ஒரு கோடை விடுமுறை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2026
பார்வையிட்டோர்: 1,010 
 
 

(1981ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9

அத்தியாயம் – 7 

நினைவுகள் படர அவன் மனம் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டது.

கார்த்திகாவைக் காணவேண்டும் என்று கனவிலும் நினைத்து வரவில்லை.

மறைமுகமாக அவன் வேண்டிக் கொண்டான், யாரும் தெரிந்தவர்கள் அவளின் பேச்சை எடுக்காமல் இருக்க வேண்டும் என்று.

ஆனால் என்ன நடக்கிறது?

விரும்பியோ விரும்பாமலோ அவன் போகத்தான் வேண்டும். போய் என்ன கேட்பது? என்ன சொல்வது?

எங்களுக்குள் ஒரு நாளும் ஒரு தொடர்பும் இருந்த நில்லை என்ற மாதிரி முகத்தை எப்படி வைத்துக் கொள்வது என்பதை, அவனால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.

சபேசன் எப்படி நடந்து கொள்ளப் போகிறான்? அவனால் யோசித்து மூளையைக் குழப்ப விருப்பமில்லை. சத்தியமூர்த்தி மேல் கோபம் வந்தது. தன்னுடன் வந்திருக்கலாம் என்று பட்டது.

திரும்பத் திரும்ப யோசித்து விட்டு அன்று பின்னேரம் வெளிக்கிட்டான். நல்ல சகுனம் பார்த்தா இலங்கைக்கு வந்தான்? வெள்ளிக்கிழமை. பெரியக்கா கோயில் போகத் துடக்கு அதனால் போகவில்லை. குழந்தைகளுடன் மைத்துனரின் சொந்த வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

நல்ல காலம் இல்லை என்றால் எங்கு கொழும்பில் சுத்தித் திரிகிறாய் என்று, அக்கா கேட்டாலும் கேட்பாள்.

பானுமதி எழுதித் தரவில்லை. சொன்ன விலாசம் மன தில் பதிந்திருந்தது.

வெள்ளவத்தை – தெகிவளை எல்லையில் வீடு இருந்தது. தமிழர்களின் வீடாக இருக்க வேண்டும்; பக்குவமாக துளசி மரம் நட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது ஒரு மூலையில்

மாலை வெயில் குறைந்து வந்து கொண்டிருந்தது. தூரத்தில் மேற்கு அடிவானத்தில் சூரியனின் சிவப்பு முகம் கோபத்தால் சிவந்து கவர்ந்தது.

மெல்லக் கதவு மணியை அடித்தான். கொஞ்ச நேரம் யாரும் வரவில்லை.

பானுமதி சொன்ன விதத்தில் இருந்து சபேசன் எடுத் தெறிந்து பேசுபவன், முன்கோபி, யாருக்கும் விட்டுக் கொடுக்காதவன்..

கதவைத் திறக்கப் போகிறான் என்று எதிர்பார்த்தபடி நின்றான்.

யாரும் வரவில்லை.

இன்னொருதரம் அழுத்தியடித்தான். மெல்லிய காலடிகள் கேட்டது.

மனம் ஏதோ செய்தது. அடிமனத்தில் யாரோ சுத்தியல் தட்டுவதுபோல் இருந்தது.

கதவு திறந்தது.

தலை முழுகிக் கலைய விட்டு, பளிச்சென்ற முகத்துடன் அவள் திரிந்தாள்.

அவன் அப்படியே நின்றான்.

அவர்கள் அப்படியே சிலைகளாய் நின்றார்கள். நாவரண்டு வாயுலர்ந்து மனம் தவிக்க நிலை குலைந்து அவன் நின்றான்.

பேயடைந்த முகத்தில் பிரமை சுழித்தோட, படபடக்கும் கண்களில் நீர்த் திவலை முத்தாட அவள் நின்றாள்.

அவனுடைய ‘அவளாக’ ஒரு காலத்தில் இருந்தவள்!

யார் என்ன கதைப்பது? ஏதும் இருக்கிறதா கதைக்க? என்ன உண்டு உறவு?

அவன் தடுமாறினான் “சபேசன்… சபேசன்…” வார்த்தைக கள் வரவில்லை.

அவள் கைகள் கதவைப் பிடித்த பிடிப்பில் தெரிந்தது உணர்ச்சிகளை எப்படிக் கட்டுப்படுத்தத், துடிக்கிறாள் என்று.

கார்த்திகா என்னை மன்னித்து விடு என்று கதற வேண்டும் போல் இருந்தது.

‘பானுமதி சொன்னாள் என்று சொல்லவா? சபேசனைப் பற்றி என்னென்று பேச்செடுப்பது?’

“சபேசன் இல்லை” அவள் குரல் மென்மையாய், சோகமாய் உலர்ந்த பூக்களாய் கொட்டியது.

உங்களுடன் ஓடிவர எனக்குக் கொடுத்து வைக்கவில்லை என்று, அவன் தோள்களில் புரண்டு அழுத அவளின் கடைசிக் குரல்,

பத்து வருடங்களைத் தாண்டி இப்போது ஒலித்தது. அதெல்லாம் வெறும் கதைகள், நான் யாரோ இப்போது என்று எப்படி நடப்பது?

அவன் அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை.

நிற்க தலை சுற்றிக் கொண்டு வந்தது. திரும்ப நடந் தான்.

எதிரிக்கும் என் நிலை வரவேண்டாம். காதலித்துக் கை விடுவது பிரச்சினையில்லை. அவள் கண்களின் சோகத்தை அவனால் தாங்க முடியாது தான் அவனால் பொறுக்க முடியாத வேதனையாக இருந்தது.

‘கேற்’ றடியில் வந்ததும் திரும்பிப் பார்த்தான், நீர்த்திவலை முத்தாட நொந்துருகும் வேதனையில் நிழல் போல நின்றவளின் தோற்றம், கதவடியில் இல்லை.

கதவு மணியடிக்கும் போது காது கேட்காத சொறி நாயொன்று ‘கேற்’ சாத்தும் சத்தத்தில் அலறி மர நிழலில் படுத்து லொள் லொள் என்றது.

மெயின் றோட்டுக்குத் திரும்பி வந்து பஸ் எடுக்க வேண்டும் என்ற நினைவு இன்றி எதிர்ப்பக்கம் நடந்தான்.

கடல் அலைகள் நிம்மதியாகக் கரையைத் தொட்டு முத்தமிட்டு ஓடி விளையாடின. குழந்தைகள் அலைகளுடன் ஓடிப்பிடித்துக் குதூகலித்தார்கள். வெளிநாட்டார் ஒன்றிரண்டு பேர் கடந்து போனார்கள்.

மணலில் கால் புதைய. மனதில் நினைவலைய அவன் நடந்தான். ஒரு செல்லாத மனிதனைப் போல் இருந்தது அவன் சிந்தனை.

என்னதான் நாகரிகம் என்று வாழ்ந்தாலும், எம்மை நாமே ஏமாற்றி எமக்கு நாங்களே சமாதானம் செய்து கொள்வது, எவ்வளவு அநாகரிகம் என்று பட்டது.

வாய் விட்டுத் தன்னைத் தானே திட்டிக் கொள்ளவேண்டும் போல் இருந்தது. மனைவியின் கடிதம் கண்டதும் என் மனைவி, என் குழந்தை, எனது வீடு, எனது சிறிய உலகம் என்று பெருமைப் பட்டது வெறும் பொய்மையாகவும். என்னுடையவை என்று இறுமாந்தவை அவன் ஏமாற்றின் சாட்சியங்களாகவும் தோன்றின.

ஆயிரம் சமாதானங்கள் கடந்த பத்து வருடமாக அவன் மனதில் வந்துபோயின. ஒரு காலத்தில் கார்த்திகாவைக் சண்டால் சொல்லிச் சமாளிக்க. அவை எதற்கும் எந்த வலிமையும் இருக்கப் போவதில்லை, துயர்படிந்த அவள் விழிகளின் கூர்மைக்கு முன்னால் என்பது உண்மை.

அவள் முகத்தில் குங்குமம் இல்லை. கழுத்தில் தாலி இல்லை. அவளுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. பானுமதி தணிச்சலுடன் வாய் விட்டுக் கார்த்திகாவின் பெயரைச் சொன்ன போதும், அவன் மனம் வீட்டுக் கார்த்திகாவுக்கு என்ன நடந்தது என்று கேட்கவில்லை.

கோழைகள், கோழைகள். என்னை விடப் பெரியவன் இல்லை, எனக்கு இருக்கும் வலிமை யாருக்கும் இல்லை என்ற பொய்யுணர்வில் கோட்டை கட்டி, மெய்மையற்ற வாழ்வு காணும் சிறு புத்தியுள்ளவர்கள் கோழைகள். உண்மையைத் தாங்க முடியாத. அனுபவிக்கத் தெரியாத கோழைகள்.

எதிரே வருவோர் போவோர் வெறும் சதைப் பிணங்களாய், இயக்கிவிட்ட பொம்மைகளாய்த் தெரிந்தன.

கால் போன போக்கில் அவன் நடந்தான்.

“ஹலோ” யாருடைய தயக்கமான குரல் அது? அவன் திரும்பிப் பார்த்தான்.

தமக்கை தந்த அதிர்ச்சி நீங்க முதல், தம்பி நின்றிருந்தான்.

எவனைத் தேடி என்னவெல்லாமோ கதைக்கக் காத்திருந்தவன் அவன் முன்னால் நின்றதும், ஒரு கணம் திகைத்து விட்டான். பத்து வருடத்துக்கு முன் பையனாகக் கண்டவன் தனக்கும் பெரியவனாய் நிற்பது ஒருகணம் தடுமாற்றமாய் இருந்தது.

“ஹலோ” சொன்னான் பரமநாதன். உன்னைத் தான் தேடிப்போய் நிலை குலைந்து வந்திருக்கிறேன் என்று சொல்லலாமா?

“நீங்கள் வந்திருப்பதாகக் கேள்வி” சபேசன் தொடங்கினான். ஒரு கணம் விளங்கிக் கொள்ளவில்லை என்ன கருத்தில் சொல்கிறான் என்று.

“சொறி உங்கள் தகப்பன்…” சபேசன் இழுத்தான்.

அதற்குத் துக்கப்பட்டு என்ன பிரயோசனம் என்பது போல் இவன் தலையாட்டினான். நீயும் என் தங்கையும் தான் முதல் காரணம் என்று மனம் சொல்லியது.

தூரத்தில் சில கற்பாறைகன் தெரிந்தன. இருவரும் போய் உட்கார்ந்தார்கள்.

“எழுதுவதாகக் கேள்வி” என்றான் பரமநாதன். சாதாரணமாகக் கதைக்க முடிந்தது சந்தோசமாக இருந்தது.

சபேசன் நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன எழுதுவீர்?” இவன் கேட்க அவனுடைய சாதாரண பார்வை கூர்மையடைவது போலத் தெரிந்தது.

“எதை எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” சபேசன் குரலில் நையாண்டி இருப்பதாகப் பட்டது.

“நீர் எழுதுவது எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க யார் நான்?” பரமநாதன் விட்டுக் கொடுக்காமல் சொன்னான்.

“தமிழ் எழுத்தாளர்கள் என்ன எழுதுவது என்று தெரியாமல் திண்டாடுகிறார்கள். இலக்கியம் படைக்க எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன என்பதைத் தெரியாத எழுத்தாளர்களால் தான், இன்றைய தமிழ் எழுத்துலகம் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது” சபேசன் சொல்ல பரமநாதன் தர்ம சங்கடத்துடன் தலையாட்டினான். பத்து வரு டங்களாகக் கிட்டத்தட்ட எந்த தமிழ் நாவலும் எந்தத் தமிழ்ப் புத்தகங்களும் படிக்கவில்லை என்று சொல்ல நினைத்தான்.

“எதை எழுத வேண்டும் என்பது பிரச்சினை என்று நான் நினைக்கவில்லை. எழுத வேண்டிய பொருளை மக்களுக்குத் தேவையான விதத்தில் படைப்பது தான், ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு எழுத்தாளனின் பங்காக இருக்க வேண்டும் என்பது என் கருத்து”

சபேசனுடன் இலக்கிய தர்க்கம் செய்யவா லண்டனிலிருந்து ஒரு மாத லீவில் வந்தான்?

இலக்கியம் இலக்கியம் என்று இலட்சியம் பேசும் கலைஞர்கள் என்னதான் படைத்து விட்டார்கள் என்று அவனுக்குத் தெரியவில்லை. இலங்கை எழுத்தாளர்கள் எத்தனைபேர் வெகுஜனமக்களின் பிரச்சினைகளை எழுதுகிறார்கள்? தற்காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் புரிந்து கொள்ள முடியாததால் நீண்ட காலமாய் ஒன்றும் உருப்படியாய்த் தெரிந்து கொள்ளாததால், பரமநாதன் மெளனமாய் இருந்தான்.

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” சபேசன் சாதாரண மாகக் கேட்டான். முதற்தரம் பரமநாதன் சபேசனை முழுக்க முழுக்க எடை போட்டான்.

நீண்டு வளர்ந்த தோற்றம். தீட்சண்யம் பொருந்திய கண்கள்; அளவாக எடுத்து ஒட்டியதுபோல மூக்கும் வாயும்.

பானுமதி பைத்தியமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. அவன் இப்படி எடை போட்டுப் பார்த்தது சபேசனுக்குப் பிடிக்காமலோ தர்ம சங்கடமாகவோ இருந்திருக்க வேண்டும்; மறுபக்கத் திரும்பிக் கொண்டான் அவன்.

மெல்லிருளில் நெஞ்சம் புதையக் கொஞ்சும் காதலி போல் நீளலைகள் நீண்ட அடிவானத்தின் மார்பில் அமைதியாகக் கிடந்தன.

“பானுமதி உம்மைப் பற்றிச் சொன்னாள்” நேரடியாக விடயத்துக்கு வருவதைத் தவிர, வேறு வழி தெரியவில்லை பரமநாதனுக்கு. அது பிழையாகவும் தெரியவில்லை.

அவன் ஸ்டைலாகத் தலையையசைத்து விட்டுப் பரமநாதனைப் பார்த்தான். என்ன சொன்னாள் என்று கேட்டிருந்தால் ‘நீ பைத்தியம் பிடித்து தமிழர் விடுதலை பேசிக் கொண்டு திரிகிறாய்’ என்று நேரடியாகச் சொல்ல விரும்பினான்.

“குடும்பப் பொறுப்புள்ளவர்கள் மற்றவர்களுக்குப் பச்சாதாபப்படுவதைக், கொஞ்சம் ஒதுக்கி வைத்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்” பரமநாதனுக்கு மனதுக்குள் திருப்தி.

சண்டையும் தர்க்கமும் உண்டாகாத விதத்தில் சம்பாஷனை தொடக்கி விட்ட நிம்மதி. அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை, சபேசனின் அடுத்த கேள்வியின் பின்.

“அப்படித்தான் நினைத்து உங்களை நம்பிய கார்த்திகாவை மறந்தீர்களா?”

பரமநாதனுக்கு இது, எதிர்பாராத கேள்வியல்ல. யாரோ ஒருநாள் நேரடியாசக் கேட்பார்கள் என்று மனம் உறுத்திக் கொண்டு தான் இருந்தது.

“சபேசன், நடந்த போன காரியங்களுக்கு நான் விளக்கம் சொல்ல அவசியமில்லை. தனிப்பட்ட விடயங்களைக் கதைக்க நான் வரவில்லை”.

பரமநாதன் சொன்னது சபேசனுக்கு வினோதமாக இருந்திருக்க வேண்டும்.

“எனது தமக்கையின் வாழ்க்கைப் பிரச்சனை என் தனிப் பட்ட பிரச்சினையுடன் சம்பந்தமில்லை என்றால், என்னென்று உங்கள் தங்கச்சியின் பிரச்சினை, உங்கள் தனிப்பட்ட பிரச்சினையாக இருக்கும்?”

பரமநாதனுக்கு அவன் கேள்வி எரிச்சலையுண்டாக்கியது. காரணம் தனக்கு மறுமொழி முடியாதது என்று நினைத்தான்.

அவன் தர்ம சங்கடம் நிலைக்கமுதல் மெல்லிருளின் அமைதியைக் கலைத்துக் கொண்டு “ஹலோ” என்ற இனிமையான குரல் கேட்டது.

பார்க்காமலே அடையாளம் காணலாம். தன்னைக் கடந்து போன ஆங்கிலேயர் நடுவில் அவள் நின்றாள்.

எலிஸபெத் பேக்கர்!

நீண்ட பாவாடை பட்டிக் பிளவுஸ், தலை உச்சிக் கொண்டை; கை நிறையக் காப்புகள்.

‘ஹிப்பி’ போலத் தெரிந்தாள் மங்கிய நிலவொளியில். அவன் “ஹலோ” என்று சொல்லி விட்டு எழுந்தான். அவளுடன் வந்தவர்கள் “சீ யூ லிஸா” சொல்லி விட்டுப் போய் விட்டார்கள்.

சபேசனுக்கு லிஸாவை அறிமுகப்படுத்தினான். சபேசன் போக யோசிப்பான் என்று லிஸா நினைத்திருக்க வேண்டும். லிஸா போய் விடுவாள் என்று சபேசன் நினைத்திருந்தால் அவனும் பிழை.

இருவரும் தர்ம சங்கடத்துடன் பேச்சை ஆரம்பிக்க யோசிப்பது தெரிந்தது.

“உம்மைப் போலத்தான் லிஸா பேக்கரும் ஒரு எழுத்தாளி” என்றான் பரமநாதன். அவர்கள் இருவருக்குமுள்ள ஒற்றுமையை வெளிப்படுத்த அவன் முயற்சி செய்தான்.

லிஸாவின் முகம் நிலவொளியில் பளிச்சிட்டது.

“என்ன எழுதுகிறீர்கள்?” என்றாள் ஆர்வத்துடன். சபேசன் அவளை மேலும் கீழும் பார்ப்பது தெரிந்தது.

“தற்போது தமிழரின் பிரச்சினையை, இலக்கியம் என்பது எழுத்தாளன் தான் வாழும் காலத்தின் பிரச்சினைகளைத் வெளிப்படுத்த தான் காணும் மனிதர்களின் பிரச்சினையை எழுதப் படவேண்டும் என்பது என் அபிப்பிராயம். அப்படி எழுதப் படாமல் வெறும் பெயருக்கும், புகழுக்கும் எழுதுவது இலக்கியத் திறமையை விபச்சாரம் செய்வது போல் என்பது என் அபிப்பிராயம். நடைமுறை வலிமையற்ற இலக்கியத்துக்கு எந்த மதிப்பும் இருக்காது என்பதும் என் அபிப்பிராயம்”

சபேசனின் நீண்ட விளக்கம் அவனுக்கு சந்தோஷம் கொடுத்திருக்க வேண்டும்.

“எக்ஸாக்ட்லி! எக்ஸாக்ட்வி!” என்று கூவினாள்.

தன் பெண்ணுரிமைப் பிரசங்கத்தை அவள் தொடங்காமல் இருக்க வேண்டும் என்று மனத்துக்குள் வேண்டிக் கொண்டான் பரமநாதன்

“எழுத்தாளரின் பணி சரித்திர ஆசிரியனின் பணியை விட முக்கியமானது என்பது என் கருத்து. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகச் சரித்திர ஆசிரியர்கள் எப்போதும் தனிப்பட்ட மக்களுக்குப் பிரபல்யம் கொடுத்து ஒருதலைப்பட்ட சரித்திரம் தான் படைத்திருக்கிறார்கள். ஒரு சமுதாய, ஒரு இனத்தின் பிரச்சினை எங்கே தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது?”

சபேசன் குரலில் வேகம். பரமநாதனுக்குத் தெரியும் அவன் இலங்கைப் பிரச்சினையைத் தொடங்குகிறான் என்று. எலிஸபெத்துக்கு முன்னால் சபேசனுடன் வாக்கு வாதப்பட விரும்பவில்லை.

சபேசன் போய் விட்டால் போதுமென்றிருந்தது.

“நீங்கள் என்ன விடயங்களில் அக்கறை எடுத்து எழுதுறீர்கள்?” என்று எலிஸபெத்தைச் சபேசன் கேட்டான்.

“பெரும்பாலும் பெண்களின் பிரச்சினைகள். சாதி, மத கலாச்சார ஆண் வர்க்கத்தின் அடிமை கொள்ளும் மனப் பான்மைகளால் பெண்களை அடக்கி சில இடங்களில் அடிமை போலும் வைத்திருக்கிறார்கள். அது ஆண்களின் பிழை மட்டுமல்ல. பெண்கள் தங்களின் உரிமையும், சமுதாயத்தில் உள்ள நிலைமையும் இவ்வளவு தான் என்று நம்பிக்கொண்டிருப்பதும் தான். வேதனையான விடயம். இவைகளை ஆராய்ந்து எழுதுகிறேன்”

எலிஸபெத் சொன்ன விளக்கம் சபேசனுக்குச் சந்தோஷமளித்ததோ இல்லையோ, பரமநாதனுக்குத் திருப்தியாக இருந்தது.

“ஆனால், சபேசன் தனிப்பட்ட இனவாதத்தைத் தூக்கிப் பிடித்து எழுதுகிறார். இலக்கியம் இனவெறியைத் தூண்டுவதாக இருக்கக்கூடாது. கலைஞர்கள், சிற்பிகள், வெறும் மண்ணிலும் கல்லிலும் சிலையமைப்பவர்கள். அதைக் கலைக் கண்ணோடு, ஆக்க உணர்வோடு படைக்க வேண்டும். அழிவுகளின் அடிப்படையைத் தூண்டத் தக்கதாக எழுதி இளம் தலைமுறையினரை வழிதிருப்பக் கூடாது. எங்கே வெற்றி கிடைக்கும் எங்கே வேரோடு கொள்கைகள் பிடுங்குப்படும் என்ற தெளிவான கண்ணோட்டம் இருக்க வேண்டும்.”

பரமநாதன் பொதுப்படையாகச் சொன்னான். அவன் எதைத் தாக்கிப் பேசுகிறான் என்று சபேசனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

“உலகத்தில் எந்த மூலையிலும் நான், என் உரிமை. எங்கள் கடமை என்று ஒவ்வொரு இன மக்களும் தங்கள் உரிமைகளுக்குப் போராடுகிறார்கள். எந்த முற்போக்குவாதியும் அடக்கப்பட்ட மக்கள் அடங்கியிருப்பது தான் சரி என எழுத மாட்டான். அப்படி யாரும் எழுதினால் அவர்கள் இலக்கியத்தைச் சந்தர்ப்பங்களுக்கு விற்றுப் பிழைக்கும் விபச்சாரிகள். எனது இனம் இலங்கையில் திட்டம் போட்டு நசுக்கப்பட்டு, இனரீதியாக, மொழி ரீதியாக, மனிதத் தன்மை யற்று அழிக்கப்படும் போது, முற்போக்கு என்ற பெயரில் நான் மூன்றாம் பேர்வழியின் பிரச்சினையை என் எழுத்தில் வடிக்கப் போவதில்லை. மொஸ்கோவில் மழை பெய்தால் பெரிய கடையில் குடை பிடிக்கும் கலைஞர்கள். சீனாவின் துக்கத்துக்குச் சினம் காட்டும் சிற்பிகள், வெறும் வசனப் போர்வையில் வெறும் சதை இலக்கியம் படைக்கும் விண்ணர்கள் என்னைப் பார்த்து – என் போன்றவர்களைப் பார்த்து இன வாதத்தைத் தூண்டும் இலக்கியம் படைக்கிறார்கள் என்று சொல்ல, என்ன உரிமையும் இருப்பதாகத் தெரிய வில்லை”

சபேசன் குரலில் நெருப்பு வெடித்தது. தெகிவளைக் கடற்கரையில் அலை தவழ்ந்த கடல் அவன் ஆவேசத்தில் நிலையற்று நின்றதுபே ல இருந்தது. மெல்லிய நிலவொளி மூச்சற்று ஒழிந்தது ஒரு முகிலில் பரமநாதன் மௌனமாக இருந்தான்.

சபேசன் போன்ற தமிழ் இளைஞர்களின் உணர்ச்சி இப்படி வெடித்துக் கிளம்புவது ஆச்சரியமாகத் தோன்றவில்லை ஒரு விதத்தில்.

சத்தியமூர்த்தியின் எரிந்த வீடு, சத்தியமூர்த்தியின் முறிந்த கால் என்பவற்றைப் பார்த்து தனக்கு வந்த வேதனைகளை ஒப்பிட்டுப் பார்த்தான். இலங்கையில் இருந்து தானும் இந்த வேதனைகளை அனுபவித்தால் தானுமொரு சபேசனாக இருக்க மாட்டேனா என்று, அவன் யோசித்தான்.

ஆனால் ஒரு சில தமிழ் இளைஞர்கள் உணர்ச்சி வேகத்தில் செய்யும் செய்ய நினைக்கும் சில காரியங்கள் ஒரு இனத்தையே புதை குழிக்கு இட்டுச் செல்லலாமே?

பரமநாதன் சபேசனின் உணர்ச்சிவசமான பேச்சால், தன் மனத்தில் எந்தவிதமான சலனமும் உண்டாகவில்லை என்று காட்ட நினைத்தான்.

குரலைச் சாதாரணமாக வைத்துக் கொண்டான்.

“சபேசன், அரசியலில் இருப்பவர்கள் எந்த நாட்டிலும் இப்படி எத்தனையோ பித்தலாட்டங்கள் செய்து விட்டு, எல்லாவற்றையும் காலப் போக்கில் மறைத்து விடுகிறார்கள். ஆனால் தனிப்பட்ட ஒரு சில இளைஞர்களின் குழுக்களோ, அவர்களின் உணர்ச்சிகளின் வேகமோ ஒரு இனத்தை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வது ஒரு சமுதாயத்துக்குச் செய்யும் நன்மையாக முடியாமற் போவது தெரியவில்லையா?”

பரமநாதன் யாரோ போல் பேசுவதாகப் பட்டது அவனுக்கு. சபேசன் நிமிர்ந்து பார்த்தான். எலிஸபெத் அவர்கள் தர்க்கத்தில் இடையில் குறுக்கிடாமல் மெளனமாக இருந்தாள்.

“தனிப்பட்ட சில குழுக்கள்; அவர்களின் உணர்ச்சிகள்!” ஏதோ தலையங்கத்தை வாசிப்பது போல் இருந்தது, சபேசனின் குரல்.

“உங்களைப் போல் சுயநலவாதிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது, இலங்கையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று, தீர்மானிக்க” சபேசன் கத்தினான். சபேசன் குரல் ஆவேசத்துடன் ஒலித்தது.

“இலங்கையில் இருக்கா விட்டாலும் நான் தமிழன் என்பதை மறக்கவில்லை” பரமநாதனுக்கு எரிச்சலாக இருந்தது. எலிஸபெத்துக்கு முன்னால், அவன் இப்படித் தாக்குவது.

“தமிழர்கள்! தமிழர்கள்!” சபேசன் வாய் விட்டுச் சிரித்தான். பைத்தியமோ இவனுக்கு என்று கோபம் வந்தது பரமநாதனுக்கு.

“தமிழன் மட்டும் என்றில்லை. எந்த ஒரு ஜீவனும் தன் குடும்பம். ஒரு ஏகாதிபத்திய அரசின் கையில் நிலை குலைந்து போவதை வெறும் கண்களோடு பார்த்துக் கொண்டிருப்பான் என்பது, நம்ப முடியாமல் இருக்கிறது. மிஸ்டர் பரமநாதன், உமது தத்துவம் எனது கொள்கைகளுடன் ஒரு நாளும் ஒத்துப் போகாது. உமது தம்பியை உமது கண்கள் முன்னால் உடுப்புப்போட்ட உத்தியோகத்தர்கள் சித்திரவதை செய்யவில்லை. பின்னர் உருத்தெரியாமல் ஆககி விட்டுப் பிணத்தை பண்ணை றோட்டில் போட்டதை நீர் பார்த்திருக்க மாட்டீர். எந்தத் தமிழ்ப் பெண், தன் உயிரிலும் மேலாகத் தன் கற்பைப் பெரிது என்று நினைக்கிறாளோ, அதை இனவெறியர்கள் பாழ்படுத்த நீர் பார்த்து மௌனமாக இருப்பீர் என்று என்னால் நம்ப முடியாமல் இருக்கிறது. எனது தம்பியின் உடல் பண்ணைக் கடற்கரையில் கிடந்த நேரம், நான் சாத்வீகம் பேசவில்லை என்று உம்மைப் போன்ற முட்டாள்கள் நினைக்கலாம். வயிற்றுப் பிழைப்புக்காக இனத்தின் வேதனையை மறந்து லண்டனில் ஒளித்துக் கிடப்பவர்கள், எங்களுக்கு உபதேசிகளாக இருக்க வேண்டாம். என் தமக்கை கற்பழிக்கப்பட்டபோது நான் கண்ணகிக்குக் கற்சிலை எழுப்புவது பற்றி கலாசாரப் பிரசங்கம் எழுதவில்லை என்று தான், உம்மைப்போல் சந்தர்ப்பவாதிகள் நினைப்பார்கள்.

உமது தம்பி இறக்கவில்லை அநியாயமாக. உமது தமக்கை கற்பழிக்கப்படவில்லை காடைச் சிங்களவர்களால். உமக்கு எங்கே இருக்கப் போகிறது உணர்ச்சி? இதெல்லாம் யாருக்கோ நடக்கிறது. உம்போன்றவர்கள் என்னைப்போன்ற ஏழைகளாய் இலாததால் தப்பி விட்டீர்கள்”

சபேசன் போய்க் கொண்டிருக்கிறான் என்ற உணர்ச்சி கூடத் தெரியாமல் கல்லாய்ச் சமைந்திருந்தான் பரமநாதன்.

“என் தம்பி உருக்குலைந்து.. என் தமக்கை கற்பிழந்து” கரை தவழும் கடல் அலைகள் பயங்கரமாகச் சொல்லிச் சத்தம் போடுவதுபோல் இருந்தது. ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன் பார்த்த கார்த்திகாவின் முகம் ஞாபகம் வந்தது.

‘கார்த்திகா’

கார்த்திகா எதை ஒரு தமிழ்ப் பெண் தன் உயிரிலும் மேலாக நினைத்தாளோ, அதையிழந்து நீயிருக்க… தான் இருந்த கற்பாறையுடன் அவன் சங்கமமாகி விடவேண்டும் போல் இருந்தது.

என் உயிரினும் மேலாக ஒரு காலத்தில் இருந்தவள் உணர்ச்சி வெறிகொண்ட இனவாதிகள் கையில் என் தோள்களில் மாலையெனப் புரண்ட அவள் கொடியுடல், இந்தக் கொடுமையாளர்கள் பிடியில். எனக்காக எவ்வளவு காலமும் காத்திருப்பதாகச் சொன்ன அவள் உயிர், உணர்வு, அவளின் பெண்மை…

“ஓ! நோ… ஓ! நே…” அவன் வாய் விட்டுச் சொன்னான்.

தலையைப் பிடித்துக் கொண்டு பைத்தியம் போல் சொன்னான். மெல்லமாகத் தோள்களில் கை வைத்தாள் எலிஸபெத்.

“உங்கள் நண்பர் உங்களை ‘அப்செட்’ பண்ணி விட் டார் போல் இருக்கிறது” அவளின் பரிவு இன்னும் அவன் வேதனையைத் தூண்டி விட்டது. ‘கடல் எழுந்து விழுங்காதோ’ எனப் பைத்தியக்காரன் போல் நினைத்தான்.

கார்த்திகா என்று பெயர் சொல்லிக் கத்தியிருப்பான் எலிஸபெத் இல்லாவிட்டால். ‘கார்த்திகா’

நீர் துவண்ட அவள் விழிகள் அவன் நினைவில் வந்தன. என்ன கொடுமை.

என்ன கொடுமை.

இப்படி எத்தனை கார்த்திகாக்கள் பறிபோய் இருப்பார்கள் இந்தப் பண்பு கெட்ட அரசாங்கத்தால்.

கொடுமையிலும் கொடுமை தன்னைப் பாதுகாக்க வேண்டிய தாயே, தன் குழந்தைக்கு நஞ்சு கொடுப்பது; தன் ஆத்மாவைக் கொலை செய்வது. தன் பெண்மையைப் பறி கொடுத்த கார்த்திகா போன்ற பெண்களின் கற்புக்கு, வலிமை இல்லையா?

அநியாயம் நிலைப்பதில்லை என்பார்களே. இப்படிக் கொடுமை செய்து அரசோச்சும் அரசு ஏன் இன்னும் எரிந்தொழியாமல் இருக்கிறது? அவன் நினைவுகள் பொரிந்தன.

லண்டனில் இருந்தால் இதெல்லாம் தெரியுமா?

“நான் போகட்டுமா” எலிஸபெத் கேட்டாள். அவளை நிமிர்ந்து பார்த்தான்.

ரஷ்யன் ஹொட்டேல் ஒன்றில் அவன் கருத்தைக் குழப்பிய அழகாகத் தெரியவில்லை, அவள் முகம்.

பரிவாக – தாய்மையுடன்.

“ஓ! எலிஸபெத்” அவன் அவள் கைகளில் தன் கைகளைப் பிணைத்துக் கொண்டான்.

சொல்லலாமா என்னை முத்தமிடத் தயங்கிய என் காதலியை, எப்படிச் சிங்கள முரடர்கள் கற்பழித்தார்கள் என்று. என் அருமைக்கார்த்திகா கற்பிழந்தாள் தமிழ்ப் பெண் என்ற குற்றத்தால்.

இவளுக்கு விளங்குமா காதலைப் பற்றி?

”எப்போதாவது காதலில் மாட்டுப் பட்டிருக்கிறாயா?” அவனின் கேள்வி அவளுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்க வேண்டும்.

சபேசன் அரசியலைப் பற்றிப் பேசி விட்டுப் போனபின் இவன் ஏன் காதலைப் பற்றிப் புலம்புகிறான் என்று தெரிய வில்லை அவளுக்கு.

“என்ன விதமான காதல்” அவள் கேட்டாள். ‘என்ன விசர்க் கேள்வி இது?’

“கணவர் தரும் காதலா, காதலர் தரும் காதலா, சினேகிதரிடமிருந்து பெறும் காதலா?”

அவளும் விசரியா?

ஏன் எல்லோரும் விளங்காத விதத்தில் கதைத்து அவன் மனத்தை புண்படுத்துகிறார்கள்?

”எனக்கு ஒன்றும் விளங்கவில்லை”. அவன் தலையாட்டினான்.

“What kind of love do you want to talk about? The love you get from your husband or wife? The other kind is the one you get from your lover? They are very different, real love. based on One, is just sex; the other is friendship with no sex but… but..” அவள் சொல்ல முதல் அவன் வாய்விட்டுச் சிரித்தான்.

“Good Lord” அவன் சிரித்தான். வேதனை கலந்த சிரிப்பு.

‘என்ன சிரிக்கிறீர்கள்’ அவள் கேட்டது குழந்தைத் தனமாக இருக்க வேண்டும்.

“உம்மைச் சொல்லிப் பிரயோசனமில்லை.”  அவன் முனகிக் கொண்டான்.

கார்த்திகாவைப் பற்றி எப்படித் திடீரென்று தன் உணர்ச்சிகளைச் சாகடிப்பது என்று தெரியவில்லை. இல்லா விட்டால், பைத்தியம் பிடிக்கும் போல் இருந்தது.

“நான் லண்டனில் இல்லையே என்று துக்கப்படுகிறேன்” அவன் பெருமூச்சு விட்டான்.

அவள் ஏன் என்று பார்த்தாள். “குடிக்க வேண்டும் போல் இருக்கிறது” “I just want Vodka” அவன் பல்லைக் கடித்துக் கொண்டான்.

“வொட்காவா?” அவள் அவனை வியப்புடன் பார்த்தாள். ரஷ்யாவில் ஒரு துளி வொட்காவைத் தொடாதவன் தெகிவளைக் கடற்கரையில் கேட்டால் யார் நினைக்க மாட்டார்கள் விசரன் இல்லை என்று?

“என் அறைக்கு வந்தால் பார்க்கலாம்.” அவள் சொன்னாள். இருவரும் காலி ரோட்டில் ரக்ஸி எடுத்தார்கள்.

அவளின் அறைக்குப் போகவில்லை. மவுண்ட்லெவனியாவில் ஒரு ஹொட்டேலுக்குப் போனார்கள். “இங்கு வொட்கா கிடைக்குமா” என்றான்.

அவள் சொன்னாள் “நேற்றுத்தான் குடித்தோம். இந்த ஹொட்டேலில் இன்று முடிந்திருக்காது”

வெயிட்டர் வந்தான். வொட்காவில் “பிளடிமேரி” செய்து தரச் சொல்லிக் கேட்டான் பரமநாதன், இரு பங்கு வொட்கா, ஒரு பங்கு தக்காளி ரசம், கொஞ்சம் எலுமிச்சம் பழம், நிறைய ஐஸ்…

எலிஸபெத் வேடிக்கையாகப் பார்த்தாள் பரமநாதனை. அவன் “பிளடிமேரி” கேட்ட விதம்: வெயிட்டர் முழுசிய விதம்; கொண்டு வந்து கொடுத்தபோது குடித்த விதம்!

ரஷ்யாவில் கண்ட பரமநாதனாய்த் தெரியவில்லை அவளுக்கு.

அத்தியாயம் – 8 

எதையோ கண்டு பயந்தோடும் குழந்தைபோல் இருந்தது அவன் தோற்றமும் செய்கைகளும்.

ஏலுமான செதியில் குடித்து இருக்கும் கொஞ்ச நஞ்சு சுய உணர்வையும் மழுங்கடிக்க முயற்சிப்பது தெரிந்தது வொட்கா குடித்த விதத்திலிருந்து.

‘கேட்கலாமா என்ன துக்கம் என்று?’

இவளைப்பார்த்து “என்ன பார்க்கிறாய் உமக்கு வேண்டாமா வொட்கா? Why don’t you join me? I nead some one to join me”

அவன் உளறுவதுபோல் பட்டது. காசைக் கொடுத்து விட்டு வெளியில் கூட்டிக் கொண்டு வந்தாள்.

மௌண்டலவேனியாக் கடற்கரை அமைதியாக இருந்தது.

“வீட்டுக்குப் போகப்போகிறீர்களா?” அவள் கேட்டாள். கடல் அலைகள் மெல்ல புரண்டு கொண்டிருந்தன இனிமையான இளம் காதலர்கள் போல்.

“லிஸா May I kiss you?” அவன் தள்ளாடியபடி நடந்தபடி – இவளையணைத்தபடி கேட்டான்.

அவள் பதில் சொல்லாமல் உலுக்கிக் கொண்டாள் தோள்களை. அவன் சுய நினைவில் அப்படிக் கேட்க மாட்டான் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும்.

அவள் மறுமொழி சொல்லாமல் நடந்தாள்.

ஒன்றிரண்டு உல்லாசப் பிரயாணிகளும் தங்கள் காதலிகளின் அணைப்புடன் எழுந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

“லிஸா; எனக்கு ஒரு காதலியிருந்தாள். உன் அதிகாரப் படி செக்ஸ் ஒன்றும் இருக்கவில்லை. இளமையின் துடிப்பை உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள. மனைவியிருக்கிறாள் என் குழந்தையை, உடமையை, என் உடம்பைப் பகிர்ந்து கொள்ள, இப்போது யாரும் இல்லை அருகில் என் வேதனைகளைப் புரிந்து கொள்ள, என் வேதனைகளைப் பகிர்ந்து கொள்ள Will you he my friend?” அவன் பரிதாபமாகக் கேட்பது போல் இருந்தது அவளுக்கு. அவன், பிறந்த நாட்டு மண்ணில் அன்னியன் போல் நடப்பதாகப் பட்டது. அவன் தள்ளாடிக் கொண்டேயிருந்தான். கையில் அவன் குடித்து முடிக்காத வொட்காப் போத்தல் இருந்தது.

“இலங்கைக்கு வந்தது வொட்கா குடித்து சந்தோசப்படவா?” அவள் கேட்டாள். இருவரும் வெறும் மணலில் உட்கார்ந்தார்கள். இந்த நேரத்தில் இருளில் இந்தப் பக்கக் கடற்கரைகளில் இருப்பது அபாயம் என்று அவளுக்குச் சொல்லியிருக்கிறார்கள். திரும்பிப் பார்த்தாள். தூரத்தில் ஹொட்டேல் வெளிச்சமும் அதன் வெளிச்சத்தில் இன்னும் மனிதரின் ஆரவாரமும் கேட்டது.

“உமக்கு இலங்கை பிடித்திருக்கிறதா?” அவன் வாய் தடுமாறுவதாகப் பட்டது

“பிடிக்கிறதோ இல்லையோ என்று தெரிய முதல் போக வேண்டி வந்து விட்டது” அவள் குரலில் துக்கம் தொனிப்பதை உணரும் நிலையில் இல்லை.

“ஏன் போக வேண்டும்? இந்தியாவுக்கு இன்னும் ஒரு கிழமையிற்தான் போக வேண்டும் என்று சொன்னாய்.” குரல் இழுபட்டு சொற்கள் நொண்டின வெறியில்.

அவள் அவனின் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லாமல் மணலைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.

தென்னங் கீற்று இடுக்குகளால் இளம்பிறை எட்டிப் பார்த்தது நாணத்துடன்.

“என் சகோதரி இறக்கும் தறுவாயில் இருக்கிறாள் நியூ யொர்க்கில். தந்தி வந்தது. நாளைக்குப் பிளேனில் வெளிக் கிடுகிறேன்.”

அவள் குரல் கலங்க அவன் பரிதாபத்துடன் அணைத்துக் கொண்டான். அவளை யாரும் பார்த்தால் என்ன? அவள் அவனின் சினேகிதி. யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?

அவளின் திருமண வாழ்க்கை சரியில்லை. எத்தனையோ தரம் தற்கொலை செய்ய முயன்றாள். இப்போது தான் சரி வந்தது போலும் “வேதனைகளும் வெறுப்புக்களும் உலகத்தில் எந்த மூலையிலுமா?”

அவள் வேதனையுடன் தனக்குத் தானே முனகிக் கொண் டாள்.

“லிஸா நான் உம்மிடம் ஆதரவு கேட்க வர நீர் யாரிடம் போவதென்று நிற்கிறாய்”

இருவரும் ஒருவர் அணைப்பில் ஒருவர் இருந்தார்கள். வெறும் சினேகித பூர்வமானது.

ஒரு கொஞ்ச நேரத்துக்கு முதல் உன்னை முத்தமிடலாமா என்று கேட்டது, இப்போது அவனுக்கு எரிச்சலான நினைவை உண்டாக்கியது.

“உங்களுடன் நண்பர் இருந்ததைக் குழப்பி இருக்கக் கூடாது”. அவள் மன்னிப்புக் கேட்கும் குரலில் சொன்னது அவனுக்குப் பிடிக்கவில்லை.

“அவன் என் நண்பன் இல்லை. என் தங்கையின் காதலன். ஒரு காலத்தில் என் காதலியாய் இருந்தவளின் தம்பி”

மிச்ச சொச்ச வொட்காவும் வாயில் போய்க் கொண்டிருந்தது. “ஏன் உங்களுடன் சண்டை போட்டார்?..” லிஸா குழப்பத்துடன் கேட்டாள்.

“அவன் சண்டை பிடிக்கவில்லை. சில உண்மைகளைச் சொன்னான். சொன்ன விதம் உணர்ச்சிகரமாக இருந்தது” பரமநாதனின் குரல் கரகரத்தது.

”சொறி” என்றாள் அவள்.

“யாரும் சொறி சொல்லிப் பிரயோசனமில்லாத சில காரியங்களைச் சொல்லி விட்டுப் போனான்.”

அவன் பெருமூச்சு விட்டான். அவன் கண் கலங்குவது தெரிந்தது. அவள் பதறி விட்டாள். இப்படித் துயரான நிலையில் எந்த ஆண்களையும் அவள் காணவில்லை இதுவரைக்கும். “என்ன நடந்தது? எனக்குச் சொல்லி ஆறுதல் கிடைக்குமென்றால் சொல்லுங்கள்” அவள் பதறிப் போய் அவனைக் கேட்டாள். மெல்லிய நிலவொளியில் அவள் முகம் கருணை பொதிந்து இருந்தது.

தமக்கை சாகக் கிடக்கிறாள் என்று தந்தி வந்து, போக முதல் சொல்லி விட்டுப் போக வந்தவளிடம் தன் வேதனைகளைச் சொல்லியழுவதா? யாரிடமாவது சொல்லி அழக்கூடிய வேதனையா அது? கஷ்டப்பட்டுத் தன் துன்பத்தை அடக்க அவன் படும்பாடு. அவளால் சகிக்க முடியாததாக இருந்தது.

“இலங்கை அரசியல், அதனால் எங்கள் இனம் படும் துன்பங்களைப் பற்றிச் சபேசன் கதைத்தது ஞாபகமா?” அவனின் கேள்விக்கு அவள் தலையாட்டினாள்.

”அதில் சொன்னானே சில விடயங்கள். அவைகளைத் தாங்க முடியாமல் இருக்கிறது.. உதாரணமாக அவன்  தமக்கை…”

அவன் குலுங்கிக் குலுங்கியழுதான்.

‘அவன் தமக்கை… ஒரு காலத்தில் இவன் காதலி!’

“உமக்குத் தெரியாது தமிழ்ப் பெண்கள் ஒழுக்கத்தை எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்று, வெறும் புத்தகம் படித்து உணர முடியாது அவர்கள் உணர்ச்சிகளை. இப்படியான இரவுகளில் எத்தனையோ தரம் சேர்ந்திருந்தோம் யூனிவ சிட்டியில் படிக்கும் போது. இளமை, தனிமை, காதல் உணர்ச்சி எல்லாவற்றுக்கும் மேலாகப் போற்றிக் காத்த அவள் பெண்மை”

அவன் குலுங்கி அழுதான்.

“ஐயாம் சொறி” அவளுக்கு அவனை எப்படித் தேற்று வது என்று தெரியவில்லை. அவளுக்கு விளங்கியது அவன் ஆத்திரமும் படும் வேதனையும். எந்த இலட்சியங்களுக்காக அவள் எழுதுகிறாளோ, உலகம் சுற்றி அனுபவப்படவேண்டும் என்று வந்திருக்கிறாளோ, அந்தக் கொடுமையை அவன் வாய் விட்டழுதபோது மனம் அதிரக் கேட்டிருந்தாள்.

அவனுக்கு உணர்ச்சிகள் மரத்துப் போவது போல் இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பின் குடித்ததால் வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது.

“என்னைக் காதலித்தவளுக்கு, எந்தச் சூழ்நிலையில் கல்யாணம் செய்தேன் என்று சொல்ல முடியாமல் இருக்கிறேன். கல்யாணம் செய்தவளுக்குச், காதலித்தவளை நினைத்து வேதனைப்படுவதை மறைத்து வைத்துத் துடிக்கிறேன். நீ யார்? நேற்றுப் பறந்த பிளேனில் கண்ட பிரயாணி, உனக்கேன் பிதற்ற வேண்டும்?” அவன் அலட்டினான்.

வாயாடியான எலிஸபெத் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவன் உளறுவதெல்லாம் அரைகுறை யுணர்வில் என்று தெரிந்தது.

“உமக்குத் தெரியாது, கார்த்திகா இன்று என்றாலும் என் மனைவியை விவாகரத்து செய்து விட்டுத் தன்னிடம் வரச் சொன்னால், லண்டனுக்குப் போகாமல் நின்று விடுவேன்”.

அவன் பிதற்ற ஆரம்பிக்க அவள் பயந்தாள். எழும்பி ஓடி விட்டால் அவன் என்ன செய்வான்?

இனி அவனை எப்போது காணுவாள்? இன்று நடந்தவைகள் அவனுக்கு ஞாபகம் இருக்கப் போவதில்லை. எப்போதாவது காணுவாளா?

இந்தியப் பிரயாணம் போய் விட்டது. எண்ணி வந்த திட்டங்கள் எல்லாம் பறிபோய் விட்டன தமக்கை உயிரோடு இருப்பாளா இத்தனைக்கும் நியூயோர்க்கில? எப்போது லண்டனுக்குத் திரும்புவாள்? இவனை லண்டனில் காணுவாளா?

நாளைக்கு பத்து மணிக்கு விமானம். இன்று தான் தந்தி வந்தது. என்னென்ன எடுத்துப் பெட்டியில் வைத்திருக்கிறாள் என்று தெரியாது.

அவன் மெல்லமாகத் தலைசாய்வதிலிருந்து தெரிந்தது நித்திரையாகப் போகிறான் என்று.

***

அவன் எழும்பும்போது எத்தனை மணி நேரம் என்று தெரியாது. மத்தியான வெயிலின் புழுக்கம் ஜன்னலால் வந்த காற்றை மீறிக்கொண்டு, அவனைக் குளிப்பாட்டியது.

தலை விண் விண் என்று வலித்தது. வயிற்றைக் குமட்டியது. வொட்கா உண்மையாக இப்படி எல்லாம் செய்யாது அடுத்த நாள்.

என்ன கலந்து வைத்தார்களோ?

எப்படி வீடு வந்து சேர்ந்தேன்? என்ன நடந்தது? யாரைக் கேட்பது? “மாமா எப்படி இருக்கிறது?” கீதா எட்டிப்பார்த்துக் கேட்டாள். அவனுக்கு அவமானமாக இருந்தது அவளைப் பார்க்க. தள்ளாடித் தள்ளாடி காலி றோட்டில் வந்திருப்பேனா? பாட்டும் பாடியிருப்பேனா பார்த்தவர்கள் சிரிக்க! எலிஸபெத் கொண்டு வந்து விட்டாளா? தமக்கை என்ன நினைத்திருப்பாள் வெள்ளைக்காரியுடன் திரிவதைப் பார்த்து!

தகப்பன் செத்து இரண்டு கிழமை கூட ஆகவில்லை இப்படித் திரிகிறான் என்று நினைக்க மாட்டாளா? மனைவியை விட்டு ஒரு கிழமையும் இருக்காமல் என்ன ஆட்டம் இன்னொருத்தியுடன் என்று, நினைக்க மாட்டாளா?

என்னென்று அக்காவின் முகத்தில் முழிப்பது? அவன் தயக்கம் தீரமுதல் மைத்துனரின் முகம் எட்டிப் பார்த்தது.

“எப்படிப் பார்ட்டி?” மைத்துனர் கேட்டார். அவன் திணறினான் என்ன சொல்வது என்று தெரியாமல்.

“ரக்ஸிக்காரன் சொன்னான் உம்முடைய சினேகிதன் ஏற்றி விட்டதாக”

ரக்ஸிக்காரன்? பார்ட்டி? எலிஸ்பெத்தின் நினைவு வந்தது.

‘எலிஸபெத்! எலிஸபெத்!’ நீ கெட்டிக்காரி.

இங்கிலிஸ் பெண்ணானாலும் எங்களவர் நடுச் சாமத்தில் ஒரு ஆணையும் பெண்ணையும் கண்டால் பிள்ளை பெற வைத்துப் பெயரும் சூட்டி விடுவார்கள் என்பது உனக்கு எப்படித் தெரியும்?

”கௌரி நாளைக்கு வருகிறாள்.” மைத்துனர் கதையைத் தொடங்கினார். மாப்பிள்ளை வீட்டார் மகாதேவன் போக முதல் தேவையான ஒழுங்குகளைச் செய்யுறன் எண்டு ஒத்தைக்காலில் நிற்கினம். பெடியன் ஒரு மாதத்தி போகிறாராம்” மைத்துனர் முணுமுணுத்தார்.

அவருக்கு பிடிக்கவில்லை மாமனாரின் முப்பத்தொன்று முடிய முதல் கெளரி லண்டனுக்குப் போவது இந்த நேரத்தில் பானுமதியைப் பற்றிக் கேள்விப் பட்டால் என்ன நடக்கும் வீட்டில்? ஏன் வந்தோம் இலங்கைக்கு என்றிருந்தது பரமநாதனுக்கு. நேற்று கார்த்திகாவைக் கண்டது முதல் யாரோ போல் இருந்தான். அவளைக் கண்டது மட்டுமல்ல அதன் பிறகு கேள்விப்பட்ட ஒவ்வொன்றும்…

அவன் பெருமூச்சு வீட்டான்.

ஏரோபுளொட் ரிக்கற். போகும் நாள் என்பனவற்றைத் திங்கட்கிழமை ‘சொன்போம்’ பண்ணி விட்டு யாழ்ப்பாணம் போக நினைத்தான். லண்டனுக்குப் போகும் நாள் நாளைக்கு வராதா என்று ஏங்கினான்.

இவ்வளவு காலமும் ஆமைபோல் ஓட்டுக்குள் ஒழிந்து கொண்டிருந்தது போலவும் இப்போது தான் வெளிச்சத்தில் தடுமாறுவது போலவும் இருந்தது.

தான் செய்த ஒவ்வொன்றிக்கும் தன்னைத்தான் தேற்றிக் கொள்ள சொல்லிக் கொண்ட உண்மைகள் பூதாகர உருவடுத்துத் தன்னைப்படாத பாடு படுத்துவதாகத் தெரிந்தது.

இதெல்லாம் சகஜம், இதுதான் வாழ்க்கை என்று ஏற்றுக் கொண்டவை இன்று இருதயத்தை அழுத்துவது போன்ற பயம்.

அவன் வெள்ளவத்தைக் கடற்கரைக்கும் போகவில்லை. அன்றெல்லாம் சுருண்டு படுத்திருந்தான். இருந்தாற்போல் எலிஸபெத்தின் ஞாபகம் வந்தது. இப்போது மேற்கு நோக்கிப் பறந்து கொண்டிருப்பாள்.

‘இரவு எப்படி நடந்தேன்? என்ன நினைத்திருப்பாள் என்னைப் பற்றி?’

தன்னில் தனக்கு மட்டுமல்ல யாருக்குமே ஒரு மதிப்பும் இல்லாத மாதிரிப் பட்டது அவனுக்கு.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. சத்தியமூர்த்தி தேடி வந்தான்.சோர்ந்து போய் இருந்த நண்பனைப் பார்த்து “ஏன் ஒரு மாதிரியிருககிறாய்?” என்றான். பரமநாதனுக்குச் சத்தியமூர்த்தியில் கோபம் வந்தது. சபேசனைக் காணும் போது அவன் இருந்திருக்கலாம் என்று நினைத்தான். சபேசனைப் பற்றிச் சொல்ல நினைத்தான். தான் பெரிய எழுத்தாளன் என்ற நினைவு அவனுக்கு, என்று திட்ட நினைத்தான். அக்காவுக்கு முன்னால் சபேசனைப் பற்றிக் கதைப்பது சரி யாகத் தெரியவில்லை. இருவரும் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு மிருகக் காட்சிச் சாலைக்குப் போகும் சாட்டில் போனார்கள். குழந்தைகள் மாமாவின் தாராளத்தில் மெய் மறந்து ஐஸ்கிறீமும் இனிப்புமாக விழுங்கித் தொலைத்தார் கள்.

மாமாவின் வாழ்க்கை இருண்டு கிடப்பதை அறியாத குழந்தை மனங்கள். பெருமூச்சுடன், குதித்து விளையாடும் அந்தச் செல்வங்களைப் பார்த்தான்.

“சபேசன் முரட்டுப் பிடிவாதத்துடன் இருக்கிறான்” கீதா சின்னப் பெட்டையில்லை; பதினாலு வயது. தூரத்தில் இருந்தாள்,தற்செயலாய்க் கேட்டாலும் என்று ஆங்கிலத் தில் சொன்னான்.

“என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல யோசித்தாய்?” வழக்கம் போல் தன் தாடியைத் தடவிக்கொண்டு நண்பனைப் பார்த்தான்.

”என்ன செய்வது என்று நான் எப்படிச் சொல்வது? உணர்ச்சி வசப்பட்டு முன்பின் நடப்பதை யோசிக்காமல், இலட்சிய வெறியில் பொலிசார் கையில் சாக வேண்டாம் என்று சொல்லப் பார்த்தேன்.”பரமநாதன் வெறுப்புடன் சொன்னான்.

“இதுவரை காலமும் எங்களுக்குத் தலைவர்களாய் இருந் தவர்கள் விட்ட பிழையால் இன்றைய இளைஞர்கள் அவர்களை நம்பத்தயாராய் இல்லை. இத்தனை வருடமும் தமிழ்த் தலைவர்கள் என்ன செய்து விட்டார்கள்? இரண்டு இனக் கலவரத்தையும் சொல்ல முடியாத இன்னல்களையும்தான் காண வைத்தார்கள். பிழைக்க வழியில்லாத இளைஞர்கள் பிறநாடுகளுக்குப் போகிறார்கள். எத்தனை காலம் இப்படிப் போக முடியும்? சோசலிசம்தான் இதற்கெல்லாம் சரியான வழி என்று நம்ப மறுக்கிறார்கள். சிங்கள ஏழை மக்கள் எங்கள் தலைவர்கள் போன்ற பல சுயநலவாதிகளால் திசை திருப்பப்பட்டு இருக்கிறார்கள் என்பதை, எங்கள் இளைஞர்கள் உணரவேண்டும், நம்ப வேண்டும். வெறும் உணர்ச்சி வசப்படாமல் விடயங்களை ஆராயப் பழகவேண்டும்.

சத்தியமூர்த்தியின் பிரசங்கம் பரமநாதனின் காதில் ஏற வில்லை. ஏற்ற முயற்சிக்கவுமில்லை. பானுமதி தன்னை நம்பு கிறாள். தமையன் என்ற உரிமையில் அவனுக்குத் தெரிய வில்லை. அவளுக்கு எப்படி உதவுவது என்று.

சபேசனை லண்டனுக்குப் போய்ப் படிக்கப் பண்ணலாம் என்பதுதான அவன் யோசனை. அந்தப் பேச்சை எடுத்து முதலே அவன் எரிந்து விழுந்து விட்டான்.

இனி அவனுடன் தான் கதைக்க முடியுமா? ‘உனக்கும் எனக்கும் கதையில்லை. உமது தங்கச்சிக்கு ஏதும் கதையிருந்தால் அவள் என்னுடன் வைத்துக் கொள்ளலாம்’. என்று தூக்கி எறிந்தால் என்ன செய்வது?

பரமநாதன் பரிதாபமாக முறையிட்டான் நண்பனிடம்.

“உண்மையில் பானுமதியில் அன்புள்ளவனாய் இருந்தால் பானுமதிக்காக எதையும் செய்யத் தயாராய் இருக்க வேண்டும்”. பரமநாதன் ஆத்திரத்துடன் சொன்னான்.

குழந்தைகள் யானை நடனமாடுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“பானுமதியை லண்டனுக்குக் கூட்டிக் கொண்டு போனால் என்ன?”

சத்தியமூர்த்தி விளையாட்டுக்குச் சொல்கிறானா என்று தரியவில்லை. பரமநாதன் நண்பனையுற்றுப் பார்த்தான் “என்ன சொல்கிறாய் அம்மா இப்போதுதான் அப்பாவை யிழந்து போய் இருக்கிறா. கௌரி கெதியில் லண்டனுக்குப் போகப் போகிறாள். இந்த நேரத்தில் பானுமதியும்….”அவன் நம்பாமல் கத்தினான்.

“பரமநாதன், நடக்கப் போவதை யோசித்துப்பார். சபேசனுக்கும் பானுமதிக்கும் இடையில் சாதி மட்டுமல்ல அவன் ஒரு சண்டைக்காரன் என்பதும் பிரச்சினையாக இருக்கப் போகிறது. உன் குடும்பம் கடைசி வரைக்கும் பானுமதியின் திருமணத்தை ஆதரிக்கப் போவதில்லை. அவள் கிணத்திலோ குளத்திலோ விழுந்து நாடகமாடுவதை விட நீர் கொண்டு போவது புத்திசாலித்தனமில்லையா? சபேசனை மட்டும் லண்டனுக்குக் கூட்டிக் கொண்டுபோய்ப் படித்து ஆளாக்கி இலங்கைக்குத் திருப்பி அனுப்பி விட்டால் எல்லாம தன்பாட்டுக்குச் சரியாக வரும் என்று நினைக்காதே.”

சத்தியமூர்த்தி சொல்வது சரியாகப் பட்டது.

அடுத்த நாள் கௌரி வந்தாள். லண்டன் போக பாஸ் போர்ட், விசா எடுக்கும் டயமாக அவளுடனும் மகா தேவனுடனும் அலைய வேண்டியிருந்தது. வழியில் ஒருநாள் சபேசனைக் கண்டாள். தெகிவளைக் கட ற்கரையில் நடந்ததை அப்படியே மறந்ததுபோல சிரித்துக் கதைத்தான் சபேசன்.

“அரசியலைத் தனிப்பட்ட விடயங்களில் கலக்கக் கூடாது” என்றான் அவன். பரமநாதன் தன்னையே நம்ப முடியாமல் சபேசனைப் பார்த்தான். கலைஞர்கள் விளங்க முடியாத உணர்ச்சிக் குவியல்களா?

தெகிவளைக் கடற்கரையும், அவன் சொல்லிய விடயங்களும் ஞாடகத்தில் வந்தன. கௌரிக்கு முன்னால் அவனுடன் கதைக்க விரும்பவில்லை. “உம்மை ஒருதரம் காணமுடியுமா?” என்றான் பரமநாதன். சபேசனுக்குப் பரமநாதன் கேட்டது ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும்.

“வெள்ளிக்கிழமை பின்னேரம் வீட்டில் இருப்பேன்.” என்றான். சந்திப்பதாகச் சொல்லிவிட்டு கௌரியிடம் வந்தான். கார்த்திகா வீட்டுக்கு இன்னொருதரம் போவது அவனுக்கு என்னவோ போல் இருந்தது.

நடந்து விட்ட சில நிகழ்ச்சிகள் எதிர்காலத்தைச் சின்னா பின்னப் படுத்துவதை அவன் ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை.

தான் அனுபவிக்கும் துன்பங்கள் தங்கை பானுமதிக்கும் கிடைக்கக் கூடாது. மாறி வரும் சமுதாயத்தில் மனித உணர்ச்சிகள் மதிப்பற்றுப் போவதை அவனால் அனுமதிக்க முடியாமல் இருந்தது. இன்னொரு தரம் கார்த்திகாவை காணாமல் பானுமதிக்காக எதையும் செய்ய முடியாது என்னால். பானுமதிக்காகக் கார்த்திகாவிடம் எந்தத் திருட்டையும், குற்றச் சாட்டுக்களையும் வாங்கிக் கொள்ளத் தயார்.

– தொடரும்…

– ஒரு கோடை விடுமுறை (நாவல்), முதற் பதிப்பு: ஐப்பசி 1981, அலை வெளியீடு, யாழ்ப்பாணம்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *