ஒழுக்கம் உயிரினும்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 7, 2025
பார்வையிட்டோர்: 5,045 
 
 

அன்று காலை பால் ஊற்றிய துரை ஜெகன் ஸாரிடம் முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்று சொன்னதும் அவரை  மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்ற ஜெகன்  திண்ணையில் அமரவைத்து தானும் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

“சொல்லுங்க துரை, என்ன விஷயம் ?” 

“ஐயா! எனக்கு மூணு பொண்ணுங்க. மொதலாவது தறுதலையா தான் இஷ்டப்பட்ட வனையே கல்யாணம் பண்ணிக்கிட்டது. ரெண்டாவது நாங்க பார்த்த மாப்பிள்ளைய கட்டிக்கிட்டு சொகமா இருக்கு..” 

ஜெகன் இடைமறித்தார். “துரை , ஏன் உங்க முதல் பெண்ணைப் பத்தி இப்படி பேசறீங்க? தான் இஷ்டப்பட்டவனையே கட்டிக்கிட்டாலும் நல்லாத்தானே இருக்கா!  அதோட நீங்களே முன் நின்னு கல்யாணம் பண்ணி வச்சீங்க. இதுல ஒழுக்கம் காப்பாற்றப்பட்டிருக்கு. அப்புறம் ஏன் சிலுத்துக்குறீங்க?”

“என்னதான் இருந்தாலும் ஜாதகம் பார்த்து நாங்க சொன்ன மாப்பிள்ளய அவகட்டிக்கி ட்டிருந்தா எங்களுக்கு சந்தோஷமாயிருந்திருக்கும். அதுக்குச் சொன்னேன்.சரிங்க இப்போ விஷயத்துக்கு வரேன். என் மூணாவது பெண் இப்போ பெரிய  குண்டத் தூக்கித் தலை மேல போடுறா!” 

“அப்படியா?” 

“ஆமாங்க! அவளும் ஆசைப்பட்டவனையேக் கட்டிக்கப் போறாளாம்! அதனால தனக்கு மாப்பிள்ளை பார்க்க வேணாம்னு தீர்த்துச் சொல்லிட்டா. மொதலாவது வழி காண்பிச்சது. இதுவும் அது வழியிலேயே போகணும்னு ஒத்தக்காலுல நிக்குது. என் நிலமைய பார்த்தீங்களா.?” 

“அது சரி. பையன் யாரு?” 

“அதை ஏன் கேட்குறீங்க ? என் மொதல் பெண்ணோட கொழுந்தன்!” 

“அடி சக்கை! கதை அப்படி போகறதா ?” என்றவர் ” ஆமாம் உங்க முதல் மாப்பிள்ளை என்ன பண்றார்?” என கேட்டார்.

“சொந்தமா சலூன் வச்சிருக்காப்பல. சமீபத்துல ஏ.சி. பண்ணியிருக்கானாம்!  அண்ணன் கூடவே தம்பியும் சலூன்ல வேலை செய்யுறதாக் கேள்வி!” 

“பொய் சொலல்லை, திருடல்லை. சொந்தமாக சலூன் தொழில் செய்யறாங்க.  இதுல கேவலப்படும் அளவுக்கு ஒண்ணுமில்லே.. சரி, சொந்தத்தில வீடு இருக்கா?” 

“இருக்குங்க. கீஷ் போர்ஷன வாடகைக்கு விட்டிருக்காங்க! மேல அவங்க குடியிருக்காங்க!” 

“நல்ல வசதிதானே! ஏன் தயங்கறீங்க?” 

“அதுக்கில்லீங்க! மொதல் பெண்ணோட வீட்டுக்கே என் மூணாவது பெண்ணும் போகணு மான்னு மனசு சஞ்சலப்படுது” 

“இதோபாருங்க துரை! நீங்களும் உங்க வீட்டம்மாவும் ஒத்துக்கிட்டா யார் என்ன சொல்ல முடியும். எதையும் மனசில வச்சிக்காம மேற்கொண்டு ஆகவேண்டிதப் பாருங்க. உங்க சம்மதமில்லாம உங்கப் பொண்ணு இழுத்துக்கிட்டு ஓடினால்தான் ஒழுக்கம் கெடும். ஊர் கண்டபடி பேசும். மற்றப்படி எதுக்கும் கவலைப்படாதீங்க!” 

ஜெகனின் பேச்சு இப்போது துரையின் மனத்தை மாற்றி தெளிவடையச் செய்தது.   .       ” “சரிங்க….அப்போ நான் கெளம்புறேன். நீங்க சொல்றமாதிரி நான் நடந்துக்குறேன். வரேன்ங்க!” 

துரை போவதையே பார்த்துக் கொண்டிருந்தார் ஜெகன் பெருமூச்சு விட்டபடி.

அன்று தனக்கு யாராவது இப்படியொரு யோசனை கூறியிருந்தால் தன் பெண்ணோட வாழ்க்கை சீராய் இருந்திருக்கும்.

காதலித்தவனை கட்டக்கூடாது என வன்மையாகக் கண்டித்து, பெண்ணின் மனத்தை ஒடித்து வலுக்கட்டாயமாக ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்து வைத்து ஆறுமாதம்கூட ஆகவில்லை.

புருஷனை ஏர் கிராஷில் பறிகொடுத்து விட்டு பிறந்த வீட்டுக்கே வந்து சேர்ந்து விட்டாள்.

காதலில் ஒழுக்கம் தவறவில்லை. கண்ணியம் தவறவில்லை. அவளின் பரிசுத்தமான காதலை அங்கீகரித்திருந்தால் இன்றைக்கு அவளின் வாழ்வு வேறு மாதிரி இருந்திருக்கும்.

‘ஹூம் என்ன செய்வது? விதி வலியது. ஒழுக்கத்திற்கும் கண்ணியத்திற்கும் அப்பாற் பட்டது. விதியை யாரும் வெல்ல முடியாது’ 

வேதனையுடன் நினைத்துக் கொண்டார்  ஜெகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *