கல்யாணத் திருட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2025
பார்வையிட்டோர்: 213 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடைசி ‘டிரிப்’ அடித்தபின் பஸ்ஸை ஷெட்டிற்குள் விட்டுவிட்டு நானும் டிரைவர் சந்திரனும் வெளியே வந்தோம். 

அன்று இருள் சூழ்ந்திருக்கவில்லை. பூர்ண நிலவு நாள். பஸ் எனும் கூண்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாகப் போய் வந்து கொண்டிருந்த எனக்கு வெளிக்காற்றும், தார் ரோட்டு நடையும் இதமாக இருந்தன. நாள் முழுவதும் எல்லாரையும் ஏற்றிச் சென்ற நாங்கள் ஒரு மைலுக்கு மேல் வீட்டிற்கு நடக்கத்தான் வேண்டியிருந்தது. 

“ஜோதிமுத்துவைப் பற்றி… பாதி சொன்னே, மீதியை விட்டு விட்டாயே…” என்றேன் சந்திரனிடம். இப்பொழுது தோளிலே சில்லறை குலுங்கும் பை இல்லை; கையை ஹாயாக வீசலாம்; மனசையும் ஓட விடலாம்; சந்திரன் ஏதாவது பேச மாட்டாரா… என்றிருந்தது. 

“ஜோதிமுத்து கெட்டிக்காரப் பேர்வழிப்பா. நான் டிரைவர். அவன் கண்டக்டர். இந்தப் புரசைவாக்கம் ஸ்டாண்டிலே இப்பவும் கும்பல்; அப்பவும் கும்பல். எங்களுக்கு அப்போ நாலு டிரிப் காலையில் ‘ரஷ்’ வேளையில் உண்டு. அந்த எட்டரை மணி சுமாருக்கு வரும் ‘டிரிப்’பிலே ஜோதிமுத்துவுக்கு ரொம்பக் குஷி. 

“வாத்தியாரே கொஞ்சம் மெல்லப் போ” என்பான். 

“வாத்தியாரே கொஞ்சம் நிறுத்திக்கோ” என்பான். 

எல்லாம் வாயில் புடைவை மோகினிக்காகத்தான். ‘ஐயோ, ஆண்டவனே! இப்படி ஏன் இந்தப் பெண் பிள்ளைங்க படிக்கப் போகிறேன்னு ஆம்பளைங்க உள்ளத்தையே கிறங்க அடிச்சுடறாங்களோ தெரியலை’ என்று எண்ணிக் கொள்வேன். 

கையிலே ஒரு பை; காலிலே ஒரு ஸ்லிப்பர்; மூக்கிலே கண்ணாடி இல்லை, உடம்பைப் பிடித்தாற்போன்ற ‘வாயில்’ புடைவை இத்தியாதி யுடன் அந்தப் பெண்தான் ஜோதிமுத்துவை மயங்க வைத்தவள். 

புரசைவாக்கம் ஸ்டாண்டிலேயே ஸூட், ஹேட் போட்டவங்களுக்கே டம் கிடைக்காதபோது, இந்தக் கொழந்தைக்கா இடம் கிடைக்கப் போவுதுன்னு ஜோதிமுத்து சொல்வான். அந்தப் பெண்ணுக்காக அவன் சொல்கிறபடியெல்லாம் பாதியிலே பஸ்ஸை நிறுத்தி ஓட்டுவேன். 

நான் ஒரு தடவை சொன்னேன்: “ஜோதி! நாம்ப செய்யறது நல்லால்லே… யாராவது ஒரு பாஸஞ்சர் என்னிக்காவது கேட்டுட்டான்னா என்ன பண்றது?” என்றேன். 

ஜோதி சிரித்துக் கொண்டே சொன்னான்: “அன்னிக்கே இந்த வேலைக்கு ஒரு முழுக்குப் போட்டுட்டுப் போயிடுவேன்” என்று. 

அவனுடைய இந்தத் துணிவான பதில் என்னைத் திடுக்கிட வைத்தது. இவனையும் ஒருத்தி காதலிக்கிறாளே… திடீர்னு வேலைக்கு முழுக்குப் போட்டுடறானாமோ..! 

அந்தப் பொண்ணு பேரு சொல்லலையே… பாரிஜாதம்! வயது பத்தொன்பதுக்குக்குறையாது. டிரெயினிங்ஸ்கூல்லே படிச்சுட்டிருக்காம். ஜோதி ஒன்றும் ஒளிக்காமல் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லுவான். 

‘இன்னும் ஒரு வருஷம்தான்! அப்புறம் ராஜா சோறு! அது வாத்தியாராய்ப் போயிடும்; நானும் சம்பாதிச்சு அதுவும் சம்பாதிச்சா…’ என்பான், உள்ளத்திலே கள்ளங்கபடு இல்லாமல். 

ஜோதிமுத்துவுக்குத் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோயில் போகும் வழியிலே ஒரு கிராமம் சொந்த ஊர். ஒன்பதாவது வரையில் படித்த அவனுக்குப் பள்ளிக்கூட சிறைவாசம் கட்டோடு பிடிக்காததால், பட்டணம் போய்ப் பிழைத்துக் கொள்கிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு வந்து விட்டான். ஆள் கம்பீரமாக வாட்டசாட்டமாக இருப்பான். தலையிலே ‘வாஸ்லைன்’ தடவி வாரி விட்டு, மொற மொறவென்று இஸ்திரி போட்ட சட்டையை மாட்டிக் கொண்டு டியூட்டி இல்லாத நாள்களில் அவன் சுற்றுவதைப் பார்ப்பவர்கள், இவன் கண்டக்டர் தொழிலுக்காகப் பிறந்திருக்கக்கூடாது என்பார்கள். 

எங்கெல்லாமோ வேலைக்கு அலைந்து, கடைசியில் எங்கள் பஸ் கம்பெனியில் அவனுக்குக் ‘கிளீனர்’ வேலை கிடைத்தது; பிறகு கண்டக்டராகப் பிரமோஷன் ஆயிற்று. 

நானும் என் ஐந்து வருஷ சர்வீஸில் எத்தனையோ கண்டக்டர்களைப் பார்த்துவிட்டேன். ஜோதிமுத்துவின் தோற்றமும் சிரித்துப் பேசி வந்த புதிதில் இருந்த சுபாவமும் என்னைக் கவர்ந்து விட்டன. 


பாரிஜாதம் புரசைவாக்கத்தில் ஓட்டேரிக்குப் போகும் வழியில் ஒரு தெருவில் வாசித்து வந்தாள். தகப்பனார் இல்லை. வயதான தாய் மட்டும்தான். இனி பாரிஜாதம் பாஸ் செய்து வேலைக்குப் போய்தான் அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். 

பாரிஜாதத்தின் மாமன் ஒருவன் நீலகிரியில் இருந்தான்; கல்யாணமாகி இரண்டு, மூன்று குழந்தைகளுடன் பெரிய ‘குடும்பி’யா யிருந்தான்; அப்படியும் மாதம் முப்பது ரூபாய்க்குக் குறையாமல் பிரதி மாதமும் அனுப்பி வந்தான். அந்தக் காலத்தில் பாரிஜாதத்தின் தகப்பனார்தான் அவனை முன்னுக்குக் கொண்டு வந்தாராம். வருஷா வருஷம் சேலைகள் வேறு எடுத்துத் தருவான். 

சிறு தையல் மெஷின் ஒற்றை வைத்துக் கொண்டு அதனால் கிடைப்பதன் மூலமும், மாமாவின் பணத்தின் மூலமும் கஷ்டத்துடன் வாழ்க்கையைத் தள்ளி வந்தார்கள். பள்ளிக்கூடத்தில் ‘ஸ்காலர்ஷிப்’ கிடைத்துக் கொண்டிருந்தது. 

இந்தச் சமயத்தில்தான் ஜோதிமுதுவின் ‘மோகன வடிவம்’அவளைக் கவர்ந்துவிட்டது. என் காலத்தில் இந்த மாதிரி காதல் – கீதல் ஒன்றும் ஏற்படுவதில்லை. இந்த ரேஷன் அரிசிக் காலத்தில்தான் உதயமாகிறது எல்லாம்! 

பாரிஜாதம் – ஜோதிமுத்து இவர்களுடைய காதல், நாவல் கதைகளில் வர்ணிப்பதுபோல வளர்ந்து வந்தது. 

ஊரைவிட்டுக் கிளம்பி வந்த பிறகு ஜோதிமுத்து என்ன செய்கிறான், எப்படி வாழ்கிறான் என்பது அவனது வீட்டார்களுக்குத் தெரியவில்லை. ஊரிலிருந்து கடிதம் வந்தால் பதில் போட மாட்டான். திடீரென ஒருநாள், ‘அம்மாவுக்கு அபாயம்; உடனே வரவும்’ என்று தந்தி வந்தது. ஜோதி முத்துக் குழம்பிப் போனான்; பதறினான்; லீவுக்காக முதலாளியிடம் ஓடினான்; கையை விரித்தார் அவர். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது ஜோதிக்கு. அப்போது ஆறு மணி. என்னிடம் ஓடி வந்தான். “வாத்தியாரே! தாமதிக்க நேரமில்லை; அவசரத்திற்கு இல்லாத லீவு வேறு எதற்கு… அதுகிட்டே கூடச் சொல்லிக் கொள்ள நேரமில்லை. நீ அதை பஸ்ஸிலே பாத்தியானா சொல்லிவிடு” என்று கூறிவிட்டு விரைந்தான் ஸ்டேஷனை நோக்கி. நான்காவது நாளே குனிந்த தலையுடன் ஆபீஸ் வாசலில் நின்று கொண்டிருந்த ஜோதிமுத்துவைக் கண்டவுடன் திடுக்குற்றேன். 

“என்ன தம்பி, அம்மாவுக்கு எப்படி சௌக்யம்?” என்றேன். ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான் ஜோதி. “உடம்பா… என்னை விளையாட்டுக்காட்டியிருக்கிறான்என்மாமன்காரன். பங்காளிக்காரனுவ இல்லையா? அம்மாவுக்கு எப்படியோ ஏதோன்னு நான் ஓடினா அம்மா அங்கே குத்துக்கல்லுப் போல இருக்கா. என்ன விஷயம்னு கேட்டேன். எல்லாரும் குபீருன்னு சிரிச்சுப் போட்டாங்க. ‘என்ன இது வேடிக்கை… வேலை வெட்டியை விட்டு வந்துட்டேன்…. நல்லா இருக்கா உங்களுக்கு?’ என்று கூவினேன். ‘என்னடா, ஒரு கடுதாசி உண்டா? சௌக்ய சமாச்சாரம் உண்டா? சும்மா வான்னா வருவியா தம்பி? இப்படிச் செஞ்சாத்தான் வருவே… இங்கேயே இரு… மேலையூரான் மவளைப் பேசி வச்சிருக்கோம்’ என்று என்னென்னமோ பேசிக்கிட்டே போனாவுக. அங்கே இருந்தா விஷயம் விபரீதமாப் போயிடும்னு அடுத்த பஸ்ஸுக்கே திருநெல்வேலி வந்து ரயிலேறிட்டேன்” என்றான் ஜோதிமுத்து. ‘வேலை இல்லை’ என்று சொல்லி விட்டாராம் முதலாளி. 

ஜோதிமுத்து தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினான். எங்கெங்கெல்லாமோ சுற்றி யிருக்கிறான். இரண்டு வருஷங்களாகப் பஸ்ஸிலே ‘ரைட், ஹோல்டான்’ போட்டவன் வேறு என்ன வேலையைச் செய்ய முடியும்? 

ஒருவாரம் கழித்து என்னைச் சந்தித்தான். பஸ்ஸிலேதான். பாரிஜாதத்தின்தாயாருக்கு ரொம்பவும் உடம்பு அதிகமாய் விட்டதாகவும் தன்னைத்தான் அவள் நம்பியிருப்பதாகவும், ஓரிடத்திலும் வேலை கிடைக்கவில்லையென்றும் கண்ணீர் விடாத குறையாகக் கூறினான். நான் அதிகமாக அவனிடம் பேச்சுக் கொடுக்க முடியவில்லை. ‘டிரைவரிடம் பேச்சுக் கொடுக்காதே அப்பா. ஆக்ஸிடெண்ட் ஆகிடப் போறது’ என்று யாரோ ஒரு பிரயாணி முணுமுணுப்பது காதில் விழுந்தது. 

சடக்கென்று ஜோதிமுத்து பஸ்ஸிலிருந்து இறங்கிச் சென்றான். அவன் இறங்கிப் போய் ஐந்து நிமிஷங்களுக்கெல்லாம் பஸ்ஸிலே பர்ஸைக் காணோம் என்று ஒருவர் கூக்குரலிடுவது காதில் விழுந்தது. ஜோதிமுத்துவை நான் சந்தேகிக்க முடியுமா? 

ஆறு மாதங்கள் வரை ஜோதிமுத்துவை நான் சந்திக்கவே இல்லை. ஒருநாள் எதேச்சையாக மூர் மார்க்கெட் அருகே அவனைச் சந்தித்தேன். ‘வாத்தியாரே’ என்று கதறியே விட்டான். இருவரம் ஒதுக்குப்புறமாகச் சென்று புல் தரையில் அமர்ந்தோம். இந்த ஆறு மாதங்களில் தான் ஜோதிமுத்து எப்படியெல்லாம் மாறிப் போய்விட்டான்! 

பாரிஜாதத்தின் தாய் இறந்துவிட்டாள். பிணம் தூக்குவதற்குக் கூடப் பணமில்லை. எங்கேயோ போய்ப் பணம் கொண்டு வருகிறேன்னு கிளம்பிய ஜோதிமுத்து, பத்து நிமிடங்களில் திரும்பி வந்தான். 

ஜேப்படி செய்வது அப்போது இரண்டாவது தடவையாம். ஒருவரது பையிலே கனமாக இருந்த பர்ஸை லாகவமாக அபகரித்து பர்ஸிலிருப்பதை எடுத்துக்கொண்டு, பர்ஸைக் குப்பைத் தொட்டியிலே போட்டு வந்துவிட்டான். பிறகு பாரிஜாதத்தின் தாயாரின் காரியங்கள் ‘ஜாம் ஜாமென்று’ நடந்தேறின. அதன் பிறகு ஜோதிமுத்துவுக்குப் பாரிஜாதத்தின் வீடுதான் அடைக்கலம் 

கல்யாணம் செய்து கொண்டு விடலாம் என்று ஜோதிமுத்து பாரிஜாதத்தை வற்புறுத்தியிருககிறான். ‘இன்னும் மூன்று மாதங்கள் தான்; அப்புறம் பரீட்சை முடிந்துவிடும்; முடிந்தவுடன் திருத்தணிக்குச் சென்று கல்யாணத்தை முடித்துக் கொள்வோம்’ என்றாளாம் பாரிஜாதம். பரீட்சை முடிவதை ஆவலுடன் எதிர்பார்த்தான். அதற்குள் முடிந்த வரை பலரது ஜேபியைப் பதம் பார்த்தான். 

ஜேப்படி ஜோதிமுத்து என்று அவளுக்குத் தெரியாவிடினும் பிரியக் காதலன் ஜோதிமுத்தாகவே பாரிஜாதம் கண்களுக்குப்பட்டது. அங்கே வேலை செய்கிறேன்; இங்கே காண்டிராக்ட் என்றெல்லாம் பாரிஜாதத்திடம் பொய் சொல்லி வந்தான். எப்படியோ செலவுக்குப் பணம் வந்து விடும். 

ஆனால், ஒருநாள் பார்க் ஸ்டேஷன் அருகே ஒருவர் பையில் ஜோதி முத்து கையைப் போடும்போது பர்ஸும் கையுமாகப் பிடிபட்டான். இரண்டு, மூன்று நாள்கள் வரை ஜோதிமுத்துவைக் காணாத பாரிஜாதம் துடியாய்த் துடித்தாள். கடைசியில் அவன் கைது செய்யப்பட்டு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அறிந்தவுடன் அவள் தலை சுழன்றது. மூன்று மாதம்… மூன்று மாதம் என்று அவள் விம்மினாள். அதே குழப்பத்துடனேயே பரீட்சை எழுதினாள். பரீட்சை முடிந்தது. முடிவு வர இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேலிருந்தது. இதுவும் சோதனையா என்று உருகிப் போய் விட்டாள் பாரிஜாதம். 

பரீட்சை முடிவு வந்தது. பரீட்சையில் பாரிஜாதம் தேறவில்லை. அவளுக்கு இந்த உலகமே ஆடுவது போலிருந்தது. அவள் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டாலும் ஏதோ பயங்கர அவமான உணர்ச்சி அவளைப் பயமுறுத்தியது. பல்லைக் கடித்துக் கொண்டு பல நாள்களைத் தள்ளியும் அந்த வீடு, அந்தத் தெரு எல்லாம் அவளைப் பார்த்துக் கெக்கலிக் கொட்டிச் சிரிப்பது போல் உணர்ந்தாள். 

ஒருநாள் காலை… அவள் தன் அறைக் கதவைச் சாத்திக் கொண்டு, ஒரு டம்ளரில் சிறிது காபியை ஊற்றினாள். மடியிலிருந்து ஒரு சிறு பொட்டலத்தை எடுத்து அதில் போட்டாள். அவள் கை நடுங்கியது, அந்தச் செயலைச் செய்ய. உள்ளம் மட்டும் திடமாக இருந்தது. சாத்தப்பட்டிருந்த கதவை யாரோ தட்டினார்கள். அந்த வீட்டின் வேறொரு பாகத்தில் குடியிருப்பவர் வீட்டுப் பெண் ஏதோ கேட்கக் கூப்பிட்டாள். பாரிஜாதம் அவளைத் தனியே அழைத்துச் சென்றாள். அவள் அந்த அறையை விட்டு வெளியே போவதற்கும், சந்தடியின்றி ஜோதிமுத்து அந்த அறையினுள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. டம்ளரிலிருந்த காபியை எடுத்தான்.” 


டிரைவர் இந்த இடத்தைச் சொல்லும்போது சிறிது நிறுத்தினார். வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவி, புகையிலைத் துண்டையும் பாக்கொன்றையும் போட்டுக் கொண்டார். 

“ஐயோ… இதென்ன இந்த இடத்தில் நிறுத்திவிட்டீர்கள்; நாவல் கீவல் எழுதக் கற்றுக் கொள்கிறீர்களா? ஜோதிமுத்து அந்த விஷம் கலந்த காபியைக் குடித்தான்; சுருண்டு விழுந்தான். பாரிஜாதம் அறைக்கு வந்தாள்… என்ன சோகக் கதையைக் கூறிவிட்டீர்கள்!” என்று நான் துடியாய்த் துடித்தேன். 

“பொறுமையில் உனக்குப் பரிசு கொடுக்க வேண்டும்!” என்று கூறிவிட்டு போட்ட வெற்றிலையைக் குழப்பாமலேயே உமிழ்ந்துவிட்டு “அதென்ன அப்படி அவசரப்பட்டுட்டே… நாவல், கீவல் நான் படிக்கலை, தம்பீ! ஜோதிமுத்து விஷம் குடிச்சுச் செத்துப் போயிருந்தா… நான் மூர் மார்க்கெட்டியில் அவனுடைய ஆவியுடன்தான் பேசியிருக் கணும். ஆனால், ஜோதி சாகவில்லை; சிநேகிதியுடன் பேசிவிட்டு வந்த பாரிஜாதம் திரும்பவும் அறைக்குள் நுழைந்தபோது, ஜோதிமுத்து அங்கே உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். திடுக்குற்று அவள் உடல் பூராவும் சிலிர்த்துப் போனாலும், அவளுக்கு ஏதோ அந்தச் சமயம் அவனைக் காணவே வெறுப்பாக இருந்தது. ஒன்றும் பேசவில்லை. டம்ளரில் இருந்த காபியை எடுத்து ‘முருகா!’ என்று சொல்லி ‘மடக் மடக்’கென்று குடித்து விட்டாள். 

குடித்த பிறகு அவள் முகத்தில் ஒரு தெளிவு படர்ந்தது; ஜோதி முத்துவின் தோள்களில் தன் கையைப் போட்டுக் கொண்டு அவன் மேல் சாய்ந்தவண்ணம் ‘எப்பொழுது வந்தீர்கள்?’ என்றாள். ஈடேறாது போகும் தங்கள் காதலைப் பற்றி பிரஸ்தாபித்தாள். ‘அடுத்த ஜன்மத்திலாவது சந்திப்போம்’ என்று தழுதழுத்த குரலில் கூறினாள். ‘என்ன இப்படிப் பேசுகிறாயே’ என்று ஜோதிமுத்து பயத்துடன் விசாரிப்பான் என எண்ணினாள். ஆனால், அவனோ புன்முறுவலுடன் அவளது தலையைக் கோதிக் கொடுத்தான். ஒரு மணி நேரம் ஓடி மறைந்தது. 

பாரிஜாதத்துக்கு வயிற்றைக் கலக்கவில்லை; மயக்கம் வரவில்லை; உடல் நீலம் பூக்கவில்லை. தான் சாப்பிட்ட விஷம் ஒன்றும் செய்ய வில்லையே, விஷம் கூடவா சதி செய்கிறது என அவள் விழித்தாள். 

“என்ன கண்ணு விழிக்கிறே? விஷம் ஒண்ணும் செய்யவில்லை?” என்று மெதுவாகக் கேட்டான் ஜோதிமுத்து அவள் தாடையை லேசாகத் தட்டிய வண்ணம். ‘இப்படியெல்லாம் அசட்டுத்தனமான காரியம் செய்யலாமா? அதோ பார் மூலையை!” என்று காட்டினான். நீலம் பூத்த காபி மூலையிலே தேங்கி நின்றது. 

அப்பொழுதுதான் விடுதலையான ஜோதிமுத்து, நேரேபாரிஜாதத்தின் வீட்டை நோக்கி விரைந்து வந்தவன் ஜன்னல் வழியாக பாரிஜாதமிருக் கிறாளா என்று பார்த்தபோது பாரிஜாதம் செய்த காரியத்தைத் தெளிவாக அறிந்து கொண்டான். அவள் அந்த அறையை விட்டு வெளியே போனபோது அந்த விஷக் காபியைக் கொட்டிவிட்டு வேறு பாத்திரத்திலிருந்த காபியை அதில் ஊற்றி வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதவன் போல் இருந்து விட்டான். 

அவனுக்கு அவள் பிழைத்தாள்; அவளுக்கு அவன் கிடைத்தான். 

“இந்த ஜேப்படித் தொழிலே வேண்டாம். கள்வன் பொண்டாட்டி என்றைக்கும் பயந்துதான் வாழணும்; இந்த வயிற்றை வளர்க்க அது ஒன்றுதானா வழி? இருவரும் பிச்சையெடுப்போம்” என்று ஜோதிமுத்துவுக்கு உபதேசம் செய்யுமளவுக்கு உற்சாகமடைந்து விட்டாள் பாரிஜாதம். 

“சே… சே… ஜேப்படியா? நீ கூடவா என்னைத் திருடன்னு நினைக்கிறே? எவனோ கையைப் போட்டு எந்தச் சோமாறியோ எடுத்துக் கிட்டுப் போக எனக்கு மூன்று மாத தண்டனை” என்று விட்டுக் கொடுக்காமல் பேசினான். 

பாரிஜாதத்துக்குக் குஷி தலைகால் புரியவில்லை. “அடுத்த ஞாயிறு திருத்தணி போய் நமது கல்யாணத்தை முடித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினாள். ஆடினாள்; பாடினாள். 

தன் ஒரே மாமனுக்கும் கடிதம் எழுதி போட்டாள். தாய் இறந்தபோது உடல்நிலை சரியாக இல்லாமல் ஆஸ்பத்திரியிலிருந்த மாமாவைத் தன் கல்யாணத்துக்காவது அவசியம் வருமாறு வற்புறுத்தினாள். 

ஜோதிமுத்துவுக்கு இது பெரிய பிரச்னையாகப் போய்விட்டது. ‘கல்யாணமும் அவசியம்; ஆனால், கல்யாணமென்றால் தாலிச் சரடாவது நாம் வாங்க வேண்டாமா? அவளெதிரே நம் கெளரவம் குறைந்ததாகக் காட்டிக் கொள்ளலாமா?’ என்று யோசனை செய்தான். 

‘சரி வழி கிடைக்காமல் போகிறதா?’ என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான். 


அன்றிரவு எட்டு எட்டரை மணி இருக்கும். பேசின் பிரிட்ஜ் ஸ்டேஷன் திருப்பத் தெருவில் ஜன சந்தடியே இல்லை. பெட்டியை எடுத்துக் கொண்டு ஒருவர் அப்போது வந்து போன ரயிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார். 

ஜோதிமுத்துவின் கழுகுக் கண்களுக்கு அவர் பட்டுவிட்டார். எத்தனையோ பைகளைப் பார்த்துவிட்ட அவனுக்கு அன்று ஏனோ இதயம் படபடத்தது. 

விளக்குக் கம்பம் தாண்டி மரத்தின் இருளில் நின்றிருந்த ஜோதிமுத்துவை அவர் நெருங்கினார். ஜோதிமுத்து சட்டென்று ‘ஸார்’ என்றான். அவர் திரும்பிப் பார்த்தார். அவன் இருளில் இருந்தான். அவர் ஒளியில் இருந்தார். ‘மணி என்ன ஆச்சு ஸார்?’ என்று கேட்டுக் கொண்டே இருளோரமாகவே நடந்தான். அவரும் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். 

அந்தச் சமயம் பார்த்துக் குபீரெனப் பாய்ந்தான்; பர்ஸ் இடம் மாறியது. அவர் சமாளித்துக் கொண்டு ‘பிடி, பிடி, திருடன்…’ என்று கூவுவதற்குள் ஜோதிமுத்து இருளில் புகுந்து சந்தில் மறைந்து எங்கோ போய் விட்டான். 


இரவு ஒன்பதரை மணிக்கு மேல் ஜோதிமுத்து வீட்டிற்குள் நுழையும்போது பாரிஜாதத்திடம் யாரோ சற்று வயதான ஒருவர் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். சட்டென்று ஜோதிமுத்துவின் முகம் சுண்டி விட்டது. 

பாரிஜாதம் மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள். “இன்னும் காணுமேன்னு பார்த்தேன்… வந்துட்டீங்களா!” என்று பாரிஜாதத்தின் முகம் சட்டென்று மாறியது. 

“பாருங்கோ… எந்தப் படுகாலிப் பயலோ இவருகிட்டே வேலையைச் காட்டிப்புட்டான். இவரு என் மாமா… ஜயோ அதைச் சொல்லலையா… 

“அம்மா செத்துப் போனப்போ கூட வர முடியவில்லை. கல்யாணத்துக் குன்னு ஆசையோட வந்த இவருடைய பர்ஸை, அடிச்சுப்புட்டானே படுபாவி” என்றாள் பாரிஜாதம் அழமாட்டாத குறையாக. 

“பாரிஜாதம் வருத்தப்படாதே… நல்ல வேளையா புடைவை யெல்லாம் பெட்டியில்தான் இருக்கு. பெட்டியைப் பறிக்காமெ போனானே…ஆனா, மாங்கல்யம் போச்சு. அவசரமா ஊருக்குக் கிளம்பறச்சேதான் ஆசாரி கொண்டு கொடுத்தார். வாங்கிப் பர்ஸிலே வைச்சேன். ஹூம்… அதை எடுத்த புண்ணியவான் அதை வித்தோ… அதை எவ கழுத்திலாவது கட்டியோ வாழட்டும்” என்றார் பாரிஜாதத்தின் மாமா. 

ஜோதிமுத்துவுக்கு நெஞ்சே வெடித்து விடும் போலாகிவிட்டது. அவன் இதயத்தை யாரோ பிழிவது போலிருந்தது. பாரிஜாதத்தின் கண்கள் தன்னைப் பார்த்து, ‘நீதான் குற்றவாளி’ என்று குற்றம் சாட்டியது போலிருந்தது. நம்மை நாமே ஜேப்படி செய்தோமே என்று துடித்தான். 

“மாமா…” என்று அலறி அவர் காலில் விழுந்தான். தன் மடியில் வைத்திருந்த அந்தப் பர்ஸை அவர் காலடியில் எடுத்து வைத்தான். 


டிரைவர் சந்திரன் நிறுத்தினார். 

“ஐயோ… பாரிஜாதம் அவனைப் பற்றி என்ன நினைத்திருப்பாள்… அவனையே வெறுத்திருப்பாளே” என்று என் மனத்தில் பட்டதைச் சொன்னேன் நான். 

“ஹூம்… பாரிஜாதம் அப்படிச் செய்யவில்லை. ஜோதியிடம் உயிரையே வைத்திருந்தாள். அவள் உயர் காதல் எந்தத் தடையையும் மீறியது. தணிகையில் நடந்த கல்யாணத்துக்கு நான் போயிருந்தேன். அந்தத் தணிகாசலன் சந்நிதியில் ஜோதிமுத்து, பாரிஜாதத்துக்கு முடிச்சுப் போட்டான்” என்று முடித்தார் டிரைவர் சந்திரன். 

– 1951 

– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.

விக்கிரமன் கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார். ஆக்கங்கள் உதயசந்திரன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *