கொலைப்பித்தன்





(1955ல் வெளியான மர்ம நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம் – 13
பழனியப்பன் கை ரேகை

அதிகாலை மணி நாலரைக்கெல்லாம், கமலவனம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே வந்து நின்றது துப்பறியும் கேசவனின் ரோல்ஸ் ராய்ஸ் கார். வக்கீல் வேதாசலம், இன்ஸ்பெக்டர் தர்மராஜ், சப் இன்ஸ்பெக்டர் தங்கமணி, சார்ஜண்டு சத்திய நாதன், டிப்டி சூப்பரிண்டெண்டெண்டு சிங்காரவேலு முதலி யார்-இத்தனை பேரும் அங்கு ஏக காலத்தில் கூடியிருந்தனர். அவர்கள் எல்லோரும் துப்பறியும் கேசவனை நன்றாயறிந்தவர்கள் தான். அதிலும் சிங்காரவேலு முதலியார் அவருக்கு நெடு நாளைய நண்பர். நேரே முதலியாரிடம் போய், “விஷயம் என்ன?” என்று விசாரித்தார் கேசவன்.
நடந்த விஷயங்களைச் சுருக்கமாகக் கூறிவிட்டு, அவர் கடைசியாகச் சொன்னார்: “என் அபிப்ராயம் இதுதான் :- அதாவது, செல்லையாவும் பழனியப்பனும் கலியாண வீட்டிலி ருந்து நன்றாகக் குடித்துவிட்டு வந்து வெள்ளை மாளிகையில் படுத்திருக்கிறார்கள். அதில் சந்தேகமே இல்லை. அப்போது கன கப்பன் போய், கதவைத் தட்டியிருக்கிறான். இரண்டுபேர்களில் எவனோ ஒருவன் எழுந்து போய்க் கதவைத் திறந்தான். கனகப் பன் உள்ளே நுழைந்தான். அப்புறம் அவர்களுக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை. முடிவு என்னவென்றால், கனகப்பனை ஒரு கடப்பாரையால் அடித்து, மண்டையை உடைத்து வெளியே உருட்டித் தள்ளிவிட்டார்கள். இதுதான் நடந்த கதை.’
“இதைப்பற்றி செல்லையாவும் பழனியப்பனும் என்ன சொல்கிறார்கள்?” என்று துப்பறியும் கேசவன் கேட்டார்.
“அவர்கள் தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதிக் கிறார்கள். கனகப்பனைத் தங்கள் வீட்டில் பார்த்ததுகூட இல்லை என்கிறார்கள். ஆனால் செல்லையாவின் சட்டையில் ஒரு பெரிய ரத்தக்கறை காணப்படுகிறது. அது எப்படி வந்ததென்பதே தனக்குத் தெரியாதென்கிறான் அவன். உண்மையில் அவன் நன்றாய்க் குடித்திருக்கிறான். ஆனால், அதை ஒரு சமாதானமாகக் கூறி இந்த வழக்கில் அவன் தப்பித்துவிட முடியாது! ஆஸ்பத் திரியில் கனகப்பனின் உயிர் போய்விட்டால், இது கொலைவழக் காகிவிடும்!” என்று அழுத்தமாகக் கூறினார் டிப்டி சூப்பரிண்டு.
“ஒருவேளை அவர்கள் தற்காப்புக்காக அப்படிச் செய்ய நேர்ந்திருக்கலாம்,” என்றார் வக்கீல் வேதாசலம்.
“ரொம்ப அழகாயிருக்கிறதே! பாவம், கனகப்பனோ ஒரு வயோதிகன். மேலும் அவன் கையில் ஆயுதம் எதுவும் வைத்தி ருந்ததாகவும் தெரியவில்லை. அவனை இந்தத் தடிப் பயல்கள் இரண்டுபேரும் தற்காப்புக்காகக் கொன்றார்களென்றால், இதை யாராவது நம்புவார்களா? அப்படியே யிருந்தாலும், அவனை அடித்து வீழ்த்திய உடனே அவர்கள் டாக்டரையல்லவா கூப்பிட்டு அவனுக்குச் சிகிச்சையளித்திருக்க வேண்டும்? அல்லது போலீசுக்காவது ரிப்போர்ட்டு செய்திருக்க வேண்டும். இரண் டையும் விட்டு அவர்கள் ஏன் அவனை வாசற்படியில் உருட்டித் தள்ளினார்கள் ? அந்தச் சின்னச்சாமியும் பவானியும் இன்னும் அரைமணி நேரம் கழித்து வந்திருந்தால், கனகப்பன் பிரே தமாகி விட்டிருப்பானே? இப்போதும் அவன் பிழைப்பது நிச்சயமில்லை. கடைசியில் இது ஒரு கொலைக் கேஸாகத்தான் வந்து முடியும் போலிருக்கிறது,” என்று கூறி முடித்தார் டிப்டி சூப்பரிண்டு சிங்காரவேலு முதலியார்.
“உம்!” என்று பெரிய நெடுமூச்செறிந்தார் துப்பறியும் கேசவன். “ரொம்ப சரி. இப்போது செல்லையாவும் பழனியப் பனும் எங்கே ? கைது செய்து காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்களா ?”
“இன்னும் கைது செய்யப்படவில்லை. ஆனால் விசாரணைக் காக இங்கு அழைத்துவரப் பட்டுத் தனியாக அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார்கள்.”
“இந்த விசாரணை சமயத்தில், செல்லையாவின் சார்பாக யாரேனும் வக்கீல் ஒருவர் ஆஜராயிருப்பது, பின்னால் கேஸ் நடத்துவதற்கு அனுகூலமாயிருக்கும். அந்த நோக்கத்தோடுதான், அவனுடைய குடும்ப வக்கீல் என்ற முறையில், இதைக் கேள்விப் பட்டவுடன் ஓடிவந்தேன். ஆனால் அவன் என்னை விரும்பவில்லை,’ என்றார் வக்கீல் வேதாசலம்.
“பிறகு யாரை விரும்புகிறான்?” என்று வினவினார் துப்பறியும் கேசவன்.
“நீங்கள்தான் அவனுக்காக ஆஜராகவேண்டுமாம்,” என்று சிரித்தார் வக்கீல் வேதாசலம். “நீங்கள் அவனுக்கு என்னதான் சொக்குப்பொடி போட்டீர்களோ தெரியவில்லை. உங்களிடத்தில் அவனுக்கு அளவுக்கு மிஞ்சி நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. நீங்கள் ஒரு வக்கீல் அல்ல என்ற விஷயத்தைக்கூட அவனிடம் நான் விளக்கிக் கூறிவிட்டேன். அப்போதும்……”
“நான் வக்கீல் அல்லவென்று உங்களுக்கு யார் சொன்னது?’
“பிறகு எள்ன? நீங்கள் வக்கீல் பரீட்சை பாஸ் பண்ணியிருக்கிறீர்களா?” என்று வியப்போடு கேட்டார் வக்கீல் வேதாசலம்.
“என்னுடைய இருபத்து நான்காவது வயசிலேயே நான் வக்கீல் பரீக்ஷை பாஸ் பண்ணிவிட்டேன். ஆனால் அந்தத் தொழிலில் இல்லாததனால் வெளியே யாருக்கும் தெரியாது. இப்படி ஏதேனும் சந்தர்ப்பம் வந்தால் மட்டும் என் சன்னதை உபயோகிப்பேன். அதற்காக வருஷந்தோறும் தவறாமல் கட்ட ணம் கட்டிவருகிறேன், என்று தன் தோல் பையிலிருந்து ஒரு சன்னதை எடுத்தார் துப்பறியும் கேசவன்.
“அப்படியானால் நீங்கள் தாராளமாக ஆஜராகலாம்,” என்று ஆமோதித்துவிட்டு, ஒரு சேவகனைப் பார்த்து, “செல்லையாவை அழைத்து வா,” என்றார் டிப்டி சூப்பரிண்டு.
செல்லையா அழைத்துவரப்பட்டான். அவனுடைய மது போதை முற்றிலும் தெளிந்துவிட்டிருந்தது. துப்பறியும் கேச வனைக் கண்டதும், அவன் அகத்திலும் முகத்திலும் ஒரு புதிய தெம்பு பிறந்தது. அவனை விசாரிக்கத் தொடங்கினார் டிப்டி சூப்பரிண்டு.
“மிஸ்டர் செல்லையா, கனகப்பன் உம்முடைய மாளிகையில் அடிபட்டுக் கிடந்ததைப் பற்றி, உமக்கு ஒன்றுமே தெரியாதென்று நீர் இன்ஸ்பெக்டரிடம் கூறியிருக்கிறீர். இப்போது மிஸ்டர் துப்பறியும் கேசவன் உமக்காக இங்கு ஆஜராயிருக்கிறார். இது மாதிரி சந்தர்ப்பங்களில் போலீசாரிடம் உள்ளதை உள்ளபடி கூறிவிடுவதுதான் நல்லது என்பதை அவரும் உமக்கு எடுத்துச் சொல்வாரென நம்புகிறேன்!” என்று கேசவன் பக்கம் திரும்பினார் டிப்டி.
“ஆம், செல்லையா,” என்று ஆமோதித்தார் கேசவன். கனகப்பன் உன் வீட்டினுள் நுழையும்போது நீ பார்த்தாயா? உன்னை அவன் தாக்க முயன்றானா? அல்லது பயமுறுத்தினானா? எது நடந்திருந்தாலும், நீ பயப்பட வேண்டாம். தைரியமாக உண்மையைக் கூறிவிடு,” என்றார் அவர்.
“இன்றிரவு அவனை நான் கண்ணால்கூட பார்க்கவில்லை. அவன் என் வீட்டுக்கு வந்துபோன விஷயமே, போலீஸ் இன்ஸ் பெக்டர் சொன்ன பிறகுதான் எனக்குத் தெரியும்,” என்றான் செல்லையா.
“அப்படியானால் சரி. இனிமேல் எந்தக் கேள்விக்கும் நீ பதில் சொல்லவேண்டியதில்லை,’ என்று சொல்லிவிட்டு, டிப்டியை நோக்கிப் புன்னகை புரிந்தார் துப்பறியும் நிபுணர். “என் கட்சிக் காரரின் இந்த வாக்குமூலத்தை நீங்கள் வேண்டுமானால் எழுத்து மூலமாக வாங்கிக்கொள்ளலாம்.
டிப்டி சூப்பரண்டுக்கு இது பெருத்த ஏமாற்றமாயிருந்தது. செல்லையாவிடம் என்னென்னவோ கேள்வியெல்லாம் கேட்க வேண்டுமென்று அவர் எண்ணியிருந்தார். ஆனால் மேற்கொண்டு எதுவும் கேட்க இயலாதவாறு, கேசவனால் ஆக்கப்பட்டது அவ ருக்குச் சங்கடமாயிருந்தது. சரி, சரி. இவனை வெளியே கொண்டு போ. பழனியப்பனைக் கூட்டிவா,” என்று சிரித்தார் ஒரு கான்ஸ்டேபிளை நோக்கி
பழனியப்பன் அவ்வறைக்குள் கொண்டுவந்து நிறுத்தப்பட் டான். போலீஸ் அதிகாரிகளைக் கண்டு சற்றேனும் அச்சமுற்ற தாய்க்காணப்படவில்லை அவனது தோற்றம். ஆனானப்பட்ட டிப்டி சூப்பரிண்டின் எதிரிலேயே மிக அலட்சியமாகச் சிரித்துக் கொண்டு நின்றான் அவன்.
“மிஸ்டர் பழனியப்பன் …” என்று ஏதோ கேள்வி கேட்க ஆரம்பித்தவுடனேயே, அவரை அவன் குறுக்கே மறித்தான்.
சரி, சரி. ஏன் அனாவசியமாக உங்கள் தொண்டைத் தண் ணீரை வற்ற அடிக்கிறீர்கள் ? நீங்கள் என்ன கேட்கப் போகிறீர் களென்று எனக்குத் தெரியும். அதை நானே சொல்லிவிடு கிறேன். அந்த வெறிகொள்ளிப் பயல் கனகப்பனை நான் தான் அப்படி அடித்து வெளியே தூக்கி எறிந்தேன். போதுமா?”
பழனியப்பனது இந்த வார்த்தையைக் கேட்டதும், அங்கி ருந்த அனைவருமே திடுக்கிட்டனர். ஒரு நிமிஷ நேரம் யாருமே பேசவில்லை. கடைசியாக இன்ஸ்பெக்டர் தர்மராஜ் பேசினார்
கனகப்பனுக்கு மரணாபத்தான காயம் விளையும்படியாக அவனது மண்டையில் அடித்து, வீட்டுக்கு வெளியே சாகும்படி அவனை நீ விட்டெறிந்து விட்டாய் என்பதை ஒப்புக்கொள்கிறாய்!”
“ஆமாம்! அப்படித்தான்!” என்றான் பழனியப்பன் அலட்சியமாக.
“நீ அவ்வாறு செய்தது செல்லையாவுக்குத் தெரியுமா?”
“செல்லையாவுக்கு ஒன்றுமே தெரியாது. அவன் தன் அறையில் உறங்கிக்கொண்டிருந்தான்!” என்றான் பழனியப்பன்.
“அப்படியானால், கனகப்பனைக் கடப்பாறையால் அடித்துக் கொடுந் துன்பம் விளைவித்த குற்றத்திற்காக நான் இப்போது உன்னைக் கைதுசெய்யப் போகிறேன். ஆனால் ஓர் எச்சரிக்கை. கனகப்பன் உயிர் பிழைக்காது இறந்துவிட நேர்ந்தால், உன்மீது கொலைக்குற்றம் சாட்டப்படும்,’ என்று மிகக் கடுமையான தொனியில் கூறினார் டிப்டி.
“வாஸ்தவமான பேச்சு. அதுதான் உங்கள் கடமை ! ஆஹா ! ஒரு பெரிய சிக்கல் வெகு சுலபமாகத் தீர்ந்துவிட்டது!” என்று ஒப்புக்கொண்டார் துப்பறியும் கேசவன். “ஆனால், இந்த என் கட்சிக்காரரிடத்தில் நான் இரண்டொரு கேள்விகள் கேட்க லாமா?” என்று அவர் கேட்டார்.
“தாராளமாக. அதற்கு உங்களுக்குப் பரிபூர்ண உரிமையிருக்கிறது”.
“ரொம்ப வந்தனம்,” என்று கூறிவிட்டு, பழனியப்பனை நோக்கித் தம் கேள்விகளை ஆரம்பித்தார் துப்பறியும் கேசவன்.
“மிஸ்டர் பழனியப்பன், நடந்த விஷயங்களை நன்றாய் ஞாப கப்படுத்திக்கொண்டு பதில் சொல்லவேண்டும். முதலாவது, கனகப்பனைக் கடப்பாறையால் அடித்து வீழ்த்தி, வெளியே தள்ளிக் கதவைத் தாழிட்டபிறகு நீ என்ன செய்தாய்?”
”நேரே என் அறைக்குப் போய்ப் படுத்துக்கொண்டேன் !” அப்படியானால், செல்லையாவின் சட்டையில் எப்படி ரத்தக் கறை ஏற்பட்டது?”
பழனியப்பன் வெடுக்கெனத் துப்பறியும் கேசவனை வெறித் துப்பார்த்தான். சட்டென ஒரு புத்தி சாதுரியம் அவன் முகத்தில் பளிச்சிட்டது.
“என் அறைக்குப் போகும் வழியில் செல்லையா தூங்கு கிறானா, விழித்திருக்குகிறானாவென்று கதவைத் திறந்து பார்த் தேன். உள்ளே அவன் தூங்கிக்கொண்டிருந்தான். என் கையெல் லாம் ஒரே ரத்தக்கறையாயிருந்தது. அதை அங்கே தொங்கிக் கொண்டிருந்த ஒரு துணியில் துடைத்துவிட்டுப் போனேன்! அது செல்லையாவின் சட்டை என்பதைப்பற்றி நான் யோசிக் கவே இல்லை ! அந்தச் சமயத்தில் என் நிலை அப்படிப்பட்டது.”
“செல்லையாவின் படுக்கையறைக் கதவு உட்புறம் பூட்டப் பட்டிருக்கும் போது, அதை எப்படி உன்னால் திறக்கமுடிந்தது ?” என்று கேட்டார் துப்பறியும் கேசவன்.
“அது அவ்வளவு கெட்டியான பூட்டில்லை. கதவிலுள்ள வெளிக் கைப்பிடியைத் திருகின மாத்திரத்திலேயே அது திறந்து கொண்டது.”
“ஓஹோ! பிறகு அந்தக் கைபிடியிலும் ரத்தக்கறை பட்டிருக்க வேண்டுமே?” என்று இன்ஸ்பெக்டரை நோக்கினார் கேசவன்.
“இல்லை. செல்லையாவின் சட்டையையும் கடப்பாறையையும் தவிர வேறு எதிலுமே ரத்தக்கறை காணப்படவில்லை!” என்று பதிலளித்தார் இன்ஸ்பெக்டர்.
“கைப்பிடியிலிருந்த ரத்தக்கறையை நான் துடைத்து எடுத்து விட்டேன்,” என்றான் பழனியப்பன்.
“எதைக்கொண்டு துடைத்தாய்?”
“எதைக்கொண்டு?” என்று கோபத்தோடு தடுமாறிய அவன், “ஏதோ ஒரு கிழிந்த துணிக் கந்தலைக் கொண்டுதான்!” என்று கடுகடுப்பாகக் கூறினான்.
“அந்தக் கந்தல் துணி உனக்கு எங்கே கிடைத்தது?” என்றார் துப்பறியும் கேசவன்.
“இதென்ன கேள்வி ? அது… அது… நான் அதை எங்கேயோ கிடந்தெடுத்தேன். தற்செயலாக அந்தச்சமயம் அது என் சட்டைப் பையிலிருந்தது.”
“சரிதான். இந்தமாதிரி எப்போதாவது ரத்தக்கறைகளைத் துடைக்கவேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்து, நீ ஏற்கெனவே அதைச் சித்தமாய் எடுத்து வைத்திருந்தாய் போலிருக்கிறது. அது போகட்டும். அந்தத் துணியின் நிறம் என்ன? அதாவது அதில் ரத்தம் படிவதற்கு முன்னால் இருந்த அதன் ஒரிஜினல் நிறம் என்ன?” என்று புன்முறுவலுடன் கேட்டார் துப்பறியும் கேசவன்.
பழனியப்பன் உள்ளத்தில் சிறிது குழப்பமும் கோபமும் விளைந்தன. “அதையெல்லாம் நான் கவனிக்கவில்லை! அந்தக் கந்தல் துணி என்ன நிறமாயிருந்தாலென்ன?” என்று வெடுக் கெனப் பதிலளித்தான்.
“நியாயந்தான். ஆனால், கதவின் கைப்பிடியைத் துடைத்து விட்டு அந்தக் கந்தலை நீ என்ன செய்தாய்?”
“அதை… அதை…நான் அதை விட்டெறிந்துவிட்டேன்!”
“எங்கே?”
“எங்கேயா?…அது வந்து… அங்கேயேதான். இதெல்லாமா ஒரு மனிதன் நினைவில் வைத்திருக்க முடியும்?” என்றான் எரிச்சலோடு பழனியப்பன்.
இன்ஸ்பெக்டரை நோக்கித் துப்பறியும் கேசவன் திரும்பினார். “மிஸ்டர் இன்ஸ்பெக்டர், அந்த வீட்டை நீங்கள் பரிசோதிக்கும் போது எங்கேயாவது அம்மாதிரி இரத்தக்கறை படிந்த கந்தல் துணியை நீங்கள் கண்டெடுத்தீர்களா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், இந்த வழக்கிலேயே அது ஒரு முக்கியமான தடயம். ஆகையால் உங்கள் கவனத்திலிருந்து அது தப்பியிருக்க முடியாது!” என்றார் கேசவன்.
“கந்தல் துணியாவது, கத்தரிக்காயாவது? இவன் சொல்வது அத்தனையும் பொய், சார்,” என்று வெறுப்போடு கூறினார் டிப்டி சூப்பரிண்டு, “ஏ கான்ஸ்டேபிள், இவனைக் கொண்டு போ வெளியே! சுத்தப் புளுகுணிப்பயல்!”
பழனியப்பன் அவ்வறையை விட்டு அழைத்துச் செல்லப்பட்டான். துப்பறியும் கேசவன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார்.
”நான்கூட இவன் வார்த்தையை முதலில் உண்மையென்றே நம்பிவிட்டேன்,” என்றார் டிப்டி. “அயோக்ய ராஸ்கல், அவ்வளவும் ஒரு நிமிஷத்துக்குள்ளே கதை திரித்துவிட்டான்! இவன் ஏன் அப்படி வலிய வந்து குற்றத்தைத் தலையில் வாரிப் போட்டுக் கொண்டான்? அதற்குக் காரணம் ஏதேனும் உங்களுக்குப் புலப்படுகிறதா, மிஸ்டர் கேசவன்?”
“காரணம் வேறொன்றுமில்லை. அந்தக் காலத்தில் பழனியப்பன் ஒரு கப்பல் விபத்தில் தத்தளிக்கும் போது, அவனுயிரைக் காப்பாற்றினானம் செல்லையா. அதற்குப் பதிலுபகாரமாக, இப்போது செல்லையாவைக் காப்பாற்ற முயல்கிறான் பழனியப்பன்,” என்று சிரித்த துப்பறியும் கேசவன், “ஆகவே, என் கட்சிக்காரர்களைக் கைது செய்வதற்குப் போதுமான சாட்சியம் இன்னும் உங்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்களிருவரையும் நான் அழைத்துச் செல்லலாமல்லவா?” என்று கேட்டார்.
துப்பறியும் கேசவனைச் சற்று கடுமையாக நோக்கினார் டிப்டி சூப்பரிண்டு. “நீர் இப்போது அழைத்துச் செல்வதை நான் ஆட்சேபிப்பதற்கில்லை. ஆனால் இந்தமட்டோடு அவர்கள் தப்பித்து விட்டதாக நினைக்கவேண்டாம். இரண்டு பயல்களில் ஒருவன் தான் நன்றாகக் குடித்துவிட்டுக் கனகப்பனைத் தாக்கியிருக்க வேண்டும். முக்கியமாக, அந்தப் பயல் பழனியப்பனைப்பற்றி ஏனோ எனக்குப் பலத்த சந்தேகமாயிருக்கிறது. அவன் கைரே கையை எடுத்து நான் நிபுணரின் பரிசோதனைக்கு அனுப்பப் போகிறேன். நாளை மத்தியானத்திற்குள் எனக்குப் பதில் கிடைத்துவிடும். அப்புறம் அவனை நான் பார்த்துக்கொள் கிறேன்,” என்று சீறினார் டிப்டி சிங்காரவேலு முதலியார்.
“உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில், நான் உங்களைக் காட்டிலும் ஆர்வமுடையவன் என்பதை மறந்துவிடாதீர்கள், மிஸ்டர் முதலியார்,” என்று கூறியவாறே, துப்பறியும் கேசவன் தம் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார். “அதிருக்கட்டும். உங்களிடமிருந்து நான் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.”
“என்ன?”
“பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு முத்தையா முதலியார் கொலைவழக்கில், தூக்குமேடை ஏறாமல் தெய்வாதீனமாகத் தப்பித்துக்கொண்டார் செந்தில்நாத முதலியார். அவர் உண்மையில் நிரபராதி யென்று நீங்கள் நம்புகிறீர்களா?”
“முடிந்துபோன பழைய கதையைப்பற்றி இப்போதென்ன விசாரம்?”
“அது இன்னும் முடிந்துபோகவில்லை, மிஸ்டர் முதலியார். அந்த முத்தையா முதலியாரின் ஆவியானது, அடிக்கடி வெள்ளை. மாளிகைக்கு விஜயம் செய்கிறதாமே? நீங்கள் கேள்விப்பட்ட தில்லையா?”
“என்ன மிஸ்டர் கேசவன், நீங்கள் கூடவா பேய் பிசாசுகளில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்?” என்று சிரித்தார் டிப்டி.
“நாம் நம்பிக்கை வைத்தாலும் வைக்காவிட்டாலும், சில சமயங்களில் பேய்களும் நமக்குப் பல பேருண்மைகளை விளக்குகின்றன,” என்றார் துப்பறியும் கேசவன்.
அத்தியாயம் – 14
சாமியார் வருவார்
செல்லையாவையும் பழனியப்பனையும் தம் காரில் அழைத் துக்கொண்டு துப்பறியும் கேசவன் மெதுவாக வெள்ளை மாளி கைக்கு வந்து சேர்ந்தார். அவர்களது வருகையை எதிர்பார்த்து அங்கு ஏற்கனவே காத்திருந்தனர். ஓவியர் கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், மஞ்சுளா, பத்மாவதியம்மாள் ஆகிய நால்வரும். அங்கு காத்திருந்த பவானியோ, மஞ்சுளா வந்ததும் போய் விட்டாள்.
செல்லையா காரை விட்டிறங்கியதும். கண்ணனும் மஞ்சு ளாவும் அவனை வந்து சூழ்ந்துகொண்டனர். கிருஷ்ணமூர்த்தி மட்டும் அவனை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் நேரே துப்பறியும் கேசவனிடம் வந்து விசாரித்தார்:
“என்ன ஆயிற்று ? நல்ல வேளையாகப் போலீசார் செல்லை யாவை இன்னும் கைது செய்யவில்லை யென்று தெரிகிறது!”
“அவன் எந்த நிமிஷத்திலும் கைது செய்யப்படலாம்,” என்றார் துப்பறியும் கேசவன்.
கேசவனைப் பார்த்துச் சிறிது கோபத்தோடு பேசினான் பழனியப்பன் : “நீர் இடையில் வந்து அநாவசியமாகக் குறுக்கிட்டுக் குட்டையைக் குழப்பிவிட்டீர். இல்லாவிட்டால் போலீசார் என் வாக்குமூலத்தை அப்படியே நம்பியிருப்பார்கள். செல்லையா சௌகரியமாகத் தப்பித்துக் கொண்டிருக்கலாம். அதைக் கெடுத்து விட்டீர்.”
“செல்லையா மட்டுமென்ன? உன்னுடைய பித்துக்கொள்ளித் தனமான வாக்குமூலத்தால் உண்மைக் குற்றவாளி எவனோ, அவன் கூடத்தான் சுலபமாகத் தப்பித்துக் கொண்டிருப்பான். நான் அதையும்தான் கெடுத்துவிட்டேன்!” என்று சிரித்தார். துப்பறியும் கேசவன்.
இதற்கிடையில், கண்ணனும் மஞ்சுளாவும் செல்லையாவோடு குழைந்து பேசிக்கொண்டு நின்றனர்.
“போலீசாருடைய பழக்கமே இப்படித்தான். எடுத்த எடுப்பில் நிரபராதிகள் மீதுதான் அவர்கள் திருஷ்டியைச் செலுத்துவார்கள். போயும் போயும் உன்னை அவர்கள் சந்தேகித்தார்களே!”
“அவர்களுடைய மூளையை என்னவென்று சொல்வது!” என்று பரிதாபமுற்றான் கண்ணன்.
“செல்லையா. உன்னைப்பற்றி யார் யார் என்ன நினைத்தாலும் சரி; நீ குற்றமற்றவன் என்றே நான் நிச்சயமாக நம்புகிறேன். உன் வாழ்வு தாழ்வு இரண்டிலும் என் உள்ளம் பரிபூர்ணமாகப் பங்கு கொண்டு விட்டது,” என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு, கண்களில் நீர் ததும்ப உருக்கமாகக் கூறினாள் மஞ்சுளா. அவளுடைய நடிப்புத் திறத்தைக் கண்டு உண்மையிலேயே பிரமித்து நின்றார் துப்பறியும் கேசவன்.
“இவ்வளவும் என்னுடைய அஜாக்கிரதையால் வந்த வினை,” யென்று தன்னைத்தானே நொந்துகொண்டான்
கண்ணன். “நேற்றிரவு இங்கே உன்னை மயக்கத்தோடு படுக்கவைத்துவிட்டு, நான் கலியாண வீட்டுக்குத் திரும்பிப் போயிருக்கக் கூடாது. ஆனால் இப்படியெல்லாம் நடக்குமென்று யார் கண்டது?”
இப்போது துப்பறியும் கேசவன் குறுக்கிட்டார்: “அதிருக்கட்டும், கண்ணன். கலியாண வீட்டில் செல்லையாவுக்கு ஜின்னோ. விஸ்கியோ கொடுத்தது யார்?”
“ஜின்னாவது விஸ்கியாவது ? அதெல்லாம் அங்கே ஏது? என்ன செல்லையா, கலியாண வீட்டில் நீ ஜின்னும் விஸ்கியுமா சாப்பிட்டாய்?”
“அந்த இரண்டையுமே நான் எங்கும் சாப்பிட்டதில்லை. ஆனால் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து இப்போது இங்கே வரும் வழியில் துப்பறியும் கேசவன் என்னை ஒரு டாக்டரிடம் அழைத் துச்சென்று, பரிசோதனை செய்வித்தார். நான் ஜின்னோ விஸ் கியோ அருந்தியிருக்க வேண்டும் என்று டாக்டர் தெரிவித்தார். அதை எனக்கு யார் கொடுத்தார்களென்பது தான் புரியவில்லை. என்னைப் போலவே னியப்பனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது!” என்றான் செல்லையா.
“அப்படியா?” என்று ஆச்சரியமுற்றான் கண்ணன். சிறிது நேரம் யோசித்துவிட்டு அவன் கூறினான்: “கலியாண வீட்டுக்கு வந்திருந்த பெரிய மனிதர்களில் அநேகருக்குக் குடிப்பழக்க முண்டு. அவர்களுக்காகக் கிரஷ்ஷோடு கலந்து வைத்திருந்த ஜின் அல்லது விஸ்கி தம்ளர்கள், பணியாட்களின் கைத் தவறுதலால் செல்லையாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம்!”
“அப்படித்தான் நானும் நினைத்தேன்! ஆனால் அப்படி எவன் கைத் தவறுதலாகக் கொடுத்திருப்பான் என்று கண்டுபிடித்துச் சொல்!” என்று கண்ணனை நோக்கிப் புன்னகைத்தார் துப்ப றியும் கேசவன்.
கண்ணனின் முகத்திலிருந்த பிரகாசம் மறைந்தது. ஆனால் சாமர்த்தியமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டான்.
“செல்லையா, நீயும் பழனியப்பனும் போய்ப் படுத்துறங் குங்கள். மற்றவர்களெல்லாம் வீட்டுக்குப் போகலாம். நானும் என் சிஷ்யன் தினகரனும் சில தினங்கள் வரை இந்த வெள்ளை மாளிகையில்தான் தங்கியிருக்கப் போகிறோம். இன்னும் இரண் டொரு தினங்களில் வேறொரு விருந்தாளியும் இங்கு வரப் போகிறார்……” என்றார் துப்பறியும் கேசவன்.
“யாரது?” என்றார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி.
“அருளானந்த சாமியார்தான்! பன்னிரண்டு வருஷங் களுக்கு முன் முத்தையா முதலியார் கொலையுண்ட இரவு இதே வெள்ளை மாளிகையில் தங்கியிருந்தவர். அவர் இப்போது சென் னையிலிருக்கிறார். அந்தக் கொலை விஷயமாய் நேற்று மாலை அவரோடு நான் வெகு நாழி பேசிக்கொண்டிருந்தேன்!” என்றார் துப்பறியும் கேசவன், ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் முகத்தை உற்றுப்பார்த்துக்கொண்டே.
“அவர் இப்போது புதிதாய் என்ன சொல்லப்போகிறார்? பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு அவர் கோர்ட்டில் படித்த அதே பாடத்தைத்தான் நேற்று உங்களிடம் திருப்பி ஒப்புவித் திருப்பார்!” என்றாள் மஞ்சுளாவின் தாய்க்காரியான பத்மாவதி யம்மாள்.
துப்பறியும் கேசவன் அதற்கு ஒன்றும் பதில் கூறாமல், அவளை நோக்கி வெறுமனே முறுவலித்தார்.
செல்லையா சிறிது தயக்கத்தோடு ஓவியர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேச ஆரம்பித்தான்: “நேற்றிரவு நீங்கள்தான் சென் னைக்கு டெலிபோன் பண்ணி, மிஸ்டர் கேசவனை இங்கு அவசரமாக வரவழைத்தீர்களாம். அதற்கு என் நன்றி…..”
“நீ ஒன்றும் எனக்கு நன்றிகூற வேண்டியதில்லை. நான் உனக்காக அவரை வரவழைக்கவில்லை. உன் தந்தை என் உயிர்க் குயிரான நண்பராயிருந்தவர். அவருக்காகத்தான் நான் இதில் ஈடுபட்டிருக்கிறேன்!” என்று வெடுக்கென உரைத்தார் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி.
செல்லையாவின் முகம் அவமானத்தால் சுருங்கியது. அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான் : ஆனால் அடக்கிக்கொண்டான். அந்தச் சமயம் பார்த்து மஞ்சுளா அவனை அணுகினாள்.
“நீ பேசாமல் மேலே உன் படுக்கையறைக்குப் போ, செல் லையா. போய் நிம்மதியாகப் படுத்துத் தூங்கு. நீ தூங்கி விழித்த வுடன் நான் உனக்கு டிபன் கொண்டுவருகிறேன்,” என்றாள், சேயிடம் கனிவுகொண்ட ஒரு தாயின் தொனியில். செல்லையா அவளை அன்புடன் பார்த்தான். மஞ்சுளா அவனைக் கடைக் கண்ணால் பார்த்து மோகச் சிரிப்பொன்றை உதிர்த்துக்கொண்டே, செல்லையா, யார் எப்படி நடந்துகொண்டாலும் சரி, நாங்கள் உன் பக்கம் இருக்கும்வரை உனக்கு ஒரு கவலையும் வேண்டாம்!” என்றாள்.
அத்தியாயம் – 15
எச்சரிக்கை
வெள்ளை மாளிகையில் கனகப்பனுக்கு நேர்ந்த விபத்தின் செய்தி, கமலவனமெங்கும் காட்டுத் தீ போல் பரவியது. வீடுகள், பார்க்குகள், பஸ்கள், ஹோட்டல்கள் எல்லாவிடங்களிலும் செல் லையாவைப் பற்றியே பேச்சாயிருந்தது.
“அந்தக் காலத்தில் இவனுடைய அப்யன் ஒரு கொலைசெய்து விட்டுக் கோடித்தீவுக்கு ஓடிப்போனான். இப்போது மகன் வந்த முதல் நாளிரவே குடித்துவிட்டுத் தானும் ஒரு கொலை செய்ய முயன்றிருக்கிறான். அதுவும் யாரை ?… கொலைக்குப் பழிவாங்கத் துடிக்கும் பழைய வேலைக்காரனை ! ‘மரமேறும் கரட்டான். அதுபோடும் குட்டி’ யென்ற பழமொழி பலித்துவிட்டது” என்னும் ரீதியில் உருவாகி நின்றது பொதுஜன அபிப்ராயம்,
காலை எட்டு மணிக்கெல்லாம் வெள்ளை மாளிகையின் தோட் டத்திலுள்ள பத்மாவதியின் விடுதியில் ஒரு காரசாரமான சதி மகாநாடு நடைபெற்றது.
“உன்னுடைய முட்டாள் தனத்தினால்தான் எல்லாம் கெட்டுப் போய்விட்டது,” என்று கண்ணனைக் கடிந்துரைத்தாள் மஞ்சுளா. “நீ செல்லையாவைக் குடிக்க வைத்திருக்கக் கூடாது. அதை எனக்கு முன்னமேயே நீ சொல்லியிருந்தால் நான் தடுத்திருப்பேன்.”
“இப்போதும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை,” என்று அலட்சியமாக ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான் கண்ணன். “எப்படியாவது நாம் செல்லையாவை ஜெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும். நான்குமாதத் தவணைக்குள் செல்லையா குற்றவாளி யெனத் தண்டிக்கப்பட்டால், உயிலின் பிரகாரம் சொத்துகள் அவனைச் சேராது! நம் பத்மாவதியம்மாள் கைக்கு வந்து, நாம் பேசிக்கொண்டபடி பங்குபோட்டுக் கொள்ளலாம். அதற்கு அனுகூலமாகவே சம்பவங்களின் சூழ்நிலை இதுவரையில் அமைந் திருக்கிறது. இன்னமும் செல்லையாவைத்தான் போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.”
“ஆனால் துப்பறியும் கேசவன் உன்மீது சந்தேகப்படுகிறான்! நீதான் செல்லையாவைக் குடிக்க வைத்திருப்பாய் என்று கேசவ னுக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோலத் தெரியும்!” என்றாள் மஞ்சுளா.
“அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என்மீது எவ்விதக் குற்றத்தையும் நிரூபிக்க முடியாது. என்னைக் குறிவைப் பதிலேயே தன் கவனத்தையும் காலத்தையும் அவன் போக்கி விடப் போகிறான். அதற்குள் நம் கோதண்டம் நம் இரகசியத் திட்டத்தை நிறைவேற்றிவிடுவான்..”
“ஆமாமாம். கேசவன் உன்னைச் சந்தேகித்துக்கொண்டிருப்பது என் காரியத்தை லகுவாக்கி விடும்,” என்றான் கோதண்டம்.
“எல்லோரும் ரொம்பப் புத்திசாலிகள்தான். துப்பறியும் கேசவன் கண்ணனைச் சந்தேகித்தால், அவன் என்னையும் சந்தே கிக்கிறான் என்றல்லவா அர்த்தம்?” என்று ஆத்திரமுற்றாள் மஞ்சுளா.
“உன்னை அவன் சந்தேகிப்பதால் என்ன நஷ்டம்?” என்றான் கோதண்டம்.
மஞ்சுளா அதற்குப் பதில் சொல்ல வாயெடுத்தாள். கண்ணன் ‘ஹா ஹா ஹா’ வென்று பயங்கரமாய்ச் சிரித்தான். மஞ்சுளா, எங்களையெல்லாம் மடையர்களென்று நினைக்கா தேயடி! உன்னுடைய அந்தரங்க எண்ணத்தை நான் புரிந்து கொண்டு விட்டேன்.”
“என்ன கோதண்டம். அது ?” என்று திடுக்கிட்டுக் கேட்டான்
“அவள் செல்லையாவை மயக்கித் தன் கைக்குள் போட்டுக் கொண்டு,-அதாவது அவனைக் கலியாணம் செய்துகொண்டு அவன் சொத்துக்கள் அனைத்தையும் நமக்குப் பங்குகொடுக்காமல் தான் மட்டுமே அபகரிக்கப் பார்க்கிறாள், திருடி!” என்றான் கண்ணன்.
இதைக் கேட்டதும் மஞ்சுளாவின் முகத்தில் அசடும், பீதியும் வழிந்தது. மிரண்டு நிற்கும் அவளை நோக்கிக் கண்ணன் கத்தியை விடக் கூர்மையான சிரிப்புடன் சீறினான்:
“மஞ்சுளா! நீ சின்னப் பெண்ணாக இருந்தாலும், பாம்புக்கு விஷம் வைக்கும் பாம்புடி நீ! உன் அம்மா கற்றுக்கொடுத்த வித்தையா?”
மஞ்சுளா தன் மயக்குச் சிரிப்பால். அவனுடைய ஆத்திரத் தைச் சமாதானப்படுத்த விரும்பினாள். கொஞ்சுதலாய் அவன் கழுத்தைக் கட்டிக்கொள்ள முயற்சித்தாள்.
“கண்ணா! என்னை அப்படியெல்லாம் நினைக்காதே! நீதான் எனக்கு…”
“போதும் நிறுத்தடி! நீ செல்லையாவை மயக்கி ஏமாற்றியது போல் என்னையும் மயக்கிவிட முடியாது! உன்னைப்போல் நூறா யிரம் பெண்களைப் பார்த்திருக்கிறேன்! என் பிளான்படிதான் நீ நடக்கவேண்டும். மிஞ்சிப் பிளான் போட்டே…பாவம் சின்ன வயசிலே சாக நேரிடும்!”
கோதண்டத்தின் கண்கள் கோபத்தால் சிவந்தன. பத்மாவதி இடையில் குறுக்கிட்டு நிலைமையைச் சமாளிக்க முயன்றாள்.
“நீ சும்மா இரு கண்ணா!. நீ வேடிக்கையாகப் பேசுவதைக் கோதண்டம் நிஜமென்றே நினைக்கப்போகிறான்,” என விஷயத்தை மழுப்ப முயன்றாள் பத்மாவதி.
“நிறுத்தம்மா, உன் சாகஸப் பேச்சை!” என்று சீறினான் கோதண்டம். உன்னையும், உன் மகளையும் எனக்கு நெடுநாளாகத் தெரியுமே ? நீங்கள் பணத்திற்காக எதுவும் செய்வீர்களே? ஆனால் இந்தக் கோதண்டத்தை மட்டும் நீங்கள் ஏமாற்ற முடியாது. அப்படி ஏதாவது நீங்கள் மனதால்கூட நினைத்தால் போதும் உங்களைப் பூண்டோடு ஒழித்துவிடுவேன், ஜாக்ரதை !” என்று நாக சர்ப்பம்போல் படபடவென்று சீறியவாறு அவன் எழுந்து நின்றான். பிறகு அவன் கண்ணனை நோக்கி “கண்ணா நாம் ஜாக்ரதையாயிருக்க வேண்டும். இன்னும் இரண்டொரு தினங் களுக்கு நாம் பகிரங்கமாகச் சந்திக்காமலிருப்பது நல்லது. நான் வருகிறேன்,” என்று வெளியே சென்றான்.
மஞ்சுளாவின் முகத்தில் மரணபீதி படிந்திருந்தது, கண்ணன் போன வெகுநேரம் வரை நீங்கவில்லை.
– தொடரும்…
– கொலைப்பித்தன் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1955, பிரேமா பிரசுரம், சென்னை.