என்ன பரிசு
(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நடுமத்தியான வேளை. வெயில் தகித்துக் கொண்டிருந்தது. அன்று அடித்த உக்கிரமான வெயில், மயூகனின் குடிசைமீது அவ்வளவாகத் தாக்கவில்லை. அவனுடைய மனம் வெயிலின் உக்கிரத்தைப்பற்றிச் சிறிது கூடச் சிந்திக்க வில்லை. கன்னத்தில் கை வைத்த வண்ணம், எதிரே யிருந்த திரைச் சிலையையே கண் இமைக்காமல், உற்று நோக்கிக் கொண்டிருந்தான். ஆம்; இன்றுதான் அந்தப் படம் வேண்டுமென்று பெருந்துறை மடாதிபதி கேட்டிருந் தார். சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் நேரே வந்தாலும் வந்து விடுவார். இன்னும் அந்தப் படம் பூர்த்தியான பாடில்லை.
எதிரேயுள்ள திரைச்சீலையில், சிறுத்தொண் டர் தம் மகனை வாளால் அரிந்து கொண்டிருக் கிறார். ஆனால், குழந்தையின் முகம் எங்கே? அது இன்னும் உருவாகவில்லை. படத்தின் பிறபாகங் களை ஒரு மணி நேரத்தில் போட்டு முடித்த மயூகன், குழந்தையின் முகத்தைப் போடு வதற்கு அன்று காலையிலிருந்து முயன்று கொண் டிருக்கிறான். குழந்தையின் தலைகள் எத்தனையோ தனித்தனியாக வரைந்து பார்த்து விட்டு, அவைகளைக் காலடியில் வீசி எறிந்தான். அவை களெல்லாம் அவனுடைய தோல்விச் சின்னங்கள்!
தன் மனோ உலகில் குடி கொண்ட, சர்வ லட்சணங்களும் அமைந்த அந்தக் குழந்தை, தன்னை வளர்த்த தந்தையின் கைகளாலேயே வதைக்கப் படும்போது, அதன் முகத்தில் ஏற் படும் உணர்ச்சி பாவம்?- அதுதான் அவனது மனக்கண்ணில் பலபல விதமாகத் தோன்றித் ே தோன்றி மறைந்து கொண்டிருந்தது. அந்த உணர்ச்சி பாவம் ஒரு வினாடி கூட அவனது மனோ உலகில் நிலைத்து நிற்காதபோது, அவன் அதை எவ்வாறு வரைய முடியும்!
மிகவும் அற்புதமான ஓவியங்களை யெல்லாம் அனாயாசமாக இரண்டொரு மணிநேரத்தில் தன் மனம் திருப்தி யடையும்படி எழுதிப் பூர்த்தி செய்திருக்கிறான் அவன். ஜீவகோடிகளின் உள்ள நிகழ்ச்சிகளை யெல்லாம் சித்திரத்தில் பிரதிபலிக்கச் செய்து, அவைகளைப் பார்த்துப் பார்த்து இன்புறுவதே அவனுடைய வாழ்க்கையின் லட்சியம். ஈசுவரசிருஷ்டியி லுள்ள ஒவ்வொரு வஸ்துவின் மீதும், அவனுக்கு ஒருவிதமான தனி அன்பு. அவைகளையெல்லாம் கடவுளின் அம்சங்களாகவே அவன் கண்டான். அவன் ஒரு பித்தனைப்போல் எப்பொழுதும் தன் குடிசையில் ஆடிப்பாடிக் கொண்டும், மனம் போன்படி தன் சித்திரங்களோடு அளவளாவிக் கொண்டு மிருப்பான்.
அவன் இதுவரை வரைந்த படங்களில் ஒன்றாவது அவனுக்கு இவ்வளவு சோர்வை உண்டு பண்ணவில்லை. ஆனால், இன்று தான் அவனுடைய கலைத்திறமையை, மனித உணர்ச்சி பரீட்சை செய்யும் நாள்.
மயூகனுக்குச் சாதம் கொண்டு வரும் பை யன், வழக்கம்போல் குடிசையின் ஒரு மூலையில் சாதத்தை வைத்துவிட்டுப் போய் வெகு நேர மாயிற்று. அதை எங்கிருந்தோ வந்த ஒரு நாய் உருட்டித் தின்று கொண்டிருந்தது. கூண்டி லிருந்த கிளி, இதைக் கண்டு அலறிக்கொண்டி ருந்தது.ஆனால், மயூகனுடைய மனதை, அங்கே நடந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாவது இழுக்கவில்லை. அவனுடைய உடம்பிலிருந்து ஆறாகப் பெருகி ஓடி அவன் வஸ்திரத்தை யெல்லாம் நனைத்து விட்ட வியர்வையைக்கூட, அவன் உணரவில்லை.
