ஒருவகை உறவு
 கதையாசிரியர்: க.சட்டநாதன்
 தின/வார இதழ்: மல்லிகை                                           
 கதைத்தொகுப்பு: 
                                    குடும்பம் 
 கதைப்பதிவு: July 12, 2025
 பார்வையிட்டோர்: 952  
                                    (1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த விமர்சனக் கூட்டத்திற்கு அவன் தாமதமாகவே வந்தான். அந்தக் கூட்டமென்றில்லை, இலக்கியம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சி யானாலும் அவனைப் பார்க்கலாம். தாமதமாக வருவதை மட்டும் அவன் முன்னதாகவே நிச்சயம் செய்து கொள்வான். அதில் அவனுக்கு அக்கறையிருந்தது. பலரது கவனத்தைத் தன்பால் ஈர்க்கலாம் என்பதான அக்கறை அது.
மண்டபத்தினுள் நுழைந்தவன், மேடையைப் பார்த்தான். அங்கிருந்த அனைவருமே அவனது வருகையை, இணக்கமான சிரிப்பில் கௌரவித்ததாகே தோன்றியது.
மண்டபத்தின் மையப் பகுதிக்கு நகர்ந்தவனைச் சபையில் இருந்தவர்களும் கவனம் கொண்டனர். குறிப்பாகப் பெண்கள் பகுதியில், உறைந்துபோன மௌனம் நிலவியது. அங்கிருந்த பெண் களில் அனேகமானவர்கள் அவன் மீது மையல் கொண்டிருப்பதாகவே தன்னளவில் அவன் நினைத்துக் கொண்டான். இவை எல்லாமே அவனது நானை இதமாகத் தடவிக் கொடுத்தது. அது அவனுக்கு மகிழ்ச்சி தருவதாயிருந்தது.
ஒரு ஆசிரியனாகத் தொழில் பார்த்த பொழுதும் அவனது இலக்கிய வாழ்வு, அவனைச் சூழ வலுவான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டதில் அவன் திருப்திப்பட்டுக் கொண்டான்.
அவனுக்கு, அப்பொழுது ஏனோ அந்த ‘பிளாக்பியூட்டி’யின் ஞாபகம் வந்தது. அவள் வந்திருக்கிறாளா என்று பார்த்தான்.
அவள் வந்திருந்தாள். அவளது அந்த வருகை அவனுக்காகத் தான் என்பது அவனுக்கு மட்டுமல்ல, அவளுக்கும் தெரிந்திருந்தது. அவள் மெலிதாக, வதவத என்று வளர்ந்திருந்தாள். குளிர்ச்சியான பெரிய கண்கள். கனிந்த ஈரலிப்பான உதடுகள். அளவாகப் பிடித்து வைத்தது போன்ற நாசி. நீண்ட கழுத்து. சிறிய மார்பகங்கள். பிருஷ்டம் வரை தழையும் கூந்தல்.
தரித்து நிற்காது திமிறும் மதமதப்பான கன்னிக் குதிரையை அவள், அவனுக்கு ஞாபகமூட்டினாள். அவளிடம் இருந்த அந்த மிருகம் அவனைக் கிளர்ச்சியுற வைத்தது.
மண்டபத்தின் இடது பக்கமாக நகர்ந்தவன் அவளது பார்வை படக்கூடிய இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டான். அவன் வந்த நேரத்திலிருந்து, அதிக லயிப்பும், பரவசமும் கொண்டவளாய், அவனைப் பற்றியே அவளும் நினைத்துக் கொண்டாள்.
‘இந்தச் சமூகத்தின் கையாலாகாத்தனத்தை, கெட்டித்த மௌனத்தை, அதிரவைக்கும் சக்தி இவனது கவிதைகளுக்கு என்னமாய் வாய்த்திருக்கிறது.. இவனது சிறுகதை ‘நியதிகள்’ கூட பெண்மைபற்றிய இயல்பான சித்திரமாய்… பெண்மைக்கு அதிக சுதந்திரம் தருவதாய் இருக்கிறதே… மனசைத் தொட்டுப் பார்த்துச் சொல்லும் கலை இவனுக்கு… இவனுக்கு மட்டுமேயான ஒன்றுதானா….? வாழ்வின் துயரங்களை, அதன் சோக இழைகளை ஸ்பரிசித்த தாபத்தை, இவனது இந்த எழுத்தைவிட எதில் தரிசிக்க முடிகிறது..?’
அவனைச் சுற்றியே மனசு கவிந்து கனிந்து போவது அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. ‘சற்று உணர்ச்சி வசப்பட்ட நிலையோ இது…’ என நினைப்பு வந்ததும் அவளுக்குக் கொஞ்சம் கூச்சமாயுமிருந்தது.
எழுந்து, மண்டபத்தை ஒட்டியிருந்த கன்ரீன் பக்கம் போனாள். கன்ரீனில் ஒருவருமே இல்லாதது இவளுக்கு ஆறுதலாயிருந்தது. ரீயை அருந்தியபடி நிமிர்ந்தவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
சுரேந்திரன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனது கண்களிலும், உதட்டிலும் அழுத்தமான சிரிப்பின் இழைகள்.
நெருங்கி வந்த அவனைப் பார்த்துக் கேட்டாள்:
“உங்களுக்கு ரீ….”
“ஷ்யூர் ஷ்யூர்” என்றவன், அவள் பெற்றுத்தந்த ரீயை ஏந்தியபடி, அவளுக்கு எதிராக உட்கார்ந்து கொண்டான்.
அவனும் அவளும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், நெருங்கிய பரிச்சயம் எதுவும் அவர்களிடையே முன்னர் இருந்ததில்லை. எழுத்து, இலக்கியம் என்ற ஒரு பிடிப்பு விழுந்த பின்னர் கூட, இவ்வளவு நெருக்கத்தில் அவனை அவள் பார்த்ததில்லை.
இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். அந்த மௌனத்தைக் கலைத்தபடி முதலில் அவள்தான் பேசினாள்:
“உங்கள் கவிதைகள் அற்புதமானவை. அவை தொற்ற வைக்கும் அனுபவம்….கிளர்ச்சி… ஓ… இற்ஸ் ரியலி வண்டர்புல்…”
“கவிதை படிப்பதில் இப்ப ஆருக்குத்தான் ஆர்வமிருக்குது… உமக்குக் கவிதை பிடிக்குமோ…?”
வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்ட அலட்சியமும் சலிப்பும் அவனது பேச்சில் இழைந்தது. அதைப் புரிந்து கொள்ளாதவளாய், அவனது பேச்சை ஆட்சேபிக்கும் தோரணையில், தனது குளிர்ச்சியான பெரிய விழிகளை அகல விரித்து, தலையை ஒசித்து, மிக மெலிதாகச் சிரித்தாள். பின் தொடர்ந்து சொன்னாள்:
“உங்க சிறுகதை ‘நியதிகள்’, கூட அருமையாக வந்திருக்கிறது மனித இருப்பின் அவலத்தை, துயரங்களை, மிகுந்த பரிவோடு… நெருக்கமாய்ப் பகிர்ந்து கொள்ளும் இயல்பு…”
“ஏதோ பொழுது போகாமல் கிறுக்கினது. அதற்குப் போய் இப்படியொரு கனதியான மதிப்பீடா?”
“ஸிலி… உங்களது ஆற்றல் உங்களுக்குத் தெரியேல்லை! பிளீஸ் கொஞ்சம் என்னைக் கதைக்க விடுங்களேன்” என்று குழைந்தவள் தொடர்ந்து கூறினாள்:
“அவள், அதுதான் உங்க ஹீரோயின் விமாலவிலை, என்னையே பார்க்கிற மாதிரி ஒரு நினைப்பு. அவ என்னைப் போலை தாயில்லாத பிள்ளை. இன்னும் அப்பா, அண்ணா, அவங்க அதிகாரம் எல்லாம் அவளைச் சூழ இருக்கிறது. கொஞ்சம் கவலைகளும்… அதையெல்லாம் அவளாலை துணிவாக மீற முடிகிறது. அந்த வகையிலை, எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா அவளாலை இருக்க முடிகிறது..”
பேசும் போது அவளது கண்களும் உதடுகளும் – ஏன் அவளது அங்கங்கள் அனைத்துமே அபிநயத்துப் பேசுவதாகவே அவனுக்குத் தோன்றியது. அவள் தந்த பரவசத்தில் தன்னை இழந்தவனாய், மனதளவில் எதை எதையோ அவன் நினைத்துக் கொண்டான்.
ஆடை நெகிழ்ந்த அபிஷேக அம்மனாய் அவள் அப்பொழுது அவனது மன அரங்கில் தோற்றங் கொண்டாள்.
‘என்ன இது? ஒரு கீற்றுத் தசை கூட அதிகப்படாமல் அளவாக, தேர்ந்த கல்தச்சனின் உளி பட்டுத் திகைந்த இந்த வார்ப்பில், கருமையோடு கலந்த பொன் இழைகளாய் சுடரும் தேஜஸும் பொலிவும், நாபியின் சுற்றுத் தடங்களில், அந்தச் செல்லமான பகுதிகளில் ஒரு சதைப் பொட்டுக் கூட மிகாமல், ஓ! இவளது ஒளி காந்தும் உடலின் ஸ்பரிச சுகம்!’
உணர்ச்சி கொப்பளிக்கும் நினைவுகள்.
அவனது நினைவுகள் அவனையே திடுக்குற வைத்தன. கள்ளம் புகுந்த உள்ளத்தின் தயக்கங்களுடன் அவளைப் பார்த்தான்.
அவளோ, எதுவித குறுகுறுப்புக்கும் உட்படாதவளாய், அவனது கதை பற்றியே பேசினாள்:
“காலாதி காலமாய் புனிதம், அது இதென்று நாம் கருதினதை எதுவிதத் தயக்கமுமில்லாமல் அந்த விமலாவால் ஒதுக்க முடிகிறது. ‘எனக்குத் திருமணம் என்கிற – ஒருவகையில் ஸ்தாபனமாக்கப்பட்ட ஏற்பாட்டிலை, சடங்கிலை நம்பிக்கையில்லை. இரண்டு பேருக்கும் நடுவிலை இருக்கிற பிரியந்தான் முக்கியமாய்ப் படுகிறது.’ என்று பேசும் அவளால் எதுவித மனத்தடையோ கூச்சமோ இல்லாமல் பேராசிரியர் நிமலனோடை கோஹபிட் பண்ண முடிகிறது.”
“திருமணமாகாமலே சேர்ந்து வாழுற இந்த உறவு, உமக்கு உறுத்தலாக இல்லையா கலா…?”
“இந்த மண்ணுக்குப் பொருந்தி வாற மாதிரி இல்லைத்தான்! என்றாலும், எதுவிதமான சமூகக் கூச்சமோ தடங்கலோ இல்லாத அவங்க உறவு – இயல்பா, உண்மையா, ஆன்மப் பொலிவோட இருக்கு.. ஒரே ரசனையும் ஈடுபாடும் கொண்ட அவங்களை இணைப்பதே, மற்றவங்களின்ரை துன்பங்களிலே பங்கு கொள்ள வேணுமென்கிற துடிப்புத்தான். செக்ஸ் கூட அவங்களுக்கு இரண்டாம் பட்சமாய்தான் இருக்கிறது. மனசளவிலே ஏற்படுகிற எந்த உறவுமே உடலளவிலை தொடர்பு படுவது சாத்தியமானதுதான். இந்தப் புரிதலோடை.. அவங்க பெருமையை நாம் கொச்சைப்படுத்தக் கூடாதென்றுதான் நினைக்கிறன்.
“தாங்ஸ் கலா… எவ்வளவு அழகாக் கதைக்கிறீங்க!”
“என்ன அழகு… எல்லாம் உங்களிடம் கற்றதுதான்”
“ஒரு விரிவுரையாளரான உமக்கு நான் எதைக் கற்றுத் தரமுடியும்?”
“இல்லை சுரேன், உங்க எழுத்திலை ஒரு உண்மையான, அசலான ஆணின் மனவிகசிப்புகளை என்னாலை தரிசிக்க முடிகிறது.” சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில், அவள் அதை உரத்தே கூறினாள்.
“சந்தோஷம் கலா! இந்த மாலை எனக்குப் பழுதில்லாதது, உண்மையான மனசு வசீகரமானது என்பதை உணர்த்திய இந்த மாலைக்கு எனது நன்றிகள்.” என்று கூறியவன், அவள் தொடர்ந்து வர, கன்ரீனை விட்டு வெளியே வந்தான். அவனுடன் ஸ்கூட்டர் வரை வந்தவளைப் பார்த்து அவன் கேட்டான்:
“இனி எப்ப சந்திக்கிறது?”
அவள் பதிலேதும் தராமல், தனது பெரிய விழிகளை அகல விரித்து ‘ஏனாம்’ என்பது போலச் சிரித்தாள்.
அந்தச் சிரிப்பில் கனிந்து நின்ற காதலை, காதலா? எதுவோ அதை, அவன் புரிந்து கொண்டான்.
ஸ்கூட்டரை ஸ்ராட் செய்து அவன் விடை பெற்ற பொழுது, மிகுந்த வாஞ்சையுடன், மனசின் படபடப்பு அடங்காமல், அவன் போவதையே அவள் பார்த்தபடி நின்றாள்.
ஒற்றைக் குயிலின் தாபம் மிக்க கூவலுடன்தான், கலா விழிப்புக் கொண்டாள். அந்தக் குயிலோசையில் இழைந்த சோகம் அவளுக்குப் பொருள் தருவதாயில்லை. அவளது தனிமை அவளுக்குப் பயமூட்டுவதாயிருந்தது. அந்தத் தனிமையும் சோகமும் இழை இழையாகப் பிரிந்து, எல்லாவற்றிலுமே கவிந்து படிந்து விட்டதாகவே அவளுக்குத் தோன்றியது. இரவு முழுவதும் ஊமையாக அழுது கொண்டிருந்த வானம், காலையிலும் தொடர்ந்து சிணுங்கியது. காலம் தப்பிய மழை; அதுவும் ஆடியில்!
சுரேந்திரனை அவளால் மறக்க முடியவில்லை. அவனைப் பற்றிய நினைவுகள் அவளைச் சதா அலைக்கழித்துக் கொண்டே இருந்தன.
எந்த உறவையுமே முழுமையாக விலக்கி, நிமிர்ந்து நிற்கக் கூடிய வலிவு அவளுக்கு இல்லாமலே போய்விட்டது. எதையுமே ஒதுக்கிவிட்டு, தனித்து – தன்வழியே செல்லும் இயல்பு, கைநழுவிப் போனதான நிலை, அவளை அதிகம் குழப்பியது.
படுக்கையை விட்டு எழுந்தவள், ஜன்னலைத் திறந்தாள். அடிவானம் வரை படர்ந்து – திரட்சி கொண்ட, கருமை போர்த்திய வானம், மழையில் நனைந்து கனத்துப் போன மரங்களின் துயரம்தரும் பின்னணி, ஈரமான குரலில் விரகம் ததும்பக் குரலிடும் மணிப்புறா, இவை எல்லாமே, அந்த நிசப்தமான வேளையில் அவளது துயரத்தைக் கிளறின.
‘இரண்டொரு நாளில் திரும்புவதாகக் கூறிப்போனவன், ஒரு கிழமைக்கு மேலாகியும் ஏன் திரும்பவில்லை? ஒரு வேளை அவனது அம்மாவிடம் இந்த உறவு பற்றியெல்லாம் கூறப்போய் வசமாக மாட்டிக் கொண்டு விட்டானோ? அதனால்தான் இந்தத் தாமதமா…?” அவனைப் பற்றிய நினைவுகள் மீளவும் அவளது மனதில் மிதப்புக் கொண்டன.
அந்த விமர்சனக் கூட்டத்தில் சந்தித்த பின்னர், அவனும் அவளும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். அந்தச் சந்திப்புகள் ஒரு அறிவு சார் தோழமையை வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு உதவியது.
இந்த உறவு, அவளாக வலிந்து ஏற்படுத்திக் கொண்ட ஒன்றல்ல. சூழ உள்ள மனிதர்களும், அவள் சொந்தமெனப் பற்றி நின்ற அனைத்துமே தூரப்பட்டு அந்நியமான பொழுது, தவிர்க்க முடியாமல் அவனது தோழமை அவளுக்கு வேண்டிய ஒன்றாகி விட்டது.
இப்பொழுதெல்லாம், அவனைத் தவிர்த்து எதனையும் அவளால் சிந்திக்க முடிவதில்லை. அவனே அவளுள் கரைந்து எல்லாமாகியிருந்தான். தனிமையின் தீவிரத்தை உணரும் பொழுதெல்லாம் அவனது ஆறுதலும் உடனிருப்பும் அவளுக்கு அவசியமாகிவிடுகிறது.
அம்மா இருந்தவரை எல்லாம் அவள்தான் என்பதை – அவள் இறந்து போன இரண்டொரு தினங்களிலேயே – இவள் உணர்ந்து கொண்டாள்.
‘பக்குவமாக பட்டுப்போ… பூப்போ… ஏந்தப்பட வேண்டிய அந்த ஜீவன், மனதளவிலும் உடலளவிலும் எவ்வளவு காயங்களுக்கு உட்பட்டு விட்டது.
‘அப்பாவின் துஷ்டத்தனமான காமத்துக்கு ஒரு வடிகாலாக இருந்ததில் அவள் எப்பொழுதாவது சந்தோஷப்பட்டிருப்பாளா? திருமணம் என்று பந்தப்பட்டால் மட்டும் போதுமா? புரிதலும், தயத்தின் உட்சுவரை உரசிவரும் கசிவும், நெகிழ்ச்சியும் இவர்களிடையே எப்பொழுதாவது ஏற்பட்டிருக்குமா? பெண்ணைப் படுக்கையிலேயே சதா பார்த்துப் பழகிப் போனவர்கள் இந்த ஆண்கள். இதற்கெல்லாம் அப்பா விதிவிலக்காகிவிட முடியுமா என்ன?’
‘மனதில் குமைந்து வெடிப்புற்ற துயரங்களை, மௌனித்த நிலையில் தாங்கிக் கொண்டதால்தான் நாப்பத்தியாறு வயது முடியுமுன்னரே அம்மாவுக்கு அந்த முடிவு நேர்ந்ததோ…?’.
அம்மாவின் இறுதி நாட்கள் ஆதரவு எதுவுமில்லாமலேயே கழிந்தது அவளது நினைவில் வந்தது.
பட்டப்படிப்பின் இறுதியாண்டு. அதன் சுமை. எல்லாமே இவளை அம்மாவின் துயரங்களில் பங்கு கொள்ள முடியாமல் தடுத்துவிட்டன. பரீட்சை முடிந்து ஊருக்குத் திரும்பிய சில தினங்களிலேயே ஒரு கனத்த மழை நாளில், ஈரமான விடியற் பொழுதில் – அம்மாவின் பிரிவு நேர்ந்தது.
அது அவளுக்கு மிகுந்த துயரத்தைத் தந்தது.
அம்மாவின் உயிரைச் சிறுகச் சிறுகப் போக்கியதில் அப்பாவின் பங்கு கணிசமானதென்பது அவளுக்குத் தெரியும். அத்துடன் அப்பா என்ற பந்தம் கூட பொருளற்றதாய்ப் போனதற்குப் பல காரணங்கள் இருப்பதாகவே அவள் இப்பொழுது நினைத்துக் கொண்டாள்.
செல்லமுத்து, செல்லமுத்துவின் மகள் பரமேஸ், மதவடிவளவு விசாலாட்சி என்று எந்தப் பெண்ணுடனும் அப்பாவால் உறவு கொள்ள முடிந்தது.
ஐம்பத்தெட்டு வயது, டயபெற்றீஸ், கொஞ்சம் ஹார்ட் என்று தொல்லைகள் வேறு. இவற்றை எல்லாம் மீறி செக்ஸ் அப்பாவின் தசைகளிலும் நரம்புகளிலும் சடைத்து, மிருகத்தனமாக மதர்ப்புக் கொள்வது அவளுக்கு வியப்பாக இருந்தது.
‘அப்பாவினது இந்த வக்கரிப்பு, அவர் உறவு கொண்ட எந்தப் பெண்ணுக்கும் பிடித்தமானதாய் இருந்திருக்குமா? தங்களளவில் சுதந்திரத்தையும் சுயத்தையும் இழந்த இந்த உறவு, அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதா என்ன? இருக்க முடியாது. இயல்பு தப்பிய வாழ்வே சமூக நியதியாகி விட்டிருக்கும் இந்தச் சூழலில், வறுமையின் கடைக் கோட்டில் சஞ்சலப்படும் அவர்கள் அப்பாவின்பால் ஈர்க்கப்படுவது உலக அதிசயமாகி விடுமா என்ன?’
ஊரில் பெரிய தனவந்தரும் தடித்த சாதிமானுமான அவருக்கு. எதுவும் முடியும் என்னவும் முடியும் என்பதைத் தவிர அவளால் வேறெதையும் சிந்திக்க முடியவில்லை.
எங்கோ, எதிலோ, பிழை என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது. ஆனாலும் அதை ஆராயும் மனோநிலை அவளுக்கு இல்லாமலே போய்விட்டது. வாழ்க்கை கலக்கம் தருவதாயும் மிகுந்த சலிப்பூட்டுவதாயும் இருப்பதை அவளால் உணர முடிந்தது.
அம்மாவின் மறைவுக்குப் பின்னர் ஊரில் இருக்கப் பிடிக்காமல் நகர்ப்பக்கம் வந்தவளுக்கு, படித்த பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளர் பதவி, அதுவும் முயற்சி ஏதுமில்லாமலே கிடைத்தது.
எது எப்படி இருந்த போதிலும் வாழ்க்கை பற்றிய பயமும் சந்தேகமும் தனிமையும் அவளைத் தொடர்ந்து துன்புறுத்தவே செய்தன.
அந்தச் சமயத்தில்தான் சுரேந்திரனின் சந்திப்பும் தோழமையும் அவளுக்குக் கிடைத்தது. அது இதமாகவும் வேண்டிய ஒன்றாகவும் அவளுக்கு ஆகிப்போனது.
ஒரு ஆணின் துணை எந்தச் சந்தர்ப்பத்திலும் அவளுக்கு உவப்பானதாயும் நம்பிக்கை தருவதாயுமிருந்ததில்லை. அவள் சந்தித்த எந்த ஆணுமே, பெண்ணை விரும்பிய நேரத்தில், விரும்பிய மாதிரி, எதுவித எதிர்ப்போ, எதிர்பார்ப்போ இல்லாமல் அடையத் துடிப்பவனாகவே இருந்தான். இது அவளுக்கு மிகுந்த சோர்வையும் மன உளைச்சலையும் தருவதாகவே இருந்தது.
அவளுக்கு அப்பொழுது பத்து அல்லது பதினோரு வயதுதான் இருக்கும். இரண்டும் கெட்டான் பருவம். அந்த வயதில் ஒரு காட்டுப்பூனையின் கதகதப்புடன் இவளோடு உரசித் திரிந்த பக்கத்து வீட்டுப் பையன் சேகர் ஆகட்டும், பாடசாலை நாட்களில் இயல்பாகவே இவளுக்குக் கொஞ்சம் இசைஞானம் உண்டு என்பதைச் சாக்காக வைத்து வகுப்புகள் முடிந்த பின்னர் – பயிற்சி, அது இதென்று அலைக்கழித்து இவளைப் பிசக்கிய ஆசிரியர் வினாயகமாகட்டும், இருவருமே புத்தி பிடிபடாத பருவத்தில் இவளைப் பயன்படுத்திக் கொண்டவர்கள்.
பல்கலைக்கழக வாழ்க்கைதான் இவளை ழுமையான வளாகவும் தன்னம்பிக்கை உள்ளவளாகவும் ஆக்கியது.
அங்கிருந்த காலத்தில் அவள் தனது படிப்பில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் காண்பித்ததோடு, தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதிலும் அதிக சிரத்தை கொண்டாள்.
அவளது சக மாணவிகள் அனேகமாக எல்லாருக்குமே, நட்பும் நெருக்கமும் மிக்க ஆணின் தொடர்பு அல்லது தோழமை இருந்தது போல, இவளுக்கு இருக்கவில்லை. இல்லை என்பதிலும் பார்க்க இவள் ஆக்கிக் கொள்ளவில்லை என்பதே சரியானதாகும்.
எந்த விஷயத்தையும் மிகுந்த புத்தி பூர்வமாக அவதானம் கொள்ளுமவள் அதனைத் தனக்குத் தோன்றும் விதமாக வலியுறுத்தவும் செய்தாள். அந்த ஆளுமை, அந்த விகசிப்பு, இவளுக்கு ஒரு ஆணின் நெருக்கமான நட்பு எதனையும் பெற்றுத் தரவில்லை. அவள் இயல்பாகக் கொள்ளும் ஆர்வங்களைப் புரிந்து கொள்ள ஒருவருமே இல்லை என்ற நிலைதான் அவளைத் தனிமை கொள்ளவும் துயருறவும் வைத்தன.
அப்படியும் – தப்பித்தவறி ஒரு சினேகம் அத்தி பூத்தாற்போல் முகிழ்த்தாலும் சக மாணவிகள் மத்தியில் அவள் படும்பாடு சொல்லி முடியாது.
“கலாவுக்கு ‘மென்ஸெஸ்’ வந்து இரண்டு மாதமாம்..” “நோட்டி… அப்படி ஒண்டுமில்லை… அவள் கெட் .டி. இஸ் ஒன் பில்ஸ்!”
“இஸ் இட்… இஸ் ஷீ டேற்றிங் வித் ஏ நீயூ கை”
“நோ… மனோதான்…”
“ஆர் அந்த ஒட்டகச் சிவிங்கி மனோகரன்தானே? சிவதாசன் இப்ப இல்லையா?”
நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பேச்சுக்கள்.
ஆண் சரி, பெண் சரி எல்லாருமே தன்னைப் பூரணமாகப் புரிந்து கொள்ளாமல், ஒரு கர்வியாகப் பார்ப்பதன் வெளிப்பாடுதான் இப்பேச்செல்லாம் என்ற நினைப்புடன் அவர்களிடமிருந்து ஒதுங்கவும் தனிமைப்படவும் அவளை வைத்தன. அந்தத் தனிமை பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருந்த காலத்தில் மட்டுமல்ல, விரிவுரையாளர் என்ற அந்தஸ்து பெற்ற பின்னரும் தொடரவே செய்தது.
பல முனைகளிலிருந்து நெருக்குதலுக்கு உட்பட்ட அவள் சுரேந்திரன்பால் பிரியம் கொண்டது; இயல்பாக, தடங்கலேதும் இல்லாமல் நடைபெற்றது. தனிமை, அது ஒரு நிரந்தரத்தன்மை பெற்றுவிடுமோ என்ற அவளது பயம்தான் இதற்கெல்லாம் காரணமென அவள் நினைக்கவும் செய்தாள். அவளது நிலை அவளுக்கே ஆச்சரியம் தருவதாயிருந்தது. அதே வேளை, அவளில் ஏற்பட்ட அந்த மாற்றம் அவளைச் சிரிப்பூட்ட வைப்பதாயுமிருந்தது.
‘ஓ..! ஸிலி… இந்த வயதிலை ஒரு ரீன் ஏஜ் பெட்டை மாதிரி, மனசு குதூகலிப்பதும், கனிந்து கரைந்து போவதும்,தன்னிலை மறப்பதும், துயருறுவதும்… இதென்ன கூத்து..!’
அலைபாயும் மனசைக் கடிவாளமிட்டு அடக்கிக் கொள்வாள். தினம் காலையிலும் மாலையிலும் கண்டு, கதைத்துப் பிரியும் சுரேந்திரன், கடந்த ஒரு வார காலமாக வராதது அவளையறியா மலேயே துயரம் தருவதாயிருந்த போதும் அவள் அதை மனமொப்ப மறுத்தவளாய், மீண்டும் படுக்கையிற் போய்ச் சரிந்தாள்.
‘இன்று ஞாயிற்றுக்கிழமை. ஓய்வு நாள். திரும்பவும் ஒரு சிறுதூக்கம் போட்டால் என்ன! என்று நினைத்தவள், தலையிலிருந்து பாதம் வரை போர்வையை இழுத்து மூடியபடி படுத்துக் கொண்டாள்.
தூரத்தில் அந்த ஒற்றைக் குயிலின் தாபம் மிகுந்த குரலோசை. அவளது உடல் நடுங்கியது. ஜன்னலூடாகப் பார்த்தாள். மழை கனத்துவிட்டது தெரிந்தது.
‘இந்தக் கொட்டும் மழையில் கனவு காணும் ஈரமான இந்த மரங்களின் கீழ், பச்சென்ற புற்தரையில், வாடைக்காற்றின் குத்துங் குளிரின் வெடவெடப்புடன் உடலும் ஆன்மாவும் ஒன்றித்த நிலையில் சுரேந்திரனோடு கலந்து… அவனுள்ளே… உள்ளே..’
தறிகெட்ட மனதின் மயக்கங்கள் அவளைச் சிரிப்பூட்டியது. குதூகலம் மிக்கவளாய் அவள் வாய்விட்டுச் சிரித்தாள். அவளது சிரிப்பொலி தூரத்தில் எங்கோ எதிரொலித்தது. மீளவும் வந்து அவளுள் கரைந்தது.
எல்லாமே சுரேந்திரனது ஏற்பாடுதான். அவனுடன்தான் குமாரசாமி வீதியில், ஒழுங்கையில், சற்று உள்ளாக அந்த வீட்டை இவள் போய்ப் பார்த்தாள். சிறிய வீடு. ஸ்ரடி, இரண்டு பெட் ரூம்ஸ், கிச்சின், அற்ராச்பாத் என்று வீடு அடக்கமாகவும் அழகாகவும் இருந்தது. வீட்டுக்கு முன்பாக, றோசாவும், குண்டு மல்லிகையும் சிரித்தன. சில பொட் பிளான்ஸும் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என இவள் நினைத்துக் கொண்டாள்.
திருமணம் என்று பெரிதாக எதுவும் இல்லாவிட்டாலும் ஒரு பதிவாவது வேணும் என அவன் வலியுறுத்தியபோது, அவள் அதற்குத் தடை சொல்லவில்லை.
எதிலுமே ஒரு நம்பிக்கை இழந்த நிலையில், வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும் முழுமையையும் தந்தவனை, கனம் பண்ணும் நோக்குடன் அவன் எது கூறினாலும் ‘ஓம்’ போட்டுத் தலையசைத்துக் கொண்டாள்.
உண்மையான அன்பும் நெகிழ்வும் ஒருவர்பால் ஒருவர் பற்றுதலும் புரிந்துணர்வும் கொள்ளும்போது, திருமணம், சடங்கு சம்பிரதாயம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமானதே. இவை வாழ்க்கையில் பொய்மையும் கரவும் வந்து புகுந்த பின்னர் தாமாக வந்து ஒட்டிக் கொண்டவையாகவே அவளுக்குத் தோன்றின.
‘அம்மாவும் அப்பாவும் நாள் பார்த்து, கோள் பார்த்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து எதைக் கண்டு கொண்டார்கள்? அவர்களது பொய்மை கலந்த தாம்பத்தியமும் அப்பாவின் பெண் பித்தும் அம்மாவின் உயிரையே காவு கொள்ளவில்லையா’
அம்மா, அப்பா பற்றிய சிந்தனை. அவளைப் பற்றியதாக விரிவு கொண்டது.
‘உண்மையின் ஒளி அலைப்புறும்பொழுது அதனை, அதன் சுடரைக் காப்பாற்ற எழுதுபவன் நான்! அது எங்கெல்லாம் மறைக்கப்படுகிறதோ அதைத் துலாம்பரப்படுத்துவதே எனது பணி என்று இவன் தனது இலக்கிய நிலைபற்றிப் பேசியது அவனைக் கண்டதும் நினைவு வர, அந்த உணர்வு தந்த கிறுக்கத்தில் – முற்றத்தில் இருந்த றோசாச் செடிகளுக்கு உரம் இட்டுக் கொண்டிருந்த அவனை நெருங்கி, அவனது உயரத்தை எட்ட முடியாதவளாய் கால் பெருவிரல்களில் நர்த்தித்து, அவனது கழுத்தை இருகரங்களாலும் வளைத்து, அவனது நெற்றியிலும் கண்களிலும் முத்தமிட்டாள்.
‘வெக்கம் கெட்ட பெட்டை. இதுக்கு நேரம் காலம் இல்லையா? என்று அவளைச் செல்லமாகக் கடிந்து ஒதுங்கியவன், கைகளை அலம்பிவிட்டு உள்ளே வந்தான்.
கட்டற்ற காதல் என்பார்களே அது அவர்களைப் பொறுத்தவரை அனுபவ சாத்தியமான ஒன்றாகி விட்டது.
ஆண், பெண் உறவின் பொலிவை, பூரணத்தை அவன் அவளுக்கும் அவள் அவனுக்கும் உணர்த்தியது இயல்பாகவே நடைபெற்றது. அடிமனதின் துயரம், தனிமையின் உறுத்தல், அப்பாவைப் பற்றிய விசனங்கள் எல்லாமே அந்த உறவில் அடிபட்டுப் போயின. அவளுடைய லட்சிய ஆம்பிளை அவன்தான், அவன் மட்டுந்தான் என்பது போல அவள் மனம் சிலிர்த்துக் கொள்ளும். அப்பொழுதெல்லாம் ‘சுரேன் இஸ் மை மான்.. அன்ட் தி… ஒன்லி மான்.. என்று பெருங் குரலில் இந்த உலகம் முழுவதுமே கேட்கும் படி கூவவேண்டும் போலிருக்கும் அவளுக்கு.
சரளமான அந்த வாழ்க்கையில் முதற்கோணல் ஏற்பட்டதே அவர்களின் திருமணம் நடந்து மூன்றுமாதங்களின் பின்னர்தான்.
தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் பணியாற்ற வேண்டுமாயின் அவள் பட்டப்படிப்பில் புலமைத் தகுதி பெற்றாக வேண்டும். அதைக் கருத்தில் எடுத்து, எம்.ஏ. படிப்பதற்கான ஆயுத்தங்களை அவள் மேற்கொண்ட போது, அவளை பார்த்து அவன் கூறினான்:
“இதென்ன விசர் வேலை கலா! பேசாமல் ரிட்டயர் பண்ணுமன். ‘பி.எப்’ கொஞ்சம் வரும். அதை எடுத்துச் சேவிங்ஸ்ஸிலை போட்டிட்டு லட்சணமா குடும்பம் நடத்தலாம்… ஆம்பிளை நானிருக்கேக்கை ஏன் பயப்படுகிறீர்? நான் உமக்கு உழைச்சுப் போடமாட்டனா?”
பட்டென்று ஏதோ உள்ளில் அறுபட்டதான உணர்வு; லேசான துயரம் நெஞ்சில் படர்ந்தது.
அவன் பேசுவதையே அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“உமக்கு துவரம் பருப்பிலை ஒரு ஸ்பெஷல் டிஷ் சமைக்கத் தெரியுமா? அம்மா சமைப்பா, அசலாயிருக்குமப்பா…?”
“….”
“துவரம் பருப்பை நல்லா நீரிலே ஊறப்போட்டு, கழுவி எடுத்து அம்மியிலை பசுந்தா அரைச்சு, வெண்ணெயிலை அல்லது நெய்யிலை பொரிச்சு, பிறகு தாளிதம் பண்ணிக் குழம்பு வைச்சா இறச்சிக் கறி மாதிரி இருக்கும்”
“….”
“என்ன நான் கதைக்கிறன் நீர் உம்பாட்டுக்கு கவனியாத மாதிரி… அதென்ன ஜோஃபிறீமானின்-த பொலிட்டிக்ஸ் ஒவ் வுமின்ஸ் லிபரேஷனா? நீரும் உம்மடை பெண்நிலை வாத விசரும்.”
அவன் எழுந்து அவளது கையில் இருந்த புத்தகத்தைப் பறித்து எறிந்தான்.
“சுரேன்… திஸ் இஸ் ரூ மச்”
“ஸொரி கலா. இன்னுமொரு விஷயம் உம்மட்டைக் கேக்க வேணும் எண்டு நினைச்சனான். நீர் கள்ளமாய் எனக்குத் தெரியாமல் பில்ஸிலை இருக்கிறீரா? மூண்டு நாலு மாசமாகியும் நீர் ‘கென்சீவ்’ பண்ணாமலிருக்கிறது எனக்குத் துக்கமா இருக்கு, ஒரு குழந்தை நமக்கு வேண்டாமா? அவனைப் படிக்க வைச்சு, ஆளாக்கித் தலைநிமிர வைக்க வேண்டாமா?”
“கடிவாளம் இடப்பட்டு, ஒரே பக்கமாப் பாத்துப் பழகிப்போன, பாதையில் போற ஆம்பிளைதான் நீங்களும் ஏதோ வித்தியாசமானவர் எண்டு நினைச்சிட்டன்”
அவள் உறைந்து போனவளாய் எழுந்து கொண்டாள்.
இது அவனது புதிய குரல். அவள் முன்பு எப்பொழுதுமே கேட்டிராத குரல். அவனது எழுத்துக்கும் பேச்சுக்கும் முரணான குரல். இந்த மூன்று மாத காலமும் ஒரு ஆணின் வசீகரங்களோடு அவள் கொண்ட உறவு, அவளைக் கவர்ந்ததென்னவோ மறக்க முடியாத ஒன்றுதான். அவன் மீதான, உடல் ரீதியான மோகம் சற்றுத் தளர்ந்த நிலையில், அவனது இயல்பும் போலித்தனங்களும் அவளுக்கு வெளிச்சம் போடவே செய்தன.
மனம் உடைந்து போனவளாய் விசுக்கென எழுந்து உள்ளே போனாள்.
அவளது திடீர் முகமாற்றமும் நடத்தையும் அவனுக்கு விபரீதமாகப் பட்டது. அவளைத் தொடர்ந்து அவனும் உள்ளே போனான்.
அறையை அடைந்தவள் மனப்படபடப்பு அடங்காமல், கட்டிலில் சோர்ந்து படுத்துக் கொண்டாள். அங்கு வந்த அவன் கட்டிலில் கிடந்த அவளை அணைத்துத் தூக்கினான். மிக நெருக்கத்தில் அவன் அவளுக்கு அதிக அருவருப்பையே தந்தான்.
பிளந்த உதடுகளும், சிரித்தால் பற்கள் மட்டுமே பெரிதாகத் தெரியும் அந்தச் சேகர் பக்கத்தில் நிற்பது போல அவன் அப்பொழுது அவளுக்குத் தோன்றினான். தேய்ந்த பற்களும், வெற்றிலைச் சாறுபடிந்து புண்பட்ட கடைவாயுமாய் விநாயகம் மாஸ்டர் உதடு களை வருடி எச்சில் படுத்துவது போலவும் அவளுக்கு இவனது தொந்தரவுகள் இருந்தன. வயது முதிர்ந்த போதும், தளர்ச்சியடையாது ஒரு பொலிகாளையின் வீரியத்துடன் உலாவரும் அப்பாவையும் அவனில் இவள் கண்டாள்.
குழம்பிய சிந்தையுடன் கலக்கமும் தவிப்புமுற்ற அவளை அவன் மிக முரட்டுத் தனமாக ஆக்கிரமித்தான். அவனது முரட்டுத்தனம் அவளுக்குப் பழக்கமான ஒன்று தான். ஆனால் இன்று, மன ஒருமை அழிந்த நிலையில், அவனது அதிர்வுகள் அவளுக்கு வெறுப்பையே தந்தன. இந்த நிலையில் அவளைத் தன்வழிக்குக் கொண்டுவர, அவளுடன் உறவு கொள்ளவே அவன் விரும்பினான். அந்த உணர்வு தந்த பரவசத்தில் அவளது உதடுகளில் ஆழ்ந்து முத்தமிட்டான்.
“என்ன கலா கல்லாட்டம்..”
“…”
“பேசுமன்…”
“எதைப்பே..? என்னை முழுமையாகப் புரிந்து கொண்டவர் என்பது எவ்வளவு பொய்மையாகப் போய்விட்டது
சற்று அமைதியாக இருந்தவள் தொடர்ந்து பேசினாள்:
“சுரேன்….”
“ம்….”.
“நான்தான் தேவை எண்டில்லை உங்களுக்கு”
“ஏன் அப்படி…?”
“சமைக்கத் தெரிஞ்ச, பிள்ளை பெற்றுத் தரக்கூடிய யந்திரம்… இல்லை இல்லை ஒரு உடம்பு மட்டும் உங்களுக்குப் போதும்”
“உடம்பு மட்டுமெண்டா?”
“உதடுகள், மார்பு… ஆரம்பத்திலை கொஞ்சம் உணர்ச்சி இது போதும் உங்களுக்கு, அதுக்கு மேலை உங்களாலை உயர முடியாது. மனசைத் தொட்டுப் பார்த்து ரசிப்பதும், ரசிப்பைத் தொற்ற வைக்கும் ரசபாவமெல்லாம் உங்களுக்கு வராது.”
“மோசமா நீ என்னை இன்சல்ட் பண்ணிறை”
“அப்படி இல்லை சுரேன். உங்களுக்கு எதுவுமே ஏலாது”
“டாம் இற்… நச்சு நச்சென்று என்ரை ‘மூட்’டைக் குழப்பிறையா?”
“மூட்” ஆ அப்படி ஒண்டு இருக்கா…! எனக்கு எல்லாமே குழம்பிற்றே சுரேன்”
“யூ டேர்ட்டி பிச்… ஃபிறிஜிட் டெவில்”
அவளை ஒதுக்கித் தள்ளிவிட்டு அவன் எழுந்து கொண்டான்.
‘நான் கல்லாய்த்தான் போனன். உன்னைப் பொறுத்தவரை கல்லாய்த்தான் போனன்’
தன்னுள் குமைந்தவள், ஆடைகளை எடுத்துப் போர்த்திக் கொள்ளாமலே அப்படியே கிடந்தாள்.
இவனாகவே அவள் மீது போர்வையை இழுத்துவிட்டு, பாத்ரூம் பக்கம் போனான்.
‘அவனது, நான் இதனால் பெரிதும் காயப்பட்டிருக்குமோ?’ என நினைத்தவள் சிறிது அயர்ந்து போனாள். விழிப்புக் கண்ட பொழுது சற்றுத் தெளிவு ஏற்பட்டது. நடந்தவை எல்லாம் அவளுக்குக் கனவு போலிருந்தது. எழுந்து குளித்தவள், முதல் வேலையாக எம்.ஏக்குரிய விண்ணப்பப் பத்திரங்களை நிரப்பினாள். ரீ தயாரித்து, ஸ்ரடியில் இவன் இருக்கக் கூடும் என நினைத்தவளாய், ரீயும் கையுமாக அவ் அறையை நோக்கி நடந்தாள், அங்கே அவன் இல்லை.
‘எங்கே போயிருப்பான்?’
வீடு முழுவதுமே ஒரு தரம் சல்லடை போட்டாள். வீட்டின் முன்பக்கம், பின் பக்கம், மீளவும் பாத்ரூம் எனப் பார்வையிட்டாள். கராஜ்ஜில் அவனது ஸ்கூட்டர் இருக்கிறதா என்று பார்த்தாள். அதனையும் காணவில்லை. ‘எங்காவது பக்கத்தில் போயிருப்பான். அவனது வேகத்திற்க்கு… ஊர்ப்பக்கம் கூடப் போயிருக்கலாம். போய், அம்மாவிடம் ஒரு பாட்டம் அழுதுவிட்டு வருவான்’ என நினைத்துக் கொண்டாள்.
அவன் திரும்பி வருவதை நினைத்த பொழுது அவளுக்குப் பயமாக இருந்தது.
அவனுடன் இனி வாழும் வாழ்க்கை பாலையின் தகிப்புடன்தான் தொடருமென அவளது உள்மனம் உணர்த்தியது. உள்ளில் படர்ந்த துயரத்தை அவளால் தாள முடியவில்லை. அடிவயிற்றிலிருந்து பீறிட்டு வந்த துயரத்தைத் தாங்க முடியாதவளாய் குறுகி, நிலத்தில் அமர்ந்து, குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
‘எனது ஆன்மாவையும் உயிர்ப்பையும் ஒருசேர வதைக்கின்றானே இவன். இந்த இம்சைகளில் இருந்து விடுதலை என்பது இல்லாமலே போய்விடுமா? வாழ்வே தன் வசமிழந்து கைநழுவிப் போகிறதே, அதை வசப்படுத்துதல் சாத்தியமில்லையா..? நம்பிக்கை சிதைந்து போவது, பிடித்தமானது என்றுநினைப்பது எல்லாமே பொய்த்து விடுவதும் ஏன்?
கலங்கிய மனதை ஒரு நிலைப்படுத்திய படி வெளியே வந்தவள், வானத்தைப் பார்த்தாள். வானம் நிர்மலமாயிருந்தது. இப்போதைக்கு மழை வராது என அவள் நினைத்துக் கொண்டாள்.
– மல்லிகை, 1983.
– புதியவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2006, பொன்னி வெளியீடு, சென்னை.
                ![]()  | 
                                க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார். இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் 'வீரகேசரி' இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில்…மேலும் படிக்க... | 
                    