கொலைப்பித்தன்





(1955ல் வெளியான மர்ம நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21
அத்தியாயம் – 16
மாயமாய் மறைந்தான்!

காலை மணி ஒன்பதரையாயிற்று. செல்லையா அப்போது தான் கண் விழித்து எழுந்து தன் படுக்கையில் உட்கார்ந்தான். எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் துப்பறியும் கேசவன்.
“செல்லையா, நீ இந்த ஊருக்கு வந்து இன்னும் முழுசாக இருபத்தினாலு மணி நேரம் ஆகவில்லை. அதற்குள் எங்கு பார்த் தாலும் உன்னைப்பற்றி ஒரு கெட்ட பேர், பரவிவிட்டிருக்கிறது”, என்றார் துப்பறியும் நிபுணர்.
“அதற்கு நான் என்ன செய்யமுடியும்? இந்த ஊரிலுள்ள எல்லோருமே எனக்கு விரோதிகளாயிருக்கிறார்கள்!” என்று கொட்டாவி விட்டான் செல்லையா.
“உனக்கு யாருமே விரோதியில்லை. வேண்டுமானால் நீ வெகு சுலபமாக விரோதிகளைச் சம்பாதித்துக் கொள்ளலாம். ஓவியர் கிருஷ்ணமூர்த்தி அவருடைய குமாரிகள் போன்ற நண் பர்களைக் கூட, நீதான் உன் பேதமையால் விரோதித்துக் கொண்டு விட்டாய். உன் நன்மைக்காக அவர் என்னென்ன திட்டங்கள் போட்டு வைத்திருந்தார் தெரியுமா?”
“என்ன?”
“அதை இனிமேல் உன்னிடம் விவரித்துப் பிரயோஜன மென்ன? ஆனால் உதாரணத்துக்காக ஒரேயொரு விஷபம் மட்டும் கூறுகிறேன். இன்றிரவு அவர் வீட்டில் ஒரு விருந்து வைத்து, இவ்வூரிலுள்ள பிரமுகர்களை யெல்லாம் அதற்கு வரவழைத்து, அவர்களிடம் சிறந்த முறையில் உன்னை அறிமுகப் படுத்தி வைக்க அவர் ஆசைப்பட்டார்……”
“அப்படியா?” என்று வியப்போடு வினவினான் செல்லையா.
“ஆமாம். ஆனால் நீ நேற்று அவர் வீட்டில் நடந்துகொண்ட மாதிரியிலிருந்து, அந்த எண்ணத்தை அவர் கைவிட்டு விட்டார். அப்புறம் நான்தான் சில காரியங்களை உத்தேசித்து, மிகவும் சிரமப்பட்டு அவர் மனத்தை மாற்றினேன்…”
“அப்படியானால் இன்றிரவு நான் அவர் வீட்டில் விருந்து சாப்பிட வேண்டுமா?”
“ஆமாம்.”
“நான் மாட்டேன்,” என்று அழுத்தமாக உரைத்தான் செல்லையா.
“இனி நீ மாட்டேன் என்று மறுப்பதில் பிரயோஜனமில்லை. நான் ஏற்கனவே உனக்காக அதை ஒப்புக்கொண்டு விட்டேன். நீ வந்துதான் ஆகவேண்டும்,” என்றார் துப்பறியும் கேசவன்.
“ஆனால் …..” என்று தயங்கினான் செல்லையா.
“அவர்கள் உன்னை விருந்துக்கழைத்து என் கண்முன்னே கொன்றுவிட மாட்டார்கள்; பயப்படாதே! அவர்கள் உன்னை அழைத்திருக்கிறார்கள் என்றால், உன்மீதுள்ள பிரியத்தாலோ, உன் சொத்துகளின் மீதுள்ள பிரியத்தாலோ அல்ல!”.
“பின் எதற்காக?”
“அதுதான் சொன்னேனே! ஓவியர் கிருஷ்ணமூர்த்தி உன் தந்தையின் நண்பர். நீயோ பொதுஜன விரோதியாகி விட்டாய் ! அந்த அபிப்பிராயம் மாறுவதற்குத்தான்! பவானி உன்னைப்பற்றி விசாரித்துப்போக வந்தாள். நீ சந்தேகிப்பாயோ என்று நினைத்து அவள் செய்த பக்ஷணத்தில் ஒன்றுகூடக் கொண்டுவரவில்லை. மஞ்சுளாவாயிருந்தால் வாயில்கூட ஊட்டிவிடுவாள்!” என்று சிரித்தார் துப்பறியும் கேசவன்.
“நீங்கள் ஏன்சார் செல்லையாவை அனாவசியமாக வற்புறுத்துகிறீர்கள்?” என்று கேட்டவண்ணம் அவ்வறைக்குள் பிரவேசித்தான் துப்பறிபவரின் சிஷ்யனான தினகரன். கேசவனுக்கு அவன் உதவியாளனாக இருந்தபோதிலும், அவனை ஒரு தோழன் போலவே அவர் வாஞ்சையோடு நடத்திவந்தார். அவனும் சில சந்தர்ப்பங்களில் அவரிடம் ஒரு வித சலுகையோடு அதட்டிப் பேசுவது வழக்கம்!
“ஏன் நான் செல்லையாவை வற்புறுத்தக்கூடாது?” என ஒன்றுந் தெரியாதவர் போல் வினவினார் கேசவன்.
“ஏனென்றால் ஓவியர் கிருஷ்ணமூர்த்தியிடத்திலும் அவரு டைய பெண்களிடத்திலும் அவனுக்குக் கொஞ்சமேனும் நம்பிக்கையில்லை. கண்ணனையும் மஞ்சுளாவையும் போல், அவர்கள் அவ்வளவு நல்லவர்களல்லவென்பது அவனுடைய அபிப்பிராயம்!” என்றான் தினகரன்.
“ஒருவேளை ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் பெண்கள் நேற் றிரவு செல்லையாவுக்கு ஷர்பத்தில் மதுபானத்தைக் கலந்து கொடுத்திருப்பார்களோ?”-இது கேசவனின் கேள்வி.
“அதில் சந்தேகமென்ன? கவியாண வீட்டுக்கு அவர்களும் வந்திருந்தார்களல்லவா? அப்படியானால் அவர்களே தான் கொடுத் திருக்க வேண்டும். கண்ணனோ மஞ்சுளாவோ அந்தக் காரியத்தைச் செய்திருக்கவே மாட்டார்கள் ; ஏனெனில் அவர்களிருவரும் செல்லையாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் பாக்கியம் பெற்றவர்கள்!” என்று சிரித்தான் தினகரன்.
“நீங்கள் இப்போது என்ன சொல்கிறீர்கள்? கண்ணனையும் மஞ்சுளாவையும் நான் நம்பக்கூடாது என்கிறீர்களா?” என்று துப்பறியும் கேசவனைக் கேட்டான் செல்லையா.
“ஏன் அப்பா, நான் நம்பக் கூடாதென்றால் என் வார்த் தையை நீ கேட்கப்போகிறாயா? அதுதானில்லையே? இவ்வூரில் உனக்கு எல்லோருமே முன்பின் தெரியாதவர்கள்தான். ஆனால், அவர்களில் ஒரு சிலரின் போதனையை நீ ஏற்றுக்கொண்டு, மற்றும்சிலரைச் சந்தேகித்திருக்கிறாய். இதில் ஏதாவது வியவஸ்தை யிருக்கிறதா ? எதிலும் நீ உன் சொந்த அறிவை உபயோகிக்க வேண்டும். அவசரப்பட்டு ஒருவர்மீது அவநம்பிக்கைப்படக் கூடாது. அதேபோல் வசீகரமாகப் பேசுகிறவர்களெல்லாம் நண்பர்களென்று நம்பிவிடவும் கூடாது! அதாவது… அவசரப் பட்டு யாரையும் நம்பாதே; நம்பாமலும் இராதே!…அதாவது என்னைப்போல!” என்றார் துப்பறியும் கேசவன்.
“இவர் புத்திமதியை நீ ஏற்றுக்கொள்ளாதே, செல்லையா!” என்று குறுக்கிட்டான் தினகரன்.
“ஏன்?”
“இவர் உனக்கு இவ்வளவு தூரம் உபதேசம் பண்ணுகிறாரே, அதற்குத் தகுந்த யோக்கியதை இவருக்குக் கிடையாது. ஏனென் றால், இவரும் உன்னைப்போல் அவசரப் புத்திக்காரர்தான்!”
“அதை உன்னால் நிரூபிக்க முடியுமா?” என்றார் துப்பறியும் கேசவன்.
“தாராளமாக!” என்றான் தினகரன். கேசவன் பக்கம் திரும்பாமலே, அவன் செல்லையாவை நோக்கிப் பேசலானான்; “இந்தக் கிருஷ்ணமூர்த்தியையோ அவருடை பெண்களையோ இவருக்குச் சிறிதளவேனும் இதற்கு முன்பு பரிச்சயம் கிடையாது. நேற்றுக் காலையில்தான் அவர்களை முதன்முதலாகக் கண்ணால் பார்த்திருக் கிறார்.பார்த்த மாத்திரத்திலேயே, அவர்களிடத்தில் இவருக்குப் பரிபூர்ணமான நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. இத்தனைக்கும் இவர் ஒரு துப்பறியும் நிபுணர்! எப்படியிருக்கிறது லக்ஷணம்?”
செல்லையா தன் வாயைப் பிளந்தவாறு இருவரையும் மாறி மாறி நோக்கினான். அவனது அறிவுக் கண் திறக்கத் தொடங்கி விட்டதென்பதை, அவனது முகபாவத்தைக்கொண்டே ஊகித்துக் கொண்டனர் தினகரனும் கேசவனும்.
“சரி, செல்லையா நீ எழுந்து போய் ஸ்நானம் செய்துவிட்டு வா. நாங்கள் கீழே ஹாலில் உட்கார்ந்திருக்கிறோம்!” என்று கூறிவிட்டு வெளியே வந்தனர் துப்பறியும் நிபுணர்கள்.
மாடிப்படியிலிருந்து அவர்கள் கீழே இறங்கும்போது, ஹாலில் மஞ்சுளா நாணிக் கோணிக்கோண்டு எதிர்ப்பட்டாள்.
“செல்லையா எழுந்துவிட்டாரா?” என்று அவள் குனிந்த தலை நிமிராமல் கேட்டாள். அவள் கையில் டிபன் தட்டு இலையால் மூடியபடி இருந்தது. அதிலிருந்து வரும் தின்பண்டங்களின் வாசனையும், மஞ்சுளாவின் முகத்திலிருந்து வரும் பௌடர் வாசனையும் மனிதனுக்கு இரண்டுவிதமான பசியையும் உண்டாக்கி விடும்.
“எழுந்து ஸ்நான அறைக்குப் போயிருக்கிறார்!” என்றான் தினகரன்.
“அப்படியானால் நான் இன்னும் கால்மணி நேரம் கழித்தே டிபன் கொண்டுபோகலாம்”‘ என்று கூறியவாறு, கூடத்தில் போட்டிருந்த நாற்காலி ஒன்றில், துப்பறியும் கேசவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் மஞ்சுளா.
“அதிருக்கட்டும். நேற்றிரவு கனகப்பனை இங்கே கடப்பாறையால் தாக்கியது யாராயிருக்கலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்றாள் அவள் கேசவனை நோக்கி.
“அது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை உனக்குத் தெரிந்திருக்கலாமென்று நினைக்கிறேன்!” என்று சிரித்தார் கேசவன்.
வெறும் வேடிக்கைபோல் தொனித்த இந்த வார்த்தை, மஞ்சு ளாவைத் திடுக்கிட வைத்தது. எனினும் அவள் சீக்கிரம் சமா ளித்துக்கொண்டாள். தானும் தமாஷாகப் பேசுபவள் போலவே, “இந்தக் கேள்வியை நீங்கள் பவானியிடம் கேட்டிருக்கவேண்டும்.
ஏனென்றால் ஒருநாளுமில்லாத திருநாளாய் “நேற்று பாதி ஜாமத் தில் அவள் இந்த வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்ததிலிருந்து கனகப்பன் இங்கு அடிபட்டுக் கிடக்கப்போவதை அவள் ஏற்க னவே அறிந்திருப்பாள் என்று தெரிகிறதல்லவா?” என்றாள் அவள்.
“ஐயையோ! நீ இந்தமாதிரியெல்லாம் பேசித் தொலைக்காதே, அம்மா!” என்று பதறினான் தினகரன்.
“ஏன்?”
“நீ இவ்வளவு புத்திசாலியென்று தெரிந்துவிட்டால், அப்புறம் என் எஜமானர் என் உத்தியோகத்தைப் பிடுங்கி உன் கையில் கொடுத்துவிடப் போகிறார்!”
மஞ்சுளா சிரித்தாள், கேசவன் சொன்னார்:
“நல்ல வேளையாக நீ பவானியின் பேச்சை எடுத்தாய் – இல்லாவிட்டால் நான் மறந்தே போயிருப்பேன்.”
“என்ன?” என்றாள் மஞ்சுளா.
“இன்றிரவு பவானியின் வீட்டில் செல்லையாவுக்கு ஒரு விருந்து நடத்துகிறார்கள். அதற்கு அவர்கள் உன்னையும் அழைத்து வரும்படி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்!”
“கொஞ்சங்கூட வெட்கம் மானம் இல்லாதவர்கள் !… ஆமாம், அந்த விருந்துக்கு வருவதற்குச் செல்லையா சம்மதித்தாரோ?”
“ஓ!” என்று ஆமோதித்தார் கேசவன்.
மஞ்சுளாவின் விழிகளில் ஆச்சரியமும் கோபமும் கலந்து ததும்பின. “அப்படியானால், நான் வர முடியுமா வென்பதைப் பிறகு சொல்லுகிறேன்!” என்றாள் அவள்.
“உனக்குத்தான் அவர்களின் வீட்டுப் படியை மிதிக்கவே பிடிக்காதே!”
“ஆமாம்…ஆமாம்… ஆனால் செல்லையாவைக் காப்பாற்றவாவது நான் எந்த அவமானத்தையும் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும்… ஆனால்… அப்படிச் சந்தர்ப்பம் வராதென நினைக்கிறேன்!”
துப்பறியும் கேசவன் சிரித்துக்கொண்டார்!
சிறிது நேரம் சென்றபின், கைகளில் காபி பலகாரத் தட்டை ஏந்திக்கொண்டு, செல்லையாவின் அறைக்குள் புகுந்தாள் மஞ்சுளா.
அவளைக் கண்டதும், “எங்கே பழனியப்பன்? அவன் இன்னும் கீழே இறங்கி வரவில்லையா?” என்று கேட்டான் செல்லையா.
“பழனியப்பன் கிடக்கட்டும் உன்னிடம் நான் தனியே ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும்,” என்று கூறியவாறு, பலகாரத்தட்டை ஒரு மேஜைமேல் வைத்துவிட்டு, அவன் அருகில் சென்று கொஞ்சிக் குழைந்தவாறு அமர்ந்தாள மஞ்சுளா.
“செல்லையா, இந்தத் துப்பறியும் கேசவனை நீ இங்கே வைத்துக்கொண்டிருப்பது எனக்குக் கொஞ்சங்கூட இஷ்டமில்லை!”
“ஏன்? அவர் அவ்வளவு திறமைசாலியல்ல வென்று நீ அபிப்ராயப்படுகிறாயா?”
“திறமைசாலியாயிருக்கலாம். ஆனால் அவர் ஓவியர் கிருஷ்ணமூர்த்தியால் வரவழைக்கப்பட்டவர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவரைப்போலவே திறமைசாலிகள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை நீ அமர்த்திக்கொள்ளேன்?”
“கேசவனை உனக்குப் பிடிக்கவில்லையா?”
“பிடிக்கவில்லை யென்பதல்ல. அவரிடத்தில் எனக்கு நம்பிக்கையில்லை!” என்றாள் மஞ்சுளா.
“மஞ்சுளா, அவசரப்பட்டு ஒருவர்மீது அவநம்பிக்கைப்படக் கூடாது. அதேபோல், வசீகரமாகப் பேசுகிறவர்களெல்லாம் நண்பர்கள் என்று நம்பிவிடவும் கூடாது. கேசவனைப்போல ஒரு கெட்டிக்காரரான துப்பறியும் நிபுணர், இந்த பாரத தேசத் திலேயே கிடையாதென்கிறான் பழனியப்பன். ஆமாம், அவன் ஏன் இன்னும் எழுந்துவரக் காணோம்? கொஞ்சம் பொறு; நான் போய் அவனைப் பார்த்து அழைத்து வருகிறேன்,” என்று சொல் லிக்கொண்டே அவ்வறையிலிருந்து வெளியேறினான் செல்லையா.
இத்தகைய தோல்வியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை மஞ்சுளா. செல்லையாவின் மனத்தைக் கேசவன் எவ்வளவு கெடுத்து ‘ வைத்திருக்கிறாரென்பது அவளுக்குத் தெற்றெனப் பட்டது. கோபக்கனல் வீசும் கண்களால் செல்லையா சென்ற திசையை வெறித்துப் பார்த்தவண்ணம், அவள் திக்பிரமையுற்று உட்கார்ந்திருந்தாள்.
வேறொரு விதத்தில் செல்லையாவும் பிரமிக்கலானான். காரணம், பழனியப்பனை அவன் அறையில் காணவில்லை. வீடு முழுவதும் தேடிப்பார்த்தான். அவன் பேரைச்சொல்லிக் கூவிப் பார்த்தான். ஆனால் அவன் எங்குமே காணப்படவில்லை. பழனியப்பன் மாயமாய் மறைந்துவிட்டான்!
அத்தியாயம் – 17
நண்பனுக்கு உதவாதே!
“ஆச்சரியமாயிருக்கிறதே? கிருஷ்ணமூர்த்தி வீட்டா ருக்கும் மஞ்சுளாவுக்கும் கொஞ்சங்கூடப் பிடிக்காதென்றீர்களே; அப்படியானால் மஞ்சுளாவை அவர்கள் ஏன் விருந்துக்கு அழைத்தார்கள்?” என்று துப்பறியும் கேசவனைக் கேட்டான் தினகரன்.
“மஞ்சுளாவை அவர்கள் அழைக்கவில்லை; ; நான் தான் அவளிடம் ஒரு காரியமாக அப்படிக் கூறினேன்!” என்றார் கேசவன்.
“ஆனால் அவர்கள் வீட்டுக்கு அவள் வரமாட்டாள்.”
“அப்படி நினைக்காதே. செல்லையாவை விருந்துக்கு வரவொட் டாமல் அவள் தடுக்க முயல்வாள். அவன் மீறிவந்தால் அவளும் கூடத் தொடர்வாள்……ஓ! அதோ போலீஸ் டிப்டி சூப்பரெண்டு வருகிறாரே!” என்றவாறு எழுந்து வாசற்படியண்டை சென்றார் கேசவன். தினகரனும் அவர் அருகில் போய் நின்றான்.
ஒரு சார்ஜண்டையும் கான்ஸ்டேபிளையும் உடனழைத்துக் கொண்டு, ஒரு போலீஸ்காரில் வந்து இறங்கினார் டிப்டி சூப்ப ரெண்டு. நேரே துப்பறியும் கேசவனிடம் சென்று, “உங்கள் கட்சிக்காரர்களில் ஒருவனை நான் கைது செய்ய வந்திருக்கிறேன்!” என்று தன் சட்டைப் பையிலிருந்து ஒரு வாரண்டை. எடுத்தார்.
“நீங்கள் தேடி வந்திருப்பது பழனியப்பனைத்தானே?”
“ஆம். அவன் ஒரு பழைய குற்றவாளி. சில வருஷங்களுக்கு முன்பு சிறையிலிருந்து தப்பியோடியவன். அவனுடைய கைரேகையைப் பரிசோதித்ததிலிருந்து அது தெரிய வந்தது!” என்றார் டிப்டி.
“அப்படியானால் அவனை நீங்கள் கைது செய்வதைப்பற்றி எனக்கு ஆட்சேபணையில்லை,” என்று கேசவன் சொல்லிக்கொண் டிருக்கும்போதே,-வீட்டினுள்ளிருந்து, மஞ்சுளா பின் தொடர கேசவனிடம் ஏதோ கூற விரும்புபவன் போல் அவரை நோக்கி விரைந்து வந்தான் செல்லையா. அவருக்குப் பக்கத்தில் போலீஸ் அதிகாரிகள் நிற்பதைப் பார்த்ததும், அவன் சிறிது தயங்கி நின்றான்.
“என்ன விசேஷம்?” என்று அவனை வினவினார் கேசவன்.
“பழனியப்பன் நம் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டான். அவனை எங்குமே காணோம்!” என்றான் அவன்.
“காணோமா? அவன் எங்கே போயிருப்பான்?”
“அதுதான் தெரியவில்லை!” என்று சோகம் ததும்பக் கூறினான் செல்லையா. “நான் இந்த பங்களா முழுவதும் தேடிப் பார்த்துவிட்டேன்…”
“அதை நாங்களும் பார்த்துவிடுகிறோம்,” என்று கடுமையான குரலில் கூறியவாறு, தன் சிப்பந்திகளுடன் மாளிகைக்குள் புகுந்தார் டிப்டி சூப்பரிண்டு.
அவரது தலை மறைந்ததும் கேசவன் செல்லையாவைக் கேட்டார்: “பழனியப்பன் உன்னிடம் ஏதாவது சொன்னானா?”
“ஆம்! தான் போய்விட விரும்புவதாக நேற்றிரவே கூறினான். என்னிடம் கொஞ்சம் பணமும் கேட்டான்.”
“நீ கொடுத்தாயா?”
“நேற்று என் கையில் பணமில்லை. இன்றைக்குத் தருவதாக வாக்களித்திருந்தேன்.”
“சரி, இனிமேல் அவன் திரும்பிவந்து உன்னிடம் பணம் அல்லது இதர உதவிகள் பெற முயன்றால், நீ மறுத்துவிட வேண்டும்.”
“ஏன் அப்படி?” என்று சற்று சிடுசிடுத்த தொனியில் கேட்டான் செல்லையா.
“அவன் ஒரு பழைய குற்றவாளி. போலீசாரால் வெகு நாட்களாய்த் தேடப்படுபவன். நேற்று வரையில் அது உனக்குத் தெரியாமலிருந்திருக்கலாம். ஆனால் இனித் தெரிந்த பிறகும் நீ அவனுக்கு உதவி செய்தால், நீயும் ஒரு குற்றவாளியாகி விடுவாய்!’
“அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. அவன் எனது நண்பன். அவன் திரும்பி என்னிடம் வருவானாயின்….”
“அவன் திரும்பி உன்னிடம் வருவானாயின், நீ உடனே அவனைப் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்,” என்று கண்டிப்பான குரலில் கூறினார் கேசவன். “அவன் ஒரு பழைய குற்றத்திற்காக அனுபவிக்க வேண்டிய சிறைவாசம் இன்னும் பாக்கியிருக்கிறது. அதை அவன் அனுபவித்து விட்டு உன்னிடம் வந்தால், அப்புறம் நீ எவ்வாறு வேண்டுமானாலும் அவனுக்கு உதவி செய்யலாம். அப்படிக்கின்றி இப்போது நீ அவனிடம் அனுதாபம் காட்டினால், நீயும் தண்டிக்கப் படுவாய். இந்தச் சொத்துக்களும் உனக்குக் கிடைக்காமல் போய்விடும்!”
இப்படி இவர்களிருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, பங்களாவினுள்ளிருந்து பரபரப்போடு வெளியே வந்தார் டிப்டி சூப்பரிண்டு. பழனியப்பனைப் பற்றிக் கேசவன்கேட்ட அதே கேள் விகளை அவரும் செல்லையாவிடம் கேட்டார். கடைசியாக, “சிறை யிலிருந்து தப்பியோடிய ஒரு பழைய குற்றவாளிக்குத் தங்க இடம் கொடுத்த குற்றத்திற்காக உன்னை ஏன் இப்போது நான் கைது செய்யக் கூடாது?” என்றார் கடுமையான குரலில்.
செல்லையா திருதிருவென்று விழித்தான்; துப்பறியும் கேச வன் முகத்தைப் பார்த்தான்.
கேசவன் சிரித்தார். “பழனியப்பன் ஒரு பழைய குற்றவாளி யென்பது செல்லையாவுக்கு எப்படி சார் தெரியும்? உங்களுக்கே அந்த விஷயம் இப்போது தானே புரிகிறது?” என்றார் அவர் டிப்டியை நோக்கி.
எதற்கெடுத்தாலும் துப்பறியும் கேசவன் குறுக்கே நிற்பது டிப்டிக்குச் சிறிது எரிச்சலாக இருந்தது. எனினும் அதை வெளிக் காட்டிக் கொள்ள இயலவில்லை.
“சரி, அவன் பழையபடியும் உன்னுடன் தொடர்பு கொள்ள முயல்வானானால், நீ உடனே போலீசாருக்குத் தகவல் கொடுக்க வேண்டும்; ஜாக்கிரதை! நீ பணம் ஏதும் கொடுக் காததினால் அவன் வெகு தூரம் போயிருக்க முடியாது! இந்த வட்டாரத்தில் தான் தலை மறைவாகத் திரிந்து கொண்டிருப் பான்!” என்று செல்லையாவை எச்சரிக்கை செய்துவிட்டு, அவர் தன் கோஷ்டியுடன் காரில் ஏறினார்.
அத்தியாயம் – 18
கண்ணன் காட்டிய வழி!
வெள்ளை மாளிகையை விட்டுப் புறப்பட்ட பழனியப்பன், வேறெங்கும் நெடுந்தூரம் போய் விடவில்லை. போலீஸார் அவனைத் தேடிக் கொண்டிருந்த அதே சமயத்தில், அவன் கண் ணனுடைய காட்டுப் பங்களாவில்தான் உட்கார்ந்திருந்தான்.
கமல் வனத்தின் எல்லையை யடுத்து ஒரு சின்னஞ் சிறு காட்டு பங்களா’வை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு, அதில் தான் மட்டும் தனியாக வசித்து வந்தான். கண்ணன் தன்னுடைய போக்குவரத்துக்கள், ஸ்திரி சகவாசங்கள், நண்பர் குழாங்கள் போன்ற ‘சொந்த ‘ விஷயங்களில் தன் தந்தையான வக்கீல் வேதாசலத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்பதற் காகவே, அவன் நெடு நாளாக அவரை விட்டுப் பிரிந்து அவ்வாறு தனி வீட்டில் ஜாகை வைத்துக் கொண்டிருந்தான். முன் புறத் தில் ஒரு சிறிய தோட்டம், ஒரு குறுகலான தாழ்வாரம், ஒரு படுக்கை யறை, ஓர் உபரி அறை, ஒரு சமயலறை, ஒரு ஸ்நான அறை-இவ்வளவே அந்த ‘பங்களா’வின் அமைப்பு. இரவு நேரங்களில் கண்ணனுக்குத் துணையாக இருப்பதற்கு, தினந் தோறும் புதிது புதிதான இளம் பெண்கள் எங்கிருந்தோ அங்கு வந்து சேர்வார்கள். இதைத் தவிர, விசேஷ சந்தர்ப்பங்களில் தன் நண்பர்களுக்கு அவன் அங்கு தடபுடலான விருந்துகளும் அளிப்பதுண்டு. பயங்கரச் சதித திட்டங்களும் அங்கேதான் மதுக் கோப்பைகள் முன் உருவாவதுண்டு.
எங்கேயோ வெளியே போய்ச் சுற்றித் திரிந்து விட்டு, கண் ணன் தன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். உள்ளே பழனியப்பன் இருண்ட ஒரு மூலையில் பதுங்கி உட்கார்ந்திருப்பதைக் கண்டு அவன் வியப்புற்றான்.
“அட! நீ எப்போது வந்தாய்?”
“இப்போது தான்; கொஞ்ச நாழிக்கு முன்னால்.” என்றான் பழனியப்பன். அவனுடைய பேச்சும் தோற்றமும் கண்ணனுக்குச் சந்தேகத்தை அளித்தன.
“ஆமாம், நீ எப்படி உள்ளே நுழைந்தாய்? நான் வெளிக் கதவைப் பூட்டி விட்டல்லவா போயிருந்தேன்?” என்றான் கண்ணன்.
“பூட்டை உடைத்துக் கொண்டு தான் உள்ளே வந்தேன்!” என்று முணுமுணுத்தான் பழனியப்பன்.
“ஏன் அப்படி? செல்லையா உன்னை இங்கே அனுப்பினானா?”
“இல்லை. நான் இங்கு வந்திருப்பது செல்லையாவுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரியவும் கூடாது.”
‘ஓஹோ!’ என்று தலையை ஆட்டியவாறு தன் சட்டையைக் கழற்றி ஓர் ஆணியில் மாட்டி விட்டு, பழனியப்பன் அருகில் போய் அமர்ந்தான் கண்ணன்.
“என்ன சமாச்சாரம் ? செல்லையாவோடு நீ சண்டை போட்டுக் கொண்டு வந்து விட்டாயா?” எனப் பரிவான தொனியில் அவன் பழனியப்பனை விசாரித்தான்.
பழனியப்பன் தன் சுய சரிதையைச் சுருக்கமாகக் கூறினான். “நேற்றிரவு போலீஸ் ஸ்டேஷனில் என் பெரு விரல் ரேகையை எடுத்துள்ளார்கள். நான் ஒரு தப்பியோடிய தண்டனைக் கைதி யென்பது எப்படியும் அவர்களுக்குத் தெரிந்து போய்விடும். அவர்கள் என்னைத் தேடிப் பிடிப்பதற்குள் நான் இங்கிருந்து ஓடிப் போய் விடவேண்டும்,” என்றான் பழனியப்பன்.
“அப்படியா?……” என்று இழுத்தான் கண்ணன். “நீ இப்போது என்னிடம் உதவி கோரி வந்திருக்கிறாய். ஆனால் இதே உதவியை நீ செல்லையாவிடமிருந்து எளிதில் பெற்றிருக்கலாமே?”
“அவனிடமிருந்து அதை நான் பெற விரும்பவில்லை!” என்றான் பழனியப்பன் தீர்மானமான குரலில்.
“ஏன்?”
“எனக்கு அவன் உதவி செய்தது போலீசாருக்குத் தெரிந்தால், உடனே அவனும் குற்றவாளியாகி விடுவான். அதனால் அவனுடைய சொத்துக்களை யெல்லாம் அவன் இழந்துவிட நேரும்!” என்றான் பழனியப்பன்.
“ஓஹோ! நியாயந்தான்; அவன் சொத்துக்களை இழப்பது கூடாது. ஆனால் நான் மட்டும் உனக்கு உதவி செய்ய வேண்டும். அது போலீசாருக்குத் தெரிந்து அவர்கள் என்னை ஆறு மாதம் சிறையில் தள்ளினாலும், அதைப் பற்றி உனக்குக் கவலையில்லை ; அப்படித் தானே?”
இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்காது மௌனமாயிருந்தான் பழனியப்பன்.
“அதிருக்கட்டும். நீ இங்கிருந்து புறப்பட்டு எங்கே போகப் போகிறாய்?” என்று கேட்டான் கண்ணன்.
“நான் முதலில் சென்னை போய்ச் சேர்ந்தால் போதும். அப்புறம் நான் எப்படியும் தப்பித்துக் கொள்வேன். சென்னை வரையிலுள்ள ரயில் சார்ஜ் தான் எனக்கு இப்போது தேவை…!”
“நீ ரயிலிலோ, பஸ்ஸிலோ போனால், போலீசாரிடம் அகப்பட்டுக் கொள்வாய். இந்நேரம் அவர்கள் உன்னைத் தேட ஆரம்பித்திருப்பார்கள்!” என்றான் கண்ணன்
“அப்படியானால் நான் காட்டு மார்க்கத்தில் புகுந்து நடந்தே போய் விடுகிறேன். உனக்கு இஷ்டமிருந்தால் எனக்கு இரண்டு ரூபாய் கொடு. இல்லாவிட்டால் அதுவும் அவசியமில்லை!” என்று எழுந்தான் பழனியப்பன்.
“கொஞ்சம் பொறு, அப்பா,” என்று அவனைக் கையைப் பிடித்து உட்கார வைத்தான் கண்ணன். “நீ இந்த வீட்டுக்குள் நுழையும் போது உன்னை யாரேனும் பார்த்தார்களா?”
“என்னை என்ன அவ்வளவு முட்டாள் என்று எண்ணிக் கொண்டாயா?”
“அப்படியானால் சரி, நான் ஒரு யுக்தி சொல்கிறேன். அந்தப்படி செய்வாயா?”
“என்ன?”
“அதோ பார், கடற்கரை யோரமாக ஒரு பாழடைந்த கோயில் தெரிகிறது. அங்கே போய் உட்கார்ந்திரு. பொழுது இருட்டியவுடன், எவனாவது ஒரு படகோட்டியை உன்னிடம் அனுப்பி வைக்கிறேன். அவன் உன்னைத் தன் படகிலேற்றி, இரவோடிரவாய்ச் சென்னையில் கொண்டு போய்ச் சேர்த்து விடுவான்.”
அந்த வார்த்தையைக் கேட்டதும்,பழனியப்பன் கண்களில் உளங்கலந்த நன்றியின் ஒளி வீசியது. “கண்ணன், நீதான் என் உண்மையான நண்பன்!”
“அதெல்லாம் ஒன்றுமே சொல்லாதே. நீ இங்கு வந்து போனதையே மறந்துவிடு. என் வீட்டில் குற்றவாளிகளை வைத்துக் கொண்டிருக்க முடியாது! நான் பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை! குற்றவாளியை என் நண்பன் என்று வெளி யுலகத்திற்குக் காட்டிக் கொள்ள மாட்டேனே தவிர, உனக்கு இந்த அற்ப உதவியைச் செய்கிறேன்! என்ன நான் சொல்லுகிறது, புரிகிறதா? இதோடு என்னையே மறந்து விடு. இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே சில நண்பர்கள் வரப் போகிறார்கள். அதற்குள் நீ போய்விடு,” என்று அவனை வாசற் படியை நோக்கி வழிகாட்டினான் கண்ணன்.
பழனியப்பன் போனதும் கண்ணன் சிந்தனையில் ஆழ்ந்தான். அடுத்த படியாகச் செய்ய வேண்டிய தென்ன? போலீசாரை டெலிபோனில் கூப்பிட்டு, பழனியப்பனை இப்போதே பிடித்துக் கொடுத்து விடலாமா? அல்லது அவனை வேறு விதமாகப் பயன் படுத்திக் கொள்ளலாமா? எதற்கும் சதிக் கூட்டாளி கோதண்டத்தையும் கலந்து கொண்டு ஒரு முடிவுக்கு வரலாமென அவன் தீர்மானித்தான்.
– தொடரும்…
– கொலைப்பித்தன் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1955, பிரேமா பிரசுரம், சென்னை.