வனிதாலயம்






(1946ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம்-1
கோவில், குளம் என்று பேசும்போது,அழகிய கோபுர முள்ள கோவிலும், அதற்குப் பக்கத்தில் பளிங்கு போன்ற நீருடன் கூறிய ஆறோ, குளமோதான் நம் மனக் கண்முன் வந்து நிற்கிறது. ஆனால், இது அந்தக் கோவி லுக்கும், குளத்திற்கும் போகுமுன்புதான். குளங்களில் பாசியில்லாத குளம் வெகு அபூர்வம். கோவிலுக் குள் ளும், நதி தீரத்திலுமோ வம்பே பிரதானம். வடக்கே போனால், பண்டாக்களின் விஷமம் என்கிறார்கள். எனவே, மாயவரம் காவிரி ஆற்றங்கரையில் வம்பே முக்கியத்துவம் வகித்ததை நாம் ஓர் அதிசயமாகச் சொல்வதற் கில்லை. குப்பிப் பாட்டி (ஊர் வம்புக் கெல்லாம் உற்பத்தி ஸ்தான மாக இருப்பவள்) புழுதியினால் செக்கச் செவேலென்று சிவந்திருந்த தன் புடவையை விழுந்து விழுந்து தோய்த்து, ஒட்டப் பிழிந்து இடுப்பில் கட்டிக்கொண்டாள். நாற் புறமும் பார்த்துவிட்டு ஏதோ முணுமுணுத்தவாறு இரண்டு உத்திரணி தண்ணீரைக் குடித்து விட்டு ருத்திராக்ஷமாலையை உருட்டிக்கொண்டே ஐபிக்க ஆரம்பித்தாள். (ஜபமோ அல்லது யாருக்காவது சாபமோ, யார்கண்டார்கள் ?). அப்பொழுது அங்கு ஜலம் மொண்டுபோக வந்த ஓர் யுவதி யின் மீது பாட்டியின் கழுகுத் திருஷ்டி விழுந்தது. அப் பெண் அக்கம் பக்கம் பார்க்காமல், ஏதோ தீவிரமான சிந்தனையுடன், ஜலத்தை எடுத்துக்கொண்டு விறு விறு வெனத் திரும்பி நடந்தாள். அதைக் கண்ட பாட்டி, அவள் பின்னழகைப் பார்த்து ஒர் ஏளனச் சிரிப்பு சிரித்துக் கொண்டே “பார்த்தாயாடீ, காமு” என்றாள், குனிந்து குடத்தைத்தேய்த்துக்கொண்டிருந்த ஒரு பழுத்த சுமங்கலியிடம். “என்னது?” என்ற கேள்வியுடன், நிமிர்ந்து அந்தப் பெண் போன திக்கை நோக்கினாள் காமு. “ஊம்! கிரகசாரம்!” என்று முனகிக் கொண்டாள் பாட்டி. பக்கத்திலிருந்த சிலர், இதில் சேர்ந்து கொண்டனர். “ஊருக்குப் புதிசோ? யார் அவள்?” என்று அக்கறையாக விசாரித்தாள் ஒருத்தி.

“ஆசாரமா ஸ்நானம் செய்யற இடத்திலேகூட இந்த மாதிரி பாபாத்மாக்கள் வந்து சேர்ந்துடறாளே, அதைச் சொல்லு” என்று மறுபடியும் அங்கலாய்த்தாள் பாட்டி. இதைக் கேட்டுக்கொண்டே வந்த ராஜம் என்னும் சிறுமி “ஏன், பாட்டி! கண்ணாலே கண்டாப்போலே சொல்ல றேளே ? அப்படி என்ன பாபத்தை அவள் செஞ்சுட்டா? கல்பகத்தை யார் அப்படிக் கெடுதலாகச் சொல்ல முடி யும்?” என்று கேட்டதும் பாட்டிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “ஆமாண்டி, அம்மா! அவளுக்கு நீ வக்காலத்து வாங்கி யிருக்கயாக்கும்! போறும்,எனக்கு! ஊர் சிரிக்கிறது!” என்றாள்.
“யாரைப் பார்த்து?” என்று குதர்க்கமாகக் கேட்டாள் அந்தப் பெண்.
“ஏண்டி! பிரமாதமாப் பரிஞ்சு பேச வந்துட்டயே? அவளும் இந்த ஊருக்கு வந்து மாசம் ஆறாகிறது. கல்யாணமானவளா, இல்லே, அறுத்துப் போனவளா என்று ஒண்ணுமே தெரியல்லே. மஞ்சளும் குங்குமமுமா வேறே இருக்கா.”
“அதிலே இருந்துகூடத் தெரியலியா உங்களுக்கு, அவ கல்யாணமான சுமங்கலின்னு?”
“சீ, அஸத்து! அப்ப நான் சொல்றது புரளியா? வம்புக்காரின்னு நினைச்சுண்டயா என்னை” என்று கண்டபடி இரையத் தொடங்கினாள் கிழவி.
“பேசாம இருங்கோ பாட்டி! நேத்துப் பொறந்தது ஏதாவது உளறினால் உங்களுக்கென்ன?” என்று காமு அம்மாமி பாட்டியைத் தேற்றினாள்.
“அதென்ன, அப்படிச் சொல்லறே? கையிலே ஜப மாலையோடே நான் சொல்றேன்! அதைப் பொய்யின்னு சொல்றவா நாக்கு…” என்று பாட்டி சஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய ஆரம்பித்தாள்.
ஆனால், ராஜம் இதை யெல்லாம் லட்சியம் செய்யவில்லை. கால் சிலம்பு ‘ஜல் ‘லென்று ஒலிக்க, கம்பீரமாய் வீட்டைப் பார்க்க நடையைக் கட்டினாள் அவள்.
இத்தனை வம்புக்கும் இலக்கான கல்பகமோ, ஆற்றங் கரையிலிருந்து நேரே ஓர் சிறிய ஓட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். உள்ளே இருமலில் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த அவளுடைய தாயார் அலமேலு அம்மாள், “யாரது? கற்பகமா?” என ஈனஸ்வரத்தில் கேட்டாள். “ஆமாம், அம்மா” என்று பரிவுடன் கூறிக்கொண்டே அருகில் வந்து உட்கார்ந்தாள் பெண்.
”கல்பகம்! இன்றைக்காவது கடிதம் வந்ததா?” என்று வெகு ஆவலாகக் கேட்டாள் தாயார்.
“அம்மா! உடம்பை ஏன் அலட்டிக் கொள்கிறாய்? வருகிறபோது வரட்டுமே?”
”நீ வயசிலே சின்னவள், கல்பகம்! மனோ திடத்தில் தான் நீ பெரியவள். என் மனசு கேட்கவில்லையே, அம்மா! கிளியை வளர்த்து…” முடிக்க மாட்டாமல் தேம்பினாள் பெற்றவள்.
கல்பகம் பொங்கிவரும் கண்ணீரை அடக்கிக்கொண்டு, “கஞ்சி போடட்டுமா, சொல்லேன்!” என்று பேச்சை மாற்றினாள். வெளியிலிருந்து “அம்மாமி!” என்று கூப் பிட்டுக் கொண்டே அச்சமயம் உள்ளே வந்தாள் ராஜம். அவள் கையில் டம்ளர் நிறையப் பசும் பால் இருந்தது. ”ராஜம்! உன்னுடைய இந்த உபகாரத்திற்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்! நடுக் காட்டில் விட்ட வர்களுக்கு ஒரு வழி பிறந்தால், எப்படி அவர்கள் மனம் பூரிக்குமோ, அப்படித்தான் இருக்கு என் நிலைமையும்…” என்று கனிவுடன் கூறினாள் கல்பகம்.
“கல்பக மாமி! இப்படி யெல்லாம் பேசினால், எனக்கு ரொம்ப மனசு கஷ்டப்படும் அப்புறம்….ஆமாம்…” என்று புன்சிரிப்புடன் கூறியவாறு தன் வீட்டிலிருந்து கறந்து கொண்டு வந்த அந்தப் பாலை கல்பகத்தின் கையில் கொடுத் தாள் ராஜம்.
கல்பகம் கஞ்சி வைத்துக்கொண்டிருக்கையில், ராஜம் அலமேலுவிடம் போய் உட்கார்ந்து “பாருங்கோ மாமீ! நம்ப கல்பகத்தைப்பற்றி இந்த ஊரில் கொஞ்ச வம்பு பேசவில்லை. காதுக்கே நாராசமாய் இருக்கு. நான் நன்றாய் சண்டை போட்டேன் அவாளிடம்” என்றாள். “கண்ணூ! எங்களுக்காக நீ ஏன் உங்கள் ஊர் மனுஷாளைப் பகைச்சுக்கிறே அம்மா! அவள் தலையிலெழுத்து…” என்று சொல்லும் போதே இருமல் வந்து திணறினாள் அலமேலு.
கல்பகம், ராஜத்தைத் தனியே அழைத்துச் சென்று, ”ராஜம்! இந்த விஷயமெல்லாம் அம்மாகிட்டே சொல்லாதே யம்மா! அவள் மனம் புழுங்கிச் செத்துடுவாள். யார் என்ன பேசினால் என்ன? நம்மட்டில் ஹ்ருதயபூர்வமாய் நமக்குத் தெரியும்…”
“இருந்தாலும் அந்தக் குப்பிப் பாட்டி ரொம்பக் கெட்டவள். எங்கம்மா கூட சொல்லுவா. இவள் ஏதோ பேசினதிலேதான் மனம் வெதும்பிப் போய் எங்கம்மா செத்துப் போனாள், மாமி!” என்று கம்மிய குரலில் கூறி முடித்தாள் ராஜம்.
”அப்பா! இந்த விஷம் தீட்டிய நாக்குகளால் மனித உள்ளம் எப்படித் துன்புறு மென்பதை ஏன்தான் இவர்கள் அறியவில்லையோ!” என எண்ணிக்கொண்டாள் கல்பகம். ”பன்னிரண்டு வயதுச் சிறுமியன் புத்திசாலித்தனமும், குணமும், அறுபது வயதைத் தாண்டியும்கூட இவர்களுக்கு இல்லையே! இதுவும் நமது பாபத்தின் பலன் தான்…” என்று தன்னையே ஒரு நிமிஷம் நொந்து கொள்ளவும் தோன்றிற்று அப்பேதைக்கு.
அத்தியாயம்-2
“ஏண்டா, ராமு! நான் கேள்விப்படுவது நிஜந்தானா? ஏன் தலையைக் குனிந்துகொண்டாய்? பதில் சொல்லேன்!” என்று தன் நண்பனைப் பிடித்துக் குலுக்கினான் கண்ணன். இருவரும் சிறிது நேரம் மௌனமா யிருந்தனர்.
பின்பு ராமு, ”கண்ணா! என்மீது தப்பு இல்லையடா! இவர்களெல்லாருமாகச் சேர்ந்து’ ” என்று ஏதோ ஆரம்பித்தான்.
“ஐயோ, பாவம் ! நீ பச்சைக் குழந்தை. ஆட்டுவார் கைப்பொம்மை! அதுதானே?” என்று சிறிது பாத்யதையுடனேயே கோபித்துக்கொண்டான் கண்ணன்.
“கண்ணா! நான் அபராதிதான். ஒப்புக்கொள்கிறேன்! தண்டனை என்ன உண்டோ சொல்.”
“இனிமேல் என்ன செய்ய முடியு மென்று திகைக்காதே…இரண்டு பேரையும் வைத்துக்கொண்டு குடித்தனம் நடத்து. இப்பொழுதே எழுதிப்போடு உன் மனைவிக்கு……”
“என்னவென்று?”
“அதுகூட நான் சொல்லணுமா? உனக்கு இங்கே பெங்களூரில் வேலையாகிவிட்ட தென்றும், இனி, பெற்றோர்களுக்காக மனைவியைத் தள்ளும் உத்தேசமில்லையென்றும், ஒரு துணையுடன் புறப்பட்டு வரும்படியும் எழுதேன்.”
”ஊம்!” என்றான் ராமு.
”’ஊம் எதற்கு? அவர்கள் சென்னையில்தானே இருக்கிறார்கள்? விலாசம் தெரியுமோ இல்லையோ?” என்று கேட்டவாறே கண்ணன் காகிதமும் பேனாவும் கொண்டு வந்து ராமுவின் எதிரில் வைத்தான். பிறகு தான் ஒரு புறமாகப்போய் உட்கார்ந்துகொண்டான்.
ராமு கடிதத்தை எழுதி முடித்தபின் அதை எடுத்துக் கொண்டு இருவருமாகத் தபாலாபீசுக்குச் சென்றார்கள். ”கண்ணா! நீ சொன்னபடியே செய்து விட்டேன். முதல் மனைவி இரண்டாம் மனைவி இரண்டு பேருமாய் வீட்டில் யுத்த களத்தை ஆரம்பித்துவிட்டால், பிறகு நீதான் வந்து விலக்கணும்!” என்றான் ராமு, நண்பனின் முகத்தைக் கூர்ந்து நோக்கியவாறு.
“ஆகட்டும். ஆனால் உன் மனைவிகள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருப்பார்க ளென்றுதான் நான் நினைக்கிறேன்.”
“ஹும்! பெரிய ஜோஸ்யம் சொன்னாயே!”
“ஜோஸ்யம் தெரிந்தால் ஏன் இப்படி ஆகிறது? முன்னாடியே உன் கல்யாணத்தை ஜோஸ்யத்தின் உதவியால் தடுத்திருப்பேனே!” என்று சொல்லிச் சிரித்தான் கண்ணன்.
அலமேலு அம்மாளுக்கு மாயவரத்திலிருந்த அந்தச் சொந்த வீட்டைத் தவிர கொஞ்சம் ரொக்கமும் இருந்தது. அவள் கணவர் இறக்கும்போது கல்பகத்திற்குப் பதின்மூன்று வயது. அந்த ரொக்கத்தைக் கொண்டு கல்யாணம் செய்து, பற்றாமல் போகவே, மாயவரத்திலுள்ள வீட்டின் மீதும் கடன் வாங்கிக் கொடுத்தாள் தன் சம்பந்திகளுக்கு. அவ்வளவு செய்தும், அந்தச் சம்பந்திகள் திருப்தி பட்டதாகத் தெரியவில்லை. குறைந்தது இன்னும் ஒரு ஆயிரமாவது கொடுக்க வேண்டு மென்று கேட்டார்கள். அலமேலு அம்மாளுக்கு ஒன்றுமே தோன்றவில்லை.
கல்பகத்தினால் இந்த அட்டூழியத்தைச் சகிக்க முடியவில்லை. “அம்மா! இனி ஒரு காசுகூடக் கொடுக்கும் எண்ணத்தை விட்டுவிடு. உனக்கு இருக்கிற ஒரே சொந்த வீடு அந்த ரங்கய்யன் கையில் அடகுபட்டது போதும். என் புக்ககத்து மனுஷர்களும், நம்மைப் போன்ற மனுஷர்கள்தான். பயப்பட வேண்டிய தில்லை” என்றாள் வெகு துணிச்சலுடன்.
“அடி பைத்தியமே! உன்னை வாழாவெட்டி யாக்கி விடுவார்களேடி!…” என்று அழுதாள் தாயார்.
“இன்னுமொரு ஆயிரம் கொடுத்தால் மட்டும், சீராக வைத்துக் கொள்வார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்று கேட்டாள் பெண்.
“பிள்ளைக்கு வேறு கல்யாணம்கூடப் பண்ணக்கூடியவர்கள் அவர்கள்!”
”குஷாலாய்ச் செய்துகொள்ளட்டும்” என்று வெகு கண்டிப்பாய்ச் சொல்லி விட்டாள் கல்பகம்.
மாயவரம் வந்தபின் தாயாரின் தொல்லை தாங்காமல் தான் கணவனுக்குக் கடிதம் போட்டாள். பதிலே இல்லை. அலமேலு அம்மாள் தினந்தோறும் “கடிதம் வந்ததா?” எனக் கேட்டுக் கொண்டிருந்ததுதான் மிச்சம்.
பாவம்!நடக்காத விஷயங்க ளெல்லாம்கூட நடக்கக் கூடாதா என்று ஏங்கும் மனப்பான்மை, மனிதனோடு கூடப்பிறந்த சுபாவ மல்லவா?
கடிதம் வராத துன்பம் மட்டு மில்லை. அலமேலு அம்மாளுக்கு வியாதியும் அதிகமாகி, வட்டியும் முதலும் ஏறி, வீடும் கையைவிட்டுப் போகும் தருவாயில் இருந்தது. கொஞ்ச நாளைக்குக் கல்பகத்தின் நகைகளின் மூலம் ஜீவனம் நடந்து வந்தது. ரங்கய்யனோ மகா பொல்லாதவன். என்றைக்கு வீட்டை ஜப்தி செய்து எடுத்துக்கொண்டு விடுவானோ? ”ஈசா ! நிற்க நிழல்கூட இல்லாமலா போக வேண்டும்?” என்று எண்ணி எண்ணி மனம் வெதும்பிப் போனாள் அலமேலு.
பண விஷயமாக அடிக்கடி ரங்கய்யன் அலமேலு அம்மாளைப் பார்க்க வரலானான். யௌவனம் நிறைந்து சோபிக்கும் கல்பகத்தை அவன் கண்கள் ஆவலுடன் நோக்கின. கல்பகமும் இதைக் கவனித்து அவன் வரும் போதெல்லாம் ஏதாவது சாக்கிட்டு வெளியே போய் விடுவாள். ஒரு நாள் அவன், தன் தோட்டத்தில் காய்த்த சில கறிகாய்களோடு ஒரு கூடை மாவடுவையும் கொடுத்தனுப்பினான். கல்பகம் அதை மரியாதையாகத் திருப்பி விட்டாள். அலமேலு அம்மாளுக்கு இதில் கொஞ்சம் வருத்தம். “இஷ்டப்பட்டால் அவன் இந்த நிமிஷத்திலே கூட வீட்டை எடுத்துக்கொண்டு விடலாம். கொஞ்சம் ஈவிரக்கமுள்ள மனிதன். ஏதோ கிழவி வாய்க்கு ருசியாகச் சாப்பிடட்டு மென்று அனுப்பினால் அதை ஏன் திருப்பி அனுப்பினாய்?” எனக் கடிந்து கொண்டாள் மகளை. மெல்லவும்மாட்டாமல் விழுங்கவும் மாட்டாமல் மௌனம் சாதித்தாள் பெண். அதற்குப் பிறகு தாயாருக்காக அவன் அனுப்பின பழங்களை வேண்டா வெறுப்பாக வாங்கி வைத்தாள். ஆனால், கொஞ்ச நாளில் கல்பகத்துக் கென்றே அவன் புடவை ரவிக்கை முதலியன கொடுத்தனுப்ப ஆரம்பித்தபோது கல்பகத்தால் தாங்க முடியாமல் போய்விட்டது. அதைத் திருப்பிவிட்டு, “அம்மா! இதுவரையிலும், உனக்காகக் காய்கறி, பழங்கள் அனுப்பிவந்ததாகச் சொன்னாயே? இந்தப் புடவை யும், ரவிக்கையும்கூட உனக்கா? இவ்வளவு வயசில் இதை யெல்லாம் நீயறியாதது அதிசயம்தான். வீடு போனால் போகட்டும், அம்மா! அதற்காக, மரியாதை தப்பி அவன் நடப்பது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது…” என்றாள்.
உண்மையில், அலமேலு அம்மாள் எண்ணவேயில்லை, ரங்கய்யன் இவ்வளவு கபடக்காரனென்று. அதனால்தான் அன்று அவன், ”அம்மா! வீட்டை எடுத்துக்கொள்ள எனக்கு ஒரு ஆசையும் கிடையாது. மனது வைத்தால். அந்தப் பத்திரத்தையே கிழித்துவிடக்கூடத் தயார்!” என்றானோ?….. சே, சே ! அப்படிப்பட்ட பாபியா அவன்?
“கல்பகம்! நான் ஒரு முட்டாள்! அவன் வஞ்சக எண்ணம் தெரியவே இல்லையடி எனக்கு!” என்று பேசி முடிக்குமுன் ரங்கய்யனே வந்துவிட்டான் உள்ளே. அலமேலு அம்மாள் ஈனஸ்வரத்தில் சொன்ன பதில் அவன் காதில் விழவில்லை. ஆனால் கல்பகம் சொன்னதை நன்றாகக் கேட்டு விட்டுத்தான் வந்தான் அவன். “இருக்கட்டும் இவ்வளவு திமிர் இருக்கிறதா அவளுக்கு? இந்த ஊர் சிரிக்க அடிக்கிறேன் இவளை!” என்று மனத்திற்குள் கருவிக் கொண்டான். அதன் விளைவாகத்தான் ஊரார் கல்பகத்தை ஏளனமாகப் பேசத் தொடங்கினார்கள். அட பாவி! உன் சாமர்த்தியத்தை யெல்லாம் ஒரு பெண் பேதையிடம்தானா காட்டவேண்டும்?
சாதாரணமாகப் பெண்களைப் பேதை என்றும் பெண் தெய்வ மென்றும், வீரப்பெண்மணிகளென்றும் பலவிதமாகச் சொல்வதைக் கேட்டும், படித்துமிருக்கிறோம். இவர்கள் எந்தக் கஷ்டத்தையும் தாங்களாகவே ஏற்றுத் தியாகிகளாகத் திகழ்பவர்கள். ஆனால் இன்னொரு வர்க்கமிருக் கிறது. ஆம், தாடகை, சூர்ப்பனகை இவர்களின் சந்ததிகளைத்தான் குறிப்பிடுகிறேன்.
பிறரை ஹிம்ஸைக் குள்ளாக்குவதே இவர்களுடைய தொழில் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட கிராதக வர்க்கத்தைச் சேர்ந்தவள் குப்பிப் பாட்டி. கல்பகம் அந்த ஊருக்கு வந்த புதிதில் நிரம்ப நல்லவள்போல அப் பெண்ணிடமும், அவள் தாயிடமும் நடந்து கொண்டாள் பாட்டி.
ரங்கய்யனுக்கு இந்தப் பாட்டியிடம் செல்வாக்கு உண்டு. அதாவது ரங்கய்யனின் காரியங்களில் பாட்டி ‘ஐந்தாம் படை’ப் பகுதியை ஏற்றுக்கொள்வாள். தனக்குப் பிடித்த மில்லாதவர்களை ஊரை விட்டே ஓட்டிவிடும் திறமை தனக்குப் பூரணமாக உண்டென்பது பாட்டியின் சித்தாந்தம். ரங்கய்யனுக்காகப் பாட்டி கல்பகத்தினிடம் போன தூது கொஞ்சமல்ல. கல்பகம் கைக்கு எட்டாமற் போகவே. அவளைப் பற்றி வாய் கூசாமல் பேசத் தொடங்கினாள் அப் புண்ணியவதி!
அத்தியாயம்-3
புரசைவாக்கத்தில், ஓர் அழகிய சிறு பங்களாவின் வாயில் தாழ்வாரத்திற்கும் உள்ளுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் ஒரு பழுத்த சுமங்கலி அம்மாள். “ரயில் தப்பி விட்டதா, என்ன? இன்னும் வரவில்லையே?” என்று அவள் வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தது. இடை இடையில் “அடி, ஜானகி! காப்பியைப் ‘பிளாஸ்’கிலே போட்டுவை…. விசுவத்திற்கு மசாலா போட்ட கறிதான் பிடிக்கும். முட்டை கோஸ், மசாலா இதிலெல்லாம் போட்ட கரண்டியை, என் சாப்பாட்டிலேயும் சேர்த்து விடாதே!” என்று இரைந்து சொல்லிக்கொண்டே உள்ளே போவாள். மறுபடி, “நன்றாயிருக்கு!…ரயில் தப்பிவிட்டதோ? இல்லே, ‘லேட்’டோ தெரியவில்லையே?” என்று முனகிக்கொண்டே வாசலுக்கு வருவாள் அம்மணியம்மாள். இப்படி அவள் தவித்துக்கொண்டிருக்கும்போது, வாசலில் ஒரு ‘டாக்ஸி’ வந்து நின்றது. விசுவம், முன்னால் இறங்க, பின்னால் அவன் தங்கை சரோஜா இறங்கினாள். டிரைவருக்குப் பக்கத்திலிருந்து அம்மணியம்மாளின் புருஷன் பரமசிவ அய்யர் கைத்தடியுடன் இறங்கினார்.
புன்சிரிப்புடன் எல்லாரையும் நோக்கிய அம்மணியம்மாள், பின்னால் இறங்கிய ஓர் யுவதியைக் கண்டதும், முகத்தில் கேள்விக் குறி தோன்ற விசுவத்தைப் பார்த்தாள். “அப்புறம் சாவகாசமாய் சொல்றேன், பாட்டீ” என்றான் அவன்.
”சரோஜா! அந்தப் பெண் கூச்சப் படுகிறாள், பார்! உள்ளே அழைத்துக் கொண்டு போ!” என்றார் கிழவர். உண்மையில் அம்மணியம்மாள் தன்னைப் பார்த்த பார்வையைக் கண்டு அந்த யுவதி பயந்துவிட்டாளென்று தான் கூறவேண்டும். அம்மணியால் விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் வெகு நேரம் இருக்க முடியவில்லை. தனியாகச் சரோஜாவை அழைத்து…”ஏண்டீ ! உங்க புக்ககத்து மனுஷியா அவள்?” என்று கேட்டாள்.
சரோஜா கல கல வென்று நகைத்துக் கொண்டே “அதெல்லா மில்லை. நாங்கள் திருச்சினாப்பள்ளிக்கு, ரமாவின் கல்யாணத்துக்குப் போனோமில்லையா? திரும்பி வரும்போது ரயிலில் இந்தப் பெண்ணைப் பார்த்தோம். இவள் அதிகமாகப் பேசவேயில்லை. நடு ராத்திரி ஒரு மணி இருக்கும் – இவள் ரயில் கதவைத் திறந்துகொண்டு வெளியே குதிக்கப்போனாள். நல்ல வேளையாக அதே சமயம் நான் விழித்துக் கொண்டதால், கர கர வென்று பிடித்து இழுத்து உள்ளே தள்ளினேன். அப்பொழுது எனக்கு அவ்வளவு பலம் எங்கிருந்துதான் வந்ததோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்! பிறகு, அண்ணா, தாத்தா, எல்லாருமாய்ச் சேர்ந்து மூர்ச்சையடைந்திருந்த அவளை தெளிய வைத்தோம். யாரும் இல்லாத அனாதையாம், பாவம்! ‘என்னை ஏன் சாகக்கூட விடமாட்டேன் என்கிறீர்கள்?’ என்று கேட்கிறாள் பாட்டி! வயிற்றெரிச்சலாயில்லை? சரி, நீ எங்களுடன் வந்துவிடு என்று நாங்கள் மூன்று பேருமாய் ரொம்ப சொல்லி அழைச்சு வந்துட்டோம்…”
“அழகாய்த்தான் இருக்கு உங்கள் காரிய மெல்லாம்!” என்று கூறி, அவர்கள் செய்த காரியம் தனக்குப் பிடிக்கவில்லை யென்பதைக் காண்பித்துக் கொண்டாள் அம்மணியம்மாள். ‘முன்னாடி பாட்டி இப்படித்தான் சொல்லுவாள், எல்லாம் போகப் போக அவளுக்கும் சரியாகி விடும்’ என்று எண்ணிக்கொண்டாள் சரோஜா. ஆனால், வெளியே யிருந்து வந்த யாரோ ஒரு யௌவனப் பெண்ணை வீட்டில் சேர்க்கத் தன் பாட்டி யோசனைதான் செய்வாள் என்பது விசுவத்துக்குத் தெரியும். பாட்டி தட தட வென்று தன் அறைக்கு வந்ததுமே அவன் அறிந்து கொண்டான், கட்டாயம் இது விஷயமாகப் பேசத்தான் வந்திருக்கிறா ளென்று.
“என்னடா, விசுவம்?…” என்று ஆரம்பித்தாள் பாட்டி.
“ ஊம்!…”
“இல்லே, இது என்ன காரியம் என்கிறேன்! எங்கெங்கே, யார், யார் சாகத் துணிகிறாளோ அவர்களை யெல்லாம் அழைத்து வந்து வீட்டில் வைத்துக்கொண்டு விட முடியுமா? அந்தக் கிழப் பிராமணன் கூடவா இதை உனக்கு சொல்லலே?”
“பாட்டீ!.. நானும் ரொம்ப யோசித்தேன். பிறகு உனக்கும் ஒத்தாசையாக இருக்கட்டுமே யென்று…”
“என்னடா கதை சொல்லுகிறாய்? ஜானகிதான் ஒருத்தி இருக்கிறாளே, குத்து உலக்கை மாதிரி? ஒத்தாசைக்கு அழைச்சுண்டு வந்தானாம், ஒத்தாசைக்கு ! சரி…நடந்தது நடந்தாச்சு! நாளைக்கே அவளை அனுப்பவழியைப் பார்!”
விசுவுக்குத் திகில் பிடித்து விட்டது. “ஐயையோ… என்ன பாட்டீ இது…? அவளுக்கு யாருமே கிடையாதாம், திக்கற்றவள், பாவம்! எங்கேயாவது அனாதை விடுதியில் சேர்க்க ஏற்பாடு பண்ணும் வரையில் இங்கேயே இருக்கட்டுமே அவள்…” என்றான் மெதுவாக.
பாட்டிக்குக் கோபம் வந்து விட்டது. “ஊம்…! யாரோ ஊர் பெயர் தெரியாதவளுக்குப் பரிஞ்சுண்டு, நான் சொன்னதை மதிக்க மாட்டாயா நீ” என்று கேட்டாள் அவள்.
“பாட்டீ…உன் மனசு எனக்குத் தெரியும். ஒரு பொம்மனாட்டி. அவள் வயசோ பொல்லாத இளமை..இப்பொழுது அவளை வெளியில் துரத்துவது நீதியா, சொல்லு…”
உண்மையில் பாட்டியின் மனம் இளகிவிட்டது. “பார்த்துக்கொள்வோம்…ஆனால், சீக்கிரத்தில் அவளை வெளியே அனுப்பிவிட நீ ஏற்பாடு செய்துடணும்…” என்றாள். “ஆகட்டும்” என்றான் விசு, நன்றி யறிதலுடன்.
அம்மணியம்மாள் மிச்சமுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள அப் பெண்ணையே கேட்க எண்ணி சமையலறைப் பக்கம் வந்தாள். ஜானகி அதற்குள் அவளைக் காய்கறி நறுக்க உட்கார்த்திவிட்டிருக்கவே, எஜமானியம்மாளைக் கண்டதும் எழுந்தாள் அம் மங்கை. இந்த மரியாதையில், ஏற்கெனவே இளகியிருந்த அம்மணியம்மாளின் உள்ளம் இன்னும் சிறிது தளர்ந்து கொடுத்தது. “உட்காரு! காபி சாப்பிட்டாயா?” என அன்புடன் கேட்டு, அவள் அருகில் தானும் அமர்ந்தாள். பின்பு, “ஏண்டியம்மா! உன் பெயர் என்ன?” என்று வினவவும், “கமலு” எனச் சுருக்கமாய்ப் பதில் கூறினாள் அவள். ஏதேதோ கேட்க எண்ணி வந்த அம்மணியம்மாளுக்குப் பரிதாபகரமான அப் பெண்ணின் முகத்தைக் கண்டதும் ஒன்றுமே கேட்கத் தோன்றவில்லை.
அந்தச் சமயம் அங்கு வந்த சரோஜா “கமலு…! இதோ ஒரு பழைய புடவை இருக்கு! குளிச்சுட்டு உடுத்திக்கோ!” என்றாள். கமலு எஜமானியின் முகத்தைப் பீதியுடன் பார்த்தவாறே “ஏன்? இதையே உலர்த்திக் கட்டிக்கிறேனே?” என்றாள். அம்மணியம்மாள் “ஏண்டீ யம்மா! அவள் ஆசையாக் கொடுப்பதை எடுத்துக் கொள்ளேன்” என்று சொல்லிக்கொண்டே ஹால் பக்கம் எழுந்து சென்றாள்.
கமலு வந்தது ஜானகிக்கு உதவியாகத்தான் இருந்தது. ஜானகி சிறு வயதிலேயே விதவையானவள். அம் மணியம்மாளுக்குத் தூரத்து உறவு. அவளை ‘விதவைகள் விடுதி’யில் சேர்த்துப் படிப்பிக்க அம்மணியம்மாள் முயன்றாள். இரண்டு வருஷங்கள் விடுதியில் இருந்துங்கூட ஜானகியின் மண்டையில் படிப்பு ஏறவேயில்லை. வீட்டிலும் ஒத்தாசைக்கு ஒருவரும் இல்லாததினால், அம்மணியம்மாள் ஜானகியை விடுதியிலிருந்து தருவித்துக் கொண்டாள். கமலு கட்டிக்கொள்ளத் தன்னுடைய பழம் புடவையைக் கொடுக்கலா மென்று எண்ணியிருந்தாள் ஜானகி. அவள் விதவைக் கோலம் ஒன்றும் பூணவில்லை. அம்மணியம்மாள், சரோஜா இவர்கள் உடுத்திய பழைய புடவைகளை யெல்லாம் ஜானகிதான் உடுத்துவாள். ஆகவே, வந்ததும் வராததுமாகச் சரோஜா, கமலுவுக்குத் தன் புடவையைக் கொடுத்தது ஜானகிக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் வேறு வழியில்லாமல் வாளாவிருந்தாள். சுற்றுக் காரியம் செய்ய ஒரு ஆள் கிடைத்ததே என்று ஆரம்பத்தில் சந்தோஷப்பட்ட ஜானகிக்குப் போகப் போகக் கமலுவிடம் வெறுப்பே உண்டாயிற்று. அம்மணியம்மாள் முதற்கொண்டு விசுவம் வரையிலும் அவள் மீது பிரியமாக இருப்பதைக் காண அவளுக்குச் சகிக்கவில்லை. ஆகவே, சில்லரை விஷயங்களி ளெல்லாம் சமயலறையில் தகராறு உண்டாகத் தொடங்கியது.
ஒரு நாள், ஜானகிக்கு உடம்பு நலமில்லாமற் போகவே கமலு சமைத்தாள். வீட்டிலுள்ள அனைவரும் “அடே அப்பா! இந்த மாதிரிச் சமையல் சாப்பிட்டதே யில்லை” என்று வெகுவாகக் கொண்டாடினர். பக்கத்து அறையில் படுத்திருந்த ஜானகிக்கு, அதே சமயம் கமலத்தின் கழுத்தை நெரித்து விடலாமா என்றுகூட இருந்தது. அந்தக் கோபத்தில் “ஏன் அக்கா! கஞ்சி கொண்டு வரட்டுமா?” எனக் கபடமற்றுக் கேட்ட கமலுவின் மீது ஆத்திரம்தான் வந்தது அவளுக்கு. “வேண்டாமடி அம்மா, வேண்டாம். இந்தக் கட்டைக்குக் கஞ்சி என்ன?” என்று அலுப்புடன் கூறி முகத்தை திருப்பிக் கொண்டு படுத்தாள்.
– தொடரும்…
– வனிதாலயம் (நாவல்), முதல் பதிப்பு: டிசம்பர் 1946, பவானி பிரசுரம், ராயவரம், புதுக்கோட்டை.