ஒருவன் தன்னிடத்தில் வைத்த இரும்பை எலிதின்றது என்றது
கதையாசிரியர்: மரியாதைராமன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2025
பார்வையிட்டோர்: 1,483
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருவன் பத்து பாரம் இரும்பு வாங்கி ஒருவனிடத்திலே வைத்து மற்றொரு தேசத்துக்குப் போய்ச் சில வருஷங் கழித்துப் பின்பு வந்து அவனை ‘இரும்புகொடு” என்று கேட்டான்.
அவன் “உன்னிரும்பை எலி தின்றது” என் று சொன்னான். அந்தச் சொல்லைக் கேட்டு இரும்புக்காரன் மரியாதைராமனிடத்திலே போய்ப் பிராது செய்தான்.
மரியாதைராமன் பிராது செய்தவனுக்கு ஒரு உபாயம் கற்பித்தான். அந்த உபாயத்தின்படியே வாதிதன்னை மோசஞ் செய்தவனுடனே ‘பகையாளி குடியை உறவாடிக் கெடுக்க வேணும்” என்று நினைத்து அதிக சிநேகஞ் செய்து ஒருநாள் தன் வீட்டிலே பிரயோசனமென்று மோசக் காரன் மகனை அழைத்துக் கொண்டு போய்த் தன் வீட்டில் ஒரு அறைக்குள்ளே ஒளித்துவைத்து மறுநாள் மோசக் காரன் “என் பிள்ளை எங்கே” என்று கேட்டதற்கு அந்தப் பயலைப் பருந்து எடுத்துக்கொண்டு போய் விட்டது” என்றான்.
அது கேட்டு உடனே பிள்ளைக்காரன் மரியாதை ராமனிடத்துக்குப் போய் “இன்னான் என் பிள்ளையைத் தன் வீட்டுப் பிரயோசனத்திலே சாப்பாட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்த் திரும்பி அனுப்பாமல் ஒளித்து வைத்து இருக்கிறான். அனுப்பென்று கேட்டால் பிறாந்து எடுத்துக்கொண்டு போச்சுது என்று கூறுறான்” என்று சொன்னான்.
நியாயாதிபதி பிள்ளைமோசஞ் செய்தவனை அழைப்பித்துப் “பிள்ளையைப் பறாந்து எடுத்துக்கொண்டு போமா” என்று கேட்டான். அதற்கு அவன், “இவனிடத்திலே நான் வைத்திருந்த பத்து பாரம் இரும்பை எலி தின்று விட்டதென்று சொல்லுகிறானே இரும்பை எலி தின்னுமா?” என்றான்.
மரியாதைராமன் அவ்விருவரையும் பார்த்து, “நீங்கள் ஒருவரையொருவர் முழுப்பூசணிக் காயைச் சோற்றோடே மறைக்குறது போல மோசஞ் செய்கிறது நியாயத்துக்கு விரோதம்” என்று கண்டித்துப் பிள்ளைக்காரன் இரும்பைக் கொடுக்கும்படியாகவும் இரும்புக்காரன் பிள்ளையைக் கொடுக்கும்படியாகவும் தீர்ப்புச் செய்தான்.
– மரியாதைராமன் கதைகள் (ஆய்வுப் பதிப்பு), இரண்டாம் பதிப்பு: மே 2001, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரசுவதி மகால் நூலகம் வெளியீடு, தஞ்சாவூர்.
| பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்) மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும். புகழ்மிகு கதையிலக்கியங்கள் : விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க... |