கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 21, 2025
பார்வையிட்டோர்: 4,650 
 
 

(1969ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16

அத்தியாயம் – 10

விசித்திரம் நிறைந்த மரங்கள் சூழ்ந்த தோட்டத்தில் சின்னஞ்சிறிய வீடு மெல்ல மெல்ல உருவாகியது. கூட் டாக ஒன்று சேர்ந்து, தினந்தினம் உழைத்து, அவர்கள் உருவாக்கிய வீடு அது. தங்கள் உழைப்பு, தாங்கள் உரு வாக்கியது – என்பதே அவர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. 

நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடந்த சாமான்களைக் கொண்டுவந்து, தரவாரியாகப் பிரித்து அடுக்கினார்கள். அதற்குப் பிறகு, தங்களுக்கு வேண்டிய சாமான்களுக் காக அவர்கள் அங்குமிங்கும் அலையவில்லை. எங்கே எதை வைத்தோம் என்றும் யோசித்துக் கொண்டு நிற்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு திட்டமான இடம் – அங்குதான் அது இருக்கவேண்டும் என்ற நிர்ணயம் ஏற்பட்டது. 

ஒரு நாள். 

புதிதாக வாங்கிவந்த கைவாள் நான்கையும் கட்டிலின் கீழே வைத்தான் சிதம்பரம்.வெற்றிலையை அரைத்து அரைத்துக் குதப்பிக்கொண்டிருந்த தேவர், கைவாளை அலட்சியமாகப் பார்த்துக் கலீரென்று சிரித்தார். 

“எதுக்குங்க மாமா, சிரிக்கிறீங்க?” 

“எமன் மாதிரி நம்பகிட்ட அருவா இருக்கு … அத வுட்டுப் புட்டு, இத்தனையோண்டு வாளைக் கொண்டாந்து இருக்கிறீங்கிளே – என்கறத நினைச்சேன். சிரிப்பு பொத்துக்கிட்டு வந்துடுச்சு….” 

அவன் தேவரை ஆழ்ந்து நோக்கினான். அவர் கூற்றுக்கு அவனிடமிருந்து சமாதானம் ஏதும் வரவில்லை.

‘கிழம் ஒரு நரி சரியான குள்ளநரி! அதுக்கு நாலு விஷயமும் தெரியுது – அதுதான் கர்வத்துக்கெல்லாம் காரணம்.’ 

கையை அகல விரித்து, உள்ளங்கையை பார்த்தான். காய்த்து, நிறம் மாறித் தோல் தடித்துவிட்டது. கிள்ளினால் – இன்னும் இன்னுமென்று பல்லைக் கடித்துக் கொண்டு கிள்ளினால்கூட சுரணை வருவதில்லை. அப்படி யொரு தடிப்பு: ரேகை மறைய உள்ளங்கை வெளுத்துப் போயிற்று. உழைப்பின் சம்பத்து அது. மரங்கள் விழ விழ, அவன் கை வைரம் பாய்ந்துகொண்டு வந்தது. 

“அரிவாளாலே வெட்டினா, மரங்க சீக்கிறம் சாய்ஞ்சிடும்ங்கறது சரிதாங்க, மாமா. ஆனா பாருங்க, நம்பளும் சீக்கறமா களச்சுப் போயிடுறோம்.” 

நிராகரிப்பது மாதிரி தேவர் தலையசைத்தார். அவன் விளக்கம் அவரைத் திருப்திப் படுத்தவில்லை. அவர் வழி பிரிந்தது. இருவருக்கும் ஒரே பாதை என்பது அடை பட்டு விட்டது. அவன் ஒரு பாதையிலும், அவர் ஒரு பாதையிலும் செல்லத் தொடங்கிவிட்டார்கள்! 

ஒரு கௌரவமான போர் அது. செயல் திறனிலும் அறிவுத் தீட்சண்யத்தின்மீதும் ஆதாரப் பட்டிருப்பது. தங்கள் பாதை தங்கள் வரையிலும் சரியானது, என்று இருவரும் எண்ணினார்கள். விட்டுக் கொடுத்து சமரசப் படுத்திக்கொள்ள ஒன்றுமில்லை. 

இருவரும் மிகுந்த அபிப்பிராய பேதத்தோடு வீடு சென்றார்கள். திட்டங்கள் முரண்பட்டன ; சம்பவங்கள் புதிய அர்த்தம் கொடுத்தன ; ஒவ்வொரு பிணக்கும் இன் னொரு பிணக்கின் ஆதாரமாகியது. 

‘நெய்விளக்கிலே ஒரு அவசர ஜோலி தோபோயிட்டு வந்துடறேன்’ என்று போன தேவர் ஒரேயடியாகத் தங்கிவிட்டார். ஒவ்வொரு நாளும், ‘இன்றைக்கு வந்து விடுவார் – சற்று நேரத்தில் வந்துவிடுவார்’ என்று எதிர் பார்த்துக்கொண்டே இருந்தான். எட்டு நாட்கள் சென்று விட்டன. தீ இடுவது தள்ளிக் கொண்டே போயிற்று. பிணக்கு இன்னும் தீரவில்லை. தன் செயல்கள் அவர் மனத்தைப் புண்படுத்திவிட்டன என்பதை முன்னை விடத் தெளிவாக உணர்ந்தான். அது வேதனை அளித்தது. தன் மேலேயே பச்சாதாபப்பட்டுக் கொண்டான். ஆனால், தன் காரியங்கள் சரியான மார்க்கத்தில் திட்டமிடப் பட்டவைதான் என்று சொல்லிக் கொண் டான். 

இனி ஓய்ந்திருக்க முடியாதென்று வேலையில் இறங் கினான். நுணாவும் கள்ளியும் நிறைந்த கிழக்கு மூலையில் அவன் கவனம் திரும்பியது. கிழக்கிலிருந்து வடக்காகத் தீ பரவ அனுகூலமானதென்று தீர்மானித்தான். 

கிழக்கு மூலையில் வேலையைத் துவக்கிய நான்காம் நாள், கலியபெருமாள் சொந்தவூருக்குப் போனான். ‘போக மாட்டேன்’ என்று அடம் பிடித்தவனை, அவன் அம்மா அடித்து இழுத்துக்கொண்டு போனாள். தன் சிநேகிதன் போவதைப் பார்த்துக் கொண்டே மௌனமாக நின்றான் பழனியாண்டி. அது எவ்வித பாதிப்பையும் அவன் மனத்தில் ஏற்படுத்தவில்லை. அடுத்தநாள், அவன் தன்னந்தனியே தோட்டத்திற்குச் சென்றான். 

ஆரண்யம் போன்ற தோட்டத்தில் பறவைகளின் கூக்குரலுக்கும், பிராணிகளின் உறுமல்களுக்குமிடையே இரண்டு மனிதர்கள் எவ்விதச் சலிப்பும் முணுமுணுப்பும் இன்றி வேலை செய்து கொண்டிருந்தார்கள். 

ஒரு நாள் நிலவில் தான்கண்ட சமவெளிப் பகுதியை பழனியாண்டிக்குக் காட்டினான் சிதம்பரம். அவனுக்கு ஒரே ஆச்சரியம்; எங்கே இருக்கிறோம் என்பதே பிடிபட வில்லை! 

“இது நம்ப தோட்டந்தாங்களா?” 

“ஆமாம்.” 

அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. 

இரண்டு பேரும் அந்தச் சமவெளி முழுவதும் சுற்றி வந்தார்கள். புல்லிதழ்களில் கால் புதையப் புதைய நடக்கையில் மனம் கிளர்ச்சியுற்றது. தனக்குள்ளேயே இடத்தை அளந்துகொண்டு, ‘இங்கதான் ஆலை’ என்று தீர்மானித்துக் கொண்டான். 

சமவெளியையும் தோட்டத்தையும் பிரிப்பது தாழங் குத்தும் பிரம்புந்தான். வெட்டாற்றையொட்டி கிழக்குப் பக்கமாகச் சென்றால், சாயாவனத்தின் இன்னொரு பகுதியை மறைக்கும் காடு – பெரும் காடு; உபயோகமற்ற மரங்கள் நிறைந்த இருள் கவிழ்ந்த காடு. அந்த மரங்களை வெட்டிக் காட்டை அழிக்க வேண்டும். அதைத் தவிர வேறு மார்க்கமில்லை. 

இருவரும் திரும்பிக்குடிசைக்கு வந்தார்கள். இலுப்பை மரத்தையும் புன்னை மரத்தையும் என்ன பண்ணுவது என்பது ஒரு பிரச்சினையாகவே இருந்தது. அப்போதுதான், ‘புன்னைக்கும் சேர்த்துத் தீ வைத்து விடலாம்’ என்ற யோசனையைத் தெரிவித்தான் பழனி யாண்டி. சிதம்பரத்திற்கும் சரியாகப் பட்டது; உடனே ஏற்றுக் கொண்டான். ஆனால், தீவிரமாக, எதிர்பார்த்ததற்கு மேலாக உழைக்க வேண்டியதாயிற்று. 

வடக்கே இருந்து தெற்காக உலர்ந்த கிளைகளையும் கொடிகளையும் இழுத்துக்கொண்டு போய், மரங்களின் டையே போட்டார்கள். நான்கு தடவைக்கு மேலே தெற்கே போக முடியவில்லை. பாதையற்ற – மரங்கள் நிறைந்த – தோட்டம் அவர்களைச் சோர்வடையச் செய்தது. 

எதிரியின் பலம் பெரிது; இனி போராட முடியாது. இருவரும் வடக்காகப் பின்வாங்கினார்கள். 

தழையோடு கூடிய மிலாறுகளை இழுத்துக்கொண்டு வந்து தாழங்குத்தின் அருகில் போட்டான் பழனியாண்டி. நுணாமரத்தில் ஏறிக்கொண்டு, ஒவ்வொரு மிலாறையும் அலக்கில் மாட்டிப் பிரப்பங்காட்டினுள்ளே வீசியெறிந் தான் சிதம்பரம். இரண்டு நாட்கள் தொடர்ந்தாற்போல இதே வேலை. ஞாயிற்றுக்கிழமை பகலுக்குமேல் தங்கள் திட்டம் பலன் தரும் என்ற நம்பிக்கை உண்டா கியது. 

பழனியின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு, “நீ ஒரு அற்புதமான பையன்!” என்று புகழ்ந்துரைத்தான் சிதம்பரம். பழனியாண்டிக்கு அவ்வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லை. ஆனாலும், தன்னால் எசமானன் சந்தோஷமுற்றிருப்பதை அறிந்து கொண்டான். 

“நாளைக்கு சுருக்கா வந்துடு. அவுங்க வராங்க; வந்தோடனே நெருப்பு வச்சுடணும்.” 

“நான் வந்துடறேங்க.” அவன் விடைபெற்றுக் கொண்டான். 

திங்கட்கிழமைபொழுது புலர்ந்தது. ரம்யமான இளம் காலை.பறவைகளின் இடையறாத கூச்சல்; வண்டு களின் ரீங்காரம். எங்கோ மரம் சரிந்து தண்ணீரில் விழும் சப்தம். மூங்கில் கிறீச்சிடுகிறது. ஒற்றைச் செம் போத்தின் தனிக்குரல். அதைத் தொடர்ந்து சிறகொலி. குதூகலமும் மகிழ்ச்சியும் நிறைந்தது. 

அநேகமாக எல்லாம் தயாராக இருக்கின்றன. நிலையும் சரியாக இருக்கிறது. மேகங்கள் அற்ற வானம்; வறண்ட ஈரப்பசையற்ற காற்று. தீக்குச் சௌகரியம்; கன்றாகக் கொழுந்துவிட்டு எரியும். 

சிதம்பரம் கதவைச் சாற்றிக் கொண்டு வெளியே வந்தான். அவன் பார்வை வெகு தூரம் வரையில் சென்றது. 

தேவர் தனியாக, வேகமாய் வந்துகொண்டிருந்தார்.

“எல்லாம் சரியாகிவிட்டது” என்று சொல்லிக் கொண்டு திரும்பினான். 

அவன் பார்வை பசுமை கொழிக்கும் பிரப்பங் காட்டில் விழுந்தது. கொடிகொடியாக பிரம்பு வெகு தூரம் வரையில் பரவி இருந்தது. எங்கு தொடங்கி எங்கு முடிவடைகிறது என்பதே தெரியவில்லை. பிரம்பை அவன் ரொம்ப நேசித்தான். வெட்டிக் கழித்தெடுக்க ஆசைப்பட்டான். பிரம்பு, அவன் வாழ்க்கையில் அபரி மிதமான செல்வாக்கைச் செலுத்தியது. நாற்காலி, கட்டில், வர்ணக் கூடைகள் சிங்கப்பூரில் பார்த்தது மாதிரி தன் வீட்டிலும் செய்து வைத்துக் கொள்ள விரும்பினான். 

மூன்று முறைகள், தனக்குத் தேவையான அளவிற் காவது பிரம்பை வெட்டியெடுக்க முயற்சித்தான். ஒவ் வொரு முயற்சியும், இனி பின்வாங்குவதில்லை என்ற ஆவே சத்தோடு துவக்கப்பட்டது. ஆனால், தன்னுடைய தீர் மானத்திலிருந்து வருந்தத்தக்க விதத்தில் ஒவ்வொரு தடவையும் பின்வாங்கினான். பிரம்புகள் ஒன்றோ டொன்று பின்னிக் கொண்டிருந்தன; வெட்டிய பிரம்பை வெளியே இழுத்துவர முடியவில்லை. 

தேவரிடம் யோசனை கேட்டபோது, அவர் பெரிதாகச் சிரித்தார். 

“என்னங்க தம்பி யோசன வேண்டிக்கிடக்கு, பேசாம தீயை அதன் தலையிலே வெக்காம!” 

அவன் பதிலொன்றும் அளிக்காமல், பிரப்பங் காட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். அதன் கதி தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதை மாற்றியமைக்க வழி யொன்றுமில்லை. என்ன விசித்திரம்! ஒன்றின் அழிவு தீயினிடமும், இன்னொன்றின் அழிவு மனிதர்களிடமும் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது! 

தோட்டத்தின் ஒரு பகுதி விரைவாக அழிக்கப்பட்டு விட்டது. செடிகொடிகளின் அழிவைவிட மூங்கிலின் அழிவுதான் விரைவில் நடந்தது. யாரும் நினைக்காதது! எவ்வளவு பெரிய மரங்கள் ஒன்றரைத் தென்னை, இரண்டு தென்னை உயரம் ஒரு கோணல் இன்றி ! ராம புரம் மணி ஐயர் கும்பகோணத்தில் மாவுமில் கட்ட நான்கு வண்டிகள் ஏற்றிக்கொண்டு போனார். அப்புறம் நடேச சாஸ்திரி மாட்டுத்தொழுவம் கட்ட, இரண்டு வண்டி ; ஹுசேன் சாயபு கறிக்கடையைப் பிரித்துக்கட்ட ஒரு வண்டி வண்டி வண்டியாக மூங்கில் சென்றன. அப்படிச் சென்றும் குறையவில்லை. இன்னும் ஐநூறு, புன்னைமரத்தடியில் கிடந்தன ! 

புன்னகை பூத்துத் தேவரை வரவேற்றான். 

“தம்பி தயாரா இருக்குறாங்க!” 

இருவரும் தாழங்காட்டின் பக்கத்தில் வந்து நின்றார் கள். அவன் முன்னேற்பாடெல்லாம் அவருக்குத் திருப்தி அளித்தது. 

“நெருப்பு வைக்கறதை, இங்க இருந்து தொடங்க லாங்க, மாமா.” 

தேவர் கண்களைச் சுழற்றிப் பார்த்தார். தாழங்காட் டோடு பிரப்பங்காடு தென் கிழக்கில் ஐக்கியமாகியது. இங்கு வைக்கும் தீ, நேராகப் பாய்ந்து சென்றால், பிரம் பைப் பொசுக்கிவிடும். 

“தம்பி ஒண்ணு செஞ்சா, அது சரியில்லாமல் இருக்குமா?” 

‘கிழ நரி, கயிற்றைவிட்டு ஆழம் பார்க்கிறது!’ 

அவன் புன்னகை பூத்தான். காற்று சுழன்று வீசியது. 

“நமக்காத்தான் காத்து அடிக்குது” என்று நெருப்புச் சட்டியை எடுத்துக்கொண்டு முன்னே நடந்தார் தேவர். 

“பழனி, மட்டையை எடுத்துக்கோ!” 

முன்னே பாய்ந்தோடிய பழனியாண்டியைத் தடுத்துத் தள்ளி, சிதம்பரம் பனைமட்டையையும் அலக் கையும் எடுத்துக் கொண்டான். 

தாழங்காட்டினுள் சென்ற தேவர், சட்டியைக் கீழே வைத்துவிட்டு, ஆடாதொடையை இணுக்கு இணுக்காகக் கொய்து நெருப்பில் அடுக்கினார். மெல்ல வீசிய காற்றில் கனிந்த நெருப்பு ஆடாதொடைக்குத் தாவியது. 

”செத்த இஞ்ச வந்து, மெல்ல விசுறுங்க தம்பி ” சிதம்பரம் இரு கையாலும் காய்ந்த பனைமட்டையைப் பற்றிக்கொண்டு சீராக விசிறினான். தீப்பொறி மின்ன லெனக் கிளம்பி ஒரு கணத்தில் மறைந்தது. 

பயபக்தியோடு தீயை நோக்கிய தேவர் மேல்துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். 

“தாயே, மாரி ! ஏழைகாத்தா! மந்தையா ! பெரிய கருப்பு! – நீங்க எல்லாம் பக்கத்துணையா இருந்து, ஒரு பங்கமும் வராம காப்பாத்தணும்” என்று பரவசத்தோடு தீயைத் தொழுதார். 

அவர் கண்கள் மின்னின ; முகத்தில் ஒரு பிரகாசம். ‘ஹா!’ என்ற கூச்சல். உடம்பு சிலிர்த்தது. எதிர் பார்த்த உத்தரவு கிடைத்துவிட்டது. 

“நம்ப சாமி சரியின்னுடுச்சுங்க, தம்பி” என்று தேவர் தீச்சட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே போனார். சம தரையில் அதை வைத்து, மேலே காய்ந்த பனைமட்டைகளை அடுக்கினார். 

மெல்ல வீசிக்கொண்டிருந்த காற்று அடங்கியது. சிதம்பரம் பனைமட்டையை அழுத்திப்பிடித்து, முழு பலத் தோடு விசிறினான். நெருப்பு பொறிப் பொறியாய் சிதறிச் சாம்பலாகியது! 

‘செத்த இந்தப் பக்கம் வாங்க, தம்பி.’ 

அவன் திசைமாறி நின்று விசிறினான். 

தீ பச்சைத் தழைக்குத் தாவியது; மேல் நோக்கிக் கொழுந்து விட்டது. வெட்டிக் காயப் போட்டிருந்த பனை மட்டைகளை அள்ளிக்கொண்டு வந்து, எரியும் நெருப்பில் போட்டார்கள். தீ குபீரென்று, காற்றின் உதவியால் சற்றைக்கெல்லாம் மேல்நோக்கித் தாவியது. 

தேவர் தீயின் மத்தியில் இரண்டு மட்டைகளைக் குத்திட்டுப் பிடித்தார். தீ சட்டென்று மேலே தாவியது; சடசடவென்று மட்டை எரியும் ஓசை; எரியும் மட்டை களைத் தாழங் காட்டினுள் வீசியெறிந்தார். பச்சை இலை களின் மத்தியில் போய் அது திடீரென்று விழுந்தது. 

“அவிஞ்சு போச்சு!” 

“ஆமாங்க, மாமா.” 

“ஒண்ணு அவிஞ்சாலும் இன்னொண்ணு பத்திக்கும்.” 

“ஆமாங்க.” 

சிதம்பரம் ஒரு பனை மட்டையை அலக்கில் தூக்கி, கொழுந்து விட்டு எரியும் போது, உள்ளே வீசியெறிந் தான். அப்புறம் ஆளுக்கொன்றாக மாறி மாறி, எரியும் மட்டைகளை வீசினார்கள். 

ஓய்ந்திருந்த காற்று கிளைகள் குலுங்கப் புறப்பட்டது. 

“காத்து வருதுங்க, தம்பி.” 

“ஆமாங்க, மாமா.” 

“நம்ப சாமி அனுப்புதுங்க!” 

அவன் தலையசைத்தான். 

நெருப்பு, காற்றின் துணையோடு, காய்ந்த சருகுகளைத் தீய்த்துக் கொண்டு மேல்நோக்கி எழும்பியது. 

“இன்னமெ கவலை இல்லீங்க, தம்பி.” 

தீ பூரணமாகப் பற்றவில்லை. ஆனால், அணைந்து போகாது; உள்ளுக்குள்ளேயே கனிந்து கொண்டிருக்கிறது. 

சிதம்பரம் நுனி பற்றியெரியும் அலக்கைத் தரையில் தேய்த்து அணைத்தான். 

காரையின் பக்கத்தில் நிற்க முடியவில்லை ; அனல் பளீரென்று வீசியது. தேவர் சற்றே பின்னுக்கு நகர்ந்து, “நல்லா பத்திக்கிச்சுங்க, தம்பி ” என்றார். 

“ஆமாங்க, மாமா.” 

”சொக்கப் பானப் பொறி!…” என்று பழனி கை கொட்டிக் குதூகலத்தோடு ஆர்ப்பரித்தான். கார்த்திகை சொக்கப்பானை நினைவுகள் அவன் மனத்தை ஆக்கிர மித்துக் கொண்டுவிட்டன. 

ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தீ தாவும் போதெல்லாம் – தீப்பொறி வானோக்கிச் சென்று, சாம்ப லாகி தரை நோக்கும். விழிகள் படபடக்க மேலெழுந்து தாவும் தீயைப் பார்த்துக்கொண்டே மூவரும் நின்றார்கள். 

காரையிலிருந்து பச்சைப் பசும் பிரம்பிற்குத் தாவியது நெருப்பு. நீண்ட மென்மையான பிரம்பின் தழைகள் பொசுங்கின. காற்றில் அலையலையாக தீ தாவிப் பரவியது. இரண்டு விதமான போராட்டம். தாழையோடு வடக்குத் தெற்காக தீ பரவிச் சென்ற அதேநேரத்தில், இன்னொரு முனை காய்ந்த காரையோடும் ஆடாதொடையோடும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. 

பசுமையை மிஞ்சிய செந்தழல்! அந்தி வானத்தின் கோலம்! தோட்டம் முழுவதும் தீ பரவிவிட்டது போல ரு தோற்றம் ! காற்றின் வேகத்தில் நிற்க முடியாத அனல் வீச்சு! மூன்றுபேரும் மெல்ல மெல்லப் பின் வாங்கிக் குடிசைக்குச் சென்றார்கள். மரங்களின் மறை வில் செந்தழல் முழுமையாகத் தெரியாவிட்டாலுங்கூடக் கரும்புகை பந்து பந்தாய் மேல்நோக்கிச் செல்வது தெரிந்தது. 

தீயின் போக்கையும் தோட்டத்தையும் நெடுநேரம் ஆழ்ந்து நோக்கி, தேவர் சொன்னார்: “ரெண்டு நாளைக்கு எரியும்போல இருக்குங்க, தம்பி.” 

“ரெண்டு நாளைக்குங்களா, மாமா!” 

“ஏன்?” 

“கேட்டேன்.” 

“இம்மாம் பெரிய தோட்டம் எரியணுமெ!” 

“ஆமாங்க.” 

கரும் புகை பந்தாக எழும்பி,நேராக மேல்நோக்கிச் சென்றது. அதைத் தொடர்ந்து நெருப்புப் பொறிகள் நாலா பக்கமும் சிதறின. 

“நெருப்பு மேலே கிளம்புது!” 

“அதோ அதோ!……” 

குட்டைப் பனையின் பச்சை மட்டைகள் திடீரென்று பொசுங்கின. ஒரு கணத்திலேயே, மட்டைகளை அகலப் பரப்பிக் கொண்டிருந்த பனை மொட்டையாகியது. தீ வந்ததின் சுவடும், போனதின் சுவடும் தெரியவில்லை. ஆனால், மரம் மொட்டையாக நிற்கிறது; ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்று. 

“பாருங்க மாமா, பச்சைப் பனை பத்திப் போச்சு!” சிவனாண்டித் தேவர் தலையசைத்து முறுவலித்தார். 

“நெருப்பு இன்னும் சரியாப் பிடிக்கலேங்க, தம்பி”

அவன் விசித்திரமாக அவரைப் பார்த்தான். 

மீசையைத் தள்ளி விட்டுக் கொண்டு, “நெருப்பு நல்லா பத்திக்கிட்டா, புகை வராது” என்றார். 

“அப்படிங்களா?” 

“இப்பத்தான் தாழைப் பக்கம் நெருப்பு கனியத் தொடங்கியிருக்கு.” 

“நேத்திக்கு, மொட்டா இருக்குதுன்னு எட்டுப் பூவை விட்டுட்டு வந்தேன்!” என்றான் பழனியாண்டி. 

“இப்ப கருகிப் போய்யிருக்கும்!” 

அவன் பதிலொன்றும் சொல்லவில்லை. மனத்திற்குள்ளே நீண்ட பெரிய பூவை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தான். 

“இப்படி செத்த குந்துவோம், தம்பி. எலே, கட்டில செத்த இப்பிடி இழுத்தாந்து போடுடா.” 

பழனியாண்டி வெளியே கொண்டு வந்த கட்டிலில் உட்கார்ந்து கொண்டு, தோட்டத்தை நாலா பக்கமும் நோக்கினார்கள். 

பெருகிய நெருப்பு அடங்கிக் கொண்டிருந்தது. வெறும் புகை, கரும் புகை எங்கும்! 

“புகையுதுங்க.” 

“காத்துல்ல.” 

“நல்ல பச்ச.” 

“ஆனா, நெருப்பு பத்திக்கிட்டா, அதுகிட்ட ஒண்ணும் வேகாது.” 

“பத்தின நெருப்பு அடங்குதே?” 

“அடங்குல, கனியுது.” 

“அப்படிங்களா?” 

சிதம்பரம் இருக்கையை விட்டெழுந்து தீயின் பக்கம் சென்றான். அனல் வீசியது; ‘சடசட’வென்று பசுந்தழைகள் பொசுங்கின. 

ஒரு குரங்கு, அவன் தலைக்கு மேலேயிருந்து பயங்கரமாகக் கத்தியது. புகையில் அது இருக்குமிடம் தெரிய வில்லை. ஆனால், வீட்டு விட்டுக் கத்துவது மட்டும் கேட்டது. 

அவன் இரண்டடி எடுத்துவைத்து, முன்னே சென்றான். 

இரண்டு அணில்கள் பொசுங்கிக்கிடந்தன. பொசுங்க நாற்றம் குமட்டியது. மூக்கை உறிஞ்சிக் கொண்டு, மேலே நடந்தான். 

காலடியில் ஒரு பாம்பு நெளிந்தது! 

ஒரு கணம் அதை உற்றுப் பார்த்தான். 

நல்ல பாம்பு; பெரிய பாம்பு! அதன் பாதி உடம்பு வெந்திருந்தது. 

அவன் உடல் சிலிர்த்தது ; வேகமாகத் திரும்பினான். ஒரு குரங்கு கத்திக்கொண்டே கீழே குதித்தது; அதைத் தொடர்ந்து இன்னொன்று; அப்புறம் மற்றொன்று. அவன் பார்த்துக் கொண்டேயிருந்தான்; எண்ண முடியவில்லை. ஐம்பது குரங்கு இருக்குமா! அதற்கு மேலும் இருக்கும் போல தோன்றியது! 

‘நெருப்பு வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு.’

‘பெரிய காடுதான்!’ 

அவனுக்கு மாட்டின் நினைவு வந்தது. ‘இப்போது அவை எங்கிருக்கும்’ என்று யோசித்துக் கொண்டே குடிசைக்கு வந்தான் சிதம்பரம். 

“தம்பி அங்க என்னத்தைக் கண்டுச்சு?”

“ஒண்ணுத்தையும் இல்லீங்க, மாமா” என்று சொல்லிக்கொண்டே கட்டிலில் ஏறி உட்கார்ந்தான். 

அத்தியாயம் – 11

மறுநாள் அவர்கள் தோட்டத்திற்குச் சென்றபோது நெருப்பு அப்படியே புகைந்து கொண்டிருந்தது. சிதம்பரம் அதை ஆழ்ந்து நோக்கிவிட்டு, “ரொம்ப புகைங்க!” என்றான். 

“உள்ளுக்குள்ளே நல்லா எரியுது.” 

“இப்படி எரிஞ்சுக்கிட்டிருந்தா ரொம்ப நாளைக்கு எரியுமே, மாமா?” 

அவர் சிரித்தார். 

“நெருப்பு எத்தனை நாளைக்கு இப்படி எரியும்? செத்தக்குள்ள திகுதிகுன்னு எரிய ஆரம்பிச்சுடும்.” 

“ஆமாம்.” 

இருவரும் சற்று முன்னே சென்றார்கள். 

“தாழ அழிஞ்சுட்டா ஒரு பெரிய காரியம் முடிஞ்சாப் போலத்தாங்க…” 

“ஆமாங்க… பெரிய குத்து இல்லீங்களா?” 

“ரொம்ப காலத்துக் குத்துங்க, தம்பி.” 

“தாழங் குத்திலே பாம்பு இருக்குமுங்களாமே, மாமா?” 

“அப்படித்தாங்க தம்பி சொல்லுறாங்க. பாரதத்திலே கூட கதை வருதுங்களே. ஆனா,பாருங்க, என் வயசிலே ஒரு பாம்பையும் இஞ்ச நான் பார்த்ததில்லே..” 

“எங்கயாச்சும் உள்ளே இருக்குங்க.” 

“இருக்கும்” என்றார் தேவர்.அவர் பார்வை தாழங் காட்டை ஊடுருவிச் சென்றது. தீ இன்னும் பூரணமாகப் பற்றிக்கொண்டு மேலே வரவில்லை. ஆனா ல், உள்ளுக் குள்ளேயே சுழன்று சுழன்று எரிகிறது. தீயை மிஞ்சிய புகை ; கரும் திரைகளாக மேலேயெழும்பி மேக மண்டலத்தை நோக்கி விரைந்தது. 

பச்சை மரங்கள் தீப் பற்றி வெடிக்கும் சடசடப்பை மீறிக்கோண்டு, நரியின் ஊளைச் சப்தம்; ஒன்றாய், இரண் டாய் ஒலித்து,பலவாய் மாறியது! 

பழனி சற்று முன்னெ வந்து, “நரிங்க…!” என்றான்.

“ஆமாம்.” 

பத்து நரிகள் கூட்டமாக ஓடின. கடைசியில் ஒரு நொண்டி நரி. பழனி அதை அடிக்கக் கல்லையெடுத்தான். அது ஓடி மறைந்துவிட்டது. 

“கப்பக்காரவங்க வூட்டிலே ஆட்டுக் குட்டியைத் தூக்கிக்கிட்டுப் போன நரிங்க!” 

“அப்படியா?” 

“ஆமாங்க. காலுகூட நொண்டுது பாருங்க! நான் தான் அடிச்சங்க. அன்னக்கி நல்ல நிலா. இன்னொரு கல்லு வுட்டிருந்தா சுருண்டிருக்குங்க; ஆனா, கல்லு அப்ப அம்புடாம போயிடுச்சிங்க…” 

தேவர் அவனை அருகில் அழைத்து, தட்டிக் கொடுத்தார். 

“நீ பலே சூரன்! உங்க அப்பன் மாதிரி..” 

“நம்ப செத்த அந்தப் பக்கம் போகலாங்களா?”

கட்டிலை விட்டெழுந்தார் தேவர். பழனியை சாப்பாட் டிற்கு அனுப்பிவிட்டு, இருவரும் தீப்பற்றி எரியும் பிரப்பங் காட்டை நோக்கிச் சென்றார்கள். 

அடங்கியிருந்த தீ, திடீரென்று மேல்நோக்கித் தாவியது. தென்னையின் பசுமட்டைகள் பொசுங்கிக் கருகின. அவர்கள் சற்றும் எதிர்பாராத விதத்தில்,தீ மேற்கு முனையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. 

கண்கள் தீயைக் குத்திட்டு நோக்க, உணர்ச்சி நிறைந்த குரலில் தேவர் பேசினார்: “பஞ்ச பூதம் என் பாங்க. அதுலே, காத்திலே, மழையிலே தப்பிச்சுக்கலாம். ஆனா, நெருப்பு இருக்குதே அதுலே யிருந்து ஒருத்தரும் தப்பிச்சுக்க முடியாதுங்க தம்பி.” 

“காத்தடிச்சா – வெள்ளம் வந்தா – பத்து மரத்திலே ஒண்ணு ரெண்டு மிஞ்சும். ஆனா, நெருப்புப் பட்டா என்னங்க மிஞ்சும்? வெறும் சாம்பதான்!” 

“அதான்!” தேவர் அங்கீகரித்தார். “பத்து வருஷத் துக்கு முந்திய சமாசாரங்க, தம்பி. ஒரு தைமாசம்; பொங்கலுக்கு எட்டு நாளு கழிச்சு. ஒருநா நடு ராவுலே, பாலு ஐயர் வூடு பத்திக்கிச்சு. குய்யோ முறை யோன்னு ஒரே கூச்ச; இரச்ச. அப்பத்தான் கள்ளுக் கடைக்குப் போயிட்டு வந்து படுத்தேன். 

“அப்ப, தங்கம் இருந்தா ; அவ ஓடியாந்து ‘என்னங்க, அக்ரகாரத்திலே என்னமோ கத்துறாங்க! போய்ப் பாருங்க! ஊரு முழுசா ஒரேவெளிச்சமா இருக்கு!’ன்னா.

”வாசல்ல வந்து பாத்தா, ஒரே வெளிச்சம், பட்டப் பக மாதிரி ! அதோடுகூட ஒரே இரச்ச அழறதும் பேசறதும் – அப்புறம் நிக்க முடியுமா? 

“‘எலே அக்ரகாரம் பத்திக்கிச்சு. ஓடியாங்க’ன்னு கத்திக்கிட்டே நாலு பாய்ச்சல்லே ஓடினேன். எனக்குப் பின்னாடி கப்பக்கார அண்ணாமலைத் தேவர், பட்டா செல்லையாத் தேவர், முருக படையாச்சி, சங்கரப்பிள்ளை, நாராயண பிள்ளை – எல்லாம் படையா திரண்டு வந்தாங்க. ஆனா, நாங்க போறதுக்குள்ளே நாலு அஞ்சு வூட்டுக்கு வரிசையா நெருப்பு பாய்ஞ்சுடுச்சு. 

“ஜோரா ஜிகுஜிகுன்னு நெருப்பு எரியுது! ஆணு பெண்ணு அடங்கலும் சாலையில் நின்னுகிட்டு ‘ஓ’ன் னு அழுவுதுங்க. 

“ஐயர்மாருங்க சமாசாரமே ஒரு தினுசு. வாயால் ரொம்ப நல்லாப் பேசுவாங்க; வேதம் சாஸ்திரம் சொல்லு வாங்க. ஆனா, காரியமென்னா முன்னே போக மாட் டாங்க. இது இப்பத்தி சமாசாரமில்லே. ராமாயண காலத்து விஷயம். பொண்டாட்டியை ஒருத்தன் அடிச் சுக்கிட்டுப் போயிட்டான்; புருஷன் துணை தேடறான். அது போலதான். இஞ்ச வூடு பத்தி திகு திகுன்னு எரியுது. மேலே ஏறி அணைக்கணுமே, அதான் இல்லை! அவனைக் கூப்பீடு – இவனைக் கூப்பிடு ன்னு ஒருத்தர் பின்னாலே ஒருத்தர். எனக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு; சகிக்கிலே. எதுக்க நிக்கறது ஆருன்னுகூட பாக்காம, புடுச்சுத் தள்ளிக்கிட்டு,’எல, அண்ணாமல தண்ணி கொண்டாடா ன்னு கத்திக்கிட்டே எரியிற வூட்டு மேலே ஏறினேன். அந்த சந்தடியிலே அவனைக் காணோம்; எங் கேயோ ஒழிஞ்சுட்டான். சங்கரப் பிள்ளை எந்த வூட்டி லேயோ புகுந்து நாலு குடம் கொண்டாந்தாரு. அவரும் முருக படையாச்சியும் தண்ணி மொண்டு மொண்டு கொடுக்க வாங்கி வாங்கி தீயிலே ஊத்தினேன். 

“இன்னொரு பக்கத்திலே பட்டா செல்லையாத் தேவர் பச்சை மட்டையை வெட்டி வெட்டி நெருப்புகிட்ட போட் டாங்க. த ண்ணி ஊத்தினாங்க. மொதல்ல பொசு பொசுன்னு எல்லாம் போயிடுச்சு. ஆனா, அவுங்க ‘சளைக்கலே; தண்ணியும் மட்டையும் மாறி மாறிப் போட்டாங்க. 

“செத்தைக் கெல்லாம் ஊரே திரண்டு வந்துடுச்சு. அக்ரகாரத்திலிருந்து ஆத்துவரைக்கும், ஆணும் பொண்ணுமா ஒரு வரிசை. குடம் குடமாத் தண்ணி. ஒரு வழியா பொழுது விடியற அப்ப தீயை அணைச்சோம். பத்து மாடுங்க, ஒரு குழந்த, கணக்கில்லாத சாமான் போயிடுச்சுன்னா பாத்துக்குங்க, தம்பி!” 

“தழும்புகூட அப்ப பட்டதுதாங்களா?” 

“ஒரு ஆணி தெறிச்சி அடுச்சிச்சு.” 

“நெருப்புன்னா இப்படித் தாங்க. ஒரு வாட்டி லங்கை யிலே ஒரு வார்குச்சு நூறு நூற்றைம்பது குடிசைங்க, கண்மூடி திறக்கறதுக்குள்ளே எரிஞ்சு போயிடுச்சு. இங்க யாச்சும் தண்ணி இருக்கு கிட்டத்திலே – பத்திக்கிட்டா அணைக்க. அங்க அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. நெருப்பு பத்திக்கிட்டா, அதுவாத்தான் அணையணும். அந்தத் தீ விபத்திலே பத்துப் புள்ளைங்க, மூணு பொம்ம னாட்டிங்க, ரெண்டு ஆளுங்க கருகித் தீய்ந்து போயிட்டாங்க!” 

“அதாங்க தம்பி, நெருப்பு. இப்ப இஞ்ச பாக்கிறோம். அப்புறம் குடிசை எரியுது ; பச்சை மரம் எரியுது.” 

“இங்க நான் பொறப்படற அப்ப ஒரு விபத்து. நாலு வீடுங்க, எட்டுக் கடைங்க. செத்த நாழியிலே பத்தி எரிஞ்சி போச்சுங்க.” 

“அது என்னங்க தம்பி, ரெண்டு வருஷத்துக்கு முன்னே, இஞ்ச தேரு பத்திக்கிச்சுங்க!” 

“தேருங்களா?” 

“ராவுலே நிலைக்குவந்த தேர், விடிய காத்தால பத்திக் கிச்சுங்க.” 

“எப்படிங்க? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!” 

‘தீவட்டியை அணைக்காம எந்தப் பயலோ இடுக்கிலே சொருகிட்டுப் போயிட்டான். ராவெல்லாம் கனிஞ்சு, விடிய காத்தாலே பத்திக்கிச்சு.” 

“இப்ப இருக்கிற தேருங்களா?’ 

“ஆமாம். அங்க இங்க ஒக்கப் பண்ணி, சரி பண் ணிட்டோம். பாத்தா தெரியாதுங்க, தம்பி.” 

சுருள் சுருளாகப் புகையை உமிழும் தீயைப் பார்த்துக் கொண்டே சிதம்பரம், “நெருப்பைப் பத்தி ஒண்ணும் நிச்சயிக்க முடியாதுங்க” என்றான். 

“ஒரு வாட்டி, மாடவீதி பத்திக்கிச்சு. வடக்கால தீ பரவும்ன்னு தண்ணி ஊத்தினோம்: பச்சை மட்டை யெல்லாம் வெட்டியாந்து போட்டோம். ஆனா பாருங்க, ஒருகாத்து வந்துச்சு; தீ தெக்கால திரும்பிடுச்சு…” 

“இங்க அப்படிப் பரவாம இருக்கணும்.” 

“இஞ்ச வீடா வாசலா! அந்தாண்ட புளிய மரம்; அப்புறம் வய. அதுக்கெல்லாம் தீ எட்டாதுங்க ஆனா, நீங்க சொல்லறது போல நெருப்புக்கு மிஞ்சி ஒண்ணுமில்லே தாங்க.” 

சீறிக்கொண்டு வந்த தீ மெல்ல அடங்கியது. 

இருவரும் எதிர்பார்த்தது ஏதும் நடக்கவில்லை. சருகுகள் மிதிபட்டு நொறுங்க, தீயருகில் சென்றார்கள். 

கனன்றெரிந்த கிளைகள் நெருப்புத் துண்டுகளாய் தகதகத்துக் கொண்டிருந்தன. ஒரு ஜொலிப்பு ஜூவாலை யின் கம்பீரம் ! நெருங்க முடியாத அனல் வீச்சு! 

“உள்ளுக்குள்ளே நல்லா நெருப்பு விழுந்து போச்சுங்க தம்பி.” 

“ஆமாங்க.” 

“நாலு நாளைக்கு மேல எரியும்ன்னு தோணுதுங்க.” 

“நாலு நாளைக்குங்களா?” என்று கேட்டுக் கொண்டே, தோட்டத்தை ஊடுருவி நோக்கினான் சிதம்பரம். புகைந்தெரியும் காரையும் தாழையும் அழுத்த மான பாங்கில் அதை உணர்த்தின. விவாதம் ஏது மின்றியே அதனை அங்கீகரித்தான். 

எதிர்பார்ப்பது மாதிரி சிறிய வட்டத்திற்குள்ளேயே தீ எரிந்து அணையுமா? இல்லை, கட்டுக்கடங்காமல் பெரும் தீயாய் – ஊழித்தீயாய் மாறி, தோட்டத்தைக் கடந்து வயல் வெளியைப் பொசுக்கிவிட்டு, பலாத்தோப்பிற்கும் போகுமா? வரையறுத்து நிச்சயப்படுத்த முடியாதது. 

“எல்லாம் நல்லபடியா முடிஞ்சு போச்சுன்னா போதுங்க, மாமா.” 

“ஆமாங்க, தம்பி.” 

ஒரு நரிக்கூட்டம் ஊளையிட்டவாறு புளியந்தோப் பின் பின்னே ஓடி மறைந்தது. வானில் பறவைகள் சிறகை அடித்துக்கொண்டு அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. 

“அனல் வீச்சுங்க; அதான், பட்சியெல்லாம் கிளம்பிடுச்சுங்க!” 

“என்ன அனல், நிக்க முடியலியே !” 

அவன் பின்னுக்கு நகர்ந்தான். 

“சூரியன் உச்சிக்கு மேலே வந்திடுச்சுங்க; சாப்பிடப் போகலாங்களா, தம்பி.” 

“இங்க யாராவது இருந்தா கொஞ்சம் சௌரியமன்னு படுதுங்க, மாமா.” 

“பய எங்கெ?” 

“சாப்பாட்டுக்குப் போனவன்தாங்க.” 

“அப்ப, இப்ப வந்துடுவான். நான் சாம்பமூர்த்தி ஐயரைக் கொஞ்சம் பாத்துட்டு வரேன். நீங்க பய வந்ததும் வந்துடுங்க.” 

“விசேஷங்களா?” 

“நம்ப வூட்டுலே பொண்ணு இருக்கில்லே…” 

“பொண்ணு பாக்க வராங்களா?” 

“வில்லியனூரிலே இருந்து வராங்கன்னு செய்தி. ஆனா, நிச்சயமா சொல்லுறதுக்கில்லே. எதுக்கும் நாம்ப வூட்டுலே இருக்கறது சௌரியம்…”

“ஆமாங்க. நான் சுருக்கா வந்துடறேங்க.”

“ஐயர் கிட்ட ஒண்ணும் வேலையில்லே நாலு வாழைத்தாரு வேணும்ன்னு சொன்னாங்களாம். அது என்ன விஷயமென்னு நேரா பாக்கணும்…” 

“நான் சுருக்கா வந்துடறேங்க.” 

தேவருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு கட்டிலில் போய் அமர்ந்தான். வான மண்டலம் முழுவதையும் கரும் புகையும் வெண் புகையும் மூடிக்கொண்டிருந்தன. பயங்கரமாகப்பறவைகளும்மிருகங்களும் அலறிக் கொண்டு ஓடின. தீ தன் பிடியில் சிக்கியதையெல்லாம் பொசுக்கிக் கொண்டு முன்நோக்கிச் செல்கிறது. 

சிதம்பரத்தின் கட்டிலில், குருட்டாம் போக்காய்- சிறகைப் படபடவென்று அடித்துக்கொண்டு ஒரு காக்கை விழுந்தது. அவன் திடுக்கிட்டுத் துள்ளிக் குதித்தான். காக்கையைப் பார்த்ததும் புன்சிரிப்பு வெளிப்பட்டது. காக்கையின் காலைப் பிடித்துத் தீயை நோக்கி வீசியெறிந் தான். ஒரு ஓசையின்றி, சடசடப்பின்றி காகம் தீயில் போய் விழுந்தது. இறகு பொசுங்கிக் கருகிச் சாம்பலாகும் காட்சியைக் காணவேண்டும் என்று மனத்துக்குள் ஓர் ஆவல். அலக்கை எடுத்துக்கொண்டு முன்னே சென்றான், அனல் வீச்சையும் பொருட்படுத்தாமல். 

காக்கை தீயில் பொசுங்கிக் கொண்டிருந்தது. அலக் கால் குத்தி, எரியும் காக்கையை மேலே தூக்கினான். ஒரு நெடி, வாடை, குப்பென்று அடித்தது. முகத்தைச் சுளித்துக் கொண்டு காக்கையை அலக்கோடு தீயில் செரு கினான். அலக்கு, வேகமாக உள்ளே சென்றது. 

அலக்கை வெளியே உருவிப் பார்த்தபோது, நிதான மாக எரிந்து கொண்டிருந்தது. இது இரண்டாவது அலக்கு – கருக்கரிவாள் கட்டியது. தீ பற்றிய வேகத்தில் அரிவாள் வரையில் உள்ள பகுதி சாம்பலாகி விட்டது. அரிவாள் இன்றி எரியும் அல்க்கைத் தீர்க்கமாக நோக்கி னான். அவன் மனத்தில் நெறி முறையைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் வியக்கத்தக்க விதத்தில் ஓர் உணர்வு தோன்றியது. அவன் புளகாங்கிதமுற்றான். உடல் முழுவதும் குப்பென்று வியர்த்தது; நிற்க முடிய வில்லை. வெறியுற்ற நிலையில், எரியும் அலக்கைத் தீயில் வீசியெறிந்துவிட்டு, கட்டிலில் போய் அமர்ந்தான். 

தீ சடசடவென்ற இரைச்சலோடு மேலுக்குத் தாவி, புன்னை மரத்தைச் சாடியது. இலைகளிலிருந்து கிளை களுக்கும், கிளைகளிலிருந்து அடி மரத்திற்கும் ஒரு தாவல். உயர்ந்து, அலையலையாய்ப் படர்ந்து அடங்கும் தீயின் போக்கையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான். 

அந்தரத்தில் தீ அற்புதம் நிகழ்த்துகிறது. ஒரோர் சமயம் தீயின் உக்ரம் அவனை நிலைகுலைய வைத்தது. இப் படியே போனால் என்ன ஆகும்? 

நேரம் செல்லச் செல்ல தீயின் கம்பீரம் கூடிக் கொண்டே வந்தது. புன்னை மரத்தில் கொடியாய்த் தாவிப் பாய்ந்து சென்று கொண்டிருந்த நெருப்பு நின்று எரிய ஆரம்பித்தது. 

கட்டிலில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. காற்று அனலைக் கொண்டுவந்து முகத்தில் வீசியது. துண்டை எடுத்து, முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்த போது பழனியாண்டி வந்தான். 

”ஊரிலேயிருந்து அக்கா வந்துடுச்சுங்க…”

“சொந்த அக்காவா?” 

“ஆமாங்க. நாட்டாண்மைக்காரங்க வூட்டுல சுருக்கா உங்களை வரச் சொன்னாங்க.” 

“யாரு சொன்னா?” 

“அத்தைங்க.” 

“நீ பத்திரமா இங்க இரு. நான் செத்தப் போயிட்டு வாரேன்.” 

“சரிங்க.” 

“நெருப்புகிட்டப் போய் வேடிக்கை பாக்காதே.” 

“இல்லீங்க.” 

“பத்திரம். நெருப்பு ஜோரா எரியுது; எட்டவே இரு ; நான் இப்பவே வந்துடறேன்.” 

“ரெண்டு வருஷம் நான் தீ மிதிச்சு இருக்கிறேங்க!” 

முன்னே காலடி எடுத்து வைத்த சிதம்பரம் சற்றே திரும்பிப் பார்த்தான். ஆனால், அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. 

தோட்டத்தைக் கடந்து சாலைக்கு வந்தபின், வழியில் சந்தித்த தலையாரி கேட்டான்: “நெருப்பு வச்சுட்டீங்க போல இருக்கே?” 

“ஆமாம்.” 

“புகை எட்டின வரைக்கும் தெரியுதுங்க.” 

“அப்படியா?” 

“ஆமாங்க.” 

“இன்னும் சரியா பத்தலே.” 

“சின்னத் தோட்டமா, சட்டென்னு பத்த?” 

அவன் முறுவலித்தான். 

“ஓங்கள், ஐயரு ஒரு வாட்டி வந்துட்டு போவச் சொன்னாங்க.” 

“நானும் போவணும் போவணும்ன்னு பயணப்படறேன். எங்க முடியுது? ஒரு ஒரு வேலயா வந்து தள்ளிக்கிட்டுப் போவுது.” 

“உம்மைதாங்க, ஒண்டியா ஆயிரம் வேலயில்லே பாக்கிறீங்க.” 

“எங்கெ, வேலையெல்லாம் அப்படி அப்படியே கிடக்குது.” 

“நீங்க சொல்லிட்டா சரிங்களா. முக்காத்தோப்பைத் தனியா நின்னே, செத்த நாழியிலே அழிச்சிட்டீங்களே!” 

“வண்டி ஓட்ட ஒரு பத்து ஆளுங்க வேணும்.” 

“இஞ்ச வண்டி ஓட்டத் தோதா யாருமில்லீங்க. எதுக்கும் நீங்க பொன்னுவேலுத் தேவரைப் பாருங்க. அவுங்க ஏதாச்சும் ஏற்பாடு செய்வாங்க. ஆனா, ஒண்ணுங்க. இங்க இருக்கறவங்க எல்லாம் பயிரு பண்ணுறவுங்க. அதை வுட்டுட்டு வேற ஒண்ணுக்கும் வரமாட்டாங்க.” 

“சும்மா இருக்கற அப்ப, வேற ஒரு வேலெ ஏன் பண்ணக்கூடாது?” 

“எப்படிங்க அது முடியும்?” 

சமூக அமைப்பு முழுவதும் சிக்கல் நிறைந்தது போலவும், புரிந்து கொள்ள முடியாதது போலவும் பட்டது. 

பன்னிரண்டு நாட்களுக்கு முன்னால் – இதை உறுதிப் படுத்துவது போல நடந்த சம்பவமும் அவன் நினைவில் படர்ந்தது. 

திங்கட்கிழமை வேலைக்கு வருவதாகச் சொல்லி வாளை வைத்துவிட்டுப் போன அண்ணாமலை, விடியற் காலையில் வந்து, “எங்க செட்டியார் வூட்டுக்கு மரம் வெட்டணுங் களாம். அதை முடிச்சுட்டுத்தாங்க உங்க வேலை” என்றான். 

சிதம்பரம் அவனைக் குத்திட்டு நோக்கினான். 

“அவுங்க என்ன கூலி கொடுப்பாங்க?” 

“கூலி என்னாங்க,கூலி,நாலு தலைமுறையா நாங்க அவுங்க வூட்டிலே வேலை செய்யிறோங்க. குடியிருக்கற மண்ணு, தின்னுற சோறு, கட்டிருக்கற துணி – எல்லாம் அவுங்களதுதாங்க…” 

“உம்….” 

“பாருங்க. செட்டியார் அவுங்க தோட்டத்துக்கு வந்து ஒரு முப்பது முப்பத்திரண்டு வருஷத்துக்கு மேல ஆவுதுங்க. பலா காய்க்குதா, மாங்கா காய்க்குதா, தென்னை காய்க்குதா – அவுங்களுக்கு ஒண்ணும் தெரியாதுங்க. நாம்ப பாத்துச் சொல்லுறதுதாங்க.” 

“ஆச்சரியமா இருக்கே!” 

“அவுங்கதான் அப்படித்தான்னா, எங்க ஆச்சி அதுக்கு மேலேங்க. புண்ணியவதின்னா புண்ணியவதிங்க. பூமி அதிர ஒரு அடி வைக்கத் தெரியாதுங்க; கோவமா ஒரு வார்த்தை பேசத் தெரியாதுங்க. ‘பீத்தர்’ மாங்கா இறக்கிப் பழுக்கவச்சுக் கொண்டு போய் வூட்டுல வச்சா, ஏண்டா, நீ எடுத்துக்கிட்டியா?’ என்னுதான் மொதல்ல கேப்பாங்க. 

“நான் பேசாம நிப்பேங்க. 

”உனக்கு எத்தனி வாட்டிச் சொல்லறது? உனக்குப் போவத்தான் – மிச்சந்தான் எங்களுக்கு’ – எம்பாங்க. அவுங்க ரொம்ப பெரிய வூட்டுப் பொண்ணு; பூந்த வூடும் அப்படித்தாங்க. அவுங்க வூட்டிலேதாங்க முதல்ல கூறைப் புடவை போட்டாங்க. அதுக்கு ஒரு பிரசித்தம்; ஊரெல்லாம் பேரு. காசி என்னா, ராமேஸ்வரமென்னா – அங்கெல்லாம் இருந்து புடவைக்கு ஆளுங்க வருங்க. அவுங்கள பாத்துத்தாங்க ஒரு ஒரு செட்டியாரா இஞ்ச தறி போட ஆரம்பிச்சாங்க…” 

அவன் பேச்சால் சிதம்பரம் சலிப்புற்றான். 

“நீ எப்ப வேலைக்கு வர்றே?” 

“அங்க முடிஞ்ச கையோடங்க.” 

“எப்ப முடியும்?” 

“அஞ்சாறு நாளிலேங்க” என்று வாளை எடுத்துக் கொண்டு போனவன் – எட்டு நாட்களாகியும் வரவில்லை! 

அவனைப் பற்றி தேவரிடம் சொன்னதும், “அந்தப் பய இருக்கானே, சுத்தக் கிறுக்கன். இஞ்ச தலையும் அங்க காலையும் நீட்டுவான். இருங்க, நம்ப செட்டியார் கிட்டச் சொல்லி, சிண்டைப் பிடிச்சுக் கொண்டாறேன்” என்றார். 

அத்தியாயம் – 12

புகையை உமிழ்ந்தவாறு கனிந்து கொண்டிருந்த தீ, நான்காம் நாள் ஜூவாலையோடு குபீரென்று நாலா பக்க மும் பரவியது. அவன் திட்டங்களும் அனுமானங்களும் தகர்ந்து போயின: ஆழ்ந்த மௌனத்தோடு தீயை ஊடுருவி நோக்கினான் சிதம்பரம். 

மின்னல் கொடியாகத் தீ தோட்டம் முழுவதும் பாய்ந் தோடியது. செந்தழலில் பசுந்தழைகள் பொசுங்கின. 

ஆரண்யம் முழுவதும் ஊழித் தீ, நெருப்புக்கடல் பிரப்பங் காட்டையும் தாழங்குத்தையும் அழித்த தீ, அவன் புதிய வீட்டைச் சாம்பலாக்கிவிட்டு புளியமரத் தின்மீது பாய்ந்தது. 

சிதம்பரம் வாய்க்காலோரத்தில் நின்று எரியும் நெருப் பின் ஜுவாலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அனல் வீச்சில் நிற்க முடியவில்லை ; பின்னுக்கு நகர்ந்தான். 

சிவனாண்டித் தேவர் குறுக்காக மேடுபள்ளம் இறங்கி ஏறி வந்தார். தீயைப் பார்த்ததும், ஒருகணம் அவர் பேச வில்லை. வைத்த கண் வாங்காமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். 

அமைதி அவனை சங்கடப்படுத்தியது. 

“என்னங்க, மாமா?” 

“இப்ப காத்து இல்லாம இருந்தா நல்லா இருக்கும்.” 

“ஆமாங்க.” 

அவன் தலை பலமாக அசைந்தது. 

சீராக வீசிக் கொண்டிருந்த காற்று சற்றே உயர்ந் தது. மரங்கள் அசைந்தாடின ; கிளைகள் தீயோடு குலுங் கின. ‘விர் விர்’ என்று காற்று தீயின்மீது ஊடுருவிப் பாய்ந்தோடியது; உயர்ந்தும் தாழ்ந்தும் கடல் அலைபோல் மரங்களில் மோதியது. 

அமைதியாகவும் தொடர்ச்சியாகவும் காற்று வீசினால் இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடரலாம். ஆனால், காற்று புயலாக மாறி, ஊழித் தீயோடு சேர்ந்து கொண் டால், ஒரே நாளில் சகலத்தையும் அழித்து விடலாம். 

சிதம்பரத்தின் பார்வை தோட்டம் முழுவதும் சென்றது. உதட்டைக் கடித்துக் கொண்டான். 

“மழை வருங்களா, மாமா?” 

தேவர் வானத்தைப் பார்த்தார். அப்புறம் அவன் பக்கம் திரும்பி, “மழையா?” என்று கேட்டார். 

இப்படியே காற்று வீசிக்கொண்டிருந்தால் இன்னும் பல நாட்களுக்குத் தொடர்ந்து தீ எரியலாம். ஒவ்வொரு மரத்தையும் புல்லையும் பூண்டையுங்கூட அழித்து விடலாம். கடைசி வரிசை – இலுப்பை ; அதுவும் எரிந்து விட்டால், தோட்டம் திடலாகிவிடும்! 

அடுத்த நாள் காற்று நின்றுவிட்டது. திடீரென்று காற்று பூமியில் அழுந்தியது மாதிரி பிரமை. ஒரு கிளை அசையவில்லை; கொடி அசையவில்லை ; தழை அசைய வில்லை; எல்லாம் குத்திட்டு நின்றன. 

தேவர் வான் முகட்டை நெடுநேரம் ஆழ்ந்து நோக்கினார். செவ்வானத்தில் பசலை இருள் பரவுவது தெரிந்தது. 

“கிழக்கால மழை பொழியுதுங்க, தம்பி.” 

“இங்கெ வருங்களா, மாமா?” 

“வரும் போல தோணுதுங்க!” 

அவர்கள் உற்சாகத்தோடும் ஆவேசத்தோடும் எதிர் பார்த்த மழை வரவில்லை. கருத்த வானம் வெளிறியது. கார்மேகக் கூட்டங்கள் கிழக்கு நோக்கி நகர்ந்தன. இருந்தும் காற்று கிளம்பவில்லை. காற்று இன்றி ஜூவாலை பொறியாய்ப் பறக்க, தீ உக்ரமும் ஆவேசமும் இல்லாமல் எரிந்து கொண்டிருந்தது. ‘தங்கள் கரங்களில் ஒன்றுமில்லை’ என்ற தவிப்போடு வீட்டிற்குத் திரும்பினார்கள். 

முன்னே சென்று கொண்டிருந்த தேவர், சற்றே நின்று, “பார்க்கப் போனாங்க தம்பி, நெருப்புக்கு மிஞ்சி ஒண்ணுமே இல்லீங்க” என்றார். 

“…..”

“லங்கையில் குரங்கு வச்ச நெருப்பு மாதிரியில்லே ஆயிடுச்சு!” 

“நம்ப வூடு போயிடுச்சுங்க…” 

“எல்லாம் போயிடுச்சுங்க, தம்பி.” 

மனம் முறிவுற்றது மாதிரி ஓர் ஏக்கம்,இருவர் மனத் தையும் அழுத்தியது. ஆனால், முழு மனத்தோடு தன் செயலைக் குற்றமென்று தீர்ப்பளிக்க அவனால் இயல வில்லை. தன் திட்டத்தின் சில அம்சங்கள் தன்னை மீறிக் கொண்டு போய்விட்டன; அவ்வளவுதான்! 

அடுத்த நாள் வந்தபோது வாய்க்கால் கரையிலேயே நிற்க வேண்டியதாயிற்று. சுளீரென்று அனல்; மேலே. போக முடியவில்லை. 

புளியமரங்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்துவிட்டன. வரிசையாய் மொட்டை மரங்கள் – ஒரு கிளையின்றி,இலை யின்றி நின்று கொண்டிருந்தன. தெற்கு மூலையில் இருந்த. புங்க மரங்களும் பெரிய ஆலமரமும் பற்றி எரிந்து கொண்டிருந்தன. 

பன்னிரண்டாம் நாள், குறிப்பிடத்தக்க அளவிற்கு தீயின் வீரியம் குன்றியது. ஆமை தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொள்வது மாதிரி,நெருப்பு தன்னையே அழுத்திக் கொண்டிருந்தது. வாய்க்காங் கரையைவிட்டு, தோட்டத்தின் எல்லைக்கு வந்தார்கள். ஆனால், உள்ளே புக முடியவில்லை. நெருப்பு இன்னும் கணகணத்துக் கொண்டிருந்தது. தணல் அணைந்தாலொழிய தோட்டத் திற்குள் நுழைய முடியாது. 

காடு முழுவதும் தீப்பட்டு நிற்கையில், எப்பொழுது நெருப்பு அணையும் என்பதை அனுமானிக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் தோட்டத்தின் எல்லையில் சற்று நேரம் வேடிக்கை பார்ப்பது மாதிரி நின்று திரும்புவது ஒரு வழக்கமாகி விட்டது.சிதம்பரத்தைவிட தேவர்தான் வாடிப் போனார். அவர் உற்சாகமும் வேடிக்கைப் பேச்சும் குறைந்துபோயின. 

அவர் சோர்வு சிதம்பரத்திற்கு வே தனை அளித்தது. தணிந்த குரலில், “நம்ப கையில் ஒண்ணுமில்லீங்க, மாமா” என்றான் ஆறுதலாக. 

தேவர் மெல்லத் திரும்பினார். மீசையைத் தள்ளி விட்டுக்கொண்டார். ஆனால், ஒரு வார்த்தையும் அவர் வாயிலிருந்து வரவில்லை. 

யாரும் எதிர்பாராத விதத்தில் ஒரு நாள் மழை வந்தது. அவர்களுக்குத் தாள முடியாத மகிழ்ச்சி. திண்ணையில் துண்டைப் போட்டுவிட்டு, வாசலுக்கு வந்து கொட்டும் மழையில் நனைந்தபடியே சிதம்பரம், “நல்ல மழைங்க, மாமா!” என்றான். 

“செத்தப் பிந்தி வந்தாலும், சரியான மழைங்க, தம்பி!” 

“அடே அப்பா, என்ன போடு போடுது! ரெண்டு காளைக்குப் பேயும்போல இருக்குங்க, மாமா.” 

“எதுக்குங்க தம்பி நனயுறீங்க? வாங்க உள்ள!” சிவனாண்டித் தேவர் நெற்றியில் விழுந்த மழைத் துளியைத் துடைத்துக்கொண்டே திண்ணைக்கு வந்தார். 

“நெருப்பு சுத்தமா அவிஞ்சு போயிடுங்க.”

“மெல்ல சொல்லுறீங்களே, தம்பி.” 

“பிந்தி வந்தாலும் கன மழைதாங்க.” 

“நாலு நாளைக்கு முந்தி வந்திருந்தா, ரொம்ப உபகாரமா இருந்திருக்கும்.” 

“நமக்கு அவ்வளவுதான்.” 

சிதம்பரம் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தான்.

நேரம் ஆகஆக வானம் கருத்துக்கொண்டே வந்தது. பெரு மழைக்கு அறிகுறியாக காற்று நின்றது. 

“ஒரு மின்னல், ஒரு இடி கூட இல்லீங்க, மாமா.”

“ஜோரான மழை கிளம்பிடுச்சு.” 

“அன்னக்கி நெருப்பு இப்படித்தான் புடுச்சிச்சு; இன்னக்கி மழையும் அப்படித்தான் புடுச்சு இருக்கு.” 

“மழையும் மக்கப் பேறும் மகாதேவனுக்கும் தெரி யாது என்பாங்க.” 

சிதம்பரம் லேசாக முறுவலித்தான். 

“அஞ்சு வருஷத்துக்கு முன்ன்ெ, ஒரு வாட்டி மழை இல்லே; மழை இல்லேயின்னா சுத்தமா மழையில்லே; ஏழு மாசமா. சித்தரை மாசம் போல வெய்யில் கொளுத் திச்சு. பயிரெல்லாம் கருகிப் போயிடுச்சு. ஆடு மாடு களுக்குக்கூடத் தண்ணியில்லே. குளம் குட்டையெல்லாம் சுத்தமா வத்திப் போயிடுச்சு. வேண்டாத தெய்வமில்லே ; போடாத பூசையில்லே. ஆனா, மழை மட்டும் வர்லே. அந்த வருஷம் பொட்டு மழையில்லாம போயிடுச்சு…” 

“அப்படிங்களா…?” 

“ஆமாங்க!” 

“இப்ப, ஜோரா மழை பொழியுதுங்க.” 

“சார அடிக்குது. செத்த தட்டிய அவுத்து வுட்டுட்டு, இப்படி வந்து குந்துங்க.” 

அவன் பெரிய தட்டியை அவிழ்த்துவிட்டான். 

தேவர் அவனுக்கு எதிரே தூணில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். 

“தம்பிக்கு, இந்தக் கதை தெரியுங்களா? ஒரு வாட்டி தேவர்களும் அசுரர்களும் பால் கடலைக் கட சாங்க; அமிர்தம் கிடச்சிச்சு. அசுரர்களுக்குத் துளிக்கூட கொடுக்காம தேவர்கள் சாப்பிட்டாங்க. அவ்வளவுதான். புத்தி தடுமாறிப் போயிடுச்சு. உலகத்திலேயே ஒசந்தவங்க தாங்கதான், தங்களுக்கு மேல ஒண்ணுமில்லே என்னு நினைப்பு.நினைப்பு வந்த அப்புறம் எல்லாம் மாறிப்போயி டுச்சு – நடத்தெ, பேச்சு – எல்லாம். பிரம்மா பார்த்தார்; அவராலே சகிக்க முடியலே. அட்டகாசம் ரொம்ப பெருத்துப் போயிடுச்சு. அட, முட்டாத் தேவர்களே ! உங்களுக்கு மேலே நான் இல்லியா என்னு சொல்லிக் கிட்டு, வானத்திலே ஒரு ஜோதியா தோணினார். 

“ஆகாயத்திலே ஒரு ஜோதி; இத்தனி நாளும் இல்லாதது; புதுசா ஜொலிக்குது! தேவர்களுக்கு அது என்னான்னு தெரியலே; அசுரர்களுக்கும் தெரியலே. லோகத்திலே ஒருத்தருக்கும் தெரியலே. தேவரெல்லாம் கூடிக்கூடி யோசிச்சாங்க; கணக்குப் போட்டுப் பாத்தாங்க; அப்பவும் தெரியலே. கடைசியா, கிட்டப் போய்ப் பாத்துட்டு வரும்படி அக்னியை அனுப்பினாங்க. 

“அக்னி இங்க இருந்து கிர்ரென்னு மேல போச்சு. ஆனா, அந்த ஜோதி கிட்ட நெருங்க முடியலே. அக்னியை விடப் பத்து மடங்கு, நூறு மடங்கு நெருப்பைக் கக்கித்து ஜோதி. அதுனால, அக்னி எட்ட இருந்த படியே, ‘ஜோதியே, நீ யாரு?’ என்னு கேட்டுச்சு. 

“நான் ஆரு, என்கிறது இருக்கட்டும். நீ ஆரு?”

“நான் அக்னி!” 

”அப்படியென்றால்?” 

“நெருப்பு. உலகத்திலே இருக்கறதை யெல்லாம் நான் நினைச்சா பஸ்பமாக்கிடுவேன்.” 

“ஜோதி சிரிச்சிச்சு. 

“‘அப்ப சரி. இத பஸ்ப மாக்கு ‘ன்னு ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டுச்சு. 

அக்னிக்கு ஒரே கோபம். அலட்சியமா, ‘இந்தத் துரும்பை என்னாலே எரிக்க முடியாதா’ன்னு முழு சக்தியையும் பயன் படுத்திச்சு ஒரு கணத்திலே பஸ்பமாக்கிடணுமென்னு. ஹும்…எங்க முடிஞ்சிச்சு? துரும்பிலே துளி நெருப்பும் பிடிக்கலே……!” 

குஞ்சம்மா ஒரு தட்டு நிறைய சோளப் பொரியை கொண்டுவந்து வைத்தாள். 

“தம்பி எடுத்துக்குங்க.” 

“நீங்க……?” 

“நானா?” என்று, வெற்றிலையை இடிக்க ஆரம்பித்தார். 

சிதம்பரம் இரண்டு பொரியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, “இப்ப நெருப்பு சுத்தமா அவிஞ்சு போயிருக்கும் இல்லையா, மாமா? என்று கேட்டான். 

“சாம்பலாக ஓடி வாய்க்காலில் கலந்திருக்குங்க, தம்பி.” 

மாலையில் சற்றே மழை குறைந்தது. 

தேவர், தட்டியை மேலே தூக்கிக்கட்டினார். சாலையில், சாக்கைத் தலையில் போட்டுக் கொண்டு யார்யாரோ குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருந்தார்கள். தாழங் குடையும், பரியும், அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தன. 

திண்ணையைவிட்டுத் தேவர் ஆளோடிக்கு வந்தார். 

“ராமு, மீனு வருதா?” 

“ஆமாங்க, மாமா.” 

“குளம் எதுத்துப் போயிடுச்சு” என்று சொல்லி விட்டுத் தாழங் குடையை எடுத்துக்கொண்டு சாலைக்கு வந்தார் தேவர். கணுக்காலுக்கு மேலே தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. தெளியும், கெளுத்தியும் வருவது தெரிந்தது. கொஞ்சம் அதிகமாக மழை பொழிந்து, குளம் எதிர்த்துவிட்டால், வரால்,கெண்டை, மயிலை, பனையேறி கெண்டை எல்லாம் வரிசை வரிசை யாக நீரோட்டத்தை எதிர்த்து வரும். 

மழைக்குப் பின் மீன்வேட்டை அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு. பரியைத் தூக்கி மேலே போட்டுவிட்டு, அரிவாளை எடுத்துக் கொண்டு, ஓடும் நீரில் மீன் வேட்டையில் இறங்கிவிட்டார்கள். 

பெருமழை ஓய்ந்துவிட்டது. சிறு தூறல் விழுந்து கொண்டிருந்தது. சிதம்பரம் தெருவில் இறங்கி நடந்தான். சாலை முழுவதும் ஒரே கூட்டம்! ஆணும் பெண்ணும் குழந்தைகளும் பாய்ந்து பாய்ந்து மீனை வெட்டிக் குவித்துக் கொண்டிருந்தார்கள். 

”மழை பொழிஞ்சா, மீனு வந்துடுங்களா?” 

“குளம் எதுத்துப் போயிட்டா… மீனு வந்துடுங்க.” 

“அப்படிங்களா?” அவன் வியப்புற்றான். 

“வாங்க தம்பி, தோட்டத்தைப் பாத்துட்டு வருவோம்.” 

துள்ளி வந்து காலில்விழுந்த மீனைத் தள்ளிக் கொண்டு, போகையில் சிதம்பரம் கேட்டான்: 

“நெருப்பு சுத்தமா அணஞ்சு இருக்கும், இல்லீங்களா?” 

“பின்னெ ? ” என்று, உறுமுவது மாதிரி சிரித்தார் தேவர். 

வேளாளத் தெருவிற்கு வந்தவுடனே, தீயில் கருகி மழையில் சிதைந்த தோப்பு மங்கலாகத்தெரிந்தது. வெறிச்சோடிய தோற்றம்; வெறுமைக் காட்சி. 

வரப்பில் செல்லுகையில் கால் வழுக்கி விழப் போனவனை தேவர் பிடித்துக்கொண்டு, “அவசரமில்லே, பார்த்து வாங்க தம்பி” என்றார். 

அவன் அதனை ஏற்றுக் கொண்டான். கருவேல் மரங்கள் நிறைந்த வரப்புமேல் நடந்து செல்வது கடின மாகவே இருந்தது. மழையில் புல்லும் தரையும் நனைந்து, கால் வைக்கும் போதெல்லாம் சேறு பிசுபிசுவென்று ஒட்டிக்கொண்டது. ஆனாலும், அவன் மழையை நிந்திக்க வில்லை: அவனுடைய ஒரு பிரச்சனையை அது நீக்கி விட்டது. 

பாதி எரிந்தும் எரியாமலும் நிற்கும் மரங்களை வெட்டி அப்புறப் படுத்திவிட்டால் வேலை முடிந்தது மாதிரிதான். மொட்டை மரங்களால் பிரச்சனை ஏதும் வரப்போவ தில்லை. அநேகமாக, தீர்மானத்திற்கு எதிராக மரங்கள் பயனற்றுப் போய்விட்டன. வீடு கட்ட,ஆலை நிர் மாணிக்க, செக்குக்கு அவைகளைப் பயன்படுத்த முடியாது. சில காரியங்களைத் தள்ளிப் போடவேண்டும்; முன்னே இருப்பது பின்னே போகும்; வேறு வழியில்லை. 

நேற்று அண்டவியலாத பெருந் தோப்பிற்குள் இருவரும் சென்றார்கள். தேவர் வியப்புற்றார்; தமது அனுமானத்திற்குத் துளியும் பிடிபடாத முறையில் தோட்டம் இருந்தது, ஆச்சரியமுற வைத்தது. முகமும் மீசையும் கோணக் கோணத் தமது தீர்மானங்கள் பொய்த்துப் போனது பற்றி இடை விடாது பேசிக் கொண்டே வந்தார். 

“இந்தப் பக்கத்திலெ மரமே இல்லீங்க, தம்பி!”

“ஆமாங்க.” 

“முன்னாடியே தெரியாம போயிடுச்சு.” 

சிதம்பரம் தீயில் எரிந்து மழையில் கரைந்து போன வீட்டிற்குள் சென்றான். வீடு முழுவதும் அழிந்துபோய் விட்டது. கழியில்லை, சுவர் இல்லை – எல்லாம் மழையில் கரைந்து மண்ணோடு மண்ணாக சேர்ந்துவிட்டது. தீயும் மழையும் அவன் சேமிப்பு முழுவதையும் அந்தக் குடிசையி லிருந்து அடித்துக் கொண்டு போய்விட்டது. 

தேவர் அவன் பக்கம் நெருங்கி, தாழங் குடையைக் கீழே சாய்த்த படியே, “தம்பி, இஞ்ச ஒண்ணும் பணம் வைக்கலயே?” என்று கேட்டார். 

“இல்லீங்க, மாமா.” 

“நாம்ப நினைச்சதுக்கு மாறா எல்லாம் நடந்து போயிடுச்சு.” 

அவரைத் தேற்றுகிற பாவனையில் புன்னகை பூத்தவாறு அவன் சொன்னான்: “ஆனா, அது கூட நமக்குச் சாதகமா வரலாம்.” 

அவர் தலையசைத்தார். 

நனைந்த சாம்பலில் கால்கள் புதையத் தோட்டம் முழுவதும் நடந்தார்கள். எத்தனையோ நாட்கள் மிகுந்த பிரயாசைப் பட்டு வெட்டிச் சாய்த்த மரங்களையெல்லாம் தீ சாம்பலாக்கி விட்டது. கற்பனைக்கு எட்டாத செயல். உக்ரத்தோடு செயல் பட்டு, அமைதியுடன் ஓடுங்கி விட்டது. 

புளிய மரங்கள் கருகி நிற்கும் இடத்திற்கு வந்தார்கள். இருள் கவிழ்ந்த வான மண்டலத்தில் கரிக்கோடு கிழித்தாற்போல மொட்டையாய்ப் புளிய மரங்கள் நின்றன. தேவர் கண்களை உயர்த்திக் கிளைகளை இழந்து நிற்கும் மரங்களை நோக்கினார். 

ஊர் முழுவதற்கும் புளி கொடுத்துக் கொண்டு இருந்த மரங்கள் அவை. பல தலைமுறையாக மனிதர் களின் வாழ்க்கை வியக்கத் தக்க முறையில் அதனோடு பிணைக்கப்பட்டிருந்தது. மென்மையான அந்த உறவு யாரும் எதிர்பாராத விதமாகத் தீப்பட்டு பொசுங்கி விட்டது. 

சிவனாண்டித் தேவர் சற்றே பின்னுக்கு நகர்ந்தார். அவர் மனம் புண்பட்டுவிட்டது. பரம்பரையாக இருந்து வந்த உறவின் ஆதாரம் துண்டிக்கப் பட்டுவிட்டது. இனி ஒரு பொழுதும் அலக்கை எடுத்துக் கொண்டு மரத்தின்மீது ஏறமுடியாது. அந்த வேலை போன வருஷத்தோடு சென்றுவிட்டது. யார் என்ன நினைத் தார்களோ ! தலை முறை தலைமுறையாக குடும்பத்தின் தலையாய கடமையாகவும் முதல் காரியமாகவும் இருந்தது முடிவுற்றது. வீழ்ச்சியுற்ற இடத்தில் நிற்க முடியவில்லை. காலை எட்டிப் போட்டார். 

“என்னங்க, மாமா?” 

“இனிமெ புளி கிடைக்காது!”

“ஏன்?” 

“அதான் மரம் போயிடுச்சே.” 

“இங்கெ மரம் போனா என்ன? வேறெ இடத்திலே வாங்கிக்கக்கூடாதா?” 

“வாங்கலாம்; வண்டி வண்டியா வாங்கலாம். அது நம்ப மரத்துப் புளி ஆகுமாங்க, தம்பி!” 

“….”

“வண்டியை ஓட்டிக்கிட்டு ஊருவூராப் போவணும். அப்ப ஒருத்தன் இருக்கு என்பான்; ஒருத்தன் இல்லே என்பான். அது மாத்திரமா, நமக்கு வேண்டிய ரகமாக் கிடைக்குமான்னு பார்க்கணும்…” 

சிதம்பரம் தலையசைத்தான். தேவையின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சமூகம் தன்னளவில் வெகு தூரத்தில் இருப்பது போலவும், அதனோடு இணக்கமான முறையில் உறவு கொள்ள முடியாது போலவும் தோன்றியது. 

‘நான், நான்தான் வாழ்க்கை, வாழ்க்கைதான்’ என்று அந்தராத்மாவைச் சமாதானப்படுத்துவது மாதிரி சொல்லிக் கொண்டான். இந்தச் சொற்களுக்கிடையில் பரிதாபமான விதத்தில், வீழ்ச்சியுற்ற புளிய மரங்களும் நினைவிற்கு வந்தன. தேவர் பக்கம் திரும்பி, “நாம் வொண்ணும் வேணுமென்னு அழிக்கலே” என்றான். 

“உங்க மேலெ நா ஒண்ணும் குத்தம் சொல்லலே!” 

தெற்கு முனையிலிருந்து வடக்கு முனைக்குச் சென்றார்கள். தீயின் ஆட்சி அங்கே முழுமையாகப் பரவ வில்லை.ஏழெட்டு மரங்கள் தழையை இழந்து நின்று கொண்டிருந்தன. இலுப்பை மரத்தடியில் ஒரு காளை வெந்து கிடந்தது. சிதம்பரம் கருகிக் கிடக்கும் காளையை இரக்கத்தோடு நோக்கினான். மனத்தில் பழைய காட்சி தோன்றியது. அன்றைக்கு இருள் செறிந்த கானகத்தில் ஆட்சி செலுத்திய மாடு இன்றைக்கு மடிந்து கிடக்கிறது! 

தேவர் அப்படியும் இப்படியும் பார்த்தார். 

“நெருப்பு காத்தவராயன் மாட்டையும் விடலயே!”

“தன்கிட்ட கிடைத்த எதையும் விடலிங்க, மாமா”.

இருவரும் மேலே நடந்தார்கள். சற்று தூரத்தில் இன்னொரு மாடும் கன்றும் தீயில் வெந்து கிடந்தன. நெருப்பு, தாவரங்களை மட்டுமல்ல, தன்னிடம் சிக்கிய சகல ஜீவராசிகளையும் சுட்டுப் பொசிக்கிவிட்டது. 

கட்டிய வீடும், வெட்டிப் போட்ட மரங்களும் போனது மனதைப் பாதித்தது மாதிரியே, மாடுகள் இறந்து கிடப்பதும் மனத்தைத் தைத்தது. இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தார்கள். அவர்களால் பேசிக் கொள்ள முடியவில்லை.மெல்ல நடந்து, மேட்டின் மீது வந்து நின்றார்கள். 

தேவரின் உள்ளுணர்வின் மென்மையான அதிர்வுகள் அவனுக்குப் புலனாவதுபோல இருந்தது. 

“என்னமோங்க மாமா, பொனதை நினச்சுக்கிட்டு இருக்க முடியாதுங்க. லாபமோ நஷ்டமோ, இப்ப வேலெ கொஞ்சம் சுலபமாச்சுங்க.” 

அவர் தலையசைத்தார். “ஆனா, பாருங்க, தம்பி மூங்கிலும் புளிய மரமமும் போனது தாங்க எனக்கு நெஞ்சு ஆறலேங்க.” 

“எனக்கும் ரொம்பக் கஷ்டமா இருக்குங்க, மாமா … மூங்கில வெட்ட நீங்க எம்மாம் பாடுபட்டீங்க, ரத்தத்தை வேர்வையாச் சிந்தி! முடியாதுங்கற காட்டைத் தன்னந் தனியா நின்னு அழிச்சிங்க! ஆனா, கடைசியிலே பாருங்க…. எல்லாம் சாம்பலாப் போயிடுச்சு…” அவன் குரல் தாழ்ந்து ஒலித்தது. 

“அதான் மனுஷன் என்கிறது. அவனை புத்திக்கு எட்டாத ஒரு அம்சம் – ஒரு சக்தி கீழே தள்ளி உருட்டிக் கிட்டே இருக்குது.” 

“ஆனாங்க மாமா, நாம்ப சோர்ந்து போயிட மாட்டோங்க.” 

அவர் தலையசைத்தார். 

“நாம்ப அந்தப் பரம்பரை இல்லே.” 

“அதுதாங்க மாமா, விசேஷம்.” 

சாம்பல் நிறைந்த மேட்டுப் பகுதியின் ஊடே நடந்து செல்லுகையில், சிதம்பரம் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி ஒரு சித்திரம் வரைந்து கொண்டான். எங்கே வீடு வரவேண்டும்,எங்கே ஆலைக்குக் கரும்பு அடுக்க வேண்டும், எங்கே வெல்லம் வைக்க வேண்டும் – என் பதை எல்லாம் மனத்திலே குறித்துக் கொண்டான். 

“அப்ப,தம்பி எப்ப வேலையை ஆரம்பிக்கப் போவுது? 

“எப்ப என்கிறது என்னங்க, மாமா! ஆளுங்க சட் டென்னு கிடச்சா, உடனே ஆரம்பிக்க வேண்டியது தாங்க.” 

“அது சரிதாங்க, தம்பி!” 

“எப்படியும் நமக்கு ஆளுங்க வேணும்; சல்லிசா கிடைப்பாங்கன்னு தோணலே. அதுனால் வெளியூருங்க பக்கம் போய்க் கொஞ்சம் ஆளுங்க கொண்டாரலாம்ன்னு ஒரு யோசனெ. நீங்க என்ன மாமா சொல்லுறீங்க?” 

“பத்துப் பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு வாட்டி, கோவில் வேலைக்கு இப்படித்தான் போயி ஆளுங்க கொண்டாந்தோம்.” 

“சாம்பமூர்த்தி ஐயரும், கனக சபை செட்டியாரும் ஆளுங்க தரேன்னாங்க. ஆனா, அதெல்லாம் நமக்குத் தோதுப்பட்டு வருமான்னு யோசிக்க வேண்டியிருக்குங்க!”

“ஒருத்திக்கு ஒரு சமயத்திலே ரெண்டு புருஷங்க இருக்க முடியாதுங்க, தம்பி!” 

அவன் பெரிதாகச் சிரித்தான். 

“நீங்க போயி, ஆளுங்களே பத்து நாளிலே கொண்டாந்துடுவிங்க.” 

“அப்படித்தாங்கமாமா நினைச்சுக்கிட்டிருக்கேன். அவுங்க எல்லாம் வந்துட்டா, தங்க ஒரு இடம் வேணும்” 

“நீங்க போயிட்டு வரதுக்குள்ளே, நான் இஞ்ச ஒரு ஏற்பாடு செய்துடறேங்க, தம்பி” 

“நாளைக்கே நான், அப்ப புறப்பட்டுடலாம்…” 

“தாராளமா!” 

லேலைக்கு ஆட்கள் வருவதற்கு முன்னே, அவர்களுக் காக வீடுகள் கட்டவேண்டும். அதற்கு முன்பாக இன் னொரு வேலையும் அவர்களுக்கு வந்தது. எரிந்தும் எரியா மலும் கிடக்கும் கிளைகளையும் மரங்களையும் அப்புறப் படுத்த வேண்டும். வீடு கட்ட மூங்கில் இல்லை. ப்ரம் மாண்டமான குத்து போய்விட்டது. வண்டி வண்டியாக அவன் பலருக்கு மூங்கில் கொடுத்தான். இன்றைக்கு அவனே வண்டியோட்டிக் கொண்டு மூங்கிலுக்குப் போக வேண்டும். அந்த வேலையைத் தேவரிடம் ஒப்படைத்தான். அவருக்கு நெளிவு சுளுவெல்லாம் தெரியும். எங்கே இருந்தாலும் கொண்டு வந்துவிடுவார். 

சாலைக்கு வந்ததும் கலைந்த கிராப்பை படியப்படிய அழுத்தி விட்டுக் கொண்டு, “வாங்களேன் மாமா, ஐயரைப் பாத்துட்டு வந்துடலாம்” என்றான். 

“இல்லீங்க தம்பி, நான் எதுக்குங்க? நான் இப்படியே போய் கல்லூட்டைப் பாக்கறேன்.” 

“பிளாச்சு அடிச்சாச்சு, இல்லீங்களா, மாமா?” 

“நாளைக்கு ஓடு வுடப்போறாங்க. நீங்க அந்தப் பக்கம் போறச்செ, செத்தெ வூட்டைப் பாத்துட்டுப் போங்க. தோட்டம் வந்தப்புறம், ஒரேயடியா வூட்டை மறந்துட்டீங்க.” 

“அதான் நீங்க இருக்கிறீங்களே, மாமா…?” 

“அப்படியா விஷயம்!” இரண்டு கைகளையும் கொட்டிப் பலமாகச் சிரித்தார் தேவர்: “ரொம்ப நல்லாப் பேசுறீங்க, தம்பி!” 

“நானுங்களா, மாமா?”

“பின்னெ ஆரு?” 

அவன் சிரித்துக் கொண்டே சாம்பமூர்த்தி ஐயரைப் பார்க்கப் புறப்பட்டான். அக்ரகாரத்தை நோக்கிப் போகப்போக, ‘ஐயர் இருப்பாரா’ என்ற கேள்வி வந்தது. 

‘இருக்கக் கூடாது’ என்று சொல்லிக் கொண்டான்.

மனத்தில் களிப்பு நிறைந்தது. கைகளை முறுக்கி, பின்னுக்குக் கட்டிக்கொண்டு வேகமாக நடந்தான். வாசலில் பத்மாவதி நின்று கொண்டிருந்தாள். 

“சுவாமி இல்லையா?” 

“இல்லே.” 

“நல்லதா போச்சு.” என்று அவன் திண்ணையில் ஏறி வசதியாக உட்கார்ந்து கொண்டான். 

பத்மாவதி புருவங்கள் சுருங்க அவனை ஒரு முறை பார்த்தாள். அப்புறம், வேகமாக உள்ளே போனாள். 

‘வருவாள், வருவாள்’ என்று வெகுநேரம் வரையில் உட்கார்ந்திருந்தான். அவள் நிழல்கூட தென்படவில்லை. அவனுக்கு எரிச்சல் மூண்டது. பெல்ட்டைத் திறந்து பார்த்துக்கொண்டு, திண்ணையை விட்டு சடேலென்று கீழே குதித்து, வேகமாக நடந்தான். 

அவன் சிந்தனை எல்லாம் பஞ்சவர்ணத்தையே சுற்றிக் கொண்டிருந்தது. வீட்டில், கால் வைத்ததுமே சுந்தர வடிவு ஓடிவந்து வரவேற்றாள். 

“அப்புறம் உங்களெ காணவேயில்லையே!” என்று கேட்டாள், பஞ்சவர்ணம். 

“கொஞ்சம் வேலெ.” 

உள்ளே சென்று, மஞ்சத்தில் சாய்ந்து படுத்தான். 

“சக்கர ஆலெ வைக்கப்போறதா இஞ்ச ஒரே பேச்சு.” பஞ்சவர்ணம் அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். 

இரண்டு கைகளையும் பற்றி, அவளை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான். 

“ராசாவுக்கு செத்தெக்கூட பொறுக்க முடியாது!”

அவள் நெற்றியில் முத்தமிட்டான். 

“ஒண்ணு சொல்றேன் – நீ மட்டுமாவது ஆலெயப் பத்தி ஒண்ணும் கேக்காதே!” 

அவள் ஆழ்ந்து நோக்கி, மிருதுவாகப் புன்னகை பூத்து, அவன் மடியில் தலை புதைத்தாள். 

“எங்க போனாலும் இதேதான்; என்னாலே சகிக்க முடியலே.” 

அவள் கை உயர்ந்து, அவன் முதுகை வருடியது. 

“உங்களுக்கு என் நினைவே இல்லே…” 

“நினைவு இல்லாமதான் வந்திருக்கேனா!” 

“ரொம்ப நினைப்பு!… அதான் தெரியுது…” 

கதவு லேசாகத் தட்டப்படும் சப்தம். 

“பஞ்சு, மிராசுதார் வந்திருக்காங்க.” 

அவள் எழுந்து உட்கார்ந்தாள். 

“கிழட்டு நாய் வந்துடுச்சு! இன்னைக்கெல்லாம் உயிர் போனாப் போலத்தான்!” 

சிதம்பரம் ஆதரவோடு அவள் முகத்தை நிமிர்த்தி, இதழ்களில் முத்தமிட்டு, “என்ன?” என்று வினவினான். 

“நாங்க… தாசிங்க…” 

“உம்….” 

“நாளைக்கு வாங்க.” அவன் மார்பில் சாய்ந்து கொண்டு விசும்பினாள்; கண்களில் நீர் சுரந்தது. 

அவள் போன பிறகு, ‘எதற்காக அழுதாள்?’ என்று யோசிக்கலானான். நடை முறைகளும் சம்பிரதாயங்களும் அவனுக்குப் பிடிபடவில்லை. மனத்தில் குழப்பம் நிறைந் தது. கதவைத் திறந்து கொண்டு கொல்லைப் புறமாக வெளியே வந்தான். 

வானம் நிர்மலமாக இருந்தது; நல்ல நிலவு, குளிர் காற்று. 

நடந்து நடந்து காவிரிக் கரைக்கு வந்தான். தண்ணீரில் இறங்கி வெகுநேரம் வரையில் குளித்தான்.

– தொடரும்…

– சாயாவனம் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1969, வாசகர் வட்டம், சென்னை.

Sa_kandasamy சா.கந்தசாமி (1940 - சூலை 31, 2020) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 1968-இல் எழுதிய சாயாவனம் புதினம் பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. சவகர்லால் நேரு, பெரியார், உ. வே. சாமிநாதையர் மற்றும் வெ. சாமிநாத சர்மா போன்றோரின் படைப்புகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *