கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2024
பார்வையிட்டோர்: 3,271 
 
 

(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 31-33 | அத்தியாயம் 34-36

அத்தியாயம்-34

கோமளம் சென்ற பிறகு சாமண்ணா கட்டிலில் போய் ‘தொப்’பென்று அமர்ந்தான். மூச்சு முட்டியது. இதயத்தை அமுக்கிக் கொண்டான். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட ஏக நேரம் ஆயிற்று. 

‘எனக்குத்தான் துக்கம் நிகழ்ந்துவிட்டது என்றால் என்னைத் தெரிந்தவர்களுக்குமா இந்த கதி! மகாலட்சுமி மாதிரி இருந்தாளே கோமளம் மாமி!’ களை பொருந்திய அந்த வைர பேசரி முகத்தை அவனால் மறக்க முடியவில்லை. வைரத்துக்கு ஈடு கொடுக்கும் சிரிப்பு. கையில் பூக்கூடை எடுத்து நின்றால் ரவி வர்மா சித்திரம்! 

அந்த ஓவியத்தை தெய்வம் இப்போது அலங்கோலமாக அழித்துவிட்டிருந்தது! 

“ஐயா சாப்பிடலீங்களா?” எனக் கேட்டான் கந்தப்பன். “வேண்டாம்பா, நீ வீட்டுக்குப் போ” என்று கூறி அனுப்பி விட்டான் சாமண்ணா. 

கந்தப்பன் மனமில்லாமல் தயங்கியபடி கதவைச் சாத்திக் கொண்டு வெளியேறினான். 

சாமண்ணாவுக்குத் தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். வாசலிலிருந்து வந்த பவழ மல்லியின் வாசனை மூக்கைத் தாக்கியது. சன்னல் ஓரம் நகர்ந்து போய் வெளியே பார்த்தான். தெரு ஓரத்திலிருந்த பவழமல்லி மரம் பூக்களை உதிர்த்துப் பாவாடை விரித்திருந்த காட்சி நிலாவுடன் கொஞ்சியது. அந்த அடக்கமான மணம் உள்ளத்தில் கிளர்ச்சியை உண்டாக்கியது. சகுந்தலா கண்முன் வந்தாள். பவள மல்லியாய்ச் சிரித்தாள். அவனை அலட்சியப்படுத்திய காட்சிகள் அடுத்தடுத்து வந்தன. மன்னிக்கமுடியாத குற்றம் இழைத்து விட்ட கொடுமையை எண்ணிக் குமுறினான். மெதுவாகத் தத்தி நடந்து வந்து மீண்டும் கட்டிலில் படுத்தான். 

எண்ணச் சூழலில், சகுந்தலா சுற்றி வந்தாள். கோயில் பக்கத்திலிருந்து வாத்திய ஒலிகள் வந்தன. 

பக்கத்துப் பெருமாள் கோவிலிலிருந்து ஊர்வலம் புறப்பட்டிருக்கும். ஆனித் திருமஞ்சனம். போன வருடம் இந்த உற்சவத்தை முன்னிட்டு ஸ்பெஷல் நாடகம் போட்டார்கள். கூட்டமான கூட்டம். 

நாதஸ்வரம் ‘குகசரவணபவ’வில் குழைந்து கொண்டிருந்தது. பாண்டு வாத்திய முழக்கம் ‘கும்’மென்று ஊரை மயக்கியது. வேலூர் நாதமுனி கோஷ்டியாயிருக்க வேண்டும். பத்துப் பதினைந்து பேர் சேர்ந்து இழையும்போது என்ன இனிமை! 

ஊர்வலம் அவன் வீட்டை நெருங்கி வருவதை காஸ் லைட்டுகள் பளீர் பளீர் என்றி அறிவித்தன. ஊர்வல முன்வரிசை பார்வைக்கு வந்தது. பிரமுகர்களும் பட்டுப் புடவைகளும் காரைச் சூழ்ந்து நகர்ந்து கொண்டிருந்தார்கள். 

நாதஸ்வர வித்வான் கழுத்தில் பவுன் சங்கிலிகள் ஜொலிக்க, இடுப்பில் பட்டு வஸ்திரம் சுற்றி, மேலே குடுமியை வாரி இழுத்துப்பின் கூம்பலாக மூட்டை கட்டி, நெற்றியில் ஜவ்வாது சந்தனத்துடன் காதுகளில் வைரக் கடுக்கன் மின்ன நடந்து வந்தார். 

நாதமுனி கோஷ்டியின் விசித்திர உலோக வாத்தியங்கள் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டு வந்தன. 

‘அது யார்? வேட்டியும் சட்டையுமாய் இடுப்பில் சரிகை உத்தரீயத்தை இழுத்துக்கட்டிக் கொண்டு? டாக்டர் ராமமூர்த்தியா! ஓகோ! தெரிந்தவர் வீட்டுக் கல்யாணமோ?’ அடுத்து மலர் அலங்காரத்துடன் ஊர்வலம் சென்ற கார் அன்னம் போலத் தவழ, அதில் அந்த இளம் தம்பதியர் உட்கார்ந்திருக்க, சாமண்ணாவின் குடல் உள்ளே சுருண்டது. 

மணமகன் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மணமகளைப் பார்த்ததும், யார் அது? சகுந்தலாவா? நெற்றிச் சரத்திலும், மாட்டலிலும், மூக்குத்தியிலும், அந்தச் சிற்ப முகம் ஜொலித்தது. அந்தக் கரு விழிகளின் இன்பச் சுழல்களில் அவன் எத்தனை முறை மயங்கியிருக்கிறான்! 

இதயத்தில் ஒரு கன நாடி டண் என்ற சத்தத்துடன் அறுந்தது. கைகள் சன்னல் கம்பிகளை இறுகப் பற்றின. அவற்றை விடுவித்துக் கொண்டு நெற்றிப்பொட்டை சுழிகளில் வைத்து அழுத்தினான். 

‘நீதான் அவளைப் புறக்கணித்தாயே! இப்போது ஏன் வேதனைப்படுகிறாய்? உனக்கும் அவளுக்கும்தான் பந்தம் இல்லையே! அவள் இப்போது இன்னொருத்தன் மனைவி! இனி அவள் உனக்குச் சொந்தமல்ல, உன்னை ஏறெடுத்தும் பாராள்!’ 

ஊர்வலம் நகர நகர, பெரிய பெரிய நிழல்கள் சன்னல் வழியே உள்ளே விழுந்து பூதாகாரமாய் இயங்கின . 

சிறிது நேரத்தில் தெருவில் எல்லாம் மறைந்து பழைய அமைதிக்கு வந்துவிட்டது. சந்திர ஒளியுடன் கூடிய அமைதி. 

சாமண்ணா இதயத்தை அமுக்கிக் கொண்டு கட்டிலை நோக்கி நகர்ந்தான். கன்னம் முழுதும் நனைந்திருந்தது. காற்றின் அசைவுகளில் தூரத்திலிருந்து வந்த ‘சக்கனி ராஜா’ விட்டு விட்டுச் சிறிதும் பெரிதுமாய்க் கேட்டது. இரவு முழுதும் எதையோ பறி கொடுத்துவிட்ட சோகத்துடன் உறக்கமின்றிப் புழுங்கிக் கொண்டிருந்தான். 


பொழுது புலர்வதற்குள்ளாகவே கந்தப்பன் வந்து,”ஐயா, கிளப்லேர்ந்து இட்லி காப்பி வாங்கி வந்திருக்கேன். சாப்பிடறீங்களா? சுடச் சுட இருக்குது” என்றான். சாமண்ணாவுக்கு எரிச்சலாக இருந்தது. தானும் தன் தனிமையும் அப்படியே இருக்க வேண்டும் போலிருந்தது! குறுக்கீடு பிடிக்கவில்லை. ‘சூடு! எல்லாமே காலம் கடந்து ஆறிப் போச்சு’ என்று எண்ணிக் கொண்டான். 

மனதில் அந்த ஊர்வலமும், சகுந்தலாவின் குளிர் முகமும் மாப்பிள்ளை யாரென்று தெரியாத வேதனையும் சூழ்ந்து கொண்டிருந்தன. அந்தச் சிற்ப முகம், நெற்றிச் சரம், மாட்டல்…
 
உள்ளம் குமைந்து பழைய கணக்குகளைப் புரட்டிக் கொண்டிருந்தது. வாழ்வில் எங்கெங்கே சரியான வழியை விட்டு விலகினோம் என்பது புரிந்தது. புகழும் பணமும் கண்களை மறைத்துவிட்டது தெரிந்தது. பழைய வாழ்க்கை முன் ஜன்மம் போல் இருந்தது. இப்போது அதுதான் அவனுக்குச் சொந்தம் போலவும் தோன்றியது. 

சிங்காரப் பொட்டுவின் ஆறுதலான வார்த்தைகள் நினைவுக்குவந்தன. அதெல்லாம் உணர்ச்சி வயத்தில் கூறியவார்த்தைகள்! இந்தக் காலத்தில் யாரையாவது யாராவது ஆயுசு வரை பாதுகாக்க முடியுமா? 

‘சாமண்ணா, இந்தத் தண்டனை உனக்கு வேண்டியதுதான். அழு, வாய் விட்டுக் கதறி அழு! அப்போதும் உன் துக்கம் தீராது. அப்போதே உன் அம்மா சொன்னாள். நினைவு இருக்கிறதா? பள்ளிக்கூடம் போடா, பள்ளிக்கூடம் போடான்னு அடிச்சிண்டாளே! கேட்டயா? ஊர் ஊராகத் திரிஞ்சியே, நாடகத்திலே சேர்ந்து எல்லாம் கிழிச்சுடப் போறேன்னு சொன்னியே, அம்மா உனக்கு முழு மனசா அதுக்கு அனுமதி தந்தாளா? 

பெரியவங்களுக்குத் தெரியாதா? கலை உலகம் எவ்வளவு மோசமான உலகம்னு! நேத்திக்குப் பணக்காரன் இன்னிக்கு விலாசம் இல்லாமல் போயிடுவான். அவன் போகாவிட்டாலும், தன்னைத்தானே அழிச்சுக்கிற சுபாவம் அவனைச் சூழ்ந்துடும். அடேயப்பா! கல்கத்தாவிலே என்ன ஆட்டம் ஆடினாய்! டாக்டரை விசாரிச்சியா? சகுந்தலாவைச் சரியானபடி கவனிச்சியா? சிங்காரப் பொட்டுவைத்தான் நல்ல முறையில் நடத்தினாயா? அகங்காரம், பணத் திமிர், புகழ்ச் செருக்கு உன் கண்களை மறைத்துவிட்டன! 

சுபத்ரா மீது கொண்ட மோகத்தில் அப்படித் தலை கால் தெரியாமக் கிடந்தியே! சுவர்க்கமே கிடைச்சுட்ட மாதிரி இறுமாந்தியே! அப்ப சகுந்தலா கிள்ளுக் கீரையாத் தோணினாளே! அத்தனையும் என்னாச்சு? சொப்பனம் போல எல்லாம் போயிடலையா? வாழ்க்கையை முறிச்சுகிட்டியே! இன்னும் குறை நாளை எப்படி வாழப் போறே? யார் உனக்கு என்ன செய்துடப் போறா?’ 

“அம்மா” என்று திடீரென்று பொங்கி வந்த துக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். உள் குரல் தீனமாக ஒலித்தது. 

‘அம்மா! உன் சொல்லைக் கேட்காமல் ஆட்டம் போட்டேன். தப்புதான். இறுமாப்பில் எல்லாரையும் உதாசீனப்படுத்தினேன். குற்றம்தான். இப்ப அதையெல்லாம் நினைச்சு துக்கப்படுகிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் இது என்பதை உணர்கிறேன். சோற்றுப் பசி வந்தா நல்லது. எனக்கு ஆப்பிள் பசி வந்துட்டுது. அதுக்காக மேலே உச்சத்துக்குப் போய் டமால்னு விழுந்துட்டேன். கால் மட்டும் இல்லை வாழ்க்கையே ஊனமாயிட்டுது. என்ன செய்யப் போறேம்மா?’

கந்தப்பன் பிடிவாமாய் காப்பியும் இட்லியும் எதிரில் வைத்து சாப்பிடச் சொன்னான். 

சாமண்ணாவின் கண்களில் கண்ணீர் அருவி போல் கொட்டியது. இயந்திரம் போல இட்லிகளை விழுங்கினான். காப்பியைக் குடித்தான். 

மத்தியானம், “மாமா!” என்று குரல் கேட்டு வாசல் பக்கம் பார்த்தபோது அச்சச்சோ லல்லு வந்திருந்தாள். 

“இந்தாங்கோ! கடிதாசி!” என்றாள். 

“ஏது?” என்றான் சாமண்ணா. 

“வக்கீலாத்து மாமி தந்தா! ஊருக்குப் புறப்பட்டுப் போறாளோன்னோ! உங்களுக்குச் சொல்லிக்கிறா.” 

“இட்லி சாப்பிடறியா லல்லு!” என்று கேட்டான்.

“வேண்டாம் மாமா! கல்யாண வீட்லே இப்பத்தான் சாப்பிட்டுட்டு வரேன்.”

“கல்யாண வீடா? யாருக்குக் கல்யாணம்?” 

“சகுந்தலாவுக்குத்தான். மாப்பிள்ளை ரொம்ப அழகாயிருக்கான் மாமா, சகுந்தலா கொடுத்து வெச்சவள்!” 

‘சொரேர்’ என்றது சாமண்ணாவுக்கு. மௌனமாக அந்தச் செய்தியை இட்லித் துண்டோடு சேர்த்து விழுங்கினான். அப்புறம் கடிதத்தைப் பிரித்தான். 

‘அன்புள்ள சாமு, 

உன் விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து எனக்குத் துக்கம் பொங்கி வருகிறது. இந்தச் சமயத்தில் எங்க ஆத்துக்காரர் இல்லாமல் போனார். 

நான் உன்கிட்டே பேசினப்போ ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். அதை நான் மறக்கலாமோ? எவ்வளவு பெரிய தப்பு! நம்ப பாப்பா பற்றித்தான். ஊருக்குப் போயிருக்கா அவள். நாளை காலையிலே வந்துடுவாள். நீ வந்திருக்கிறதோ, உனக்கு நடந்திருக்கிறதோ அவளுக்கு எதுவும் தெரியாது. நான் கடிதாசியிலே எழுதி அவளுக்குக் கொடுத்தனுப்பியிருக்கேன். இந்த ஊர்லேருந்து புறப்பட்டபோது உன்னை வழி அனுப்ப ஸ்டேஷனுக்கு அவள் ஓடி வந்து பார்த்தாளாம்! வண்டி புறப்பட்டுடுத்தாம். அப்புறம் கல்கத்தாவுக்கே வந்து உன்னைப் பார்க்கணும்னு துடிச்சிண்டிருந்தா! ஆனா சந்தர்ப்பமே இல்லாமல் போயிட்டுது. நீ போனதிலிருந்து எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து உன்னைப் பற்றி விசாரிச்சுண்டே இருந்தாள். 

அந்தப் பெண் வேற குலத்திலே பிறந்துட்டுதே தவிர, அதைப் போல நல்ல பெண்ணை உலகத்திலே பார்க்க முடியாது. ஞாபகம் வச்சுக்க, நீ ரெண்டாம் முறை நாடக சபை ஏற்படுத்தினியே, அது யார் பணம்னு நினைச்சே? எங்காத்து மாமாவும் மத்தவாளும் சேர்ந்து பணம் போட்டிருக்கான்னுதானே? இல்லை. உண்மையில எல்லாப் பணமும் பாப்பாதான் போட்டிருக்கா! உன்னை எப்படியும் முன்னுக்குக் கொண்டு நிறுத்தணும்னு அவளுக்கு அத்தனை ஆர்வம். எங்கேயோ பிறந்து எங்கேயோ தப்பிதமா ஒருமுறை திருமணமும் நடந்து போச்சு! ஆனாலும் உன்னை அவள் மறக்கவேயில்லை. சதா உன் நினைவு தான். எனக்குத் தாலி கட்டாத கணவர் அவர்தான்னு உன்னைப் பற்றி அடிக்கடி சொல்லிண்டிருக்கா. 

(“வாழ்நாள் முழுக்க ஒருத்தி ஒருவனோடு வாழணுங்கற தெல்லாம் இப்ப இல்லை. காலம் மாறிப் போச்சு. ஒருவனைப் பிரிஞ்சப்புறம் இன்னொருவனுடன் வாழறதிலே தப்பில்லைன்னு ஆயிட்டுது. ஒருவனை விடாம இன்னொருவனுடன் வாழறதுதான் தப்பு. ஒரு பெண் எப்போது எவனோட வாழறாளோ அப்போது அவனுக்குத் துரோகம் செய்யாமலிருந்தாப் போதும். அது தான் கற்புன்னு ஏதோ ஒரு புஸ்தகத்துலே படிச்சிருக்கேன். எனக்கு அந்தக் கருத்து புடிச்சிருக்கு. நான் அப்படித்தான் வாழப் போறேன் ! அப்படி இன்னொருத்தனுடன் வாழறதுன்னு தீர்மானிச்சா அந்த இன்னொருத்தர் நீங்களாத்தான் இருப்பீங்க…” 

பாப்பா எப்போதோ சொன்ன இந்த வார்த்தைகள் அவன் காதில் இப்போது ரீங்கரித்தது…) 

உனக்கு எத்தனை சமயங்களில் எப்படியெல்லாம் உதவி செஞ்சிருக்கா தெரியுமா?” 

அப்படிப்பட்டவள் உனக்கு நேர்ந்த விபத்தைக் கேட்டு சும்மா இருப்பாளா? நாளைக்குத்தான் அவள் சொந்தக் கிராமம் பூவேலிக்குத் திரும்பி வரா. நாளைக்கு அவங்க ஊர்க் கோவில்லே படையலாம். மறுநாளே உன்னை ஓடி வந்து பார்ப்பாள்! 

நான் சொல்றதைக் கேளு, சாமு! வாழ்க்கைய இனிமேலும் பாழாக்கிக்காதே! அந்தப் பெண் உன்னையே நம்பிண்டு இருக்கா! நீ என்ன நிலையிலே இருந்தாலும் உன்னை அவள் ஏத்துப்பா. அப்படி ஒரு பெரிய குணம் அவளுக்கு. 

உன் பிரியமுள்ள, 
கோமளம். 

அத்தியாயம்-35

நினைக்க நினைக்க மனசில் வேதனையும் ஆச்சரியமும் பெருகியது சாமண்ணாவுக்கு. 

‘தொடர்ச்சியாக எந்த பின்னமும் இல்லாமல் என் மீது உயிரை வைத்துள்ள பாப்பாவை உதாசீனப்படுத்தி விட்டேன். இது எவ்வளவு பெரிய தவறு? 

சில நாட்களே பழகிய சுபத்ரா என்னை அலட்சியப்படுத்துகிறாள் என்று தெரிந்தபோது மனம் என்னமாய்த் துடித்தது? எத்தனை வேதனைப்பட்டேன்? அப்படித்தானே துடித்திருப்பாள்?’ 

ஆதியிலிருந்தே அடிபிசகி விட்ட குற்றத்தை இப்போது உணர்ந்தான். ‘ஏதாவது ஓரிடத்தில் ஸ்திரமாக மனம் ஊன்றிப் பழகாமல் எட்டாத கனிக்கு ஆசைப்பட்டேனே’ என்று வருந்தினான். 

‘பாப்பா மீது அரும்பு சிநேகம் வைத்தேன். அதை வாட விட்டு விட்டேன். சகுந்தலா மீது மலர் சிநேகம் வைத்தேன். அது காய்க்காமலே போய் விட்டது. சுபத்ரா மீது கனி சிநேகம் வைத்தேன். அது கனியாமலே போய் விட்டது. 

இதற்கெல்லாம் நானேதான் காரணம். ஒருவர் மீதும் நிலைக்காமல் மேலே மேலே மேலே போனதால் ஒருநாள் தடால் என்று பாதாளத்தில் விழவேண்டி வந்தது. 

ராத்திரி சகுந்தலாவின் திருமண ஊர்வலம் போன போது ஏற்பட்ட மன எழுச்சி இன்னும் அடங்கவில்லை. அதன் வேதனை இன்னும் அடிமனத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அப்படியானால் எத்தனையோ தியாகங்கள் செய்து, எத்தனையோ முறை ஏமாற்றத்துக்குள்ளாகியும் விடாமல் தொடர்ந்து என்னையே எண்ணிக் கொண்டிருக்கும் பாப்பாவின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்! என்னுடைய அலட்சியம் எவ்வளவு வேதனை தந்திருக்கும்? 

ஒவ்வொரு கணமும் நரகத்தில் இருந்தது போல் உணர்ந்திருப்பாள். சொல்லொணாத் துயரம் அடைந்திருப்பாள்.’ 

“சரி; இப்போதாவது அவளைத் தேடிச் சென்று செய்த குற்றத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிடு” என்றது உள்மனம். 

“இப்போதா? வேறு கதி இல்லை என்று தெரிந்ததும் அடையும் சரணாகதி இது என்பது பாப்பாவுக்குப் புரியாதா?”

“அப்படியானால் அவளை மறந்துவிடப் போகிறாயா நீ? அவளைப் பார்க்கப் போவதே இல்லையா?” 

“நிச்சயமா இல்லை.” 

“மாமி கடுதாசியிலே எழுதியிருக்காளே! நாளை அந்தத் திருவிழா முடிஞ்சதும் பாப்பா உன்னைப் பார்க்க ஓடோடி வரப் போகிறேளே!” 

“வரட்டும்!” 

“நீ எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. உன்னை அவள் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறாள். உன்னிடம் மாறாத, அழியாத, அசைக்க முடியாத அன்பு வைத்திருக்கிறாள். அந்தத் தூய்மையான, உண்மையான உள்ளத்தில் உன்னைத் தவிர வேறு யாருக்குமே இடமில்லை என்று கூறுவாளே, அப்போது நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?”

சாமண்ணா யோசித்தான். ‘நாளை பாப்பா வந்தால் அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்? சகுந்தலையை அடியோடு மறந்து போயிருந்த துஷ்யந்தனைப் போல் அல்லவா நான் இத்தனை நாளும் பாப்பாவை மறந்திருந்தேன்! இப்போது அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்?’ 

‘அவள் நாளைக்கு இங்கே உன்னைத் தேடி வரத்தான் போகிறாள். உன்னைப் பார்த்ததும் புதையலில் கிடைத்த பொக்கிஷம் மாதிரி மகிழப் போகிறாள்!’ 

சாமண்ணா நிமிர்ந்தான். “கந்தப்பா!” என்று அழைத்தான். கந்தப்பன் ஓடி வந்தான். 

“நேத்து மாசிலாமணி முதலியார் வந்தாருன்னு சொன்னியே!’ 

“ஆமாங்க! நீங்க தூங்கிட்டிருந்தீங்க. அதனாலே உங்களை எழுப்ப வேணாம். அப்புறம் வர்றேன்னு சொல்லிட்டுப்போயிட்டாரு.”

“ஊர்லேதான் இருக்காரா?” 

“ஆமாங்க!” 

“அவரை இப்ப அழைச்சுட்டு வர முடியுமா?” 

“வரேங்க.” 

மத்தியானம் மாசிலாமணி குடையோடு வந்தார். அவர்தான் அந்த வீட்டை சாமண்ணாவுக்கு முடித்துக் கொடுத்தது. கல்கத்தாவுக்குப் போகுமுன் கொஞ்சம் முன்பணம் கொடுத்திருந்தான். இரண்டு மாசத்தில் மீதியைத் தருவதாக ஒப்பந்தம். இப்போது மூன்று மாதங்கள் ஓடி விட்டன. 

மாசிலாமணி வந்தபோது, “மன்னிக்கணும். இந்த வெயிலில் உங்களை வரச் சொன்னதுக்கு” என்றான் சாமண்ணா. 

“என்ன அப்படிச் சொல்றீங்க? நீங்க எவ்வளவு பெரிய நடிகர்! எவ்வளவு புகழ்! இப்ப கால் போயிட்டுது. அதனால் ஊரோடு வந்து சேர்ந்துட்டீங்க. நீங்க நல்ல நிலையிலே இருக்கறப்போ ஆயிரம் பேர் வருவாங்க. இப்ப திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாங்க. இதுதான் உலகம். வாழ்வும் தாழ்வும் மனுஷங்களுக்கு சகஜம். அதை மறக்கக் கூடாது. அப்படிச் சில பேர்தான் இருப்பாங்க. இப்ப அந்த நிலையிலும் உங்களைத் தேடி வர்றவங்கதான் உங்ககிட்ட உண்மையான அக்கறை உள்ளவங்க. இது புரிஞ்சாப் போதும்” என்று மாசிலாமணி கூறியபோது சாமண்ணாவுக்குப் பாப்பாவின் நினைவு தோன்றி ‘சொரோ’ என்றது. கண் கலங்கினான். 

“முதலியார்! நாளைக்கு நான் ஊருக்குப் புறப்படறேன். இப்ப எதுக்குக் கூப்பிட்டேன்னா – நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது. முழு வீட்டையும் எழுதி வாங்கிக்குங்க. எனக்கு இப்பப் பணம் தேவைப்படுது. நான் கொடுத்த அட்வான்ஸ் மூவாயிரத்தையும் திருப்பித் தந்துட்டாப் போதும். நீங்கதான் அதுக்கு ஏற்பாடு செய்யணும்” என்றான் சாமண்ணா. 

“ஊருக்கா? எந்த ஊருக்குப் போறீங்க?”

“சொந்த ஊருக்குத்தான். பூர்விகம். எங்க அம்மா பிறந்து வளர்ந்த ஊர்! என் ஆயுசு வரை இருக்க அது இடம் கொடுக்கும். கையில் இருக்கிற சொற்பப் பணத்தை பாங்கிலே போட்டு வச்சா அந்த வட்டியிலே என் காலம் ஓடிடும்! போதும்; கடவுளை எப்பவும் மறக்காமல் இருக்க அவரே வழி சொல்லிக் கொடுத்து இப்போ நேரமும் அமைச்சுக் கொடுத்துட்டார்!” 

“கவலைப்படாதீங்க! நாளைக்குப் பணத்தோடு உங்களை வந்து பார்க்கிறேன். ஒரு நாள் டயம் கொடுங்க” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் மாசிலாமணி. 


மறுநாள் விடியும் போதே மேகத்திரளோடு இருந்தது. பகல் மந்தமாக இருந்தது. 

சாமண்ணா கந்தப்பனை அழைத்துத் தன் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னான். 

கந்தப்பன் தயங்கினான். “என்ன யோசனை பண்றே? சாமான்களை எடுத்து வை” என்றான் சாமண்ணா. 

“ரெண்டு நாள் கழிச்சுப் புறப்படலாங்க; பரணி கிருத்திகை குறுக்கே நிக்குது” என்றான் கந்தப்பன்., 

சாமண்ணா விரக்தியோடு சிரித்தான். “இனிமே நாள் நட்சத்திரம் பார்க்கறதா இல்லை. அதெல்லாம் என்னை இனி ஒண்ணும் செய்யாது. செய்ய வேண்டியதையெல்லாம் செஞ்சுட்டுது. பாக்கி ஒண்ணும் இல்லை. ஆக வேண்டியதைப் பாரு” என்று தீர்மானமாய்க் கூறினான் சாமண்ணா. 

ராகுகாலம் கழித்து மாட்டு வண்டி ஒன்று கொண்டு வந்தான் கந்தப்பன். வயதான வண்டிக்காரர் கையில் சாட்டையுடன் கும்பிடு போட்டார். 

“ராமர் கோயில் அக்கிரகாரத்துக்கு எப்போ போய்ச் சேரலாம்?” சாமண்ணா கேட்டான். 

“ராத்திரி ஒன்பதுக்குள்ளே போயிரலாங்க! இப்போதே புறப்பட்டாத்தான் முடியும். மழை வர மாதிரித் தெரியுது.” 

“மாசிலாமணி முதலியார் வந்துரட்டும். இதோ இப்ப வந்துடுவார்.” 

மாசிலாமணி சொன்னபடியே பணத்தோடு வந்துவிட்டார்.

“இப்ப இதை வெச்சுக்குங்க. வீட்டு விஷயம் அப்புறம் பேசிக்கலாம்,” என்று கூறி ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார். 

மெள்ள க்ரச்சை ஊன்றி வாசலுக்கு வந்தான் சாமண்ணா. வண்டி ஏறும்போது சற்றுத் தயங்கி ஊரை ஒருமுறை வளைத்துப் பார்த்தான். தெருக்கோடியில் பெருமாள் கோயில் கோபுரம் தெரிந்தது. 

அந்த ஊரில் அவனோடு பழகிய அத்தனை பேரும் அவன் கண்ணில் தெரிந்தார்கள். இறந்து போன வக்கீல் தொடங்கி, டாக்டர், சகுந்தலா, நாடக நடிகர்கள், பாட்டுக்காரர்கள், ஓட்டல்காரர், ஆர்மோனியக்காரர், மாடிப்படி நாய் எல்லாருமே! 

கண்ணில் நீர் பெருகியது. ஏதோ போன ஜன்மத்தில் அவர்களோடு வாழ்ந்தது போல் தோன்றியது. தெருவும் ஊருமே இப்போது அந்நியமாகத் தோன்றியது. 

வண்டி புறப்பட்டதும் கந்தப்பன் கைகூப்பினான். தெரு முடிந்ததும் சாலை இரு பக்க மர வரிசை நடுவே ஓடியது. கருத்த ஆகாயம் பிரம்மாண்டமாகத் தெரிய, காற்று ஊசி வாடையாக அடித்தது. 

‘ஹய் ஹய்’ என்றான் வண்டிக்காரன். 

‘கிறிச் சிறிச்’ என்று சத்தமிட்டுக் கொண்டு புறப்பட்டது அந்த வண்டி. 

“அம்மா வருகிறேன்” என்று துக்கம் பொங்க வாய்விட்டுக் கூவினான் சாமண்ணா. தும்பைப் பூ நரையோடு, அம்மா அவனை இடுங்கிய கண்களால் பார்ப்பது போல உணர்ந்தான். 

“அம்மா! உன் சந்நிதானத்திற்கே வந்து விடுகிறேன். கால் ஊனமாயிட்டுது! தெரியுமோ? நம்ம பழைய வீட்டிலேதான் இருப்பேன்! என்னை ஆசீர்வாதம் பண்ணு!” 

சின்னச் சாலையிலிருந்து வண்டி பெரிய சாலைக்குத் திரும்பியது. வானம் கரியதாகி நாலு திசையும் விரிந்திருந்தது. மழை மேகங்கள் அடுக்கடுக்காகப் புரண்டன. பிரம்மாண்ட இருட்டு ஒன்று அவன் வண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தது. பூமி அத்தனையும் குளிர்ந்துவிட்டது. 

திடீரென்று பாப்பா உருவம் தோன்றியது. அமைதியாக அலையும் ஆழ்ந்த கருவிழிகள். சாந்தம் நிறைந்த புன்னகை முகம்! இளம் சிவப்பில் உதடுகள். ரேகை இழைகள் போல் காது வழியே வழியும் கூந்தல்! 

“பாப்பா!” 

தொண்டை கிழியக் கத்தினான். 

காற்று அதை அள்ளிச் சென்றது. வண்டிக்காரன் திரும்பிப் பார்த்தான். 

அத்தியாயம்-36

மாட்டு வண்டியில் அமர்ந்திருந்த சாமண்ணா மீண்டும் வெளியே பார்த்தான். “பாப்பா!’ என்று வாய்விட்டுக் கூவினான். வானத்தில் மேகங்கள் மத்தியில் அவள் முகம் அந்தரமாகத் தெரிந்தது. 

“பாப்பா! உன்னுடைய தியாகம்,அன்பு,பாசம் எல்லாம் போதுதான் தெரிகிறது. நீ சாதாரண மனுஷி அல்ல; தெய்வத்துக்குச் சமமானவள். உன்னை நான் பெரும் துன்பத்தில் ஆழ்த்திவிட்டேன். இனி ஒருபோதும் என்னால் உனக்குச் சங்கடம் இராது. நான் உனக்கு இழைத்த குற்றங்களுக்கெல்லாம் ஆண்டவன் என்னைத் தண்டித்துவிட்டான். நீ ஓடி வருவாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் உனக்கு ஒரு பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒருவேளை என் கால் சரியாக இருந்தால் உன்னை நானே வந்து பார்த்தாலும் பார்த்திருப்பேன். ஆனால் இப்போது இந்த நிலையில் வரவே மாட்டேன். என்னுடைய அகம்பாவத்துக்குக் கிடைத்த பரிசு இது. உன்னைப் பார்க்கவே வெட்கப்படுகிறேன். 

பாப்பா, என் இஷ்டப்படி உயர உயரப் பறக்கலாம் என்று இறுமாப்புடன் வாழ்ந்தேன். கடவுள் என்னைப் பாதாளத்தில் வீழ்த்திவிட்டார். நான் இந்த கதிக்கு ஆளாவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இப்போது என் கிராமத்திற்கே போகிறேன். உன்னைப் பார்க்கக் கூட எனக்குத் தைரியமில்லை, நான் உனக்கு இனி எவ்விதத்திலும் பொருத்தமில்லாதவன். என்னை மன்னித்து விடு.” 

சீரான குளிர் காற்று வண்டியை நோக்கி வீசியது. கணத் அக்குக் கணம் அதன் வேகமும் வாடையும் கூடியது. 

“விறைக்குதுங்க!” என்று சொல்லிக் கொண்டே வண்டிக் காரன் ஒரு துண்டை இழுத்து உடம்பைச் சுற்றிக் கொண்டான். 

‘சொட சொட’ என்று சத்தம். மழை வண்டிக் கூரையைத் தாக்கியது. வண்டிக்காரன் நடுங்கி ஓரமாக ஒடுங்கினான். 

புறப்பட்டபோது சாமண்ணாவுக்கு உடம்பு ஒரு மாதிரி இருந்தது. சரியாகச் சாப்பிட்டு இரண்டு நாள் ஆயிற்று. இப்போது அவனுக்கும் உடம்பு வெடவெடத்தது. தொடர்ந்து கன மழை பெய்தது. சாதாரணத் திவலைகள் அல்ல. ஒரு சமுத்திரம் சொரிந்தது. வண்டிக்குள் இம்மி பாக்கி இல்லாமல் அத்தனையும் நனைந்து தெப்பலாகிவிட்டது. சாமண்ணா வெட வெடத்தான். பெட்டியிலிருந்து மற்றொரு போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டான். ‘அம்மா, அம்மா’ என்று அரற்றினான். பெட்டி மீது சாய்ந்து கொண்டான். சாதாரணக் கல் பாவிய பாதையாதலால் கடக் கடக் என்று சக்கரம் அரைக்க, கூண்டு பெரிதாக ஆடியது. இருபக்கமும் அடர்த்தியான மர வரிசைகள் பேய் போல வடிவம் காட்டின. 

“வண்டிக்காரரே! இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?” என்று கேட்டான் சாமண்ணா. 

“ஆறு கல்!” என்றான் வண்டிக்காரன்.

“ஆறு மைலா?” 

ஒரு நிலையாகப் படுக்க முடியவில்லை. மழை நின்றபாடில்லை. வண்டிக்காரன் ‘தா! தா!’ என்று குரல் கொடுத்து மாடுகளை அதட்டிக் கொண்டிருந்தான். 

சாமண்ணாவுக்கு நெஞ்சு படபடக்க, ஜூரக் குளிர் வேகமாக அடிக்க, “அம்மா! அம்மா!” என்றான். கண்ணைத் திறக்க முடியவில்லை. 

சட்டென்று வண்டி எங்கேயோ நின்றது. வண்டிக்காரன் எட்டிப் பார்த்தான். முதலில் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. பிறகு எதிரில் நீர்த் தகடு தெரிந்தது. ஏதோ ஒரு ஓடை நிரம்பி ஓடுகிறது என்பதைப் புரிந்து கொண்டான். 

“ஐயா, ஐயா!” என்று சாமண்ணாவை எச்சரித்தான். உள்ளே பதில் இல்லை. 

வண்டிக்காரன் குதித்தான். மாடுகள் புத்திசாலித்தனமாக நின்றன. 

அவற்றின் தலைக்கயிறுகள் இரண்டையும் பற்றிக் கொண்டு முன்னால் தண்ணீருக்குள் மெதுவாக நடந்தவாறு போனான். வண்டியும் பின்னாடி சென்றது. மறுபக்கம் மேடு ஏறினதும், ‘ஐயா” என்று அழைத்தபோதும் சாமண்ணா பதில் கூறாமல் படுத்துக் கிடந்தான். 

பின்புறமாக வந்து உசுப்பினான். தொட்டவுடன் கை சுட்டது. “ஐயா, ஐயா!” 

வெறும் முனகல்தான். 

திடீரென்று வண்டி பக்கவாட்டில் சாயத் தொடங்கியது. ஓடையில் வந்தவெள்ளத்தின் கனமும் வேகமும் கூடுதலாயிற்று. மாடுகள் தடுமாறின. வண்டிக்காரன் திடுக்கிட்டான். தண்ணீரின் ஆவேசம் அதிகமாகி இதற்குள் வண்டி பள்ளத்தில் இறங்கிக் குடை சாய்ந்தது. ”ஐயா!” என்று அலறினான் வண்டிக்காரன். சாலை உடைப்பெடுத்திருந்ததால் பள்ளத்தில் இறங்கிய வண்டி உருண்டுவிட்டது. 


சாமண்ணா முகத்தை மெள்ள மெள்ளத் திருப்பினான். கண்ணை விழித்துப் பார்த்தான். 

எங்கே இருக்கிறோம் என்று தெரியவில்லை. எதுவும் புரியவில்லை. 

“அம்மா…. அம்மா!” 

உடம்பு வெடவெடத்தது. அவனது காதில் மட்டும் பிரக்ஞை இருக்கிறதோ? ‘ஓ’ என்று இரைச்சல் கேட்கிறதே! ஷவர் இப்படிச் சத்தம் போடாதே! ஒருவேளை! மழையோ! 

நாட்கணக்கில் அங்கே இருப்பது போன்ற பிரமை! திரும்பி உணர்வு வந்தபோது ‘ஷவர்’ நின்றுவிட்டது. யாரோ அவனைத் தொடுகிறார்கள். 

“உயிர் இருக்கு குமாரசாமி!” என்றது ஒரு குரல்.

“பாவம்! யாரோ தெரியலை. நினைவு இல்லாமக் கிடக்கிறாங்க!” இன்னொரு குரல். 

“இந்தா முருகேசா! முதல்லே ஆளைத் தூக்கி நம்ம வண்டியிலே போடுவம்! ராத்திரி வீட்டிலே வச்சிருந்து காலையிலே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவம்.”

சாமண்ணாவுக்குச் சிறிது நேரம் எதுவும் தெரியவில்லை. பிறகு ஈரத்தை விட்டு உடல் மேலே மிதப்பது தெரிந்தது. அடுத்து, ஒரு வைக்கோல் மெத்தையில் கிடப்பது தெரிந்தது. 

‘ஊரை விட்டுப் புறப்பட்டோமே! மழை அடித்ததே! இப்போது இல்லையே! என்னவோ குரல் கேட்கிறதே!’ 

“நல்லா நனைஞ்சிருக்காரு குமாரசாமி!”

“ஆமாம். ஜுரம் வேற அடிக்குது. ஜன்னி கண்டிருக்கு.”

“வீட்டிலே போய் உடனே உலர்ந்ததுணி போட்டுத்துவட்டிக் கம்பளியாலே போர்த்தணும்.” 

கண்ணை மூடுகிறான். எல்லாம் இருட்டாகிறது.

எத்தனை யுகமான இருட்டு? தெரியாது. 

கண்கள் லேசாக விழிக்க, பார்வை மங்கலாகத் தெரிய, ஏதோ ஒரு வீட்டின் அறைக்குள் இருப்பது புலனாகிறது. 

‘என்ன இது? எங்கே வந்திருக்கிறோம்? என் சொந்த கிராமத்துக்குத்தானே புறப்பட்டேன்? இப்போது இங்கே எப்படி வந்தேன்! இது யார் வீடு?’ 

நிதானமாக அறை முழுதும் பார்த்தான். வெளிச்சம் முன்னைக் காட்டிலும் கூடியிருந்தது. அறை புதிது. இடம் புதிது. அவன் மீது உள்ள ஆடை புதிது! போர்வை புதிது! 

அறைக்குள் யாரோ வரும் நிழல் தெரிந்தது. அந்த உருவத்தை வியப்போடு பார்த்தான். அடி வயிற்றில் ஒரு அதிர்ச்சி! வாய் அவனையறியாமல், “பாப்பா!” என்று அழைக்கிறது. ஆனால் சத்தம் வரவில்லை. 

பிரமித்துப் பார்க்கிறான். மலங்க மலங்க விழிக்கிறான். 

“யாரு?” 

பாப்பாவிடம் இப்போது ஒரு கம்பீர யௌவனம் வந்திருந்தது. அமைதியாக, அடக்கமாக, அன்பின் உருவமாக நின்றாள். 

“பாப்பா!” 

உணர்ச்சி பரவசத்தில் அழைத்தான். மந்தகாசமாக முறுவலித்தாள். 

‘இந்த ஜன்மமா, அடுத்த ஜன்மமா?’ 

வண்டியிலும், மழையிலும் அவன் ஜன்மம் முடிந்துவிட்டதா? அதன் பிறகு எப்படி இதைப் போன்ற ஒரு அமைதியான காட்சி எழுந்தது? 

“பாப்பா!” 

அவள் இன்னும் அருகில் வந்தாள்.

“நீதானா?” 

“ஆமாம்….” 

“இங்கே எப்படி வந்தேன்?” 

“உங்க வண்டி மழையிலே தடம் மாறிக் குடை சாஞ்சிடடுது. நீங்க பள்ளத்திலே கிடந்து உயிருக்குப் போராடிக்கிட்டிருந்தீங்க. நல்லவேளை! அந்தச் சமயம் எங்க அப்பா அந்த வழியா வந்திருக்காரு. அவர் மட்டும் பார்த்திராட்டா, நீங்க இந்நேரம் உயிரோடு இருக்க மாட்டீங்க!” 

“இது …. இது …” 

“இது எங்க வீடுதான்!” 

“இங்கே வந்துட்டனா?” 

“ஆமாம்!” 

“நான் எங்க ஊருக்குப் போகலையா?” 

“இனிமே உங்க ஊர், வீடு எல்லாமே இதுதான்!”

“என்ன சொல்றே?” 

“இனி, நீங்க இங்கேதான் இருக்கப் போறீங்க. நான் உங்களைத் தனியா விடப் போறதில்லை” என்றாள் பாப்பா. 

சாமண்ணாவுக்கு அந்தக் குரலும், அதன் இதமும், தாய்க்கு நிகரான பாசமும், உயிருக்கு உயிரான நேசமும் சட்டென்று. பளிச்சிடுவதுபோல இருந்தது. 

“பாப்பா, என் கால்… என் கால்…” என்று துக்கம் பீறிடஅழுதுவிட்டான். பாப்பா அவன் வாயைப் பொத்தினாள். “எனக்கு எல்லாம் தெரியும். இனி உங்களுக்கு வாழ்நாள் முழுதும் நான்தான் க்ரச்” என்றாள். 

பாப்பாவும் அவளது அமைதி சிந்தும் வதனமும் தனக்குச் சொந்தமாகத் தோன்றியது. 

அவளை மணந்தாலும் சரி, அம்மா சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து மணக்காமல் சிநேகமாகவே அவளுடன் வாழ்ந்தாலும் சரி; இனி அவனுக்கு இதுதான் நிரந்தரமான வீடு. 

(முற்றும்)

– ஆப்பிள் பசி (நாவல்), முதற் பதிப்பு: 1988, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *