கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2025
பார்வையிட்டோர்: 963 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஒரு முறை வீட்டுப் பக்கம் வந்து போகவும்…; 

அம்மாதான் எழுதியிருந்தாள். நேரான, குண்டு குண்டான எழுத்துக்கள். கடிதத்தில் அம்மாவையே அவன் கண்டான். உணர்ச்சி வசப்படுவதும் படபடப்பதும் அவளது இயல்பு. அது கடிதத்திலும் தெரிந்தது. 

அவன் படிப்பு முடிந்த கையுடன் பட்டணத்திலுள்ள, பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தான். விடுதி வாழ்க்கை, வார இறுதி நாட்களில் மட்டும் வீடுபோய் வருவதுண்டு. இம்முறை சற்று முன்னதாகவே வீட்டுக்குப் புறப்பட்டான். 

பஸ்ஸில் இருந்து அவன் அரசடியில் இறங்கிய பொழுது, அம்மா அவனைக் கண்டு, புதறன் மேடுவரை வந்து விட்டாள். கூடவே தங்கை தர்ஷினியும், தம்பி ரவியும் வந்தார்கள். 

அம்மா இவனை நெருங்கியதும் விசும்பினாள். அவள் அதிகமாகவே அழுதிருக்க வேண்டும். அவளது கண்மடல்கள் வீங்கிச் சிவந்து கிடந்தன. முகம் வெப்பியாரத்தில் வெதும்பி உலர்ந்து கிடந்தது. 

அம்மா, அவனை ஆதரவாக அணைத்தபடி நடந்தாள். அவன் தங்கையைப் பார்த்தான். அவளது முகமும் இறுகி உறைந்து போய்க் கிடந்தது. 

அவள் ரீச்சர் றெயினிங் முடித்து, வேலையை எதிர்பார்த்திருக்கிறாள். இந்து போர்ட் பாடசாலையொன்றில் வேலை எடுப்பதற்கு, மாமா ஓடித்திரிவது இவனுக்குத் தெரியும். 

தம்பி ரவி, இவனது கைப்பையை வாங்கிக் கொண்டான். பையைத் தூக்க முடியாமல் சிரமப்பட்டபடி, அவன் இவர்களுக்கு முன்னால் நடந்தான். 

தலைவாசலை அடைந்தததும் இவன்தான் முதலில் பேசினான்:

“ஏன் கடிதம் எழுதினனி…?” 

“மூடு மந்திரம் எதுக்கு, அண்ணனுக்குத் தெரியத்தானே வேணும்… கடிதம் போட்டுக் கூப்பிட்டனி சொல்லன்..” 

தர்ஷினியின் சிடுசிடுப்பு அவனுக்கு வியப்பாக இருந்தது. ‘எப்பொழுதுமே அதிர்ந்து பேசத் தெரியாத அவளிடமிருந்தா இந்த வெடிப்பு…’ 

“சடங்கு செய்யிற வயசிலை குமரொண்டை வச்சுக் கொண்டு உங்க ஐயா அடிக்கிற கூத்து… அப்பப்பா… சொல்லி மாளாது ராசா… 

தர்ஷினி இங்கிதம் தெரிந்து, எழுந்து உள்ளே போனாள். 

“என்னம்மா….? சொல்லன்…” 

“சோமற்றை பொடிச்சி..அதுதான், சதாசிவத்தின்ரை பெண்டில் சுகிர்தம்… தாலியறுத்துப்போட்டுத் தனிச்சு வீட்டோடை கிடக்கிறாளல்ல… அமர் பிடிச்ச அவளோடை இவருக்கு… இவருக்கு..” 

அம்மாவுக்கு மேலே எதுவும் சொல்ல முடியவில்லை. அவள் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டாள். 

அவனுக்கு எல்லாமே விளங்கியது. 

‘சுகிர்தம் -சதாசிவத்தார் பாம்பு கடிச்சு அகாலத்திலை போன பின்னர் – தனியாகத்தானிருக்கிறாள். சீதன பாதனமென்று அவளுக்கு ஏகப்பட்ட சொத்து. நிலபுலங்களை மேற்பார்வை செய்வதற்கு ஐயாவின் உதவியை நாடியவள்… ஐயாவையே..! 

அவனால் அதை நம்ப முடியவில்லை. 

அம்மா இவனை இழுத்து வைத்துக் கொண்டு, விஸ்தாரமாக அந்த விவஸ்தை கெட்ட கதையைச் சொன்னாள்: 

“ராசா, சதாசிவம் மோசம் போனகையோடை… அங்கை, அவளிட்டை உதவி ஒத்தாசை எண்டுபோன மனிசனுக்கு… மருந்து போட்டாளே… இல்லை மாயம் செய்தாளோ எனக்குத் தெரியாது.. அவளே கதியெண்டு இவர் இப்ப கிடக்கிறார். வெள்ளையும் சள்ளையுமா இருந்திட்டா முறை தவறி, தறிகெட்டுப் போக வேணுமா என்ன..? ஊருகலத்துக்குப் பயப்பிட வேண்டாமா…? அதுசரி, அவள் வெறிபிடிச்சு ஆடேக்கை… பாவம்… இவர் உங்க ஐயா என்ன செய்யேலும்…. இந்தக் கள்ளம் முழுசா உடைஞ்சதே ஒரு கிழமைக்கு முந்தித்தான் தம்பி…” 

“இரவு கோழிக் கூட்டுப்பக்கம் ஏதோ அரவங் கேட்டுது… திடுக்கிட்டு முழிச்சுப் பாத்தா, படுக்கையிலை உங்க ஐயாவைக் காணேல்லை.. பதகளிப்போடை வெளியே வந்து பார்த்தா… ஐயா, சுகிர்தம் வீட்டுப் படலையை திறந்தபடி வாறார்… நான் வளைச்சுப் பிடிச்சு விசாரிச்சா…. ‘அவளின்ரை போயிலை தலைக்காச்சல்…. அதுதான் போறணைப் பக்கம் போயிட்டு வாறன்’ எண்டு மழுப்பினார். என்னாலை நம்ப முடியேல்லை… இந்த மானக்கேட்டை நினைச்சுக் கத்தேலுமா, கதறேலுமா..? அப்படியே உக்கி உறைஞ்சு போனனடி..”. 

‘அம்மா கத்தாமல், கதறாமல் இருந்திருப்பாளா…? சின்னச் சின்ன விஷயங்களுக்கே, ஊரைக் கூட்டி ஒப்பாரிவைப்பவள், இது விஷயத்தில் மௌனமாக இருந்திருப்பாளா?’ 

அவனால் நம்ப முடியவில்லை. 

“இவற்றை கூட்டாளி இராமலிங்க மாமாட்டைதான் முதலிலை போனன். வெம்பி வெதும்பிச் சொன்னதையெல்லாம் கேட்ட மனிசன், உங்க ஐயாவுக்குப் புத்தி சொல்லுவாரெண்டு பார்த்தா, அவர் எனக்குப் புத்திசொல்லிறார். ‘விஷயத்தைக் கொட்டிச் சிந்தாதை பிள்ளை… அவன்ரை மதிப்பு, மரியாதையைக் குலைக்கிறதெண்டு நாண்டு கொண்டு நிக்கிறை போலை… அது சரி, உன்ரை கடைக்குட்டி ரவி பிறந்த பிறகு, அவன் உன்னைத் தொட்டிருக்கிறானா? தொடத்தான் நீ விட்டனியே..? குடும்பம் எண்டா அப்பிடி இப்பிடி அனுசரிச்சுத் தானே போகவேணும்… நாம்பனுக்கு இடக்குப் பண்ணிற பயிநாகு மாதிரி நீயும் உன்ரை கூத்தும்…” 

“அந்தக் கிழடு விசர்த்தனமா ஏதேதோ கதைக்குது. என்ரை பிள்ளைக்கு கூச்சநாச்சத்தை விட்டு எல்லாத்தையும் சொல்ல வேண்டியிருக்கு.” 

அம்மாவுக்கு வெக்கத்தில் முகம் சிவத்து விடுகிறது. மேலும் பேச அவளால் முடியவில்லை. முகத்தை அழுத்தமாகத் துடைத்தபடி எழுந்து கொண்டாள். 

இராமலிங்க மாமா அம்மாவுக்குக் கூறியது இவனுக்கு விசர்த்தனமாகப் படவில்லை. அந்தப் பேச்சின் ஒளியில் இவனுக்குச் சிலது விளங்கவே செய்தது. 

‘ரவி பிறந்தபோது ஐயாவுக்கும் அம்மாவுக்கும் எத்தனை வயதிருக்கும்? அம்மாவுக்கு முப்பத்தி மூன்று வயது ஐயாவுக்கு முப்பத்தாறுவயது. வாழ்வின் ஆதாரமான ஜீவ ஊற்றின் லலித லகரியே அடைபடுவதென்றால், ஐயாவால் என்ன செய்ய முடியும்…? சுலபமாகவே சுகிர்தம் அன்ரியின் பக்கம் அவர் சாய்ந்து விட்டார். அவளது இளமையும் குலுங்கும் அழகும் ஐயாவை வசீகரித்தில் வியப்பேதுமில்லைத்தான். ஆனால் அம்மா..! அவள் பாவம். அந்தக் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவளுக்கு இனியும் இந்தக் கூத்தெல்லாம் வேணுமா…? வேண்டாமே என்று இருந்திருக்கலாம். இது விஷயத்தில் ஒரு ஒதுக்கமும், இறுக்கமும் இயல்பாகவே அவளுக்கு ஆகிவந்திருக்கக் கூடும். அவள் வாழ்ந்த மண் கற்றுத் தந்த வழியில், ஒரு கட்டுப் பாட்டையும் தனக்கேயான வரன் முறையையும் அவள் ஏற்படுத்திக் கொண்டு விட்டாள் போலும்’ 

அவனுக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது. 

‘அம்மாவின் மனம் தேறுதல் அடையுமா? எரி மலையாய்க் குமையும் அவள் சாந்த மடைய வேண்டும்’ 

ஐயா புலவரின் மகன். அவரே ஒரு புலவர். தமிழின் தரமறிந்து கற்றவர். கலாரசிகர். அவரது ஆளுமையின் விகசிப்பால் தானே அவரது நண்பர்கள் அவர்பால் – தேனில் சிறகளைந்த வண்டுகளாகக் கிறங்கிக் கிடக்கிறார்கள். 

‘அவருக்கு….அவர் பெருமை குலைய… இப்படி ஒரு அவப் பெயரா..? அந்த நல்ல மனிதர் இந்தச் சரிவிலிருந்து, பலவீனத்திலிருந்து நிமிர முடியுமா…?” 

இத்தனைக்கும் காரணமாய் விட்ட ஐயாவின் பால் அவனுக்கு எதுவிதமான எதிர்ப்புணர்வும் ஏற்படவில்லை. அனுதாபந்தான் ஏற்பட்டது. அது அவனுக்கு வியப்பாக இருந்தது. 

குளித்துச் சாப்பிட்டதும் இராமலிங்க மாமாவிடம் தான் முதலில் போவதற்கு எண்ணினான். பின்னர் மனதை மாற்றிக் கொண்டவனாய், ஐயாவைப் பார்ப்பதற்கு அஞ்ஞாத் தோட்டம் வரை போய் வரலாமென நினைத்துக் கொண்டான். 

புதறனில் இறங்கி நடந்தபோது, முற்றி விழைந்த எள்ளின் மணம் அவனது நாசியில் முட்டி மோதி, நெஞ்சை நிறைத்தது. 

தூரத்தில் துரை வந்து கொண்டிருந்தார். 

“ஊருக்கை தலை நிமிரமுடியாம மானம் போகுது ராசா… உங்க ஐயா என்ன குழந்தையா… ஊருக்கெல்லாம் புத்தி சொல்லிற மனிசன்… இப்படி……” 

துரையருடன் எதுவும் கதை வைத்துக் கொள்ளாமல் விலகி, விரைந்து நடந்தான். 

கொட்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த நாகமுத்தப்பா இவனை மறித்து: 

“பெண்டு பிள்ளையள் வாழிற இடத்திலை கவனமா எல்லா நடக்கவேணும். ஊரிலை ஆர நம்பிறது… ஆரநம்பாமலிருக்கிறதெண்டு எனக்குத் தெரியேல்லை அப்பு..” 

வரகு தோட்டப் பக்கம்நின்ற திருநாவு கீழ்க்கண்பார்வையில் ஏதோ சாடைகாட்டிக் கேலியாகச் சிரிப்பது போல இருந்தது. 

பெரிய பனந்தோட்டத்துச் சரிவில் இராமலிங்க மாமா. 

“உங்க ஐயாட்டை எல்லாம் சொல்லீற்றன். தம்பி….. அவன் இனிமேல் பிழைகிழை விடமாட்டான். போ.. போய் உவள் விசரி. உங்க அம்மா பாக்கியத்திட்டை சொல்லு… இனியும் ஒப்பாரி வைச்சு ஊரைக் கூட்ட வேண்டாமெண்டு” 

அவனுக்கு அவரது வார்த்தைகள் ஆறுதல் தருவதாய் இருந்தன. . ‘ஊரெல்லாம் அம்மாதான் தம்பட்டம் அடித்தாளா…? இருக்காது… உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியுமா என்ன? 

நினைவுகள் பாரமாய் அழுத்த, தோட்டக் காட்டில் ஏறி நடந்தான். 

தோட்டத்தின் வடகீழ் மூலையில் நின்ற காய் முருங்கை, பூவும் பிஞ்சுமாய் – பாரம் தாங்காது நிறை சூலியாய் நின்றது. பூக்களைப் பறித்து முகர்ந்த படி இவன் நடந்தான். 

தோட்டத்தின் தெற்குத் துண்டில், புகையிலைக் கன்றுகளுக்குத் தலைக்கணு உடைத்தபடி ஐயா. இவனைக் கண்டதும் நெருங்கி வந்து கேட்டார்: 

“தம்பி எப்ப வந்தது..?”

“இப்ப தான் ஐயா…” 

உதடுகள் லேசாகப் பிரிய, புகையிலைக் காவி படிந்த சிறியதான அந்த வேட்டைப்பற்கள் தெரிய, ஐயா நெகிழ்ந்து சிரித்தார். 

ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாத, நெஞ்சை வருடும் அந்தச் சிரிப்பின் இதத்தில் – இறுக்கம் குலைய, பரவசத்துடன் அவரைப் பார்த்தான். “உந்த விசரி உங்கம்மா பாட்டம் பாட்டமாய் அழுதிருப் பாளே… பட்டும் படாத ஒரு வாழ்க்கை அது…. தெய்வ சங்கற்பமாகக் கூட இருக்கலாம். பூர்வஜென்ம பந்தமெண்டு கூடச் சொல்லலாம்… சுகிர்தத்தின்ரை வீட்டுப்பக்கம் நான் இப்ப போறேல்லை… முகத்தாற்றை பொடியன் சிவலிங்கம்தான் இப்ப அவளுக்கு உதவி ஒத்தாசை எல்லாம்…” 

ஐயா தனது முறை தவறிய காமத்துக்குப் புதிய அர்த்தமும் ஆழமும் தேடுகிறாரா..? ஐயாவின் குரலில் இழைந்தது ஆதங்கமா…? கையாலாகத்தனமா..? அல்லது குரோதமா…? சுகிர்தம் அன்ரியின் புதுச் சிநேகிதம் அவருக்கு எப்படிப் பிடித்தமானதாயிருக்க முடியும். முடியாதுதான். 

எதுவாயிருந்தால் என்ன, ஐயா அந்தச் சிடுக்கிலிருந்து விலகி வந்து விட்டதாகவே அவனுக்குத் தோன்றியது. அதுவே போதுமானதாயும் இருந்தது. 

சுகிர்தம் அன்ரியை நினைத்ததும் அவனுக்குப் பாவமாக இருந்தது. இளமையிலேயே கணவனைப் பறிகொடுத்த அவள் அடங்கி, உள்ளில் உக்கி, குமுறிக் குலைந்து போகாமல் – இயல்பாக நடந்து கொள்வதாகவே அவனுக்குப் பட்டது. சமூகக் கூச்சங்களுக்கு வளைந்து கொடுக்காத அவளது அந்தப் போக்கு, புரிந்து கொள்ளக் கூடியதாகவும் பிடித்தமானதாகவும் அவனுக்கு இருந்தது. அதே சமயம் ‘இப்படி ஒரு வாழ்க்கை அவளுக்கு ஆகியிருக்க வேண்டாமே…’ என்று மனம் அடித்துக் கொள்ளவும் செய்தது. 

ஐயாவை நெருங்கி வாஞ்சையுடன் அவரது கரங்களைத் தனது கைகளில் ஏந்திக் கொண்டான். 

ஐயா கலக்கமுற்றவராய் அவனைப் பார்த்தார். அவரது கண்களில் கண்ணீர். 

ஐயா அழுது அவன் முன்னர் எப்பொழுதுமே பார்த்ததில்லை. 

– மல்லிகை, ஜூலை 2002.

க.சட்டநாதன் க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார். இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் 'வீரகேசரி' இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *