ஒரு கோடை விடுமுறை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2026
பார்வையிட்டோர்: 51 
 
 

(1981ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9 | இரண்டாம் பாகம் – அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம் – 1

வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது விமானம் வெளிக்கிட முதல். வெள்ளவத்தை வீடு காலையில் இருந்து அல்லோலகல்லோலமாய் இருந்தது.

தங்கைகள் இருவரும் ஒன்றாக வருவார்கள் இன்னும் ஒரு மாதத்தில்.நின்று கூட்டிக்கொண்டு போகலாம். ஆனால் கொம்பனி விடயமாக நடக்கும் கொன்பரன்சுகள் வரப் போகின் ன்றன. அவன் கட்டாயம் நிற்க வேண்டும் லண்டனில். பண்டாரநாயக்கா விமான நிலையத்துக்கு அவன் குடும்பத்தினர் எல்லாம் வந்திருந்தனர்.

குழந்தைகள் குதூகலத்துடன் மாமாவை வழியனுப்ப வந்திருந்தனர். சத்தியமூர்த்தியுடன் சபேசன் வந்தது ஆச்சரியமாக இருந்தது. பானுமதியின் ஏற்பாடாக இருந்திருக்க வேண்டும். வேடிக்கையாய் இருந்தது அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தெரியாத மாதிரி காட்டிக் கொண்ட விதம்.

கார்த்திகா:

விமானம் வெளிக்கிட்டு இலங்கைத் தீவு வெறும் பச்சை திடலாய்த் தெரிந்தபோது அவளின் நினைவு வந்தது.

இன்னேரம் பள்ளிக்கூடத்தில் படிப்பிக்கலாம்.

இந்தப் பிளேனில் நான் போகிறேன் என்று தெரிந் திருக்கலாம். பாடசாலைக்கு மேலால் விமானம் பறக்கும் போது ஜன்னலால் எட்டிப் பார்க்கலாம்.

என் நினைவும் வந்திருக்கலாம்.

அவள் மனத்தில் சிறு நிழலாய் இருந்த லே பாக்கியம் என்று நினைத்தது அவன் மனம்.

லங்கை கண்களில் மறைந்து விமானம் வெறும் வெளி யில் பறந்து கொண்டிருந்தது.

இப்படி வரும்போது எலிஸபெத்தின் உறவு கிடைத்தது ஞாபகம் வந்தது.

இப்போது என்ன செய்வாள் நியுயோர்க்கில்?

லண்டனுக்கு வந்திருக்க மாட்டாளா?

இலங்கைக்கு வந்ததிலிருந்து இதுவரை நடந்ததெல்லாம் கனவாகத் தெரிந்தது.

நம்ப முடியாதவைகளாக இருந்தன சில நிகழ்ச்சிகள்.

இலங்கையில் யாருக்கோ நடக்கிறது என்று நினைத் திருந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தன்னைச் சேர்ந்தவர்களுக்கு நடப்பது கண்டு துடித்தான். அந்தக் கொடிய செயலால் தன் அன்புக்காளான சில ஜீவன்கள் படும் துயர் அவன் கொள்கைகளை எப்படி மாற்றி விட்டன என்பதை அவனால் சரியாக ஊகிக்க முடியாது இருந்தது.

இலங்கையில் இருந்து வெளிக்கிட்டு ஒன்றிரண்டு மணித் தியாலங்கள் வரை தான் தன் நாட்டைப் பிரிந்து போகிறேன் என்ற உணர்வு தெரிவதை அவன் உணர்ந்து கொள்ளப் பயப்பட்டான்.

ஆனால் தெரிந்தோ தெரியாமலோ உணர்ந்தோ உணராமலோ சில உண்மைகள் அவன் அடிமனத்தில் உறைய மறுக்கவில்லை, தமிழ் இனம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.

அரசாங்க யந்திரத்தை எதிர்க்கும் எந்தக் கருவியும் நசுக்கப்படும் என்று சத்தியமூர்த்தி சொல்கிறான்.

இலங்கையில் தொழிலாளர்கள், விவசாயிகள் தமிழர்கள் எல்லாம் ஒன்று பட்டுப் போராட வேண்டும் இந்த அரசியலமைப்பைத் தூக்கி எறிய என்கிறான்.

நடக்கக் கூடிய காரியமா?

“எங்கு சுரண்டல் இல்லை. இனத்தை இனம் சுரண்டு கிறது. பணக்காரன் ஏழையைச் சுரண்டுகிறான். முதலாளி தொழிலாளியைச் சுரண்டுகிறான். வலிமை படைத்தவன் நோஞ்சானைச் சுரண்டுகிறான். இலங்கை இலக்கிய வட்டத் தையே எடுத்துப்பார். ஒரு சில படித்த முற்போக்குக் குஞ் சுகள் முழுக்க முழுக்க தங்கள் கோஷங்களைப் போடாத எந்த எழுத்தாளனையும் மூச்செடுக்க விடுகிறார்கள் இல்லை.சுலையும் அரசியலும் வேறு வேறு இல்லை என்று வரட்டு வேதாந்தம் படைக்கிறார்கள். எங்கே சுரண்டல் இல்லை

இது சபேசனின் வாதம்.

எல்லோர் நினைவும், ஒவ்வொருவர் கொள்கைகளும் ஒவவொரு கோணத்தில்.

எல்லோரும் ஒரே மாதிரி நினைத்தால் உலகம் ஏன் இப்படி இருக்கிறது?

விமானம் மொஸ்கோவில் நின்றது.

மனம் அடித்துக் கொண்டது மறுபடியும் மூன்று இரவுகள் அநியாயமாக ஒரு வெறும் சுவருக்குள் முடியக் கூடாதே என்று.

பொழுது போக எலிஸபெத்தும் இல்லை.

எலிஸபெத்.

அவளின் இனிய சுபாவம் மனதில் நிழலாடியது. ஒரு காலத்தில் திருமணமாகி ஒருவனுக்கு அடங்கி ஒன்றிரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி..

எலிஸபெத்தை அப்படிக் ‘குடும்ப’ப் பெண்ணாக நினைக்க வேடிக்கையாக இருந்தது.

ஹீத்ரோ எயார் போட் இன்னும் அழுமூஞ்சித்தனத்தில் இருந்தது. சரியான புகார். குறித்த நேரத்தில் விமானம் வந்து இறங்கியதே அபூர்வம்.

கஷ்டம்ஸ் ஒவ்வீஸ் தாண்டத் தெரிந்தது மீராவின் துள்ளும் நடை.

“டாடி” என்று கத்தினாள்.

எத்தனை செக்கண்டுகள் எடுக்கும் அவளை அணைத்துக் கொள்ள என்று பொறுமையின்றித் தவித்தான் பரமநாதன்.

மனைவி மரியன் கணவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். “என்ன பார்க்கிறீர்?” கன்னத்தைத் தட்டி விட்டுக் கேட்டான்.

என் குடும்பம். என் மனைவி. என் மகள்.

”மெலிந்து இருக்கிறீர்கள்” செல்லமாகச் சொன்னாள் மரியன்.

”உம்முடைய சாப்பாடு ஒரு மாதம் கிடைக்காததால்”

இருவரும் பொருளற்ற விதத்தில் சிரித்துக் கொண்டனர். இவளை டிவோர்ஸ் பண்ணச் சொல்லி கார்த்திகா சொன்னால் செய்வதாகச் சொன்னது ஞாபகம் வந்தது.

உண்மையாகச் செய்வானா?

சந்தர்ப்பங்களில் எங்கள் வாயும் வார்த்தைகளும் எப்படிச் சதி செய்கின்றன?

வூட் கிறீனுக்குப் போகும் வரை இருவரும் அதிகம் கதைக்கவில்லை. தாய் தகப்பனைப் பற்றிக் கேட்டாள்.

பானுமதி எப்போது வருகிறாள், கௌரி எப்போது வருகிறாள் என்று கேட்டாள்.

இதெல்லாம் கடிதத்தில் எழுதிய விடயங்கள் அதிகம் சொல்ல ஒன்றுமிருப்பதாகத் தெரியவில்லை அவனுக்கு.

“So, You are going to be a busy man”.

மரியன் சொன்னாள் தங்கைகள் எல்லோரும் வந்து குதிக்கப் போகிறார்கள் என்று கேள்விப் பட்டதும்.

“பிஸியாய் இருப்பது பரவாயில்லை. எப்படி பிஸி என்பது தான் பிரச்சினையாக இருக்கப் போகிறது”

சபேசனை எப்படிக் கூப்பிடுவது.?

எத்தனை வழிகளில் இங்கிலாந்துக்கு வரலாம் என்று இலங்கை இளைஞர்கள் யேயோசிக்கும்போது இந்த விசரன் தான் கொடுக்கும் சந்தர்ப்பத்தைத் தூக்கி எறிந்து விட்டுக் கத்துகிறான் இலட்சியம் பற்றி, இலக்கியம் பற்றி, ஈழத் தமிழர் விடுதலை பற்றி!

இவன் போன்றவர்களுக்கு எப்போது புத்தி வரும்?

நேரில் கண்டால் சபேசனின் சிரித்த முகமும் தீட்சண்யமான பார்வையும் எதையும் அடக்கி விடுகிறது.

பானுமதிக்காக மட்டுமல்ல கார்த்திகாவுக்காகவும் சபேசனை எப்படியும் லண்டனுக்குக் கூட்பிட அல்லது ஜேர்மனி, அமெரிக்க பரமநாதனுக்கு தெரியும் எவ்வளவு வழியப் போகிறது என்று. அவன் கார்த்திகாவுக்காக எதையும் செய்யத்தயார்.

இலங்கைக்குப் போக முதல் பரமநாதனை முழுக்கப் பற்றியிருந்தது தன் சிறிய வீட்டு நினைவுதான். லண்டனில் எத்தனையோ தமிழ்க் கூட்டங்களும் விழாக்களும் நடந்தும் அவன் அதிகம் போவதில்லை.

தன்பெருமையைக் காட்ட சில தமிழ்ப் பெரிய மனிதர்களின் சுயநலத்தில் உண்டாகும் எந்த விடயங்களிலும் தலையிடாமல் தன்பாட்டில் இருப்பது புத்திசாலித்தனம் என நினைத்தான்.

எப்படியும் சபேசனைக் கூப்பிட வேண்டும் என்ற நினைவு தீவிரமாக இவ்விடம் வந்ததும் இந்தக் கும்பல் ஒன்றில் சேர மாட்டான் என்று. என்ன நிச்சயம் என்று மரியன் கேட்டாள்.

சபேசன் இனவாதியில்லை. பிற்போக்குவாதியில்லை.

ஒரு சோசலிச சமுதாயத்தை உருவாக்க உழைக்கப் போகும் ஒரு இளைஞன் என்பதைப் பரமநாதன் உணராமல் இல்லை.

ஆனால் சபேசனின் கருத்துக்களும் கொள்கைகளும் லங்கையில் நடக்கும் கொடுமைகளால் சிதறிப்போய்க் கிடக்கின்றன. இங்கிலாந்துக்கு வந்ததும் இலங்கைப் பிரச்சினையைப் பார்க்கும் விதம் நிச்சயமாக வேறுவிதமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரியும்.

லண்டனுக்கு வந்ததும் ஒன்றிரண்டு கிழமை சரியான வேலை. அவன் வேலை செய்யும் ஒயில் கொம்பனியின் பேச்சு வார்த்தை விடயமாக வெளியிடங்களுக்குப் போக வேண்டி யிருந்தது. வேலை விடயம், வீட்டு விடயங்களுடன் ஒவ் வொரு சிறு கடிதங்கள் எழுதிப் போட்டான் இலங்கைக்கு.

தன் வீட்டுக்குத் தான் வந்த விடயத்தை எழுதிவிட்டு தங்கைகள் லண்டன் வரும் விடயத்தையும் விபரமாக எழுதச் சொன்னான்.

சபேசனுக்கு நீண்ட கடிதம் எழுத யோசித்தான். வந்ததும் வராததுமாக அவனுக்குப் ‘போதகர்’ வேலை பார்க்கத் தயங்கினான்.

கார்த்திகாவுக்கு எழுதி சபேசனை லண்டனுக்கு வரப் பண்ணுவதைத் தவிர வேறு வழி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. இவனின் கடிதம் அவளுக்கு ஆச்சரியத்தை யுண்டாக்கியிருக்க வேண்டும் என்று அவள் பதிலில் இருந்து தெரிந்தது.

நான் உங்களைக் கேட்க நீங்கள் என்னை உதவி கேட்கிறீர்களே என்ற தொனியில் எழுதியிருந்தாள்.

மரியனுக்கு கணவனின் மனப் போங்கு புரியாமல் இருந்தது. தன்னையும் மீராவையும் தவிர உலகத்தில் எதுவும் தேவையில்லை என்று இருந்தவன் முகத்தில் இலங்கை போய் வந்தபின் உண்டாகியிருக்கும் சிந்தனை ரேகைகளை அவளால் மட்டுக் கட்ட முடியாமல் இருந்தது.

என்ன நடந்திருக்கும் அப்படி என்று அவளால் திட்டமாக எதையும் நினைக்க முடியவில்லை.

தன் அன்புக்கும் அணைப்புக்கும் எந்த நேரமும் பாத்திரமாய் இருப்பவன் குடும்ப வாழ்வில் ஏனோதானோ என்று இருப்பதை உணரக் கூடியதாய் இருந்தது அவன் நடத்தைகளினால். கேட்கலாமா அவனிடம் என்று பல தடவை நினைத்துப் பார்த்தாள்.

அவன் எந்தக் கேள்விக்கும் இடம் வைக்காமல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.

நீறுபூத்த நெருப்பாக அவன் அடிமனத்தில் ஏதோ எரிவது அவனுக்குத் தெரிந்தது.

என்னவாக இருக்கும்?

கௌரிக்குத் தனக்குச் சொல்லாமல் கல்யாண எழுத்து வைத்ததா?

அல்லது பானுமதி சாதி குறைந்த உறவு கொண்டாடுகிறாள் சபேசனுடன் என்பதா?

அல்லது..

நான் அலுத்து விட்டேனா?

சில இரவுகள் நித்திரையற்று வெறும் நினைவுக் குவியலுடன் போராட வைத்து விட்டது மரியனை.

காலம் மாற்றும் எனத் தன்னைத் தானே ஏமாத்திக் கொண்டான்.

குளிர் முடிந்து விட்டது.

வைகாசி பிறக்கப் போகிறது.

இலை பரப்ப மரங்கள்

பூக்கள் கன்னி மலர புது இலை பரப்ப மரங்கள் துளிர்க்கின்றன.

வானம் வெளிக்கிறது.

லண்டன் தெருக்கள் இளம் பெண்களின் இனிய சிரிப்பில் மலர்கின்றன.

‘சமர்’ வரப்போகிறது.

தான் வந்து அடுத்த கிழமை வரப் போவதாக எண்ணியிருந்த இரு தங்கைகளும் வந்து சேர இரண்டு மாதங்களுக்கு மேலானது.

மகாதேவன், மண்டபம் ஒழுங்கு செய்து பூசாரி பார்த்து கல்யாண ஒழுங்குகளுக்குத் தடபுடலானான்.

தங்கைகள் திருவரும் வீட்டுக்கு வர மீராப் பெட்டை யின் செல்லம் கூடியது.

இரண்டு ‘அன்ரி களிலும் மாறிமாறித் தொத்திக்கொண்டாள்.

தானும் தன் கணவனும் மீராவையும் தவிர வேறு யாருடனும் பழகிப் பழக்கமில்லாத மரியன் வீடு நிறைய “மச்சாள்”களுடன் சமாளித்த விதம் கெட்டித்தனமாக இருந்தது.

சொந்தத் தய் தகப்பனைப் பார்க்கப் போக நாள் குறிப்பிடும் நாகரிக உலகத்தில் அண்ணன் தங்கை பாசம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டு அவள் மனம் இளகி விட்டாள்.

இப்படியான அன்பான தங்கைகளைப் பிரிந்து எப்படிப் பத்து வருடம் இருக்க முடிந்தது அவனால் என்று, அவளால் நம்ப முடியவில்லை. சில நேரம், தகப்பனின் எதிர்ப்பு மட்டுமல்ல கார்த்திகாவைப் பார்க்க நேரிடும் என்ற பயமும் தான் அவனை இலங்கைக்குப் போக விடாமல் பண்ணியது என்பது அவளுக்குத் தெரியாது. மகாதேவன் அடிக்கடி வந்து கௌரியைக் கூட்டிக் கொண்டு போனான். நல்ல பிள்ளையாகத் தெரிந்த மகாதேவன் லண்டனுக்கு வந்ததும் தான் பெரிய ஆள்போல நடப்பது சில வேளை எரிச்சலாக இருந்தது பரமநாதனுக்கு.

லண்டனில் எந்தத் தமிழன் தான் மற்றவனுக்குப் பெரிசு என்று காட்ட முயலவில்லை?

நான மகாதேவனுடன் குடித்தனம் நடத்தப் போகிறேன் என்று மனத்தைத் தேற்றிக் கொண்டான் பரமநாதன்.

ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் சபேசனின் படிப்பு சம்பந்தமான விடயங்கள் சேட்டிப்பிக்கட்டுகள் பதிவுத் தபாலில் வந்து சேர்ந்தன.

கிட்டத்தட்ட அவன் வரும் தறுவாயில் கொண்டு வந்து விட்டான்.

எதும் அட்மிஷன் எடுக்க முடியுமென்றால் உடனடியாக எடுங்கள் என்று கார்த்திகா எழுதியிருந்தாள்.

அந்தக் கடிதம் தந்த சந்தோசம் கடந்த இரண்டு மூன்று மாதமாக யாரும் தரவில்லை என்பதை யாரிடமும் சொல்ல வில்லை.

பானுமதிக்கு ரகசியமாகச் சொல்ல முடியவில்லை.இனிக் கௌரி எதிர்த்து என்ன பிரயோசனம்?

கோவிடனைக் கல்யாணம் முடிப்பதால் கௌரி பானுமதி வீட்டுக்குச் சாப்பிட வராமல் இருந்தால் இருக்கட்டும் லண் டனில் எப்படியும் மனிதர் வாழலாம்.

கௌரி முதலில் நம்பவில்லை.

யாருக்கும் தலைவணங்காத அல்லி ராணி போன்ற பானு மதிக்கும் காதல் வரும் என்று நம்ப மறுத்தாளோ என்னவோ, கௌரி தர்மசங்கடப்பட்டாள்.

அண்ணா ஆங்கிலேயப் பெண்ணைக் கல்யாணம் முடித்தால் ஏன் தங்கை இலங்கைக் கோவியனைச் செய்யக் கூடாது என்று தனக்குத் தானே தர்க்கம் பண்ணிப் பார்த்தாள்.

எனக்கேன் ‘யாருடைய’ சொந்த விடயத்திலும் தலையீடு என்று விலகி இருக்கத் தீர்மானித்தாள்.

மகாதேவனிடம் மூச்சு விடவில்லை.

ஏனோ தெரியவில்லை தன் தமையனை மகாதேவனுக்குப் பிடிக்கவில்லை என்பதைச் சாடையாக உணர்ந்திருந்தாள்.

இங்கிலிஸ் பெண்ணைத் திருமணம் செய்ததாக இருக்குமோ?

கௌரியீன் சல்யாணம் நெருங்கிக் கொண்டு வந்தது. மகாதேவனுடன் சவுத்ஹோலுக்குக் கூறைச் வாங்கப் போய் இருந்தாள்.

வுட்கிறின், லண்டனில் அவ்வளவு கறுப்பர்களைக் கொள்ளாத இடம். ஒன்றிரண்டு கறுப்பர்களைக் காண நேரிடும்.

சவுத்ஹோல்!

தலைப்பாகை கட்டிய ‘சிங்குகள், குஜராத்தி, மராட்டி, பஞ்சாபி எல்லா இந்திய இனத்தையும் சவுத்ஹோலில் காணலாம் போல இருந்தது.

என்ன இந்தியச் சாமானையும் சவுத்ஹோலில் வாங்க லாம் போல இருந்தது. அவள் பட்டிக்காட்டான் மிட் டாய்க் கடையைப் பார்க்கும் விதத்தில் செல்வம் கொட்டிய இந்தியரின் கடைகளைப் பார்த்ததைக்கண்டு சிரித்தான் மகா தேவன்.

நான் பம்பாய்க்குப் போகவில்லை. போனவர்கள் சொல் கிறார்கள் சவுத்ஹோல் பம்பாயின் ஒருபகுதி தான் ன்று என்றான் மகாதேவன்.

இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள். லண்டனில் குளிருக்கும் பனிக்கும் பயப்படாமல் வேலை செய்கிறார்கள். உழைக்கிறார்கள். காசு சேர்க்கிறார்கள். இதைப் பார்த்து சோம்பேறி வெள்ளைக்காரர் எரிச்சல் படுகிறார்கள்.

“எப்படி உம்முடைய அண்ணாவின் வெள்ளைக்கார மனைவி?” மகாதேவன் கேட்டான். குரலில் ஏதோ நையாண்டி இருப்பதாகப் பட்டது. கௌரி தேவையில்லாமல் ஏதும் சொல்லி அவனுடைய விமர்சனத்தைக் கேட்கத் தயாரா யில்லை.

மகாதேவன் லண்டனில் உள்ள தன் சினேகிதர்கள், உறவினர்கள் எல்லாரையும் கூப்பிட்டிருந்தான் கல்யாணத்துக்கு.

புக் பண்ணிய ஹோல் நிரம்பி வழிந்தது.

ஐயர் மந்திரமோத,அக்கினி சாட்சியாக அம்மி மிதித்து அருந்ததி பார்த்து (மண்டபத்தின் கூரைகளில் பகட்டான எலக்ட்ரிக்லைதான் எரிந்து கொண்டிருந்தது) மகாதேவன் கௌரியின் கழுத்தில் தாலி கட்டினான்.

இப்படி ஒன்றுமில்லாமல், வயிற்றில் குழந்தை வந்து விட்டது என்று சொன்னவுடன் விழுந்தடித்து நெஜிஸ்ரார் ஒவ்வீசுக்குப் போய்ப் பதிவுத் திருமணம் செய்து கொண்டது நினைவு வந்தது பரமநாதனுக்கு.

வீட்டாருக்குத் தெரியாது, சினேகிதர்களுக்குத் தெரியாது. அவனுக்கே நம்ப முடியாமல் இருந்தது தான் ஒரு கல்யாண வலையில் அகப்பட்டு விட்டேன் என்று.

கல்யாண நிலை வர எத்தனையோ காலங்களுக்கு முன்னமேயே. கார்த்திகாவுடன் உள்ள தொடர்பு இல்லாமல் போனாலும் கல்யாணப் பத்திரத்தில் கையெழுத்து வைக்கும் போது கார்த்திகாவின் சலங்கிய கண்கள் ஞாபகம் வந்தன.

பானுமதியின் திருமணம் எப்படி நடக்கப் போகிறது?

தங்கையைத் திரும்பிப் பார்த்தான்.

பானுமதி அதிக கவனத்துடன் தமக்கையின் கல்யாணத்தைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

என்ன சிந்தனை ஓடுகின்றன அவள் மனதில்?

எப்படி என் திருமணம் நடக்கப் போகிறது என்று நினைக்கிறாளா?

அத்தியாயம் – 2

‘யார் இந்தப் பெண்?’ மரியனின் முகத்தில் என்ன இருக்கிறது? சந்தேகமா?

மனைலியின் முகத்தைப் பார்த்துக் கொண்டு அவள் கையில் இருந்த கடிதத்தை வாங்கினான்.

எலிஸபெத்தின் கடிதம்.

உடைக்க முதல் மனைவியின் முகத்தைப் பார்த்தான். மரியன் அவ்வளவு குறுகிய உணர்ச்சி படைத்த பெண்ணா? அவன் முகத்தில் ஒன்றும் தெரியவில்லை. ‘நீயே உடைத் துப்பார்.’ புன்முறுவலுடன் மனைவியின் கையில் கொடுத்தான்.

அவனுக்குத் தெரியாது அவனில் உண்டாகியிருக்கும் மாற்றங்களுக்கு யார் அல்லது எது காரணம் என்று தெரியாமல் தன் மனைவி துடிப்பது.

எலிஸபெத் கூடிய விரைவில் லண்டனுக்கு வருவதாக வும் பரமநாதன் இப்போது லண்டனுக்கு வந்து விட்டான் என்று நினைத்து. எழுதுவதாகவும் எழுதியிருந்தாள்.

மிகுதி தன் தமக்கையைப் பற்றி, தமக்கையை உயிரு டன் காணக் கொடுத்து வைக்காததைப் பற்றி.

மெரிக்காவில் பிடித்துப் போய் இருக்கிறது. அடுத்த வன் எப்படி வசதியாய் இருக்கிறானோ அப்படியே தானும் இருக்க வேண்டும் என்ற பொருளாசையின் அடிப்படையில் உண்டான வாழ்க்கை அமைப்பு, இதனால் சாதாரண குடும்பங்கள் தாக்குப் பிடிக்க முடியாமற் சிதைகின்றன.

“எனது அக்கா இங்கிலாந்தில் இருக்கும் வரை இப்படி இல்லை. இருப்பது போதும் என்று திருப்திப் பட்டுக்கொண் டிருந்தாள். அவளின் கணவனைக் கண்டு கல்யாணம் செய்து மெரிக்கா வரும்வரை அவள் கொள்கைகளும் வாழ்க்கை யும் எவ்வளவு நிர்மலமாக இருந்தன என்பதை விளக்கிச் சொல்லமுடியாது. அப்படியானவள் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ளத் துணிந்ததற்கு எத்தனை வலிமையான மாற்றம் அவள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள். ஏன் இதெல்லாம் உங்களுக்குச் சொல்கிறேன் என்று தெரியவில்லை. யாருக்கும் சொல்ல வேண்டும் போல் இருந்தது. உலகம் சுற்ற வெளிக்கிட்டேன் உலகப் பெண்களைப் பார்க்க, அவர்களைப் பற்றி எழுத.

என் உணர்ச்சிகள் என் தமக்கைக்காக உதிரக் கண்ணீர் வடிப்பதை யார் அறிவார்கள்.

கெதியில் லண்டனுக்கு வருகிறேன். மறக்காமல் உங்கள்மனைவியை அறிமுகம் செய்து வையுங்கள்.

‘அன்புள்ள லிஸா.’ மரியன் வாசித்து விட்டுப் பரமநாதனிடம் கொடுத்தாள். ஆங்கிலேயப் பெண் கறுப்பனான தன் கணவனிடம் இவ்வளவு சினேகிதமாக எழுதும் அளவுக்கு அவர்கள் உறவு அவ்வளவு இறுக்கமானதா? தான் தேவை யில்லாமல் எதையோ, யாரையோ சந்தேகப்படுவது தெரிந்தது மரியனுக்கு.

தன் சந்தேகங்களுக்குப் பெயராக லீஸா பேக்கர் வந்தது சந்தற்பவசமா என்று அவளால் முடிவு கட்ட முடியாமல் இருந்தது. பரமநாதன் கடிதத்தை வாசித்து விட்டு மனைவியின் முகத்தைப் பார்த்தான்.

மட்டுக் கட்ட முடியவில்லை. அவள் முகத்தை பார்த்து நேரடியாகக் கேட்டான்.

“உமக்கு என்னிலும் லீஸாவிலும் சந்தேகமா?” பரமநாதனின் குரலில் தெளிவு தெரிந்திருக்க வேண்டும். கணவனை நிமிர்ந்து பார்த்தாள்; கண் கலங்கியது.

“ஐ லவ் யூ டார்லிங்”. கணவணை இறுக அணைத்துக் கொண்டாள். மரியன், “டோன்ட் பி ஸிலி”. பரமநாதனுக்கு எரிச்சல் தந்தது மரியன் அப்படி ஒப்பாரி வைத்தது.

“முன் தலை நரை விழுந்த உமது புருஷன் இல்லை என்று தான் லீஸா பேக்கர் திரிகிறாள் என்று நினைவா உனக்கு? அவள் ஒரு எழுத்தாளி பலதரப்பட்ட விடயங்களைப் பரந்த நோக்குடன் பார்ப்பவள், சினேகிதி என்ற விதத்தில் அல்லாமல் நீ நினைப்பது போல் எங்களுக்குள் ஒரு உறவுமில்லை.” பரமநாதனுக்கு எரிச்சல் வந்தது இப்படி வார்த்தைகளால் தன்னைத் தன் மனைவிக்கு விளங்கப் படுத்த வேண்டியிருப்பதை நினைத்து, இதுதானா கல்யாணம்?

உள்ளத்தாலும் உடலாலும் இனி வேறுபட்டவர்கள் இல்லை நாங்கள் என்று நினைக்கும்போது இன்னொருத்தி அல்லது இன்னொருத்தனுடன் ஒருதரம் பழகிவிட்டால் ஏன் இப்படி சந்தேகம் வரவேண்டும்?

மரியனில் பரிதாபம் வரவில்லை. எல்லாப் பெண்களும் மரியன் போலத்தான் என்று தன்னைத்தானே தேற்றிக் கொள்ளத் தயாராயில்லை.

வாய் விட்டு வார்த்தைகளால் தான் ஒன்றும் லீஸா வுடன் “படுத்தெழும்பவில்லை” என்று சொல்ல வேண்டியிருந்ததை விட்டு ஆத்திரம் அடைந்தான்.

ரஷ்யாவில் ரூரிஸ்ட் ஹொட்டேலில் லீஸாவைத் தன் படுக்கையறையில் தனிமையான, குளிர் இரவில் கண்ட போது உண்டான மயக்கம், ஞாபகம் வந்தது.

“If I am not married, I will ask you to sleep with me” என்று லீஸாவிடம் சொன்னதை அவன் மறக்கவில்லை.

அவள் இளமையில், திறமையில், இனிமையான அழகில் தன்னை மறந்தது அவனுக்குத் தெரியும்.

ஆனால் அவன் அதைவிட லீஸாவின் மென்மையான சினேகிதத்தை விரும்பினான்.

”Liza is not a woman for a one night stand.” அவன் கத்தினான் மனைவியிடம்.

மரியனுக்குப் பயமாக இருந்தது அவன் கோபத்தைப் பார்த்து. “ஏன் இப்படிக் கத்துகிறீர்கள்?” இங்கிலிஸ் உச்சரிப்புகள் அவள் வாயில் அமிழ்ந்து தெளிந்து வந்தன.

பரமநாதனுக்குப் பரிதாபம் வரவில்லை அவள் கண்ணீரைப் பார்த்து, பத்து வருட காலமாக மனச்சாட்சியுடன் மாரடித்து விட்டுத், தான் ஏமாற்றியவளைக் கண்டபோது அவள் என்ன சொன்னாள்? கார்த்திகா என்ன சொன்னாள்?

என்னை மன்னித்ததை வார்த்தைகளால் சொல்லவில்லை. எங்கள் உறவில் ஒரு நாளும் ‘உடலுறவு இருந்ததில்லை. ஆனால் அவள் பார்வையில் நான் இன்னும் அவளுடையவன். இன்னுமொரு பெண்ணிடம் என் உடம்பும் உடைமையும் என் உழைப்பும் மட்டும்தான் இருப்பதாக நினைக்கிறாளா கார்த்திகா? என் இளமை, அதன் இனிய உணர்வுகள், அதன் பாதிப்பில் உண்டான என் அன்பு அதன் வலிமை, அந்த உறவின் பெருமையை அவள் இன்னும் நினைத்தழுகிறாள். அந்த நினைவில் தான் வாழ்கிறாள்.

இங்கிலாந்துக்கு வர முதல் மெல்லிய நிலவொளியில் பம்பலப்பிட்டிக் கடற்கரையில் அணைத்துக் கொண்டிருந்தான். அப்படி அணைப்புக்களுக்கு எப்போதும் விலகுபவள் கார்த்திகா, இன்று இதுதான் கடைசி அணைப்பு என்றோ என்னவேவோ அசையாமல் இருந்தாள்.

இரவில் யாரும் தெரிந்தவர்கள் பார்த்தாலும் என்ற பதட்டம் இல்லை, எப்போதும் அவன் அணைப்புக்கு முணு முணுப்பு சிணுங்கல், ஒரு செல்லம் இருக்கும்.

அன்று, நீர் வழிய இருந்தாள்.

அவளால் ஒன்றும் பேசமுடியவில்லை. பேச ஓன்றும் இருக்கவில்லை.பேசி விளங்கப்படுத்தத் தேவையில்லாத எத்தனையோ உண்மைகளை, உணர்வுகளை அவர்கள் ஆத்மா உணர்ந்து கொள்ளும் என்று அவனுக்குத் தெரியும்.

“கார்த்திகா இரண்டு மூன்று வருடம் தானே?” அவன் அவள் தலையை வருடி விட்டான்.

“தயவு செய்து ஒன்றும் சொல்லாதீர்கள். கதைக்காமல் இருங்கள்.” அவள் தன் மென்மை விரலால் அவன் வாயைப் பொத்தினாள், தொட்ட அவள் விரல்களை முத்தமிட்டான்.

அவள் கன்னங்களில் வழிந்த நீர் முத்துக்கள் அவன் இதழ்களில் உப்புக் கரிப்பை உண்டாக்கியது. அவள் துடித்த இதழ்கள்; அவன் இதழில் பதிந்து ஆயிரம் துயரக் கதை சொல்லியது. இருதயத்தின் துடிப்புகள், வேதனைகள், ஆற்றாமை அந்தப் பிடியில், அந்த அணைப்பில், அந்த முத்தங்களில்… மெல்லுடல் அவனில் பரவி மோக நினைவுகளை யூட்டி… இதெல்லாம் மறந்து என்னைக் கண்டவுடன் என்ன சொன்னாள்? “கடந்த காலத்தைப் பற்றிக் கதைக்காதீர்கள்” என்றாள். என்னுடையனவாய் இருக்க வேண்டியவை இவை என்று ஆற்றாமையுடன் என் கைகளை அணைத்துக் கொண்டாள். சந்தர்ப்ப வசத்திற்குத் தன் தலைவிதியை நொந்து கொண்டாள்.

பத்து வருடப் பிரிவு, என்னில் உண்டான அன்பில் எந்த மாற்றத்தையும் உண்டாக்கவில்லை.

இவள்?

என் மனைவி?

பத்து வருடமாக என் படுக்கையறையைப் பகிர்ந்து கொண்டவள், ஒரு மாத இடைவெளியில் என்னைச் சந்தேகிக்கிறாளா?

நினைவே எரிச்சலாக இருந்தது அவனுக்கு.

‘உம்மைச் சொல்லி என்ன பிரயோசனம்?” அலுப்பு டன் முணுமுணுத்தான் பரமநாதன்.

மரியன் காலைச் சாப்பாடு முடிந்த மேசையைத் துப்பரவாக்கிக் கொண்டிருந்தாள்.

“என்ன சொல்கிறீர்கள்?” என்றாள் கோர்ன் பிளாக்ஸ் பெட்டியைத் தூக்கியபடி,

”You are only worried about Sex” அவன் வார்த்தைகள் அருவருப்பாக இருந்திருக்க வேண்டும்.

கையில் இருந்த கோர்ன் பிளாக்ஸ் எறிபட்டுச் சிதறியது. அவன் எழுந்து சென்றான் அவளைக் கவனியாமல்.

– தொடரும்…

– ஒரு கோடை விடுமுறை (நாவல்), முதற் பதிப்பு: ஐப்பசி 1981, அலை வெளியீடு, யாழ்ப்பாணம்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *