
ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 – ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர்.
1945-ல் தன் 15 வயதில் எழுதிய வீண்வேதனை அவருடைய முதல் படைப்பு. கல்கி இதழில் இரு நண்பர்கள் என்னும் சிறுகதையை எழுதினார். கல்கி வெள்ளிவிழாச் சிறுகதைப்போட்டியில் அவருடைய ‘கல்லுக்குள் ஈரம்’ என்னும் நாவல் பரிசுபெற்றது. ராஜாஜி அப்பரிசை வழங்கினார். அந்நாவலுக்கு தமிழக அரசின் விருதும் கிடைத்தது.
நாவல்கள்
- கல்லுக்குள் ஈரம் (1966)
- கேட்டதெல்லாம் போதும் (1971)
- குருஷேத்திரம் (போராட்டங்கள்) (1972 )
- எண்ணங்கள் மாறலாம் (1976)
- மாயமான்கள் (திருடர்கள்) (1976)
- நம்பிக்கைகள் (1981)
- தூங்கும் எரிமலைகள் (1985)
- மருக்கொழுந்து மங்கை (1985)
- உணர்வுகள் உறங்குவதில்லை (1986)
- மயக்கங்கள்(1990)
சிறுகதைகள்
- சங்கராபரணம் – சிறுகதைத் தொகுதி (1962)
- இதயம் ஆயிரம் விதம் – சிறுகதைத் தொகுதி (1970)
விருதுகள்
- கல்கி வெள்ளிவிழா – 2-ம் பரிசு – கல்லுக்குள் ஈரம் – 7500 பரிசும்
- தமிழக அரசின் பரிசு – 1972- சிந்தனை வகுத்த வழி.
- தமிழக அரசின் பரிசு – 1982 – பிரும்ம ரகசியம்.
- ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது – 1990 – உணர்வுகள் உறங்குவதில்லை
- கோவை கஸ்தூரி சீனிவாசன் இலக்கிய அறக்கட்டளையின் பரிசு – நம்பிக்கைகள்
மருக்கொழுந்து மங்கை – கதையைப் படிக்குமுன்…
தமிழக வரலாற்றில் மாபெரும் சாம்ராஜ்யங்கள் என மதிக்கத்தக்கவையாக இருந்தவை இரண்டே இரண்டு தாம். ஒன்று பல்லவ சாம்ராஜ்யம்; மற்றொன்று சோழ சாம் ராஜ்யம். இவற்றில், பல்லவ சாம்ராஜ்யம், காலத்தால் முந்தியது. பல்லவ ஆட்சி கிட்டத்தட்ட 650 ஆண்டுகள் நடைபெற்றது.
இன்றைக்கு 1270 ஆண்டுகளுக்கு முன், காஞ்சி மாநகரில் பல்லவ ஆட்சி, மிக உன்னத நிலையிலிருந்த கால கட்டத்தில் ஆட்சியில் பெரும் சிக்கல் தோன்றியது. காஞ்சி மாநகரில் அப்போது ஒரு புரட்சியே ஏற்பட்டது !
சக்கரவர்த்தி ஆண்ட ஒரு சாம்ராஜ்யத்தில், கிட்டத் தட்ட 1270 ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் கிளர்ந்தெழுந்து புரட்சி செய்தார்கள் என்பது வியப்பிற்குரியது. அது பற்றிய கதை இது.
“கடந்த கால வரலாற்றைத் தெரிந்து கொள்ள முனை வது அவசியந்தானா? இறந்து போன காலங்களைப் பற்றித் தெரிந்து ஆக வேண்டியது தான் என்ன? இது வெறும் கால விரயந்தானே?” என்று ரசனையற்ற சில சிந்தனைச் சோம் பேறிகள் அடிக்கடிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வரலாற்று நிகழ்ச்சிகளின் திருப்பங்களுக்கும் முடிவு களுக்கும் எந்தச் சக்திகள் காரணமாயிருந்தன, என்பதைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் வரலாற்றைத் தெரிந்துகொள்வ தன் நோக்கம். பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே நிகழ்ந்தவைகளைத் தற்போதைய சூழ்நிலை யோடு ஒப்பிட்டுக் காணும் போது ஒருவித ஒற்றுமையைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவர்களுக்குத்தாம் வரலாறு உயிரற்றது.
கடந்த கால நிகழ்ச்சிகளுக்கு நிகழ் காலத்திலிருந்து உதாரணம் கொடுக்கலாம். நிகழ் காலத்திற்கான எச்சரிக் கையைக் கடந்த கால வரலாற்றிலிருந்து பெற்றுக் கொள்ள லாம்-இதுதான் காலத்தின் தத்துவம்.
மனித இனத்தின் நாகரிகம் என்பது ஒரு மகாநதி. அந்த நதியின் ஓட்டத்தைப் பற்றிக் கூறுவது மட்டுமே வரலாறு ஆகிவிடாது. அதன் நீரோட்டத்தில் மனிதர்களின் இரத்த மும், சதையும் எலும்புகளும் மிதந்து வருவதுண்டு. ஆனால், அதன் இரு கரைகளிலும் மனிதர்கள் வாழ்ந்த விதத்தையும் சிந்தித்த பாங்கையும், அவர்களின் ஆசா பாசங்களையும் வர்ணிப்பதுதான் உண்மையான வரலாறு. அதுதான் ரசனை மிகுந்தது.
இக்கதையைப் படிக்கும் அன்பர்களுக்குப் போகப் போக வியப்பும் திகைப்பும் ஏற்படலாம். சில நிகழ்ச்சிகள், உங்களுடைய கால கட்டத்தில் நிகழ்ந்தவைகளைப் போலத் தோன்றலாம்.
இதில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் இன்றையத் தலைவர்கள் சிலரை நினைவுபடுத்தும்.
இந்தியப்பிரதமர் திருமதி இந்திரா காந்தி, இந்நாட்டில் அடக்குமுறையைக் (Emergency) கொண்டு வந்த காலத்தை ஒட்டி இக்கதை எழுதப்பட்டது. ஆகவே, இந்தக் காலக் கட்டத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் கதையோடு ஒத்துப் போகும் விந்தையை உணரலாம்.
கிட்டத்தட்ட ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்களின் ஆட்சிக் காலச் சம்பவங்கள் சில இக்காலச் சம்பவங்களோடு ஒத்துவருவதைப் பல்லவ வரலாற்றைப் படித்த போது நான் உணர்ந்ததால் இந் நாவலை எழுதத் துணிந்தேன். எழுதி முடித்த பிறகுதான் பிரச்சினையே தோன்றியது. இந்நாவலைத் தொடர் கதை யாக வெளியிட இரண்டு பிரபல வாரப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் பயந்தார்கள். ஓர் ஆசிரியர், நாவலை வெளியிட விரும்புவதாகவும், ஆனால், நாவலில் சில மாறுதல்களைச் செய்தால் வெளியிடுவதாகவும், நாவலின் பாத்திரங்களும், சம்பவங்களும் இன்றைய அரசியல் தலைவர்களைச் சுட்டிக் காட்டுவதாக இருப்பதால் மாறுதல்கள் தேவை என்றும் எழுதியிருந்தார். எமர்ஜென்ஸி சமயத்தில் பெரும் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்ட போது மாபெரும் தியாகியும் தலைவருமான ஜெயபிரகாஷ் நாராயணன், “விநாசகாலே விபரீத புத்தி” என்று இந்திரா காந்தியைப் பற்றிச் சொன்னது கூட இந்நாவலில் ஓர் அத்தியாயத்தின் தலைப்பாகவே எழுதப்பட்டுள்ளது என்றும், நாவல் மிக அருமையாக இருப்பதாகவும், ஆசிரியர் குழுவினர் நாவல் முழுவதையும் ஊன்றிப் படித்ததாகவும் முடிவில், குழுவினர் இந்நாவலில் சில மாற்றங்களை எதிர்பார்ப்பதாகவும் கடிதம் எழுதியிருந்தார். நான் அதற்கு உடன்படவில்லை.
கடைசியில், ‘தினமணி கதிர்’ வாரப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர், திரு.கி.கஸ்தூரிரெங்கன் அவர்கள் நாவலை வெளியிடத் துணிந்தார்கள். நாவல் சிறப்புடன் அமைந்திருப்பதாகவும், இன்றைய அரசியல் சம்பவங் களோடு ஒத்துப்போகும் அபூர்வ ஒற்றுமை வியப்பளிப் பதாகவும், அதுவே இந்நாவலின் சிறப்பு என்றும் நாவலை ஏற்றுத் தொடர்கதையாக ‘தினமணி கதிர்’ பத்திரிகையில் வெளியிட்டார்.
நாவல் வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் இதற்கு எதிர்ப்பும், கண்டனங்களும் கடிதங்கள் மூலம் எனக்கு வந்துகொண்டிருந்தன.
இக்கால நிகழ்ச்சிகளும், அரசியல் நடவடிக்கை களும் பல்லவர் வரலாற்றோடு ஒத்துப்போனதற்கு நான் பொறுப்பாளி அல்லன்.
ஓ… !அந்தக் காலத்திலும் மனிதர்கள் நம்மைப்போல் தாம் நடந்திருக்கிறார்கள். கண்ணியத்தில், காதலில், காமத் தில், கயமையில், சிந்தனையில், மடமையில்-எல்லாத் துறைகளிலுமே.
எந்த யுகத்திலும் மனிதனின் ஆதார குணங்களும், ஆசைகளும் ஒன்று போல்தாமிருந்திருக்கின்றன. ஆகை யால், அவனுடைய நடவடிக்கைகளைப் புரட்டிப் பார்த் தால் எல்லாமே ஒன்றுபோல்தாமிருக்கும். நடைபெற்ற பாணியில்தான் வித்தியாசமிருக்கும். ஆதியில் வில்லும், அம்பும், கோடரியும் கொண்டு போரிட்டார்கள். இன்று துப்பாக்கியும், குண்டும் பயன்படுத்தப்படுகின்றன. அன்று, ஆட்சியைக் கைப்பற்ற மன்னர்கள் சதி செய்தார்கள். இன்று அரசியல்வாதிகள் சதி செய்கிறார்கள். சதியில் சிக்குண்டு உழன்றவர்கள் அன்றும் மக்கள்தாம்; இன்று உழல்பவர் களும் மக்கள்தாம்.
ஆகவே, வரலாற்றில் சம்பவங்கள் மீண்டும் வருவ தில் வியப்பில்லை-History repeats-இதனாலேயே சிந்தனையாளர்களுக்கு வரலாற்று நிகழ்ச்சிகள் எக்காலத்திலும் ரசனை உள்ளவைகளாக, உயிரோட்டம் உள்ளவைகளாக இருக்கின்றன.
இக்கதையில் தோன்றும் கதை மாந்தர்களில் பெரும் பாலோர் வரலாற்று மாந்தர்கள்தாம். ஒருசிலரே கற்பனைப் பாத்திரங்கள்.
இக்கதைக்கு ஆதாரமாக உதவிய நூல்கள்:-
1) History Of the Pallavas Of Kanchi-By R. Gopalan
2) Administrative and Social Life under the Pallavas- By Dr. Minakshi
3) Kanchipuram in Early Indian History-By Mahalingam
4) பல்லவர் வரலாறு-By Dr. M. இராசமாணிக்கம்
பழங்கால ஆதாரங்கள்:-
1.காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில் சுவற்றில் காணப்படும் சிற்பங்களும், விளக்கங்களும்.
- பல்லவ ஆட்சியில் வெளியிடப்பட்ட ‘உதயேந்திரப் பட்டயம்.’
இந்நாவலைச் சிறந்த முறையில் புத்தகமாக வெளி யிடும் திருவரசு புத்தக நிலையத்தாருக்கும் வானதி திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கும் என் நன்றி.
ர.சு. நல்லபெருமாள், போலீஸ் ஸ்டேஷன் தெரு,
பாளையங்கோட்டை – 627 002.
– மருக்கொழுந்து மங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: மே 1995, திருவரசு புத்தக நிலையம், சென்னை.