கட்டிப் புரளு!
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: செம்மலர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2026
பார்வையிட்டோர்: 5,065
(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஏம்பா இப்படி? ச்சீச்சீய், கண்ணைத் துடைச்சுக்க. தெருவுலே போறவுக யாராச்சும் பார்த்தாகன்னா… சிரிக்க போறாக. நல்லாயிருக்கப்பா கூத்து… முழுத்த ஆம்பளையா இருந்துகிட்டு, இப்படிப் ‘பொல பொல’ன்னு கண்ணீர் வடிக்கவா செய்வாக? வெக்கக்கேடு!
எதுக்குப்பா அழுகணும்? நீ ஆம்பளைச் சிங்கம். ஒரு குடும்பத்தையே தோள்லே தூக்கிச் சுமந்து நடக்குற தெம்பு வந்துருச்சுங்கிறதுக்கு அடையாளம் தானப்பா, மீசை? மீசை வேற எதுக்குன்னு நெனைச்சே? சும்மா உதட்டுக்குக் குடை பிடிக்கவா? சும்மா அழகுக்குன்னா நெனைச்சே? இல்லே.
“நீயெல்லாம் ஒரு மீசை முளைச்ச ஆம்பிளை தானா”ன்னு ரோஷத்தை உசுப்பி விடுற மாதிரி கேக்குறதை பாத்துருக்கீயா? ஏன், அப்படிக் கேக்குறாகன்னு நெனைச்சே? மீசை முளைச்சிட்டாலே… ஒரு தகுதி- பொறுப்பு- மனதைரியம் வந்துருது. தகுதிக்குக் குறைவா, பொறுப்பில்லாம, கோழைத் தனமா எவனாச்சும் நடந்துட்டான்னா… அவனைப் பாத்துத்தான் அந்தக் கேள்வி கேப்பாக; “நீயெல்லாம் மீசை முளைச்ச ஆம்பளை தானா”ன்னு.
அட, மீசை மூளைக்காத பயலை ஊர்க் கூட்டத்திலே கூட வாயைத் திறக்க விடமாட்டாக. “சின்னப்பயக எல்லாம் கம்முன்னு கிடங்கடா”ன்னு ஒரே அதட்டுலே அடக்கிப் போடுவாக. எதுக்குன்னு நெனைச்சே? மீசை முளைக்காத பயலுக்கு, பொது இடத்திலே பேசுற தகுதி- வயசு- இன்னும் வரல்லேன்னு அர்த்தம். மீசை முளைச்சிட்டா… அவன் முழுத்த மனுஷன். ஒரு குடும்பத்தை ஒத்தையிலே தூக்கிச் சுமக்கிற தகுதியுள்ள மனுஷன். அதுதாம்பா அர்த்தம்.
நீ என்னடான்னா… மீசை முளைச்சு… கல்யாணம் முடிச்சு, ஒரு பிள்ளைக்கு தகப்பனாகப் போற நீ… கண்ணைக் கசக்கிறே? கண்ணீரை வடிக்கிறே? வெக்கமாயில்லே?
இப்ப என்ன… ஒன்னை அந்தமான் தீவுக்கா போகச் சொல்லியிருக்கு? இல்லே, முன்னைப்பின்னே தெரியாத வேத்து ஜனங்க கிட்டே போய் இருக்கவா சொல்றாக? இல்லியே. ஜெயிலுக்கா போறே? பெத்தவுக உத்தவுக- கூட உண்டு உறங்கி வளர்த்ததுக- பார்க்க முடியாத தூரத்துக்கா போறே? இல்லியே.
பொறந்து வளர்ந்து ஓடியாடி, விளையாடுன அதே ஊர்லே- அதே தெருவுலே- அதே வீட்லே- அதே மனுச மக்களோட இருக்கப்போறே. இதுக்கெதுக்கு அழுகணும்?
உங்க அய்யா ஒன்னை ‘வேற காய்ச்சு’ன்னு சொல்லிட்டாரேங்கிறதுக்காக, நீ எதுக்காக அழுவணும்? போன வருஷம் நீ ஆசைப்பட்டு கட்டுன பொண்டாட்டி யோட தனியா உலை வைச்சு, பாலைக் காய்ச்சி, சந்தோஷமா, “ஜாம் ஜாம்”னு தனிக் குடித்தனம் நடத்த வேண்டியதுதானப்பா? இதுக்காக எதுக்கு மயங்கணும். தயங்கணும்?
ஒன்னாலே நெதம் பத்து ரூபாய்க்கு ஒழைக்க முடியாதா? ஒம் பொண்டாட்டி, களை வெட்டப் போனா ஏழு ரூவா கெடைக்காதா? அதை வைச்சுக் கிட்டு இந்தப் பட்டிக்காட்டிலே குடும்பம் நடத்த முடியாதா? நீயென்ன விறகு விலைக்கு வாங்கப் போறியா, வீட்டு வாடகை தரப் போறீயா? தண்ணிக்கு ரூவா குடுக்கப் போறீயா? ஒன்னு மில்லே.
வாங்குற கூலியை வச்சுக்கிட்டு, அம்மனும் சாமியுமா நீங்க ரெண்டு பேரும் ஆக்கி, அவிச்சுப் பொங்கிப் பொரிச்சு சாப்பிட வேண்டியதுதானே!
அட, ஏண்டா இப்படிக் குமுறிக் குமுறி அழுகுறே! இந்தா. மொதல்லே அழுகுறதை நிறுத்து. ச்சே.. எனக்கே அசிங்கமாயிருக்கு.
வெவரம் தெரிஞ்ச நாள்லேயிருந்து தாயோட தகப்பனோட சாப்புட்டு வளந்த பய. அண்ணன் தம்பிகளோட, சண்டைச் சச்சரவு போட்டுக்கிட்டு சந்தோஷமும் சிரிப்புமாய்… ஒன்னடியும் மண்ணடியுமா திரிஞ்ச பய. அக்கா தங்கச்சிகளோட கேலி பண்ணி, சண்டை போட்டு கலகலப்பா ஒருகூட்டுக் குள்ளே வளந்த பய நீ. ‘அதுவே ஒலகம்’னு நினைச்சிருந்த பய. வாய்க்கு வாய் “நம்ம வூடு, நம்ம காடு, நம்ம துணிமணி, நம்ம ஆடு”ன்னு சொல்லிச் சொல்லியே பழகிப்போன பய.
இன்னிக்கு ஏ வீடு, ஏஞ்சொவரு. ஏ அடுப்பு, ஏங்கஞ்சின்னு பிரிச்சுப் பேச வேண்டியாகிப் போச்சேன்னு உருகி உருகி வழியுறே. உள்ளுக்குள் ஒடைஞ்சு நொறுங்கி கலகலத்துப் போறே.
தெரியத்தான் செய்யுது. எனக்கு ஒம் மனசு புரியத்தான் செய்யுது. அதுக்கு யார் என்ன பண்ண முடியும்? ஒண்ணும் பண்ண முடியாதே. நடக்குற ஜோலி நடந்துதானே தீரணும்?
இப்ப என்னை எடுத்துக்கோயேன்… நான் ‘வேற’ போக வேண்டி வரும்னு யாராச்சும் சொல்லியிருப்பாகளா? மனசாலே கூட நெனைச்சுப் பாக்க முடியுமா? எப்படி நினைச்சுப் பாக்க முடியும்? ஊர் உலகத்துலே எல்லோருக் கும் வாய்ச்ச மாதிரியா… நாங்க? எல்லோருக்குமுள்ள பொதுவிதி எங்களுக்குச் செல்லாதே! அந்த மாதிரி… நாங்க அனுபவிச்ச அவலங்கள்லேயும் சரி… எல்லாத்துலேயும் நாங்க ‘தனி மாதிரி’ யாச்சே!
தாய் தகப்பன் இருந்து எங்களை வளத்து ஆளாக்கி, கல்யாணம் காட்சி நடத்தி வைச்சுப் பாக்கவா செஞ்சாக? அந்தப் பாக்கியம் எங்களுக்கு லபிக்கலியே!
எங்க அப்பா சாகிறப்போ… அம்மா படுத்த படுக்கையிலே நிரந்தர நோயாளியா இருக்காக. நானும் தம்பியும் கண்ணு முழியாத குஞ்சுகளா நிக்கோம். எனக்கு வயசு பதினொன்னு. தம்பிக்கு வயசு அஞ்சு.
நோயாளியா கெடந்த எங்கம்மாவுக்கு வாரா வாரம் எங்கப்பா ஆரஞ்சுப்பழம், ஆப்பிள் பழம்னு வாங்கித் தருவாரு. எந்தம்பி வேணும்ங்கிற திம்பண்டங்களை எங்க கடையில இஷ்டம் போல எடுத்து எடுத்துத் திம்பான்…
இனிமே அம்மாவும் தம்பியும் என்ன செய்வாக? அவுகளை எப்படி காப்பாத்துறது? இதுதான் அப்ப எம் மனசுலே இருந்த ஒரே நினைப்பு.
அப்பா செத்த இழவுக்காக கடை பூட்டிக் கெடந்துச்சு. நா கடையிலே உக்காந்து ஏவாரம் பாப்பேன். க்ளாஸ்லேயும் பஸ்ட் ரேங். படிப்பும் நல்லா வரும்.
என்னையும் ஏந்தம்பியையும் ஆஸ்டல்லே சேத்து படிக்க வைக்கிறது, இருக்குற நெலத்தை பொறுப்புக்கு விட்டு, அதுலே வார ரூவாயிலே எங்கம்மாவை பராமரிச்சுக் கிறதுன்னு… சொந்தக்காரங்க முடிவு பண்ணிக்கிட்டு… கருமாந்திர நாளன்னிக்கு ஏங்கிட்டே கேட்டாக…
“என்னப்பா, நீயும் ஒந்தம்பியும் படிக்கப் போறீகளா….?”
நா மொட்டைத் தலையைத் தடவிக்கிட்டு தம்பியைப் பாத்தேன். அவன் ஏக்கத்தோட என்னைப் பாத்தான். எனக்கு அழுகை அழுகையா வந்துச்சு.
கடையிலே மனம்போல எடுத்துத் தின்னவன். ஆஸ்டல்லே சேத்தா, எந்தக் கடையிலே போய் எடுத்துத் திம்பான்? அஞ்சு பைசா பொரிகடலைக்கும், பத்து பைசா முறுக்குக்கும் ஏங்கிப் போய் நிப்பானே – ‘முகம் பாத்து மருகுவானே’ ன்னு நெனைக்க நெனைக்க ஏங்குலையே பதறி நடுங்கிச்சு.
சித்தப்பா மறுபடியும் கேட்டாரு…
“நீ நல்லா படிக்கிறவன். இப்ப கஷ்டப்பட்டு படிச்சுட்டா எப்படியும் நீ ஒரு உத்யோகத்துலே முன்னுக்கு வந்துரலாம். ஒனக்கு இருக்கிற அறிவுக்கு, நீ எம்புட்டோ ஒசரத்துக்கு முன்னேறிடுவே…”
“தம்பி?”
“அவன் படிப்பு வந்தா படிக்கட்டும். இல்லேன்னா டவுன்லே ஏதாச்சும் ஓட்டல்லே சேத்துருவோம்…”
மறுபடியும் தம்பியைப் பார்த்தேன்… சொந்தக் கடையிலே சுதந்திரமா தின்னு வளர்ந்தவன். ஒருத்தன் கடையிலே பெஞ்சு துடைச்சு, எச்சிக் கஞ்சிக்கு ஏங்கிப் போய் நிக்கவா?
மனசுக்குள்ளே ஒரு காட்சி.
‘அழுக்கு உடம்போட கிழிஞ்ச டவுசரோட சட்டி ஏந்திக்கிட்டு பசியோட கலங்கி நிற்கிற ஒரு சிறுவன்’ அறுபட்ட மனசு ஊமையா கதறித் துடிச்சது, அதிர்ச்சியிலே வெலவெலத்துப் போய்ட்டேன்.
உத்யோகமும் வேண்டாம். படிப்பும் வேண்டாம்…ஒரு மயிரும் வேண்டாம்… ஏந்தம்பிக்காக- அம்மாவுக்காக- ஒரு கடை இருந்தா போதும்.
கடை நடத்திட முடியுமா? நடத்தித்தான் ஆகணும், என்ன பாடுபட்டாச்சும் நடத்தியே ஆகணும்… தம்பிக்காக. ஏந்தம்பிக்காக…
“நா படிக்கப் போகலே’ ன்னு சொன்னேன். சித்தப்பாவுக்கு அதிர்ச்சி. திகைச்சுப் போனாரு. “என்னடா செய்யப்போறே?”
“கடை நடத்தப் போறேன்.”
ஏழு வருஷமா கடை நடத்துனேன். ஊரே பாத்து, மூக்குலே விரலை வைச்சது. டவுசர் போட்ட ஒரு பொடிப்பய பெரீய்ய, சாக்குக் கட்டை தலையிலே வைச்சுக்கிட்டு ராசபாளையம் சரக்கு வாங்கப் போறதைப் பாத்து, பெரிய பெரிய ஆளுக எல்லாம் ஆச்சர்யப்பட்டாக. வாயாரச் சொல்லிப் பெருமைப் படுவாக.
ராசபாளையத்து கடைக்காரங்களே என்னைப் பாத்து வியப்போட பாராட்டுவாக, “சில்லாங்குச்சி கணக்கா இருந்தாலும்… ஏவாரத்துலே கடுசான பயல்.”
அம்மாவும் செத்துப் போனாக. ஏழு வருசத்துலே கடை ஏவாரம் தேய்பிறையா மெலிஞ்சுக்கிட்டே வந்துச்சு. நட்டம் நட்டம்னு நல்லா கண்ணுக்குத் தெரிஞ்சாலும், ‘தம்பி, தம்பி’ன்னே துடிச்சிக்கிட்டிருந்த மனசோட… கடையை விடாம நடத்துனேன், வைராக்கியமா.
கடை சுத்தமா நொடிச்சுப் போச்சு, ரொம்ப பணக் கஷ்டம். எங்க பார்த்தாலும் கடன் தொல்லை. பிக்கல் பிடுங்கல். மனசைக் கொத்திப் பிடுங்குற அவமானம். அந்த வயசுலே தாங்க முடியலே. நச்செடுக்குற துன்பம். குருவி தலையிலே வைச்ச பனங்காயா வாழ்க்கை… யார் முகத்துலேயும் முழிக்க தெம்பில்லை. குன்னிக் குறுகி கூசிப்போய் அலைஞ்சேன்…
மனக்கஷ்டம் தாங்கலே. ஒரு நா, திருவேங்கடத்துலே ‘பக்டோன்’ பாட்டிலை வாங்கிட்டேன். யோசிச்சேன். மனசுக்குள் ஏகப்பட்ட குழப்பம்… பூசும்பம்… வுட்டுட்டு செத்துப்போன அம்மா அப்பாவை நெனைச்சு நெனைச்சு மனசுக்குள்ளேயே மருகுனேன்…. உதவி செய்ய வேண்டிய ஒறவுக்காரங்க எல்லாம், ஒதுங்கிக்கிட்ட சுயநலத்தை எண்ணி எண்ணி வெம்பி வெதும்பி அழுதேன்… சாவைச் சந்திக்கப் போற சஞ்சலம். வேற வழியேயில்லை. பக்டோனை அடிச்சிட வேண்டியதுதான்!
திருவேங்கடம் பஸ் ஸ்டாண்டுலே நின்னு யோசிச்சுக்கிட்டிருக்கையிலே-
காஞ்ச தலையோட கறுத்த உடம்போட ஒரு சின்னப் பையன் பிச்சை கேட்டு கையேந்தி வந்தான். எல்லார்கிட்டேயும் கேட்டுக் கேட்டு ஏமாந்து வந்தவன், ஏங்கிட்டேயும் கையேந்தினான்.
எனக்கு ஏந்தம்பியே அந்தக் கோலத்துலே வர்ற மாதிரி ஒரு நினைப்பு. மனசெல்லாம் கிடந்து துடிச்சது.
கால் ரூவாயை எடுத்துப் போட்டேன். கண்ணுலே ஒரு மலர்ச்சி முகத்துலே ஒரு வசந்தத் துளிர்ப்பு. என்னையெப் பார்த்தான். அப்புறம் போய்ட்டான். நா அவன் பின்னந்தலையையே பாத்துக்கிட்டிருந்தேன்…
‘பக்டோனை குடிச்சு… நா துன்பத்திலிருந்து விடுதலையாயிட்டா… ஏந்தம்பியும் இந்தக் கோலத்துலேதான் அலைவானோ…’
அந்த நெனைப்போட அதிர்ச்சியிலே மனசுலே இருந்து கொத்திப் பிடுங்கின குழப்பம், பூகம்பம் எல்லாம் சுத்தமா மறந்து போச்சு. பிச்சைக் கோலத்துலே… காத்துலே மிதக் கிற துரும்பா… ஏந்தம்பி தம்பி… தம்பி…
பக்டோனை கண்மாயில் வீசி எறிஞ்சுட்டு… கரைப் பாதையிலே ஊர் வந்து சேர்ந்துட்டேன். ‘ராஸ்கல்… வாழ்க்கைன்னா பெரிய கொம்பா? கட்டிப் புரளுவோமே! அதுவா, நாமான்னு ஒரு கை பாத்துருவோம்… தம்பிக்காக மல்லுக்கட்டிப் பாத்துருவோம்’ங்கிற வைராக்யம், மனசுலே.
தம்பியைப் பாத்துப் பாத்து அன்னிக்கு பூராவும் அழுதேன். ‘நா எதுக்காக அழுகுறேன்’னு தெரியாம… தம்பி தெகச்சு தெகச்சு என்னைப் பார்த்தான்…
அப்புறம் கடை நடத்த முடியலே.
காலு ஊனமாகிப் போயிருந்த எங்க ஆச்சிகிட்ட தம்பியை ஒப்படைச்சுட்டு, தஞ்சாவூருக்கு கடலை மிட்டாய் ஏவாரம் செய்யப் போனேன். ஏஞ் சத்துக்கு மிஞ்சுன வேலை. குச்சி போல இருப்பேன், நான். சைக்கிள் ஒயரம்கூட இருக்க மாட்டேன். கட்டிப் புரள்றதுன்னு முடிவு பண்ணுனப்புறம், இதெல்லாம் நெனச்சு தயங்குனா நடக்குமா?
சைக்கிள் நிறைய லோடு ஏத்திக்கிட்டு ஊரு ஊரா அலைஞ்சேன்…
அம்மன் பேட்டை, அப்பன் பேட்டை, கண்டியூர், திருவையாறு, ஈச்சங்குடி, திருக்காட்டுப்பள்ளி, மகாராச புரம்னு எம்புட்டு ஊர் அலைஞ்சாலும், மனசுக்குள்ளே தம்பிதான் நிப்பான். ஏவாரத்துலே லாபமோ நட்டமோ அதைப்பத்தியெல்லாம் கணக்குப் பாக்காம, மாசா மாசம் தம்பிக்கு நூத்தம்பது ரூவா மணியார்டர் நான் தவறாம அனுப்பிச்சிருவேன்…
ஒரே வருஷத்துல ஆயிரம் ரூவா கடனோட ஊர் வந்து சேந்துட்டேன். அப்புறம் ரெண்டு வருஷம். வீட்லே வறுமை சம்மணம் போட்டு உக்காந்துக்கிடுச்சு. கடன் தொல்லை, கால் நீட்டி படுத்துக் குறட்டை போட ஆரம்பிச்சிருச்சு. வெள்ளாமை விளைச்சல் இல்லை வெளைஞ்சாலும் வெலையில்லே. அண்ணன் தம்பி ரெண்டு பேரும் நஞ்சடிச்ச கெண்டைகளா மயங்கிக்கிட்டிருந்தோம்… ஏன்னு கேக்க ஒரு நாதியில்லே.
வீட்லே கஞ்சிக்கே திண்டாட்டமாயிருச்சு.
மதியம் பசியோட வீட்டுக்குள்ளே வருவேன். பானையைத் துழாவுனேன். நீச்சுத்தண்ணிக்குள்ளே கம்மஞ்சோத்து உருண்டை ஒன்னு மட்டும் கெடந்ததுன்னா… பெருமூச்சோட நிமிர்வேன். வயிறு நிறைய பச்சைத் தண்ணியைக் குடிச்சிட்டு வெளியே வந்துரு வேன். தம்பி நிப்பான்.
“டேய், நா சாப்டுட்டேன்.. ஒனக்கு ஒரு உருண்டை கெடக்கு. சாப்புட்டுக்கோ” ம்பேன்.
“கடிச்சிக்கிடை?”
“கடையிலே எதுனாச்சும் கடனா வாங்கிக்க.”
“சரி” ம்பான்.
வேறொருத்தர் கடைக்குப் போவான்.
வயிற்றுலே பசி எரியும். ஆனா, மனசுலே நிறைஞ்சு போன சுகம், எனக்கு.
அப்படித்தான் ஒரு நா, கடிச்சிக்கிடையாக வெங்காயம் வாங்க தம்பி கடைக்குப் போயிருக்கான். சரக்கு வாங்குற ஆளுக நாலைஞ்சு பேரு நிக்குற நேரத்துல… வெங்காயம் கேட்டுப் போன ஏந்தம்பிக்கு, ‘கடன் இல்லே’ன்னு கடைக்காரர் சொல்லிட்டாரு. அதுவும் முகத்தைச் சுண்டிக்கிட்டு, கடுசான வார்த்தைகளாலே கடிச்சுக் குதறிட்டாரு.
முகம் செத்துப் போய் வந்து சேர்ந்தான், கண்ணெல் லாம் நீர்கோர்த்து நின்னுச்சு. எனக்கு குலைபதறிப் போயிருச்சு. மனசெல்லாம் கொதிச்சுப் போய்’ ‘என்னடா’ன்னு விசாரிச்சேன்.
பதில் சொல்லக் கூட வாய்வராம்… அழுதான். எனக்கு உசுரே போன மாதிரியிருந்துச்சு. திக்கித் திணறி சொல்லி முடிச்சான். நா அப்படியே தகிச்சிப் போய்ட்டேன்…
ஏந்தம்பி… இப்ப சின்னவன் இல்லே… பதினைந்து வயசு பையன். மான அவமானம் தெரியுற வயசு. அவனுக்கா இந்த அவமானம்? பூவைப் போல மிருதுவான அவன் மனசுக்கா, இந்த அடி?
நெஞ்சுக்குள்ளே தீவைச்சமாதிரி எரிஞ்சது. ரோஷ உணர்ச்சி, பாச உணர்ச்சி எல்லாம் சேர்ந்து மனசு பதைச்சது. ஒரு வெறிபிடிச்ச கோபம். ‘நாம் கடை வச்சிருந்தா… ஏந்தம்பிக்கு இந்த அவமானம் நேர்ந்திருக்குமா?’
ஒரு வெறியோட கேட்டேன்:
“டேய்… மறுபடியும் கடை வைப்போமா?”
“கடையா? அதெப்படி முடியும்? ரூவா?”
“அதைப்பத்தி ஒனக்கென்ன? கடை வைச்சா நீயே பொறுப்பா இருந்து கவனிச்சுக்குவியா?”
“ஆகட்டும் கவனிச்சிக்கிறேன்.”
“வெளையாட்டு, ‘அது, இது’ ன்னு நெனைக்கக் கூடாது. என்னை எதிர்பார்க்கக் கூடாது. கடையை நீதான் முழுசா கவனிச்சுக்கணும்.”
“ஆகட்டும்”னு தலையை ஆட்டினான்.
அங்க, இங்க உருட்டிப் புரட்டி, ஆட்டைத்தூக்கி கூட்டிலே போட்டு, கூட்டைத் தூக்கி மேட்டுலே போட்டு… எப்படியோ அடுத்த மாசமே கடையை ஆரம்பிச்சாச்சு.
நானும் எளவட்டமாயிட்டேன். தம்பியும் வளர்ந்துட்டான். ஏவாரம் வச்சிருந்து நொடிச்ச அனுபவம்- ஏவாரமில்லாம வறுமையிலே வெந்து துடிச்ச அனுபவம்- ஒட்டுக்கம்புக் கஞ்சிக்கு கடிச்சிக்கிடை வாங்கக்கூட வழியில்லாம அவமானப்பட்ட அனுபவம்.. கொதிசட்டியிலே போட்டு வறுத்தெடுக்கப்பட்ட அனுபவம்…
இப்ப ஏவாரம்ங்கிற குதிரையை வசக்குற பக்குவம் எங்களுக்கு வந்தாச்சு. வசக்கியாச்சு. முதுகிலே ஏறி உக்காந்து லகானை சுண்டியாச்சு. அண்ணனும் தம்பியுமா ஏவாரத்துல கொடிகட்டிப் பறக்க ஆரம்பிச்சிட்டோம்.
அதுக்குப் பெறகு நடந்ததுதா… ஒனக்குத் தெரியுமே…
பசி பட்டினியோட கிடந்த காலத்துலே வெட்டி விலகிப் போன சொந்த பந்தமெல்லாம்… ஓடி ஓடி வந்து ஒட்டிக்கிடிச்சி.
மாட்டேன்னு நா ஒதுங்கிப் போனாலும்… விடாம விரட்டிப் பிடிச்சு… பொண்ணைக் குடுத்தாக. ‘இதுவரைக் கும் இப்படியொரு கல்யாணம் நடக்கவுமில்ல… கல்யாணத்துக்கு இம்புட்டு கூட்டம் வந்ததுமில்லே’ன்னு ஒவ்வொரு ஆளும் வாயைப் பொளக்குற மாதிரி, கல்யாணம் ‘ஜே ஜே’ன்னு நடந்து முடிஞ்சது…
அதுக்குப் பெறகும்கூட எனக்கு ஏந்தம்பிதான் பெரிசு. அவன் ருசிக்குத்தான் குழம்பு. அவனோட தேவையை அனுசரிச்சுத்தான் வீட்லே சகலமும்.
ஏவாரத்துலேயிருந்து கூட நா கொஞ்சம் கொஞ்சமா ஒதுங்க ஆரம்பிச்சேன்.
எதுக்கு? அவனும் ஒரு மனுசனாக ஆகவேண்டாமா? ஊர்லே அவனையும் ஒரு புள்ளியா- முழு மனுசனா… மதிக்க வேண்டாமா? அதுக்காகத்தான்!
அரிசி ஏவாரி ‘சாம்பிளை’க் கொண்ணாந்து ஏங்கிட்டே காட்டுனா… ‘தம்பியோட பேசிக் கோங்க.”
வெத்தலைக்கட்டு ஏவாரி ஏங்கிட்டே ‘எத்தனை கட்டு’ன்னு கேட்டா.. “தம்பிகிட்டே கேட்டுக்கங்க.”
ஒரு கல்யாணம் ஒரு இழவுன்னு ‘நல்லது, பொல்லதுக்கு’ யாராச்சும் மொத்தமா அரிசி சாமான்க கடனா கேட்டு ஏங்கிட்டே வந்து நின்னா… “தம்பிகிட்டே கேட்டுச் சொல்லுதேன்.”
இதெல்லாம் எதுக்காக? அவனுக்கும் ஒரு சுயமான பெயரை- மரியாதையை- ஏற்படுத் தணும்ங்கிறதுக் காகத்தான்.
ஏற்படுத்திட்டேன்… அதுலேயும் ஜெயிச்சிட்டேன்…
என்னோட மாமனாரே… அவரது அடுத்த மகளை அவனுக்குத் தர்றதாக மாறி மாறி தூது வுட்டாரு. அதுவும் சரிதான்னு முடிவுக்கு வந்து, தம்பி சம்மதத்தோட ஏந்தம்பிக்கு, ஏங் கொளுந்தியாளை ‘ஜாம், ஜாம்’னு கல்யாணம் பண்ணி வச்சேன். ஊரெல்லாம் ஆச்சரியப்பட்டாக, கிழவிகள் எல்லாம் பெருமையா பேசுனாக…”தாய் தகப்பனை பறிகுடுத்துட்டு கண்ணு முழிக்காத குஞ்சுகளா- பச்சை மண்ணுகளா- நின்னுதுக. ஆதரவில்லாம நின்ன அந்த ரெண்டும் உருண்டு, புரண்டு கஷ்டப்பட்டு, கையை ஊனி, காலை ஊனி எப்படியோ மேடேறிடுச்சுக. இனிமே அதுகளை பத்திக் கவலை என்ன.”
எங்க ஆச்சி அன்னிக்கு பூரிச்சுப் போயிருந்தாக, கண்ட கனவுகளெல்லாம் நினைவேறி… மனசெல்லாம் நெறைஞ்சு ததும்பி… முகமெல்லாம் சிரிப்பா கண்ணெல்லாம் கண்ணீரா…
அன்னிக்கு ஆச்சி இருந்த கோலம்… இந்தா, எங்கண்ணுக்குள்ளே இன்னும் அப்படியே இருக்கு…
எனக்கு அன்னிக்கு எம்புட்டு பெருமையா இருந்துச்சு! எம்புட்டு சந்தோசமா இருந்ததுச்சு, தெரியுமா?
நெலாவுலே மொத மொதல்லே கால் வைச்சவனுக்கும், எவரெஸ்ட் சிகரத்தை மொதமொதல்லே எட்டிப் பிடிச்சவனுக்கும் இருந்தாப் போல அம்புட்டுச் சந்தோசமும் பெருமையுமா இருந்துச்சு.
எங் குடும்பமும், தம்பி குடும்பமும் ஒன்னா இருந்துச்சு. அது ரெண்டா ஒடையும்னோ… வேற வேற ஆகும்னோ யாராச்சும் நெனைச்சாவது பார்த்துருப் பாங்களா? அட, கனாக்கூட கண்டுருப்பாங்களா?
இல்லியே! ஊரெல்லாம் என்ன பேசுனாக? ஒனக்குத் தான் தெரியுமே! “அவுக ரெண்டு பேரும் அண்ணன் தம்பிக, அவுகளுக்கு வாய்ச்சவுகளும் அக்கா தங்கச்சிக. ஒன்னுக்கு ஒன்னு பிடிப்பா- பிணைப்பா- எப்பவும் ஒரே குடும்பமா, ஒத்துமையா இருக்கப் போறாக. அவுகளுக்குள்ளே பேதம் வாரதுக்கு என்ன பிரச்னை இருக்குது?”
ஆனா… என்ன ஆச்சு? ரெண்டு வருசம்தான் தாக்குப் பிடிச்சது. வீட்டுக்குள்ளே ஒரே சண்டை, சச்சரவு, பூசல், புகைச்சல். குமுறலும், அழுகையுமா… அங்கலாய்ப்பும் சலசலப்பும்…! நிம்மதி காணாமல் போயிடுச்சு.
யோசிச்சுப் பாத்தேன்… ஒத்துமையைவிட உறவு முக்கிய மில்லியா? ஒன்னா இருக்குறதைவிட… பாசத்தோட இருக்குறது, முக்கியமில்லியா? ஒரே வீட்டுக்குள்ளே பகையை வளக்குறதைவிட… வேற வேற வீட்லே இருந்து ஒறவை வளக்குறது, புத்தி சாலித்தனமில்லியா?
சண்டைக்கும் சச்சரவுக்கும் என்ன காரணம்னு யோசிச்சுப் பார்த்தாலும்… பெரிசா காரணம் எதுவும் தென்படலை. அற்ப சொற்ப விஷயம் கூட… சின்னச் சின்ன சொல்கூட பூசலையும் புகைச்சலையும் வளர்த்துடுது…
அப்ப வேற போறதுதான் புத்திசாலித் தனம்னு… முடிவு பண்ணினேன். தம்பிகிட்டே கேட்டேன். சம்மதிச்சிட்டான்.
தனியா வேற வீட்லே அடுப்பு மூட்டுற அன்னிக்கு நா பட்ட வேதனை… எனக்குள்ளே பொங்கிப் பெருகி வழிஞ்ச பழைய நினைப்புகள்… செத்துப் போன அம்மா அப்பாவை நெனைச்சு ஏங்கிய ஏக்கம்… நானும் தம்பியுமா சின்ன வயசுலேயிருந்து சேர்ந்து அனுபவிச்ச கஷ்டங்க, பசி பட்டினி நாளுக… அவமானங்க… கல்யாணம் காட்சிக எல்லாமே பொங்கிப் பொங்கி வந்துச்சு. மனசே அடைச்சுப் போன மாதிரி திணறிச்சு. அழுகை அழுகையா வந்துச்சு. ஆனா அழலே. மனசுலே உள்ள ‘வேக்காடு’ களையெல்லாம் மனசுக்குள்ளேயே அடக்கிக்கிட்டேன். அழலே. வெக்கமாயிருந்துச்சு…
அரும்பாடுபட்டு வளர்த்த தம்பியை விட்டுட்டு இப்படி நிரந்தரமா வெலகியிருக்க வேண்டியதாகிப் போச்சேங்கிற நெனைப்பு மனசை அறுத்துச்சு…
தண்ணியை குடிச்சு வவுத்தை நிரப்பிட்டு, இருக்குற ஒத்தை உருண்டையை தம்பிக்கு விட்டுட்டு வந்தேனே… இன்னிக்கு-
அவன் கஞ்சி வேற- ஏங்கஞ்சி வேற. என் சந்தோசம், கஷ்டம் என்னோட- அவன் சந்தோசம், கஷ்டம் அவனோட…
தாயா புள்ளையா வளர்ந்து வந்த நாங்க, இப்ப வாயும் வயிறுமா வேற வேற… கொடுமையை பாத்தீயா?
அதான்… நம்ம மண்ணுலே வாழ்ந்து குப்பை கொட்டுன பெரியவுக பழமொழியா சொல்லி வைச்சாக… “தாயானாலும் புள்ளையானாலும் வாயும் வயிறும் வேற வேற” ன்னு.
இன்னொரு பழமொழியைக் கேளு “அஞ்சு வயசு வரைக்கும் அண்ணனுக்குத் தம்பி; பத்து வயசுக்கு மேலே பாகத்துக்கு பங்காளி” கேட்டீயா கதையை?
இதுதான்… நாம வாழ்ற சமுதாயத்தோட நியதி.
இதிலேயிருந்து நீ மட்டும் தப்பிக்கணும்னு நெனைச்சா… நடக்குமா? தப்பிக்க முடியாதே!
இதுக்காக அழுது என்ன பிரயோசனம்? அழுது ஆகப் போறது ஒண்ணுமில்லே. புரிஞ்சு நடந்துக்கிறது தானே, புத்திசாலித்தனம்!
தாயா புள்ளையா ஒன்னடியும் மண்ணடியுமா மனுச் மக்களோட ஒன்னா வாழணும்னு நீ ஆசைப்படுதே… நீ மட்டுமா ஆசைப்படுதே? எல்லோருக்கும் அதுதான் ஆசை. ஞாயமான ஆசைதான். மனுச இனத்துக்குரிய இயல்பான ஆசைதானப்பா…
அந்த ஆசையைத்தான் இந்தச் சமூகம் அறுத் தெரியுதே! அண்ணனுக்குத் தம்பியைப் பங்காளியா-பகையாளியா மாத்துதே! தகப்பனையும் மகனையும் வாயும் வயிறுமா வேறு வேறாப் பிரிச்சுப் பிரிச்சுத் துண்டாக்கிப் போடுதே… என்ன செய்றது?
இதை நாம் தாங்கித்தான் ஆகணும், இதோ என்னைப்பாரு, நா தாங்கிக்கலியா…? எப்படி வளர்ந்த நாங்க… இன்னிக்கு இந்தப் பிரிவை ஜீரணிச்சுக்கலியா? நீயும் தாங்கித்தான் ஆகணும். வேற வழி இல்லே.
இன்னொரு விஷயத்தையும் கவனி.
இந்தா இருக்கே… வேப்பமரம். இதிலே எத்தனை கெளைக இருக்கு? எத்தனை எலைக இருக்கு? எல்லாமே ஒரே விதையிலேயிருந்து வந்தது தானப்பா.
விதை விதையாவே, செடி செடியாவே இருக்குறதை விட, இப்படி மரமா கெளைகளா பிரிஞ்சு வளர்ந்து, பூத்துக் காய்க்கிறதுதானே நல்லது?
அப்படித்தானப்பா… உங்கய்யா ஒன்னை ஒரு கெளையா பிரிஞ்சு வளரச் சொல்றாரு. அது தப்பா? நல்லதுதானே!
கண்ணைத் துடைச்சுக்க. இனிமே அழக்கூடாது. அசிங்கம்… மீசை மூளைச்ச ஆம்பளை மாதிரி தைரியமா நில்லு. வாழ்க்கையோட கட்டிப் புரளு. உழைச்சுச் சம்பாரி. அம்மனும் சாமியுமா ஆக்கி அவிச்சுச் சாப்பிடுங்க. சந்தோஷமோ வருத்தமோ… நீங்க ஒத்துமையா இருந்து பூத்துக் காய்ச்சு… புது விதைகளை, செடிகளை உரு வாக்குங்க… அதுவும் கெளை கெளையா வெடிச்சு வளரட்டும்..
முகத்தைத் துடைச்சுட்டு, புது மனுஷனா கெளம்பு. கிறுக்குப் பயலைப் போல புலம்பிக்கிட்டு நிக்காதே. நடக்க வேண்டிய ஜோலிகளைப் பாரு. என்ன போய்ட்டு வாரீயா? போ…
எனக்கும் நெறைய ஜோலிக இருக்கு.
– செம்மலர், ஏறக்குறைய 1985.
– விரல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1995, கங்கை புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