அவனது மனக் கண்ணுக்குத் தோன்றிய ஒரே பொருள் பிராணாவஸ்தையிலிருந்த அந்தக் குழந்தையின் உருவெளிதான். ஆனால் அதன் பரிபூரண உணர்ச்சி பாவம் மாத்திரம் அவனு டைய மனக்கண்ணில் தெளிவாகப் பதியவில்லை.
திடீரென்று அவன் தன் சுய உணர்வை அடைந்தான். தனக் கெதிரேயிருந்த-தன்னால் வரையப்பட்ட – படங்கள் அனைத்தும் தன்னைப் பார்த்து ஏளனம் செய்வது போல அவனுக்குத் தோன்றியது. தான் இந்தப் படத்தில் தோல்வி யடைவதுதான் கடைசி முடிவு என்ற உணர்ச்சி அவனுடைய மனதில் ஒரு சண்டமாருதத்தைக் கிளப்பிவிட்டது. அவன் இதுவரை அடைந்தி ராத தோர் ஆத்திரத்தையும் கோபத்தையும் அடைந்தான். அவனுடைய முகம் ‘குபீ’ ரென்று சிவந்தது; கண்கள், துகிலிகை பிடித்திருந்த அவ னது வலது கையை எரித்து விடுவதுபோல் நோக்கின. ஒரு கணம் இந்த நிலை.மறு கணம் உலகம் முழுவதுமே அந்தகாரத்தில் மூழ்கி விட் டதுபோல, அவனுக்கு ஒருவித மயக்கம் உண்டா யிற்று. மீண்டும் கன்னத்தில் கைவைத்த படியே பெருமூச்சுடன் குனிந்து உட்கார்ந்தான்.
குடிசையைச் சுற்றியிருந்த மரங்களில் இலை கள் அசைவற்றிருந்தன. கொஞ்ச நேரத்துக்கு முன் லேசாக அசைந்து கொண்டிருந்த அவற்றின் நிழலும் சலன மிழந்து ஒரே இடத் தில் விழுந்து கொண்டிருந்தது. அந்த நிசப்த மான வேளையில் ஓர் அழகான குழந்தை, மயூ கன் இருந்த இடத்தை நோக்கி ஓடி வந்தது. அது அணிந்திருந்த கால் சதங்கைகளின் ஓசை யைக் கேட்டு, மயூகன் திரும்பிப் பார்த்தான். அடிக்கடி அவனது சித்திரசாலைக்கு வரும் ஜமீன் தார் வீட்டுக் குழந்தைதான் அது. என்றா லும், அன்று என்னவோ அது புது அழகும். புதுப்பொலிவும் பெற்று விளங்கியது.
”சுகுமார்!இங்கே வா” என்றான் சித்திரக் கார மயூகன்,
‘கல கல’ என்ற சிரிப்புடன், அவனுடைய புஜங்களில் தாவி வந்து சாய்ந்தான் சிறுவன் சுகுமாரன்.
மயூகனும் குழந்தையை அன்புடனேதான் ஏந்தி எடுத்தான். ஆயினும், அவனை அறியா மலே அவனது உடம்பு குலுங்கியது; உள்ளமும் நடுங்கியது; அர்த்தமற்ற ஒரு குழப்பம் அவனது மனதை அலைத்தது.
“அண்ணா! இது என்ன படம்? எங்கள் அப்பாவா?” என்று, திரையைக் காட்டி வினவியது குழந்தை.
அந்தக் கேள்வியைக் கேட்டதும், “ஊம்… ஆம்… இல்லை…” என்று கலவரத்தோடு முனகிய மயூகன், குழந்தையை ஒருபுறம் தள்ளி, வெறித்துப் பார்த்தான்.
“அண்ணா! நீ ஏன் இன்னக்கி இப்படி இருக்கே? எனக்குப் பயமாயிருக்கு… ஒரு படம் தரமாட்டியா?….” என்றது குழந்தை.
மயூகன் ஓர் அசட்டுச் சிரிப்புடன் “இல்லை, எல்லாப் படமும் கண்ணு! படம் தானே? உனக்குத்தான்…” என்று சொல்லி, “இங்கேயே இரு. இதோ வந்து விட்டேன் ” என்று குழந்தையை அங்கேயே இருக்கச் செய்து, பின் கட்டுக்குச் சென்று ஒரு மேஜையை எடுத்து வந்தான். குழந்தையை அந்த மேஜைமீது படுக்கவைத்தான்.
“நான் தூங்கியாச்சு, அண்ணா! படம் தா. தான் போறேன்” என்றான் சிறுவன் சுகுமாரன்.
மயூகன் என்று மில்லாதபடி பல்லைக் கடித்து, “சும்மா இரு. இல்லாத போனால் உதைப்பேன்…உனக்குப் படம் வேண்டாமா?” என்று அதட்டினான்.
பிறகு ஒரு நிமிஷம் கண்ணை மூடி உடல் தடுங்கப் பெருமூச்செறிந்தான். மறுபடியும் மனதை ஏதோ திடப்படுத்திக் கொண்டவன் போல, உக்கிரப் பார்வையுடன் நடந்தான்.
சை! என்ன பேதைமை! கலைஞனுக்கு வாழ்வும் சாவும் ஏது? வேதாந்தி கூடச் சலிக்க லாம். கலைஞனுக்குச் சலிப்பும் சஞ்சலமும் உண்டா? அவனுக்கு நித்தியத்துவம் ஒன்று தான் தெரியும். அழிவென்பதெல்லாம் வெறும் பிரமை, மாயை! மயூகன் இதோ அமர சௌந் தர்யத்தைக் காண வேண்டும்; நிலைப்படுத்த வேண்டும். ஆம்; அதற்கு வழி அதுதான். சர்வாங்க சுந்தரனான இந்தக் குழந்தை,அழகுத் தெய்வத்துக்கு – கலாதேவிக்குப் பலியாக வேண்டியதுதான்.
மயூகன் உறுதி கொண்டுவிட்டான். சுகுமாரனின் மரணத்தீர்ப்பு ஊர்ஜிதமாகி விட்டது!
குரல்வளையிலிருந்து புறப்படும் ஒரு கோரக். கூச்சல், ரத்தவெள்ளம், பட படவென்ற உடல் துடிப்பு – இவற்றோடு சுகுமாரின் ஆயுள் முடிந்தது.
அந்தப் பரபரப்பிலே ஆவேச ஜன்னியிலே, ஒரு பரவச வெறி பிறந்தது மயூகனுக்கு. சிறுத் தொண்டனின் படம் பூர்த்தியாகி விட்டது வெற்றி! வெற்றி!!
தான் செய்த காரியத்துக்கு மயூகன் பச்சா தாபப் படவில்லை. படத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான்; திருப்தி யடைந்தான்.
துண்டிக்கப்பட்ட குழந்தையின் உடலை மேஜையோடு பின் கட்டுக்குக் கொண்டுபோய் ஒரு மூலையில் மறைத்து வைத்துவிட்டு, குடிசை யின் பின்புறமுள்ள கிணற்றுக்குப் போய்க் குளித்தான். உடைகளை மாற்றிக்கொண்டு குடிசையின் வாசல்புறம் வந்து உட்கார்ந்தான்.
சிறிதுநேரத்துக்கெல்லாம் பெருந்துறை மடாதிபதி பல்லக்கில் வந்திறங்கினார்.
” என்ன, படம் முடிந்து விட்டதா?”
மயூகன் பேசவில்லை. அவனது தலைமட்டில், “ஆகிவிட்டது” என்ற பாவனையில் மெல்ல அசைந்தது. கூடத்தில் படுதாவால் மூடப் பட்டிருந்த திரைச் சீலையை, வெகு அலட்சிய தோரணையில், எட்டவிருந்தபடியே, கையால் மயூகன் சுட்டிக் காட்டினான்.
மடாதிபதி புன்சிரிப்புடன், “இதென்ன ன்று மௌனவிரதம்!” என்று சொல்லிக் கொண்டே, அந்தத் திரைச்சீலையருகே சென்று படுதாவை விலக்கினார். ஏதோ தீயில் கால் வைத்தவர்போல, ‘இஸ்’ என்று திடுக்கிட்டு, அவர் பின்வாங்கினார். சித்திரம் அவ்வளவு தத்ரூபமாயிருந்தது. பயங்கரமான அந்தக் கோரக்காட்சி அவரைப் பிரமிக்கச் செய்து விட்டது. “என்ன! குழந்தை துடிக்கிறதே! அட்டா!” என்று கூவினார். அவருடைய கண்களில் கண்ணீரும் தளும்பியது. பின்பு, அப்படியே சற்றுக் கண்களை மூடி நிதானப் படுத்திக் கொண்டு, ஓவியனைப் பார்த்துத் திரும்பினார். அவன் மிரள மிரள விழித்துக்கொண்டு மரம் போல் நின்றான். மடாதிபதி ‘விர்’ என்று ஓடி வந்து, அவனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டார். அந்த ஆலிங்கனத்தை, உணர்ச்சி யற்றவனாகவே அவன் பெற்றுக் கொண்டான். அவன் அதைத் தள்ளவுமில்லை ; கொள்ளவுமில்லை. அவனுடைய மூச்சுக் காற்று மாத்திரம், மடாதிபதியைத் தீ சுடுவதுபோல் சுட்டது!
ஓவியனை மடாதிபதி பலவாறு பாராட்டி னார். அன்பும் வியப்பும் கலந்த சொற்களைச் சொரிந்து புகழ்ந்தார். அவன் மட்டில் பேசவேயில்லை.
“மயூகா! ஏன் இப்படியிருக்கிறாய்? இதற் குரிய பரிசை யார் தருவார்கள் என்ற கவலை யாலா? யாரும் தர முடியாதுதான். ஆயினும், கேள். என்ன பரிசு வேண்டும் உனக்கு? எதை வேண்டுமானாலும் கேள்; நான் தருகிறேன்” என்றார் மடாதிபதி.
அதுவரையில் கல் பதுமைபோல் நின்ற மயூகன், ‘பொல பொல’ என்று கண்ணீர் சொரிந்து விட்டான். ஏதோ நெஞ்சை யடைத்துக் கொண்டது போன்ற குரலில், “பரிசு, ப-ரி- சு !……. இதற்குப் பரிசு, மோட்சம் தான்…இதோ அது எனக்காகக் காத்து நிற்கிறது. போங்கள்; நீங்கள் படத்தை எடுத்துக்கொண்டு போங்கள்…வேண்டாம்… நில்லுங்கள்…அதோ அந்தப் பக்கம் பார்த்து வாருங்கள். எனக்குரிய பரிசை அறிவீர்கள்” என்று படபட வென்று பயங்கரமான தொரு குரலில் சொல்லி, பின் கட்டை அவருக்குச் சுட்டிக் காட்டினான்.
மடாதிபதி ஒன்றும் புரியாதவராக,வியப் புடன் அந்தப் பக்கம் சென்றார். என்ன கோரம்! அதே குழந்தைதான் இது! இங்கே துடிப்பு நின்றுவிட்டது; அங்கே படத்திலே -இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது!- இவ்வளவு தான் வித்தியாசம். இதன் சாவிலேதான் அந்த உயி ரோவியம் பிறந்திருக்கிறது என்பதை அப்போது தான் அறிந்தார் மடாதிபதி. என்ன செய்வது என்ன சொல்வது என்றே அவருக்குப் புரிய வில்லை. இப்படி அவர் திகைத்து நின்று கொண் டிருக்கையில், கூடத்தில் ஏதோ வேதனையால் உறுமும் அரவம் கேட்டது.
ஐயோ! என்ன சாகசம்! குழந்தையைக் கொன்ற அதே கத்தியைத் தன் மார்பிலே பாய்ச்சிக் கொண்டு, குற்றுயிரும் குலையுயிருமாய். மயூகன் கிடக்கிறான். “என்ன பரிசு! இதுதான் என் பரிசு. கலைஞனுக்கல்ல; கொலைஞனுக்குரிய பரிசு” என்று அவன் முனகினான்.
எமனுடன் மன்றாடிக் கொண்டிருக்கும் அவனையும் அந்த அற்புத ஓவியத்தையும் மாறி மாறிப் பார்த்த மடாதிபதி, தலையைக் குனிந்து, நிதானமும் திடமும் வாய்ந்த குரலில், “இல்லை யப்பா! நீ கொலைஞனல்ல. உயிரை வாங்கு பவ னல்லவோ கொலைஞன்; அநித்திய நரஜன்மம் படைத்த அந்தக் குழந்தையை இதோ சிரஞ் சீவியாகச் செய்துவிட்ட நீ எப்படிக் கொலைஞனா வாய்? நீ அமர நிலையடைந்த கலைஞன். இனி இந்த உலகம் உன்னைத் தாங்காது தான்.ஆனால், அது உன்னை மறக்க முடியாது; மறக்காது” என்றார்.
கலைஞனின் முகம் பிரகாசம் அடைந்தது. அவனது வேதனை யெல்லாம் போய்விட்டது. நன்றியும் மகிழ்ச்சியும் பிரதிபலிக்க, அமைதி யுடன் தலைசாய்ந்தான்.
– ஆனந்த விகடன், மணிக்கொடி, வசந்தம், யுவன், சக்தி ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன.
– சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.
| சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம் தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். நன்றியுரை "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: November 1, 2025
பார்வையிட்டோர்: 65