கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2024
பார்வையிட்டோர்: 1,241 
 
 

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புவனாவுக்குக் கண்ணோடு கண் மூடவில்லை. இரவு ஒரு மணியாகியும் நித்திரை அவளை யணுகியபாடில்லை. இப்படி எத்தனை இரவுகள்… கண்ணோடு கண் மூடாமற் பருவ நினைப்பால், உலகில் தன்னைப் போன்ற இளம் பெண்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்ப வாழ்வைப்பற்றி எண்ணி யெண்ணி மனதைப் புண்ணாக்கிக் கொண்டாள்! 

ஒரு காலத்தில் பிரபல எழுத்தாளர்-பேச்சாளர் நடராசனைக் கணவனாகக் கைப்பிடிக்கப் போகிறோ மேயென்ற குதூகலத்தில் மிதந்துகொண்டிருந்த புவனாவா இப்பொழுது வாழ்க்கையும் வேண்டாம், ஒரு வடிவும் வேண்டாம் என்று விரக்திக் குரலில், வேண்டா வெறுப்பாகப் பேசுகிறவள்? என்ன ஆச்சரியம்! காலதேவன் ஓட்டப்பந்தயத்தில் எத்தனை விதமான இன்ப, துன்ப மைல் கற்களைத் தாண்டிக் கொண்டு ஓடுகிறான்!! 

நடராசனுக்கும் புவனாவுக்கும் திருமணம் நிகழ்ந்தபோது புவனாவுக்கு வயது இருபது. தன்னிலும் அழகனான நடராசனை -அதுவும் ஒரு சிறந்த எழுத்தாளனைக் கணவனாகவரித்துக்கொண்டதிலே புவனாவுக்குச் சொல்ல முடியாதபெருமை. ஆனால்…இன்று அந்தப் பெருமை யெல்லாம் வெறும் கானல் நீர்போல் வியர்த்தமாவதை என்ணும்போது அவள் பெண்ணுள்ளம் சலன மடையத்தான் செய்தது! 

இத்தனைக்கும் நடராசன் கூடாத குணமுள்ளவனல்லன். நல்ல சுபாபம் உள்ளவன். ஆனால் அவன் இதயத்தில், பெண்ணுள்ளத்தின் தவிப்பைப் புரிந்து கொள்ளக் கூடியசக்தியில்லவேயில்லை. அவன் வாழ்ந்த சூழ்நிலையும், அவனை இயந்திர மனிதனாக வாழவே உதவிசெய்தது. ஆசை மனைவி – அழகும், இளமையும் ததும்ப அவன் அணைப்பை – அன்பான வார்த்தைகளை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டு கிடக்கிறாளே என்று எண்ணித் தன் மனைவியுடன் இரண்டொரு அன்பான வார்த்தைகள் தானும் பேசுவதற்கு அவன் அறிவில் – அவன் வாழ்ந்த சூழ்நிலையில் இடமிருக்கவேயில்லை, இந்த நிலைமையில் புவனாவின் மனம் சலன மடைய ஆரம்பித்ததில் யாரும் தவறு சொல்லுதல் முடியவே முடியாது. இரவு பகல் இருபத்தி நாலு மணித்தியாலமும் பேனாவும் கையுமாக உட்கார்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு மனைவியாவதில் எந்தப் பெண் தான் இன்பமடைவாள்? 

ஒரு பிரபல தினசரிப் பத்திரிகைக்கு நடராசன் விசேட நிருபர். அத்துடன் அவன் கதைகள், கட்டுரைகளுக்காக எத்தனையோ பத்திரிகைக் காரியாலயங்களிலிருந்து கடிதங்கள் வந்து குவிந்துகொண்டிருக்கும். அத்தனைக்கும் கதைகளும், கட்டுரைகளும் எழுத வேண்டியது அவன் கடமை. எழுதிப் பிழைப்பவன் அல்லவா அவன்? சும்மா இருந்துவிட்டால் வாழ்க்கை வண்டி நகரமாட்டாதே! 

அடிமேலடி வைத்துப் புவனா நடராசன் பேனாவும் கையுமாக உட்கார்ந்திருக்குமிடம் வந்து சேர்ந்தாள். அவள் நெஞ்சு ‘பட்பட்’டென்று அடித்துக்கொண்டது. காலடி யோசை கேட்டு நடராசன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். சுண்ணாம்புக்கரண்டகம் போன்ற பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடிகாரம் அவன் கையை அலங்கரித்திருந்தது. மணி ஒன்றரை என்பதை ஒலித்துக் கொண்டிருந்தது. வெறுப்புப் போர்வை முகத்தில் திரையிட நடராசன் “என்ன வேண்டும் புவனா” என்று கேட்டான். 

“ஒன்றும் வேண்டியதில்லை. இப்படியிருந்து உடம்பை அலட்டிக்கொள்கிறீர்களே.”

“புவனா ஒரு முறை சொல்லிவிட்டேன்! பேசாமல் நீ உன் வேலையைப் பார்த்துக்கொள். என்னைக் கஷ்டப்படுத்தாதே, போ-போய்ப் பேசாமல் தூங்கு!” 

அதற்கு மேலும் அங்கு நின்று நடராசனின் கோபத்திற்குத் தூபம் போடப் புவனா தயாராயில்லை. பெண்மையின் சக்தியை விட்டுக்கொடுத்து வாய் திறந்து கேட்கவும் அவள் நாணினாள். அவள் ஒரு தமிழ்ப் பெண்ணல்லவா? பொங்கிவரும் கண்ணீரைப் புடைவைத் தலைப்பிற்குள் புதைத்துவிட்டுப் போய்ப் படுத்துக் கொண்டாள். ஆனால் நித்திரைதான் வந்தபாடில்லை. அவள் உள்ளத்தில் எண்ண அலைகள் ஒன்றன் மேலொன்றாக வந்து மோதின. கமலநாதனைப்பற்றிச் சிந்தனை செய்யக்கூடிய சந்தர்ப்பம் இப்பொழுதுதான் அவளுக்குக் கிடைத்தது. கமலநாதன் நடராசனின் அத்தியந்த நண்பன். அந்த மட்டில்தான் கமலநாதனைப்பற்றி புவனாவுக்கு அறிமுகம். ஆனால்…….! 

அவன் பேச்சும், பார்வையும் புவனாவுக்கு வேதனை யளித்தன. நடராசனைப் பார்ப்பதென்ற சாட்டில் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவன் தன்னைப் பார்த்துப் பல்லையிளிப்பதும் சைகை செய்வதும்… சீ, பண்பாடில்லாத மனிதன் அவன்! 

புவனாவின் மனம் கொந்தளித்தது. என்னதானிருந்தாலும் இவர் போக்கு ஒன்றுக்குமே உதவாது. அழகான மனைவி வீட்டிலிருக்கிறாள். – அதுவும் தனது அன்பணைப்பை எதிர்நோக்கியிருக்கிறாளென்று தெரிந் துமா இவருக்கு இவ்வளவு அசட்டை! கர்வம் பிடித்த மனிதர்தான். கமலநாதன் இவரிலும்பார்க்க இந்த விடயத்தில் எவ்வளவோ திறம்போல இருக்கிறதே. 

கட்டைப் பிரமச்சாரியாக இருக்கும்போதே இவ்வளவு ஆட்டம் போடுகிறவன், ஒருத்தியைக் கைப்பிடித்துவிட்டால்…… சதா அவளைச் சுற்றிக்கொண்டிருக்க மாட்டானா? நான் மட்டும் இவரைச் சுற்றிக் கொண்டிருக்க இவர் ஏனோ….? 

சிந்தனை ஓட்டத்தின் வேகத்தைச் சிறிது நிறுத்தி னாள் புவனா. என்னென்னவோ எண்ணங்களினால் அவள் மனம் குழம்பிக் கிடந்ததால் முகம் விகாரமாகக் காட்சி யளித்தது. ஆனால், கமலநாதன் மட்டும் புவனாவின் உள்ளத்தில் வேண்டியோ வேண்டாமலோ, ஒரு சிறு பகுதியைக் கைப்பற்றிவிட்டான். இனிமேல்…? 

அன்று நடந்த சம்பவம் புவனாவை மயிர்க்கூச் செறியச் செய்துவிட்டது. தன்சலன உள்ளம் எத்தகைய துரோகச் செயலுக்குத் தன்னை ஆளாக்கப் பார்த்தது என்பதை எண்ணி, அவள் மனம் பொருமினாள். 

கணவனின் நண்பன் என்பதற்காகக் கொஞ்சம். மனம்விட்டுப் பழகினால் இப்படியா தப்பர்த்தம் புரிந்து கொள்ளவேண்டும்? இத்தகைய நவநாகரிக வாலிபர்களினாலேதான் இன்றைய பெண்ணுலகம் களங்கமடைகிறது. 

சிறிது சிரித்துப் பேசிய உடனேயே “கற்கண்டே, என் தேனே, காதல் இரசமே” என்று வருணித்துப்பெண்களின் கற்பைச் சூறையாட முயற்சிக்கும் காமுகர்களை என்னவென்று கூறுவது? 

புவனாவின் உள்ளம் நாகபாம்பைப்போலச் சீறியது! 

நடராசன் அப்பொழுது வீட்டிலில்லை. எங்கோ எந்தப் பிரமுகரையோ பேட்டி காணப் போயிருந்தான். வழக்கம்போல நடராசன் வீட்டிற்கு வந்த கமலநாதனைப் புவனா வரவேற்றாள். சேமலாபங்களை விசாரித்து வழக்கத்தைவிட கொஞ்சம் குதூகலமாகவே சிரித்துக் கதைத்தாள். 

பருவ நினைப்பால் துடிக்கிறவர்களுக்கு பிறருடன் கதைப்பதுகூட ஆற்றுப்படையாக அமைகிறது போலும்! 

கமலநாதனுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. நாலு வார்த்தைகூட வழக்கமாகப் பேசாத புவனா மணிக் கணக்கில் தன்னுடன் பேசுவதென்றால்…! 

அவனுள்ளம் ஆனந்த நர்த்தனத்தில் திளைத்தது. தான் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து புவனாவைத் தன்னிருகைகளாலும் வாரி அணைக்கப் போனான். அவன் முன்னம் இந்த உலகமே சுழன்று கொண்டிருந்தது. கால்கள் நிலத்தில் பாவவில்லை மின்னல் மின்னியது. ஆகாயத்தில் எங்கோ பறப்பது போன்ற உணர்ச்சியை அவன் அனுபவித்துக்கொண் டிருந்தான்! 

‘படா’ரென்ற சப்தத்துடன் கன்னத்தில் விழுந்த அடியினால் கமலநாதன் நீட்டிய கைகளையெடுத்துக் தடவிக்கொண்டான். அவன் முன்னம் இந்த உலகம் மீண்டும் அசுர வேகத்தில் சுழன்றது! 

கன்னத்தைத் தடவிக்கொண்டான். 

“என்னை யாரென்றடா நினைத்தாய், அயோக்கிய நாயே!” 

புவனா கண்ணகி போலக் கர்ச்சித்தாள். வாயில் விழுவதற்குத் தேன் சொட்டுத் தயாராகத் தேங்கிநிற்கும் போது  வேப்பங்காயை வலியவெடுத்து வாயிற் போட்டு மென்றுகொண்டவன் போலக் கமலநாதன் மூச்சும் விடாமல் வேகமாக வெளியேறினான்! தவறுக் கேற்ற தண்டனையை அடைபவர்கள் என்னதான் பேச முடியும்? 

நடராசனைக் கண்டதும் புவனா அவன் கால்களைக் கட்டிக்கொண்டழுதாள். தனது சலன உள்ளம் எத்தகைய தப்பிதத்தைப் புரியத் துணிந்திருந்தது என்பதை நினைக்கும் போது அவளிதயம் வெடித்துவிடும் போலவிருந்தது. 

விடயம் புரியாத நடராசன் “வெல வெல” த்துப் போய் நின்றான். 

அழுகையின் மத்தியில் தான் புரியவிருந்த தப்பிதத்தை நடராசனிடம் கூறினாள் புவனா. 

நடராசனுக்கு அறிவு துளிர்விட்டது.

பிறகு….! 

புவனா என்றுமே நடராசன்மேற் குறைப்படா வண்ணம் அவன் கவனித்துக் கொண்டான்! 

– வாழ்வு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).

நாவேந்தன் நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *