கொலைப்பித்தன்





(1955ல் வெளியான மர்ம நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30
அத்தியாயம் – 25
அபயக் குரல்

ஓவியர் கிருஷ்ண மூர்த்தி வீட்டில் இரவு விருந்து மிகத் தடபுட லாக நடைபெற்றது. சாப்பாடு முடிந்ததும். ஒரு பெரிய சீட்டுக் கச்சேரி ஆரம்பமாயிற்று.
ஒரு சீட்டுக் கட்டை வைத்துக் கொண்டு பவானிக்குச் சில ‘மாஜிக்’ வேலைகள் செய்து காட்டினான் உதவித் துப்பறிவாளனான தினகரன். ஆடுதன் ராஜாவின் சீட்டை எடுத்துக் காட்டி, ‘இந்த ஆடுதன் ராஜா எந்த ராணியை விரும்புகிறார் தெரியுமா? அதா வது கறுப்பு ராணியையா? சிகப்பு ராணியையா?’ என்றான் தினகரன்.
“யாரை?” என்றாள் ஆவலோடு பவானி!
“அதைச் சீக்கிரம் துப்பறிந்து சொல்லுகிறேன்!” என்றான் தினகரன். பவானி மெல்ல செல்லையாவின் திசையைப் பார்த்தாள்.
செல்லையாவிற்குச் சீட்டாடத் தெரியாததால், அவன் மட்டும் ஒரு மூலையில் தனியே உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனைப் பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாகயிருந்ததுபோலும் பவானிக்கு. “பாவம்! குறுகின குளத்திலே கொக்கு இருந்ததுபோல் உட்கார்ந்திருக்கிறார் செல்லைபா. வாருங்கள், நாம் அவரிடம் போவோம்,” என்று தினகரனை அழைத்தாள் பவானி.
தினகரனுடைய கைச் சாதுரியத்தைக் கண்டு பிரமித்துப் போய்விட்டான் செல்லையா. வைத்த கண் வாங்காது அவன் வாயைப் பிளந்து கொண்டிருந்தான்.
“எல்லாம் ஒரே மாயாஜாலம், மகேந்திர ஜாலம் மாதிரி, இல்லையா ? இப்படித்தான் சிலருடைய திறமையால் பலர் ஏமாந்து போகிறார்கள்!” என்றாள் பவானி, செல்லையாவைப்பரிவோடு கூர்ந்து பார்த்துக்கொண்டே. அந்தக் கனிவும், காதலும், ததும்பும் பார்வையில் செல்லையாவின் உள்ளம் பெரிதும் லயித்தது!
“பவானி! நான் உன்னோடு நடந்து கொண்ட முறைக்கு வெட்கப்படுகிறேன். தெரியாத்தனமென மன்னித்து விடு!” என்றான் செல்லையா.
“பரவாயில்லை!… ஆனால் கோடித் தீவிலிருந்து வந்ததும் வராததுமாக…ஏன் எங்களை எதிரிகள் போல பாவித்துக் கடுமை யாக நடந்து கொண்டீர்கள்?” என்று கேட்டாள் பவானி.
“நான் என்ன செய்வேன்? அப்படி எனக்கு எச்சரித்திருந்ததால்……”
“யார் அப்படி எச்சரித்திருக்க முடியும்? கோடித் தீவிலிருந்து எங்கள் வீட்டிற்கு வரும்போது கண்ணனைத்தானே முதன் முதலில் சந்தித்துப் பேசினாய்?”
“ஆமாம்!” என்றான் செல்லையா.
“கண்ணனா எங்களுக்கு எதிராக எச்சரித்தான்?” என்று கேட்ட பவானி தூரத்தில் விருந்துக்கு வந்த பெண்ணொருத்தி யோடு பேசிக் கொண்டிருக்கும் கண்ணனைச் சந்தேகக் கண்ணோடு பார்த்தாள். அந்தப் பார்வையைத் தூரத்திலிருந்தவாறே கண்ணன் யூகித்துக்கொண்டு விட்டான்.
“உம்…….” என்று பெருமூச்சு விட்ட பவானியைக் கவனித்த செல்லையாவிற்கு பலவிதச் சந்தேகங்களும் திரும்பவந்து விட்டன.
அவன் கண்ணனை நம்பினான். இப்போது கண்ணனைச் சந் தேகிக்க வேண்டியிருந்தது. அதுபோலத்தான் மஞ்சுளாவின் விஷயமும்! முன்பு அவன் சந்தேகித்த பவானியின் வீட்டா ரையே இப்போது நம்பவேண்டும் போலிருந்தது. ஆனால் பூரண மாக நம்பிவிட முடியுமா?…… சரி, துப்பறியும் கேசவன் விஷயம்? செல்லையாவின் பிராண சிநேகிதனான பழனியப்பனைப் போலீ ஸாரிடம் பிடித்துக் கொடுக்கும்படி சொல்கிறார்! அப்படியானால் இந்த உலகத்தில் பழனியப்பனைத் தவிர வேறு யாரையும் பூரண மாக நம்ப முடியாது… அவனுக்காக எதையும் செய்யலாம்….! செல்லையா அப்படி நினைக்கும் தருணத்தில், அவனை அங்கு தேடிக் கொண்டு வந்தாள் லலிதா.
“நீ இங்கேயா இருக்கிறாய்? வா, உனக்கு ஒரு டெலிபோன் வந்திருக்கிறது!” என்றாள் அவள் செல்லையாவை நோக்கி.
டெலிபோன் அறைக்கு அவளைப் பின் தொடர்ந்து சென் றான் செல்லையா.
அதே சமயத்தில் தினகரனும் பவானியும் இருந்த இடத்தில் திடீரென்று பிரசன்னமானார் துப்பறியும் கேசவன்.
“ஏன் அப்பா உனக்குச் சமாசாரம் தெரியுமோ ” என்றார் அவர் தம் உதவியாளனான தினகரனை நோக்கி.
“என்ன சார்?” என்றான் தினகரன்.
“அதோ கடற்கரையில் ஒரு பறக்கும் தட்டு, வந்து இறங்கி யிருக்கிறதாம். போய்ப் பார்த்து வாயேன்!”
“உங்களுக்குக்கூட இந்தப் பைத்தியம் பிடித்து விட்டதா?” என்று சிரித்தாள் பவானி.
தினகரனும் அவளோடு சேர்ந்து சிரித்தான். ஆனால் தன் எஜமான் கொடுத்த சமிக்ஞையை அவன் புரிந்து கொண்டான்.
“சரி, எனக்கு ஒரு கால்மணிநேரம் லீவு கொடு, நான் கடற்கரை வரையில் போய் வருகிறேன்” என்றான் அவன் பவானியை நோக்கி.
“அப்படியானால் நானும் வருகிறேன்.” என்றாள் பவானி.
“இல்லை. நீ வரக்கூடாது!” என்று கூறிவிட்டு, சிரித்துக் கொண்டே எழுந்தான் தினகரன்.
பவானிக்குத் திடீரென ஒரு சந்தேகம்! மஞ்சுளா முதலில் விருந்தை விட்டு எழுந்து இருளில் பாய்ந்து போனாள். அதன்பிறகு டெலிபோன் அழைப்பு வந்து செல்லையாவும் எழுந்து போனான் ! அந்த ஆடுதன் ராஜா எந்த ராணியைக் காதலிப்பான் எனத் துப்பறிந்து சொல்வதாகத் தினகரன் சொன்னான்… ஒரு வேளை மஞ்சுளா ஏதாவது…?
தினகரனை ஒரு பத்தடி முன்னால் போகவிட்டு அவனுக்குத் தெரியாமலே கருகும் என்ற இருட்டில் பின்தொடர்ந்தாள் பவானி.
தினகரனிடம் சமிக்ஞையைக் கொடுத்த பின் நேரே டெலி போன் அறையை நோக்கி விரைந்தார் துப்பறியும் கேசவன் செல்லையாவை டெலிபோன் அருகில் கொண்டு போய் விட்டு விட்டு, லலிதா வெளியே வந்தாள். யார் கண்ணிலும் படாமல் கேசவன் ஒரு மூலையில் மறைந்து கொண்டார்.
ரிஸீவரைக் கையிலெடுத்தான் செல்லையா. டெலிபோனின் மறுமுனையிலிருந்து, “யார் பேசுவது?’ என்று கேட்டது ஒரு கரகரத்த குரல்.
“செல்லையா பேசுகிறேன். நீர் யார்?”
“நான் யாரென்பதைப் பற்றி உனக்கு அக்கறையில்லை. உன்னிடம் ஒரு தகவல் தெரிவிக்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டான் உன் நண்பன். அவன் யாரென்பது உனக்குப் புரிந்திருக்கலாம்.”
“யார், பழனியப்பனா?’ என்று கேட்டவாறு சுற்று முற்றும் பார்த்தான் செல்லையா. தன்னை யாரும் கவனிக்கவில்லையென்று கண்டவுடன், தொடர்ந்து பேசினான்: “பழனியப்பன் இப்போது எங்கிருக்கிறான்?”
“அவனுக்கு நீ உதவி செய்வதாக வாக்களித்தால், அவன் இருக்குமிடத்தை உனக்குத் தெரிவிக்கிறேன்,” என்று பதில் வந்தது.
”அவனுக்காக நான் எத்தகைய உதவியும் செய்யச் சித்தமா யிருக்கிறேன். முதலில் நான் அவனைப் பார்க்க வேண்டும்…”
“அப்படியானால் நேரே கடற்கரைக்கு வா. அங்கே ஒரு வத்தையை வைத்துக் கொண்டு உனக்காக ஒருவன் காத்திருப்பான். அந்த வத்தையிலேறி சுமார் ஒரு பர்லாங் தூரம் வந்தால், கடலில் ஒரு நீராவிப் படகைக் காணலாம். அந்தப் படகில் தான் ஒற்றைக் கையொடிந்து போய்க்கிடக்கிறான் பழனியப்பன்…”
“ஹா! கையொடிந்து போய் கிடக்கிறானா?” என்று பதறினான் செல்லையா. “நான் இதோ வருகிறேன்.”
“ஆனால் இந்த விஷயம் வேறுயாருக்கும், குறிப்பாகத் துப்பறியும் கேசவனுக்குத் தெரியக்கூடாது.”
“சரி,” என்று டெலிபோன் ரிஸ்வரைக் கீழே வைத்துவிட்டு அவ்வறையைவிட்டு அவசரமாக வெளியேறினான் செல்லையா.
ஒரு கரிய உருவத்தின் நிழல் திடீரெனப் பாய்ந்து வந்து அவன் தோளைப் பிடித்துக் கொண்டது! அது துப்பறியும் கேசவனின் உருவந்தான்!
“எங்கே செல்லையா கிளம்பினாய்? காற்று வாங்கவா கடற்கரைக்குப் போகிறாய்? அல்லது குற்றவாளிக்கு உதவி செய்யப் போய் நீயும் மாட்டிக் கொள்ளப் போகிறாயா?”
“நீர், நான் டெலிபோன் பேசியதைக் கேட்டீரா?” என்றான் செல்லையா.
“இல்லை! உனக்கு யாரிடமிருந்து டெலிபோன் அழைப்பு வந்திருக்குமென யூகித்துப் பார்த்தேன்! அது உன் விரோதியிட மிருந்தோ, நண்பனிடமிருந்தோ வந்திருக்கலாம். எப்படியிருந்தாலும் அது உனக்கு நல்லதல்ல!… பழனியப்பன் ஒரு படகில் இருக்கிறான் என்பது எனக்குத் தெரியும்! அதனால் கடற்கரைப் பக்கந்தான் நீ புறப்படுவாய் என்பதையும் சுலபமாக யூகித்து விட்டேன்.”
“இப்போது நிஜமாகப் பழனியப்பனிடமிருந்து அழைப்புவந்திருந்தால், அவனுக்கு நீ உதவி செய்யப் போவதின் மூலம் நீயும் குற்றவாளியாகி உன்னுடைய சொத்துக்களை இழந்து விடுவாய்! டெலிபோன் அழைப்பு உன் விரோதிகளிடமிருந்து வந்திருந்தால் உன் உயிரை இழந்து விடுவாய்!” என்றார் துப்பறியும் கேசவன்.
“நண்பனுக்காக ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட இரண்டையுமே இழந்து விடுவது மேல்!” என்றான் செல்லையா.
“முட்டாள் தனமாகப் பேசாதே! என்னுடைய புத்திமதி யைக் கேட்பதாயிருந்தால் உனக்குப் பதில் என்னைப் போகவிடு!’
“நீர் போனால் என் நண்பனைப் பிடித்துப் போலீஸிடம் கொடுத்து விடுவீர். நீர் குற்றவாளி யாராயிருந்தாலும் விடமாட் டீர்! தயவு செய்து என் விஷயங்களில் தலையிடாமல் உம் வேலையைப் பார்த்துக் கொண்டு போம். உமக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்!” என்றான் செல்லையா.
“உன் பணம் எனக்குத் தேவையில்லை!” என்று சொல்லி விட்டுத் துப்பறியும் கேசவன் வேறொரு புறம் போய்விட்டார்.
அத்தியாயம் – 26
மாயாண்டி செய்த தவறு!
வானத்தில் இருள் சூழ்ந்திருந்தது. எனினும் கடலின் அடிப் புறத்திலிருந்தே வெண்கதிரோன் வீசிய நிலவொளியின் பிரதி பலிப்பால் கீழ் வானம் சிறிது வெளுப்புற்றிருந்தது. ஓவியர் கிருஷ்ண மூர்த்தியின் பங்களாவிலிருந்து புறப்பட்டுக் கரையை யடைந்த உதவித் துப்பறிவாளனான தினகரன் தன்னை நோக்கி ஒரு கரிய உருவம் இருளில் நகர்ந்து வருவதைக் கண்டான்.
ஆம்; மாயாண்டி தான் ; தான் கொண்டு வந்திருந்த வத்தை யைக் கரையோரமாக நிறுத்திவிட்டு, அவன் நேரே தினகரனை அணுகினான். அவனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “ நீ தான் செல்லைபாவா?” என்றான் மாயாண்டி.
“ஆம்” என்றான் தினகரன்.
“உனக்குச் செய்தி கிடைத்ததல்லவா?”
“கிடைத்தது. ஆனால்….” என்று தயங்கினான் தினகரன். மாயாண்டி பேசுவதே அவனுக்குப் புதிராக இருந்தது. எனினும், அவனால் தனக்கு அளிக்கப்பட்ட செல்லையா-வேஷத்துக்குத் தக்க படி, எல்லாம் தெரிந்தவன் போல் நடிக்கத் தொடங்கினான்.
தினகரனின் தயக்கத்தைப் பார்த்த மாயாண்டி, விஷயங்களை விளக்கிக் கூறினான்.
“உன் சிநேகிதன் பழனியப்பன் அதோ அந்த நீராவிப் படகிலிருக்கிறான். அவன் உன்னைப் பார்க்க விரும்புகிறான்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவ்விருவருக்கும் அருகில் திடீரென்று வேறொரு கரிய உருவம் இருளோடு இருளாய் வந்து அங்கே நிற்பதைக் கண்டான் மாயாண்டி.
தினகரன் திரும்பிப் பார்த்தான். அங்கே சிரித்துக் கொண்டு காட்சியளித்தாள் பவானி.
“அட பைத்தியக்காரப் பெண்ணே! உன்னை யாரிங்கே வரச் சொன்னது ? ஓடு வீட்டுக்கு!” என்று அதட்டினான் தினகரன்.
அவனது கோபக்குறியைக் கண்டதும், பவானி தன் தவறை உணர்ந்தாள். வீட்டை நோக்கிச் சட்டென்று திரும்பினாள்.
“கொஞ்சம் நில்லம்மா,” என்றான் மாயாண்டி. ‘இவளைப் பங்களாவுக்குத் திரும்பிப் போக விட்டால், தன் திட்டமெல்லாம் சீரழிந்து விடும்,’ என்று அவனுக்குத் தெளிவாகப்பட்டது. அவன் ஒற்றைக் கண்ணன் என்பதை அவள் கவனித்திருப்பாளாகை யால், தன்னை அடையாளம் காட்டி விடுவாள் என்றும் அவன் பயந்தான். சட்டென்று தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சூர் கத்தியை எடுத்தான். சடெக்கென்று பவானியைப் பிடித்து இழுத்து அவளுடைய முதுகுப்புறம் கத்தியைக் குறி பார்த்துப் பிடித்துக் கொண்டான்.
“நீ வீட்டுக்குப் போகக்கூடாது. நீயும் செல்லையாவுடன் இந்த வத்தையில் ஏறிவர வேண்டும்,” என்றான் பவானியிடம் மாயாண்டி.
“என்ன இது?” என்று திக்பிரமையுற்றாள் பவானி.
“இருவரும் பதில் பேசாது ஏறுங்கள் வத்தையில். இல்லா விட்டால் கத்தியால் குத்திக் கொன்று விடுவேன்,” என்று அதட் டினான் அம் முரடன்.
தினகரனும் பவானியும் போய் வத்தையில் ஏறினர். துடுப் புக்களைத் தினகரன் கையில் கொடுத்து விட்டு, பவானியின் பக்கத்தில் கத்தியை அவளுடைய கன்னப் பொட்டுக்கு நேரே பிடித்துக் கொண்டபடியே உட்கார்ந்தான் மாயாண்டி.
“தள்ளு வேகமாக,” என்று உத்திரவிட்டான் அந்த ஒற்றைக் கண்ணன்.
அவ்வாறே சிறு வத்தையைக் கடலில்தள்ளினான் தினகரன். சில நிமிஷங்களுக் கெல்லாம், நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கடற் பேய் என்னும் நீராவிக் கப்பலின் அருகில் வந்தடைந்தது அச் சிறு வத்தை.
வத்தையைக் கண்டதும் இருளப்பன் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. ஆனால் அடுத்த கணமே, அதில் ஒரு பெண் உட்கார்ந் திருப்பதைப் பார்த்ததும் அவன் சந்தேகமுற்றான்.
“என்ன இது? இவளை ஏன் கொண்டு வந்தாய் ? யாரிவள்?” என்று கேட்டுக் கொண்டே, அவள் முகத்தில் டார்ச்லைட் அடித்துப் பார்த்தான் இருளப்பன். அந்த விளக்கின் ஒளியில், தினகரன் முகம் அவன் திருஷ்டியில் பட்டது. அவன் திடுக்கிட்டான்.
“எங்கேடா செல்லையா ?” என்று அதட்டிக் கொண்டே அவன் மாயாண்டியின் பக்கம் திரும்பினான்.
“ஏன், இவன் செல்லையா இல்லையா?”
”முட்டாள் ! இவன் தினகரனடா ! துப்பறியும் கேசவனின் சிஷ்யன்!”
அப்போதுதான், மாயாண்டி தான் செய்த மகத்தான தவறை உணர்ந்தான். அடுத்த படியாக என்ன செய்வதென்றறியாது அவன் ஸ்தம்பித்து நின்றான்.
”சரி ஏதோ ஆள் தெரியாமல் அவர் தவறுதலாக எங்களைக் கொண்டு வந்து விட்டார் போலிருக்கிறது. அதனால் பரவாயில்லை. மறுபடியும் எங்களைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள். என் எஜமான் காத்துக் கொண்டிருப்பார்,” என்று ஆரம்பித்தான் தினகரன்.
அவனை வெறுப்போடு முறைத்துப் பார்த்தான் இருளப்பன். “உன்னைக் கரையிலா கொண்டு போய் விடவேண்டும்? அது நடக்காது, தம்பீ. எப்போது நீ செல்லையாவுக்குப் பதிலாக வத்தையிலேறி வந்தாயோ, அப்போது செல்லைபா அடைய விருந்த கதியே தான் உனக்கும் கிடைக்க வேண்டும்!” என்று கூறியவாறு, “டேய், இவர்களிருவரையும் நீராவிப் படகின் காபின் அறைக்குள் தள்ளு!” என்று மாயாண்டியை நோக்கி அவன் உத்தர விட்டான்.
தினகரனும் பவானியும் காபின் அறைக்குள் தள்ளப் பட்டனர். உடனே அதன் கதவு சாத்தப் பட்டது. இரு பெரிய உப்புப் பாறைகளால் அது கெட்டியாக அடைக்கப் பட்டது.
உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. எனினும் ஒரு மூலையில் யாரோ ஒருவன் படுத்திருப்பது தினகானுக்குத் தெளிவாகத் தெரிந்தது. நெருப்புக் குச்சி யொன்றைக் கிழித்துப் பார்த்தான்.
கீழே கிடந்தவன் பழனியப்பன்!
அவன் கைகால்களெல்லாம் கட்டவிழ்க்கப் பட்டிருந்தன. ஆனால் இன்னும் மயக்க மருந்தின் வேகம் தெளியாது அவன் உறக்கத்தில் மூழ்கிக் கிடந்தான். தினகரன் அவனை அசைத்து உலுக்கி எழுப்பினான்.
இப்போது அவர்கள் ஏறி வந்து வத்தையைக் கடற் பேய் என்ற நீராவிப் படகின் பின் புறத்தில் ஒரு கயிற்றால் பிணைத்து விட்டு, என்ஜினை ‘ஸ்டார்ட்’ செய்தான் இருளப்பன். அலைகளைக் கிழித்துக் கொண்டு, கடற் பேய் புறப்படலாயிற்று.
“இவர்கள் நம்மை எங்கே கொண்டு போகிறார்கள்?” என்று திகிலோடு வினவினாள் பவானி.
“எங்கே கொண்டு போனாலென்ன? கடவுளும், கேசவனும் நம்மைக் கட்டாயம் காப்பாற்றுவார்கள். கவலைப்படாதே!” என்று சிரித்தான் தினகரன். ஆனாலும் உள்ளூர அவனுக்கும் பயம் இருந்து கொண்டுதானிருந்தது.
அத்தியாயம் – 27
செல்லையாவின் தீரம்!
டெலிபோனில் வந்த அபயக்குரலைக் கேட்டுவிட்டுப் புறப்பட்ட செல்லையா பதறியடித்துக் கொண்டு-ஆனால் துப்பறியும் கேசவன் தன்னைப் பின் தொடராமலிருப்பதற்காகச் சுற்றுப் பாதையில் பதுங்கிப் பதுங்கி நடந்தவாறு கடற்கரையை வந்தடைந்தான். ஆனால், அங்கே அவனுக்காகக் காத்திருப்பதாகக் கூறப்பட்ட வத்தையையோ நபரையோ காணவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தவாறு திகைத்து நின்றான்.
அடுத்த நிமிஷம், ஒரு பெரிய படகு அங்கு வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி, நேரே செல்லையாவை நோக்கி வந்தார் துப்பறியும் கேசவன். அவரைப் பார்த்ததும் அவன் நெஞ்சு பகீரென்றது.
“செல்லையா, நீ எதற்காக இங்கு வந்து நிற்கிறாய் என்பது எனக்குத் தெரியும். உன்னைக் கொல்வதற்காக இங்கு வஞ்சித்து அழைத்திருக்கிறார்கள் உன் எதிரிகள். அவர்கள் வார்த்தையை நம்பி நீ இங்கு வருவாயென்று எனக்குத் தெரியும். உனக்கு ஒன்றும் ஆபத்து நேராமல் காப்பாற்றும் பொருட்டு, நான் தின கரனை இங்கு முதலில் அனுப்பினேன். அவனை நீ சந்தித்தாயோ?” என்று பரபரப்போடு கேட்டார் துப்பறியும் கேசவன்.
“இல்லையே? நான் இன்னும் யாரையும் சந்திக்கவில்லை!” என்றான் செல்லையா.
“அப்படியானால் தினகரனுக்கே ஆபத்து நேர்ந்திருக்க வேண்டும். அவனைப் பின்தொடர்ந்து பவானியும் வந்தாள். அவளும் எதிரிகள் கையில் சிக்கிக்கொண்டிருக்கலாம். இப்படி ஏதேனும் ஆபத்து வரலாம் என்று எதிர்பார்த்தே, என்னுடைய படகை நான் சிறிது தூரத்தில் தயாராய்க் கொண்டு வந்து இருட்டில் மறைத்து வைத்திருந்தேன். அதைப் போய் நான் எடுத்து வருவதற்குள், காரியம் சிறிது மிஞ்சிப்போய்விட்டது. இருந்தாலும் பரவாயில்லை. நீ ஏறு படகில்!”
தினகரனும் பவானியும் தன்பொருட்டு ஆபத்துக்கு ஆளாகி யிருக்கிறார்களென்று தெரிந்ததும், செல்லையா
செல்லையா பதறிப்போய்ப் படகில் ஏறினான். உடனே, வெறித்தோடும் இளங்கன்றைப்போல், கீழ்த்திசையை நோக்கி வேகமாகப் பாய்ந்தது கேசவனின் படகு.
சந்திரன் அடிவானத்திலிருந்து லேசாகத் தலையை நீட்டினான். கேசவனின் பெரிய நீராவிப் படகின் சர்ச் லைட்டுகள் கடற்பரப் பைத் தம் ஒளி வெள்ளத்தால் துழாவிச் சுழன்றன. திடீரென்று, “அதோ போகிறது ஒரு சிறு படகு!” என்று தூரத்தே சுட்டிக் காட்டிய வண்ணம் கத்தினான் செல்லையா. அதைக் கண்டதும், தம் படகின் வேகத்தை இரட்டிப்பாக்குமாறு படகோட்டிக்கு உத்திரவிட்டார் துப்பறியும் கேசவன்.
எதிரிகளின் நீராவிப் படகின் காபின் அறைக்குள் அடை பட்டுக் கிடந்த தினகரன், அதன் ஜன்னல் துவாரத்தின் வழி யாகப் பின்னால் வரும் படகின் விளக்கொளியைக் கண்டான். “அதோ கேசவன் வந்துவிட்டார்!” என்று கூவினான் பவானி யைப் பார்த்து.
அதே சமயம் காபின் அறைக்கு வெளியே இருந்த மாயாண்டி “நம்மை யாரோ துரத்தி வருகிறார்களே?” என்று இருளப்பனை வியாகூலத்தோடு கேட்டான்.
“முட்டாள்! எல்லாம் உன்னால் வந்த வினை!” என்று திட்டினான் இருளப்பன்.
இரண்டு படகுகளுக்குமிடையே கால் மைல் தூரம் வித்தியாச மிருந்தது. இருளப்பனுக்கு எதிரே சொற்பத் தொலைவில் ஒரு பயங்கரமான பாறை தலை நிமிர்ந்து நின்றது. “டே மாயாண்டி, தயாராயிரு!” என்று கத்தியவாறு, கடற்பேயை அதன் உச்ச வேகத்திற்கு ஊக்கினான் இருளப்பன்.
‘படார்’ என்று பாறையில் போய் மோதியது படகு. அதே க்ஷணத்தில், வத்தையைக் கட்டியிருந்த கயிற்றை அறுத்துவிட்டு, அதில் தாவிக் குதித்தான் மாயாண்டி. கண் மூடித் திறப்பதற்குள், அவன் பக்கத்தில் வந்து நின்றான் இருளப்பன்.
கடற்பேயின் மரப் பலகைகள் சடசடவென்று நெரிந்தன. தண்ணீர் குபுகுபுவென்று உள்ளே புகுந்தது. படகு சாய்ந்து மூழ்கியது. அதன் என்ஜின் புகை, தண்ணீருக்கு மேல் சுழன்றது. நொறுங்கிய கட்டைகளும் எண்ணெயும் நீர்மேல் மிதந்தன. அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, தாம் ஏறியிருந்த வத்தை யைக் கரையை நோக்கிச் செலுத்தினர் இருளப்பனும் மாயாண் டியும். பின் படகில் வருபவர்கள், நீரில் மூழ்கியவர்களைத் தேட முனைவார்களே தவிர, தம்மைப் பின்தொடர முயலமாட்டார் களென்பது அவர்களுடைய திண்ணமான எண்ணம்.
அவர்கள் எண்ணியது சரியாயிற்று. துப்பறியும் கேசவன் அவர்களை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. அவர் கவனம் முழுதும் மூழ்கியவர்கள் மீதே லயித்திருந்தது. அடுத்த நிமிஷமே, அந்தப் பாறையண்டை வந்து நின்றது அவருடைய நீராவிப் படகு.
கடலினடியிலிருந்து குமிழிகள் கிளம்பிக்கொண்டிருந்தன. “இந்த இடத்தில் தண்ணீர் இருபது அடி ஆழத்திற்கும் அதிகமாக இருக்குமே?” என்று கவலையோடு கூறினான் படகோட்டி.
“தகுந்த உபகரணங்களில்லாமல் இருபதடிக்குக் கீழே முக்கு ளிப்பதும், அங்கு மூழ்கிக் கிடப்பவர்களைத் தேடியெடுத்துக் கொண்டு வருவதும் சற்றும் சாத்தியமில்லாத விஷயங்களா யிற்றே?” என்று மனதிற்குள் கிலேசமுற்றார் கேசவன். “ஒரு வேளை, முத்துக்குளிப்பவர்கள் வேண்டுமானால் அதைச் செய்யலாம்……” என்று அவர் எண்ணிக்கொண்டிருக்கும் போதே திடீரென்று, தண்ணீருக்குள் குதித்தான் செல்லையா. அவனைப் பின்பற்றித் தானும் குதித்தார் கேசவன்.
சிறிது நேரத்தில் அவர் மூச்சுத் திணறியது. எனினும் சிரமப் பட்டு அடிவரையில் போய்த் தடவிப்பார்த்தார். ஒன்றும் அகப்பட வில்லை. அவரது நுரையீரல் வெடித்துவிடும் போலிருந்தது. வேறு வழியில்லாமல் மேலே வந்தார்.
அதே சமயத்தில், அவருக்குப் பக்கத்தில் வேறொரு நபர் மேலெழும்புவது தெரிந்தது. திரும்பிப் பார்த்தார். கையில் பவானியைத் தாங்கியவண்ணம் காட்சியளித்தான் செல்லையா!
“இவளைப் பிடியுங்கள்!” என்று அவசரமாக அவளை அவரி டம் ஒப்படைத்துவிட்டு, அவன் மறுபடியும் கடலலைக்குள் மூழ் கினான். பவானியைக் கேசவன் தன் படகில் கொண்டுவந்து சேர்த்தார். அடுத்த சில விநாடிகளுக்கெல்லாம் கையில் தினகரனைச் சுமந்து கொண்டு மேலெழும்பினான் செல்லையா!
மறுபடியும் அவன் நீருள் மூழ்கினான். இந்தத்தடவை அவன் பழனியப்பனோடு திரும்பினான்!
மூவருக்கும் முதலுதவி சிகிச்சைகள் அளித்தார் அதில் திறமைசாலியாகிய கேசவன். அவர்களது சுவாசப்பைகளில் நிரம்பியிருந்த நீரெல்லாம் வெளியேற்றப்பட்டது. மூவரும் லேசாக மூச்சுவிடத் தொடங்கினார்கள்.
– தொடரும்…
– கொலைப்பித்தன் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1955, பிரேமா பிரசுரம், சென்னை.