சித்தன்கேணி கலைநகரைச் கேர்ந்த திரு. நா. க. தங்கரத்தினம் அவர்கள் அராலி வடக்குச் செட்டியார் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு நாகர் கந்தையாவுக்கும் திருமதி மனோன்மணி கந்தையாவுக்கும் 8-6-35ல் பிறந்தார்.
‘நகுலன்’, ‘அராலியூரான்’, ‘கலை நகரான்’, ‘கொழும்பு மாமா’, ‘இராசாக்குட்டி’ என்னும் புனை பெயர்களுள் மறைந்திருந்து சிறுகதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் இவர், சமூகத்தொண்டனில் முதன் முதலாகக் கட்டுரை எழுதத் தொடங்கி, தினகரன், வீரகேசரி, ஈழநாடு. ஸ்ரீலங்கா, சுதந்திரன், விவேகி, கலைவாணி முதலிய பத்திரிகைகளில் ஏராளமான் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
1964-ம் ஆண்டு ஆவரங்கால் மத்திய சனசமூக நிலையத்தினர் நடாத்திய ‘வன்னியசிங்கம் ஞாபகார்த்த அகில இலங்கைச்சித்திரப் போட்டியில் ‘வெள்ளிப்பதக்கம்’ பரிசுபெற்ற இவர், 1953 ம் கோப்பாய் ‘வின்ஜர் ஆட்கிளப்’ நடாத்திய இன்ரமீடியேற் சித்திரப் பரீட்சையிலும் திறமையாகச் சித்தியடைந்துள்ளார். கொழும்பு நுண்கலைக் கல்லூரியிலும் (சனிக்கிழமை வகுப்பு) சிலகாலம் படித்துள்ளார்.
கலைகளில் மிகவும் ஆர்வமுள்ள இவர், 1964 ம் ஆண்டுல் நடை பெற்ற வடமாகாண ஆசிரிய’ கலாசாலைகளின் தமிழ் விழாவில் இடம்பெற்ற ‘கருகிய இலட்சியம்’ என்ற நாடகத்துக்கு இயக்குனராக இருந்ததோடு கதாநாயகன் பாத்திரமும் ஏற்றுத் திறம்பட நடித்துள்ளார். இவ்விழாவில் இவரே குதிரையாட்டமுமாடி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதலையும் பெற்றார். பதினைந்துக்கு மேற்பட்ட நாடகங்களில் கதாநாயகன் பாத்திரமேற்றுத் திறம்பட நடித்த இவர், இலங்கை வானொலி நாடகத்திலும் பங்குபற்றத் தவறவில்லை.
வட்டுக்கோட்டை திருநாவுக்கரசு வித்தியாசாலையினதும், வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியினதும் பழைய மாணவரான இவர். கொழும்பு முகத்துவாரம் கதீட்ரல் தமிழ்க் கலவன் பாடசாலையில் (19-1-59 – 5-1.64) ஐந்து வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். தற்போது கொழும்புத்துறை அரசினர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சியில் இறுதி ஆண்டு ஆசிரிய மாணவராக இருக்கும் இவர், மேற்படி கலாசாலையின் வருட வெளியீடான “கலைச்சுடர்’ சஞ்சிகைக்கு இதழாசிரியராகவும், ஆளும்மன்றத் தபால் மந்திரியாகவும் கடனயாற்றுகின்றார்.
– கலைமகள் பொன்விழாக் கதம்பம் (1932-1961), பொன்விழா வெளியீடு, முதல் பதிப்பு: ஏப்ரல் 1982, கலைமகள் காரியாலயம், சென்னை.
என்னுரையும் நன்றியும் – கன்னிப்பெண் (சிறுகதைத் தொகுப்பு), மே 1965
விஞ்ஞானம் விழித்திருக்கும் இவ்விருபதாம் நூற் றாண்டிலே சமுதாயத்தில் சீர்திருத்தக் கருத்துக்களையும் புதுமை எண்ணங்களையும் தோற்றுவித்து, மூடக்கொள் கைகளுக்குச் சாவுமணி அடித்துப் புதுவாழ்வு வாழ வைக்கும் பணியில், சிறுகதை இலக்கியம் சிறந்தவோர் இடத்தைப் பெற்று வருகின்றதென்றே சொல்லலாம்.
சமுதாயத்திலே காணப்படும் சீர்கேடுகளையெல்லாம் படம் பிடித்துக் காட்டி, மக்களை மக்களாகக் காண ஆசைப்பட்டேன். அவ்வழியே நெடுந்தூரம் மனத்தை ஓடவிட்டு, என்னால் இயன்றவரை ஒரு சில சீர்திருத்தக் கருத்துக்களைக் கதைகள் மூலம் வெளியிடத் துணிந்தனன். எனது துணிவின் ஒரு சிறு ‘துகள்’தான் இந்தக் ‘கன்னிப் பெண்’.
இதோ! உங்கள் கையில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் ‘கன்னிப் பெண்’ என் வாழ்க்கையில் நடந்தவை யல்ல. என் சமுதாயச் சிந்தனையின் ஓர் உருவம்தான் இக்கதைகள். உண்மையைச் சொன்னால் இவை என்னுடைய கற்பனைகள். நான்-நாமெல்லோருமே தினந் தோறும் காணும், கேட்கும் நிகழ்ச்சிகள்தாம்.
எனது கதைகளில் இடம் பெற்றிருக்கும் கதையின் ‘கரு’ உயர்ந்த தரமுள்ளவையாக இருக்கின்றன’ என்று பல எழுத்தாள நண்பர்கள் எனக்கு அறிவித்திருக்கின் றனர். ஏன்? எனது கதைகளுள் ஒன்றான ‘மானம்’ என்பது ‘ஈழநாடு’ பத்திரிகையில் வெளிவந்ததும் ‘இந்தக் கதை என் மகளைத் தாக்குகின்றது’ என்றும் ‘இந்தக் கதை என் மகளின் வாழ்க்கையையே கருவாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது” என்றும் எத்தனையோ பேர் எனக்கு அறிவித்திருந்தனர். ஒருவர் மாத்திரம் எழுதாது வெவ்வேறு ஊர்களிலிருந்து பலர் பலவிதமாக எழுதியிருப்பதால் எனது கதையின் ‘கரு’ எத்தனையோ பெண்களை குறிப்பாக மாணவிகளைத் தொட்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொண் டேன். எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலான மக்களின் வாழ்க்கையைத் திருத்தக்கூடியதாக ஒரு கதையின் ‘கரு’ அமைகின்றதோ அவ்வளவுக்கு அந்தக் கதை உயிரைப் பெறுகின்றது. எனது கதைகளுக்கும் உயிர் கிடைத்திருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
சிலர் என்து கதையில் இடம்பெறும்’ பாத்திரங்க ளைப் போன்ற பாத்திரங்கள் வாழ்க்கையில் இடம்பெறு கின்றனவா? என்று கேட்கின்றனர். உண்மையில் இப் ‘படியான பாத்திரங்கள் நிசவாழ்க்கையில் இடம்பெறு கின்றன. என்றே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
ஏன்? ‘மன்னிப்பு’ என்ற எனது கதையில் இடம் பெறும் பவானியைப் போன்ற பெண்மணிகள் இல் லையா? ‘அன்பின் வழி அது’ என்ற கதையில் வரும் குடி காரத் தியாகனைப் போன்ற குடிகாரர்கள் இல்லையா? ‘கற்புக்கரசி’ தந்த மான்குட்டி போன்ற கற்புடைய மாண விகளைக் காணவில்லையா? தாலி கட்டாததால் கன்னிப் பெண்ணென நினைத்துக் காதலித்தபின் ஏமாற்றமடை யும் ‘கன்னிப்பெண்’ தந்த தேவனைப் போன்றவர்களைக் காணவில்லையா? ‘எல்லாற்றை பெட்டையளும் காற்சட்டை போட்டவங்களோடை இங்கிலீசு பேசிக்கொண்டு போக, என்ரை பெட்டையை மாத்திரம் வேட்டி உடுத்தவரோடை தமிழ் பேசிக் கொண்டு போகச் சொல்லுறியளே” என்று சொல்லி ஒரு தாயானவள் தன் மகளைத் தமிழ்ச் சட்டம்பிக்குக் கலி யாணம் செய்துகொடுக்க மறுப்பதைச் சுதந்திரனில் வெளிவந்த ‘தமிழ்ச் சட்டம்பி’ எடுத்துக் காட்டுகின்றது. இப்படியான ஆங்கில மோகங் கொண்ட தாய்மார்களைச் சமுதாயத்தில் காணவில்லையா? ஆத்திரத்தால் மிருகத்தனமான செய்கைகளைச் செய்துவிட்டு மன்னிப் புக் கேட்கும் பத்மநாதன் மாஸ்ரர் போன்ற மாஸ்ரர்மார் தான் இல்லையா? காதலில் தோல்வியுற்றபின் ‘கன்னிப் பெண்’ணாகவே இருந்து சேவை செய்யும் அமராவைப் போன்ற ஆசிரியைகளைக் காணவில்லையா? உத்தியோக காரப் பெண்ணைக் கலியாணம் செய்து கஷ்டப்படும் நாகராசனைப் போன்றவர்கள் சமுதாயத்திலே உலாவ வில்லையா? வாசக நேயர்களே! நீங்கள்தான் இந்தக் கதைகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்களுக்கு மதிப் புக் கூறக்கூடியவர்கள். இதோ! உங்கள் கையில் இருக் கும் ‘கன்னிப் பெண்’ ணின் கதைகள் ஒவ்வொன்றையும் வாசித்து நீங்களே தரப்படுத்தி மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்…….
நான் ஓர் ஆசிரியனாகவோ எழுத்தாளனாகவோ இருப்பதற்குப் பலர் காரணமாவர். நான் ஐந்து வய துச் சிறுவனாக இருக்கும்போது என்னைவிட்டு என் தந்தையார் இறந்தபின்பு என்னை வளர்த்து ஆளாக்கிய பெருமை எனது பெரிய தகப்பனாராகிய திரு. நா.கதிர வேலுவுக்கும் காலஞ்சென்ற எனது பேரனார் திரு. 4. வேலுப்பிள்ளைக்கும் பாட்டியார் வே. அன்னப்பிள்ளைக்கும் உரியது. அவர்களுக்கு என் நன்றி. என்னைப் படிப் பித்து ஆசிரியனாக்கிய பெருமை எனது மாமனார்களான திரு.கே.எஸ். நாகமணி (கெட் ரீமேக்கர்) அவர்களுக் கும் திரு. வே. தம்பையா (தலைமையாசிரியர்) அவர்களுக் கும் என் நன்றி என்றும் உரியது.
1957-ம் ஆண்டு வெளிவந்த சமூகத்தொண்டன் தீபாவலி மலரில் “பெண்களும் சமூக சேவையும்” என்ற கட்டுரையை முதன் முதலில் வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தியவர் காலஞ்சென்ற உயர்திரு கே. பி. முத் தையா (விடிவெள்ளி) அவர்களாவர். அன்னாருக்குப் பின், சிறுகதை எழுதும்படி என்னைத் தூண்டிய சவாரித் தம்பர் புகழ் திரு. சி. சிவஞானசுந்தரம் (சுந்தர்.) அவர்கட்கும் எனது தொகுதி நல்ல முறையில் அமைவதற்கு அமைப்பு முறைகளைச் சொல்லித் தந்தவரும் மறுமலர்ச்சி எழுத் தாளர்களுள் முன்னணியில் திகழ்பவருமான எழுத்தாள அன்பர் திரு. அ. செ. முருகானந்தம் அவர்களுக்கும் என் நன்றி என்றும் உரியதாகும்.
இத்தொகுதியில் இடம்பெற்ற கதைகளில் அன்பின் வழி அது, கன்னிப்பெண், மானம், ஆத்திரக்காரனுக்கு, உண்மை ஒளி, தண்டனை ஆகிய கதைகள் ஈழநாட்டிலும் மன்னிப்பு தினகரனிலும் அந்தஸ்து ஒத்துவராது வீரகேசரியிலும் தமிழ்ச்சட்டம்பி சுதந்திரனிலும் கற்புக்கரசி, பண்பு- கலைவாணி’ யிலும் உங்களுக்குத்தான் சொந்தம் விவேகியிலும் வெளிவந்தவை. இப்பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள் கின்றேன்.
இத்தொகுதியினை நூல்வடிவில் வெளியிட ஆரம்பித்த போது, கையெழுத்துப் பிரதியினை மணிமணியான எழுத் துக்களில் எழுதித் தந்து என்னை ஊக்குவித்த, தமிழ்ச் செல்விகள் செங்கமலர் கந்தையாவுக்கும் சோதிமலர் கந்தையா வுக்கும் என் மனமுவந்த நன்றி என்றும் உரியது.
பத்திரிகைகளில் வெளிவந்த எனது சிறுகதைகளுள் பன்னிரண்டு கதைகளைத் தொகுத்து நூல்வடிவில் வெளி யிடும்படி என்னை ஊக்கப்படுத்திய திரு. நா. சிவகுரு ஆசிரியர் அவர்கட்கும் திரு. வே. கந்தசாமி (அஜந்தாஸ்) ஆசிரியர் அவர்கட்கும் திரு. சபா. கந்தசாமி ஆசிரியர் அவர்கட்கும் திரு.க. காசிநாதன் நெசவு ஆசிரியர் அவர்கட்கும் என் நன்றி.
நூலை அழகுபடுத்த – உயர்வடையச் செய்வது பேர றிஞர்களின் அருள்மொழிகளாகும். எனது தொகுதிக்கு ஆசியுரை தந்த பேராசிரியர் கலாநிதி க. கணபதிப்பிள்ளை அவர்கட்கும் “இலக்கியப் பணிபுரிய வாழ்த்துகின்றேன்” என்று வாழ்த்துரை தந்த விரிவுரையாளர் செல்வி சந்தனநங்கை கந்தப்பு அவர்களுக்கும் சிறப்பான முறையிலே அணிந்துரை தந்த ஈழநாடு ஆசிரியர் உயர்திரு கே. பி. ஹரன் அவர்களுக்கும் மதிப்புரை தந்த வைத்தீஸ்வர வித்தியாலய அதிபர் உயர்திரு சு.அம்பிகைபாகன் அவர்களுக்கும் ‘என்னைக் கவர்ந்த கன்னியே வாழ்க,” என்று வாழ்த்தொலி பாடித் தந்த எனது விரிவுரையாளர் பண்டிதர் சு.இராசையா அவர்களுக்கும் இலங்கையில் உள்ள பல பத்திரிகைகளில் நிலா, சித்தார்த்தன், இரவி, வீகே
ஆகிய புனைபெயர்களுள் மறைந்திருந்து ஆயிரக்கணக் கான சித்திரங்களை வரைந்து பிரபலமானவரும் இலங்கையிலும் சிறந்த சித்திரக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதை எனதுதொகுதிக்கு வரைந்த அட்டைப் படத் தின் மூலம் நிரூபித்துக் காட்டியவருமான ஓவியர் திரு.வீ. கனகலிங்கம் அவர்களுக்கும் எனது தொகுதி யின் அட்டைப் படத்தைக் கவர்ச்சியான மூறையிலே அச்சிட்டுத் தந்த கொழும்பு மெய்கண்டான் அச்சியந்திரசாலை யினருக்கும் என் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித் துக்கொள்கிறேன்.
இந்நூல் சிறந்த முறையிலே ஆக்கப்பெறுவதற்குத் தோன்றாத்துணை புரிந்த அன்பர்கள் ஆசிரிய மாண வர்கள் குறிப்பாக எழுத்தாள நண்பர்கட்கும் இத் தொகுதி புது மெருகுடன், வெளியாவதற்குக் கைதந்து அவ்வப்போது உதவிய எனது சிறிய தகப்பனார் திரு. க. வீரகத்திப்பிள்ளை அவர்கட்கும் என் நன்றியுரியது.
இக்கதைகளைத் தொகுத்து புத்தக உருவத்தில் வெளியிட ஊக்கமெடுத்து, உழைத்து, இன்று அழகிய புத்தக வடிவில் உங்கள் முன் சமர்ப்பிக்கும் கலைவாணி அச்சகத்தினர்க்கும் குறிப்பாக ஊழியர்கட்கும் எனது மன மார்ந்த நன்றியைக் கூறுகின்றேன்.
வணக்கம்.
“கலையகம் ” கலைநகர்,
சித்தன்கேணி, 15–06-1965.
நகுலன்.