கற்பூரம்





நடந்துவந்த களைப்புத் தீர, மரநிழலின் கீழ் இருந்த இருக்கையில் சோமுவும் பார்வதியும் அமர்ந்தார்கள். கோவிலுக்குள் பக்தர்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். முன்வாசலில் இருந்த கற்பூரச்சட்டியில் சுவாலை சுடர்விட்டு எரிகின்றது. தேங்காய்கள் சிதறிப் பறக்கின்றன.
கோவிலையொட்டி ஒரு சிறு கடை இருந்தது. கோவில் நிர்வாகத்தினால் நடத்தப்படும் அந்தக்கடையில் பூசைக்குத் தேவையான பொருட்களுடன் சமயப்புத்தகங்களும் கலண்டர்களும் இன்னும் இதர பொருட்களும் இருந்தன.
இவர்களுக்குச் சமீபமாக சிலர் தள்ளித்தள்ளிக் குட்டிக் கடைகளைப் பரப்பியிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி கோவிலுக்குச் செல்பவர்களின் பின்னால் துரத்துவதும், பின்னர் தன் இருப்பிடத்துக்கு வந்து அமர்வதுமாக இருந்தாள். ஒருவரும் அவர்களைக் கவனிப்பதாக இல்லை. கோவிலுக்கு வருவோர் தமக்குத் தேவையான பொருட்களை, கோவில் நிர்வாகத்தினால் நடத்தப்படும் கடையினில் வாங்கினார்கள்.
அந்தப் பெண் இவர்களையே பார்த்தபடி இருந்தாள். வறுமையின் தரித்திரம் அவளில் தெரிந்தாலும், தோய்த்துலர்ந்த ஆடையை அணிந்திருந்தாள். நெற்றியில் நீறும் பொட்டுமிட்டிருந்தாள்.
“கொஞ்ச சில்லறை இருந்தா தாரும். கற்பூரம் வாங்குவோம்.” என்றார் சோமு.
“சில்லறை இல்லை. இதைப் பிடியுங்கோ” என்று ஒரு தாளை நீட்டினார் பார்வதி.
இருக்கையை விட்டு எழுந்த இருவரும் கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். இவர்களையே பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண் பின்னாலே கலைக்கத் தொடங்கினாள்.
“ஐயா…. அம்மா….! கண் காது மூக்கு சுகப்படவேண்டும் எண்டு சொல்லி இந்தக் கற்பூரத்தை வாங்கிக் கொளுத்துங்கோ”
சோமுவுக்கும் பார்வதிக்கும் திக்கென்றது. `சும்மா இருந்த கண் காது மூக்குக்கு இவள் ஏன் வேலை வைக்கின்றாள்? அது என்ன கண் காது மூக்கு! மற்ற உறுப்புகள் பங்கப்படலாமோ?’ சோமுவுக்கு பயம் மனதைப் பற்றிக்கொண்டது.
அவள் திரும்பத் திரும்ப அதையே சொல்லி, இவர்களை வட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.
“ஐயா…. அம்மா….! கண் காது மூக்கு சுகப்படவேண்டும் எண்டு சொல்லி இந்தக் கற்பூரத்தை வாங்கிக் கொளுத்துங்கோ.”
அவளை இப்படிப் பேச வைத்தது எது? மனதில் பயத்தை ஏற்படுத்தி, இப்படி விற்பதற்கு ஏன் துணிந்தாள்? கையில் இருந்த தாள் காசை அப்படியே அவளிடம் குடுத்தார். அந்த இடத்தை விட்டு நீங்கினால் போதும் என்றிருந்தது அவருக்கு. விறுவிறெண்டு கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினார். பார்வதி அவரின் பின்னாலே இழுபட்டுக்கொண்டு ஓடினார்.
“ஐயா… அம்மா…! இந்தாருங்கோ கற்பூரமும் மிச்சக்காசும்!”
“எல்லாத்தையும் நீயே வைத்துக் கொள்!”
அவள் விடவில்லை.
“கற்பூரத்தையாவது வாங்கிக்கோங்க…”
சோமு நடப்பதை நிறுத்தினார்.
“இனிமேல் கண் காது மூக்கு எண்டு சொல்லி கற்பூரத்தை விக்க வேண்டாம். சுவாமிக்கு கற்பூரம் கொளுத்துங்கோ எண்டு சொல்லி வில்” சொல்லிவிட்டு வேகமாக நடந்தார்.
அவள் சோமுவின் பதிலினால் திகைத்துப் போனாள்.
“சரிங்க சேர்!”
கோவில் வாசலில் இருந்த கற்பூரச்சட்டிக்குள் சுடர் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அருகே யாரையும் காணவில்லை. யார் இதை ஏற்றியிருப்பார்கள்? சுற்றுமுற்றும் பார்த்தார்கள்.
அந்தப்பெண் மீண்டும் தென்பட்டாள். நின்ற இடத்தில் நின்றபடி, இவர்களையே பார்த்தபடி நின்றாள். அவள் இனிமேல் அப்படிச் சொல்லமாட்டாள் என்ற நம்பிக்கையுடன், இவர்கள் இருவரும் கோவிலிற்குள் சென்றார்கள்.
![]() |
கே.எஸ்.சுதாகர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகின்றார். இவரின் முதல் சிறுகதை "இனி ஒரு விதி செய்வோம்" ஈழநாடு வாரமலரில் வெளியானது. இவர் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழை, வீமன்காமத்தைச் சேர்ந்தவர். தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் ஆங்கில மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பயின்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர். நோர்வே தமிழ் சங்கம்,…மேலும் படிக்க... |