ஒரு கோடை விடுமுறை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2026
பார்வையிட்டோர்: 1,441 
 
 

(1981ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம் – 3 

எப்போது விமானம் புறப்படும்? இதைத்தவிர எந்தச் சிந்தனையும் அவனுக்கு இல்லை.

ரஷ்யச் சாப்பாடு எவ்வளவோ ருசியாய் இருந்தும் அவன் மனம் அதை ரசிக்காமல் பிரயாணத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தது.

முன் மேசையில் மிஸிஸ் ஜெயசிங்காவும் மிஸ் பேக்கரும் சினேகிதமாகப் பழகுவதைப் பார்க்க நிம்மதியாக இருந்தது. வேதாந்தத்திலிருந்து கொழும்பு தான் இனி பேக்கரின் போகும் வரை தப்பிப் பிழைத்தோம் என்றிருந்தது.

மிஸ் பேக்கர் இதுவரை அவன் சந்தித்த பெண்களை விட வித்தியாசமாக இருந்தது வேடிக்கையாகப் பழக வைத்தது.

அதிகமான பெண்கள் கதைக்க வெட்கப்படும் விடயங்களை பயப்படும் சம்பாஷணைகளை அவள் மிகச் சாதாரணமாக நினைப்பது வினோதமாக இருந்தது.

“ஏன் எங்களை ஒரு அறையில் போட்டார்கள்?” என்று அவன் வெடித்தபோது அவள் குறும்புத்தனமாக “ரு மேக் லவ்” என்று சொன்ன போது தான் எப்படித் தர்மசங்கடப் பட்டேன் என்பதை அவள் ரசித்தது ஞாபகம் வந்தது. அப்படிக் கோழையாக இருந்திருக்கக் கூடாது தான்!

ஆண்கள் பெண்களை மென்மையாக நினைக்கும் வரைதான் பெண்கள் வலிமையற்றவர்கள். பெண்கள் தாங்கள் மற்றவர்கள் நினைப்பது போல் கோழைகளுமல்ல மென்மையானவர்களுமல்ல ஆண்களைப் போல் மனவலிமையுள்ளவர்கள் என்பதை நிருபிக்கும் போது, தனக்கு ஏற்பட்ட தர்ம சங்கடம் போல் எல்லா ஆண்களுக்கும் ஏற்படும் என்று யோசித்தான் பரமநாதன்.

‘டைனிங் ரூம்’ கிட்டத்தட்டக் காலியாகி விட்டது. எதிரில் லிஸா ஏதோ ரஷ்யன் மகஸீனைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.

ரஷ்ய நாட்டு டைனிங் ரூம் ஆங்கில நாட்டு டைனிங் ரூம்போல் இல்லாமல் ஏதோ வித்தியாசமாக இருந்தது.

திரும்பிய பக்கமெல்லாம் லெனினும் மற்றைய ரஷ்யத் தலைவர்களுமாகக் காட்சியளித்தார்கள்.

சாதாரண மக்கள். அவர்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்காமல் அரசியல் தலைவர்கள் – அவர்களின் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் வசனங்களாக எல்லா இடங்களும் காட்சியளித்தன. உலகத்துத் தொழிலாளர்களின் உறுதியை நனவாக்கிய தலைவர்கள்.

உலகத்துப் பெண்களின் கொடுமையான வாழ்க்கைமுறையை ஆராய்ந்து அதற்கு எதிராய் எழுதும் மிஸ் லிஸா பேக்கரைப் பார்க்க வினோதமாக இருந்தது. இவ்வளவு நேரமும் லண்டனிலிருந்து வெளிக்கிட்ட நேரத்திலிருந்து அவளின் தத்துவங்களுக்கு எதிராய்க் குறும்புத்தனமாகக் கதைத்தது வீண் அலட்டல் என்று பட்டது.

புத்திக் கூர்மையான கண்கள் கண்ணாடிக்குள் மறைய, அவள் குனிந்திருந்து படித்த விதம் மரியாதையை உண்டாக்கியது.

போவதற்கு அவள் எழும்பும்போது, “மிஸ் பேக்கர்” என்று கூப்பிட்டான்.

“லிஸா என்று கூப்பிடலாம்”. இனிமையாகச் சொன்னாள் அவள்.

என்ன சொல்ல – என்ன கேட்க நினைத்தான் என்று மறந்து விட்டது. தர்ம சங்கடத்துடன் பார்த்தான்.

“என்ன கூப்பிட்டீர்கள்?'” அவள் கேட்டாள்.

“நான் நினைக்கவில்லை நித்திரை வரும் என்று, ஏதும் புத்தகம் இருந்தால் கொடுங்கள்” என்றான்.

உண்மையில் அவன் சொல்ல நினைத்தது உங்களுக்கு நித்திரை வராவிட்டால் பேசிக்கொண்டிருக்கலாமே என்று.

“ஓ, நிச்சயமாக. என்ன புத்தகம் தேவை?” அவள்மகிழ்ச்சியுடன் கேட்டாள்.

என்ன புத்தகமா?

அவன் விழித்தான்.

ஏதாவது ஒரு புத்தகம் கேட்டால் என்ன புத்தகம் என்று லிஸ்ட் கேட்கிறாளே!

“ஹரோல்ட் றொபின்சன், கக்கி கொலின் மாதிரியாட்களின் புத்தகம் ஒன்றும் இல்லை.” அவள் வேடிக்கையாகச் சொன்னாள். எந்த எழுத்தாளர்களை அவமதிக்கிறாள் என்று தெரிந்தது.

“என்ன புத்தகம் என்றில்லை. நித்திரை வரவில்லை.ஏதாவது படிக்க வேண்டும் போல் இருந்தது.” அவன் விட்டுக் கொடுக்காமல் சொன்னான்.

“வெறும் பொழுது போக்குக்கு வாசிக்கக் கூடிய சினிமா ரகமான பத்திரிகை ஒன்றும் என்னிடமில்லை, சொறி.”

அவள் போய் விட்டாள்.

எழுந்து போய்த் தன் அறையைத் திறக்கும்போது மிஸிஸ் ஜெயசிங்காவின் குழந்தை அழுவது கேட்டது.

பாவம் லிஸா. இன்றிரவும் நித்திரை கிடைக்கப் போவதில்லை அவளுக்கு என்று நினைத்துக் கொண்டான்.

நேற்றிரவு தன் தோளில் தவழ்ந்த அவளின் முகம் ஞாபகம் வந்தது. அந்த இரவுக்கு முதல் நித்திரையில் முத்தமிடப்பண்ணிய மனைவி மரியனின் இனிய முகம் ஞாபகம் வந்தது.

மிஸ் பேக்கருக்கு ‘போய் பிறண்ட்’ இருக்கிறானா என்று கேட்க வேண்டும் போல் இருந்தது.

மெல்லமாக கதவைச் சாத்தினான். மிஸிஸ் ஜெயசிங்காவின் குழந்தையை இன்னும் கூட அழப்பண்ணாமல் ஜன்னலைத் திறந்தான்.

பதினெட்டு மாடிகளுக்குக்கீழால் ஓடும் கார்கள் குழந்தை மீரா விளையாடும் விளையாட்டுக் கார்கள் போல் மின் மின் என்று சிறியதாகத் தெரிந்தன.

கொம்யூனிஸ்ற் நாடுகளில் சொந்த  உடைமைகளுக்கு இடமிருக்காது என்று நினைத்தது பிழை எனத் தெரிந்தது.

ரஷ்யாவில் திரும்பிய இடமெல்லாம் துப்பாக்கி தூக்கிய சிப்பாய்கள் தெரிந்தாலும் மக்கள் அந்த வாழ்க்கைக்குப் பழகிப்போய்விட்டார்களோ என்னவோ, அவர்கள் இந்தச் சிப்பாய்களைப் பொருட்படுத்தாமல் சந்தோஷமாய் இருப்பது தெரிந்தது. நடுச்சாமத்துக்கு மேலாகியும் இன்னும் நடமாட்டம் இருந்தது.

யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. ஹொட் டேல் பணியாளர்களாக இருக்கலாம்.

“கம் இன்.”

லிஸா வந்தாள்.

“மிஸிஸ் ஜெயசிங்காவிடம் உள்ள பேப்பர்கள் இவை தான் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்.”

ஹொலிவூட், வுமன் ஒன்லி… இப்படியான சில பத்திரிகைகள்.

“தாங்க் யூ மிஸ் பேக்கர்….” அவன் முடிக்கவில்லை.

“லிஸா என்று கூப்பிடலாம் என்று நினைக்கிறேன்.” அவள் சிரித்த முகமும் இளமை வனப்புமாய், கவாச்சியாய்… அந்தப் பெயரறியாத ஊரின் ஹொட்டேலில்.

“நான் ஏதும் பிடிக்காதவை சொன்னால் மன்னித்துக் கொள்ளுங்கள் மிஸ் பேக்கர். என் தகப்பனுக்குச் சுகமில்லை என்று இலங்கைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். இப்படிப் பிரயாணத் தடங்கல் ஏற்பட்டதால் மனம் எரிச்சலாக இருக்கிறது. எதையும் யோசிக்கப் பொறுமை இல்லாமல் இருக்கிறது.”

அவன் குரல் சலிப்புடன் ஒலித்தது. அவள் கொண்டு வந்த புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்தான்.

அவள் மௌனமாகப் பெற்றுக் கொண்டாள்.

“ஐயாம் சொறி. ஐ ஹோப் யுவர் பாதர் இஸ் ஓகே.” அவள் நம்பிக்கை குரலில் ஒலித்தது.

அவள் திரும்பிப் போனாள். இன்னொருதரம் ‘குட்நைட்’ சொல்லவில்லை.

அவள் போவதைப் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டிருந்தால் நான் கல்யாணம் ஆகாதவனாய் இருந்திருந்தால். ‘ஐ வில் ஆஸ்க் யூ ரு ஸிலீப் வித் மீ’ என்று சொல்லியிருப்பேன் என்று நினைத்தான்.

அவள் கேட்கவில்லை; அவன் சொல்லவில்லை.

அன்றிரவு அரைகுறை நித்திரையுடன் முடிந்தது.

அடுத்தநாள் பிரயாணிகளின் பொறுமை எல்லை மீறி யாரும் விமான அதிகாரிகளைக் கண்டால் அடிபிடி ஏற்பட முன்னர், பின்னேரம் விமானம் புறப்படுவதாக அறிவிக்கப் பட்டது. அரை குறை உற்சாகத்துடன் சாமான்களை அடுக்கத் தொடங்கினார்கள். விமானப் பிரயாணக் களைப்பு மட்டுமல்ல, ஒரே உடுப்புடன் மூன்று நாட்களாகப் படுத்து எழும்புவது அவ்வளவு சுகாதாரமானதாகப் படவில்லை.

லிஸா அன்று முழுக்க மிஸிஸ் ஜெயசிங்காவின் குழந்தையுடன் ‘பிஸி.’ குழந்தை அழுது களைத்தோ என்னவோ மிக அமைதியாக இருந்தது.

லிஸா தாய்மையுடன் குழந்தையை அணைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க நம்பமுடியாமல் இருந்தது. லிஸாவைப் போன்ற பெண்கள் வாழ்க்கை எல்லாம் உரிமை பற்றிய புரட்சிக் குரல் எழுப்பப் பிறந்தவர்கள் என்று தான் நினைப்பது பிழை எனப் பட்டது.

இவனுடன் அதிகம் கதைக்கச் சந்தர்ப்பம் வரவில்லை. யாரோ ஒரு கனடியனுடன் ‘டைனிங் ரூமி’ல் தர்க்கம் பண்ணுவது கேட்டது.

பின்னேரம் விமானம் புறப்படும் என்று சொன்னது இரவு எட்டுமணி என்று கடைசியாகத்தான் தெரிந்தது. ஒருபடியாக விமானம் புறப்பட்டு மேலே எழும்பிப் பறக்கும் வரை, ஒவ்வொருவரும் நிம்மதியின்றியிருந்தது முகத்தில் தெரிந்தது. நடுச்சாமத்தில் விமானம் குவைத் நாட்டில் ஒரு மணித்தியாலம் நின்று வெளிக்கிட்டது.

லிஸா இவனுக்கு முன்னால் ஜெயசிங்காவுடன் இருந்தாலும் அடிக்கடி திரும்பி, குவைத்தில் முஸ்லிம் அதிகாரிகள் பெண்களை நடத்திய விதத்தை பற்றித், திட்டிக்கொண்டிருந்தாள்.

காலை எட்டு மணிக்கு கொழும்பை அடைந்தது விமானம்.

“ஸோ பியூட்டிபுல் ஏ கன்ட்றி!” லிஸா கையை விரித்துக் குழந்தைபோல் மகிழ்ந்தாள், பச்சைப் பசேலென்ற பின்னணியில் விமானம் இறங்கும்போது.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானங்களைக் கண்ட லிஸா, பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் ஒரே ஒரு விமானத்தைக் கண்டு திடுக்கிட்டது முகத்தில் தெரிந்தது.

என்ன குபேர நாடென்று நினைத்துக் கெண்டாயா எங்கள் நாட்டைப்பற்றி என்று, கேட்க நினைத்தான்.

எங்கள் நாட்டுப் பெண்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்ல, எங்கள் நாட்டையும் பற்றி நீ எழுத நிறைய உண்டு என்று சொல்ல நினைத்தான்.

விமானம் இரண்டு மூன்று நாள் பிந்தி வந்ததால் அதிகமான ஆட்களை வரவேற்க யாரும் விமான நிலையத்தில் இல்லை.

வெள்ளவத்தைக்கு ‘ரக்ஸி’யில் போக முடிவு கட்டினான். லிஸா ‘ஹொட்டேல் இன்ரகொண்டினன்டலு’க்குப் போவதாகவும் தானும் ரக்ஸியில் வரலாமா என்றும் கேட்டாள். தனியாகப் போக நிறைய செலவு 250 ரூபா: £6க்கு மேல் என்று முணுமுணுத்தாள்.

50 பென்ஸில் அண்டர்கிரவுண்ட் ட்ரெயினில் போகலாம் என்று நினைத்து வந்தாயா என்று கேட்க நினைத்தான்.

போகும் வழியில் இலங்கையின் காட்சிகளை விழுந்து விழுந்து பார்த்து பத்தாயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டு வந்தாள். அவளின் குதூகலம் குழந்தை மீராவை ஞாபகம் படுத்தியது.

இலங்கையில் மூன்று வாரம் தங்கி நின்றுவிட்டு இந்தியா போவதாகவும் அதற்கிடையில் நேரம் இருந்தால் தன்னைச் சந்திக்க முடிந்தால், சந்தோஷம் என்றும் சொன்னாள்.

நிச்சயமாக ஒரு பிளானும் இல்லை. தகப்பனின் சுகநிலையைப் பார்த்துத்தான் எல்லாம் முடிவுகட்ட வேண்டும் என்றான். வெள்ளவத்தை விலாசத்தைக் கொடுத்து, மீண்டும் ஒருதரம் சந்திக்கத் தானும் விரும்புவதாகச் சொன்னான். லண்டன் வீட்டு டெலிபோன் நம்பரும் கொடுத்தான்.

இலங்கையில் சந்திக்க முடியாவிட்டால் லண்டனில் ஒரு தரம் சந்திக்கலாம் என்று டெலிபோன் நம்பரை எழுதிக் கொண்டார்கள்.

அவள் இறங்கிக் கொண்டபோது கை குலுக்கிக் கொண்டாள். மென்மையாகவும் குளிர்ந்தும் இருந்தது அவளின் கை. கொஞ்ச நேரம் விடாமல் வைத்திருந்தான். அவனின் மனைவி மரியனுக்கு அவளின் கொள்கைகள் பிடிக்கலாம். லண்டனுக்குப் போனதும் கட்டாயம் போன்பண்ண வேண்டுமென்றான்.

“கல்யாணம் முடித்ததாக நீங்கள் சொன்னதாக ஞாபகம் இல்லை” என்றாள் குறும்பாக.

“கல்யாணம் முடிக்காதவன் மாதிரி நடக்கவும் இல்லை என்று நினைக்கிறேன்.” அவனும் குறும்பாகச் சொன்னான் விட்டுக்கொடுக்காமல்.

இருவரும் என்ன கருத்தில் கதைக்கிறார்கள் என்று இருவருக்கும் தெரிந்தது. அவள் ‘களுக்’ கென்று சிரித்தாள். இலங்கையின் வெயிலில் இந்தக் காலைச் சூட்டிலேயே அவள் கன்னம் சிவந்திருந்தது.

“மீண்டும் சந்திப்போம்.” அவள் இறங்கிப் போனாள், ரக்ஸி வெள்ளவத்தையை நோக்கிப் போனது.

அக்கா தகப்பனின் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போய் இருக்கலாம். வீட்டில் யாருமில்லாமல் இருக்கலாம்.

ரக்ஸி காலி றோட்டில் ஓடிக்கொண்டிருந்தது. பத்து வருட இடைவெளியில் இலங்கையில் என்னென்ன மாற்றங்கள் நடந்தது என்பதை அனுபவத்தால் அறியமுதல் திரும்பிய பக்கமெல்லாம் உல்லாசப் பயணிகளுக்கான விடுதிகள் தெரிந்தன.

‘எதையும்’ வாங்கலாம் மேல்நாடுகளில்.

என்ன தேவை என்று இலங்கை போன்ற நாடுகளுக்கு வருகிறார்கள் மேல் நாட்டார்?

மேல்நாட்டில் கிடைக்கமுடியாத  அமைதி தேடியா?  மகரிஷிகள் இந்தியாவில் தானே கூட!

இலங்கையில் அப்படி என்ன?

உடல் வளர்ந்து உடை சிறுத்த நாரிமணிகளைக் கண்ட போது மேல்நாட்டு நாகரீகம் எப்படி எங்கள் மக்களைத் தாக்கியிருக்கிறது என்று தெரிந்தது.

பத்து வருடங்களுக்கு முன்னேயே இப்படி இருந்திருக்கலாம். நாளாந்த வாழ்க்கை ஓட்டத்தில் கண்களில் படாமல் போய் இருக்கலாம்.

அல்லது தாய் நாட்டை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பதால் வித்தியாசமாய்த் தெரியலாம்.

ரக்ஸி வெள்ளவத்தையை ஊறுத்தது.

காசு கொடுத்துவிட்டுப் பெட்டிகளை எடுக்கும்போது ஜன்னல் திறந்த சத்தம் கேட்டது.

மெலிந்த அந்த முகத்துக்கு உரிமையானவள் என் அக்காவா? தமக்கையின் முகத்தில் ஒருகணம் நம்பமுடியாத பிரமை.

அடுத்தகணம் மைத்துனர் கதவைத் திறந்தார்.

“இரண்டு நாளாக எயார்போட்டில் கிடந்து அலுத்துப் போனோம். விளக்கமாக யாரும் சொல்லேல்ல எப்ப பிளேன் வரும் எண்டு”.

மைத்துனர் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டார்.

“ஏரோபுளொட்டில் வந்து பட்ட கஷ்டம் போதும்” பரமநாதன் அலுத்துக் கொண்டான்.

‘மினி ஸ்கேர்ட்’ போட்ட அந்தப் பெண்?

ஐந்து வயதாக இருந்த அக்கா மகள் கீதாவா?

‘ஹலோ மாமா!’ கீதா குதூகலத்துடன் கூவினாள்.

மருமகன் சந்திரன் வெட்கத்துடன் நெளிந்தான்: போகும்போது அவன் கைக்குழந்தை.

“மற்றவை இரண்டு பேரும் யாழ்ப்பாணத்தில்,” அக்கா புட்டுக்கு மாக்குழைத்தபடி சொன்னாள்.

அரிசிமாப் புட்டும் இஞ்சிச் சம்பலும் மூக்கைத் துளைத்தன.

“ஐயாவுக்கு சீரியஸாம் போன்கோல் வந்தது. ‘யாழ் தேவி’யில் போற யோசனை. நல்ல காலம் நீ வந்திட்டாய்” தமக்கை தம்பியைப் பார்த்துக் சொன்னாள். அப்பா சாகக் கிடக்கிறார் என்பதா மறைமுகக் கருத்து.

“உடம்பு அலுத்துப்போய்க் கிடக்கு. ஒரு குளிப்படிக்க நேரமிருக்கா?” பரமநாதன் பரபரத்தான். அவனை வரவேற்பதில் மருமகளும் மருமகனும் நெளிந்தனர்.

குளித்து முடியச் சாப்பாடு மேசையில் இருந்தது.

“நான் பானுமதியின் கடிதம் கிடைக்க முதலே இந்த மாதம் வருவதாக பிளேன் ரிக்கற் ‘புக்’ பண்ணியிருந்தேன்.” வாயில் சாப்பாட்டை வைத்துக்கொண்டு சொன்னான்.

“குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே?” தமக்கை தம்பிக்கு இன்னும் சாப்பாடு போட்டுக்கொண்டு சொன்னாள்.

பரமநாதன் தமக்கையை நிமிர்ந்து பார்த்தான். “அப்பாவுக்குப் பிடிச்சிருக்குமோ…” அவன் இழுத்தான்.

“அவருக்கு வாதம் வந்து பேச்சில்லாமல்போய் இரண்டு மாதமாய் போயிட்டுது.”

தமக்கை சொல்லத் தம்பியின் தொண்டையடைத்தது வேதனையில்.

“துக்கப்பட்டு என்ன செய்யிறது? ஆர் சிரஞ்சீவியா இருக்க வந்தம்?” மைத்துனர் புட்டுக்குச் சொதி விட்டுக் கொண்டார்.

சுடுகாட்டு வேதாந்தம்!

“அம்மா சொன்னா உனக்குத் தந்தியடிக்கச் சொல்லி. டொக்டர் சொன்னார் எத்தனை நாள் எடுக்குமோ தெரியாதெண்டு.”

தமக்கையின் குரல் தகப்பனின் இறுதிப் பிரயாணத்தைக் கதைக்கும்போது கரகரத்தது.

சாப்பாடு முடிய, யாழ்தேவியில் போகமுதல் இங்கிலாந்துக்குப் போன் பண்ண விரும்பினான். எவ்வளவு நேரம் எடுக்குமோ தெரியாதாம். உலகத்தில் எந்த மூலைக்கும் படுக்கையறையில் இருந்து நமபர் சுழட்டியவன் முதன் முதலாகத் தாய்நாட்டின் முன்னேற்றத்தில் சினந்து கொண்டான்.

“தந்தியடிப்பது புத்திசாலித்தனம்” மருமகள் யோசனை சொன்னாள்.

மூன்று நாள்தான். ஆனாலும் மனைவியின் குரலையும் மகளின் குரலையும் கேட்காமல் ஒரு மாதிரியா இருந்தது அவனுக்கு.

வந்த களைப்பு மாறமுதலே இன்னொருதரம் பெட்டி படுக்கையைத் தூக்கிக் கொண்டு ஏறவேண்டியிருந்தது.

அக்கா வீட்டை அப்போதுதான் நோட்டம் விட்டான்.

உடைந்த தளபாடங்கள் எரிந்த ஒரு பக்க வீடு; கிட்டத்தட்ட வெறுமையான அறைகள்.

தம்பியின் கண்கள் போகும் இடங்களைப் பார்த்ததும் தமக்கை பெருமூச்சு விட்டாள்.

கண்கள் கலங்கின. “நாங்கள் தான் மிஞ்சினம் எழுபத்தி ஏழாம் ஆண்டுக் கலவரத்தில்; உயிர் தப்பினால் போதும் எண்டு ஓடிப்போனம்”.

ஒரு கணம் ஒன்றும் பேசாமல் நின்றான் பரமநாதன். உண்மையாகத் ‘தாய்’ நாட்டுக்கா வந்திருக்கிறான்? தாய் தான் வளர்த்த பிள்ளையைக் குருடாக்க உதவி செய்யும் பண்பற்ற கலாசாரம் கொண்ட ஆட்சி முறையைக் காணவா ஓடோடி வந்தான்?

பெருமூச்சுடன் மைத்துனரோடு வெளியேறினான். மனைவிக்குத் தான் சுகத்துடன் வந்து சேர்ந்ததைத் தந்தியில் தெரிவித்தான்.

யாழ்ப்பாணம் போனவுடன் கடிதம் எழுதுவதாகச் சேர்த்து எழுதினான் தந்தியில்.

குங்குமப்பொட்டும் பட்டுச் சேலையும் அணிந்த தமிழ்ப் பெண்களைக் கொண்ட வெள்ளவத்தை மார்க்கட், ஒரே பெண்கள் போல சிங்கள மயமாக இருந்தது. தமிழ்ப் தெரிந்தவர்களும் தாலியில்லாமலும் முகத்தில் குங்குமம் இல்லாமலும் இருந்தார்கள்.

“நாட்டின் வறுமையால் மக்கள் இனம்பார்த்துக் கொள்ளையடிக்கிறார்கள். தமிழ்ப் பெண்கள் உயிருக்கும் மானத்துக்கும் பயந்து தாலியைக் கழட்டிவிட்டுக் குங்குமம் வைத்துத் தங்களைக் காட்டிக் கொடுக்காமல், சீவிக்கிறார்கள்.” மைத்துனர் முணுமுணுத்தார்.

பல நாட்டு நாகரீகமும் படர்ந்த லண்டன் தெருக்கள் ஞாபகம் வந்தன.

போன நாடுகளில் தமிழர் தமிழராகவே இருக்கப் பிறந்த நாட்டில் பிறத்தியாராக நடக்கவேண்டிவந்த தலை எழுத்தா தமிழருடையது?

பரமநாதன் தமக்கையைப் பார்த்தான்.

புட்டுக் குழைத்த கையுடன் கழுத்தில் தாலியும் முகத்தில் குங்குமமுமாய் இலட்சுமி போலத் தெரிந்த இப்போது ரக்ஸியில் ஏறும்போது,

வெறும் முகத்துடன் வெறும் கழுத்துடன்…

மனித உரிமை எங்கே இருக்கிறது?

இரண்டு வருடங்களுக்கு முன் லண்டன் டெலிவிசனும் பத்திரிகைகளும் இலங்கையில் நடந்த இனக் கலவரத்தை அரையும் குறையுமாக அறிவித்தபோது, யாரோ அன்னியன் போல் பார்த்திருந்ததற்கும், இப்போது அதன் பலன்களை நேருக்கு நேர் கண்டபோது மனம் துடிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தான்.

“வீடு எரியாமல் இருந்ததே பெரிய புண்ணியம். தமிழர்களின் வீட்டை எரித்தார்கள். எரிக்காத விடுகளில் புத்த பிக்குமார் சிங்களவரைக் கொண்டு போய்க் குடியேற்றினார்கள். அதற்கு மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுத்த அரசாங்கத்தின் ‘ஆமி’ உதவி செய்தது”.

மைத்துனர் வேதனையுடன் சொன்னார்.

‘இராமன் ஆண்டால் என்ன  ராவணன் ஆண்டாலென்ன’ என்ற மனப்பான்மை கொண்ட மைத்துனர் போன்ற ஆட்களே இப்படி மனம் உடைந்து கதைப்பதாய் இருந்தால் நடந்த கலவரம் எப்படிப் பயங்கரமானதாய் இருந்திருக்க வேண்டும்?

ஐம்பத்தி எட்டாம் ஆண்டுக் கலவரத்தில் அரைகுறை மூட்டைகளுடன் கப்பலில் யாழ்ப்பாணம் ஓடியது கனவு போல் இருக்கிறது.

பயங்கரம்! பயங்கரம்! இலங்கையில் தமிழனாய்ப் பிறந்ததே பயங்கரம். தன்னைப் பாதுகாக்கும் தலைவனே தடியெடுத்தடிக்க உதவி செய்வது.

“தமிழர்களுக்கு எவ்வளவு கொடுமையும் கேவலமும் கொலையும் செய்ய முடியுமோ அதெல்லாம் செய்தார்கள் தம்பி.”

ரக்ஸிக்காரன் சம்பாபாஷணையில் கலந்து கொண்டான். பேச்சிலிருந்து தெரிந்தது அவன் முஸ்லீம் என்று.

“என்னய்யா லண்டனிலிருந்தா வாறீங்க?” ரக்ஸிக்காரன் திரும்பிப் பார்த்துக் கேட்டான்.

பரமநாதன் தலையாட்டினான்.

“என்ன பேசிக்கிறாங்க அங்க இருக்கிற தமிழர்கள்? காசு பணம் பெரிசுன்னு போன சனங்க தங்கடை தாய் சகோதரம் படுகிற கேவலம் கேள்விப்பட்டு, என்ன பண்ணுறாங்க?”

பரமநாதன் உணர்ச்சி பொங்கும் அந்த ஏழை ரக்ஸிக்காரனின் பேச்சில் நிலைகுலைந்து போய் இருத்தான்.

லண்டனில், நியூயோர்க்கில், பரிசில் வாழ்பவர்கள் என்ன நினைக்கிறார்கள்? எப்படி நடந்து கொள்கிறார்கள்?

ஒரு வசனத்தில் மறுமொழி சொல்லக்கூடிய விடயங்களாகத் தெரியவில்லை அவை?

அவன் நேரில் கலந்து கொள்ளாவிட்டாலும் நடக்கும் பலவிடயங்களைப் பற்றிச் சினேகிதர் மூலம் கேள்விப் பட்டிருக்கிறான்.

தாய் நாட்டில் நடக்கும் கோர நிகழ்ச்சிகளின் எதிரொலியால் எதையாவது செய்ய வேண்டும் என்ற உந்தலில், எதையெதைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாமல் இல்லை.

பண ஆசையால் சொந்த நாட்டை விட்டு ஓடிய தங்களைப் போன்றவர்கள், தாய் நாட்டில் தமிழர்படும் பிரச்சினைகளுக்கு வழிசொல்ல எந்தத் தகுதியும் கொண்டவர்களல்ல என்பது அவனது மறைமுகமான அபிப்பிராயம்.

கோட்டைப் புகையிரத நிலையத்தில் கார் வந்து நின்றது. தன்னுடன் விமானத்தில் வந்த வெள்ளையரில் சிலர் கண்டிக்குப் போவதற்காகப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டான்.

எலிஸபெத் பேக்கரின் ஞாபகம் வந்தது. பிரிட்டிஷ் ஹைகொமிஷனில் வேலைசெய்யும் சினேகிதியுடன் இலங்கையைச் சுற்றிப் பார்த்துவிட்டு; மூன்று கிழமைக்குப் பின் இந்தியா செல்வது பற்றிச் சொன்னது ஞாபகம் வந்தது.

குறு குறுவென்ற அவளது குழந்தைத்தனம், கள்ளம் கபடமற்ற வார்த்தைகள் எப்படிச் சிக்கல்களைக் கொண்டு வரும் என்று யோசித்துப் பார்த்தான்.

அவளின் இலங்கையைப் பற்றிய அபிப்பிராயத்தை இன்னொருதரம் சந்திக்கி நேர்ந்தால், கேட்கும்போது எவ்வளவு சுவாரசியமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்த்தான். நாகரிகத்தின் தலைநகரிலேயே பத்து வருடம் சீவித்த கவர்ச்சியான அவனே அவளின் கபடமற்றதனத்தாலும் பாவத்தாலும் சலனப்பட்ட போது இங்கிருக்கும் வாலிபர்கள் எப்படி யோசிக்கப் போகிறார்கள் அவளின் அழகைக் கண்டதும்? பழகும் விதத்தைப் பார்த்ததும்?

இரண்டு மூன்று நாளாக இருந்த களைப்பும் நித்திரை யின்மையும் இலங்கையில் கால்வைத்ததுமே மறைந்துவிட்ட உணர்ச்சி.

நித்திரையிலிருந்து விழித்த உணர்ச்சி. திரும்பிய இட மெல்லாம் ஏழ்மையும் இல்லாமையும் என்றாலும் இது என் தாய்நாடு என்ற மகிழ்ச்சி. லண்டன் தெருக்களில் திரும்பிய இடமெல்லாம் செல்வத்தின் பூரிப்பு. அதன் எதிர்மாறான காட்சிகள் இங்கு.

இருப்பதைக் கொண்டு திருப்திப்பட்ட அந்த முகங்களைப் பார்க்க, இனமறியாத சாந்தி கிடைத்தது.

‘மரியனைக் கூட்டி வந்திருக்க வேண்டும். மீரா எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பாள்?’

பெரியக்கா சொன்னாள் தான் குடும்பத்தைக் கூட்டி வருவேன் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்ததாக. நினைக்க வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. “சாதி மதமற்று ஆங்கிலேயப் பெண்ணைச் செய்துகொண்டதால் உன்னிடமுள்ள எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக் கொள்கிறேன்” என்று தகப்பன் எழுதும்போது, பெரியக்கா, மைத்துனர் என்ன சொல்லியிருப்பார்கள்?’

தகப்பனுக்குப் பயந்து எட்டு வருடம் எழுதாமல் இருந்தவர்கள்.

வினோதம் என்னவென்றால் தகப்பனின் கோபமான கடிதம் கிடைத்தது பற்றி எந்தக் கவலையும் காட்டிக் கொள்ளாமல் வழக்கம்போல் வீட்டுக்குப் பணம் அனுப்பியபோது, பணம் திரும்பி வரவில்லை லண்டனுக்கு.

தமிழர்களுக்கு மகன் இருப்பது இன்சூரன்ஸ் பொலிஸி இருப்பதற்குச் சமமா?

ட்ரெயின் ஓடிக்கொண்டிருந்தது. பார்வை பாய்ந்து மறையும் காட்சிகளில் படிந்திருந்தது.

உலகத்தின் ஒரு கோடியிலிருந்து அடுத்த கோடி: பதினாலு மணித்தியால இடைவெளிப் பிரயாண தூரத்தில் எத்தனை மர்மமான இயற்கையின் மாற்றங்கள்?

பனிகொட்டி சேறு வழியும் லண்டன் தெருக்கள். தூங்கி வழியும் உயர்ந்த கட்டடங்கள். இப்போது பார்க்கும் கொத்தான குலைகள் தொங்கும் தென்னை மரங்களையும் பச்சைப் பசேலென வயல் வெளிகளையும் பார்க்க விரித் திரமாக யோசிக்கப்பண்ணியது.

பெரியக்கா தம்பியை அடிக்கடி திரும்பிப் பார்த்தா. அவனின் நினைவு மைல்களுக்கப்பால் ஓடிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்தது.

ஜன்னலுக்கருகில் இடம் பிடிக்கக் கஷ்டப்பட்டவர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. வாழ்க்கையில் ஒரு அற்பமான காரியத்துக்கு எப்படி அடிபடுகிறார்கள்? சிங்களவர்களுக்குத் தமிழர் பெயரைச் சொல்லித் தமிழர்களுக்குச் சிங்களவர்களின் பெயரைச் சொல்லி நடக்கும் பித்தலாட்டங்களையுணராமல் ஆட்டுக் கூட்டம் போல் அள்ளுப்பட்டுப் போய்க் கொண்டிருப்பவர்கள், ஒரு சில மணித்தியாலம் சொகுசாக இருப்பதற்காக எவ்வளவு நாகரிகமற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள்.

“லண்டனில் இப்போதென்ன ஸ்னோ பெய்யுமா?” மருமகள் கேட்டாள். சிந்தனையிலிருந்து விடுபட்டு மருமகளைப் பார்த்தான். மத்தியான வெயில் ஜன்னலால் வந்து முகத்தில் விழ கீதா கண்களைக் குறுக்கிக்கொண்டு மாமாவைப் பார்த்தாள்.

குண்டு மல்லிகைகளை ஞாபகப் படுத்தின அவள் கண்கள். பதினைந்து வருட இளமை முகத்தில் தெரிந்தது.

மாமா தன்னை உற்றுப் பார்ப்பதைப் பார்க்க அவளுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. சின்னக் குழந்தையாக இருக்கும்போது இவளுக்குச் சாப்பாடு பிடிக்காது. பெரியக்கா கண்ணீர் வராத குறையாக அழுது கத்திச் சாப்பாடு கொடுப்பா. அப்படிப் படாதபாடு படுத்திய வாலா இப்படி வாலைக்குமரியாக இருக்கிறாள்?

ட்றெயின் பொல்காவலையில் நின்றது. ஜன்னலால் எட்டிப் பார்த்தான். விழுந்தடித்து ஓடிவந்து ஏறிக்கொண்டிருந்தார்கள்.

பக்கத்துப் பெட்டியில் தாவி ஏறிய இளைஞன் ஒருவன் ஏறும்போது இந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான். யாரோ தெரிந்த முகம்போல் இருந்தது.

தாடியும் மீசையுமாக இருந்ததால் யாரென்று உடனடியாக இவனால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. யாராயிருக்கலாம் என்று மண்டையைப் போட்டு உருட்டிக் கொண்டான்.

அத்தியாயம் –4 

யாழ்தேவி வேகமாய் ஓடிக்கொண்டிருந்தது.

ட்றெயின் ஓட்டத்தில் தூங்கிப்போய்விட்டான் பரமநா தன். தமக்கை தட்டி எழுப்பும்வரை அவன் நினைவின்றித் தூங்கிவிட்டான் கிட்டத்தட்ட இருளப்போகிற நேரம் கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்தான். கனவும் நினைவுமான குழப்பம்.

யாப்பாணத்துக் காற்று முகத்தில் பட்டு நிதானத்துக்கு வந்தது புத்தி. எங்கே மரியன் எங்கே மகள் மீரா என்று கனவுலகில் மனம் பிதற்றுவது போல் இருந்தது. அடையா ளமில்லாத நிழலாய் எலிஸபெத்தின் முகம் தடுமாறியது நினைவில்.

நான் லண்டனில் இல்லை! மொஸ்கோவில் இல்லை! யாழ்ப்பாணத்தில் நிற்கிறேன். தனக்குத் தானே சொல்லிக் கொள்ள வேண்டும்போல் இருந்தது.

மூட்டை முடிச்சுக்களுடன் வெளியே மக்கள் போய்க் கொண்டுருந்தனர்.

“ஹலோ!” குரல் கேட்டுத் திரும்பினான் பரமநாதன். பொல்காவலையில் தாடியுடன் கண்ட இளைஞன் முன்னால் நின்றான்.

முகத்தில் அறிவுக்களையும், தீட்சண்யமும். அவன் இன்னும் மாறவில்லை; தாடிமீசையைத் தவிர.

சத்தியமூர்த்தி!

பரமநாதனுக்கு வாய் வரவில்லை.

சத்தியமூர்த்தி பரமநாதனைப் பார்த்துச் சிரித்தான்.

நீ மறந்தாலும், மறந்ததாகப் பாவனை செய்தாலும் நான் மறக்கவில்லை என்ற சிரிப்பு.

“யாரோ தெரிந்த முகம் என்று யோசித்தேன்.” சத்தியமூர்த்தி பரமநாதன் சொன்னதைக் கேட்டுத் தலையாட்டினான்.

பரமநாதன் தமிழ் கதைப்பதைப் பார்த்து ஆச்சரியத்துடன் கண்களை விரித்தான் சத்தியமூர்த்தி.

“நீர் டமில் தான் கதைப்பீர் என்று நினைத்தேன்!” சத்தியமூர்த்தியின் நையாண்டிக் குரல் அப்படியே இருந்தது.

பெரியக்கா சாமான்களைக் காரில் வைத்துவிட்டுத் தம்பியிடம் வந்தாள். மறையும் வெளிச்சத்தில் சத்தியமூர்த்தியின் முகத்தைக் கண்டதும் “அடே சத்தியன்!” என்றாள். பரமநாதன் லண்டனுக்குப் போனதால் சத்தியமூர்த்தியைக் காணவில்லை. அக்கா கல்யாணம் முடித்து, குடித்தனம் பேனபின் அதிகம் அவனைக் காணவில்லை.

ஒரு காலத்தில் ஒன்றாய் விளையாடியவர்கள். வெள்ளவத்தைக் கடற்கரையில் நண்டு பொறுக்கி விளையாடியது இறந்தகால நிகழ்ச்சியாய்ப் போய்விட்டது.

“இப்பதான் வாறீர் போல் கிடக்கு?” சத்தியமூர்த்தி சொன்னான்; பரமநாதன் தலையாட்டினான்.

“அப்பாவுக்குச் சுகமில்லை. கொஞ்சம் சீரியஸ்…” அக்கா இழுத்தாள்.

“ஓ ஐயாம் சொறி” சத்தியமூர்த்தியின் முகபாவம் மாறியது.

“ஆஸ்பத்திரியில் இப்ப விடுவினமோ தெரியல்ல”. அக்கா மணிக்கூட்டைத் திருப்பிப் பார்த்தபடி சொன்னா.

“கொழும்பில்தானே நிற்பீர்?” சத்தியமூர்த்தி பெட்டியைத் தூக்கிக் கொண்டு கேட்டான்.

“அப்பாவின் உடம்பு நிலையைப் பொறுத்தது”. பரமநாதன் சொன்னான்.

குழந்தைகள் காருக்குள் இருந்து பொறுமையின்றித் தவிப்பது முகத்தில் தெரிந்தது.

“நான் இரண்டு மூன்று கிழமை யாழ்ப்பாணத்தில் நிற்பன், வந்து பார்க்கிறன்.”

சத்தியமூர்த்தி கை காட்டிவிட்டு நடந்தான். நடந்த போதுதான் தெரிந்தது காலை நொண்டி நடப்பது.

“எழிய சிங்களவன்கள் சத்தியமூர்த்தியின்ர குடும்பத்தை உயிரோடு எரிச்சுப் போட்டான்கள்.” அக்கா பெருமூச்சுடன் சொல்லிவிட்டு காரில் ஏறி உட்கார்ந்தா.

ரக்ஸி ஆஸ்பத்திரியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் சனநெருக்கத்தால் பொங்கி வழிந்தது. கார்களும் சைக்கிள்களுமாக ஊர்ந்துகொண்டிருந்தன; நடக்க வழியில்லாமல்,

“ஒவ்வொருக்காக் கொழும்பில் அடிவிழேக்கையும் ஓடி வருவினம் இனிப் போகமாட்டம் என்று சொல்லிக்கொண்டு. எல்லாம் ஆறுமாதம் ஒரு வருஷத்துக்குத்தான். கொழும்பு ருசிதேடித் திரும்பிப் போவினம்”. அக்கா முணுமுணுத்துக்கொண்டு வந்தா.

ரக்ஸி ஆஸ்பத்திரி வாசலில் நுழைந்தது. பார்வையாளர் நேரம் முடியும் வேளை. காவற்காரன் தான்தான் ஆஸ்பத்திரி அதிகாரி மாதிரி அட்காசமாய்க் கத்தினான்.

மனதுக்குள் என்ன நினைக்கிறார்களோ தெரியாது. ஆனால் பணிவாகவும் மரியாதையாகவும் நடக்கும் லண்டன் ஹொஸ்பிட்டல் சிப்பந்திகளின் நடத்தையை நினைத்துக் கொண்டான், பரமநாதன்.

காவல்காரனின் அட்டகாசத்திற்கு ஒரு மாதிரிச் சரிக்கட்டிவிட்டு உள்ளே போனால், நேர்ஸ்மார் அடுத்தபடி. கேட்ட கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் முகத்தை நெளித்துவிட்டு எத்தனையோ நேர்ஸ் போவதைப் பார்த்துப் பொறுமையிழந்தான் பரமநாதன். வலிமையும், சுசமும் இல்லாத நோயாளிகளைப் பார்க்கும் நேர்ஸஸே கொஞ்சமும் இரக்கம் இன்றித் தலைக்கனத்துடன் நடந்தால், சாதாரண காவற்காரர்கள் இப்படி நடக்கிறார்களே என்பதில் என்ன புதினம் என்று, அக்காவைக் கேட்க நினைத்தான்

யாழ்ப்பாண வீதிகளில் சுகமான மக்களின் நெருக்கம். ஆஸ்பத்திரியிலோ சுகமற்ற மனிதர்களின் நெருக்கம். நோய் பிணி, புண், நாற்றம். வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது.

இந்த இடத்தில் நோய் மாறுகிறதா நோய் தொற்றுகிறதா என்று வேறுபடுத்த முடியாத நாற்றம். லண்டன் மாநகரையும் அதன் பளிங்குபோன்ற ஆஸ்பத்திரிக் கட்டடங்களையும் நினைத்துப் பார்த்து வேதனைப்படவில்லை.ஆனால் வருத்தம் வந்தபோதும் வசதியான இடத்தில் படுக்க வசதியற்ற ஏழைகளைக் கண்டபோது அவனுக்குக் கண்ணீர் வருமாற்போல் இருந்தது.

தகப்பன் ‘மெடிக்கல் வார்ட்’ ஒன்றில் எலும்பும் தோலுமாகப் படுத்திருப்பார் என்று நினைத்துப் பார்த்துக்கொண்டு தான் வந்தான்.

நேர்ஸிடம் கெஞ்சிக் கொஞ்சநேரம் அனுமதி எடுத்துக் கொண்டு வார்ட்டில் நுழைய அவன் முகத்தில் முதற்பட்டது அம்மாதான்.

பத்து வருடங்கள்! அம்மாவின் நரைத்த தலை, குழி விழுந்த கண்கள்!

இவனைக் கண்டதும் அம்மாவின் கண்களிலிருந்து பொல பொலவென்று நீர் கொட்டியது.

பத்துவருடங்களாகப் பேசவேண்டி, சொல்ல வேண்டி, கேட்க வேண்டிய எத்தனையோ நினைவுகள் அவள் நினைவில் குவிந்திருக்கலாம்.

இவனைக் கண்டதும் கைகளைத் தடவினாள். அவள் உதடுகள் நடுங்கின. தாய்மையின் பாசம் தடவலிற் தெரிந்தது.

எப்படியடா எங்களைப் பிரிந்து இருந்துவிட்டாய் என்று கேட்க நினைத்திருக்கலாம்.

முந்தானையால் முகத்தைத் துடைத்துவிட்டு மகனைத் தகப்பனின் கட்டிலுக்கு கொண்டு சென்றாள்.

“ஸ்ரோக் வந்ததெண்டு சொல்லுகினம்”. பெரியக்கா தகப்பனின் நெற்றியில் முத்தாக வழியும் வேர்வையைத்  துடைத்தாள்.

தகப்பனின் விழிகள் உணர்ச்சி ஒன்றுமின்றி வெறுமையாகக் குத்திட்டு நின்றன. வாய் ஒரு பக்கம் சரிந்து எச்சில் வழிந்துகொண்டிருந்தது.

வாய் திறந்தால் வீட்டை நடுங்கவைத்த தகப்பனா இவர்? “அப்பா!” என்றான்.

அவருக்குக் கேட்டதோ?

கேட்குமோ?

அவனுக்குத் தெரியாது. ஆங்கில நாட்டு நாகரிகம், உணர்ச்சிகள் எதையும் அநாவசியமாகக்  காட்டிக் கொள்ளாது. அவன் தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டான். அவனது குரலில் அவற்றை எல்லாம் கடந்த பாசம் தொனித்திருக்க வேண்டும்.

இரண்டாம் மூன்றாம் முறை இவன் குனிந்து ‘அப்பா’ என்று சொல்ல, நிலைகுத்தி நின்ற விழிகள் ஒருதரம் மூடி விழித்தன.

‘என் குரலை அடையாளம் கண்டுகொண்டு விட்டாரா?’

அவன் குனிந்து சில்லிட்டுப்போய் இருந்த கைகளைப் பிடித்தான்; முகத்தைத் தடவி விட்டான்.

ஒவ்வொரு நிமிடமும் அவரின் இறப்பு நெருங்கிவந்து கொண்டிருப்பது தெரிந்தது.

“உனக்காகத்தான்ரா காத்திருந்தார்.”

தாய் குலுங்கியழுதாள்.

தமக்கை கரண்டியில் தண்ணி ஒருசொட்டைத் தம்பியிடம் கொடுத்துத், தகப்பனின் வாயில் விடச் சொன்னாள்.

வேதனையில் அவன் கைகள் நடுங்கின. “வீட்டை கொண்டு போனால் என்ன?” மைத்துனர் கேட்டார்.

எல்லோருக்கும் தெரிந்தது டொக்டர்களால் இனி ஏதும் செய்யமுடியாதென்று.

பரமநாதன் ஸ்ராவ் நேர்ஸ், அல்லது ஸிஸ்டர் யாரிடமாவது கேட்டு வருகிறேன் என்று சொல்லிப் போனான்.

இப்போதுதான் பாஸ்பண்ணி வந்தவராக இருக்கவேண்டும். டியூட்டியில் இருந்த டொக்டர்.

புது ஸ்ரெதஸ்கோப்பை ஸ்ரையிலாகச் சுழட்டிக்கொண்டு தெரியாத வருத்தங்களின் பெயரெல்லாவற்றையும் இங்கிலாந்தால் வந்தவனுக்குச் சொல்லப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தார்.

அரை மணித்தியாலம் அவர் புழுகுகளைக் கேட்டபின் அமைதியாகச் சொன்னான்.

“ஹி இஸ் டையிங். வீ லைக் ரு ரேக் ஹிம் ஹோம்.”

தேவையான பத்திரங்களில் கையெழுத்து வைத்து விட்டுத் தகப்பனைக் கொண்டுவர நடுச்சாமமாகி விட்டது.

மெல்லிய வெளிச்சத்தில் படலையைத் திறந்த உருவத்தை அடையாளம் தெரியாமல் கூர்ந்து பார்த்தான் பரமநாதன்.

‘பானுமதியா இது?’

தகப்பனின் நிலையைக் கண்டதும் பானுமதியும், கெளரியும் ஓவென்று அலறினார்கள்.

முன் அறையில் தகப்பனைப் படுக்க வைத்து எல்லோரும் சூழ்ந்து கொண்டார்கள்.

மூன்று மகள்களும் மகனும் பேரப்பிள்ளைகளும் சுற்றியிருக்க, தாய் அழுதுகொண்டேயிருந்தாள்.

இரவு நடுச்சாமமாகியும் இன்னும் புழுக்கமாய் இருந்தது.

லண்டனை விட்டு மூன்று இரவுகள் கடந்தும் நல்ல நித்திரை இல்லாதபடியால் பரமநாதனுக்குத் தலை சுற்றிக் கொண்டு வந்தது.

மாமரத்தின் கீழ் பாயைப் போட்டுக்கொண்டு நிமிர்ந்து படுத்தான்.

மெல்லிய காற்று. மாமர இடுக்குகளில், எட்டிப்பார்க்கும் நிலா. முன்னறையில் முனுகியழும் தாய்.

பரிதாபமான இரவாக இருந்தது.

கடந்த மூன்று இரவுகளும் கனவுபோல நினைவில் பட்டது.

லண்டனில் தன் அழகிய வீடு. அருமையான மனைவி. இனிய குழந்தை.

எல்லாமே நம்பமுடியாதவைகளாகவும் தற்போது தன்னைச் சுற்றியிருக்கும் தன் குடும்பம், தாய் தகப்பன், மாமரம், யாழ்ப்பாணத்து நிலா மட்டுந்தான் சாசுவதமானதாகவும் தெரிந்தன.

“சாப்பிட ஏதும் வேணுமா?” குரலுக்குரியவளை நிமிர்ந்து பார்த்தான்.

பானுமதி; அவனின் கடைசித் தங்கை; எல்லோரையும் தன் பொல்லாத வாயால் ஆட்டிப்படைத்த வால்.

அவன் பேசாமல் தங்கையைப் பார்த்தான். அழுது முகம் வீங்கியிருந்தது அவளுக்கு.

“இப்படி இரு” என்று கைகாட்டினான்.

அவள் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

‘அப்பா என்னைப்பற்றி என்னவெல்லாம் சொன்னார்’ என்று கேட்க நினைத்தான்.

இனி என்ன பிரயோசனம்?

அவர் கேட்கவா போகிறார் இவனின் மறுமொழிகளை?

“அப்பா பாவம்”. அவள் கேவிக் கேவியழுதாள்.

பெரியக்கா கெழும்பில் இருக்கிறாள் குடும்பத்துடன்.

கௌரி படிப்பிக்கிறாள் தெல்லிப்பளையில்.

பானுமதிதான் ஒரு வேலையுமில்லாமல் தாய் தகப்பனைப் பார்ப்பவள்.

அவரின் பிரிவு அவளை வாட்டுவது இயற்கை.

“அவருக்கு ஸ்ரோக்; வாதம். இனிக் கை கால் வழங்காது”. அவன் தேற்றுவதற்காகச் சொன்னான். அவள் விம்மினாள்.

அவனுக்கு என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியவில்லை. அவர்கள் விருப்பத்தைக் கேட்டா மரணம் எட்டிப் பார்க்கிறது?

தாயின் அலறல் இருவரையும் திடுக்கிடப் பண்ணியது. எழுந்து ஓடினார்கள்.

கண்கள் நிலைகுத்த, வாய் திறந்திருக்க… தகப்பன் போய் விட்டார்! பரமநாதனின் மனம் நெகிழ்ந்தது.

”உனக்காகத்தான்ரா பார்த்திருந்தார்.” ஆச்சி ஒருத்தி பரமநாதனைப் பார்த்து ஓலம் வைத்தாள்.

தன்னை வெறுத்து விட்டார் என்று நினைத்த தகப்பனா தான் வரும்வரை காத்திருந்தார்?

மூன்று நாள் அலைச்சலில் தான் வரவா அவர் மரணம் வாசலில் இருந்தது?

எங்களால் விளக்க முடியாத – விளங்கிக்கொள்ள முடியாத எத்தனையோ வித்தைகளில் இதுவுமொன்றா?

உயிரற்ற தகப்பனின் கைகளைப் பிடித்துக் கொண்டான். ஏனோ தெரியவில்லை அவன் அழவில்லை.

இறப்பை எதிர்பார்த்தது ஒரு காரணமாக இருக்கலாம். இனி நானும் அழுதால் என் குடும்பத்தைப் பார்ப்பது யார் என்று அடிமனம் சொல்லியிருக்கலாம். கிழவிகள் செத்த மனிதரின் கண்களை மூடி, வாயை மூடினார்கள். யாரோ போல் பார்த்துக்கொண்டு நின்றான்.

தங்கைகள் புரண்டு அழுதார்கள்.

தாய் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டா. நாற்பது வருட கல்யாண சீவியம். யாரோபோல் பிரிந்து விட்டார் தகப்பன், தாய் ஓலமிட்டு அழுதாள்.

செத்த வீட்டுக்கு வந்தவர்கள் இவனுடன் கதைக்க இவனுக்குப் பதில் சொல்லி அலுத்துவிட்டது. பின்னேரம் ஐந்து மணிக்குப் பிணத்தை எரித்துவிட்டு வந்தார்கள்.

***

இனி என்ன செய்வது?

இரு தங்கைகளின் எதிர்காலமும் அவன் கையிலா? இனி இரண்டு மூன்று நாட்கள் இப்படித்தான் இருக்கப் போகிறது.

அக்காவும் தாயும் அழுது வடிந்து முடியவிட்டு குடும்பத்தைப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் மூன்றாம் நாள் முடிய மைத்துனர் கொழும்புக்குப் போய்விட்டார். தாய் பொது விடயமாகக் கதைத்தாளே தவிர குடும்பத்து விடயங்களைப்பற்றிக் கதைக்கவில்லை.

அவன் அனுப்பிய பணத்தில் இரண்டு வீடுகள் கட்டியிருக்கிறார்கள். தங்கைகளுக்குத் தேவையான நகைகள் உண்டு. இனி ஏற்ற விலைக்கு மாப்பிள்ளை பார்ப்பதுதான் வேலை முடியுமான கெதியில் ஒழுங்குகள் செய்ய வேண்டும்.

“எப்போது திரும்பிப் போகிறாய்?” அம்மா இடியப்பம் எடுத்து வைக்கும்போது கேட்டா.

“ஒரு மாத லீவு, தேவையானால் இரண்டு கிழமை கூட்டலாம்” என்றான்.

“கௌரிக்கு எழுதிய பெடியனை ஒருதரம் பார்த்துப் போட்டுப் போ”.

பரமநாதனுக்கு எதிர்பாராத விடயமாக இருந்தது கௌரிக்குக் கல்யாணம் எழுதியது. தாயைக் கேள்விக் குறியுடன் நிமிர்ந்து பார்த்தான்.

“இரண்டு கிழமைக்கு முன் நடந்திச்சு. தனக்கு ஏதும் நடக்கும் எண்டுதானோ என்னவோ கொப்பர் அவசர அவசரமாக எழுதிப் போட்டார்”.

தாய் சாதாரணமாகச் சொன்னது அவனுக்கு ஆத்திரத்தை மட்டுமல்ல அவமானத்தையும் தந்தது. வீட்டுக்கு மூத்த மகன் என்று விழுந்து விழுந்து உபசரிக்கிறார்கள்.

தன் தந்தைக்கு தான் அனுப்பிய காசில் மாப்பிள்ளை வாங்கும்போது தன்னிடம் ஒரு கதையும் கேட்கவில்லை. எப்படியான இடமாய்ப் பேசியிருப்பார்கள்? ஒரு பேச்சுக்கு என்றாலும் ஒரு வார்த்தையில்லை. ஆத்திரத்தில் வார்த்தைகள் வரவில்லை.

குனிந்த தலை நிமிராமல் இடியப்பத்தைக் குழைத்துக் கொண்டிருந்தான்.

உடனே பிளேன் எடுத்துத் தன்வீட்டில் குதிக்க வேண்டும் போல் இருந்தது.

யார் வீட்டிலோ இருந்து யாருடைய திருமணத்தையோ கதைப்பதுபோல் தன் தங்கையின் திருமணத்தைக் கதைத்துக் கொண்டிருக்க அவன் தயாராய் இல்லை.

“ஏன் பேசாமல் இருக்கிறாய்?”தாயின் குரல் பரிதாபமாக ஒலித்தது.

“பேச என்ன இருக்கிறது? நீங்கள்தான் நான் ஒரு பொருட்டும் இல்லையென்று செய்துவிட்டு இருக்கிறீர்களே?”

“தம்பி நாதன். உலகம் தெரியாமல் கதைக்காதை. கௌரிக்குச் செவ்வாய்தோஷம். எத்தனையோ பேச்சுக்கால் வந்தும் சாதகம் சரியில்லாமல் குழம்பிப் போச்சு. இந்தப் பொடியனின் சாதகம் சரிவந்தது. அதோட லண்டனிலிருந்து லீவில் வந்து நிற்கிறபோது விசயத்தை முடிக்கச் சொல்லிக் கேட்டினம்.” தாய் விளக்கிக் கொண்டிருந்தாள்.

லண்டன் மாப்பிள்ளை!

கௌரி கேட்டாளா லண்டன் மாப்பிள்ளை தேவை என்று?

லண்டனில் உள்ள மாப்பிளையைப் பற்றி தன்னிடம் ஒரு விசாரிப்பு இல்லை.

“பொடியனைப் பற்றி நல்லாத் தெரியுமா?”

அவனின் கேள்வி தாயைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி யிருக்க வேண்டும்.

“என்ன விசாரிக்கக் கிடக்கு? நல்ல குடும்பம், தாய் தகப்பனை உனது மச்சானுக்கு நல்லாத் தெரியும். பெடியன் நல்ல வேலையில் இருக்கிறதென்று கேள்வி.”

தாய் விட்டுக்கொடுக்காமல் பேசியது அவனுக்கு இன்னும் எரிச்சலைத் தூண்டியது.

“ஏன் எனக்குச் சொல்லவில்லை?” குரலில் எரிச்சலைக் காட்டாமல் அவனால் இந்தக் கேள்வியைக் கேட்க முடியவில்லை.

“பெரியக்கா சொல்லியிருப்பா, பானுமதி எழுதியிருப்பாள் என்று நினைச்சன்.” தாய் கையைப் பிசைந்து கொண்டாள்; மகனின் கோபம் நியாயம் என்று பட்டிருக்க வேண்டும்.

பெரியக்காவைக் கேட்டால் பானுமதி சொல்லவில்லையா என்று ஆச்சரியப்படலாம்.

இனி என்ன?

தகப்பன் இறந்துவிட்டார். ஒரு தங்கைக்குக் கல்யாணமும் சட்டப்படி முடிந்துவிட்டது.

லண்டனுக்குத் திரும்பிப் போகலாம்.

பானுமதி சம்பல் கொண்டுவந்தாள். தமையனுடன் இன்னும் மனம் விட்டுப் பழகவில்லை. ஆனாலும் தன் செல்லத் தங்கச்சியைச் சீண்டிக்கொண்டிருந்தான் பரமநாதன், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்.

“உனக்கின்னும் கல்யாணம் எழுதப்படவில்லையா? அல்லது நீயாகப் பார்த்து எழுதிவிட்டாயா? அப்படி என்றாலும் எனக்குச் சந்தோசமாக இருக்கும். என்ன விலை கொடுத்தாய் மாப்பிள்ளைக்கு?”

அம்மாவுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். சாப்பாட்டு மேசையைவிட்டுப் போய்விட்டாள். பானுமதி சம்பலைப் போட்டபடி தமையனைப் பார்த்தாள். முகத்தில் தமையன் கேட்ட கேள்விக்குக் குறும்பாகப் பதில் சொல்லும் தோற்றம் இல்லை. ஏதோ யோசிப்பது தெரிந்தது.

“என்ன யோசிக்கிறாய்?”

பரமநாதன் சாதாரணமாகக் கேட்பதுபோல் கேட்டான்.

“யாரையும் பார்த்தால் செய்து வைப்பீர்களா?”

அவனுக்குத் துணுக்கென்றது. அவள் கேட்ட விதம். பார்ப்பதைப் யாழ்ப்பாணத்துப் பெட்டைகள் பெடியன் பகிரங்கமாகக் கதைப்பார்கள் என்று அவன் எதிர்பார்க்க வில்லை.

தங்கையை ஆராயும் கண்களுடன் நோட்டம் விட்டான். ‘பகிடி விடுகிறாளா என்னிடம்?’

பெரியக்காவும் குழந்தைகளும் பப்பாசி மரத்துடன் சண்டைபிடித்துப் பழம் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். பெரிய கூச்சலாக இருந்தது. அம்மா கிணற்றடிக்குப் போய்க் கொண்டிருந்தா. நடையில் தெரிந்தது மகனில் உள்ள கோபம்.

கௌரி ஆட்டுக்குக் குழை போட்டுக் கொண்டிருந்தாள். இனி என்ன கவலை, லண்டனுக்குப் போகிறாள்!

சாப்பாட்டு மேசையில் பரமநாதனையும் பானுமதியையும் தவிர யாரும் இல்லை.

“என்ன பகிடி விடுறியா?” பரமநாதன் தன் ஆச்சரியத்தைக் காட்டிக்கொள்ளாமல் கேட்டான்.

“இந்த விஷயங்களில் எல்லாம் எங்கட பொம்புளைகள் பகிடி விடுவினமா?” பானுமதி தமையனுக்கு முன்னால் உட்கார்ந்தாள் கேள்வி கேட்டபடி.

காலைச் சூரியனின் மெல்லிய ஒளியில் முகம் கவர்ச்சியாய்த் தெரிந்தது. தங்கச்சி பகிடி சொல்லவில்லை என்று புரிந்தது. தன்னிடம் உதவிக்கு வருகிறாள் என்று நேரடியாகத் தெரிந்தது. பானுமதிக்குக் காதலிக்கவும் தெரிந்துவிட்டது. தான் வராவிட்டால் என்ன செய்திருப்பாள்? ஓடியிருப்பாளா, காதலித்தவனுடன்? வீட்டில் எவ்வளவு தெரியும்?

“யார் அந்த அபாக்கியசாலி?” தமையன் குரலில் குறும்பு. அவள் செய்த சம்பலை ருசித்தபடி கேட்டான்.

அவள் கைகளைப் பிசைந்து கொண்டாள்.

“கண்ணகி பரம்பரை, பெயர் சொல்ல மாட்டாயாக்கும். மாதவியிடம் பறிகொடுக்கப் போகிறாய்!” தங்கையை ஆழம் விட்டான் தமையன்.

“உங்களுக்குத் தெரிந்த ஆள்தான்.” பானுமதி மெல்லமாக. தலைநிமிராமல் சொன்னாள்.

“என்ன பானுமதி எனக்குத் தெரிந்த ஆள் என்கிறாய்! பத்து வருஷத்தில் பார்த்த முகங்களை மறந்து விட்டன லண்டனில் பக்கத்து வீட்டுக்காரனையே தெரியாது”. அவள் சிரிப்பாள் என்று நினைத்தான். அவள் தலை நிமிரக்கூட இல்லை.

“சொல்லும் ஆள் ரெண்டு.” அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது, தங்கையிடம் இந்த விடயத்தை இவ்வளவு சாதாரணமாகக் கதைப்பது. கடந்த பத்து வருடமாக இலங்கையில் இருந்திருந்தால் ஒருவேளை கதைக்க முடியாமல் விட்டிருக்கலாம்.

ஆனால் அவள் சொன்ன பெயர் அவன் தொண்டையில் இடியப்பத்தை அடைக்கப் பண்ணியது. அவனுடைய பெயர் என்ன என்று தமையன் திருப்பிக் கேட்க அவள்.

“உங்கள் கார்த்திகாவின் தம்பி சபேசன்” என்றாள். இருவிதத் தாக்கல்.

ஒன்று, கார்த்திகாவின் தம்பி என்பதால்.

மற்றது. உங்கள் கார்த்திகாவின் தம்பி என்று சொன்ன படியால்.

தமையன் வாய் திறக்கவில்லை. மனம் என்னவோ செய்து கொண்டிருந்தது.

‘எனது கார்த்திகா!’

“இப்படி எத்தனையோ பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்களா இன்னும்?”

‘நடக்கக்கூடிய காரியமா பானுமதி நினைப்பது? சபேசன் என்ன சாதி என்று இவளுக்குத் தெரியுமா?’

“பானுமதி!”

தமையன் ஏதோ சொல்லப்போகிறான் என்று சாடையாக அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

அவளை அப்படிப் பார்க்கத் தர்மசங்கடமாக இருந்தது. அவளின் கண்களை நேருக்குப் பார்க்க ஏனோ முடியாத காரியமாக இருந்தது.

வெளியில் முட்டை போட்ட கோழி கத்திக் கொண்டிருந்தது.

“அவன் என்ன சாதி தெரியுமா?” மெல்லக் கேட்டான் பரமநாதன்.

“அதுதான் கார்த்திகாவை நடுத்தெருவில் விட்டீர்களாக்கும்!”

பானுமதியால் இப்படிப் பேசமுடியும் என்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் சபேசனாலா வளர்ந்திருக்கிறது.

”பானுமதி குழந்தைத்தனமாகப் பேசாதே. என் தனிப் பட்ட விடயங்களை உணர்ந்துகொள்ள முடியாதவர்களுக்கு நான் விளங்கப்படுத்திக் கொண்டிருக்கப் போவதில்லை.”

அக்காவின் குழந்தைகள் பப்பாசிப் பழத்துடன் வந்து சேர்ந்தார்கள். அம்மா தேத்தண்ணி போட்டுக்கொண்டு வந்தாள். பரமநாதனின் முகம் இன்னும் கோபத்துடன் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தவள் அவனின் மௌனத்துக்குக் காரணம் தெரியாமல் திகைத்தாள். ‘கோபத்தில் இருந்தவனுக்கு என்ன வந்துவிட்டது?’

விடிந்து பத்து மணிக்கிடையில் உச்சி கொதிக்கும் வெயில். அவன் வெளிக்கிட்டான் மௌனமாய்.

யாழ்ப்பாணம் பெரியகடைக்கு வெளிக்கிட்டான் பரமநாதன். வீட்டார் ஒருவரை ஒருவர் பார்த்தனர் விளங்காமல். யாழ்ப்பாணத்தில் அவனுக்குத் தெரிந்த நண்பர்கள் அதிகமில்லை. ஓரளவு நண்பர்களாக இருந்தவர்கள் ஒதுங்கிப் பழகினார்கள். ‘வாடா பரமன்’ என்று பழகியவர்கள், ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று பன்மையில் கதைத்தார்கள்.

நெருக்கமாக மனம்விட்டுக் கதைக்க யாரும் இல்லாதது போல் இருந்தது. யாழ்தேவியில் கண்ட சத்தியமூர்த்தியின் ஞாபகம் வந்தது.

‘திருநெல்வேலியில் இருப்பானா அல்லது திரும்பிப்போய் இருப்பானா? கொழும்புக்குப்போய் இருப்பான்.’ கச்சேரியடி யிலிருந்து யாழ்ப்பாணம் போய்ச் சேர்வதற்கிடையில் களைத்து விட்டான், பஸ்ஸில் இடிபட்டு.

லண்டன் முழுக்கக்காரோடிப் பழகி பஸ்ஸுக்குக் காத்து நிற்கவே, பொறுமையின்றித் தவித்தான் பரமநாதன்.

பெரியகடை பொங்கி வழிந்தது நெருக்கமான கட்டடங்களாலும் மக்களாலும். நன்றாகத் திட்டமிட்டுக் கட்டப்படாததால், நகரம் நாறிக்கொண்டிருந்தது சாக்கடைகளால்.

திரும்பிய பக்கமெல்லாம் தியேட்டர்கள்; கண்ணீர் வடிக்கும் கதாநாயகன்கள்: காதலில் பாடும் காதலியர். திரும்பிய இடமெல்லாம் ‘போஸ்டர்ஸ்.’

லண்டனுக்குப் போய் ஒரு தமிழ்ப் படமும் பாக்கவில்லை. இதுவரையும். டெலிவிஷனில் சத்தியஜித்ரேயின் ஒன்றிரண்டு படங்கள் பார்த்ததுண்டு.

எப்படி இருக்கிறது தமிழ்ப்பட உலகம் என்று பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஒரு காலத்தில் சறத்துடன் ‘செக்கண்ட் ஷோ’வுக்குப் போய்ச் சினேகிதர்களுடன் ‘கலரி’ யில் இருந்து படம் பார்த்தது ஞாபகம் வந்தது.

அந்த நண்பர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு ஓடிப்போய் விடவில்லையே! யாழ்ப்பாணக் குடாநாட்டில் தான், எங்கெல்லாமோ இருப்பார்கள். நேரம் கிடைத்தால் போகவேண்டும். பூபாலசிங்கம் புத்தக நிலையத்தில் கொஞ்சப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு நிமிர்ந்தவன் மோதாத குறையாக முட்டிக்கொண்டு நிமிர்ந்தான்.

சத்தியமூர்த்தி நின்றான் சிரித்தபடி!

– தொடரும்…

– ஒரு கோடை விடுமுறை (நாவல்), முதற் பதிப்பு: ஐப்பசி 1981, அலை வெளியீடு, யாழ்ப்பாணம்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *