ஒரே பால் இரண்டு பாத்திரம்
கதையாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 8, 2024
பார்வையிட்டோர்: 10,146
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“அனாதையாகக் கிடந்த உன்னை இவ்வளவு காலம் வளர்த்து வந்தவன் நான். இல்லை நீ கிடந்த குப்பைத் தொட்டியில் மேலும் கொஞ்சம் குப்பையைப் போட்டு நான் மூடியிருந்தால், அப்போதே உன் கதை முடிந்து போயிருக்கும். மரியாதையாக நான் சொல்வதற்கு நீ ஒப்புக்கொள்,” என்று பயமுறுத்தினான் விஜயசிங்.
“அப்படியே செய்திருக்கலாமே! இப்படி வளர்த்துவிட்டு இந்த அநியாயத்துக்கு உடன்படச் சொல்கிறீர்களே? யாரோ ஒரு பிச்சைக்காரனுக்காவது கட்டிக் கொடுங்கள். ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டவள் என்ற பெயரோடு, பிச்சை எடுத்தாவது வாழுவேன்,” என்று கெஞ்சினாள் தேவி.

“உனக்கு தேவி என்று பெயர் வைத்திருப்பதால் மிகவும் பவித்திரமானவள் என்று கருதிவிடாதே! ஐந்து பேரை மணந்து கொண்ட பாஞ்சாலி தேவி இல்லையா? நான் உன்னைக் கெடுக்கப் போவதில்லை. அதாவது, கெடும்படி விடப் போவதில்லை. ஒரு பணக்காரனுக்கு உன்னைக் கட்டி வைப்பேன். அவன் சாந்தி முகூர்த்தம் செய்யும் முன்னாலேயே, அவன் போட்ட நகைகளோடு உன்னைக் கூட்டிக் கொண்டு ஓடிவிடுவேன். இதில் சொத்தும் கிடைக்கிறது; நீயும் கெடுவதில்லை. அப்படித்தான் இப்போது ஒரு மாப்பிள்ளை பார்க்கிறேன். அழாதே; ஆத்திரப் படாதே. நான் உன்னைக் காப்பாற்றுவேன்; நீ என்னைக் காப்பாற்று,” என்று சொல்லிவிட்டு வெளியேறினான் விஜயசிங்.
நாற்காலியில் கை வைத்த படியே விக்கி விக்கி அழுதாள் தேவி.
விஜயசிங், ‘சிங்’ என்று பெயர் வைத்துக்கொண்டானே தவிர, அவனும் தமிழன் தான்.மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு எட்டு வயதாக இருக்கும் போது குடும்பக் கஷ்டம் தாங்காது, களளத்தனமாக ரயிலேறி வடக்கே போயவிட்டான். இங்குமங்குமாக அலைந்து திரிந்து கடைசியில் மத்தியப் பிரதேசத்தில் கொள்ளைக்காரர்களிடத்தில் சிக்கி கொண்டான். அவர்கள் அவனது பெயரை விஜயசிங் என்று மாற்றிப் பயிற்சி கொடுத்தார்கள்.
பதினைந்து வருஷங்கள் அவர்களோடு வசித்துவிட்டுக் கை நிறைய பணத்தோடு சென்னைக்கு வந்த விஜயசிங் அடையாறு காந்தி நகரில் ஒரு பிரம்மாண்டமான பங்களாவை வாடகைக்கு எடுத்தான். அவனோடு கூட இரண்டு மத்தியப் பிரதேச கொள்ளைக்காரர்களும் வந்திருந்தார்கள். இந்த மூவரும் தங்களுக்குள் இந்தியிலேயே பேசிக் கொள்வார்கள். அதனால் இவர்களை அக்கம் பக்கத்தவர்கள் வடநாட்டுக்காரர்கள் என்று நினைத்துவிட்டார்கள்.
அவர்கள் வாங்கிய காரையும், அங்கிருந்த பரபரப்பையும் பார்த்தவர் அவர்கள் கோடீஸ்வரக் குடும்பத்தினர் என்றே மற்றவர்கள் நினைத்து விட்டார்கள்.
இந்த நிலையில்தா விஜயசிங்கின் பங்களாவுக்கு எதிரே இருந்த குப்பைத் தொட்டியில் பத்து நாட்களே ஆகியிருந்த ஒரு இளம் சிசு அழுதுகொண்டு கிடந்தது.
அதிகாலையில் உலாத்துவதற்காக வெளியே வந்த விஜயசிங் அந்த சப்தத்தைக் கேட்டுப் பரிதாபப் பட அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பித்தான். அதற்கென்று தாதியையும் நியமித்தான்.
இளம் விதவையான அந்தத் தாதி மிகவும் அழகாக இருப்பாள். அவள் கணவன் இறக்கும்போது ஆறு மாத கர்ப்பிணி. அடுத்த நான்கு மாதங்களில் குழந்தை பிறந்து பத்து நாட்களிலேயே இறந்து விட்டது. ஆகவே பால் கொடுக்கும் சக்தியுடையவளாக இருந்தாள்.
குழந்தை வளரவளர அந்தத் தாதி வசுந்தராவின் மீது விஜயசிங்குக்குக் காதலும் வளர்ந்து அவளை மனைவியாக்கிக் கொண்டான்.
கொள்ளைக்கார விஜயசிங் கடத்தல் பொருள்களை வாங்கி விற்றுப் பணம் திரட்ட ஆரம்பித்தான். ஆனால் குழந்தை தேவியை மட்டும் ஒரு நோக்கத்துடனேயே வளர்த்தான்.
அந்த நோக்கம்தான் அவளை ஒவ்வொருவருக்காகக் கட்டி வைத்துப் பணம் பறிப்பதென்பது.
சென்னையின் மிகப் பெரிய ஹோட்டல் ஒன்றில் வந்து தங்கியிருந்தார் கோவையைச் சேர்ந்த இளம் மில் அதிபர் ராயப்பன். ஆடம்பரப் பிரியர், அழகை ரசிப்பதில் வல்லவர், அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவிடுவார். தனக்குத் தோதான பெண் கிடைக்கும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என்று சபதம் செய்திருந்தார்.
தானும் ஆடம்பரமாக உடையணிந்துகொண்டு, தன் மகளையும் அலங்காரம் செய்யச் செய்து அந்த ஹோட்டல் விழாக்களுக்கு அழைத்து வருவான் விஜயசிங்.
தேவி உண்மையிலேயே ஈடு இணையில்லாத அழகிதான். இலக்கியங்களில் வருணிக்கப்படுவதுபோல் அவள் இடையும் நடையும் கண்கொள்ளாக் காட்சியாகும். மேகங்கள் வானத்தில் அசையாமல் நின்றுவிட்டால், இந்திரன் அவளைக் கண்டு சொக்கிவிட்டதாகக் கொள்ள வேண்டும். இதுவரை எந்தச் சினிமாவிலும் அத்தகைய பேரழகி வந்ததில்லை.
பலர் அவனிடம் பேரம் பேசிப் பார்த்தார்கள். ‘மூன்று லட்சம் ரூபாய் ரொக்கம்; இரண்டு லட்ச ரூபாய் நகை’ என்ற பிடியிலேயே அவன் இருந்தான். சிலர் தயங்கினார்கள், பணம் இல்லாத சிலர் மயங்கினார்கள்.
துணிந்து இறங்கியவர் கோவை மில் முதலாளி ஒருவரே.
வருகின்ற மடை பெரிதாக இருந்தால் போகின்ற மடை பெரிதாகத்தானே இருக்கும்! எப்படிப் பணம் வந்தது என்று தெரியாமல் வரப் பெற்றவர்கள், எப்படிச் செலவழிப்பது என்று தெரியாமல் செலவழிக்கிறார்கள்.
மாப்பிள்ளை அவளை நன்றாகக் கவனிக்கும்படி ஒளிவிளக்கின் முன்னால் நிறுத்திக் காட்டினார் மாமனார்.
மாப்பிள்ளை மணமகளையும் கவனித்தார்; மாமனாரின் பங்களாவையும் சுவனித்தார். எங்கும் ஒரே சாமி படங்கள்; பூஜை அறைகள். நம்பிவிட்டார் மில் அதிபர் ராயப்பர்.
ஆனால் குலம் கோத்திரம் பார்க்கும் வீட்டார் ஒத்துக் கொள்ள மாட்டார்களே? ரகசியமாகத் திருமணத்தை முடிக்கத் திட்டமிட்டார். பணத்தைக் கொண்டுவந்து இறைத்தார்.
திருமணம் மணமகள் வீட்டிலேயே. உறவினர்கள் யாரும் வரவில்லை. உற்ற நண்பர்கள் வந்திருந்தார்கள், சாந்தி முகூர்த்தம் ஐந்து நட்சத்திர ஹோட்டலில்!
புறப்படுவதற்கு முன்னால் மணமகனும், மணமகளும் பால் பழம். சாப்பிட்டார்கள். கொஞ்ச நேரத்தில் மணமகன் அப்படியே மயங்கி விழுந்தார்.
‘பூ மயக்கம்’ என்றார்கள். ஏதோ ஒருவித வலிப்பு என்றார்கள். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அவரை ஒரு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் சென்றார்கள்.
மறுநாள் காலையில் கண் விழித்த மணமகன், தான் ஆஸ்பத்திரியில் இருப்பதை உணர்ந்தார். தன் மனைவியைப் பார்க்க ஆசைப்பட்டார்.
ஆனால் சென்று வந்தவர்கள் வீடு பூட்டிக் கிடப்பதாகச் சொல்லிவிட்டார்கள்.
“அவர் எனக்குத் தாலி கட்டிவிட்டார். நான் அவரை விரும்புகிறேன். தயவுசெய்து என்னை அவரிடமே சேர்த்துவிடுங்கள். உங்கள் காலில் விழுந்து கும்பிடுகிறேன்.” என்று மன்றாடினாள் தேவி.
“அதற்கல்ல நான் உன்னை வளர்த்தது,” என்றான் விஜயசிங்.
வளர்ப்புத் தாய் வசுந்தரா கண் கலங்கினாள். அவளாலேயே வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘இதைவிட இந்தப் பெண் தொழில் செய்தே சம்பாதிக்கலாமே. இப்படியும் ஒரு கொடுமையா?’ என்று கலங்கினாள், அவள்.
கார் ஊரெங்கும் சுற்றிவிட்டு கல்கத்தா விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரம் முன்பு, விமான நிலையத்துக்குள் நுழைந்தது.
வெறும் பணப்பெட்டி, நகைப்பெட்டியோடு மட்டும் அவர்களை அழைத்துக் கொண்டு விமானத்தில் ஏறினான் விஜயசிங்.
இது கல்கத்தா நகரம்.
கல்கத்தாவின் மிகப் பெரிய ஹோட்டலுக்குள் அவர்கள் நுழைந்தார்கள். நாளொன்றுக்கு ஐநூறு ரூபாய் வாடகையுள்ள ‘சூட்’ ஒன்றை எடுத்தார்கள். அவனது சகாக்கள் இருவரும் வேறோரு அறையில் தங்கிக் கொண்டார்கள்.
கல்கத்தா ஹோட்டலில் இரவு நேரத்து நடன விடுதி பிரசித்தமானது. அங்கே ஆட வருகிறவர்களும் உண்டு; பபார்க்க வருகிறவர்களும் உண்டு.
முதல் நாள் வெறும் பார்வையாளனாகக் குடும்பத்தோடு சென்றான் விஜயசிங். இரண்டாவது நாள் தானே எழுந்து, “நாங்கள் தென்னிந்தியர்கள். என் மகள் அழகாகப் பாடுவாள்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். எல்லோரும் கை தட்டினார்கள்.
மகளைக் கைத்தாங்கலாக கொண்டு போய் மைக்கைக் கையில் கொடுத்து நிறுத்தினான். வேண்டா வெறுப்பாகப் பாட ஆரம்பித்தாள், அவள் அதிலும் அவள் பரிபூரண ஜோதியாக ஜொலித்தாள்.
ஆங்கிலத்தில் ஒருவருக்கொருவர் அவளைப் பற்றி வருணித்துக் கொண்டார்கள். வந்திருந்த பெண்கள் எல்லோருமே பொறாமைப்பட்டார்கள்.
ஆனால் அவர்களிடையேயும் ஒரு தமிழர் ஆசையோடு ரசித்தார் அவள் அழகை. கண் கொட்டாமல் பார்த்தார். விஜயசிங்கின் அருகிலே அமர்ந்தார். விபரங்களை விசாரித்தார்.
“மூணு லட்சம் சீர். இரண்டு லட்சம் நகை. ஜாதி பற்றிக் கவலை இல்லை,” என்றான் விஜயசிங்.
அந்த இடத்திலேயே தயாராக இருந்தார் அவர். அவரும் கோவையைச் சேர்ந்த ஒரு மில் முதலாளியே. பெயர் சென்னியப்பன். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்.
வேறங்கே அப்படி இப்படிப் பேசுவதற்கு என்ன இருக்கிறது? அதுவும் ரகசியத் திருமணம்தான் என்பதில் விஜயசிங்குக்கு ஒரே மகிழ்ச்சி.
தட்சிணேஸ்வரம் கோவிலில் திருமணம். கிராண்ட் ஹோட்டலில் சாந்திமுகூர்த்தம் என்று முடிவாயிற்று.
எல்லாம் தான் நினைத்த மாதிரியே நடக்கிறது என்பதால், விஜய சிங் ஒரே உற்சாகமாக இருந்தான். பணத்தை எங்கே வைப்பது என்றே அவனுக்குத் தெரியவில்லை; அப்படி விளையாடினான்.
உறவினர்கள் யாரும் இல்லாமலேயே திருமணம் நடந்தது. அது விஜயசிங்குக்கு அடுத்த வாய்ப்பாகப் போய்விட்டது.
வழக்கம் போல் மணமகனுக்குப் பால் பழம் தரப்பட்டது.
அதற்கு முன்னாலேயே தேவி தன் செவிலித் தாய் மூலமாக ரகசியச் செய்தியைச் சென்னியப்பனுக்குச் சொல்லிலிட்டாள்.
சென்னியப்பன் பாலைச் சாப்பிடுவதுபோல் நடித்துக் கீழே வைத்து விட்டான்.
விஜயசிங் சடங்கு என்றான்; சம்பிரதாயம் என்றான். சென்னியப்பன், “எனக்குச் சர்க்கரை ஒத்துக் கொள்ளாது.” என்று கூறி விட்டான்.
ஏமாற்றுக்காரர்கள் எப்போதாவது தாங்களும் ஏமாறுவார்கள் என்பது அப்போது நிரூபிக்கப்பட்டது.
கோவிலை விட்டுப் புறப்படும் போது தேவியையும், செவிலித் தாயையும் தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டான் சென்னியப்பன்.
அவனுக்குக் கல்கத்தாவிலேயே ஒரு ஆபீஸும் காரும் உண்டு. அந்த ஊழியர்களும் கூட இருந்தார்கள்.
இரவு அவனை ஹோட்டல் அறையிலேயே தீர்த்துக் கட்டுவது என்று முடிவு செய்தான் விஜயசிங், ஆனால் அவன் காரில் ஏறிப் பின்னால் வருவதற்குள்ளாக, சென்னியப்பன் கார் பறந்துவிட்டது.
காரில் கணவன் அருகில் உட்கார்ந்திருக்கும் போதே தன் கதையையும், இனி நடக்கப் போவதையும் அவனிடம் சொல்லி, தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினாள், அவள்.
கார் ஹோட்டலுக்குச் செல்லவில்லை. நேரே விமான நிலையத்தில் நுழைந்தது. அங்கே புறப்படத் தயாராக நின்ற சென்னை விமானத்தில் அவசர அவசரமாக டிக்கெட் எடுத்து அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்ட சென்னியப்பன், ஹோட்டல் கணக்கைத் தீர்க்கும்படி ஆபீஸ் ஊழியர்களிடம் சொல்லி விட்டான்.
விமானத்தில் அவனோடு மிக உற்சாகமாகப் பழகி வந்தாள், தேவி. ஆனால் முன்பு தன்னை மணந்தவன் பற்றிய விபரங்கள் எதையும் தரவில்லை. அந்தக் கசப்பான உண்மை அவன் மனத்தில் களங்கமாக விழ வேண்டாம் என்று அவள் கருதினாள்.
ஹோட்டல் வாழ்க்கையே விதிக்கப்பட்டிருந்த அவளுக்கு, சென்னை ஹோட்டல் ஒன்றில் சாந்தி முகூர்த்தம் நடைபெற்றது. அந்த இரவின் இனிமையைப் பிறர் வருணிக்க முடியாது. அவள்தான் அறிவாள்.
இரண்டு மூன்று நாட்கள் சென்னை ஹோட்டலிலே நிம்மதியாகத் தங்கிய பிறகு அவர்கள் கோவைக்குப் புறப்பட்டார்கள்.
அவளைவிட அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தவள், அவளது செவிலித் தாய் வசுந்தராவே.
அவள் எவ்வளவோ கொடுமைகளைத் தாங்கி விஜயசிங்கோடு வாழ்ந்திருக்கிறாள். இப்போது மகளோடு வாழ்வதிலே அவளுக்குப் பரிபூரணத் திருப்தி.
எந்தக் காரணம் கொண்டும் தேவியின் பிறப்பு, முதல் திருமணம் இரண்டையும் மட்டும் சென்னியப்பனுக்கு வெளியிடக் கூடாது என்று அவர்கள் முடிவு கட்டினார்கள்.
கோவை நகரில் சென்னியப்பன் தந்தையார் கட்டி இருந்தது பிரம்மாண்டமான பங்களா.
“என்னை ஏற்றுக் கொள்வார்களா?” என்று தேவி கேட்ட போது, “பணக்காரர்கள் வீடுகளில் என்னென்னவோ நடக்கும். அவர்கள் எதையும் ஏற்றுக் கொள்வார்கள்,” என்று அவன் சொல்லியிருந்தான்.
திடீரென்று தங்கள் மகனை இந்தக் கோலத்தில் எதிர்பாராத தாயும் தந்தையும் அதிர்ச்சியடைந்தார்கள்.
பளிச்சென்று அவர்கள் காலில் விழுந்து வணங்கும்படி தேவியிடம் சொன்னான் அவன். தேவி அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினாள்.
உள்ளே இருந்து சென்னியப்பனின் சகோதரி வெளியே வந்தாள்.
“உன் நாத்தனார்,” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள் அவளே.
அவர் கால்களிலும் விழுந்து வணங்கினாள், அவள்.
எல்லோருக்கும் விஷயம் புரிந்து விட்டது. பெண்ணின் அழகைப் பார்த்ததும் வாயும் அடைத்து விட்டது.
பங்களாவுக்குள்ளே மனைவி யோடு நுழைந்த சென்னியப்பன், “தம்பி, தம்பி,” என்று அழைத்தான். “அண்ணா,” என்று மாடியில் காட்டிய தம்பி, அங்கேயே ஸ்தம்பத்து நின்று விட்டான்.
அவனைப் பார்த்தவுடனேயே மூச்சையடையும் நிலைக்கு வந்து விட்டாள்,தேவி.
ஆம். சென்னியப்பன் தம்பி அவளை முதலில் மணந்த ராயப்பன்.
அங்கே இரண்டு ஊமைகள் உண்மைகளைப் பேச முடியாமல் தவித்தன.
“வாடா இங்கே!” என்று தம்பியை அழைத்தான், அண்ணன். “இவள்தான் என் மனைவி. பார்த்தாயா, அழகாக இருக்கிறாளா?” என்றான்.
“அழகாக இருக்கிறார்கள்; ல் மாதிரி இருக்கிறார்கள்!” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டான் ராயப்பன். “தம்பி கொஞ்சம் குறும்புக்காரன்” என்று சிலாகித்துக் கொண்ட ண்ணன், அவளை அழைத்துக் கொண்டு பூஜை அறைக்குச் சென்று வணங்கச் செய்தான்.
“இனி தான் கோவையில் இருப்பதைவிட எங்கேயாவது போய் விடுவது நல்லது’ என்று யோசித்தான், ராயப்பன்.
“அண்ணா! நான் ஒரு ஆறு மாதம் வெளிநாடுகளுக்குப் போய் வரலாம் என்று யோசிக்கிறேன்,” என்றான், அண்ணனிடம்.
அண்ணன் பேசுவதற்கு முன்னால், அண்ணி குறுக்கிட்டாள். “அப்படிப் போவதென்றால், நாம் எல்லோருமே போய் வருவோமே?” என்றாள்.
“ஐயோ! எனக்காகத் தாங்கள் ஒன்றும் சிரமப்பட வேண்டாம்!” என்றான் அவன்.
“இதில் என்ன சிரமம்? எவ்வளவோ சிரமங்களை ஒவ்வொருவர் அனுபவித்திருக்கிறார்கள். யாருடைய சிரமம் யாருக்குத் தெரியப்போகிறது?” என்று ஜாடையாகச் சொன்னாள், அவள்.
“என்ன, ஒரு ஐந்து லட்ச ரூபாய் செலவாகும்!” என்றான், அவன்.
“அந்த ஐந்து லட்சத்தை எனக்குக் கொடுத்த கடனாக நினைத்துக் கொள்ளுங்களேன்!” என்றாள் அவள்.
உடனே சென்னியப்பன் குறுக்கிட்டு, “உங்கள் வசனத்தைக் கேட்டால் நீங்கள் இருவரும் சினிமாவிலேயே நடிக்கலாம் போலிருக்கிறது,” என்றான்.
“என் வாழ்க்கையே ஒரு சினிமாதான்!” என்று ஒப்புக் கொண்டாள் தேவி.
அன்று இரவே எப்படியாவது ராயப்பனிடம் நடந்ததைச் சொல்லிவிடத் தேவி துடித்தாள்.
இரவு பன்னிரண்டு மணிக்கு தன்னை அணைத்திருந்த சென்னியப்பனின் கையை மெதுவாக எடுத்து வைத்து விட்டு, ராயப்பனின் அறைக்குள் நுழைந்தாள்.
இதை எதிர்பார்க்காத ராயப்பன் திடுக்கிட்டான்.
அவன் தூங்கவே இல்லை என்பதை அப்போதுதான் தேவி அறிந்தாள்.
கல் மனதும் கரையும்படி அவனிடம் முழுக் கதையையும் அவள் சொன்னாள்.
“நான்தான் தவறு செய்து விட்டேன்..” என்றான், ராயப்பன்.
“இல்லை, நான்தான்!” என்று உள்ளே நுழைந்தான் சென்னியப்பன்.
அவர்கள் இருவரும் திகைத்தார்கள்.
“நாம் இங்கே உட்கார்ந்து எல்லா விஷயங்களையும் மனம் விட்டு பேசி விடுவோம். இதில் ஒன்றும் தவறில்லை!” என்றான் சென்னியப்பன்.
அவர்கள் உட்கார்ந்து பேச தொடங்கினார்கள்.
மூன்றாவது நாள் பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில் ஒரு செய்தி பிரசுரமாயிற்று.
“அண்ணன் தம்பி இருவரு ஒரே பெண்ணை மணந்தார்கள்.
மணப் பெண் மகிழ்ச்சியோடு காணப்பட்டாள்.
சென்னையைச் சேர்ந்த படித்த இளம் பெண் தேவி, கோவை மில் அதிபர் மக்கள் இருவரையும் மணப்பதற்கு இசைந்தாள். புரட்சிகரமான இந்தத் திருமணம் அடக்கமாக அவர்கள் மாளிகையிலேயே நடந்தது.
திரு. சென்னியப்பனை இதைப் பற்றிக் கேட்டபோது, “இதிகாச காலத்து நியாயம், நவீன காலத்துக்குக் கிடையாதா?” என்று கேட்டார்.
இந்தச் செய்தியை படித்தபோதுதான், விஜயசிங் பாஞ்சாலியைப் பற்றிச் சொன்னதை தேவி நினைத்துக் கொண்டாள்.