சாயாவனம்






அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம் – 1

புளியந்தோப்பின் முகப்பில் நின்று வானத்தை ஊடுருவி நோக்கினான் சிதம்பரம். ஒருமடையான் கூட்டம் தாழப் பறந்து சென்றது. அதைத் தொடர்ந்து கழுத்தை முன்னே நீட்டியபடி ஒரு கொக்குக் கூட்டம். ஒரு தனி செம்பொத்து. இரண்டு பச்சைக்கிளிக் கூட்டங்கள்.
சற்றைக்கெல்லாம் வானம் நிர்மலமாகியது.
சிதம்பரம் குத்துக் குத்தாய் வளர்ந்திருக்கும் காரைச் செடிகளைத் தள்ளிக்கொண்டு, நாயுருவி கீற ஒற்றையடிப் பாதைக்கு வந்தான்.
வனம் போன்ற தோட்டத்தில் இடையறாது திரியும் மாட்டுக்காரப் பிள்ளைகள் ஏற்படுத்திய பாதை அது. கோடையிலும், கார் காலத்திலும் இடம் மாறும்,நீளும்; குறையும், வளையும்; தனித்துப் போகும். ஆனால் ஒற்றை யடிப் பாதைகளில் பல சிறியவை. வளைந்து வளைந்து சென்றாலும், நெடுந்தூரம் தொடர்ச்சியாகச் செல்வ தில்லை. பருவ மாறுதல்களுக்கும் மாட்டுக்காரப் பிள்ளை களின் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப அமை வ தால், ஒன்று சேராமலும் நீளாமலும் போய்விடுகின்றன ஒவ்வொரு ஒற்றையடிப் பாதையும் கூப்பிடு தூரந்தான்.
பெரிய சாலையிலிருந்து கிளிமூக்கு மாமரம் வரையில் ஒரு கொடிப் பாதை; ஆலமரத்திலிருந்து முனீஸ்வரன் தூங்குமூஞ்சி மரம் வரையில் ஒரு பாதை ; அப்புறம் இலுப்பை மரத்திலிருந்து, கொய்யா மரம் வரையில் இன்னொரு பாதை. அதற்குப் பின்னால் பாதையேதும் கிடையாது. மனிதர்கள் தொடர்ச்சியாகச் சென்றதின் தடயம் ஏதும் புலனாகாது. தேவையும் அவசியமும் வந்தால், நொச்சியையும் காரையையும் தள்ளிக்கொண்டு புல்லிதழ்களைத் துவைத்தவாறு நடக்கவேண்டும்.
சாயாவனத்தின் ஓர் அரணாகவும், எல்லைக் கோடாக வும் இருக்கும் தோட்டத்தில் வளரும் மரஞ்செடி கொடி களைப் பற்றி யாருக்கும் சரியாக ஒன்றும் தெரியாது. அதனுள் சென்று திரும்பி வந்தவர்கள் இல்லை.ஒன்பது வருடத்திற்கு முன்னே பெரிய கருப்பண்ணத் தேவர் மாடு தேடிக்கொண்டு உருமத்தில் போனார். கொஞ்ச தூரத் திற்கு மேல் அவரால் நடக்க முடியவில்லை. என்னவோ வழி மறைப்பது மாதிரி இருந்தது. இரத்தம் கக்கிக் கொண்டே திரும்பி வந்தார். மூன்றாவது நாள் உயிர் பிரிந்துவிட்டது.
இது நடந்த பிறகு, தோட்டத்திற்குள் போவது அநேகமாக குறைந்து விட்டது. தோட்டத்தின் முன்னே இருக்கும் புளிய மரத்தைத் தாண்டியாரும் போவதில்லை. அது, தானாகவே ஓர் எல்லையாகிவிட்டது.
புளிய மரத்திலிருந்து பழம் விழ ஆரம்பித்ததும் மாட்டுக்காரப் பிள்ளைகள் சிவனாண்டித் தேவரிடம் வந்து விவரம் தெரிவிப்பார்கள்.
ஐந்தாறு நாட்கள் கழித்து, சிவனாண்டித் தேவர் தனி யாகப் போய், நாலா பக்கமும் சுற்றிப் பார்ப்பார். கைக்கு எட்டிய கிளையைப் பிடித்து உலுக்குவார். புளியம்பழங்கள் சடசடவென உதிரும். அங்குமிங்கும் சிதறி காரையிலும் கருநொச்சியிலும் சிக்கிக் கொண்டிருக்கும். சோட்டான்களைப் பொறுக்கி மரத்தடியில் போட்டுவிட்டுப் போய் ஆட்படைகளோடு திரும்பி வருவார். அவர் வந்ததும் வனம் அதிரும். ஒவ்வொரு கிளையும் சிம்பும் ஊழிக்காற்றில் சிக்கியது மாதிரி நிலைகுலையும். ஆனாலும், புளி உ உலுக்கு வதில் அவருக்கு ஒரு வரிசை உண்டு. தெற்கிலிருந்து தொடங்கி, தென்கிழக்காகப் போய், வடக்கே போவார். ஏனென்று காரணம் சொல்லத் தெரியாது அவருக்கு. அவர் தகப்பனாரும், தாத்தாவும் அவருக்கு முந்தியவர் களும் போன முறை அது. அந்தச் சுவடு பிசகாமல் சிவனாண்டித் தேவரும் போய்க்கொண்டிருந்தார்.
ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஒவ்வொரு குடும்பத் திற்குப் புளி தெற்கே இருக்கிற தித்திப்புப் புளிய மரத்திலிருந்து புளி சாம்பமூர்த்தி ஐயர் வீட்டிற்கு. குட்டை மரத்திலிருந்து பெரிய பண்ணைக்கு. தென்கிழக்கு காத்தவராயன் மரத்துப்புளி பதஞ்சலி சாஸ்திரி வீட்டிற்கு. நெட்டை மரத்துப் புளி பார்த்தசாரதி ஐயங் கார் வீட்டிற்கு. ஒவ்வொரு மரத்தையும் தனித்தனியாக உலுக்குவார். ஒரு மரத்துச் சோட்டானோடு இன்னொரு மரத்துச் சோட்டான் கலக்கா து. ஆரவாரத்திற்கும் பரபரப்பிற்கும் இடையே கவனமாகவும், நிதானமாகவும் அதைச் செய்வார்.
சுமார் ஏழெட்டு நாட்களுக்கு முதலீடு புளி உலுக்கும் வரையில் தோட்டம் அதம் படும். அப்புறம் அடுத்த புளி விழும் வரையில், வியக்கத்தகு அமைதியில் தோட்டம் ஆழும்.
வெட்டாற்றுக் கரையில், ஒற்றைப் பனை மரத்தில் சாய்ந்து கொண்டு, பார்வையை வெகுதூரம் வரையில் செலுத்தினான் சிதம்பரம்.
சலங்கையொலி மெல்லக் கேட்டது. தலையை உயர்த் திக் கண்களை இடுக்கிக்கொண்டு, மேலும் மேலும் பார்த்தான். மாடோ, வண்டியோ தெரியவில்லை. ஆனால், சலங்கையொலி மட்டும் கூடிக்கொண்டே வந்தது.
வெட்டாற்றின் கரையை விட்டிறங்கி, வண்டிகள் சென்று சென்று அழுந்திய பாதையில் நடந்து, புன்னை மரத்தடிக்குச் சென்றான் சிதம்பரம்.
சாம்பமூர்த்தி ஐயர் வில்வண்டியிலிருந்து இறங்கினார். வண்டியைப் பிடித்துக்கொண்டு சற்று ஒதுங்கி நின்றான் கணக்குப்பிள்ளை. கூட இன்னும் யாராவது இருக்கிறார் களா என்று ஆர்வத்தோடும் கலக்கத்தோடும் பார்த்தான் சிதம்பரம். யாருமில்லை. ஐயர் கணக்குப் பிள்ளையோடு வந்திருப்பது அவனுக்கு மகிழ்ச்சியளித்தது ; கரம் கூப்பி நமஸ்காரம் பண்ணினான்.
முன்னே விழுந்த துண்டை அள்ளிப் போட்டுக் கொண்டு ஐயர், “என்ன சிதம்பரம், முன்னாடியே வந்துட் டியா ? வர வழியிலே ஒரு ஜோலி; அண்ணாசாமி வந்துட் டான். செத்த நாழியாயிடுத்து என்றார்.
“இப்பத்தான் நான் வாரேன். நான் வந்து நிக்கவும், நீங்க வரவும் சரியா இருக்கு.”
“அப்படியா?”
சிதம்பரம் கிராப்பைத் தள்ளிவிட்டுக் கொண்டு ஐயரை நோட்டமிட்டான். முன் பக்கம் மழித்த பெரிய குடுமி; அழகும் நேர்த்தியும் ஜொலிக்கும் பெரிய முகம்; பெரிய கண் ; பெரிய காது; காதில் வெள்ளைக் கடுக்கன் – வைரக் கடுக்கன் ; கணக்குப்பிள்ளை கடுக்கனைவிட பெரி யது ; ஒரு மடங்கு, ஒன்றரை மடங்கு பெரியது. திரும்பும் போதெல்லாம் பளிச்சென்று ஒளி வீசியது.
“உங்களுக்குக் கடுக்கன் ரொம்ப நல்லா இருக்கு ” என்றான் சிதம்பரம்.
“நினைவு தெரிஞ்சப்போ இருந்து கடுக்கன் போட்டுண்டு வர்ரேன்.”
“அதான்…”
“தோப்பனாருக்கு இன்னும் ஜோரா இருக்கும்….”
“…ம்…”
“தோப்பனார், தினுசு தினுசா போட்டுண்டு இருப்பார்.”
அவன் வியப்போடு தலையசைத்தான்.
“பொழுது சாயுதுங்க, சாமி’ என்று கணக்குப் பிள்ளை சொன்னதும், ஐயர் “ஆமாம், ஆமாம்” என்று தலையசைத்துக் கொண்டு, வேட்டியைத் தூக்கிப் பிடித்த வாறு முன்னே நடந்தார்.
அநேகமாக இரண்டாவது முறையாகவோ மூன்றா வது முறையாகவோ தோட்டத்திற்கு வருகிறார் சாம்ப மூர்த்தி ஐயர். தோட்டம் அளவற்ற ஆச்சரியமளித்தது அவருக்கு. வனப்பும் செழிப்பும் மிகுந்த தோட்டத்தை மனமொன்றிய நிலையில் பார்த்துக் கொண்டே இருந்தார்.
காட்டாமணக்கு இலையைக் கிள்ளி, பாலை உதறி விட்டுக் கொண்டு, புன்னையும் கொய்யாவும் நிறைந்த மேட்டுப் பூமியில் ஏறினார் சாம்பமூர்த்தி. சற்றே உயர்ந்த பூமி. அங்கிருந்தபடி தோட்டம் முழுவதையும் பார்க்க முடியாவிட்டாலும், முன்னே இருக்கும் மரஞ்செடி கொடி களைப் பார்க்கலாம். விண்ணுக்கும் மண்ணுக்கும் சரஞ் சரமாய் பச்சைக் கயிறு பிடித்தாற்போலப் புளிய மரத்தையும் இலுப்பை மரத்தையும் பலா மரத்தையும் மீறிக்கொண்டு நெட்டிலிங்க மரங்கள் வளர்ந்திருந்தன.
செடியும் கொடியும், வீசும் காற்றில் அசைந்தாடியது, தன்னை வரவேற்பதற்காக என்று எண்ணி சாம்பமூர்த்தி ஐயர் குதூகலமுற்றார். அவர் மனம் சந்தோஷத்தால் நிறைந்து வழிந்தது. தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் முன்னோர்களைப் பற்றியும் திடீரென்று அவருக்கு நினைவு வந்தது. சிதம்பரத்தின் பக்கம் திரும்பினார். மனத்தில் பல காட்சிகள் வேகமாக ஓடிக் கொண்டு இருந்தன.
சிதம்பரம், “சொல்லுங்க” என்றான்.
அவர் தலையசைத்தார்.
குரலில் உணர்ச்சி பொங்கியது.
“இது எங்க பூர்வீக சொத்து. பூர்வீகம்ன்னா முப்பது நாப்பது வருஷமில்லே; நூறு நூத்தம்பது வருஷமில்லே; அதுக்கு மேலே… ரொம்ப மேலே. அப்பலேர்ந்து இந்தத் தோட்டம் எங்க கிட்டத்தான் இருந்து வர்றது.”
“எங்காத்திலே இதப்பத்தி ஒரு கதை சொல்லுவா. எங்காத்திலே என்ன? பக்கத்தாத்திலே சொல்லுவா; எதுத்தாத்திலே சொல்லுவா. ஏன்? ஊர் முழுக்கச் சொல்லுவா.”
“என் காதுலேகூட கொஞ்சம் விழுந்தது.”
“இருக்கும், இருக்கும். ரொம்ப காலத்துக்கு முந்தி இந்தவூர்லே அப்பண்ணா, அப்பண்ணான்னு ஒருத்தர் இருந்தார். அவருக்கு ஒரே ஒரு பையன். சாம்ப மூர்த்தின்னு பேர். அவர் பேர்தான் எனக்கும். வரமான வரமிருந்து, திருத்தலமெல்லாம் போய்ப் பிறந்த பிள்ளை. நல்ல தேஜஸ். முகம் ஜிலுஜிலுன்னு சூரியன் மாதிரி பிரகாசிக்கும். அப்படி ஒரு அழகு; தேஜஸ் ! இருந்து என்ன? ஒண்ணு இருந்தா இன்னொண்ணு இருக்காதுங் கறது அவா விஷயத்திலே சரியா ஆயிடுத்து.”
“குழந்தைக்கு எட்டு வயசு வரைக்கும் பேச்சு வர்லே. அப்பா அம்மான்னு ஒரு வார்த்தை வர்லே. அப்பண்ணா தவிச்சுப் போயிட்டார்; தாளமுடியலே. பகவான் அனுக்கிரகத்தால் பிறந்த பிள்ளை, பேச்சு இல்லாம இருந்தது. என்ன பண்ணுவார் அப்பண்ணா? பகவான் அனுக்கிரகம் யாருக்குப் புரியறது. தாரை தாரையாகக் கண்ணீர் சொரிந்து நாலு வீதியும் சுற்றிச் சுற்றி வந்தார். தான தர்மம் நிறையப் பண்ணினார். என்ன பண்ணி என்ன? பகவான் கிருபை பையன் மேல் படவேயில்லே. அவர் படற பாட்டைப் பாத்து தர்ம பத்தினி இடிஞ்சு பைத்தியமா போயிட்டா…
“வாய் வர்லியே தவிர மத்தபடி குழந்தை ரொம்ப சமத்து.கோவில் வேலையெல்லாம் அதுதான் கவனிச் சுண்டது.
“இன்னும் ஒரு வருஷம் போச்சு; குழந்தைக்கு பேச்சு வர்லே. அம்மா கண்ணை மூடிட்டா அவ போன எட்டாம் நாள் கர்மங்கூட இன்னும் ஆகலே குழந்தை இல்லே. எங்கே போச்சு, யார் அழச்சுண்டு போனா ஒருத்தருக்கும் தெரியலே. தெருவிலே நின்னுண்டு இருந்த குழந்தையைக் காணோம். தேடாத இடமில்லே. ஆறு குளமெல்லாம் தேடிப் பார்த்துட்டா. குழந்தை கிடைக்கலே.
“அப்பண்ணா இடிஞ்சு போயிட்டார். வாய் அடைத்துப் போயிடுச்சு. ரெண்டு மாசம் போலத் தெருத்தெருவா அலைஞ்சார்.”
கணக்குப் பிள்ளை கொட்டாவி விட்டான்.
“காலம் என்னமா ஓடறது. ஊமையா, ஒருத் தருக்கும் தெரியாமப் போன பிள்ளை, பதினாறாம் வயசுல அமுதகானம் பொழிஞ்சுண்டு வந்து நின்னுது. அதோட வீடு இடிஞ்சு குட்டிச் சுவராக் கிடந்தது. தலைமுறை தலை முறையா எரிஞ்சுண்டிருந்த விளக்கு அணைஞ்சு போயிடுத்து. குழந்தை கொஞ்ச நேரம் பாழ் மனையைப் பாத்துண்டே நின்னான்.
“அப்புறம் தாரைதாரையாகக் கண்ணீர் விட்டுண்டே காவிரிக்கரைக்குப்போய், அரசமரத்தடியில் உட்கார்ந்தான். அன்றைக்கு முழுவதும் பேச்சில்லே. அடுத்த நாள், விடியறத்துக்கு முன்னேயிருந்து ரெண்டு நாளைக்கு விடாத கானம். பாட்டு அடடா! என்ன பாட்டு! பொங்கிப் பெருகிய ஆறு அப்படியே அடங்கி தவழ்ந்துண்டு போனது…”
சிதம்பரம் நன்றாக இலுப்பை மரத்தில் சாய்ந்து கொண்டான்.
“ஒரு நாள் போச்சு; ரெண்டு நாள் போச்சு; மூணு நாளும் போச்சு; பாட்டு நிக்கலே; அவன் பாடிண்டே இருந்தான். நாரதரே நேராப் பூலோகத்துக்கு வந்துட்டார். குழந்தையின் பாட்டு இஞ்ச நாரதரைக் கொண்டுவந்துடுத்து. ஆனா, குழந்தை எதற்குப் பாடறான்; யாருக்குப் பாடறாங்கறது ஒருத்தருக்கும் தெரியாது.
“பத்து நாட்களுக்கு அப்புறம் வெட்டாற்றங் கரையை விட்டுட்டு, சிவன் கோவிலுக்குப் போனான். பின்னால் ரொம்ப வருஷங்களுக்கு அதுவே வாசஸ்தலமாக இருந்தது. உப்பில்லாத சா தத்தைச்சாப்பிட்டுட்டு, எப்பொழுதாவது நினைத்துக் கொண்டால் இரவென்றும் பகலென்றும் பாராமல் பாடிக்கொண்டே இருப் பான். நாளாக ஆக, அதுகூட குறைந்து கொண்டே வந்தது.
“ஒரு நாள், பிச்சைப் பாத்திரத்தோடு அக்ரஹாரத் தில் அலைந்து கொண்டிருந்தபோது, ராஜாவிடமிருந்து பல்லக்கு வந்தது. அவன் கண்ணெடுத்துப் பார்க்க வில்லை. மூன்று முறைகள் இப்படியே நடந்தன. கடைசி யில் மகாராணி வந்தாள். இவன், பல்லக்கு ஏறாமல் நடந்தே அரண்மனைக்குப் போனான். ஆனா, போன எட்டாம் நாளே, கதறிக் கொண்டு ஓடி வந்துட்டான்.
‘நான் ஆண்டி, பர தேசி பிராமணன், உன்னை ஆசீர்வதிக்கிறேன்.’ என்றான்.
“மகாராணி உருகிப் போனாள். தான் பெரிய அபசாரத்தைச் செய்து விட்டதுபோல குழந்தை காலில் விழுந்து நமஸ்கரித்தாள்:
‘சுவாமி, பேதையை மன்னிக்க வேண்டும்!’
‘ஆண்டவா! இதுவென்ன விளையாட்டு…’
“மீண்டும் குழந்தை பாட ஆரம்பித்தது. இது து வரையில் பாடாத பாட்டு; யாருமே கேளாத கானம். மகாராணி மனங் குளிர்ந்து, சாயாவனத்தை அவர் பேருக்குச் சாஸனம் பண்ணி வைத்தாள்.”
ஆதி சாம்பமூர்த்தியைப் பற்றி எத்தனையோ கதை கள் உண்டு. ஒவ்வொரு கதையின் உள்ளுரையும் அவர் பக்திக்கு விளக்கமாகவும், சங்கீதத்துக்கு உரையாகவும் இலங்கும். அவர் கதை இடைவிடாமல் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வருவதால் கற்பனையின் சௌந்தர்யமும் வனப்பும் கொண்டிருக்கலாம்; நிகழ்ச்சிகள் முன்னும் பின்னுமாக கோக்கப்பட்டிருக்கலாம். ஆனால், கதை உண்மை ; உயர்ந்த சீலமும், நெறி பிறழாத வாழ்வும் நடத்தி, ராம நாமத்தையே இடைவிடாது உபதேசித்து ஓடுங்கிய ஞானியின் ஜீவன் நிறைந்த கதை. ஒவ்வொரு தலைமுறையிலும் புத்தொளி பெற்று மிளிர்கிறது.
அந்தப் பரம்பரையில் வந்த சாம்பமூர்த்தியிடம் நான்கு புளியந்தோப்பும், இருபது வேலி நன்செய்யும் கொஞ்சம் புன்செய்யும், பெயரும் – எஞ்சியிருந்தன.
தோட்டம் விலைக்கு வந்திருக்கிறது.
“ரொம்ப அற்புதமா கதை சொல்லுறீங்க!” என்று சிதம்பரம் புகழ்ந்துரைத்தான்.
“சாமி, கதை சொன்னா… இன்னைக்கெல்லாம் கேட்கலாம்.”
“நம்பள மூச்சுவிட முடியாம கதை சொல்லுறாங்க.”
“கதை இல்லே, நிஜம் அதான்!”
“ஆமாம், ஆமாம்.”
மேட்டிலிருந்து இறங்கிப் புன்னை மரத்தடிக்கு வந்தார் கள். அக்காக் குருவி, பரிதாபமா க,கூவிக்கொண்டு தலைக்கு மேலே பறந்து சென்றது.
சாம்பமூர்த்தி ஐயர், “ச்சை!” என்று கையை உதறினார்.
“இந்தக் காட்டுலே உங்களுக்கு என்ன கிடைக்குது?” என்று கேட்டான் சிதம்பரம்.
“வெறுங் காடு. காட்டுலே என்ன கிடைக்கும்? சும்மாதான் கிடக்குது” என்றான் கணக்குப் பிள்ளை.
“ஒன்னும் வரதில்லியா?”
“வருஷத்துக்குப் பத்துத் தூக்குப் புளி வரும்” என்றான் கணக்குப்பிள்ளை.
ஐயர் தாழங்குத்தையே பார்த்துக் கொண்டிருந் தார். பெரிய தாழங்குத்து. ‘கம கம’ என்று மணம் வீசப் பூக்கள் தலை சாய்ந்து இருந்தன. இரண்டு சிறுவர்கள் தாவித் தாவி பூ எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
“என்ன, குழந்தைகளா?’
“தாழம்பூங்க, சாமி.”
“பாம்பு இருக்கும்; பாத்து எடுங்க.”
“நம்ப கிட்ட பாம்பு வராதுங்க, சாமி.”
ஐயர் சிதம்பரத்தைப் பார்த்தார்.
பதிமூன்று பதினான்கு வயதுகூட நிரம்பாத இரண்டு சிறுவர்கள் இடுப்பளவுப் புதரில் தாழம்பூவோடு நின்று கொண்டிருந்தார்கள். தோப்பு சொந்தமில்லையே தவிர அனுபவிக்கும் உரிமையெல்லாம் அவர்களுடையது தான்.
பூக்கிற பூ,காய்க்கிற காய், பழுக்கிற பழம் – எல்லாம் அவர்களுக்குத்தான். முதல் பூ கோவிலுக்குப் போகும். அப்புறம் இரண்டு பூ ஐயர் வீட்டிற்கு; அங்கிருந்து குத்தாலம் போகும். அது ஒருமுறை – வழக்கம். பச்சரிசி மாவடும் இப்படித்தான் போகும். அந்த மரத்தில் பழம் பழுக்கவே விடுவதில்லை. பிஞ்சிலேயே ஒரு மாதத்து வடுவாக இருக்கும்போதே அலக்குப் போட்டு உலுக்கி விடுவார்கள்.
சிதம்பரத்தைத் தாண்டிக் கொண்டு முன்னே வந்த கணக்குப் பிள்ளை, “உள்ளே போகலாங்களா, சாமி” என்று கேட்டான்.
“வேண்டாம்.”
“அப்ப…”
“நீதான் சொல்லணும்.”
“நானா?”
“காட்ட வாங்கி என்ன பண்ணப் போறீங்க? அதைச் சொல்லுங்க சாமிக்கு.”
“அதுங்களா, சின்னதா ஒரு கரும்பாலை போடலாம் னுங்க.”
இரண்டு பேரும் பகபகவென்று சிரித்தார்கள்.
“அந்தக் காட்டிலா…….?”
“அவுங்க, சும்மா பரிகாசத்துக்குச் சொல்லுறாங்க, சாமி.”
“நேக்கும் அப்படித்தான் படறது.”
“இல்லே, நான் நிஜமா சொல்றேன். அந்த உத்தேசத்தோடு தான் தோட்டத்தைக் கேட்கறேன்.”
ஐயர் வெற்றிலை எச்சிலைக் கா ரை மீ து உமிழ்ந்து விட்டு, “பரவாயில்லே, உனக்குத் தோட்டந்தானே வேணும்?”
“ஆமாம்.”
“நான் தர்றேன்.”
“ஒரு பெரிய காரியம் முடிஞ்சு போச்சுங்க…”
நான்கைந்து நாரைகள் படபடவென்று சிறகை அடித்துக் கொண்டு வந்து மரக்கிளையில் அமர்ந்தன.
“இம்மாஞ்சுறுக்கா முடியுமின்னு நான் நினைக்கவே இல்லீங்க…”
“அதுக்கென்ன?”
ஐயர் வேட்டியை த் தூக்கிப் பிடித்துக் கொண்டு நடந்தார். முன்னே செடிகொடிகளை விலக்கி, வழியமைத் துக் கொண்டு போனான் கணக்குப் பிள்ளை. தும்பை யையும் புல்லிதழ்களையும் துவைத்து மிதித்துக்கொண்டு சிற்றோடைகளைத் தாண்டி சாலைக்கு வந்தார்கள்.
சாலைக்கு வந்ததும், சிவனாண்டித் தேவர் வருவது தெரிந்தது.
“பாருங்க சாமி, தேவர் வராங்க” என்றான் கணக்குப் பிள்ளை.
“செவனாண்டி நம்ப தோட்டத்துக்கு ரொம்ப நாளா பொறுப்பு” என்று சிதம்பரத்திடம் கூறினார்.
தேவர் சிதம்பரத்தைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே, “வூட்டுக்குப் போனேங்க; இஞ்ச வந்துட்டதா அம்மா சொன்னாங்க” என்றார்.
“உனக்கு ரெண்டு வாட்டி ஆளு விட்டேன்.”
“அந்தப் பயமவன் விஷயந்தாங்க. ரெண்டு வருஷமா அந்தப் புள்ளையைத் தள்ளி வச்சுட்டான். அதைத் தீர்த்து வைக்கப் போனேன். அப்படியே நாளு போயிடுச்சுங்க…”
“எல்லாம் ஒரு வழியா முடிஞ்சு போச்சுல்லே?. நீ போனா நடக்காமயா?”
“ரொம்பக் கஷ்டப்பட்டு முடிச்சி வச்சேங்க.”
செவனாண்டியா, கொக்கா?’
தேவர் நாணமுற்று, புன்னகை பூத்தார்.
“தோ பாரு செவனாண்டி ! ஊருக்குப் புதுசு; பேரு சிதம்பரம்.புளியந்தோப்பு வேணுமாம். தர்றதா வாக்குக் கொடுத்துட்டேன்.”
“புளியந்தோப்பையா, சாமி!”
“நீ, நம்ப வீட்டுக் கொல்லையைப் பாத்துக்கோ!”
“அதுக்கென்னங்க, சாமி!’
ஒரு மடையான் கூட்டம் பறந்து சென்றது. சாம்ப மூர்த்தி ஐயர் வண்டியில் ஏறி உட்கார்ந்தார்.
“நான் வரட்டுமா, சிதம்பரம்.”
“வாங்க ” கை கூப்பி விடையளித்தான் சிதம்பரம். கணக்குப் பிள்ளை, வண்டியின் குறுக்குக் கம்பியை எடுத்துப் போட்டான்.
“காத்தாலே வூட்டுலேதானே இருப்பீங்க?”
“ஆமாம்.”
“நான் வர்லாமில்லே?”
ஐயர் பகபகவென்று நகைத்தார்.
“கேட்கணுமா. நீ நம்ப மனுஷன். எப்ப வேணும்னாலும் வர்லாம்.”
“நீங்க கொடுக்கற கௌரவத்துக்குப் பங்கம் வராம நடந்துக்கப் பாக்கறேன்.”
தேவர் சிதம்பரத்தை விசித்திரமாகப் பார்த்தார்.
“செவனாண்டி வர்றீயா?”
மெல்ல நகர்ந்து செல்லும் வண்டியைப் பிடித்துக் கொண்டு சிவனாண்டித் தேவரும் கணக்குப் பிள்ளையும் சென்றார்கள். பூவரசு மரத்தைத் தாண்டி, கூந்தல் பனை மறைவில் உள்ள ஐயனாரைக் கடக்கும் வரையில் யாரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
வண்டி காத்தவராயன் இலுப்பை மரத்தைத் தாண்டி யதும் கணக்குப் பிள்ளை, “மாமாவுக்கு ரொம்பக் கோபம்’ என்றான்.
ஐயர், “ஆ,மாம்… ஆ,மாம்…” என்று தலையசைத்தார்.
“பின்னே, என்னங்க? எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக்கூடாதுங்களா? நா என்ன சீமைக்கா போயிட்டேன். தோ இருக்கிற வைதீஸ்வரன் கோவில். ஒரு நாளைக்கு எட்டுவாட்டி வந்துட்டுப் போகலாம். ஒரு ஆளு விட்டா, ரெண்டு எட்டுல வந்திருக்கமாட்டேனா? சாமிக்கு, செவனாண்டி அவ்வளவுதான்…”
“அது இல்லடா, செவனாண்டி…”
“இவன் ஒரு கழுதை ; வேலைக்காரன். இவனை என்ன கேட்கறதுன்னு நினைச்சிப்புட்டீங்க. அதான் சரி; அப்படியே செய்யுங்க. ஆனா, தோப்பு கொடுக்க எப்படி மனம் வந்துச்சு? வித்து நமக்கு என்ன ஆகப் போவுது. சின்னப் பண்ணையில் இருபது வேலி வித்து, கும்மோ ணத்தில் வாரி விட்டாங்களே, அந்த மாதிரி பண்ணப் போறோமா…”
சாம்பமூர்த்தி ஐயர் வண்டியின் குறுக்குக் கம்பியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு சிவனாண்டித் தேவரை ஆழ்ந்து நோக்கினார்.
“உங்க தோப்பு; கொடுக்கிறீங்க, சரி. அதுவும் ஆரு கிட்ட? ஊரு பேரு தெரியாத ஒரு பயகிட்ட நாளைக்கு இவன் என்ன பண்ணுவானோ? ஆரு கண்டா? ஆனா, என்னமோ எனக்குப் படுது நம்ப மண்ணிலே குந்திக் கிட்டு அதிகாரம் பண்ணப்போறான். நீங்க பாருங்க – அவன் மூஞ்சியும் மொகரக்கட்டையும்…… அசல் வேதங் கத்தவன்தான். வேட்டி, சட்டை, கிராப்பு உங்க ளுக்குச் சரிசமமா பக்கத்திலே நிற்கறான். நீங்களும் அவனுக்குச் சரியா மதிப்புக் கொடுத்துப் பேசுறீங்க…”
ஐயர் தலை அப்படியும் இப்படியுமாக அசைந்தது.
“நம்ப மண்ணு ; பரம்பரைச் சொத்து. விளையுதோ இல்லையோ; அது இன்னொருத்தன் கிட்டே போகலாங் களா, சாமி… அதைப் பத்தி நான் கேட்டா, ‘எலே, நீ வூட்டுத் தோட்டத்தைப் பாத்துக்கடா’ன்னு சொல்லு றீங்க. எனக்கு இதை நீங்க சொல்லணுங்களா ? ‘எலே, உனக்குத் தோட்டமில்லே, தொரவுமில்லே; போடா வெளியே, கழுதை!’ன்னு புடுச்சுத் தள்ளினாலும் போவ மாட்டேன். நீங்க போடான்னா நான் ஏன் போவணும்? சொல்லுங்க சாமி …”
“நாலுவாட்டி வந்து, ஆயிரம் வாட்டி கேட்டான். இல்லேன்னு சொல்ல முடியலே, செவனாண்டி…”
“நீங்க சொன்னீங்க. அதுசரி. உங்க குல வழக்கம் அது. இந்த முட்டாப்பய எதுக்கு இருக்கான். ‘எல இஞ்ச தோட்டமுமில்லே, கீட்டமுமில்லே, போயிடு’ன்னு கழுத்தைப் புடிச்சுத் தள்ளியிருக்க வேணாமா?”
கணக்குப் பிள்ளையின் நடை துவண்டது; அவன் பின் வாங்கினான்.
வண்டி ஒரு திருப்பத்தைக் கடந்து, நேர் சாலையில் ஓடத் தொடங்கியது.
“சரி, அதுதான் இல்லே. எலே, சாமி இருக்காங்க, இஞ்ச சட்டை போடக்கூடாது; செத்த எட்டி நில்லுன்னு சொல்லணுமா வேணாமா சாமி?”
“என்னமோ மாமா, புத்தி மழுங்கிப்போச்சுங்க, மாமா”.
“புத்தி மழுங்கல்லேடா… நீங்க எல்லாம் சொந்த வூட்டுக்குக் கொள்ளி வைக்கற கூட்டம்…”
“அப்படியெல்லாம், சொல்லாதீங்க, மாமா.”
வண்டி மேடு ஏறியது.
“வூட்டுக்கு வர்லீயா, சாமி ? ”
“இஞ்ச ஒரு ஜோலி!”
ஐயரை விசித்திரமாகப் பார்த்தார் தேவர்.
“நாளைக்கு வூட்டுக்கு வாயேன்.”
“சரிங்க.”
“உங்கிட்ட ரொம்ப பேசணும்.”
அவர் தலையசைத்தார்.
வண்டிச் சக்கரம் சுழன்றது.
பரபரப்போடும் மன விரக்தியோடும் திரும்பினார் தேவர்.
வண்டியைப் பிடித்துக்கொண்டே கணக்குப் பிள்ளை சென்றான். சிவனாண்டித் தேவர் பார்வையிலிருந்து மறைந்ததும், “மாமா சொல்லறது கூட, சாமி…”
“சரி, அதை விடு..”
வண்டி ஆற்றைக் கடந்தது.
“நீ எங்க வர்றே?”
“கூடத்தாங்க!”
“இல்ல, நீ போ. இஞ்ச ஒரு ஜோலி இருக்கு. காத்தாலே வர்றேன்னு அம்மாகிட்டச் சொல்லு.”
“சரிங்க, சாமி.”
அவன் சொற்கள் செவியில் புகுந்து மனவரங்கை எட்டவில்லை. சண்முகவடிவின் மகள் பஞ்சவர்ணத்தின் அழகில் மெல்ல மெல்ல ஆழ்ந்து கொண்டிருந்தார்.
மரங்கள் சூழ்ந்த நீண்ட சாலையில் வேகமாக வண்டி ஓடிக்கொண்டிருந்தது.
அத்தியாயம் – 2
சாலையைக்கடந்து ஐயர்வீட்டிற்கு வந்தான் கணக்கப் பிள்ளை. அவன் மனத்தில் பல்வேறு விதமான எண்ணங் கள் படர்ந்து விரிந்தன. ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்துப் பார்க்கையில் குழப்பமும் சந்தேகமும் மேலோங் கின. தோட்டத்தைப் பற்றித் தேவர் கொண்டிருக்கும் மனப்பாங்கை புரிந்துகொள்ள முடியாமல் தவிப்புற்றான். இதுவரையில் அவரைப் பற்றிக் கொண்டிருந்த உயர்ந்த எண்ணங்கள் மெல்லமெல்ல சரிவுற்றன.
படலைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான்.
மாடத்து விளக்கைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த ஐயரின் மனைவி பத்மாவதி தலையசைத்து அவனை வரவேற்றாள்.
“எங்க வர்லீயா?”
“ஒரு ஜோலியா நெய்விளக்கு வரைக்கும் போறதாச் சொன்னாங்க.”
“ஓகோ!” அவள் குரல் தேய்ந்துபோயிற்று. அலட்சியமும் இகழ்ச்சியும் நிறைந்த புன்னகை அதரங்களில் புரள, எல்லாம் தனக்குத் தெரியுமென்று தலையசைத்தாள்.
பத்மாவதி அவருக்கு இரண்டாந்தாரம். மாலையிட்ட போது அவளுக்கு வயது ஒன்பதோ பத்தோ. அவருக்கு வயது முப்பத்துமூன்று. முதல் மனைவி காலமான எட்டு ஆண்டுகள் கழித்து – தன் பெண்ணுக்கு மணம் முடித்து விட்டு – பத்மாவுக்கு மாலையிட்டார்.
கல்யாணம் நடந்து பதினைந்து வருடங்கள் சென்று விட்டன. சின்னஞ்சிறு பெண்ணாக அடியெடுத்து வைத்த பத்மாவதி இப்பொழுது இல்லத்தரசியாகி விட்டாள்; சகல அதிகாரங்களும் அவள் கைக்கு வந்துவிட்டன.
ஒவ்வொரு இரவும் ஐயர் அவள்முன்னே தலைசாய்த்து இறைஞ்ச வேண்டியிருந்தது. அதற்காகச் சலித்துக் கொண்டதே இல்லை. அவர் வளைய வளையச் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து, ‘உங்களுக்குப் பைத்தியந் தான்!’ என்பாள்.
;ஆமாம்…உம்மேலே…’ என்பார்.
பத்மாவதி அந்த நினைவுகளை ஒதுக்கிவிட்டு, “கார்த்தாலே வரேன்னாளா?” என்று கேட்டாள்.
“ஆமாங்க அம்மா.”
“அவன் வந்திருந்தான்லே?”
“காத்துக்கிட்டு இருந்தாங்க. தோட்டம் படிஞ்சு போச்சு; சாமி தரேன்னுட்டாங்க; அவனும் வாங்கிக் கிறேன்னுட்டான். ஆனா,பாருங்க அம்மா, தேவர் வந்து குறுக்கே விழறார்…”
“நம்ப கொல்லை; விக்கறதும் வாங்கறதும் நம்ப இஷ்டம். அதுக்கு அவன் ஆரு?”
“அதுதாங்க அம்மா. சாமி, அடிச்சுப் பேசினாத் தானேங்க? அவுங்க கம்முன்னு இருக்கறாங்க அவுரு பாட்டுக்குப் பேசுறாரு!”
“அவுங்க விஷயந்தான்… அப்புறம் என்ன, சொல்லு…”
“இன்னும் வெலெதாங்க பேசலெ.”
“அவங்கிட்ட ரொம்பப் பணமிருக்கும் போல இருக்கே?”
“ஆமாங்க அம்மா.”
“உம்….”
“சிங்கப்பூர்க்காரன்.”
“தெரியுமே” என்று சிரித்துக் கொண்டே அவனுக்கு விடையளித்தாள், பத்மாவதி. அவள் மனத்தில் பணம் பற்றிய ஆசை ஏறியது. என்ன விலை சொல்லச் சொல்லலாம் என்ற யோசனையோடு உள்ளே சென்றாள். விஷயம் தீர்மானமாகவில்லை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவித்தாவிச் சென்று கொண்டிருந்தாள்.
சாம்பமூர்த்தி ஐயர் வேகமாக உள்ளே வந்து, “பத்மா,தோ பாரு! காரியம் முடிஞ்சு போச்சு; ஐநூறு ரூபா!” என்று படபடப்போடு சொன்னார்.
அவள் திடுக்கிட்டு எழுந்தாள். ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. ஆச்சரியத்தோடு அவரை நோக்கினாள்.
“நான் ஒண்ணும் கேட்கலே. அவனாத்தான் சொன்னான்; சரீன்னுட்டேன்.”
சாம்பமூர்த்தி ஐயர் நானூறு ரூபாய்க்கு பவுன் களாகவும் மீ திக்குக் காசுகளாகவும் எடுத்து அவள் முன்னே வைத்தார்.
“ரெண்டு நாளிலே பத்தரம் எழுதணும்.”
அவள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. களிப்புற்ற மனத்தோடு புத்தம் புதிதாகப் பிரகாசிக்கும் பவுனை எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டிருந்தாள்.
“உங்களுக்கு ஒண்ணும் வேணாமா?”
“இப்ப சத்தியா வேணாம்!”
பவுனையும் பணத்தையும் அள்ளி மடியிலே போட்டுக் கொண்டு புன்னகை புரிந்தாள்.
“அவன் பெரிய பணக்காரனா இருக்கறான்.”
அதையும் அவள் காதில் வாங்கவில்லை.
மடியிலிருந்து இரண்டு பவுனை எடுத்து அவர் முன்னே வைத்தாள்.
“எதுக்கு?”
“எதாவது செலவுக்கு?”
ஐயர் வியப்போடு அவளைப் பார்த்தார். பல நாட களுக்குப் பிறகு இப்பொழுதுதான் மனம் திறந்து பேசு வது மாதிரி இருந்தது. அதில் மகிழ்ச்சியுற்றார். பணங் கூடத் தேவைதான். ஆனால், இப்போது – ஐந்தாறு நாட் களுக்கு வேண்டாம். அப்புறம் புது மோஸ்தரில் வந்திருக்கும் வளையலுக்கு எட்டுப் பவுன் வேண்டும். பஞ்சவர்ணத்திற்கு ஆறு மாதத்திற்கு முன்னே வளையல் பண்ணிப் போடுவதாகச் சொல்லி இருந்தார். ஆனால், அது தள்ளித்தள்ளிப் போய்க்கொண்டே வந்தது. போன மாதம் வெறுங்கையை நீட்டி, ‘உங்க வளையல் வர வரைக்கும் இப்படித்தான் இருப்பேன்’ என்று சிரித்தாள்.
நேற்று அவளிடமிருந்து அழைப்பு வந்தது: போக முடியவில்லை. சிதம்பரத்திடம் வேலையை முடித்துக் கொண்டு போனார்.
வண்டி போய் வாசலில் நின்றதும், அவள் அம்மா வந்து வரவேற்றாள். எப்போதும் இருக்கும் குதூகலமும் மகிழ்ச்சியும் அவளிடம் காணோம்.
ஐயர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே, அப்படியும் இப் படியும் பார்வையை ஓடவிட்டார். பஞ்சவர்ணத்தைக் காணோம்.
“வடிவு, பஞ்சவர்ணம் எங்கே?”
அவள் சிரித்தாள். சற்றுப் பொறுத்து, “அவ, வூட்டுக்கு வரப்படாதுங்களே” என்றாள்.
”உம்….”
”இன்னைக்குத்தான்.”
“சரி.”
அங்கவஸ்திரத்தை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு விசுக்கென்று வெளியே வந்தார். மனவிகாரம் ஒரு வினாடியிலேயே தீய்ந்து போனது மாதிரி இருந்தது. வாசலில் வண்டி இல்லை. வீட்டிற்குள் நுழைந்தபோது திருப்பி அனுப்பிவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கையில், பஞ்சவர்ணத்தின் வண்டியே வந்து நின்றது. தாவி ஏறி, வேகமாக வண்டியை ஓட்டச் சொன்னார்.
வண்டி வெட்டாற்றைத் தாண்டி காவிரிக்கரை ஏறும் போது சிதம்பரம் வருவது தெரிந்தது.
“சிதம்பரம்!”
“நீங்களா, வாங்க.”
“எங்கெ இப்படி ……?”
“சும்மா…”
ஐயர் கெக்கெக்க வென்று சிரித்தார். வெற்றிலை எச்சில் அவன் சட்டையெல்லாம் தெறித்தது.
“சும்மாத்தானே…அப்ப நம்ப காரியத்தை முடிச்சிடலாமே” என்றவர், வண்டிக்காரன் பக்கம் திரும்பி, “எலே, நம்ப வண்டி போவும். அத இங்க அனுப்பிட்டுப் போ” என்று உத்தரவு கொடுத்தார்.
வண்டி போனதும், தணிந்த குரலில், “நீங்க என்ன சொல்லுறீங்க?” என்று கேட்டான் சிதம்பரம்.
“தோட்டம் உனக்குப் பிடிச்சிருக்கில்லே?”
“என்ன அப்படி கேட்கிறீங்க?”
“அப்ப வெலெ வச்சிடலாம்…”
அவன் மிருதுவாக புன்னகை பூத்தான்.
“சரி… என்ன தர்ரே?”
”சொத்து உங்களுடையது; நீங்கல்லே சொல்லுணும்…”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. பழக்கமில்லே. நீ பார்த்துச் சொன்னா சரி; உலகம் சுத்தியவன், உனக்குத் தெரியாதா?….”
“அது சரியாகுங்களா? நீங்க யாரையாவது கேட்டுக் கூடச் சொல்லலாம்.”
“என் சொத்தைக் கொடுக்க இன்னொருத்தனை ஏதுக்குக் கேட்கணும்? அவன் யாரு எனக்கு யோசனை சொல்ல? எனக்குப் பிடிச்சா, உனக்கு சும்மாக்கூட கொடுப்பேன்…”
சிதம்பரம் விசித்திரமாக அவரைப் பார்த்தான்.
“சுருக்கா சொல்லு சிதம்பரம்.”
“அஞ்சு தரட்டுங்களா?”
“அஞ்சா?”
“ஆமாங்க!”
“சரி, எனக்குச் சம்மதம்!”
“அப்ப இந்தாங்க.” அவன் இடுப்பில் போட்டிருந்த பெரிய பெல்டிலிருந்து பவுனாக எடுத்துக் கல் மீது வைத்தான்.
“என்ன என்ன, பத்தரம் எழுதிட்ட அப்புறமா கொடேன்.”
“அட, எங்கெ இருந்தா என்னங்க? உங்ககிட்ட இருக்கறது எங்கிட்ட இருக்கறது மாதிரிதான்…”
அவன் பணத்தைப் பவுனில் மதிப்பிட்டுக் கொடுத் தான். பவுனை வாங்கி மடியில் போட்டுக் கொண்டு, “ரெண்டு நாளிலே பத்தரம் எழுதிடலாம்” என்றார்.
“அதுக்கென்ன இப்ப அவசரம்.”
ஐயர் வண்டி வந்து நின்றது.
“நீ எங்கெ போறே சிதம்பரம்?”
“நீங்க வாங்க, நான் சும்மா இப்படி செத்த…”
ஐயர் வண்டி ஏறினார்.
“வீட்டுப் பக்கம் வா.”
“சரிங்க.”
வண்டி நகர்ந்தது.
தோட்டத்தின் விஸ்தீரணத்தைப் பற்றிக் கணக்குப் போட்டுக் கொண்டே சிதம்பரம் பஞ்சவர்ணத்தின் வீட்டிற்குச் சென்றான். அவள் அம்மா எல்லையற்ற உற்சாகத் தோடும் களிப்போடும் அவனை வரவேற்றாள்.
உள்ளே போய்க் கட்டிலில் அமர்ந்தான். பஞ்சவர்ணம் வந்து, அவன் பக்கத்தில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, “இம்மா நேரமா?” என்று கேட்டாள்.
“செத்த வேல.”
“என்ன அப்படி பாக்கிறீங்க?”
“உன்னைத்தான்!”
“என்னையா?”
“உம்…”
“அப்படி நான் அழகா?”
“இல்ல…”
ஒரு கணம் கண்களைத் தாழ்த்தி, அவனை ஆழ்ந்து நோக்கினாள். அப்புறம் ஆசையோடு அவன் கையைப் பிடித்துக் கொண்டு, “தோட்டம் வாங்கப் போகிறீங்களாமே?” என்று கேட்டாள்.
“உம்…”
அவள் மடியில் சாய்ந்து படுத்தான்.
அத்தியாயம் – 3
சிவனாண்டித் தேவரைப் பார்த்தால் – அநேகமாகத் தன்னைப் பிடிக்காவிட்டாலுங்கூட சாப்பாட்டிற்கு ஒரு வழி பண்ணி வைப்பார் என்றே பட்டது. இந்த எட்டு நாட்களில் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டுப் போனான். ஒரு நாளைக்கு மேல், சிவன் கோவில் உப்பில்லாத பட்டைச் சோற்றைத் தின்ன முடியவில்லை; மேலப் புதூர் ரத்னப் படையாச்சி வீட்டிற்கோ போய்வர முடியவில்லை. இதற்கு மாற்று என்ன என்று யோசித்துக் கொண்டிருந்த போது பஞ்சவர்ணத்தின் தொடர்பு கிடைத்தது. ஆனால், வெகு விரைவிலேயே சலிப்புற்றான். இந்த வாழ்க்கை தனக்குத் தகாது என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தான்.
தேவர் பற்றிய நினைவுகள் பெருகின். அவரோடு தன் வாழ்க்கை ரொம்பவும் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருப் பது மாதிரி இருந்தது.
காவிரிக்கரையில் ஒரு முறை அவமானப்பட்டது நினைவில் மலர்ந்தது; அவன் சிரித்துக்கொண்டான்.
அதிகாலை.காவிரிக் கரையில் தேவரும், ராமசாமி செட்டியாரும் விதைப்பு பற்றி பேசிக் கொண்டிருந்தார் கள். அவன் வெகு நேரம் வரையில் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். தேவர் பார்க்காதது மாதிரி பேசிக் கொண்டிருந்தார். பேச்சு முடிந்ததும் புறப்பட ஆயத்த மானார்.
சிதம்பரம் முன்னேவந்து பணிவாக, “நான் வந்துங்க……” என்று ஆரம்பித்தான்.
சிவனாண்டித் தேவர் முரட்டுத்தனமாகவும் அலட்சிய மாகவும் ஏறிட்டுப் பார்த்தார். அவனுக்குப் பேசச் சந்தர்ப்பம் அளிக்காமல், “நான் வரேங்க” என்று செட்டி யாரிடம் சொல்லிக்கொண்டு, வேகமாக நடக்கலானார். சிதம்பரம் அவர் போவதையே பார்த்துக் கொண்டிருங் தான். உறவைச் சொல்லிவிட வேண்டுமென்ற ஆசை கட்டுக்கடங்காமல் பெருகியது. அன்றைக்கும் அதற்கு அடுத்த நாளும் வீட்டிற்குச் சென்றான். ஒவ்வொரு முறை யும், ‘இப்பத்தாங்க அக்கரைக்குப் போனாங்க ; ஐயர் வூட் டுக்குப் போனாங்க’ என்ற பதில் கிடைத்துக்கொண்டே இருந்தது.
இன்றைக்கு எப்படியும் பார்த்துவிடுவது என்ற நம்பிக்கையோடு நடந்து கொண்டிருந்தான். இலுப்பை மரத்தடியில் இரண்டு வெள்ளாடுகள் அலைந்து கொண்டி ருந்தன. மூன்று சின்னக் குட்டிகள் – ஒரு மாதத்துக் குட்டிகள் – துள்ளிக் கொண்டு ஓடின. ஒரு குட்டி வந்து அவன்மேல் விழுந்தது. வலது கையால் தள்ளிவிட்டு மேலே நடந்தான்.
ஒரு கறுத்த பையன் அலக்கை மரத்தடியில் சாற்றி விட்டு அரிவாளால் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தான். இது மாதிரி தானும் வேலைசெய்ய வேண்டியிருக்கும் என்ற எண்ணங்கள் படர, தேவர் வீட்டிற்கு வந்தான்.
வாசலில் கிடந்த கட்டிலில், மீசையை ஒரு பக்கமாகத் தள்ளிவிட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார் சிவனாண்டித் தேவர்.
“வணக்கங்க.” பணிவோடு கரம் குவித்தான்.
தேவர் நிமிர்ந்து பார்த்தார். திகைப்பின் குறி முகத் தில் தெரிந்தது. ஆனால், வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வெளிவரவில்லை.
“என்னைத் தெரியுதுங்களா…சிதம்பரங்க…”
“தெரியுது, தெரியாம என்ன…” என்று கொஞ்சம் ஒதுங்கி, “குந்து” என்று இடம் கொடுத்தார்.
“பரவாயில்லீங்க!”
“சும்மா, குந்து.”
“உங்களைப் பாத்துட்டுப் போவலாம்ன்னுதாங்க வந்தேன்.” சிதம்பரம் ஒதுங்கினாற் போலக் கட்டிலில் அமர்ந்தான்.
“முன்னகூட வந்தீங்களாமே ; வூட்டுலே சொன்னாங்க. கொஞ்சம் ஜோலி…ஆமாம் எந்த ஊரு?”
தலை குனிந்துகொண்டு யோசித்தான். பிறந்த ஊர் நெய்விளக்குக்குப் பக்கத்து ஊர்; திட்டக்குடி. வெட்டாற் றின் கரைமீது நின்று பார்த்தால் திட்டக்குடி தெரியும். ஆனால், அந்த ஊரைப் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது: ஒன்றும் நினைவில் இல்லை. அம்மா சதா சொந்தவூரைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பாள். சாவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னால், ‘நான் இஞ்ச, கண்ணு காணாத சீமையில் போவணுமா? எங்க சன மெல்லாம் போன ஆத்தங்கரையில் இந்த உசுரு போவக் கொடுத்து வைக்கலே’ என்று குறைப்பட்டுக்கொண்டாள். அவள் குறைப்பட்டுக் கொண்டது போலவே நடந்தது. கொழும்பில் சிதம்பரம் அவளுக்கு மண் போட்டான். அதற்குப் பிறகு, எவ்வளவோ நிகழ்ந்துவிட்டன. கொழும்பை விட்டு சிங்கப்பூருக்குப் போய், அங்கே இருந்துவிட்டு திட்டக்குடிக்குப் போனான்; தங்க முடிய வில்லை.பலவிதமான உணர்ச்சிகள் பெருக சாயாவனத் திற்கு வந்துவிட்டான்.
அவன் திட்டக்குடி என்றதும், “யாரு வீடு?” என்றார் சிவனாண்டித் தேவர்.
“முனியாண்டித் தேவர்…”
“காவேரி பையனா நீ!”
“ஆமாங்க!”
தேவர் மீசையைத் தள்ளி விட்டுக் கொண்டார்; உதடுகள் படபடவென்று துடிப்பது தெரிந்தது.
“வேங்கப் புலி கூட்டமில்லே, உங்கம்மா?”
“மொட்டாணிக் கூட்டம்ன்னு அம்மா சொல்லு வாங்க.”
“ஆமாம்……ஆமாம்…… இப்பத்தான் நினைவுவருது. அதான், நானும் நாலு நாளா யோசித்து யோசித்துப்பார்க் கறேன் – தம்பி ஆரு, நம்பளவங்க ஜாடையா இருக்கு தேன்னு. அட அப்பா! எம்மாம் வருஷம் கழிச்சி .. நல்லா இப்படி கிட்டத்துல வந்து குந்துங்க, தம்பி……”
“அம்மா உங்களைப் பத்தி ரொம்ப சொல்லிக்கிட்டே இருப்பாங்க.”
“நான் அவளுக்கு ஒரு விதத்திலே அண்ணன் முறை வேணும்.”
“ஊருக்குப் போய் முதல்லே, மாமாவைப் பாரு. அவுங்கதான் நமக்கு எல்லாம்ன்னாங்க!”
சிவனாண்டித் தேவர் தம் கண்களை மூடிக்கொண்டு கொஞ்ச நேரம் யோசித்தார். தேய்ந்துபோன ஒவ்வொரு காட்சியும் எங்கிருந்தோ மனவரங்கில் நிழலாடியது. காவேரி தங்கை மாதிரி ; ஒரே கூட்டம்; மொட்டாணி. அவளுக்குக் கல்யாணத்தை முன்நின்று நடத்தி வைத்த வர், அவர். நல்ல இடம்; நல்ல சம்பந்தம். பூரித்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் கணவன் சாமியாராகி எங்கோ போய்விட் டான் என்ற செய்தி வந்தது. தேவர் வீட்டில் இல்லை. சீர்காழிக்குப் போய் இருந்தார். நான்கு நாட்கள் கழித்து தான் திட்டக்குடிக்குப் போக முடிந்தது. காவேரி தன் துக்கத்தை மறைத்துக்கொண்டு, அவரை வரவேற்றாள்; சாப்பாடு போட்டாள். ‘என் வீட்டுக்கு வந்துடு அம்மா என்ற வேண்டுகோளைப் பணிவோடு நிராகரித்தாள். தானே உழைத்து, சாப்பிட்டுக்கொண்டு வந்தாள். அவளுள் என்ன நிகழ்ந்ததோ ; கொழும்புக்கு யாருக்கும் தெரியாமல் போய்விட்டாள்.
“ஊரெவிட்டுப்போறப்ப உனக்கு ரெண்டோ ரெண்டரையோ வயசு. ஒரு நாள் திடீருன்னு போயிட்டா; அவளுக்கு ரொம்ப நெஞ்சழுத்தம்; ஒருத்தர் கிட்டேயும் ஒண்ணும் சொல்லமாட்டா…”
கட்டிலின் கயிற்றை விரலால் கீறிக்கொண்டே அதை அங்கீகரிப்பதுமாதிரி தலையசைத்தான்.
“காவேரி…”
அம்மவாத்துக் குளுந்து போயிட்டாங்க.
சிவனாண்டித் தேவர் கண்களை மூடி, வெகு நேரம் கழித்துத் திறந்தார். இமைகள் நனைந்திருந்தன. குரல் மாறிவிட்டது; உற்சாகத்தையும் கலகலப்பையும் இழந்து விட்டார்.
“காவேரி, ரொம்ப நல்ல பொண்ணு ; சமத்து. அட எங்கப்பா! என்ன வேல, பம்பரமா செய்வா. அவமாதிரி ஒரு பொண்ண என் வயசிலே பாத்ததே இல்லே…… பசுமையான நினைவுகளில் தேவர் ஆழ்ந்தார். தாயின் நற் பண்புகளை சிறப்பித்துக் கூறக்கூற சிதம்பரத்திற்கு, தனக் காகவும் அவளுக்காகவும் அவள் பட்ட கஷ்டங்கள் நினை விற்கு வந்தன. வாழ்நாள் முழுவதும் சாவிற்கு எட்டு நாட்களுக்குமுன் வரையில்கூட- அவள் பாடுபட்டுக் கொண்டிருந்தாள். பரபரக்க வேலை செய்யும் அவளுக்கு சாவு மட்டும் ரொம்ப அமைதியாக வந்தது; தூங்குவது போலவே இறந்துபோனாள்.
அதுகூட அவனுக்குத் தெரியவில்லை. தாய் தூங்குவ தாக நினைத்துக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.
அடுத்த வீட்டு அன்னம் வந்து பார்த்து விட்டு, துயரத் தோடு அவனை வெளியே அழைத்து வந்து, அம்மா போயிட்டாங்க’ என்றாள். அழுகையில் வாய் அடைத் தது. அவனை இறுக அணைத்துக் கொண்டு விம்மினாள். அவன் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு ‘கோ!’ என்று கதறினான்.
யாரோ சட்டென்று அவன் வாயைப் பொத்தினார்கள். அன்னத்திடமிருந்து அவனை வாங்கிக் கொண்டு வெகு தூரத்திற்குப் போனார்கள்.
அம்மா குளிர்ந்து போயிட்டா; அழக்கூடாதுடா அப்பா! என்று யார் யாரோ சாந்தப்படுத்தினார்கள். அழ, தன் துக்கத்தை யெல்லாம் தீர்த்துக் கொள்ள, அன்றைக்கு அவனுக்கு ஒரு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. பின்னால் அவன் கண்ணில் கண்ணீரே சுரக்கவில்லை. எல்லாம் மரத்துப் போய்விட்டது.
“அங்கெ எப்படி இருந்தீங்க? ஒண்ணும் கஷ்ட மில்லே?”
”அம்மா, ரொம்பக் கஷ்டப்பட்டாங்க…”
“அந்தப் பயமவன் வம்சத்திலேயே அப்படியொரு புத்தி; சாமியாராப்போறது வழக்கம். அவன் அப்பன் சாமியாராப் போனான்; தாத்தா போனான். அப்புறம் இந்தப் பயலும் போயிட்டான்.”
“……”
“அப்பப் போனவன்தான். இந்தப் பக்கம் அப்புறம் வரவேயில்லே. வடலூரில் கொஞ்ச நாள் இருந்தான்னு கேள்வி. நான் போய் ரெண்டு நாள் அலஅலன்னு அலஞ்சேன். அம்புடலே.”
“எனக்கு அப்பா நினைவே இல்லீங்க மாமா.”
“அவன் சாமியாராப் போகச்ச நீ ஒண்ணறை வயசுக் குழந்தை.”
“:அம்மாகூட சொல்லுங்க, மாமா.”
“உம்மேலே அவனுக்கு உசுரு.”
அவன் விசித்திரமாகப் பார்த்தான்.
“தம்பிக்குக் கல்யாணம் இன்னமதானோ ஆகணும்?”
தலை சாய்த்தபடியே அவன் புன்முறுவல் பூத்தான்.
வெற்றிலையை வாயில் திணித்துக் கொண்டு, “தோட் டம் அக்கிரிமென்ட் ஆயிடுச்சில்லே?” என்று கேட்டார் தேவர்.
“ரெண்டு நாளைக்கு முன்னதாங்க. மூனுவாட்டி வந்தேங்க; நீங்க அம்புட்டுக்கிலேங்க…”
“அதுக்கென்ன! எல்லாம் நல்லபடியா நடந்தா சரி தான். ஊரிலே சொல்லிக்கிட்டாங்க. காதுலே விழுந் துச்சு. ஆனா, உன்னைக் கேட்கறது ஆகுமா? ஐயரைப் பாக்கலே; பாக்க இஷ்டமில்லே. ரெண்டு மொறெ கணக்கப்பிள்ள வந்தான். நான் போகலே. ஏன் போவணும்..”
“…”
“ஐயருக்கும் எனக்கும் நாற்பது நாற்பத்தைந்து வருஷப் பழக்கம். அதுக்கு முன்னே அவுங்க அப்பா தாத்தா எல்லாம் பழக்கம். பெரியவங்க ஒரு தினுசு; இவுரு ஒரு தினுசு. பொண்டாட்டிக்கு அடங்கிட்டா, அப்புறம் ஆரு சொன்னாலும் காதிலே ஏறாது.’
ஒரு வெள்ளாட்டுக் குட்டி தேவர் காலில் விழுந்து எழுந்தோடியது.
“பத்துநாளா வெள்ளாட்டை இங்கெ நிறைய பாக்கறேன்” என்றான் சிதம்பரம்.
“தம்பி இஞ்ச வந்து பத்து நாள் இருக்குமா?”
“பன்னிரண்டு நாளு ஆகுதுங்க,மாமா.”
“ரொம்ப நாளுதான். தம்பி ஜாகை எங்கெ வச்சிருக்கு?”
“மேலப்புதூர் ரத்னப் படையாச்சி வூட்டுலேங்க.”
“ஆரு வூட்டுலே…? படையாச்சி வூட்டுலேயா?”
“சிங்கப்பூரில் என்னோட ஒரு சிநேகிதன் இருந்தாங்க. அவன் சொல்லி விட்டாங்க…”
“ஆரு… கோவாலா?”
“ஆமாங்க மாமா.”
“கயவாலிப்பய. கட்டின பொண்டாட்டிக்கும் பெத்த பிள்ளைக்கும் சோறு போட வக்கில்லாமெ ஓடிப் போயிட்டான். அங்கெ எவளையோ சேத்து வச்சுக் கிட்டிருக்கறதக் கேள்வி. பாவம், அந்தப் பொண்ணு இஞ்ச பாப்பான் வூடு கூட்டிக் காலந்தள்ளுது. பாத்தீயா, அதான் காலம். அந்தப் பய மாதிரி இவளும் போனா.. வேணாம்…அந்தப் பேச்சு இப்ப வேணாம்…” என்றவர் மிகுந்த ஆதரவோடு அவன் கரத்தைப் பற்றிக் கொண்டு, இன்னமெ இதான் உன் வூடு ; இஞ்சதான் இன்னமெ நீ இருக்கணும். நான் ஆரு…இது ஆரு வூடு உன் மாமன் வீடு….” என்றார்.
\
அவன் கிளர்ச்சியுற்றான்; மனம் சந்தோஷத்தால் நிரம்பியது.
“நீங்க வெளியே தள்ளிக் கதவை அடைச்சாலும் இன்னமெ நான் இதை விட்டுப் போவமாட்டேன்.”
“அதான்……. அதான் வேணும்….. காவேரி பேச்சு அப்படியே வருது.”
மரத்தை அண்ணார்ந்து பார்த்து, இரண்டு முறைகள் வெள்ளாடு கத்தியது. சிவனாண்டித் தேவர் உட்பக்கம் திரும்பி, “எலே, சின்னையா !” என்று கூப்பிட்டார்.
“அவன் இல்லீங்களே, மாமா.” அவர் மருமகள் கதவுக்குப் பின்னே மறைந்தபடியே பதிலளித்தாள்.
“குஞ்சம்மா, இஞ்ச வாயேன்.”
“என்னங்க மாமா?”
“இஞ்ச பாரு; ஆரு வந்திருக்கா? நம்ப காவேரி கொழும்புக்குப் போனாளே, அதும் பையன் ; நம்ப சிதம் பரம். நான் ஆரு ஆருன்னு முழிச்சுக்கிட்டிருந்தேன். இப்பத்தான் தம்பி சொல்லிச்சு….”
உள்ளே இருந்து வெளியே வந்து, ஆளோடி தூணைப் பற்றிக்கொண்டு, “அந்தக்கா ஜாடை தெரியுதுங்க, மாமா..”
“எதுக்கு அங்க நிக்கற பாப்பா; இஞ்ச வா … நம்ப தம்பிதான்.”
குஞ்சம்மா தலை கவிழ முன்னே வந்தாள்.
சிதம்பரம் எழுந்து நின்று, கை கூப்பி, “நமஸ் காரங்க” என்றான்.
தேவரும் குஞ்சம்மாவும் திடுக்கிட்டுப் போனார்கள். ஒரு பெண்ணுக்கு முகமன் கூறியவனைப் பார்த்ததில்லை. இதனை எப்படி ஏற்பதென்றும், பதிலளிப்பதென்றும் தெரியவில்லை. தேவரைவிடக் குஞ்சம்மா அதிகமாகக் கலக்கமுற்றாள்; தலைகுனிந்தபடியே பின்னுக்கு நகர்ந்தாள்.
சிவனாண்டித் தேவர் அவனை உட்கார வைத்தார்.
“பாப்பா நம்ப மருமவ… உனக்கு அம்மா மாதிரி…”
“அப்படிங்களாங்க, மாமா?”
“ஆமாம். நீ இப்பத்தானே வந்திருக்கெ, இன்னமெ தான் எல்லோரையும் தெரிஞ்சுக்கணும்….” என்றவர் உட்பக்கம் திரும்பி, “பாப்பா, உனக்குக் காவேரியை நினைவிருக்கா?” என்று கேட்டார்.
“என்னங்க மாமா அப்படிக் கேட்கிறீங்க! அந்த அக்காவை எனக்கு நல்லாத் தெரியுமே. எங்க வூட்டுக்கு ரெண்டு வாட்டி முளைக்கொட்டுக்கு வந்திருக்காங்க.”
“சனஞ் சாதின்னா அவளுக்கு இஷ்டம்….”
“தம்பிகிட்ட அதைச் சொல்லுங்க,மாமா – இதுவும் அவுங்க வூடுதான்; இன்னமெ இஞ்சதான் இருக்கணுன்னு.”
”நீ சொன்னப்புறம் தம்பி மீறிடுமா…. என்னங்க தம்பி?”
அவன் திருப்தியுற்றான்; மனம் களிப்புற்றது.
“எனக்கு என்ன வருத்தமுன்னா… இம்மா நாளா இஞ்ச வராம போயிட்டோமேன்னுதான்.”
“இப்ப வந்துட்டீங்களே!”
எல்லோரும் சிரித்தார்கள்.
“பாப்பா,செத்த நாங்க இப்படி போயிட்டு வாரோம். ஆரு வந்தாலும் இருக்கச் சொல்லு… தம்பி…..வாங்க” என்றெழுந்தார் தேவர்.
இருவரும் தெருமுனையைத் தாண்டி மறையும் வரையில் குஞ்சம்மா படியில் நின்று கொண்டிருந்தாள்.
‘அக்கா வாட்டந்தான்…. அந்த சாடை, நடை, கை வீச்சு, பார்வை கையை இடுப்புலே வச்சுக்கிறது எல்லாம் காவேரி அக்காதான்…’
மேலத் தெருவிற்கு வந்ததும் தேவர் கேட்டார், “தம்பி இன்னமெ இஞ்சயே இருக்கறாப்போலத் தானே?” என்று.
“ஆமாங்க, மாமா.”
“கண்காணாத சீமையிலே அப்படி என்னதான் கிடக்குது? இஞ்ச இருந்து நா நான்னு ஓடுதுங்க. நாலு வருசமோ அஞ்சு வருசமோ கழிச்சு கிழடு தட்டி அப்பாடான்னு வருதுங்க. வந்த அப்புறம் உடம்பு வளையறதில்லே; சும்மா ஊர் சுத்திப்புட்டு, கையிலே இருக்கறகாசை செலவழிச்சிப்புட்டு, சண்டை போட்டுக் கிட்டு, தெருவிலே நிக்குதுங்க.”
“…”
“இஞ்ச இருக்கறபசங்க வெளி தேசத்துக்குப் போயே கெட்டுப் போயிட்டானுங்க, தம்பி…”
அவன் மெல்லச் சிரித்தான்.
“நெசங்க, தம்பி.”
“வாஸ்தவங்க, மாமா.”
“நீங்க கொழும்புல இருந்தீங்களா, யாழ்ப்பாணத்திலாங்க, தம்பி?”
“கொழும்புலேங்க!”
“அங்க எப்படி?”
“பரவாயில்லீங்க, மாமா. கஷ்டப்பட்டா நல்லாச் சாப்பிடலாம்; நாலு காசும் சம்பாரிக்கலாம்.”
“இஞ்ச மட்டுமென்ன? கயவாலிப்பிள்ளைங்க ஒன்றுக்கும் உடம்பு வளையமாட்டேன்கிறது. மெதந்த கெண்டை பிடிக்கறதுன்னா எம்மா நாளைக்குத்தான் முடியும்?”
“அங்க கூட நம்பளவங்க ரொம்பக் கஷ்டப்பட்டு உழைக்கறதா சொல்றதுக்கு இல்லீங்க, மாமா.”
“உழைப்பு பொசுக்குனா வரும்? சின்ன வயசிலே இருந்து பழக்கப்படணும். அப்பெல்லாம் சும்மா சுத்திட்டு, பெறவு வேலைக்குப்போனா இடுப்பு வளையுமா…?”
“ஆருண்ணா?” சாணிக் கூடையோடு வந்த சொர்ணம் சற்றே ஒதுங்கி நின்று கேட்டாள்.
“தம்பி நமக்குச் சொந்தம். இஞ்ச புளியந்தோப்பு வாங்கி இருக்கறவங்க இவுங்கதான்.”
“இவுங்கதானா?… ரொம்ப சின்னவங்களா இருக்கறாங்களே!”
அதற்கு பதிலேதும் சொல்லாமல் சொர்ணத்தைத் தாண்டிப் போனார்கள்.
“இப்ப பேசிக்கிட்டிருந்தோமே-சொர்ணம் கதையே ஒரு தனிக் கதைங்க, தம்பி. அஞ்சு பேருக்கு மத்தியில் பிறந்த ஒரே பொண்ணு. எல்லாரும் தங்கமுன்னு தாங்கி வளர்த்தாங்க. பெரியண்ணன் அது மேல உசுரையே வச்சிருந்தான்; கல்யாணம், அவன் பார்த்துத்தான் பண்ணி வச்சான்…
“பொண்ணைச் சும்மா சொல்லக் கூடாது; தங்கக் கம்பி. எதிரே நின்னு உரக்க ஒரு வார்த்தை பேசத் தெரி யாது; அதட்டத் தெரியாது. அது ஒரு குணம்; அவ அம்மாகிட்டேயிருந்து வந்தது. இன்னைக்கு எவ்வளவோ தாழ்ந்து போயிடுச்சுவோ…ஆனாலும், அந்தக் குணம், போகலே. அதான், ‘கெட்டாலும் மேம் மக்க மேம் மக்க ளே’ன்னு சொல்லுவாங்க, பாருங்க, தம்பி …அவ தலை யெழுத்து. பெரியண்ணன் அம்மை வார்த்துக் குளிர்ந்து போனான்; அவன், தம்பி வீராதிவீரன் விலை மதிக்காப் பாண்டியன் – அவனும் மாரியிலே போனான். அவ ரெக்க ஓடிஞ்சு போயிடுச்சு அப்ப பாத்து ராமு – உங்க பங்காளி அவ புருஷன் கப்பலுக்குப் போறேன்னு ஒரு நாள் திடுப்புன்னு போயிட்டான். அதான்… ரெண்டு கடுதாசி வந்துச்சு. அப்புறம் ஒரு தகவலும் இல்லே. வருஷம் பத்தாகப்போவுது…”
சிவனாண்டித் தேவர் கண்களில் கண்ணீர் சுரந்தது. தேவரால் அழ முடியும் என்பது அவனுக்கு ஆச்சரியம் அளித்தது.
அவன் கப்பலுக்குப் போன மறு வருஷமே, அவ அம்மாவும் அண்ணன்மார்களும், வீட்டோடவந்துடுன்னு வருந்தி வருந்தி அழச்சாங்க. சர்ப்புத்தரன் பொண்ணு, போவாளா? ‘இதுதான் என் வீடு ; இஞ்சதான் நான் சாக ணும்’ன்னுட்டா.
“மருமவளா அடியெடுத்து வச்சப்ப அஞ்சு வயசும் ஆறு வயசுமா இருந்த ரெண்டு நாத்தனாருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா; ஒரே கொழுந்தனுக்கும் கல்யாணம் கட்டினா. என்ன பண்ணி என்ன? அந்தக் கயவாலிப்பய, கல்யாணமான ஆறாவது மாசம் மாமியார் வீடே கதின்னு போயிட்டான். கண்ணு தெரியாத மாமியாரை வச்சிக் கிட்டு ஏதோ காலத்தைத் தள்ளிக்கிட்டு வரா…”
“வாழ்ந்த குடும்பத்துக்குத் தான்க, மாமா, இப்படி யெல்லாம் வருதுங்க.”
“நீங்க சொல்லுறது நூத்துல ஒண்ணுங்க,தம்பி? ஆனா பாருங்க, சொர்ணத்தைப் பாத்துட்டா எனக்கு என்னமோ வந்துடுதுங்க……தம்பி, கொழும்புல தானே இருந்தீங்க…? ”
“ஆமாங்க,மாமா.”
“அங்க, நம்ப பக்கத்து ஆளுங்களெல்லாம் இருக் காங்க இல்லே?’
“ரொம்பப் பேருங்க, மாமா.”
”சொர்ணம் புருஷனை நீங்க பாத்திருக்கிறீங்களா? கறுப்பா,சதையா, பீமன் மாதிரி இருப்பான். பேச்சு கொஞ்சம் தெத்தித் தெத்தி வரும். பேரு ராமு …”
இதழ் பிரிந்தும் பிரியாமலும் அவன் முறுவலித்தான்.
இருவரும் தெற்காகத் திரும்பி, முள்வேலியைத் திறந்து கொண்டு தோட்டத்திற்குள் சென்றார்கள்.
“என்னமோ தோணுச்சிங்க தம்பி. நாலுமாசத்துக்கு முன்னே வூடு கட்ட ஆரம்பிச்சேன். எதுக்கின்னு தெரி யாது. இன்னெக்கிப் பாருங்க. எல்லாம் சரியா இருக்கு. இன்னெக்கித் தனியா வந்துட்டீங்க. நாளைக்குக் கல்யாண மாகணும்; குழந்தை குட்டிகள் பிறக்கணும்…”
”செத்த நாழிக்குள்ளே பெரிய பெரிய திட்டமெல் லாம் போட்டுட்டீங்க, மாமா.”
“கண்ணு ஒன்ன பாத்துட்டா மனசு கீர்கிர்ன்னு அதை வாங்கிக்குது. அது கிடக்கட்டுங்க, தம்பி. வூடு புடிச்சிருக்கா பாருங்க. போன வருஷம் கும்மோணத்தில் நம்ப நடேசையர் ஒரு வூடு கட்டினாங்க. அது மாதிரிதான் இது. கட்டி முடிச்சுப் பார்த்தா, ரொம்ப ஜோரா இருக் கும்.”
கால்வாசிக்கு மேல் வேலைகள் முடிந்துவிட்ட வீட்டை சிதம்பரம் சுற்றிப் பார்த்தான். வாழைத்தோட்டத்தின் முன்னே வீடு, அவனுக்காக உருவாகிக்கொண்டு இருந்தது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல்மீது நின்று கொண்டு கேட்டான்: “இங்க இருந்து நம்ப தோட்டம் கிட்டங்களா, மாமா?”
“மனக்குடி வாய்க்காலைத் தாண்டிட்டா அப்புறம் உங்க தோட்டந்தான். ஆமாம் தோட்டத்தில் என்ன போடுறதா தம்பிக்கு உத்தேசம்?”
“ஆலை வைக்கலாம்ன்னு உத்தேசங்க, மாமா.”
“ஆலையா!…? அந்தக் காட்டுலேயா! என்ன தம்பி, வேடிக்கை பண்ணுறீங்களா? அட அப்பா! எம்மாம் பெரிய காடு! வனம் மாதிரி ; மனுஷன் அழிக்க முடியுமா? அழிக்க முடியுமுன்னு நினைப்புத்தான் தோணுமா?”
“நான் சீக்கரத்தில் அழிச்சுடுவேங்க, மாமா.”
“கையில் நாலு காசு சேர்ந்துட்டா அதான். தலையும் காலும் தெரிய மாட்டேன்கிறது.”
சிதம்பரம் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே “இன்னும் ரெண்டு நாளுலே வேல தொடங்கலான்னு இருக்கறேங்க. ஒரு பத்து ஆளுங்க பாத்து, ஏற்பாடு பண்ணுங்க, மாமா.”
“பத்து ஆளுங்களா?”
“அதுக்கு மேல வந்தாலும் சரிதாங்க.”
“இது நடவு காலம்; ஆணு பொண்ணு அடங்கலும் வயல்லே நிக்கும்.”
“அஞ்சு ஆறுங்க, மாமா?”
“நடவு இருக்கே?…”
“நாம்ப ரொம்ப கூலி கொடுத்தா?”
விசித்தரமாக அவனை ஏறிட்டுப் பார்த்தார்.
“ஒரு ரெண்டு மூணு ஆளுங்க – பசங்களா இருந்தாலும் போதுங்க, மாமா.”
“ஏற்பாடு பண்ணுறேன்.”
தோட்டத்தை விட்டு வாசலுக்கு வந்தார்கள்.
– தொடரும்…
– சாயாவனம் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1969, வாசகர் வட்டம், சென்னை.
சா. கந்தசாமி (1940 - சூலை 31, 2020) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 1968-இல் எழுதிய சாயாவனம் புதினம் பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. சவகர்லால் நேரு, பெரியார், உ. வே. சாமிநாதையர் மற்றும் வெ. சாமிநாத சர்மா போன்றோரின்…மேலும் படிக்க... |