கரையெல்லாம் செண்பகப்பூ
கதையாசிரியர்: சுஜாதா
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
த்ரில்லர்
கதைப்பதிவு: November 2, 2025
பார்வையிட்டோர்: 306
(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16
அத்தியாயம் – 13

“முன்னோர்கள் உரைப்படியே முடித்துவிட்டேன் இக்கதையை…” இரவு ஒரு மணிக்கு வில்லுப்பாட்டு முடிந்தது. சேவித்து விட்டு, கக்கலிருமலுக்கு வைத்தியம் சொல்லி விட்டு வாத்தியங்களை உறையிலிட்டனர், விற்கலைஞர்கள். எதிரே மொட்டு மொட்டாகப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தவர்கள் கொட்டாவியைச் சாப்பிட்டு விட்டு எழுந்திருக்க, கல்யாணராமன் ஸ்வெட்டர் அணிந்து கொண்டு காஸெட்டை எடுத்துக் கொண்டான்.
“வில்லடிச்சான் கோயிலில விளக்கேத்த நேரமில்லைம் பாங்க. விடியக்காலம் வரை கூடச் சொல்லுவாக. நான் எல்லாம் கேட்டிருக்கேன்; சுடலைமாடன், மருதநாயகம் பள்ளி, சின்னத்தம்பி கதைகள் எல்லாம்”, அந்த ஆள் கல்யாணராமன் கூடவே நடந்தான். “எனக்கும் பாட்டு வருமுங்க”
“சரி”
“நா வந்து சொல்லிப் போடட்டா?”
“நாளைக்கு வாங்க.”
“அய்யா, ஒரு ரூபா ரெண்டு ரூபா…”
“சில்லறையா இல்லை. நாளைக்கு வாங்க. தரேன்.”
“எவ்வளவுக்கு சில்ற வேணும்?”
“பாடினப்புறம் தரனே!”
“அதுகூட சரிதான் அய்யா. வரட்டுங்களா?” மெதுவாக இருட்டில் நடந்தான். அந்த விளக்குகள் நில நட்சத்திரங்களாகத் தெரிந்தன. எங்கே போனார்கள் மூன்று பேரும்? எதற்காக?
மருதமுத்துவும் சினேகலதாவும் ஜமீன் வீட்டுக்குத் தனியாகச் சென்று.
சென்று?
அறையில் சினேகமாக இருக்க, பின்னால் வந்த வெள்ளி இருவரையும் பார்த்துவிட… என்ன நடந்திருக்கும்?
சரக் சரக் என்று அவன் காலடி ஓசை உலர்ந்த இலைகள் மேல் கேட்க, சற்று தயக்கத்துடன் நடந்தான். சந்திக்கப் போகும் சம்பவங்களில் ஏதோ ஓர் எச்சரிக்கை இருப்பதை மயிர்க் கால்களில் உணர்ந்தான். ஏதோ ஒரு விரசம் அல்லது விபரீதம்.வானத்தில் விரவியிருந்த கருநீல நடு நிலா ஒளியில் ஜமீன் வீடு வெள்ளி விளிம்பு இருட்டுக்கனவு மாளிகையாகத் தொந்தது. ஒற்றைக் கண்போல் சினேகலதாவின் அறை விளக்கு எது கொண்டிருந்தது. பூச்சிகள் டிர்ர்ர்ரித்தன. வினோதமான வீடு. ரத்னாவதி இறந்து போய் அவள் வழிவந்த சினேகலதா. அவளுக்கும் ரத்னாவதிக்கும் எத்தனை வித்தியாசம்! ரத்னாவதியின் கதையை முழுக்கப் படிக்க வேண்டும். ‘நான்தானே கண்டெடுத்தேன். எனக்கும் படிக்க கொடு’ என்று தீர்மானமாக சினேகலதாவைக் கேட்டுவிட வேண்டும். இன்னும் விழித்திருக்கிறாளா என்ன? பார்க்கலாம்.
‘சரக் சரக் சரக் சரக்.’
திடுதிப்பென்று மரம் சிலிர்த்துக் கொண்டது போல சப்தம் கேட்டது. இடப்பக்கத்தில் யாரோ ஓடிப் போகிற சப்தம் தூரத்தில் மறைந்தது. மூலைக்கு அப்பால் துரத்த சம்மதமில்லை. மருதமுத்துவா?.
“யாரு சினேகலதா?” என்று கூப்பிட்டான்.
“யாரு சினேகலதா?” என்று எதிரொலித்தது.
அவள் அறைக்கு வந்தான். வாசலில் சாம்பல் சிதறியிருந்தது. ஜன்னலுக்கு அருகில் அது என்ன?
துணியாலும், சணலாலும் செய்யப்பட்ட ஒரு சிறிய பொம்மை. கத்தரித்த கலர்த் துணியில் புடவை கட்டப் பட்டு அதன் நெஞ்சுக்குள் கோணூசி பதிந்திருந்த பொம்மை. என்ன இது! அறைக்குள் எட்டிப் பார்த்தான். ரத்னாவதியின் போட்டோவின் பயப்பார்வை. வேறு ஒருவரும் இல்லை. அறைக்கதவைத் திறந்தான். திறந்தவுடன் கீழே ரத்தக் கறையைப் பார்த்துத் திடுக்கிட்டான். கையகலத்துக்குப் புதிய ரத்தம். இன்னும் உறையவில்லை. ‘சினேகலதா!’
மறுபடி உரக்க “சினேகலதா!” என்று கத்தினான். இருட்டில் எங்கோ எதிரொலித்தது. மறுபடி மரம் சிலிர்த்துக் கொள்ளும் சப்தம்.
அறையை விட்டு வெளியே வந்தான். சற்று நேரம் யோசித்தான்… சுற்றிலும் பார்த்தான். இதோ படிகளில் மறுபடி கொஞ்சம் ரத்தம். கல்யாணராமனுக்கு உடல்நடுங்கியது. தன் அறைக்குச் சென்றான். டார்ச் விளக்கை எடுத்து கொண்டான். வெளியே வந்தான். கீழே அந்த ரத்தத் திட்டுகள் தெரிந்த பாதையில் விளக்கடித்துக் கொண்டு சென்றான். அவன் இருதயம் பயம் பயம் என்று பம்ப் அடித்துக் கொண்டிருந்தது. அந்தச் சிவப்புத் திட்டுப்பாதை தோட்டத்துக்குக் கொண்டு சென்றது. புளியமரத்தைக் கடந்து – கரடுமுரடான வளர்த்தியைக் கடந்து அந்தக் கிணற்றருகே சென்றது.
கல்யாணராமனின் டார்ச் வட்டம் மெதுவாக அந்தப் பகுதியில் உலவியது. கள்ளிச் செடிகள்; கிணற்றின் காரை பெயர்த்த சுவர்; கை கற்குவியல்… கை!
டார்ச் வட்டம் மறுபடி அந்தச் கை மேல் திரும்பியது. மெதுவாக அங்கிருந்து அடையாளம் பிடித்துக் கொண்டு முழங்கை, மார்பு, முகம் என்று வருடியது. சினேகலதாவின் முகம்!
“ஓ மை காட்”
கண்கள் வானம் பார்த்திருக்க, வாய் திறந்திருக்க, உதட்டோரத்தில் கொஞ்சம் ரத்தம் தெரிய, அசம்பாவிதமாக உட்கார்ந்த படுத்த நிலைகளுக்கு மத்தியில் ஒரு கால் நீட்டி, ஒரு கால் மடக்கி…
சினேகலதாவின் உடல்!
கை நடுக்கத்தில் டார்ச் வெளிச்சம் நடுங்கியது.
என்ன செய்வது? கிட்டச் சென்றான். தொட்டுப் பார்த்தான்.
“சினேகலதா, சினேகலதா! இங்க பாருங்க சினேகலதா!” கன்னத்தைத் தட்டினான். தட்டத் தட்ட தலை ஆடியது.
ஒரே ஒரு ரத்த நூல் வாயிலிருந்து ஒழுகியது.
“அய்யோ!” என்று அலறினான். எழுந்து ஓடினான். கிராமத்தை நோக்கி இரைக்க இரைக்க ஓடினான். ‘வள்வள்’ என்று நாய் ஒன்று தொடர்ந்து துரத்தியது. அதன் மேல் கல்லெறிந்தான். செருப்பு பிய்ந்தது. வெறுங்காலால் ஓடினான். வியர்வை உடல் பூராக் கொப்பளிக்க சுவாசப் பைகள் ஓவர் டைப் செய்ய கிராமத்து அத்தனை காற்றையும் வாங்கி சுவாசித்து, இரைத்து, வியர்த்து, பயந்து, ஓடி வீதி மத்தியில் நின்று கத்தினான்.
“மருதமுத்து! தங்கராசு! யாராவது வாங்க!” அப்படியே திராணியற்று நடுத்தெருவில் உட்கார்ந்தான்.
சில்லறை நாய்கள் முதல் நாயின் கோபத்தை வாங்கிக் கொண்டு குரைக்க, மூலைக்கு மூலை வள் வள்…
“பெரியசாமி! மருதமுத்து… தங்கராசு…” ஒரு கல்லெடுத்து ஒரு கதவின் மேல் எறிந்தான்.
குழந்தை ஒன்று அழுதது.
“யாரு?”
“யாரு?”
“யாரு?”
“ராத்தேசாலத்திலே… எலே பெரியசாமி?”
“ஓடியாங்க ஓடியாங்க!”
“யாரது பட்டணத்துக்காரரா! என்ன இங்கே குந்தியிருக்கீங்க!”
“தோட்டத்தில ஜமீன் வீட்டிலே… தோட்டத்திலே”
பின்னிரவில் அந்தக்கோஷ்டி சினேகலதாவை அடைந்தது. கம்பு கழிகள், அரிக்கேன் விளக்குகள், தீப்பந்தங்கள்…
கல்யாணராமனுக்கு மறுபடி அந்தச் சந்திப்பு மனத்தில் கனத்தது.
“சீக்கிரம் வா அய்யரே!”
சினேகலதா சினேகலதா… அவள் அழகிய முகம்… அவள் சிறுபிள்ளைப் பேச்சு… நடை… எல்லாம் மனசில் மாறி மாறி அந்த ரத்தக் கோடிட்ட முக பிம்பத்துடன் இழைந்தன.
“சினேகம்மா” என்று மருதமுத்துவின் உருக்கமான குரல் கேட்டது. வாய்விட்டு அழுது நடுங்கினான்.
“அய்யோ தெய்வமே! என்ன இது! சமீன் பேத்தி!”
“தங்கராசு! யாரோ கொன்னு போட்டிருக்காங்கய்யா! கொன்னே போட்டிருக்காங்க. பின் மண்டையில் நல்ல அடி… அய்யாத்துரைக்குச் சொல்லி அனுப்பியிருங்க. பெரியசாமி வந்திருக்கானா?”
“இங்கிருக்கேனுங்க!”
“ஏன் பின்னால ஒளிஞ்சிருக்க? வா, வந்து பாரு! டேய் தூங்குங்கடா!”
“வெள்ளிக்கிளமையும் அதுவுமா சாலாச்சி காவுவாங் கிட்டாளே! என்ன கோவமோ!”
“வில்லுப்பாட்டிலே உக்காந்துக்கினு கேட்டுக்கிட்டு தான் இருந்தாங்க! நான் பார்த்தேண்டா!’
“மருதமுத்து கூடப் போனாப்பல!”
“அளைச்சுட்டுப் போனண்டா! நீ போய்ட்டு வா மருதமுத்துன்னாங்களே! ‘போய்ட்டு வா’ன்னாங்களே!”
“அண்ணே! ஒரு கவுத்துக் கட்டில் கொண்டாந்துரலாமா?”
“இல்லை, இப்படியே புடிங்க! புடிங்கடான்னா! பயந்துக் கிட்டு!”
“பெரியசாமி போய்ப் புடி!”
“விடுங்கய்யா!”
மருதமுத்து ஒரே லாவில் அவளை எடுத்து ஏந்தலாகத் தூக்கி “நடங்கய்யா! தூக்கறதுக்கு ராவுகாலம் பார்த்துக்கிட்டு… சட்!” என்றான்.
“மொள்ள மொள்ள! பாத்து நட. பாதையில கல்லிருக்கும்.”
மருதமுத்துவின் தோள் மேல் தலை தொங்க, அவள் கண்கள் நேர்பார்வை பார்க்க.
“ரூம்புக்கே கொண்டு போயிறலாம்.”
“இறந்துட்டாங்களா?”
“இல்லை, ஒறக்கம்! ஆளைப்பாரு! கேக்குதான் பாரு கேள்வி!”
“நான் அப்பவே சொன்னேன், பழயனூர் நீலி கதையில் தொடங்காதிங்கடான்னு. பரிகாரம் தேடனும் இப்ப!”
பத்துப்பன்னிரண்டு கால்கள் சரக்சரக் என்று மிதித்து நடக்க, சின்னச் சின்ன விளக்குகள் நடனமிட, சினேகலதாவின் கை அசைகையில் அவள் அணிந்திருந்த விழாவில் வாங்கின கண்ணாடி வளையல்கள் உயிருடன் புலம்ப…
மெதுவாக ஜமீன் வீட்டை நெருங்கினார்கள். சினேகலதாவின் அறைக் கதவைத் திறந்தார்கள்.
“என்னது விவூதி?
சினேகலதாவைத் தரையில் கிடத்தினார்கள்.
ரத்னாவதி இன்னும் பயப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வையில் புதுசாக ஏதாவது இருந்ததா என்ன?
சே! பிரமை.
‘சினேகலதா, உன்னை யார் எதற்காகக் கொன்றார்கள்? சில மணி நேரங்களுக்கு முன் முழுசாக இருந்தாயே? அவளை முதலில் அந்தத் திருப்பத்தில் பார்த்தது அப்புறம் மாடியில், அப்புறம் தனியாக, அப்புறம், அப்புறம்…
‘எப்படி இவ்வளவு தெரிஞ்சு வெச்சிக்கிட்டிருக்கிங்க! கித்தார் வாசிக்கிறிங்க, நாட்டுப் பாடல் ரிஸர்ச்… இந்த மாதிரியே நீங்க என்னை இம்ப்ரெஸ் பண்ணிக்கிட்டே இருந்தா ஒரு நாள் உங்களைக் காதலிக்க ஆரம்பிச்சுருவேன்.
“ராத்திரிப் படுக்க வர வேண்டாம்னு சொல்லிட்டாங்களே! தவற விட்டுட்டங்க! சினேகம்மா! சினேகம்மா!” என்று தன் துண்டைக் கடித்துக் கொண்டு வாய் விட்டு அழுதான் மருதமுத்து.
உடலைப் போர்த்தினார்கள்.
“பெரியசாமி, காலைல இன்ஸுபெட்டர் அய்யாவுக்கு முதக்காரியமா தகவல் சொல்லியனுப்பிரு!”
“சரிங்க”
“என்ன தங்கராசு?”
“என்ன செய்யறதுங்க…? வயத்தைப் புரட்டுது. இவுங்க அம்மா அப்பாருக்கு என்ன பதில் சொல்லப் போறேன்?”
“சரியான அடி பின் மண்டையில். ரத்தம் நிறைய சேதமாய்டுச்சு.”
கல்யாணராமன் வெளியே வந்து நின்றான்.
“டேக் இட் ஈஸி யா!” அவள் இளம் குரல் உற்சாகமான குரல் – தோட்டமெங்கும் எதிரொலித்தது.
“எதற்கு வந்தாய் பெண்ணே?
எதற்குக் கொலையுண்டாய்?
என்ன இதெல்லாம்?
யார்? யார்?”
‘கல்யாணராமன்! நீங்க என்னை ஏமாத்திட்டீங்க. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிட்டு ‘சடால்’னு அப்படியே என்னைப் பிடிச்சு ஒரே கட்டாக் கட்டி உதட்டில ஒரு!..’ முத்தம் கொடுத்திருக்கலாமே! பாவிப் பெண்ணே செத்துப்போய் விட்டாயே!
அதிகாலை கிழக்கே வெளுத்ததுமே அந்த இடத்தில் கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. அய்யாத்துரை நாற்காலி போட்டுக் கொண்டு தாழ்வாரத்தில் உட்கார்ந்திருக்க, சினேகலதாவின் அறைக்கதவு மூடியிருந்தது.
ஜன்னலில் அந்தத் துணி பொம்மை அப்படியே இருந்தது. இந்தப் பக்கத்து ஜன்னல் வழியாக ஒவ்வொருத்தராக எட்டிப் பார்த்தார்கள்.
பெரியாத்தா அலறிக்கொண்டு ஓடிவந்து மாரடித்து,
“ஆதி கைலாசத்தில
ஆதிமூலமும் தன்னிடத்தில
பரமசிவனை நோக்கி
மக்களும் இல்லையின்னு
மனம்வாடித் தவசிருந்தார்” என்று துவங்க..
“ஏய் கிளவி சும்மாக்கிட” என்றார்.
“தங்கராசு! கொஞ்சம் கடல பயிறு மாவு ஏதாவது கொணாந்து, வெச்சுட்டு…”
“அடி தங்கக் கிளியே! தவசிருந்து பெத்தவளே…!”
“ஏய் சும்மாருன்னா?”
“பெரியசாமி எங்கே காணம்?”
“இன்ஸுபெட்டரைக் கூட்டியாரப் போயிருக்கான்.”
“வண்டி வருமில்ல?”
பெரிய தனக்காரர் அய்யாத்துரை கல்யாணராமனிடம் வந்தார். “அய்யா! நமூனா எழுதணும். கொஞ்சம் தனியா வரிங்களா?” இருவரும் தனியே சென்றார்கள்.
“பிரேதத்தை டவுனுக்கு அனுப்பணும். நீங்க யாரையாவது பார்த்தீங்களா?”
“ஒரு ஆளு ஓடற மாதிரி சத்தம் கேட்டுது.”
“எப்பங்க?’
“ராத்திரி மணி ஒண்ணரையிருக்கும்.”
“இருங்க. ராத்தேசாலம் ஒண்ணரை… இத பாருங்க, இந்த நமூனாவை நீங்களே கொஞ்சம் தெளிவா எழுதிக் கொடுத் திருங்களேன்!”
அழுக்கான பழுப்புக் காகிதத்தில் அச்சிட்டு இருந்தது அந்த நமூனா.
ஜில்லா… தாலுகா கிராமத்தில் கிராம மாஜிஸ்ட்ரேட்டினிடத்திலிருந்து (இன்ன இடத்திலுள்ள) போலீஸ் ஸ்டேஷன் விசாரணை. வசிக்கும் உத்தியோகஸ்தருக்கு அனுப்பப்பட்ட ரிப்போர்ட்.
ரிப்போர்ட் செய்வது என்னவென்றால்…
எந்தத் தேதியில் எந்த இடத்தில் எந்த மணி நேரத்தில் ஒவ்வொன்றாக நிரப்பினான்.
பெயர்: சினேகலதா
ஆண் – பெண்
ஆண் என்பதை அடித்தான்.
வயது: சுமார் பத்தொன்பது வருஷங்கள். கண்களின் நிறம்: கறுப்பு. மயிரின் நிறம்: கறுப்பு. உயரம்: 64 அங்குலம். மதக்குறிகள்: இல்லை. அடையாளம் கண்டுபிடிப்பதற்கான வேறு குறிகள்…
கல்யாணராமன் யோசித்து ‘மிக இனிய பெண்’ என்று எழுதுவதைத் தவிர்த்து, ‘தாடையில் ஒரு சிறிய மச்சம்’ என்று எழுதினான். ஞாபகம் இருந்தது.
- இடம்: மேம்பட்டியில் 1978ம் வருடம் நவம்பர் மாதம் 18ந் தேதி மாலை ஒரு மணிக்குக் கண்டுபிடிக்கப் பட்டது. வெட்டியான் அல்லது தலையாரியாகிய (இன்னார்) வசம் அனுப்பட்டது.
- அடியிற்கண்ட காயங்களும் ரணங்களும் பிரேதத்ன் மேல் காணப்படுகின்றன. பின் மண்டையில் பலத்த அடிபட்டு உடைந்து ரத்தக் காயம். உதட்டில் காயம்.
- இரண்டாவது பாரத்தில் சொல்லியிருக்கும் காயங்கள் ஆயுதம் அல்லது கருவியினால் உண்டாக்கப் பட்டிருந்தால் இன்ன ஆயுதம் அல்லது கருவியினால் இன்ன விதமாக உண்டாக்கப்பட்டிருக்கக் கூடும் என்பது.
சொல்ல முடியவில்லை என்று எழுதினான்.
- பிரேதத்துடன் அனுப்பப்படும் வஸ்துக்கள், உடை: சட்டை, பாண்ட், ஆபரணங்கள்- கண்ணாடி வளையல்கள்.
வாந்தியான வஸ்து-இல்லை.
ஆயுதங்கள்- இல்லை. மலம் – இல்லை…
உயிர்ப்பும் துடிப்பும் சிரிப்பும் உள்ள பெண்ணை ஒரு பழுப்புக் காகிதத்திற்குள் அடக்கியாகி விட்டது.
“மருதமுத்து டாக்டர் எடுத்தாரப் போயிருக்கான். தொறந்த வண்டில வெச்சு இளுத்துக்கிட்டுப் போயிரலாமில்லே?”
அந்தத் துணி பொம்மை? யார் வைத்தார்கள்? எதற்காக?
தங்கராசு அவன் அருகில் வந்தான்.- “என்ன செய்யறது? என்ன செய்யறது? ஒரே மலப்பா இருக்குதுங்க.”
“தங்கராசு, இந்தப் பொண்ணோட அப்பா அம்மா எங்க இருக்காங்க?”
“வடக்கேங்க, விலாசம் இருக்குது.”
“உடனே திருநிலத்துக்குப் போய் ஒரு தந்தி கொடுத்துட்டு வந்திருங்க – நான் எழுதித் தரேன்!”
“சரிங்க. அஞ்சாறு நாளாவே யாராரோ உலாத்திக்கிட்டிருக்காங்க. எவனோ ராவில வந்து… என்னய்யா?”
‘என்னய்யா?’ என்று கேட்டதும் அவசர அவசரமாக ஓடிவந்த வெள்ளியின் தகப்பனைப் பார்த்து, கவலை நிறைந்த முகத்துடன் இரைத்துக் கொண்டே சொன்னார்.
“தங்கராசு! வெள்ளியக் காணம்!”
அத்தியாயம் – 14
“காணமா! என்னய்யா, சொல்றிங்க?”
“காலைல குளிக்கத்தான் கிளம்பிச்சு. அப்புறம் காங்கல. ஊரு முச்சூடும் தேடிப் பார்த்துட்டன். அய்யா, இங்க வெள்ளி வந்துதுங்களா?”
‘இல்லையே’ என்றான் கல்யாணராமன். அவன் மனத்தில் வேகமாக – அதிவேகமாக எண்ணங்கள் சுழன்றன. நேற்றிரவு சினேகலதா – மருதமுத்து – வெள்ளி என்று ஒவ்வொருவராகப் புறப்பட்டுச் சென்றது ஞாபகம் வந்தது. அப்புறம் என்னவோ நிகழ்ந்திருக்கிறது.
“ராத்திரி படுத்துக்க வந்தா இல்லே?”
“காலைல விடியல்ல பார்த்திருக்கேன்” என்றான் வெள்ளியின் தகப்பன். தொடர்ந்தான்: “பைப்பாண்ட போறன்னு போயிருக்குது. குடம் மட்டும் பைப்பாண்ட கெடக்குது, ஆளைக் காணமே! எங்கே போயிருக்கும்? எனக்கு என்ன பயமுன்னா…”
“ஊருக்குள்றயே சரியா பார்த்திகளா?” என்றார் அய்யாத்துரை. “போதும் போதாதுக்கு உங்க மவளையும் காங்கலியா? சரிதான்!”
“பார்த்துட்டனுங்க!”
“மருதமுத்து பய கூட போயிருக்குமோ?”
“இந்த சென்மத்தில நடக்காதுங்க!”
“டாக்டர் எடுத்தாரப் போயிருக்கான். அவனைக் கேட்டால் தெரியுமில்ல?”
“ஆமாங்க.”
“ரூம்புக்குள்ளதான் இருக்கு… போய்ப் பாரு!”
“பார்த்துட்டு இந்தப் பெண்ணைத் தேடிக்கிட்டுப் போறேன். பயந்து போயி எதனாச்சும் ஒதுங்கி குந்திருச்சோ என்னவோ! ரொம்ப பயந்த சொபாவங்க!”
வெள்ளியின் அப்பன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து விட்டு, “ங்…ங்…ச்…” என்று சொல்லிவிட்டுத் தன் மகளைப் பற்றிக் கவலையுடன் ஓடினான். கல்யாணராமன் அய்யாத்துரையிடம் சென்றான். அந்தத் துணி பொம்மையை ஆராய்ந்து, கொண்டிருந்தவரிடம், “ராத்திரியே அந்தப் பொம்மையைப் பார்த்தேங்க. என்னது அது?” என்றான்.
“ஏவல் மாதிரி தெரியுதுங்க. வாசப்புறம் விபூதிகூட கொட்டிக் கிடக்குது. ஏவலாகத்தான் இருக்கும்.”
“ஏவல்னா?”
“புடிக்காத மனுசங்க பேரில ஏவி விடறதுங்க!”
பெரியாத்தா, “அம்மன் அடிச்சிருச்சி. ரத்தம் முச்சூடும் உறிஞ்சி, பொணம் வெள்ள வெளேர்னு ஆத்து மணல் மாதிரி இருக்குது பாருங்க! அடியம்மா! சந்தன நெல் மரமே… சாதிரிப் பிலா மரமே…?”
“ஏய் கிளம்பு. அந்தால ஓரத்தில் போய் குந்திக்கிட்டு அளு.”
பெரியாத்தா கொய்யா மரத்தை நோட்டம் விட்டுக் கொண்டு வெற்றிலை மென்று கொண்டு துயரமில்லாமல் அங்கே சென்றாள்.
டிராக்டர் டிரெய்லரை இழுத்துக் கொண்டு வந்து நிற்க அதை அணைத்துவிட்டு மருதமுத்து குதித்து இறங்கினான். அருகில் வர அவன் கண்கள் கலங்கியிருப்பதைக் கவனித்தான் கல்யாணராமன்.
“அய்யாதுரை எடுத்துவர வேண்டியதுதான்?”
“இன்ஸ்பெட்டர் அய்யா வந்துரட்டும். ஆள் போயிருக்கு. எனக்கு அதிகாரம் கிடையாது?”
“அட எத்தினி நாளி! அந்தாலு வரலைன்னா?”
“வரலைன்னாத்தான் நான் பார்க்கணும். வந்துருவாரு.”
“பெரியசாமி சைக்கோள் எடுத்துட்டுப் போயிருக்காப்பல!”
“ராத்திரி என்ன நடந்தது மருதமுத்து?” என்று கேட்டான் கல்யாணரான்.
“ராத்திரிங்களா? வில்லுப்பாட்டு நடந்துகிட்டிருக்கையில பாதில சினேகம்மா எழுந்திரிச்சு வீட்டுக்குப் போவணுமின்னு எங்கிட்ட வந்து சொன்னாங்க. நான் துணைக்குப்போய் சமீன் வீட்டு வரைக்கும் கொண்டுவிட்டு திரும்பி வந்துட்ட னுங்க…”
“திரும்பி வந்துட்டியா?”
“நீ போய் வா மருதமுத்துன்னுட்டாங்க” மருதமுத்து கீழ்ப்பார்வை பார்த்தான், பொய் சொல்கிறான்.
“வெள்ளியைக் காணமாம், தெரியுமில்லே?”
“என்னாது!” திடுக்கிட்டான்.
“அவ அப்பா வந்து தேடிட்டுப் போனார். காலையில் இருந்து காணமாம். நீ பார்த்தியா?”
“நான் பார்க்கலிங்களே. காங்கிலியா…?”
பெரியதனக்காரர் அருகில் வந்து, “எல்லாம் ஒரு மாதிரி சமுசயமாத்தான் இருக்குது மருது! கிராமத்தில வெள்ளியக் காணல. இங்க என்னடான்னா சினேகம்மா ரூம்பு வாசலிலே ஏவல், இதைப் பார்த்தியா?”
மருதமுத்து அந்தத் துணி பொம்மையின் மார்பில குத்தியிருந்த ஊசியைச் சற்று நேரம் பார்த்தான்.
“பூசாரிப் பய கொடுத்ததாத்தான் இருக்கணும். செவுட்டில் நாலு அறைஞ்சா தானா வருது விசயம்.”
“அதெல்லாம் இன்ஸுபெட்டர் அய்யா பாத்துப் பாரு”.
மருதமுத்து யோசனையுடன் பேசினான்:
“அய்யாதுரை! எனக்கு ஒரு சந்தேகமில்ல வந்துக்கிட்டு இருக்குது.”
“எனக்கும் அதே சந்தேகம்தான் மருது!” இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ள, கல்யாணராமன் கலவரப் பட்டான்.
“இன்ஸுபெட்டர் வந்ததும் சொல்லிப் போட்டுரு. இன்னின்ன மாதிரி நடந்ததுன்னு… ஆனா நம்பவே முடியல மருது… இப்படி நடக்குமா?”
“ஏன்? அந்தப் பொம்புள மூணு நாளா இருந்த தோரணை ஆவேசம்! சாமியடிச்சாப்பல இது ஏதோ விவரீதமாத்தான் ஒண்ணுகிடக்க ஒண்ணு செஞ்சு போட்டுறப் போவுதுன்னு பயந்திருந்தேன். அப்படியே ஆய்டுச்சு!”
“பூசாரிப் பயலே ஏவி விரட்டிருப்பானோ?”
“இருக்காதுங்க! ரவைக்குள்ளே விசயம் வெளிய வந்துடும். இன்ஸ்பெட்டரு பில்ட்டால நாலு வீறு வீறினா கக்கிர்றான்.”
காலை பத்து மணிக்கு வந்த இன்ஸ்பெக்டருக்கு முப்பத்தைந்து வயதிருக்கலாம். சுத்தமான சீருடை அணிந்து பென்சில் மீசை வைத்திருந்தார். வலை பனியன் அருகில் தங்கச் சங்கிலியும், பளார் என்று டாலடிக்கும் ‘எஸ்’ மோதிரமும் பெரிய இடத்தில் கல்யாணம் கட்டியிருக்கிறார் என்று நினைக்க வைத்தன. கொலை பற்றி அவர் அதிகம் துணுக்குறவில்லை. நிறையக் கொலைகள் பார்த்திருப்பார் என்று தோன்றியது. “அய்யாதாங்க முத முதல்ல பார்த்தது” என்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட கல்யாணராமனை உடம்பு முழுவதும் உருவி விட்டாற் போல் பார்த்தார்.
“உங்க பேரு…”
“கல்யாணராமன்.”
“நீங்க பார்த்தபோது உயிர் இருந்ததா?”
“சொல்ல முடியாது. ரத்தம் புதுசா இருந்தது.”
“ஏதாவது பேசிச்சா… மரண வாக்குமூலம் ஏதாவது?”
“இல்லை.”
“நீங்க அந்தப் பொண்ணுக்கு உறவா?”
“இல்லை.”
“நான் சொல்லலிங்களா சமீன் பேத்தி…”
“யோவ், உன்னைக் கேட்டா பதில் சொல்லு. என்ன…”
“நீங்கதான் நமூனா எழுதி அனுப்பிச்சதா?”
“ஆமாம்.”
“அதனா பார்த்தன். கையெழுத்துப் பார்த்தா கிராமத்தில உள்ளவங்க கையெழுத்தாத் தெரியல. பெரியசாமி! நேராப் போய் ஒரு பொட்டி சிகரெட் வாங்கியாந்துரு.”
“இந்தாங்க சிகரெட்” என்று கல்யாணராமன் நீட்டினான்.
சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, கொஞ்சம் தனியா வாங்க என்று அவன் தோள் மேல் கை வைத்து அழைத்துச் சென்று, “கிராமத்தில் ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லிக்கிட்டே இருப்பாக. நான் இங்கே வர்றதுக்குள்ள மூணு வெர்ஷன் கிடைச்சுருச்சு. புளிய மரத்தில் முனி அடிச்சுருச்சுனு சிலபேர் சொல்றாங்க. பூசாரி சூனியம் வச்சுக் கொன்னுட்டாங்கறாங்க. அப்புறம் ஒரு பொண்ணைக் காணமாம். வெள்ளியோ பித்தளையோ…! அதான் கொன்னிருக்குன்னு கட்டையா ஒரு ஆள் வந்து சொன்னான். இவங்ககிட்ட சாட்சி கேட்டு மாளாது. பட்டணத்துக்காரரு, படிச்ச புள்ள, நீங்க என்ன சொல்றிக?” என்று கேட்டார்.
“மர்டர்தாங்க இது. ரூம் வாசல்ல இருந்து ரத்தக் கறையைப் பார்த்தேன்.”
“நானும் பார்த்தேன். பின் மண்டையைத் தூக்கினா பலமா அடிபட்டிருக்கு. அறைக்குள்ள அடிச்சிருக்காப்பல. அடிச்சுக் கொன்னு போட்டுட்டு உடலை அப்புறப்படுத்தறதுக்கு தரதரன்னு கிணத்துப் பக்கம் இளுத்துக்கிட்டுப் போயிருக்காங்க. அதுக்குள்ள யாரோ வரவே, அப்படியே உட்டுட்டுப் போயிருக்காப்பல!”
“வந்தது நான்தான் இன்ஸ்பெக்டர். நான் வரபோது யாரோ அவசரமா ஓடிப்போற சப்தம் கேட்டது!”
மருதமுத்து அருகில் வந்தான். “இன்ஸ்பெக்டர் அய்யா, நீங்க எதுக்கும் அந்தப் பூசாரியை அளச்சு விசாரிச்சுருங்க”
“சூனியம் வெச்ச அந்தப் பொம்மைதானு ஊரே கொல்லுன்னு பேசிக்குது…”
“அதுல ஏதோ இருக்குங்க!”
“விசாரிக்கலாம்… விசாரிக்கலாம்… முதல்ல உடலை எடுத்துக்கிட்டு டவுன்ல பரிசோதனை செஞ்சாகணும்! உறவுக் காரங்களுக்குத் தகவல் போயிருக்கா?”
தங்கராசு தலையை ஆட்டினார். “தந்தி குடுத்திருக்கங்க”.
“யார்யா? நீதான் டிராக்டர் ஓட்டப் போறியா?”
“ஆமாங்க! அந்தப் பொண்ணு வெள்ளியக் காங்கலியே! என்னன்னு புரியாமல்ல இருக்குது.”
“மொதல்ல இந்தப் பெண்ணைக் கவனிக்கலாம். வாங்க கல்யாணராமன், பாடியை தூக்கி வண்டில ஏத்திறலாம்”.
சினேகலதா, சினேகலதாவாக இல்லை. நீலம் பாரித்து வாய் திறந்து, உதட்டோரத்தில ஈ உட்கார்ந்து ரத்தம் கரு ரத்தமாகி, அவள் அழகு அத்தனையும் குலைந்து, ஜந்துக்கள் அங்கங்கே கடித்து ருசித்து ஆவலாக இருக்கும் ஒரு ஜடப் பொருளாகி… ஹாரிபிள்!
“தூக்குங்கடா…! முனி அடிச்ச பொணம்னு கிராமத்தில ஒருத்தனும் தொடமாட்டான். வாங்க கல்யாணராமன், மருதமுத்து. நீ தூக்குவே இல்லே!”
“யம்மாடி, யம்மாடி! தாசில்தார் கச்சேரி. தானே புரண்டளுக” என்று பெரியாத்தா பயமும் பொய் அழுகையும் கலந்து ஆரவாரிக்க, மற்றவர்கள் உடன் ஓடி வர, சிறுவர்கள் மரத்தில் ஏறிப் பார்க்க, பெண்கள் வாயைப் பொத்திக் கொண்டு நோக்க, சினேகலதாவின் மெதுவான டிராக்டர் ஊர்வலம் புறப்பட்டது. டிரெய்லர் உற்சாகமாகக் குதிக்கக் குதிக்க, அதற்குத் தக்கவாறு ஆடும் உடலைக் கல்யாணராமன் பார்த்துக் கொண்டிருந்தான்.
கண்களில் மடை திறந்தாற் போல் கண்ணீர் பெருகியது.
“தந்தி போய்ச் சேர்ந்து அவங்கள்ளாம் வந்து சேர ராத்திரி ஆய்டாது?” என்றான் தங்கராசு கவலையுடன். “அய்யாதான் ரொம்ப அளுவறாரு”.
“நல்ல துடியான பொண்ணு, தங்கராசு!”
“ஆமாங்க! ஆசுபத்திரில அறுத்துத் தெச்சுத் திரும்பறதுக்கே ராத்தேசாலம் ஆய்றாது? இன்னைக்குக் கொடையில கரவம். பெரிய பார்ட்டிங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து… விசயம் தெரியாம ஆள் போயிருக்கு கூட்டியார. “
“மரத்திலதாண்ணே அடிச்சிருக்கு!”
“எப்பவும் நீலி கதை சொன்னா ஏதாவத ஆயிருது பாத்திங்களா? போன வருசம் அல்டாப்பு கொளந்தை எறந்து போயிரல!”
திருநிலம் டவுன் ஆஸ்பத்திரியில் ஓடு வேய்ந்த ‘ஷெட்டுப் போன்ற கட்டிடத்தில் ஓர் அறை திறக்கப்பட்டு, அறையின் நட்ட நடுவே இருந்த சிமெண்ட் மேடை மேல் சினேகலதா கிடத்தப்பட்டாள். ஸர்ஜன் உயிருள்ளவர்களைக் கவனித்து விட்டு அப்புறம்தான் அவளைக் கத்தி நுனியால் கீறிப் பார்த்து விசாரிக்க வேண்டும். அறைக் கதவை மூடிப் பூட்டி விட்டார்கள். வெளியே மேம்பட்டியின் முக்கியப்பட்டவர்கள் கூட்டமாகச் செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருக்க, இன்ஸ்பெக்டர் காணாமல் போய்விட்டார். கல்யாணராமனுக்கு மலைப்பாக இருந்தது. ஒதுங்கிப் போய் சிகரெட் பிடித்தான். முதன் முதலில் சினேகலதாவைப் பார்த்ததிலிருந்து அந்த ஓட்டுக் கட்டிடத்துக் கதவைச் சாத்திய சமீபத்திய கணம் வரை எல்லாம் பொய்யாய் பிரமை போல் இருந்தது. ‘வெள்ளியை ஏன் காணோம்?’ என்கிற கேள்வி மனத்துக்குள் மற்றொரு மூலையில் அரித்துக் கொண்டே இருந்தது. எங்கே யாவது பக்கத்து கிராமத்துக்குச் சென்று விட்டு இன்னேரம் வந்திருப்பாள். அப்பனிடம் சொல்லாமல், யாரிடமும் சொல்லாமல் கைக்குடத்தை அப்படியே போட்டுவிட்டுப் பக்கத்து கிராமத்துக்குச் சென்றிருப்பாளா என்ன? இல்லை, அவளுக்கும் ஏதாவது ஆகியிருக்குமோ? இல்லை, இப்படி இருக்குமோ! ச்சேச்சே… வெள்ளியின் தகப்பனை அந்தக் கும்பலில் காணவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருப்பான்.
‘என் மக வெள்ளியைப் பார்த்தீங்களா? காலையில் இருந்து காங்கல.’
‘வெள்ளி எங்கே போனாய்?’
‘எளசா வெண்டைக்கா விக்குதேன். ஓர் ரூவா சொல்லுதேன்’ என்று பையைப் போட்டுக் கொண்டு பெரியசாமியும் கிளம்பிவிட கல்யாணராமன் பூட்டியிருந்த அந்த அறையைப் பார்த்தான். எவரும் அவசரப் படவில்லை. அவரவர் டவுனில் தத்தம் ஜோலிகளுக்குக் கிளம்பிவிட்டனர். தங்கராசு தந்தி கொடுத்ததும் கடமை தீர்ந்து விட்டதாக எண்ணிக்கொண்டு சீட்டித் துணி எடுக்கச் சென்று விட்டான். அய்யாத்துரை சலூனுக்குள் புகுந்து பனியனைக் கழற்றி இரண்டு கைகளையும் உயர்த்தி அக்குளில் சவரம் செய்து கொண்டிருந்தார்.
“பொளுது சாயத்தேன் பொணத்த உள்ளாற கொண்டு போவாக” என்று அவரவர் கழன்று கொள்ள, தான் மட்டும் அந்த அறைக்கு எதிரே தனியாக நிற்பதைத் திடீரென்று உணர்ந்தான் கல்யாணராமன்.
மனத்தில் அவளுக்காக மாலவீணா வாசித்துக்காட்ட… சினேகலதா மெலிதாக, இயல்பாக, அழகாக அசைந்து நடனமாட…
“சினேக்குனு என் பிரதர்ஸ் கூப்பிடுவாங்க.” பெண்ணே எங்கே பிறந்தாய், எங்கே வளர்ந்தாய், எந்த மாதிரிக் கனவுகளை மனதுக்குள் சிறைப்படுத்தி வைத்துக் கொண்டாய்? கடைசியில் திருநிலத்தில் கருநீலமாகப் போஸ்ட் மார்ட்டம் கத்திக்குக் காத்திருக்கிறாயே!”
வயிற்றைக் கவ்வியது பச்சாதாபம். மருதமுத்து வந்தான் தரையில் குந்தி உட்கார்ந்தான். கையை விரித்துத் தட்டினான்.
“ஹும்… என்ன துடியான பொண்ணுங்க, சினேகலதா! மருதமுத்து, உனக்குப் படிப்பிருந்தா பெரிய கலக்டரா வந்திருப்பேன்னாங்க. துண்டுல இன்னும் அந்தம்மா வாசனை மிச்சமிருக்குதுங்க! என்ன சாதுர்யம்! என்ன பேச்சு! என்ன நாட்டியம் நாசூக்கு! பாவனை…ச்!” மலங்க விழித்துக் கண்ணீரை நிறுத்த முயன்றான்.
“மருதமுத்து! வெள்ளிக்கும் இந்த மாதிரி ஏதாவது ஆயிருக்கு மோன்னு எனக்குக் கவலையா இருக்கு.”
“எனக்கு அந்தக் கவலை இல்லிங்க! அந்தக் காரியத்தை வெள்ளிதான் செஞ்சிருக்குன்னு எனக்கு சந்தேகம்! அதான் தலைமறைவாயிடுத்து!”
“ச்சேச்சே!”
“என்ன ச்சேச்சே? உங்களுக்குக் கதை தெரியாதுங்க.. ராத்திரி…”
“ராத்திரி?”
சற்று தயங்கிச் சொன்னான். “எங்க ரெண்டு பேரையும் பார்த்து சந்தேவப்பட்டு பொறாமைப்பட்டு வெறி வந்திருக்கணுங்க அதுக்கு!”
“ராத்திரி நீ வெள்ளியப் பார்த்தியா?”
“விட்டுத் தள்ளுங்க… விசாரணையில தானா எல்லாம் வெளில வருது. எத்தனை நா தலமறவா இருக்க முடியும்? சே! பளிகாரப் பாவி! கண்டுபிடிக்கறனா இல்லியா பாருங்களேன். எங்கடி ஒளிஞ்சுருவே நீ. எனக்கு அது பதுங்கற எடமெல்லாம் தெரியுங்க. பச்சைக் குளத்தில் மண்டபம் இருக்குதுங்க. அங்க போவும். மேவலாபுரத்தில ஆத்தா வூட்டுக்குப் போயிருக்கும். அப்புறம் டவுன்ல அவுங்க அத்தை மவ ஒருத்தி இஸ்கோலில இருக்காங்க. அங்க போயிருக்கும். ரெண்டு நாள் தலமறைவா இருந்துட்டு திரும்ப வந்துதானே ஆவணும்? என்ன சொல்றீங்க?”
“தலைமறைவா எதுக்கு இருக்கணும்?”
“நீங்க வேற!”
“மருதமுத்து !மேம்பட்டிக்கு எப்ப திரும்பிப் போகப் போறே?”
“ஏன்?”
“சாயங்காலம் வரைக்கும் ஒண்ணும் நடக்காது போலிருக்கே?”
“அது எப்ப நடந்தாலும் நான், சினேகம்மா அப்பா அம்மா வர்ற வரைக்கும் காத்திருந்து கடமையை முடிச்சுட்டுத்தான் திரும்பப் போறங்க. அதுவரைக்கும் பச்சத் தண்ணிகூட சாப்பிட மாட்டேன்.
“எனக்கு ராத்திரி பூரா கண் முழிச்சது உடம்பு ஒரு மாதிரி இருக்கு. திரும்பிப் போய்ட்டு நான் சாயங்காலம் வாரனே!”
“சரிங்க, நான் காவல் இருக்கங்க… சைக்கிள் ஒண்ணு வாடகைக்கு எடுத்துத் தரட்டுங்களா?”
சைக்கிளை மெதுவாக மிதித்துக் கொண்டு மேம்பட்டிக்குள் நுழைய கிராமம் ஏறக்குறைய காலியாக இருந்தது. அரச மரத்தடியில் ஆட்கள் இல்லை. கோயில் பூட்டியிருந்தது. முதல் நாள் மண்டபம் வெறிச்சோடியிருக்க, தெருவில் மணி மட்டும் தேடிக் கொண்டிருந்தது.
ஜமீன் வீட்டை அடைந்து தன் அறையைத் திறந்து சட்டை பாண்ட் எதையும் கழற்றாமல் படுக்கையில் விழுந்தான். சற்று நேரம் தான் தூங்கியிருப்பான். யாரோ காலைப் பிறாண்டும் உணர்ச்சி ஏற்பட்டுத் திடுக்கிட்டு விழித்தான்.
வெள்ளி!
– தொடரும்…
– கரையெல்லாம் செண்பகப்பூ, எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது.