காமன் பொட்டல்
(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காமன் பொட்டல், கலர் கடதாசிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவப்பு சீனியை வாரி இறைத்தாற் போல் மணலால் நிறைந்துக் கிடந்தது காமன் பொட்டல் புள்ளையார் பந்து விளையாடுவதற்கும் ஜில் போலை அடிப்பதற்கும் மட்டுமல்ல காமன் விழாவுக்கும் பொட்டல்தான் பொருத்தமான இடம் படிப்படியாய் அமைக்கப்பட்டிருந்த காமன் மேடு சாணத்தால் மெழுகி கோலமிடப்பட்டிருந்தது. காமனின் கலசம் சிந்தாக்கட்டிப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாய் எழுந்து நின்றது.
பரந்துக் கிடக்கும் பொட்டல் வெளியில் மாசி மாதத்தில் காமனுக்கு விழா எடுப்பது வழக்கம். புழுதி படிந்த பொட்டல் வெளியில் சப்பளித்து, மண்டிப்போட்டு காமன் விழாவைக் காணுவதில் கிடைக்கும் சந்தோசத்துக்கு ஈடினைக் கிடையாது. அதிலும் முதல் வரிசைக்கு முண்டி அடித்துக் கொண்டும், முரன்பட்டும் இடம் பிடித்து கண்டு களிப்பதில் ஒரு திருப்தியிருக்கும்.
இருள் மெதுவாய் கவிழத் தொடங்கியிருந்தது. மாசி மாத ஊசிப் பனி மெது மெதுவாய் கீழிறங்கி பக்த அடியார்களின் தலையில் கொட்டிக் கொண்டிருந்தது.
பொட்டலின் ஒரு ஓரத்தில் கருப்பந்தேயிலை இலைகளால் வேயப்பட்டிருந்த பந்தல் கம்பீரமாய் இருந்ததோடு சிவனுக்குரிய மேடையும் ஒற்றை துாணில் படிகளோடு நேர்த்தியாய் அமைக்கப்பட்டிருந்தது.
அப்போது லயன்கள் யாருமில்லாமல் வெறிச்சோடிக்கிடந்தன எல்லோரும் பொட்டலில் திரண்டிருந்தனர் ஆனால் பாண்டி மட்டும் லயத்தில் தனித்துப் போயிருந்தான். எப்போதும் மலைமேடுகளில் சுற்றித்திரியும் அவன் நல்ல உழைப்பாளி கவ்வாத்து வெட்டுவது தொடங்கி காண் வெட்டுவது வரைக்கும் பாண்டியை அடிச்சிக்க தோட்டத்தில் ஆளே இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து விடுவான் அதனாலேயே எம் தோட்டபுரத்து ராசாத்திகளுக்கு அவன் மீது ஒரு கண்ணிருக்கும். வேலை முடிந்த கையோடு விறகு காடுகளில் சுற்றித் திரியும் அவன் பொறுக்கி கட்டும் ஒரு விறகுக் கட்டை அசைக்க கூட முடியாது ஆனால் சர்வசாதாரணமாய் அதை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு அவன் நடக்கும் போது புடைத்து வீங்கும் அவனது புயங்கள் ராஜராஜ சோழனின் கம்பீரத்தை ஞாபகப்படுத்தும்.
இப்படியாக முரட்டு சுபாவத்தோடு தோட்டத்தை சுற்றித்திரிந்தாலும் ஆயிப்புள்ளையிடம் மட்டும் குழைந்துப் போவான்.
ஆயிபுள்ளைக்கும் பாண்டிக்கும் இடையிலான காதல் குட்டை பாவாடையில் மூக்கு வடித்து திரிந்த காலத்தியிலிருந்து அரும்பியிருந்தது. கட்டை காற்சட்டையுடன் கொட்டு மானாக் காடுகளில் விறகுப் பொறுக்கித் திரிந்த காலங்களில் இறுக்கமாய் அவள் கைக்கோர்த்து திரிந்தது முதலாய் உள்ளுக்குள் அடர்ந்திருந்த காதல் இப்போது பருவத்தை அடைந்து சோலையாய் சடைத்திருக்கிறது.
ஆயிப்புள்ளைக்கு பாண்டியின் முரட்டு சுபாவம் ரொம்பவும் பிடிக்கும் முறுக்கேறிப் போயிருக்கும் அவனின் மீசையை அவனுக்குத் தெரியாமல் பெரிதும் ரசிப்பாள் அவனும் அவளின் வார்த்தைகளுக்கு மறுப்பு வார்த்தைகள் பேசுவதில்லை. மயிர்கள் அடர்ந்த அவனின் மார்பினில் தலைசாய்த்து நிம்மதிப் பெறுமூச்சு விடும் போதெல்லாம் ”இப்பிடியே செத்துப் போயிட்டாலும் எனக்கு சந்தோசம்தான்” என்று கூறுவாள். நறுக்குத் தெறித்தாற் போல வார்த்தைகளை அள்ளி வீசும் அவனின் தைரியம் அவளை அதிகமாய் தெம்பூட்டும்.
மின்னொலியை பொட்டல் ஒப்பனையாய் தீட்டியிருந்தது.
பெட்டினி வியாபாரம் அப்போது சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. மின்னொளியில் பளபளக்கும் கழுத்து மாலைகளும் வளையல்களும், காசிக்கயிறும் கண்ணில் பட்டதும் பாண்டிக்கு இருப்புக் கொள்ளவில்லை எத்தனையோ மாலைகள் இருக்கின்றப் போதும் கருகமணியளவு அவள் கழுத்துக்கு வேறொன்றும் அழகாய் இருப்பதில்லை என்று எண்ணுவான். ஏனெனில் நீண்ட நாட்களாய் அவள் கேட்டுக் நச்சரித்துக் கேட்டுக்கொண்டிருந்த கருகமணி அவன் கண்ணில் பட்டதும் ஆயிபுள்ளையின் சங்கு கழுத்து மனக்கண்ணில் படமாய் விரிந்தது அது மட்டுமல்ல கடந்த வருடம் வாங்கிக் கொடுத்த கருகமணி நிறம் வெளுத்துப் போயிருந்தாலும் இன்னும் அவள் கழுத்தே தஞ்சம் என்றுக் கிடப்பது அவனை இன்னும் ஆர்வமூட்டிக் கொண்டிருந்தது. ஆதலால் உடனே ஒரு மலையை வாங்கிப் பத்திரப்படுத்தினான் பாண்டி.
ஏழு தோட்டத் தலைவர்களும் பொட்டலில் குழுமியிருந்தார்கள் அதுமட்டுமல்ல ஏழு தோட்டத்து மக்களும் காமனின் விழாவைக் காண வெள்ளமென திரண்டிருந்தனர். சடங்கு சம்பிரதாயங்களோடு காமன் விழா தொடங்கப்பட்டது. நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.
சுற்று வட்டாரத்தில் உள்ள எல்லா தோட்டங்களும் ஒன்றுக் கூடி ரதி மன்மதனின் திருமணக் கோலத்தை வாழ்த்திக் கொண்டிருந்தனர் பொட்டல் சீர் வரிசைகளால் நிறைக்கப்பட்டிருந்தது. மாவிளக்கும் தோரணமும் பொட்டலில் கல்யாண வீட்டின் கலகலப்பை ஏற்படுத்தியிருந்தது. பொட்டலை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த அலங்காரங்களும் தாவணிப் பாவாடையில் திரியும் இளசுகளும் வாலிப வேட்கைகளுக்கு தீணியிட்டுக் கொண்டிருந்தனர்.
தோட்டம் காமன் விழாவில் மூழ்கியிருந்தது. ஆனால் பாண்டி மட்டும் ஆயிப்புள்ளையோடு கோயில் தோப்பில் அடைக்கலம் புகுந்திருந்தான்.
மடியில் பத்திரப்பட்டிருந்த காசிக்கயிறை கச்சிதமாய் எடுத்து பாண்டியின் முரட்டுக் கைகளில் கட்டியப்போது ஆயிப்புள்ளயின் முகத்தில் ஒரு சவரனில் கைசங்கிலி போட்டு பார்த்த திருப்தி மின்னலாய் வெட்டி மறைந்தது. அவனும் பதிலுக்கு அவளை இறுகக் கட்டி மார்போடு பொருத்தி கருகமணியை கழுத்தில் அணிவித்து அழகு பார்த்தான். வெட்கம் தாளாது அவனின் மார்போடு சாய்ந்துக் கொண்டவளின் நாணத்தை பாண்டியின் விரல்கள் சீண்டிக் கொண்டிருந்தன.
மலை மேடுகளில் ஒலித்துப் பறையும் தப்போசை அவர்களின் காதலுக்கான முரசொலியாய் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
ஆக்ரோசமாய் ஒலித்துப் பறையும் தப்போசைக்கு இசையும்படி பொட்டலில் ரதி மன்மதனின் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. ஆட்டத்தில் மூழ்கியிருந்த ரதி,மன்மதனுக்கு பூசப்பட்டிருந்த ஒப்பனை மெதுமெதுவாய் கலையத் தொடங்கியிருந்தது.
ஆனால் பனி இறங்கிய இரவும் ஆயிப்புள்ளையின் உடலில் வியர்வையைப் படர்த்திக் கொண்டிருந்தது. பாண்டியின் கட்டுக்குள் முழுமையாய் தொலைந்துப் போயிருந்தாள் ஆயிப்புள்ள.
மன்மதனோ விரகதாபத்தின் உச்சத்தில் நின்று ஆராக் காதலோடும், அருளின் உக்கிரத்தோடும் ஆடிக் கொண்டிருந்தான்.
அப்போதும் கண்களை இறுக மூடி கடுந் தவத்தில் உறைந்திருந்தான் சிவன்.
மயிலுத் தலைவருக்கு பொறி தட்டினாற் போல உள்ளுக்குள் வலுத்த சந்தேகம் கூட்டத்தில் ஆயிபுள்ளையைத் தேடி தொலைத்தது. கண்ணுக்கு எட்டிய துாரம் வரை தேடித்துலாவியும் ஆயிப்புள்ளையை மட்டும் காணவில்லை. கூடவே பாண்டியின் ஞாபகம் வேறு வந்து வந்து விழவே பதற்றத்தில் உறைந்துப் போனான்.
மேடையில் வழங்கப்பட்டிருந்த கௌரவத்தை கருதி புழுங்கியப்படி அங்கேயே இருந்து விட்டாலும் எண்ணங்கள் என்னவோ எல்லை தாண்டிப் பயணித்திருந்தன.
சடைத்து நிற்கும் மரங்களும் பூத்துக் கிடக்கும் நட்சத்திரங்களும் சாட்சியாய் நின்றதாலோ என்னவோ பாண்டியும் ஆயிப்புள்ளையும் உலகை மறந்து வெகுநேரமாகியிருந்தது. மேகத்தில் மறையும் நிலவும் மேகத்தை உரசி உரசி சல்லாபித்துக் கொண்டிருந்தது. அப்போது தனித்து விடப்பட்ட அவர்களின் உலகம் புனிதமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அடித்துப் பறைந்து களைப்புற்றிருந்த தப்பு எரியூட்டப்பட்ட டயர் சுவாலையில் காய்ந்து தன் காயங்களை ஆற்றிக் கொண்டிருந்தது. குழுமி இருந்த கூட்டத்தை முழுமையாய் ஒரு முறை மேய்ந்து விட்டு திரும்பிய மயிலுத் தலைவரின் கண்கள் கூட்டத்திலிருந்து தப்பியிருந்த பாண்டியையும் ஆயிபுள்ளையையும் வெறியேறி சிவந்திருந்த கண்களோடு தேடித் துலாவின.
அரசல் புரசலாக மலைகளில் பேசிக்கொண்ட பாண்டி ஆயிப்புள்ள காதல் விவகாரம் மயிலுத் தலைவரின் காதுகளுக்கு எட்டியதும் அவர் அடைந்த உக்கிரம் சிவன் நெற்றிக் கண் திறந்தப்போது வெளியான உக்கிரத்தைக் காட்டிலும் கொடுமையானதாக இருந்தது. வாய்த்தர்க்கமாய் ஆரம்பித்து கைகலப்பு வரைக்குமாய் போயிருந்தப் போதும் ஆயிப்புள்ள தன் முடிவில் உறுதியாய் நின்றதுதான் அவரை தடுமாறச் செய்தது.
“எனத்தோட எனமா போயிருந்தாக் கூட பரவால்ல அறிவுக்கெட்ட முண்டம் இப்பிடி கேவலப்படுத்திட்டியே என்னோட தகுதிக்கும் கௌரவத்துக்கும் ஒரு சின்னசாதிப்பய வீட்டுல சம்பந்தம் வச்சிக்க சொல்லுறியா? இங்கப்பாருடி ஒன்ன வெட்டிப் போட்டாலும் போடுவேனே தவிர அவனோட வாழுவோனு மட்டும் கனவுக் காணாத”
என்று மயிலுத் தலைவர் மார் தட்டியதன் தீவிரம் அவளுக்கு அப்போது புரியவில்லை.
சின்னசாதிப் பய சின்னசாதிப் பயனு சொல்லுறியே அவனோடு சேந்து இந்த தோட்டமே மூக்கு மேல வெரல வக்கிற மாதிரி வாழ்ந்துக் காட்டுறேன் பாரு” என்று துல்லியமாய் பதிலிறுத்தாள் ஆயிப்புள்ள.
“அடிச் செருப்பால இங்கப் பாருடி ஒழுங்கு மரியாதையா சொல்லிப்புட்டேன் கேக்கலயோ அப்பொறம் உயிருக்கு மோசமா போயிடும் சொல்லிப்புட்டேன்”
என்று மல்லுக்கு நிற்கும் மயிலுத் தலைவரின் உறுதியை விடவும் ஆயிப்புள்ளையின் காதல் உயர்ந்து நின்றது.
நேரம் நடுச்சாமத்தை அண்மித்திருந்தது.
விபரீதம் புரியாமல் சிவனின் தவத்தை குறி வைத்து ஆட்டத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தான் மன்மதன்.
பாவத்துக்கு விமோசனம் இல்லையென்றாலும் மன்மதன் காமத்தின் உச்சத்தில் திளைத்திருந்தான். சிவனின் ஆக்ரோஷத்துக்கு அஞ்சிய ரதியின் மனசு தணலாய் தகித்து கொண்டிருந்தது.
உக்ரமாக ஒலித்துக் கொண்டிருந்த தப்போசை மெதுமெதுவாய் சிவனின் காதுகளை எட்டத்தொடங்கியிருந்தது. உடலுள் பரவும் ஆக்ரோசம் உடலை உலுக்கிப் போகவே வெகுண்டு எழுந்தான் சிவன் ஆயிரம் யானைகளை தன்னுள் இறக்கிய தெம்புடன் பெருமூச்சொன்றை வெளித்தள்ளினான் அப்போது சிவனின் கண்கள் திறக்கப்பட்டன.
காமன் பொட்டலில் இருந்து ஒதுங்கியிருந்த பாண்டியையும் ஆயிப்புள்ளையையும் மயிலுத் தலைவரும் அவருடைய சகாக்களும் வேட்டை நாய் கணக்காய் கோயில் தோப்பில் தேடி நோட்டமிடத் தொடங்கியிருந்தனர்.
சிவனின் தவம் மன்மதனால் கலைக்கப்பட்டாயிற்று. எரிமலையாய்! வெடித்துச்சிதறிய சிவனின் கோபக் கனல் மன்மதனை நொடிக்குள் பலிகொண்டது. மன்மதன் சிவனின் கோபச் சுவாலையில் எரிந்துக் கருகத் தொடங்கியிருந்தான். தோட்ட மக்களின் மனங்களோ உருகித் தகித்தன நெருப்பு மன்மதனை அழித்திருந்தது. அப்போது ரதியின் அவலக் குரல் காற்றை நிறைத்துக் கொண்டிருந்தது ஆனால் அது சிவனின் காதுகளை மட்டும் எட்டவே இல்லை.
எல்லோர் முகத்திலும் சோகம் படர்ந்திருந்தது தோட்டம் கூடி நின்று மன்மதனின் மறைவுக்காக அழுதது. அங்கே ரதி மூலியாக்கப்பட்டிருந்தாள். வெள்ளை வேட்டியில் முகத்தை மூடி முக்காடிடப்பட்ட ரதி அழுது புரண்டாள். உயிரைப் பிழியும் ரதியின் சோக வார்த்தைகளை கேட்ட தோட்ட மக்களின் கண்கள் குளமாகின.
விடியலில் கோயில் தோப்பை கொலைக்காற்று நிறைத்திருந்தது.
விதவைக் கோலத்தில் பொட்டலில் இறங்கி உயிர்பிச்சைக் கேட்டு வந்திருந்தாள் ரதி சோகத்தை படர்த்தும் தப்பொலி பொட்டலை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தியிருந்தது.
பித்துப் பிடித்து வேர்க்கொண்டது போல அப்படியே இருந்து விட்டாள் ஆயிப்புள்ள மயிலுத் தலைவரின் முகத்தில் ஏக களிப்பு குடிகொண்டிருந்தது.
ஓ சண்டாளா என் தகப்பா
உலகில் உண்டோ இவ்வநியாயம்
சொந்த மருமகன மாமன்
கொன்ற பாவமுண்டோ?
எனும் ரதியின் உயிர்ப்பிழியும் உருக்கமான சோககீதம் எல்லோரின் இதயங்களையும் உழுக்கியது. ஆனாலும் சிவன் மட்டும் இறங்கிவருவதாயில்லை. ஈரமற்ற கட்டாந்தரையாய் சிவனின் மனநிலம் வரண்டுக் கிடந்தது.
பொழுது நன்றாக புலர்ந்திருந்தது.
மன்மதனின் மறைவின் அதிர்ச்சியில் இருந்து மீளாத தோட்ட மக்களுக்கு கோயில் தோப்பு இன்னொரு அதிர்ச்சியை வைத்திருந்தது.
தோட்ட மக்கள் கோயில் தோப்பில் நிரம்பியிருந்தனர்.
மப்பும் மந்தாரமுமாய் கிடந்த தோப்பில் கொலை நெடி பரவியிருந்தது. வெறி நாய்களால் கடித்துக் குதறப்பட்ட பாண்டியின் உடல் இரத்த வெள்ளத்தோடு காட்டுப் பீலி ஏரியில் மிதந்துக் கொண்டிருந்தது.
அப்போது மூன்று நாட்களில் மன்மதன் உயிர்த்தெழுவான் என்பதை அறிந்தும் ஆற்றாது அழும் தோட்டம் பாண்டிக்காக எத்தனைக் காலம் அழும் என்பதை கேட்பாரின்றி ஒலிக்கும் தப்போசை புழுக்கமாக கொட்டிக்கொண்டிருந்தது.
– ‘தகவம்’ பரிசு பெற்ற கதை – ஞானம்.
– மீன்களைத் தின்ற ஆறு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 2016, பெருவிரல் கலை இலக்கியா இயக்கம், இலங்கை.
![]() |
சிவனு, மனோகரன் (1978.09.17 - ) ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி. இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஞானம், தினமுரசு, தினக்குரல், சுடரொளி, மித்திரன், வடம், லண்டன், சுடரொளி, புதினம் ஆகியவற்றில் வெளியகியுள்ளன. ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடங்கி ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புக்களாகும். இவரது நூல்கள்…மேலும் படிக்க... |