எதன் பிசகு?
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“எனக்குச் சரியென்று தோன்றவில்லை.”
“எது?”
“இந்த ஆசிரியர் எழுதியிருப்பதுதான்”
மீண்டும் ராமுவின் பார்வை படிப்பில் ஓடியது. சந்திரனுக்கு நண்பனின் பேச்சு புதிராக இருந்தது. “என்னடா சொல்கிறாய்? சொல்வதைப் பூராவும் சொல்லி அழேன்.”
”விஷயம் இதுதான். பையன்கள் பெண்களைப் பார்ப்பது பருவத்தின் பிசகாம்…”
“பெண்கள் பையன்களைப் பார்ப்பது?”
“அது எதன் பிசகோ, தெரியவில்லை.”
“அது கிடக்கு. இதுலே என்னடாப்பா தவறு கண்டுவிட்டாய்?”
“டே, நீயே சொல்லு. பையன்கள் மட்டும் தானா பெண்களைப் பார்க்கிறார்கள்? நடுத்தெருவிலே நாகரீக அலை வீசிச் செல்லும் மங்கையர் மீது எத் தனை ஜோடிக் கண்கள் பாய்கின்றன? கோவில்களி லே, ஆற்றங்கரைகளில் பகட்டாகத் திரியும் பட்டுப் பூச்சிகளை வைத்த கண் வாங்காது பார்ப்பது இளைஞர்களே தான் என்று சொல்ல முடியுமா? உண்மையில் இது பருவத்தின் பிசகே அல்ல.”
பேச்சில் சூடேற்ற “ஊம்…. அப்புறம்?” என்று முனங்கினான் சந்திரன்.
“காளைப் பருவத்தினன் ஒரு யுவதியைப் பார்ப் பது பருவத்தின் பிசகாக இருக்கலாம். முப்பது வயது மங்கை பதினெட்டு வயதுப் பையனைப் பார்க்கிறாளே – சாதாரணமான பார்வை இல்லை…. வாழ்க்கையை ருசித்து வயது ஏறியவன் கூட கண்களில் விஷ ஒளியுடன் பெண்ணை – யுவதியை – நோக்குகிறான். இவற்றை எப்படி வியாக்யானம் செய்வது?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீயே ஆராய்ந்து சொல்லு. உன் தத்துவப் பிரசங்கத்தைக் கேட்க நான் இருக்கிறேன்!”
“ப்சூ, என்னடா பிரசங்கம்” என்று அலுத்துக் கொண்ட ராமுவை மீண்டும் பேச்சில் திருப்ப சிறிது முயற்சி தேவையாகத்தான் இருந்தது. அவனுக்கே லயிப்பு ஏற்பட்ட பிறகு சரியாகிவிட்டது. அப்புறம் திருகிய ரேடியோதானே அவன் சொன்னான்.
“இந்தக் காலத்திலே எல்லாம் நியதியற்றுப் போச்சு. யுவனும், யுவதியும் கண்ணோடு கண்கள் கவ்வவிடுவது இயற்கை என்னலாம். வாழ்க்கையில் இது மட்டுமில்லையே. தெளிவாகச் சொன்னால், ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் பார்க்கிறார்கள். அதிலே அவர்களுக்கு ஏதோ தனி – இப்படி அழகைக் காண்பது குற்றமா? இது ரசனை. மனதிலே குறுகுறுப்பு இல்லாமல் கண்களில் விஷத் துளி இல்லாமல், ஒருவன் – பையனோ, பெரியவனா ஒரு பெண்ணைப் பார்ப்பது பிசகா? அது முதல் பார்வையாக இருக்கட்டும், அல்லது முப்பதாவது முறையாகவே இருக்கட்டுமே. மலரை, வெள்ளி மலர்ந்த வானை, நீர்நிலையை உஷைச் சிவப்பைக் காணும் அதே கண், பெண் அழகைப் பல முறை காண ஓடினால் குற்றமா? ஆனால் பார்ப்பவனை அறியாமலே விஷ நினைவு படர்ந்துவிடுகிறது. முதல் நோக்கிலேயே நஞ்சுதோய் நெஞ்சத்தின் ஒளி சிந்துபவர்களும் எவ்வளவோ பேர் உண்டு. நான் சொல்கிறேன் – இது பருவத்தின் பிசகல்ல. உணர்ச்சியின் பிசகு என்று சொல்வதுகூடப் பொருந்துமா என்பது சந்தேகம்….”
ராமு பிரச்னைகளை அலசும் வேளையிலேயே சந்திரன் பார்வை எங்கும் சுற்றிப் பின் விழிக்கோணத்தில் மீண்டு தேங்கியது. சட்டென அவன் நோக்கு வண்டியின் ஒரு மூலைக்குப் பாய்ந்தது. முதல் முறையே அத்திசையில் தன் விழிகள் லயிக்காத காரணம் என்ன என்ற ஏக்கம் பிறந்தது அவன் மன ஆழத்திலே காரணம்?
கண்களுக்கு விருந்துதான். ஒரு அழகி ஒயிலாக அமர்ந்திருந்தாள் முப்பதுக்குள் வயதிருக்கும். ஆயினும் அவள் மேனியில் மெருகு அழியவில்லை. அவளது தோற்றமே அவள் ‘சேர நன்னாட்டிளம் பெண்’ என அறிமுகம் செய்தது. அந்த வட்டாரத்தினருக்கு தேகத்தில் ஒரு பளபளப்பு மின்னுகிறதல்லவா? காலப் பாதையில் போதிய தூரம் கடந்தபோதிலும் அவள் அழகும், காந்தியும் கலையவில்லை.
சந்திரன் அவளைக் கவனித்தான். அவன் மட்டும் என்ன? அவளைப் பார்ப்பவர்கள் யாருமே திரும்பவும் காணத்தான் விரும்புவார்கள்.
அவள் அழகி அழகிகளில் ஒரு அழகி அல்ல. தனி வனப்பு கிளுகிளுக்கும் ‘கவிதை ஊற்று’ அவள். அவளிடம் அழகு எங்கே கவிதையாகப் பரிணமித்தது என்று சொல்ல முடியாது. அலரும் நிலையிலுள்ள மாதுளை மொக்கு உதடுகளிலா? ரோஜாவின் காம்பீர்ய எழிலுடன் போட்டியிடும் கன்னங்களிலா? கருங்குழலின் ஒரு நெளிவு முன் விழுந்து அழகூட்டும் நுதலிலா? நக்ஷத்திர ஒளி வெட்டும் கண்களிலா?
அவனால் பிரித்துப் பேச முடியவில்லை. ‘அவளே கவிதை’ என அவன் மனம் பேசியது.
ரயிலின் இருண்ட விளக்கின் மங்கல் வெளிச்சத்திலே கூட பச்சைப் புடவை போர்த்த அச்சுந்தரி அவ்விடத்திற்கே, ஏழில் ராணியாக, தனி அழகு கொ டுத்து விளங்கினாள்.
அவன் விழிகள் அடிக்கடி அவள் மீது சாடின் விளக்கின் கவர்ச்சியால் இழுப்புண்ட வீட்டில் பூச்சிகள் போல. அத்தகைய சந்தர்ப்பம் ஒன்றிலேதான் அவன் அதை உணரமுடிந்தது. அவளும் தன் விழிகளை நடனம் ஆட விட்டுக்கொண்டிருந்தாள், சில சமயங்களில் பார்வை மோதத்தானே வேண்டும்!
ரயில் ஓடிக்கொண்டே இருந்தது, எதையும் சட்டை செய்யாத ‘கருமமே கண் ஆயினார்’ போல. அவர்கள் இருந்த வண்டியில் உள்ள சிலர் நித்திரா தேவியின் அருளால் ‘சாமிஆடி’க்கொண்டிருந்தனர். பலர் வம்பளந்து மகிழ்ந்தார்கள். ‘சே, என்ன கூட்டம்டா அப்பா. எழவு ஜங்ஷன் எப்போ வந்து தொலையுமோ’ என்ற குமுறல் சிலரை உம்மனா மூஞ்சிகளாக்கிவிட்டது. ராமு சுவாரஸ்யமாக படிப்பதில் ஈடுபட்டிருந்தான். ‘சந்திரனுக்கு இனிய பொழுது போக்கு’ தன்னை யாரும் கவனிக்கவில்லையே — என்று ஆராய்ந்து, பின் விழிகளை அம்மூலைக்கு விட்டெறிந்து மகிழ்ந்தான்.
அவளும் அப்படித்தான் அவள் முகத்திலே தூக்கம் தன் தளையைத் தூவியது. அவள் அருகில் இருந்தவன் – கணவனாக இருக்கும் – ‘இப்படிப் படுத்துக்கொள்ளேன்’ என்றான் அன்பாக. அவளோ சந்திரன் பக்கம் பார்வையை ஏவிவிட்டு, தலை அசைத்தாள் வேண்டாம் என்ற பாவனையில், ஆனால் நித்திரையின் ஆதிக்கம் வலுத்தது. சாய்ந்திருந்தவள் கிரக்கத்திலே தள்ளாடி விழுந்தாள்; விழித்துக்கொண்டாள்.
“நான் சொன்னேனே கேட்டால்தானே…. சும்மா இப்படித் தலையைச் சாய்த்துக்கொன்” என்றான் கணவன், பாசம் இழையும் குரலில். அவளும் மறுதளிக்க முடியாமல் அவன் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டாள்.
சந்திரனின் உள்ளம் தவித்தது, அமுத நிலவை மேகம் மூடியது கண்ட சகோர பட்சியின் இதயம் போல. என்ன செய்வது? ராமுவின் பக்கம் திரும்பினான் அவனோ காகிதத்தில் சாரத்தைக் காண முயன்றான்.
“என்ன ஜன்மம். கவிதை ஊற்று கண் முன்னால் இருக்கும்பொழுது, வறண்ட தாளிலே கவிதையை ரசிக்கிறானாம்!” இவ்விதம் சந்திரன் மனம் முண முணத்தது. அவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை.
அவளுக்கும் அப்படித்தானோ என்னவோ,துயில் கொள்ளாமல் நிமிர்ந்து உட்கார்ந்தாள் அவள் நெற்றியில் கவிந்த கூந்தல் சுருளை வளையணிந்த கரம் முன் வந்து ஒதுக்கியது. விழிக்கடையில் ஒரு பார்வை…
மனதில் கவிந்த இருள் கற்றை விலகிய இன்பத் தால் நோக்கிய அவனது கண்கள் அவள் நோக்கைத் தழுவின. இருவர் வதனங்களிலும் மகிழ்வின் ரேகை நெளிந்தது.
இந்த நாடகத்துக்குத் திரைவிடுவதுபோல ஐங் ஷன் வந்து சேர்ந்தது. இறங்க வேண்டியதுதான். மனதிலே பெரும் பாரம் சூழ அவர்கள் பார்வை பரிமாறிக்கொண்டனர்.
திரும்பி “என்னடா ராமு, உன் படிப்பு முடிஞ்சதா? இறங்க மனம் வரலையோ இன்னும்” என்றான் சந்திரன்.
“எனக்கு மனமில்லாமல் என்ன! உனக்கு வருமா என்பதுதான் சந்தேகம்” என்ற ஏகத்தாளமான பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் “என்னடா உளர்றே?” என்று கேட்டுவைத்தான்.
அவனை முன்னால் தள்ளியபடியே “தெரியும்டா உன் நாடகம்…. போ” என நகர்ந்தான் ராமு,
முன் வந்த சந்திரனைப் பார்த்தபடியே “இங்கு வண்டி மாற்றணுமோ?” என்று கேட்டாள் அந்த அழகி. அவனுக்குப் பொங்கிய மகிழ்வை அப்பப்பா….
“ஆமா” எனத் தலையை அசைத்தான்.
கீழே இறங்கியதும் ராமு கேட்டான்.”இப்போ என்னடா சொல்றே?”
“என்ன?”
“மழுப்பாதே! நீ பார்த்ததுதான் பருவத்தின் பிசகு. அவள் உன்மீது மின்னலெனக் கண் வீசி புன்னகை புரிந்து வந்தாளே, அது எதன் பிசகாம்? நானும் கவனித்தேன்டா!”
இதற்குச் சந்திரன் என்ன சொல்வான், அசட்டுச் சிரிப்புச் சிரிப்பதைத் தவிர!
– இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளில் சில 1942ம் வருஷம் எழுதப்பட்டவை, 1943ல் சிலவும், 44, 45ல் மற்றவையும் உருவானவை.
– நாட்டியக்காரி, முதல் பதிப்பு: 1964, கவிக்குயில் நிலையம், தென் திருவிதாங்கூர்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: January 9, 2026
பார்வையிட்டோர்: 5,680