விருதையில் ‘அம்பாள்’ என்று அழைக்கப்படும், பிரபல வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை அம்பாள் ராமசாமி அவர்களின் வழியில் வாழ்ந்து தொழிலும், தன் வாழ்விலும் உயர்வு பெற்றவர்.
தன் தந்தை வழி இலவச யோகா பயிற்சி மையப் புரவலர், யோகா பயிற்றுனர், ஆரோக்கிய விழிப்புணர்வுப் பேச்சாளர், தந்தை நிறுவிய அறக்கட்டளை மூலம் நல்ல பல இலவச சேவைகள் செய்து, விருதை மக்கள் போற்றும் சமூக ஆர்வலர் என்று இப்படி பன்முக ஆளுமை கொண்டவராய் திகழும் இவர் கட்டிடக் கலையிலும் முத்திரை பதித்தவர்.
செல்லும் இடமெல்லாம் ‘உணவே மருந்து’ என்று சூளுரைத்து தானும் ஒரு எடுத்துக்காட்டாய், ஏழுபதைக் கடந்தும், இளைஞராய் ஆரோக்கியம் பேணிவரும் சாதனையாளர்.
தன்னார்வமிக்க இலக்கிய சிந்தனையோடு தன் தந்தையைப் பற்றி ‘எனது அய்யா ஒரு சகாப்தம்’ என்றும், குறுங்கதைகளின் தொகுப்பாய் குறுந்தானியம் என்றும் ஏற்கனவே இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார்.
விருதை மலர் போன்ற நகர்வலம் வரும் பத்திரிகைகளில் ரோக்கிய நேரம்’. ‘ஆரோக்கியம் தேடுவோம்’. ‘இந்துக்களின் ராஜ்ஜியம்’ என்ற தொடர் கட்டுரைகளை எழுதி, மக்கள் மனங்களைக் கவர்ந்தவர்.
அனுபவமிக்க எழுத்தாற்றலையும், வரிகளுக்குள் சுவையான சொல்லாற்றலையும் ஒருங்கே இவருடைய படைப்புகளில் காண முடியும்.
அம்பாள். R. முத்துமணி
ambalanco@gmail.com
விருதுநகர் 626001.
கதையாகும் நினைவுகள் – எஸ்.ராமகிருஷ்ணன்
பரபரப்பான காய்கறிச் சந்தையை, விண்ணோக்கிய கோபுரத்தை. அலைந்து திரியும் பசுக்களைப் படம் வரையும் ஓவியர்களைக் கண்டிருக்கிறேன். அவர்கள் நாம் அறிந்த காட்சியை அறியாத கோணத்தில் அற்புதமாகப் பதிவு செய்கிறார்கள். கோடுகளின் மூலம் மட்டுமின்றிச் சொற்களாலும் அப்படியான சித்திரங்களை வரைய முடியும். காலச்சித்திரங்கள் என்ற இந்தக் கதைத்தொகுப்பு அப்படியானதே..
அம்பாள் ஆர். முத்துமணி எனது அன்பிற்கினிய நண்பர். தேர்ந்த வாசகர். புகழ்பெற்ற தொழிலதிபர். அவர் தனது மறக்க முடியாத நினைவுகளைக் கதைகளின் வடிவில் பதிவு செய்திருக்கிறார். இதனை நினைவுக் கதைகள் என்று சொல்லலாம்.
கதையில் வரும் நிகழ்வுகளின் வழியே விருதுநகரின் கடந்தகாலம் கண்முன்னே விரிகிறது. விருதுநகருக்கே உரித்தான பேச்சுவழக்கும், உணவுப்பண்பாடும், பழக்கவழக்கங்களும், வணிகக்குடும்பங்களின் வாழ்க்கை போராட்டங்களும் இதில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
வடக்கே வியாபாரத்திற்காகச் சென்ற மகனை நினைத்து வருந்தும் தாயின் மனதையும், மகன் வட இந்தியப் பெண்ணை மணந்து வீடு திரும்பும் போது ஏற்படும் குடும்பச் சூழலையும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார்
மதுரையில் நடைபெற்ற தாராசிங்கின் மல்யுத்தம் பற்றிச் சின்ன அண்ணாமலை புத்தகத்தில் படித்திருக்கிறேன். சாவியும் தனது பழைய கணக்கு நூலிலும் அதைப்பற்றி எழுதியிருக்கிறார். எனது தந்தையும் அவரது நண்பர்களும் இந்த மல்யுத்த போட்டிகளை நேரில் பார்த்திருக்கிறார்கள். அப்படித் தாராசிங்கின் மல்யுத்த போட்டியைக் காணச்சென்ற குமார் என்ற சிறுவனின் பார்வையில் போட்டி நடந்த விதம் மற்றும் தாராசிங்கின் வெற்றியை முத்துமணி விவரித்துள்ள அழகு பாராட்டிற்குரியது.
சர்க்கஸ் பார்த்த நாட்களை யாரால் மறக்க முடியும். தான் சர்க்கஸ் பார்த்த அனுபவத்தை மட்டுமின்றிச் சர்க்கஸ் கூடாரம் பிரிக்கபட்ட பிறகு அந்த மைதானத்தில் பரவியிருந்த வெறுமையினையும் யானை, குதிரை சாணங்களின் நெடி கலந்த காற்றையும் எழுதியிருப்பது சிறப்பானது.
சைக்கிளுக்கு லைசன்ஸ் வாங்கியது, டியூசன் வாத்தியார் வீடு, சீர்திருத்த திருமணம் நடப்பது, அந்தக் கால மகப்பேறு, வணிகம் நடந்த விதம் எனக் கதைகளில் வரும் நிகழ்வுகளை வாசிக்கும் போது பழைய புகைப்படங்களைக் காணும் போது ஏற்படும் மகிழ்ச்சி மனதில் உருவாகிறது.
அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
முன்னுரை
ஜம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள், தாத்தா,பாட்டி அத்தை மாமா போன்றவர்கள் பேசி வந்த வழக்குத் தமிழ், இன்றும் நினைவில்வரும் போதெல்லாம் நமக்குள்ளே எதிரொலித்த வண்ணமே தான் இருக்கின்றன. ஆச்சிக்களும் அப்பத்தாக்களும் நம் நினைவுகளின் ஒலி நாடாக்களில் பதிந்த குரல் வழியே வாழ்ந்தபடியே இருக்கின்றனர். அதை அப்படியே பதிவிடவென்று ஏதும் கருவிகள் இல்லா காலத்தே நம் மூளை அதி நுட்பமாய் பதிவு செய்திருக்கிறது.
கொச்சைத்தமிழ் உரைநடைக்கும், நடைமுறைக்கும் உதவாது என்று நாம் ஒதுக்கிவிட இயலாது. அத்தகைய மொழியோட்டத்தோடு நம் பண்பாட்டின் சுவடுகள், வாழ்வியல் முறைகள் பிணைந்து கிடக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னைத் தமிழ், கொங்கு தமிழ், நகரத்தார் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழென்று அங்கங்கே மக்களின் வாழ்வியலோடு ஒன்றிசைந்ததாய் காலகாலமாய் மொழிவழக்கம் நீடித்து வருகிறது.
நம் ஆச்சிக்களும் அப்பத்தாக்களும் பேசிப்பேசியே அந்த சொல் வழக்கில் மொழியையும் தமிழர் மாண்பையும் வளர்த்திருக்கிறார்கள். மொழி கொஞ்சம் அதன் போக்கில் நல்ல பல மாற்றங்களோடு அங்கே உரையாடல்களாய் சங்கமித்து நிற்கின்றன.
“செட்டிநாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி” யைத் தமிழினி எழுதி, அதை பழநியப்பா சுப்பிரமணியன் தொகுத்து வழங்கியுள்ளார். அதில் நகரத்தார் சொல் வழக்கு, உணவு வகைகள், சடங்குகள் மொழியோடு இசைந்த சரித்திர கால சம்பவங்கள் என்று அனைத்தும் குறிப்பிடப் பட்டுள்ளது.
கி. ராஜநாராயணனின் ‘வட்டார வழக்குச் சொல்லகராதி’ 1987யில் வெளியானது. அது குறித்து பெருமாள் முருகன் இவ்வகை அகராதி வேலைகளில் ஈடுபடுவோர் பெரும்பாலும் தம் வட்டாரத்தின்மீது ஈர்ப்பு கொண்ட படைப்பாளிகளாகவும் நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் கவனம் கொண்டவர்களாகவும் உள்ளனர் என்பதையும் நாம் கருதிப் பார்க்கவேண்டும் என்கிறார். அப்படி அந்தந்தப் பகுதிவாழ் சான்றோர்கள் தங்கள் வட்டார வழக்கிற்கு சொல்லகராதி படைத்துவிட்டால் அது காலகாலத்திற்கு அழியாத ஆவண நூல்களாய் பரிமாணிக்கும்.
நாம் பேசும் அத்தனை தமிழ் வழக்கு மொழிகளுக்குள்ளும் வட மொழிச்சொற்களும், கன்னடம், தெலுங்கு போன்ற சொற்களும் அதுபோல் என்றோ வந்த இஸ்லாமியம் மற்றும் பாரசீக மொழியினுடைய சாயலும் கலந்துதான் கிடக்கின்றன.
அதற்கான காரணம் பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்குப் பின் தமிழ் நாட்டை பல் வேறு வட தேசத்து மன்னர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர். சோழர்கள் பாண்டியர்களுக்குப்பின் மாலிக்காபூர், முகமது பின் துக்ளக், அதன் பின் விஜயநகரப் பேரரசு இப்படி அதைத் தொடர்ந்து தஞ்சையில் நாயக்கர் ஆட்சி, அதன் பின் மராத்தியர்கள் ஆட்சி ஏற்பட்டு சிரபோஜி மன்னர்கள் ஆண்டனர். இப்படியாக வேற்று தேசத்து மன்னர்களின் ஆட்சி வரலாற்றின் ஊடே நீண்டதாய் தமிழ்நாட்டில் பிரவேசித்தது. கர்நாடக முஸ்லீம் மன்னர்கள் ஆண்ட காரணத்தால் உருது சொற்களும் ஊடுருவியது.
வட்டார சொல் வழக்கு என்பது வெவ்வேறு உடை தரித்து அவரவர் சமூகம், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களுக்கேற்ப அங்கே நடைமுறையில் இருக்கக்கூடிய தொழில், பண்பாடுகள் இவை அத்தனையும் கொண்டுதான் நடப்பியல்போடு பரிமாணித்துக் கொண்டிருக்கிறது. மிகச் சாதாரணமாக நம் வீடுகளில் “ஜலதாரை”யில் இந்தத் தண்ணீரை கொட்டிவிட்டு வா என்றெல்லாம் சொல்லவதுண்டு. “ஜலதாரை” என்பது உண்மையிலேயே ஒரு சிறந்த அமைப்பாகும். கழிவுகளையெல்லாம் தள்ளிவிடுவது மட்டுமல்லாமல் வாஸ்துப்படி அது நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது. அத்தகைய “ஜலதாரை” என்ற வார்த்தை கூட வட மொழியைத் தழுவியதுதான். இதை சாதாரணமாக நாம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அது போல், ‘நொர்நாட்டியம்’ என்ற வார்த்தையைச் சரளமாகத் தென் பகுதிவாழ் மக்கள் பயன்படுத்தி வருகிறோம். அவள் நொரநாட்டியம் பிடித்தவள், நொரநாட்டியம் பிடித்தே பாழாய் போனாள் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. “நொர்நாட்டியம்” என்பது தூய தமிழ். நாட்டியத்தில் ஒருபகுதியில் மிகவும் நுணுக்கமாக துல்லியமாக செய்யக்கூடிய ஒருவித்தைதான் நொர்நாட்டியம். அப்படி ஒரு வார்த்தையை நாம் தொன்றுதொட்டு இந்த பகுதியில் உபயோகித்து வந்திருக்கிறோம். இதையெல்லாம் நாம் அறிந்துகொள்ளும்போது நம் முன்னோர்கள் ஒவ்வொன்றையும் புரியாமல் அறியாமல் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது.
அதுபோல் நம் உரையாடலில் அவ்வப்போது “ஆவலாதி”என்ற சொல் பயன்பாட்டில் உண்டு. குறைகூறிக் கொள்வது, எதிலும் குற்றம் கண்டுப்பிடிப்பது இதற்கெல்லாம் ஒரு விளக்கம் கொடுக்ககூடிய சொல் ஆவலாதி என்பது. ஆவலாதி ஒரு சுத்தத் தமிழாக இருந்திருக்கமுடியாது. ஆனால் மிக அற்புதமான சொல்லாக நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. நெல்லைத்தமிழ், மதுரைத் தமிழ் எல்லாவற்றிலும் அதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
“செத்த நேரம் இருந்து விட்டுப் போங்கள்” என்ற சொல்வழக்கு இன்னும் கூட பயன்பாட்டில் உள்ளது.
இதற்கு நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பு இல்லை. ஆனால், “செத்த நேரம்” என்பது ஒரு குறிப்பிட்ட நேரம் அல்லது ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய ஒதுக்கப்பட்ட நேரம் என்பதைக் குறிக்கும். “இருந்து விட்டுப் போங்கள்” என்பது “விட்டுச் செல்லுங்கள்” அல்லது “போய் வாருங்கள்” என்பதைப் போல ஒரு விடையிறுப்பாகும்.
உதாரணமாக, ஒரு திருமணத்திற்குச் சென்று, நீங்கள் சிறிது நேரம் இருந்துவிட்டு, பின் கிளம்பும் போது, “செத்த நேரம் இருந்து விட்டுப் போங்க” என்று சொல்லலாம்.
இந்த வாக்கியம் மரியாதை குறைவாகவோ அல்லது கண்டிப்பானதாகவோ இருக்காது, சூழ்நிலையைப் பொறுத்து எளிமையாக இருக்கலாம்.” இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் என்ன என்ற ஏக்கம் இருப்பதாயும் அதனுள் பொருள் கொள்ளலாம். இப்படி நூற்றுக்கணக்காய் மேற்கோள் காட்டலாம்.
சில வட்டாரச் சொற்கள் காலப்போக்கில் மறைந்திருக்கலாம். அதற்கான காரணமும் இருக்கிறது. வெளிநாட்டில் படிக்கச் செல்வதும் தூரத்து தேசத்தில் பணி நிமித்தம் குடியேறுவதுமாய் வாழ்க்கை வேறு விதமாய் கடந்த இருபது வருடங்களில் பெரும் மாற்றத்தைக் கண்டு வருகிறது. அதுவுமே வட்டார மொழிகளில் பாரம்பரியம் நடைமுறையில் காணாமல் போக காரணமாகிறது.
இவற்றையெல்லாம் நாம் இப்படி எடுத்து எழுதுவதாலும் இதை ஆராய்ச்சி செய்வதாலும் நமக்கு என்ன பயன் என்று கேள்வி எழலாம். ஒருவேளை இதை நினைவுகூராவிடில், நம் பண்பாட்டின் சுவடுகளும் இத்தோடு மறைந்து போய் விடலாம். இவை அனைத்தும் சடங்குங்கள் சம்பிரதாயங்களோடு இணைந்த சமூகத்தின் கட்டுக்கோப்பையும், ஒழுக்க நெறிகளையும் கற்பிக்கின்றன. நவீனமயமாக்கப் பட்ட இன்றைய திருமணங்கள் நாகரிகம் என்ற போர்வையில், சடங்குகள் சம்பிரதாயங்களை ஒதுக்கித் தள்ளி விட்டு, கும்மாளமும் குத்தாட்டமுமாய் மலிவானதொரு திருவிழா கோலம் பூண்டுள்ளதைக் காண நெஞ்சம் பதை பதைக்கிறது.
என் பால்ய பருவத்தில் கடந்து வந்த சம்பவங்களில் அத்தை, சித்தி, மாமா, ஆச்சி, ஆச்சப்பா மற்றும் பலரும் உரையாடிய வழக்குத் தமிழை நினைவிற்குள் இழுத்து வரும் போது, பதிவான குரல்களின் வழியே கிடைத்த சொற்களையும் வார்த்தைகளையும் பழமொழிகளையும்
முடிந்தவரை கதையோடு இணைத்துள்ளேன். நானாகிய குமார் என்ற என் கற்பனை கதாபாத்திரத்தை விரித்து அதன் வழியே பத்து பாகங்களுக்குள் கொச்சைத் தமிழையும், வட்டார வழக்கங்களையும் அங்கங்கே புனைந்துள்ளேன்.
பக்கங்கள்தோறும் வரிகளுக்குள் கற்பனை கலந்து, சம்பவங்கள் புனையப் பட்டுள்ளன. தனியுரிமை கருதி பாத்திரங்கள் வேற்று பெயரிடப்பட்டதும் இங்கு தவிர்க்க முடியாததாய் அமைந்திருப்பது காண்க.
இதை எழுத எனக்கு ஊக்கமளித்த என் அன்பான சகோதரிகளுக்கும் அவ்வப்போது படித்து என்னைத் திருத்திய என் மனைவி எல்லோராவிற்கும் என் நன்றிதனை சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன் அம்பாள் R. முத்துமணி
– காலச்சித்திரங்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 2025, மழைமான் பதிப்பகம், சென்னை.