கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2025
பார்வையிட்டோர்: 6,489 
 
 

(2007ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் – 7

அவளும் கேட்டுக் கேட்டு சலித்து விட்டாள்! 

கணவனுடன் ஹில் ஸ்டேஷனில், குளிரில் ஒட்டிக் கொண்டு, பூக்கள் உதிர்ந்த ஈரமான பாதையில் நடந்தபடி, பனி மேகங்களுடன் மோதி, காணாமல் அவனைத் தேடி, அறைக்குள் அவனே உடையாய் இணைபிரியாமல்… இன்னும் எத்தனை எத்தனையோ கனவுகள், கற்பனைகள்! 

இதோ, திருமணமாகி இரண்டு மாதம் ஆகிவிட்டது. இன்னும் எப்போது? 

“எங்க?” 

“என்ன சத்யா?” 

“உங்கக் கிட்டே பேசணும்!” 

“ஆபீஸ் போய்ட்டு வந்துடறேன். நைட்டு பேசலாம். புதுசா ஆரம்பிச்ச தொழில், அதிக நேரம் தேவைப்படுது”. 

”சரி சொல்லு!” 

“ஹனிமுன் எப்ப?”

”கல்யாணமாகி ரெண்டு மாசமாயாச்சு!” 

“ஆமாங்க!” 

“இப்பப் போனா ப்ரண்ட்ஸ்கள் கிண்டல் பண்ணுவாங்க. தவிர, ஆபீஸை விட்டு ஊரை சுத்தினோம்னு வச்சுக்க… வந்ததும் இழுத்து மூட வேண்டியது தான். இப்ப தானே வாழ்க்கை ஆரம்பிச்சிருக்கோம்? இன்னும் கடக்க வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கு. ரெண்டு மூணு வருஷமாகட்டும். பாரினுக்கே போய்ட்டு வரலாம்”. 

“அதுக்குப் பேரு ஹனிமூனா? குழந்தைப் பிறந்துடும். பிறக்கறதுக்கு முன்னாடி லைப்பை என்ஜாய் பண்றது வேற… பிறந்த பிறகு என்ஜாய் பண்றது வேற…” என்றாள் ஏமாற்றத்துடன். 

“சரி… இருக்கட்டுமே… குழந்தையோடவே போய்ட்டு வந்தாப் போச்சு… என்ன குறைஞ்சிடப் போகுது?”. 

அழகாய் வாயடைத்தான். 

சத்யாவிற்கு ஏகப்பட்ட வருத்தம். கனவுகளும், கற்பனைகளும் பனிப்புகையிலேயே காணாமல் போயின. ஆனாலும் தன் ஏமாற்றத்தை வெளிக்காட்ட விரும்பாமல் கணவனுடன் இன்னமும் ஒட்டி உறவாடினாள். 

அண்ணியின் அறிவுரை அவளை எப்போதும் எச்சரித்துக் கொண்டேயிருக்கும். அதனால் தன் வெட்கத்தை உதறி கணவனை அடிக்கடி கட்டியணைத்து முத்தமிடுவாள். நுனிநாக்கால் முகமெங்கும் கோலமிடுவாள். மோவாயை, கன்னத்தை பல் பதியக் கடிப்பாள். 

ராமிற்கு பரவசமாகத் தான் இருக்கும். ஆனால் அதையும் மீறி ஒரு யோசனை ஓடிக் கொண்டேயிருந்தது. 

ஒரு நாள் கேட்டான். 

“என்ன சத்யா… நான் செய்ய வேண்டியதெல்லாம் நீ செய்யறே! உனக்கு செக்ஸ் பீலிங்ஸ் அதிகம்” என்றான். 

“ஆமாம்… அப்படித்தான் வச்சுக்குங்களேன். எனக்கு உங்களைப் பார்த்தாலே கடிச்சித் தின்னணும் போலிருக்கு. அவ்ளோ ஆசை உங்க மேலே!” என்றாள். 

அவளின் அதீத ஆசை வியப்பை தந்தாலும், அதை விட அதிகமாய் சந்தோஷத்தையும் தந்தது. 

அவனும் அவளுக்கு அன்பை தாராளமாய் அள்ளித் தந்தான். 

அதே சமயம், மகன் வீட்டிலிருக்கும் நேரங்களில் எல்லாம் சிட்டுக் குருவிகளைப் போல் இருவரும் கொஞ்சிக் கொண்டும், சிரித்துக் கொண்டு இருந்ததை மைனாவதி கவனிக்கத் தவறவில்லை. சத்யா கணவனின் அன்பில் திளைத்து, பூரித்து முகமெங்கும் பொங்கி வழிய… அந்த அழகுடன் வீட்டில் வளைய வந்தவளை பார்க்கையில் திக்கென்றிருந்தது. 

‘என் பிள்ளை மாறிவிட்டானா?’ 

சத்யா நன்றாகவே சமைத்தாள். ருசித்து சாப்பிட்டான் ராம். ஆனால் மைனாவதிக்குத் தான் பிடிக்காமல் போனது. சமையல் சுவையாகத் தான் இருக்கும், நாக்கு கேட்கும். ஆனால் மனசு வீம்பாய் ஒதுக்கும். மகன் இல்லாத நேரங்களில் முகத்திலடிப்பது போல் விமர்சிப்பாள். தொட்டதற்கெல்லாம் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வாள். 

சத்யா அமைதியாகவே இருப்பாள். ஒரு வார்த்தையும் மாமியாரிடம் பதிலாய் பேசியதில்லை. ஆனால், சிலமுறை கணவனிடம் மனசு ப் பொறுக்காமல் ஆதங்கத்துடன் சொல்வாள். 

தன் தாயைப் பற்றி தன்னிடமே குறை சொல்வதை மட்டுமே அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடினப்பட்டு பொறுமை காத்தவன் ஒரு நாள் கோபமாய் வெடித்து விட்டான். 

“நானும் பார்க்கறேன். எப்பப் பார்த்தாலும் எங்கம்மாவை குறை சொல்லிட்டே இருக்கிறே. பெரியவங்க அப்படிதான் பேசுவாங்க. அதைப் பொறுத்துப் போக முடியாதா? நீ அவங்களை தெய்வமா நினைக்கணும். எங்கம்மா எனக்கு எப்பேர்ப்பட்ட பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணனும்னு நினைச்சாங்க தெரியுமா? ஆனா, என் ஆசையை சொன்னதும் மறுபேச்சு பேசாம சரின்னாங்க தெரியுமா? சொல்லிக்காட்டறேன்னு நினைக்காதே! உன் குடும்ப சூழ்நிலைக்கு எங்க வீட்டுக்கு மருமகளா வர்றது நடக்கற விஷயமா? நடந்துடுச்சே! காரணம் யார்? எங்கம்மா தானே?” 

அவனின் கோபம் இதயத்தில் அறைய சுருங்கிப் போனாள்.

ராமிற்கு அவளைப் பார்க்கவே சங்கடமாகிவிட்டது. கோபத்தில் பேசினானே ஒழிய அவனுக்கு அவள் மீது கொள்ளைக்காதல் இருந்தது.

அவள் முகவாட்டம் அவனைத் தாக்கியது. 

இதற்குப் பெயர்தானே தாம்பத்யம்? 

அவளை சமாதானப் படுத்த சத்யாவை இரண்டு, மூன்று நாட்கள் அம்மா வீட்டில் கொண்டு போய் விடுவான். அலுவலகத்தில் நேரம் அட்ஜஸ்ட் பண்ணி மனைவியை மாமியார் வீட்டிலிருந்தே சினிமா, கோவில் என்று அழைத்துச் செல்வான். மகளை மருமகன் சந்தோஷமாய் வைத்திருப்பது பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி! அவர்களுக்கு வேண்டியதும் அது தானே? 

ஆனால் தன் வீட்டில் இருக்கும் போது மனைவியுடன் வெளியில் செல்லத் தயங்குவான். ஓரிரு முறை தவிர கோவிலுக்குக் கூட அம்மாவுடன் தான் செல்வான். 

“சின்னஞ்சிறுசுக… நீங்க போய்ட்டு வாங்க. நான் வரலேப்பா… கால் வலிக்குது…” என்று நாசூக்காய் மறுக்கவும் மாட்டாள் மைனாவதி. 

அவனாகவே மோதிரம், டிரஸ் எல்லாம் வாங்கிக் கொண்டு, ஒவ்வொரு முறையும் மாமியார் வீட்டில் தந்ததாக அம்மாவிடம் காட்டுவான். அப்படியாவது அம்மா மனைவியை நேசிக்க மாட்டாளா என்கிற நப்பாசையில். 

அம்மாவையும், மனைவியையும் தன் இரு கண்களாய் நினைத்தான். அவர்கள் இருவருக்கும் இவன் தானே உலகம்? 

சத்யா உண்டானாள்! 

ராம் குதித்தான். அவன் வாரிசாயிற்றே? பெண்களைப் போலவே, ஆண்களும் முழுமையடைவதும், அதிக மகிழ்ச்சி அடைவதும் அவர்கள் தந்தையாகும் போது தான்! 

வைகுந்தனும், மகாலட்சுமியும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். 

மைனாவதிக்கும் சந்தோஷம் தான். இந்தக் குடும்பத்துக்கு மகனின் பெயரைச் சொல்லிக் கொண்டு வாரிசு வரப் போகிறதே! ஆனால், சத்யாவை ஏனோ மனசு ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்றது. அவளை தன் குடும்ப வாரிசை சுமக்கும் ஒரு இயந்திரமாகத் தான் நினைத்தாள், அன்பாய் ஒரு வார்த்தை… அவளிடமிருந்து சத்யாவுக்கு போய்ச் சேரவேயில்லை. 

நாக்கு வாய்க்கு ருசியாய்க் கேட்டது. சமைத்துப் போட யாருமில்லை. 

அவளாகத் தான் சமைக்க வேண்டும். என்றாவது மகாலட்சுமி அவளுக்குப் பிடித்ததை சமைத்து எடுத்து வருவாள். அதுவும், மைனாவதியின் கடுகடு முகம் கண்டு வருவது நின்று போனது. 

வாந்தி ஒரு பக்கம் அவளை வாட்டியது. சாப்பிட்ட மறுகணமே குமட்டிக் கொண்டு வர… ஓய்ந்து போவாள். 

சும்மா சொல்லக் கூடாது. ராம் மனைவியை உள்ளங்கையில் தாங்க முடிந்திருந்தால், கண்டிப்பாய் தாங்கியிருப்பான். அவ்வளவு பாசம் காட்டினான். அவளுக்குப் பிடித்ததை எல்லாம் வாங்கித் தந்தான். 

வெரைட்டியாக கூல்ட்ரிங்ஸ் வாங்கி பிரிட்ஜில் நிரப்பினான். நான்காவது மாதம் தாளிக்கும் வாசனைக்கே வாந்தி எடுத்தாள். நடக்கக் கூட தெம்பின்றி சுருண்டு படுத்துக் கிடக்கும் மருமகளுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்கக் கூட மனசு வரவில்லை மைனாவதிக்கு. அவள் பாட்டிற்கு சீரியலில் மூழ்கி விடுவாள். 

எரிச்சலும், ஆத்திரமுமாய் கணவனிடம் கொட்டினாள். 

“உங்கம்மாவுக்கு எப்படிங்க மனசு வருது? கொஞ்சம் கூட நிக்காம வாந்தி எடுத்துட்டிருக்கேன். பார்த்துக்கிட்டு சும்மாவே உட்கார்ந்திட்டிருக்காங்க. ஒரு டம்ளர் தண்ணீர் குடுக்கக் கூட மனசு வரலே. ஒரு பொண்ணைப் பெத்து வளர்த்து, ஆளாக்கியிருந்தா, அந்த அருமை புரியும்”. 

சொல்லி முடிக்கவில்லை. 

கன்னம் சிவந்து போனது அவள் அறைந்த அறையில்! வலியில் துடித்துப் போனவளைப் பார்த்து கத்தினான். 

“எவ்வளவு தைரியம் உனக்கு? என்கிட்டேயே எங்கம்மாவைப் பத்தி மட்டமாப் போறியா? அவங்க என்ன உனக்கு வேலைக்காரியா? இதோ பார் சத்யா… இது தான் கடைசி! இனி எங்கம்மாவைப் பத்தி ஒரு வார்த்தை பேசினியோ… என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!” அடி தந்த வலியும், அவன் வார்த்தைகள் தந்த வலியும் உள்ளத்தை நைந்து போக வைத்தது. 

‘வயிற்றில் குழந்தையை சுமந்திருக்கும் நேரத்திலும் கை நீட்டிஅடிக்கிறான் என்றால்…? எல்லாம் அவன் அம்மாவால் தான்?’ 

அதுவரை மாமியார் மீது வராத விரோத எண்ணம் துளிர்விடத் தொடங்கியது. 

அத்தியாயம் – 8

ஏழாவது மாதம்! வயிறு பம்மென்று புடைத்திருந்தது. சத்யா ஆசையுடன் அதைத் தடவினாள். 

கனமானப் பொருட்களை தூக்குவதில்லையே தவிர, அனைத்து வேலைகளையும் அவளே செய்தாள். எல்லாம் முடித்து விட்டு கட்டிலில் வந்து படுத்தவளுக்கு அப்போது தான் உறைத்தது. 

காலைலேர்ந்து வயிற்றில் அசைவே இல்லையே! இங்கும் அங்கும். நகர்ந்த இனிய அதிர்வைத் தரும் குழந்தை… இன்று முழுக்க நகரவே இல்லையே! ஒரு நாளைக்கு குறைந்தது பனிரெண்டு முறையாவது அசைவு, இருக்கணுமே! 

என்னாயிற்று? 

வயிற்றை இங்குமங்கும் மெல்ல அழுத்திப் பார்த்தான். 

“என் செல்லமே… என்னாச்சு உனக்கு? எப்பவுமே அம்மாவோட விளையாடுவியே… எட்டி உதைப்பியே! இன்னைக்கு ஏன் அமைதி யாய்ட்டே? அம்மா பேசறது கேட்குதா? அம்மா ரொம்ப பயந்துப் போயிருக்கேன். வா…அம்மாக் கூட விளையாட வளர்” 

மனதிற்குள்ளாகப் பேசினாள். 

ஐந்து நிமிடம் சென்றிருக்கும். வேசாக அசைவுத் தெரிந்தது. இருக்க… இருக்க இங்குமங்கும் மிதக்க இடப்புறம் வயிறு புடைக்க… தலை முட்டுவதும் புரிந்தது. 

சத்யா பரவசமுடன் தடவிக் கொடுத்தாய்.

“தாங்க்ஸ்டா செல்லம்!” 


வளைகாப்பு முடிந்து சத்யா தாய் வீட்டிற்கு வந்தாள். ராம் தினமும் அலுவலகம் முடித்து நேரே மனைவியைப் பார்த்து விட்டுத் தான் வீட்டிற்கு செல்வான். 

அன்று.. ஹாஸ்பிடலுக்கு வழக்கமான செக்கப்புக்கு சென்று வந்த பின் இடிந்து போயிருந்தனர். சத்யாவும் அவள் பெற்றோரும்! 

குழந்தையின் தலை திரும்பியிருப்பதால் நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பே இல்லை என்று டாக்டர் கூறி விட்டார். 

விஷயமறிந்த ராம் ஆறுதலாய் மனைவியின் கையைப் பற்றி அழுத்தினான். 

“இப்பல்லாம்… சிசேரியன்ங்கறது சாதாரண விஷயம் சத்யா, அதுவும் நார்மல் டெலிவரியோட வலிக்கு பயந்தே அவங்களே சிசேரியன் பண்ணச் சொல்லிடறது காஷுவலா நடக்குது… பயப்படாதே!” 

“மாமா… சத்யாவ எந்த ஹாஸ்பிடல்ல சேர்க்கறதுன்னு முடிவுப் பண்ணிட்டீங்களா? டாக்டர்ஸ் திறமைசாலியா இருக்கறது மட்டுமில்லே, ஹாஸ்பிடலோட சுத்தம், நர்ஸ்களோட அணுகுமுறைன்னு எல்லாத்தையும் சரி பார்க்க வேண்டியிருக்கு. இந்த ஏரியாவிலேயே கிட்டத்தட்ட எட்டு பிரைவேட் ஹாஸ்பிடல் இருக்கு போல… விசாரிச்சிடுங்க…” 

“பிரைவேட் ஹாஸ்பிடலா?” திக்கென்று மனைவியை திரும்பிப் பார்த்தார். 

“என்ன?” என்றான் புரியாமல்… 

“அது… வந்து…” 

“சொல்லுங்க மாமா” 

சத்யாவும்… விஷயம் புரிந்து தலைகவிழ்ந்துக் கொண்டாள். 

“ஆ… ஆபரேஷன் வேற…”

“ஆமாம்!” 

“குறைஞ்சது முப்பது, நாற்பதாயிரம் ஆகும் மாப்ளே.. ” 

“….?”

“எங்களால் அந்தளவுக்கு செலவுப்பண்ணி பார்த்துக்க முடியற நிலைமையிலே இல்லே. அதான் கார்ப்பரேஷன் ஆஸ்பத்திரியிலே சேர்க்கலாம்னு…” 

“எ…என்னது? கார்ப்பரேஷன் ஆஸ்பத்திரியிலா?” பொங்கி வந்த கோபத்தை சிரமப்பட்டு அடக்கினான். 

“….?”

“என் குழந்தை காப்பரேஷன் ஆஸ்பத்திரியிலே பிறக்கறதா?” 

“….?”

”பாருங்க மாமா! நான் அதுக்காக அரசாங்க ஆஸ்பத்திரியை குறை சொல்லலே. எங்க வசதிக்கு எங்க வாரிசு அங்கே பிறக்கறது கவுரவக் குறைச்சல்! நாளைக்கு எங்க உறவுக்காரங்கரொம்ப மட்டமா பேசுவாங்க! அதனால… ” 

“….?” வைகுந்தன் பரிதாபமாய் பார்த்தார். 

“நீங்க நல்ல ஹாஸ்பிடல்ல சேர்த்துடுங்க. ஆகற செலவை நான் பார்த்துக்கறேன்”. 

சத்யா தலை தூக்கி கணவனை கண் கலங்கப் பார்த்தாள். மாமனாரும், மாமியாரும் சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் நெக் குருகினர். 

மனைவியுடன் அறைக்குள் வந்தான் ராம். 

சத்யா… அவன் நெஞ்சில் முகம் புதைத்து விசும்பினாள். 

“ஏய்… என்ன?” 

“உங்க முகத்துல முழிக்கறதுக்கே வெக்கமா இருக்கங்க.”

“ஏன்?” 

“ரிக்ஷா ஓட்டறவன் கூடமாமியார் வீட்லேர்ந்து இது வேணும். அது வேணும்னு சட்டதிட்டமாய் பேசி வாங்கிக்கறாங்க. ஆனா உங்க தகுதிக்கு நீங்க அந்தஸ்தான இடத்திலே கல்யாணம் பண்ணியிருக்கலாம். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால தானே உங்களுக்கு இத்தனை செலவு…?” 

“பைத்தியம்….இதுக்கா அழறே? பணக்கார வீட்டு மாப்பிள்ளை ஆகறது ஈஸியான விஷயம் தான். ஆனா, மனசுக்கு பிடிச்சவளை கல்யாணம் பண்ணிக்கறது எல்லோருக்கும் வாய்க்கற விஷயமா என்ன? காதலும், கல்யாணமும் கொடுக்கல், வாங்கல் விஷயமா என்ன.. ஒரு விஷயத்தைத் தவிர! அன்பு மட்டும் தான்! புரியுதா? கவுரவ விஷயம்ங்கறது அடுத்த பட்சம் தான்! முதல்ல நீயும், குழந்தையும் ஆரோக்கியமா, ஸேபா இருக்கணும்ங்கறது தான் முக்கியம்? இந்த செலவுக் கூட உங்கம்மா, அப்பாவுக்கா செய்யறேன்? என் பொண்டாட்டி, குழந்தைக்காகத் தானே? பீல் பண்ணாம ஹாப்பியா இரு” 

“ம்…!” என்றாள். இன்னும் அழுத்தமாய் முகம் புதைத்து…

”சரி… குழந்தைக்கு பேர் செலக்ட் பண்ணிட்டியா?” 

“ம்… நிறையப் பேர் எழுதி வச்சிருக்கேன்!” 

“சொல்லு, பார்ப்போம்” 

“ம்ஹூம் மனசுல தான் வச்சுக்கணும் சொல்லக்கூடாது”

”சென்டிமெண்ட்? ஒக்கே விடு… என்ன குழத்தை வேணும்?”

“பெண்குழந்தை வேணும். ஆனா, பிறக்கப் போறது ஆண்குழந்தை தான்” 

“எப்படி அவ்ளோ உறுதியாச் சொல்றே?” 

“மனசு சொல்லுது அடிக்கடி கவுை ஒரு ஆண் குழந்தை வருது. அப்படியே உங்க சாயல்ல…. அழகா…” 

“எங்கம்மா சாயல்ல பிறந்தா சந்தொஷம்.” 

“அதெல்லாம் கிடையாது, உங்க சாயல்ல தான் பிறக்கும். என் பிள்ளை அவங்க பாட்டியை வந்து உதைக்கப் போறாள் பாருங்க!”

“என் செல்லத்துக்கு எங்கம்மாவைப் பத்தி பேசலேன்னா தூக்கமே வராது… இல்லே!” வலிக்காமல் அவள் கன்னத்தை செல்லமாய் கிள்ளினான். 


டாக்டர் குறித்த நாளில் ஆபரேஷன் மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

நல்ல எடையுடன், தலை நிறைய முடியுடன் வெள்ளை வெளே ரென்று அப்பாவின் சாயலில் பிறந்தது. 

ராம் குழந்தையைப் பார்த்து அடைந்த சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. 

மனைவியின் நெற்றியில் இதழ் பதித்து, “பையன் சூப்பராயிருக்கான் சத்யா… தாங்கிஸ்டா!” என்றான். 

மைனாவதி கைகள் நடுங்க, கண்கள் மினுக்க, அள்ளி அணைத்துக் கொண்டாள். 

“என் பேரன், என் குலக்கொழுந்து, என் ராஜா” 

“பார்த்து, பார்த்து… கொஞ்சம் மிச்சம் வைங்கம்மா” என்று கிண்டல் செய்தான் ராம். 

“என் பேரனை என்கிட்டேயே கொடுத்துடுடா! நானே வளர்த்துக்கறேன்”. 

“எடுத்துக்கம்மா… உன் பேரன். உனக்கில்லாத உரிமையா? உன் இஷ்டப்படி வளர்த்துக்க. நாங்க இன்னொன்று பெத்துக்கறோம்” என்றான். 

“இல்லே… இது என் பிள்ளை… நான் தான் வளர்ப்பேன்!” சற்று அழுத்தமாகவே மாமியாரிடமிருந்து குழந்தையைப் பிடுங்கி அணைத்துக் கொண்டாள் சத்யா. 

அதைப் பார்த்து ராம் வாய் விட்டு சிரித்தான். 

“சரி… சரி… வச்சுக்க!” என்றான். 

மைனாவதி வெறுப்பு கக்கும் விழிகளுடன் மருமகளைப் பார்த்தாள். 

அத்தியாயம் – 9

‘வாழ்க்கை என்பது இத்தனை இனிமையானதாய் இருக்குமா என்ன?’ என்ற ஆச்சர்யம் சத்யாவிற்கு அடிக்கடி எழுந்தது. 

அவளின் செல்லக் குழந்தை வாழ்வின் அத்தனை சந்தோஷங்களை கூடவே அள்ளிக் கொண்டு வந்திருந்தான். 

உழைத்து களைத்து வந்த ராமிற்கும் மிகப்பெரிய எனர்ஜி டானிக்காக இருந்தான் குழந்தை அபிலாஷ். 

மாதங்கள் பல கடந்திருந்தன. அபிலாஷ் தவழ ஆரம்பித்திருந்தான். அவன் பின்னேயே தவழ்ந்து செல்வது இருவருக்கும் பொழுது போக்கு. 

மைனாவதியும் பேரனை தரையில் விடுவதில்லை. எந்நேரமும் தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருப்பாள்.

அபிலாஷின் பொக்கை வாய் சிரிப்பில் உலகம் மறந்திருந்தனர்.

அதற்கும் திருஷ்டிப்பட்டு விட்டது போலும்.

ஒருநாள்! 

குழந்தைக்கு தடுப்பூசிப் போடுவதற்காக கணவனுடன் ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தாள் சத்யா. 

ராமாயணம் புத்தகம் ஒன்று இரண்டு வாரமாகக் காணவில்லை. மைனாவதிக்கு தினமும் அதில் பத்து பக்கமாவது வாசித்தால் தான் பொழுதுப் பூர்த்தியாகும். 

எங்கே போயிருக்கும்? 

ஒரு முறை சத்யா அதை எடுத்துப் புரட்டியதாய் நினைவு. நிறைய புத்தகங்களை படிக்கும் பழக்கமுடையவள் தான் அவளும். 

அவளின் அறையிலிருக்கும் கப்போர்டில் ஏகப்பட்ட புத்தகங்கள் இருக்கும். 

‘போய்ப் பார்க்கலாமா? 

தயக்கம் எழுந்தது. 

‘ஏன் போனால் என்ன? என் வீடு இது? அவள் இங்கு இருப்பதால் அந்த அறை அவளுக்கு சொந்தமாகி விடுமா என்ன?’ 

மைனாவதி அறைக்குள் சென்றாள். 

அவள் மட்டுமா… கூடவே விதியும் தான்!. 

அறை சுத்தமாக, பாந்தமாக இருந்தது. இத்தனைக்கும் அபிலாஷ் நிமிடத்திற்கொரு முறை கலைத்துப் போட்டு விளையாடியும்!

அலமாரியில் அழகாக புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

தடிமனாய் இருந்த புத்தகங்களில் பார்வையை ஓட விட்டு, எடுத்துப் பார்த்து அதே இடத்தில் வைத்துக் கொண்டிருந்தாள். 

அப்படி ஒரு புத்தகத்தை இழுத்போது கூடவே ஏழெட்டுப் புத்தகங்கள் கீழே விழுந்தன. 

மைனாவதி அவற்றை எடுத்து அடுக்கினாள். அதில் ஒரு பெண்டிங் பண்ணப்பட்டிருந்த புத்தகம் அட்டை பிய்ந்து மல்லாந்திருக்க எடுத்தாள். 

அதனுள்ளிருந்து ஒரு கவர் விழுந்தது. 

அதையும் எடுத்து புத்தகத்தினுள் வைக்கப் போனவன், என்ன- நினைத்தாளோ பிரித்துப் பார்த்தாள். 

முதலில் ஒரு இளைஞனின் கலர்ப்போட்டோ வந்து விழுந்தது.

யாரிவன்? சத்யாவின் அண்ணனா? 

இல்லையே அவனை ஒரு முறைப் பார்த்திருக்கிறேனே. கொஞ்சம் சுறுப்பாய் அவள் சாயலில் இருப்பான். இவன் யார்? 

இதென்ன? இன்னும் விரலில் நெருட கவரினுள் ஏதோ பேப்பர் இருப்பது தெரிந்தது. 

எடுத்தாள், பிரித்தாள்! 

கடிதம் முத்தான கையெழுத்தில்! 

“ஆரம்பமே, என்னுயிர் சத்யாவுக்கு…!” என்று இருக்க… துணுக்குற்றாள். 

என்ன கடிதம் இது?

கண்களை அவசரமாய் ஓடவிட்டாள். 

“என்னுயிர் சத்யாவுக்கு..” 

உன் இதயத்தில் வாழும் மகேந்திரன் எழுதிக் கொள்வது! நாம் வழக்கமாய் சந்திக்கும் இடத்தில் கடந்த ஒரு வாரமாய் காத்திருந்து ஏமாந்துப் போகிறேன். என் மீது இன்னும் கோபமா செல்லம்? 

நீ என்னவள் என்று உரிமையினால் தானே முத்தமிட்டேன். அதுவும் சுன்னத்தில்! அதற்குக் கூட தகுதியற்றவனா நான்? அன்றிலிருந்து என்னிடம் பேசக் கூட மறுக்கிறாய். நான் செய்தது தவறில்லை என்பது என் கருத்து. தவறென்று நீ நினைத்தால் மன்னித்து விடு! நீயில்லாத வாழ்க்கை எனக்குத் தேவையே இல்லை. உனக்காக அதே இடத்தில் காத்திருக்கிறேன். 

இத்துடன் என் போட்டோ இணைத்துள்ளேன். (இந்த ஒரு வாரத்தில் என் முகம் மறந்திருக்குமோ… என்ற கவலையால்!) 

இப்படிக்கு, 
உன்னுயிர் மகேந்திரன். (10.11.2000) 

படித்து முடித்தவளின் உடம்பெங்கும் வியர்த்துக் கொட்டியது கைகள் நடுங்கின. 

‘என்னக் சுண்றாவி இது? அந்தப்பழிகாரி எவனையோ காதலிச்சிருக்கா. கடிதத்தையும், போட்டோவையும் பத்ந்திரமா ஒளிச்சு வச்சிருக்கா? போயும் போயும் என் பிள்ளை அந்த சாக்கடையிலா போய் விழனும். ஒரு வேளை அவனுக்கும் விஷயம் தெரியுமோ? தெரிஞ்சு தான் வாழ்க்கை கொடுத்திருக்கானோ? 

வரட்டும்! 

மனதில் எரிமலைக் குழம்பாய் கோபம் கொதிக்க காத்திருந்தாள்.

சிரிப்பு சத்தத்துடன் வந்திறங்கினர் தம்பதிகள். 

பாட்டியைப் பார்த்ததும் அபிலாஷ் தாவினான். 

வாங்கிக் கொண்டாள். 

“ஏம்மா டல்லாத் தெரியறே? உடம்புக்கு முடியலியா?” என்றான் தனயன். 

“இல்லேப்பா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!”

”என்ன சொல்லும்மா!” 

“தனியாப் பேசணும்!“ 

அடுத்த கணமே நகர்ந்து விட்டாள் சத்யா. 

“வா… இப்படி” என்று மகனை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.  

“இந்தா… இதைப்பிரிச்சுப்பார்!” 

“என்னம்மா இது?” 

“அசிங்கம்டா… என் குடும்பத்துக்கு வந்த கேடு… படி!” குழப்பத்துடன் பிரித்தவன்…படிக்க படிக்க முகம் மாறிக்கொண்டே யிருந்தது. 

“இவ பவிசுப்பற்றி ஏற்கனவே உனக்குத் தெரியுமா ராம்?”

“இல்லை” என்று தலையாட்டினவனை கனமாய் நெஞ்சின் மீது ஏதோவொன்னு அழுத்தியதுப் போல் வலித்தது. 

“என்ன இது? ஏன்? எப்படி? சத்யாவா? குழந்தையைப் போல் மெத் மெத்தென்று மேலே விழுந்து காதலாய் விளையாடியவளின் நெஞ்சில் ஏற்கனவே ஒரு காதலா?” 

வருடங்கள் கடந்திருந்தாலும் கடிதத்தை கிழித்துப் போடாமல் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள் என்றால் அவனை இன்னும் உள்ளத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள் என்று தானே அர்த்தம்? 

ஏற்கனவே ஒருத்தனை காதலித்து, அவனுக்கடுத்த நிலையில் நான் தானா? 

நினைப்பே கசப்பாய் இருந்தது. 

எனக்கே எனக்கென்று படைக்கப்பட்டவள் இல்லையா? எவ்வளவுப் பெரிய விஷயத்தை மறைத்து, என்னைக் காதலித்தாள்? 

அதெப்படி முடியும்? ஒருத்தனை நினைத்த நெஞ்சம் இன்னொருவனை எப்படி ஏற்கும்? 

இது நாள் வரையில் எச்சில் பண்டத்தையா சாப்பிட்டு வந்தேன்?

“இதோப் பார் ராம்… அவ இந்த வீட்லே இருக்கக் கூடாது” 

“அம்மா… என்னைக் கொஞ்சம் தனியா விடும்மா!”

“இதிலே யோசிக்க என்ன இருக்கு.. என் குடும்ப மானமேப் போச்சு, ஒரு… இந்த வீட்டுக்கு…!” 

“சொன்னாப் புரியாது?” அதட்டலாய் வந்தது குரல், முறைத்து விட்டுப்போய் விட்டாள். 

சற்று நேரம் பொறுத்து தன் அறைக்குச் சென்றாள்.

குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தவள் ஜாக்கெட்டை சரிப் பண்ணி, உறங்கிய அபிலாஷை தொட்டிலில் படுக்க வைத்தாள். 

இவனைப் பார்த்ததும், “சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” என்று கேட்டாள். 

“சத்யா…” 

“என்னங்க?” 

“காதலைப் பத்தி என்ன நினைக்கிறே?” 

“என்ன திடீர்னு இப்படியொரு கேள்வி?”

“கேட்டதுக்கு பதில்” 

”வார்த்தைகளால் சொல்லிட முடியுமாங்க? கடவுள் எனக்குக் கொடுத்த மிகப்பெரிய பரிசே… நீங்களும், உங்கள் காதலும் தான்” 

“அப்படியா… சரி இதென்ன கடிதம்?” 

அவன் நீட்டியதை இயல்பாய் வாங்கிப் பார்த்தவள் மிக மிக அதிர்ந்தாள்.  

‘இது… இது… எப்படி… இவரிடம்?’ 

தலை சுற்றியது பயத்தில் கண்கள் இருண்டன. 

– தொடரும்…

– என் பிரியசகி (நாவல்), முதற் பதிப்பு: ஜனவரி 2007, தேவியின் கண்மணி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *