ஒரு கோடை விடுமுறை
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2026
பார்வையிட்டோர்: 1,146
(1981ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4
அத்தியாயம் – 1
‘நாளைக்கு விமானம் புறப்படப்போகிறது’. பரமநாதன் மனதுக்குள் சொல்லிக் கொள்கிறான்.
ஏதோ முன் பின் தெரியாதவர்களைக் காணப் போவது போன்ற உணர்ச்சி. தன் பெற்றோர்! தன் தாய் தகப்பன் தன் தங்கைகள்!
‘யாரையோவா காணப் போகிறேன்?’
பரமநாதன் புரண்டு படுத்தான். அவனின் மனைவி மரியனின் பளிங்கு போன்ற தோள்கள் போர்வையைத் தாண்டி எட்டிப் பார்த்தன.
‘பாவம் இன்றெல்லாம் பயணத்துக்கான பெட்டிகளை அடுக்கியும் சாமான்களைப் பார்ஸல் பண்ணியும் களைத்து விட்டாள்’. மரியனின் பொன்னிறத் தலைமயிர் தலையணையில் தவழ்ந்து கிடந்தது. மெல்லமாகக் கோதி விட்டான். அவள் மெல்லமாகப் புரண்டாள். ஆழ்ந்த நித்திரையிலிருந்து விழித்துக் கொள்ளக் கஷ்டப் படுவது தெரிந்தது.
கள்ளம் கபடமற்ற குழந்தையின் முகம்போல இருந்தது மரியனின் நித்திரை படர்ந்த மூகம்.
கண்கள் மூடி, மொட்டான மூக்கு சீரான மூச்சுவிட அழகிய இதழ்கள் குவிந்து கிடந்த அந்த நித்திரைக் கோலம்!
மனைவியை விட்டு ஒரு மாதம் பிரிந்திருக்கப் போகிறான்! பரமநாதன் மெல்லக் குனிந்து மனைவியின் கண்களை முத்த மிட்டான்.
அவள் அரை குறையாகக் கண்களைத் திறந்தாள். கண்களின் நேரெதிரே அவன் கண்கள்.
படுக்கையறையின் மெல்லிய விளக்கொளியில் கணவனின் அன்புமுகம் தன்னில் பதிந்திருப்பது தெரிந்தது.
கண்களை இரண்டுதரம் வெட்டி முழித்து விட்டுக் கண்களைக் கசக்கிக்கொண்டு கணவனின் கழுத்தில் கைபோட்டு முகத்தோடு முகம் பதித்து…
“வட் இஸ்த ரைம் டார்லிங்” அவளின் குரல் அவன் காதுகளில் கிசுகிசுத்தது.
மறுமொழி சொல்லித் தெரியக் கூடாத நேரங்கள் சில வேளையுண்டு என்பது அவன் அபிப்பிராயம். மனைவியை இறுக அணைத்துக் கொண்டான் மறுமொழி சொல்லாமல்.
“மரியன்”… அவன் மனைவியை இறுக அணைத்திருப்பதை விடாமல் மெல்ல அவளின் பெயரைச் சொன்னான்.
“ம்ம்” அவள் தூக்கக் கலக்கத்தில் உம் கொட்டினாள். அவனின் குரலிலிருக்கும் கனிவில் அவளின் நித்திரை பறந்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரியும்.
“வில் யூ மிஸ் மீ?”
அவன் கேட்டான்.
அவனுக்குத் தெரியும் கேட்கக் கூடாத கேள்வி என்று. இணைந்த காதலர்கள் என்னை ஞாபகம் வைத்திருப்பாயா ஒரு மாத லீவில் நான் போகும்போது என்று கேட்பது நாகரிகமான கேள்வியாக அவளுக்குத் தெரியவில்லை. அவர்கள் காதலர்கள் இல்லை.
கணவன் மனைவிதான். வெறும் உறவின் – உடல் உறவின் அடிப்படையில் மட்டுமல்ல.
உள்ளத்தின் உணர்ச்சி வேகத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்கையின் மர்மமான, விளங்கிக் கொள்ளவும் விளங்க முடியாததுமான உறவுகளில் ஒன்றிப் போன உறவு அவர்களுடையது.
கடந்த எட்டு வருடத் திருமண வாழ்வில் இதுவரை ஒரு நிமிடமும் அவர்கள் ஒருத்தரின் அணைப்பை இன்னொருத் தர் பெறும் கடமைக்காக மட்டும் உறவுக்காக என்று மட்டும் நினைக்காமல் அவர்கள் அணைக்கப்படவும் அன்பால் இணைக்கப் படவும் என்று வாழ்க்கையை நிர்ணயித்துக் கொண்டவர்கள். அவனின் கேள்வி அவளைத் துக்கப்படுத்த வில்லை.
சாதாரண கேள்வி தர்ம சங்கடமான நேரங்களில் தன்னையறியாமல் கேட்கப்பட்டால் அதையுணர்ந்து கொண்டவள் மன்னிக்காவிட்டால்…
அவள் மெல்ல எழுந்தாள்.
கொஞ்ச நேரம் கணவனையுற்றுப் பார்த்தாள். இருவர் கண்களும் ஒரு நிமிடம் ஒருத்தரின் இருதயத்தை இன்னொருத்தர் அளவெடுப்பது போல் பார்த்துக் கொண்டன.
அவள் கண்கள் கலங்கின.
“ஐ லவ் யூ டார்லிங். யூ நோ ஐ லவ் யூ”. அவள் பிடியில் ஒரு வெறி. குரலில் ஒரு கலக்கம். அவன் அப்படிக் கேட்டது அவளை எப்படித் தாக்கியிருக்கிறது என்று தெரிந்தது.
அவளை அணைத்தான்.
மன்னித்து விடு என் கேள்விக்கு என்று மனம் விட்டு சொல்லாமல் இதழ் பதித்துச் சொன்னான். ஒரு மாதம் பிரிந்திருக்கப் போகிறோம் என்ற உணர்ச்சி ஏதோ ஒரு வருடம் பிரிந்திருக்கப் போகிறோம் என்ற உணர்ச்சியை உண்டாக்கியதோ தெரியாது. அது விடியாத இரவாக இருக்க வேண்டும், முடியாத அணைப்பாக இருக்க வேண்டும் போல் இருந்தது.
“மேக் லவ் ரு மீ டார்லிங்” அவள் கணவனைத் தடவினாள்.
ஒருமாதம். ஒரே ஒரு மாதம். ஏன் இந்தத் துன்பம்? அவனுக்கு விளங்கவில்லை.
இனி நடக்கப் போகும் சம்பவங்களின் ஏதும் முன்னறிவிப்பு அவனுக்கு கனவில் என்றாலும் தெரிந்திருந்தால், அவள் அப்படி மனம் விட்டு நடப்பது இதுதான் கடைசித்தடவை என்று தெரிந்திருக்கும்.
அவள் மார்பகங்கள் உணர்ச்சியால் விறைத்து அவனில் உராய்ந்தன.
இன்றுதான் கல்யாணம் முடித்த – வாழ்வின் மர்மமான இனிமையை முதல் முதல் அனுபவிக்கப் போகும் வெறியின் தவிப்பு அவள் குரலில்.
“மரியன்'” அவனுக்கு மனைவியின் பெயரைத் தவிர ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.
இயற்கையின் பரிணாம சிருஷ்டியின் இரு உயிர்த் துடிப்பின் உணர்ச்சியின் சங்கமம் அன்றிரவு தெள்ளிய நிலவோடு தென்றல் கலந்த இனிமையாக – மலரோடு வண்டிணைந்த வடிவத்தின் நிழலாக அவர்கள் காதல் கனிந்தது.
எயார்போட்டுக்குப் போவதாக நினைத்து எழும்புவதற்கு வைத்த அலாம் மணிக்கூடு விடிய ஐந்து மணிக்கு அடித்தது.
கணவனின் மார்பில் படுத்தபடி அவள் எட்டி மணிக் கூட்டின் லாமை ஓவ் பண்ணினாள். மணிக்கூடு போட்ட சத்தத்தில் பக்கத்து அறையில் படுத்திருந்த குழந்தை ‘மம்மி’ சொல்லி அழுவது கேட்டது.
தகப்பன் தான் எழ முதல் விட்டு விட்டுப் போய் விட்டாரா என்ற பயம் குழந்தை மீராவின் குரலில் சேட்டது.
பரமநாதன் எழுந்துபோய் மகளைத் தூக்கிக் கொண்டான். தகப்பனின் முக அமைப்பு. ஆனால் தாயின் தலை மயிர், பொன்னிறத் தலை, பூனைக்கண்கள். மீரா தகப்பனை அணைத்துக் கொண்டு கேட்டாள். “வை கான்ட் ஐ கம் வித் யூ”. தகப்பன் பதில் சொல்லாமல் குழந்தையுடன் கீழே வந்தான். மீரா இப்படிக் கேட்கத் தொடங்கி இரண்டு கிழமைகளாகத் தகப்பன் ஒரே மறுமொழியைச் சொல்லி அலுத்து விட்டது.
அவனுடைய தகப்பனுக்குச் சுகமில்லை என்று கடிதம் வந்திருக்கிறது. தகப்பனுக்குப் பிடிக்காமல் ஆங்கிலேயப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டவன் அவர் சுகமில்லாமல் இருக்கும் போது அவருக்குப் பிடிக்காத மருமகளுடன் போய் நிற்கத் தயாராயில்லை. தகப்பனுக்குக் சுகமில்லை என்று தெரிய முதலே அவன் விடுமுறைக்குப் போக ஒழுங்கு செய்திருந்தான்.
ஏதோ சொல்லி வைத்தாற்போல் போன கிழமை கடிதம் வந்தது தங்கை பானுமதியிடமிருந்து தகப்பனுக்குச் சுகமில்லை என்று.
சொல்லாமல் கொள்ளாமல் போய்த் தகப்பனுக்கு முன்னால் நிற்க நினைத்தவன் இப்போது எப்போது எந்த விமானத்தில் வருகிறேன் என்று எழுதினான். தான் எப்போதோ டிக்கட் புக் பண்ணி இந்த மாதம் வரப் போகிறேன் என்று எழுதியிருந்தால் நம்பி இருப்பார்களா?
செத்த வீட்டுக்கு வர மட்டும் பாசம் வந்ததாக்கும் என்று ஊரார் சொல்வார்கள் என்று பயந்து அவன் தான் எப்போதோ வரப் பிளான் பண்ணியதாகச் சொல்வதாகச் சொல்ல மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?
பானுமதியிடமிருந்து கடிதம் வரமுதலே தகப்பனுக்கு தாய்க்கு, தமக்கை குடும்பம் தங்கைகளுக்கு என்று சாமான்கள் வாங்கிச் சேர்த்தாயிற்று. தகப்பனுக்குச் சுகமில்லை ஆஸ்பத்திரியில் அடமிட் பண்ணியாச்சு என்று பானுமதியிடமிருந்து கடிதம் வந்ததும் மரியன் படபடவென்று எல்லாம் பார்ஸல் கட்டி விட்டாள்.
அடுத்த கிழமை போவதாக எடுத்த லீவை இந்தக் கிழமையிலிருந்து எடுப்பதாக ஆயத்தங்கள் செய்தாயிற்று.
பிளேன் டிக்கட்டை மாற்ற ஒரு கிழமை கஷ்டப்பட வேண்டியிருந்தது.
ஏரோபுளொட் – ரஷ்ய விமான சேவை நினைத்த அளவு சீராயில்லை என்பது அவனுக்கு உடனடியாகத் தெரியவில்லை.
காலை பதினொரு மணிக்குப் பிளேன் எடுக்க வேண்டும். மொஸ்கோவில் இறங்கி இன்னொரு பிளேன் மாறி கொழும்புக்கு நாளை பன்னிரண்டு மணிக்குப் போகலாம். தமக்கையும் மைத்துனரும் கொழும்பில் தான் இருக்கிறார்கள். தன்னுடைய பிரயாண விபரம் பற்றி எழுதியிருந்தான்.
காரில் சாமான்களை ஏற்றத் தொடங்கும் போதோ மனம் இரு விதத்தில் அடித்துக் கொண்டது.
ஒன்பது, பத்து வருடங்களாகப் பிரிந்திருந்த தன் இனிய குடும்பத்தைப் பார்க்கப் போகிறேன் என்ற படபடப்பு இனிமைகலந்த – பாசம் கலந்த படபடப்பு.
அடுத்தது பத்து வருடங்களாகத் தன்னுடன் உயிரும் உடலும் உணர்வும் காதலுமாக இனைந்திருந்த தன் அருமை மனைவி மரியனைப் பிரிகிற தவிப்பு.
அருமை, தன் ஆசை மகள் மீராவை ஒரு மாதமாகத் தூக்காமல் அவளுடன் சிரிக்காமல்…
அவர்களையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமே என்று தோன்றியது அவனுக்கு.
இவ்வளவு காலமும் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாத தகப்பன் இனி அறுத்துக்கொள்ள என்ன இருக்கிறது?
மனைவியையும் மகளையும் ஆற்றாமையுடன் பார்த்தான்.
மரியனின் முகம் எந்த உணர்ச்சிகளையும் காட்டிக் கொள்ளவில்லை.
மகள் மீரா காருக்குப் பக்கத்தில் குவிந்து கிடக்கும் பனிக்கட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். மாசி மாதமாகிறது. வின்ரர் முடியப்போகிறது. ஆனால் இன்னும் ஸ்னோ கொட்டிக் கொண்டிருக்கிறது. “இங்கிலிஸ்காரர்களுக்கும் அவர்களின் நாட்டு சுவாத்திய நிலைக்கும் பெரிய ஒற்றுமை இருக்கிறது” இப்படி பரமநாதனின் சிநேகிதன் முத்துலிங்கம் அடிக்கடி சொல்வான்.
எப்போது குளிரும், எப்போது வெயிலடிக்கும் என்று நம்பி வெளியில் போகமுடியாது.
எப்போது சிரிப்பார்கள் எப்போது கழுத்தறுப்பார்கள் என்று வெள்ளைக்காரரை நம்பாத மாதிரித்தான் அவர்களின் சுவாத்தியமும்.
காலை ஆறுமணி. இன்னும் இருட்டாக இருக்கிறது. அவர்கள் இருக்கும் சென் அலபேன்சிலிருந்து லண்டனுக்குள் ஊடறுத்து ஹீத்ரோ எயார்யோட்டுக்குப் போக சாதாரண நாளிலேயே இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கும்.
இந்த ஸ்னோவில் எவ்வளவு நேரமெடுக்குமோ தெரியாது.
நகரமெல்லாம் இன்னும் உறங்கிக் கிடந்தது. ஒன்றிரண்டு கார்களின் வெளிச்சங்கள் பனியில் முனகிக்கொண்டு முக்கி முக்கி ஊர்ந்து கொண்டிருந்தன.
“எப்படிப் போய்ச் சேரப்போகிறோமோ தெரியாது” வானத்தை அண்ணார்ந்தபடி சொன்னான் பரமநாதன். உலகத்தில் வெண்மை என்ற நிறத்தைத் தவிர ஒன்றுமே இல்லாததுபோல் இருந்தது.
செடி கொடிகள், மரங்கள், வீடுகள் எல்லாம் பனியில் மூழ்கிக் கிடந்தன.
கார் நகரத் தொடங்கியது.
நோர்த் லண்டனின் உயர்த்த கட்டடங்கள் பனிமூடிய சிகரங்களை ஞாபகமூட்டின. காரை ஸ்ராட் பண்ணவும் சேர்ச்சின் மணி டாண் டாண் என்று அடித்தது, மௌனமாக அருகில் இருக்கும் மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.
கணவன் தன்னைப் பார்ப்பது தெரிந்தும் பேசாமல் இருந்தாள் மரியன். வின்ரர் ஓவர் கோட்டுக்குள் அவளின் அழகிய உடம்பு மறைந்து விட்டதுபோல், வழிந்துகொண்டிருக்கும் பனியுடன் சேர்ந்து உணர்ச்சிகளும் மரத்து விட்டனவா? குழந்தை மீரா கார்க் கதவுக்குள்ளால் கொட்டும் ஸ்னோவின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள். “ஐ வில் போன் யூ சூண் அஸ் பொஸிபிள்” அவன் சொன்னான்.
அவள் தலையாட்டினாள்.
“ஐ ஹோப் யுவர் பாதர் ஓஸ் நொட் தற் இல்” விடிந்தபின் முதல் தரமாக கணவனை ஏறிட்டுப் பார்த்துச் சொன்னாள் அவள்.
நடுச்சாமத்தில் காதலின் வடிவமாகத் தெரிந்த மரியனும் இப்போது கணவனின் குடும்பத்தில் கவனத்துடன் கதைக்கும் மரியனும், இரு வேறு பெண்களாகத் தெரிந்தனர் அவனுக்கு.
கணவனின் முகத்தில் ஓடும் சிந்தனையின் நிழல்கள் அவளுக்கு பட்டும் படாமலும் தெரிந்தன. மெல்லிய இளநகை படர்ந்தது முகத்தில். குறும்புத்தனம் கண்களில் தவழ்ந்தது.
“வை ஆர் யு ஸ்மைலிங்?” அவன் பார்வையில் பார்வையை ஒட்டியபடி கேட்டான்.
“ஹவ் டூ யூ நோ தற் ஐயாம் ஸ்மைலிங்?”
அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“ஐ நோ யு ரொப் ரு பொட்டம், இன்சைட் அவுட்”… அவன் குறும்பாகச் சொன்னான். கொஞ்சநேரம் பேசாமல் இருந்துவிட்டு அவள் சொன்னாள்: “கம் ஹோம் சூண். வீ லவ் யூ. வீ வில் மிஸ் யூ” கண் கலங்கினாள் அவள்.
குழந்தை மீரா தாய் தகப்பன் சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல் காருக்குள்ளால் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போதுதான் மீராவுக்கு ஐந்து வயதாகிறது.
தகப்பனின் பிரிவின் துன்பம் தெரியாத வயது. தானும் வரப்போகிறேன் என்று துள்ளிக் கொண்டிருந்தாள். தாத்தாவைப் பார்த்து விட்டு வரும்போது யானைக்குட்டி ஒன்று கொண்டு வருகிறேன் என்று தகப்பன் சொன்னதை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறாள் குழந்தை.
கார் ஆமை வேகத்தில் லண்டன் தெருக்களில் தவழ்ந்து கொண்டிருந்தது.
கார்களின் வரிசை மைல்க் கணக்கில் நீண்டு தெரிந்தது. மக்கள் முகம் மட்டும் பனியில் விறைக்க உடம்பை கம்பளிக் கோட்டுகளுக்குள்ளால் மூடிக் கொண்டு தெரிந்தார்கள்.
வான் முட்டும் மாளிக்ஷைன் மங்கிய நிலவொளியில் அறை குறைப் பூதங்களாகத் தெரிந்தன.
கார்கள் நோர்த் சேக்குலர் ரோட்டில் திரும்பி ஹீத்ரோ விமான நிலையத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தன.
வழி நிறையப் பனிக்கட்டிகள். கார்ச் சில்லுகளில் நசிந்து நீராகிக் குழைந்து தெரிந்தது.
பனி பெய்யும் போது பார்க்க அழகுதான். உருகும் போது உருகிக் குப்பைகளுடன் கலந்து தெரியும் போது பார்க்க அவலட்சணமாக இருக்கும்.
அவர்கள் பயந்து வந்ததுபோல் விமானம் போய் விடவில்லை. பனியும் புகாரும் காரணமாக இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் லேட்.
பரமநாதனின் மனம் எங்கேயெல்லாமோ போய்க் கொண்டிருந்தது. ஒன்றையும் உருப்படியாகக் கதைக்கும் மனநிலையில் இல்லை.
கதைக்க வேண்டிய விடயங்கள் எல்லாம் கதைத்தாகி விட்டது.
சொல்ல வேண்டிய விடயமெல்லாம் சொல்லியாகி விட்டது. என்ன சொல்ல வேண்டும் அப்படி?
ஒரு மாதம் தான் வீட்டில் இல்லாமல் இருக்கும் போது என்னெல்லாம் செய்ய வேண்டும்? மரியனுக்குச் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.
அவள் படித்தவள்.
தன்னையும் தன் குடும்பத்தையும் கவனிக்கத் தெரியும். அவர்கள் கதைத்ததெல்லாம் பரமநாதனின் விடயத்தைப் பற்றி. அவன் குடும்பத்தைப் பற்றி. அவனின் தங்கைகளின் எதிர்காலத்தைப் பற்றி. பரமநாதனின் தங்கை கௌரிக்கு வயது கிட்டத்தட்ட இருபத்தாறாகப் போகிறது.
நல்ல மாப்பிள்ளைக்கு விலை வைத்துக் கொண்டு தேடுகிறார்கள் என்று பெரியக்கா எழுதியிருந்தா.
கடைசித் தங்கை பானுமதிக்கு இருபத்தியொரு வயதாகிறது. எலிவால்ப் பின்னலுடன் எயார்போட்டுக்கு வந்த பானுமதி இப்ப இருபத்தொரு வயது இளம் பெட்டையாக எப்படி இருப்பாள் என்று மனம் எண்ணியது. எல்லாம் கனவு போல் இருக்கிறது.
உயிருக்குயிராய் நேசித்த குடும்பத்தைப் பார்க்காமல் இருந்தது பத்து வருடங்களாக என்பது நம்ப முடியாமல் இருக்கிறது.
குடும்பத்தை மட்டுமா?
நினைவில் கொண்டு வரமுடியாத – கொண்டுவர விரும்பாத ஒன்றிரண்டு சம்பவங்கள் தாய் நாட்டுக்குப் போகும் பிரயாணத்தின் கடைசிக் கட்டத்தில் கட்டை மீறிப்பாயும் வெள்ளம் போல் நினைவில் புரண்டன.
சில சம்பவங்களா?
நெருஞ்சி முள் குத்துவதுபோல் நெஞ்சை வலிக்கப் பண்ணும் உருக்கமான சில சம்பவங்களால் தான் அவன் வாழ்க்கை எதிர்பாராத முனையில் திரும்பி விட்டது.
சம்பவங்களுக்கு அடிப்படையான அவள், வெறும், ‘அவளாகவா’ அவள் பெயர் போய் விட்டது? மனம் இனிக்க வாய் இனிக்க, உணர்ச்சிகளின் உருவமாக அவள் பெயரைச் சொல்லிய காலங்கள் கற்பனையாகவா போய் விட்டது?
என் உடலில் உயிர் உள்ளவரை உன் பெயர் சொல்லிச் சிவிப்பேன் என்று எழுதிய அவன் கடிதத்தை யாரும் அவன் கையில் கொடுத்தாலும் நம்புவானா தன்னுடையதென்று.
அவளாக – வெறும் அவளாகவா போய்விட்டது அவள் நினைவு?
உலகத்தில் பல தரப்பட்ட மனிதர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே நோத்தில் போக வெளிக்கிட்ட மாதிரி இருந்தது எயார்போட் .
போவோர். வருவோர்.
போவோரை வழியனுப்ப வந்தோர்.
வருபவரை வரவேற்க வந்தோர்.
ஒரே சனக் கூட்டம்.
சேர்வுகளுக்கும் பிரிவுகளுக்கும் என்று தங்களைப் பிரித்துக் கொண்ட மனித வர்க்கம்.
மரியனும் மீராவும் கஸ்ரம் ஒவ்வீசரைத் தாண்டிப் போகும் பரமநாதனைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். நினையாப் பிரகாரமாய் தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் ஒரு நீண்ட இடைவெளி உண்டாகிப் போனதான ஒரு பிரமை!
அவன் திரும்பிப் பார்த்தான். அவள் உருவம் மங்கலாகத் தெரிந்தது.
அவனின் கண்கள் கலங்கியிருக்க வேண்டும்.
அவளின் தோற்றம் வித்தியாசமாகத் தெரிந்தது.
அதிகாலையில் அவள் அணைத்துக் கொண்டதை நினைத்துப் பார்த்தான்.
அது கனவு போல் ஞாபகம் வந்தது.
மரியன் யாரோ போல் நடந்து கொண்டது போல் இருந்தது. நீண்ட பாதை தெரிந்தது.
அதன் முடிவில் திரும்பி நடந்தால் ரேர்மினல் 2ன் பகுதி வருகிறது.
திரும்பிப் பார்த்தான். மனைவியும் குழந்தையும் கை காட்டினார்கள்.
அத்தியாயம் – 2
புகார் கொஞ்சம் மறைந்து வானம் பளிச் றிருந்தது விமானம் புறப்படும் பொழுது.
விமானத்தில் அதிகம் இலங்கையர்கள் இல்லை. ஒரு சிங்களப் பெண் குழந்தையுடன் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தாள்.
அழும் குழந்தையை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தாள். விமானம் புறப்பட்ட சத்தத்தில் குழந்தை வீரிட்டு அழுதது.
குழந்தைகளுடன் தனியாகப் பிரயாணம் செய்வதின் சிரமம் தெரியாமல் இருந்திருக்கலாம்.
பரமநாதனுக்கு அருகில் ஒரு இளம் ஜோடி.
விமானத்தில் யாரும் இருப்பதைக் கவனிக்காமல் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
கவனிக்காத மாதிரி பேப்பர் ஏதாவது படிக்க யோசித்தான்.
விமானப் பெண்மணி இங்கிலிசில் உள்ள மொஸ்கோ செய்திப் பத்திரிகையைக் கொடுத்தாள்.
மொஸ்கோ செய்தியை விட அமெரிக்கா, இங்கிலாந்து செய்திகள் அதிகம்.
மேலை நாட்டுப் பத்திரிகைகள் ரஷ்யாவைத் திட்டி எழுதிக் கொண்டிருக்கின்றன. ரஷ்யப் பத்திரிகைகள் மேலை நாட்டைத் திட்டுகின்றன.
ஏட்டிக்குப் போட்டி!
எங்கு போய்முடியப் போகிறது இவர்களின் போராட்டம்? “எக்ஸ்கியூஸ் மீ'” குரல் கேட்டுத் திரும்பினான்.
அவள் மெல்லமாக புன்முறுவல் செய்தாள். ஒரு ஆங்கிலேயப் பெண்! கேள்விக் குறியுடன் அவன் அவளைப் பார்த்தான்.
மூக்குக் கண்ணாடியுடன் இருந்த ஆங்கிலேயப் பெண்.
“இவ் யூ வோண்ட் எனி நியூஸ் பேப்பர் ஓ மகசீன்…” என்று இழுத்தாள்.
“ஓ தாங்க யு வெரிமச்” அவன் நன்றியுடன் அவள் கொடுத்தவைகளைப் பின்னால் திரும்பி வாங்கிக் கொண்டான்.
கொஞ்ச நேரம் தட்டிப் பார்க்கத் தெரிந்தது அவை எப்படியான பத்திரிகைகள் என்று.
பெண்கள் உரிமைகள், உலகத்துப் பெண்களின் பிரச்சினை, வளர்ச்சியடையாத நாடுகளில் பெண்களின் வாழ்க்கை முறை. மதமும் பெண்களும், கல்வியும் பெண்களும், பெண்களைப் பற்றியே எல்லாம்.
பரமநாதன் பின்னால் திரும்பி புன்முறுவலும் கேட்டான் “வுமன் லிபரேஷனா? அல்லது பெயினிஷ்டா” அவள் இன்னொதரம் மூக்குக் கண்ணாடியைக் சுழட்டிக் கொண்டு தோள்களை யுலுக்கிக் கொண்டு சொன்னாள். “நன் ஒவ் தெம்” அவன் கருத்துடன் சிரித்தான் அவள் சொன்னதைக் கேட்டு.
அவளைப் பிடித்திருந்தது. கதைக்கவேண்டும் போல் இருந்தது.
பின்னால் திரும்பித் திரும்பித் கதைக்கப் பக்கத்தில் கொஞ்சிக் கொண்டிருக்கும் ஜோடியில் இடிபட வேண்டிக் கிடந்தது.
எங்கு போகிறாள் இந்தப் புத்தகமெல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு என்று கேட்க ஆசையாக இருந்தது.
ஏன் தனக்கு, வேணுமென்று இந்த புத்தகமெல்லாம் தந்தாள் என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. பக்கத்தில் தூங்கி வழிந்து கொண்டிருக்கும் கிழவனுக்குக் கொடுத்தால் என்ன நடந்திருக்கும்?
தனக்குத் தானே நினைத்துக் கொண்டான்.
விமானத்தில் சாப்பாடு வந்தது.
ருசியான ரஷ்யன் வைனும் விலையுயர்ந்த சாப்பாடான ‘கவியாருடன்’ சேர்ந்த உணவும்.
“இன்றுதான் முதல்த்தரம் கவியாரைச் சுவைக்கிறேன்” அவள் அவன் காதுகளில் கிசு கிசுப்பது கேட்டது. அவளுக்கு மறுமொழி சொல்லத் திரும்பிப் பக்கத்து ஜோடியை இடிக்காமல் பார்த்துக் கொள்வது சிரமமாக இருந்தது.
லண்டனிலிருந்து மொஸ்கோ போகும் அந்த விமானத்தில் உள்ள பணிப்பெண்கள் சுமாரான ஆங்கிலம் கதைத்தார்கள். விழுந்து விழுந்து உபசரித்தார்கள் பிரயாணிகளை. அந்த ஆரவாரத்திலிருந்து விடுபட முதல் மொஸ்கோ வந்து விட்டது.
உயிரைச் சிலிர்க்க வைக்கும் குளிர். எமனஸ் இருபது சென்ரிக்கிரேடில் பனிபெய்து து குளிரடிப்பதாக விமானத்தில் அறிவித்தது ஞாபகம் வந்தது.
‘நல்ல காலம் வின்ரர் கோட்டுடன் வந்தது. இல்லை என்றால் மொஸ்கோக் குளிரில் விறைத்துச் செத்திருக்க வேண்டும்.’
கொழும்புக்கு இன்னும் இரண்டு மணித்தியாலத்தில் விமானம் புறப்படும்.
அவன் பிரயாண சேவை அறிவிப்புப் பலகையைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
“ஹலோ!” குரல் கேட்டுத் திரும்பினான். மூக்குக் கண்ணாடியுடன், அவள் நின்று கொண்டிருந்தாள். அவளை ‘முழுக்கக்’ கண்டதும் இன்னும் அவனது ஆவல் அதிகமாக இருந்தது, ஏன் அந்தப் புத்தகங்களைத் தந்தாய் என்று கேட்க.
அவளை மேலும் கீழும் பார்த்தபடி “ஹலோ” என்றான்.
“எலிஸபெத்…” அவள் முடிக்கவில்லை.
“எலிஸபெத் ரெய்லர்?….” குறும்பாகக் கேட்டான்.
“எலிஸபெத் பேக்கர்” அவள் சிரித்தபடி சொன்னாள். மொஸ்கோ விமான நிலையம் வெளிநாட்டாரால் நிரம்பிக் கிடந்தது.
இன்ரநஷனல் விமான நிலையம் போல் ஆரவாரம் இல்லை. ஒரு மூலையில் ரஷ்யர்கள் கூட்டமாக இருந்து குடித்துக் கும்மாளம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்க்க இருவிதத்தில் ஆச்சரியமாக இருந்தது. ஒன்று. லண்டன் விமான நிலையத்தில் இப்படி ஒரு கூட்டத்தைக் காண முடியாது; குடிக்கும் கூட்டம். அடுத்து, கொம்யூனிஸ்ட் நாட்டின் கொடுமையான வாழ்க்கைமுறை பற்றி மேலைநாட்டுப் பத்திரிகைகள் முதலைக்கண்ணீர் வடிக்கின்றன. இங்கு பார்த்தால் சாதாரண சனங்கள் பகிரங்கமாக இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்.
ஆனால், திரும்பிய இடங்கள் எல்லாம் யூனிபோம் போட்ட உத்தியோகத்தர்கள் நின்றார்கள். பெரும்பாலானவர்கள் துப்பாக்கியுடன் காட்சியளித்தார்கள். லண்டன் தெருக்களில் இதுவரையும் எந்த உத்தியோகத்தரையும் எந்த ஆயுதத்துடனும் காணாதபடியால் இவர்களைப் பிரயாணிகள் பலர் வினோதமாகப் பார்த்தார்கள்.
எலிஸபெத்தும் பரமநாதனும் மெல்லமாகப் போய் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தார்கள்.
தூரத்தில் அந்தப் பெண் சிங்களத்தில் தன் குழந்தைக்கு ஏதோ சொல்லித் தேற்றிக் கொண்டிருந்தாள்
“ஆர் யூ ஏ சிலனீஸ்?”
லிஸா கேட்டாள்.
“ஹவ் டூ யூ நோ தற் ஐயாம் ஏ சிலனீஸ்?” அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
அவள் களுக்கென்று சிரித்தாள்.
“அறிவிப்புப் பலகையில் கொழும்பு விமான சேவையின் நேரத்தைப் பார்த்ததைக் கவனித்தேன்” என்றாள்.
“நீங்கள் எங்கே போகிறீர்கள்?” பரமநாதன் அவளைப் பார்த்துக் கேட்டான்.
“இந்தியாவுக்கு. இந்தியப் பத்திரிகையாளரின் அழைப்பில் போகிறேன்”. லிஸா அடக்கமாகச் சொன்னாள்.
“றிப்போட்டரா?” தனிப்பட்ட விடயங்களைக் கேட்பது ஆங்கிலேயருக்குப் பிடிக்காது. ஆனால் அவள் தன்னைப்பற்றிக் கேட்டதால் அவளைப்பற்றிக் கேட்பது பிழையில்லை என்று பட்டது.
“றிப்போட்டர் இல்லை. எழுத்தாளி,” என்றாள் சிரித்தபடி.
அப்போதுதான் ஞாபகம் வந்தது அவள் தந்த புத்தகங்களில், பேப்பரில் அடிக்கடி ‘எலிஸபெத் பேக்கர்’ என்ற பெயர் இருந்தது.
அவன் இன்னொருதரம் அவளை ஏறிட்டுப் பார்த்தான். “என்ன பார்க்கிறீர்கள்?” அவள் அவனின் நேரடிப் பார்வையில் தர்மசங்கடப்பட்டுக் கேட்டாள்.
“பெண் எழுத்தாளர்களை நேரில் கண்டதில்லை இதுவரைக்கும்.” அவனின் குரலில் குத்தல் இருக்கவேண்டும். அவள் பட்டென்று சொன்னாள்.
“பெண் எழுத்தாளர்கள் என்றால் என்ன? கொம்பொன்றும் இல்லை” அவளின் குரலின் அழுத்தம் அவனுக்கு இன்னும் குறும்புத்தனத்தை உண்டாக்கியது. “அதிலும் பெண் உரிமையைப் பற்றி போர் புரியும் எழுத்தாளர்களை நினைத்தும் பார்க்கவில்லை”
அவளுக்குப் பிடிக்காமல் இருந்திருக்க வேண்டும். மௌனமாக இருந்தாள்.
சந்தித்துக் கொஞ்ச நேரத்திற்குள் – முன் பின் அதிகம் தெரிந்து கொள்ள முதல் அவளிடம் விளையாட்டுத்தனமாகக் கதைத்தது அநாகரிகமாகப் பட்டது அவனுக்கு.
கொஞ்ச நேரத்தின் பின் “சொறி” என்றான்.
அவள் ஏறிட்டுப்பார்க்காமல் “தட்ஸ் ஓல்றைட்” என்று விட்டுப் புத்தகம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
விமானம் புறப்படும்பொழுது மனைவியையும் குழந்தையையும் விட்டுப் பிரிவதாக இருந்த துக்கம் மறந்து, வீட்டு நினைவு போய், தாய்நாட்டுக்குப்போய்த் தகப்பனின் சுகவீனம் பார்க்கும் யோசனைகளும் மறந்து, லிஸாவுடன் குறும்புத்தனமாகக் கதைத்தது அவனுக்கே வினோதமாக இருந்தது. நினைவுகளில் நெளியும் சில துன்பமான யோசனைகளை மறக்கத் தன்னையறியாமல் செயற்கையாகப் பழகுவதாகப் பட்டது அவனுக்கு.
“பகல் நேரமாய் இருந்தால் ‘றண்வே’யை என்றாலும் பார்க்கலாம்”.
லிஸா தானாகக் கதை தொடங்கினாள். கொஞ்ச நேரத்துக்கு முதல் எடுத்தெறிந்து கதைத்த தொனி குரலில் இல்லை.
தூரத்தில் சில சுறுப்பர்கள் வருவது தெரிந்தது. வேறு விமானங்கள் வந்து இறங்கியிருக்கலாம். இலங்கையர்கள் கொழும்பு விமானம் எடுக்க இந்த ரேமினலுக்கு வந்து கொண்டிருக்கலாம்.
“மொஸ்கோவைப் பார்க்க எனக்கு ஆசை” லிஸா பரமநாதன் மறுமொழி சொல்லாததையும் பொருட்படுத்தாமல் சொன்னாள். “நான் நினைக்கவில்லை கொம்யூனிஸ்ட் நாடுகளுக்கு உல்லாசப் பயணம் போவது அவ்வளவான சுகம் என்று.” பரமநாதன் அவளைப் பார்க்காமல் சொன்னான்.
தேவையில்லாமல் அவளைக் கோபப்படப் பண்ணியதை நினைத்துத் தர்மசங்கடப்பட்டான்.
தூரத்தில் வந்தவர்கள் இவர்களைக் கடந்து சென்று போய்க் கதிரைகளில் உட்கார்ந்தார்கள்.
ஒன்றிரண்டு பேர் இவர்களை உற்றுப் பார்த்துவிட்டுப் போனார்கள். “உங்கள் நாட்டாராக இருக்கலாம்.” எலிஸபெத் முணுமுணுத்தாள்.
“கறுப்பர் எல்லாம் என் நாட்டாரா?” என்று கேட்டவனின் பார்வையில், தூரத்தில் அந்தச் சிங்களப் பெண்மணி யாரிடமோ ஏதோ கேட்டது பட்டது.
ரஷ்யன் யாரும் ஆங்கிலம் தெரிந்திருப்பதாகத் தெரிய வில்லை.
ஹீத்ரோ எயார்போட்டில் இங்கிலிஸ்காரருக்கு ரஷ்ய மொழி தெரியுமா? அதுபோலத்தான். பரமநாதனும் எலிஸ்பெத்தும் என்னவும் தேவையா என்று கேட்டார்கள்.
குழந்தையின் நப்சின் மாற்ற இடம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அந்தப் பெண்மணி சொன்னாள். எலிஸபெத் அந்தப் பெண்மணியைக் கூட்டிக்கொண்டு ரொய்லெற் இருக்கும் பக்கமாகப் போனாள்.
வந்திருந்த இலங்கையர்களில் பார்வை பரமநாதனின் பட்டது. அநேகமானோர் யாழ்ப்பாணத்தார் போல் பட்டது.
நாட்டில் இருக்கமுடியாத கொடுமையால் கடலோடிப் பிழைக்கும் எங்களின் நிலை அப்பட்டமாகத் தெரிந்தது.
விஸா ஏதோ முணுமுணுத்துக்கொண்டு வருவது தெரிந்தது.
“என்ன மந்திரம் நடக்கிறது?” பரமநாதன் கேட்டான்.
“அமெரிக்காவுக்குப் போட்டியாக ஆயுதம் உண்டாக்கும் காசில் உருப்படியாக கொஞ்சம் ரொய்லெற் கட்டி வைக்கலாம் இவர்கள்”.
லிஸா எரிச்சலுடன் சொன்னாள்.
“ரஷ்யருக்கெதிராக ரொக்கட் செய்யும் பணத்தில், அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கு வேலை கொடுக்கச் செலவளிக்கலாம்.”
பரமநாதனின் குத்தலான மறுமொழி லிஸாவை நிமிர்ந்து பார்க்கப்பண்ணியது.
“சாதாரண மனிதர்களின். தன் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கவனிக்காமல் அடுத்த நாட்டானுடன் ஆயுதப்போட்டி போடுவது யாராயிருந்தாலும் அது பிழை என்பதுதான், என் அபிப்பிராயம்.” லிஸா விட்டுக் கொடுக்காமல் சொன்னாள்.
ஏன் இந்தப் பெண்ணுடன் தேவையில்லாமல் தர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று யோசித்தான் பரமநாதன்.
விமானம் புறப்படும் நேரம் ஆவதின் அறிகுறி தெரிந்தது. லிஸா தன் புத்தக மூட்டைகளுடன் முன்னால் போவது தெரிந்தது.
லண்டனில் தொடங்கி மொஸ்கோ வரை இடைவிடாமல் கொஞ்சிக் கொண்டிருந்த இளம் ஜோடியைக் கண்டதும் தூக்கிவாரிப் போட்டது பரமநாதனுக்கு. நேரம் நடுச் சாமத்துக்குமேல். விடாமல் கொஞ்சப் போகிறார்கள். எல்லோரும் தூங்கிவழியப் போகிறார்கள். அவர்கள் பக்கத்தில் இருந்து தன்னில் தூங்கிவழியப் போவதை, அவன் நினைத்துத் திடுக்கிட்டான்.
அவர்கள் பக்கத்தில் வந்து இருக்காத வண்ணம் இருப்பதற்காக விரைவாக நடந்து லிஸாவின் இருப்பிடத்துக்கருகில் உட்கார்ந்து கொண்டான்.
மூன்று இருப்பிடங்களில் ஒன்று காலியாக இருந்தது. லிஸா தன் புத்தக மூடையை வைத்தாள்.
அவனைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னாள், “பயப்படாதீர்கள் பெண்கள் சமத்துவம் பற்றி நான் ஒன்றும் பிரசங்கம் வைக்கமாட்டேன்”
“நேற்றெல்லாம் நித்திரையில்லை. நீங்கள் பிரசங்கம் வைத்தாலும் பரவாயில்லை. அது தாலாட்டாக இருக்கும் நான் தூங்கிவிடப்போகிறேன்”
இருவரும் சிரித்தார்கள்.
விமானம் ஊர்ந்து, நகர்ந்து. உயர்ந்து புறப்பட்டுக் கொண்டிருந்தது.
ஐன்னலுக்கு வெளியே இருட்டாக இருந்தது.
“பக்கத்தில் இருந்து பார்க்கத்தான் கொடுத்து வைக்க வில்லை. பகலில் என்றாலும் மொஸ்கோவைப் பிளேனுக்குள்ளால் என்றாலும் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கிறதா?” லிஸா தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
“ஏன் கிரெம்ளின் மாளிகையைப் பார்த்தே தீருவது என்று ஏதும் கங்கணமா?” அவன் கேட்க அவனைப் பார்த்துச் சொன்னாள். “தர்க்கம் போடுவது உங்கள் திட்டமானால் நான் எழும்பிப் போய்விடுகிறேன்.”
“அப்படி ஒன்றும் இல்லை. நான் தூங்கப் போகிறேன்.” அவன் கண்களை மூடிக்கொண்டான். லண்டனை விட்டுப் போகப் போக யாழ்ப்பாணத்தின் நினைவு மனதில் படம் போல் ஓடத்தொடங்குவது தெரிந்தது. அப்பாவுக்குச் சுகம் இல்லை. என்ன சுகம் இல்லை என்று பானுமதி எழுதவில்லை. எப்போதிருந்தோ இரத்த அழுத்த நோயுடன் போராடுகிறார் தகப்பன்.
‘அதனால் ஏதும் நடந்திருக்குமோ?’
நினைவு எங்கெல்லாமோ ஒடியது.
பத்துவருட இடைவெளி!
எப்படி இருப்பார்கள் ஊரில் உற்றாரும் உறவினரும்? பானுமதி படம் அனுப்பியிருந்தாள், நம்பமுடியாமல் வளர்ந்திருந்தாள். அம்மாவுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த கறுப்புத் தலைமயிரும் வெள்ளையடித்திருக்கும்.
அப்பாவுக்கு எப்போதோ பல் எல்லாம் போய்விட்டது. கண்கள் சரியாகத் தெரிவதில்லை என்று பானுமதி ஒருதரம் எழுதியிருந்தாள்.
தகப்பனுக்கும் அவனுக்கும் கடந்த எட்டுவருடமாக எந்தத் தொடர்பும் இல்லை.
மரியனின் சந்திப்பு – அதனால் அவளைக் கல்யாணம் முடிக்க வேண்டிய சந்தர்ப்பம் எல்லாம் வந்து மரியனைச் செய்யப் போகிறேன் என்று தகப்பனுக்கு எழுத…
‘என் விருப்பத்துக்கு எதிராகச் செய்ய நினைத்தவன் நான் இறக்கும் வரை என் முகத்தில் முழிக்கத் தேவையில்லை. எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளத் தேவையில்லை. எனக்கு ஒரு மகன் இல்லை என்று நினைத்துக் கொள்கிறேன்.’
என்று எழுதியிருந்தார்.
அந்த வெறுப்பைச் சீரணிப்பது வெறும் சிரமமாக இருந்தது. மரியனை என்றில்லை இலங்கையில் இருந்திருந்தாலும் தகப்பனுக்கும் மகனுக்கும் உள்ள உறவு இப்படித்தான் முடிந்திருக்கும்.
அவளுக்கும் தனக்கும் உள்ள தொடர்பு தெரிந்துதானே தந்திரமாகக் கப்பல் ஏற்றினார்.
அவள்!
‘கார்த்திகா’ எப்படியிருப்பாள்?
ஒருத்தரும் அவளைப் பற்றி எழுதவில்லை எட்டுவருடமாக. எப்படியிருப்பாள்?
கல்யாணமாகி இருக்குமா?
எத்தனை குழந்தைகள் இருக்கும்?
இப்போது முப்பத்திரண்டு வயது. முன்தலை நரைக்கத் தொடங்கியிருக்குமா?
என்னைக் கண்டால் எப்படி நடந்து கொள்வாள்? என்னுடன் ஒரு காலத்தில் யூனிவசிற்றியில் படித்தவர் என்று கணவனுக்கு அறிமுகம் செய்து வைப்பாளா? என் தகப்பனிடம் ரியூஷன் எடுத்தவர் என்று மட்டும் சொல்லித் தனக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லை என்பதைக் காட்டிக் கொள்வாளா?
கார்த்திகா;
மெல்லிய உடலும் மின்னலென ஆடும் பின்னலுமாக முதன் முதலில் சதாசிவம் மாஸ்டரின் வீட்டில் கண்ட அந்த உருவம்.
ஒரேயடியாக யூனிவசிற்றிக்குப் போய் ஊராருக்குத் தெரியாமல் ஒழிந்து மறைந்து ஒன்றாய்த் திரிந்த கார்த்திகா.
எப்படி இருப்பாள் இப்போது?
என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள்?
கனவிலும், உன்னைத் தவிர யாரையும் நினைக்க மாட்டேன் என்று தன்னைக் காதலித்தவன் லண்டனுக்கு வந்து ஒரு வருடத்துக்கிடையில் தன் பெயரை, நினைவை இழந்து போனான் என்று நினைத்து எவ்வளவு துடித்திருப்பாள்?
பத்து வருடங்களாக நிதானமாக யோசிக்காத, நிதானமாக இருந்து யோசிக்கப் பயந்த சில சம்பவங்கள் விமான ஒட்டத்தின் தூண்டலில் மனத்திரையில் படம் போட்டன்.
விமானத்தில் எல்லோரும் நித்திரை, கிட்டத்தட்ட, சிங்களப் பெண்மணியின் சிறு குழந்தை இருந்திருந்து விட்டுச் சிணுங்கிக் காட்டியது.
மிஸ் எலிஸபெத் பேக்கர் புத்தகத்தை விரித்தபடி தூங்கி வழிந்து கொண்டிருந்தாள்.
பின்னால் சரித்துப் படுக்கவைக்க வேண்டும் போல் இருந்தது, அவள் தூங்கி விழுவதைப் பார்க்க.
நித்திரையில் குழந்தைகளும் பெண்களும் வாடிய புஷ்ங்கள் போலவா இருப்பார்கள்?
மீராவின் குழந்தையழகை ஆசை தீர மணிக்கணக்காக ரசித்ததுண்டு.
‘இப்போது லண்டனில் என்ன நேரமாக இருக்கும்? பின்னேரம் ஐந்து மணியாக இருக்கலாம்.’
‘பனி படர்ந்த றோட்டுக்களில் ஊர்ந்து, தவழ்ந்துதான் கார் போய் இருக்கும்.’
‘இரண்டு மூன்று நாளாக மரியனுக்கு நல்ல நித்திரை இல்லை. கவனமாகக் காரை ஓட்டியிருப்பாளா?’
‘காரிலும் ஏதோ பிழையிருப்பதாகச் சொன்னாள். விடுமுறையால் வந்தவுடன் என்னவென்று பார்க்க வேண்டும்’.
நினைவுகள், லிஸா தோளில் சடாரென்று விழுந்த வேகத்தில் சிதறின.
அவள் நித்திரை குலையாமல் அவன் தோளில் படுத் திருந்தாள்.யாரோ தோளைத் தலையணையாக்கிய குற்றம் தெரியாமல் அவள் சுவாசம் நிதானமாக இருந்தது. விமானம் வெளிக்கிட்டவுடன் பெண்கள் உரிமையைப் பற்றிய புத்தகங்களைப் பின்னால் இருந்து கூப்பிட்டுத் தந்த லிஸாவும். இப்போது ஒரு ஆணின் தோளில் குழந்தை போல் தூங்கிவதையும் லிஸாவும் வேறு பெண்களாகப் பட்டார்கள்.
அவளின் கண்ணாடியற்ற முகம் களங்கமின்றி இருந்தது. நித்திரையில் மனைவியை ரசித்து முத்தமிட்டது வந்தது. நினைவு தொடரவில்லை. விமானம் ஒரு பயங்கரம் குலுக்கலுடன் கீழே போவது தெரிந்தது.
என்ன நடக்கிறது?
மொஸ்கோவிலிருந்து வெளிக்கிட்டு ரண்டு மணித்தியாலங்கள் கூட ஆகவில்லை இதற்குள் என்ன நடந்து விட்டது?
விமானக் குலுக்கலில் லிஸா திடுக்கிட்டு என்ன நடக்கிறது என்று கேட்டாள்?
“நான் என்ன பய்லெட்டா தெரிந்து கொள்ள? உன்னைப் போல பிரயாணி தானே! ஏனோ தெரியவில்லை. விமானம் கீழே இறங்குகிறது.”
அவன் எரிச்சலுடன் சொன்னான். என்ன நடக்கிறது என்று அறிவித்துத் தொலைத்தால் என்ன?
அவன் எரிச்சல் தெரிந்தோ என்னவோ கப்டனின் அறிவிப்புக் கேட்டது.
எந்த விசரன் ரஷ்யன் பாஷையில் சொல்வது? இங்கிலிஸ் தான் உலகறிந்த மொழி என்று தலைக்கனத்துடன் நினைத்திருந்த பரமநாதன் போன்றவர்கள், பரபரவென்று பார்வையை மாற்றிக் கொண்டார்கள்.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிரயாணம் மேற்கொண்டு நடக்காதென்றும், மேலதிகமான தகவல்கள் கிடைக்கும் வரை பிரயாணிகள் இறங்கிக் கொண்டிருக்கும் விமானத்தளத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும், அறிவிக்கப் பட்டதாம். அரைகுறையாகக் கேட்டது.
பரமநாதனுக்குச் சினம் வந்தது. ரஷ்யன் பிளைட் எடுத்த தன் முட்டாள் தனம் தலையில் பட்டது.
தகப்பன் மரணப் படுக்கையில் இருக்கிறார். இவன் மர்மமான பிரயாணம் செய்வா வந்தான்?
பி.ஓ.ஏ.சி. யில் போய் இருக்கலாம்.
எயார் சிங்கப்பூரில் போய் இருக்கலாம்.
சாதாரண விடுமுறை என்றால் பரவாயில்லை. தகப்பனைப் பார்க்கப் போவது இப்படி, இந்த லட்சணத்தில்!
பிரயாணிகள் குழப்பத்துடன் ஒருவரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர்.
லிஸா அரைகுறை நித்திரைக் குழப்பம் தெளிந்து புத்தக மூட்டையுடன் முணுமுணுத்தபடி வந்து கொண்டிருந்தாள். அரை குறை இருளான, பிரயாணிகள் தங்கும் மண்டபத்தில் எல்லோரும் போய்ச் சேர்ந்தனர்.
கொஞ்ச நேரத்தின் பின் விமானப் பணிப்பெண் வந்து சொன்னாள் சில காரணங்களால் ஈரான் நாட்டுக்கு மேலால் பறக்க முடியாதென்றும், வேறு நாடுகளிடம் பெர்மிஷன் எடுக்க முயற்சிப்பதாகவும் சொன்னாள்.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன் லண்டன் பேப்பர்களில் படித்தது ஞாபகம் வந்தது. டெஃரானிலிருந்து ரஷ்யத் தூதரக அதிகாரிகள் பலரைப் போகச் சொல்லி விட்டார்களாம். உளவு பார்த்த குற்றம் சாட்டி. அதன் பிரதிபலிப்பா இது?
“இவர்களின் உலக அரசியல் சண்டைக்குள் சாதாரண சனங்களா அகப்பட வேண்டும்?” பரமநாதன் வெடித்தான்.
“ஏகாதிபத்திய பலப் பரீட்சையில் எத்தனையோ லட்சம் மக்கள் உயிரை இழக்கப் போகிறார்கள். அதைப் பற்றி எப் போதாவது இப்படி வெடித்துக் கோபித்தீர்களா?” விஸா நிதானமாகக் கேட்டாள்.
பெண்கள் உரிமை மட்டுமல்ல உலகப் பிரச்சினைகளில் எல்லாம் தலையைப் போட்டு உடைத்துக் கொள்வதைத் தவிர, இவளுக்கு வேலை ஒன்றும் இல்லையா?
கேள்விக் குறியுடன் பார்த்தான் அவளை.
அறிவும், திறமையும், உறுதியும் பதிந்த லிஸாவின் முகத்தைப் பார்க்கக் கிண்டலாகச் சொல்ல வெளிக்கிட்ட சில சொற்கள், தொண்டைக்குள் சிக்கிக் கொண்டன. நாளைக்கு தாய்நாட்டுக்குப் போய்ச் சேரப் போகிறோம் என்ற உற்சாகத்துடன் பட்ட முகங்கள், இப்போது உயிரற்றுக் கிடந்தன.
மொஸ்கோவில் வந்து சேர்ந்த தமிழர்களில் ஒன்றிரண்டு பேர் பரமநாதனுடன் வந்து கதைத்தனர்.
சிலர் நோர்வே, சுவீடன், ஆபிரிக்க நாடான ஸம்பியா போன்றவற்றிலிருந்து வந்தனர்.
ஸம்பியாவில் படிப்பிப்பதாகச் சொன்ன ஒரு தமிழ்ப் பெண்மணி அளவுக்கு மீறிச் சாமான்களுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்.
தமிழ்ப் பெண்களின் குணம் எப்படி என்று அ திலிருந்து தெரிந்தது. எவ்வித்திலிருந்தாலும், எங்குதான் போனாலும் என்ன வாங்கிச் சேர்க்கலாம், மற்றவர்களுக்குச் சொல்லிப் புழுக என்பதுதான் எங்கள் பெண்களின் குணத்தின் வரை
விலக்கணமா?
எப்போது சொல்லப் போகிறார்கள் விமானம் புறப் படும் என்று லிஸா குட்டி போட்ட பூனைபோல் அங்கு மிங்கும் நடந்து கொண்டிருந்தாள் விபரங்கள் கேட்க. ஒவ் வீசில் இருந்த ஒன்றிரண்டு உத்தயோகத்தர்களுக்கும் ஒரு சொட்டு இங்கிலிசும் தெரியாது.
அந்த விமான நிலையம் உள் நாட்டு விமானத் தளம். வெளி நாட்டாருடன் தொடர்பு கொள்ளத் தக்கதான ஆங் கிலம் தெரிந்த உத்தியோகத்தர்கள் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கவில்லை.
சுற்றி வர மலைகள். நடுவில் அந்த விமான நிலையம். காலை யில் ஒரு பக்கத்தில் உதித்து மறு பக்கத்தில் மறையப்போகும் சூரியனைக் கண்டதும்தான் ஒரு முழுப் பகல் அந்த மண்ட பத்தில் முடிந்துவிட்டது என்று ஞாபகம் வந்தது.
நல்ல சாப்பாடும் இல்லை. முக்கியமான வசதிக் குறைவு ரொய்லெற் வசதியின்மை.
“என்னதான் நடந்தாலும் நான் ஒரு கொம்யூனிஸ்ட் நாட்டில் சீவிக்க மாட்டேன்” லிஸா முணுமுணுத்தாள்.
“நான் நினைக்கவில்லை. உம்மைப் போல பெண்களுக்கு வசிக்கும் உரிமை தருவார்கள் என்று.”
அவன் குறும்புத்தனமாகச் சொல்ல அவள் கோபத்துடன் அவனைப் பார்த்தாள்.
களைத்து, முகம் கறுத்துப் போய் இருந்தும் அவள் முகத்தின் குறு குறு என்ற சுபாவம் பார்க்க வசீகரமாக இருந்தது. அவன் தன்னையுற்றுப் பார்ப்பதைக் கண்டதும் அவள் தர்மசங்கடத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
‘உனக்கு வெட்கப்படவும் தெரியுமா?’ என்று கேட்க நினைத்தவன் பேசாமல் மெளனமாக இருந்தான். அவளைக் கோபப்பட வைக்க விரும்பாமல்.
கொஞ்ச நேரத்தில் விமான நிலையத்திலிருந்து அதிகாரிகள் வந்து விமானம் புறப்படப் போவதாகவும், ஆயத்தமாக இருக்கவும் என்று சொன்னார்கள்.
எல்லோரும் விழுந்தடித்து ஆயத்தம் செய்தனர்.
அவர்கள் நம்பிக்கையில் மண் விழுந்தது. அரை மணித் தியாலத்தின் பின் இன்னும் கொஞ்சம் அதிகாரிகள் வந்து விமானம் இன்று இரவு புறப்படாது, எல்லோரும் ‘ரூறிஸ்ட் ஹொட்டேல்’சுக்குப் போங்கள் என்று சொன்னபோது.
எந்த நாட்டுக்காவது ஆயுதம் இறக்குமதி செய்ய நாங்கள் வந்த விமானத்தைப் பாவிக்கிறார்கள் ஆக்கும் எனத் திட்டிக்கொண்டனர் சிலர்.
“எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது. ஒரு கிழழை உடுத்த உடுப்புடன் பைத்தியம் போலத் திரியத் தயாரில்லை. நான் ட்றெயின் எடுத்து போய்ப் பிரிட்டிஷ் மொஸ்கோ கவுண்சிலைப் பார்க்கப் போகிறேன்.” லிஸா முழங்கினாள்.
“இங்கிருந்து ட்றெயின் எவ்வளவு நாள் எடுத்து மொஸ்கோ போகும் என்று தெரியுமா?” பரமநாதன் எரிந்து விழுந்தான். மொஸ்கோவலிருந்து ஆயிரம் மைல்களுக்கப் பாலாவது இருக்கும்.
தகப்பனின் உடல் நிலையை நினைக்க அவன் பொறுமை எல்லாம் காற்றில் பறப்பதாகத் தெரிந்தது. அவர்களை, விமான நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட பத்து மைல்களுக் கப்பால் உள்ள பிரயாணிகள் விடுதியில் கொண்டுபோய் விட்டார்கள்.
சடாரென்று முன் அறிவிக்காமல் நூற்றுக்குக் கிட்டத்தட்ட பிரயாணிகளைக் கொண்டு வந்து இறக்கியதால் ஹாட்டேல் அதிகாரிகளும் சிப்பந்திகளும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர்.
வந்தவர்களில் பெரும்பாலோருக்கு ரஷ்யன் பாஷை தெரியாது. வரவேற்றவர்களில் ஒன்றிரண்டு பேர் தவிர மற்றவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இந்தக் குழப்பத்தில் அவர்கள் கேட்ட கேள்வி என்ன என்று இவர்களுக்குத் தெரியாது; இவர்கள் ஆங்கிலத்தில் சொன்ன மறுமொழி என்ன என்று அவர்களுக்கு விளங்கவில்லை. லிப்டில் பதினெட்டாம் மாடிக்குப் போய் அறை இருபத்தேழுக்குப் போனபோது, லிஸாவும் சேர்ந்து வந்த பொழுதுதான் எல்லாக் குழப்பங்களும் தெரிந்தது. லிஸா கேள்விக்குறியுடன் இவனைப் பார்க்க இவன் அவளைப்பார்த்து.
“உமது அறை எது?” என்று பரிதாபத்துடன் கேட்க, “அவள் உங்கள் அறை நம்பரும் இருபத்தி ஏழா?” என்று வியக்க அவனுக்குப் பைத்தியம் பிடிக்கும்போல் இருந்தது.
“என்ன இழவு?” அவன் எரிச்சல் பட்டுக் கொண்டான்.
அவர்கள் இவர்களைத் தம்பதிகள் என்று நினைத்துக் கொண்டு டபிள் பெட்ரூம் கொடுத்ததை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
“ஏன் டபிள் பெட்ரூம் தந்தார்கள்?” அவன் எரிந்து விழுந்தான்.
அவள் குறும்புடன் இவனைப் பார்த்து “ரு மேக் லவ்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள். ஒரு ஸீரியசும் குரலில் இல்லாமல் அவள் இப்படிச் சொல்ல இவனுக்கு வெட்கமாக இருந்தது.
“எக்ஸ்கியூஸ் மீ” அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். சிங்களப்பெண் குழந்தையுடன் நின்றிருந்தாள்.
“உங்களுக்கு ஆட்சேபனையில்லையென்றால் டபிள் பெட் ரூமை மிஸ் பேக்கருடன் நான் பாவிக்கிறேன். டபிள் ரூம் இரண்டு சிங்கிள் பெட்தானே! எனக்கும் குழந்தைக்கும் தந்த ட பிள் ரூமை நீங்கள் பாவிக்கலாம்”. தங்கள் சண்டையை அவள் கவனித்தது இருவருக்கும் தெரிந்தது வெட்கமாக இருந்தது அவனுக்கு.
“டபிள் ரூம் சிங்கிள் பெட்ஸ். இரவில் தனிமையில் ட்றெயினில் பெண்களுடன் பிரயாணம் செய்ததில்லையா?” மிஸ் லிஸா பேக்கர் மூக்கை நெளித்து புருவத்தைச் சுழித்துக் கேட்டாள், அவன் தர்மசங்கடப் படுவதைப் பார்த்து.
“முன்பின் தெரியாதவர்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் இரவெல்லாம் நீங்கள் உலகத்துத் துன்பங்களைப் பற்றி ஓப்பாரி வைத்துக்கொண்டு இருப்பதைக் கேட்கும் அளவில் என் மனநிலையில்லை” என்றான்.
இரு பெண்களும் சாமான்களை அறையில் கொண்டு வைக்க உதவி செய்தான். பாவம் மிஸிஸ் ஜெயசிங்க குழந்தையுடன் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். மிஸ் பேக்கர் அவளுக்கு உதவி செய்வதை நன்றியுடன் ஏற்றுக் கொண்டாள்.
தங்கள் தங்கள் அறைகளில் சாமான்களை வைத்தபின் ‘குட்நைட்’ சொல்லிய லிஸாவைக் கூர்ந்து பார்த்தான். மெல்லிய வெளிச்சத்தில் அவள் இளமை அவனை என்னவோ செய்தது. டபிள் பெட்ரூமில் அவளுடன் இருந்திருக்கலாமா?
– தொடரும்…
– ஒரு கோடை விடுமுறை (நாவல்), முதற் பதிப்பு: ஐப்பசி 1981, அலை வெளியீடு, யாழ்ப்பாணம்.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |
