கரையெல்லாம் செண்பகப்பூ
கதையாசிரியர்: சுஜாதா
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
த்ரில்லர்
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 170
(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16 | அத்தியாயம் 17-18
அத்தியாயம் – 15

வெள்ளி மிகவும் களைத்திருந்தாள். அழுக்காக இருந்தாள். தலை மயிரில் புழுதி படர்ந்து ஒன்றிரண்டு இலைச் சருகுகள் ஒட்டிக் கொண்டிருந்தன. கன்னத்தில் சிவப்புக் கீறல். கண்களில் அளவில்லாத பயம் தெரிந்தது. நெற்றிப் பொட்டு அழிந் திருந்தது. உதடுகள் வறண்டு வெடித்திருந்தன. மார்பு, உயிர் விடப் போகும் பறவை போல துடித்துக் கொண்டிருந்தது.
“வெள்ளி! என்ன ஆச்சு?”
சுற்றிலும் மிரண்டு பார்த்து சன்னமான, ஹீனமான குரலில், “அய்யா! என்னைக் காப்பாத்துவிகளா?” என்றாள்.
“என்ன வெள்ளி? உன்னை எல்லோரும் தேடிண்டிருக்காங்க!”
“போலீசுக்காரங்க கிட்ட காட்டிக் கொடுத்திராதிங்கய்யா! என்னைக் காப்பாத்துங்கய்யா! எனக்கு ஒரு வளி சொல்லிப் போடுங்கய்யா… நா முளுக்க பதுங்கி, பயந்து இங்க வந்திருக்கன். செய்வதறியாம, தெரியாம, வெறியில் அந்தக் காரியம் செஞ்சன். பயமா இருக்குது!” என்று கதறி அழுதாள்.
“இரு, இரு. என்ன செஞ்ச வெள்ளி நீ?”
“அந்தப் பொண்ணைக் கொன்னு போட்டுட்டனுங்க!”
“அடிப்… பாவி!” கல்யாணராமன் திகைத்தான், அவளை அவநம்பிக்கையுடன் பார்த்தான். “நீயா?”
“அய்யா, என்னக் காட்டிக் கொடுத்துராதிங்க… எனக்கு ஒரு வளி சொல்லிப் போடுங்கய்யா… உங்க காலைப் புடிச்சுக் கெஞ்சுதேன்,” குனிந்தாள்.
கல்யாணராமன் ஒதுங்கிக் கொண்டு, “அதெல்லாம் வேண்டாம். எழுந்திரு” என்றான்.
“செயிலுக்கு அனுப்பி தூக்குக்கவுத்தை மாட்டுவாக. காலும் கையும் துடிக்கத் தொங்கவிட்டு வேடிக்கை பார்ப்பாக. அய்யோ! என்னைப் பெத்தவளே! யம்மாடி! நான் என்ன செய்வேன்?”
“இரு இரு… பினாத்தாதே.”
அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணில் ஒத்திக கொண்டாள். “கைவுட்ராதிங்கய்யா! நான் விரும்பி செஞ்ச காரியமில்லை… தெரியாம அறியாம செஞ்சன்…”
‘வெள்ளி! நீ சினேகலதாவைக் கொட்டினுட்டியா?”
“ஆமாங்க.”
“மை காட்! பாவிப் பொண்ணே! ஏன் அப்படி செஞ்சே?”
கல்யாணராமன் மனத்தில் குழப்பமான எண்ணங்கள். ‘இவளை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறேன்? ஒளித்து வைப்பதா? காட்டிக் கொடுப்பதா?’ அவளைப் பார்த்தான். மார்புப் புடவை யெல்லாம் கண்ணீரில் நனைந்திருந்தது. நெற்றியைச் சுருக்கி மூக்கைச் சிந்தி கீழே குந்தி உட்கார்ந்து கொண்டு தலையைப் பிடித்துக் கொண்டு வாய் விட்டு அழுதாள்; “அய்யோ தெய்வமே! தெய்வமே!”
“நாள் பூரா எங்கே இருந்தே?”
“கருப்பங்காட்டில ஒண்டி இருந்தேனுங்க. காலைல போனவதான். இருட்டினப்புறம் காத்திருந்து உங்களைப் பார்க்க வந்தனுங்க. அய்யா ஒருத்தரைத்தான் நம்பியிருக்கேன். என்னைக் காப்பாத்துங்க. என் விதி. என் புத்தி பிசகிப் போச்சுங்க. எனக்குப் பயமா இருக்குதுங்க. யம்மாடி!”
‘இத பார்! சும்மா அழுது பிரயோசனமில்ல. நடந்ததைச் சொல்லு. நான் உனக்கு எவ்வளவு தூரம் உதவி பண்ண முடியுமோ செய்யறேன்.”
“என்னைக் காப்பாத்துவிங்களாய்யா? காப்பாத்து விங்களாய்யா?”
“பினாத்தாதே. என்ன நடந்தது? சொல்லித் தொலை”
“அடிக்காதிங்கய்யா! நான் அநாதை. ஆத்தா இல்லாத சென்மம்!” மறுபடி மடை திறந்த அழுகை.
அவள் அழுது முடிக்கக் காத்திருந்தாள். விகாரமான பயந்த சோர்ந்த மனநிலையில் இருக்கிறாள். “கல்யாணராமன்! இதோ உனக்கு ஒரு பரீட்சை. எதற்கு வம்பு என்று பேசாமல் இவளைக் காட்டிக் கொடுத்து விடலாம் அல்லது வம்பை விலைக்கு வாங்கலாம். வெள்ளியை உண்மையாக நேசித்தால் அவளுக்கு நீ அடைக்கலம் தர வேண்டும். பயப்படுகிறாய். உன்னுடைய காதல் சமாதான காலத்துக் காதல். உன்னுடைய பத்திரங்கள் உத்திரவாதமான பிறகு ஓர் உபத்திரவமற்ற சௌகர்ய மான சூழ்நிலையில்தான் உனக்குக் காதல், ஏயப்பா! இந்த மாதிரி மூர்க்க சந்தர்ப்பத்தில் காதலா முக்கியம்…? உன் தலை விதிதான் முக்கியம். ஆளை விடு பெண்ணே! அவ்வளவு தானா நீ? நான் யார்? ஏதோ அன்னியன். இந்த விவகாரம் ரொம்ப முற்றிவிட்டது. இந்தப் பொண்ணுக்கு உதவி செய்தால் சத்தியமாக நானும் மாட்டிக் கொள்வேன். விவகாரம் கொலைவரை சென்று விட்டது. சட்டத்துக்கு எதிரில் நான் யார்…? எதற்கு வம்பு…? இருந்தும் இருந்தும்…” அவளைப் பார்த்தான்.
மூக்கை ‘கர்ர் என்று சிந்தினாள். “ராத்திரி ரெண்டு பேரும் வில்லுப் பாட்டு நடக்கிற போது பாதியில புறப்பட்டுப் போறதைப் பார்த்தனுங்க. அவங்க பின்னாடியே போனனுங்க. முதல்ல அந்தப் பொண்ணு; அப்புறம் இவரு போனாரு, ரெண்டு பேரும் ரூம்புக்குள்ளற போயி வௌக்கணைச்சுட் டாங்க. எனக்கு அப்படியே உடம்பு பூரா பத்திக்கிட்டு வந்தது. சின்னப் புள்ளையிலிருந்து இந்த மனுசனை ஒரு ராத்தேசாலம் விடாம கொண்டாடுதன். போற பாதையைப் பூப்போட்டுக் கும்பிட்டிருக்கன். ‘உன்னைத் தவிர ஒருத்தரை நினைச்சதில்லை. எனக்கு நீ இந்த துரோகம் செய்யலாமய்யா? நீ உருப்படு வியான்னு இங்கேருந்தே உரக்கச் சத்தம் போட்டுக் கேட்ட னுங்க. அங்கருந்து கத்தறாரு ‘சும்மாரு செத்த சமே’ங்காரு. அங்கருந்து கல்லெடுத்துப் போடுதாரு! அளுதுகிட்டே வூட்டுக்கு வந்துட்டன். படுத்துட்டன். உடம்பு முச்சூடும் எரியுதுங்க. வில்லுப் பாட்டுக் கேட்டுக்கிட்டே இருக்குது. நீலியம்மன் கதை யாவகத்தில் வருது. அம்மன் தனக்குத் துரோகம் செஞ்சவங்களைச் சென்ம சென்மமாத் துரத்துது. என் முன்னால இசக்கியம்மா வந்ததுங்க. ‘எதுக்கடி பொண்ணே பாத்துப் பாத்துப் பதுங்குதே, மூதேவியைக் கொன்னு போட்டு ரத்தம் குடி’ன்னு சொல்லிச்சு எழுந்தேன்; நடந்தேன். நான் நடக்கலிங்க- இசக்கியம்மன் தாங்க நடந்தது; என்னைய நடக்க வைச்சுது. பயமே இல்லாம நேரா நடந்து போறன். பாதையில கல்லெடுத்துப் பொறுக்கிக்கிட்டேன். இருட்டில ரூம்பு வாசுல்ல அந்தப் பொண்ணு நிலா வெளிச்சத்தில உட்கார்ந்திருக்கா. பாவிப் பெண்ணே! என் குடியைக் கெடுத்தியேடி’ன்னு கல்லை ஓங்கினேன். அப்படியே அவ தலைமேல் போட்டன்”.
“ஓ நோ…”
“நான் இல்லிங்க! அம்மன்தாங்க கொன்னுடுச்சு! இசக்கி அம்மன் – பழயனூர் நீலி!”
“உளறாதே! இத பார் வெள்ளி, நீ செஞ்சது பெரிய குற்றம். அது தெரியுதா உனக்கு?”
“செத்துப் போயிரும்னு நான் நினைக்கலிங்க! பார்க்காம நேரா திரும்பி வந்துட்டன். காலையில குளிக்கப் போனப்பதான் விசயம் தெரிஞ்சது… அய்யா! செய்வது செஞ்சனுங்க. அம்மன் சொல்லித்தான் செஞ்சன். நான் செய்யலிங்க!”
“வெள்ளி, இப்படி யெல்லாம் யாரும் எடுத்துக்கமாட்டாங்க! நடந்தது உன்னுடைய பொறாமையினால!”
“பொறாமையில்லைங்க! ஆசை; இந்தப் பாவி மனுசன் மேல பைத்தியம்! அதனாலங்க! ஏய்யா, நீ வாரிக் கிட்டும் போமாட்டியா! இப்பகூட உன்னையைப் பத்தி தான்ய நினைக்குது பாவிமனசு! அய்யோ, யாரோ வர்ற சத்தம கேட்குதே! அய்யா! என்னை கைவிட்டுராதிங்க!” அவள் கண்கள் கெஞ்சின. பேசிக் கொண்டே சிலர் நடந்து வரும் சப்தம் கேட்க, வெள்ளியிடம் பொறியில் அகப்பட்ட பறவை யின் தவிப்புத் தெரிந்தது. யோசித்தார்கள். தீர்மானித்தான். பீரோவை நகர்த்தி கண்டாமுண்டா சாமான்கள் இருந்த அந்த அறைக் கதவைத் திறந்தான். “சீக்கிரம்! அங்கே போய் ஒளிஞ்சுக்க! நான் வரவரைக்கும் சத்தம் போடாம அங்கேயே இரு.”
அவளை ஏறக்குறையத் தள்ளிவிட்டுக் கதவை மூடி பீரோவை மறுபடி நகர்த்தி மறைத்தான்.
இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் பெரியசாமி, அய்யாத்துரை மூவரும் வந்தார்கள்.
‘ஷ்! அப்பாடா’ என்று துண்டை உதறிவிட்டு உட்கார்ந்தார் அய்யாத்துரை.
“என்ன… அந்தப் பொண்ணோட அம்மா அப்பா வந்தாங்களா?”
“எங்கே? இன்னும் தகவலே வரலியே! நாளைக்குத் தரன் முடியும்போல இருக்கு!”
“மருதமுத்து எங்கே?”
“வெள்ளியைத் தேடிக்கிட்டிருக்கான்!”
“வெள்ளியா? எதுக்கு?”
“எல்லாரும் வெள்ளியைத் தேடிக்கிட்டிருக்காங்க. மேவலா புரத்துக்கு ஆள் போயிருக்குது…”
இன்ஸ்பெக்டர் முதல் தடவையாகப் பேசினார். “மிஸ்டர் கல்யாணராமன்! நீங்க வெள்ளியைக் கடைசியா எப்ப பார்த்தீங்க?”
திடுக்கிட்டான். “வெள்ளியா…? வந்து ஏன்?”
“அந்தப் பொண்ணுதான் இந்தக் கொலையைச் செஞ்சிருக்குன்னு தோணுது. ஆதாரங்கள்ளாம் அப்படித்தான் இருக்குது” என்றார் அய்யாத்துரை.
“பெரியசாமி ! நீ போயி அந்தப் பூசாரிப் பயலை இளுத்துக் கிட்டு வா” என்றார் இன்ஸ்பெக்டர். “விசயம் வெளில் வந்துரும் பாருங்க அய்யாதுரை… மிஸ்டர் கல்யாணராமன்! மருதமுத்து நடந்ததையெல்லாம் சொன்னான். அவங்க ரெண்டு பேரும் பழகினதை அந்தப் பொண்ணு தப்பா எடுத்துக்கிட்டு சண்டை போட்டபோது நீங்க இருந்திங்களாமில்ல? நீங்க என்ன நினைக்கிறீங்க!” இன்ஸ்பெக்டர் ஆங்கிலத்துக்கு மாறினார். அந்தப் பெண் வெள்ளி எப்படிப்பட்டவள்? இந்தக் காரியத்தை- பொறாமையினால் ஒரு கொலை- செய்யக் கூடியவள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”
கல்யாணராமன் திகைத்தான். என்ன சொல்வது?
“நான் நினைக்கவில்லை. ஆனால் என் முடிவு தப்பானதாக இருக்கலாம். ஒரு பெண்ணின் மனத்தை, அதன் ஆழத்தை அளவிடுவது அத்தனை சுலபமான காரியமில்லை” என்றான்.
‘அவள் எப்படிப்பட்ட பெண்? சினேகலதாவையும் அவளை யும் ஒப்பிட்டால் இரண்டு பேரில் யாருக்கு உடல் வலிமை அதிகம்?”
‘உடல் வலிமையைவிட மன வலிமையை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்கிறது?’
“பின் மண்டையில் பலத்த அடி. மூளைக்குள் ரத்தப் பிரவாகம்… இந்த வளையலைப் பாருங்கள்!”
பச்சை நிறத்தில் ஒரு கண்ணாடி வளையல் துண்டைக் காட்டினார். “வெள்ளி அணிந்திருந்த கண்ணாடி வளையல். மருதமுத்து, அவள் அப்பன் இருவருமே அடையாளம் காட்டி யிருக்கிறார்கள். சினேகலதாவின் அறை வாசலில் கிடந்தது. அவள் ராத்திரி இங்கே வந்திருக்கிறாள்.
“வேறு ஏதாவது சமயத்தில் வந்தபோது விழுந்திருக்கலா மல்லவா?”
“இல்லை. நேற்று மாலை சந்தையில் அவள் பச்சை வளையல் வாங்கினதை அவள் தோழிகள் சொல்கிறார்கள். இதையெல்லாம்விட முக்கியமான பிரச்சனை- அவள் ஏன் தலைமறைவாக இருக்கிறாள்?”
கல்யாணராமன் தயக்கத்துடன், “ஏன்?” என்றான்.
:கண்டுபிடித்துவிடலாம். ஓப்பன் அண்ட் ஷீட் கேஸ்! என்னய்யா பெரியசாமி! பூசாரி எங்கே?”
பூசாரி தயங்கித் தயங்கி வந்தான். பனியன் போட்டிருந்தான். அவன் கண்களில் இருந்த தெய்வீகம் அத்தனையும் கரைந்து போய் அப்போது அதீதமான கோழைத்தனம்தான். தெரிந்தது. இன்ஸ்பெக்டரை உன்னிப்பாகக் கவனித்தான். அசட்டுத்தன மாகச் சிரித்தான்.
“அந்தப் பொம்மையை எடு பெரியசாமி, யோவ் பூசாரி! இதை ஞாபகம் இருக்குதா?”
பூசாரி அந்தத் துணி பொம்மையைப் பார்த்தான். அவன் நெற்றி நரம்புகள் புடைந்து ஓடின.
“இருக்குதுங்க!
“என்ன இது?”
“வெள்ளிக்கு மந்திரிச்சுக் கொடுத்ததுங்க!”
“எதுக்கு?”
“சும்மாதாங்க!”
சற்றும் எதிர்பாராமல் இன்ஸ்பெக்டர் தன் முழங்காலால் பூசாரியின் வயிற்றில் விண்ணெற்று உதைக்க, அவன் ‘யெம்மா என்று பின் பக்கம் சாய்ந்து, “அடிக்காதீங்க!” என்றான்.
“பொய் சொல்லாதே! பில்ட்டால வீறிப்புடுவேன்! அந்தப் பொண்ணுகிட்ட என்ன சொல்லி விட்ட?”
பூசாரி மடங்கி உட்கார்ந்து தன் வயிற்றைத் தடவிக் கொண்டு இருமினான். இன்ஸ்பெக்டர் பிணத்துடனும் ஆஸ்பத்திரியிலும் அலைந்து அந்த தினத்தின் எல்லா அலுப்புகளின் முத்தாய்ப் பாக, ஒருவித ஸேஃப்டி வால்வாக அந்த அடி அடித்ததும் சற்று அமைதியானார்.
“சொல்லுங்க பூசாரி; உண்மையைச் சொன்னா உங்களை உட்டுருவேன்.
“சாலாச்சி சத்தியமா சொல்லிடறங்க. வெள்ளி என்கிட்ட வந்து, பூசாரி, அந்தப் பொண்ணு சக்களத்தி மாதிரி வந்திருக்கா, அவளை எப்படியாவது தீர்த்துறணும். காவு வாங்கிட்டு ஒரு மந்திரம் செபிச்சு விவூதி கொடுத்து அந்த வீட்டில அந்தம்மாவுக்குப் பக்கத்தாப்பல போட்டுட்டு வந்துருன்னு சொன்னங்க, அவ்வளவுதான்… அது தப்பாங்க!”
“பூசாரி அந்தப் பொண்ணு சமீன் பேத்தியைப்பத்தி என்ன சொல்லிச்சு?”
“ஒரேயடியா தீர்த்துக் கட்டிறதுக்கு வெஷம் கொடு பூசாரின்னுச்சு. நான்தான் வேண்டான்னுட்டன்! ஊரை விட்டு விரட்டினாப் போறும்னுட்டன்! அதுக்குத்தாங்க மந்த்ரம் வெச்சன்!”
“உன்னைய விரட்டணும்/ பொரணி பண்ணிக்கிட்டு ஊரை ஏமாத்திக்கிட்டு! இதென்ன கோணூசி? இதுக்கென்ன அர்த்தம்?”
“பொம்மைல குத்தினா அவுங்களுக்கு வவுத்தில் ஊசி குத்தற மாதிரி வலி வரும்னு ஐதீகம்!” என்றான் பயந்து.
“ரூபா எவ்வளவு வாங்கினே?”
“சாஸ்தி இல்லீங்க! இன்ஸ்பெட்டரய்யா, விஷயம் இப்படி விவரீதமாவுமுன்னு, அந்தப் பாவிப் பொண்ணு இப்படி செஞ்சு போட்டிருமுனு தெரிஞ்சிருந்தா நானே சரியானபடி புத்தி சொல்லிப் போட்டிருப்பனுங்க. ஏதோ வவுத்துப் புளைப் புக்குங்க மாந்திரிகம். எனக்கு ஆறு புள்ளிங்க, அம்புட்டும் பொட்டப் புள்ளிங்க. கோயில்ல வர்ற வருமானத்தில…”
“சரிதான்! போய் நில்லுய்யா அந்தப் பக்கம். பொட்டைக் கெம்மனாட்டி மாதிரி அளுவாதே!”
“கொடையெல்லாம் நின்னு போயிருச்சு!” என்றார், அய்யாத்துரை.
“சிகரெட்டு இருக்குதில்ல?” என்றார் இன்ஸ்பெக்டர். அவருக்கு சிகரெட் கொடுத்துப் பற்ற வைத்தான்.
“ஒரு பொண்ணு ஒரு ஊரைவிட்டு எங்கே போயிற முடியும்? திருநிலம் டேசன்ல வர்றது ரெண்டு வண்டி. டேசன்ல நல்லாத் தெரியும். அங்கே வரலையாம். வெள்ளிய பஸ் ஸ்டாண்டில பார்த்திருந்தா டீக்கடையில நிச்சயம் சொல்லியிருப்பான். நடந்துதான் போயிருக்கணும். நடந்து எத்தனை தூரம் போவ முடியும்? அல்லது ஊருக்குள்ளேயே எங்கேயாவது ஒளிஞ் சிருக்கணும். என்ன சொல்றீங்க, அய்யாதுரை?”
“ஊருக்குள்ளே ஒவ்வொரு எடமும் பார்த்தாச்சு! கிணறு, குளம், கருப்பந் தோட்டம்- எல்லா எடத்திலையும் பார்த்தாச்சு! ஊருக்குள்ள இல்லீங்க!”
“இந்த சமீன் வீடு?”
“சமீன் வீட்டில இன்னும் பார்க்கலிங்க!”
“பெரியசாமி ! நீ ஒருக்கா இந்த வீட்டைத் துப்புரவாப் பாத்துரு. பதுங்கறதுக்கு நிறைய இடம் இருக்குதுல்ல?”
பெரியசாமி தயங்குவதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் “உனக்கு எவன்யா கான்ஸ்டபிள் உத்தியோகம் கொடுத்தான்? பயந்து சாவறியே” என்றார்.
அய்யாத்துரை, “இப்பகூட அந்தப் பொண்ணை முனிதான் அடிச்சிருச்சுன்னு கிராமத்தில் செலபேர் பேசிக்கிறானுங்க” என்றார்.
“முனியாவது.. ராவது! வாய்யா பார்க்கலாம்! டார்ச் வெச்சிருக்கியா?”
“இல்லிங்க!”
“கல்யாணராமன், டார்ச்சு இருக்கா?”
கல்யாணராமனின் டார்ச் விளக்கை வாங்கிக் கொண்டு இன்ஸ்பெக்டரும் பெரியசாமியும் செல்ல, பூசாரி, “அப்ப நானு?” என்றான்.
“நாளைக்கு ஊட்டாண்ட வந்துரு! இன்ஸ்பெக்டர் எல்லாரையும் விசாரிக்கப் போறாரு” என்றார் அய்யாத்துரை.
மாடியில் அவர்கள் இருவரும் நடக்கிற சப்தம் கேட்டது. மாடியில் தேடிவிட்டு மெதுவாக அந்த அறைக்கு வருவார்கள்; பீரோவை நகர்த்திப் பார்ப்பார்கள்!
அய்யாத்துரை, “காலையில ஒரு வா காப்பித் தண்ணி ஊத்திக்கினதுங்க, அவ்வளவுதான்” என்றார்.
வெள்ளிக்குப் பசிக்குமே என்று வேதனைப்பட்டான். சற்று நேரத்தில் இன்ஸ்பெக்டரும் பெரியசாமியும் கீழே இறங்கி வந்தார்கள்.
“பொதுவா எல்லா ரூமும் பூட்டியிருக்குது” என்றார் இனஸ்பெக்டர். கல்யாணராமனின் அறையைச் சுற்று முற்றும் பார்த்தார்.
“இது என்ன பீரோ?” என்றார்.
அத்தியாயம் – 16
பெரியசாமி பீரோவின் அருகே சென்று அதைத் திறந்தான். கல்யாணராமனின் உள்ளம் பதைத்தது. கடவுளே! பீரோவுக்குப் பின்னால் இருக்கும் கதவை அவன் கவனித்து, அதைத் திறந்து உள்ளே வெள்ளியைக் கண்டுபிடித்து விட்டால், என் நிலை மோசமாகிவிடும். நானும் அந்தக் கொலைக்கு உடந்தையாகி விடுவேன்”
முதல் கவலை தன்னைப் பற்றி இருப்பதில் கொஞ்சம் வெட்கமும் ஏற்பட்டது. அந்தப் பெண், பாவம்!
பெரியசாமி பீரோவுக்குப் பின்புறக்கதவைக் கவனித்து விட்டான். “இந்தக் கதவு எங்கே போவுதுங்க?”
கல்யாணராமன், தெரியாது, அங்க கதவு இருக்கா என்ன?’ என்றான்.
“ஆமா! பாருங்க”
“ஏதோ உள்ளே பூட்டியிருக்கிற ரூமா இருக்கும். நான் போனதில்லை.
“உள்ளே போய்த்தான் ஒரு நோட்டம் பாத்திரேன்யா]” என்றார் இன்ஸ்பெக்டர். கல்யாணராணனின் விரல்கள் நடுங்கின. வெள்ளி! நீ உள்ளே எங்கிருக்கிறாய்?”
“சரிங்க, நீங்களும் வரீங்களா?”
“சரிதான். பயமா? சரியான கான்ஸ்டபிள்யா நீ!”
“வா பெரியசாமி, பார்த்துறலாம்” என்றான் கல்யாணராமன். மெதுவாக முனகிக் கொண்டே கதவு திறந்தது.இருட்டாக இருந்தது. கல்யாணராமனின் டார்ச் வெளிச்சம் அந்த அறையில் அடைந்திருந்த, இறைந்திருந்த பொருள்கள் ஒவ்வொன்றின் மேலாக விழ, வெள்ளி எங்கேயாவது கண்ணில் படாமல் மறைந்திருக்க வேண்டுமே என்று மிகக் கவலையாக இருந்தது. “இங்கே யாருப்பா வரப்போறாங்க?” என்றான், “வந்தாக்கூட என் ரூம் வழியாத்தானே வர முடியும்?”
“அவரு ஏதோ சொல்லுதாருங்க. தும்பை விட்டுட்டு வாலைப் புடிக்கிறாங்க. இது முனி அடிச்ச கேஸ்தாங்க! எனக்கு வெள்ளித் தெரியும். அது இதெல்லாம் செய்யாது. அவ்வளவு பலமோ தகிரியமோ கிடையாது. சொன்னா கேக்க மாட்டங்காரு!”
ஒரு பீரோவின் ஓரமாக வெள்ளியின் புடவை தெரிந்தது. பட்டென்று விளக்கைத் திருப்பி விட்டான். பெரியசாமி தும்மினான்; பார்க்கவில்லை.
இருவரும் வெளியே வந்தார்கள். உள்ளாற ஒருவரும் இல்லை ஸார் என்றான். சைக்கிள் மணி சப்தம் கேட்க, வெளியே தங்கராசு அவசரமாகத் தெரிந்தான்.
இன்ஸுபெட்டர் ஐயா இருக்காரா?
“என்னய்யா?”
இந்தத் தந்தியை வாங்கிப் பாருங்க. ஒன்னும் புரியல. டவுன்ல படிக்கச் சொன்னாக. சரியா அர்த்தமாவல.
இன்ஸ்பெக்டர் தந்தியை வாங்கிப் பார்த்தார். கல்யாணராமனைப் பார்த்தார்.
“எப்ப வந்தது இது?”
“சாயங்காலம்! இங்க வந்து விசாரிச்சுட்டு டவுன்ல கொணாந்து கொடுத்தாங்க. ஏழு மணியிருக்கும். உடனே எடுத்தாந்துட்டேன்.”
“இதென்னய்யாது புதுக்குழப்பம்?
கல்யாணராமன் தந்தியை வாங்கிப் படித்தான். “தங்கராசு மேம்பட்டி பஞ்சாயத் யுவர் டெலகிராம் பஸ்லிங். தேர்ஈஸ் நோ சினேகலதா இன் அவர் ஃபேமிலி. ஆல் அவர் டாட்டர்ஸ் ஆர் அலைவ்.” – டி.வி.ராஜா. கல்யாணராமன் தங்கராசுவை நிமிர்ந்து பார்த்தான். “என்னய்யா இது? நீதானே சொன்னே?”
“டி.வி. ராஜாங்கறது யாருய்யா?”
“அதாங்க சின்னவரு. பெரிய ஜமீன்தாருடைய இளைய மகனுங்க. அவருடைய பொண்ணுதான்னு சொல்லிக்கிட்டு சினேகலதா… அம்மா… தந்தி இவருதான் கொடுத்தாருங்க.”
“என்ன தந்தி கொடுத்திங்க?”
“உங்க பெண் சினேகலதா அகாலமா இறந்து போய்ட்டா. உடனே புறப்பட்டு வரவும்’னு.
“இப்ப அந்த ஆளு ‘சினேகலதாவா! அது யாரு?’ன்னு திரும்பி தந்தி அடிச்சிருக்காரு. யோவ் தங்கராசு! என்னய்யா இதெல்லாம்?
தங்கராசு முகத்தில் குழப்பத்துடனும் அசட்டுத்தனத்துடனும் கையைப் பிசைந்தான். இன்ஸ்பெக்டரைப் பயத்துடனும் கவலையுடனும் பார்த்தான்.
“எப்படி நீ அந்தப்பொண்ணுதான் சமீன் பேத்தின்னு தீர்மானிச்ச?
“தீர்மானிக்கலிங்க! அதுவாத்தான் வந்து சொல்லிச்சு!”
“எப்ப?”
“முத முதல்ல அது வந்தப்ப. அய்யா வந்து சேர்ந்த மறு நா திடீர்னுதாங்க வந்தது. சட்டை, கால்சராயெல்லாம் போட்டுக் கிட்டு சிங்காரமா வந்து நின்னு தங்கராசுன்னு பேர் சொல்லிக் கூப்பிடுதுங்க. பெரிய சமீன், சின்ன சமீன் எல்லாம் பேரும் சொல்லுதுங்க. அப்பா அனுப்பிச்சாரு, நம்ம சமீன் வீட்டில இருந்துட்டு வான்னு சொன்னாரு’ங்குது. ‘கடுதாசி எழுதியிருந்தாரே வரலியர் ங்குது. இதை யெல்லாம் கேக்கவும், பேரெல்லாம் ஒழுங்காகச் சொல்லி, சின்னவரு பெரியவரு செய்யற உத்தியோகம், மனைவி மக்கள் எல்லாம் சரியாச் சொல்லவுமே நான் நம்பிட்டேன். நம்பறது என்னங்க? சந்தேகமே படலியே! அப்ப இந்தப் பொண்ணு யாரு?”
“சரிதான்! புதுசா இது ஒரு தலைவலியா?’- இன்ஸ்பெக்டர் து தலைவலியா?-இன்ஸ்பெக்டர் கல்யாணராமனைப் பார்த்தார். “இந்தப் பாழாப் போற கிராமத்தில் நான் என்னத்தைக் கண்டுபுடிக்கிறது? பாதிப் பேரு அந்தப் பொண்ணை முனி அடிச்சிருச்சுங்கறாங்க. அந்தப் பொண்ணு வெள்ளியைக்காணம். அவ மேல ஸர்கம்ஸ்டான் ஷியலா எவிடன்ஸ் இருக்கு. தலைமறைவாத்தான் எங்கேயோ பதுங்கி இருக்கான்னு தோணுது. இப்ப என்னடான்னா அந்தப் பொண்ணு சமீன் பேத்தி இல்லைங்கறாங்க! கொன்னது யாரு? கொல்லப்பட்டது யாரு? ரெண்டுமே இப்ப தெரியலே! சபாஷ்; சரியான கேஸு. ஏன்யா அறிவு கெட்டவரே! இப்படி திடுப்புன்னு ஒரு பொண்ணு வந்து நாந்தான் சமீன் பேத்தின்னா உடனே வூட்டைத் திறந்து விட்டுர்றதா? ஆனா உன்னையும் சொல்ல முடியாது… பொண்ணு ஷோக்கா இருந்திருக்கு!… கஜானாவையே திறந்து காட்டிருவியே! உன்னைத் தெரியாதா என்ன? திருநிலத்தில் அதுயாரு? ஜமீலாவா?”
“என்னங்க நீங்க!”
“அப்புறம் கடுதாசி வந்துதா?”
“இல்லிங்க.”
“அப்பவே சந்தேகப்பட்டிருக்க வேணாம்?”
“அதானே?”
“என்ன அதானே? நான் கேட்டது என்ன?”
தங்கராசு திருதிருவென்று விழித்தான். இன்ஸ்பெக்டர் கல்யாணராமனைப் பார்த்து ஆங்கிலத்தில் இவனே உடந்தை யாக இருப்பான் என்று எண்ணுகிறேன்” என்றார்.
கல்யாணராமன், “நான் அப்படி எண்ணவில்லை” என்றான்.
“நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“குழப்பம்! சினேகலதா ஏதோ ஒரு திட்டம் போட்டு ஒரு தீர்மானமா வந்திருக்காங்கறது எனக்கு அப்பவே தெரிஞ்சு போச்சு. ஒரு தடவை அவளைக் கேக்கக்கூட கேட்டுட்டன். சிரிச்சு மழுப்பிட்டா. இன்ஸ்பெக்டர் நீங்க மருதமுத்துவைத் தீர விசாரிக்கணும். மருதமுத்துவோட அடிக்கடி கூடிக்கூடிப் பேசினா அந்தப் பொண்ணு! அதனாலதான் அந்த வெள்ளிப் பொண்ணு தகராறே வந்தது.”
“திட்டமா? என்ன திட்டம்!”
“சொல்ல முடியலியே!” கல்யாணராமனின் மனத்தில் ரத்னாவதியின் டயரியும் அந்த செண்பகப்பூவும் உறுத்தியது. ‘இப்போது சொல்ல வேண்டாம். மருதமுத்துவை அவர் தீர விசாரிக்கட்டும். எல்லாம் இப்போது இரண்டாம் பட்சம். சினேகலதா யார் என்று தெரியாவிட்டாலும் சினேகலதாவைக் கொன்றது வெள்ளி என்பது எனக்கு மட்டும் தெரிந்து. அதை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் திகைக்கிறேன். இருட்டறையில் அந்தப் பெண்ணை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போறேன்? மலைப்பாக இருக்கிறது. எத்தனை நாள் பொய் சொல்ல முடியும்? எத்தனை நாள் அவளைப் பதுக்கிவைத்திருக்க முடியும்?’
“மருதமுத்து எங்கய்யா?” என்றார் இன்ஸ்பெக்டர்.
“வெள்ளியைத் தேடிக்கிட்டிருக்கான். வர்றன்னான். இப்ப அந்தப் பிரேதத்தை என்ன செய்வீங்க?”
“அய்யாதுரை வரட்டும், அவருகிட்ட ரிப்போர்ட்டு திருத்தி எளுதி வாங்கிக் கிடணும். ‘பேவாரிசு, இன்னாருன்னு தெரியாத பொணம்’னு அய்யய்ய… தொந்தரவுய்யா!”
அவர்கள் பேசுவது அவன் உணர்வில் பதியவில்லை.
‘சினேகலதா, யார் நீ? நான் இங்கு வந்த முகம் தினம் இரவிலிருந்து நிகழ்ந்த துண்டு துண்டான சம்பவங்கள் எல்லாம் இப்போது இணைந்து கொண்டன. முதல் தினம் மாடியில் நாற்காலி நகர்த்தும் சப்தம் காலடி ஓசை “நாட்டுப் பாடலாம்! யார்கிட்ட கதை விடறீங்க? உண்மையா எதுக்கு வந்திருக் கிங்க… சொல்லிடுங்க கைப்பிடிச்சுவரிலிருந்து ஒருவன் மரக் கிளைக்குத் தாவி கீழே இறங்க, “எல்லாத்தையும் படிச்சுட் டிங்களா?” “இன்னும் இல்லை. சினேகலதா அந்தப் புத்தகத் தைத் தன் பெட்டிக்குள் வைத்துப் பூட்டுகிறாள்… “மருதமுத்து வும் நானும் ஒரு தனி எடத்துக்குப் போகப் போறோம், இல்லை மருதமுத்து? “ஆமாங்க. போய் பூப்பறிக்கப் போறோம் செண்பகப்பூ” இருவரும் ஏதோ பகிர்ந்த ரகசியத்தில் சிரிக்கிறார்கள்… அப்புறம் மருதமுத்து கொண்டு வந்த தாம்புக் கயிறு…!
“இன்ஸ்பெக்டர், நீங்க மருதமுத்துவைத் தீர விசாரிச்சுட் டிங்கன்னா விஷயம் வெளியில வரும்னு தோண்றது.”
“என்ன விஷயம்?”
“சினேகலதா எதுக்கு வந்தா? அவ யாரு?”
அதைவிட இப்ப அந்த வெள்ளிப் பொண்ணைக் கண்டு பிடிக்கிறது முக்கியம். ரெண்டு நாளா ராத் தூக்கமில்லாம ரோதனைங்க. முந்தா நா மந்திரி வராருன்னு ஒரு மணியாய்டுச்சு.
பெரியசாமி, தங்கராசு, இன்ஸ்பெக்டர் மூவரும் கிளம்பிச் சென்று, அவர்கள் பேச்சு மறைந்து இரண்டு நிமிஷம் ஆன பின், கல்யாணராமன் அறைக் கதவை உட்பக்கம் தாளிட்டுக் கொண்டு பீரோவை நகர்த்தி அந்த அறைக் கதவைத் திறந்து துடிக்கும் இதயத்துடன் உள்ளே சென்று, “வெள்ளி!” என்று கூப்பிட்டான்.
பதில் இல்லை.
“வெள்ளி! பயப்படாதே. அவங்கள்ளாம் போயிட்டாங்க. நீ வெளியில வரலாம்!” அந்த இடத்தில் டார்ச் அடித்தான்.
பதில் இல்லை.
“வெள்ளி!” மெதுவாக அந்தப் பீரோவின் அருகே சென்று அதன் பின்புறத்தில் பயத்துடன் எட்டிப் பார்த்தான். வெள்ளி மார்பைப் பிடித்துக் கொண்டு மூலையில் பசை போல் ஒட்டிக் கொண்டிருந்தாள். கண்களில் அத்தனை பயம். “வெள்ளி! ஒருத்தரும் இல்லை. வா உன்னோட பேசணும்.”
மெதுவாக, தயங்கி வெள்ளி வெளிப்பட்டாள்.
“அய்யா என்னைப் புடிச்சுக் கொடுக்கலியா?”
“இல்லை.”
வெள்ளி அவனை நன்றியுடன் பார்த்தாள். “திரும்ப வந்துட்டாகன்னா?”
“வரமாட்டாங்க! வா என்னோட. அவங்க மறுபடி வந்தா பழையபடி இந்த இடம் இருக்கவே இருக்கு.”
தன்மேல் படிந்திருந்த ஒட்டடையைத் தட்டிக் கொண்டாள். இருவரும் அறைக்கு வெளியே வந்தார்கள். ஒரு தடவை தும்மினாள். வியர்வையில் உடம்பு பூரா நனைந்து மார்புடன் உடை ஒட்டிக் கொண்டிருந்ததனால் தன் அங்கங்கள் தெரிவதை அவள் மதித்ததாகத் தெரியவில்லை. சிறைப்பட்ட பறவையின் மருள் கண்களில் இன்னமும் தெரிந்தது.
“போலீசுக்காரங்க என்ன சொன்னாக?’
எல்லாரும் உன்னைத் தேடிண்டிருக்கா.”
“என்னால அய்யாவுக்கு எவ்வளவு கஷ்டம். என்னை எப்படியாச்சும் எங்கப்பாருகிட்ட ரகசியமாகக் கொண்டு விட்டிருங்கய்யா!”
“சரிதான்! முதல்ல போலீஸ்காரங்க அங்கதான் காத்துண்டிருப்பாங்க!”
“நான் என்ன செய்யறது? எங்கப்பாரு அல்லாடுவாருங்க. அவரைவிட்டு ஒரு நாப் பிரிஞ்சதில்ல. அந்தாளு பூசாரி சொன்ன வார்த்தையைப் பார்த்திங்களா? வெசம் வெக்கணு மின்னு அவங்கிட்ட கேட்டனாம். பச்சைப் பொய்யுங்க! அந்தாளுதான் ‘கோளி கொண்டா காவு வாங்கிரு, எல்லாஞ் சரியாயிரும்’னாரு. இருபத்தஞ்சு ரூபா சில்லறை கொடுத்தனுங்க.
“எதுக்கு?”
“சூனியம் வெக்க பொம்மை செஞ்சு தந்தாரு. அதில ஊசியக் குத்தி விவூதியோட அவ வீட்டு வாசலில் வெச்சாக்கா பொடவையெல்லாம் பத்திக்கும்னாரு. அதையும் செஞ்சன்! ஒண்ணும் நடக்கலிங்க. அப்புறம்தான் அன்னிக்கி ராத்திரி இப்படி வெவரீதமாய்டுச்சு. எம்மேல அம்மன் வந்துருச்சு.”
“இத பார் வெள்ளி! இந்த அம்மன் பிஸினஸை முதல்ல விட்டுத் தொலை. ‘எம்மேல சாமி வந்துதான் இப்படிச் செஞ்சேன்’னு சொன்னா எந்தக் கோர்ட்டிலயும் ஒப்புக்கொள்ள மாட்டாங்க!”
“அதானுங்களே உண்மை” என்றாள் பயபக்தியுடனும் அச்சத்துடனும்.
“அய்யோ! உன்னை வெச்சுண்டு என்ன செய்யப் போறேன்?
“அய்யாவுக்குக் கஷ்டமா இருந்தா நான் போயிர்றங்க” -உடனே கண்களில் கண்ணீர்.
“இரு இரு! உனக்கு அடைக்கலம் கொடுக்கறதினால எனக்கு எவ்வளவு ஆபத்து தெரியுமா? நானும் ஒருவிதத்தில் உடந்தை ஆயிடறேன்.”
“அதனாலதாங்க உங்களுக்குத் தொந்தரவு வேணாங்க. நான் போறேன்.”
“எங்க போவே?”
“அதாங்க அவருகிட்ட!”
“மருதமுத்துவா? அவன் உன்னைத் தேடிண்டிருக்கான்!” அவள் முகம் மலர்ந்தது. “அப்படிங்களா?”
“போலீஸ்கிட்ட புடிச்சுக் குடுக்க!”
“சே, இருக்காதுங்க! அவரு துரோகஞ் செய்ய மாட்டாரு!”
“இன்னம் நீ அவனையே நினைச்சுண்டு அழறியா?”
“அவருக்காகத்தான் நான் இந்தக் காரியம் செஞ்சனுங்க! அந்த ராட்சசி அவரை அப்படியே அணைச்சு விஷத்தைக் கொடுத்துக்கிட்டிருந்தா. அவகிட்டேருந்து அவரைக் காப்பாத்தத் தானே அம்மன் எம்மேல வந்து கல்லெடுத்துப் போட்டு…!”
“மறுபடியும் அம்மன்! யூ ஸ்டுப்பிட் கர்ள்!”
“திட்டாதிங்கய்யா” என்று அவன் காலில் விழுந்தாள்.
‘கால்லே விழாதே! மேலே விழு’ என்று மனத்திற்குள் சொன்னான் கல்யாணராமன். அவன் மனத்தின் பிளவுகளில் பற்பல சாத்தியங்களை யோசித்தான். வெள்ளியை உபயோகித்து விட்டு காலையில் காட்டிக் கொடுத்தது ஒரு கறுப்பு ஓரம். அவளை இரவோடு இரவாகப் பட்டணத்திற்கு அழைத்துச் சென்று பெயரை மாற்றி, பின்னலை வெட்டி, உருவத்தை மாற்றி, ஆங்கிலம் கற்றுக் கொடுத்து… ம்ஹும்!
“வெள்ளி, முதல் தடவை பார்த்தபோதே உன்னை எனக்குப் பிடிச்சு போச்சு. அதனாலதான் உனக்கு உதவி பண்றேன். என்ன?”
“அய்யா, நீங்க தெய்வங்க!”
“சட்! எனக்கு தெய்வ ஸ்தானம் வேண்டாம் வெள்ளி!” எப்படிக் கேட்பது?
“வெள்ளி நான் உனக்கு உதவி செஞ்சா நீ…”
“உயிருள்ள வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் உடம்பை செருப்பாத் தெச்சி உங்களுக்கு உழைப்பங்க!”
“யார் ரெண்டு பேரும்? நீயும் மருதமுத்துவும்?”
“ஆமாங்க.”
“பைத்தியம்.. பைத்தியம்! அவன் உன்னைப் புடிச்சுக் கொடுக்க அலையறான். நீ…”
“அவரு என்னை ஒரு நாளும் காட்டிக் கொடுக்க மாட்டாருங்க. அவ மயக்கம் தெளிஞ்சதும் பாருங்க! ‘வெள்ளி! வெள்ளி கண்ணே! உனக்குத் துரோகம் செஞ்சன் புள்ள. என்னைய மன்னிச்சுரு’ன்னு…”
“பின்ன ஏன் என்கிட்ட வந்தே? அவன் கிட்டேயே போறதுதானே?”
“அதான் தெரியலிங்களே!”
“கருமம்!” என்று தலையில் அடித்துக் கொண்டான்.
“அந்தாளுக்குப் புத்தி கிடையாதுங்க! பரக்கப் பரக்க அவ பின்னாடி அலஞ்சாரே தவிர, உள்ளூர என் மேலே தான் ஆசை. ஆனா போனா எனக்கு இந்த மாதிரி செஞ்சு போடுன்னு வளி சொல்லச் சாமர்த்தியம் கிடையாதுங்க! அதான் உங்ககிட்ட வந்தன்!”
கல்யாணராமனுக்கு அசாத்திய கோபம் வந்தது. தன்னுடைய பலவீனத்தின் மேல் தயக்கத்தின் மேல் கோழைத்தனத்தின் மேல். வெள்ளிகூட தன்னை உபயோகிக்கிறாள்.
“சாப்பிட்டியா ஏதாவது?” என்றான் எரிச்சலுடன்.
“இல்லிங்க!”
ஓரத்தில் இருந்த ரொட்டியில் பாதியைப் பிய்த்துக் கொடுத்தான். கொஞ்சம் சர்க்கரை கொடுத்தான் “சாப்பிடு” என்றான். அதை வேண்டா வெறுப்பாகக் கடித்தாள். நேர்பார்வை பார்த்தாள். ஜன்னலுக்கு வெளியே சினேகலதாவின் அறை தெரிய, அதைப் பார்த்து விசும்பி அழ ஆரம்பித்தாள்.
“என்ன இப்ப?”
“ஒரு சின்ன எறும்பைக்கூட கொல்ல மாட்டங்க. எனக்கு எங்கிருந்து வந்தது இந்த வைராக்கியம்? எல்லாம் இந்தப் பாவி மனுசனுக்காக. இன்னமும் நீ அவளைத்தான் நினைச்சுக் கிட்டிருக்கியா? என் மதிப்புத் தெரியாதா உனக்கு…?”
“எக்காவ், நீ இங்க இருக்கியா?”
“யாரு?” – திடுக்கிட்டுத் திரும்பினான் கல்யாணராமன். ஜன்னலிலிருந்து வெள்ளியின் தம்பி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ராசவேலு! நீ எங்கடா இங்கே வந்தே?”
“யக்கோவ்! ஊரெல்லாம் உன்னையத் தேடுதாக! மருதமுத்து அண்ணன் உன்னைப் பார்த்தா உடனே தகவல் சொல்லச் சொன்னாரு. சொல்லிட்டு ஓடியாந்துர்றேன்.”
“ஏய் ஏய் இரு ! இரு! போகாதே!”
அதற்குள் அந்தச் சிறுவன் ‘டுர்ர்ர் என்று வாயால் டிராக்டர் ஒட்டிக் கொண்டு கிராமத்தை நோக்கி ஓடிப் போய்விட்டான்.
– தொடரும்…
– கரையெல்லாம் செண்பகப்பூ, எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது.