கொழுக்கவோ, இளைக்கவோ!





(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மகாலிங்கத்துக்கு ரொம்ப அவமானமாகப் போய்விட்டது. எல்லாம் அவராக வரவழைத்துக் கொண்டது தான். சங்கரசுப்புவை அவர் வருந்தி வருந்தி தன் வீட்டுக்குக் கூப்பிட்டுக் கொண்டு வந்தார். மனுஷன், கொடுத்த காப்பி டிபனை சம்பிரமமாகச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பிப் போகும் போது வாயை மூடிக்கொண்டு போக மாட்டாரோ? ஒரு வார்த்தை ‘நறுக்’கென்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
“உங்களுக்குக் குழந்தை குட்டி பிக்குப் பிடுங்கல் ஒண்ணுமில்லை. இருப்பது ஒரே ஒரு பெண்டாட்டிதான். அவங்களை கூட சரியாக் கவனிக்க மாட்டீங்களா? சோத்தையே கண்ணால பார்க்காத மாதிரி இப்படி மெலிஞ்சு வத்தலா இருக்காங்களே!”
மகாலிங்கத்துக்கு ‘சுருக்’கென்றாகிலிட்டது. சங்கரசுப்புவை வழியனுப்பி விட்டு உள்ளே நுழைந்தவர் “சாவித்திரி” என்று ஒரு கூச்சல் போட்டார்.
என்னமோ ஏதோவென்று அலறிப் புடைத்துக்கொண்டு ஒடிவந்த மனைவியை “அப்படி நில் எதிரே!” என்று ஒரு அதட்டல் போட்டார்.
கை கட்டாத குறையாக எதிரே நின்ற மனைவியைத் தலையோடு கால் பார்வையால் அளந்தார். ஊஹூம்! துளிக்கூட சதையே இல்லாமல் குச்சியாட்டம் உடம்பு!
“என்ன திடீர்னு நிக்க வச்சுப் பார்க்கறீங்க?” சாவித்திரி கூச்சத்தால் நெளிந்தாள்.
“கேள்வி கேட்காதே! கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு, நமக்குக் கல்யாணமாகி எத்தனை வருஷமாகிறது?”
”முப்பது வருஷமாகிறது!”
“இந்த முப்பது வருஷத்தில் உன் தோற்றத்தில் ஏதாவது மாறுதலை நீ கவனித்திருக்கிறாயா?”
”இல்லவே இல்லை. அன்னிக்குப் பார்த்த மேனிக்கு அழிவில்லாம இருக்கேன்னுதான் எங்க சொந்தக்காரங்க எல்லாம் சொல்றாங்க, பதினெட்டு வயசில கல்யாணம் பண்ணிக் கொடுத்தப்ப எப்படி இருந்தாளோ அப்படியே ஒத்தாப்பல, ஓடிசவா, இளமையா இருக்கா சாவித்திரின்னு எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க” என்றாள் பெருமையாகத்தலை ஆட்டிக் கொண்டே.
அப்பொழுது முன்னந்தலையில் தெரிந்த நரை மயிர்ப் பிரதேசம் மகாலிங்கத்தின் பளிச்சென்று பட்டது. இது எப்படி மாமியாருக்கும். தினப்படி கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் மனைவிக்கும் கண்ணில் படாமல் போயிற்று? ஒருவேளை பதினெட்டு வயசிலிருந்தே இதுவும் இருக்கோ என்று யோசிக்க ஆரம்பித்தவர் சட்டென்று அதை உதறிவிட்டு விசாரணையைத் தொடர்ந்தார்.
”நீ ஏன் இந்த முப்பது வருஷங்களாக இதை என்னோட கவனத்துக்குக் கொண்டு வரவில்லை?”
“எதை?” என்றாள் சாவித்திரி புரியாமல்.
“அதான், உன், உடம்பு தேறாமல் அப்படியே இருக்கிறதை!”
“என்ன ஆச்சு உங்களுக்கு திடீர்னு?” சாவித்திரி அவரை தெருங்கி வத்து கேட்டாள். “சம்பந்தமில்லாம என்னென்னவோ கேட்டுக்கிட்டிருக்கீங்க, பொழுது போகலைனா மார்க்கெட் வரைக்கும் போய் காய்கறி வாங்கிண்டு வந்தீங்கன்னா எனக்கு ஒத்தாசை யாகவாவது இருக்கும். இல்லைன்னா இருக்கவே இருக்கு உங்க ‘ஹிண்டு’ பேப்பர், அதையாவது படிங்க. எனக்கு வேலை தலைக்கு மேலே கிடக்கு. ஆளை விடுங்க” – சாவித்திரி விடு விடுவென்று உள்ளே போய் விட்டாள்.
மகாலிங்கம் பேப்பர் படிக்கிற மனோநிலையில் இல்லை. எனவே மார்க்கெட்டுக்கே போகலா மென்று பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
மார்க்கெட்டில் நுழைந்ததும் முதலில் கண்ணில் தென்படும் காய்கறியை வாங்கிக் கொண்டு வரும் பழக்கமுடையவர் இன்று முருங்கைகாயும் கொத்தவரங்காயும் காலில் இடறியும். அவை சாவித்திரியின் தோற்றத்தை நினைவு படுத்தியதால் முறைத்து விட்டு உள்ளே சென்று தேடிப் பிடித்து பூசனிக்காய், உருளைக்கிழங்கு என்று கனமான காய்களாய் வாங்கிக் கொண்டு வந்தார்.
மறுநாள் முழுவதும் அவருக்கு ஆபீஸில் வேலையே ஓடவில்லை. சங்கரசுப்பு அவரை சாதாரணமாகப் பார்த்தால் கூட ‘மனைவியைக் கூடக் கவனிக்கத் தெரியாத மடையன்’ என்று ஏளனத்தோடு பார்ப்பதாகவே அவர் மனகக்குத் தோன்றியது.
மாலையில் ஒரு முடிவுக்கு வந்தவராய், ஏதேதோ சாமான்களை வாங்கிக் கொண்டு வீடு வந்தார்.
அவர் பரப்பி வைத்த சாமான்களைப் பார்த்ததும் சாவித்திரியின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. காட்பரீஸ் சாக்லெட் ஒரு பார், 50 கிராம் வெண்ணெய்ப் பொட்டலம் ஒன்று, முழு முந்திரி ஒரு பாக்கெட், மில்க் ஸ்வீட், கொஞ்சம் உருளைக் கிழங்கு சிப்ஸ் இத்யாதி, இத்யாதி.
“நாம்ப எங்கேயாவது வெளியே போகப் போறோமா இப்ப?” என்று கேட்டாள்.
வழக்கமாக ரெண்டு பேரும் சேர்ந்து உறவுக்காரர்கள் வீட்டுக்குப் போகும்போது தான் ஸ்வீட், சாக்லெட், என்று இடத்துக்கு தகுந்த மாதிரி வாங்கிக் கொண்டு போகிற பழக்கம்.
“நாம்ப எங்கேயும் போகப் போறதில்லை. இங்கேயும் யாரும் வரப்போறதில்லை..” ஒரு நிமிஷம் ஸஸ்பென்ஸாக நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார், “எல்லாம் உனக்குத்தான். இன்னிலேருந்து இந்த மாதிரி நல்ல கொழுப்புச் சத்துள்ள ஆகார வகைகளைச் சாப்பிட வைத்து உன் உடம்பைத் தேத்தி நல்ல கொழு கொழுன்னு சதைப்பிடிப்பாக மாற்றப் போறேன்.”
“எனக்கென்ன கேடு வந்துட்டதுன்னு இப்படி ஆரம்பிச்சிருக்கீங்க?”
”கேடு உனக்கில்லை. எனக்குத்தான், நீ இப்படி இருப்பது மானக்கேடா இருக்கு. தெனம் வாங்கிட்டு வறேன். தொடர்ந்து சாப்பிட்டுக்கிட்டு வா பார்க்கலாம். பத்தே நாளில் உடம்பு எப்படி கொழுக்கறதுன்னு?”
“பத்து நாட்களுக்கப்புறம் நான் என்ன ஏதாவது விளம்பரத்துக்குப் போஸ் குடுக்கணுமா? ‘மெலிந்திருக்கும் மெல்லியலாளர்களே! அன்று மெலிந்திருந்த என் உடல் இன்றைய தேதியில் இப்படிக் கொழு கொழுவென இருப்பதற்குக் காரணம் இதோ என்னருகில் அமர்த்திருக்கும் என் கணவரே! இவர் போட்டுக் கொடுக்கும் திட்டப்படி ஆகார வகைகளை வாங்கி சாப்பிட்டு நீங்களும் கொழுத்துப் பயனடைவீர்!’ பி.கு. (சின்ன எழுத்துக்களில்) திட்டம் மட்டும்தான் இலவசம். ஆகார வகைகளை நீங்கள்தான் காசு கொடுத்து வாங்கிச் சாப்பிட வேண்டும்.”
“நிறுத்து உன் கேலியை! அவனவன் கேட்கும்போது என் மானமே போகிறது. உனக்கென்ன தெரியும்!”
“அப்படி என்ன கேட்டுட்டான்?”
“அன்னிக்கு வந்தானே சங்கர சுப்பு அவன்தான்!”
“யாரு? உங்க ஆபீஸ்லே இருந்து வந்தாரே, நங்கநல்லூரிவே எங்கம்மா வீடு இருக்கிற தெருவிலே குடித்தனம் இருக்கிறதாச் சொன்னாரே, அவரா?”
“ஆமாண்டி, அவனே தான். பொண்டாட்டியைக் கூடக் கவனிக்கத் துப்பில்லாதவன்னு என்னைச் சொல்லிட்டுப் போயிட்டான்!”
“கெடக்கறான் விடுங்க. எவனோ சொன்னாங்கிறதுக்காக இத்தனை வருஷம் கழிச்சு என் உடம்பிலே சதை பிடிக்கப் போறதா?”
“அந்தப் பேச்செல்லாம் வேண்டாம். பத்து நாள்ல கணிசமா மாறுதல் தெரியணும். அவ்வளவுதான் எனக்கு வேண்டியது” பேச்சை அத்தோடு நிறுத்திக் கொண்டார்.
அன்றிலிருந்து சாவித்திரிக்கு வீடு நரகமாகிப் போயிற்று, கண்ட நேரத்தில் எதையாவது வாங்கி வந்து ‘அதைச் சாப்பிடு’ ‘இதைச் சாப்பிடு’ன்னு உயிரை எடுக்கிற கணவனுக்குப் பயந்து குடுத்ததைச் சாப்பிடப் போக உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல் ரெண்டே நாளில் அவளுக்கு அஜீர்ணம். வாந்தி ஆரம்பித்து விட்டது. கணவனிடம் சொல்லப் பயந்து கொண்டு அவர் ஆபீஸ் போன பிற்பாடு டாக்டரிடம் போய் காண்பித்து மருந்து வாங்கிச் சாப்பிட்டாள்.
அவர் நாலு நாட்கள் வெறும் கஞ்சி மட்டும் குடிக்கச் சொல்லி அனுப்பி விட்டார், சாவித்திரிக்கு ஒரே தலை வேதனையாகி விட்டது. இந்தப் பைத்தியக்காரத்தனத்தி லிருந்து எப்படித் தப்புவது என்று மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.
பத்து நாட்கள் ஓடிவிட்டன. மகாலிங்கத்துக்குத் தன் மனைவியிடம் ஒரு மாறுதலும் தெரியவில்லை. தினம் பார்த்துக் கொண்டே இருப்பதால் ஒரு வேளை நன் கண்ணுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது என்று நினைத்து மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டார். அன்று மாலை வீட்டுக்குள் நுழைந்ததுமே மாமியாரின் குரல் வந்து அவருடைய செவியைத் தாக்கிற்று. குரலினுடைய வால்யூமிலிருந்து மாமியார் சமையல் அறையில் பேசிக்கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தது. ஏனென்றல் கூடத்தில் பேசிக் கொண்டிருந் தாளானால் தெரு ஆரம்பத்திலேயே குரல் கேட்டிருக்கும். அப்பேர்ப்பட்ட விசேஷமான குரல் அது.
“ஏண்டி இப்படி அநியாயத்துக்கு இளைச்சிட்ட? உடம்பு கிடம்பு சரியில்லையா? எனக்குச் சொல்லி அனுப்பக் கூடாதோ?” சாவித்திரியை விசாரித்துக் கொண்டிருந்தாள் மகாலிங்கத்தின் மாமியார்.
”அதெல்லாம் ஒன்றுமில்லைம்மா” என்ற சாவித்திரி தன் கணவனுடைய ‘மனைவியைச் சதைப் பிடிப்பாக மாற்றும் திட்டத்’தை அம்மாவுக்கு விவரித்தாள்.
”அது சரி. அவர் தினமும் வாங்கிண்டு வந்த வகையறாக்களை யெல்லாம் நீயும் சாப்பிடலைன்னா என்னதான் பண்ணினே?”
“ஒண்ணும் வேஸ்டாகலைம்மா, வெண்ணெயைத் தினம் உருக்கி வச்சு இப்ப ரெண்டு மாசத்துக்கு நெய் கையில் இருக்கு. இந்த வருஷம் முழுக்கப் பண்டிகைக்கு முந்திரிப் பருப்பு சேர்ந்தாச்சு. கவலையே இல்லை. சாக்லெட், ஸ்வீட்ஸெல்லாம் எடுத்துண்டு ரொம்ப நாளாய்ப் போகாத உறவு மனுஷர்கள் வீட்டுக்கெல்லாம் ஒரு நடை இந்தப் பத்து நாளிலே போய்ட்டு வந்திட்டேன், அதுவும் உபயோகமான செலவாயிடுத்து. இத்தனை வயசுக்கப்புறம் நமக்கெல்லாம் இதெல்லாம் ஒத்துக்குமாம்மா?”
வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த மகாலிங்கம் ஆத்திரத்தில் பற்களை ‘நறநற’ வென்று கடித்தார்.
”ஆமாம் யார் சொன்னான்னு மாப்பிள்ளை இப்படி ஆரம்பிச்சார்னு சொன்னே?”
“அதாம்மா சங்கரசுப்புன்னு இவரோட வேலை பார்க்கறவர். நங்கநல்லூரில் இருக்கிற வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி இருக்கிறாராம். அவர்தான்.”
“அடப் பாவி! அவன் பொண்டாட்டி ஸ்தூல சரீரத்தை வெச்சுண்டு பொழுது விடிஞ்சு பொழுது போனா நூறு வியாதி சொல்லிண்டிருக்கா, அந்த மனுஷனோட பொல்லாத்தனத்தைப் பாரேன்! நமக்கு வந்த கஷ்டம் மத்தவங்களுக்கும் வரட்டுமேன்னு எல்லாரையும் கௌப்பி விட்டுண்டு! அவன் சொன்னதையும் கேட்டுண்டு இவரும் ஆடியிருக்காரே!”
மகாலிங்கத்துக்கு அவமானம் தாங்க முடியவில்லை. பேசாமல் வெளியே சென்றுவிட்டு மாமியார் போன பிறகு வரலாமென்று நினைத்தவரை மாமியாரின் குரல் மறுபடி இழுத்தது.
“உன் உடம்பைக் கொழுக்க வைக்கிறேன்னு கெளம்பறதுக்குப் பதிலா மாப்பிள்ளை அவர் உடம்பைக் குறைக்கறதுக்கு ஏதாவது முயற்சி பண்ணக் கூடாதோ? வயசான காலத்திலே நடமாடவாவது சௌகரியமாக இருக்கும்!”
மாமியாரின் பேச்சு இடியாகக் காதில் இறங்க உடம்புக் கனத்தோடு மனசும் கனக்க மகாலிங்கம் அப்படியே சரிந்து சோபாவில் விழுந்தார்.
– மங்கையர் மலர், அக்டோபர் 1982.
![]() |
சிறு குறிப்பு சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்ற்ருக்கிறார். இலைக்கிய பீடம் சிறுகதைப் போட்டியில் இரு முறை பரிசு, கலைமகள் சிறுகதை போட்டி, மற்றும் குறுநாவல் போட்டியில் பரிசு கிடைத்துள்ளது. இலக்கிய சிந்தனை அமைப்பின் மாதப் பரிசினை, இரு முறை வென்றிருக்கும்…மேலும் படிக்க... |