கத்தரிக்கா… வெண்டக்கா…
கதையாசிரியர்: செய்யாறு தி.தா.நாராயணன்
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 30, 2024
பார்வையிட்டோர்: 5,735
“கத்தரிக்கா, வெண்டைக்கா, முருங்கக்கா, பீன்ஸ், அவரைக்கா.. மொள்ளங்கி… மொள்ளங்கியே..யே… வாரிக்கோ பெல்லாரி வெங்காயம் மூணு கிலோ நூறு ரூவாய். நாட்டுத் தக்காளி ரெண்டுகிலோ நூறு ரூவா. வாரிக்கோ…வாரிக்கோ….”
நான் காய் வாங்க காய்கறி கடைக்கு போனபோது காலை ஏழுமணி. லேசான பனி சிலிர்ப்பு இன்னும் மிச்சமிருந்தது. முருகன் பிஸியாக கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தான். வியாபாரம் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருந்தது. இன்று தை அம்மாவாசை நாள் என்பதால் நிறைய வாடிக்கையாளர்கள் கடையை மொய்த்துக் கொண்டிருந்தனர். தனியாளாய் அவ்வளவு பேரையும் முருகன் சமாளித்துக் கொண்டிருந்தான். கூட எடுபிடிக்கு ஒரு கையாளு. அவனுடைய காய்கறிகடை என்பது கட்டடத்திலிருக்கும் பாதுகாப்பான கடையல்ல, சாலையோரம் தலைவிரித்து நிற்கும் பெரிய புளியமரத்தினடியில்தான் பலவருஷங்களாக கடையை நடத்திவருகிறான். பெரிய பெரிய கித்தான்களை விரித்து அதில் காய்கள் அம்பாரம் அம்பாரங்களாக கொட்டிவெச்சிருக்கும். வெஜிடபிள்ஸ் தினசரி ஃப்ரஷ்ஷாக லாரிகளில் வந்திறங்கும், அதுவே அமோக வியாபாரத்துக்கு காரணமாகியது.

“டாய்…!டாய்…! “— முருகன் கத்துகிறான். ஏன் என்னாச்சின்னு தெரியல, நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று முருகன் கோபமாய் கத்திக் கொண்டே எழுந்தோடினான். ஓடி கொஞ்ச தூரத்தில் வேகமாக போய்க்கொண்டிருந்த ஒருத்தன் ஷர்ட்டை கொத்தாக பிடித்து அவன் திமிற திமிற இழுத்துக் கொண்டு வந்தான்.
“டேய் பொறுக்கி, பேண்ட், ஷர்ட்லாம் போட்டுக்கிணு பார்க்க ஆபீஸர் மாறி கீற. ராஸ்கல் திருட்டு கம்மனாட்டி… கடையில கும்பல்ல காசு குடுக்காம ஏமாத்திபுடலாம்னு ஓட்றீயா?.”
“யோவ் இன்னா?, பணம் வாங்கி கல்லாவுல போட்டுட்டு யாரை ஏமாத்த பாக்கற?.” – அவன் உதாரு காட்டினான் போல. முருகன் பளார் பளார்னு ரெண்டு அறை விட்டான்.
“எட்றா அறுவது ரூவா.” – அடுத்த அறைக்கு கையை ஓங்கும் போது பணம் இவன் கைக்கு கதறிக் கொண்டு வந்துவிட்டது.
நான் ஒரு ஆறேழு ஐட்டம் காய்களை வாங்க வந்திருக்கிறேன். காலமாகிவிட்ட என் அம்மாவுக்கு ரெண்டு நாளில் திதி (தெவுஸம்) வருகிறது. வீட்டில் எதுவும் விசேஷம் என்றால் என் மனைவிக்கு தெருவையே கூப்பிட்டு விருந்து வைக்கணும். கவுரவமா வாணாம்மா இப்பத்தான் சாப்பிட்டேன்னா கூட விடமாட்டா. ஓடிஓடி வற்புறுத்தி கூப்பிடுவாள். புரட்டாசியில பெருமாளுக்கு சனிக்கிழமை படையல் போடும்போது கூட இப்படித்தான் தெருவே சாப்பிட வந்தாகணும்.. நாலஞ்சி ரக பதார்த்தங்கள், ஸ்வீட், வடை பால்பாயாசம், சாம்பார், வத்தக்குழம்பு, பருப்பு ரஸம், தயிர்னு ரிச்சா இருக்கும். ஏகதடபுடல். இடம் போதலைன்னு நீண்ட வராண்டாவில் ரெண்டு பக்கமும் இலை போடுவாள். நமக்கு வயசாச்சேன்னு சிந்தனை கிடையாது. உடம்பில வண்டிவண்டியா ஷுகர் வெச்சிக்கிட்டு இருக்கிற கிழவி. அறுபது வயசாகிறது. எனக்கு பிடிக்கலேன்னாலும் என்னால ஒண்ணும் செய்யமுடியாது. தலையாட்டிக்கிட்டுத்தான் போவணும். பொண்டாட்டியை எதிர்க்கிறது, திட்றதெல்லாம் இளவயசிலதான், இந்த வயசில செல்லுபடி ஆகிறதில்லை. இரண்டு மடங்காக எகிறுவாள். நாங்க ரெண்டுபேரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். ஜீவனத்துக்கு குறையில்லாம பென்ஷன் வருகிறது. பண்டிகை காலங்களில் செய்யும் வடை, கொழுக்கட்டை, சுண்டல், அதிரசம், சுழியம், போன்ற தின்பண்டங்கள் அக்கம் பக்கங்களில் இருக்கும் நெருக்கமானவர்களுக்கு விநியோகமாகும். இந்த வீட்டிலிருந்து அந்த வீடுகளுக்கும், அங்கிருந்து எங்கள் வீட்டிற்கும் பரிவர்த்தைனை ஆகிவிடும். இதெல்லாம் ஊருகளில் நடைமுறையில் இருந்து அருகிப்போய்விட்ட நேற்றைய பழக்கவழக்கங்கள். ஆனால் இவை இன்றைக்கும் எங்கள் வீட்டிலிலுள்ள நடைமுறை.
“முருகா! என்னை கொஞ்சம் கவனிப்பா.”
“உனுக்கில்லாதது இன்னா சார். சொல்லுசார்.” – வரிசையாக நான் ஒவ்வொரு ஐட்டமாக சொல்லிக் கொண்டேவர, அவன் எடைபோட்டு ஒரு அன்னக்கூடையில் கொட்டிக் கொண்டே வந்தான். அது அவனுடைய வழக்கம். இங்க எல்லாருக்கும் அப்படித்தான் செய்வான். கடைசியில் மொத்தத்தையும் என் பையில் சாய்ப்பான். நான் நிறைய ஐட்டங்களை வாங்க சுற்றிலுமிருப்பவர்கள் பொறுமை இழந்து உச்சு கொட்டிக் கொண்டிருந்தார்கள். அவங்கள்லாம் ரெண்டொரு காய்கள் வாங்கறவங்க. ஆயிற்று என் பர்சேஸிங் முடிந்துவிட்டது. அப்புறம் நான் பையை சோதித்து ஒவ்வொரு ஐட்டமாக சொல்லிக் கொண்டேவர அவன் கணக்கு பண்ணிக் கொண்டே வந்து நானூத்தி நாப்பது ஆச்சி சார் என்று வாய்க்கணக்குல கூட்டி சொன்னான். இந்தா சாரு என்று உபரியாக கொத்தமல்லி கறிவேப்பிலையை கொடுத்தான். பையை தூக்கமுடியாமல் சிரமப்பட, அவனே ஓடிவந்து என் சைக்கிளில் தூக்கி வைத்தான். நான் சைக்கிளை தள்ளிக் கொண்டு போனேன். பாவம் இதுபோல எத்தனை பேரு அவனை ஏமாத்திட்டு போறாங்களோ என்றிருந்தது. இதுக்கும் மேலே ரோட்டோரம் கடை போட்டதால அப்பப்ப போலீஸ்காரங்க இனாமா பை நிறைய காய்கறி வாங்கி தூக்கிட்டு போவாங்க. இதுபோல நம்ம பையில சாய்ச்சிட்டு நாம பார்த்து பார்த்து கணக்கு சொல்ற நடைமுறை தப்புன்னு தோணுது. அதைவிட அன்னக்கூடையில கொட்றதுக்கு முன்னே அவனே கணக்கு பண்ணிட்றது சரியான ஐடியான்னு படுது. எதுவும் மிஸ் ஆவாது. அப்பவே காசு வாங்கிட்டு அடுத்த கிராக்கிய பார்க்கலாம். அவனுக்கு கொஞ்சம் அறிவுரை சொல்லலாம்னு யோசிச்சேன். ஐயய்யோ வாணாம் வாணாம். எப்பா ஒரு கசப்பான அனுபவத்தால் இனிமேல் யாருக்கும் அறிவுரையே சொல்வதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
இப்படித்தான் நாங்க பொண்ணுங்க வீடுகளுக்கு, பிள்ளைகளின் வீடுகளுக்கு என்று சென்னைக்கு கார்ல அடிக்கடி போவோம். ஆனந்த் டிராவல்ஸ்ஸில் கார் புக் பண்ணிக் கொள்வோம். அப்போதெல்லாம் எங்களுக்கு டிரைவரா. ஒரு தம்பி வருவான். நல்ல பையன். ரொம்ப நாளாய் அவந்தான் எப்பவும் வர்றது. .பயணத்தின் போது கலகலப்பாய் எல்லா கதையையும் பேசிக்கிட்டு வருவான். ஒருநாள் ஒரு விஷயத்தை சொன்னான். அவனுக்கு நாலு ஏக்கர் நன்செய் நிலம் இருக்குதாம். பக்கத்திலேயே ஒட்டினாற்போல அவன் பங்காளிகளுடையது ஒரு நாலு ஏக்கர். அதுக்கு நல்ல நீர்வளத்தோடு ரெண்டுபேருக்கும் பொதுவுல ஒரு கிணறு இருக்குது. பொதுவுல மோட்டார் போட்டு தண்ணீர் இரைச்சி சாகுபடி செய்து வருகிறார்கள்.. இப்ப அதில ஒரு பிரச்சினை ஏற்பட்டு இப்ப ஆறுமாசமா டிரைவர் பாகத்துக்கு தண்ணி இறைப்பு இல்லையாம். நிலத்தை சாகுபடி பண்ணாம தரிசா போட்டு வெச்சிருக்கான். பிரச்சினை என்னான்னா அவங்க இவன்கிட்ட சொல்லாம கொள்ளாம கிணத்தில செலவு பண்ணி தூர்வாரி இருக்காங்க. இவனுக்கும் கிணத்தில பாதி பாத்தியதை இருக்கு இல்லையா. இவன்கிட்ட சொல்லாம எப்படி தூர் வாரலாம் என்பது இவன் கட்சி. தூர்வாரின செலவுல பாதி தொகையை கொடுத்துட்டு கிணத்துகிட்ட வா என்பது அவங்க கட்சி. என்னை கேக்காம தூர் வாரினதால நான் காசு தரமுடியாதுன்னு சொல்லிவிட்டிருக்கான்.
இதுக்கு பெரியமனுசன் மாதிரி நான் நாட்டாமை பண்ணினேன். டிரைவருக்கு புத்தி சொல்ல ஆரம்பித்தேன்.
“தம்பீ! தூர் வாரினது வாஸ்தவம்தான?. என்ன உன்னை கேக்காம தூர்வாரிட்டான் அதான?. அந்த காரணத்தை வெச்சி உன் கழனிய தரிசா விட்றது உனுக்குத்தான்பா நஷ்டம். சமாதானமா போயிடு.”
என் வயசைகூட மதிக்காம பங்காளிங்க மேல் இருக்கிற காய்ச்சல்ல கோபத்துடன் ஏகவசனத்தில என்னை பேசிப்புட்டான். மனசு ஒடிஞ்சிப் போச்சி. என் மனைவி உனக்கு எதுக்கு ஊரான் பெர்தனம்?. இது உனக்கு தேவையா?. என்று காரிலேயே என்னை கடிந்துக் கொண்டாள். அப்பத்தான் இனிமேல் யாருக்கும் அறிவுரை சொல்றதில்லைன்னு முடிவு பண்ணேன். சண்டையில சண்டை போட்றவங்களை விட மத்தியஸ்தம் பண்ண வர்றவனுக்குத்தான் அதிகம் அடிபடும்னு சொல்றது சத்தியமான வார்த்தை.
காய்கறி மூட்டையை வீட்டிற்கு கொண்டுபோய் சாயங்காலம் பார்த்துக்கலாம்னு அப்படியே ஓரமா வெச்சிட்டு உடம்பு சோர்வு தட்டியதால போய் படுத்துவிட்டேன். இப்பல்லாம் சீக்கிரமே களைப்பாக ஆயிட்றேன். மூப்பு காரணமா, இல்லே சமீபத்தில எனக்கு ஒரு மேஜர் சர்ஜரி நடந்தது, அது காரணமா தெரியவில்லை. மனைவி என்னை வந்து பார்த்துவிட்டு ஹும்! எப்பப்பாரு தூக்கம் தூக்கம் என்று மொணமொணவென்று திட்டிக் கொண்டே போனாள். ஹும் அது அவள் சுபாவம். மறுநாள்தான் காய்கறி மூட்டையை கொட்டினேன். மனைவி வந்து ஒத்தாசையாய் அவைகளை தனித்தனியாய் பிரித்து வைத்தாள்.
“மொத்தம் எட்டு ஐட்டம்க சரியா?.”
“இல்லையே மொத்தம் ஏழு ஐட்டம் தானே. நல்லா ஞாபகம் இருக்கே.” – நான் ஒருமுறை எண்ணிப் பார்த்தேன். ஆஹா கருணைக் கிழங்கை முருகன் கிட்ட கணக்கு சொல்லாம விட்டுவிட்டேன். நல்லா ஞாபகம் இருக்கு. கணக்கு சொல்லல. ஒரு கிலோ எடை. பெருசா ஒத்த கிழங்காய் அப்நார்மல் சைஸில் உட்கார்ந்திருந்தது. பையில் அவன் கொட்டும்போது இது பைக்கு அடியில் போயிடுச்சிபோல. அப்பவும்கூட இவ்வளவு பெரிய ஐட்டம் எப்படி மிஸ் ஆவும்? ஆனா ஆயிடுச்சே.அதை எடுத்து உள்ளே வெச்சேன். ஒரு நிமிஷம் சரி விடு வியாபாரத்தில இதெல்லாம் சகஜம். ரூபாய் கணக்கு பண்ணும்போது அவன் எத்தனை பேரை ஏமாத்தியிருப்பான்?. இந்த தடவை நம்மகிட்ட ஏமாந்திருக்கான். அவ்வளவுதானே. என்று எண்ணம் வந்தது. ஓசியில ஒரு பொருள் கிடைக்குதென்றால் உள்ளுக்குள்ளே லேசாக ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. அதுக்கு தோதாய் நமக்குன்னு ஒரு நியாயம் வந்திடுது. எவ்வித உறுத்தலுமின்றி அதை மறந்துவிட்டு அடுத்த வேலையான நித்திரைக்கு போய்விட்டேன்.
காலை பத்து மணிக்கெல்லாம் எங்களுடைய ரெண்டுபிள்ளைகள், மருமகள்கள், பேரன் பேத்திகள், எங்களுடைய ரெண்டு பொண்டுகள், மாப்பிள்ளைகள், அவர்கள் மூலம் வந்த பேரன், பேத்திகள் என்று வீடு கொள்ளாத கூட்டம் நிறைந்துவிட்டது. வந்தவுடன் மருமகள்கள் ரெண்டுபெரும் அத்தைக்கு ஒத்தாசையாய் அடுப்பங்கரைக்குள் புகுந்துக் கொண்டார்கள். வீட்டில் பிறந்த பொண்டுகள் அம்மாவுக்கு அடுப்படியில ஒத்தாசை பண்ணுவோம்னு இல்லாம போயி டிவி பார்க்க உட்கார்ந்துக் கொண்டதுகள். என் மனைவியும் அதைப்பற்றி பேசமாட்டாள். கேட்டால் சும்மாயிருங்க குழந்தைங்க ஆஞ்சி ஓஞ்சி வந்திருக்குதுகள். அங்கதான் வேலையான வேலைன்னா இங்கியுமா?. என்பாள். ஹும்! ஒவ்வொருத்தி வீட்டிலும் எல்லா வேலைகளையும் பார்க்க இரண்டிரண்டு வேலைக்காரிகள் இருக்காங்க. உட்கார்ந்தபடியே என்ன சாப்பாடு செய்யணும் என்ற மெனுவை சொல்றது ஒண்ணுதான் இவங்க வேலை. ஹால்முழுக்க பாய், பெட்ஷீட்களை விரித்து அதில் பிள்ளைகளும், மாப்பிள்ளைகளும் உட்கார்ந்து அரட்டைக் கச்சேரி. நான் திதிக்கு சடங்கு நடத்த வேண்டி ஐயருக்கு போன் போட்டேன். பேரன் பேத்திகள் குறுக்கும் நெடுக்கும் ஒரே ஓட்டம். வீடு அமளுதுமளியாகிறது. இந்த சத்தத்திலும் மாப்பிள்ளைகள் ரெண்டுபேரும் அதற்குள் நித்திரைக்கு போய்விட்டார்கள். இங்கு மட்டுமில்லை அவங்க வீட்டிலும் அவர்கள் சுகபுருஷர்கள். ரெண்டுபேருக்கும் அவங்க அப்பன்க வெச்சிட்டு போன சொத்தே மூணு தலைமுறைக்கு எதேஷ்டம். அவைகளை நிர்வகிப்பதும், அவைகள் மூலம் வரும் வருவாய்களை வசூலிப்பதும், வந்த பணத்தை செலவு செய்வதற்குமே நேரம் சரியாக இருக்கிறது.
ஆயிற்று எங்கம்மா திதிக்கு படையல் போட்டு முடிச்சி மதியம் ஒரு மணிக்கெல்லாம் இலை போட்டாச்சி. எல்லோருக்கும் வயணமான சுகபோஜனம். எல்லாரும் ஒருகட்டு கட்டிவிட்டு, ஸ்வீட் பீடாவை அரைத்துக் கொண்டு, பாம்பு இரை முழுங்கினாற்போல பாயில் படுத்து நெளிந்துக் கொண்டிருந்தார்கள். அந்நேரத்துக்கு வழியும் வியர்வையுடன் வந்த என் மனைவியை எல்லோரும் மொலுமொலுவென்று மொய்த்துக் கொணடார்கள்.
“மாமீ! சாப்பாட்டில் ஒவ்வொரு ஐட்டமும் சூப்பர். “- என் மனைவி சிரித்தாள்.
“மாப்ளே! எங்க மருமகள்களின் கைபாகம்தான் அவ்வளவும். அவங்கதான் செஞ்சாங்க. கருணைக் கிழங்கு வறுவல் ஒண்ணுதான் நான் செஞ்சது.”
“மாமீ! முக்கியமாய் அதைத்தான் சொல்ல வந்தோம். கருணை வறுவல்தான் ரொம்ப சூப்பர். சும்மா மொருமொருன்னு கிரிஸ்பியாக பிஸ்கட் மாதிரி இருந்திச்சி மாமீ. நாங்க நிறைய தின்னுட்டோம். இந்தமாதிரி செய்ய எங்க பொண்டாட்டிகளுக்கு தெரியாது. போவட்டும் எப்பிடி செய்றதுன்னு செய்முறையை எங்க பொண்டாட்டிகளுக்கு சொல்லி குடுத்துடுங்க.” – என் மனைவி வெட்கத்துடன் முந்தானையை இழுத்து போர்த்திக் கொண்டு வெளியேறினாள்.
அவர்கள் கருணைக்கிழங்கு பேச்சை எடுத்தவுடனே முதல்முறையாக எனக்கு உள்ளே லேசாக வலித்தது. அன்றைக்கு ராத்திரி முழுக்க தூக்கமில்லை. உள்ளே குடைந்துக் கொண்டிருந்தது. “ நேர்மையான மனுசன். அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படமாட்டார்.” – உன்னைப் பத்தி இப்படி ஒரு இமேஜ் ஊருக்குள்ள உலவுதே, வெட்கமாக இல்லை உனக்கு? த்தூ. உனக்கும் நேத்து முருகன் அறைஞ்சானே அந்த திருடனுக்கும் என்ன வித்தியாசம்?. என் மனசாட்சி உள்ளே ராத்திரி முழுக்க குத்திக் கொண்டே இருந்தது. எனக்கு வெட்கமாக இருந்தது. இவ்வளவு காலம் என்னுடைய நேர்மை பற்றி எனக்கே உள்ளூர ஒரு பெருமிதமும், கர்வமும் இருந்தது. எனக்கு நானே உண்மையாக அப்படித்தான் நேற்றுவரை வாழ்ந்து வந்தேன். ச்சீ! இன்று என் புத்தி ஏன் இப்படி கலீஜாக மாறியது. இவ்வளவு காலம் போற்றி வைத்திருந்த அந்த நேர்மைக்கு இன்று என்ன ஆச்சி?. நாலைந்து முறை என் தலையில் நானே குட்டிக் கொண்டேன்.
நாளைக்கு காலையில் முதல் வேலையாக போய் முருகன் கிட்ட விடுபட்டதை சொல்லி கருணைக் கிழங்கிற்கான காசை கொடுத்துவிட வேண்டும். இப்படி ஒரு தீர்மானம் மனதில் ஏற்பட்டவுடனே மனம் லேசாகிவிட, இதுவரையிலும் மனசிலிருந்த இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சி ஏற்பட்டது. முருகா அன்னைக்கு வாங்கியதில் கருணைக்கிழங்கு கணக்குல வரல. விடுபட்டு போச்சி. அப்நார்மல் சைஸ்ல ஒரே கிழங்கு ஒரு கிலோ எடை. இந்தா காசு எடுத்துக்கோ. என்றால் அவன் சலாம் அடிப்பான். டேங்க்ஸ் சார். இந்த காலத்தில யாருசார் இப்படி இருக்கிறாங்க?,டேங்க்ஸ் சார். என்று மறுபடியும் வணக்கம் வைப்பான். அக்கம்பக்கம் எல்லாரும் என்னையே பார்ப்பார்கள். பெருமிதமாய் இருந்தது. வியாபாரத்து மேல கண்ணுங் கருத்துமா இருய்யா. சாரு ஏதோ நல்ல மனுசனா இருந்ததால இரண்டு நாளாகியும் தேடி வந்து சொல்லி குடுக்கறாரு என்று யாராவது சிலபேர் சொல்லக்கூடும். மனசு மகிழ்ச்சியாக இருந்தது. என் மடியில் கனமில்லாததினால், இப்போது பழையபடி உள்ளே நான் நேர்மையானவன் என்ற கர்வமும், பெருமிதமும் தலை தூக்கியது. கருணைக்கிழங்கு கிலோ நூறு ரூபாய்னு சொன்னான். நூறு ரூபாய் தரணும். நேர்மையாய் இருப்பதில் மனசில் எவ்வளவு சந்தோஷம் வருகிறது?.
மறுநாள் காலையில் எட்டு மணிக்கு முருகன் கடைக்கு கிளம்பினேன். கடையில் முருகன் வழக்கம்போல பிஸியாக இருந்தான். வாடிக்கையாளர்கள் கூட்டமும் வழக்கம்போல் மொய்த்துக் கொண்டிருந்தது. நான் கெத்தாக முருகன் எதிரில் போய் நின்றேன். விட்டுப்போன அயிட்டத்துக்கான பணத்தை ரெண்டு நாள் கழித்தும் தேடிவந்து யாரு கொடுப்பா?. ஆனால் நான் கொடுக்கிறேன். .அவனை ரெண்டு வார்த்தையாவது கேட்டுட்டு போகணும். வியாபாரத்தில தரவுசு போறாது. ஒரே ஐட்டம் ஒரு கிலோ, அத எப்படி ஒரு வியாபாரி தவறவிடலாம்?.
“முருகா!”
“இன்னா சாரு?, இன்னா வோணும் சொல்லுசாரு!”
“இன்னா வியாபாரம் பண்றே நீ?.அன்னைக்கு காய்கறி வாங்கிட்டு போனேனே, அதில் உன்கிட்ட நான் கணக்கு சொல்றப்போ ஒரு ஐட்டம் விட்டுப் போச்சி. கருணைக்கிழங்கு ஒருகிலோ. அத நீ கண்டுக்கவே இல்லையே. தொழில்ல இன்னும் கொஞ்சம் உஷார் வேணும்பா. அதுக்கு பணம் குடுக்க வந்திருக்கேன். அவன் வியாபாரத்தை நிறுத்திவிட்டு என்னை ஏற இறங்க பார்த்தான். என்ன இவன் சலாம் அடிப்பான்னு பார்த்தா சிரிக்கிறான்?.”
“என்னப்பா சிரிக்கிற?.”
“இப்ப அதுக்காகவா சாரு ஓடியாந்த?.”
“ஆமாம்.”
“இல்ல சாரு எல்லாத்துக்கும் நீ பணம் குடுத்துட்ட.”
“இல்லப்பா நான்தானே பையை பார்த்துப் பார்த்து உனுக்கு கணக்கு சொன்னவன். எனக்கு தெரியாதா?. நல்லவனா இரு சந்தோஷம். இவ்வளவு வெகுளியா இருக்காதப்பா.” – அவன் நக்கலாக சிரிக்கிறான்.
“சாரு அன்னைக்கு நீ எட்டு ஐட்டம் வாங்கின. சரியா?. ஆனா ஏழு ஐட்டங்களுக்குத்தான் கணக்கு சொன்ன. ஒன்னு வுட்டுப்போச்சி. மறந்துட்ட. வுட்டத நான் கூட்டிக்கினேன். காய்ங்களை அன்னக்கூடையில கொட்டும்போதே கணக்குப் பண்ணிக்குவேன் சாரு.”
“அடப்பாவி.” – அவன் சிரித்தான்.
“உன் கிட்ட எட்டு ஐட்டங்களுக்கு காசு வாங்கிட்டேன். என் கணக்கு சரியாய் இருக்குது, நீபோ சாரு.” – என் கெத்து புஸ்..ஸ்.னு இறங்கிப்போச்சி. ஒரு நாளைக்கு எவ்வளவு கஸ்டமர்களை பார்க்கிறான்?. இரண்டு நாட்களுக்கப்புறமும் நான் வாங்கியதை கரெக்டாய் சொல்லும் அவனுடைய ஞாபகசக்தி, வியாபாரத்தில அவனுக்கு இருக்கும் உஷார்தனம். நான் கொடுத்த பணத்தை பேசாம வங்கி கல்லாவுல போட்டுக்கிட்டு போயிருக்கலாம். பெரும்பாலும் அப்படித்தான் செய்வாங்க. ஆனால் அவன் அப்படி செய்யவில்லை, மற்றவங்க காசுக்கு ஆசைப்படாத அந்த நேர்மை. இவைகளுக்கு முன்னால என் கர்வம், பெருமிதம் எல்லாம் பொசுக்கென்று கீழே விழுந்துவிட்டன.
– 17-03-2024, தினமணிகதிர்.
| நான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரைச் சேர்ந்தவன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். எழுபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், இரண்டு அறிவியல் நாவல்களையும் செய்யாறு தி.தா நாராயணன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்,எழுதிகொண்டுமிருக்கிறேன். சிறுகதைகள் என் கதைகள் குமுதம், தினமணி கதிர், தினமலர், இலக்கியப்பீடம், கலைமகள்,கணையாழி, செம்மலர் ,தாமரை, கிழக்கு வாசல் உதயம், தாராமதி, போன்ற இதழ்களிலும், அவைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும், திண்ணை டாட்காம் போன்ற இணையதள இதழ்களிலும், இலக்கிய…மேலும் படிக்க... |