கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 110 
 
 

(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நில அளவையாளர் கிலேப் சிமிர்நோவ டெட் வீல் நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்ததும், தாம் பணி மேற்கொள்ள வேண்டிய பண்ணையை அடைய இன்னும் முப்பது அல்லது நாற்பது மைல்கள் கடக்கவேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டார். குதிரையோட்டி குடிக்காமல் நிதானாக இருந்து, குதிரையும் திடமாக இருந்தால் அந்த தூரம் முப் பது மைல்களுக்கு குறைவாகத்தான் இருக்கும். போதையில் குதிரைக்காரனும், தேய்ந்த கால்களுடன் குதிரைகளும் இருந்தால் தூரம் ஐம்பதையும் தொடும். 

“வாடகைக்குப் போஸ்ட் குதிரைகள் எங்குக் கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?” அங்கிருந்த அதிகாரியைப் பார்த்து நில அளவையாளர் கேட்டார். 

“என்ன போஸ்ட் குதிரைகளா ? போஸ்ட் குதி ரையை விடுங்கள். நூறு மைல் தூரத்துக்கு ஒரு நாயைக்கூட உங்களால் பார்க்க முடியாது. சரி நீங் கள் எங்கே போக வேண்டும் ?’ 

“தேவ்கினோவுக்கு, தளபதி ஹோஹோத்தோ வின் பண்ணைக்குப் போகவேண்டும்”. 

“அப்படியா ?” என்று கொட்டாவி விட்ட ரயில்வே அதிகாரி, “இந்த ஸ்டேஷனைவிட்டு வெளியேப் போனால் அங்கே சில விவசாயிகள் இருப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் பயணி களை ஏற்றிச் செல்வார்கள்.” என்ற தகவலைச் சொன்னார். 

நில அளவையாளர் பெருமூச்சுவிட்டார். ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்தார். நீண்ட நேரத் தேடலுக்கு பின், நிறைய வாக்குவாதத்துக்கும் பேரத்துக்கும் பின் ஒருவழியாகப் பருத்த திடமான விவசாயி ஒருவன் அவருக்குக் கிடைத்தான். அம்மைத் தழும்புடைய முகம் கொண்ட அவர் விவசாயி சாம்பல் நிறத்தில் கிழிந்த கோட்டும் கோரை சப்பாத்துகளையும் அணிந்திருந்தான். 

“என்ன ஒரு வித்தியாசமான வண்டியை நீ வைத்திருக்கிறாய்!” என்று சொல்லிக்கொண்டே நில அளவையாளர் வண்டியில் ஏறினார். “எது முன்பக்கம் எது பின் பக்கம் என்று கூடத் தெரிய வில்லை.” 

*போஸ்ட் குதிரைகள் என்பவை 19ஆம் நூற்றாண்டில் ரஷ்யர்களின் பயணமுறை. இத்தகைய குதிரைகள் ஒவ் வோரு போஸ்ட்டிலும், அதாவது ஒவ்வொரு நிறுத்தத்தி லும் பயணிகள் வாடகைக்கு எடுத்து செல்ல ஏதுவாக்க கிடைக்கும். 

“என்ன தெரியவில்லையா? குதிரையின் வால் இருக்கிறதே அதுதான் முன் பக்கம். தங்கள் சமூகம் உட்கார்ந்திருப்பதுதான் பின்பக்கம்.” 

அந்தச் சின்னக் குதிரை இளமையாக இருந்தாலும் மெளிந்திருந்தது. கால்கள் பரப்பிய படியும். காதுகள் கிழிந்தும் காணப்பட்டன. குதிரைக்காரன் ஏரி நின்று தன் சாட்டைக்கயிற்றால் அதனை ஒருமுறை அடித்ததும், தலையை மட்டும் அது அசைத்தது. மேலும் சத்தமாக அதட்டி யதும் ஏதோ காய்ச்சலில் உள்ளது போல் உடல் உதறியது. மூன்றாம்முறை அடி விழுந்ததும் வாகனம் முன்னும் பின்னுமாக அசைந்தது. நான்காவது அடியில் மெதுவாக ஊர்ந்து சென்றது. 

“வழி நெடுக இப்படித்தான் இருக்குமா?” என நில அளவையாளர் கேட்டார். 

“நாம் நல்ல விதமாகப் போய்ச் சேர்ந்து விடுவோம். இந்தச் சின்னக் குதிரை இளமையும் துடிப்பும் கொண்டது. அது ஓட ஆரம்பிக்க வேண்டியது தான் பாக்கி. பிறகு எதுவும் அதை நிறுத்த முடியாது” என வண்டியோட்டி அவருக்கு ஆறுதலாய்ச் சொன்னான்… 

”ஏ குட்டிச்சாத்தானே … ஓடு !” என விரட்டினான்.  

அவர்கள் நிலையத்தைவிட்டுப் புறப்பட்ட போது பொழுது சாய்ந்து விட்டது. வலப்பக்கத் தில் இருட்டான அகண்ட சமவெளி. அதைத் தாண்டிவிட்டால் அடுத்த முனைக்கு நிச்சயமாகச் சென்றுவிடலாம் என்னும் அளவுக்கு அது பரந்து விரிந்திருந்தது. இலையுதிர்காலச் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து உருகி வானில் கலந்து விட்டது. இடப்பக்கத்தில், மங்கிவரும் ஒளியில் சிறு மேடுகள் தெரிந்தன. அவை மரங்களாகவும் இருக்கலாம். அல்லது, சென்ற ஆண்டின் மீதியாக இருக்கும் வைக்கோல் போராகவும் இருக்கலாம். முன் பக்கம் என்ன இருக்கிறது என்பதை நில அளவையாளாரால் பார்க்க முடியவில்லை. ஏனெனில், ஒட்டுமொத்த இயற்கைக் காட்சியையும் வண்டி யோட்டியின் அகலமான அருவருப்பான பின்பு றம் மறைத்துவிட்டது. காற்று மென்மையாக வீசிய போதிலும. குளிர் தெரிந்தது. 

‘என்ன ஒரு கஷ்டகாலம்!’, என்று தன் காதுகளைக் கோட் காலரால் மூட முயன்ற நில அளவையாளர் நினைத்தார். “குடிசையோ வீடோ எதுவும் இல்லை. யாரவது வந்து நம்மைச் சூழ்ந்து கொண்டு நம்மிடம் உள்ளதைத் திருடினால் கூட யாருக்கும் தெரியாது. நாம் பீரங்கி வைத்துச் சுட்டாளும் கேட்காது. இந்தக் குதிரைக்காரனையும் நம்ப முடியாது. என்ன ஒரு பெரிய முதுகு இவனுக்கு! பயங்கரமான மிருகத்தைப் போல என்ன ஒரு மோசமான முகம்!’ 

“உன்னைத்தான், இங்க பார். உன் பெயர் என்ன?” என்று நில அளவையாளர் கேட்டார். 

“என் பெயரா? கிலிம்.” 

“அப்படியா, கிலிம். இங்க எப்படி? ஒன்றும் ஆபத்தில்லையே? யாரும் கைவரிசையைக் காட்ட மாட்டார்களே?” 

“அப்படியெல்லாம் நடக்காது. கடவுள் நம்மை பார்த்துக்கொள்வார். இந்த இடத்தில் யார் வந்து திருடப் போகிறார்கள்?” 

“உண்மைதான். எது எப்படி இருந்தாலும், என்னிடம் மூன்று கைத்துப்பாக்கிகள் இருக்கின்றன” என நில அளவையாளர் பொய் சொன்னார். “துப்பாக்கியோடு விளையாடுவது தவறு. ஒரு துப்பாக்கி பத்து திருடர்களை பதம் பார்த்துவிடும்.” என்று மேலும் அடுக்கினார். 

இருட்டத் தொடங்கியது. திடீரென வாகனம் கிறீச் என்ற சத்தத்துடன் உறுமியது, உதரியது. பின் ஏதோ அதன் விருப்பத்தை மீறி இயங்குவது போல் வாகனம் இடப்புறமாக திரும்பியது. 

“இப்பொழுது என்னை எங்கே கொண்டு போகிறான்?” என்று நில அளவையாளர் நினைத்தார். ”இதுவரை நேரே போய் கொண்டிருந்தான். இப்பொழுது திடீரென இடது பக்கம் திரும்பிவிட்டான். தடியன், என்னைத் தனியாக இருக்கும் புதருக்கு கூட்டிப் போகிறானோ என்று பயமாக இருக்கிறது. மேலும், இப்படியெல்லாம் நடக்கும் என்பது தெரிந்ததுதான்”. 

குதிரைக்காரனைப் பார்த்து, “இங்கே கவனி, இங்கே ஆபத்து எதுவும் இல்லை என்று சொன்னாய். அடச்சே! சுவாரஸ்யமாக இல்லையே. திருடர்களுடன் சண்டை பிடிப்பதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். பார்ப்பதற்குத்தான் நான் நோஞ்சானாகத் தெரிவேன். ஆனால் ஒரு காளைக்கு இருக்கும் பலம் எனக்கு இருக்கிறது. ஒரு முறை மூன்று திருடர்கள் என்னை தாக்க வந்தார்கள். என்ன நடந்தது என்று நினைக்கிறாய். ஒருவனை அடித்த அடியில் அவன் செத்தே போனான். மீதி இரண்டு பேரையும் சைபீரியாவுக்கு அனுப்பிவிட்டேன். எங்கிருந்துதான் அத்தனை பலமும் எனக்கு வருகிறதோ, எனக்கே தெரியவில்லை. உன்னை போன்ற ஒரு பெரிய முரடனைக்கூட அப்படியே ஒற்றைகையால் தூக்கி . . . தோலை உரித்துவிடுவேன்!”, என்றார். 

கிலிம், நில அளவையாளரைத் திரும்பிப் பார்த்தான். அவர் முகத்தை உற்று உற்றுப் பார்த்தான். பிறகு குதிரைக்கு ஒரு அடி கொடுத்தான். 

“ஆமாம். என கையில் மாட்டிய திருடனைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்! அவன் கை, கால்களை இழுப்பதோடு போகாது. நீதி மன்றத்தில் வந்து அவன் செய்த குற்றங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அங்குள்ள நிதீபதிகள், வழக்கறிஞர்கள் என எல்லோரும் எனக்கு தெரிந்தவர்கள்தான். நான் ஒரு அரசு ஊழியர். அதோடு ஒரு முக்கியப்புள்ளி. இதுபோல். நான் பயணம் செய்யும்போது அரசுக்குத் தெரியும். எனவே எனக்கு, யாரும் எந்த தீங்கும் செய்யாமல் இருக்க, அரசு கண்காணித்தப்படி இருக்கும். பாதை முழுக்க உள்ள புதர்களுக்கு பின் பதுங்கியபடி போலிஸ்காரர்களும் போலீஸ் கேப்டன்களும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். நிறுத்து. நிறுத்து…” என்று திடீரென நில அளவையாளர் கத்தினார். “எங்கே போகிறாய்? என்னை எங்கே கொண்டு போகிறாய்?” 

“தெரியவில்லையா ? காட்டுக்குள் தான்.” 

“அப்படி என்றால் இவன் அப்படித்தான்.” என்று நில அளவையாளர் நினைத்தார். ”நான் பயந்து விட்டேன். என் பயத்தை வெளியே காட்டக்கூடாது. நான் அவனைப் பார்த்துப் பயந்து போய் இருப்பதை ஏற்கனவே பார்த்துவிட்டான். ஏன் என்னை அவன் அடிக்கடி திரும்பிப் பார்க்கிறான்? அவன் ஏதோ திட்டம் திட்டிக் கொண்டிருக்க வேண்டும். ஆரம்பத்தில் வண்டி நகர்தே அரிதாக இருந்தது. ஆனால், இப்பொழுது பறக்கிறது. “இங்கே பார் கிலிம். ஏன் நீ இப்படி உன் குதிரையை விரட்டுகிறாய்?” என்று கேட்டு வைத்தார். 

“நான் விரட்டவில்லை. அதுவாக ஓடுகிறது. ஓடத்தொடங்கி விட்டால் போதும், அப்புறம் எதற்க்கும் அது நிற்காது. பாவம். அதன் கால்கள் அப்படி அமைந்துள்ளன.” என்று பதில் சொன்னான். 

“அது பொய். தம்பி. அது பொய் என்பது எனக்குத் தெரிகிறது. இவ்வளவு வேகமாக போக வேண்டாம் என்று உனக்கு சொல்லி வைக்கிறேன். குதிரையைப் பிடி. கேட்கிறதா? அதை பிடி!” 

“ஏன்?” 

“ஏன் என்றால். . . ஏனென்றால் ஸ்டேஷனிலிருந்து நான்கு நண்பர்கள் என்னைத் தொடர்ந்து வருகிறார்கள். இந்தக் காட்டுப் பகுதியில் அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்வது இன்னும் சந்தோஷமாக இருக்கும். அவர்கள் எல்லாம் உயரமான பலமான ஆட்கள். எல்லோரிடமும் கைத்துப்பாக்கி இருக்கிறது. ஏன் நீ திரும்பி என்னைப் பார்த்து ஏதோ முள்ளில் உட்கார்ந்திருப்பவனைப் போல் குதிக்கிறாய்? ஹேய்! இங்கே பார். என்னை… என்னிடம் பார்க்க எதுவும் இல்லை. என் துப்பாக்கிகளைத் தவிர! இதோ, அவற்றைப் பார்க்க வேண்டும் என்று நீ விருப்பப்பட்டால் எடுத்துக் காட்டுகிறேன். இதோ அவற்றை எடுக்கிறேன்.” 

நில அளவையாளர் தன் கோட்பைகளில் எதையோ தேடுவதுபோல் பாவனை செய்து கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவர் கனவிலும் நினைத்து பார்த்திருக்க முடியாத சம்பவம் நடந்துவிட்டது. கிலிம் திடீரென வாகனத்தை விட்டு எகிறிக் குதித்துப் பின்னங்கால் பிடரியால் இடிபட ஓடி காட்டுக்குள் மறைந்து போனான். 

ஓடும் போதே, “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள். என் குதிரையை எடுத்துக்கொள், சண் டாளா என் வாகனத்தை எடுத்துக்கொள், என்னை விட்டுவிடு” என்று கத்தியபடியே ஒடினான். 

அவன் வேகமாக ஓடியதில் ஏற்பட்ட கால் தடத்தின் ஒலி மறைந்தது. காய்ந்த சருகுகளின் ஒலியும் அடங்கியது. எங்கும் நிசப்தம் நிலவியது. இந்த எதிர்பாராத சம்பவம் நடந்து முடிந்தவுடன் நில அளவையாளர் செய்த முதல் காரியம், குதிரையை நிறுத்தியது தான். பிறகு வாகனத்தில் மேலும் வசதியாக அமர்ந்தபடி யோசித்து பார்க்கத் தொடங்கினார். 

“ஆக, அவன் பயந்து போய் ஓடிவிட்டான். முட்டாள்! சரி. இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு வழி தெரியாது. எனவே தனியாக போகமுடியாது. அப்படியே போனாலும், நான் ஏதோ அவனது குதிரையைத் திருடியது போல் ஆகிவிடும். என்ன செய்யாலாம்? “கிலிம்! கிலிம்!” என்று கத்திப் பார்த்தார். 

“கிலிம்” என்ற எதிரொலி பதிலாக கிடைத்தது.  

இரவு முழுவதும் இந்த இருட்டான காட் டில், ஓநாய்களின் ஊளையிடும் சத்தத்தையும் அதன் எதிரொலியையும், இந்த மெளிந்த குதிரையின் குறட்டை ஒலியையும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிருக்கும் என்ற எண்ணமே ஒன்றே அவரது முதுகெலும்பில் சில்லிட வைத்தது. 

“கிலிம்” என்று உரக்கக் கத்திப்பார்த்தார். ”என் இனிய கிலிம்! என் செல்லக் கிலிம்! எங்கிருக்கிறாய்!” 

இரண்டு மணிநேரம் தொடர்ந்து கூப்பிட்டுப் பார்த்தார். குரல் கம்மி பேசமுடியாமல் முயற்சியைக் கைவிட்டு இந்தக் காட்டில் இரவை கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்த போது தான் முனகல் ஒலி ஒன்று காற்றில் மிதந்து வந்தது. 

“கிலிம். நீ தானே? வா, கிலிம். கிளம்பலாம்.” 

“நீங்கள் என்னைக் கொன்றுவிடுவீர்கள்.” 

“நான் ஏன் உன்னைக் கொல்லப்போகிறேன். கிலிம். சும்மா வேடிக்கைக்காக அப்படிச் சொன்னேன். கடவுள் மீது சத்தியமாய், நானாவது துப்பாக்கி வைத்திருப்பதாவது! நான் அப்படிப் பொய் சொன்னதற்குக் காரணம் எனக்கு பயமாக இருந்தது. வா போகலாம். நான் குளிரில் உறைந்து போய் இருக்கிறேன்.” 

உண்மையான திருடனாக இருந்தால் நீண்ட நேரத்துக்கு முன்பே குதிரையையும் வாகனத்தையும் எடுத்துக் கொண்டு ஓடிப்போய் இருப்பான் என்று கிலிம் நினைத்திருக்க வேண்டும். எனவே, காட்டைவிட்டு வெளியே வந்த கிலிம், வண்டியில் பயணம் செய்தவரை நோக்கி எதற்கும் கவனத்துடன் அடியெடுத்து வைத்தான். 

“முட்டாள். நீ எதற்காகப் பயப்படுகிறாய்? நான் சும்மா வேடிக்கைக்காகதான் சொன்னேன். நீ என்னைப் பார்த்துப் பயப்படுகிறாய் ! வா வந்து ஏறு!” என்று மீண்டும் சொன்னார். 

“முதலாளி ஐயா” என்று முனகிய கிலிம், வாகனத்தில் ஏறியபடியே, ”இப்படியெல்லாம் நடக் கும் என்று எனக்கு முன்னமே தெரிந்திருந்தால், நூறு ரூபள்களுக்கு உங்களை அழைத்து வர ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். பயத்தில் ஏறக்குறைய செத்தே போனேன தெரியுமா?”, என்றான். 

கிலிம் தன் குதிரையை அடித்தான். வாகனம் குலுங்கியது. கிலிம் மீண்டும் அடித்தான் வாகனம் சட சடத்தது. நான்காவது அடியில் வாகனம் மெதுவாக நகர்ந்தது தான் தாமதம், நில அளவையாளர் தன் கோட் காலரை இழுத்து காதுகளை மூடிக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டான். 

கிலிம்மும் சரி, பாதையும் சரி இரண்டுமே இப்பொழுது அவருக்கு ஆபத்தாகத் தெரியவில்லை. 

– இக்கதை முதன்முதலில் ஆண்டோஷா ஷெக்கோண்டே என்ற அவரது ஆரம்பக்கால பெயருடன், 1885 ஆம் ஆண்டு, நவம்பர் 16ஆம் நாள் ஃப்ராக்மெண்ட்ஸ் என்னும் இதழில் வெளியானது. பிறகு 1886 இல் அவருடைய கதைத்தொகுப்பில் இடம்பெற்றது. 

– ஆன்டன் செக்காவ் ஆகச்சிறந்த கதைகள், தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், முதற் பதிப்பு: 2019, தடாகம் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *