் அவன் அபிப்பிராயம் சொல்ல வேண்டும்; அவர்கள் சந்தோஷத்தில் பங்குபெற வேண்டும்; துக்கத்தில் கலங்க வேண்டும். 

“ரொம்ப நேர்த்தியா இருக்கு!” 

“நெஜமா?” 

“நெஜமாங்க!” 

அவன் கையிலிருந்து அட்டிகையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள். 

சிதம்பரம் திண்ணையில் ஏறி உட்கார்ந்தான்; காலை நீட்டிச் சாய்ந்து படுத்தான். பெண்களின் இரைச்சலும் கூப்பாடும் காதைத் துளைத்தன. அவனால் படுத்திருக்க முடியவில்லை; துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு புறப்பட்டபோது, “எங்கெ தம்பி? என்று கேட்டுக்கொண்டு குஞ்சம்மா வந்தாள். 

“செத்தெ இப்படிக் காலார…” 

“சுருக்கா வந்துடுங்க; ரொம்ப வேலெ கிடக்கு.”

“செத்தைக் கெல்லாம் திரும்பிடுவேன்” என்று சொல்லிக் கொண்டே படியைவிட்டுக் கீழ் இறங்கினான். அவன் கால்கள் தோட்டத்தை நோக்கி நடந்தன. 

வெட்டாற்றையொட்டிப் பத்து வீடுகள், ஒரே மாதிரி யாகத் தென்னங்கீற்று வேய்ந்த சிறு வீடுகள். நான்கு வீட்டில் குடி இருந்தது; வேலை தொடங்கி விட்டால், ஜனம் வந்துவிடும். பத்து இருபது நாளில் எஞ்சின் டிரைவர் வந்துவிடுவான். அவனுக்கொரு வீடு; அப்புறம் ஐந்து வீடுகள். ரொம்ப சீக்கிரத்தில் இன்னும் பல வீடுகள் கட்ட வேண்டியிருக்கும். 

மூன்றாவது வீட்டு வாசலில், சாலையை அடைத்து, நெல் மாதிரி ஏதோ ஒன்றைப் பரப்பிக் காய வைத்திருந் தார்கள். சிதம்பரம் குனிந்து பார்த்தான். ஏதோ பூச்சி, மீசையும் இறக்கையுமாகக் கிடந்தன. அவனுக்கு என்ன வென்று தெரியவில்லை. காவல் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை அருகில் அழைத்துக் கேட்டான். 

“ஈசங்க.”

“ஈசலா! எதுக்கு?” 

”வறுத்துப் பொரியரிசி வெல்லம் போட்டுத் தின்னங்க”. 

”ம்…… எங்க புடுச்சே?” 

“நேத்தி கொஞ்சம் மழை தூறிச்சில்லே; அப்ப ஒரு விளக்கேத்தி வெச்சுப் புடுச்சேங்க…” 

“நீ முனுசாமி பையனா?” 

“ஆமாங்க!” 

“ஒப்பன் எங்கெ?” 

“வேலைக்குங்க!” 

சிதம்பரம் திரும்பி கடைப்பக்கம் சென்றான். அவன் சொந்தக் கடை உப்பு மிளகாய்க் கடை; ஆனால், பொறுப்பு முழுவதும் தேவரிடம் இருந்தது. 

பழனியாண்டியும், கோகிலத்தின் பெரிய பையன் சண்முகமும் கடையில் இருந்தார்கள். நல்ல வியாபாரம்; மடமடவென்று பொருள்கள் விற்க ஆரம்பித்துவிட்டன. கனகசபை செட்டியார், பார்த்தசாரதி ஐயங்கார், மணவாள் நாயுடு,பதஞ்சலி சாஸ்திரி, வேம்பு படையாச்சி, கம்பராமாயணம் முருக பூபதிப் பிள்ளை – இவர்களெல் லாம் பழைய கடையை விட்டுவிட்டு, புதுக்கடைப் பக்கம் திரும்பினார்கள். 

கடை வாசலில் ஒரே இரைச்சல்; கூக்குரல். என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. 

சிதம்பரத்தைப்பார்த்துவிட்டு ஒரு பெண், “முதலாளி வராங்க; வழி விடுங்க!” என்றாள். அவன் கடைக்குள் நுழைந்ததும் கூச்சல் ஓய்ந்து, அமைதி ஏற்பட்டது. 

முணுமுணுத்துக் கொண்டிருந்த பாட்டியைப் பார்த்து சிதம்பரம், “இப்படி வாங்க,பாட்டீ; உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டான். 

“இஞ்ச பாருங்க, தம்பி. பதக்கு நெல்லு இருக்கு. அளந்துகிட்டு ஒரு சேர் நல்லெண்ண; ரெண்டுபடி கொத்த மல்லி கொடுன்னா,பய ‘காசு கொண்டா; இஞ்ச நெல்லு எடுத்துக்க மாட்டேங்கறான்.” 

“இங்க வாங்க பாட்டீ. ஒரு சேர் எண்ணயா…?” 

ஆட்கள் மிகமிக, கூலியை அவனால் நெல்லாகக் கொடுக்க முடியவில்லை. ஆரம்பத்தில் தேவரிடமும், கனக சபாபதி செட்டியாரிடமும், சாம்பமூர்த்தி ஐயரிடமும் நெல் வாங்கிக் கூலி கொடுத்தான். ஆ னால், நாட்கள் செல்லச் செல்ல சம்பாவிலிருந்து கூலி குறுவைக்கும், கார் குறுவைக்கும், ஒட்டுக் குறுவைக்கும் வந்து, அப்புறம் அதுவும் நின்று போய்விட்டது. 

மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு கூலியைப் பணமாகக் கொடுத்தான். சிக்கலும் குழப்பமும் ஏற்பட்டன; எண்ணவும் கணக்கிடவும் தெரியாமல் தவித்துப் போனார் கள். பணத்தை வாங்கிக்கொண்டு சாமான்கள் கொடுக்க கோமுட்டிச் செட்டியும், அப்துல் காதர் ராவுத்தரும் முன் வரவில்லை. பணம் கொண்டு போனவர்களை யெல்லாம், “நெல்லு கொண்டாங்க; இந்தச் சனியன் வேணாம்” என்று விரட்டியடித்தார்கள். 

ஆத்திரத்தோடும் துக்கத்தோடும் திரும்பிவந்து, காசை வீசியெறிந்து முறையிட்டார்கள். ‘நாளையிலிருந்து நெல்லு கொடுக்காவிட்டால் வேலைக்கு வரமாட்டோம்’ என்றார்கள். அன்றிரவே அதற்கொரு வழி கண்டு பிடித் தான் அவன். தேவர் யோசனையின் பேரில் பார்த்தசாரதி ஐயங்காரின் சின்னவீட்டில் கடை திறக்கப்பட்டது. 

நெல்லுக்கும் உப்புக்கும் தனித் தனியே விலை நிர்ணயிக் கப்பட்டது. ஆனால், ஆரம்ப நாட்களில் பணத்தை எண் ணவும் கணக்கிடவும் தெரியாமல் தவித்துப்போனார்கள். பல மாதங்கள் வரையில் பணம் சிக்கல் நிறைந்த ஓர் அம்ச மாகவே இருந்தது. 

பாட்டி, எண்ணெயை வாங்கிக்கொண்டு, “தம்பி, சமயத்திலே நீங்க வராட்டா அந்தப் பயலுவோ என்னெ விரட்டி இருப்பானுவோ ; அந்தக் கயவாலிப் பயலுவளெ கட்டி வச்சு நல்லா ஒதேடாப்பா …” என்றாள். 

“சரிங்க, பாட்டி!” 

சிதம்பரம் பழனியைப் பார்த்து லேசாகச் சிரித்தான். 

அத்தியாயம் – 15

கல்யாணவீடு நிறைந்துவிட்டது. உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் உறவினர்கள் வந்து குழுமினார்கள். புதிய புதிய முகங்கள்: புதிய புதிய நடை: தினுசு தினுசான புடைவைகள்; வளையல்களும் கொலுசுகளும் குலுங்க வரும் சிரிப்பொலி – பல்லாண்டுகளுக்குப் பின்னால் தேவர் வீடு திருமணக் கோலத்தில் அமிழ்ந்தது.

பெரிய பந்தல் – தெரு முழுவதையும் அடைத்துக் கொண்டு வண்டி போக வர வழியில்லை. இரண்டு நாட் களாக மாதானம் போகவேண்டிய வண்டிகளெல்லாம் தெற்கில் திரும்பி, வேளாளத்தெரு வழியாகச் சென்றன. 

பிரம்மாண்டமான பந்தலின் நடுவே மணிகளும் ஜிகினாவும் இழைத்த கல்யாணக் கூடம், திருக்குளத்து மண்டபம் மாதிரி. ஆனாலும், அதில் இல்லாத அழகு, கவர்ச்சி. சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா வர்ணத்தில் மணிகள். நீண்ட மணிகள்; குட்டை மணிகள் – வகை வகையாகக் கோர்த்துக் குஞ்சம் கட்டித் தொங்க விட்டி ருந்தார்கள். வீசும் காற்றில் மணிகள் அசைந்து வர்ணம் மாறும் நேர்த்தி; கிணுகிணுக்கும் ஒலி – ரம்யமான காட்சி! 

மணப் பந்தலைச் சுற்றிக் கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கும் சிறுவர் கூட்டம்; அதில் நான்கைந்து பெண் குழந்தைகளும் இருந்தார்கள். விநோதமான அவர்கள் விளை யாட்டைப் பார்த்துக் கொண்டு நின்றான் சிதம்பரம். ஒரு குழந்தை எங்கிருந்தோ ஓடிவந்து, அவன் காலைக் கட்டிக் கொண்டு, ‘மாமா’ என்றது. 

பெண் குழந்தை – நான்கு வயதிருக்கும். பொன்னிற மான மேனி. அலைபாயும் பெரிய பெரிய கண்கள். அவன் உவகையுற்று அவளை வாரியணைத்துக் கொண்டான். இதழில் முத்தமிட்டான். குழந்தை அவனையே உற்று நோக்கியது. பார்வை மிரள, தன் மாமா இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதுபோல அவன் பிடியிலிருந்து நழுவி விருட்டென்று ஓடியது. 

சிதம்பரம் அப்படியே நின்றான். அவன் இதழ்களில் சோகம் கப்பிய புன்னகை அரும்பி மறைந்தது : 

‘இதற்கெல்லாம் நான் ஆசைப்படமுடியாது.’

பந்தலைவிட்டு உள்ளே சென்றான். பின்கட்டு முழுவதும் பெண்கள் நிறைந்திருந்தார்கள். அநேகமாக, ஆண் களே போகாத பகுதி அது. குழந்தைகளை வாரி எடுத்துக் கொண்டு, வளையலும் கொலுசும் குலுங்க யார் யாரோ வேகமாகக் காமரா அறைக்குள் மறைவது தெரிந்தது. அவன் கால்கள் பெயரவில்லை ; அப்படியே நின்றான். 

குஞ்சம்மா பரக்கப் பரக்க கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு வந்து, “வாங்க தம்பி” என்றாள். 

“மாமா, எங்கெ அக்கா?” 

“இஞ்ச இல்லியே. கப்பக்காரவுங்களே பாக்கணும் னாங்க. இப்ப வந்துடுவாங்க தம்பி.” 

“அவுங்களெல்லாம் வந்துட்டாங்களாம்.” 

“இப்ப சாரட்டு வந்துடும். அதுகூட நீங்க போங்க தம்பி.” 

“மாமா இல்லாமெயா?” 

“மாமா இல்லாமெ எங்கெ போயிட்டாங்க!” 

அவள் வெகு நளினமாகப் புன்னகை பூத்தாள்.

“இதான் காவேரி மவன் செதம்பரமா?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் ஒரு பாட்டி. 

“ஆமாங்க, மச்சி!” 

அவள் பார்வை அவன் மீது ஆழ விழுந்தது. முகம் ஆனந்தத்தால் மேலும் வெளிறியது. “ஏன்டாப்பா, சௌக்கியமா…? ரெண்டு வயசிலோ மூணு வயசிலோ பார்த்தது. அப்புறம் இப்பத்தான் பாக்கறேன். காவேரி அன்னக்கி போறதைப் பத்தி எங்கிட்டத்தான் சொன்னா; பதக்கு நெல்லுப் போட்டுட்டுவந்து, காசைக் கொடுத்தேன் அதை வாங்கிப் புடவைத் தலைப்பில் முடிஞ்சிக்கிட்டுத் தாரை தாரையா அழுதா…” அவளுக்கு மூச்சு வாங் ய து : தூணில் சாய்ந்து கொண்டாள். 

சிதம்பரம் விசித்திரமாக அவளைப் பார்த்தான். 

“அவ குணத்துக்கும் பதவுசுக்கும்தாண்டா அப்பா, குடும்பத்துப் பேர் சொல்ல இஞ்ச வந்துட்டே!” 

அவன் வெறுமனே உணர்ச்சியற்ற நிலையில் தலை யசைத்தான். தன் தாயாரின் இளம்பருவத் தோழியின் உளப்பூர்வமான அனுதாபத்தின் சிதறல்கள் தெளிவாகப் புலனாகியது. அதை ஏற்றுக் கொள்வதும், அதற்கு நன்றி செலுத்துவதும் தன்னளவில் அசாத்தியமானது. 

“நாலு நாளைக்கு இருப்பீங்கல்லே? அப்புறம் வந் பாக்கறேன்!” 

“வா, கண்ணு, உன்னெப் பாக்கறது பெத்த புள்ளையெ பாக்கறதாட்டம் இருக்கு !” 

“வாங்க!” 

அவன் நடந்து செல்லும் பாங்கைப் பார்த்து, “அந்த ஜாடே, அந்த கைவீச்சு, அந்தப் பேச்சு, நாணிக்கிட்டு நின்னு கண்ணெச் சிமிட்டிக்கிட்டுக் கவட்டுத்தனமா பாக்கறது – அவ, எதுக்க வந்து நிக்கறது மாதிரி இருக்குலே குஞ்சம்மா!” 

“இப்படித்தாங்க மச்சி; மாமாவும்கூட அடிக்கடி சொல்லுறாங்க.” 

“நாங்களெல்லாம் அப்ப ஒரு வயசு.” 

“மாமா போல இருக்கு; தோ வந்துட்டேங்க, மச்சி.” அவள் வெளியே வந்தாள். 

“அவுங்கல்லாம் வந்துட்டாங்களாமே. அழச்சாற் ஆரை அனுப்பினே, பாப்பா ?” 

“நம்ப தம்பியங்க, மாமா.” 

“உனக்கு சொல்லியா தரணும்…” 

“சாரட்டு எங்க மாமா?” 

“தோ வந்துகிட்டிருக்கு ; பின்னாடியே மோளக்காரன் வரான்; செத்தைக்கெல்லாம் தஞ்சாவூர் ‘பேண்டு’ வந்துடும். அது வந்ததும் நாம்ப புறப்படணும்.” 

“எல்லாம் தயாராக இருக்குங்க, மாமா.” 

அப்புறம் தூணில் சாய்ந்தபடியே இரவுப் பந்தியைப் பற்றி விசாரித்தார். ‘மாப்பிள்ளை அழைப்பு முடிந்ததும் தான் பந்தி’ என்று சந்தேகமின்றி அவள் சொன்னதும், “அது சரிதான்; வளக்கமும் அதுதான். ஆனா, நேரம் ஆகுமேன்னு பார்த்தேன் ; அதைப் பார்த்தா முடியுமா அப்படியே பண்ணிடுவோம், பாப்பா…” என்று வெளியே புறப்பட்டார். 

வீடு முழுவதும் விளக்குகள் ஜகஜ்ஜோதியாக எரிந் தன. எத்தனை விளக்குகள்! இன்னும் சற்று நேரத்திற் கெல்லாம் மாப்பிள்ளை அழைப்பிற்குப் புறப்பட வேண்டும். 

மாப்பிள்ளையை அழைத்துவர ஒவ்வொரு பெண்ணும் பயணப்பட்டுக் கொண்டிருந்தாள். காலம் காலமாக – ஒவ்வொரு பெண்ணுக்கும் இழையறாமல் நடைபெறும் சடங்கு – மரபுகள் மீதும் ஐதீகங்கள் மீதும் ஆதாரப்பட்டு இருப்பது. ஒரு பொன் கூண்டிலிருந்து இன்னொரு பொன் கூண்டிற்குப் பெண்ணைக் கொண்டு செல்லும் திருநாள்!…

தூரத்தில் மங்களவோசை; நாதசுரத்தோடு கூறை நாட்டுப் பக்கிரியாப் பிள்ளையின் தவுல். பூ,சந்தனம், பன்னீர், ஊதுபத்தி – மணம் கமழ்ந்தது. 

நான்கு குதிரைகள் பூட்டிய சாரட்டிலிருந்து மாப்பிள்ளை பட்டுத்துண்டு காற்றில் பறக்க இறங்கி, மந்த கோவிலுக்குள் சென்றான். அவர்கள் கோவில் அது; வேட்டைக்குப் புறப்பட ஆயத்தமாகக் கரத்தில் அரிவாள் ஏந்தியிருக்கும் பெரிய கருப்பு: காலிலும் கழுத்திலும் பொற் சலங்கை; ஒரு காலை எடுத்து முன்னே வைத்திருக்கும் கருப்புவின் பின்னே கம்பீரமான வேட்டை நாய் – அவர்கள் வாழ்க்கையின் சகல அம்சங்கள் மீதும் ஆட்சி புரியும் கடவுள். வசந்தகால முளைக்கொட்டு, ஒயிலாட்டம் ஆடும் திருவிழாவிற்குப் பிறகு – கல்யாணங்கள் தான் சிறப்பானவை. வாழ்க்கையைப் பந்தப் படுத்தி அதற்கோர் அர்த்தம் கற்பிக்கின்றவை. 

மாப்பிள்ளை எரியும் கற்பூரத்தின் சுடரைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டு சற்றே பின்னுக்கு நகர்ந்தான். எட்டுத் தேங்காய்கள் சிதறவிட்டுப் பலி பீடத்திற்குக் கற்பூரம் காட்டினார்கள். பதினெட்டுப் படிகளிலும் வரிசையாக வைத்திருந்த ‘வரிசை’த் தட்டுக்களை மாப் பிள்ளையின் உறவுப் பெண்கள் மீண்டும் ஏந்திப் பின்னே வர, மாப்பிள்ளை பணிவோடு சாரட்டில் ஏறியமர்ந்தான். 

ஒளி சிந்தும் இரவில் சாரட்டு மெல்லச் சென்றது. ஒரு சம்பிரதாயத்தின் சொச்சம் – மறைந்து கொண்டே வருவதின் தடயம். முன்பெல்லாம் ஒற்றைக் குதிரையில் மாப்பிள்ளை அரையில் பட்டு வேட்டியும், கழுத்தில் மல்லிகைப்பூ மாலையும், காதில் கடுக்கனும், கைகளில் தங்கக் காப்புமாக ஊர்வலம் வருவான். இடையில் நீண்ட பட்டாக்கத்தி இருக்கும். கொண்டையை நன்றாகச் சீவி முடிந்திருப்பான் – குல சம்பிரதாயம்; ஐதீகங்கள் மீது ஆதாரப்பட்டிருப்பது. ஒவ்வொரு மணமகனும் – அன்று மந்தையா; பெரிய கருப்பு; கடவுள் ! 

பெண்ணின் தாய்மாமன் தனிக்குதிரை ஏறிப்போய் மருமகனை எதிர் கொண்டழைப்பான். இன்றைக்கும் அது போய்விட வில்லை; ஆனால், ஒற்றைக் குதிரைகள் போய்விட்டன. ஒற்றைக் குதிரைக்குப் பதில் சாரட்டுப் பூட்டிய குதிரைகள் ; எத்தனை குதிரைகள்! எத்தனை நிறங்கள்…! 

வளையல்கள் சப்தமிட, சிரிப்பும் பேச்சும் கூட்டுச் சேர, பூவின் மணத்தோடு பெண்கள் ஜீனி, சர்க்கரை, கற்கண்டு, வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு, பூ, புடைவை, வேட்டி, கோபுரமாய் நவதானியங்கள் நிறைந்த தாம்பாளங்களை ஏந்தி மெல்ல அசைந்து சென்று கொண்டிருந்தார்கள். 

ஊர்வலம் மேலத் தெருவைத் தாண்டிப் பெரிய சாலியத் தெருவிற்கு வந்ததும், சிவனாண்டித் தேவர் மாப்பிள்ளையின் அண்ணன் அழகுத் தேவரிடம், “சித்தி விநாயகருக்கு ஒரு அர்ச்செனெ பண்ணச் சொல்லுங்க” என்றார். 

சாரட்டு நின்றது. மாப்பிள்ளை பதவிசோடு கீழே இறங்கிப் பிள்ளையாரை வலம் வந்து, தரையில் விழுந்து வணங்கினான். 

நிலவு மேலே எழும்பிக் கொண்டிருந்தது. அனைவர் முகத்திலும் சோர்வு; தூக்கத்தின் அறிகுறி. 

“செத்த சுருக்கா ஆவட்டும்!” சிதம்பரம் எல்லோ ரையும் துரிதப்படுத்தினான். ஆக்கிய சோறு விரைத்து சில்லிட்டுக் கொண்டிருந்தது – குஞ்சம்மா தனியாக அவனுக்குச் செய்தி அனுப்பியிருந்தாள். 

பேண்டு வாத்தியக்காரர்கள் வேகமாக அடியெடுத்து வைத்தார்கள். 

இன்னும் ஒரு தெருதான், கல்யாண விடு போய்ச் சேர. வடக்காகச் சென்று, தெற்குப் பக்கம் திரும்பினால் மாரி யம்மன் கோவில் தெரு; தேவர் வீடு வந்துவிடும். 

குனிந்திருந்த மாப்பிள்ளையின் தலையை உயர்த்தி, ண் ம் பொண்ணில்லே; மாப்பிள்ளே ! நல்லா நிமிந்து குந்து!” என்றாள் அவனுடைய இரண்டாவது சகோதரி. 

அவன் அடக்கமாகப் புன்னகை செய்தான். 

பேண்டு வாத்தியம் துரித கதியில் முழங்க மாப்பிள்ளை சாரட்டை விட்டிறங்கினான். சேது ஆலத்தி சுற்றினாள்; யாரோ திருஷ்டி கழித்தார்கள். 

“வாங்க, வாங்க, எல்லாரும் வாங்க… எல்லாரும் வாங்க!….” – ஒரே சமயத்தில் பல்வேறு குரல்கள் வர வேற்பு கூறின.பிரவாகம் மாதிரி இரைச்சல் ; புடைவை களின் சரசரப்பு; குலுங்கும் தண்டைகள் சப்தம்… எங்கும் சப்தங்கள் 

பொழுது புலரும் முன்னே மேளம்கொட்டி முழங்கி யது. ஜிகினாவும் மணிகளும் இழைத்த அலங்காரப் பந்தலில் சரம்சரமாகப் பூ மாலைகள்; குறுக்கும் நெடுக்கு மாக மஞ்சள் நூலும் வர்ண மணிகளும். சிறிய மண மேடையைச் சுற்றி வாழைக் கன்றுகள்; அதற்கு எதிரே பூரண கும்பம்; புதுப்பானை ; பாலிவகைகள்; அம்மி ; அரசாணிக்கால் ஓம குண்டம்; குந்தாணி ; நாச்சியார் விளக்கு; மாங்கல்யம்; கூறைப் புடவை ; வேஷ்டி, வரிசைகள்… 

ஐயர், “மாப்பிள்ளையை அழச்சுண்டு வாங்கோ’ என்றார். அதைத் தொடர்ந்து, “மாப்பிள்ளை !…… மாப் பிள்ளை!” என்று பல குரல்கள் எழுந்தன. 

கோகிலத்தின் மகனுடை கையைப் பற்றிக்கொண்டு, தலை குனிந்தபடியே வந்தான் மாப்பிள்ளை. 

புது நெல் பரப்பி அதன்மீது மடித்துப் போட்டிருந்த சன்னக் கோரைக் கல்யாணப் பாயில் அமர்ந்தான் மாப் பிள்ளை. ஐயர் மந்திரங்கள் சொல்லி, எரியும் அக்கினியில் மாவிலையால் நெய்யை அள்ளியள்ளி விட்டுக் கொண்டே, “மாப்பிள்ளை வேட்டி எங்கே?” என்றார். 

“இந்தாங்க, சாமி.’ 

நவதானியங்கள் தூவி, மந்திரங்கள் முணுமுணுத்து, தீர்த்தம் தெளித்து, கோடியின் முனைகளில் மஞ்சள் தடவி, வேட்டியை சிவனாண்டித் தேவரிடம் தந்தார் ஐயர். மிகுந்த பணிவோடு கண்ணில் ஒற்றிக் கொண்டு, அதனை அண்ணாமலைத் தேவரிடம் கொடுத்தார். நெய்விளக்கு வெள்ளையன் தேவர், மல்லியக்கொல்லை பெரிய கருப்பன் தேவர், காவேரிப்பட்டினம் வெள்ளச்சாமித் தேவர், காடுவெட்டிக் குஞ்சாலுத் தேவர், சீர்காழி நல்ல தம்பித் தேவர், வேங்கைப்புலி அருணாசலத் தேவர், கல்லூட்டு ராஜாத்தி, புதுப் பட்டணம் செல்லம்மா, ஆச்சாபுரம் சொர்ணம் – எல்லோரும் ஆசீர்வாதம் பண்ணி, ஐயரிடம் தந்தார்கள். 

திரும்பி வந்த தாம்பாளத்தை, மாப்பிள்ளைத் தோழ னிடம் கொடுத்து ஐயர் சொன்னார், “சவரம் பண்ணிண்டு குளிச்சுட்டு, அப்புறமா இதைக் கட்டிக்கச் சொல்லு” என்று. 

மாப்பிள்ளைத்தோழன் மணமகனை அழைத்துக் கொண்டு முன்னே போகையில், “நின்னு, மெல்ல அழச்சிக்கிட்டுப் போ” என்று பரிகாசம் பண்ணினாள் 

மாப்பிள்ளையின் அண்ணி: அவன் குத்திட்டுப் பார்த்தான். அப்புறம் மாப்பிள்ளையை இறுக அணைத்துக் கொண்டு, “இப்படியா?” என்றான். அலையலையாக சிரிப்பு எழுந்தது. யாரோ ஒருத்தி, “…ம்… அப்படித்தான்!” என்று பெருங் குரலில் சொன்னாள். 

ஆரவாரமும் சிரிப்பும் அடங்கிய போது, தோழி வலது கரம் பற்றி முன்னே வ ர, பாப்பா ஒவ்வொரு அடியாகப் பெயர்த்து வந்து பந்தலில் அமர்ந்தாள். நெற்றியில் பறந்து விழுந்து அலைபாய்ந்த முடியைச் சற்றே ஒதுக்கிவிட்ட தோழி, தலையைச் சற்றே உயர்த்திக் காதோடு,”இப்படியே இரு ” என்றாள். ஆனால், தோழி யின் கரம் விலகிய கணத்திலேயே பாப்பாவின் சிரம் தாழ்ந்தது. 

பெரிய வெள்ளி த் தாம்பாளத்தில் கூறைநாட்டுக் கொட்டடிச் சேலை ; மஞ்சள், குங்குமம், மல்லிகைப் பூ, சீப்பு, க ண்ணாடி எல்லாம் நிறைந்திருந்தன. ஐயர் அதை எடுத்து, சீக்கிரம் ஆகட்டும்” என்று வெள்ளச் சாமித் தேவரிடம் கொடுத்தார். கரம் கரமாக மாறிப் பெண்கள் பக்கம் சென்றது, அப்படியே நின்றுவிட்டது. புடைவையின் நீள அகலத்தையும் ஜரிகை வேலைப்பாட் டையும், தங்கள் கல்யாணத்திற்கு எடுத்த புடைவையைப் பற்றியும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். 

ஐயர் சுற்றும் முற்றும் பார்த்தார். 

“அப்புறமா அழகு பாக்கலாம்; சீக்கிரமாக் கொண்டாங்கோ!’ 

“அக்கா, ஐயர் பறக்குறாங்க.” 

“செத்தெ இருடீ !” 

கோகிலம் வெடுக்கென்று தாம்பாளத்தைப் பிடுங்கிக் கொண்டு போய் ஐயர் முன்னே வைத்தாள். அதை மந்திரம் சொல்லி, தீர்த்தம் தெளித்து, பெண்ணிடம் கொடுத்தார். அவள் கரம் நீளவில்லை; தோழி அவ ளுக்காக அதனைப் பெற்றுக் கொண்டாள். 

“கல்யாணப் பெண்ணுக்குக் கட்டி, அழகு பாத்துண்டு நின்னுடாமெ, சீக்கிரமா அழச்சுண்டு வந்துடு.” 

முழங்கும் நாதஸ்வர இசைக்கிடையில் தேவருக்கு அழைப்பு வந்தது; வேகமாக உள்ளே சென்றார். 

சிதம்பரத்திடம் மத்தியானச் சாப்பாட்டைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த குஞ்சம்மா, “நீங்களும் கல்யா ணத்தில் குந்திட்டீங்களா, மாமா? செட்டியார் வந்திருக் காங்க” என்றாள். 

“அதுக்குள்ள வந்துட்டாங்களா!” என்று வேகமாக வாசலுக்குச் சென்றார். 

“வாங்க, சந்தனம் எடுத்துக்குங்க.” 

“ஆச்சு, பையன் கொடுத்தான்.” 

“செத்தெ உள்ளெ போயிட்டேன்.” 

“அதுக்கென்ன…” 

“அம்பாளுக்கு ஆம்பளைப் பிள்ளையாங்களாமே?” 

“மூணும் பசங்க!” 

தேவரின் சிரிப்பு மீசைக்குள் மறைந்தது. “ அடுத்த வருஷம் பேத்தி பொறந்துடறா!” செட்டியார் பகபகவென்று சிரித்தார். 

“பொண்ணு மணையிலே குந்திட்டாப்போல இருக்கே?” 

“ஆமாங்க.” 

இருவரும் உள்ளே வந்தார்கள். 

“நாளைக்கு ஒரே பாயில் அவனோடு படுக்கப்போறே; அதனாலே நெருங்கி உக்காந்தா ஒண்ணும் தோஷமில்லே!” 

கலீரென்று பெரும் சிரிப்பு மூண்டது. 

“சாமி, சரியாச் சொன்னீங்க!” 

“பின்னெ…?” 

நாதஸ்வரத்தோடு மேளம் கிடுகிடுக்க மந்திரங்கள் ஒலிக்க, பூவும் அட்சதையும் சொரிய, மங்கல வேளையில், தலைகுனிந்திருக்கும் பெண்ணின் கழுத்தில் தாலி ஏறியது. 

சற்றைக்கெல்லாம் பட்டம் கட்டும் கூட்டம் மணப் பெண்ணைச் சூழ்ந்து கொண்டது. சொர்ணம் முதல் பட்டம் கட்டினாள் மாப்பிள்ளையின் பெரியக்கா அவள். ஒரு பவுன் – முழுப்பவுன் பட்டம்; இரண்டு பக்கத்திலும் குண்டு ; ஒவ்வொன்றும் கால் பவுன். பெரிய குடும்பத்தின் முதல் மருமகள் அவள்: சம்பிரதாயங்கள் எல்லா வற்றையும் மீறிக்கொண்டு போய்விட்டாள். அதில் பரம திருப்தி அவளுக்கு. அவளைத் தொடர்ந்து அவள் தங்கை இரண்டாவது நாத்தி ராஜாத்தி பட்டத்தை நெற்றியில் கட்டினாள் – முக்கால் பவுன் பட்டம்; கிடாவுக்குப் பதில் முழு வெள்ளி ரூபாயை வைத்தாள். கல்யாணமாகாத பெண்களுக்குப் பட்டம் கட்டிக் கிடா ஏற உரிமையில்லை என்பதால் செல்லம்மாளுக்கு மனம் வாடிப் போயிற்று; தூணில் சாய்ந்தபடியே ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஆச் சரியம் ததும்பப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

நெருங்கிய சொந்தம் முடிவடைந்ததும், நாத்தி முறை ஆக வேண்டியவர்களெல்லாம் பட்டம் கட்டினார்கள். தங்கக் காசுகளாலும், பொன் குண்டுகளாலும், மஞ்சள் நூல்களாலும், வெற்றிலைகளாலும் பாப்பாவின் நெற்றி நிறைந்துவிட்டது. பாரம் அழுத்துவதுபோலப் பிரமை ; தலையை அசைத்துக் கொண்டாள். 

தோழி குனிந்து காதோடு காதாக, “ஆச்சு,செத்தெ இரு பாப்பா” என்றாள். 

“இன்னும் யாராவது இருக்காளா பட்டம் கட்ட?”

“செத்தே இரு சாமி.” 

கால் பவுன் காசும், மஞ்சள் கயிற்றில் இணைத்த வெற்றிலையோடும் முன்னே வந்தாள் ஆண்டாள். 

வெகு நேரம் வரையில்- ஆண்களெல்லாம் எழுந்து போகும் வரையில், பட்டங் கட்டுவது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. 

வாசலில் ஒரு பெரிய கூட்டம் – கனகசபாபதி செட்டியாரோடு,சுப்பு ஐயர்,சாம்பமூர்த்தி ஐயர்,பலாத் தோப்பு பார்த்தசாரதி ஐயங்கார், பதஞ்சலி சாஸ்திரி, முருகபூபதி பிள்ளை, ரத்னசாமிப்பிள்ளை, அண்ணாப்பிள்ளை, உத்திராபதிப் படையாச்சி, கோவர்த்தனச் செட்டியார், லட்சுமணராவ்.தேவர் மனம் நிறைவுற்றிருந்தது; பேச்சு வரவில்லை. உலகமே திரண்டு வந்து வாசலில் நிற்பது மாதிரி ஒரு காட்சி; கண் கொள்ளாக் காட்சி ! எந்தக் கல்யாணத்திலும் இத்தனை பேரும் ஒன்று சேர்ந்த தில்லை. சிலருக்கு ஒருவர் நிழல் இன்னொருவர்மீது படக் கூடாது; அப்படியொரு பகை. பதஞ்சலி சாஸ்திரிக்கு சாம்பமூர்த்தி ஐயர் ஆகாது. சாம்பமூர்த்தி ஐயருக்கு ஐயங்கார் ஆகாது. அண்ணாப் பிள்ளைக்கு முருகபூபதிப் பிள்ளை ஜென்மப் பகை; எட்டு வருடங்களாக அப் படித்தான். 

இருபத்தெட்டு முறைகள் ராசிப் பேச்சுக்களால் ஒரு பயனும் கிடைக்கவில்லை.ஆனால் இன்றைக்கு எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து இருக்கிறார்கள்! 

“நாங்க வரவும் தாலி கட்டவும் சரியா இருந்துச்சு!” என்றார் முருகபூபதிப் பிள்ளை. 

“நான் கொடுத்து வச்சவன்.” 

“என்ன சிவனாண்டி அப்படிச் சொல்றே?” 

“பின்னே,இத்தினி பேரும் தேவலோகத்திலிருந்து வந்தமாதிரி, ஒண்ணா வந்திருக்கீங்களே!” 

ஒரு பேச்சின்றி, பெருஞ் சிரிப்பு மூண்டு, மெல்ல அடங்கியது. 

சுப்பு ஐயர்,சாம்பமூர்த்தி ஐயர், பதஞ்சலி சாஸ்திரி, பலாத்தோப்பு ஐயங்கார், லட்சுமணராவ் எல்லோரும் சேர்ந்தாற்போல ஒரு விசுப்பலகையில் உட்கார்ந் தார்கள். 

இன்னொரு விசுப்பலகையின் விளிம்பில் கோவர்த்தன செட்டியார் அமர்ந்தார். வெற்றிலைப்பெட்டியை இடையில் வைத்துவிட்டுச் சற்றுத்தள்ளி முருகபூபதிப் பிள்ளை, அண்ணாப்பிள்ளை, ரத்னசாமிப் பிள்ளை, உத்திரா பதிப் படையாச்சி, ஆறுமுகத்தேவர் – அமர்ந்தார்கள். 

“தம்பி, இப்படி வந்து குந்துங்க.” 

“இருக்கட்டுங்க.” 

“இன்னமெ என்ன வேலை… செத்தெ இஞ்ச குந்துங்க, தம்பி.” 

“உட்கார், சிதம்பரம்” என்றார் பதஞ்சலி சாஸ்திரி.

“எப்ப சிதம்பரம், ஆலெ வரும்?” 

“இப்ப… செத்தெப் பின்னே போவும் போலப் படுதுங்க சித்திரை, வைகாசியைத் தாண்டிடலாங்க!”

“புதுசா, என்னவோ இஞ்ச பண்ணப்போறே…”

சிதம்பரம் முறுவலித்தான். 

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க. என்னவோ ஒரு ஆசை; அங்கெ பாத்தது … அதான். நீங்க எல்லாம் ரொம்ப ஒத்தாசையா இருந்தா, செத்தெ சட்டுன்னு ஆயிடும்…” 

“அப்ப எங்களெ இஞ்ச கரும்பு போடச் சொல்லுறியா?” 

முருகபூபதிப்பிள்ளை பகபகவென்று சிரித்தார். 

சிதம்பரம் தலையுயர்த்தி நம்பிக்கையோடு எல்லோரையும் பார்த்தான். 

“நாலு வருஷத்துக்கு முன்னாடி, கும்மோணத்தில் ஆரோ சொன்னாங்கன்னு, நாகப்ப செட்டியார் கத்தரித் தோட்டத்தில் வாழை போட்டாங்க; அப்படியே அழிஞ்சு போச்சு!” 

“ஏன் அம்மாந்தூரம் போவணும்? போன வாட்டி ஒரு ஆசை; நம்ப கொல்லையில்பத்து மாஞ்செடிநட்டேன். எதுக்கு சொல்லறது! சொன்னாச் சிரிப்பீங்க; ஒண்ணு கூடக் கிளம்பலே!……” 

“ஒரு மண்ணுக்கு ஒண்ணுதான் வரும்!” 

அவன் கண்களை இடுக்கிக்கொண்டு தேவரைப் பார்த்தான். அவரோ மௌனமாக உட்கார்ந்திருந்தார். 

”பொண்ணும் பிள்ளையும் வராங்க” என்று கருப் பண்ணத் தேவர் சொன்னதும், எல்லோரும் எழுந்தார்கள். 

“வாங்க!” 

ஒரே குரலில் மணமக்களுக்கு அவர்களிடமிருந்து அழைப்புச் சென்றது. 

“சுவாமி காலில் விழு!” 

மணமகன் சாஷ்டாங்கமாக சுப்பு ஐயர் காலில் விழுந்து வணங்கினான்; அவனைத் தொடர்ந்து பாப்பாவும் நமஸ்கரித்தாள். 

“தீர்க்க சுமங்கலியா இரு!” என்று சொல்லிப் பணத்தை வெற்றிலைப் பாக்கில் வைத்துக் கொடுத்தார். அது ஒரு சம்பிரதாயம் – பெண்ணும் மாப்பிள்ளையும் கும்பிட்டுப் பணம் பெறுதல். சிதம்பரத்தின் காலில் மணமகன் கும்பிட வந்ததும்,”வேண்டாம், வேண் டாம்!” என்று பின்னுக்கு நகர்ந்தான். 

“அட, நீங்க ஒண்ணு, சும்மா இருங்க.”முருக பூபதி பிள்ளை அவனைப் பிடித்து நிற்க வைத்தார். 

சற்றே பின்னுக்கு ஒதுங்கி நின்ற அவன் கால்களில் மாப்பிள்ளை வணங்கியெழுந்தான். அவன் நெற்றியில் திருநீறு பூசி, வெற்றிலையில் ஒற்றைப் பவுன் வைத்துத் தந்தான். அப்படியே பாப்பாவின் முகத்தில் விபூதிக்கு மேலே குங்குமம் ஒரு பவுன் கொடுத்தான். 

பெண்ணும் மாப்பிள்ளையும் உள்ளே போன பிறகு, பதஞ்சலி சாஸ்திரி எழுந்தார். அவர் கூடவே அந்த விசுப் பலகையிலிருந்த அத்தனை பேரும் எழுந்தார்கள். 

“சிவனாண்டி, வரட்டுமா?” 

“புறப்பட்டுட்டீங்களா?” 

நாற்காலியிலிருந்து கனகசபாபதிச் செட்டியார் எழுந்தார். 

“வரோம், சிதம்பரம்.” 

“சந்தோஷங்க.” 

இருவரும் வண்டி வரையிலும் சென்று, அவர்களுக்கு விடை கொடுத்தார்கள். 

வண்டியில் போகும்போது பதஞ்சலி சாஸ்திரி சுப்பு ஐயரிடம் சொன்னார்: 

“பையன் ரொம்பச் சமத்து.” 

“சிதம்பரத்தைச் சொல்றேளா?” 

“ஆமாம், சீக்கரமா முன்னுக்கு வந்துடுவான். ஓய்…உமக்குத் தெரியுமா… கல்கத்தா காங்கரஸுக்குப் போக ராம சுப்பிரமண்யத்துக்கு இவன்தான் பணம் கொடுத்தானாம்…”

“என் காதிலேகூட விழுந்துது.” 

“பார்த்தீரா, நமஸ்காரம் பண்ணினவாளுக்கு ஆளுக்கு ஒரு பவுன் கொடுத்தான்!” 

“பணம் ரொம்ப இருக்கு.” 

“ஒரு வெள்ளெக்காரனைக் கொன்னுட்டு, பணத்தை அள்ளிண்டு வந்துட்டானாம்…” 

“நெஜமா…?” 

“நெஜந்தான் !” 

“கள்ள ஜாதி….எல்லாம் பண்ணும்…” 

கல்யாணத்திற்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தேவரிடம் விடைபெற்றுக் கொண்டு, தனியாக சிதம்பரத் திடமும் சொல்லிக் கொண்டு போனார்கள். அத்தனை மதிப்பும் கௌரவமும் எதற்காகத் தனக்கு அளிக்கப் படுகிறது என்பது அவனுக்கு விளங்கவில்லை. 

பாலி விட்டுவிட்டு வந்ததும் மணப்பெண் மருவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். 

அவன் மனத்தில் ஆலை பற்றிய நினைவுகள் மண்டின. நான்கு நாட்களாக அந்தப் பக்கம் போகவில்லை. கல்யாணத்திற்கு வந்த கொத்தனார், எஞ்சின் அறை அநேகமாக முடிந்து விட்டதாகச் சொன்னார். அதைப் போய்ப் பார்க்கவேண்டும். 

அவன் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, குஞ்சம்மா, “தம்பி மாட்டேங்கக் கூடாது; மருவுக்கு செத்தெ கூடப் போவணும்” என்றாள். 

“நான் போவாமெயா மருவு!”

அவள் கலீரென்று சிரித்தாள். 

இரண்டாவது வண்டியில் மார்பளவு அண்டா, அதற் கேற்ற தாம்பாளம், நெல் நிறைந்த பித்தளை மரக்கால், விளக்கு, பூரண கும்பப் பானையில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, இருபத்தோரு தேங்காய், இருபத்தோரு வெல்லக் கட்டி – மணப்பெண் தன் வீடு போகிறாள். அது அவள் வீடு. இனி சுகமும் துக்கமும் அங்குதான் அவ ளுக்கு இருக்கிறது. முன்பின் பார்த்திராத வீடு நோக்கி உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கப் போகிறாள்… 

வரிசையாகச் சென்ற வண்டிகள் தெருமுனை திரும்பின. 

16 

எட்டு நாட்களுக்குப் பிறகு, சிதம்பரம் தோட்டத் திற்குச் சென்றான். எஞ்சின் அறை சாரத்தைப் பிரித்து விட்டார்கள். அநேகமாக வேலை முடிவடைந்து விட்டது. எஞ்சின் அறைக்குச் சற்று அப்பால் ஒரு கட்டிடம் எழும்பிக் கொண்டிருந்தது. நான்கைந்து நாட் களில் அதுவும் முடிவடைந்துவிடும். 

கட்டிட நிழலில் ஒதுங்கி நின்று, நடைபெறும் வேலையைக் கவனித்துக்கொண்டிருந்த சிதம்பரம், தூரத்தில் வரும் தேவரைக் கண்ணுற்றான். நெய் விளக்கிற்குப் போய்விட்டு வருகிறார். கல்யாணக் கூட்டத் தோடு போனவர் சிவபாக்கியம் வீட்டிற்குப் போய் விட்டுத் திரும்புகிறார். அவனுக்குச் சிரிப்பு வந்தது. சிரிக்கக் கூடாது என்று மனத்துக்குள்ளேயே சொல்லிக் கொண்டு, அவரை வரவேற்க முன்னே சென்றான். 

இருவரும் தோட்டத்தைச் சுற்றி வந்தார்கள். வன மாய்க் காட்சியளித்துக் கொண்டிருந்த தோட்டம் அடியோடு மாறிவிட்டது. பழைய நிலையை இனி அடைய முடியாது – புற்கள் கருகி விட்டன; நெடிதுயர்ந்த மரங்கள் சாய்ந்து விட்டன. அவைகளின் வேரை மண்ணைக் கிளறிக்கிளறித் தோண்டி எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். வேலையை முடித்துவிட்டு ஒரு கூட்டம் சென்றுவிட்டது. இரண்டு பேர்கள் மட்டும் சொந்த விருப்பத்தின்மீது சாயாவனத்தில் தங்கினார்கள். ஒருவன் மீசைக்காரன் – வண்டி ஓட்டும் தடியன் கொலைகாரன்; தம்பி மனைவியை மூன்றாண்டுகள் சொந்த மனைவியாக வைத்துக் கொண்டிருந்தான். 

ஒரு நாள் அவள் மூன்றாவது வீட்டுக்காரனோடு வைக்கோல் போர் ஓரத்தில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். ஒன்றும் பேசவில்லை; சீட்டி அடித்துக் கொண்டு கள்ளுக்கடைக்குப் போய் நிறையத் தண்ணி போட்டுக் கொண்டு வந்தான். இரவு நெடு நேரம் வரை யில் சிரிப்பு : கும்மாளம். அவன் சந்தோஷத்தைப் பார்த்து அவள் ஆச்சரியமுற்றாள். ‘எனக்குத் தூக்கம் வருகிறது’ என்று கீழே படுத்தாள். திடீரென்று ஒரு அலறல் சப்தம்; அவள் மூச்சு அடங்கிவிட்டது! 

“பீடை!” என்று முணுமுணுத்துக் கொண்டே வீட்டை விட்டுப் புறப்பட்டான். அதற்குப் பிறகு மனம் பேதலிக்கவில்லை ; தனக்குத் தானே சுய கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டான்; அவற்றை ஒரு பொழுதும் மீறிய தில்லை. தான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தன் நண்பனான செவிட்டூமையிடம் சொல்லிக் கொள்ளுவான். 

செவிட்டுமை குமாரசாமிக்கு இரண்டு மனைவிகள் -அக்காவும் தங்கையுமாக. அக்கா முன்னிருந்து தங்கை யின் கல்யாணத்தை நடத்திவைத்தாள். கல்யாணமான தங்கை அவளோடு பத்து நாட்கள் இருக்க வந்தாள். வந்தவள் திரும்பவில்லை.அக்காவுக்கு ஆத்திரம் ஆத்திர மாக வந்தது; சாலையில் இழுத்துப் போட்டு அடிஅடி யென்று அடித்தாள். ஒரு மாசம் சண்டை; தினம் தினம் நடந்தது. ஆனால் தங்கை, மூன்று மாதம் என்றதும் அவள் மனங் கரைந்து போனாள். அவளைக் கட்டிக் கொண்டு கண்ணீர் உகுத்தாள். எட்டு வருடமாக அவளுக்குக் கிடைக்காத பாக்கியம் தங்கைக்குக் கிடைத்தது களிப்புற வைத்தது. முதல் தாலியை அறுத்து, அதற்குரியவன் முகத்தில் வீசிவிட்டு வந்து, தன் கணவனை விட்டுப் புதுத் தாலி கட்டச் சொன்னாள்! 

ஆண்டுகள் செல்லச்செல்ல வீடு நிறையக் குழந்தைகள் – ஆண்டுக்கு ஒன்றாய் தங்கை பெறப்பெற – அக்கா அன்போடு வளர்க்கலானாள். 

செவிட்டூமையின் குழந்தை ஒன்று வேகமாக அவர் களைத் தாண்டிக் கொண்டு போயிற்று. 

வாசல் படியைக் கடந்து எஞ்சின் அறைக்குள் சென் றார்கள், தேவரும் சிதம்பரமும். 

அது புது மாதிரியான கட்டிடம்; அதுவரையில் பார்த்திராத ஒரு விசித்திரத் தோற்றம். திரும்பத் திரும்ப பார்த்தவர்களெல்லாம் இதையே சொன்னார்கள். அவன் யோசனையின் பேரிலும் திட்டத்தின்படியும் உருவானது அது. நெல்லிக்குப்பத்திலிருந்து வந்த ஒரு மேஸ்திரி கட்டி டத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, “எங்களே மிஞ்சிட்டீங்களே!” என்று பாராட்டினான்; அவ்வளவு அற்புத மாக அமைந்துவிட்டது. 

இருவரும் சாலைக்கு வந்தார்கள். சாலைப் புன்னை மரத்தடியில் ஒரு பெண் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் – புன்னை மரத்தடியில் தூக்கில் தொங்கிய லட்சுமி யின் தாய்போல இருந்தது. அந்தச் சாவைப் பற்றி பல்வேறு கதைகள், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல், சொல்லப்பட்டன. அதில் எவ்வளவு நிஜம், பொய் என்பது அவனுக்குத் தெரியாது.ஆனால், பரிதாபத்திற்குரிய அவளை சிதம்பரம் இரண்டு மூன்று தடவைகள் பார்த் திருக்கிறான். மிஞ்சி மிஞ்சிப்போனால் அவளுக்கு பதினேழு பதினெட்டு வயதிருக்கும்; நல்ல சிவப்பு, நல்ல உயரம். 

“தூக்கு மாட்டிக்கிட்ட பொண்ணோட அம்மா மாதிரி இருக்கே!” என்றான் சிதம்பரம். 

தேவர் அவனை நிமிர்ந்து பார்த்தார். “தூக்கு மாட்டிக்கிச்சா ! இல்லெ, அவுங்க அடிச்சுக் கொன்னு, தூக்கிலே மாட்டிட்டாங்க.” 

“அப்படிங்களா?…” 

“அவ அக்கா கெட்டுப் போயிட்டாளாம்; அதுக்கு இவளே கொன்னுட்டாங்க!” 

அவன் மிகுந்த துயரத்தோடு தலையசைத்தான். 

“இது ரொம்பக் கொடுமைங்க, மாமா!” 

“எங்க சின்னப் பாட்டி சிரிக்கறதை எதுத்தவூட்டுக் காரன் பாத்துட்டான்னு அவளைப் புருஷன் தள்ளி வெச் சிட்டான்…”
 
“அப்புறங்க…?” 

“அவ மான ஸ்திரீ; மூணாம் நாளு அரளி விதயை அரச்சு, நல்லெண்ணையில குழச்சுக் குடிச்சுட்டு செத்துப் போயிட்டா.” 

பாரத்தால் இதயம் அழுந்துவது மாதிரி இருந்தது.

“எங்க பெரியம்மா பொண்ணு செல்லம் ….. அம்மாம் செல்லமா வளர்ந்தது. ஒரு தடியனுக்கு வாக்கப்பட்டா ; அவன் வெட்டிக் கொள்ளடத்திலே விட்டான்”. 

“மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்குதுங்க மாமா.”

“ரொம்பக் கிட்டப் போய் பார்த்தா, அதான்; அத்திக் காயை விண்டு பாக்கற கதைதான்”. 

“ரொம்பக் கணக்கா சொல்லுறீங்க!” 

அவர் மெல்ல புன்னகை பூத்தார். 

“நான் எம்மாம் கஷ்டப் படுறேன், தெரியுமா?” 

சிரிப்பு திடீரென்று அடங்கி, சோகம் பொங்கியது. 

சிதம்பரம் மெளனமாக அவர் பின்னே நடந்தான். அவன் மனம் அமைதி இழந்துவிட்டது. தவறுகளைச் சுமப்பது மாதிரி பிரமை. 

அவனுக்கு ஏன் இந்த ஏக்கம்? மனம் எதற்காக அடித்துக் கொள்கிறது? அவன் இதுவரையில் வாழ்ந்து வந்த வாழ்க்கையே தவறு நிறைந்ததுதானா? 

சாலைக்கு வந்ததும் அவன் கேட்டான்: “என்ன மாமா நாத்தம் ?” 

“ராமசாமி போறான் – கருவாட்டு வண்டி ஒட்டிக்கிட்டு.” 

“எம்மா நாத்தம்!” 

“உப்பு கம்மி போல இருக்கு.” 

அவன் வேட்டியை சற்று மேலே தூக்கி, முகத்தைத் துடைத்துக் கொண்டான். 

“தம்பி, நீங்க சீக்கிரமாக் கல்யாணம் பண்ணிக்கணுங்க…” 

“ஒரு நல்ல பொண்ணு பாருங்க, மாமா.” 

“குஞ்சம்மா, ரெண்டு மாசமா உடாம நச்சரிக்குது. நான்தான் என்னமோ தள்ளிக்கிட்டு வந்துட்டேன்.” 

தேவர் பெண் பார்க்கப் புறப்படுவதற்கு முன்னதாக எஞ்சின் வந்துவிட்டது. பெரிய எஞ்சின்; பெரிய பெரிய பல்சக்கரங்கள் – பயங்கரமாக இருந்தது. 

எஞ்சின் வந்த இரண்டாவது நாள் நெல்லிக்குப்பம். டிரைவர் வந்தான் – ஒற்றை நாடி, நல்ல கருப்பு ; எப் பொழுதும் முழுக்குடியில் இருப்பான். கிறிஸ்துவன்; பெயர் டேவிட் சாரநாதன். 

பெரிய பார வண்டியிலிருந்த எஞ்சினை அப்படியும் இப்படியுமாகச் சாய்த்து, பையில் கை விட்டுக்கொண்டு பார்த்தான், டேவிட் சாரநாதன். கண்கள் பரபரவென்று சுழன்றன ; துணிச்சல், அழுத்தம், சாமர்த்தியம். பொடியை அள்ளி மூக்கு நிறைய ஏற்றிக்கொண்டு, வண்டியை எஞ்சின் கட்டிடத்தை நோக்கி ஓட்டச் சொன்னான். 

நீண்ட உறுதியான மரக்கட்டைகளை முட்டுக் கொடுத்து, கயிறு கட்டி, மெல்ல மெல்ல அசைத்து, எஞ்சினைக் கீழே இறக்கினார்கள். 

எஞ்சின், அறைக்குள் வந்துவிட்டது. இனி பெரும் கூட்டம் வேண்டாம்; ஆரவாரமும் கூச்சலும் வேண்டாம். எஞ்சியிருப்பதெல்லாம் டேவிட் சாரநாதனின் வேலை; அவன் கூட்டாளியின் வேலை. 

பெரிய பல்சக்கரத்தை வாஞ்சையோடு பற்றிக் கொண்டு முத்தமிட்டான்; அவனுக்கு அது ஓர் அபூர்வ மான படைப்பு ஒரு குழந்தை மாதிரி! ஆனால், எதிர் மறையான ஒரு போக்கு – தன் குழந்தைகளை அவன் நேசித்ததில்லை ; கரம் பற்றித் தூக்கியதுகூட இல்லை ! 

மனைவி கருவுற்ற போதெல்லாம் உறுமுவான். அவ ளிடம் கொண்டிருந்த மோகமெல்லாம் கலைந்துவிடும். பேச்சும் நடத்தையும் மாற, ஆளே புதுசாகி விடுவான். களிப்பும் ஆனந்தமும் நிறைந்த அவன் வீட்டிலிருந்து, அழுகுரலும் அடியோசையும் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கும். 

எட்டாவது குழந்தையை அவன் மனைவி உண்டாகி யிருந்தபோது டேவிட் சாரநாதனின் கையால் அடிபட்டு இறந்துபோனாள். அவன் துளிக்கூடக் கண்ணீர் வடிக்க வில்லை. கர்த்தர் தன்னை மனப்பூர்வமாக மன்னித்து விட்டதாகச் சொல்லிக் கொண்டு நெல்லிக்குப்பத்திற்குப் போனான். சர்ச்சோடும், தொழிற்சாலையோடும் அவன் வாழ்க்கை பந்தமுற்றது. அவன் அமைதியுற்றான்; வேலையில் பிடிப்பும் ஆர்வமும் பிறந்தது. இரண்டு மூன்று ஆண்டுகளில் தேர்ந்த தொழிலாளி ஆகிவிட்டான். 

நெல்லிக்குப்பத்திலிருந்து அவன் சாயாவனத்திற்கு வந்தாகிவிட்டது. 

தன்னந்தனியாக இரண்டு மொந்தை கள்ளையும் கறியையும் தின்றுவிட்டு, எஞ்சினின் பல் சக்கரங்களைச் சுற்றினான்; ஆயில் போட்டான். வாரை இழுத்துவிட்டு மேலும் மேலும் சுற்றினான். சிறு சக்கரங்களும், பெரும் சக்கரங்களும், பல்சக்கரங்களும் கிருகிருவென்று ஓட ஆரம்பித்தன.கையைப் பின்னுக்குக் கட்டிக்கொண்டு எஞ்சின் முழுவதையும் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந் தான்; எஞ்சின் சரியாக ஓடிக் கொண்டிருந்தது. 

வெள்ளிக்கிழமை ஆலை ஓடத் தொடங்கிவிடும். ஐயர் நாள் பார்த்து, நேரம் கணித்துக் கொடுத்திருக்கிறார். சிதம்பரத்தின் பெயரில், குஞ்சம்மா மந்தையா கோவி லுக்கும், மாரியம்மன் கோவிலுக்கும் தனித்தனியே அர்ச்சனை செய்தாள். 

வெள்ளிக் கிழமை வந்தது. 

ஆலையைச் சுற்றி ஒரு கூட்டம். சாம்பமூர்த்தி ஐயர், பதஞ்சலி சாஸ்திரி, பார்ததசாரதி ஐயங்கார், கனக சபாபதி செட்டியார், குத்தாலம் மாணிக்கம் செட்டியார், மேலகரம் லட்சுமண ராவ், நீடூர் அப்துல் சுலைமான் ராவுத்தர், காதர் மொகைதீன் மரக்காயர், முருகபூபதிப் பிள்ளை, உத்திராபதிப் படையாச்சி, கப்பக்கார அண்ணாமலைத் தேவர், சீர்காழியிலிருந்து ராமுத் தேவர், காவேரிப் பட்டிணத்திலிருந்து வெள்ளச்சாமித் தேவர் ஆகியோர் வந்திருந்தார்கள். கடைசி இரண்டு பேரும் அவன் தாயின் தூரத்து உறவினர்கள். 

தள்ளாடிக் கொண்டு சுப்பிரமணிய ஐயர் வந்தார். அவர் வருவார் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் ஆச்சரியமுற்றுப் போனார்கள். ஒரு காலத்தில் தனக்கு ஆசீர்வாதம் செய்ய மறுத்தவரை, சிதம்பரம் முன்னே போய் பணிவோடு வரவேற்றான். 

“எனக்குத்தான் காத்துண்டிருக்கேளா?” 

அவன் மிருதுவாகப் புன்னகை பூத்தான். 

எஞ்சினுக்குக் குருக்கள் தேங்காய் உடைத்துக் கற்பூரம் கொளுத்தி மந்திரம் சொன்னார். சுப்பிரமணிய ஐயர், சீக்கரத்தில் அவன் கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்று ஆசீர்வாதம் பண்ணினார். 

டேவிட் சாரநாதன் சம்பிரதாய ரீதியில் எஞ்சினை முடுக்கி விட்டான். சிக்சிக்கென்று எஞ்சின் ஓசையிட, பெரிய பல்சக்கரங்கள் நிதானமாகக் கரும்பைப் பிழிந்தன. 

கருப்பஞ்சாறு சின்னஞ் சிறிய குழாயின் வழியே ஓடி வந்து பெரிய ஒரு பாத்திரத்தில் நிறைந்தது. துளிகூட தூசி இல்லாத சாறு – சக்கை இல்லாத சாறு. குருக்கள் வெள்ளிக் குவளையில் மொண்டு, சிதம்பரத்தின் பக்கம் நீட்டினார்; அவன் சுப்பிரமணிய ஐயரைக் காட்டினான். 

ஒரு சொட்டு வாயில் விட்டுக்கொண்டு திருப்தியோடு தலையசைத்தார். 

அன்று மாலை சிதம்பரம் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியே கருப்பஞ்சாறு கொடுத்தனுப்பினான். சாம்பமூர்த்தி ஐயர், பதஞ்சலி சாஸ்திரி, பார்த்தசாரதி ஐயங்கார், கனக சபாபதிச் செட்டியார் – வீடுகளுக்குத் தானே நேரில் கருப்பஞ்சாறு கொண்டு கொடுத்தான். 

நான்காம் நாள் வெல்லம் தயாரித்தார்கள். அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், வாலாஜாப்பேட்டை வெல்லம் – சர்க்கரை. தேர்ந்த பக்குவத்தில் எல்லாம் சரியாக வந்தன. பதட்டமில்லாத நோக்கு, கொதிக்கிற பாகை தூரத்திலிருந்தபடியே இறக்கிவிடலாம் என்கிற ஒரு பக்குவம் – அவனுடைய அறிவும் தீட்சண்யமும் தேவரை மெய்மறக்க வைத்தன. 

“தம்பியை ஜெயிக்க ந்த லோகத்தில் ஆளு இல்லெ! ஆமாங்க, நெசங்க தம்பி!” 

அவன் நாணமுற்றான். 

முகம் தெரியாத இடத்திலிருந்தெல்லாம் பாராட் டுரைகள் வந்தன. கும்பகோணத்திலும், தஞ்சாவூரிலும், மாயவரத்திலும், நாகப்பட்டினத்திலும், திருவாரூரிலும் சர்க்கரையும் வெல்லமும் நன்றாக விலைபோயின. 

தேவர் சொந்த நிலத்தில் நட்ட கரும்பு, பச்சை பிடித்து மதமதவென்று மேலே கிளம்பியது, வளர்த்தியில் ஒரு வேகம், செழுமை ! 

“உங்களுக்குத்தாங்க தம்பி இப்படிக் கிளம்புது!”

“மண்ணுன்னா என்னதுன்னே தெரியாது அவுங்களுக்கு!” 

“ரொம்ப சரியா சொல்லுறீங்க.” 

“உங்க கிட்டக் கத்துக்கிட்டதுதாங்க, மாமா.” 

“அடே, எங்கப்பா!…” தேவர் கை கொட்டிச் சிரித்தார். 

“நெஜங்க, மாமா! நீங்க இல்லேங்கலாம்; ஆனா, நெஜம்கறது என்னக்கியும் இல்லேன்னு போயிடுங்களா மாமா?” 

“தம்பி மனசு ரொம்ப இளகுது, வெல்லம் மாதிரி….”

“வெல்ல யாவாரிதான்களே!” 

“ஆலெ, முதலாளி!” 

“அப்படிங்களா?” 

“பின்னெ…?” 

“அதுக்கு ரொம்ப நாள் ஆகணுங்க, மாமா”.

“நாளு போவாம, அப்படியே நிக்கவா போவுது?”

“மடக்கி மடக்கி என்னெ செயிச்சுடுறீங்க மாமா..!” 

“உன்னையா….?” தேவர் பரிகாசமாகச் சிரித்தார். அப்புறம், “அது கிடக்கட்டுங்க, தம்பி. நம்ப வேம்புப் படையாச்சியை நேத்திப் பாத்தேன். ‘என்ன அண்ணே, கரும்பு ரொம்ப ஜோராக் கிளம்புதே’ என்றான். ‘நீயும் போடேன், உனக்கும் வருமெ’ன்றேன். ‘தம்பியும் அதான் சொல்லுறான். இந்த வாட்டி சம்பா ஒண்ணும் சரியா விளையலே; எலி பூந்து வெட்டித் தள்ளிப்புடுச்சு. ஒண்ணும் காணலே’ன்னான். பாவம் ரொம்ப கஷ்டப் படறான் போலிருக்கு. ‘நாளைக்கு வந்து தம்பியைப் பாரு; ஒத்தாசை பண்ணும்’ன்னு சொன்னேன். வருவான். கூடவோ கொறச்சலோ உட்டுப் புடிங்க, தம்பி.” 

“சரிங்க, மாமா!” 

அடுத்த நாள்,வேம்புப் படையாச்சி வந்தபோது, அவன் மிகுந்த தாராளத்தோடு நடந்து கொண்டான். 

“விதைக் கரும்பு தரேன். முன் பணம் தரேன். கூலி யாளுங்க கொண்டாரப் பணம் வேணும்ன்னா அதுவும் தரேன். ஆனா, நீங்கவிடாம கரும்பு போடணும்; அதான் எனக்கு வேண்டியது.” 

வேம்புப் படையாச்சி எல்லாவற்றையும் தலை வாங்கிக் அசைத்து ஏற்றுக்கொண்டான். பணத்தை கொண்டு,”இன்னமெ,நம்ப நிலத்திலெ கரும்புதாங்க ” என்று சொல்லிவிட்டுப் போனான். ஆனால், ஒரு மாதம் ஆகியும் அவன் ஒன்றும் செய்யவில்லை. அப்புறம் கால் காணியில் கரும்பு போட்டான். 

தான் ஏமாந்துபோனது ஆத்திரத்தைக் கொடுத்தது, சிதம்பரத்திற்கு. அதோடு ஆற்றுப் படுகையை ஒட்டிய புறம்போக்கு நிலத்தைச் சுற்றி வேலி போட்டான்; பத்து நாட்கள் ஆகியும் யாரும் ஒன்றும் கேட்கவில்லை. 

அவனே பட்டா மணியத்தைச் சென்று பார்த்தான். 

“கரும்பு… இன்னும் வில்லியனூரிலிருந்துதான் வருதா? ரொம்பத் தூர மாச்சே!” என்று அனுதாபம் தெரிவித்தார் மணியக்காரர். 

“தூரந்தான்,ஆனா வேற வழிங்க?” 

“ஏன், இஞ்ச கரும்பு போடறதுதானே.?” 

“ஆரு போடறாங்க எங்க மாமா கொஞ்சம் போட்டிருக்காங்க. வேம்புப் படையாச்சி கொஞ்சம் போட்டிருக்காங்க….”

“இஞ்ச சரியா வெளையாதுன்னு மத்தவங்க பயப் படறாங்க.” 

“எங்க மாமா வயல்லே, கரும்பு ரொம்ப ஜோரா ஜிகுஜிகுன்னு விளையுதுங்க!” 

“பாத்தேன். அடே எங்கப்பா! என்ன வௌச்ச! என் கண்ணே படும் போலிருக்கு … …. அதைப் பாத்த உடனேயே, இந்த வாட்டி கரும்பு போடணும்னு ஆசை வந்திடுச்சு.” 

“நீங்க கரும்பு போட்டா எனக்கு ரொம்ப ஒத் தாசையா இருக்கும்ங்க.” 

“அப்பவே தீர்மானிச்சுட்டேன். கீழப்பங்கு மூணு வேலியும் கரும்புதான். எத்தனை வாட்டி சும்மாச் சும்மா நெல்லு போடறது? ஒரு வாட்டி மாத்திப் பாக்கறது…” 

“கரும்புலெ அப்படியொண்ணும் நஷ்டம் வந்துடாதுங்க”. 

“நஷ்டமென்ன லாபமென்ன எல்லாம் நம்பளா போட்டுப் பாக்கற கணக்கு.” 

“ரொம்ப சரியா சொல்லுறீங்க.” 

“வெல்லம் எப்படி?” 

“தேவலாங்க. நல்லா வெலெயும் போகுதுங்க.” 

“நம்ப அலமேலுக்கு உன் வெல்லத்திலெ ரெண்டு தூக்கு அனுப்பி வெச்சேன். ‘ரொம்ப நல்லா இருக்கு ; இந்த வெல்லம் ஏது ? இன்னம் நாலு தூக்கு அனுப்புங் கன்னு சொல்லி விட்டிருக்கா உன் வெல்லத்துக்கு. அம்மாம் பேரு!” 

அவன் சிரித்தான். 

“இப்பப் போய், அரை மணங்கு அனுப்பறேங்க நல்ல வெல்லமா பாத்து..” 

“ஒண்ணும் அவசரமில்லே. மெள்ள அனுப்பலாம்.”

“குழந்தை ஆசைப்படுது. அதுக்கு இல்லாத வெல் லங்களா? கும்மோணம் போற வண்டியை செத்தெ இப்பபடித் திருப்பிடறேன்.” 

“அப்ப வண்டியைக் குத்தாலத்துக்கே விட்டுடேன்.” 

“குழந்தை வீட்டுக்கேங்களா?” 

“ஆமாம், போற வழிதானே?” 

“அதுக்கென்ன, அனுப்பிடறேங்க.” 

சிதம்பரம் பட்டாமணியத்திடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தான் : மனம் திருப்தி உற்றது; எல்லாம் அனுசரணையாக இருக்கிறது. 

கரும்புத் தோட்டத்தின் வழியே வீட்டிற்குத் திரும்பினான். சிறு கரும்பின் வளர்ச்சி நன்றாக இருந்தது. அடுத்த முறை தேவரின் எட்டரை வேலி நிலத்திலும் கரும்புத் தோகை அசைந்தாடும். பட்டாமணியத்தைப் போல ஒவ்வொருவரும் கரும்பு போட ஆரம்பித்து வார்கள். சாயாவனமெங்கும் கரும்பாய் இருக்கும்! 

கோடைக்காலம் சென்று மழை காலம் வந்தது. 

ஐப்பசி – தீபாவளிக்குப் பத்து நாட்களுக்கு முன்னே அடை மழை பிடித்துக் கொண்டது. இடைவிடாத மழை. இரண்டு நாட்கள் இரவும் பகலும் விடாது பொழிந்தது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. 

கரும்பும் சர்க்கரையும் ஆங்காங்கே தங்கிவிட்டன. குறுக்காக ஓடும் ஆற்றைக் கடந்துதான் அக்கரைக்கும் இக்கரைக்கும் வண்டிகள் போக வேண்டும். அசாத்தியத் துணிச்சலோடு வண்டியை ஆற்றில் இறக்கிய பழனியாண்டி அப்படியே போய்விட்டான். ஒரு வண்டி கரும்பு முழுவதும் அவன் மீது சாய்ந்தது; சின்னப்பையன் தாளாது ஆற்றோடு போய்விட்டான்; பிணம்கூடக் கிடைக்கவில்லை. 

கொஞ்சம் தண்ணீர் வடிந்ததும் ப்ரம்மாண்டமான பாலத்தை அந்தக் கார் காலத்திலேயே அமைத்தான். ஏராளமான மூங்கிலும் மரங்களும் அதற்குப் பிடித்தது. பாலம் முடிவுற்றதும் புதுத் தெம்பும், உணர்ச்சியும் பிறந்தன. முதல் வண்டியை பாலத்தின்மீது அவனே ஓட்டினான். பார வண்டி வெகு நிதானமாகச் சென்றது. அவன் நெஞ்சம் களிப்புற்றது. மனத்தை அழுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை தீர்ந்துபோயிற்று. 

மழையை அடுத்து மூன்று வாரத்திற்குச் சந்தை கூடாமல் போயிற்று. ஆண்களும் பெண்களும் குழந்தை களும் புளி வாங்க கடைக்கு வந்தார்கள்.கனகசபாபதிச் செட்டியார் வீட்டிலிருந்தும், மேலகரம் லட்சுமணராவ் வீட்டிலிருந்தும் புளி கேட்டுத் தனியாக ஆட்கள் வந்தன. 

புளி கையிருப்புத் தீர்ந்து போயிற்று. உடனே அவன் வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, திருவெண்காடு, காவேரிப் பட்டினம் இங்கேல்லாம் சென்று புளி வாங்கி வர ஏற்பாடுகள் செய்தான். 

இரண்டு வண்டிகள் புளியோடு மூன்றாம் நாள் திரும்பி வந்தன. பல்வேறு ரகம் தித்திப்புப்புளி; புளிப்புப்புளி – எல்லாம் ஒன்றாகக் கலந்திருந்தது.செங் காயையும் அடித்துக் கலந்திருந்தார்கள். அரிந்து கொட்டையெடுத்துக் கோது நீக்கியபோது, பாதிக்கு மேல் குறைந்து போயிற்று. 

கனகசபாபதிச் செட்டியார் வீட்டிற்குப் போன ஐந்து தூக்குப் புளி மறுநாளே திரும்பி வந்தது. 

ஆச்சி காவிரிக் கரையில் சிதம்பரத்தைப் பார்த்ததும், “ஏண்டாப்பா, புண்ணியவானே! புளியெ வாயிலெ வைக்க முடியல்லே” என்று குறைப்பட்டுக் கொண்டாள். தான் ஊருக்குள் காலடியெடுத்து வைத்த அன்று நிறைந்திருந்த புளிய மரங்கள் நினைவில் படர்ந்தன. 

“பாத்து, நல்ல புளியா அனுப்பறேங்க, ஆச்சி”‘

“அதான் எல்லாத்தியும் கருக்கிட்டியே! இன்னமெ எங்கெயிருந்து அனுப்பப் போறே?” 

ஆச்சி பட்டுப் புடைவையைப் பிழிந்து தோளில் போட்டுக் கொண்டு பிள்ளையார் கோவிலுக்குள் சென்றாள். 

(முற்றும்)

– சாயாவனம் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1969, வாசகர் வட்டம், சென்னை.

Sa_kandasamy சா.கந்தசாமி (1940 - சூலை 31, 2020) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 1968-இல் எழுதிய சாயாவனம் புதினம் பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. சவகர்லால் நேரு, பெரியார், உ. வே. சாமிநாதையர் மற்றும் வெ. சாமிநாத சர்மா போன்றோரின் படைப்புகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *