ஒரு படி மேலே

“பூம் பூம் பூம் பூம், இந்த வீட்ல ஒரு சம்பவம் நடக்கப்போவுது.அது நல்ல சம்பவமாத்தான் இருக்கப் போகுதா? நல்ல சேதி தான் இவங்களுக்கு வருதா? சொல்லு லட்சுமி!” கோலப்பன் என்ற பூம் பூம் மாட்டுக்காரன் தன் எதிரில் உள்ள வீட்டைக் காண்பித்து, அவனுடன் இருந்த மாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
மாடு தலையை வேகமாக சலங்கை ஒலியோடு ஆட்டியது.
“இவங்க சீக்கிரமே ஆச்சரியப்படப் போறாங்களா? பூம் பூம் பூம்!”
“கஷ்டங்கள் தீரப்போகுதா பூம் பூம் பூம்”
“நினைச்ச காரியம் நிறைவேறப் போகுதா? பூம் பூம் பூம்”
லட்சுமி ஒவ்வொன்றுக்கும் தலையை ஆட்டினாள்.
கோலப்பன் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மகிழனூர் தெருவில் மாட்டுடன் வந்து தனக்கு தெரிந்த வகையில் குறி சொல்லிச் செல்லும் வழக்கத்தை வைத்திருந்தான். அப்படித்தான் அன்றும் ஆதர்ஷ் வீட்டில் நின்று கத்திக் கொண்டிருந்தான்.
ஆதர்ஷ் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து அந்த லட்சுமி என்ற மாட்டை தடவிக் கொடுத்தான்.” அழகான மாடு, ஏம்ப்பா இவ்வளவு துணிகளை இது மேல போட்டிருக்கியே, வெய்ட்டா இருக்காதா? பாவம் இல்லையா?” என்று கேட்டான்.
“கலர் கலரா துணிகளை மேல போட்டு அலங்காரம் செஞ்சாத்தான் லட்சுமி ரொம்ப நல்லா இருப்பாங்க அய்யா. எங்க வீட்டு மகாலட்சுமி அவதான் அய்யா. இது பாரமா இருக்காது அவளுக்கு. துணி எல்லாம் ரொம்ப லேசான துணிங்க அய்யா ” என்றான் கோலப்பன்.
“உன் பேர் என்னப்பா ” ஆதர்ஷ் கேட்டான்.
“கோலப்பன் அய்யா” என்றான் அவன்.
“சரி, கொஞ்சம் இரு, வரேன்” என்று சொல்லி உள்ளே சென்றான்.
ஆதர்ஷ் தன் மனைவி சுனந்தாவை கூப்பிட்டு கோலப்பனுக்கு அரிசியும் சில பழங்களையும் கொண்டு வரச் சொன்னான். பிறகு தன்னுடைய உபயோகித்த
சில சட்டைகளை அவனுக்கு கொடுக்க நினைத்து அறைக்குள் சென்று அவைகளை தனியே எடுத்து ஒவ்வொன்றாக வைத்தான்.
ஆதர்ஷ் பெரிய இயந்திரங்கள் தயாரிப்பு துறையில் பட்டம் பெற்று பல்வேறு உலகளாவிய நிறுவனங்களில் பணிபுரிந்தவன். இரண்டாண்டுகளுக்கு முன்பு அதை விட்டு, ‘ ஆதர்ஷ் கன்சல்டன்சி ‘ என்று தொடங்கி இன்று இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் அதே துறையில் உள்ள நிறுவனங்களுக்கு திட்டங்கள் வகுத்து தரும் தொழிலைச் செய்து நிறைய சம்பாதிக்கிறான்.எல்லோருக்கும் விரும்பி உதவி செய்வான். கல்விக்காக உதவி வேண்டும் என்று கேட்டுக் கொண்டு நிறைய மாணவர்கள் அவனிடம் வரும் போது அவர்கள் மேற்கல்வியைத் தொடர வழிவகைகள் செய்து தருவான். ஆதர்ஷ் மூலம் பயன் பெற்ற மாணவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
அதேபோல் முதியோர்கள் இல்லங்களில் இருக்கும் முதியோர்களுக்கு, பெற்றோர் இல்லாத குழந்தைகள் காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு பண்டிகை நாட்களில் சென்று எல்லோருக்கும் புத்தாடைகள், கணிசமான பணம், கம்பளி, போர்வைகள் இவைகளை வாங்கி தந்திடுவான். மேலும் அவர்களை கவனித்து வரும் நிர்வாகத்திடம் ஒரு வருடத்திற்கு ஆகும் செலவினங்களில் பெரும்பகுதி தருவான். மளிகை சாமான்கள் தானம் அளிப்பான்.
‘இப்படி ஒரு பரோபகாரியை பார்ப்பதே அரிது இந்நாளில் ‘ என்று மகிழனூர் மக்கள் சொல்லி ஆச்சரியப்படுவார்கள். தீபாவளி நாளில் அவன் குடியிருக்கும் தெருவில் உள்ள முப்பத்தி ஆறு வீடுகளுக்கும் இனிப்பு, பட்டாசுகள், புதிய வகை பாத்திரம், முதலுதவிப்பெட்டி இவைகளை பரிசளிப்பான் ஆதர்ஷ்.
இவைகள் அனைத்தும் அவன் விருப்பப்பட்டு நல்ல எண்ணத்தோடு செய்வான். சுனந்தாவும் இதை ஆட்சேபணை செய்ய மாட்டாள். இவனில் பாதியளவு அவளும் தர்ம சிந்தனை உடையவள். இப்படி இருந்தாலும் கூட, ஆதர்ஷ்க்கு மனதில் ஒரு ஓரத்தில் ‘உதவிகள் செய்வதில் தான் எல்லோரையும் விட உயர்ந்தவன்’ என்ற தற்பெருமை எண்ணம் உண்டு. அதை சுனந்தாவிடம் மட்டும் சொல்லும்போது ‘தற்பெருமை வேண்டாம்’ என்பாள் . ஆனால் ஆதர்ஷ் தனக்குள் நினைத்து மிகவும் சிலாகிப்பான்.
அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதால் மாதத்தில் எட்டு அல்லது பத்து நாட்கள் மட்டுமே வீட்டில் இருப்பான். அன்று அப்படி இருந்தபோது கோலப்பன் “பூம் பூம்” ஒலித்த படி லட்சுமி மாட்டுடன் வந்ததைப் பார்த்து ‘இவனுக்கு ஏதாவது கொடுக்கலாமே’ என்று சட்டைகளை எடுத்துப் போனான் வாசலில்.
“ஏம்ப்பா, உனக்கு அரிசி, பழங்கள், பருப்பு , சர்க்கரை அப்புறம் கொஞ்சம் காய்கறிகள் இதெல்லாம் கொடுத்து இருக்காங்க அக்கா. அதையும் வாங்கிட்டு பணமும் கேட்கறியே, நியாயமா இது? நான் இருபது ரூபாய் தந்தா அம்பது ரூபாயா கொடுங்க உதவியா இருக்கும்னு டிமாண்ட் பண்றியே, நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்களா? இதனால்தான் எங்களுக்கு உதவி செய்ய மனசே வர மாட்டேங்குது ” என்று கோலப்பனிடம் சுனந்தாவின் தம்பி, ஆதர்ஷ் மைத்துனன் நகுல் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.நகுல் இந்த வீட்டில் இருந்து கொண்டு கல்லூரி படிப்பு படித்து வருகிறான்.
அப்போது அங்கே வந்த ஆதர்ஷ் அவன் கொண்டு வந்த சட்டைகளை கோலப்பனிடம் “இந்தாப்பா, இந்த சட்டைகள் உனக்கு போட்டுக்க சரியா இருக்கும்”. என்று சொன்னான்.
“பூம் பூம் பூம், அய்யா நல்ல மனசுக்கு அவங்களுக்கு சீக்கிரமே புத்திர பாக்கியம் கிட்டும்னு சாமி சொல்லுதா?”
லட்சுமி வேகமாக தலையாட்டினாள்.
“அய்யா என் லட்சுமி சொல்லிட்டா, உங்களுக்கு சந்தோஷமான சேதி ரொம்ப சீக்கிரம் வரப்போகுதுங்க” என்றான் கோலப்பன் சட்டைகளை மடித்து பையில் போட்டவாறு.
“சரி, சரி சந்தோஷம். இந்த பையன் கிட்ட என்னத்த டிமாண்ட் பண்ணே நீ” என்றான் ஆதர்ஷ்.
நகுலிடம் என்ன விஷயம் என்று கேட்க, அவன் விளக்கினான். “சரி போனா போகட்டும் டா. கோலப்பா, உனக்கு ஐம்பது ரூபாய் இல்லை நூறு தரேன். ஆனால் நீ ஏன் பணம் வேணும்னு ஒத்த காலில் நிக்கறே?” என்று கேட்டான்.எப்படியும் ஆதர்ஷ் ஐம்பது ரூபாய் அவனுக்கு தருவதாக முடிவு எடுத்திருந்தான்.
ஆதர்ஷ் சுனந்தா இருவருக்கும் மணமாகி ஆறு வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் இன்னும் புத்திர பாக்கியம் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் மனதில் அது ஒரு உறுத்தலாக நிலைத்து நிற்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் தனியே இருக்கையில் ஆறுதல் கூறி சமாதானம் அடைவார்கள்.இப்போது தெரிந்தோ, தெரியாமலோ கோலப்பனும் லட்சுமியும்
இந்த நல்ல முடிவைச் சொன்னது ஆதர்ஷ் மனதிற்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்தது.
கோலப்பன் சொன்னான். ” அய்யா எங்களை மாதிரி பூம் பூம் மாட்டுக்காரங்க அல்லது குறி சொல்லும் கூட்டங்கள் ரொம்ப குறைஞ்சுட்டாங்க சாமி. இன்னிக்கு எல்லாம் கணக்கு எடுத்தா எங்க சனங்கள் கிட்ட தட்ட ஒரு அஞ்சாறு லட்சத்துக்குள்ளதான் இருப்பாங்கன்னு நெனைக்கிறேன் . எங்க பாட்டன் பூட்டன் அப்பன் அண்ணன் இப்படி வழி வழியாக குலத்தொழில் போல நாங்க இப்ப வரைக்கும் செஞ்சுட்டிருக்கோம். இப்ப காலம் மாறிப் போயிடுச்சுங்க. நாங்க முந்தியெல்லாம் பள்ளிக்கூடம் பக்கம் போனதே இல்லீங்க. நான் மட்டும் கொஞ்சம் புடிவாதமா இருந்து பத்தாவது வரைக்கும் படிச்சுட்டேங்க அப்பாரு திடீர்னு ஒரு நாள் காலமாயிட்டாரு. இதே தொழில செய்ய அண்ணனோட சேந்து இறங்கிட்டேன். ஆனால் எங்க வாரிசுங்களை இப்போ நல்லா படிக்க சொல்லி வளக்கிறோம். என் பொண்ணு இஸ்கூல் பிடிக்குது.
நீங்க கொடுக்கற அரிசி, பழம், சட்டை மத்த துணியெல்லாம் எங்களுக்கு நல்ல உதவியா இருக்கும் சாமி. ஆனால் எங்களையே நம்பி எங்க கிட்ட இருக்கிற இந்த வாயில்லா ஜீவன்கள் லட்சுமி போல நிறைய இருக்காங்க. அவங்களுக்கு புண்ணாக்கு, புல்லுகட்டு இதெல்லாம் வாங்கத்தான் பணமா கேக்கறோம் எஜமான்.நிறைய பேரு கோவிலுக்கு நேர்ந்து விட்ட மாடுகளை நாங்க கேட்டு வாங்கிக்குவோம். சில கோவில்லதான் அதுங்களை பராமரிப்பாங்க. நிறைய கோவில்ல யாருகிட்டயாவது கொடுத்துடுவாங்க. அதுங்களை யாரும் இறைச்சிக்காக எடுத்துப் போகக்கூடாதேன்னு நினைச்சு நாங்க கூடுமானவரைக்கும் காப்பாத்தி ஓட்டிட்டு வந்துடுவோம்.
இப்ப இவங்க எல்லாம் எங்க குடும்பத்தில ஒருத்தர் சாமி. இவங்க சாப்டறதுக்கு வாங்காம நாங்க எப்படி நல்லா இருக்க முடியும் அய்யா. அதனால்தான் கொஞ்சம் காசு பணம் உதவியும் கேக்கறேன்.
தப்பா எடுத்துக்காதிங்க அய்யா, மொத வீட்டில் கொஞ்சம் கூட கேட்டு பணம் கிடைச்சிடுச்சுன்னா எங்களுக்கு அன்னிக்கு நல்ல வருமானம் வர்ற நாளுன்னு முடிவு பண்ணிக்குவோம்.” என்று ஒரே மூச்சில் பேசிய கோலப்பனுக்கு மூச்சு இரைத்தது. சுனந்தா வேகமாக உள்ளே போய் மோர் எடுத்து வந்து கொடுத்தாள்.” கோலப்பா, நீ ஊரெல்லாம் சுத்திட்டு மதியம் வந்தீன்னா இங்கேயே சாப்பாடு சாப்டலாம்” என்றாள்
“இல்லீங்க அம்மணி. நான் அப்படியே ஊர் ஊரா போய்ட்டு லட்சுமிக்கு வேண்டியதை வாங்கிட்டு வீட்டுக்கு போவ ஆறு மணி ஆயிடும் தாயி. உங்க நல்ல மனசுக்கு நல்ல சேதி வரும் பாருங்க ” என்றான் கோலப்பன்.
“இதைத் தவிர வேறு ஏதாவது வேலையும் செய்வியா கோலப்பா” என்று கேட்டான் ஆதர்ஷ்.
“அத்தனை வேலையும் செய்வேன் சாமி. திருவிழா நாளுங்க,கோடை காலம் எங்களுக்கு வசூல் கூட கிடைக்குங்க. மார்கழி மாசம் கூட பரவாயில்லைங்க மழைக்காலம் கஷ்டங்க. அப்போ எல்லாம் எந்த வேலை கிடைச்சாலும் செய்வேனுங்க. நாங்க நாடோடிங்கன்னு தெரிஞ்சு சில பேருங்க ஒதுக்கிடுவாங்க. சில போலீஸ்காரங்க சந்தேகப்பட்டு கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவாங்க அய்யா. ரெண்டு நாள் கழிச்சு எங்க சனங்கள் வந்து ஏதாவது அவங்களுக்கு துட்டு தந்துட்டு அழைச்சிட்டு போவாங்க. எப்படியோ எங்க காளிதேவி அம்மா எங்களை கைவிட மாட்டாங்க சாமி” என்றான் கோலப்பன்.
ஆதர்ஷ் “கோலப்பா, ஏதாவது உதவி வேணும்னா இந்த ஊருக்கு வரும்போது என்னைக்கேளு. இந்தா இப்போதைக்கு இந்த பணத்தை பிடி. லட்சுமிக்கு நிறைய வாங்கி கொடு. அநாவசியமா மதுவைக்குடிச்சு செலவழிக்காதப்பா ” என்று கூறி அவனிடம் ஐநூறு ரூபாயை கொடுத்தான்.
“அய்யா அந்த பழக்கம் கிடையாதுங்க சாமி. எங்க அப்பன் அதனாலதான் சீக்கிரம் போனான். அது எனக்கு பாடமா போயிடுச்சுங்க அய்யா. பெரிய மனசு சாமி உங்களுக்கு. இந்த நாடோடிக்கு இவ்வளவு பெரிய பணம் தர்றீங்களே, காளிதேவி உங்களுக்கு அருள் தருவா லட்சுமி, அய்யாவுக்கு வணக்கம் சொல்லு” கோலப்பன் சொன்னான். லட்சுமி ஆதர்ஷிடம் வந்து அவன் கைகளை முத்தமிடுவது போல் நின்று ” ம், ம்மஹ்ம்மா” என்றாள். ஆதர்ஷ் கழுத்தை தடவிக்கொடுத்து அனுப்பினான்.
அவன் சென்றபின் ” என்னென்னவோ கதையெல்லாம் சொல்லி அத்தான் கிட்டேருந்து ஐநூறு ரூபாயை புடுங்கிட்டு போய்ட்டான் பாரு அக்கா. வெரி ஸ்மார்ட் ஃபெலோ” என்று நகுல் கிண்டல் செய்தான்.
“டேய் நகுல், நானும் நீயும்தாண்டா நடிப்போம். உண்மையா தனக்கு விதிச்சதை சத்தமில்லாமல் அன்றாடம் கருத்தோட செய்றது மட்டும் இல்லை. அவன் பாரு தனக்கு சாப்பிட இல்லேன்னாலும் தன் மாட்டுக்காக நிச்சயம் வாங்கணுங்கற எண்ணத்தோடு இருக்கான் பாரு. அது மாதிரி நம்ம கூட்டத்தில் எத்தனை பேருக்கு இருக்கு? சுயநலம்தானே அதிகமா இருக்கு? அதனால்தான் அவனுக்கு கொடுத்தேன். நாம் நிறையவே கத்துக்கணும் டா நகுல் ” என்றான் ஆதர்ஷ்.
“கரெக்ட் தான். எங்கே யாருகிட்ட நல்ல குணங்கள் இருக்கோ அதை காப்பியடிக்கறதிலே தப்பே இல்லை ” என்று சுனந்தா ஆமோதித்தாள்.
“ஓகே, ஓகே. நான் ஆர்க்யூ செய்ய வரலை. என்னை ஆளை விடுங்க. நான் அர்ஜண்டா வெளியே போறேன். எனக்கு டிஃபனை போடு அக்கா ” என்றான் நகுல்.
அன்று மாலையில் நகுல் திரும்பி வரும்போது தன் நண்பன் மோட்டார் சைக்கிளில் ஏறி வந்திருந்தான். அவன் தயங்கித் தயங்கி மெதுவாக சொன்னான். ” இன்னிக்கு ஈவினிங் ஒரு நாலரை அஞ்சு மணி இருக்கும். எங்க வேலை எல்லாம் முடிச்சுட்டு ஜூஸ் சாப்பிட பைக்கை ஒரு ஓரமா நிறுத்திவிட்டு போயிருந்தோம். வெளியே வந்து பார்த்தா என் பைக் திருட்டு போயிருக்கு. இவனும் நானும் தேடிப் போய் மூணு நாலு தெருவில் தேடினோம். எதுவும் காணலை. உடனே போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெய்ன் ரெஜிஸ்டர் பண்ணிட்டு வரோம் ” என்றான்.
ஆதர்ஷ் சொன்னான். ” இது ரொம்ப அதிகமா போயிடுச்சு இங்கே. போன மாசம் கூட ரெண்டு கேஸ் இது போல என் ஃப்ரெண்ட்ஸ் மூலம் கேள்விப்பட்டேன். சரி பாக்கலாம், போலீஸ் என்ன செய்றாங்க ன்னு! உடனே கொடுத்திருக்கீங்க. அவங்களால கண்டு பிடிக்க முடியும்னு நினைக்கிறேன்.”
சுனந்தா” நகுல், அது நமக்கு திரும்ப கிடைக்கணும்னு இருந்தா நிச்சயம் கிடைக்கும். ரெண்டு பேரும் வந்து காஃபி எடுத்துக்கோங்க” என்றாள்.
நகுல் அமைதியாக வருத்தத்துடன் அவன் நண்பனோடு தன் அறைக்குள் போனான்.
நேரம் போய்விட்டது. இரவு ஒன்பது மணி வரையிலும் எந்த வித தகவலும் காவல்துறையிடமிருந்து இவர்களுக்கு கிடைக்கவில்லை. ‘ நாளை மறுபடியும் நேரே போய் பார்க்கலாம் ‘ என்று சொல்லிச் சென்றார்கள். நகுலுக்கு எதுவும் செய்ய பிடிக்கவும் இல்லை. இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான்.
இரவு ஒன்பதரை மணிக்கு அழைப்பு மணி ஒலித்தது. வேகமாக ஓடி கதவை திறந்தான் நகுல். வெளியே காவல்துறை வண்டி நின்றிருந்தது. ஒரு காவல் ஆய்வாளர் வீட்டு வாசலிலும் ஒருவர் வண்டியிலும் இருந்தனர்.
” இங்கே நகுல்னு ஒருத்தர்” என்று காவல் ஆய்வாளர் சொல்லும்போதே இடைமறித்து ” நான்தான் சார், என்ன ஆச்சு சார்?” என்றான் நகுல்.
இந்த நேரத்தில் ஆதர்ஷ், சுனந்தா இருவரும் எழுந்து வாசலுக்கு வந்தனர். ” நகுல் என்ன விஷயம்?” என்று கேட்டான் ஆதர்ஷ்.
அதற்குள் காவல் ஆய்வாளர் சொன்னார். ” மிஸ்டர் நகுல், நீங்க புகார் கொடுத்தீங்க இல்லையா பைக் திருடுபோனது என்று, அவனை நாங்க கண்டுபிடிக்கறதுக்குள் வேறு ரெண்டு பேர் பிடிச்சு வண்டியோட இழுத்து வந்தாங்க .நாங்க விசாரிச்சப்போ ஒருத்தர் சொல்றாரு இந்த வண்டி உங்களுதுன்னு அவருக்கு தெரியுமாம். அதை வேற யாரோ எடுத்துட்டு தள்ளிகிட்டே போனதை பாத்து சந்தேகப்பட்டு தன் நண்பர்களோட சேர்ந்து அவனை பிடிச்சு திருடன்னு தெரிஞ்சதும் எங்க கிட்ட கூட்டி வந்தாங்க. எங்களோட வந்திருக்கும் இந்த ஆளை உங்களுக்கு தெரியுமா என்று கன்ஃபர்ம் பண்றீங்களா?” என்றார்.
நகுல் “நிச்சயம் செய்றேன்.” என்றவுடன் ” கார்த்திக், அந்தாளை இங்கே கூட்டி வாப்பா” என்று கட்டளை இட்டார்.
கார்த்திக் உள்ளே அழைத்து வந்த ஆளை ஆச்சரியத்துடன் பார்த்தனர் நகுல், ஆதர்ஷ், சுனந்தா மூவரும். உள்ளே மெதுவாக நடந்து வந்தவன் கோலப்பன்.
மூவரும் ஒரே நேரத்தில் கூறினார்கள். “சார் இவரை எங்களுக்கு நல்லா தெரியும். பேர் கோலப்பன்”.
உடனே காவல் ஆய்வாளர் கூறினார். “சரி, நான் இவர் கிட்ட ஒரு லெட்டர் எழுதி வாங்கிட்டு வீட்டுக்கு அனுப்பிடறேன். அப்பவே அனுப்பி இருப்பேன். ஆனால் உங்கள் வீடு தெரியும், உங்களைத் தெரியும் இப்படி எல்லாம் சொன்னதால நேரா அழைச்சிட்டு வந்து உறுதிப்படுத்தறதுக்காக இவரை உட்கார வச்சுட்டேன்.இவரோட அண்ணன் அங்கே ஸ்டேஷனில் இருக்காரு” .
உடனே ஆதர்ஷ்” சார், உங்களுக்கு தொந்தரவு இல்லைன்னா நாங்க எங்க வண்டியில் இப்பவே உங்கள் கூட வரோம். கேஸை குளோஸ் பண்ணி பைக்கை எடுத்துக்கலாமா? இவரையும் கொண்டு போய் வீட்டில் விட்டுடறோம்.” என்று வேண்டுகோள் விடுத்தான்.
காவல் ஆய்வாளர் உடனே “ஓகே பேப்பர் ஃபார்மாலிட்டி எல்லாம் இப்பவே முடிச்சுடலாம். ஆனால் வண்டி நீங்க நாளைக்கு காலையில்தான் எடுக்க முடியும். ஏன்னா, எங்க சீனியர் ஆபீஸர் அப்ரூவல் பண்ணி சைன் பண்ணணும். ” என்றார்.
“நோ ப்ராப்லம். இப்ப வரோம்.” என்று கூறிய ஆதர்ஷ், கோலப்பன் பக்கம் திரும்பி “கோலப்பா, உன்னோட பேசணும். நீ அவங்களோட போ. ஸ்டேஷன்ல இதெல்லாம் முடிஞ்சப்புறம் நாம பேசலாம். உன்னை நானே உன் வீட்டுல விடறேன்” என்றான்.
கோலப்பன் எதுவும் பேசாமல் கையை கூப்பிவிட்டு காவல் ஆய்வாளருடன் சென்றான். அனைவரும் காவல் நிலையம் அடைந்தனர்.
காவல் ஆய்வாளர் அவர்களை அமரச் சொல்லி விட்டு உள்ளே சென்று ஒரு கோப்பு எடுத்து வந்து அதில் இருந்த ஒரு விண்ணப்பம் போல் உள்ள காகிதத்தை நகுல் கையில் கொடுத்தார்.ஆதர்ஷும் அதை வாங்கி படித்துப் பார்த்தான். ” வண்டி கிடைக்கப் பெற்றதற்கு சான்று இது. கையெழுத்து போட்டு விடு” என்று கூறி விட்டு காவல் ஆய்வாளரிடம் “‘சார், வண்டியை பார்க்கலாமா?” என்றான்.
“ஷ்யூர், என்னோட வாங்க, காட்டறேன். நல்ல வேளை இந்த திருட்டு பயல் ஏதும் உடைக்கறதுக்கு முன்னாடி இந்த குறி சொல்றவனுக பிடிச்சுட்டானுக. ஆமாம், அங்கேயே கேக்கணும்னு இருந்தேன் சார், இந்த ஆள் எப்படி உங்களுக்கு இவ்வளவு அறிமுகம் ஆனார்? விசித்திரமா இருக்கே” என்று ஆதர்ஷை கேட்டார்.
“அவர் ஒவ்வொரு வருஷமும் நாலு அஞ்சு மாசத்துக்கு ஒரு தடவை எங்க ஏரியாவில் பூம் பூம் மாட்டுடன் வந்து குறி சொல்லி தானம் வாங்கிக்கொண்டு போவார். இந்த முறை இன்னிக்கு காலைலதான் வந்தாரு. நல்ல மனுஷன். எங்க கிட்ட நின்று தன்னோட அனுபவங்கள், கஷ்டங்கள் இதைப்பத்தியெல்லாம் அரைமணி நேரம் பேசிட்டுதான் போவார் எப்பவும் ” ஆதர்ஷ் சொன்னான்.
“சரி, ஓ கே சார். நீங்க அவரை உங்களோடு அழைச்சிட்டு போங்க. காலைல பத்து மணிக்கு வந்து வண்டியை எடுத்துக் கொள்ளலாம் சார்!”என்று ஆய்வாளர் சொல்லி விட்டு உள்ளே வந்து, ” கோலப்பா, நீயும் உன் அண்ணனும் சாரோடு வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு காலைல பத்து பத்தரை மணிக்கு வந்து எங்க பெரிய ஆஃபீஸர் கிட்ட வந்து நடந்ததை இன்னொரு தடவை சொல்லிடுங்க .”என்றார்
கோலப்பன் அவன் அண்ணன் மாரப்பன் இருவரும் ஆதர்ஷ் அருகே வந்து” ஐயா, உங்க வண்டியை பத்திரமா இவங்க கிட்ட ஒப்படைச்சதே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் அய்யா. நாங்க இப்படியே நடந்து போயிடறோம் எங்களுக்கு இருட்டெல்லாம் பழக்கம். நீங்க அம்மணி,தம்பி இவங்களை கூட்டிட்டு போய் தூங்குங்க. காலைல பேசிக்கலாம்.” என்றார்கள்.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். வாங்க ரெண்டு பேரும் வந்து வண்டில ஏறுங்க. உங்களை வீட்டுல விட்டுட்டுதான் நாங்க எங்க வீட்டுக்கு போகப்போறோம். போகும்போது பேசிக்கலாம். சீக்கிரமா வாங்க ” என்று
ஆதர்ஷ் அவர்கள் இருவரையும் உரிமையுடன் துரிதப்படுத்தி விட்டு காவல் ஆய்வாளர்களுக்கு நன்றி கூறி விட்டு தன் வண்டி அருகே சென்றான்.
அந்த நேரத்தில் நகுல் கோலப்பன் கைகளைப்பிடித்துக்கொண்டு ” உங்களுக்கு எப்படி நன்றி சொல்லப்போறேன்னு தெரியலை. காலைல நான் உங்ககிட்ட கடுமையா பேசினதுக்கு என்னை மன்னிச்சுடுங்க கோலப்பன்” என்று கண்களில் நீர் தளும்ப பேசினான்.
“என்ன சாமி, இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க. அதெல்லாம் நான் எப்பவோ மறந்துட்டேன். உங்க நிலமைல நான் இருந்தா அப்படித்தான் கேட்டுருப்பேன். கவலையே படாதீங்க. சந்தோஷமா படிக்கப் போங்க. நல்ல வெற்றிதான் உங்களுக்கு இனிமேல் ” என்று உற்சாகப்படுத்திப் பேசினான் கோலப்பன்.
வண்டியில் போய்க் கொண்டிருந்த போது ஆதர்ஷ் கோலப்பனிடம் ” எங்க பைக்னு எப்படி கண்டுபிடிச்சே? அவனுகளை எப்படி மடக்கினீங்க ரெண்டு பேரும்?”
கோலப்பன் சொன்னான்.” அய்யா, உங்க வீட்டுலேருந்து கிளம்பி நான் நாலைஞ்சு தெருவுக்கெல்லாம் போய்ட்டு ஊர் கடைசில இருக்கற கோவில் தெரு திருப்பத்தில உள்ள பெரிய வேப்ப மரத்தடியில ஓய்வெடுக்க போனேன். மணி அப்பவே மூணு ஆயிடுச்சு. அதுக்குள்ள மாரப்பன் அண்ணன், மத்த இடங்களுக்கு எல்லாம் போயிட்டு வந்த எங்க ஆளுங்க மூணு பேரும் வந்தாங்க. அவங்க கொண்டு வந்த சாப்பாட்டை எல்லாரும் சாப்ட்டுட்டு, மாடுங்களுக்கு தீனி வச்சுட்டு, படுத்து பேசிட்டு இருந்தோம். அஞ்சரை மணிக்கு வீட்டுக்கு கிளம்பற நேரத்தில ரெண்டு பேரு இந்த பைக்கை தள்ளிகிட்டு வந்தானுங்க. ஒருத்தன் என்னென்னவோ செஞ்சு முன் சக்கரத்தை அசைச்சுப்பாத்திட்டு இருந்தானுங்க. மெதுவா பேசிட்டு இருந்தானுங்க. நான் காலைல நம்ப வீட்டுக்கு வந்த போது, தம்பி பைக்கை தூசி தட்டிட்டு இருந்தாரு. அப்ப பைக் பின்னாடி மஞ்சள் கலர்ல ஒரு சின்ன பிள்ளையார் படம் ஒட்டியிருந்தத கவனிச்சேன்.இந்த பைக்ல அதுபோல இருந்ததைப் பாத்து எங்கண்ணன் கிட்ட சந்தேகத்தை சொன்னேன். உடனே நானும் என் அண்ணனும் அவனுக கிட்ட போய் வண்டி யாருது, எங்க அடிச்சீங்கன்னு நேராவே கேட்டோம். அவனுக என்னவோ உளறினானுக. மறுபடியும் நான் மிரட்டும் போது ஒருத்தன் கத்தியை எடுத்து எங்க மேல பாஞ்சான். உடனே எங்களோட மத்த ஆளுங்களும் ஓடி வந்தாங்க. எல்லாரும் சேந்து வளைச்சு புடிச்சு கட்டிக்கொண்டு போய் நானும் அண்ணனும் போலீஸ் ஸ்டேஷன்ல விடப்போனோம். மத்தவங்க மாடுகளை ஓட்டிட்டு வீட்டுக்கு போனாங்க. போலீஸ்கார அய்யா எங்களையும் சந்தேகப்பட்டு உட்கார வச்சுட்டாங்க.
அப்புறம் நான்தான் சொன்னேன், ‘ இந்த வண்டி சொந்தக்காரர் வீடு எனக்கு தெரியும்னு. உடனே இன்ஸ்பெக்டர் அங்க அழைச்சிட்டு வந்தாரு அய்யா.”
இதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. கீழே இறங்கியதும் ஆதர்ஷ், சுனந்தா, நகுல் மூவரும் அவர்கள் இருவருக்கும் மனதார நன்றி கூறினர். “கோலப்பா, உன் பொண்ணு ஸ்கூலில் படிக்குதுன்னு சொன்னே, நான் அவளை வரப்போற வருஷத்தில நல்ல ஸ்கூலில் சேத்து விடறேன். அவளோட படிப்பு செலவை நான் பாத்துக்கிறேன்.” என்று ஆதர்ஷ் சொல்ல, ” நன்றி அய்யா, இது போதும் எனக்கு. வேற எதுவும் வேண்டாம் ” என்று கோலப்பன் கண்ணில் நீர் தளும்ப பேசினான்.
“மாரப்பா, உனக்கு ஏதாவது வேணும்னாலும் கேளுப்பா” என்றான் ஆதர்ஷ்.
“இப்ப ஒண்ணும் வேண்டாம் சாமி, இன்னும் மூணு மாசம் கழிச்சு உங்களுக்கு நல்ல சேதி வரும்போது வர்றேன். நீங்களே தருவீங்க சாமி” என்றான். பிறகு அனைவரும் விடை பெற்றனர்.
மூவரும் வீட்டை அடைந்த போது மணி பனிரெண்டுக்கு மேல் ஆகிவிட்டது. “சுனந்தா, நான்தான் தானம் செய்றதுல உசத்தின்னு பெருமையா மனசுல நினைச்சிட்டிருந்தேன். நம்மையெல்லாம் தாண்டி ஒருத்தன் இருக்கான். கோலப்பன் மாதிரி ஆளெல்லாம் நிச்சயம் ஒரு ஸ்டெப் உயரத்திலதான் இருக்காங்க. கஷ்டமான வாழ்க்கையையும் புன்னகையோடு வாழக்கத்துகிட்டவங்க.இல்லையா?” என்று கேட்டான் ஆதர்ஷ். “நிச்சயமா” என்றாள் சுனந்தா.
“என்னால கோலப்பனை என்னிக்கும் மறக்க முடியாது. கிரேட்” என்றான் நகுல்.
மூன்று மாதங்கள் கழித்து ஒரு நாள் காலையில் சுனந்தா வாந்தி எடுக்க, மருத்துவரிடம் காண்பித்ததில் அவள் ‘ தாய்மை அடைந்திருக்கிறாள்’ என்பது உறுதியானது. அனைவரும் சந்தோஷத்தில் திளைத்தனர்.
மறுநாள் “எனக்கு கேம்பஸ் இன்டர்வ்யூல சூப்பர் ஆஃபர் கிடைச்சிருக்கு அக்கா, அத்தான்” என்று ஆனந்தமாகக் கத்தியபடியே வீட்டுக்குள் நுழைந்தான் நகுல்.
‘பூம் பூம் ‘ லட்சுமி மற்றும் கோலப்பன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தனர் மூவரும்.
![]() |
பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க... |