கொலைப்பித்தன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 13,067 
 
 

(1955ல் வெளியான மர்ம நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம் – 19

கோதண்டத்தின் சூழ்ச்சி!

“நீ கூறுகிற யுக்தி பலிக்காது!” என்றான் கோதண்டம்.

“ஏன்? செல்லையாவின் மனப் போக்கை தெரிந்து கொள்ளாமல் பேசுகிறாய். பழனியப்பனுக்காக அவன் தன் உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டான். நாம் இப்போது வேறொன்றும் செய்ய வேண்டாம். பழனியப்பனை அவன் சந் தித்து, சிறிது பண உதவியும் செய்யுமாறு நாம் ஏற்பாடு செய்து விட்டு, அந்த சமயத்தில் போலீசாரைக் கூட்டி வந்து அவனைப் பிடித்துக் கொடுத்து விட வேண்டும். செல்லையாவும் குற்றவாளி யாகி விடுவான். வெள்ளை மாளிகையின் சொத்து நம் பத்மா வதிக்கு வந்து விடும்! எனக்கு அது மிகவும் சுலபமான காரியம்,” என்று தன் கையிலிருந்த காபியை உறிஞ்சினான் கண்ணன்.

இருவரும் கமல வனத்திலிருந்து நாலு மைல் தொலைவி லுள்ள ஒரு கிராமியக் காபி ஹோட்டலில் உட்கார்ந்து ரகசியமாக உரையாடிக் கொண்டிருந்தனர். 

“நீ நினைக்கிறபடி ஒன்றும் நடக்கப் போவதில்லை,” என்று தலையை ஆட்டினான் கோதண்டம். “சற்று முன்பு மஞ்சுளா எனக்கு டெலிபோன் பண்ணினாள். எக்காரணத்தை முன்னிட்டும் பழனியப்பனுக்கு உதவி செய்யக் கூடாதென்று, செல்லையாவை எச்சரிக்கை செய்திருக்கிறானாம் துப்பறியும் கேசவன்.” 

“கேசவன் எச்சரிக்கையை அவன் பொருட்படுத்த மாட் டான்; அதாவது பழனியப்பன் விஷயத்தில் மட்டும். செல்லையா அவனிடத்தில் அவ்வளவு அன்பு வைத்திருக்கிறான். பழனியப் பனிருக்குமிடத்தை மட்டும் அவனுக்கு நாம் அறிவித்து விட்டோ மானால், கேசவனுக்கும் தெரியாமல் அந்த இடத்துக்கு அவன் ஓடி வருவான்…”

“அந்தப்படி அவனை நாம் ஒரு தனியிடத்துக்கு வரவழைத்து, அந்த சந்தர்ப்பத்தை வேறுவிதமாகப் பயன் படுத்திக் கொண் டால்?” என்று கண்ணைச் சிமிட்டினான் கோதண்டம். 

அந்த அர்த்த புஷ்டியான சமிக்ஞையைக் கண்ணன் நொடிப் பொழுதில் புரிந்து கொண்டான். “சபாஷ்! பிரமாதமான ஐடியா! இந்த யோசனை ஏன் முதலிலேயே எனக்குத் தோன்ற வில்லை?” 

“ஏனென்றால், செல்லையாவை ஜெயிலுக்கு அனுப்புகிற திட்டத்திலேயே உன் புத்தி சுழன்று கொண்டிருக்கிறது”, என்று மெதுவாகச் சிரித்தான் கோதண்டம். “அதைத் தான் நாம் ஏற்கனவே முயன்று பார்த்து விட்டோமே ? அது பிரயோசனப் படவில்லை யென்னும் போது, இனி நாம் வேறு மார்க்கங்களைத் தானே கையாள வேண்டியிருக்கிறது?’ 

“எப்படி?” 

“தானிருக்குமிடத்துக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு, பழனி யப்பனே செல்லையாவுக்கு ஒரு தகவல் அனுப்புகிறான் என்று வைத்துக் கொள்வோம். உடனே அவன் எப்படியும் தவறாமல் வந்து சேருவான். அந்தச் சமயத்தில் தற்செயலாக ஒரு விபத்து நேர்ந்து, அதில் இருவருமே இறந்து விடுவார்களானால்?” 

“அதிலும் சில கஷ்டங்களிருக்கின்றன,” என்று தயக்க முற்றான் கண்ணன். “ஏனென்றால், நமக்கு எதிரிடையாக வேலை செய்பவன் துப்பறியும் கேசவன். கொலைக் குற்றங்களைக் கண்டு பிடிப்பதில் அவன் மகா தீரனென்று பேர் எடுத்தவன்…”

“அட பைத்தியமே! செல்லையாவையும் பழனியப்பனையும் கொலை செய்ய வேண்டு மென்றா நான் கூறினேன்? தற்செயலாக அவர்களுக்கு ஒரு விபத்து ஏற்படும் என்று தானே நான் சொன்னேன்? விபத்தினால் நேரும் மரணங்களுக்கு நாமா பொறுப்பாளி?” 

“விபத்து என்றால், அதை எப்படி நாம் சிருஷ்டிக்க முடியும்? செல்லையாவுக்கும் பழனியப்பனுக்கும் ஒரு மோட்டார் கார் கூட ஓட்டத் தெரியாதே?” 

“மோட்டார் காரில் அவர்களுக்கு வேலைபில்லை. அவர்களிருவரும் ஒரு படகில் போவார்கள். அந்தப் படகு தானாகவே கவிழ்ந்து அவர்களை மூழ்கடித்துவிடும். அதற்கெல்லாம் என்னால் எளிதில் ஏற்பாடு செய்ய முடியும். ஆனால், பழனியப்பன் அனுப்பும் செய்தியைத் துப்பறியும் கேசவனுக்குத் தெரியாமல் செல்லையாவிடம் எப்படிச் சேர்ப்பிப்பது என்பது இப்போது முக்கியமான பிரச்னை!” என்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான் கோதண்டம். 

“அது சுலபம்,” என்று அலக்ஷியமாகக் கூறினான் கண்ணன். 

“எப்படி?” 

“இன்றிரவு கிருஷ்ண மூர்த்தியின் வீட்டில் செல்லையாவுக்காக ஒரு விருந்து நடக்கப் போகிறது. அதற்கு என்னையும் அழைத்திருக்கிறார்கள். கமலவனத்திலுள்ள பெரிய மனிதர்கள் பலரும் வருவார்கள். அந்தச் சந்தடியில் செல்லையாவுக்கு ஒரு டெலிபோன் வந்தால், அதை யாரும் கவனிக்க மாட்டார்கள். ஒரு வேளை துப்பறியும் கேசவனே அதைக் கவனித்து விட நேர்ந்தாலும், செல்லையா அவனிடம் உண்மையைக் கூறமாட்டான்…” 

“அப்படியானால் நம் காரியங்களெல்லாம் இன்றிரவே சித்தியாக விட்டதாக எண்ணிக் கொள்!” என்று புன்னகைத்தவாறு, தன் நாற்காலியை விட்டு எழுந்தான் கோதண்டம். கண்ணன் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவனாய், “ஆமாம், இன்று முழுவதும் செல்லையா தன் வீட்டிலேயே தான் இருப்பானா?” என்று வினவினான். 

“இல்லை. அவன் மார்க்கெட்டுக்குப் போய்த் துணிமணிகள் வாங்கி வரவேண்டுமென்றானாம், கேசவனும் அவனோடு தொடரக் கூடுமென்று மஞ்சுளா சொன்னாள்!” என்றான் கோதண்டம். 

“ரொம்ப சரி. அதுவும் ஒரு விதத்தில் நமக்கு நல்லது தான்!” என்றான் கண்ணன். 

இருவரும் அந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்தனர். “நான் போய்ப் பழனியப்பனைக் கவனிக்கிறேன்,” என்று கண்ணனிடம் விடை பெற்றுச் சென்றான் அவன் கருத்திற்கியைந்த தோழன். 

அத்தியாயம் – 20

கன்னக்கோல் வேலை!

வெள்ளை மாளிகைக்கு டிப்டி சூப்பரிண்டு வந்து போனதிலி ருந்து, வெகு நேரம் வரை டெலிபோன் அறையிலேயே உட்கார்ந்திருந்து விட்டு வெளியே வந்தார், துப்பறியும் கேசவன். 

அவரைக் கண்டதும், “சரி, நாம் மார்க்கெட்டுக்குப் புறப்படலாமா?” என்றான் செல்லையா 

“மார்க்கெட்டுக்கு இன்று உன்னோடு நான் வரமுடியாது. எனக்கு வேறு வேலைகளிருக்கின்றன. ஆனால் நீ இவ்வூருக்குப் புதிதாகையால், நீ மட்டும் தனியே செல்வதும் உசிதமல்ல. பத்மாவதியம்மாளையும் மஞ்சுளாவையும் கூட அழைத்துக் கொண்டு போனால், அவர்கள் உனக்குப் பொருத்தமான நல்ல துணிகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார்கள். உங்களுக்காக ஒரு டாக்ஸியை வரச் சொல்லியிருக்கிறேன். நீ வாங்க வேண்டிய சாமான்கள் நிறைய இருப்பதால், நீங்கள் சீக்கிரமாகப் புறப்படுவது நல்லது!” என்றார் துப்பறியும் கேசவன். 

செல்லையாவுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. “கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் மஞ்சுளாவை நம்பக்கூடாது என்ற தொனியில் இவர் நம்மிடம் பேசினார். இப்போது இவரே நம்மை அவர்களோடு அனுப்பி வைக்கிறாரே?” என்று அவன் அதிசயித்தான். 

கேசவனது யோசனையைக் கேட்டு, மஞ்சுளாவும் பத்மாவதியுமே மனதிற்குள் வியப்புற்றனர். 

“இதில் ஏதேனும் சூழ்ச்சியிருக்குமோ?” என்று அவர்களுக்குச் சந்தேகம் தட்டியது. எனினும், செல்லையாவை ஒரு நாள் முழுவதும் தங்களுடன் கூட வைத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தை நழுவவிட அவர்கள் விரும்பவில்லை. 

பத்து நிமிஷத்திற்கெல்லாம் டாக்ஸி வந்து சேர்ந்தது. செல்லையா, மஞ்சுளா, பத்மாவதி மூவரும் அதில் புறப்பட்டுப் போயினர். அவர்கள் தலை மறைந்ததும், “என்ன சார், அவனை ஏன் இப்படி அந்த விஷப் பாம்புகளோடு அனுப்பினீர்கள்?” என்று கேசவனை வினவினான் தினகரன். “அவனுக்கு அவர்கள் ஏதேனும் தீங்கு விளைவித்து விட்டால்?” என்றும் அவன் கேட்டான். 

“அவர்கள் தீங்கு விளைவிக்கப் போவது என்னவோ நிச்சுயந்தான். ஆனால் அவன் தங்களுடன் இருக்கும்போது அதைச் செய்ய மாட்டார்கள். தற்செயலாக அவனுக்கு ஏதேனும் விபத்து நேர்ந்தால் கூட, அந்தப் பழி தங்களைப் பீடிக்குமே யென்று அவர்கள் பயப்படுவார்கள். அதனால்தான் தைரியமாக அவனை அவர்களோடு அனுப்பினேன்”, என்றார் துப்பறியும் கேசவன். 

தினகரனுக்கு இந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை. இருந்தாலும் ஏன் இந்த விஷப் பரீட்சை? நானாவது கூடப் போயிருக்கலாமே?” என முனகினான் அவன். 

“உனக்கு வேறு வேலையிருக்கிறது. இன்று மத்தியானமே நீ சென்னை போக வேண்டும். அங்கே எனக்கு ஒரு அவசரச் செய்தி வந்திருக்கும். அதையும் இதரத் தபால்களையும் எடுத்துக் கொண்டு நீ உடனே திரும்பி வரவேண்டும். அதற்கிடையில் டிப்டி சூப்பரிண்டையும் உள்ளூர் பத்திரிகை நிருபர் ஒருவரையும் நான் பார்க்க வேண்டும். நம்முடைய குண்டனை இங்கு பன்னிரண்டே கால் மணிக்கு வந்து சேரும் வண்டியில் அனுப்பி வைக்குமாறு நான் சென்னைக்கு டெலிபோன் செய்திருக்கிறேன். அதை ஸ்டேஷனுக்குப் போய் அழைத்து வரவேண்டும். அதற்குள் நாம் சிறிது கன்னக்கோல் வேலையும் செய்து முடிக்க வேண்டும்….” 

“என்ன! கன்னக்கோல் வேலையா?” என்று விழித்தான் தினகரன். 

“வேறொன்றுமில்லை. பத்மாவதியம்மாளின் ஜாகையைச் சிறிது சோதனை செய்ய வேண்டும். சும்மா பத்து நிமிஷ வேலை. அது வரையில் நீ கொஞ்சம் வெளியே நின்று கவனித்துக் கொண்டிரு!” என்று கூறிவிட்டு, அவ்விடுதியை நோக்கி நடந் தார் கேசவன். 

தாம் கூறியபடியே, கச்சிதமாகப் பத்தாவது நிமிஷத்தில் அவர் அவ்வீட்டை விட்டு வெளியே வந்தார். 

“என்ன? ஏதேனும் பலன் கிடைத்ததா?” என்று விசாரித்தான் தினகரன். 

“அங்கே வேறோன்றுமில்லை ; டெலிபோன் நம்பர்கள் குறித்து வைத்திருந்த சிறிய நோட்புக் ஒன்று கிடைத்தது. அது நமக்குப் பயன் படுமா வென்று பார்த்து விட்டு, திருப்பிக் கொண்டு போய் வைத்து விடவேண்டும். அதைத் தவிர, அங் இருந்து இந்த பாட்டில் ஒன்றை எடுத்து வந்திருக்கிறேன்!” என்று நீட்டினார் துப்பறியும் கேசவன். 

தினகரன் அதைக் கையில் வாங்கிப் பார்த்தான். அது ஒரு காலி மதுப் பாட்டில்; அதன் லேபிள் மீது “ஸிலோன் கிளப்” என்று எழுதப்பட்டிருந்தது. 

“இது மிகவும் விலையுயர்ந்த மது ஆச்சே? மேலும் இது இந்தியாவில் கிடைக்கக் கூடியதல்லவே?” என்றான் தினகரன். 

“இது சிலோனில் மட்டுமேதான் கிடைக்கும். அத்துடன், இதைக் குடித்துப் பழகியவர்களுக்குத்தான் இது பிடிக்கும். பத்மாவதி சிலோனில் இருக்கும்போது அவளுக்கு இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அதை விலை கொடுத்து இங்கு ரகசியமாகத் தருவிக்கும் அளவுக்கு, அவளிடம் பண வசதியோ ஆள் வசதியோ ஏது என்பது தான் புரியவில்லை!” 

“அவளே அதை வரவழைக்க வேண்டியதில்லை. அவளுக்கு வேறு யாரேனும் வாங்கிக் கொடுத்திருக்கலாம்!” 

“அப்படித் தான் நானும் ஊகிக்கிறேன்,” என்றார் துப்பறியும் கேசவன். 

அத்தியாயம் – 21

வேட்டை நாயின் மோப்பம்

சென்னையிலிருந்து வரும் பாஸஞ்சர் வண்டி, சரியாகப் பன்னிரண்டே கால் மணிக்குக் கமலவனம் ஸ்டேஷனில் வந்து நின்றது. அதில் குண்டனை எதிர் பார்த்துக் காத்திருந்த துப் பறியும் கேசவன், நேரே கார்டுவானுக்குச் சென்றார். அதன் கதவு திறக்கப்பட்டது. உடனே, ஆரஞ்சுக் கலரில் வெண்புள்ளி கள் வீழ்ந்த ஒரு பெரிய வேட்டை நாயானது, அவர் தோள் மீது. தாவிப் பாய்ந்தது. 

பிளாட்பாரத்திலிருந்த ஜனங்களெல்லோரும், அந்த வேட்டை நாயையும் துப்பறியும் கேசவனையும் வேடிக்கை பார்த்து நின்றனர். கேசவன் தோள்கள் மீது தன் முன்னங் கால்களை வைத்து அழுத்திய வண்ணம் அவர் முகத்தை நக்கு வதற்குத் தீவிரமாக முயன்றது அந்த நாய். கேசவன் அதைத் தன் கைகளால் தள்ளிப் பார்த்தார்; தொண்டை கிழியக் கத்தி அதட்டினார்; அவற்றையெல்லாம் அது சட்டை பண்ணு வதாகவே தோன்றவில்லை. அவர் சிரித்தார். 

கடைசியாக, மெதுவான குரலில், குண்டா, போதும் இறங்கு கீழே !” என்றார் அவர். 

நாய் பளீரென்று கீழே இறங்கி, மிகச் சாதுவாக நின்றது. அந்த மெதுவான குரலுக்குத் தான், அது கீழ்ப்படிவது வழக்கம் போலும்! 

பக்கத்தில் நின்ற பள்ளிச் சிறுமி யொருத்தி, “இந்த நாய் ரொம்ப அழகாயிருக்கிறது. இதை நான் தொடலாமா?” என்றாள் ஆவல் ததும்ப. 

“ஓ! சும்மா தைரியமாகத் தடவிக் கொடுக்கலாம். பெண் களிடத்தில் அதற்கு எப்போதும் பிரியமுண்டு!” என்று நகைத்தார் துப்பறியும் கேசவன். 

குண்டனின் அருகில் நெருங்கி, அவள் அதைத் தடவிக் கொடுத்தாள். பதிலுக்கு அவள் கரங்களை அது பக்ஷமுடன் நக்கியது. 

பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தாலும் அது உண்மை யிலேயே ஒரு சாதுவான நாய்தான். எந்தப் பச்சைக் குழந்தையும் அதனோடு பயமின்றி விளையாடலாம். ஆனால், ஏதேனும் அபாயகரமான தருணங்கள் வருமானால், அது ஒரு கொடிய சிறுத்தைப் புலியாக மாறிவிடும். அந்த விஷயத்தில், அது தன் எஜமானனைப் போலவே இயல்பு வாய்த்திருந்தது. 

வேட்டை நாயை அழைத்துக் கொண்டு துப்பறியும் கேச வன் ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார். தற் செயலாக, அங்கு அவரை ஓவியர் கிருஷ்ண மூர்த்தி சந்தித்தார். 

“ஹலோ! இதெங்கேயிருந்து வந்தது? பார்ப்பதற்கு அழ காயிருக்கிறதே! ஆனால் பொல்லாததாகவும் இருக்குமோ?” என்று ஓவியர் கிருஷ்ண மூர்த்தி கேட்டார். 

“அதை நாம் எப்படியிருக்கச் சோல்லுகிறோமோ அப்படி யிருக்கும்,” என்று புன்முறுவலித்தார் கேசவன். “ஹே குண்டா, இவரைக் கொஞ்சம் கவனித்துக் கொள்!” என்றார் தம் நாயை நோக்கி. 

உடனே குண்டன் தன் தலையைச் சற்று தாழ்த்தியவாறு, கிருஷ்ண மூர்த்தியைத் தன் சிவந்த விழிகளால் சீற்றத்தோடு நோக்கியது. அதைப் பரீட்சிப்பதற்காக, ஓரடி பின்னாலெடுத்து வைத்தார் ஓவியர். “அசையாதே!” என்று எச்சரிக்கை செய்வதுபோல் “உர்ர்..” என உறுமிய வண்ணம், தன் பற்களைப் பயங்கரமாகத் திறந்து காட்டியது வேட்டை நாய். 

“ஐயோ! பயமாயிருக்கிறது, ஸார்!” என்று பதறினார் கிருஷ்ண மூர்த்தி. 

“சரி, குண்டா, இனி இவர் நம் நண்பர்!” என்றார் துப்பறியும் நிபுணர். 

உடனே பளிச்சென்று சாந்தமடைந்து, கிருஷ்ண மூர்த்தியின் அருகில் சென்று அவரை அன்போடு நக்கியது குண்டன். 

இருவரும் பேசிக் கொண்டே, கேசவனின் ரோல்ஸ் ராய்ஸ் நிற்குமிடத்திற்கு வந்தனர். “ஒன்று சொல்ல மறந்து விட்டேனே? இன்றிரவு உங்கள் வீட்டில் நடக்கும் விருத்துக்கு, நான் மஞ் சுளாவையும் அழைத்திருக்கிறேன்.” என்றார் கேசவன். 

“அப்படியா?… அதை விட நீங்கள் ஒரு விரியன் பாம்பை அழைத்திருக்கலாம்!” என்றார் கிருஷ்ண மூர்த்தி. “இருந்தாலும் பரவாயில்லை. ஏதோ ஒரு காரியத்தைக் கருதித்தான் அவளை நீங்கள் அழைத்திருப்பீர்கள்.” 

“வேறொன்றுமில்லை. இன்றிரவு அவளையும் கண்ணனையும் நான் ஏக காலத்தில் கவனிக்க வேண்டியிருக்கிறது…”

“என்ன? கண்ணனைக் கூடவா தாங்கள் சம்சயப்படுகிறீர்கள்?” என்று வியப்புற்றார் ஓவியர். 

“என்ன செய்வது? பிறவியிலேயே நான் ஒரு சம்சயப் பிராணி. அது விஷயத்தில் உங்களுக்கும் எனக்கும் ரொம்ப வித்யாசம். நீங்கள் எல்லோரையும் நம்பிவிடுவீர்கள். செல்லையா நம்பக் கூடாதவர்களை நம்புவான் ; நம்ப வேண்டியவர்களை நம்ப மாட்டான். நான் எல்லோர் மீதும் சந்தேகப் படுவேன். என் தொழிலே அப்படிப் பட்டது !” என்று சிரித்துக் கொண்டே தம் காரிலேறினார் துப்பறியும் கேசவன். அவர் அருகில் தாவி அமர்ந்தது குண்டன். 

வெள்ளை மாளிகையை அடைந்ததும், பழனியப்பன் படுத்தி ருந்த அறைக்குள் குண்டனை அழைத்துச் சென்றார் கேசவன். அவன் உபயோகித்த மெத்தை, போர்வை, தலையணைகளையெல் லாம் அதை மோந்து பார்க்க விட்டார். குண்டா இந்த நபரை நீ கண்டு பிடிக்க வேண்டும்,” என்றார். 

உடனே, அந்தப் பெரிய வேட்டை நாயானது, தரையருகில் தன் மூக்கை வைத்துக் கொண்டு, தேடிச் செல்ல ஆரம்பித்தது. வெள்ளை மாளிகையின் காம்பவுண்டுக்கு வெளியே போய், இரண்டு வயல் வெளிகளைக் கடந்து, ஒரு குறுங்காட்டினுள் அது பிரவேசித்தது. அந்தக் காட்டையும் தாண்டி, மறுபடியும் ஒரு வயல் வெளியை அது அடைந்தது. அந்த வயல்களின் கோடி யில் காணப்பட்ட கண்ணனின் பங்களா வாயிலுக்கு அது வந்து சேர்ந்தது. 

வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே யாருமிருப் பதாகத் தோன்றவில்லை. வெளிக் கதவண்டை சற்று நின்று மோந்து பார்த்து விட்டு, நாய் கிழக்கு நோக்கித் திரும்பியது. கடைசியில் கடற்கரை யோரமாக இருந்த ஒரு பாழடைந்த கோவிலுக்குள், தன் எஜமானனை அது கூட்டி வந்து விட்டது. 

அந்தக் கட்டிடத்திலும் யாரையும் காணோம். ஆனால் சில சிகரெட்டுத் துண்டுகள் தரையில் கிடந்தன 

சிகரெட்டுப் புகை யின் வாசனை அங்கு நிலவி நின்றது. “இங்கிருந்து அவன் இப் போதுதான் வெளியே போயிருக்க வேண்டும், என்று ஊகித் துக் கொண்டார் துப்பறியும் கேசவன். 

கோயிலை விட்டு வெளிப்பட்ட குண்டன், கடல் அலைகளின் அருகில் வந்து அப்பால் செல்லாது நின்று விட்டது. “சரி, சரி, பயல் படகின் மூலமாகத்தான் தப்பிச் சென்றிருக்க வேண்டும்,” என்று முணுமுணுத்தவாறு, துப்பறியும் கேசவன் போலீஸ் ஸ்டேஷனை நோக்கித் தன் நாயுடன் நடக்கலானார். 


கேசவன் வருவதற்குச் சில நிமிஷங்கள் முன்னர்தான், அப்பாழுங் கோயிலை விட்டுப் பழனியப்பன் அழைத்துச் செல்லப் பட்டான். இருளப்பன், மாயாண்டி என்னும் இரண்டு படகோட்டிகள் வந்து அவனை ஒரு நீராவி ரோந்துப் படகில் ஏற்றிச் சென்றனர். இருளப்பன் படகை யோட்டினான். மாயாண்டியும் பழனியப்பனும் அதன் ‘காபின் அறையில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். 

“நல்ல வேளையாக நான் தப்பி வந்து விட்டேன். இனி என்னை யாரும் பிடிக்க முடியாது!” என்று மகிழ்ச்சியோடு கூறினான் பழனியப்பன். ஆனால் பசிதான் உயிரை வதைக்கிறது. நேற்றிரவு முதல் நான் ஒன்றுமே சாப்பிடவில்லை.” 

“எங்களிடம் கொஞ்சம் பழைய சாதம் இருக்கிறது. சாப்பிடுகிறாயா?” என்றான் மாயாண்டி. 

“ஓ! தாராளமாக!” என்று ஆர்வத்தோடு கூறினான் பழனியப்பன். 

ஒரு மரப் பெட்டியைத் திறந்து, கட்டுச் சாத மூட்டை யொன்றை வெளியே எடுத்தான் மாயாண்டி. 

மாயாண்டிக்கு வயது முப்பது இருக்கலாம். முரட்டுச் சரீரம்; விகாரமான தோற்றம். ஏதோ ஒரு விபத்தினால், அவனது வலது கண் பழுது பட்டிருந்தது. இடது கன்னத்தின் குறுக்கே, பெரிய வெட்டுக் காயத்தின் பழந்தழுப்பு ஒன்று காட்சி யளித்தது. அவன் ஒரு வேலைக்காரன் போலவும், இருளப்பன் ஓர் எஜமான் போலவும் அவர்கள் நடந்து கொள்ளும் தோரணை யிலிருந்து யூகித்துக் கொள்ளத் தக்கதாயிருந்தது. 

பழையது முழுவதையும் பழனியப்பன் சாப்பிட்டு முடிந்த வுடன், ஒரு தர்மாஸ் பிளாஸ்கிலிருந்து அவனுக்குச் சிறிது சூடான காபி ஊற்றிக் கொடுத்தான் மாயாண்டி ஒரு சக்தி வாய்ந்த மயக்க மருந்து அதில் கலந்திருப்பதை உணராமல், காபியை ஆவலோடு வாங்கிக் கடகடவென்று குடித்தான் பழனியப்பன். 

குடித்த சில நிமிஷங்களுக்கெல்லாம், தன்னையும் மீறிய தூக்கம் வந்து அவனை அமுக்க ஆரம்பித்தது. 

“ ஆமாம்,இன்னும் எவ்வளவு நேரத்தில் நாம் போய்ச் சேரலாம்?” என்று கொட்டாவி விட்டான் பழனியப்பன். 

“நீ இப்போது எங்கே போக வேண்டும்?” என்று கேட்டான் மாயாண்டி. 

“ஏன், சென்னைக்குத்தான், கண்ணன் உங்களுக்குத் தெரி விக்கவில்லையா?” 

“கண்ணனா ? அது யாரவன்?” என்று வியப்போடு கேட்டான் மாயாண்டி. ஆனால் பழனியப்பனின் காதில் அது விழ வில்லை. அதற்குள் அவன் தரையில் சாய்ந்து கண்ணயர்ந்து விட்டான். 

உண்மையில் மாயாண்டிக்கோ இருளப்பனுக்கோ கண்ணனை நேரில் தெரியாது. அவனைப் பற்றி அவர்கள் கேள்விப் பட்டதும் கிடையாது. கோதண்டம் ஒருவனைத்தான் அவர்கள் அறிவார்கள். அவனுக்காகத் தான் அவர்கள் இப்போது பாழுங் கோயிலிலிருந்து பழனியப்பனை அழைத்து வந்தார்கள். 

பழனியப்பன் குறட்டை விடத் தொடங்கியதும், இருளப்பனிடம் சென்று, “அடுத்த படியாக இந்தப் பயலை என்ன செய்ய வேண்டும்?” என்றான் மாயாண்டி. 

“கைகால்களைக் கட்டி ஒரு மூலையில் இழுத்துத்தள்ளி, ஏதேனும் ஒரு படுதாவைப்போட்டு அவனை மூடிவை. இந்தப் படகைக் கொண்டு போய்க் கரையோரமாக நிறுத்தி வைக்கிறேன். நீ இங்கேயே இருந்து ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள். நான் போய்க் கோதண்டத்திற்குத் தகவல் அனுப்பி விட்டு வருகிறேன்”, என்று கூறினான் இருளப்பன். 


இதே சமயத்தில், டிப்டி சூப்பரிண்டு சிங்கார வேலு முதலியாருடன் போலீஸ் ஸ்டேஷனில் உரையாடிக் கொண்டிருந்தார் துப்பறியும் கேசவன். 

“ஆகவே, கண்ணன் பங்களாவுக்குப் போய், அங்கிருந்து தான் பழனியப்பன் படகின் மூலமாகத் தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்கிறீர்களா?” என்று வினவினார் டிப்டி. 

‘ஆம்,’ என்று தலையை அசைத்தார் கேசவன். 

“அப்படியானால், அதைப் பற்றி நாம் கண்ணனைக் கூப்பிட்டு விசாரிக்கலாமா?” 

“விசாரித்தால், உங்களிடம் அவன் உண்மையை ஒப்புக் கொள்வான் என்று நம்புகிறீர்களா?” 

“ஒரு நாளும் மாட்டான்! உண்மையிலே அவனுக்கு ஒன் றும் தெரியாமலிருக்கலாம். தெரிந்தாலும் தெரிந்ததாக ஒப்புக் கொள்ள மாட்டான்” என்று உதட்டைப் பிதுக்கினார் முதலியார். “என்ன பைத்தியக்காரத் தனம் செய்து விட்டேன்! ரயில் அல் லது பஸ் மார்க்கத்தில்தான் பழனியப்பன் தப்பியோடுவான் என்று நினைத்து, நான் படகுகளைக் கண்காணிக்க மறந்து விட் டேன். இந்நேரம் அவன் வெகுதூரம் போயிருக்கக் கூடு மல்லவா?” 

“நான் அப்படி நினைக்க வில்லை. மறுபடியும் கமல வனத்தின் அருகிலேயே அவனை நாம் காண நேரலாம்!” 

“ஏன்?” 

“இப்போது, பழனியப்பன் தப்பிச் செல்வதற்கு யாரோ உதவியிருக்கிறார்களென்று தெரிகிறது. அவ்வாறு அவர்கள் ஒத்தாசை புரிந்ததன் உள் நோக்கம் என்ன ? கேவலம், கருணை யென்று கருதுகிறீர்களா?” 

“கருணையாவது களி மண்ணாவது! அயோக்கியப் பசங்கள்!” 

“அவனை ஏதோ ஒரு காரியத்துக்கு அவர்கள் பயன் படுத்திக் கொள்ளப் போகிறார்கள் அது என்ன காரியம் என்பது, அடுத்த. நாற்பத்தெட்டு மணி நேரத்துக்குள் நமக்கு வெளியாகி விடும்!” என்றார் கேசவன். 

“நீர் பேசுவது ஏதோ ஜோசியம் கூறுவது போல் இருக்கிறதே?” 

“அது மட்டுமல்ல. நேற்றிரவு நடந்த சம்பவங்களைப் பற்றி, நாளைக் காலையில் இன்னொரு அனாமதேயக் கடிதம் இவ்வூ ரெங்கும் பறக்க விடப்படும்”. 

“அதன் நோக்கம்?” 

“பொதுமக்கள் உள்ளத்தில் செல்லையாவைப் பற்றி இன்னும் சிறிது துவேஷத்தை வளர்க்கும் பொருட்டு. திடீரென்று அவனுக்கு ஏதேனும் அவகேடு நேர்ந்தால்கூட, அதைக் குறித்து யாரும் அனுதாபப்பட மாட்டார்களல்லவா?” 

“உமக்கு இன்றைக்குக் கற்பனாசக்தி அபாரமாய்ப் பெருக ஆரம்பித்துவிட்டது. பேசாமல் உட்கார்ந்து ஒரு கதை எழுதிப் பத்திரிகைக்கு அனுப்புமேன்?” என்று சிரித்தார் டிப்டி. 

“அதுவும் எழுதியிருக்கிறேன், உங்களைப் பற்றி!” என்று பதிலுக்கு நகைத்தார் கேசவன். 

“என்ன? என்னைப் பற்றியா?” 

“ஆமாம். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு நிகழ்ந்த முத்தையா முதலியாரின் கொலை சம்பந்தமாய் நீங்கள் மறுபடியும் புலன் விசாரணை செய்யப்போவதாக, ஒரு வதந்தி உலவுவதாக…”

“உமக்கென்ன பைத்தியமா?” என்று எரிந்து விழுந்தார் டிப்டி சூப்பரிண்டு. 

“மன்னித்துக்கொள்ளுங்கள். செந்தில்நாத முதலியார் குற்றவாளி அல்ல என்பது உண்மைதான் என்று இப்போதாவது நீர் நிரூபிக்கலாம். அதை நீர் விரும்பவில்லை என்றால் அந்தச் செய்தி இன்னும் அச்சுக்குப் போகவில்லை! அதில் உங்கள் பேருக்குப் பதிலாக என் பேரை வேண்டுமானால் மாற்றிப்போட்டு விடுகிறேன், சரிதானா?” என்று சிரித்தார் துப்பறியும் கேசவன். 

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தோன்றாமல் டிப்டி சூப்பரிண்டு விழித்துக் கொண்டிருந்து விட்டு, “அந்தப் பழைய வழக்கில் புதிதாக ஏதாவது சாட்சியம் இப்போது கிடைக்குமென நினைக்கிறீரா? செந்தில்நாத முதலியார் குற்றவாளி அல்ல என்பது உண்மைதான் என்று இப்போது திட்ட வட்டமாக நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டார். 

“நிரூபிக்க முடியும் என்றுதான் பரிபூரணமாக நம்புகிறேன்! செந்தில்நாத முதலியாருக்கு எதிராக விளங்கிய முக்கிய சாட்சியம் அருளானந்த சாமியார் கூறியதுதானே?” என்று கேட்டார் துப்பறியும் கேசவன். 

“ஆமாம்! அருளானந்த சாமியார் கூறிய சாட்சியத்தை ஆமோதித்த பத்மாவதியின் சாட்சியத்தை வேண்டுமானால் நாம் நம்பாமலிருக்கலாம். ஆனால் அருளானந்த சாமியார் பொய் சொல்லக்கூடியவரல்ல!” என்றார் டிப்டி. 

“நான் அந்த இரண்டு சாட்சிகளையுங் கூட நாளை இரவு வெள்ளை மாளிகையில் நடத்தப்போகும் ஓர் அதிசய விருந்துக்கு அழைத்திருக்கிறேன்!” 

“அருளானந்த சாமியாரும் உம் அழைப்பை ஏற்றுக் கொண்டு வரப்போவதாகத் தெரிந்துகொண்டேன். ஆனால் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் அவர் கொடுத்த சாட்சியத்திற்கு ஒரு வார்த்தைகூட மாறுதலாகச் சொல்லப்போவதில்லை என்றும் சாமியார் சொன்னார்!”

“ஆனாலும் அவர் வெள்ளை மாளிகைக்கு வருவது அவசியம்!” என்று கேசவன் சொல்லும்போது டெலிபோன் மணி அலறியது. 

– தொடரும்…

– கொலைப்பித்தன் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1955, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *