கோகிலாவும் கோணல் வகிடும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2025
பார்வையிட்டோர்: 1,518 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 

இருளின் கூர்மை அவளின் குமைச்சல்களை கீறி வடுவாக்கி ஆழம் பார்த்துக் கொண்டிருந்தது. கூடவே உழைப்பின் அசதியும் சேர்ந்துக் கொண்டதால் புரண்டுப் படுத்தாள் கோகிலா. 

உலையும் இடுப்பை ஒரு கையால் வருடி விட்டப்படியே நினைவுகளை தொலை தூரத்தில் அலைய விட்டு வெறும் கூடாய் பாயில் கிடந்தாள். 

வழமை போலவே கிழவி “ஏண்டி இந்த மாசம் குளிச்ச இல்ல” என்று சட்டென கேட்டதும் தடுமாறிப் போனவள் தலையை மட்டும் ஆட்டி விட்டு திரும்பி படுத்தப் போது கண்களில் நிரம்பியிருந்த நீர் கன்னத்தின் வழியொழுகியது. 

உள்ளங்கையில் கிடந்த குழுசைகளை கையை விரித்து பார்ப்பதும் பின்னர் எதையோ நினைத்து அழுவதுமாய் இருந்தாள். 

யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள முடியாமல் விழுந்திருக்கும் இடி அவளை நிலை குலையச் செய்திருந்தது. 

ஆறு நாட்களும் ஓடியோடி உழைத்து வருந்தும் உடலுக்கு சனிக்கிழமை மட்டும்தான் விடுமுறை அன்று மட்டும் அடித்துப் போட்டது போலத் துாங்குவாள். பத்து மணியென்றாலும் இன்னும் கொஞ்சம் நேரம் துாங்கலாமே என்றுத் தோன்றும். தூக்கம் அழுத்துப் போகும் வரை துாங்கி விட்டு எழுந்து காட்டுப் பீலிக்கு குளிக்கச் சென்றாள் அதிலேயே அரை நாள் ஓடி விடும். 

ஆனால் அன்று உடல் அசதியோடு மனமும் சோர்ந்துப் போனதால் நேரம் பத்து மணியை தாண்டியிருந்தப் போதும் எழுந்திருக்கத் தோன்றவில்லை. கால்களை விரித்து நீட்டி போர்வைக்குள் மல்லாந்துக் கிடந்தவள் சோம்பல் முறிப்பதற்கு கைகளை உதறித் தள்ளியப் போதுதான் தேநீர் கோப்பையில் ஆறிக்கிடந்த சாயம் கொட்டிக் கவிழ்ந்தது. 

பள்ளத்தை நோக்கி ஓடிய சாயம் நெழிந்து வளைந்தோடி ஓரிடத்தில் தேங்கியது. குப்புறப்படுத்து தலையணையில் தலையை சாய்த்து கொட்டிக் கவிழ்ந்த தேயிலை சாயத்தை வெறித்துப் பார்க்கத் தொடங்கினாள் கோகிலா. 

அழுதோய்ந்தாலும் மீண்டும் பெறமுடியாத காலம் அவள் மனக்கண்ணில் நிழலாடத் தொடங்கியது. 

“படிப்புத்தான் மண்டையில ஏறல போற எடத்துல சரி புத்தியா பொழச்சிக்க” 

“இந்த காலத்து புள்ளைங்க எள்ளுனா எண்ணெய்யா நிக்குதுங்க”. 

“போற எடத்துல பொசுக்கு பொசுக்குனு கோவப்படாத” 

“பொழைக்க போனா வாய் கைய அடக்கிகிட்டுதான் போவனும்” 

என்று இடுப்புக்கட்டிப் படங்கை கட்டிக்கொண்டே வாயோயாமல் பேசிக்கொண்டிருந்தாள் கிழவி. 

இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தலையின் முன்முடியை கொத்தாக எடுத்து ஒரு பக்கம் சரித்து வகிடு பிரிப்பதில் ஆர்வமாய் இருந்தாள் கோகிலா. அகலமான நெற்றிக்கு சைட் வாக்கு எடுத்து சீவினால் தான் நன்றாக இருக்மென்று யாரோ விதைத்த விதை அவள் மனதில் ஆழமாய் வேரூன்றி இருந்தது. 

“கோண வாக்கு எடுத்து சீவாத சீவாதணு தலப்பாடா அடிச்சிக்கிறேன் நீ கேக்கிற மாறி இல்ல நீதான் நெஞ்சுல மயிரு மொளச்சவளாச்சே எக் கேடு கெட்டாவது போ கோண வாக்கு மாதிரி வாழ்க்கையும் கோணலா போகாம இருந்தா சரித்தான்’ என்றவாறே கூடையை தலையில் மாட்டிக்கொண்டு மலைக்கு கிளம்பினாள் கிழவி. 

வாரி பின்னியிருந்த கனத்த சடை இடுப்புவரை சரிந்து கிடந்தது. முதுகைத் திருப்பி கண்ணாடியில் ஒருமுறை பார்த்து விட்டு கண்களை சிமிட்டி குவித்து சேட்டை காட்டி உள்ளுக்குள் பூத்துக் கிடக்கும் சந்தோசங்களோடு பயணமானாள் கோகிலா. 

இரண்டு மாதமாய் அட்டனில் உள்ள சந்து பொந்தெல்லாம் தேடியலைந்து கிடைத்த வேலை என்பதால் வேலை தேடிக்கொள்வது குதிரைக் கொம்பென்பது அவளுக்கு நன்றாக புரிந்திருந்தது. கணக்கு பாடம் மண்டையில் ஏறாமல் போனதால் படிப்பை இடையில் கைகழுவி விட்டு வேலை தேடத் தொடங்கியவளுக்கு இப்போதுதான் அது கைகூடியிருந்தது. அதனால் அரக்க பரக்க பயணப்பட்டு மந்தி தோட்டத்தில் இருந்து நடந்து கன்னியப்புக்கு பஸ்சைப் பிடிப்பதற்கு வந்திருந்தப்போது நேரம் 7.30 ஆகியிருந்தது. 

“அடடே இப்பத்தாம்மா பஸ் போச்சி கொஞ்சம் முன்னுக்கு வந்திருக்கக் கூடாதா?” என்று வழியில் ஒருவர் கூறக்கேட்டு மனஞ்சோர்ந்து நின்றவளுக்கு கடவுளே நேரில் வந்தது போல தன் காலடியில் வந்து நின்றது அந்த ஆட்டோ “ஹட்டனுக்குத்தான் போறேன் வாரீங்களா?” என்றதும் ஒரு நிமிடம் தாமதியாமல் ஆட்டோவில் ஏறி அமர்ந்தவள் நீண்ட பெருமூச்சொன்றை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். காற்றை கிழித்துப் பயணிக்கும் ஆட்டோ முழுவதும் கன்னியப்பு காற்று நிரம்பியிருந்தது. 

“இன்னைக்குத்தான் மொதமொதல்ல வேல கெடச்சி போறேன் நல்ல நேரத்துல வந்து சேந்தீங்க ரொம்ப தேங்ஸ் அண்ணே’ என்றதும் பதிலுக்கு அவரும் எங்கம்மா வேல கெடச்சிருக்கு? என்கிறார். டவுன்ல உள்ள மங்கை பென்சி கடையிலத்தான் வேல கெடச்சிருக்கு” “அடடே நல்ல எடம்மாச்சே மொதலாளியும் தங்கமான மனுசன்” “அந்த மாதிரி எடத்துல வேல செய்ய குடுத்து வச்சிருக்கணும்.” என்று அவர் கூறிய வார்த்தைகள் அவளை இன்னும் உட்சாகமூட்டியது. 

ஆட்டோவின் சைட் கண்ணாடியில் பட்டுத்தெறிக்கும் அவளின் விம்பம் வழமைக்கு மாறாக பொலிவுற்றிருந்ததை ரசித்தவாறே பயணித்தாள். 

ஆட்டோ ஹட்டனை நெருங்க நெருங்க மனசு கிடந்து அடித்தது உள்ளுக்குள் புதுமையான ஒரு பரபரப்பு படர்ந்திருந்தது. 

ஹட்டன் பஸ்டேன்டின் நுழைவாயில் போல சடைத்து நிற்கும் அரசமரத்தடியில் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து குதித்திறங்கி மீண்டுமொருமுறை அவருக்கு நன்றி கூறி மெயின் வீதியில் நடக்கத் தொடங்கினாள் கோகிலா. 

ஏத்தனையோ தடவை வந்துப் போன இடமானாலும் அன்று மட்டும் எல்லோரும் தன்னையே வெறித்துப் பார்ப்பது போல அவளுக்கு தோன்றியது. ஆனால் அது கூட சந்தோசமாகத்தான் இருந்தது. 

நேரம் காலை 8.10 

மிக பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கும் கடைவாசலில் கால் வைத்தப் போது கால்கள் கூசின. மெதுவாய் நாக்கு வரள கடையினுள் வந்தவளை ”நீதான் புதுசா வேலைக்கு வந்தியா?” வா அந்த ரூம்ல கொண்டு போய் பேக்க வச்சிட்டு வந்து வாசலுக்கு நாலு வாளி தண்ணி ஊத்திக் கழுவு. என்று கொஞ்சம் கண்டிப்பாய் கூறினார் நாற்பது வயது மதிக்கத்தக்க மனேஜர். 

தண்ணீரில் மஞ்சலை கரைத்து வாசலை கழுவி கால் கையை அலம்பி மாலையை கடவுளுக்கு சாத்தி சிரட்டையை சிறிது சிறிதாக உடைத்து எரித்து கணகணத்த நெருப்பினுள் சாம்பிராணியைக் கொட்டிய மாத்திரத்தில் கடையெங்கும் புகை மண்டி வாசனை நிரம்பியது. 

எல்லா பக்கங்களிலும் ஒளிரும் மின்குமிழ்களை வட்டமடிக்கும் சாம்பிராணி புகை கடைக்கு இன்னும் அழகு சேர்த்திருந்தது. 

நேரம் காலை 9.00 மணி 

அத்தனை நேரம் வெறிச்சோடிக்கிடந்த வீதிகளில் மக்கள் கூட்டம் வெள்ளமென திரளத்தொடங்கியிருந்தனர். 

எல்லா பக்கங்களிலும் ஒளியூட்டப்பட்டிருந்த விளக்குகள் தன்னை இன்னும் அழகாய் காட்டுவதாய் உணர்ந்தாள் கோகிலா. திரும்பும் பக்கமெல்லாம் பட்டுத்தெறிக்கும் தன் விம்பத்தை காதில் கிடக்கும் சில்வர் தோடும் கழுத்தில் கிடக்கும் காசிக்கயிறும் அவமானப்படுத்துவதாகத் தோன்றியது. 

கண்ணாடி சோக்கேசுகளில் அடுக்கடுக்காய் கிடக்கும் தோடுகளும் கழுத்து மாலைகளும் அவள் கனவுகளுக்கு உயிரூட்டத் தொடங்கியிருந்தன. திரும்பும் பக்கமெல்லாம் மின்னும் பென்சி ஐட்டங்களைக் கண்டு மளைத்து போய் நின்று விட்டாள். வாடிக்கையாளருக்கு ஒவ்வொன்றாய் எடுத்துக் காட்டி எடுத்துக் காட்டி களைத்துப்போயிருந்ததால் முகத்தில் பூசியிருந்த பவுடர் கரைந்து ஒழுகியிருந்தது. 

நேரம் 10.00 மணி 

புதிதாய் வேலைக்கு வரும் ஆர்வத்தில் சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு வந்திருந்ததால் வயிறு கத்தி இரையத் தொடங்கியிருந்தது. காலையில் பார்த்து பார்த்து வகிடெடுத்திருந்த முடியும் கலைந்துப் போயிருந்தது. விரைவில் களைத்துப் போனவளுக்கு கடையில் கொடுத்த பிளேன்டீ புத்துணர்ச்சி பானமானது. 

வளையல் என்றும் நெக்லஸ் என்றும் தேடுதல் வேட்டையில் இறங்கி விடும் பெண்களின் கூட்டம் கடையை எப்போதும் கலகலப்பாய் வைத்திருந்தனர். எத்தனை வடிவங்கள் எத்தனை நிறங்கள் எல்லாவற்றையும் கண்டு விக்கித்து நின்றபோதுதான் நெற்றியில் திருநீறும் சந்தனமும் மணக்க கோயில் காளாஞ்சியுடன் சென்ட் வாசனை கமகமக்க கடையினுள் பிரசன்னமானார் முதலாளி. 

வளையல் கவுண்டரில் நின்றிருந்த அவளை பார்த்து இலேசாய் ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்துப்போன முதலாளியின் பார்வை கடவுளின் அனுகிரகம் கிட்டினாற் போல இருந்ததோ என்னவோ வெட்கத்தால் அவளின் முகம் விகட்சித்து விட்டது. 

வேலையில் தீவிரமாய் இருந்தாலும் இடையிடையே முதலாளியை நோட்டமிடவும் தவறவில்லை. அவர் தன்னை நோட்டமிடுகிறார் என்றுணரும் போதெல்லாம் ஓடியோடி தன்னுழைப்பை காட்டும் கோகிலா அவரிடம் நல்ல பெயர் எடுத்துவிட வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருந்தாள். 

“கடை முதலாளிமார்களை கடவுளின் பிரதிநிதிகள்” என்று அம்மா சொல்வது உண்மையாகத்தான் இருக்குமோ என்று எண்ணத் தோன்றியது. “நம்ம தோட்டம் முழுவதும் தேடினாலும் தங்கத் தகடு போல ஜொலிக்கும் இவரப் போல ஒரு ஆம்பிள்ளையை பார்க்க முடியுமா?” “அப்பிடி என்னாத்தான் சாப்பிடுறாங்களோ?” என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள் கோகிலா. 

ஆறு மணி கொரங்கு மல பஸ்ச புடிச்சாலும் வீட்டுக்கு ஏழரை மணிக்கு போய் சேர்ந்திடலாம் பஸ்ச புடிச்சிடுவமா? என்றெல்லாம் அசை போட்டுக் கொண்டே நேரத்தை பார்ப்பதும் தலையை சொறிவதுமாய் இருந்தாள் கோகிலா. 

நேரம் கரைய கரைய மனசு தகிக்கத் தொடங்கியது. 

நேரம் 5.50 ஆகியப்போது பஸ் காசை வாங்கிய மாத்திரத்தில் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தவளுக்கு பஸ்சை காணும் வரை உடலில் உயிர் இருக்கவில்லை. 

3 

கொஞ்சம் இருட்டுப் பட்டால் போதும் மந்தி தோட்ட பாதையில் பன்றிகளின் நடமாட்டம் தொடங்கி விடும். உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டிவரும். என்பதெல்லாம் நாளடைவில் அவளுக்கு பழகி போயிருந்தது. 

மந்தி தோட்டமே உலகம் என்றிருந்தவளுக்கு சில மாதங்களிலே ஹட்டன் புதியதொரு உலகத்தை காட்டியது. கடைத் தெருக்களில் கோணவாக்கு கோகிலாவை தெரியாதவர்கள் யாருமில்லை என்றாகியிருந்தது. 

நாளடைவில் இருட்டும் பஸ்சைப்பிடிக்கும் பதற்றமும் பழகிப்போயிருந்தது. ஏழு எட்டு மணியானாலும் சாவகாசமாய் கடையை சாத்திவிட்டு வீதியில் இறங்கினாள் போதும் ஆட்டோகாரர்களுக்கு மூக்கு வியர்த்துவிடும். அவளின் சவாரியை பிடிப்பதற்கு அவர்களுக்கிடையில் பெரிய பிரளயமே நடந்து விடும். எவ்வளவு கேட்டாலும் படியளக்க முதலாளி தயாராய் இருப்பதால் அவர்களுக்கு பிரச்சினை இருக்காது. 

ஏமம் சாமம் பாராமல் வீட்டுக்கு வந்து போனவளின் நடத்தை மாற்றம் கிழவியின் வயிற்றில் புளியை கரைத்தது. அன்று நேரம் பதினொரு மணியை தாண்டியிருந்தது. குப்பிவிளக்கின் மினுக்கு வெளிச்சத்தில் குறுகுறுவென விளித்துக்கிடந்தாள் கிழவி. ஊரடங்கி கிடந்தாலும் நரிகளின் ஊளையும் ஊமை கொட்டான்களின் அனத்தலும் அடங்கியிருக்கவில்லை. 

அப்போதுதான் லயக்கோடியில் கிறீச்சென வந்து நின்ற ஆட்டோவை விட்டு பூனையென இறங்கினாள் கோகிலா. கிழவிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு தெம்பு வந்தததோ தெரியாது படாரென கதவை திறந்துக் கொண்டு புலி போல பாய்ந்து கோகிலாவின் தலை மயிரை கொத்தாக பிடித்திழுத்து அடிக்கத்தொடங்கியதும் ஆட்டோகாரனோ திகைத்தோடி மறைந்தான். 

“ஏன்டி கேக்க பாக்க ஆளில்லனு தானே இப்பிடி மேஞ்சிட்டு வாற”

“என்னா சம்பாதிக்கிற திமிறா?” 

“கூழ குடிச்சாலும் மானம் முக்கியன்டி மானத்த வித்துட்டு வாழுவியா?” 

“நீ நாளையில இருந்து எப்பிடி வேலக்கி போறனு நானும் பாக்கிறேன்” 

“இங்கப்பாருடி வாயமூடிக்கிட்டு அடங்கிப் போறேனு மட்டும் நெனைக்காத எனக்கு திரும்பிச்சினா நீ தாங்க மாட்ட அவ்வளத்தான்.” 

“நானும் சரித்தான் சரித்தானு பாக்கிறேன் நீ என்னாவோ ரொம்மபத்தான் எகிர்ற” என்று மனம் ஆறும் வரை அவளை அடித்து அலங்கோலப்படுத்தி விட்டு சமாதானம் அடைந்தாள். 

இருந்தாலும் சில நாட்களில் வீட்டுக்கே போகாமல் இருந்து விட்டு மறுநாள் கிழவியிடம் மழுப்பி சமாளிப்பதும் கிழவி லயத்தையே கூட்டி நியாயம் கேட்பதும் வழமையாகி போயிருந்தது. 

முதலாளி அடிக்கடி இந்தியாவுக்கு சென்று விடுவதால் கடை அவள் பொறுப்பில் இருப்பதாகச் சொல்லி மறுபடியும் நள்ளிரவில் வருவதும் சில நாட்களில் ஸ்டொக் எடுக்கிறோம் என்று சொல்லி இரவு வராமல் இருந்து விட்டு தப்புவதும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது. 

அப்படியே வீட்டுக்கு வந்தாலும் மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசிப் பேசியே காலத்தை கரைத்துக் கொண்டிருந்தாள். 

இரவெல்லாம் சிணுங்கும் தொலைபேசியில் அப்படி என்னதான் போசுவாளோ தெரியாது ஆனால் பேசிக்கொண்டேயிருப்பாள். 

4 

அடித்து போட்டது போல ஆடைகள் விலகியிருப்பது கூட தெரியாமல் துங்கி கிடந்தவளை “நடக்கையிலே தெரியும் நரியண்ணே செய்தினு சும்மாவா சொன்னாங்க” 

“வரவர ஒன்னோட நடவடிக்கையே சரியில்லடி’ 

“வீட்டுக்கு அடங்காதவள ஊருள அடக்க ஒருத்தன் இல்லாமலா போயிருவான்” 

“இங்கப் பாருடி மலையில, லயித்துல ஒன்னப் பத்தி மறவா பேசுனவங்க இப்பயெல்லாம் நேராவே பேச தொடங்கிட்டாங்க” 

“மத்தவங்க கேவலப் படுத்துற மாதிரி வயித்துல வாயில் வாங்கிறாத” 

“ஆம்பள இங்க கால வச்சா அங்கப் போயி கழுவிகிட்டுப் போயிருவான் பொம்பள நாங்கத்தான் நெதானமா இருக்கணும்” என்று போஞ்சி காய்களில் நார் உரித்துக் கொண்டே வாயோயாமல் மீண்டும் 

“விடிஞ்சிம் விடியாமலும் சிலுக்கு சிலுக்குனு கெளம்பி போனியே இப்ப ஏன்டி எதயோ பறி கொடுத்தவ மாதிரி வீட்டுக்குள்ள அடஞ்சி கெடக்குற இங்கப் பாருடி எதுனாலும் சொல்லிப்புடு கடசியில் பெரிய கல்லா தூக்கி போட்டு என்னக் கொல்லாத” என்று கூறினார். 

“கடயே கெதினு கெடந்துட்டு இப்ப திடீருனு போவ மாட்டாளாமே போவ இந்த மூனு மாசந்தான் நிம்மதியா தண்ணிக் குடிச்சம் அதுல மண்ணள்ளி போட்டுறாத” 

“ஓ வயசுல நான் ஒன்ன விட நெஞ்சழுத்தக்காரி ஆனா அதுனால் ஒன்னும் புரோசனம் இல்ல வீண் ரப்பு வேலக்கி ஆகாது சொல்லிப்புட்டேன்.” 

“அதுக்குத்தான் தோட்டத்துல பேரு பதிஞ்சிக்கனு தலபாடா அடிச்சிகிட்டேன் கேட்டியா?” 

“ஒழுங்கு மருவாதயா நான் சொல்லுறத கேளு வேலக்கி போனமா நாலு காசு பணம் தேடுனமா வந்தமானு இரு கைய கால உழுக்கி எழம்புடி இப்பிடியே எத்தன நாளைக்குத்தான் கெடப்ப” என்று புலம்பியவாறே மலைக்கு கிளம்பி விட்டாள் கிழவி. 

ஆளற்று கிடந்த லயமும் தனிமையும் புழுவென உள்ளத்தை குடைய தனிமையை துணைகொண்டு அழுதோய்ந்தாள் கோகிலா. 

காற்றில் பறக்க விட்ட பஞ்சென கலைந்துப் போன கனவுகளை யாரிடம் சொல்லி நோவதென்று பரியாத குழப்பத்தை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் கை கால் முளைத்து பறக்கத் தொடங்கிய ஆசைகளை காட்டிலும் வேகமாக வளரும் வயிற்றை தடுத்து நிறுத்தக் கூடிய சக்தியை அவள் இழந்துவிட்டிருந்தாள். 

ஏதோ பிரமை பிடித்தாற் போல தன் கைப்பையை தேடிதுலாவி தலைகீழாய் கவிழ்த்த போது கொட்டிக் குவிந்துக்கிடக்கும் சொக்கலட் பேப்பர்களுக்கு கிடையில் தொப்பென விழுந்தது குழுசைகள் அடங்கிய அவ் அட்டை. 

உடல் வியர்த்து கொட்டி படபடத்தது. 

தாயின் கண்ணைக்கட்டி விட்டு இரவு நேரங்களில் உல்லாசமாய் முதலாளியோடு சல்லாபித்துக் கிடந்ததன் விளைவு வயிற்றில் உயிராய் உருவெடுக்கும் வரை உணரப்படவில்லை. அதுவரை சிந்திராத பக்கங்களையெல்லாம் சிந்தித்து, பயந்து அவனுடன் போராடி போராடி திராணியற்றுப் போனவளுக்கு முதலாளிக்கு இந்தியாவில் ஒரு குடும்பம் இருப்பது அதுவரை தெரியாது. 

இடியென இதயத்தை தாக்கிய முதலாளியின் வார்த்தை அம்புகள் தைத்த காயங்களில் இருந்து அவளால் மீளவே முடியவில்லை. அடி வயிறு கலங்கி நின்றது. வாழ்வே நரமாகிவிட்டதாய் உணர்ந்தாள். பல முறை முயற்சித்தும் அவனை போனில் பிடிக்க முடியவில்லை. தன் கனவுகளை கலைத்து விட்டவன் கடல் தாண்டி பயணித்து விட்டான் என்பதை அறிந்த மாத்திரத்தில் அழுகையும் கண்ணீருமாய் ஆட்டோ ஒன்றில் வந்து வீட்டில் படுத்தவள் தான் இதுவரை அவளால் எழந்திருக்க முடியவில்லை. 

அழுதாள் புரண்டாள் ஆனால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியவில்லை. அழுக்காடைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு காட்டுப்பீலிக்கு வந்ததும் வராததுமாய் ஆடைகளைக் கூட கலையாமல் தொப்பென வீழும் கனத்த நீரில் அப்படியே இறங்கி நின்று விட்டாள். தகித்த உள்ளத்திற்கும் உடலுக்கும் காட்டுப் பீலியில் கொட்டிய நீர் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. எவ்வளவு நேரம் அப்படியே நின்றாலோ தெரியாது ஆனால் மனசு கொஞ்சம் இலேசாகியிருந்தது. 

சோவென வீழும் பீலித்தண்ணீரில் மனச்சுமைகளை எல்லாம் கரைத்து விட்ட நிம்மதியில் நின்றிருந்தப் போது தலையில் வீழும் நீர் மெதுமெதுவாய் அவளின் கோணல் வகிடை நேர்வகிடாய் மாற்றி விட்டிருந்தது. அப்போது வழமைக்கு மாறாய் அவள் முகத்தில் ஒரு தெளிவு பிறந்திருந்தது. 

பீலியில் இருந்து வழிந்தோடி தேங்கி கிடக்கும் அழுக்கு நீரில் குழுசைகளை தொலைத்து விட்ட கருத்தடை அட்டை மட்டும் சுற்றி சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தது. 

– வீரகேசரி

– மீன்களைத் தின்ற ஆறு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 2016, பெருவிரல் கலை இலக்கியா இயக்கம், இலங்கை.

சிவனு மனோஹரன் சிவனு, மனோகரன் (1978.09.17 - ) ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி. இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஞானம், தினமுரசு, தினக்குரல், சுடரொளி, மித்திரன், வடம், லண்டன், சுடரொளி, புதினம் ஆகியவற்றில் வெளியகியுள்ளன. ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடங்கி ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புக்களாகும். இவரது நூல்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *