கொலைப்பித்தன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 7, 2025
பார்வையிட்டோர்: 12,063 
 
 

(1955ல் வெளியான மர்ம நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 10

விருந்தில் நடந்த விபரீதம்!

இரவு எட்டு மணியாயிற்று. எல்லப்பபிள்ளையின் மாளிகை யானது கலியாண வைபவத்தால் மிகக் கோலாகலமாக விளங் கியது. கமலவனத்திலுள்ள பெரிய மனிதர்களெல்லாம் தத்தம் குடும்ப சகிதம் அங்கு குழுமியிருந்தனர். வந்துகொண்டிருந்த விருந்தினர்களை யெல்லாம் வாயிற்படியில் நின்று வரவேற்று, அவர்களுக்குச் சந்தன, புஷ்ப, ஷர்பத்துக்கள் கொடுத்துக்கொண் டிருந்தனர் ஓவியர் கிருஷ்ணமூர்த்தியும் அவரது இரு குமாரி களான பவானியும் லலிதாவும். உள்ளே போஜன ஹாலில் பந்தி விசாரணை செய்து கொண்டும், இடையிடையே பரிமாறிக்கொண் டும் பரபரப்பாகத் திரிந்தான் மாஜிக் குமாஸ்தா கோதண்டராமன்.

திருமணச் சடங்குகள் ஒரு புறத்தில் நடந்துகொண்டிருக்கை யிலேயே,சீட்டுக்கச்சேரிகள் வேறொரு புறத்தில் விமரிசையாக நிகழ்வுறலாயின. முகூர்த்தமும் சாப்பாடும் முடிந்தபிறகு, இரு பிரபல நர்த்தகியரின் நடனக்கச்சேரி ஆரம்பமாயிற்று. மணி பதினொன்று அடித்தது. சபையின் ஒரு புறத்தே, மஞ்சுளாவுக்கும், கண்ணனுக்கும் மத்தியில் உட்கார்ந்திருந்தான் செல்லையா. அவன் எதிரிகளை நம்பி அவர்கள் விரித்த வலையில் விழுந்துவிட் டானே என்ற அத்திரம் பவானிக்கு அதிகம் ஏற்பட்டிருந்தாலும், அவன் தன்னையும், தன் தந்தையையும் உதாசீனம் செய்துவிட்ட பிறகு இனி அவன் முகத்திலே விழிக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தாலும், அவளுடைய கருவிழிகள் அவளையறி யாமலே ஏனே செல்லையாவைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண் டிருந்தன. அவனோ பவானியை ஓர் எதிரியைப் பார்ப்பது போலவே வெறுப்புடன் பார்த்தான். 

திடீரென்று அவன் சரீரத்தில் ஏதோ ஒரு நூதன உணர்ச்சி பொங்கியெழுவது போல் அவனுக்குப் புலப்பட்டது. அவன் நா வறண்டது. கண்கள் மங்கின. எதிரேயிருந்த ஒவ்வொரு பொரு ளும் இரண்டிரண்டாகக் காட்சியளிக்கலாயிற்று. பக்கத்திலிருந்த கண்ணனை நோக்கி, “எனக்கு மயக்கமாக வருகிறது,” என்றான் அவன். 

“ஏன் அப்படி ? ஒருவேளை நீ போட்டுக்கொண்ட பீடாவில் ஏதேனும் பூச்சிப்பாக்கு சம்பந்தப்பட்டிருக்குமோ?” என்று குரலில் சோகத்தை வரவழைத்துக்கொண்டு பரிவோடு விசாரித்த வாறு, அவனுக்குக் குடிதண்ணீர் கொண்டுவர எழுந்தோடினாள் மஞ்சுளா. 

“பூச்சிப் பாக்காக இராது. புதிதாக வெற்றிலைபாக்குப் போடுகிறவர்களுக்கே இம்மாதிரி மயக்கம் வருவதுண்டு!” என்று சாவதானமாகக் கூறினான் கண்ணன். 

இதற்கிடையில், கண்ணனைத்தேடிக்கொண்டு அங்கு எல்லப்ப பிள்ளையே ஓடிவந்தார். 

“அவன் யாரப்பா, கண்ணா? செல்லையாவோடு கூட ஒருவன் தீவிலிருந்து வந்திருக்கிறானே, அவன் பேரென்ன?” 

“பழனியப்பன். ஏன், அவனுக்கென்ன?” 

“அந்தக் காலிப்பயலை யெல்லாம் நீ ஏன் இங்கு கூட்டி வந்தாய்? உள்ளே போய்ப் பார்! எங்கேயோ போய்க் குடித்து விட்டு வந்து கலாட்டா பண்ணிக்கொண்டிருக்கிறான். முதலில் அவனை கூட்டிக்கொண்டு போய் வீட்டில் விட்டுவா,” என்றார் எல்லப்பபிள்ளை. 

இதற்குள் மஞ்சுளாவும் ஒரு தம்ளரில் சர்பத் கொண்டுவர் தாள். அதைக் குடித்துவிட்டு,”அப்படியானால் நானும் வீட்டுக்கு வருகிறேன்,” என்று தடுமாறியவாறு எழுந்து நின்றான் செல் லையா. அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்த எல்லப்பபிள்ளை, “இவனும் குடித்துவிட்டு கலியாண வீட்டிற்கு வந்திருக்கிறான்! அட கர்மமே!” என்று முணுமுணுத்தார். அது அங்கு நின்ற ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் புத்திரிகளின் காதில் விழுந்தது. பவானியின் முகம் வாடியது. செல்லையா தங்களைப் புறக்கணித்து விட்டான் என்று அவளுக்குக் கோபமிருந்தாலும், பரிகாசத்துக்கு இடமாய் அவன் குடித்துவிட்டுக் கலியாண வீட்டில் தள்ளாடுவதை அவளால் சகிக்கவே முடியவில்லை. அவள் கண்ணனை நோக்கி “செல்லையாவை ஏன் இப்படி அவமானத்திற்கு ஆளாகும்படி இங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டாள். 

மஞ்சுளா சுருக்கென்று, “செல்லையாவிற்கு ஒன்றுமில்லையடி! எங்களுக்கு எல்லாம் தெரியும். நீயென்ன அவனுக்குச் செவிலித் தாயா?” என்றாள் வெறுப்புடன். 

வெளியே நிற்கும் தன்னுடைய காருக்குக் செல்லையாவை அழைத்துச் செல்லுமாறு மஞ்சுளாவிடம் கூறியபடி, கண்ணன் பழனியப்பனைத் தேடிச்சென்றான். 


“ஏன் அதற்குள் திரும்பி வந்துவிட்டாய் மஞ்சுளா ? மணி பதினொன்றரை தானே ஆகிறது! அவ்வளவு சீக்கிரத்திலேயா. கலியாணவீட்டில் நாட்டியக்கச்சேரி முடிந்துவிட்டது?” என்று மஞ்சுளாவைக் கேட்டாள் பத்மாவதி. 

“இல்லை, அம்மா. அந்தப் பழனியப்பன் எங்கேயோ போய்க் குடித்துவிட்டு வந்து, கலியாண வீட்டில் கலாட்டா பண்ணத் தொடங்கிவிட்டான். அதே சமயத்தில் செல்லையாவும் திடீரென்று மயக்கமடைந்து தடுமாறினான். அவனும் குடித்திருப்பானென்று எனக்குத் தோன்றுகிறது. அதை அங்குள்ளவர்களிலும் இரண் டொருவர் சந்தேகப்பட்டு விட்டார்கள். ஆகையால், அவனையும் பழனியப்பனையும் அதற்குமேல் அங்கு வைத்திருப்பது உசித மாகப்படவில்லை கண்ணன் அவர்களை வெள்ளை மாளிகையில் கொண்டு போய் விட்டுவரப் போயிருக்கிறான்!” என்று மஞ்சுளா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கண்ணனும் அங்கு வந்து சேர்ந்தான். 

அவனை நோக்கி, “செல்லையாவும் பழனியப்பனும் எங்கே போய்க் குடித்துவிட்டு வந்திருக்க முடியும் ? இன்றிரவு அவர்கள் உன்னைவிட்டு எப்போதேனும் பிரிந்துபோனார்களா?” என்றாள் பத்மாவதி. 

“நாளைக்குப் போலீஸ்காரன் கேட்கவேண்டிய கேள்வியை நீ இப்போதே என்னிடம் கேட்கிறாயே ?” என்று சிரித்தான் கண்ணன். 

“எல்லாம் நன்மைக்குத்தான்! கவலைப்படாதே!” என்று அழுத்தந் திருத்தமாகக் கூறிய அவனுடைய குரலைக் கவனித்த மஞ்சுளாவிற்கு அவன்மீது சந்தேகம் உண்டாயிற்று. 

பத்மாவதிக்கும் அப்போதுதான் உண்மை விளங்கியது. “சரி, சரி! நீயேதான் அவர்களை வேண்டுமென்றே குடிக்கவைத் திருக்கிறாய்! ஏன் அப்படி?” 

“ஏது! நீயே நான் குடிக்கவைத்ததை நேரில் பார்த்தது போல் சாட்சி சொல்வாய் போலிருக்கிறதே?”

”அம்மாவா சொல்லவேண்டும்? நாளைக்குச் செல்லையாவும் பழனியப்பனுமே சொல்லிவிடப் போகிறார்கள்!” என்றாள் வெடுக்கென மஞ்சுளா. 

“அந்த இரண்டு காட்டுமிராண்டிகளுக்கும் ஒன்றுமே தெரி யாது. அவர்களுக்கு யாராரோ புதுவிதமான கூல்டிரிங்க்ஸ் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்களும் வாங்கி வாங்கிக் குடித்தார்கள். அவற்றில் எவ்வளவு ஜின் அல்லது பிராந்தி கலந் திருந்ததென்பது, நம் கோதண்டத்தைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?” 

“ஓஹோ! கோதண்டமும் இதில் கூட்டாளியா?” என்று வெடுக்கெனக் கேட்டாள் மஞ்சுளா. “இதெல்லாம் நீ என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லையே? செல்லையாவைக் குடிக்கவைத்து எல்லாவற்றையும் குட்டிச்சுவராக்கி விட்டாய்!” என்று மஞ் சுளா எரிந்து விழுந்தாள். அன்றிரவு ஆளை மயக்கும்படி அலங் கரித்துக்கொண்டு போன அவள், அன்றிரவே செல்லையாவைத் தன் மோக வலைக்குள் சுருட்டி இழுத்துவிட வேண்டுமெனப் பிளான் போட்டிருந்தாள்; அவ்வளவும் வீணாகிவிட்டது! 

“எல்லாவற்றையும் உன்னிடம் முன்னாடிச் சொல்லிவிட்டுத் தான் பண்ணவேண்டுமோ?” என்றான் கண்ணன் ஏளனமாக. 

“செல்லையாவைக் குடிக்கவைத்துக் கலியாணவீட்டில் கூத் தடிக்க விட்டதுமல்லாமல், அவனை நானே காரில் கொண்டுபோய் விடும்படி ஏன் செய்தாய்?” என்று கேட்டாள் மஞ்சுளா. 

“எங்களோடு நீ எல்லாவற்றிலும் கலந்துகொள்கிறாய் என்ப தற்குத்தான்!” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினான் கண்ணன். 

மஞ்சுளாவின் முகம் வெளிறியது. 

“மஞ்சுளா! கவலைப்படாதே! குடித்தவனை நீ பரிவோடு காரில் கொண்டுபோய் ஏற்றிவிட்டாய் என்று தெரிந்தால், நீ நல்லவள் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் விழும்!” என்றான் கண்ணன். 

“ஆமாம்; ஜின் மிகவும் காரமான மதுவாயிற்றே ? அதன் நெடியும் காரமும் அவர்களுக்குக் குடிக்கும்போதே தெரியாமலா போயிற்று?” என்று கேட்டாள் பத்மாவதியம்மாள். 

“நூதன ஷர்பத்திற்குரிய இயற்கையான ருசியே அதுதான் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். மேலும் நாங்கள் சிறிது சிறிதாகத்தானே கலந்து கொடுத்தோம். பயல்கள் இரண்டுபேருக்குமே குடித்துப் பழக்கமில்லாததால் அது சீக்கிரத்தில் போதையேற்றிவிட்டது !” 

“அது சரி; இப்போது எங்கே அவர்கள் இரண்டுபேரும்?” என்றாள் பத்மாவதி. 

“வெள்ளை மாளிகையினுள்ளே சௌக்யமாய் உலகை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்!” என்றான் கண்ணன். “சரி, நீ புறப்படு மஞ்சுளா. நாம் மறுபடியும் கலியாண வீட்டுக்குப் போக வேண்டும்.” 

“எதற்காக? மணி பன்னிரண்டாகப் போகிறது. நடன விருந்து முடிய இரவு ஒரு மணியாகும். நான் வரப்போவதில்லை. படுத்துத் தூங்கப்போகிறேன். அந்த ஓவியரின் இரண்டு குட்டி களும், என்னைப் பார்க்கிற பார்வையைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை!” என்றாள மஞ்சுளா. 

“அட பைத்தியமே! இன்றிரவு நீ தூங்கமுடியாது. நடனம் முடியும் தறுவாயில், விருந்தினர்கள் பலபேருடைய கண்ணில் படும்படியாக நாம் காட்சியளிக்க வேண்டும். நாளைக்காலையில் யாராவது நம்மை ‘நேற்று ராத்திரி பன்னிரண்டு மணிக்குமேல் ஒரு மணிக்குள் நீ எங்கே இருந்தாய்?’ என்று கேட்டால் நாம் தகுந்த அத்தாட்சியுடன் பதில் சொல்ல வேண்டாமா? அப்போது தான் நாம் தப்பிக்கலாம்.” 

“எதிலிருந்து?” 

“இன்றிரவு நடைபெறப்போகும் ஒரு சம்பவத்தின் பொறுப் பிலிருந்து!” என்று அலக்ஷியமாய்ச் சிரித்தான் கண்ணன். 

அவனோடு மறுபடி கலியாண வீட்டிற்குப் புறப்படும்போது அவன் காதுக்குள் ரகசியமாய் கேட்டாள்: “கண்ணா! உன்னை விட்டுவிட்டு அந்தச் செல்லையாவின் மீது ஆசைப்படுவேன் என்றா நினைக்கிறாய்? இப்போது அவனைக் கொன்று விடாதே! அவன் சொத்தை ஆபத்தில்லாமல் பறிப்பதற்குத்தான் மயங்குகிறவள் போல் நடிக்கிறேனே தவிர, ஆசையெல்லாம் உன் மேலே தான்!” என்று கூறி அவனுக்கு வெடுக்கென்று ஒரு முத்தம் கொடுத்தாள். 

அத்தியாயம் – 11

பரிதாபகரமான கொலை

நள்ளிரவு நேரம். பேய்களும் கண்ணுறங்கும் பேரிருளால் வெள்ளை மாளிகை விழுங்கப்பட்டு நின்றது. அத்தகைய பயங்கர வேளையில்,-

அம்மாளிகையின் எதிரேயிருந்த ஓர் அடர்ந்த புதரினுள்ளி ருந்து, ஒரு மெல்லிய சிரிப்பொலி யெழுந்தது. அடுத்த விநாடி, அங்கிருந்து ஓர் ஒல்லியான உருவம் தன் தலையை நீட்டி வெளிப் பட்டது. ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அது வெள்ளை மாளிகையை நோக்கி விரைந்து நடக்கலாயிற்று. 

ஆம்; கனகப்பன்தான்! அந்த மாளிகையிலிருந்து கிருஷ்ண மூர்த்தியால் அவன் விலக்கப்படும் வரையில், தினசரி இரவு பன்னிரண்டு மணி அடித்தவுடன், முத்தையா முதலியார் கொலை யுண்ட அறைக்குள் போய் அவன் பார்த்து வருவது வழக்கம். அதற்குக் காரணம் அவனுக்கே தெரியாது. அவனையும் அறியாத ஒரு சக்தி அவனை அங்கே இழுத்துச் சென்றுகொண்டி ருந்தது. நாளடைவில் முத்தையா முதலியாரின் ஆவியே அவனுக்கு அங்கு காட்சியளிப்பதாக அவன் கூறத் தொடங்கினான். “ஏதோ பைத்தியத்தில் பிதற்றுகிறான்!” என்று யாருமே அவன் கூற்று களை லக்ஷியம் செய்வதில்லை. ஆனால், அவன் மட்டும், அங்கு தினசரி முத்தையா முதலியாரின் ஆவி வந்து போவதாக நிச்சய மாக நம்பினான். முதலியாரின் ஆவி அவருடைய படிப்பறையில் பன்னிரண்டு மணிக்கெல்லாம், பதின்மூன்று வருஷங்களுக்கு முன் அவர் எப்படி நாற்காலியில் உட்கார்ந்திருந்தாரோ, அதே மாதிரி உட்கார்ந்திருக்கும்; அந்தப் பிரமை ஒரு கணம்தான் இருக்கும். பிறகு எல்லாம் மறைந்து கனகப்பனது மூளையையே குழப்பிவிடும். தம் மரணத்திற்குக் காரணமாயிருந்தவர்கள் பழி வாங்கப்படும் வரையில் முத்தையா முதலியாரின் ஆவி அவ்வாறு வந்துகொண்டிருக்கும் என்பது அவன் சித்தாந்தம். அவரைக் கொலை செய்தது செந்தில்நாத முதலியார்தான் என்பதிலும் அவனுக்குச் சந்தேகமில்லை. இப்போது செந்தில்நாத முதலியார் இறந்துபோனாலும், அவருடைய மகன் செல்லையா இங்கே வந்தி ருப்பதால் முத்தையா முதலியாரின் ஆவி அவனைக் கட்டாயம் வஞ்சம் தீர்த்துக்கொள்ள வரும் என்பது அவனது திடமான முடிவு. அவ்வாறு அவர் வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் காட்சியைத் தன் கண்ணாரக் கண்டு களிக்கவேண்டுமென்று அவன் மட்டற்ற ஆசைப்பட்டான். அந்த ஆசையை அவனுக்கு உண்மையிலேயே உண்டுபண்ணி உச்சாடனம் செய்து விட்டவனாகிய கண்ணன், அந்த வெள்ளை மாளிகையின் வெளிக்கதவுக்குப் பொருந்தக் கூடிய ஒரு கள்ளச் சாவியையும் அவன் கையில் கொடுத்திருந் தான். அன்றைய இரவு கனகப்பனுக்கு நிறையச் சாராயம் வாங்கிக்கொடுத்து மூளை சுருளும்வரை நன்றாகக் குடிக்கவும் வைத்திருந்தான். சித்தவெறியனான கனகப்பன் குடிவெறியும் சேரவே வெள்ளை மாளிகையின் தோட்டத்தின் இருளில் பசித்த புலியைப்போல் தள்ளாடியவாறு காத்திருந்தான். மணி பன்னி ரண்டானதும் வெள்ளை மாளிகையை நோக்கிப் பாய்ந்தான். கள்ளச்சாவியை தன் இடுப்பிலிருந்து எடுத்துக் கதவைத் திறந் தான் கனகப்பன். அவனுடைய உடலில் முத்தையா முதலியாரின் ஆவியே ஏறியிருப்பதுபோல் அவன் ஆவேசம் கொண்டான். 

உள்ளே ஒரே இருட்டாயிருந்தது. பேய்க்காட்டு நிசப்தமும் நிலவியிருந்தது. ஆனால் அவனுக்கு அது பல வருஷங்களாகப் பழக்கப்பட்ட வீடல்லவா? ஹாலுக்குள் ஓசைப்படாமல் நுழைந் தான் அவ்வளவுதான்; எங்கிருந்தோ திடீரென்று பாய்ச்சப்பட்ட ஓர் ஒளி வெள்ளத்தில் அவன் கண்கள் கூசின. உடல் முழுதும் வெள்ளைச் சால்வை போர்த்திய ஓர் உருவம் வெள்ளே வெளே ரேன்று பேய்போல அப்படி ஒரு பிரமை… அடுத்த விநாடி ஒரு பெரிய கடப்பாறையின் அடி அவன் மண்டையில் வந்து வீழ்ந்தது. கனகப்பன் மயங்கிச் சுருண்டு தரையில் சாய்ந்தான்! 

அவனை அடித்த வெள்ளை உருவ மனிதன் கிடுகிடென்று மாடிப்படிகளிலேறிச் சென்று, செல்லையா படுத்துறங்கும் அறைக்குட் புகுந்தான். அங்கே ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த அவனுடைய சட்டையொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு படிகளில் இறங்கி ஹாலுக்குத் திரும்பி வந்தான். கனகப்பன் தலையிலிருந்து பொங்கி வழிந்த ரத்தத்தில் சிறிதை அந்தச் சட்டையில் ஒற்றிக்கொண்டு அதை மறுபடியும் முன்பு இருந்த இடத்திலேயே கொண்டுபோய் மாட்டினான். பிறகு கீழேயிறங்கி வந்து, கனகப்பன் உடலைத் தூக்கிக்கொண்டு போய் விசாலமான வெளி வாசற்படியில் அதை உதைத்து உருட்டித் தள்ளிவிட்டு, முன் கதவை மூடினான். ஹாலிலும் போர்டிகோவிலும் உள்ள விளக்குகளின் ஸ்விட்சுகளைத் தட்டி, அவற்றை எரியவிட்டான். இவ்வளவையும் செய்துமுடித்த பிறகு, ஓசைப்படாமல் பின் கட்டின் வழியே அவ்வீட்டை விட்டே அவன் வெளியேறினான். 

அந்த வீட்டிற்குள் இவ்வளவு நடந்தும், ஒன்றுமே தெரியாமல் மெய்மறந்து உறங்கிக் கிடந்தான் செல்லையா. அவன் வீட்டு வாசற் படியில் கனகப்பனின் பிணம் உருட்டப்பட்டுக் கிடந்தால் யார் மீது பழி சாரும் என்பதை உணரும் நிலையிலில்லை அவன். 

கலியாண வீட்டிலோ ……? 

கண்ணன் மறுபடியும் கலியாண வீட்டிற்குள் வந்து நுழை யும்போது, பவானியும் அவள் சித்தி மகன் சின்னச்சாமியும் மணி பன்னிரண்டேகால் ஆகும்போது தம் வீட்டிற்குப் புறப் பட்டுக் கொண்டிருந்தனர். கண்ணனைக் கண்டதும் அவன் காரை விட்டுக் கீழிறங்கிச் சென்று, “செல்லையா எப்படியிருக்கிறான்? அவனை நீ என்ன செய்தாய் ?” என்று பதைபதைப்புடன் விசாரித்தான். 

“அவனும் அவன் தோழனும் வெள்ளை மாளிகையில் நிம்மதி யாய்த் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.” 

“அவர்களை மயக்கத்தோடு தனியே போட்டுவிட்டா நீ திரும்பிவிட்டாய்?” 

“வேறு நான் என்ன செய்வது? அந்தக் குடிகாரப் பயல்களை நான் இரவு முழுதும் கண்விழித்துக் காவல் புரியவேண்டும் என்கிறாயா?” என்று வேடிக்கையாகச் சிரித்தான் கண்ணன். 

அவன் பேசிய தோரணை பவானிக்குப் பிடிக்கவில்லை. செல்லையாவிடத்தில் அவள் சிறிதும் பிரியமற்றிருந்த போதிலும், அவனது பேதமையை எண்ணும்போது ‘பாவம், உலகம் தெரியாத வெகுளி’ என்று அவள் நெஞ்சத்தில் பரிவே பெரு கியது. அவள் தன் சித்தி மகனோடு காரில் செல்லும்போது அவள் மனம் நிம்மதியாயில்லை. 

“அண்ணா, செல்லையா இதற்குமுன் தன் வாழ்நாளில் ஒரு முறைகூட மதுக்குடித்தவனல்ல. அவனைத் தனியே வெள்ளை மாளிகையில் கண்ணன் விட்டு வந்திருக்கவாவது! எனக்கென் னவோ மனசு அடித்துக் கொள்ளுகிறது… அண்ணா! நரம் போகும் வழியில் செல்லையாவைப் பார்த்துவிட்டுப் போவோமா?” என்றாள் அவள் சின்னச்சாமியை நோக்கி. 

“எனக்கொன்றும் ஆட்சேபணையில்லை,” என்று தன் காரை ‘ஸ்டார்ட்’ பண்ணினான் சின்னச்சாமி. 

“ஆனால் உன்னை அவனுக்குப் பிடிக்காதே? ‘உன்னை யாரிங்கே வரச்சொன்னது?’ என்று அவன் கேட்டு விட்டால்?… அதுவும் உன் தந்தையை ஓர் எதிரியென்று சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கும்போது நடுச்சாமத்தில் அவனுடைய வீட்டிற்குள் புகுந்தால்…?” 

“அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. அவனைக் குடி மயக் கத்தோடு தனியே விட்டு விட்டு வந்திருக்கிறான் கண்ணன். ஏனோ அவனைப் பார்த்துவிட்டுப் போகவேண்டும் போல் எனக்குத் தோன்றுகிறது ! நாம் வீட்டிற்குள் போய் அவனைச் சந்திக்க வேண்டும் என்கிறதுகூட இல்லை. அவன் வீட்டில் எல்லாம் சரியாக இருக்கிறதாவென ஒருமுறை பரிசோதித்துவிட்டுப் போனால்தான் என் மனசு நிம்மதிப்படும்!” என்றாள் பவானி. 

காரை வெள்ளை மாளிகைக்கு வெளியே நிறுத்திவிட்டு, இருவரும் கீழே இறங்கித் தோட்டத்தினுள்ளே நடந்து சென் றார்கள். அத்தகைய அகால நேரத்தில் போர்டிகோவின் விளக்கும் வீட்டினுள் இருந்த மின்சார விளக்குகளும் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது அவர்களுக்கு வியப்பை அளித்தது. 

“வீட்டிற்குள் விளக்குகள் எறிவதைப் பார்த்தால் அவர்கள் மயக்கம் தெளிந்து விழித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அல்லது விளக்குகளையும் போட்டபடியே அவர்கள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க வேண்டும் !” என்று கூறிய சின்னச்சாமி, மாளி கையின் முன் வாசற்படியருகே வந்தான். 

திடீரென்று எதையோ கண்டு திடுக்கிட்டவன்போல், பவா னியின் கையைப் பிடித்து நிறுத்தினான் சின்னச்சாமி. “பவானி, நீ இங்கேயே நில். நான் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்”, என்று அவன் போர்டிகோவை நோக்கி விரைந்து நடந்தான். 

ஆனால் அவன் பார்த்த அதே காட்சியை, அதே சமயத்தில், பவானியும் பார்த்துவிட்டாள். அவளும் திகிலுற்றவளாய், அவனைத் தொடர்ந்து நடந்தாள். 

வெள்ளைமாளிகையின் புறத்தேயுள்ள விசாலமான படிக ளில், ஒரு மனித உருவம் சுருண்டு கிடந்தது. அருகில் சென்று பார்க்கும்போது, அங்கு அடிபட்டுக் கிடப்பவன் கனகப்பன் என்று தெரிந்தது. அவன் மண்டையிலிருந்து வழிந்த ரத்தவெள் ளத்தால், அந்த சலவைக்கற் படிகள் கறைபட்டுக் கொண்டிருந்தன. 

அவனை நன்கு உற்றுக் கவனித்துவிட்டு, “இன்னும் உயிர் இருக்கிறது,” என்றான் சின்னச்சாமி, 

“இவனை உள்ளே எடுத்துச்செல்ல வேண்டும்.இல்லை; பயல்கள் இரண்டுபேரும் உள்ளே குடிமயக்கத்தில் கிடக்கும் போது அவர்களை எழுப்புவது சாத்யமல்ல. இவனை இந்தத் தோட் டத்திலுள்ள பத்மாவதியின் விடுதிக்குத் தூக்கிபோகிறேன்.நீ போய்ப் பக்கத்திலுள்ள பப்ளிக் டெலிபோனில் போலீஸுக்கும் ஆஸ்பத்திரிக்கும் போன் பண்ணிவிட்டு வா.” 

பவானி பதில் சொல்லாமல் வெளியே இருளில் பாய்ந் தோடினாள்.கனகப்பனின் பூதாகாரமான உடலைச் சின்னச்சாமி தூக்கிக்கொண்டு, அந்தத் தோட்டத்தின் ஒரு புறமுள்ள பத்மாவதி யம்மாளின் விடுதிக்குச் சென்றான். 

பத்மாவதியின் வீடு ஒரே இருளிலும் நிசப்தத்திலும் மூழ்கி யிருந்தது. வெளிக் கதவைப் படபடவென்று சின்னச்சாமி தட்டி னான். பத்மாவதி தூக்கக் கலக்கத்துடன் எழுந்துவந்து கதவைத் திறந்தாள். அவளுடைய வாயில் அடித்த ஒருவித வாடை சின்னச் சாமிக்குப் பிடிக்கவில்லை. 

“நடுச்சாமத்தில் வந்து என் வீட்டுக் கதவைப் போட்டு ஏன் உடைக்கிறாய்?” என்று பத்மாவதி குளறியபடி கேட்டாள், சின்னச்சாமி அவசரமாகக் கனகப்பனின் ரத்தம் சொட்டும் உடலைச் சுட்டிக்காட்டி விபரத்தைச் சொன்னான். 

பத்மாவதியின் முகத்தில் என்னவோ விசித்திரமான ஒரு தோற்றம் ஒரு கணம் படர்ந்து மறைந்தது. 

அவளுடைய படுக்கையில் கனகப்பனின் உடலைச் சின்னச் சாமி போட்டுவிட்டு, “என்ன பயங்கரமான இரவு! போலீ ஸுக்கும் டாக்டருக்கும் டெலிபோன் செய்ய பவானி ஓடியிருக் கிறாள். அவர்கள் வந்துசேரும் வரையாவது கனகப்பனுக்கு உயிர் இருக்கவேண்டும், கடவுளே!” என்று பதறினான். 

கனகப்பனின் கண்ணிமைகள் மூடின. மூச்சு இழுத்தது உதடுகளில் நீலம் பாய்ந்தது; அவனுடைய தலையிலிருந்து வழியும் ரத்தத்தால் தலையணை நனைந்துகொண்டே இருந்தது. 

அத்தியாயம் – 12

சட்டையின் ரத்தக் கறை

முதலில், சர்க்கார் ஆஸ்பத்திரியிலிருந்து ஓர் ஆம்புலன்ஸ் வண்டியும் ஒரு டாக்டரும் வந்து சேர்ந்தனர். அடுத்த இரண்டு நிமிஷங்களில், ஓர் இன்ஸ்பெக்டர், ஸார்ஜண்டு, ஒரு போலீஸ் டாக்டர் மூவரும் ஒரு போலீஸ்வானில் வந்திறங்கினர். உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் கனகப்பனின் உடலை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு, பவானியையும் சின்னச்சாமியையும் கேள்விகள் கேட்கத் தொடங்கினர் போலீசார். 

கனகப்பன் வாசற்படியில் கிடப்பதை நீங்கள் கண்டீர்கள். அது எப்போது? வெள்ளை மாளிகையைவிட்டு நீங்கள் வெளியே வரும்போதா?” 

“வெள்ளை மாளிகையினுள்ளேயே நாங்கள் போகவில்லையே ? வீதி வழியே காரில் போய்க்கொண்டிருந்தோம். செல்லையாவைச் சற்று எட்டிப்பார்த்துவிட்டுப் போகலாமென்று காம்பௌண்டுக்குள் வந்தோம்,” என்று பதிலளித்தாள் பவானி. 

“எட்டிப் பார்க்கிறது நடுச்சாமம் பன்னிரண்டரை மணிக்கா?” இந்த அகால நேரத்தில் நீங்கள் அவனை எதற்காகப் பார்க்க நினைத்தீர்கள்? 

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது, பவானிக்குச் சிறிது சிரமமாக இருந்தது. 

“அதிருக்கட்டும், வாசற்படியில் கிடந்தவனை அங்கேயே பங்களாவின் உள்ளே கொண்டுபோய்ப் போடாமல், இவ்வளவு தூரத்திலுள்ள இந்த பத்மாவதியின் விடுதிக்கு ஏன் சுமந்து வந்தீர்கள்?” 

இந்தக் கேள்விக்குப் பதிலாக, கல்யாண வீட்டில் நடந்த சம்பவங்களைப் போலீசாரிடம் சுருக்கமாகக் கூறிவிட்டு, “செல்லை யாவும் பழனியப்பனும் குடிமயக்கத்தில் கிடப்பார்கள் என்ற எண்ணத்தில்தான், அவர்களைக் கூப்பிட்டுக் கதவைத் திறக்கச் செய்வது சுலபமல்லவென்று நாங்கள் தீர்மானிக்க நேர்ந்தது, என்றான் சின்னச்சாமி. 

“சரி, அவர்களையும் நாம் பார்த்துவிடுவோம்,” என்று கூறியவாறு பங்களாவை நோக்கி நடக்கலானார் இன்ஸ்பெக்டர். “நானும் கூட வரலாமா?” என்று அவரைப் பின் தொடர்ந்தான் சின்னச்சாமி, 

“வேண்டாம். அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு நீர் வீட்டுக்குப் போகலாம். மேற்கொண்டு தேவைப்பட்டால், உங்களிருவரையும் நான் நாளைக்கு விசாரித்துக் கொள்கிறேன்!” என்றார் இன்ஸ்பெக்டர். 

“நான் ஒரு பத்திரிகை நிருபர்…” என்று குரலை இழுத்தான் சின்னச்சாமி. 

“உம்முடைய பத்திரிகைக்குச் செய்தி தேவைப்பட்டால், போலீஸ் ஸ்டேஷனில் போய்க் காத்திரும். முதலில் அந்தப் பெண்ணைப் பத்திரமாக அவளுடைய வீட்டில் கொண்டு போய்ச் சேரும்!” என்றார் இன்ஸ்பெக்டர்! 

பங்களாவின் வெளிக்கதவைப் பலமாகத் தட்டினர் போலீ சார். நெடுநேரம் வரை உள்ளிருந்து பதில் ஒன்றும் வரவில்லை. கடைசியாக, “யாரது?” என்று கெட்டுக்கொண்டே, மாடி ஜன்னலொன்றைத் திறந்து எட்டிப் பார்த்தான் பழனியப்பன். 

“நாங்கள் போலீசார். செல்லைபாவைப் பார்க்கவேண்டும். சீக்கிரம் கதவைத் திற,” என்று அதட்டினார் சார்ஜண்டு. 

‘போலீசார்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் பழனியப்ப னுக்குத் தூக்கி வாரிப்போட்டது. வெருண்டடித்துக் கொண்டு செல்லையாவின் அறைக்குட் புகுந்து, அவனை அசைத்து உலுக்கி எழுப்பி உட்கார வைத்து, விஷயத்தைக் கூறினான். செல்லைபா சட்டென்று எழுந்து, பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த தன் சட்டையை யெடுத்து அவசர அவசரமாக மாட்டிக்கொண்டு, பழனியப்பனோடு கீழே இறங்கிப்போய் வெளிக்கதவைத் திறந் தான். போலீசார் தடதடவென்று ஹாலுக்குள் நுழைந்தனர். 

ஹாலுக்குள், கனகப்பன் அடிபட்டு வீழ்ந்த இடத்தில், ஒரு சின்னஞ்சிறு குட்டைபோல் ரத்தம் தேங்கிக்கிடந்தது. அதையும், செல்லையா அணிந்திருந்த சட்டையில் காணப்பட்ட ரத்தக் கறையையும் மாறி மாறிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். 

“மிஸ்டர் செல்லையா, உம்முடைய வெள்ளை மாளிகையில் ஒரு மனிதன் மண்டையில் அடிபட்டுக் கிடந்தான். அவன் பெரும்பாலும் பிழைப்பது அரிது. அதைப்பற்றி உம்மை விசாரிக்க வந்திருக்கிறோம்!” என்றார் இன்ஸ்பெக்டர். 

“எனக்கு ஒன்றுமே தெரியாதே!” என்று திருதிருவென விழித்தான் செல்லையா. “பழனியப்பனும் நானும் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தோம்.” 

“அதை நீர் நிச்சயமாகச் சொல்லமுடியுமா?” 

“எனக்கு எதுவுமே தெரியாது! எங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தோம்!” என்றான் செல்லையா. 

“நீர் போட்டிருக்கும் சட்டையில் அந்த ரத்தக்கறை எப்படி வந்தது?” 

அப்போதுதான் செல்லையா தன்சட்டையைக் கவனித்தான். அதில் படிந்திருந்த கறையைக் கண்டதும் அவன் திடுக்கிட்டு நின்றான். தன் கண்களையே நம்பாமல் அதைக் கையால் தடவிப் பார்த்தான். அவன் விரல்களின் நுனியில் பச்சை ரத்தம் ஒட்டிக் கொண்டு வந்தது. அந்த விரல்களைப் பார்த்து அவன் திக்பிரமை யுற்றான். 

மிஸ்டர் செல்லையா, இந்த வீட்டை நான் சோதிக்கவேண்டும். உம்முடைய சட்டையையும் நீர் அணிந்திருக்கும் மற்ற உடை களையும் நான் பரிசோதனைக்கு அனுப்பவேண்டும்,” என்று சொல்லிவிட்டு, ஸார்ஜண்டு பக்கம் திரும்பி, “இவர்கள் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போ”, என்று உத்தரவிட்டார் இன்ஸ்பெக்டர். 

அன்று இரவு இரண்டு மணியிருக்கும். சென்னையில் துப்பறியும் கேசவனது படுக்கைக்குப் பக்கத்திலிருந்த டெலிபோன் மணி, கணகணவென்று அலறியது. ரிஸீவரைக் கையிலெடுத்து, “யாரது?” என்றார் சேசவன். 

“ஓவியர் கிருஷ்ணமூர்த்தி பேசுகிறேன்,” என்று பதில் வந்தது. 

அவ்விருவரும் சுமார் மூன்று நிமிஷங்கள் பேசினர். உடனே பரபரப்பாக எழுந்து சென்று, பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த தன் சிஷ்யனைத் தட்டியெழுப்பி, “தினகர், சீக்கிரம் புறப்படு; நாம் அவசரமாகக் கமலவனம் போக வேண்டும்,” என்றார் துப்பறியும் கேசவன்.

– தொடரும்…

– கொலைப்பித்தன் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1955, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *